Saturday 26 October 2019

மாயச்சிறகு


மாயச்சிறகு

உதயசங்கர்

ரொம்ப நாளாக அறிவழகனுக்கு பறக்கவேண்டும் என்று ஆசை. பாலர் வகுப்பு படிக்கும்போதே பறந்து கொண்டிருக்கும் பறவைகளை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பான். கைகளைத் தட்டிச் சிரிப்பான். அவனுடைய வீட்டுக்கு அருகில் இருந்த வேப்பமரத்தில் உட்கார்ந்திருக்கும் காகங்களை வேடிக்கை பார்ப்பான். அவை சிறகுகள் விரித்துப் பறப்பதையும் அழகாக கிளைகளில் வந்து அமர்வதையும் பார்த்துக் கொண்டேயிருப்பான்.
அவன் சாப்பிடும் தின்பண்டங்களை கீழே தரையில் வீசுவான். சில காகங்கள் மட்டும் கா கா எனக் கரைந்து கொண்டே வந்து இரை எடுக்கும்.  சில காகங்கள் சந்தேகத்துடன் தலையைச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே மரக்கிளையிலே இருக்கும். அவன் தினம் உணவு போட்டுப் போட்டு காக்கைகளைப் பழக்கம் பிடித்துக் கொண்டான். இப்போது அவன் வீட்டை விட்டு வெளியில் வந்தால் போதும் உடனே காகங்கள் கரைய ஆரம்பித்து விடும்.
கீழே வந்து இரை எடுத்த காகங்களில் ஒரு வயதான காகம் இருந்தது. உடம்பிலும், சிறகுகளிலும் உள்ள இறகுகள் உதிர்ந்து லேசாகத் தள்ளாடியபடியே நடக்கும். மேல் அலகு முனையில் உடைந்திருந்தது. ஒரு கண்ணால் மட்டுமே பார்த்தது. அது மரத்திலிருந்து கீழே மெல்லப் பறந்து வரும். அது இறங்கி விட்டால் மற்ற காகங்கள் ஓரமாய் ஒதுங்கி நின்று கா கா கா கா என்று கரைந்து கொண்டிருக்கும்.
ஒரு நாள் அந்த வயதான காகம் அறிவழகனிடம் பேசியது.
‘ கா கா கா ஏன் தம்பி தெனமும் எங்களுக்கு தீனி போடறே..’
இது தான் சமயம் என்று அறிவழகன் அந்தக் காகத்திடம்,
’ தாத்தா.. தாத்தா… எனக்கும் உங்கள மாதிரி பறக்க ஆசையா இருக்கு.. பறக்கறது எப்படி இருக்கும் தாத்தா..’
என்று கேட்டான். உடனே தலையைச் சாய்த்து அவனைப் பார்த்தது தாத்தாக்காகம். மெல்ல இரண்டு எட்டு எடுத்து வைத்தது. வானத்தை அண்ணாந்து பார்த்தது.
‘ கா கா கா பறக்கறது எப்படி இருக்கும்? ம்ம் நல்லா இருக்கும் காத்துல லேசான மாதிரி உடம்பே இல்லாத மாதிரி இருக்கும். கீழே இருக்கிற எல்லாத்தையும் பாக்கலாம் .காத்து நம் உடம்புவழியா போகும்போது நாமே காத்தானது மாதிரி.. ம்ம் பறக்கற மாதிரியே இருக்காது… மேகங்கள் உரசிக்கிட்டு போகும். அப்புறம் அப்புறம் கீழே சின்னப்பசங்க கையில் வைச்சிருக்கிற வடை கூட தெரியும்.. தனியாச் சுத்தற கோழிக்குஞ்சு தெரியும்…. ம்ம்ம் அது ஒரு காலம்.. எனக்கு இப்ப வயசாயிருச்சு.. ரொம்ப உயரத்தில பறக்க முடியல… ‘ என்று சொல்லி மூச்சு வாங்கியது.  தாத்தாக்காகம் சொல்வதை ஆ வென வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருந்த அறிவழகன்,
‘ எனக்கும் பறக்கணும்னு ஆசையா இருக்கு தாத்தா.. எப்படிப் பறக்கணும்னு சொல்லித் தாங்க தாத்தா…’
என்று கெஞ்சும் குரலில் கேட்டான். அதைக் கேட்ட தாத்தாக்காகம் அவனை தன்னுடைய ஒரு கண்ணால் உற்றுப் பார்த்தது. அப்புறம் உடைந்த அலகால் சிறகுகளைக் கோதி விட்டது. காலால் தலையைச் சொறிந்தது. பின்னர் அறிவழகனைப் பார்த்து,
‘ கா கா கா எனக்குத் தெரியலையே தம்பி..’ என்று சொன்னது.
‘ தெரியாமலா நீங்க பறக்கிறீங்க…’
‘ கா கா கா நாங்க பொறந்ததிலிருந்தே பறக்கிறோம்… எங்களுக்கு ரெக்கை இருக்கு.. உனக்கு ரெக்கை இருக்கா…’ என்று தாத்தாக்காகம் கேட்டது. பின்னர் அவனைச் சுற்றி மெல்ல சிறகுகள் அடித்துப் பறந்தது. அறிவழகன் முகம் வாடியதைப் பார்த்து எங்கே நமக்கு லகுவாகக் கிடைக்கிற தீனி கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில்,
‘ கா  கா  க்ர்ர்ர்ர்ர் பொறு..பொறு..ரெக்கை இல்லாம பறக்க முடியுமான்னு என்னோட நண்பன் கிட்ட கேட்டுட்டு வாரேன்.. அப்புறம்.. எனக்கு இட்லி, தோசை, மாதிரி தீனி கொண்டுட்டு வா.. சேவு.. மிக்சர், பிஸ்கட் எல்லாம் சின்னப்பசங்களுக்கு கொடு… வயசாருச்சில்ல..’
‘ சரி தாத்தா..’ என்று உற்சாகமாகச் சொல்லிக் கொண்டே அறிவழகன் போனான். மறுநாள் தாத்தாக்காகத்துக்குத் தனியாக இட்லித் துண்டுகளைப் போட்டான். தாத்தாக்காகம் டபக் டபக்கென்று விழுங்கியது. வயிறு நிறைந்ததும்,
‘ கா கா கா… யப்பா வயிறு நிறைஞ்சிருப்பா.. க்ர்ர் ‘ என்று ஏப்பம் விட்டது. அறிவழகன் ஆவலுடன் தாத்தாக்காகத்தின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். மெல்ல தொண்டையைச் செருமிக் கொண்டு,
‘ தம்பி நான் என் நண்பனிடம் கேட்டேன்.. அவன் என்ன சொல்றான்னா ரெக்கை இல்லாம யாராலும் பறக்க முடியாது.. ஆனா பறக்கிறது ஒரு செயல் மட்டுமில்லை.. அது ஒரு உணர்வு.. அதைப் பறக்காமலே கூட பெற முடியும்…அப்படிங்கிறான்..’
அறிவழகன் ஒண்ணும் புரியாமல் முழித்தான். அதைப் பார்த்த தாத்தாக்காகம்,
‘ ஒண்ணும் புரியலல்ல.. எனக்கும் தான் புரியல…கிறுக்குப்பய அவன் இப்படித்தான் ஏதாச்சும் உளறிக்கிட்டே இருப்பான்.. நான் கழுகண்ணன்கிட்ட கேக்கிறேன்.. அவன் தான் சூரியன்கிட்டேயே பறந்து போவான்.. நாளைக்கு தோசை கொண்டுட்டு வர்றியா…’
என்று சொல்லி விட்டு மெல்ல பறந்து வேப்பமரத்தில் கீழே இருந்த கிளையில் போய் உட்கார்ந்தது. அறிவழகன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டே பள்ளிக்கூடத்துக்குப் போனான்.
போகும்வழியில் இருந்த சாக்கடைக்குள் இருந்து,
‘ ம்ஞீம்…ம்ம்ஞீம்… ‘ என்று சத்தம் கேட்டது. அறிவழகன் எட்டிப் பார்த்தான். கண் திறக்காத நாய்க்குட்டி ஒன்று நடக்க முடியாமல் சாக்கடையில் புரண்டு கொண்டிருந்தது. கன்னங்கரேலென்று உடம்பில் சாக்கடை நீர்வழிய பார்க்கப்பாவமாக இருந்தது. அப்படியே விட்டால் அது செத்துப்போய் விடும். அறிவழகன் தோளில் இருந்த புத்தகப்பையைக் கீழே வைத்தான். குனிந்து அந்த நாய்க்குட்டியை எடுத்தான். நாய்க்குட்டி ஈனக்குரலில் அழுதது. அவன் கைகளில் சாக்கடை ஒட்டிக் கொண்டது. அறிவழகன் தூக்கியவுடன் பயத்தில் உடம்பை உதறியது. சட்டையெல்லாம் சாக்கடைத்துளிகள் தெறித்தன. ஆனால் அறிவழகன் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. சுற்றிலும் பார்த்தான். கொஞ்சதூரத்தில் ஒரு அடி பைப்பு இருந்தது. தண்ணீர் அடித்து நாய்க்குட்டியைக் கழுவினான். வெள்ளை வெளேரென நாய்க்குட்டி துலங்கியது. ரொம்பநேரம் தண்ணீரில் இருந்த்தால் குளிரில் அதன் உடல் நடுங்கியது. அவனுடைய டிராயர்பையில் வைத்திருந்த கைக்குட்டையால் அதன் உடலைத் துடைத்தான். அந்த வெள்ளை நாய்க்குட்டி தன்னுடைய குட்டி நாக்கால் அவனுடைய கையை நக்கியது.
அவன் திரும்பி வேகமாக வீட்டுக்கு ஓடினான். ஒரு சணல்சாக்கை எடுத்து விரித்து அதில் படுக்கவைத்தான். அம்மாவிடம் சொல்லி ஒரு சிறு கிண்ணத்தில் பால் ஊற்றி நாய்க்குட்டியின் முன்னால் வைத்தான். நாய்க்குட்டி சளப் சளப் என்று பாலை நக்கியது. அம்மாவிடம் அதைப் பார்த்துக் கொள்ளச் சொன்னான். வேகமாக சீருடை மாற்றினான். அம்மா அவனுடைய செய்கைகளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். பள்ளிக்கூடத்துக்கு நேரமாகி விட்டது. ஓடிப்போனால் தான் நேரத்துக்குப் போகமுடியும்.
அவன் வீட்டை விட்டு வெளியே வந்து ஓட கால்களை எடுத்தான். அவன் முதுகில் ரெக்கைகள் முளைத்திருந்தன. மெல்ல வானத்தில் ஏறி அவன் பறந்து போனான். வேப்பமரத்தில் மதிய உணவுக்கு என்ன செய்யலாம் என்று அண்ணாந்து யோசித்துக் கொண்டிருந்த தாத்தாக்காகம் அறிவழகன் பறப்பதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.
நன்றி - பொம்மி தீபாவளி மலர்




No comments:

Post a Comment