Showing posts with label மொழிபெயர்ப்பு. புக் டே. Show all posts
Showing posts with label மொழிபெயர்ப்பு. புக் டே. Show all posts

Friday, 28 March 2025

கசுமலா காக்காவுக்கும் , பூனைக்குட்டிக்கும் சண்டை

 


கசுமலா காக்காவுக்கும், பூனைக்குட்டிக்கும் சண்டை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



 

நடுப்பகலில், சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் கசுமலா காக்காவும் வட்டமாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பூனைக்குட்டி கசுமலா காக்காவிடம்,

“ நீ ஏன் இப்படிக் கருப்பாய் இருக்கிறாய்? “

என்று கேட்டது. கசுமலா காக்காவுக்கு சங்கடமாக இருந்தது. முன்பு ஒரு நாளைக்கு நான்கு வேளையும் தேய்த்துக் குளித்தும் பார்த்து விட்டது. காக்கா குளித்தாலும் கொக்காக முடியாது என்று புரிந்து கொண்டது. கசுமலா காக்கா தலையைக் குனிந்துகொண்டு எதுவும் பேசாமல் இருந்தது.

பூனைக்குட்டி வெயிலில் உடம்பை நீட்டி படுத்துக் கிடந்தது. தன்னைத் தானே நக்கிக் கொடுத்துச் சுத்தப்படுத்திக் கொண்டே,

“ நான் எவ்வளவு வெள்ளையாயிருக்கிறேன்னு பார்த்தியா? என்ன காரணம் தெரியுமா? முந்திய பிறவியில் நான் ஒரு இங்கிலீஷ்க்காரியாக இருந்தேன்.. இங்கிலீசில் பேசுவேன்.. இங்கிலீஷிலே கனவு காண்பேன்.. இங்கிலீஷிலே உறங்குவேன்..” என்று சொன்னது.

சின்னுவும், நாய்க்குட்டியும், கசுமலாக்காக்காவும் வாயைத் திறந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“ இங்கிலீஷ் என்றால் என்ன மொழி? “ என்று காக்கா கேட்டது. நாய்க்குட்டி,

“ கம் ஹியர், ஸிட், கோ ஔவுட், இதுதான் இங்கிலீஷ்..” என்று சொன்னது.

” ஏ பி சி டி ஒரு பீடி அது தான் இங்கிலீஷ் என்று பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறேன்..” என்று சின்னு சொன்னாள்.

இதையெல்லாம் கேட்ட பூனைக்குட்டி விழுந்து விழுந்து சிரித்தது,

“ இதுவா இங்கிலீஷ்? நான் இங்கிலீஷ்காரியாக இருந்தபோது இங்கிலீஷ் வெள்ளம் மாதிரி கொட்டும்.. அதைக் கேட்டு ராஜாவே என் நாக்கை அறுத்து விட்டார் தெரியுமா? “

“ அப்புறம்..” எல்லாரும் ஒன்றுபோலக் கேட்டனர்.

“ பிறகு நான் கடவுளிடம் வேண்டி வெள்ளைப்பூனையாகப் பிறந்து வந்தேன்..”

என்றது பூனைக்குட்டி. அப்போது கசுமலாக்காக்கா,

“ கா காக்கா கக்கா கா கா “ என்று சிரித்தது.

  என்ன சிரிக்கிறாய்? “ என்று பூனை சந்தேகத்துடன் கேட்டது.

“ உன்னுடைய நாக்கை வெட்டி எறிந்த பிறகும் நீ இவ்வளவு பொய் சொல்கிறாயே.. நாக்கை அறுக்காமல் இருந்திருந்தால் என்னெல்லாம் பொய் சொல்லியிருப்பாய்..”

என்று கசுமலா காக்கா பதில் சொன்னது. அதைக் கேட்ட அனைவரும் சிரித்தனர்.

பூனைக்கு அவமானமாகி விட்டது.

நன்றி - புக் டே

Friday, 7 March 2025

நீலகண்டன் நரியும் கல்யாணிப்பசுவும்

 

நீலகண்டன் நரியும் கல்யாணிப்பசுவும்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில்- உதயசங்கர்



    சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி விளையாடும் இடத்திற்கு வந்து சும்மா விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருப்பது நீலகண்டன் நரிக்கு வழக்கமாகி விட்டது.. மெஹெர்பா கோழி பற்றிய எண்ணம் எப்போதும் மனதில் உண்டு. அவளைக் கொன்று சாப்பிட எப்போது வாய்ப்பு கிடைக்கும்? அதுதான் கவலை.

 அப்படியே கல்யாணிப்பசு அசைபோட்டுக் கொண்டு படுத்திருந்த இடத்திற்கு வந்து சென்று கல்யாணியுடன் நட்பாகி விட்டது..  எல்லா பழைய கதைகளையும் சொல்லும்.. கல்யாணிப்பசு புல் சாப்பிட எங்கு சென்றாலும், அது நரியைத் தன் முதுகில் சுமந்து செல்லும்.

அதைப் பார்த்த கதைப்பாட்டி சொன்னாள்:

 " கல்யாணி வேண்டாம்.. அது ஒரு குள்ளநரி, அது ஏமாற்றிவிடும்..."

 கல்யாணப் பசுவின் காதில் குள்ளநரி சொன்னது.

 " கதைப்பாட்டிக்கு வயதாகி விட்டதல்லவா.. அதனால் அதையும் இதையும் சொல்லும்..”

 கல்யாணிப்பசுவும் அப்படி நினைத்தாள், ஒருவேளை நீலகண்டன் நரி சொல்வது சரியாக இருக்கலாம். குள்ளநரி ஒரு சாது என்று நினைத்தாள்.

 அப்படி ஒரு நாள் அவர்கள் இருவரும் ஆற்றங்கரைக்குச் சென்றார்கள். கல்யாணிப்பசு புல்லைச் சாப்பிட ஆரம்பித்தது. குள்ளநரி ஒரு காட்டுக் கோழியைக் கொன்று சாப்பிட்டது. நரிக்கு வயிறு நிரம்பி விட்டது.. உடனே குள்ளநரி திரும்பிப் போகலாம் என்று ரகளை செய்தது.. புல் சாப்பிட்டுக் கொண்டிருந்த் கல்யாணிக்கு பாதி வயிறு கூட நிரம்பவில்லை.. நரிக்கு கோபம் வந்தது.

 இந்தப் பசுவின் அகங்காரத்தை இன்றுடன் முடிவுக்குக் செய்ய வேண்டும்..

     குள்ளநரி சொன்னது.

 " எனக்கு சாப்பிட்ட பிறகு ஊளையிடணும்..."

     கல்யாணிப்பசு பயந்து விட்டது.-

     "ஐயோ, வேண்டாம், குள்ளநரி,"

     கல்யாணிப்பசு பணிவுடன் கெஞ்சினாள் –

     " ஊளையிட்டால், சிங்கம் வரும், இல்லையா? ஒரே அடியில் என்னைக் கொன்று உடனே சாப்பிட்டு விடுமே?"

     குள்ளநரி, அதைக் கேட்காதது போல நடித்தது. பிறகு பெரும் ஊளையிட்டது.. உடனே, காடதிர சிங்கத்தின் கர்ஜனை கேட்டது., நரியைத் தூக்கிக்கொண்டு பசு, ஆற்றில் நீந்தத் தொடங்கியது. இருப்பினும், நரி செய்த சதியை நினைத்து கல்யாணிப்பசுவுக்குக் கோபம் வந்தது.

    ஆற்றின் முக்கால்வாசி தூரம் நீந்திச் சென்றதும், பசு,

  "எனக்குக் குளிக்க வேண்டும் போலிருக்கிறது, உன் உடல் முழுவதும் காட்டுக் கோழியின் நாற்றம் வீசுகிறது"   என்றது.

 நரி பயத்தில் கத்தியது.

  " ஐயோ, பசுத்தாயே, நான் மூழ்கிச் செத்துப் போய் விடுவேனே..”

     கல்யாணிப்பசு அதைக் கேட்காதது போல, வசதியாக ஆற்றில் முங்கி எழுந்தது. நரி ஆற்றில் விழுந்து நிறைய தண்ணீரைக் குடித்தது. கடைசியில், கதைப்பாட்டி  சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சேர்ந்து வீசிய கயிற்றைக் கடித்துக் கொண்டு கரைக்கு வந்து சேர்ந்தது.

     கரைக்கு ஏறிய நரிக்கு கதைப்பாட்டி கம்பினால் ஒரு அடி கொடுத்தார்.  பூனைக்குட்டி அதன் வாலைக் கடித்தது. நரி காட்டுக்குள் ஒரே ஓட்டம் ஓடியது. அதைப் பார்த்து, மெஹெர்பா கோழி

     " கொக்கொ கொக்கொ கொக்கொ” என்று பாடி ஆடியது.

நன்றி - புக் டே

 

 

Monday, 24 February 2025

செல்லச்சண்டை

 

செல்லச்சண்டை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



கதைப்பாட்டி உட்கார்ந்திருக்கும் ஆலமரத்தின் அடியில், கிராமத்துத்தலைவரான மொட்டை மாதவன் அவருடைய பசுமாட்டை மேய்வதற்காக அழைத்து வருவார். உச்சிப்பகல் நேரம் வரை புல்லைச் சாப்பிடும் பசுமாடு. அதன்பிறகு அசை போட்டுக் கொண்டே அங்கே படுத்துக்கிடக்கும். மொட்டை மாதவன் பசுவை கல்யாணி என்று பெயரிட்டு அழைப்பான். கல்யாணிப்பசு அப்படி அசை போட்டுக் கொண்டு இருக்கும்போது காக்கா பறந்து போய் கல்யாணிப்பசுவின் உடலிலும் காதுகளிலும் உள்ள உண்ணிகளைக் கொத்திச் சாப்பிடும்.

கல்யாணிக்கு அது ரொம்பப் பிடிக்கும். நாய்க்குட்டி கல்யாணிப்பசுவின் பால்மடியில் தலை வைத்துப் படுக்கும். மிகுந்த அன்பினால் “ என் குட்டி நாயே” என்று அழைத்து கல்யாணிப்பசு தன் பால்மடியிலிருந்து பாலைச் சுரக்கும். அதைப் பார்த்த பூனைக்குட்டிக்கு கோபம் வரும். ஆனாலும் எதுவும் பேசாது. முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருக்கும்.

சின்னுவும் அருகில் போய் உட்கார்ந்திருப்பாள். கல்யாணிப்பசு அசைபோட்டுக் கொண்டே தன்னுடைய குழந்தைப்பருவத்தில் நடந்த கதைகளைச் சொல்வாள்.

“ நான் குழந்தையாக இருந்தபோது, இந்தக் காட்டில் ஒரு யானைக்குட்டி இருந்தது. அவ்வப்போது இங்கே வரும். நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். அப்படி ஒருநாள் நாங்கள் சேர்ந்து இருந்தபோது, நான் சொன்னேன்,

“ ஏ.. யானைக்குட்டி அங்கே பாரு..மொட்டை மாதவனின் வாழைத் தோட்டத்தில் பழக்குலை.யைப் பாரு..”

யானைக்குட்டி உடனே அதை பறித்து விட்டான். அப்போது நான் சொன்னேன்,

“ நான் தானே உனக்குச் சொன்னேன்.. அதனால் அது எனக்குத்தான்.. கொடுத்துரு..”

யானைக்குட்டி சொன்னது,

“ இது எங்கே உள்ள நியாயம் கல்யாணியக்கா? மாமரத்தில் காய்த்த மாம்பழம் பார்த்தவருக்குச் சொந்தமா? கல் வீசிப் பறித்தவருக்குச் சொந்தமா? ”

எங்கள் இருவருக்கும் சண்டை. அடியும் பிடியும் தள்ளும் முள்ளுமாய் இருந்தபோது காட்டிலிருந்து குரங்குக்கூட்டத்தின் தலைவன் பஞ்சாயத்து செய்ய வந்த்து. வாழைப்பழக்குலையின் எடையைப் பார்க்கிறேன் என்று சொல்லி கையில் வாங்கியது அந்தக் குரங்கு.

அப்படியும் இப்படியுமாகப் பார்த்துக் கொண்டிருந்த குரங்கு திடீரென அதைத் தூக்கிக் கொண்டு ஒரே ஓட்டமாக காட்டுக்குப் போய் விட்டது.”

அந்தக் கதையைக் கேட்டு எல்லாரும் கை தட்டிச் சிரித்தார்கள். நாய்க்குட்டி மட்டும் கை தட்டவில்லை. அது கல்யாணிப்பசுவின் பால்மடியில் பாலைக் குடித்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்தது.

நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள்