Showing posts with label சதுரங்கவாழ்க்கை. Show all posts
Showing posts with label சதுரங்கவாழ்க்கை. Show all posts

Sunday, 13 September 2026

உடலின் தத்துவம்

 

சதுரங்கவாழ்க்கை 12

உடலின் தத்துவம்

உதயசங்கர்


                                                     


    நான்கைந்து நாட்களுக்கு வேலை பெண்டெடுத்தது. கிராம பஞ்சாயத்துத் தலைவர்களும், ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் தங்களுடைய பகுதிக்கு அரசின் திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். அதற்கு என்ன காரணமென்பது ஊருக்கே தெரியும். அரசு நிறுவனமயமாக்கப்பட்ட லஞ்சத்தின் செயல்முறையை விதிமுறையாக வைத்திருக்கிறது. யார் ஆட்சியில் இருக்கிறார்களென்பது விஷயமேயில்லை. நம்முடைய நாட்டுக்கு ஒரு அரசியலமைப்புச் சாசனம் இருப்பதைப் போல அதிகார வர்க்கத்துக்கு ஒரு ஊழல்விதிமுறைகள் சாசனமாக இருக்கிறது. இதை யாரும் யாருக்கும் சொல்லிக் கொடுப்பதில்லை. வேலை செய்வதற்கு பயிற்சி கொடுப்பதைப் போல இதற்கு பயிற்சி கொடுப்பதில்லை. ஆனால் அந்த சீட்டில் உட்கார்ந்தவுடன் கொரொனா வைரஸ் போல தொற்றிக் கொள்ளும். யார் யாருக்கு எவ்வளவு சதவீதம் லஞ்சம், அன்பளிப்பு என்று துல்லியமாக நடைமுறைப்படுத்துவார்கள். அப்படியென்றால் லஞ்ச ஒழிப்புத்துறை தேவையில்லையே. அப்படியும் சொல்லிவிட முடியாது. கீழ்மட்ட ஊழியர்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்குத் தேவைப்படுகிறது. இல்லையென்றால் மொத்தப்பணமும் சூறைத்தேங்காயாகி விடும். நிதித்துறையிலிருந்து திட்டங்களுக்குப் பணம் ஒதுக்கிவிட்டால் போதும் என்னுடைய ஆபீசில் திருவிழாக்கோலமாகத் தான் இருக்கும். அதுவரை எங்கோ மூலையில் படுத்த படுக்கையாகக் கிடக்கும் பைல்கள் உயிர் பெற்று ஓடிவந்து நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போடும். அந்த நாட்களில் ஆபீசே சிரித்துக் கொண்டேயிருக்கும். அந்தச் சத்தம் மற்ற அரசு அலுவலகங்களுக்கும் கேட்கும்.

    அப்போது இரவு வீட்டுக்குப் போவதற்கு காலதாமதமாகிவிடும். நந்தினிக்கு என்னைப் பற்றித் தெரியும். நான் இந்த த் திருவிழாக்களில் தொலைந்து போன குழந்தை மாதிரி வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டே திரிவேன்.

    காண்டிராக்டர்களும்,

அவரு பச்சப்புள்ளைப்பாஅவரை எதுவும் சொல்லாதீங்க.. “

    என்று அதிகாரிகளுக்கெ அறிவுரை சொல்லுவார்கள். என் வேலையைச் சரியாகச் செய்து விடவேண்டுமென்ற என்னுடைய உறுதியை அவர்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வார்கள். நானும் கவலைப்படுவதில்லை. எவ்வளவு வேலையாக இருந்தாலும் செய்து கொடுத்து விட்டுப் போவேன்.

    இரவு வீட்டுக்குப் போனதும் நந்தினி,

சரோ, செண்பா வந்திருந்தாப்பா..”

    எனக்கு அதைக் கேட்டதும் திடுக்கென்றிருந்தது. ஒரு வாரத்தில் ஒரு முறை கூட கதிரைப் பற்றி நினைக்கவில்லையே. குரலில் நடுக்கத்துடன்,

    என்ன ஆச்சு? “

    நேற்று ரெவ்யூவுக்குப் போயிருந்தார்களாம்டாக்டர்கள் மழுப்பலாகவே சொல்றாங்களாம்.. தெளிவா எதுவும் சொல்லலியாம்அதான் ஒவ்வொரு நாளும் கடக்கும்போதும் ஒரு யுகத்தைக் கடப்பதைப் போல இருக்குன்னு ரொம்ப வருத்தப்பட்டா..”

    நான் எதுவும் பேசவில்லை. எனக்கு என்மீதே கோபம் வந்தது. இடையில் ஒரு தடவையாவது போய்ப் பார்த்திருக்க வேண்டும். கதிர் கூப்பிட்டால் தான் போகணுமா? ச்சே! என்ன மனுசன். என்னை நானே திட்டிக் கொண்டேன். நாளைக்குக் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். மணியையும் அழைத்துக் கொண்டு போவோமென்று நினைத்தேன். உடனே செல்போனில் மணியை அழைத்தேன்.

    டேய்.. நாளைக்கு கதிரைப் போய்ப் பாப்பமா? “ எடுத்தவுடன் அவனே கேட்டான்.

     அதுக்குத்தான் நானே உன்னைக் கூப்பிட்டேன்..” என்றேன். இருவரும் மாலை ஆறு மணிக்குப் போவதாக ஏற்பாடு செய்து கொண்டோம். எனக்கு என்னவோ கதிரின் நிலைமையைப் பர்றியும் செண்பா வந்து விட்டுப் போனதையும் கேட்ட திலிருந்து மனது ஒரு மாதிரி இருந்தது. திடீரென காமம் காட்டாறாகப் பொங்கி உடலை மூழ்கடித்தது. உடலின் நரம்புகளின் விறுவிறுப்பு கூடிக் கொண்டே போனது. மூர்க்கமான விலங்கைப் போல நடந்து கொண்டேன்.

    ஏன் என்னாச்சி இன்னிக்கு? மிருகம் மாதிரி நடந்துக்கிறீங்க? “

    என்று ஆடைகளையெடுத்து உடுத்தும்போது மிகுந்த கோபத்துடன் கேட்டாள். அவளுடைய வார்த்தைகள் என்னுடைய காதுகளில் எங்கோ தூரமாகக் கேட்டது. என் உடலின் சக்தியனைத்தையும் யாரோ உறிஞ்சியதைப் போல சக்கை போல கிடந்தேன். உடலின் எந்தப் பாகத்தையும் அசைக்க முடியவில்லை. சாரத்தை எடுத்து உடுத்த மனமில்லை. எல்லாம் இழந்த மாதிரி ஒரு உணர்வும் ஏதோ அபூர்வமாய் கிடைத்த மாதிரியொரு உணர்வும் அலையடித்துக் கொண்டேயிருந்தது. நிர்வாணமாய் கிடந்த என் உடலை நானே விலகி நின்று பார்ப்பது போல ஒரு காட்சி தோன்றியது. நான் உயிருடன் தான் இருக்கிறேனா? எங்கிருந்தோ என் மீது ஒரு மாயப்போர்வை போர்த்தப் பட்டது. கரும் இருளில் நான் தொலைந்து போனேன். என்னை நானே தேடும் இருள். என் உடலும் உயிரும் தனியே உறங்கிக் கொண்டிருந்தன. உடல் குறட்டை விட உயிர் விழித்திருந்தது.    

தனிமையிலிருக்கும் போது மட்டுமே மனிதன் உண்மையாக இருக்கிறான். தன்னுடைய அழகு, அசிங்கம் எல்லாவற்றையும் வெளிப்படுத்துகிறானோ. அவனுடைய விலங்குணர்ச்சி வெளிப்படுகிறது. வெளியுலகில் அவனுடைய ஆன்மா அனுபவித்த காயங்களை ஆற்றுகிற ரகசியமான உலகமாக தனிமை இருக்கிறதோ. இல்லையென்றால் பட்ட காயங்களை நாவால் நக்கிக் வலியாற்றுகிற இடமாக தனிமை இருக்கிறதோ. காமமோ, காதலோ உண்மையில் தன்னைச் சமனமாக்குவதற்காகவே வெளிப்படுகிறதோ. உண்மையான நிர்வாணம் அல்லது தன்னை அறிதல் தனிமையில் மட்டும் தான் சாத்தியமோ. என்னுடன் வேலை பார்த்த கேரளாவைச் சேர்ந்த இளைஞன் வேலை முடிந்து அறைக்குப் போனதும் ஆடைகளையெல்லாம் களைந்து நிர்வாணமாகத் தான் இருப்பானாம். யாராவது வந்தால் மட்டும் இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொள்வானாம். எனக்கு அதைக் கேட்கும்போது கொஞ்சம் அசூயையாக இருந்தாலும் தொடர்ந்து தன்னுடலை நிர்வாணமாகப் பார்க்கும் ஒரு மனிதனுக்கு புறத்தோற்றம் பற்றிய அதீத மாயை அழிந்து விடுமென்று தோன்றியது.

எப்போதும் இந்த உடல் அப்படியே இருக்கப் போவதில்லை. இயற்கையின் விதிப்படி பிறந்து வளர்ந்து தளர்ந்து மடியும் இந்த உடலின் மீதான வசீகரம் மனிதனிடம் மட்டும் ஏன் குறைவதில்லை. உயரம், குள்ளம், சராசரி, வெள்ளை, சிவப்பு, மாநிறம், கருப்பு, ஒல்லி, குண்டு, என்று எத்தனை விதமான கருத்துகளால் மனிதர்கள் வாழ்நாளெல்லாம் மன அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள். அதிலும் குறிப்பாகப் பெண்கள் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை உடல் தான் பெண் என்ற கருத்தியலைத் தன்னுயிராக நினைக்கிறார்கள். எப்போதும் உடலை அழகு படுத்திக் கொண்டே, உடல் பற்றிய கவலைகளை மட்டுமே சுமந்து கொண்டு அலைவதைப் பார்க்கும்போது விநோதமாக இருக்கும். விலங்குலகில் ஆண் தான் தோற்றத்தில் அலங்காரங்களைக் கொண்டிருக்கின்றன. ஆண் விலங்குகளும் ஆண் பறவைகளும் ஆண் பூச்சிகளும் தான் பெரும்பாலும் தன்னுடைய பெண் இணையைக் கவர்வதற்காகவே அந்த அலங்காரங்களைப் பெற்றிருக்கின்றன. ஆனால் மனிதர்களில் மட்டும் பெண்கள் தான் தங்களுடைய இணையைக் கவர்வதற்காக அனைத்து அலங்காரங்களையும் செய்கின்றனர். அப்படியறியாமலேயே செய்வதற்கு என்ன காரணமாக இருக்கும்? சமூகத்தில் நிலவுகிற ஆணாதிக்கம் பெண்களின் மீது செலுத்துகிற அதிகாரம். குடும்பங்களில் காலம் காலமாக முளைத்துக் கொண்டேயிருக்கும் நுண் அதிகாரங்கள். பொதுவாக அதிகாரங்களெல்லாமே எளிய மனிதர்களுக்கெதிராக இருந்தாலும் பெண்களையே எல்லாவற்றுக்கும் கீழே வைத்திருக்கிறது. அடிமைத்தனத்தை விட அடிமை மனோபாவம் மிக க் கொடுமையானதில்லையா?

புறவுடலைப் பற்றிய இத்தனை கவலை மனிதர்களுக்கு மட்டும் எப்படி வந்தென்று தெரியவில்லை. பிறந்து சில வருடங்களிலேயே மனிதர்கள் உடலைப் பற்றிக் கவலைப்படத்தொடங்கிவிடுகிறார்கள். புறவுடலை அழகுபடுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கி விடுகிறார்கள். புற அழகு பற்றிய கற்பிதங்களும், கணிப்புகளும் தீர்ப்புகளும் சர்வ சாதாரணமாக சமூகத்தில் உருவாகி விடுகின்றன. மனதில் யதார்த்தத்தைக் கற்பனை அதிகாரம் செய்கிறது.

கல்லூரியில் படிக்கும்போது சின்னத்தம்பி சினிமா பத்திரிகைகளாக வாங்கிக் கொண்டிருந்தான். அந்தச் சினிமா பத்திரிகைகளில் வரும் நடிகைகளின் படங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தான். அவற்றை ஒரு நோட்டில் ஒட்டி பாதுகாப்பாய் வைத்திருந்தான். தற்செயலாக அவனுடைய வீட்டுக்குப் போன ஒரு மாலையில் அந்த நோட்டைப் பெருமையுடன் காட்டினான். அதைப் படுக்கையில் வைத்துக் கொண்டு தான் உறங்குதாகச் சொன்னான். அந்தப் படங்களிலெல்லாம் நடிகைகள் அரைகுறை ஆடைகளில் இருந்தார்களென்பதைச் சொல்லவேண்டியதில்லை. நானும் பார்த்தேன். உடலில் கிளர்ச்சி தோன்றியதென்னவோ உண்மை தானென்றாலும் ஒரு அசூயைத் தோன்றாமலில்லை.

எப்போதும் வேட்டியிலேயே வரும் ராஜன் கல்லூரியில் கடைசி பெஞ்சில் எனக்கருகில் உட்கார்ந்திருப்பான். எந்த வகுப்பாக இருந்தாலும் அவனுடைய பார்வை பெண்கள் பக்கமே இருக்கும். எழுதும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவன் தலையைத் திருப்பாமல் பெண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். முதலில் எனக்குத் தெரியவில்லை. வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே பெஞ்சு சில நிமிடங்கள் கிடுகிடுவென நடுங்கும். முதலில் ராஜன் கால்களை ஆட்டுவதால் ஆடுகிறதென்று நினைத்தேன். ஆனால் ஒரு நாள் எழுதிக் கொண்டிருக்கும்போது ஆடியதால் திரும்பி அவனை முறைத்தேன். ஆனால் என் கண்களில் அவனுடைய வேட்டிக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருந்த ஆண்குறி தான் பட்டது. அவன் சுயமைதுனம் செய்து கொண்டிருந்தான். எனக்கு ஒரு கணம் திடுக்கென்றது. சில கணங்களுக்குப் பிறகு அமைதி திரும்பியது. என்னால் அந்த பெஞ்சில் உட்கார முடியவில்லை. எழுந்து வேறு பெஞ்சுக்கு மாறிவிட்டேன். அதற்காக நான் யோக்கியனென்று நினைக்க வேண்டியதில்லை.

புகுமுக வகுப்பில் தான் பொன்னுச்சாமி சுய மைதுனத்தை எனக்கு அறிமுகப்படுத்தினான். அதுவரை ஏதுமறியாமல் தான் இருந்தேன். அவன் தான்

டேய் கையடிச்சிருக்கியாடா? “

அப்படின்னா? “

அட முட்டாக்இது தெரியாம என்னடா ஆம்பளை நீ..” என்று கேலியாகச் சிரித்துக் கொண்டே சொன்னான். அதன்பிறகு இப்படியிப்படிச் செய்ஞ்சுபாரு சொர்க்கமே தெரியுமென்று சொன்னான். அதன்பிறகு நானும் அதைப் பழகிக் கொண்டேன். பிறகு தான் தெரிந்த து. முக்கால்வாசிப்பையன்களின் பேச்சில் அதைப் பற்றிய உரையாடல் இருப்பதைக் கவனித்தேன். பொன்னுச்சாமி சாதாரணமாக ஒரு நாளைக்கு மூன்று முறைச் செய்வதாகச் சொன்னான். எனக்குப் பயமாக இருந்தது. ஒரு உடல் இன்னொரு உடலின் மீது இத்தனை கற்பனை வெறி கொள்ள முடியுமா?

எங்கள் தெருவில் அப்போது இளைஞர்களின் கூட்டம் முக்குக்கு முக்கு நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அவர்கள் வேறு ஒரு உலகத்தைக் காட்டினார்கள். கதிர், மணி, குமரேசன், இவர்களெல்லாரும் வேறு வேறு தெருக்களிலிருந்ததால் அவர்களைச் சந்திக்கமுடியாத நேரங்களில் தெருக்கூட்ட த்தில் கலந்து கொள்வேன். அப்போதெல்லாம் வீட்டிலிருப்பதை விட வெளியில் சுற்றுவது மிகவும் பிடித்த காரியமாக இருந்தது.

அப்போது தான் இளைஞர்கள் பெண்களைக் குறித்து எத்தனையெத்தனை அதீதப்புனைவுக்கதைகளைப் பேசுகிறார்களென்று தெரிந்தது. அப்போது அவர்றையெல்லாம் நானும் ரசித்தேன். பின்னால் தான் தெரிந்த து. இந்த அதீத மாயாஜாலக்கற்பனைகளைத் தான் ஆண்கள் தங்கள் இலட்சியமாக நினைக்கிறார்கள். அப்போதே சிலருக்குப் பெண்களின் தொடர்புமிருந்தது. முத்துப்பாண்டி சொன்னான்,

வயசுக்கு மூத்தவங்களோட படுத்தா காய்ச்சல் வருமாடா? “

தெரியலையே..”

எனக்கு வந்துருச்சிடா.. நான் வேண்டாம் வேண்டாங்கிறேன்.. அந்த அக்கா விடமாட்டேங்கிறா..”

என்று சொல்லும்போது எங்களுக்கு எச்சில் தானாக ஊறியது. இன்னொரு நாள் வேல்முருகன் ஒரு கதையைச் சொன்னான்.

 சிறுவயதிலிருந்தே லீவுக்கு அவன் மாமா வீட்டுக்குப் போவது வழக்கம். மூன்று வருடங்களுக்கு முன்னால் மாமாவின் மகள் ஆனந்தி பெரியவளாகி விட்டாள். அதனால் அம்மா அங்கே போக க் கூடாதென்று சொல்லிவிட்டாள். இந்த முறை வேறு ஒரு வேலையாக மதுரை போனபோது மாமாவின் மகளைக் கண்ணில் படவேயில்லை. அவன் மதியம் சாப்பிட்டுவிட்டு மாடியில் படுக்கப்போனான். அவன் படுத்துக் கொஞ்ச நேரமாகியிருக்கும். உறக்கத்தின் கதவுகளைச் சாவிபோட்டுத் திறந்து உள்ளே நுழைந்து கொண்டிருக்கும்போது அரூபமாய் அந்த அறைக்குள் யாரோ நடமாடுவதைப் போல உணர்ந்தான். ஒரு இனிப்பும் புளிப்பும் கலந்த வாசனையை அவனுடைய மூக்கு உணர்ந்தது. துணியின் சலசலப்புச் சத்தம் துல்லியமாகக் கேட்டது. அவன் முகத்தின் மீது மூச்சுக்காற்று பட்டது. சூடான மூச்சுக் காற்று. அவன் பட்டெனக் கண்களைத் திறந்தான்.

அருகில் அவனைத் தொடுவதைப் போல ஆன ந்தி நின்று கொண்டிருந்தாள். அவள் நெஞ்சு துடிக்கும் ஓசை துல்லியமாக க் கேட்ட து. அவன் கண்விழித்ததைப் பார்த்ததும் அவளுக்குக் குப்பென்று வியர்த்தது. அவன் எழுந்து உட்கார்ந்தான். அவள் அவனுடைய கையை எடுத்து மார்புப்பிளவில் வைத்துக் கொண்டாள்.

எனக்கு காய்ச்சல் அடிக்கிதான்னு பாருங்க..” என்றாள். முதன்முதலாக ஒரு பெண்ணின் மார்பில் கை பட்ட தும் உடலெங்கும் மின் அதிர்வு ஓடியது. அவனுக்குக் காய்ச்சல் வந்து விட்டது. அப்படியே அவளைக் கட்டியணைத்தான்.

இதைச் சொல்லும்போது வேல் முருகனின் முகத்தில் பெருமித உணர்வு தும்பி வழிந்த து.

அப்புறம் என்னாச்சு? “ என்று கேட்ட முத்துப்பாண்டியிடம்,

கோமதி கிட்டே போய்க் கேளுடா வெண்ணை..”

என்று சொன்ன வேல்முருகன் ஸ்டைலாகச் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான்.

இந்த உரையாடல்களெல்லாம் எல்லாருக்கும் பெண்ணுடல், செக்ஸ், பற்றிய கற்பனைகளை வளர்த்தது.

ஒருநாள் மாரியப்பன்,

டேய் கயத்தாறு வரைக்கும் வர்றியா? “ என்று கூப்பிட்டான்.

எதுக்குடா? “

வர்றதுன்னா வா.. போம்போது சொல்றேன்..” என்றான். நானும் பஸ் ஏறிவிட்டேன். போகும்போது தான் ஒரு பாலியல் தொழிலாளி வீட்டுக்குப் போவதாகச் சொன்னான். எனக்குப் பயம் வந்து விட்ட து. எனக்கு எப்போதுமே ரவுடி, கொலைகாரன், கொள்ளைக்காரன், பாலியல் தொழிலாளி இவர்களெல்லாம் பயங்கரமான ஆட்களென்று எண்ணமுண்டு.

முதல்ல சொல்லிருக்கலாம்ல.. நான் வந்துருக்கவே மாட்டேன்..”

இப்ப என்ன உன்னையா போச்சொல்றேன்.. சும்மா தொணைக்கு வா..”

என்று சொல்லிவிட்டு ஒரு இடைவெளி விட்டு,

ஆசை வந்தா நீயும் போ.. யாருக்கும் தெரியாது..”

    எனக்கு அவமானமாக இருந்தது. அவனுடைய பேச்சு அருவருப்பாய் இருந்தது. நேரம் ஆக ஆக சினிமா நடிகைகளின் படங்கள் கண்முன்னால் தோன்றி மறைந்தன. மெல்ல ஆசையின் முளை மனதில் முட்டிக் கொண்டிருந்தது.

    கயத்தாறில் இறங்கியதும் ஊருக்கு வெளியே அழைத்துப் போனான். நாலைந்து குடிசை வீடுகளும், இரண்டு ஓட்டுச்சாய்ப்பு வீடுகளும் தனித் தனியாக இருந்தன. முத்துப்பாண்டி ஒரு குடிசை வீட்டுக்குள் ஏதோ அந்த வீட்டுக்காரனைப் போல உள்ளே நுழைந்தான். நான் வாசலில் தயங்கி நின்றேன்.

    என்ன பட்டப்பகல்ல வந்திருக்கே..”

     இதுக்கெல்லாம் நேரம் காலம் வேணுமா..”

    நான் இப்பதான் கோவில்பட்டி போகலாம்னு கெளம்பிக்கிட்டிருக்கேன்..”

    ஒரு பத்து நிமிசத்தில என்ன ஆகப்போகுது? வாத்தா.. ரொம்பத்தான் கிராக்கி பண்றே..”

    உனக்கென்ன ஏறிட்டுப் போயிருவே.. நான்ல கெடந்து கஷ்டப்படணும்.. என் வீட்டுக்காரர் சாப்பிட வர்ற நேரம்..”

    இப்படிப் பேசிட்டுருக்கிற நேர த்தில சோலி பாத்துரலாம்..”

    நீ மட்டும் தானா? அந்தத் தம்பியும் உண்டா? “

    ஏன் வந்தா வேண்டாண்டுறுவியா.. உனக்கு வேண்டியது காசு தானே..”

    அதற்குப்பிறகு எந்தச் சத்தமுமில்லை. நான் வாசலுக்குச் சற்று தள்ளி நின்று கொண்டிருந்த இளம்வேப்பம் கன்றின் குறுநிழலில் நின்று கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் கழிந்திருக்குமென்று தெரியவில்லை. நான் வந்திருக்கவே கூடாது. இப்படி முட்டாள்த்தனமாக வந்து மாட்டிக் கொண்டேன். வெளியில் வெயில் தீயாய் எரிந்து கொண்டிருந்தது. சுற்றுமுற்றும் ஒரு சுடுகுஞ்சி கூட இல்லை. ஏதோ நிழலசைவு தெரியவே நான் திரும்பிப்பார்த்தேன். வேர்க்க விறுவிறுக்க முத்துப்பாண்டி சட்டையைப் போட்டுக் கொண்டே வெளியில் வந்தான்.

    என்னடா.. நீ போறியா? “

    நான் வேண்டாமென்று தலையாட்டிக் கொண்டே,

     சீக்கிரம் போவோம்..” என்றேன். முத்துப்பாண்டி கொஞ்சம் இடக்கான ஆள் தான்.  என்ன தோன்றியதோ தெரியவில்லை. பட்டென்று என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே குடிசைக்குள் போனான்.

    நான் என்னை விடுவிக்க மல்லுக் கட்டினேன். என்னைவிட வலிமையான அவனுடைய பிடியிலிருந்து விடுவிக்க முடியவில்லை.

    உள்ளே தள்ளினான். நான் இருளுக்குள் தட்டுத் தடுமாறி அந்தப் பெண்ணின் மீதே விழப்போனேன்.

    பழைய நைந்து போன பாயில் அந்தப் பெண் சேலையை இடுப்புவரை திரைத்துக் கொண்டு இரண்டு கால்களையும் விரித்துக் கொண்டு கிடந்தாள்.

    

எனக்கு
இருட்டிக் கொண்டு வந்தது. அடுத்த கணம் அங்கேயிருந்து பிச்சிப்பிடுங்கிக் கொண்டு ஓடினேன்.

( தொடரும் )