Showing posts with label Ramayanam. Show all posts
Showing posts with label Ramayanam. Show all posts

Tuesday, 27 October 2026

காலத்தின் குரலாகக் கலைஞன்

 ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் – 13

 காலத்தின் குரலாகக் கலைஞன்

 உதயசங்கர்

 


காலமே கலைஞனின் வழியாக அந்தந்தக்கால மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. கலைஞன் அந்தப் பெரும்பொறுப்பை ஏற்றுக்கொண்டு அவன் வாழ்ந்த காலத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு, மதிப்பீடுகளை தன் படைப்புகளின் வழியே வெளிப்படுத்துகிறான். அப்படி வெளிப்படுத்துகிறபோதே இயந்திரமயமாக வெளிப்படுத்துவதில்லை. தன்னுடைய தனித்துவமான படைப்பூக்கத்தின் வழியே சமூக விழுமியங்களை, அமைப்பை, நடைமுறைகளை மதிப்பீடு செய்கிறான். அப்படி மதிப்பீடு செய்யும் போது விமரிசனம் செய்கிறான். புதிய விழுமியங்களைத் தன் கற்பனையால் உருவாக்குகிறான். அந்த விழுமியங்கள் ஏற்கனவே இருக்கும் சமூக மரபுகளின் தொடர்ச்சியாகவோ, மீறலாகவோ, மாற்றமாகவோ இருக்கலாம். ஆனால் அந்தக் கற்பனைகளுக்கு அடிப்படைகளைக் கொடுப்பது அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகம் தானென்பதை மறந்து விடக் கூடாது. பாரதி அவன் வாழ்ந்த காலத்தின் பழைய, பிற்போக்கான, நடைமுறைகளை, விழுமியங்களை விமரிசனம் செய்தான். பல பழைமையான நடைமுறைகளை மீறினான். எப்படி அவை நடந்தன? ஐரோப்பாவிலிருந்து புதிய கருத்துகள், அரிவியல், தத்துவங்கள், நடைமுறைகள் இங்கே அறிமுகமாகும்போது புதிய காற்று வீசத் தொடங்குகிறது. நிலவுடமைச் சமூகத்திலிருந்து முதலாளித்துவ சமூகத்துக்கு மாறிய காலத்தின் பிரதிநிதியாக பாரதி இருந்தான்.

 

அந்த மாற்றம் அடிப்படை மாற்றமல்ல. சாதிகள் இல்லையடி பாப்பா என்று எழுதினாலும் பாரதியால் நடைமுறையில் கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்து சாதி மேலாதிக்கத்தைத் தான் சீர்திருத்தமாகச் செய்யமுடிந்தது. பெண்கல்வியும், பென்ணுரிமைச் சிந்தனைகளும் முளைவிட்ட காலத்தில் தான் ஆணுக்குப் பெண்ணிங்கு இளைப்பில்லை காண் என்று முழங்க முடிந்தது. இணையர் செல்லம்மாவைச் சமதையாக அழைத்துச் செல்லமுடிந்தது. சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களை முன்னுணர்பவன் கலைஞன் தான்.

 

கலையின் உச்சபட்ச நோக்கமே மனித மனதின் புதிர்வழிகளை ஆராய்வது தான். மனிதமனதையும் வாழ்க்கையையும் அறிந்து கொள்ள மனிதனே ஆராய்ச்சிசாலையாகவும் மனிதனே கருவியாகவும், மனிதனே கச்சாப்பொருளாகவும் இருக்கிறான். மனிதன் மனிதனையே ஆராய்ச்சி செய்கிறான், கலைஞன் தன் கலையுணர்வால் மனித மனதை விசாரணை செய்து தான் கண்ட உண்மைகளை கலைவடிவில் தருகிறான். உலகின் கவனத்துக்கு வராத, அலட்சியப்படுத்திய, மறைத்த மனிதவாழ்க்கையின் நுண்ணுணர்வுகளை கலைநுண்ணோக்கியினால் உருப்பெருக்குகிறான். அவனுடைய கலை நுண்ணுணர்வின் ஒவ்வொரு அணுவையும் அணுவின் அங்ககக் கூறுகளையும் உருப்பெருக்குகிறது. அப்போது மனித மனம் எப்படியெல்லாம் சிந்திக்கிறது? எப்படியெல்லாம் திட்டமிடுகிறது? அதிகாரத்தின் வேர் எங்கே இருக்கிறது? சுரண்டலின் விதை எப்படி உருவாகிறது? பேராசைகளின் காரணமென்ன? அடிமைப்படுத்தும் ஆதிக்க உணர்வின் சபலம் ஏன் வருகிறது? சிக்கலான செயல்பாடுகளை நுட்பமாகச் சொல்லும்போது அவை மெல்ல மெல்ல பிரம்மாண்டமான  பேருருக் கொள்கிறது. சிறு சிறு உணர்வுநிலைகள் கூடிப் பேருணர்வாக மாறுகிறது. அந்தப் பேருணர்வு மனித வாழ்க்கையெனும் பிரபஞ்சத்தில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறது.  

இந்தப் பேருணர்வை அல்லது மானுடத்தருணங்களை உருவாக்கும் படைப்புகள் காலத்தை வெற்றி கொள்கிறது. அந்தப் படைப்புகளே காலத்தை அகாலத்திற்கு அழைத்துச் செல்கின்றன. அனைத்துக் கலைஞர்களும் காலத்தைத் தாண்டி நிற்கும் படைப்புகளைப் படைக்கவே பேரவா கொள்கிறார்கள். ஆனால் சாதாரணமாக அப்படி நடந்து விடுவதில்லை. கலைஞர்களின் அர்ப்பணிப்பு, உழைப்பு, பயிற்சி, சமூக இயங்கியலைப் புரிந்து கொண்டு அதை நேர்மையாக அணுகும் விரிந்து பரந்த அறிவு, இவை அனைத்தும் ஒன்றிணையும்போது சாத்தியமாகும் வாய்ப்புகள் ஏற்படும்.

கலைஞர்கள் வாழும் காலத்து மதிப்பீடுகளைப் பிரதிபலிக்கும் அதே வேளையில் சமூக இயக்கவியலை உள்வாங்கி எதிர்கால மதிப்பீடுகளையும் படைப்புகளில் முன் வைக்கிறார்கள். சில சமயம் பழமைக்கும் புதுமைக்கும் இடையில் ஊசலாடுகிற படைப்புகளை முன்வைத்து முரண்படுகிறார்கள். தனிமனிதனாக பிற்போக்கான சமூக மதிப்பீடுகளை பின்பற்றுபவராகவும், படைப்புகளில் முற்போக்கான மதிப்பீடுகளை முன்வைப்பவராகவும் வெளிப்படுகின்றனர்.

தம்மை முற்போக்குப் படைப்பாளி என்று வெளிப்படையாகச் சொல்லிக் கொள்கிற படைப்பாளிகளே அவர்களறியாமலே படைப்புகளில் பிற்போக்கான விழுமியங்களை முன்வைப்பதும், பழைய சமூக மதிப்பீடுகளிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பதும் நடக்கும். அதேபோலத் தம்மை பிற்போக்காளர் என்று சொல்லிக் கொள்பவர்கள் முற்போக்கான படைப்புகளை படைப்பதும் உண்டு.

சமூகத்தில் மேலே தெரிகிற பொக்குகளை மட்டுமே பொறுக்கியெடுத்து தேய்வழக்கான மேலோட்டமான, எந்தப் புதிய அனுபவத்தையோ, சிந்தனையையோ தராத படைப்பாளிகள் புகழ் பெறுவதும் உண்டு. ஆழ்ந்து சமூகத்தின் இயங்கியலைக் கற்று வெளிப்படுத்துகிற படைப்பாளிகள் அவர்கள் காலத்தில் கவனிக்கப்படாமல் போவதும் உண்டு.

கலை ஒரு இசைக்கருவி என்றால் . அதை வலதுசாரிகளும் மீட்ட முடியும். இடதுசாரிகளும் மீட்ட முடியும். யார் மீட்டுகிறார்கள்? என்ன நோக்கத்துக்காக மீட்டுகிறார்கள்? என்பதைப் பொறுத்தே என்ன மாதிரியான இசை வெளிப்படுமென்று சொல்லமுடியும். கலையின் மாயமே மனிதனின் அத்தனை கண்டுபிடிப்புகளிலும் தலை சிறந்தது.

இராமாயாணம், மகாபாரதம், உள்ளிட்ட அனைத்துப் புராண இதிகாசங்கள் மக்கள் மனதை எப்படிக் கவ்விப்பிடித்திருக்கிறதென்பதை உணர்ந்தாலே கலையின் மாயசக்தியைப் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் மனதை வசியப்படுத்தும் படைப்புகளே அந்த மக்களின் கருத்தியலைத் தீர்மானிக்கும் காரணிகளாக அமையும். அவை ஆளும்வர்க்கத்துக்குத் துணை செய்யும். அரசு என்ற நிர்வாக இயந்திரத்தின் தடையில்லா ஓட்டத்துக்கு எண்ணெய் மசகாகப் பயன்படும். மாற்றங்களின் தீப்பொறியாகவும் மாறும். கலைஞன் அந்தந்தக் காலத்தின் குரலை நேர்மையாகச் செவிமடுக்க வேண்டும். .

நன்றி - புக் டே.