Showing posts with label இந்திய நாடோடிக்கதை. Show all posts
Showing posts with label இந்திய நாடோடிக்கதை. Show all posts

Friday, 17 October 2025

கட்டி வைத்து அடி!

 

முட்டாள் சாச்சுலியின் கதை -6 

கட்டி வைத்து அடி!

ஆங்கிலம் வழி தமிழில் - உதயசங்கர்



மீண்டும் அம்மா செய்து கொடுத்த கொழுக்கட்டைகளை எடுத்துக் கொண்டு தேவதைகள் இருந்த காட்டுக்குள் சென்றான். அப்படியே நடந்து கொண்டே,

“ இப்பொழுது முதலாவதைச் சாப்பிடுவேன்..பிறகு இரண்டாவது, அப்புறம் மூன்றாவது, பிறகு நான்காவது, ஐந்தாவது… “ என்று சொன்னான். அந்த ஐந்து தேவதைகளும் ரொம்பப் பயந்து விட்டனர்.

“ இதோ மறுபடியும் அந்த மனிதன் ஐந்து பேரையும் சாப்பிட வந்து விட்டான்.. நாம் அவனுக்கு ஒரு பரிசு கொடுப்போம்..” என்று பேசிக் கொண்டே அவன் முன்னால் போய் நின்றனர். அவனிடம் ஒரு கயிறையும், ஒரு கம்பையும் கொடுத்தனர். பிறகு,

“ மனிதா இந்தக் கயிற்றிடம், இவனைக் கட்டு என்றால் உடனே அவனைக் கட்டிப்போட்டு விடும்.. இந்தக் கம்பிடம் இவனை அடி என்றால் போதும் அவனை அடிக்கும்..” என்று சொல்லி அனுப்பினார்கள்.

சாச்சுலிக்கு மிகவும் மகிழ்ச்சி. அந்த மந்திரப் பானையும், மாயப்பெட்டியும் எப்படி திருடு போயிருக்கும் என்று ஏற்கனவே யூகித்திருந்தான். எனவே நேராக கடைத்தெருவுக்குப் போனான். அந்த உணவகத்துக்கு முன்னால் போய்,

“ கயிறே.. இந்த மனிதர்களைக் கட்டிப்போடு..” என்று ஆணையிட்டான். உடனே அந்தக் கடையிலிருந்த அத்தனை பேரையும் கயிறு கட்டிப்போட்டது. பிறகு சாச்சுலி கம்பைப் பார்த்து, “ இவர்களை அடி..” என்று ஆணையிட்டான். உடனே அந்தக் கம்பு அவர்களை அடிக்க ஆரம்பித்த து.

“ ஆ.. ஐய்யோ.. அடிப்பதை நிறுத்து.. கட்டை அவிழ்த்து விடு.. நான் உன்னுடைய பானையையும், பெட்டியையும் கொடுக்கிறேன்..” என்று அந்தச் சமையல்காரன் அலறினான்.

“ முடியாது.. பானையும் பெட்டியும் என் கையில் வரும்வரை நான் அடிப்பதை நிறுத்த மாட்டேன்.. கட்டை அவிழ்த்து விட மாட்டேன்..” என்றான் சாச்சுலி. சமையல்காரன் பானையையும் பெட்டியையும் சாச்சுலியிடம் கொடுத்தான். இப்போது சாச்சுலி அடிப்பதை நிறுத்தி, அவிழ்த்து விட்டான்.

சாச்சுலி வீட்டுக்குப் போனான். அவனைப் பார்த்தவுடன் அவனுடைய அம்மாவுக்குக் கோபம் வந்த து. ஆனால் அவன் மந்திரப்பானையையும் மாயப்பெட்டியையும் அம்மாவிடம் கொடுத்து நடந்த தைச் சொன்னான். உடனே அம்மா அகமகிழ்ச்சியுடன் சாச்சுலியை வாழ்த்தினாள்.

அதுவரை முட்டாள் சாச்சுலியாக இருந்தவன் அதன்பிறகு புத்திசாலி சாச்சுலியாக மாறிவிட்டான். சாச்சுலியின் அம்மா அவனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் முடித்து வைத்தாள். அதன்பிறகு அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

கதை சொன்னவர் – டுங்க்னி டார்ஜிலிங் ( 1879 )

நன்றி - புக் டே

 

 

 

 

 

Tuesday, 29 July 2025

இந்திய நாடோடிக்கதை - 2

 இந்திய நாடோடிக்கதை - 2

பூனை ஏன் புலியைப் பார்த்துப் பயப்படுகிறது?

ஆங்கிலம் வழி தமிழில் - உதயசங்கர்



 

முன்னொரு காலத்தில் புலியும் பூனையும் அக்கா தங்கையாக இருந்தன. புலி அக்காவின் குட்டிக்கு சித்தியாக பூனை இருந்தது. புலிக்குட்டிக்கு பூனைச்சித்தியை மிகவும் பிடிக்கும். உருவத்தில் சிறியதாக இருந்த பூனைச்சித்தியுடன் புலிக்குட்டி கட்டிப்புரண்டு விளையாடும். துரத்தும். பொய்க்கடி கடிக்கும். வாயில் கவ்விக் கொண்டு அங்குமிங்கும் ஓடும். பூனைச்சித்தி தூங்கிக் கொண்டிருக்கும் போது காதுக்கருகில் போய் உறுமும்.

சில சமயம் பூனைச்சித்திக்கு வலிக்கும். அது,

“ மியாவ் மியாவ்.. என்னை விடறா..குண்டுப்பையா..மியாவ் ” என்று கத்தினாலும் அந்தச் சத்தம் புலிக்குட்டிக்கோ புலி அக்காவுக்கோ கேட்காது. ஆனாலும் பூனைச்சித்திக்கு புலிக்குட்டியை அவ்வளவு பிடிக்கும்.

ஒருநாள் புலி அக்கா இரை தேடப் போகும்போது காலில் மிகப்பெரிய முள் குத்திவிட்டது. நொண்டிக்கொண்டே வந்த்து. மறுநாள் நடக்கமுடியவில்லை. இரண்டாவது நாள் காய்ச்சல் வந்தது. மூன்றாவது நாள் புலி அக்கா இறந்து விட்டது. இறப்பதற்கு முன்னால் பூனைத்தங்கையை அழைத்து அதனுடைய முன்னங்காலைத் தூக்கித் தன் கையில் வைத்துக் கொண்டு,

“ தங்கச்சி.. என் பையனை நீ தான் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்..” என்று கேட்டது. அதைக் கேட்ட பூனைத்தங்கை உருகிவிட்ட்து.

“ நிச்சயமாக அக்கா.. நான் அவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன்..” என்று உறுதிமொழி கொடுத்தது. புலி அக்கா இறந்து விட்டது.

இப்போது புலிக்குட்டிக்கு வயிறு பசித்தது.

“ பூனைச்சித்தி.. பூனைச்சித்தி.. வயிறு பசிக்குது..கர்ர்ர்” என்று உறுமியது.

“ இதோ உனக்கு உணவு கொண்டு வர்ரேன் செல்லம்..” என்று சொல்லிவிட்டு பூனைச்சித்தி புறப்பட்டது. இரை தேடி இரை தேடி காட்டின் எல்லைக்கே வந்து விட்டது. அப்போது இரவாகி விட்டது.

 அங்கே ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டிலிருந்த மனிதர்கள் இரவு சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிட்டு முடித்து மீதியிருந்த உணவையும் எலும்புகளையும் வெளியே கொட்டினார்கள்.

அந்த உணவைப் பார்த்ததும் பூனைச்சித்திக்கு எல்லாம் மறந்து விட்டது. புலி அக்காவுக்குக் கொடுத்த உறுதிமொழியை மறந்து விட்டது. புலிக்குட்டியை மறந்து விட்டது. ஆசை ஆசையாக எலும்பைக் கடித்துச் சாப்பிடத் தொடங்கியது.

பூனைச்சித்தியைக் காணவில்லையே என்று புலிக்குட்டி வழிமேல் விழி வைத்து பார்த்துக் கொண்டிருந்தது. பசி தாங்க முடியவில்லை. புலிக்குட்டி அப்படியே பூனைச்சித்தியைத் தேடி நடந்தது. புலிக்குட்டியும் காட்டின் விளிம்பில் இருந்த வீட்டையும் பார்த்தது.

அங்கே பூனைச்சித்தி நிதானமாக எலும்புகளைக் கடித்துக் கொண்டிருப்பதையும் பார்த்தது. புலிக்குட்டி வந்ததைப் பூனைச்சித்தி பார்க்கவில்லை. அது கண்களை மூடி ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அவ்வளவு தான்!

புலிக்குட்டிக்கு வந்ததே கோபம்!

“ கர்ர்ர் உன்னை என்ன செய்கிறேன்.. பார்..” என்று ஒரு பெரிய உறுமலுடன் பூனைச்சித்தியின் மீது பாய்ந்தது.

நல்லவேளை! புலிக்குட்டியின் உறுமலைக் கேட்டதும், பூனைச்சித்தி பாய்ந்து இருட்டுக்குள் ஓடி விட்டது.

பாருங்கள்! அன்றிலிருந்து புலிக்குப் பூனையைக் கண்டாலே ஆகாது. பூனைக்கும் புலியைப் பார்த்தால் பிடிக்காது. 

இப்போது கூடப் பாருங்கள்! இந்தக் கதையைக் கேட்ட பூனை ஓடியே போய்விட்டது.

ஹ்ஹ்ஹ்ஹா ஹாஹா

1876 ஆம் ஆண்டு சிம்லாவில் கேட்ட கதை