Showing posts with label கலையின் தோற்றுவாய். Show all posts
Showing posts with label கலையின் தோற்றுவாய். Show all posts

Monday, 5 October 2026

கலையின் தனித்துவம்

 

ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் 4

கலையின் தனித்துவம்

உதயசங்கர்



மனிதக்குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரத்துடன் கலை இணைந்தே பிறந்தது. உழைப்பே கலையாகத் தான் பிறந்தது. உழைப்பின் படைப்பூக்கமென்பது கலையின் வெளிப்பாடு தான். எப்படியெனில் இயற்கையான பொருள்களைப் பார்த்து அதே போல அந்தப் பொருள்களின் மீது மனிதன் வினை புரிகிற போது முன்பிருந்த இயற்கை முன்பிருந்ததைப் போல இருப்பதில்லை. ஒன்றை இன்னொன்றாக மாற்றும்போதே கலை அங்கே துளிர்விடத் தொடங்கிவிடுகிறது. ஏனெனில் இயற்கையாகக் கிடைத்த கற்களைக் கூர் தீட்டும்போது அங்கே கலைத்திறனும் சேர்ந்து வெளிப்படுகிறது. எனவே தான் இயற்கையாகவே கலை உழைப்புடனே பிறந்தது. பிறந்த பிறகு கலையும் உழைப்பும் ஒன்றையொன்றுச் செழுமைப்படுத்திக் கொண்டன. கலையும் வாழ்க்கையும் ஒன்றையொன்று வளப்படுத்திக் கொண்டன. அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முதலில் ஆதிக்கலை வடிவங்களான சைகைகளையும் ஒலிக்குறிப்புகளையும் பயன்படுத்திய ஆதி மனிதன் அவற்றின் போதாமையினால் குகைகளில் ஓவியங்களை வரையத் தொடங்கினான். அந்த ஓவியங்களில் வெளிப்படுத்திய அழகியல் உழைப்பின் அழகியல் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இன்றும் கலை உழைப்புடனும் உழைப்பு கலையுடனும் வெளிப்பாடு கொள்கிறது. அதனால் மனித உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்ததாக இருக்கிறது. அது மட்டுமல்ல ஆதியில் கலை, மருத்துவம், மந்திரம் போன்றவற்றுடன் பிரிக்க முடியாதபடி கலந்திருந்தது. மந்திரச்சடங்குகளைச் செய்பவரே மருத்துவராகவும் கவிஞராகவும் இருந்தார். ஆக கலை மற்ற அறிவுத்துறைகளின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருந்தது.

சமூகத்தின் உற்பத்திமுறைகள், உற்பத்திசாதனங்கள் உற்பத்தி உறவுகளின் மாற்றங்களுக்கேற்ப அனைத்து அறிவுத்துறைகளும் வளர்ச்சியடைந்தன. இயற்கையின் அற்புதங்களையும் அதன் அடிப்படை இயக்கவியல் விதிகளையும் கண்டுபிடித்தன. அதாவது  அறிவுத்துறைகள் அனைத்துமே இதுவரை கண்டுபிடிக்கப்படாத உண்மைகளைக் கண்டுபிடித்தன. கண்டுபிடிக்கப்பட்டவைகளில் நுண்மையையும் மேன்மையையும் மேலதிகமாகச் சேர்த்தன. அதன் மூலம் அறிதலின் இன்பத்தை மானுடம் அடைந்தது. அறிதலின் இன்பம் புற உலகம் பற்றியதெனப் பொதுவாகச் சொல்லலாம். கலை இலக்கியமும் அறிவுத்துறைகளில் ஒன்றாக இருந்தாலும் கலையும் இலக்கியமும் அக உலகம் பற்றியது.  புற உலகத்தை அறிந்து கொள்ள ஆயிரக்கணக்கான முறைமைகள் சாதனங்களிருக்கின்றன. ஆனால் மனிதனின் அகவுலகத்தை அறிந்து கொள்ள கலை இலக்கியத்தைத் தவிர வேறு எந்த வழிகளுமில்லை. மனிதனின் அகவுலகம் எண்ணிலடங்கா நுண்சிந்தனைகளின் பகுப்பும் தொகுப்பும் வெளிப்பாடும் கொண்டது. எந்தச் சூத்திரத்துக்குள்ளும் அடங்காதது. உணர்வுகளின் சுழல்களில் மனிதரை மூழ்க வைப்பது. அத்தகைய அகவுலகம் புறவுலகத்தையும் புறவுலகம் அகவுலகத்தையும் பாதிக்கிறது.

கலையின் அடிப்படையான முதல் நோக்கம் கலை இன்பம் ( Artistic Pleasure ) .கலை தன்னை நுகர்பவர்களுக்கு முதலில் இன்பத்தை அளிக்கிறது. அந்த இன்ப உணர்வு கலை இலக்கியப்படைப்பு இன்பமயமாக இருப்பதாலோ துன்பமாக இருப்பதாலோ கிடைப்பதல்ல. ஒரு படைப்பின் முழுமையான உணர்வெழுச்சி நிலையினால் ஏற்படுவது. அந்த கலை இன்பமே ஒரு வாசகனை மீண்டும் மீண்டும் அதை நோக்கி ஈர்க்கிறது. ஏனெனில் கலை அறிவில் தொழில்படுவதில்லை. உணர்வுகளில் ஊடாடுகிறது.

அதனாலேயே கலைத்துறை மற்ற அறிவுத்துறைகளிலிருந்து வேறுபடுகிறது. அதுமட்டுமல்ல.

மனிதன் புற உலகத்தை எதிர்கொள்ளும்போது ஏற்படும் பாதிப்புகளே அவனுடைய அகவுலகத்தில் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை ஏற்படுத்துகின்றன. மனிதருக்கே தெரியாத மனதின் மர்மங்களையும் புதிர்களையும் கலையும் இலக்கியமும் விடுவிக்கிறது. அதன் வழியே மனித மனதை உளவியல் ஆய்வு செய்கிறது.

பின்னர் அந்தப் படைப்பிலிருந்து கிடைக்கும் இதுவரை அறியாத உலகத்தின் அறிமுகம் கிடைக்கிறது. அந்த உலகம் அதன் வரலாறு, புவியியல், அந்த உலகின் மக்களின் பண்பாடு ஆகியவற்றையும் சொல்கிறது. அந்தப் படைப்பு எந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக எழுதப்பட்டதோ அந்த அநுபவபகிர்வைத் தருகிறது.. அந்த அநுபவப்பகிர்வின் வழியாக நாம் இந்த உலகைப் புரிந்து கொள்ளும் சிந்தனைத்தெளிவு ஏற்படுகிறது. தன்னைத் தானே அறிந்து கொள்ளும் வித்தையைக் கற்றுத் தருகிறது. சகமனிதர்களைப் புரிந்து கொள்ள வெளிச்சம் தருகிறது. இதையெல்லாவற்றையும் நேரடியாக அல்லாமல் மறைபொருளாகத் தருவது தான் கலை இலக்கியத்தின் தனித்துவம்.

எனவே ஒரு கலைப்படைப்பு கலைப்படைப்பாக மாறுவதற்கு என்னென்ன உட்கூறுகள் வேண்டுமோ அதைக் கற்றுத் தேர்வதென்பது ஒவ்வொரு படைப்பாளிக்கும் மிக மிக அவசியம். கலையின் மாயாஜாலம் குறளிவித்தை மாதிரி தான். ஆனால் அதற்குள் நுழைந்து விட்டால் யாரும் வெளியே முடியாது. அந்த வித்தையை முழுமையாக க்கண்டு தன்னை இழந்த பிறகே அங்கிருந்து செல்லமுடியும்.

அந்தக் குறளிவித்தையைக் கற்பது அவ்வளவு சுலபமுமல்ல, அதே நேரம். அவ்வளவு கடினமுமல்ல.

நன்றி - புக் டே