சாதத் ஹசன் மண்டோ
ஆங்கிலத்தில்- காலித் ஹசன்
தமிழில்- உதயசங்கர்
தொலைபேசி மணியடித்தது. மன்மோகன் அதை எடுத்தான்.
“ ஹலோ..44457 ..”
“ மன்னிக்கவும் ராங் நம்பர்..”
என்று ஒரு பெண்ணின் குரல் ஒலித்தது. மன்மோகன் ரிசீவரைக் கீழே வைத்தான். பின்பு அவனுடைய புத்தகத்தை மறுபடியும் கையில் எடுத்தான். அவன் அதை இருபது முறைகளுக்கு மேல் படித்து விட்டான். அது அசாதாரணமான புத்தகம் என்பதினால் இல்லை. அது தான் அந்த அறையில் இருந்த ஒரே புத்தகம். அதில் கடைசி பக்கங்களும் இல்லை.
ஒரு வாரத்துக்கு மன்மோகன் மட்டும் தான் அந்த அலுவலக அறையில் குடியிருக்கப் போகிற ஒரே ஆள். அது அவனுடைய நண்பனுடையது. அந்த நண்பன் அவனுடைய தொழில் கடனுக்காக நகரத்தை விட்டு வெளியே போயிருக்கிறான். மன்மோகன் இந்தப் பெரிய நகரத்திலுள்ள ஆயிரக்கணக்கான வீடற்ற மக்களில் – இரவுகளில் நடைபாதைகளில் படுத்துறங்கும் - ஒருவன். அவனுடைய நண்பன் அவனை இங்கே அவன் இல்லாதபோது பொருட்களைக் காவல் செய்வதற்காக அழைத்திருந்தான்.
அவன் வெளியே போவதேயில்லை. அவன் நிரந்தரமாகவே வேலையின்றி இருந்தான். அவன் எல்லா வேலைகளையும் வெறுத்தான். உண்மையிலே அவன் முயற்சி செய்தால் அவனுக்கு மிகச் சுலபமாக சினிமா கம்பெனியில் டைரக்டர் வேலை கிடைத்திருக்கும். ஒரு காலத்தில் அதை விட்டு விட்டு வந்திருந்தான். அதனால் மீண்டும் அடிமையாக மாற அவனுக்கு விருப்பமில்லை. அவன் ஒரு அழகான, அமைதியான, ஆபத்தில்லாத, மனிதன். அவனுக்கென்று சொந்தச் செலவுகள் இல்லை. அவனுக்கு வேண்டியதெல்லாம் காலையில் ஒரு கோப்பை தேநீர், இரண்டு துண்டு சுட்ட ரொட்டி,மதியம் கொஞ்சம் ரொட்டியும், தொடுகறியும், ஒரு பாக்கெட் சிகரெட் அவ்வளவு தான். அதிர்ஷ்டவசமாக அவனுடைய இந்த எளிய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சியடைகிற, போதுமான நண்பர்கள் இருந்தார்கள்.
மன்மோகனுக்கு குடும்பமோ, நெருங்கிய உறவினர்களோ கிடையாது. வாழ்க்கை கடினமாகும்போது அவனால் உணர்வில்லாமல் பல நாட்கள் இருக்கமுடியும். சிறுவனாக இருந்த போதே வீட்டை விட்டு ஓடி வந்து பம்பாயின் அகன்ற பிளாட்பாரங்களில் பல வருடங்களாக வாழ்கிறான் என்பதைத் தவிர அவனைப்பற்றி அவனுடைய நண்பர்களுக்கு அதிகமாக ஒன்றும் தெரியாது. அவன் வாழ்வில் ஒன்றே ஒன்று மட்டும் இல்லை. அது பெண்கள். அவன் வழக்கமாகச் சொல்வான்.
“ ஒரு பெண் என் மீது காதல் கொண்டிருந்தால் என் வாழ்க்கையே மாறியிருக்கும்..”
உடனே நண்பர்கள் பதில் சொல்வார்கள்,
“ அப்போதும் நீ வேலை செய்ய மாட்டே..”
அதற்கு அவன்,
“ அப்போதிருந்து வேலை தான்.. வேறொன்றும் கிடையாது..”
என்று பதில் சொல்வான்.
“ அப்புறம் ஏன் ஒரு உறவை ஏற்படுத்த வேண்டியது தானே..”
“ அது என்ன நல்லாவா இருக்கு.. உறவை ஒரு ஆம்பிளை தொடங்குவது என்பது…”
இப்போது மதியநேரம். ஏறத்தாழ மதிய உணவிற்கான வேளை. திடீரென தொலைபேசி ஒலித்தது. அவன் அதை எடுத்தான்.
“ ஹலோ.. 44457..”
“ 44457?..” ஒரு பெண்குரல் கேட்டது.
“ ஆமாம்..” என்று மன்மோகன் பதிலளித்தான்.
“ யார் நீங்கள்? “ என்று அந்தக்குரல் கேட்டது.
“ நான் மன்மோகன்..”
அதற்குப் பதில் இல்லை. திரும்ப அவன்,
“ நீங்க யார்கிட்ட பேச விரும்புறீங்க…”
என்று கேட்டான்.
“ உங்க கிட்டதான்..” என்று அந்தக் குரல் சொன்னது.
“ எங்கிட்டயா..”
“ ஆமாம் உங்களுக்கு ஆட்சேபணையில்லைன்னா..”
“ இல்லை.. இல்லவே இல்லை..”
“ உங்க பெயர் மதன்மோகன்னா சொன்னீங்க..”
“ இல்லை..மன்மோகன்..”
“ மன்மோகன்..”
சற்று நேரம் அமைதி. அவன்,
“ நீங்க எங்கிட்ட பேச விரும்புறீங்கன்னு நெனச்சேன்..”
என்று சொன்னான்.
“ ஆமாம்..”
“ அப்படின்னா மேலே சொல்லுங்க..”
“ எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. ஏன் நீங்க ஏதாவது சொல்லக்கூடாது?..”
“ நல்லது.. நான் ஏற்கனவே என்னோட பேரை உங்ககிட்ட சொல்லிட்டேன்.. தற்காலிகமாக இந்த அலுவலகம் தான் என்னோட தலைமையகம்.. நான் வழக்கமாக நகரத்திலுள்ள பிளாட்பாரங்கள்ல தான் தூங்குவேன்.. ஆனால் கடந்த ஒரு வாரமா நான் இந்த அலுவகத்தின் பெரிய மேஜை மேலே படுத்து உறங்கிக்கிட்டிருக்கேன்..”
என்று மன்மோகன் சொன்னான்.
“ ராத்திரியில கொசுக்களை விரட்ட என்ன செய்வீங்க..? பிளாட்பாரத்தில கொசுவலை கட்டுவீங்களா? “
இதைக் கேட்டு மன்மோகன் சிரித்தான்.
” இதுக்குப் பதில் சொல்றதுக்கு முன்னால நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியிர்ரேன்.. நான் பொய் சொல்ல மாட்டேன். நான் பல வருடங்களாக பிளாட்பாரங்களில் தூங்கி வருகிறேன்.. இந்த அலுவலகம் என்னுடைய குடியிருப்பாக மாறிய பிறகு நான் இதில் வாழ்ந்து வருகிறேன்..”
“ எப்படி பொழுது போகுது..? “
“ என்கிட்ட ஒரு புத்தகம் இருக்கு.. அதில கடைசிப்பக்கங்கள் இல்லை.. ஆனால் அதை இருபது தடவைகள் படித்து விட்டேன்.. ஒரு நாள் இல்லாத கடைசிப் பக்கங்களில் என்னோட கைகளை வைத்துக் கொண்டிருக்கும்போது அதன் முடிவு என்ன என்று ஒரு வழியாகத் தெரிந்து கொண்டேன்.. இரண்டு காதலர்களும் சந்தித்து விடுகின்றனர்.”
“ நீங்க ரெம்ப சுவார்சியமான ஆளா இருப்பீங்க போல இருக்கே..”
என்று அந்தக் குரல் சொன்னது.
“ நீங்க அன்பா இருக்கீங்க..”
“ என்ன செய்றீங்க..?”
“ செய்றதா?”
“ நான் கேட்கிறது.. நீங்க என்ன வேலை பாக்கறீங்க..?”
“ வேலையா? எதுவுமில்லை.. வேலையே செய்யாதபோது ஒரு மனிதனுக்கு என்ன வேலை இருக்க முடியும்.. ஆனா உங்க கேள்விக்குப் பதில் சொல்லணும்னா நான் பகல் முழுவதும் சுத்திகிட்டிருப்பேன்…ராத்திரியில தூங்குவேன் ”
“ உங்க வாழ்க்கை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”
“ நில்லுங்க க.. நான் முதல் தடவையா.. அந்தக் கேள்வியை என்கிட்ட கேட்கிறேன்.. நான் வாழ்ற என்னோட வாழ்க்கையை நான் விரும்புறேனா..?”
“ சரி பதில் என்ன?”
“ அதுக்குப் பதிலே இல்லை.. ஆனா நான் இவ்வளவு நாளா என்னோட வாழ்க்கையை இந்த மாதிரி வாழ்ந்துகிட்டிருக்கேன்னா.. நான் அதை விரும்புறேன்னு நம்புறதுல நியாயம் இருக்குன்னு நினைக்கிறேன்..”
அந்தப் பக்கத்திலிருந்து சிரிப்பு.
“ நீங்க அழகா சிரிக்கிறீங்க..”
என்று மன்மோகன் சொன்னான்.
“ நன்றி “
என்று சொல்லி அந்தக் குரல் வெட்கப்பட்டது. அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. ரெம்ப நேரமாக அவன் ரீசிவரைக் கையில் பிடித்தபடி அவனுக்குள்ளே சிரித்துக் கொண்டிருந்தான்.
அடுத்த நாள் காலை எட்டுமணி இருக்கும். தொலைபேசி மீண்டும் ஒலித்தது. அவன் அசந்து உறங்கிக் கொண்டிருந்தான். ஆனால் அந்தச் சத்தம் அவனை எழுப்பி விட்டது. அவன் கொட்டாவி விட்டுக் கொண்டே அதை எடுத்தான்.
“ ஹலோ.. இது 44457..”
“ குட்மார்னிங்.. மன்மோகன்சாகிப்..”
“ குட்மார்னிங்..ஓ..நீங்களா..குட்மார்னிங்..”
“ தூங்கிக்கிட்டிருந்தீங்களா..?”
“ ஆமா.. நான் இங்கே வந்ததிலிருந்து ரெம்பக் கெட்டுப் போயிட்டேன்.. தெரியுமா?..நான் பிளாட்பாரத்துக்குத் திரும்புற போது ரெம்பக் கஷ்டப்படப்போறேன்…”
“ ஏன்?”
“ஏன்னா.. நீங்க பிளாட்பாரத்துல தூங்கினா காலைல.. அஞ்சுமணிக்கு முன்னாலேயே எந்திக்கணும்..”
அந்தப்பக்கம் சிரிப்பு.
“ நேற்று நீங்க திடீர்னு வைச்சுட்டீங்க..”
என்று சொன்னான்.
“ சரி.. ஏன் நீங்க.. நான் அழகா சிரிக்கிறேன்னு சொன்னீங்க..”
“ இதென்ன கேள்வி..! எதாச்சும் அழகா இருந்தா அதை நாம கண்டிப்பா பாராட்டணும் இல்லையா?”
“ இல்லவே இல்லை..”
“ நீங்க நிபந்தனைகள் விதிக்கக் கூடாது.. நான் எப்போதும் நிபந்தனைகளை ஏத்துக்கிறதில்லை.. நீங்க சிரிச்சா நீங்க அழகாச் சிரிக்கிறீங்கன்னு சொல்லத்தான் போறேன்..”
“ அப்ப்டின்னா.. நான் வைச்சிருவேன்..”
“ அது உங்க இஷ்டம்..”
“ நான் அப்செட் ஆனா அதைப்பத்தி உங்களுக்குக் கவலையில்லையா?..”
“ சரியா சொல்றதா இருந்தா.. நான் முதல்ல என்னை அப்செட் பண்றதை விரும்பல.. அப்படின்னா… நீங்க சிரிக்கும்போது நீங்க அழகா சிரிக்கிறீங்கன்னு சொல்லலைன்னா.. என்னோட நல்ல ரசிப்புணர்வுக்கு நான் அநீதி செய்ஞ்ச மாதிரி ஆயிரும்..”
கொஞ்சநேரம் அமைதி. பிறகு குரல் மீண்டும் கேட்டது.
“ மன்னிக்கணும்.. நான் எங்களோட வேலைக்காரிகிட்ட பேசிக்கிட்டிருந்தேன்.. அப்படின்னா நீங்க உங்க ரசிப்புணர்வுக்கு நேர்மையா இருப்பீங்க.. வேறு என்ன உங்க நேர்மையான ரசிப்புணர்வு.?”
“ நீங்க என்ன சொல்ல வர்றீங்க..”
“ நான் சொல்ல வந்தது.. என்ன பொழுதுபோக்கு.. இல்லைன்னா.. வேலை..இல்லைன்னா..நீங்க என்னெல்லாம் செய்வீங்க..?”
அதைக் கேட்டு மன்மோகன் சிரித்தான்.
“ பெரிசா எதுவுமில்லை.. எனக்குப் போட்டோகிராபியில விருப்பம்.. கொஞ்சம்போல..”
“ அது ரெம்ப நல்ல பொழுதுபோக்கு..”
“ நான் அதை எப்பவுமே.. நல்ல அல்லது கெட்ட அப்படிங்கிற மாதிரியான வார்த்தைகள்ல யோசிக்கிறதில்ல..”
“ உங்க கிட்ட ஒரு அழகான கேமிரா இருக்கணும்..”
“ என்கிட்ட கேமிரா கிடையாது.. எப்பவாவது ஒரு நண்பர்கிட்டருந்து கடன் வாங்குவேன்.. எப்படியாவது.. நான் கொஞ்சம் பணம் சம்பாதிச்சன்னா.. கண்டிப்பா ஒரு கேமிராவை வாங்குவேன்..”
“ என்ன கேமிரா..”
“ எக்ஸாட்டா.. அது ஒரு தானியங்கி கேமிரா..எனக்கு அது ரெம்பப் பிடிக்கும்..”
அந்தப்பக்கம் அமைதி.
“ நான் வேற ஒரு விஷயத்தை யோசிச்சிக்கிட்டிருக்கேன்..”
“ என்ன? “
“ நீங்க என்னோட பேரையும் கேட்கல.. போன் நம்பரையும் கேட்கல..”
“ எனக்கு அது தேவைன்னு தோணலை..”
“ ஏன் தோணலை..”
“ உங்க பேர் என்னவாக இருந்தா என்ன.. உங்ககிட்ட என்னோட நம்பர் இருக்கு.. அது போதும்.. நான் எப்ப உங்களுக்கு போன் பண்ணனும்னு விரும்புறீங்களோ அப்ப நீங்க உங்க பேரையும் நம்பரையும் கண்டிப்பா கொடுப்பீங்கன்னு நிச்சயமாத் தெரியும்..”
“ இல்லை..மாட்டேன்..”
“ உங்க விருப்பம்..நான் அதைக் கேட்கப் போறதில்ல..”
“ நீங்க ஒரு விசித்திரமான மனிதர்..”
” உண்மை தான்..நான் அப்படித்தான்..”
மறுபடியும் அமைதி.
“ மறுபடியும் யோசிக்கிறீங்களா..”
என்று அவன் கேட்டான்.
“ ஆமா நான் யோசிச்சேன்.. ஆனா யோசிக்க வேண்டிய விஷயத்தைப் பற்றி என்னால யோசிக்க முடியல..”
“ அப்படின்னா நீங்க ஏன் போனை வைக்கல.. இன்னொரு தடவை பண்ணலாமே ”
“ நீங்க நாகரீகமில்லாத ஆள்.. நான் போனை வைக்கிறேன்..”
மன்மோகன் புன்னகைத்தான். ரீசிவரைக் கீழே வைத்தான். அவனுடைய முகத்தைக் கழுவி, உடைகளை உடுத்திக் கொண்டு வெளியேறும்போது மறுபடியும் தொலைபேசி ஒலித்தது. அவன் எடுத்தான்.
“ 44457 “
“ மிஸ்டர் மன்மோகன்?”
என்று அந்தக் குரல் கேட்டது.
“ உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? “
“ சரி.. நான் இனிமேல் கோபப்பட மாட்டேன்னு உங்ககிட்ட சொல்ல விரும்பினேன்..”
“ ரெம்ப நல்லது..”
“ உங்களுக்குத் தெரியுமா? நான் என்னோட காலையுணவை சாப்பிடும்போது உங்ககிட்ட கோபப்பட்டிருக்கக் கூடாதுன்னு எனக்குத் தோணிச்சி… நீங்க காலையுணவைச் சாப்பிட்டாச்சா? “
“ இல்ல.. நீங்க போன் பண்ணும்போது வெளியே போகக் கிளம்பிக்கிட்டிருந்தேன்..”
“ ஓ அப்படின்னா.. நான் உங்கள நிறுத்தமாட்டேன்..”
“ இன்னிக்கு எனக்கொண்ணும் அவசரமில்ல.. ஏன்னா எங்கிட்ட பணமில்ல.. இன்னிக்குக் காலைல ஏதாவது காலையுணவு சாப்பிடமுடியும்னு தோணலை..”
“ ஏன் நீங்க இப்படியெல்லாம் பேசறீங்க.. உங்களை காயப்படுத்துறதில.. நீங்க சந்தோஷப்படறீங்களா? “
“ இல்லை…நான் எப்படி இருக்கேனோ.. எப்படி வாழ்றேனோ.. அதுக்குப் பழகிட்டேன்..”
“ நான் கொஞ்சம் பணம் அனுப்பவா? “
“ நீங்க விரும்பினா.. அனுப்பலாம். அதனால என்னோட புரவலர்கள் பட்டியல்ல இன்னொரு பேர் சேரும்..”
“ அப்ப்டின்னா நான் அனுப்ப மாட்டேன்..”
“ உங்க விருப்பப்படியே செய்ங்க..”
“ நான் போனை வைக்கப் போறேன்..”
“ அப்படின்னா வைங்க..”
மன்மோகன் ரீசிவரைக் கீழே வைத்தான். அலுவலகத்தை விட்டு வெளியேறி நடந்தான். மாலையில் மிகவும் தாமதமாகத் தான் அவன் திரும்பி வந்தான். அவன் நாள் முழுவதும் அவனுடைய அழைப்பாளியைப் பற்றி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தான். அவள் இளமையாகவும், படித்தவளாகவும் இருக்கவேண்டுமென்று நினைத்தான். அவள் அழகாகச் சிரித்தாள். இரவு பதினொரு மணிக்குத் தொலைபேசி ஒலித்தது.
“ ஹலோ “
“ மிஸ்டர் மன்மோகன்..”
“ அவன் தான்.”
“ நான் நாள் முழுவதும் கூப்பிட்டுக் கொண்டிருந்தேன்.. நீங்க எங்கே இருந்தீங்கன்னு தயவுசெய்து எனக்கு விளக்க முடியுமா? “
“ எனக்குன்னு வேலை இல்லாட்டாலும்.. நானாச் செய்றதுக்குன்னு சில வேலைகள் இருக்கு..”
“ என்ன வேலைகள்? “
“ சுற்றித் திரிவது..”
“ எப்ப திரும்பி வந்தீங்க..? “
“ ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி..”
“ நான் கூப்பிடும்போது என்ன செய்ஞ்சுகிட்டிருந்தீங்க..”
“ நான் மேசை மேல படுத்துகிட்டு பார்க்கறதுக்கு நீங்க எப்படி இருப்பீங்கன்னு கற்பனை செய்ஞ்சுகிட்டிருந்தேன்.. ஆனால் எனக்கு உங்க குரலைத் தவிர வேறெதுவும் தெரியாது..”
“ வெற்றி பெற முடிஞ்சிதா? “
“ இல்லை..”
“ நல்லது.. முயற்சி செய்யாதீங்க.. நான் ரெம்ப அசிங்கமா இருப்பேன்..”
“ நீங்க அசிங்கமா இருந்தா தயவு செய்ஞ்சு போனை வைங்க.. நான் அவலட்சணத்தை வெறுக்கிறேன்..”
“ அப்படின்னா நான் அழகானவள்.. நீங்க வெறுப்பை வளக்கறதை நான் விரும்பல..”
அவர்கள் சிறிது நேரத்திற்குப் பேசிக் கொள்ளவில்லை. பிறகு மன்மோகன்,
“ நீங்க.. யோசிச்சிக்கிட்டிருக்கீங்களா?”
“ இல்லை.. ஆனா நான் உங்ககிட்ட ஒண்ணு கேக்கப்போறேன்..”
“ கேக்கறதுக்கு முன்னாடி யோசிச்சிக்கோங்க..”
“ உங்களுக்காக நான் பாடறதை விரும்புவீங்களா?”
“ ஆமாம்..”
“ சரி.. கொஞ்சம் பொறுங்க”
அவளுடைய தொண்டையைச் சரி செய்வதை அவன் கேட்டான். பிறகு மிக மென்மையான தாழ்ந்த குரலில் அவள் அவனுக்காக ஒரு பாடலைப் பாடினாள்.
“ அருமையாக இருந்தது..”
“ நன்றி “
அவள் இணைப்பைத் துண்டித்தாள். இரவு முழுவதும் அவன் அவளுடைய குரலைப்பற்றியே கனவு கண்டு கொண்டிருந்தான். அவன் வழக்கத்தை விடச் சீக்கிரமே எழுந்து விட்டான். அவளுடைய அழைப்புக்காகக் காத்திருந்தான். ஆனால் தொலைபேசி ஒலிக்கவேயில்லை. அவன் அமைதியின்றி அறைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தான். பிறகு அவன் மேசை மீது படுத்துக் கொண்டு ஏற்கனவே இருபது தடவை படித்த புத்தகத்தை எடுத்தான். மறுபடியும் ஒரு தடவை அதை அவன் படித்தான். பகல் முழுவதும் கழிந்தது. மாலை ஏழு மணியளவில் தொலைபேசி ஒலித்தது. அவசரமாக அவன் அதை எடுத்தான்.
“ யாரது? “
“ நான் தான் “
“ பகல் பூரா எங்கே போயிருந்தீங்க..”
அவன் கோபத்தோடு கேட்டான்.
“ ஏன் “ அந்தக்குரல் நடுங்கியது.
“ நான் காத்துகிட்டிருந்தேன்.. என்கிட்ட பணமிருந்தும் நான் எதையும் சாப்பிடலை..”
“ நான் விரும்பும்போது தான் நான் போன் பண்ணுவேன்..நீங்க..”
மன்மோகன் அவளை இடைமறித்தான்.
“ இங்க பாரு.. ஒண்ணு இந்த வேலைக்கு முடிவு கட்டு..இல்லை நீ எப்ப கூப்பிடுவேன்னு சொல்லு.. என்னால காத்துகிட்டு இருக்க முடியாது..”
“ நான் இன்னக்கி நடந்ததுக்காக மன்னிப்பு கேட்டுக்கிறேன்.. நாளையிலிருந்து நான் காலையிலையும்.. சாயந்திரமும் போன் பண்றேன்.. நிச்சயமா..”
“ அற்புதம்..”
“ எனக்குத் தெரியாது.. நீங்க..”
“ விஷயம் என்னன்னா..என்னால சும்மா காத்துகிட்டிருக்க முடியாது.. என்னால எதையாவது தாங்க முடியலன்னா என்னை நானே தண்டித்துக் கொள்வேன்..”
“ எப்படிச் செய்வீங்க..அதை..”
“ நீங்க இன்னிக்கு காலைல போன் பண்ணல நான் வெளியே போயிருக்க வேண்டும். ஆனால் போகவில்லை.. பகல் முழுவதும் நான் இங்கேயே எரிச்சலோடு உட்கார்ந்திருந்தேன்..”
“ நான் வேணுமின்னு தான் போன் பண்ணல..”
“ ஏன்? “
“ நீங்க என்னோட அழைப்புக்காக ஏங்கறீங்களான்னு கண்டுபிடிக்கத் தான்..”
“ உங்களுக்கு ரெம்பச் சேட்டை.. இப்போ போனை வைங்க.. நான் வெளியே போய்ச் சாப்பிடணும்..”
“ எவ்வளவு நேரமாகும் ? “
” அரைமணி நேரம்..”
அரைமணி நேரத்துக்குப் பிறகு அவன் திரும்பி வந்தான். அவள் போன் செய்தாள். அவர்கள் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் அவளை அதே பாடலை அவனுக்காகப் பாடும்படி கேட்டான். அவள் சிரித்தாள். பின்பு அந்தப் பாடலைப் பாடினாள்.
இப்போது அவள் தினமும் காலையும் மாலையும் முறையாகக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் இது வரைக்கும் மன்மோகன் அவளுடைய பெயரையோ,அல்லது போன் நம்பரையோ கேட்கவேயில்லை. ஆரம்பத்தில் அவன் பார்ப்பதற்கு அவள் எப்படி இருப்பாள் என்று கற்பனை செய்ய முயற்சித்தான். ஆனால் இப்போது அது அவசியமில்லாததாகி விட்டது. அவளுடைய குரலே அவளுடைய முகம், அவளுடைய ஆத்மா, அவளுடைய உடல், எல்லாம். ஒரு நாள் அவள் அவனிடம்,
“ மோகன், ஏன் நீங்க என் பெயரைக் கேட்கலை?.”
என்று கேட்டாள். அவன் அதற்கு,
“ ஏன்னா.. உன்னோட குரல் தான் உன் பேர்..”
என்று சொன்னான்.
இன்னொரு நாள் அவள்,கேட்டாள்.
“ மோகன் நீங்க எப்பவாவது காதலிச்சிருக்கீங்களா?”
” இல்லை..”
“ ஏன்?”
அவன் வருத்தத்தோடு,
“ இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லணும்னா நான் என்னோட வாழ்க்கையின் எல்லா இடிபாடுகளையும் சுத்தம் செய்ஞ்சு தான் பார்க்கணும்..ஆனால் எதுவும் இல்லைன்னா எனக்கு ரெம்ப வருத்தமாயிரும்..”
என்று சொன்னான்.
“ அப்படின்னா வேண்டாம்..”
ஒரு மாதம் கழிந்தது. ஒரு நாள் மோகனுக்கு அவனுடைய நண்பனிமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் அவன் பணத்தைத் தயார் செய்து விட்டதாகவும், பம்பாய்க்கு இன்னும் ஒரு வாரத்தில் வருவதாகவும் சொல்லியிருந்தான். அன்று மாலை அவள் போன் செய்தபோது அவன் அவளிடம்,
“ என்னோட ராஜ்யத்தின் முடிவு வரப்போகுது..”
என்று சொன்னான்.
“ ஏன்? “
“ ஏன்னா என்னோட நண்பன் திரும்பி வரப்போறான்..”
“ உங்களுக்கு போன் வைத்திருக்கும் வேறு நண்பர்கள் இருப்பார்களே..”
“ ஆமாம் எனக்குப் போன் வைத்திருக்கும் வேறு நண்பர்கள் இருக்கிறார்கள்..ஆனால் அந்த நம்பர்களை உன்னிடம் தரமாட்டேன்…”
“ ஏன்? “
“ வேறு யாரும் உன்னோட குரலை கேட்கறதை நான் விரும்பல.”
“ ஏன்?.”
“ எனக்குப் பொறாமைன்னு வைச்சிக்கலாம்..”
“ நாம என்ன செய்றது..”
“ சொல்லு..”
“ உங்களோட ராஜ்யத்தின் கடைசி நாளன்னிக்கு நான் என்னோட நம்பரை உங்களுக்குத் தாரேன்..”
அவன் உணர்ந்த வருத்தம் திடீரெனப் போய்விட்டது. அவன் மறுபடியும் அவளை உருவகிக்க முயற்சி செய்தான். ஆனால் அங்கே எந்த உருவமும் இல்லை. வெறுமனே அவளுடைய குரல் மட்டும் தான் இருந்தது. இன்றிலிருந்து சில நாட்கள் தான் என்று அவன் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். அவன் அவளைப் பார்த்து விடுவான். அவனால் அந்தக் கணத்தின் அளவற்ற மகிழ்ச்சியைக் கற்பனை செய்யக்கூட முடியவில்லை.
அவள் மறுநாள் கூப்பிட்டபோது அவன் அவளிடம்,
“ நான் உன்னைப்பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்..”
என்று சொன்னான்.
“ ஏன்?”
“ நீ சொன்னியே.. என்னோட ராஜ்யத்தின் கடைசி நாளன்னிக்கு உன்னோட போன் நம்பரைத் தர்றதா..”
“ ஆமாம்.”
“ அப்படின்னா நீ எங்க இருக்கேங்கிறதையும் சொல்வேன்னு தானே அர்த்தம்.. நான் உன்னைப் பார்க்க விரும்பறேன்..”
“ நீங்க எப்ப விரும்பினாலும் என்னைப் பார்க்கலாம்.. ஏன் இன்னிக்கே கூட..”
“ இன்னிக்கு வேண்டாம்.. நான் நல்ல உடைகள் உடுத்தியிருக்கும்போது தான் உன்னைப் பார்க்க விரும்புகிறேன்..நான் என்னோட நண்பன்கிட்ட வேற உடைகள் கேட்டிருக்கேன்..”
“ நீங்க ஒரு குழந்தை மாதிரி இருக்கீங்க.. நாம சந்திக்கும்போது நான் உங்களுக்கு ஒரு பரிசு தரப்போறேன்..”
“ உன்னைச் சந்திக்கிறதை விட உயர்ந்த பரிசு இந்த உலகத்தில வேறெதுவும் இல்லை..”
“ நான் உங்களுக்காக ஒரு எக்ஸாட்டா கேமிரா வாங்கியிருக்கேன்..”
“ ஆனால் ஒரு நிபந்தனை.. நீங்க என்னைப் போட்டோ எடுக்கணும்..”
“ அதை நாம சந்திக்கிறபோது நான் முடிவு பண்றேன்..”
“ நான் இன்னும் ரெண்டு நாளைக்குப் போன் பண்ணமாட்டேன்..”
“ ஏன்?”
“ நான் என் குடும்பத்தோட வெளியூர் போறேன்.. இரண்டே நாட்கள் தான்..”
மன்மோகன் அன்று முழுவதும் அலுவலகத்தை விட்டு வெளியே போகவில்லை. அடுத்த நாள் காலை அவனுக்குக் காய்ச்சலடிக்கிற மாதிரி உணர்ந்தான். முதலில் அது சலிப்பினால் தான் என்று அவன் நினைத்தான். ஏனென்றால் அவள் போன் பண்ணவில்லையே. மத்தியானத்தில் அவனுடைய காய்ச்சல் அதிகமானது. அவனுடைய உடல் நெருப்பாய் சுட்டது. கண்கள் எரிந்தன. அவனுக்குத் தாகமாக இருந்தது. அவன் பகல் முழுவதும் தண்ணீரைக் குடித்துக் கொண்டேயிருந்தான். அவன் நெஞ்சு பாரமாக இருந்தது. அடுத்த நாள் காலை அவன் முழுவதுமாகக் களைப்படைந்து விட்டான். மூச்சு விடுவதற்குச் சிரமமாக இருந்தது. அவனுக்கு நெஞ்சு வலித்தது.
அவனுடைய காய்ச்சல் அதிகமாகிக் கொண்டே போனதில் அவனுக்கு ஜன்னி கண்டது. அவன் அவளுடன் போனில் பேசுகிறமாதிரி, அவள் குரலைக் கேட்கிற மாதிரியும் இருந்தது.மாலையில் அவனுடைய நிலைமை இன்னும் மோசமானது. அவனுடைய தலைக்குள் குரல்கள் கேட்டன. விசித்திரமான சத்தங்கள் ஆயிரக்கணக்கான தொலைபேசி மணிகள் ஒரே நேரத்தில் ஒலிப்பதைப் போல கேட்டன. அவனால் மூச்சு விட முடியவில்லை.
தொலைபேசி மணி ஒலித்தபோது அவனுக்குக் கேட்கவில்லை. ரெம்ப நேரத்துக்கு தொடர்ந்து மணி அடித்துக் கொண்டேயிருந்தது. திடீரென ஒரு கணம் அவனுக்குத் தெளிவு வந்தது. அவனால் கேட்க முடிந்தது. அவன் எழுந்தான். நிற்கமுடியாமல் தடுமாறி விழப்போனான். அநேகமாக விழுந்து விட்டான். ஆனால் சுவரில் சாய்ந்து சரிப்படுத்திக் கொண்டான். நடுங்கும் கைகளால் போனை எடுத்தான். தன்னுடைய நாக்கினால் உதடுகளை ஈரப்படுத்தினான். அவை மரக்கட்டை போல காய்ந்து போயிருந்தன.
“ ஹலோ.”
“ ஹலோ மோகன்..” என்று அவள் கூப்பிட்டாள்.
“ ஆமாம்.. மோகன் தான்..”
அவனுடைய குரல் படபடத்தது.
“ எனக்குக் கேக்கலை..”
அவன் ஏதோ சொல்வதற்கு முயற்சி செய்தான். ஆனால் அவனுடைய குரல் தொண்டையிலேயே உலர்ந்து போனது.
அவள் சொன்னாள்,
“ நான் நெனச்சதை விட நாங்க சீக்கிரம் வந்துட்டோம்.. நான் மணிக்கணக்கா உங்களைக் கூப்பிட முயற்சி செய்ஞ்சுகிட்டிருக்கேன்.. எங்கே போனீங்க..”
மன்மோகனின் தலைசுற்ற ஆரம்பித்தது.
“ ஏன் என்ன ஆச்சு..”
என்று அவள் கேட்டாள். மிகுந்த சிரமத்துடன் அவன்,
“ என்னோட ராஜ்யம் இன்னிக்கு முடிவுக்கு வந்து விட்டது..”
என்று சொன்னான். அவன் வாயிலிருந்து ரத்தம் சிந்தியது. அவனுடைய முகவாயில் மெல்லிய கோடாக வழிந்து அவனுடைய கழுத்து வழியே ஓடியது.
அவள் சொன்னாள்,
“ என் நம்பரை எழுதிக்கோங்க.. 50314..50314.. காலையில என்னைக் கூப்பிடுங்க.. நான் இப்ப வெளிய போகவேண்டியிருக்கு..”
அவள் இணைப்பைத் துண்டித்தாள். மன்மோகன் தொலைபேசி மேலேயே விழுந்தான்.
நன்றி-மலைகள் இணையதளம்
No comments:
Post a Comment