Sunday, 11 May 2025

சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் காக்காவும்.

 

 

சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் காக்காவும்.

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



 

நல்ல கோடைகாலம். எப்படிப்பட்ட கோடையிலும் ஆலமரத்தின் அடியில் குளுமையாக இருந்தது. கதைப்பாட்டி கதைமூட்டையைத் தலைவைத்து மதிய நேரம் உண்ட மயக்கத்தில் படுத்துறங்குவது வழக்கம். அப்போது சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் அங்கே ஆடு புலி ஆட்டம் விளையாடுவார்கள். பனையோலைப்பந்து செய்து தலைக்கு மேல் வீசி விளையாடுவார்கள்.  சில சமயம் கோலிக்குண்டும் விளையாடுவார்கள்.

ஆலமரத்தடியில் கிராமத்தார்கள் ஒரு பெரிய பானையில் தண்ணீர் நிரப்பி வைப்பார்கள். கோடைகாலம் அல்லவா? வழிப்போக்கர்கள் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும். ஆறும் வற்றிய கடுங்கோடை.

ஒரு நாள், சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது கசுமலா காக்கா பறந்து வந்தது. அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து,

கா கா கா கா கா இடைவிடாமல் கரைந்தது.

நாய்க்குட்டி கேட்டது,

என்ன காக்கா கத்திக்கிடேயிருக்கே.. காலில் எறும்பு கடித்து விட்டதா? “

பிறகும் காக்கா,

கா கா கா கா என்று கரைந்தது. பூனைக்குக் கோபம் வந்து விட்டது.

என்ன கசுமலா ஒளிந்து விளையாடுவதற்கு விட மாட்டேன் என்கிறாய்.. வாயை மூடவில்லையென்றால் நான் கடித்து விடுவேன்..”

என்று சொல்லிப் பயமுறுத்தியபடி பாய்ந்தது. கசுமலா அலறிக் கொண்டே பறந்து போய் ஆலமரக்கிளையில்.அமர்ந்து கரைந்தது.

கா கா கா கா கா..”

கதைப்பாட்டி விழித்துக்கொண்டாள். எழுந்து உட்கார்ந்து காக்காவிடம்,

என்ன கசுமாலா ஏன் கரைகிறாய்? “

என்று கேட்டார். கதைப்பாட்டிக்கு விலங்குகளின் மொழி தெரியும். சின்னு கேட்டாள்,

காக்கா என்ன சொல்லுது கதைப்பாட்டி..”

காக்காவுக்குத் தண்ணீர் வேண்டுமாம்..” என்று சொன்னார் கதைப்பாட்டி.

சின்னு ஓடிப்போய் தண்ணீர் இருந்த பானையை எட்டிப் பார்த்தாள். பானையில் கொஞ்சூண்டு தண்ணீர் தான் இருந்தது. காக்காவும் பறந்து வந்து எட்டிப் பார்த்தது.

கொஞ்சம் தான் தண்ணீர் இருக்கிறது இதை எப்படி காக்கா குடிக்கும்? “ என்று சின்னு கதைப்பாட்டியிடம் சொன்னாள்.

முன்னாடி ஒரு காலத்தில் கல்லைப் போட்டுத் தண்ணீர் குடித்தாய் அல்லவா? அதைப் போல குடித்துக்கொள்..”

பூனைக்குட்டி கோபத்துடன் சொன்னது. காக்கா ,” கா கா காஎன்று கரைந்தபடி கதைப்பாட்டியைச் சுற்றிச் சுற்றி வந்தது. கல்லை எடுத்து வந்து போட்டு தண்ணீர் மேலே வருவதற்கு நாலைந்து நாட்கள் ஆகிவிடும். அவ்வளவு பெரிய பானை.

அப்போது கதைப்பாட்டி,

பானைக்குள் பூனைக்குட்டியோ, நாய்க்குட்டியோ குதித்து கழுத்தளவுக்கு முங்கிக் கிடந்தால் தண்ணீர் மேலே வந்து விடும்..” என்று சொன்னார்.

பூனைக்குட்டியின் மீசை பயத்தில் நடுங்கியது.

ஐய்யோ.. ஒரு தடவை சுடுதண்ணீரில் விழுந்த பூனைக்குட்டி நான்..இனி எந்தத் தண்ணீரிலும் குதிக்க மாட்டேன்..”

என்று சொல்லியது. நாய்க்குட்டி துணிச்சலுடன் ஓடி வந்து ஸ்டைலாகப் பானைக்குள் குதித்து கழுத்தளவுக்கு முங்கியது. தண்ணீர் பானையின் மேலே வந்தது.

காக்கா வந்து உட்கார்ந்து ஆசைதீரத் தண்ணீர் குடித்தது. காக்காவின் தாகம் தீர்ந்தது. காக்கா அங்கிருந்து போனபிறகு நாய்க்குட்டி தண்ணீரில் இருந்து வெளியில் வந்தது. அப்படிக் குதித்தபோது பானை உடைந்து விட்டது.

பரவாயில்லை.... தாகமெடுத்தவருக்குத் தண்ணீர் கொடுக்க முடிந்ததில்லையா.. அது பெரிய புண்ணியம்..” என்று கதைப் பாட்டி சொன்னார்.

நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

No comments:

Post a Comment