ஏன் சிறார் இலக்கியம்?
உதயசங்கர்
1. குழந்தைகள் பேசும் முன்பே பாடுகிறார்கள், நடக்கும் முன்பே ஆடுகிறார்கள் எழுதும் முன்பே வரைகிறார்கள் என்று பிலிசியா ராத் சொல்கிறார்.
2. கலையே மனித இனத்தின் ஆதாரமாக இருக்கிறது. அறிவியல், வரலாறு, என்று எந்த த்துறையை எடுத்துக் கொண்டாலும் கற்பனை தான் கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறது.
3. கற்பனை அல்லது புனைவு தான் இன்றுவரை வேறு வேறு பெயர்களில் மனிதர்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறது.
4. இன்னும் சொல்லப்போனால் ஹோமோ சேப்பியன்ஸின் கற்பனை மீதான நம்பிக்கை தான் அவனை மற்ற மனித குரங்கினங்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.
5. இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை மற்ற விலங்குகள் வாழும்போது மனிதனின் கற்பனை தான் கேள்விகளை உருவாக்கியது. அந்தக் கேள்விகள் தான் அவனைப் பகுத்தறிவுள்ளவனாக்கியது. இன்றுவரை அந்தக் கற்பனைக் கேள்விகள் தான் அவனுடைய நன்மைக்கும் தீமைக்கும் காரணங்களாக இருக்கின்றன.
6. இயற்கையாகக் கிடைத்த கல்லைக் கூர் தீட்டினால் வேட்டை இன்னும் சுலபமாகுமென்பதை முதலில் கற்பனையில் தோன்றியதனால் தான் யதார்த்த த்தை மாற்ற முடியுமென்ற நம்பிக்கை அவனுக்குப் பிறந்த து.
7. கலை இலக்கியத்தின் அடிப்படைப்பண்புகளாக மாற்றி யோசித்தல், உற்றுநோக்கல், உணர்ச்சிகளை உருவாக்குதல், உணர்ச்சிகளை மிகைப்படுத்துதல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதலின் மூலம் மாயமான ஒரு யதார்த்த த்தை கற்பனை உருவாக்குகிறது.
8. அந்த மாய யதார்த்தம் தான் இன உணர்வு, மொழியுணர்வு, சாதியுணர்வு, மதவுணர்வு, தேசபக்தி, போன்ற கற்பனைகளை உருவாக்குகிறது. அது தமிழ்த்தேசியம், இந்திய தேசியம், மொழித்தேசியம், என்று மனிதர்களை ஆட்கொள்கிறது.
9. அனைத்துத் தேசியங்களும் கற்பனையானவை தான். ஆனால் மனிதர்கள் ஒரு சமூகமாக சேர்ந்து வாழ, தங்களுடைய இருத்தலைக் காப்பாற்ற, நியாயப்படுத்த இந்த மாய யதார்த்த த்தின் மீது வெறியூட்டுகிறார்கள்.
10. இன்னொரு வகையில் இந்த மாய யதார்த்தம் தான் மனிதர்களை ஒன்றிணைக்கிறது. ஒற்றுமைப்படுத்துகிறது. பாதுகாப்பு தருகிறது. ஆற்றுப்படுத்துகிறது. எழுச்சி கொள்ள வைக்கிறது. மாய யதார்த்த த்துக்காக உயிரையே மாய்த்துக் கொள்ள வைக்கிறது.
11. மனித சமூகமே இந்த மாய யதார்த்த த்தின் புதிர்ப்பாதைகளின் வழியே தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
12. எப்போது உபரி தோன்றியதோ, எப்போது தனியுடமைச் சிந்தனை தோன்றியதோ அப்போதிருந்து இந்த மாய யதார்த்த த்தைத் திட்டமிட்டு ஆளும் வர்க்கம் உருவாக்கத் தொடங்கிவிட்ட து. அதை மக்களிடம் பரப்பி அவர்களைத் தன்வசப்படுத்திச் சுரண்டலைத் தொடர்கிறது.
13. இந்தச் சுரண்டும் மாய யதார்த்தத்துக்கு எதிராக விமரிசனக்கண்ணோட்ட த்தை வளர்ப்பதும், புதிய மாய யதார்த்த த்தை உருவாக்கி அதை மக்களிடம் பரப்புவதும் தான் இப்போது நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி.
14. இந்தப் பிரபஞ்சமும், பால்வெளிகளிகளும் லட்சக்கணக்கான சூரியன்களும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் கோள்களும் எப்போதும் முடிவிலியாக இருக்கும் உண்மை கூட மாய யதார்த்த மாகத்தான் தோன்றுகிறது.
15. மாய யதார்த்தம் அல்லது கலை அல்லது கற்பனை அல்லது Believing in Nonsense இல்லையென்றால் மனிதன் அழிந்து விடுவான்.
