Showing posts with label இந்து தமிழ்திசை. Show all posts
Showing posts with label இந்து தமிழ்திசை. Show all posts

Tuesday, 24 February 2026

இன்றைய உலகின் பிரதிபலிப்பு!

 

இன்றைய உலகின் பிரதிபலிப்பு!

ஆதி வள்ளியப்பன்

 

தமிழ் நவீனச் சிறார் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் உதயசங்கர். இந்தத் தலைமுறை எழுத்தாளர்கள் சமூகம், அறிவியல், வரலாறு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை மையப்படுத்தி எழுதிவருகிறார்கள். அநேகமாக இந்திய ஆங்கில இலக்கியம், கேரளத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில்தான் நவீனச் சிறார் இலக்கியப் படைப்புகள் மேம்பட்ட வகையில் வெளியாகின்றன என்று கூறலாம். அந்த நவீனச் சிறார் எழுத்தாளர் வரிசையில் முன்நிற்பவர் உதயசங்கர்.

பொதுவாக அரசியல், சமூகம் சார்ந்த கூரிய விமர்சனம் என்பவை தமிழ்ச் சிறார் கதைகளில் கடந்த தலைமுறையில் அரிதாகவே இடம்பெற்றன. குழந்தைகளுக்கு ஒழுக்க மதிப்பீடுகளைக் கற்றுத்தருவது, நல்லவர்களாக மாற்றுவது, மேம்பட்ட குடிமக்கள் ஆக்குவது போன்றவற்றை மனதில் வைத்தே முந்தைய தலைமுறைகளில் சிறார் கதைகள் எழுதப்பட்டன. பொழுதுபோக்கு மதிப்பீடுகளில் கவனம் இருந்தபோதிலும், பொதுவாகச் சிறார் கதை என்றால் மேற்கண்ட அம்சங்களே மையமாக இருந்தன.

உதயசங்கரின் கதைகள் வழக்கமான சிறார் கதைகளிலிருந்து மாறுபட்டவை.  அந்தக் கால மன்னர்களின் கோமாளித்தனங்கள், முட்டாள்தனங்களைப் பற்றி குழந்தைகளுக்கு ஏற்ற அளவில் அவை பேசுகின்றன. மன்னர்கள் என்றாலே அதிகாரம் மிக்கவர்கள், அவர்கள் வைத்ததே சட்டம் என்று ஏற்றுக்கொள்ள நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். அது மக்களுக்கு எதிரானதாக இருந்தால் ஏன் ஏற்க வேண்டும் என்று கேள்வி கேட்கின்றன 'மாயக்கண்ணாடி', 'அண்டா மழை', 'கஞ்சராஜாவின் கணக்கு' போன்ற கதைகள். இதுபோன்ற கதைகள் தற்காலக் குழந்தைகளுக்கு அதிகமாக எழுதியவர் அவரே. 

 அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் மேற்கண்ட கதைகளைத் தவிர, 'ஒரு சொட்டு தண்ணீர்' போன்ற யதார்த்த வாழ்க்கையை பேசும் கதைகள், 'குட்டி எறும்பும் சுமதிப்பாப்பாவும்', 'காட்டுப் பள்ளிக்கூடம்', 'யாருடைய முட்டை', 'கால்களில் ஒரு காடு', 'விதைகளின் பயணம்', 'வழி தவறிய கோழிக்குஞ்சு' போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த இயற்கைக் கதைகள், தலைப்புக்கதையான 'கத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும்' போன்ற மிகைப்புனைவுக் கதைகள் எனப் பல வகைமைகளில் அவர் எழுதியிருக்கிறார். 

இன்றைய உலகின் பிரச்சினைகளான உடலுக்கு ஊறு விளைவிக்கும் சக்கை உணவு (Junk food), புத்தகங்கள் வாசிக்கப்படாமல்-கேளிக்கைப் பொழுதுபோக்குகளில் அதீதமாக ஈடுபடுவது, நாடுகளுக்கு இடையிலான போர்கள் போன்றவை குறித்தும் சில கதைகள் அமைந்திருக்கின்றன. பல கதைகளில் வேடிக்கையான பாடல்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. சிறார் பாடல்களைப் புனையக்கூடிய, பாடல்களை சிறந்த வகையில் மொழிபெயர்க்கக்கூடிய திறமை படைத்த சிறார் எழுத்தாளர்களில் உதயசங்கரும் ஒருவர். அதேநேரம், அவர் எழுதிய எந்த வகைமைக் கதையாக இருந்தாலும் உள்ளடக்கமும் மொழிநடையும் அறிவியல் மனப்பான்மையை மையமாகக் கொண்டிருக்கின்றன. இந்த அம்சம் இந்தக் கதைகளில் மிக முக்கியமானது.

பொதுவாக இன்றைக்கு இருக்கும் சிறார் எழுத்தாளர்களில் பலருக்கும் நாவல் எழுதுவதற்கே ஆர்வம் அதிகமாக இருக்கிறது. கதை வடிவம் என்பது சிறியது. அதில் நிறைய புதுமைகளை, பரிசோதனைகளை, வடிவ உத்தி மாற்றங்களை செய்துபார்க்க முடியும். அதை தொடர்ந்து செய்துவரும் உதயசங்கர் போன்றவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு வெளிவருவது மிகவும் அவசியமானது. 

கிட்டத்தட்ட 300 கதைகளை அவர் எழுதியிருக்கிறார். ஒருவருடைய படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமானவற்றை ஒரு தொகுப்பாகத் தரும்போது, அவருடைய படைப்புகளின் ஒட்டுமொத்தச் சித்திரம் வாசகருக்குக் கிடைக்கும். ஓர் எழுத்தாளரின் பல்வேறு பரிமாணங்களை இதுபோன்ற தொகுப்புகளின் மூலம் உணர்ந்துகொள்ளலாம். இந்தத் தொகுப்பும் அந்த அம்சத்தைப் பிரதிபலிக்கிறது.

ஓவியர் முத்துவின் தேர்ந்த ஓவியங்களுடன் இந்தத் தொகுப்பு வெளியாகியுள்ளது. இலவச ஏ.ஐ. ஓவியங்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்ட இந்தக் காலத்தில், இது போன்று ஓவியர்களின் நேரடி ஓவியங்கள் இடம்பெறுவது புத்தகங்களைத் தனித்துவம் ஆக்குகிறது. கதைகளின் மாறுபட்ட உள்ளடக்கமும் நேரடி ஓவியங்களும் இந்தத் தொகுப்பின் மதிப்பை கூட்டியுள்ளன. 

பெரியவர்களுக்கு எழுதிப் பெயர் வாங்கலாம் எனப் பல எழுத்தாளர்கள் நினைக்கும் நிலையில், சிறார் எழுத்தை தன் தோள் மீது தூக்கிச் சுமந்துகொண்டு ஊரெல்லாம் கொண்டுசென்று வருபவர் எழுத்தாளர் உதயசங்கர். சிறார் இலக்கியம் எழுதுவதால் பெரிய பிரபலமோ, தமிழ் இலக்கியச் சூழலில் உயர்ந்த மதிப்போ இதுவரை தரப்படவில்லை. இது தெரிந்திருந்தும் தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நாவல்கள், தொடக்க நிலைக் குழந்தைகளுக்கான நூல்கள் எனப் பல்வேறு வடிவங்களில் சிறார் இலக்கியத்தில் தொடர்ச்சியாக  ஈடுபட்டுவருகிறார். சிறார் இலக்கியத்தில் 100க்கு மேற்பட்ட நூல்களைப் படைத்திருக்கிறார்.

இந்தத் தொகுப்பு அவருடைய சிறார் இலக்கியப் பயணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு பங்கை வகிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

வெளியீடு - இந்து தமிழ்திசை

விலை- 150/

தொடர்புக்கு - 7401296562 / 7401329402