“விரால் மீனின் சாகசப் பயணம்” – நூல் அறிமுகம்
எல்லோருக்கும் ஓர் இடம்
தடிமனான புத்தகங்களை வாசித்து கொஞ்சம் சோர்வாக இருந்தது. (நானும் கனமான புத்தகங்களை வாசிக்கிறேன் என்று இந்த இலக்கிய உலகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டாமா!) அதனால் கொஞ்சம் ரிலாக்ஸாக சிறார் இலக்கியம் வாசிக்கலாம் என்று நினைத்தேன்.
ரெட்டில்ஸ் கிளை நூலகத்தில் தேடியபோது என் கண்ணில் பட்டது ‘விரால் மீனின் சாகசப் பயணம்’. புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். “அட… யார் எழுதியது?” என்று பார்த்தால் நம்ம உதயசங்கர் தோழர்!
உடனே நூலகப் பதிவேட்டில் பதிவு செய்து புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்தேன். வீட்டிற்கு வந்தவுடன் புத்தகத்தைப் பிரித்து ஒரு கதையை வாசிக்கத் தொடங்கினேன். கதையின் தலைப்பு — ‘எல்லோருக்கும் ஓர் இடம்’.
குழந்தைகளுக்காக எழுதுவது என்பது குழந்தைகளைப் பற்றி எழுதுவது மட்டுமல்ல; குழந்தைகளின் உலகத்திற்குள் நுழைந்து, அவர்களோடு சேர்ந்து வியந்து, சிரித்து, ஓடி, விளையாடி, கனவு கண்டு எழுதுவதுதான்.
அந்த வகையில் உதயசங்கர் இந்தக் கதையை எழுதியிருக்கிறார்.
‘விரால் மீனின் சாகசப் பயணம்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘எல்லோருக்கும் ஓர் இடம்’ கதையில் சிவப்புத்தான் எறும்புக்கும் கருப்புத்தான் எறும்புக்கும் இடையே நடைபெறும் உரையாடல் வழியாக மிகப் பெரிய சமூகத் தத்துவத்தை மிக இயல்பாகக் குழந்தைகளிடம் கொண்டு செல்கிறார்.
“நண்பா, இந்த உலகத்தில் நமக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் ஒரு இடம் இருக்கிறது. ஒருவரை ஒருவர் சாராமல் வாழ முடியாது. சமாதானம், சகோதரத்துவம், சக வாழ்வு — இதுதான் நாம் வாழும் இந்தப் பூமி நமக்குச் சொல்வது. இயற்கை உன்னைச் சிவப்பாகவும், என்னைக் கருப்பாகவும் படைத்திருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது, நண்பா…”
எறும்புகளின் உரையாடலாகத் தொடங்கும் கதை, நிறப் பாகுபாடு, இடம், உரிமை, மனித உறவு, சக வாழ்வு என்று பல தளங்களைத் தொட்டுச் செல்கிறது.
“இந்த இடம் யாருக்குச் சொந்தம்?” என்ற கேள்வி எழும்போது, நாளை அந்த இடமே வேறொரு விதமாக மாறக்கூடும் என்பதை கதை உணர்த்துகிறது. இன்று நமக்கான இடமாக இருக்கும் ஒன்று நாளை இன்னொருவருக்கான இடமாக மாறலாம். இந்த உலகில் யாரும் நிரந்தரமாக எதற்கும் உரிமையாளர்கள் அல்ல.
அதனால், இந்தப் பூமியில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஓர் இடம் இருக்கிறது. அந்த இடத்தைப் பிடுங்கிக் கொள்வதல்ல வாழ்க்கை; ஒருவருக்கொருவர் இடம் கொடுத்து, அன்போடும் ஒற்றுமையோடும் வாழ்வதுதான் உண்மையான சக வாழ்வு.
குழந்தைகளுக்கான கதை என்று நினைத்துக்கொண்டு வாசிக்கத் தொடங்கிய என்னிடம், போகிற போக்கில் இவ்வளவு பெரிய தத்துவத்தைச் சொல்லிவிட்டுப் போகிறார் நமது உதயசங்கர் தோழர்.
சிறார் இலக்கியத்தின் பலமே இதுதான்.
குழந்தைகளுக்குக் கருத்துரை சொல்லாமல், அவர்களின் உலகத்திற்குள் சென்று, ஒரு எறும்பின் உரையாடலில்கூட சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் சக வாழ்வையும் விதைத்துவிட முடியும்.
‘விரால் மீனின் சாகசப் பயணம்’ — குழந்தைகளுக்கான கதைகள் மட்டுமல்ல; குழந்தைகளின் வழியாக பெரியவர்களும் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்.
வாசிக்க வாசிக்க இன்னும் கொஞ்சம் குழந்தையாக மாறிக்கொண்டிருக்கிறேன்.
நன்றி - புக் டே.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | விரால் மீனின் சாகசப் பயணம் |
| ஆசிரியர்: | உதயசங்கர் |
| வெளியீடு: | வானம் பதிப்பகம் |
| விலை: | ₹.80 |
