Wednesday, 30 October 2019

விளையாட்டுத்தோழன்


விளையாட்டுத்தோழன்


உதயசங்கர்
சசிக்குப் போரடித்தது. பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்து வெகுநேரம் ஆகிவிட்டது. அம்மா இன்னும் அலுவலகம் முடிந்து வரவில்லை. அப்பாவும் வெளியூர் போய் இருக்கிறார். வழக்கமாகவே இரண்டு பேரும் வீட்டுக்கு வர மாலை ஆறு மணிக்கு மேலாகி விடும். ஐந்தாவது வகுப்பு படிக்கும் சசி பள்ளிக்கூடம் விட்டதும் பேருந்தில் வீட்டுக்கு வந்து அவனிடம் இருக்கும் இன்னொரு சாவியால் வீட்டைத்திறந்து உள்ளே போய் பூட்டிக் கொள்வான். பையைத் தூக்கி வீசி விட்டு ஃபிரிட்ஜைத் திறந்து ஐஸ்கிரீமையோ, சிப்ஸ் பாக்கெட்டையோ எடுத்துக்கொண்டு கம்ப்யூட்டர் முன்னால் உட்காருவான்.
அவன் வீட்டுக்குப் பின்னால் உள்ள தெருவில் பையன்கள் விளையாடும் சத்தம் கேட்கும். அவ்வப்போது அந்த சத்தத்தை வைத்து கிரிக்கெட், புட்பால், கபடி, எறிபந்து, கிட்டிப்புள், என்று தெரிந்து கொள்வான். இந்த விளையாட்டுகளை அவன் வேடிக்கை பார்த்திருக்கிறான். அவ்வளவுதான். அவன் விளையாண்டதில்லை. எப்போதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மாவிடம் அனுமதி கேட்பான். அவனுடைய உடல்நலத்தைப் பற்றி, தெருப்பையன்களின் சேட்டைகளைப் பற்றி பேசி
“ வேண்டாம் சசி.. நீ வீட்டிலேயே அப்பா கூட விளையாடு..” என்று முடித்து விடுவாள். அப்பா ஒருநாளும் விளையாண்டதில்லை. அதனால் கேட்பதை சசி விட்டு விட்டான்.
அம்மாவும் அப்பாவும் வரும்வரை சசி கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருப்பான். இல்லையென்றால் தொலைக்காட்சியில் போகோ, கார்ட்டூன் நெட் ஓர்க், சுட்டி, டிவி என்று ஏதாவது ஒன்றில் அனிமேஷன் படம் பார்த்துக் கொண்டிருப்பான்.
இன்றும் அப்படித்தான் கம்ப்யூட்டரில் கார் ரேஸ் விளையாடினான். எவ்வளவு ஒழுங்காக ஓட்டிச் சென்றாலும் இரண்டு முறையும் அவனால் வெற்றி பெறமுடியவில்லை. அவனுக்குக் கோபம் வந்து விட்டது. அடுத்தமுறை காரை பயங்கர வேகத்தில் ஓட்டினான். பிளாட்பாரத்தில் ஏற்றினான். விளக்குக்கம்பங்களைச் சாய்த்தான். சாலையில் குறுக்கே போகிறவர்களின் மீது காரை வைத்து மோதினான். அவன் வெற்றி பெறும்வரை இதையே திரும்பத்திரும்பச் செய்தான். வெற்றி பெற்றதும் அந்த விளையாட்டு சலித்து விட்டது.
தீவிரவாதிகளை வேட்டையாடும் விளையாட்டிலும் அப்படித்தான். தீவிரவாதிகளை மட்டுமல்ல சாதாரண மக்களையும், வீடுகளையும் சுட்டான். தீவிரவாதிகளை எல்லாம் சுட்டபிறகு தான் அவனுடைய வேகம் அடங்கியது. தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப பார்த்த அனிமேஷன் தொடர்களே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன.
வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. எழுந்து போய் கம்பிக்கதவின் வழியாக வெளியே பார்த்தான். வாசல் கதவு ஆடிக்கொண்டிருந்தது. யாராவது வந்திருப்பார்களோ?
ஒரு அணில் அந்தக் கதவின் மீது ஏறி ஓடியது. கதவு ஆடியது. பின்னால் அதை விரட்டி வந்த காகம் கதவில் உட்கார்ந்தது. கதவு ஆடியது. சசிக்குச் சிரிப்பு வந்தது. அப்படியே கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்தான். வீட்டுக்குள் திரும்புகிற சமயம்,
“ சசி! “ என்று ஒரு பையனின் குரல் கேட்டது. சசி பார்த்தான். வாசலில் ஒரு பையன் அவன் வயது தான் இருக்கும். நின்று கொண்டிருந்தான். ஒல்லியாக இருந்தான். அவனுடைய கைகள் கதவைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தன. விளையாடிக்கொண்டிருந்த பையன் விளையாட்டைப் பாதியில் விட்டு விட்டு வந்த மாதிரி இருந்தான்.
“ சசி விளையாட வர்றியா? “ என்று கேட்டான் அந்தப்பையன்.
“ அம்மா வெளியே போய் விளையாடக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க..”
“ சரி. வீட்டுக்குள்ளே விளையாடுவோம்..”
சசி யோசித்தான். அந்தப் பையனை வீட்டுக்குள்ளே கூப்பிடவா வேண்டாமா? அம்மா என்ன சொல்வாள்? அப்பா திட்டுவாரா? அந்தப் பையனை அவன் பார்த்தது கூட இல்லை. அந்தப் பையனை மட்டுமில்லை. அவன் வகுப்பில் படிக்கும் பையன்களைத் தவிர வேறு யாரையும் அவனுக்குத் தெரியாது. கொஞ்சநேரம் அப்படியே நின்று கொண்டிருந்தவன் திரும்பி உள்ளே போய் சாவியை எடுக்கப்போனான். சாவியை எடுத்துக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் அந்தப்பையன் வீட்டுக்குள் இருந்தான்.
“ எப்படி வந்தே? “ என்று கேட்க நினைப்பதற்குள் அவன்
“ எங்கேன்னாலும் நான் வந்துருவேன்.. குமாரா கொக்கா? சரி கண்ணாமூச்சி விளையாடலாமா? செஸ் விளையாடலாமா? கேரம் விளையாடலாமா? “
என்று அடுக்கினான். சசி ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை தெரிந்த மாதிரியும் இருந்தது. தெரியாத மாதிரியும் இருந்தது.
குமாரும் சசியும் கண்ணாமூச்சி விளையாடினார்கள். குமார் சசியைச் சுலபமாகக் கண்டுபிடித்தான். ஆனால் சசியால் அவனுடைய வீட்டில் ஒளிந்திருந்த குமாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சசியின் முகம் வாடுகிற மாதிரி இருக்கும்போதெல்லாம் குமாரே முன்னால் வந்து அவுட்டாகி விடுவான்.
கேரம் விளையாண்டார்கள். அதில் சசி தான் ஜெயித்துக் கொண்டேயிருந்தான். ஒரு தடவை கூட குமாரால் ஜெயிக்க முடியவில்லை. ஆனால் குமார் அசராமல்
“ அடுத்த ஆட்டம் பாரேன்.. நான் தான் ஜெயிக்கிறேன்.. “ என்று சொல்லுவான். அப்படித்தான் செஸ்ஸிலும். குமார் ஒரு தடவை செக்மேட் வைத்தால் சசி ஒரு தடவை செக்மேட் வைப்பான். கலகலவென பேசிக்கொண்டேயிருந்தான் குமார். சசி கெக்கேபிக்கே என்று சிரித்துக் கொண்டேயிருந்தான். அதுவும் அவனுடைய பள்ளிக்கூடத்தில் நடந்த காமெடிகள்! அப்பப்பா?
சசிக்கு மனதும் உடலும் மிதந்தது. அவன் குமாரிடம்,
“ தினமும் நீ வா! நாம விளையாடலாம்..” என்றான். குமார் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே,
“ உங்க அப்பா அம்மா ஒண்ணும் சொல்லமாட்டாங்களா? “ என்று கேட்டான். அதைக்கேட்டதும் சசிக்கு அப்பா அம்மா ஞாபகம் வந்து விட்டது.
வாசலில் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சசிக்கு பயம் வந்து விட்டது. குமாரை வீட்டுக்குள் கூட்டி வந்து விளையாடியதற்கு அம்மா திட்டுவார்களோ என்று யோசித்தான். பூட்டிய கதவைத் திறப்பதற்கு சாவியை எடுத்துக் கொண்டு ஓடினான்.
அம்மா உள்ளே வந்ததும் சசி,
“ அம்மா.. ஒரு விஷயம் சொல்வேன்.. நீங்க திட்டக்கூடாது..”
“ என்னடா செல்லம்! “ என்று சொல்லியபடியே அம்மா ஹாலுக்கு வந்தாள். அவள் பின்னாலே வந்த சசிக்கு ஆச்சரியமாக இருந்தது.
குமாரைக் காணவில்லை. அவன் அடுக்களை, படுக்கையறை, சாமான்கள் அறை, கழிப்பறை, என்று எல்லா இடங்களிலும் போய் பார்த்து விட்டு வந்தான். ஒவ்வொரு இடத்திலும் போய் குமார் குமார் என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தான்.
குமாரைக் காணவில்லை. எப்படிப் போயிருப்பான்?
அம்மாவின் குரல்,
“ என்ன சேட்டை பண்ணினே! நான் திட்டமாட்டேன்.. சொல்லு..” அவன் காதுகளில் விழுந்தது. அவன் சிரித்துக் கொண்டே,
“ சாக்லேட் ஐஸ்கிரிமைத் தின்னுட்டேன்..” என்று சிரித்தான். அம்மாவும் சிரித்துக் கொண்டே,
“ உனக்குத் தானடா அது..” என்று சொன்னாள். காலையில் பள்ளிக்கூடப்பேருந்துக்காக நின்று கொண்டிருந்தபோது, தோளில் பையுடன் குமார் சாலையில் போய்க்கொண்டிருந்தான்.
சசி அவனைப் பார்த்து, “ குமார்..” என்று கத்தினான். குமார் திரும்பிப்பார்க்காமல் அவன் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தான்.
 சசி அம்மாவிடம் எப்படியாவது கேட்டு இனிமேல் வெளியில் போய் பையன்களோடு சேர்ந்து விளையாட வேண்டும் என்று நினைத்தான்.

நன்றி - வண்ணக்கதிர்






No comments:

Post a Comment