Showing posts with label ஜப்பானிய நாட்டுப்புறக்கதை. Show all posts
Showing posts with label ஜப்பானிய நாட்டுப்புறக்கதை. Show all posts

Thursday, 7 August 2025

ஜப்பானியக் கதை 2

 

ஜப்பானியக் கதை 2

சொர்க்கத்தின் மகள்

பேரா. ஸ்ரீவர்மாஜி

மலையாளத்திலிருந்து தமிழில் - உதயசங்கர்



முன்பு ஒரு நாட்டில் வயதான ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் மூங்கிலை வெட்டி எடுத்து கூடை, முறம், தட்டு, போன்றவற்றைச் செய்வார். அவற்றைக்  கிராம கிராமமாகத் தூக்கிக் கொண்டு போய் விற்பனை செய்வார். வீட்டிலுள்ளவர்கள் அவருக்கு உதவியாக இருப்பார்கள். கிராமத்தின் அருகில் ஒரு காடு இருந்தது. தனியாக அங்கே போய் மூங்கிலை வெட்டிக் கொண்டு வருவார். இவ்வாறாக வேலை செய்து குடும்பத்தை நடத்திக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார் அந்த வயதானவர்.

ஒரு நாள் வழக்கம்போல அவர் காட்டிற்கு மூங்கில் வெட்டப் போனார். ஒரு மூங்கில் மரத்தை வெட்டப்போகும் போது அதிலிருந்து தங்க நிறத்தில்  ஒளி வருவதை அவர் பார்த்தார். மிகுந்த கவனத்துடன் அந்த மூங்கிலை வெட்டினார். அதற்குள்ளே மூன்றங்குல உயரத்தில், சிறிய உயிருள்ள ஒரு பெண்குழந்தை தங்க நிறத்தில் இருந்தது. அதைப் பார்த்து பரவசமடைந்தார் பெரியவர். கடவுள் கொடுத்த செல்வம் என்று நினைத்தார். தன்னுடைய வலது கையில் அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டார். மூங்கிலையும், சாமான்களையும் தலையில் சுமந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பினார். தன்னுடைய சொந்த மகளைப் போல தங்கமகளை அவர் வளர்த்தார்.

மூன்று நாட்களில் அந்தக் குழந்தைக்கு மற்ற சாதாரண குழந்தைகளைப் போல உடல் வளர்ச்சியும், உடல் பருமனும், வந்து விட்டது. அதன்பிறகு, குழந்தையின் அழகு கூடிக் கொண்டே போனது. அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் பொறாமை கொள்ளும்படி அவள் வளர்ந்து வந்தாள். கல்வியிலும், விளையாட்டிலும், பண்பிலும் அவள் சிறந்து விளங்கினாள்.

அவள் பெரியவளானதும் நிறையப் பேர் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். ஆனால் தங்கமகள் யாரையும் ஏற்கவில்லை. தூரத்திலிருந்த நாடுகளில் அவளுடைய அழகின் புகழ் பரவியது. பல பணக்காரர்களும் திருமணம் செய்து கொள்ள ஆசையுடன் அங்கே வந்தார்கள். அவளுடைய பெற்றோர்கள் அவளுடைய விருப்பம் தான் முக்கியம் என்று சொல்லிவிட்டார்கள். தங்கமகள் யாரிடமும் கோபம் கொள்ளவில்லை. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வேலை சொன்னாள்.

ஒருவரிடம் வானத்தில் தெரியும் இடி மின்னலைக் கொண்டு வரச் சொன்னாள். இன்னொருவரிடம் தானாகவே முழங்குகின்ற மேளத்தைக் கொண்டுவரச் சொன்னாள். எல்லாம் செய்யமுடியாத வேலைகள். ஆனால் யாரும் அப்படி யோசிக்கவில்லை. எல்லாரும் அவள் சொன்ன வேலையைச் செய்ய அலைந்து திரிந்தார்கள். பைத்தியக்காரர்களைப் போல மலைகளையும் காடுகளையும் கடந்து சென்றார்கள்.

அந்த நாட்டின் ராஜா அவளைப் பெண் கேட்டு வந்தார். தங்கமகளைப் பார்த்தவுடன் அவளைத்தான் ராணியாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த விவரத்தை அவளிடம் சொன்னார். அப்போது தங்கமகள், கைகளைக் கூப்பி வணங்கிப் பணிவுடன்,

“ மகாராஜாவே! உங்களுடைய ஆசையை நிறைவேற்ற யாருக்குத் தான் விருப்பமிருக்காது? ஆனால் நான் சாதாரண மனிதப்பெண் அல்ல. சொர்க்கத்தின் மகள். இந்த உலகவாழ்க்கை எனக்கு முடிந்து விட்டது. மன்னிக்க வேண்டும். “

என்று சொன்னாள். அவள் சொன்னதை யாரும் நம்பவில்லை. ராஜாவும் நம்பவில்லை. அப்போது வானத்தில் ஒளி குறைந்து இடி முழங்கியது. இரண்டு வானத்துத்தேவதைகள் பூமிக்கு வந்தனர். அவர்கள் சொர்க்கத்தின் மகளைத் தூக்கிக் கொண்டு சட்டென்று மறைந்து விட்டனர். ராஜாவுக்கோ, குடும்பத்தாருக்கோ, எதுவும் செய்ய முடியவில்லை. எல்லாம் ஒரு நிமிடத்தில் முடிந்து விட்டது.

Tuesday, 5 August 2025

தண்ணீர் பழம் - ஜப்பானிய நாட்டுப்புறக்கதை

 


1.   தண்ணீர் பழம்

ஆங்கிலத்திலிருந்து மலையாளத்தில் - பேரா.ஆர்.எஸ்.வர்ம்மாஜி

மலையாளத்திலிருந்து தமிழில் - உதயசங்கர்

கோடை காலம் முடிந்தது. பாதைகளிலும், பாதை ஓரங்களிலும், நின்று கொண்டிருந்த மரங்களின் இலைகளில் செம்மண்புழுதி படிந்திருந்தது. கிராமப்புறத்திலிருந்து நகரத்தை நோக்கி பதினாறு காளை மாட்டு வண்டிகள் போய்க் கொண்டிருந்தன. தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு ரயில் ஊர்ந்து போவதைப் போலத் தெரிந்தது. அனைத்து வண்டிகளிலும் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட தண்ணீர்ப்பழங்கள் நிறைந்திருந்தன. வண்டிக்காரர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். காளை மாடுகள் பழக்கம் காரணமாக பாதையிலேயே போய்க் கொண்டிருந்தன.

உச்சிப்பொழுது வந்தது. பாதைக்கு அருகில் நிழல் தரும் மரங்களும், ஒரு கிணறும், ஒரு சுமை தாங்கியும், இருந்தன. வண்டிகள் தானாகவே நின்று விட்டன. வண்டிக்காரர்கள் மாட்டுவண்டியின் நுகத்தைக் கழற்றி மாடுகளை அவிழ்த்து விட்டனர். அவை சற்று இளைப்பாறட்டும். கல் தொட்டியில் நீர் நிரம்பியிருந்தது. சில காளைகள் அந்தத் தண்ணீரைக் குடித்தன. சில காளைகள் பச்சைப்புற்களை கடித்துப் பார்த்தன. வேறு சில காளைகள் சும்மா நின்று கொண்டிருந்தன. வண்டிக்காரர்கள் வேடிக்கை பேச்சுகளைப் பேசிக் கொண்டும் புகைத்துக் கொண்டும் ஓய்வெடுத்தனர். சற்று நேரம் கழிந்தபிறகு, இரண்டோ, மூன்றோ, தண்ணீர்ப்பழங்களை வெட்டி அவர்கள் பங்கு பிரித்துச் சாப்பிட்டனர். தாகமும் களைப்பும் தீர்ந்து விட்டது.

அப்போது அங்கே வயதான ஒரு வழிப்ப்போக்கர் வந்தார். அவர் புழுதி படிந்த பழைய ஆடையை உடுத்தியிருந்தார். கம்பை ஊன்றியே நடந்து வந்தார். பாவம். மிகவும் களைத்துப் போயிருந்தார்.

“ மக்களே! ஒரு துண்டு இந்தத் தாத்தாவுக்குக் கொடுங்களேன்..நாக்கும் தொண்டையும் வறண்டு போய் விட்டது.. நீண்ட பயணம் செய்து வந்திருக்கிறேன்..”

என்று சொன்ன தாத்தா எல்லோரையும் மாறி மாறிப் பார்த்தார்.

“ இது எங்களுக்கே போதவில்லை.. அப்புறம் எப்படி உங்களுக்குக் கொடுக்க முடியும்? எங்களுடைய முதலாளி கணக்காக எண்ணிக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.. ஒன்று குறைந்தாலும் பதில் சொல்ல வேண்டும்.. வழியில் சாப்பிடுவதற்குக் கொடுத்தது நான்கு மட்டும் தான்.. உங்களையும் எப்படிக் கணக்கில் சேர்த்துக் கொள்ள முடியும்? “

“ ஒரு சிறிய துண்டு போதும்..”

“ இல்லை என்று சொல்லி விட்டோமே..”

ஒரு ஆள் முறைத்துப் பார்த்துக் கொண்டு சத்தமாய்க் கத்தினான்,

“ என்ன? என்ன? இந்தா.. நான்.. வாரேன்.. “

தாத்தா தன் கையிலிருந்த கம்பை வைத்து மண்ணைக் குத்தி குழியாக்கினார். கல் தொட்டிய்லிருந்து தண்ணீரைக் கோரி ஊற்றினார். வண்டிக்காரர்கள் தூக்கியெறிந்த பழத்தொலியை நட்டு வைத்தார். இதை எல்லாம் வண்டிக்காரர்கள் கேலியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ இப்போது பாருங்கள் “ என்ற மாதிரி வழிப்போக்கர் அவர்களைப் பார்த்தார். என்ன அற்புதம்! மாயாஜாலம் போல தண்ணீர்ப்பழம் முளைத்தது. இலைகள் விரிந்தன. பூவும் காயும் நிறைந்தன. தண்ணீர்ப்பழம் பக்குவமாகப் பழுத்தது. தாத்தா அதில் ஒன்றைப் பறித்துச் சாப்பிட்டார். பிறகு வண்டிக்காரர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் தாராளமாகப் பறித்துக் கொடுத்தார். எல்லோரும் வசியத்துக்கு ஆட்பட்டவர்களைப் போலச் சாப்பிட்டனர்.

“ நான் போய் வருகிறேன்.. மக்களே! “ என்று தாத்தா விடைபெற்றார். வண்டிக்காரர்கள் பொம்மைகளைப் போல நின்றார்கள். பிறகு பயணத்துக்குத் தயாரானார்கள். காளைகளை வண்டியில் பூட்டினார்கள். அவர்களும் ஏறினார்கள். அடக் கஷ்டமே! ஒரு வண்டியிலும் ஒரு தண்ணீர்ப்பழம் கூட இல்லை. மரத்தடியில் தாத்தா நட்டு வளர்த்த தண்ணீர்ப்பழச்செடியும் அங்கே இல்லை.

நன்றி - வண்ணக்கதிர்