Showing posts with label புராணம். Show all posts
Showing posts with label புராணம். Show all posts

Sunday, 12 April 2026

புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா?

 

 

புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா?

உதயசங்கர்





இந்திய நாட்டின் பெருமை மிகு இரண்டு இதிகாசங்களாக இராமயணமும் மகாபாரதமும் சொல்லப்பட்டு வருகின்றன. காலங்காலமாக வாய்மொழியாகவும் எழுத்து வடிவிலும் திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள், கோவில்களில் சொற்பொழிவுகள், கதாகாலேட்சேபம் என்று அன்றாடம் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டதால்  மக்கள் மனதில் இதிகாசங்கள் ஊறிப்போய் விட்டன. அந்தக் கதைகளில் வருகிற கதாபாத்திரங்களின் மீது தெய்வீகத்தன்மை ஏற்றப்பட்டு தெய்வங்களின் அவதாரங்களென்று வழிபடப்பட்டதாலும்  யாரும் கேள்விகள் கேட்பதில்லை. ஏன் கேள்விகள் கேட்கலாமென்று எண்ணம் கூட வருவதில்லை.

பற்றாத தற்கு பெரியவர்களுக்காக எழுதுகிற எழுத்தாளர்களும் இதிகாசக்கதைகளை மறுவாசிப்பு என்ற பெயரில் மீண்டும் மீண்டும் எழுதி ( அப்படி எழுதுவதில் ஒரு வசதி இருக்கிறது, மக்கள் மனதில் ஏற்கனவே நிலைபெற்றிருப்பதால் அவர்களிடம் சுலபமாக விற்றுவிட முடியும் ) வருவதால் இதிகாசங்களில் சொல்லப்பட்ட விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சமூகமாக மாறியிருக்கிறோம்.

இதிகாசங்கள் ஏன் உருவாயின?

முதலில் இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களான மகாபாரதமும் இராமாயணமும் வரலாறு அல்ல என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். அவற்றில் வரும் சம்பவங்களோ கதாபாத்திரங்களோ உண்மையானவர்களில்லை. அவை கதைகள். கற்பனை கலந்தவை. துளியூண்டு உண்மையின் மீது காலங்காலமாகச் சொல்லப்பட்ட கற்பனைக் கதைகள். புளுகு மாளிகைகள். அவை நாட்டார் கதைகளாக உருவாகி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற பிறகு எழுதப்பட்ட காவியங்கள்.

மூலப்பிரதியை எழுதியது வியாசராகவோ, வால்மீகியாகவோ, இருந்தாலும் பின்னால் ஏராளமான இடைச்செருகல்களும் உருப்பெருக்கங்களும், மாறிவரும் புதிய சமூகச்சூழ்நிலைகளுக்கேற்ப மாறிக்கொண்டிருக்கும் அறவிழுமியங்களும், விளக்கங்களும் சேர்ந்து ஊதிப் பெருத்தவை.

ஒரே நேரத்தில் ஆரிய சமூகத்தில் இரண்டு விதமான பிரச்னைகள் எழுந்தன. முதலாவது வேத சமயத்துக்கெதிராக இந்தியாவில் உருவான இரண்டு சமயங்களான பௌத்தமும் சமணமும். அவை அரசுகளின் ஆதரவு பெற்ற சமயங்களாக மாறியதால் வேத சமயத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு. அதன் விளைவாக அதுவரை யாகங்களின் பெயரைச் சொல்லி மக்களிடம் செலுத்தி வந்த ஆன்மீக அதிகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது.  அதை எதிர்கொள்ள வேண்டிய நிலையும், இரண்டாவது ஆரியச்சமூகத்துக்குள் இருந்த பார்ப்பனர்களுக்கும், சத்திரியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல். அரசு அதிகாரத்தையும் ஆன்மீக அதிகார த்தையும் கைப்பற்றுவதில் ஏற்பட்ட முரண்பாடுகள். அத்துடன் வெகுமக்களிடம் வர்ணப்பாகுபாடுகளை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம். ஏன் இந்த நிலைமை உருவானது?.

அதுவரை  இனக்குழுக்களாக இருந்த சமூகங்கள் உபரி உற்பத்தியின் வழியே நிலவுடமைச் சமூகமாக மாறிக் கொண்டிருந்த காலம். ஒரு நிலையான அரசாக உருவான காலம்.

அரசனின் வானாளவிய அதிகார த்தைச் சமூகம்  ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும்.  அதனால் தான் அரசனை கடவுளின் பிரதிநிதியாகவும், கடவுளாகவும் மக்கள் மனதில் நிலைநிறுத்த எழுதப்பட்ட இலக்கியப்பிரதிகளே புராணங்களும் இதிகாசங்களும்.

. . இன்னும் சரியாகச் சொல்லப்போனால் புராண இதிகாசங்களின் வழியே ஏற்கனவே சொன்ன இரண்டு பிரச்னைகளை ஆரிய சமூகம் தீர்த்துக் கொண்டது.  பார்ப்பனர்கள் தங்களுக்கு அடுத்த நிலையிலுள்ள சத்திரியர்களுடன் சமரசம் செய்து கொண்டார்கள்.  அதாவது அரசு அதிகாரத்தை சத்திரியர்கள் வைத்துக்கொள்ளவும் ஆன்மீக அதிகாரத்தை பார்ப்பனர்கள் வைத்துக்கொள்ளவுமான ஏற்பாடு நிகழ்ந்த து.  அதில் ஏற்படும் சமரசங்களையும்  மகாபாரததத்தையும் இராமாயணத்தையும் நுட்பமாக வாசித்தால் தெரியும்.

அதேபோல வர்ணப்பாகுபாட்டை உருவாக்கியது அதாவது மனிதர்களை நான்கு வர்ணங்களாகவும் அவர்களுக்கான உணவு, உடை, தொழில், இருப்பிடம் ஆகியவற்றை வரையறைத்துக் கொடுத்த து கடவுளே எனும் கருத்தாக்கத்தை மிக சுலபமாக மக்களிடம் பரப்பவும் இந்தப் புராண இதிகாசங்கள் பேருதவி செய்தன.

 

இதிகாசக்கதைகள் உருவானதின் தத்துவப்பின்புலம் என்ன?

வேதங்களை மட்டுமேஅபௌருஷ்யேஅதாவது காற்றிலே பிறந்த து என்று வணங்கிக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் தங்களுடைய சமயத்தை வளர்க்க, வெகுசனமயமாக்க உருவ வழிபாட்டை நோக்கி நகரும்போது புராணக்கதைகளை உருவாக்கினார்கள். வேதங்களில் யாகங்களைப் பற்றியும், எதிரிகளை வெற்றி கொள்ள வேண்டுதல்கள், சூளுரைகள், இவையே பெரும்பாலும் இருந்த போது, இந்தியாவில் வளர்ந்த பௌத்தமும் சமணமும் வாழ்க்கை குறித்தும் வாழ்வின் அர்த்தம் குறித்தும் தத்துவத்தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அப்போது பார்ப்பனச் சமயத்துக்கு ஏற்பட்ட தேவை காரணமாகவே பிரமாணங்கள், ஸ்மிருதிகள், ஸ்ருதிகள், உபநிட தங்கள் உருவாயின.

அப்போது வாழ்ந்த வெகுமக்கள் குலதெய்வ வழிபாடு அல்லது நாட்டார் தெய்வ வழிபாடுகளின் வழியே தங்களுடைய முன்னோர்களை வழிபட்டார்கள். தங்கள் வாழ்க்கையுடன் ஒன்று கலந்த இந்த மண்ணில் வாழ்ந்த முன்னோர் வழிபாடு மிகப்பிரபலமாக இருந்த போது அந்த மக்களைக் கவர் கைலாயம், வைகுண்டம் என்று கற்பனையான அப்பாலை உலகங்களையும் தெய்வங்களையும் உருவாக்கினார்கள். அவர்களுக்கான கதைகளை உருவாக்கினார்கள். அவர்களை இங்கிருக்கும் நாட்டார் தெய்வங்களுடன் இணைத்தார்கள். உதாரணத்துக்கு முருகன். உழைப்பாளி மக்களின் தெய்வங்களுக்கு பூணூல் அணிவித்தார்கள்.அவர்களை மேல்நிலையாக்கம் செய்தார்கள். அதாவது பார்ப்பன, சத்திரிய குலத்துக்கு மாற்றினார்கள். அவர்களுக்கு பெண் கொடுத்தார்கள். பெண் எடுத்தார்கள். எல்லாம் கதைகளில் மட்டும் தான் என்பதை மறக்க க் கூடாது.

காலம் காலமாக இந்தக் கதைகளை வாய்மொழியாகச் சொல்லியும் அப்போதைய இந்தியாவிலிருந்த ஐம்பத்தியாறு  நாடுகளில் மக்களிடம் புழங்கிக் கொண்டிருந்த நாட்டார்கதைகளை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களை இணைத்து ஊதிப்பெருக்கி ( இன்னமும் கூட அந்தத் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது ) இதிகாசங்களாகப் புனைந்தார்கள்.

அந்த இதிகாசங்களில் சொல்லப்படும் கதைகளின் கருத்தியல் என்ன? அவற்றைக் குழந்தைகளுக்குச் சொல்ல லாமா?

இருபெரும் இதிகாசங்களும் வாய்மொழி நாட்டார்கதையாக எப்படியிருந்ததோ தெரியாது. ஆனால் எழுதப்பட்டபோது அது மனுநீதியை, அதாவது மக்களை வர்ணங்கள் என்று சொல்லப்படுகிற பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பெருந்தொகுதிகளாகவும், சங்கர சாதிகள் என்ற சிறு தொகுதிகளாகவும் பிரித்த தை நியாயப்படுத்தும் விதமாகவே எழுதப்பட்ட து. அதாவது மக்களைப் பிறப்பால் மேல் கீழ் சாதிகளாகப் பிளவுபடுத்தும் வர்ணாசிரமத்தர்மத்தை  நிலைநிறுத்துவதற்காக, எழுதப்பட்டவை.

இந்தப் பெரும் பிரிவுகளுக்குள் வராத ஒரு பெரும்திரள் பூர்வகுடிமக்களை தாழ்த்தப்பட்டவர்களாகவும் தீண்ட த்தகாதவர்களாகவும் ஊரை விட்டு, சமூகத்தை விட்டு வெளியேற்றி பார்த்தால் தீட்டு, தொட்டால் பாவம் என்று  ஒடுக்குமுறைகளை நடைமுறைப்படுத்திய மனுநீதியை நியாயப்படுத்துகிற கதைகள்.

 ஹிந்து தர்மம், ப்ராமண தர்மம், சத்திரிய தர்மம், சூத்திரர் தர்மம் என்று ஒரே தர்மநியாயங்கள் கொட்டிக்கிடக்கும். இவற்றை இன்றைய குழந்தைகளுக்குச் சொல்லும்போது என்ன மாதிரியான உளவியல் பாதிப்பு ஏற்படும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டாமா? இந்தப் பிரிவுகளுக்குள் வராத பழங்குடி மக்கள், பூர்வகுடி மக்கள் மேலே குறிப்பிட்ட பிரிவினர்களுக்குச் சேவை செய்யவும், உயிர்த்தியாகம் செய்யவும் பிறந்தவர்கள் என்பது போன்ற கருத்தியல்களைச் சொல்ல லாமா?

இன்றைய நவீன சனநாயகயுகத்தில் இவற்றுக்கான பொருத்தப்பாடு என்ன என்பதை யோசிக்க வேண்டாமா?

 

மகாபாரதம், ராமாயணம் இரண்டுமே அரசர்களைப் பற்றிய, அவர்களது குடும்பங்களைப் பற்றிய, அவர்களுக்கிடையில் நடந்த காம, குரோத, காதல், அன்பு, தயை, ஈகை, கருணை, துரோகம், வஞ்சகம், இவற்றைப் பற்றிய கதைகள். இவற்றைச் சிறுவயதிலே தெரிந்து கொள்வதால் குழந்தைகளுக்கு என்ன பயன்?

 

மகாபாரதம் பழமையானது. அது ஒரே இனக்குழுவைச்சேர்ந்த இரண்டு பங்காளிகள், தாயாதிகள், வகையறாக்கள், கிளைகள், பிரிவுகள், இவர்களுக்கிடையே நிகழ்ந்த நிலத்துக்கான சண்டை. சுற்றியலைந்து கொண்டிருந்த நாடோடிகள் ஒரு இடத்தில் நிலையாக இருந்து அங்கிருந்த மக்களை சாம, தான, தண்ட, பேதங்களினால் உருட்டி, மிரட்டி, கொலைசெய்து, நிர்வாகம் செய்யத் தொடங்கிய காலம். குறிப்பாக இரண்டு இதிகாசங்களிலும் அவர்களை எதிர்த்த பூர்வகுடிகளைக் கொன்றழித்து ஆட்சியை நிலைநிறுத்தியதைப் பெருமையாகப் பேசுகிறது.

அப்படியா என்று கேட்பவர்களுக்கு, மகாபாரதத்தில், ஏகலைவன் கதை, இடும்பன்கதை, தொடங்கி இந்திரப்பிரஸ்த நகரத்துக்காக நாகர்களை அழித்தகதை அரக்கு மாளிகையில் தீக்கிரையான பழங்குடிகள் கதை, என்று ஏராளமான கதைகள் இருக்கின்றன. அதேபோல ராமாயணத்திலும் ராவணன், தாடகி, சூர்ப்பனகை, வாலி, சுக்ரீவன், ஜடாயு என்று கதைகளிருக்கின்றன.

யார் அந்த பூர்வகுடிகள் என்று யோசித்துப்பார்த்திருக்கிறோமா?

 

விந்திய மலைக்குத் தெற்கில் இருந்தவர்கள் எல்லாரும் அரக்கர்கள், காட்டுமிராண்டிகள், விலங்குகள், நாகரீகமற்றவர்கள், என்று இரண்டு இதிகாசங்களிலும் சித்தரித்திருக்கிறார்களே அவர்கள் எல்லாம் யார்? என்று யோசித்திருக்கிறோமா?

 

இரண்டு இதிகாசங்களிலும் வருகிற குடும்ப உறவுகள், குழந்தைப்பேறுகள், குறித்த உண்மைகளைச் சொல்லமுடியுமா? இன்றைய அறிவியல்யுகத்தில் குழந்தைகளிடம் வரத்தினால் குழந்தை பிறக்கும், மாம்பழம் அல்லது பாயாசம் குடித்தால் பிள்ளை பிறக்கும் என்று சொல்வது அறிவுடமையாகுமா? பெண்ணடிமைத்தனத்தின் உச்சமாக இருக்கும் இரண்டு இதிகாசங்களைக் கேட்கும் ஆண் குழந்தைகளிடம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? பெண்குழந்தைகளிடம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

 

இதிகாசங்களிலும் வருகிற போர், துரோகம், வஞ்சகம், கருணை, பழிக்குப்பழி, சபதம், எல்லாம் குழந்தைகளுக்குத் தேவையா? மனிதமனவிசித்திரங்களைப் பற்றிச் சிறுவயதில் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

 

வாய்மையைக் கடைப்பிடித்தல், கீழ்ப்படிதல், செய்ந்நன்றி, குருபக்தி, என்று ஆயிரம் வியாக்கியானங்களைச் சொன்னாலும் அவற்றுக்கு எதிரானதும் அவற்றில் இருக்கின்றன என்பதும், காலத்தின் துருவேறி இற்றுப்போன விழுமியங்களை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமா?  அப்படிப் புதுப்பிப்பதினால் யாருக்கு பலன் என்று யோசிக்க வேண்டாமா? 80-களில் தொடங்கிய மகாபாரத, ராமாயணத் தொலைக்காட்சித்தொடர்கள் எப்படி சநாதனத்தையும் சடங்குகளையும் வளர்த்துக் கொண்டிருக்கிறது என்று நமக்குத் தெரியும்தானே.

புராண இதிகாசங்கள் வயது வந்தவர்களுக்கான இலக்கியம். கடந்த காலத்தின் அருங்காட்சியகம். நம்முடைய முன்னோர்கள் எப்படி இருந்தார்கள்? எப்படி வாழ்ந்தார்கள்? என்பதற்கான இலக்கிய ஆதாரம். மனித மனவிகாரங்களின் கண்காட்சி. ஆனால் இப்போது அந்தக் காலத்துக்குத் திரும்பவோ, அதில் வாழவோ முடியாது.

அதனால் தான் இப்படியான பழமையான இலக்கியப்பிரதிகளுக்குள்  நுழைய வயது வரம்பு வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் வாசிக்கவும் தெரிந்து கொள்ளவுமான இலக்கியம். குழந்தைகளிடம் இவற்றைப் பற்றிச் சொல்வதோ, குழந்தைகளை வாசிக்க வைப்பதோ என்பது நாமே குழந்தைகளின், குழந்தைமையை ஆளுமைத்திறனின் சுதந்திரமான வளர்ச்சியைச் சிதைப்பதாகும்.

 

உலகம் முழுவதுமே இதே நிலைமைதான். முற்றான அதிகாரத்தை கடவுள், அரசன், இவர்களை மையமாகக் கொண்டே காவியங்களும், புராணங்களும், இதிகாசங்களும், பாடல்களும் புனையப்பட்டன.

 

இவையெல்லாம் உலக முழுவதுள்ள அனைத்து மதங்களுக்குமே பொருந்தக் கூடியவை. எந்த மதமும் கேள்விகளை அனுமதிப்பதில்லை. நம்பிக்கைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்குபவை.

 

. இவற்றைப் படிப்பதற்கு வயது வரம்பு தேவைப்படுகிறது. ஏனெனில்  கடந்த காலத்தில் நிலவிய, பெண்ணடிமைத்தனம், அரசவழிபாடு, தந்திரம், துரோகம், பழிக்குப்பழி, இவற்றையே விழுமியங்களாகக் கொண்டிருப்பவை என்பதாலேயே எச்சரிக்கைத் தேவைப் படுகிறது.

நம்முடைய குழந்தைகளின் ஆளுமையை நிகழ்காலமும் எதிர்காலமும் தான் உருவாக்க வேண்டும்.

இறந்த காலக் கட்டுக்கதைகள் அல்ல.


நன்றி - புக் டே

 

Wednesday, 27 August 2025

யார் இந்தப் பிள்ளையார்?

 

யார் இந்தப் பிள்ளையார்?



இந்து மதம் என்ற அழைக்கப்படும் வைதீக மதம் கடவுளரை இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். உயர்நிலைத் தெய்வங்களான பிரம்மன், சிவன், விஷ்ணு, இந்திரன், போன்றவர்கள் ஒருவகை என்றால் இவர்களுக்குச் சேவை செய்யும் தெய்வங்களாக அனுமான், சண்டீகேஸ்வரன், சனி, சூரியன், சந்திரன்,ராகு, கேடு வகையறாக்கள் வெளியில் பரிவாரத் தெயவங்களாக இருக்கிறார்கள். பழைய காலத்தில் இவ்விரண்டு வகைத் தெய்வங்களையும் உயர்சாதியினரைத் தவிர சாமானியர்கள் நெருங்கமுடியாது. கோவில்களுக்குள் நுழைய முடியாது. எனவே உழைப்பாளிகள் தங்கள் வாழ்விலிருந்து நாட்டார் தெய்வங்களை உருவாக்கி வழிபட்டார்கள். ஆதியில் வாழ்ந்த பழங்குடி மக்கள் இயற்கையை வழிபட்டார்கள். மரம், செடிம் கொடி, விலங்குகள், பறவைகள், பூச்சிகள், என்று அனைத்து இயற்கைப் படைப்புகளையும் வழிபட்டார்கள்.

 ஆதிப்பூர்வக்குடிகள் இயற்கையை வழிபடுவதன் மூலம் தங்களுடைய வாழ்க்கையை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பினார்கள். இன்னும் சொல்லப்போனால் அப்போது ஆதிமனிதனின் பகுத்தறிவு குழந்தைப்பருவத்தில் இருந்தது. அப்போது தான் தொன்மங்களை இயற்கையிலிருந்து உருவாக்கினார்கள். தொன்மங்கள் என்பவை ஆதி மனிதனின் குழந்தைப் பருவக்கனவுகள் எனலாம். அந்தக் கனவுகளில் தான் எலி, புலி, யானை, கழுகு, குரங்கு, அணில், என்று விலங்குகளும், பறவைகளும், குலதெய்வங்களாகவும் குலக்குறியீடாகவும் மாறின.

எல்லாவற்றையும் பகிர்ந்து வாழும் இனக்குழு வாழ்க்கைக்காலம் முடிந்து நிலவுடமைக்காலம் தொடங்கும் போது தனியுடைமை உருவானது. குலங்களுக்களிடையே யுத்தங்கள் நடந்தன. வென்றவர்கள் தோற்றவர்களை மட்டுமல்ல, அவர்களுடைய குலதெய்வங்களையும் அடிமை கொண்டார்கள். இப்போது இயற்கை மையமாக இருந்த வழிபாட்டுமுறை மனிதமையமாக மாறியது. முன்னோர்கள், குலம் காத்த வீரர்கள், இனம் காத்த வீரர்கள், பழி வாங்கப்பட்டப்பட்டவர்கள், அகாலமரணம் அடைந்த பெண்கள், குழந்தைகள், என்று அவர்களுடைய வாழ்வில் எதிர்கொண்ட மரணங்களைத் தெய்வ உருவாக்கி வழிபட்டார்கள். அது மட்டுமில்லை. அரசுகள் உருவாகி பேரரசுகளாக வளர்ந்தபோது தங்கள் அரசை நிலை நிறுத்திக்கொள்ள வெகுமக்கள் வணங்கி வழிபட்ட நாட்டார் தெய்வங்களையும் பெருந்தெய்வ மதத்துக்குள் இணைக்கும் வழக்கமும் இருந்தது. இதன் வழியாக ஆளும் வர்க்கம் இத்தாலிய கம்யூனிச அறிஞர் கிராம்ஷி குறிப்பிடுகிற கலாச்சாரமேலாண்மையைப் ( மக்களின் ஒத்திசைவை ) பெறுகிறார்கள். அப்படி உருவான ஒரு நாட்டார் தெய்வமான யானையின் தலையும் மனித உடலும் கொண்ட பிள்ளையார் எப்படி பெருந்தெய்வ வழிப்பாட்டுக்குள் வந்தார்?

ஆரம்பத்தில் வைதீகமதம் பிள்ளையாரை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிள்ளையாருக்கு வெகுமக்களிடம் மிகுந்த செல்வாக்கு ஏற்பட்டபிறகு சாமானிய மக்களின் வீடுகளிலும், தெருக்களிலும், முச்சந்திகளிலும் பிள்ளையார் தெய்வவழிபாடு பெருகியது. எந்தவொரு நாட்டார் தெய்வம் மக்களிடம் செல்வாக்கு செலுத்துகிறதோ அந்தத் தெய்வத்தை வைதீக மதக்கடலில் கரைத்து விடும் வைதீக மதத்தந்திரமே பிள்ளையாரையும் ஏன் முருகனையும் கூட வைதீக மதத்துடன் இணைத்தது. சிவன், பார்வதி தம்பதியினரின் புதல்வர்களாக மாற்றியது. ஏன் அவர்களை பிரம்மனின் புதல்வர்களாகவோ, விஷ்ணுவின் புதல்வர்களாகவோ மாற்றவில்லை என்ற கேள்வி வேறு ஒரு ஆய்வுக்குக் கூட்டிச் செல்லும்.

வைதீக மதத்துடன் இணைப்பதற்காக அதீத புனைவுகளை உருவாக்கி பிள்ளையாரை மேல்நிலையாக்கம் செய்தார்கள்.

கதை 1. – பார்வதி குளிக்கும் போது தன் உடலிலிருந்த அழுக்கை உருட்டி ஒரு மனித உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த அழுக்கோடு பார்வதியின் நறுமணத்தைலம் கலந்து அந்த உருவம் கரைந்து தண்ணீரோடு போய் கங்கையில் கலந்து விட்டது. கங்கை  கடலில் கலக்குமிடத்தில் அந்த தண்ணீரை மாலினி என்ற யானைத்தலையரக்கியைக் குடிக்கச் செய்தாள். அதனால் கருவுற்ற மாலினி பிள்ளையாரைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தையை பார்வதி எடுத்துச் சென்று தன் மகனாக வளர்த்தாள்.

கதை 2. – பார்வதிக்குப் பிறந்த ஆண்குழந்தை சனியின் பார்வை பட்டு பிறந்தவுடனே தன்னுடைய தலையை இழந்து விட்டது. இதனால் வருந்திய பார்வதியைக் கண்டு இரக்கம் கொண்ட விஷ்ணு ஒரு யானையின் தலையைக் கொண்டு வந்து ஒட்டி உயிர் கொடுத்தார். இப்படியும் பிள்ளையார் பிறந்திருக்கிறார்.

கதை 3. – இமயமலை அடிவாரத்தில் சிவனும் பார்வதியும் யானை உருவம் கொண்டு கலவி செய்தார்கள். அதனால் யானைத்தலையுடன் பிள்ளையார் பிறந்தார். இப்படியும் பிறந்திருக்கிறார்.

கதை 4. – பார்வதியின் வயிற்றில் கருவாக இருக்கும் போது சிந்துரோன் என்ற அரக்கன் கருப்பையில் புகுந்து அந்தக் குழந்தையின் தலையைத் தின்று விட்டான். தலையில்லாமல் பிறந்த அந்தக் குழந்தை கஜசூரன் என்ற யானைத்தலை அரக்கனின் தலையைக் கொய்து தன் உடலில் பொருத்திக் கொண்டது. இப்படியும் பிள்ளையார் பிறந்திருக்கிறார்.

கதை 5 – மரகதமுனிவர் தன்னுடைய தவம் கலைந்து கண்களைத் திறந்தவுடன் அவர் கண்ட யானைகளின் கலவி அவருடைய உணர்ச்சிகளைத் தூண்டி அப்போது அங்கே வந்த விபுதை என்ற அசுரக்குலப்பெண்ணை யானையாக உருமாற்றி கலந்தார். இதனால் கஜமுகாசுரன் பிறந்தான். இவனைப் பிள்ளையார் கொன்று அவனுடைய தலையைக் கொய்து தன்னுடைய உடலில் பொருத்திக் கொண்டார். அவனைப் பெருச்சாளியாக்கித் தன்வாகனமாக்கினார். இப்படியும் பிள்ளையார் பிறந்தார்.

கதை 6---  சிவன் ஆசையுடன் பார்வதியைப் பார்க்கவரும்போது பார்வதி தன் உடல் அழுக்கில் உருவாக்கிய இளைஞனைக் காவலுக்கு நிறுத்தியிருந்தாள். அந்த இளைஞன் சிவனுக்கு அனுமதி மறுக்க அவனுடைய தலையை வெட்டி வீழ்த்தினார். செய்தி அறிந்த பார்வதி அழுது புலம்ப, சிவன் தன் சிவ கணங்களிடம் பார்க்கும் முதல் உயிர்னத்தின் தலையை வெட்டிக் கொண்டுவரச் சொன்னார். சிவகணங்கள் முதலில் யானையைப் பார்த்ததால், அதன் தலையை வெட்டிக் கொண்டு வந்து அந்த இளைஞனின் தலையில் பொருத்தினார்கள். அதனால் அந்த இளைஞன் கண ஈசன் கணேசன் அதாவது கணங்களின் தலைவன் ஆனான். இப்படியும் பிள்ளையார் பிறந்தார்.

இந்த எல்லாக்கதைகளினூடாக இரண்டு விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பிள்ளையார் யானைத்தலையையுடையவராக இருப்பதற்கான காரணம். இரண்டு எலியை வாகனமாகக் கொண்டிருப்பதற்கான காரணம்.

கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்புவரை பிள்ளையார் வழிபாடு இருந்ததற்கான குறிப்புகள் வேதங்களிலோ, புத்தமத இலக்கியத்திலோ இல்லை. முதன்முதலாக குப்தர்கள் காலத்தில் ( கி.பி.320 – கி.பி. 551 ) தான் பிள்ளையார் உருவங்கள் தெரிவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கணபதி என்றால் கணங்களைக் காப்பவன், கணங்களின் தலைவன் எனலாம். ரிக் வேதத்தில் கணபதி என்ற வார்த்தை இருப்பதாக மேற்கத்திய ஆய்வாளர் குறிப்பிடுகிறார். கணம் என்றால் குலம் என்று கொள்ளலாம்.

மதங்கர்கள் என்ற வட இந்தியப் பழங்குடிகளின் குலக்குறி யானையாக இருந்திருக்கிறது. யானைக்கு மாதங்கி என்ற பெயரும் உணடு. தமிழ்நாட்டிலும் மாதங்கம் என்ற கூட்டம் உள்ளது. நீலகிரி மலையிலுள்ள குருபர்களின் உட்பிரிவில் ஒரு கூட்டத்துக்குப் பெயர் யானை.

அதேபோல எலிக்குலம் இருந்திருக்கிறது. மூசிகக்குலம் என்றால் எலிக்குலம் என்று அர்த்தம்.

யானையைக் குலக்குறியாகக் கொண்ட பழங்குடிக்குலம் எலியைக் குலக்குறியாகக் கொண்ட பழங்குடிக்குலத்தை வெற்றி கொண்டபோது தோற்ற குலத்தின் குலக்குறியை தங்கள் கடவுளின் வாகனமாக மாற்றியிருக்கிறது. வெற்றி பெற்ற பழங்குடிக்குலம் அரசாக விரிவடைந்தபோது யானை மனிதக்கடவுளாக மாறி விட்டது.

ஆனாலும் பிள்ளையாரை அவ்வளவு எளிதாக பார்ப்பனியம் ஏற்றுக் கொள்ளவில்லை. பிள்ளையாரை சூத்திரர்கள் கடவுள் என்று தான் விலக்கி வைத்திருந்தார்கள்.

மனுதர்மம் 3:164 –ல் நாய் வளர்ப்பவன், பறவைகளை விற்பவன், கன்னிப்பெண்ணைக் கெடுப்பவன், பிறரைத் துன்புறுத்துவோன், சூத்திரத்தொழில் செய்பவன், கணபதி போன்ற சிறு தெய்வங்களுக்கு யாகம் செய்பவன் இவர்கள் பித்ருக்களுக்குச் செய்யும் இழவு விருந்திலிருந்து விலக்கப்பட வேண்டும்.

கிரக சூத்திரத்தில் கண்பதியை தீமை செய்யும் கடவுளாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆனால் வெகுமக்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. சாதி வேறுபாடின்றி அனைவரும் மிக எளிதாக அணுகக்கூடிய கடவுளாக, அவர்களே உருவாக்கிக்கொள்கிற கடவுளாக, அவர்களே அழித்து விடுகிற கடவுளாக, அவர்களின் வேண்டுதல்களைக் கேட்கிற கடவுளாக, அவர்கள் எடுக்கிற எல்லாமுயற்சிகளையும் தொடங்கி வைக்கிற கடவுளாக, மழை பெய்யாவிட்டால் தண்டிக்கிற கடவுளாக, குழந்தைகளின் அன்புக்குரிய கடவுளாக, பிள்ளையார் இருக்கிறார். வைதீக மதத்தில் வெளிவட்டத்திலிருந்த பிள்ளையாரை அரசியலுக்குள் இழுத்து வந்தது வைதீகப்பார்ப்பனீயம். அதன் மூலம் வெகுமக்களை தங்களுடைய இந்துத்துவ வலைக்குள் சிக்கவைத்து பிளவு படுத்துகிற தந்திரங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

 நம்முடைய பிள்ளையார் நன்மை தரும்பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் சாப்பிடுகிற பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் ஆசை ஆசையாகக் கொழுக்கட்டைச் சாப்பிடும் பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் சாணியிலும் வெல்லத்துண்டிலும், பச்சரிசி மாவிலும் இருக்கிற பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் குழந்தைகளுக்கு அட்சரம் சொல்லிக் கொடுக்கும் பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் குழந்தைகளுக்குப் பரீட்சையில் மார்க்கு வாங்கித் தருகிற பிள்ளையார்

நம்முடைய பிள்ளையார் காவியங்களை எழுதும் பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் முடித்து வைக்கும் பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் அரசமரத்தையும் வேப்பமரத்தையும் காப்பாற்றும் பிள்ளையார்.

நம்முடைய பிள்ளையார் அனைத்து மக்கள் மீதும் நேசமும் ,பாசமும், அன்பும் நிறைந்த பிள்ளையார்.

பிள்ளையார் அரசியலிலிருந்து பிள்ளையாரைக் காப்போம்.

அரசியலிலிருந்து கடவுளரைக் காப்போம்.

நம் மக்களைக் காப்போம்.  

ஆதார நூல்கள் – 1. பிள்ளையார் அர்சியல்- .சிவசுப்பிரமணியன்

2. மனிதசமூக சாரம்ஜார்ஜ் தாம்சன்

3. மனுதர்ம சாஸ்திரம்