Thursday 31 October 2019

கிளிமரம்



கிளிமரம்

மலையாளத்தில் - கிரேஸி

தமிழில் - உதயசங்கர்


அடி முதல் நுனிவரை கசக்கின்ற மரமாக இருந்தது அந்த மரம். பூக்கவோ, காய்க்கவோ இல்லை. அதனால் அந்த மரம் வருத்தத்தில் இருந்தது. ஒரு கிளி கூட அந்த மரத்தின் கிளைகளில் பறந்து வந்து ஓய்வெடுத்ததில்லை. தன்னுடைய பிறவி இப்படி பாழாகி விட்டதே என்று நினைத்து அந்த மரம் நீண்ட பெருமூச்சு விட்டது. கூட்டத்திலிருந்து தப்பி வந்த ஒரு கிளிக்கு அந்த மரத்தின் வருத்தம் புரிந்தது. அந்தக்கிளி மரத்தைச் சுற்றிப் பறந்து வந்து கேட்டது,
“ நீ எதற்காக இவ்வளவு வருந்துகிறாய்? “
மரத்திடம் இதுவரை யாரும் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டதில்லை. மகிழ்ச்சியினால் மரத்தின் கண்கள் நிறைந்தன. இரண்டு துளி கண்ணீர் வடித்த மரம் சொன்னது,
“ நான் ஒரு கசப்பு மரம். நான் எப்படி இப்படியானேன் என்று எனக்குத் தெரியவில்லை… இந்த வழியாகப் பறந்து போகிற கிளிகள் யாரும் என்னைத் திரும்பிப் பார்ப்பதில்லை. எல்லா மரங்களையும் தழுவிச் செல்லும் காற்று கூட என்னை மறந்து விட்டுப்போவது தான் வழக்கம்..”
கிளி நேராகப் பறந்து சென்று ஒரு கிளையில் போய் உட்கார்ந்தது. மரம் புளகாங்கிதமடைந்தது. அது கிளியிடம்,
“ ஆகா ஒரு கிளியின் தொடுகை எவ்வளவு சுகம் என்று எனக்கு இப்போது தான் புரிந்தது.. மிக்க நன்றி நண்பா..”
கிளி தூரமாய் பார்த்து எதையோ நினைத்து மௌனமாக இருந்தது. அதன் பிறகு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு சொன்னது,
“ இனிமேல் நாம் மிகச்சிறந்த நண்பர்களாக இருப்போம்.. நான் உன்னுடைய கிளையில் தங்கியிருந்து உனக்காகப் பாடுவேன்..”
மரத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. மரம் கேட்டது,
“ நீ வடக்கேயிருந்து தானே வருகிறாய்? உன்னுடைய நாட்டில் குளிர்காலம் கழிந்த பிறகு நீ உன்னுடைய கூட்டத்திடம் திரும்பிப் போய்விடுவாய் இல்லையா? “
“ ஓ “
கிளி வேறு வழியின்றி சொன்னது,
“ எனக்கு யாருமில்லை.. அப்பாவோ அம்மாவோ கூடப்பிறந்தவர்களோ, ஒருவருமில்லை. அதனால் இங்கே உன்னோடு தங்கி இருப்பதில் ஒரு பிரச்னையுமில்லை..”
அப்போது மரத்தின் தொண்டை தழுதழுத்தது.
“ ஒத்தையில் இருப்பதின் துயரத்தை என்னைப் போல யாருக்குத் தெரியும்? ஆனாலும் நண்பா, நீ திரும்பிப் போகத்தான் வேண்டும்.. அதுவரை இங்கே தங்கியிருந்து எனக்காக பாட்டுகள் பாடுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..”
கிளி கண்களை மூடிக்கொண்டு தியானித்தது. பின்னர் மிக மிக இனிய குரலில் கசப்பு மரத்துக்காக பாடத்தொடங்கியது. அத்தனை இனிய ஒரு இசையை அந்தக் காடு அதுவரையும் கேட்டதில்லை. மற்ற மரங்களிலிருந்து சளசளத்துக்கொண்டிருந்த பறவைகள் எல்லாம் சட்டென்று அமைதியாகி விட்டன. அந்த வழியாக பயணம் போன பறவைகளும் அருகில் இருந்த மரங்களில் இறங்கி சிறகுகளை மடக்கி காது கொடுத்தன. சில மிருகங்கள் கூட கசப்பு மரத்தின் கீழே வந்து வாயைத் திறந்து மேல்நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தன. பாட்டுக்காரனான கிளி இதையெல்லாம் அறியாமல் இசை கூட்டி இனிமையாகப் பாடிக்கொண்டிருந்தது.
பாட்டு முடிந்தபோது மரம் சொன்னது,
“ என்னுடைய ஆன்மாவில் துளியூண்டு இனிமை கலந்து விட்டதாக தோணுது.. ஒருவேளை உன்னுடைய பாட்டைக் கேட்டு நான் ஒரு கசப்பு மரமாக இல்லாமல் மாறிவிடுவேன் என்று தோணுது..”
நனைந்த கண்களோடு கிளி சொன்னது,
“ அப்படி நடந்தால் நான் தான் அதிக மகிழ்ச்சியடைவேன்..”
கிளி இடையிடையில் எங்கேயோ பறந்து சென்று இரை தேடி விட்டு வேகமாய் அந்தக் கிளைக்குத் திரும்பி வந்தது. அது புதிய புதிய பாட்டுகளை மரத்திற்காக இனிமையினிமையாகப் பாடியது. அதைக் கேட்டு கேட்டு மரத்தின் கசப்பு மாறியது. ஆத்மாவில் தெளிவு உண்டாகியது. ஒரு அதிகாலையில் மரம் வெடித்துச் சிதறிப் பூத்தது. அது ஆனந்தத்துடன் அழைத்துக் கூவியது,
“ ஆகா என்னுடைய கிளைகளில் எல்லாம் பூக்கள் பூத்திருக்கின்றன…”
சோர்ந்து போய் மரக்கிளையில் உட்கார்ந்து கிறங்கிப்போயிருந்த கிளியோடு மரம் சொன்னது,
“ பிரியமுள்ள நண்பா! இந்தப் பூக்கள் அத்தனையும் உனக்குத்தான்..”
திடுக்கிட்டு முழித்த கிளியின் கண்களில் பூக்களின் நிறம் தெரிந்தது. மெல்லிய குரலில், அது சொன்னது,
“ எனக்கு மிகவும் மகிழ்ச்சி! மகிழ்ச்சி! “
அப்போது மரம் சொன்னது
“ நண்பா உன்னுடைய சத்தம் மிகவும் பலகீனமாகி விட்டதே.. கண்டிப்பாக ஏதோ ஒரு துயரம் உன்னை வாட்டுகிறது… நீ என்னுடைய கசப்பை மாற்றியதற்காக நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.. இனிமேலாவது நீ உன்னுடைய கூட்டத்திற்குத் திரும்பிப்போகணும்..”
கிளி எதுவும் பேசாமல் சிறகுகளை மடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தது. அப்போது ஆனந்த ஆரவாரத்துடன் ஒரு கிளிக்கூட்டம் வடக்கு நோக்கிப் பறந்து போவதை மரம் பார்த்தது. அது கிளியிடம் சொன்னது,
“ பாரு! உன்னுடைய கூட்டமெல்லாம் வடக்கு நோக்கிப் பறக்கிறாங்க.. போ.. நீயும் அவங்களோட சேர்ந்துக்கோ..”
கிளி கொஞ்சமும் உற்சாகமில்லாமல் சொன்னது,
“ அது முதல் கூட்டம்.. இன்னம் கூட்டம் கூட்டமாக வருவார்கள்..”
பூக்களில் உள்ள தேனை எடுக்க வந்த தேனீக்களின் கூட்டத்தின் ரீங்காரத்துக்கு இடையில் இரண்டாவது கிளிக்கூட்டம் வடக்கு நோக்கி பறக்கிற சத்தத்தை மரம் கேட்டது. அது பரிதவிப்புடன், சொன்னது,
“ நண்பா! இதோ இரண்டாவது கூட்டமும் பறந்து போகிறதே! நீ வேகமாக அவங்க பின்னால போ..”
கிளி அமைதியாக தன்னுடைய கூட்டாளிகள் பறந்து செல்வதைப் பார்த்துக் கொண்டேயிருந்தது. அதன் மனதில் என்ன இருக்கிறது என்று மரத்தினால் படிக்க முடியவில்லை. அது கண்ணீரோடு தொடர்ந்து சொன்னது,
“ கஷ்டம்! நீ என்னை மிகவும் கஷ்டப்படுத்துகிறாய்.. இனியும் நீ இங்கேயிருந்து போகவில்லையென்றால் இந்தக் காடு முழுவதும் என்னைக் குற்றம் சொல்லும்.. என்னுடைய சுயநலத்துக்காக நான் உன்னை இங்கே நிறுத்தியிருக்கிறேன் என்று குற்றம் சொல்லுவார்கள். பாரு! இந்தப் பூக்களெல்லாம் முதிர்ந்து காய்களாகும்..பின்னர் அவையெல்லாம் பழுக்கும்.. அதையெல்லாம் சாப்பிட ஏராளமான பறவைகள் வந்து சேரும். ஆனால் உனக்காக என்னுடைய கிளையில் நான் ஒரு பழத்தை எப்போதும் பத்திரப்படுத்தி வைத்திருப்பேன்..”
அப்போது மூன்றாவது கிளிக்கூட்டம் பறந்து செல்கிற சத்தம் மரத்தின் காதுகளில் வந்து மோதியது.
“ ஹா ஒருவேளை இதுவே கடைசிக் கூட்டமாக இருக்கலாம் பிரியமுள்ள நண்பா! இன்னமும் அசமந்தமாக இருக்காதே.. போ..வேகமாகப் போ..”
அப்போதும் கிளி அசையாமல் இருப்பதைப் பார்த்து விசும்பி அழுதது.
“ மற்றவர்களுக்காக வாழ்வதில் உள்ள மகிழ்ச்சியை நீ தானே எனக்குச் சொல்லித் தந்தாய்.. அப்படின்னா இப்போ என்னுடைய சங்கடத்தினால் இந்தப் பூக்கள் எல்லாம் உதிர்ந்து விடும்.. அப்போது எப்படி என்னால் பறவைக்கூட்டத்துக்கு உணவு கொடுக்க முடியும்? “
கிளி மரக்கிளையில் உருகிப்போய் நின்றது. பிறகு சிறகுகளை மெல்ல விரித்தது. வானத்தில் குதிப்பதற்கு முன்னால் மரத்தை ஒரு தடவை சுற்றி வந்தது. பலகீனமாக இருந்தாலும் இனிமையான குரலில் மரத்துக்கு விடை கொடுத்து மறைந்து போனது.
மரத்தில் காய்களெல்லாம் முதிர்ந்து பழுத்து விட்டன. மற்ற எந்தப் பழத்திலுமில்லாத இனிமை கொண்ட பழங்களைச் சாப்பிட காடான காடுகளிலிருந்து பறவைகள் பறந்து வந்தன. மரம் மகிழ்ச்சியோடு கிளைகளை தாழ்த்தி அவர்களை வரவேற்றது. ஆனாலும் அவர்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு பழத்தை தன்னுடைய இதயத்துடன் சேர்த்து பாதுகாத்து வைத்திருந்தது.
ஆனால், அந்த பாட்டுக்காரக்கிளி பின்னர் ஒருபோதும் வரவில்லை. அதை நினைத்து வருந்திய மரத்திடம் மற்ற பறவைகள் ,
“ அந்தக்கிளி கண்டிப்பாக வேறு ஏதாவது மரத்தின் கசப்பை மாற்றப் போயிருக்கும்..” என்று சொல்லின.
நன்றி - மாயாபஜார்

1 comment:

  1. ஆஹா... அருமையான கதை. பாராட்டுகள்.

    இப்படித்தான் சில மனிதர்களும் செல்லும் இடங்களிலெல்லாம் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்து செல்கிறார்கள் - என்ன அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

    ReplyDelete