Showing posts with label History of. Show all posts
Showing posts with label History of. Show all posts

Wednesday, 23 September 2026

அறிவியலும் வரலாறும்

 பீம்பேட்கா - நூல் மதிப்புரை

வி.லெட்சுமி

முதுகலைத் தமிழாசிரியர்

அரசு மேல்நிலைப்பள்ளி

செட்டிகுளம்



 சமகாலத்தில் தொல்லியலும் அகழ்வாராய்ச்சிகளும் வரலாறு மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இந்தியாவின் வரலாற்றை முற்றிலும் வேறொரு கோணத்தில் பார்ப்பதற்கு இந்த ஆய்வுகள் துணை புரிகின்றன. இளையோர்க்கு கடந்த காலம், சமகாலம், எதிர்காலம் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதற்காக கேப்டன் பாலுவும், ஆதனும் பேரண்ட பெருவெளியில் பயணிக்கிறார்கள். வரலாற்றைத் துப்பறிதல் தான் பீம்பேட்காவின் கதைக்களம். பாலுவும் ஆதனும் இந்த நூலிலும் வருகிறார்கள். அவர்கள் முடிவற்ற காலத்தில் முன்பாக சென்று புதிய கண்டுபிடிப்புகளை நம் முன்னால் வைக்கின்றார்கள். 

சிந்துவெளி நாகரிகத்தில் திராவிட பண்பாட்டின் அடித்தளம் என்னும் ஆர் பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் எழுதிய நூலும், யுவால் நோவா ஹராரி எழுதிய சேப்பியன்ஸ் என்னும் நூலும், டோனி ஜோசப் எழுதிய ஆதி இந்தியர்கள் நூலும் இந்நூலில் கருத்துக்கள் பின்புலமாக கையாளப்பட்டுள்ளன. அதுபோல் நூல் ஆசிரியர்களான பாலகிருஷ்ணன் அய்யாவும் யுவால் நோவா அவர்களும், டோனி ஜோசப் அவர்களும் கதாபாத்திரங்களாக கேப்டன் பாலுவோடு உரையாடும் கதாபாத்திரத்திலும் வந்து வரலாற்று பதிவுகளைக் கூறிச் செல்கின்றனர்.


 1380 கோடி வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட பெருவெடிப்பில் ஏராளமான ஹைட்ரஜன் அணுக்கள் உடைந்து சிதறின. சிதறிய அணுக்கள் ஒன்று சேர்ந்து கோள்களாக உருவாகின. அப்படி உருவானதில் மிகப்பெரிய கோளான சூரியனைச் சுற்றி உருவான சிறிய கோள்கள் பால்வழி அண்டமாக மாறின. அந்தப் பால்வழி மண்டலத்தில் உள்ள ஒரு கோள்தான் நமது பூமி.  454 கோடி ஆண்டுகள் பூமியின் வயது. 454 கோடி ஆண்டுகளிலும் 100 கோடி ஆண்டுகளாக பூமி சூரியனைப் போல் அப்படியே கொதித்துக் கொண்டே இருந்திருக்கின்றது. சூரியனின் நீள்வட்ட பாதையில் சுற்றிக் கொண்டிருந்த பூமியின் மீது ஏராளமான சிறுகோள்கள், வால் வெள்ளிகள் மோதி புதிய வாயுக்களை  உருவாக்கி இருக்கின்றன. ஹீலியம், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்றவை  இணைந்தும் பிரிந்தும் பெருங்கடல்கள் உருவாக்கியிருந்தன. அப்பொழுது பூமியில் கடல் மட்டுமே இருந்திருக்கின்றது. எங்கும் தண்ணீராகவே இருந்திருக்கின்றது. கிட்டத்தட்ட 354 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் முதல் முதலாக சையானோ பாக்டீரியா என்ற ஒரு செல் உயிரி தோன்றியிருக்கின்றது. அவ்வகையில் பூமியில் அனைத்து உயிர்களுக்கும் தாயும் தந்தையும் அந்த பாக்டீரியாவாகத்தான் இருந்திருக்கின்றது. அதிலிருந்து தான் அமீபா முதல் மனிதன் வரை தோன்றியிருக்கின்றார்கள்.


 பீம்பேட்கா குகைக்குள் மனித குரங்குக்கு  இரண்டு பெண் குட்டிகள் பிறக்கின்றன. ஒரு பெண் குட்டி மனித முகத்தையும் மற்றது மனித குரங்காகவும் இருக்கின்றது. அந்த மனித முகமுள்ள குரங்கு தான் மனித இனமான சேப்பியன். இந்தப் பெண் குட்டி தான் நம்முடைய உலகம் முழுவதும் பரவி  ஆட்சி செய்து கொண்டிருக்கும் விலங்கினமான சேப்பியன். அதில் இருந்துதான் மனிதன் தன்னுடைய பயணத்தை தொடங்கினான் என்று இந்நூலின் கதை கூறுகிறது. இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ஹோமோ சேப்பியன்ஸ் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தான் ஆப்பிரிக்காவில் இருந்து கிளம்பி உலகின் பல பகுதிகளுக்கும் சென்றிருக்கின்றார்கள். உணவு பற்றாக்குறை, இயற்கை பேரிடர் மற்றும் இனப் புணர்ச்சி காரணமாக ஏற்பட்ட போட்டிகளினால் அவர்கள் இடம்பெயர  தொடங்கி உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வாழ்ந்திருக்கின்றார்கள். குகை ஓவியங்கள் மூலமாக இதனை அறிய முடிகின்றது.

 இந்தியாவில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்கள் இருக்கின்றன.  லட்சக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் இங்கே வந்து குடியேறி கொண்டே இருக்கிறார்கள். அதனால் இன்றைய இந்திய மக்கள் அனைவருமே கலப்பின மக்கள் தான்.  எல்லோரும் இருக்கின்ற இடத்திற்கு ஏற்ப நிறம், குணம், உருவ அமைப்பைப் பெற்றிருக்கின்றார்கள் என்று இந்நூல் விவரிக்கின்றது.

 நூலின் கதையோடு கேப்டன் பாலுவும் மதுமிதாவும் ஆதனும் மற்றும் பிற நூல் ஆசிரியர்களும் பயணித்து நம்மையும் மனித  இனத்தில்  தோற்றம் குறித்து அறிந்து கொள்ள செய்கிறார்கள்.

இளையோர் மட்டுமல்ல. பெரியவர்களும் வாசிக்க வேண்டிய நூல்.

வெளியீடு - வானம்

விலை -90/

தொடர்புக்கு - +91 97515 49992