Saturday 2 November 2019

பிடுங்கிய செடி


பிடுங்கிய செடி

உதயசங்கர்

கிருஷ் குறும்புக்காரன். சேட்டை அதிகம். கொஞ்சம் பிடிவாதம் உண்டு. அவன் நினைத்தது நடக்க வேண்டும். கேட்டது கிடைக்க வேண்டும். இல்லை என்றால் கோபம் வந்து விடும். கோபம் என்றால் அப்படி இப்படி கிடையாது. எதையாவது போட்டு உடைப்பான். அம்மாவை அடிப்பான். புத்தகங்களைத் தூக்கி வீசுவான். அவன் விருப்பப்படி நடக்கும்வரை முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வான். அவனுடைய அப்பாவும் அம்மாவும் கவலைப்பட்டார்கள். அவர்களுக்கு ஒரே பையன். அதனால் அவன் மனம் கோணக்கூடாது. முகம் வாடக்கூடாது என்று நினைத்தார்கள். ஆரம்பத்தில் கேட்டதை எல்லாம் வாங்கியும் கொடுத்தார்கள். ஆனால் நாளாக நாளாக அவன் அவர்களால் வாங்கமுடியாத பொருட்களைக் கேட்டான். அவர்கள் என்ன சொன்னாலும் கேட்கவில்லை.
மூன்றாம் வகுப்பில் படிக்கும் கிருஷ் இப்போது செல்போன் வேண்டும் என்று கேட்கிறான். அதுவும் தொடுதிரை உள்ள ஸ்மார்ட் போன் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறான். அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ சொன்னார்கள்.
“ இப்போ வேண்டாண்டா கண்ணு! நல்லாப்படி! இணையத்தில ஏதாவது பார்க்கணும்னா அப்பா காட்டறேன்.. இந்த வயசில ஓடி விளையாடணும்டா.. வெளியில போ உன் பிரண்ட்ஸோட விளையாடு.. என்ன சரியா? “ என்று கொஞ்சினார்கள்.
அதைக் கேட்டதும் கையிலிருந்த பீங்கான் கோப்பையைத் தூக்கி எறிந்தான். அது சில்லுச் சில்லாக உடைந்தது. எழுந்து வராண்டாவுக்குப் போனான்.
அங்கே பூச்செடிகள் தொட்டியில் இருந்தன. இட்லிப்பூ, சாமந்தி,,ரோஜா, மல்லிகைக்கொடி, இருந்தன.
அவன் கொத்தாய் இட்லிப்பூவை பிய்த்தான்.
சாமந்திப்பூவைப் பறித்து அதன் இதழ்களை உதிர்த்தான். .
மல்லிகைப்பூ அவனுக்கு எட்டவில்லை. எனவே கொடியில் இருந்த இலைகளைப் பறித்து வீசினான்.
ரோஜாவைப் பிடுங்கியபோது அவன் விரலில் முள் குத்தி விட்டது. லேசாக ரத்தம் துளிர்த்தது. இன்னும் கோபத்துடன் ரோஜாவைக் கசக்கினான்.
அப்படியே தரையில் உட்கார்ந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உதடுகள் துடித்தன.
எதிரில் ஒரு சின்னஞ்சிறு செடி இருந்தது. அப்போது தான் மண்ணிலிருந்து வெளியே வந்திருந்தது. பச்சைப்பசேலென்று இருந்தது. இரண்டு விதையிலைகளுடன் உச்சியில் தளிரிலைகள் விரிய வியப்புடன் உலகைப் பார்த்தது. மெல்ல வீசிய காற்றில் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டியது. கிருஷ் அதைப் பார்த்தான். அவ்வளவு தான். அவனுடைய இரண்டு விரல்களால் அந்தச் செடியின் கழுத்தைப் பிடித்தான். செடி படபடத்தது. வலி தாங்க முடியாமல் துடித்தது. படாரென்று அந்தச் செடியை மண்ணிலிருந்து பிடுங்கினான் கிருஷ்.
அவ்வளவு தான். ஒரு பூகம்பம் வந்தது போல சத்தம் கேட்டது. கிருஷின் கையிலிருந்த அந்தச் செடி ஒரு பெரிய ஆலமரமாகி விட்டது. மரத்திலிருந்து விழுதுகள் மண்ணை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தன. அடர்த்தியான பச்சை இலைகளை அசைத்து காற்று சலசலத்தது. மரம் வானம்வரை முட்டிக் கொண்டு நின்றது.
கிருஷைக் காணவில்லை. எங்கே இருந்தான் தெரியுமா? அந்த ஆலமரத்தின் உச்சிக்கிளையில் இருந்தான். அவனுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. பயத்தில் கிளையை இறுகப்பிடித்துக் கொண்டிருந்தான். அழுகை வந்தது.
அவன் கீழே குனிந்து பார்த்தான். தரை கண்ணுக்கே தெரியவில்லை. நிமிர்ந்து பார்த்தான் மேகங்கள் அவனுடைய கைக்கு அருகில் மிதந்தன.
ஒரு காகம் அவனை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே கிளையில் வந்து உட்கார்ந்தது. அவன் காகத்தை அவ்வளவு பக்கத்தில் அப்போது தான் பார்க்கிறான். எங்கிருந்தோ புள்ளிக்குயிலின் சத்தம் கேட்டது. அவன் சத்தம் வந்த திசையில் தேடினான். அவன் பார்த்ததும் அது மறைந்து கொண்டது. கொத்துக் கொத்தாய் காய்த்திருந்த ஆலம்பழத்தை ஒரு நாகணவாயும் கிளியும் கொத்தித் தின்றன. இரண்டு அணில்கள் வேகமாக அவன் மீது ஏறி ஓடின. ஓடித் திரும்பி அவனைப்பார்த்து,
“ மன்னிக்கணும் கிருஷ்! “ என்று சொல்லிவிட்டு ஓடிப்போனார்கள். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அணில்களுக்கு எப்படி அவனுடைய பெயர் தெரியும்? அப்போது
“ அண்ணே கொஞ்சம் வழி விடறீங்களா..” என்று சொல்லியபடி அவனுடைய கைக்கு அருகில் கட்டெறும்புகள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. அவன் கையை அசைத்து இடம் மாறி உட்கார்ந்தான். வரிசை ஒழுங்கு தவறாமல் முண்டியடிக்காமல் கட்டெறும்புகள் போயின.
       யாரோ அவனைப் பார்ப்பது போலத் தோன்றியது. திரும்பிப்பார்த்தான். கீழே உள்ள கிளையிலிருந்து ஒரு பச்சோந்தி  கட்டெறும்புகளைப் பார்த்து வேகமாக வந்தது. கிருஷைப் பார்த்ததும் அப்படியே அசையாமல் நின்று இலைகளின் பச்சை நிறத்துக்கு மாறி விட்டது. தலையையும் உடம்பையும் தூக்கிக்கொண்டு இரண்டு கண்களை இரண்டு பக்கமும் உருட்டிக் கொண்டு நிற்பதைப் பார்த்தான் கிருஷ். அதைப் பார்க்கப் பயமாக இருந்தது.
‘ தம்பி பயப்படாதே! எனக்குப் பசிக்குது… நான் கொஞ்சம் சாப்பிடப்போறேன்.. அவ்வளவு தான்..” என்று சொல்லிக்கொண்டே தாமதமாக வந்து கொண்டிருந்த ஒரு கட்டெறும்பை டபக்கென்று நாக்கை நீட்டிப் பிடித்து விழுங்கியது.
கிருஷுக்கு அம்மாவின் நினைவு வந்து விட்டது. அவன் மரத்திலிருந்து எப்படி இறங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது மேலிருந்து ஒரு நூலிழை இறங்க அதைப் பிடித்துக் கொண்டே ஒரு சிலந்தி வந்தது.
“ நேரமாச்சு! நேரமாச்சு! சீக்கிரம் வலை பின்னணும்..”
கிருஷின் காதுக்கருகில் ஒரு தேனீ ரீங்கரித்தது. அவன் திரும்பிப்பார்த்தான். அது ஒரு  காற்றில் பெரிய வட்டமாய் நடனமாடியது. எங்கிருந்தோ மற்றொரு தேனீ அதே போல நடனமாடியது.
“ ரொம்ப தூரம் தேன் எடுக்க ரொம்ப தூரம்.போகணும்.. பக்கத்தில் பூக்களே இல்லை… மனிதர்கள் இருக்கும் இடத்தில் பூக்களோ, செடிகளோ, மரங்களோ, இல்லை.. “.
கீழே உள்ள கிளையில் தவிட்டுக்குருவிகள் காச்மூச் கீச்கீச்..என்று கத்திச் சண்டை போட்டுக் கொண்டிருந்தன.
“ எனக்குத்தான்.. நீ குறுக்கே வராதே.. நான் தானே பிடிச்சேன்.. நான் தானே பார்த்தேன்.. அபடியே பாக்கலாம்.. “ அவர்களுடைய பேச்சு குழம்பி எதுவும் புரியவில்லை.
வானம் இருட்டத்தொடங்கியது. ஆலமரத்தில் ஒரே களேபரம்! கூச்சல்! ஆரவாரம்!
கொக்குகள்! நீர்க்காகம், காகங்கள், நாகணவாய், கரிச்சான் குருவிகள், தவிட்டுக்குருவிகள், சிட்டுக்குருவிகள், கொண்டைக்குருவிகள், மரங்கொத்திகள், நீலக்காடை, என்று பறவைகள் கூட்டம் கூட்டமாய் வந்தடைந்தன.
ஒரு கொம்பேறி மூக்கன்பாம்பு கூட மரப்பொந்தில் சுருண்டு படுத்தது. மழை வரும்போல இருட்டியது. கிருஷின் தைரியம் எல்லாம் போய் விட்டது. பிடிவாதம் தகர்ந்து விட்டது. அவன் அழ ஆரம்பித்தான்.
” அழாதே! கிருஷ்.. அழாதே! “ என்ற குரல் கேட்டது. அந்தக்குரல் அம்மாவின் குரல் போல இனிமையாக இருந்தது. அவன்
“ அம்மா! “ என்றான்.
இப்போது அவன் கையில் பிடுங்கிய அந்தச் செடி இருந்தது. அவன் அவசர அவசரமாக மண்ணைத்தோண்டி அந்தச்செடியை நட்டான். அருகிலிருந்த பூவாளியிலிருந்து தண்ணீரைத் தெளித்தான். வாடியிருந்த செடியின் இலைகள் நிமிர்ந்தன. கிருஷைப் பார்த்து இலைகளை அசைத்தன.
அப்போது வீட்டுக்குள்ளிருந்து அம்மா வந்தாள்,
“ கூப்பிட்டியா கிருஷ்..” என்றாள். கிருஷ் அம்மாவைக் கட்டிக்கொண்டான்.
அம்மா கிருஷின் தலையைக் கோதி விட்டாள்.
 நன்றி - பொம்மி

1 comment:

  1. கதை மிகவும் பிடித்தது. நன்றி.

    ReplyDelete