Showing posts with label கோழி. Show all posts
Showing posts with label கோழி. Show all posts

Sunday, 11 May 2025

சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் காக்காவும்.

 

 

சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் காக்காவும்.

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



 

நல்ல கோடைகாலம். எப்படிப்பட்ட கோடையிலும் ஆலமரத்தின் அடியில் குளுமையாக இருந்தது. கதைப்பாட்டி கதைமூட்டையைத் தலைவைத்து மதிய நேரம் உண்ட மயக்கத்தில் படுத்துறங்குவது வழக்கம். அப்போது சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் அங்கே ஆடு புலி ஆட்டம் விளையாடுவார்கள். பனையோலைப்பந்து செய்து தலைக்கு மேல் வீசி விளையாடுவார்கள்.  சில சமயம் கோலிக்குண்டும் விளையாடுவார்கள்.

ஆலமரத்தடியில் கிராமத்தார்கள் ஒரு பெரிய பானையில் தண்ணீர் நிரப்பி வைப்பார்கள். கோடைகாலம் அல்லவா? வழிப்போக்கர்கள் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும். ஆறும் வற்றிய கடுங்கோடை.

ஒரு நாள், சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது கசுமலா காக்கா பறந்து வந்தது. அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து,

கா கா கா கா கா இடைவிடாமல் கரைந்தது.

நாய்க்குட்டி கேட்டது,

என்ன காக்கா கத்திக்கிடேயிருக்கே.. காலில் எறும்பு கடித்து விட்டதா? “

பிறகும் காக்கா,

கா கா கா கா என்று கரைந்தது. பூனைக்குக் கோபம் வந்து விட்டது.

என்ன கசுமலா ஒளிந்து விளையாடுவதற்கு விட மாட்டேன் என்கிறாய்.. வாயை மூடவில்லையென்றால் நான் கடித்து விடுவேன்..”

என்று சொல்லிப் பயமுறுத்தியபடி பாய்ந்தது. கசுமலா அலறிக் கொண்டே பறந்து போய் ஆலமரக்கிளையில்.அமர்ந்து கரைந்தது.

கா கா கா கா கா..”

கதைப்பாட்டி விழித்துக்கொண்டாள். எழுந்து உட்கார்ந்து காக்காவிடம்,

என்ன கசுமாலா ஏன் கரைகிறாய்? “

என்று கேட்டார். கதைப்பாட்டிக்கு விலங்குகளின் மொழி தெரியும். சின்னு கேட்டாள்,

காக்கா என்ன சொல்லுது கதைப்பாட்டி..”

காக்காவுக்குத் தண்ணீர் வேண்டுமாம்..” என்று சொன்னார் கதைப்பாட்டி.

சின்னு ஓடிப்போய் தண்ணீர் இருந்த பானையை எட்டிப் பார்த்தாள். பானையில் கொஞ்சூண்டு தண்ணீர் தான் இருந்தது. காக்காவும் பறந்து வந்து எட்டிப் பார்த்தது.

கொஞ்சம் தான் தண்ணீர் இருக்கிறது இதை எப்படி காக்கா குடிக்கும்? “ என்று சின்னு கதைப்பாட்டியிடம் சொன்னாள்.

முன்னாடி ஒரு காலத்தில் கல்லைப் போட்டுத் தண்ணீர் குடித்தாய் அல்லவா? அதைப் போல குடித்துக்கொள்..”

பூனைக்குட்டி கோபத்துடன் சொன்னது. காக்கா ,” கா கா காஎன்று கரைந்தபடி கதைப்பாட்டியைச் சுற்றிச் சுற்றி வந்தது. கல்லை எடுத்து வந்து போட்டு தண்ணீர் மேலே வருவதற்கு நாலைந்து நாட்கள் ஆகிவிடும். அவ்வளவு பெரிய பானை.

அப்போது கதைப்பாட்டி,

பானைக்குள் பூனைக்குட்டியோ, நாய்க்குட்டியோ குதித்து கழுத்தளவுக்கு முங்கிக் கிடந்தால் தண்ணீர் மேலே வந்து விடும்..” என்று சொன்னார்.

பூனைக்குட்டியின் மீசை பயத்தில் நடுங்கியது.

ஐய்யோ.. ஒரு தடவை சுடுதண்ணீரில் விழுந்த பூனைக்குட்டி நான்..இனி எந்தத் தண்ணீரிலும் குதிக்க மாட்டேன்..”

என்று சொல்லியது. நாய்க்குட்டி துணிச்சலுடன் ஓடி வந்து ஸ்டைலாகப் பானைக்குள் குதித்து கழுத்தளவுக்கு முங்கியது. தண்ணீர் பானையின் மேலே வந்தது.

காக்கா வந்து உட்கார்ந்து ஆசைதீரத் தண்ணீர் குடித்தது. காக்காவின் தாகம் தீர்ந்தது. காக்கா அங்கிருந்து போனபிறகு நாய்க்குட்டி தண்ணீரில் இருந்து வெளியில் வந்தது. அப்படிக் குதித்தபோது பானை உடைந்து விட்டது.

பரவாயில்லை.... தாகமெடுத்தவருக்குத் தண்ணீர் கொடுக்க முடிந்ததில்லையா.. அது பெரிய புண்ணியம்..” என்று கதைப் பாட்டி சொன்னார்.

நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

Friday, 10 January 2025

. கோழியைக் காணோம்

 

1.கோழியைக் காணோம்

  உதயசங்கர்




கோழியூர் வறண்ட நாடு. கோழி வளர்ப்பு தான் அந்த நாட்டின் தொழில். அந்த நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் வீடுகளில் கோழிகளை வளர்த்தனர். ஆமைக்கோழி, கடக்கோழி, கம்பான் கோழி, கருங்கோழி, சம்பங்கோழி, சைனாக்கோழி, சிலுப்பாக்கோழி, கழுகுக்கோழி, போந்தாக்கோழி, என்று எல்லாவகையான கோழிகளையும் வளர்த்தனர். அந்தக் கோழிகளின் முட்டைகளை விற்று வரும் பணத்தில் வாழ்ந்து வந்தனர்.

ஒருநாள் கோழியூர் நாட்டு ராஜா சேவலான் நகர்வலம் வந்தான். நாட்டைச் சுற்றிப்பார்த்து மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று விசாரிப்பது தான் நகர்வலம். ராஜா சேவலானுடன் அமுக்கரான் என்ற மந்திரியும், பிடுங்கரான் என்ற மந்திரியும் வந்தார்கள். அவர்கள் அனைவரும் அந்த நாட்டின் கடைசியில் இருந்த ஒரு குடிசை வீட்டுக்குப் போனார்கள். ராஜா சேவலானுக்குப் பசி. பசி வந்து விட்டால் தாங்க முடியாது. அவ்வளவு தான். உடனே திரும்பி அமுக்கரானையும் பிடுங்கரானையும் பார்த்து

“ உடனே அறுசுவை உணவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்..என்று கத்தினான். அமுக்கரானும் பிடுங்கரானும் குடிசைக்குள் நுழைந்தார்கள். அங்கே ஒரு வயதான பாட்டி இருந்தாள். அவளிடம்,

“ ஏய், கிழவி.. ராஜா வந்திருக்கிறார்.. இரண்டு நிமிடத்தில் அறுசுவை உணவுக்கு ஏற்பாடு செய்..

என்று கத்தினார்கள். ஒரு நிமிடம் யோசித்தாள் பாட்டி. பிறகு குடிசைக்குப் பின்னால் இருந்த தேக்கு மரத்திலிருந்து கீழே விழுந்த தேக்கிலையை எடுத்துக் கழுவினாள். மண்பனையில் இருந்த நீராகாரத்தில் மிதந்து கொண்டிருந்த கேப்பைக் களி உருண்டைகளில் ஒன்றை எடுத்து இலையில் வைத்தாள். பிறகு இலையின் மூலையில் உப்புக்கல் வைத்தாள். ஒரு பச்சை மிளகாயை வைத்தாள். ஒரு துண்டு கருப்பட்டியை வைத்தாள். ஒரு துண்டு நாரத்தங்காய் ஊறுகாயை வைத்தாள். அவ்வளவு தான்.

“ ராஜாவை வரச் சொல்லுங்கள்… அறுசுவை உணவு தயார்..என்று சொன்னாள் பாட்டி.

நெய்யில் செய்த இனிப்புகள், கோழி சாப்ஸ், ஆட்டு ஈரல் வறுவல், மாட்டுக்கறி பிரியாணி, திராட்சை ரசம் என்று எதிர்பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் சேவலான் ராஜா.

இலையைப் பார்த்ததும் அவனுக்கு ஏமாற்றம். அவன் உடனே,

“ ஏ மந்திரிகளே.. என்ன இது? “ என்று கோபத்துடன் கேட்டான். உடனே அமுக்கரான் தலையை நெஞ்சு வரை குனிந்து,

“ ராஜா.. இந்தக் கிழவியிடம் இரண்டு கருங்கோழிகள் மட்டுமே இருக்கின்றன.. அந்த முட்டைகளை விற்றுத்தான் அவள் வாழ்க்கை நடத்துகிறாள்.. அந்தக் கோழிகள் மாதம் பதினைந்து முட்டைகள் மட்டுமே இடும்.. அதை விற்றால் கேப்பை தான் வாங்க முடியும்.. கேப்பைக்களி உணவு தான் சாப்பிட முடியும்..

என்று சொன்னான். அதைக் கேட்ட சேவலான் ராஜா,

“ அப்படி என்றால் என்னுடைய நாட்டு மக்கள் இப்படித்தான் சாப்பிடுகிறார்களா? “ என்று கேட்டான். அதற்கு பிடுங்கரான் மந்திரி முழங்கால் வரை தலைகுனிந்து,

“ எல்லாவற்றுக்கும் நாட்டுக் கோழிகள் தான் காரணம்.. ராஜாவே.. நாம் வெளிநாட்டிலிருந்து புதிய செயற்கைக்கோழிகளை வாங்கிக் கொடுக்கலாம்.. அந்தக் கோழிகள் தினசரி ஐந்து முட்டைகள் போடும்.. மாதம் நூற்றைம்பது முட்டைகள் கிடைக்கும்.. மக்களும் அறுசுவை உணவு சாப்பிடுவார்கள்.. “

என்று சொன்னான். சேவலான் ராஜா யோசிக்கவே இல்லை.

“ இது நல்ல யோசனையாக இருக்கிறதே..என்றான். அப்போது அமுக்கரான் மந்திரி,

“ ஆனால் அதில் ஒரு சிக்கல்..என்றான்.

“ என்ன சிக்கல்..

வெளிநாட்டுக் கோழிகளை வளர்க்கும் போது நாட்டுக்கோழிகளை வளர்க்கக்கூடாது.. அப்படி வளர்த்தால் மக்கள் வெளிநாட்டுக் கோழிகளைச் சரியாகக் கவனிக்க மாட்டார்கள்… “

“ அவ்வளவு தானே… ஒரு நாட்டுக்கோழிக்கு இரண்டு வெளிநாட்டுக்கோழி என்று முரசறைந்து அறிவிக்கச் சொல்லுங்கள்.. நாட்டுக்கோழிகளை நாம் சாப்பிடுவோம்..ஹ்ஹ்ஹா ஹ்ஹா..

என்று சொல்லிச் சிரித்தான் சேவலான் ராஜா.

மறுநாள் அரண்மனை அறிவிப்பு வந்தது. அறிவியலறிஞர்கள் எச்சரித்தார்கள். இயற்கை ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற வகையில் உயிர்களைப் படைத்திருக்கிறது. எனவே இயற்கைக்கு மாறாக எதையும் செய்யக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால் யாரும் கேட்கவில்லை.. கூட்டம் கூட்டமாக நாட்டுக்கோழிகளைக் கொண்டு போய் அரண்மனையில் கொடுத்தார்கள். அரண்மனையில் தினம் கோழிக்கறி விருந்து தான்.

பதிலுக்கு பெரிய பெரிய வெளிநாட்டுக் கோழிகளை வாங்கிக் கொண்டு வந்தார்கள். அவை எல்லாம் குளிர் நாடுகளில் வளர்க்கப்பட்டவை. கோழியூரோ வெப்பநாடு.

வெளிநாட்டுக்கோழிகள் பொதுக் பொதுக் என்று குண்டு குண்டாய் இருந்தன. அதே போல எல்லாம் ஒரே நிறத்தில் இருந்தன. ஒரே சாயலில் இருந்தன.

மக்களுக்குக் குழப்பம்.

அடுத்த சில நாட்களில் கோழியூர் நாட்டில் ஏகப்பட்ட சண்டைகள் நடந்தன.  எது யாருடைய கோழி என்று தெரியவில்லை. என்னுடைய கோழி உன்னுடைய கோழி என்று சண்டை போட்டார்கள்.

 வெளிநாட்டுக்கோழிகள் வெளியில் போய் மேய்வது கிடையாது. உட்கார்ந்த இடத்திலேயே “ க்க்கோக்க்க்கோ..என்று கூவி உணவு கேட்டது. இருபத்திநான்கு மணி நேரமும் தின்று கொண்டேயிருந்தன அந்தக் கோழிகள். மக்களால் தீனி போட்டு முடியவில்லை.

பத்து நாட்களில் கோழியூரின் வெப்பம் தாங்க முடியாமல் ஒவ்வொரு கோழியாகச் செத்துப் போய் விட்டன.

மொத்தத்தில் இந்தப் பத்து நாளில் வெளிநாட்டுக்கோழிகள் ஐந்து முட்டைகளே இட்டன.

ஒரு மாதத்துக்குள் எல்லா வெளிநாட்டுக்கோழிகளும் இறந்து விட்டன. இப்போது கோழியூர் நாட்டில் கோழிகளே இல்லை. மக்களுக்குப் பிழைக்க வழியில்லை. கூட்டம் கூட்டமாக அவர்கள் கோழியூரை விட்டு வெளியேறினார்கள். கோழியூர் நாட்டில் யாருமில்லை.

கோழியூர் நாட்டு ராஜாவான சேவலானும், மந்திரிகள் அமுக்கரானும், பிடுங்கரானும் கூட வெளிநாட்டுக்குப் போய் விட்டார்கள். இந்தத் திட்டமே தவறு என்று எச்சரித்த அறிவியல் அறிஞர்களும் வேறு நாடுகளுக்குப் போய் விட்டார்கள்.

ஆனால் ஊரின் கடைசியில் குடிசை விட்டில் இருந்த பாட்டி எங்கும் போகவில்லை. அவள் ரகசியமாக பாதுகாத்து வந்த கருங்கோழிகளுடனும், பத்துக் குஞ்சுகளுடனும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

“ அட கோட்டிக்காரப் பயல்களா? “ என்று அவ்வப்போது சொல்லிச் சிரிப்பாள்.

அவள் யாரைச் சொன்னாள் என்று உங்களுக்கு தெரிகிறது அல்லவா?

 

2.  நன்றி - அதிசயத்திலும் அதிசயம்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்


Monday, 15 January 2018

கோழியின் எச்சரிக்கை

கோழியின் எச்சரிக்கை

உதயசங்கர்

செவலைக்கோழி பத்து முட்டைகளை இட்டது. அந்த பத்து முட்டைகளையும் இருபத்தியொரு நாட்கள் அடைகாத்தது. இருபத்தியொராம் நாள் முட்டைகளின் ஓட்டை உடைத்துக் கொண்டு ஏழு குஞ்சுகள் வெளியே வந்தன. மூன்று முட்டைகள் அப்படியே இருந்தன. செவலைக்கோழி அந்த முட்டைகளை உருட்டிப்பார்த்தது. ஒன்றும் அசையவில்லை. அந்த முட்டைகளை அடைகாத்த கூட்டிலிருந்து தள்ளி விட்டது. அந்த மூன்று முட்டைகளும் கூமுட்டைகள்.
செவலைக்கோழி உண்ணாமல் உறங்காமல் அடைகாத்து பொரித்த அந்த ஏழு குஞ்சுகளையும் பெருமையுடன் பார்த்தது.
ஒரு குஞ்சு வெள்ளை நிறத்தில் இருந்தது.
ஒரு குஞ்சு செவலை நிறத்தில் இருந்தது.
ஒரு குஞ்சு கருப்பு நிறத்தில் இருந்தது
ஒரு குஞ்சு கருப்பில் வெள்ளைப் புள்ளிகளுடன் இருந்தது
ஒரு குஞ்சு வெள்ளையில் கருப்புப்புள்ளிகளுடன் இருந்தது
ஒரு குஞ்சு சாம்பல் நிறத்தில் இருந்தது
ஒரு குஞ்சு செவலையும் கருப்பும் கலந்து இருந்தது.
எல்லாக்குஞ்சுகளும் கிய்யா..கிய்யா…கிய்யா…கிய்யா.. என்று போல குரல் எழுப்பிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன.
தாய்க்கோழி ” கெக்கெக்கெக் எல்லோரும் வாங்க “ என்று கேறியது. உடனே எல்லாக்குஞ்சுகளும் தாய்க்கோழியின் அருகில் வந்து நின்றன. ஆனால் சாம்பல் நிறக்குஞ்சு மட்டும் வரவில்லை. அந்தக்குஞ்சு அப்படியே உலாத்திக் கொண்டிருந்தது. தாய்க்கோழிக்குக் கோபம். உடனே கொஞ்சம் சத்தமாய், ” க்ர்ர்ர்ர்ர் எனக்குக் கோபம் வந்துருச்சி.. உடனே வா..” என்று கத்தியது.
தாய்க்கோழியிடம் இருந்து விலகியிருந்த சாம்பல் நிறக்குஞ்சு மெல்ல அலட்சியமாய் நடந்து வந்து அருகில் நின்றது. தாய்க்கோழி சாம்பல் நிறக்குஞ்சை முறைத்துப் பார்த்தது. ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை சாம்பல் நிறக்குஞ்சு.
செவலைக்கோழி குஞ்சுகளிடம்,
“ குழந்தைகளே நான் சொல்றதைக் கவனமாகக் கேட்டுக்குங்க..
நான்  ‘ கெக் ‘ ன்னு சொன்னா கவனம்னு அர்த்தம்
’ கேகெக்கேகேகே ‘ ன்னு கூப்பாடு போட்டா ஆபத்து ஆபத்து ஓடி வாங்க!ன்னு அர்த்தம்.
கெ கெ கெ ன்னு மெல்லக்கூப்பிட்டா இரை இருக்கு வாங்கன்னு அர்த்தம்..
இன்னிக்கு இது தான் உங்களுக்கு பாலபாடம். எல்லோரும் கேட்டுக்கிட்டீங்களா? “
என்று பேசியது. அம்மா சொல்வதை எல்லாக்குஞ்சுகளும் ஆர்வத்துடன் கேட்டன. சாம்பல் நிறக்குஞ்சு மட்டும் காதில் வாங்காமல் வாய்க்குள்ளேயே கிய்கிய்யா கிய்யா கிய்கிய்யா கிய்யா என்று பாட்டுப்பாடிக் கொண்டிருந்தது. செவலைக்கோழிக்குக் கவலையாக இருந்தது. இப்படி அலட்சியமாக இருக்கே இந்தச் சாம்பல் நிறக்குஞ்சு!
செவலைக்கோழி குஞ்சுகளுக்கு ஒவ்வொரு நாளும் புதிய புதிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.
கருப்பு நிறக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
வெள்ளை நிறக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
செவலைக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
கருப்பு வெள்ளைக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
வெள்ளைக்கருப்புக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
செவலைக்கருப்புக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
சாம்பல் குஞ்சு மட்டும் அம்மா சொன்னதைக் கேட்கவில்லை
சாம்பல் குஞ்சு கண்டபடி அலைந்து திரிந்தது. இரை தேடியது.
அன்று காலை செவலைக்கோழியும் குஞ்சுகளும் இரை தேடி குப்பைமேட்டை கிண்டிக் கொண்டிருந்தன. மேலே வானத்தில் பருந்து தன் நீண்ட சிறகுகளை விரித்து பறந்து கொண்டிருந்தது. அந்தப்பருந்தின் நிழல் கீழே பூமியில் விழுந்ததைப் பார்த்தது செவலைக்கோழி. உடனே செவலைக்கோழி, கேக்கேக்கேக்கே என்று அபாய எச்சரிக்கையைக் கத்தியது. உடனே எல்லாக்குஞ்சுகளும் அங்கங்கே கிடைத்த புதர்களுக்குள் பதுங்கிக் கொண்டன. செவலைக்கோழி சாம்பல் குஞ்சைத் தேடியது. காணவில்லை.
சிலநொடிகளுக்கு அப்புறம் சாம்பல் குஞ்சு ஒரு செடியின் மறைவிலிருந்து ஹாயாக கிய்கிய்யா கிய்கிய்யா கிய்கிய்யா என்று பாடிக்கொண்டே வெளியில் வந்தது. அது என்ன என்று நிமிர்ந்து பார்ப்பதற்குள் சாம்பல் குஞ்சின் மீது பருந்தின் நிழல் விழுந்தது.
ஆ…ஐயோ… ஆபத்து வந்து விட்டதே… பருந்தின் இறகுச்சத்தம் சாம்பல் குஞ்சின் காதில் கேட்டது. அவ்வளவு தான் உயிர் போகப்போகிறது. இதோ பருந்தின் கால்களில் உள்ள கூர் நகங்கள் உடலைக் கிழிக்கப்போகிறது. என்ன செய்வது என்று சாம்பல் குஞ்சுக்குத் தெரியவில்லை. அப்படியே கண்களை மூடி உட்கார்ந்து விட்டது. கிய்யா கிய்யா கிய்யா
அப்போது ஆவேசமாய் செவலைக்கோழி பறந்து வந்து பருந்தின் மீது மோதியது. பருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து புரண்டது. என்ன நடந்தது என்று தெரியாமல் அப்படியே மேலே எழுந்து பறந்து போனது பருந்து.
சாம்பல் குஞ்சின் அருகில் செவலைக்கோழி நின்றது. கண்களை மூடி உட்கார்ந்திருந்த சாம்பல் குஞ்சின் தலையில் தன் அலகுகளால் மெல்லத் தடவியது. சாம்பல் குஞ்சுக்கு அப்போது தான் உயிர் வந்தது.
இப்போது செவலைக்கோழியின் சத்தத்துக்கு முதலில் வந்து நிற்பது யார் தெரியுமா?

நீங்களே சொல்லுங்கள். 
5+