Sunday, 16 September 2012

கண்ணாமூச்சி

 

உதயசங்கர்

Photo-0071   

“ இதுக்குதாம்வே நான் யாரு கிட்டயும் கொடுக்கல் வாங்கல் வச்சிக்கிடறதிலை.. கொடுத்தா வாங்கறதுக்குள்ளே பெரும்பாடு படவேண்டியதாயிருக்கு.. இன்னும் ஒரு வாரம் தாம்வே உமக்கு டைம்.. அதுக்குள்ளே எப்படியாவது கொண்டு வந்து கொடுக்கிற வழியப் பாரும்.. அவ்வளதான் சொல்வேன்.. அப்புறம் எம்மேல வருத்தப்படாதீரும்…”

என்று செல்போனில் ராமநாதன் கத்திக் கொண்டிருந்தான். காலை நடைபயின்று கொண்டிருந்த அத்தனை பேரும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனார்கள். நீங்களும் பார்த்தீர்கள் தானே. இவ்வளவு ஆக்ரோசமாக ராமநாதன் கோபப்பட்டுப் பேசியதைக் கேட்ட ஜனசமூகம் ஏதோ லட்சரூபாய் கொடுக்கலில் உள்ள பிரச்னை என்றே யூகித்துக் கொண்டனர். நீங்களூம் அவ்வாறே யோசித்து ராமநாதனைக் கொஞ்சம் மரியாதையுடன் பார்க்கிறீர்கள். உங்கள் மரியாதையின் ராஜபாட்டை வழியே சென்று பார்த்தால் எதிர்காலத்தில் ராமநாதன் ஊருக்கே கந்துவட்டி தரும் தனவந்தனாகவோ, மக்களின் அறியாமையைப் போக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த கல்விச்சாலைகளை அமைக்கும் கல்வித்தந்தையாகவோ, மக்கள் குறை தீர்க்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவோ, குறைந்தது ஒரு அமைச்சராகவோ, ஆவதற்கான சாத்தியங்கள் இருப்பதை நீங்கள் பார்த்து விட்டீர்கள். நீங்கள் மட்டுமல்ல எல்லோரும் பார்த்துவிட்டார்கள்.

ஆனால் உங்கள் எல்லோரையும் ஏமாற்றியதற்கு ராமநாதன் மனப்பூர்வமாக வருத்தப்படுகிறான். ஏனென்றால் மேலே முழக்கமிட்ட முழக்கத்தின் பின்னணியில் லட்சரூபாய் இல்லை. அப்படியென்றால் ஏன் இவ்வளவு ஆவேசம் என்றுதானே கேட்கிறீர்கள். ஒரு சாதாரணப்புத்தகம்தான் தன் நரை விழுந்த முதிர்ந்த தோற்றத்துடன் ஒளிந்து கொண்டிருந்தது.

நீங்கள் சிரிக்கிறீர்கள்.. ப்..பூ..ஒரு புத்தகம்தானா என்று உதட்டைப் பிதுக்குகிறீர்கள். உங்கள் ஏளனச்சிரிப்பின் வழியே பிளாஷ் நியூஸாக உங்கள் அலட்சியம் பளிச்சிடுகிறது. ஆனால் ராமநாதனுக்கு அது அலட்சியப்படுத்துகிற விஷயமே கிடையாது. ராமநாதனின் சீரியஸான முகத்தைப் பார்த்தவுடன் உங்கள் முகம் சற்றே மாறுகிறது.

“ அதுக்கு எதுக்குங்க.. இவ்வளவு கோபப்படணூம்.?.” என்றகேள்வி தன் தலையைத் தூக்குகிறது. ராமநாதன் அப்படி ஒன்றும் அடாவடியான ஆளில்லை. ரோட்டில் அவன் நடந்து போகும்போது ஒரு காக்கா குறுக்கே நின்று கொண்டிருந்தால் கூட அதற்கு வழிவிட்டு அது பற்ந்து போகும்வரை காத்துக் கொண்டிருப்பான். கரப்பான் பூச்சியையெல்லாம் பார்த்து விட்டால் உலகின் மிக மூத்த உயிரினமல்லவா என்று மரியாதையுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விடுவான். அவனுடைய சகதர்மிணி வந்து கரப்பான் பூச்சியைப் பிடித்து கோடிக்கணக்கான வருடங்களாக மாறாமலேயிருக்கிற அதன் பரிணாமவளர்ச்சியின் மீது வாரியலால் நாலு சாத்து சாத்தித் தூரப்போடுவாள். அது வரை மரியாதையுடன் நின்று கொண்டிருப்பான் ராமநாதன். இப்பேர்க்கோண்ட மரியாதைக்காரனான ராமநாதன் இங்ஙனம் இப்படிக் கோபப்பட நேர்ந்தது ஒரு புத்தகத்தினால் என்பது ஆச்சரியமல்லவா? வியப்பில் உங்கள் வாய் திறக்கவேயில்லையே. அளவு கூடிய வியப்பாகி விட்டதா?

ராமநாதனுக்கு உலகமே புத்தகங்கள் தான். புத்தகங்களுக்கு வெளியே ஒரு உலகம் இயங்குவது ஏஎதோ நிழல் போல அருகலாய் தெரியும். ராமநாதன் உலகை மாற்ற சிந்தனையின் சிகரங்களை நோக்கி விடாமுயற்சியோடு ஏறிக் கொண்டேயிருக்கும் சிந்தனைப்போராளியோ என்று நீங்கள் கற்பனை செய்தால் அந்தக் கற்பனை தவறி பள்ளத்தாக்கில் விழுந்து தலைசிதறி சுக்குநூறாகி விடும் அபாயம் இருப்பதை முன்கூட்டியே எச்சரித்து விடுகிறேன். அவன் சேகரித்துல்ள புத்தகங்கள் எல்லாமே அவன் புரட்டிப்பார்க்கக் காத்துக் கொண்டிருப்பவை. ஆனாலும் புத்த்கங்களை வாங்கிக் கொண்டும் சேகரித்துக் கொண்டுமிருந்தான். புத்தகங்களைப் பார்த்துவிட்டால் போதும் வற்றி உலர்ந்து பசியிப்னால் துடித்துக் கொண்டிருப்பவன் சாப்பாட்டைப் பார்த்தவுடன் அவன் கண்களில் சுரக்குமே ஒரு ஈரம்..அப்படி ஒரு ஈரத்தினால் ராமநாதனின் கண்கள் பளபளக்கும். கண்கள் ஜொலிக்க இரையை வேட்டையாட பம்மிப் பதுங்கும் ஒரு புலியின்…ம்ம்… கொஞ்சம் ஓவராத்தான் இருக்கோ.. சரி வேண்டாம்.. ஒரு பூனையின் நாக்கு சப்புக் கொட்டிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இத்தனைக்கும் அந்தப் புத்தகம் அவனிடம் இருக்கவும் செய்யலாம். ஆனாலும் அதை வாங்கிவிட முஸ்தீபுகள் காட்டுவான். பல இடங்களில் உள்ள வாய்ப்புகளைப் பொறுத்து அவரவர் மொழிகளில் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். லவட்டிக் கொண்டு, சுட்டுக் கொண்டு, அமுக்கிக் கொண்டு, பேத்துக் கொண்டு, சுவாகா செய்து கொண்டு, வந்து விடுவான். இப்படிப் பல புத்தகங்கள் பல பிரதிகளாக அவனிடம் இருக்கிற பாக்கியத்தையும் பெற்றன.

யாராவது, ஏதாவது, ஒரு புத்தகத்தைப் பற்றிப் பேசினாலோ, எழுதி விட்டாலோ, அதை அவன் கேட்டு விட்டாலோ, பார்த்து விட்டாலோ, போதும் உடனே அதை அவன் வேட்டையாட கிளம்பி விடுவான். ஏன் என்று கேட்க நினைக்கிறீர்கள் இல்லையா? அவனுக்கு ஒரே ஒரு ஆசை தான். அதுவும் குட்டியூண்டு ஆசை தான்.உலகில் உள்ள அத்தனைப் புத்தகங்களும் அவனிடம் இருக்க வேண்டும். யாராவது ஏதாவது ஒரு புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டால் அந்தப் புத்தகம் தன்னிடம் இருக்கிறது என்று பெருமிதம் பொங்க வேண்டும். அந்தப் பெருமிதப்பொங்கலுக்காகவே அவன் ஓடி ஓடி புத்தகங்களைச் சம்பாதித்துக் கொண்டிருந்தான்.

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம். ஹாரன் அடித்துக் கொண்டே வந்து கொண்டிருப்பது தெரிகிறது. எப்படிய்யா இந்தக் கோட்டியோட அவன் பொண்டாட்டி குடும்பம் நடத்துகிறாள்? சொன்னால் தப்பாய் எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்கள மாதிரிக் கோட்டியோட உங்கள் மனைவி குடும்பம் நடத்துகிற மாதிரி தான். ஏனென்றால் மனிதர்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் ஒரு நேரத்தில் ஒரு காலத்தில் கோட்டியின் குணாம்சங்களோடத் தான் இருக்காங்கன்னு யாரோ ஒரு உளவியல் அறிஞர் சொல்லியிருப்பதாக ராமநாதன் சொன்னான். ராமநாதனின் சகதர்மிணி இதையெல்லாம் கேட்டுக் கொண்டு சும்மா இருந்துவிடுவாளா? சாம, தான, தண்ட பேதங்களும் பலனளிக்கவில்லை. உளவியல் மருத்துவரிடம் அழைத்துப் போனாள். ஒவ்வொரு முறை போய் வரும்போதும் ஒவ்வொரு உளவியல் புத்தகமாக அவருடைய அறையிலிருந்து தப்பித்துப் போய்க் கொண்டிருந்தது. இனி ராமநாதன் அன் கோ வை கிளினிக்கிற்குள் விட வேண்டாம் என்று தன்னுடைய உதவியாளரிடம் சொல்லி வைக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப் பட்டார்.

சரி போனால் போகட்டும் என்று லேசில் விட்டு விடக் கூடியவளா ராமநாதனின் மனைவி. இரவென்றும் பாராமல் பகலென்றும் பாராமல் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக யுத்தம் நடத்தினாள். ராமநாதனைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த அளவுக்குக் கூட அவன் மனைவிக்குத் தெரியாதே. ராமநாதன் எதற்கும் அஞ்சவில்லை. யுத்தத்திற்கான சங்கொலி முழங்கியவுடன் வேகமாகப் போய் அவள் காலில் விழுந்து விடுவான் நிராயுதபாணியாக. எத்தனை அடி அடிச்சாலும் தாங்கறானே என்று அவளுக்கும் தோன்றி விட்டது. எதிராளி பணிந்து கொண்டே போகும்போது எத்தனை நாளைக்குத் தான் நமுத்துப் போன கோபத்தில் எண்ணெய்யை ஊத்தி எரித்துக் கொண்டே இருப்பது? எண்ணெயும் தீர்ந்து விடவே யுத்தத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தாள்.

பின்னர் அவள் என்ன செய்தாள் என்று யூகிக்க முடிகிறதா உங்களால்? தூங்குகிற நேரம் போக மற்ற நேரம் எல்லாம் தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்திருந்தாள். எல்லாமொழிகளிலும் எல்லாச் சேனல்களையும் வஞ்சனையில்லாமல் பார்த்தாள். புரிகிறது புரியவில்லை என்ற கவலையை குப்பையைக் கூட்டி வீட்டு மூலையில் ஒதுக்கி வைக்கிற மாதிரி ஒதுக்கி வைத்தாள். தொலைக்காட்சியின் சத்தத்தினூடாகவே தூங்கவும் செய்தாள். யாராவது தொலைகாட்சியை நிறுத்தி விட்டாலோ, மின்சாரம் தடைபட்டு தொலைக்காட்சி நின்று விட்டாலோ உடனே அவள் முழித்து அவள் கடைசியாகப் பார்த்துக் கொண்டிருந்த சேனல் பேசிய மொழியில் திட்டுவாள். அது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், உருது, ஸ்பானிஷ், பிரெஞ்ச் என்று எந்த மொழியாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது உபரித்தகவல். இப்படி கோட்டிக்குக் கோட்டி சரியாகி விட்டது.

சரி கதைக்கு வாருமய்யா அகோபிள்ளாய் என்று நீங்கள் கோபிப்பது தெரிகிறது. இந்த அபூர்வமான வாழ்க்கையில் ஒரு நாள் புயலெனச் சோமநாதன் நுழைந்தான். ஒரு மாலை நேரத்தில் சூரியனே தாங்கமுடியாமல் சங்கடப்பட்டுத் தன் பரிவாரங்களையும் தன் ஆடையையும் இழுத்துப் போர்த்திக் கொண்டு வேகவேகமாக மேற்கில் மறைந்து போகிற அளவுக்கு ராமநாதனைப் புகழ்ந்து கொண்டிருந்தான் சோமநாதன். அந்தப் புகழ்ச்சிக்குப் பின்னால் ஒரு சவால் கைதட்டிச் சிரித்துக் கொண்டிருந்தது. அந்தச் சிரிப்பில் மணக்கும் மட்டன் பிரியாணியும், சுக்கா வறுவலும், மறைந்திருந்தது. வேறு ஒன்றுமில்லை. எப்படியாவது ராமநாதனிடம் ஒரு புத்தகம் இரவல் வாங்கிக் கொண்டு வந்து விட வேண்டும். ராமநாதனுக்கு எப்போதுமே ஒன்வே டிராபிக் தான் பிடிக்கும். புத்தகங்கள் அவன் வீட்டுக்குள் போய்க் கொண்டேயிருக்கும். எதுவும் வெளியில் வராது. சோமநாதன் அனைத்து அஸ்திரங்களையும் ராமநாதன் மேல் எய்தும், கர்ணனின் கவசகுண்டலம் போல ஒரு அசட்டுப் புன்னகையைக் கேடயமாக்கி அசாத்தியமாக அனைத்து அஸ்திரங்களையும் தடுத்து வீழ்த்தினான். சோர்ந்து போன சோமநாதன் அன்றைய குருசேத்திரத்தை முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்து கடைசியாகத் தன் பலமனைத்தையும் சேர்த்து ஒரு அஸ்திரம் எய்தான்.

“ சார் உங்களைப் பத்தி ஒரு புத்தகம் எழுதலாம்னு நெனச்சிக்கிட்டுருக்கேன்.. லட்சம் புத்தகங்களின் லட்சியவாதி..ன்னு அதுக்குத் தலைப்பு.. அதுக்கு முன்னாடி உங்க கலக்‌ஷனையெல்லாம் பாக்கணும் உங்க கையால ஒரு புத்தகம் வாங்கிப் படிக்கணும்கிறது என்னோட நீண்ட நாள் பிரார்த்தனை சார் ”

இதைக் கேட்டதும் ராமநாதனின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது. மனம் க்ளக்,க்ளக் என்ற சத்தத்துடன் உருக ஆரம்பித்தது. அந்த உருகல் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே வெளியே கேட்டு விட்டதால் சோமநாதன் உற்சாகமாகி விட்டான்.

“ நீங்க என்ன புத்தகம் கொடுத்தாலும் சரி நீங்க எப்பச் சொல்றீங்களோ அப்ப கொண்டு வந்து கொடுத்திருவேன்..”

என்று சோமநாதன் சொன்னதைக் கேட்ட ராமநாதனின் பெருந்தன்மை பொங்கி எழுந்தது. உடனே போய் கண்ணை மூடிக் கொண்டு ஒரு பழைய புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான். தொட்டாலே நொறுங்கி விடும் பழுப்பு நிறக்காகிதங்களைக் கொண்ட அந்தப் புத்தகத்தைக் கொடுக்கும் போதே,

“ பத்திரம்..ஜாக்கிரதை.. ஞாபகம்..ஒரு வாரம்..”

என்று சொல்லிக் கொண்டிருந்தான். கையில் வங்கியது தான் தாமதம் சோமநாதன் பறந்து போய் விட்டான். வாங்கியதும் அவன் போன வேகத்தைப் பார்த்து ‘ கொஞ்சம் ஏமாந்துட்டமோ’ என்று கூட ராமநாதன் நினைத்தான்.

ஒரு வாரம் வரை உலகம் அமைதியாக இருந்தது. ஏழு நாட்கள் முடிந்ததுமே ராமநாதனின் பூமியில் சிறு சிறு பூகம்பங்கள் ஒன்று, இரண்டு ரிக்டர் அளவுகோலில் வந்து போனது. பெரிதான பாதிப்பு ஒன்றுமில்லை. ஆனால் மாதம் ஒன்று முழுமையாகக் கழிந்தபோது ராமநாதனின் கடல் பொங்கி அலை வீசத் தொடங்கியது. இந்தப் பூகோள மாற்றங்கள் எதுவும் தெரியாமல் சோமநாதன் மிகச் சாதாரணமாக அந்தப் புத்தகத்தைக் கைமறதியாக எங்கோ வைத்து விட்டுச் சுற்றிக் கொண்டிருந்தான். அப்படி ஒரு விஷயம் நடந்ததாகவே அவன் நினைவிலில்லை.

ஒரு நாள் சோமநாதன் அலுவலகம் விட்டு வந்தவுடன் அவனுடைய துணைவியார்,

“ யாரோ ராமநாதனாம் புத்தகம் கடன் வாங்கியிருக்கீகளாமே.. அதை உடனே கொண்டு வந்து கொடுக்கணுமாம்.. ஏதோ லட்சரூபாயைக் கொடுத்த மாதிரி கறாராப் பேசிட்டுப் போறாரு..”

என்று சொன்னதும் நினைவுக்கு வந்து விட்டது. அன்று லேசாய் சோமநாதனின் மனசில் குறும்புயல் ஒன்று வீசிச் சென்றது. சேதாரம் ஒன்றுமில்லை. இப்போது ராமநாதனைச் சமாளிக்கிற தந்திரங்களை யோசித்துக் கொண்டிருந்தான் சோமநாதன். முதலில் தன் துணைவியாரிடம் ராமநாதன் எப்போது வந்தாலும்,

“ அவுக இல்லையே..எப்ப வருவாகன்னு தெரியவில்லையே..”

என்று கிளிப்பிள்ளை மாதிரி சொல்வதற்குப் பழக்கியிருந்தான். அவளும் ரெம்ப யதார்த்தமாக யார் வந்தாலும் அதைச் சொல்லிக் கொண்டேயிருந்தாள். காலிங் பெல் அடிக்கிற சத்தம் கேட்டதுமே அவள் சொல்லத் தொடங்கி விடுவாள். ஒரு நாள் சோமநாதனிடமே அதைச் சொல்ல அவனுக்கும் அவளுக்கும் வழிந்த அசட்டில் அவர்களிருவருமே வழுக்கி விழுந்தனர். ஒரு நாளைக்கு நான்கைந்து தடவை வந்து போய்க் கொண்டிருந்தான் ராமநாதன். ஆனாலும் ஒரு தடவை கூட அவனிடம் சிக்காமல் ஏதோ ஒரு புதிர் வழியில் ஓடி ஒளிந்து தப்பித்துக் கொண்டிருந்தான் சோமநாதன். சே..பரவாயில்லையே இப்படியே காலத்தைக் கடத்தியிரலாம் போலருக்கே..என்று நினைத்தான். ஆனால் அவன் நினைப்பில் ஒரு மின்னல் தாக்கி அது சாம்பலாகிப் போனது.

ஒரு நாள் இரவு மணி பனிரெண்டு இருக்கும். கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த மழையில் சோமநாதனின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. சோமநாதன் சற்றும் ஆபத்தை உணராமல் கதவைத் திறக்க எதிரே ராமநாதனும் அவனுடைய சகதர்மிணியும் குடையைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். பதட்டத்தில் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. வாயும் வரவில்லை. திகைத்த முகத்தில் மழைச்சாரல் பட்டு உணர்வூட்ட, ராமநாதனின் குரல் அசரீரியாகக் கேட்டது.

“ புத்தகம் எங்கே? எடுத்துட்டு வாங்க..”

அந்த நேரத்தில் என்ன சொல்லி சமாளிக்க என்று தெரியவில்லை. ஆனாலும் வாய் ஏதோ முணுமுணுத்தது.

“ எந்தப் புத்தகம்?”

முதன்முதலாய் ராமநாதனின் முகத்தில் ஒரு நம்பிக்கையின்மையின் நிழல் ஆடியது. மறுபடியும் அவன்,

“ எங்கிட்ட வாங்கிட்டுப் போனீங்கல்ல.. அந்தப் புத்தகம்..”

என்று சொன்னான்.

“ அதான் எந்தப் புத்தகம்னு கேக்கேன்..”

என்று சோமநாதன் கேட்டான். இறுகிய முகத்துடன்,

“ எந்தப் புத்தகம்னு தெரியாதா?”

என்று கேட்க, சோமநாதனும் விடாமல்,

“ தெரியல.. மறந்துட்டேன்.. எந்தப் புத்தகம்னு சொல்லுங்க..எடுத்துட்டு வாரேன்..”

என்று சொன்னான். அவனுக்கு இப்போது இந்த விளையாட்டு பிடித்து போய் விட்டது. ராமநாதனின் முகத்தில் கலவரம் தன் கொடியைப் பட்டொளி வீசிப் பறக்க விட்டுக் கொண்டிருந்தது. புத்த்கங்களை வாங்கும்போது அதன் தலைப்பைப் பார்ப்பதோடு சரி. அதற்கப்புறம் எக்காரணம் கொண்டும் அதைப் புரட்டுகிற பழக்கமில்லையே. ஆனாலும் கெத்து விடாமல்,

“ அப்ப எந்தப் புத்தகம்னு உங்களுக்குத் தெரியாது.. இன்ன..”

என்று அதிகாரமாய் கேட்க நினைத்த ராமநாதனின் குரல் மழையில் நனைந்த பூனைக்குட்டியின் நடுங்கிய ‘மியாவ்’ வாகிப் போனது. சோமநாதனுக்கு இப்போது ராமநாதனின் மீது சற்றே பச்சாதாபம் தோன்றி விட்டது. ரெம்பத் தன்மையான குரலில்,

“ உங்க கிட்ட வாங்கின புத்தகத்தைப் படிச்சிட்டேன்.. எப்படியோ அது என்னோட கலெக்‌ஷன்ல சேந்திருச்சி.. எனக்கும் புத்தகத்தோட தலைப்பு மறந்துருச்சி.. என்ன புத்தகம்னு சொன்னீங்கன்னா நாளைகே அதைத் தேடிப் பிடிச்சி உங்க கையிலே கொண்டு வந்து கொடுத்துருதேன்..”

என்று சொன்னான். இதைச் சொல்லும்போது கள்ளத்தனத்தின் சிரிப்பொலி கண்களில் தெரியாமலிருக்க மிகுந்த பிரயாசைப் பட்டான். ராமநாதனின் தோள்கள் தொங்கின. தலைகுனிந்தான். வாய் ஏதோ முணுமுணுத்தது. ஒன்றிரண்டு முறை ஏறிட்டு சோமநாதனைப் பார்த்தான். பின்பு எதுவும் சொல்லாமல் தன் சகதர்மிணியுடன் தெருவில் இறங்கிப் போய் விட்டான்.

ஆனாலும் ராமநாதனுக்கு மனசு கேட்கவில்லை. மறுநாள் விடியற்காலையில் வந்து சோமநாதனைப் பார்த்தான். முதலில் சோமநாதனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. நடுஇரவிலிருந்தே தொடர்ச்சியாய் ராமநாதனைப் பார்த்துக் கொண்டிருக்கிற மாதிரி விழித்தான். ராமநாதன் ஏக்கத்துடன்,

“ புத்தகத்தை எடுத்துட்டு வாங்க..”

என்று சொன்ன வார்த்தைகளைக் கேட்டவுடன் சோமநாதன் சுதாரித்துக் கொண்டான். அவன் வாய் தன்னையறியாமலே,

“ எந்தப் புத்தகம்?”

என்றது. ராமநாதன் எதுவும் பேசவில்லை. தலையைத் தொங்கவிட்டவாறே படியிறங்கிப் போய்விட்டான். மறுபடியும் சாயந்திரம் ஒரு முறை வந்து கேட்டான். அதே கேள்வி. அதே பதில். சோமநாதன் தைரியமாகிவிட்டான். இப்போது அவனிடம் ஒரு எகத்தாளமான புன்னகை கூட வாடகையில்லாமல் நிரந்தரமாய் குடியிருந்தது. ஆனால் ஒரு வாரத்தில் பத்து தடவைக்கு மேல் அலைந்த ராமநாதனின் முகம் கறுத்துச் சிறுத்துப் போனது. ஒரு வாரத்துக்குப் பிறகு அவன் வரவில்லை.

இப்போது சோமநாதனுக்கு ராமநாதனின் முகமே கண்ணுக்குள் நிழலாடிக் கொண்டிருந்தது. அவன் மனைவியும் அவனிடம் வருத்தப்பட்டாள். அதன் பிறகு சோமநாதன் மிகத் தீவிரமாக அந்தப் புத்தகத்தை அவன் போய் வந்த இடங்களிலெல்லாம் சென்று தேடினான். திடீரென ஒரு நாள் அவனுடைய பைக்கை சர்வீஸ் செய்கிற மெக்கானிக் கடையிலிருந்து அது கண்டெடுக்கப் பட்டது. புத்தகம் கிடைத்ததும் ராமநாதனின் வீட்டுக்கு உடனே ஓடினான்.

அங்கே ராமநாதன் அவனுடைய படிப்பறைக்குள் உட்கார்ந்து புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான். அவனருகில் படிக்க வேண்டிய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

நன்றி-செம்மலர்

No comments:

Post a Comment