Thursday 3 October 2019

ஹேங்க் ஓவர்


ஹேங்க் ஓவர்
உதயசங்கர்
அதிகாலை நான்கு மணி அலாரம் அடித்தது. விநாயகத்துக்கு எங்கேயோ தூரத்தில் கேட்பதைப் போலிருந்தது. விழிப்பு வந்து விட்டது. ஆனால் கண்களைத் திறக்கமுடியவில்லை. தலை கிறுகிறுத்தது. படுக்கையில் எழுந்து உட்காரமுடியவில்லை. விநாயகம் தலையை உலுக்கினான். கண்களை இறுக்கிப்பூட்டிக் கொண்டதைப்போல இருந்தது. கஷ்டப்பட்டு கண்களைத் திறந்தால் எதிரே இருந்த பொருட்கள் எல்லாம் சுற்றிக் கொண்டிருந்தன. இன்னக்கி பேப்பர் போட்ட மாதிரி தான். லேட்டாகிவிட்டால் ஏஜெண்ட் சிங்காரம் மூஞ்சியைத் தூக்கி முகரையில் வைத்துக் கொள்வான். அலாரம் தானாக அடித்து ஓய்ந்தது. கண்களைக் கசக்கினான். சீரான மூச்சு விடமுடியவில்லை. மூக்குத்துவாரத்தில் ஏதோ ஒட்டிக்கொண்டிருந்த மாதிரி உணர்வு. விரல்களால் துழாவினான். கையில் ஒரு பூந்தி சிக்கியது. நேற்று இரவு செம பார்ட்டி. குணாளனுக்கு வேலை கிடைத்ததற்காக நண்பர்களுக்குக் கொடுத்தான். விலையுயர்ந்த  விஸ்கி. பேர் கூட எதோ பகார்டியோ சிக்னேச்சரோ. போதை ஏறுவதே தெரியவில்லை. உட்கார்ந்திருந்தவரை சாதாரணமாக இருந்தது. எழுந்தால் அப்படியே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் லாத்தியது. இரண்டு புல்லை மூன்று பேர் சேர்ந்து குடித்தால் பின்ன எப்படி இருக்கும்?
எப்படியும் வாரம் ஒருமுறை ஏதாவது ஒரு காரணத்துக்காகப் பார்ட்டி நடக்கும். குணாளனுக்குப் பிடித்த கதநாயகி நடித்த படம் வந்தால் பார்ட்டி. ராஜாவின் வீட்டுக்கு எதிர்வீட்டு ஆண்ட்டி அவனிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டாள் என்று பார்ட்டி. அவன் அந்த ஆண்ட்டியை இரண்டு வருடமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். விநாயகம் பேப்பர் போடும்போது ரோஸ்லின் எதிரே வந்து அவனிடம் பேப்பரை வாங்கிவிட்டால் பார்ட்டி. வீட்டில் எல்லோரும் ஊருக்குப் போய்விட்டால் பார்ட்டி. அவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லையே என்ற கவலையில் பார்ட்டி. யாருக்கும் காதல் செட்டாகவில்லையென்று பார்ட்டி. சனிக்கிழமை வந்தால் பார்ட்டி. சிலநேரம் காரணமே இல்லாமலும் பார்ட்டி நடக்கும். அநேகமாக அவர்கள் சந்திக்கும்போதெல்லாம் பார்ட்டியைப் பற்றிப் பேசுவார்கள் அல்லது பார்ட்டியைப் பற்றிப் பேசுவதற்காகச் சந்திப்பார்கள். ஆனால் நேற்று சரியான சரக்கு என்று நினைத்துக் கொண்டான். ராஜா கூட எழுந்து நடப்பதற்கே சிரமப்பட்ட விநாயகத்தை
” ழேய்.. படுத்துட்டு காலைல போழா.தாயோளி “ என்று சொன்னான். விநாயகம் இடது பக்கத்திலிருந்து வலது பக்கச்சுவரில் போய் முட்டிக்கொண்டு,
“ பேப்பர் யார்ழா போடுவா பேக்கூதி…” என்று சொன்னான். அதைக்கேட்ட குணாளன்,
“ கவிதை..கவிதை..ஹா ஹா ஹ்ஹாஹா “ என்று சிரித்துக்கொண்டே அப்படியே மிக்சர், பூந்தி, சிதறலுக்கு மேலேயே :சாய்ந்து உடனே குறட்டை விட்டான்.
விநாயகம் சைக்கிளை எடுத்துக் கொண்டு மிதித்தான். எப்படியோ நள்ளிரவில் சாக்கடைஓரம் மேய்ந்து கொண்டிருந்த பன்னி மேல் விடாமல்., அவன் சைக்கிளில் வருகிற சீரைப்பார்த்து குலைத்த நாயினைப் பார்த்து விடாமல். தெருவில் முதல் வீட்டிலிருந்த அன்னமக்கா வீட்டுச் சுவரில் முட்டாமல், தெருவில் கட்டில் போட்டு படுத்திருந்த சுப்புத்தாத்தா மேல் விடாமல் வீட்டுக்கு முன்னாலிருந்த சாக்கடையில் விழாமல். வீட்டு வாசலுக்கு முன்னால் சைக்கிளைக் கீழே போட்டு விழுந்தான். விழுந்த இடத்தில் செமிக்காததைத் தின்ற நாய் கத்தலும் கதக்கலுமாக கக்குவதைபோல ஓங்கரித்து கொஞ்சம் வாந்தியெடுத்தான். அவ்வளவு தான். எப்படியோ அவன் கதவைத்திறந்து உள்ளே போய்விட்டான். அரவம் கேட்டு முழித்த அம்மாவின் கேள்விக்கு ஏதோ பதில் சொல்லிவிட்டு தரையில் எதையும் விரிக்காமலேயே விழுந்து உறங்கிவிட்டான்.
எழுந்து நடக்கும்போது லேசாகத் தள்ளாடத்தான் செய்தது. பின்வாசலுக்குப் போய் முகத்தில் தண்ணீரை அடித்தான். கொஞ்சம் தன் உஷார் வந்தது. பல்லைத்தேய்த்தான். கக்கூஸ் போனான். முக்கி முக்கிப்பார்த்தும் ஒன்றும் ரிசல்ட் இல்லை. வயிறு கல் மாதிரி இருந்தது. போட்டிருந்த பேண்டையும் சட்டையையும் கழட்டி கொடியில் போட்டு விட்டு சார்ட்ஸையும், டி சர்ட்டையும் எடுத்துப்போட்டான். வீட்டை விட்டு வெளியே சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்தான். தெருவிளக்கின் ஒளி மங்கத்தொடங்கியிருந்தது. வானத்தில் சாம்பலைக் கரைத்துத் தெளித்த மாதிரி திட்டுத்திட்டாய் வெள்ளைநிறம் படரத்தொடங்கியிருந்தது. தெரு முக்கில் ஒட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டரில் குனிந்து மார்பைக் காட்டிக் கொண்டிருந்த நாயகியைப்  பார்த்ததும் ரோஸ்லின் ஞாபகம் வந்தது. அவள் ஒல்லிக்குச்சி. மார்பே இல்லாதது போல தட்டையாக இருப்பாள். ஆனால் முகம் அவ்வளவு லட்சணம். அவ்வளவு சாந்தம். பெரிய கண்களும், அளவான மூக்கும், செதுக்கி வைத்தமாதிரி உதடுகளும், ஓவியப்பெண்ணின் முகம் மாதிரி இருக்கும். அவளுடைய சாந்தமான முகபாவம் ஒரு ஆழ்ந்த உணர்வைத்தரும். ஏதோ மிகப்பெரிய ரகசியங்கள் அவள் பாதுகாப்பில் இருப்பதைப் போல தன்னம்பிக்கையுடன் அவளுடைய பார்வை இருக்கும். அவள் கண்களைப் பார்க்க அவனுக்குக் கூசும். பேப்பரை வாங்க நீட்டும் மெலிந்த கையையும் பிஞ்சாய் நீளும் விரல்களையே பார்த்திருக்கிறான். அந்த விரல்களுக்குரியவள் நிச்சயமாய் நல்லவளாகத்தான் இருப்பாள்.
ஐந்து மணிக்கு கட்டைப்பிரித்து எடுத்துக்கொண்டு ஏரியாவுக்குப் போனால் நூத்தைம்பது பேப்பர்களையும் போட்டு விட்டு வருவதற்கு ஏழு மணியாகிவிடும். வந்து குளித்துச் சாப்பிட்டு விட்டு கமிஷன் கடைக்குப்போய் சிட்டையை எடுத்துக்கொண்டு வசூலுக்குப் போகவேண்டும். இராத்திரி எட்டு மணிவரை வசூல் தான். அதன்பிறகு அவன் உலகம் தனி.
       எல்லாப்பொருட்களும் மங்கலாகத் தெரிந்தன. எல்லாம் அசைந்து கொண்டேயிருந்தன. எதுவும் ஓரிடத்தில் நிற்கவில்லை. நல்லவேளை தெருத்திருப்பத்தில் ரோட்டில் கிடந்த ஒருவனின் மீது சைக்கிளை ஏற்றி விட்டிருப்பான். கடைசி நொடியில் பிரேக் பிடித்து நின்று விட்டான். ஊரே போதையில் இருப்பதைப்போல இருந்தது. சிரித்துக்கொண்டான். சைக்கிளை மிதித்துக்கொண்டே அவனுக்குப் பிடித்த சினிமாப்பாட்டை முணுமுணுத்தான்.
காதலின் தீபமொன்றை ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் தந்த இன்பம்
மயக்கமென்ன காதல் வாழ்க!
அவன் கண்முன்னால் ரோஸ்லினின் முகம் தெரிந்தது. சைக்கிள் வலதுபக்கம் திரும்பி மெயின்ரோட்டுக்குப் போகவேண்டும். ஆனால் சைக்கிள் இடது பக்கம் திரும்பியது. அருகில் இருந்த மதுரைக்காரங்க வளவு இருந்த சந்துக்குள் திரும்பியது. அதிலிருந்து வெளியே வந்தால்  அன்னமக்கா வீடுதான் முதலில் வரும். கொஞ்சதூரத்தில் சுப்புத்தாத்தா கட்டிலில் படுத்திருந்தார். நாய் நிமிர்ந்து பார்த்து விட்டு தலையைக் கவிழ்த்துக் கொண்டது. சைக்கிள் அவனுடைய வீட்டின் முன்னால் போய் நின்றது. அவன் தலையைக் குலுக்கிக் கொண்டு அடச்சே.. என்ன யோசனை? மறுபடியும் வீட்டுக்கு வந்து நிக்கிறேன். என்று நினைத்தபடி சைக்கிளைத் திருப்பினான். மறுபடியும் அந்தப் பாட்டைப் பாடிக் கொண்டே போனான்.
காதலின் தீபமொன்றை ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் தந்த இன்பம்
மயக்கமென்ன காதல் வாழ்க!
மயக்கமென்ன என்ற வார்த்தையை உச்சரிக்கும்போது சைக்கிள் வலது பக்கம் திரும்புவதற்குப் பதில் இடது பக்கமே திரும்பியது. மறுபடியும் மதுரைக்காரங்க வளவு இருந்த சந்து வழியாக அன்னமக்கா வீடு , கட்டிலில் படுத்திருந்த சுப்புத்தாத்தா தலையை மட்டும் தூக்கும் நாய், என்று சுழன்றது. அவன் சைக்கிளை வீட்டுக்கு முன்னால் நிறுத்தினான். போதையினால் தான் இப்படி ஒரே இடத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறோமா. நேரம் வேறு ஆகிக்கொண்டே போகிறது. தெருவின் இரண்டு முனைகளையும் உற்றுப்பார்த்தான். நடந்து போய் திரும்பினான். வலது பக்கம் மெயின்ரோடு தெரிந்தது. வாகனங்கள் போவது தெரிந்தது. கந்தன் டீக்கடையிலிருந்து புகை வந்து கொண்டிருந்தது. இடது பக்கம் பார்த்தான். மதுரைக்காரங்க வளவிலிருந்த வீடுகளில் ஆட்கள் நடமாட்டம் தெரிந்தது. திரும்பி வந்தான். சைக்கிளை எடுத்துக் கொண்டு பாட்டை பாடாமல் மிதித்தான். ஆனால் மனம் அந்த இசையை விடாமல் உள்ளுக்குள் இசைத்துக் கொண்டிருந்தது. சரியாக மயக்கமென்ன என்ற வார்த்தையின் இசைத்துணுக்கு வரும்போது சைக்கிள் இடது பக்கமே திரும்பியது. மதுரைக்காரங்க வளவு இருந்த சந்துக்குள் நுழைந்தது. அன்னமக்கா வீட்டு வழியே, சுப்புத்தாத்தாவைக் கடந்து நாயைத்தாண்டி வீட்டு வாசலில் வந்து நின்றது.
அவன் குழம்பிப்போனான். சைக்கிளை நிறுத்திவிட்டு விளக்குக்கம்பத்தின் அடியிலிருந்த திண்டில் உட்கார்ந்தான். தெளிவாக யோசித்தான். எல்லாம் சரிதான். சைக்கிள் தன்னிச்சையாக யோசித்து முடிவெடுக்கிறதா. அவனுடைய போதையின் குழப்பமா? இந்த முறை மிகக்கவனமாக அடிமேல் அடிவைத்து சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போனான். ஆனால் மறுபடியும் இடது பக்கமே திரும்பினான். வீட்டுக்கு முன்னால் வந்ததும் ஆத்திரமும் கோபமும் வந்தது. உண்மையிலேயே என்ன நடக்கிறது என்று புரியவில்லை.
“ ங்ஙோத்தாலோக்க… என்னடா நடக்குது?.. “
என்று கத்தினான் விநாயகம். அப்போது தெருவின் வலது பக்கத்திலிருந்து ஒரு குரல் வந்தது.
“ எவண்டா என்னைய திட்டுனது…ஒம்மாளோக்க..” ஒரு ஆள் தள்ளாடித் தள்ளாடி தெருவை அளந்து கொண்டே வந்தான். அவன் இடுப்பில் கட்டியிருந்த சாரம் நிப்பமா விழுவமா என்கிற மாதிரி இருந்தது. மேலே இருந்த பச்சை நிற வார்ப்பெல்ட்டினால் மட்டுமே நின்று கொண்டிருந்தது. மேலே சட்டை முழுவதும் சாக்கடை ஒட்டியிருந்தது. ஒருவேளை தெருமுக்கில் விழுந்து கிடந்த ஆளோ. முன்பின் பார்த்திராத ஆளாகத் தெரிந்தான். அவனுடைய முகம் சுமூகமாக இல்லை. வயிற்றில் ஏற்பட்ட எரிச்சல் முகத்தில் தெரிந்தது. விநாயகம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். நேரே அவனுக்கு முன்னால் வந்து,
“ ஏலே மயிராண்டி இங்க என்னல பண்றே.. என் வீட்டுக்கு முன்னால உனக்கென்னலே சோலி..”
என்று கத்தினான். விநாயகம்,
“ அண்ணே இது என் வீடுண்ணே… போங்கண்ணே உங்க வீட்டைத் தேடுங்க..”
“ அதைத்தான்லே இவ்வள நேரம் தேடிக் கண்டுபிடிச்சிருக்கேன்.. திரும்பப்போய் தேடச்சொல்றியா..ங்ஙோத்தா.”
விநாயகத்துக்கு எரிச்சலாக வந்தது. ஏற்கனவே தெருவை விட்டு வெளியேற முடியவில்லை என்ற ஆத்திரம் வேறு. ஞாயிற்றுக்கிழமை பேப்பர் போகவில்லையென்றால் அவ்வளவு தான். பெரிய கலவரமே நடந்து விடும்.
“ கொஞ்சம் பேசாம போறீங்களா.. நானே கடுப்பில இருக்கிறேன்..” என்று சொல்லி முடிக்கும் முன்னால் அந்த ஆள் இடுப்பில் இருந்து எதையோ உருவி அவனை வயிற்றில் சொருகி விட்டான்.
“ கடுப்பில இருக்கானாம் மயிரு.. யார்ட்ட..”
விநாயகத்துக்கு வயிற்றின் இடது பக்கம் கூரான வலி பெருகி ரத்தம் களகளவென வழிந்தது. அவன் வயிற்றைப்பிடித்துக் கொண்டே,
“ ஐயோ யாராச்சும் வாங்களேன்.. அம்மா.. அப்பா.. “
என்று கத்தினான். விநாயகத்தின் சத்தத்தைக் கேட்டு அவன் கையில் இருந்த கத்தியை மறுபடியும் வீசினான். அது ரோட்டில் படுத்திருந்த நாயின் மீது விழுந்தது. அது காள் என்று கத்திக்கொண்டு எழுந்து ஓடியது.. அந்த ஆள் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டைக் கழட்டினான். விநாயகத்தை மாறி மாறி அடித்தான்.
“ என்னலே சவுண்டு விடுறே.. தேவடியாமவனே..”
விநாயகம் கதறினான். அவனால் எழுந்து நடக்க முடியவில்லை. இருந்த இடத்திலேயே அப்படியே நகர்ந்து விழுகிற பெல்ட் அடிகளுக்கு முதுகைக் காட்டிக் கொண்டிருந்தான். நல்லவேளை. அந்த ஆளுக்கு கை ஓய்ந்து விட்டது. கீழே விழுந்த சாரத்தை எடுக்கக் குனிந்தான். அதை எடுத்ததாக நினைத்து பாவனையாக இடுப்பில் சொருகினான்.
“ ராத்திரியிலிருந்து என் தெருவையும் வீட்டையும் காணோம்… ஓத்தலக்க எங்க போச்சுன்னு தெரியல.. இவனுங்க வேற.. “ என்று புலம்பிக்கொண்டே போனான்.
விநாயகத்துக்கு மயக்கம் வந்தது. கடகடவென பொழுது புலர்ந்து விட்டது. வெளிச்சம் பரவியது. விநாயகத்தின் கண்ணிமைகளை யாரோ இழுத்து மூடுவதைப் போலிருந்தது. விநாயகம் கடைசியாக கண்களைத் திறந்து பார்க்கும்போது அவன் போடுகிற பேப்பர் ஏஜெண்ட் சிங்காரத்தின் பெயர்ப்பலகை அடித்த கதவுகளைப் பார்த்தான்.
அந்த எழுத்துகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக்கொண்டே வந்தன.

நன்றி - சொல்வனம் இணைய இதழ் 

No comments:

Post a Comment