Showing posts with label pirithoru maranam. Show all posts
Showing posts with label pirithoru maranam. Show all posts

Saturday, 17 January 2026

கதைகளும் வாசகரின் பன்முகவாசிப்பும்

 சபரிநாதன்

பனுவல் வாசகர் மன்றம்



வணக்கம் ஐயா
தங்கள் பிறிதொரு மரணம் தொகுப்பை தற்போது பனுவல் மன்ற வாசகர்களோடு நானும் வாசித்துக் கொண்டிருக்கிறேன் ஐயா.
ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு களத்தில் படிக்கவும் சிறப்பாக இருக்கிறது. இலக்கியம் என்பது அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்லி விடல் கூடாது. வாசகர்களைச் சிந்திக்க வைப்பதைத் தான் நாம் இலக்கிய நூல் என்கிறோம்.
எனக்குச் சில சந்தேகங்கள் ஐயா,
ஒரு பிரிவுக் கவிதை கதையை அந்த இருட்டையும் வெளிச்சத்தையும் வைத்து அழகாக எழுதியிருந்தீர்கள் ஐயா. அந்தக் கதைக் களத்தைப் போலவே அவனையும் (சேது) யாரென்று தெளிவாகக் குறிப்பிடவில்லை, அது வாசகர்களாகிய நாங்கள் தேடிக் கண்டடைய வேண்டியது. என் அறிவிற்கு அவன் அவளுடைய காதலியாகத் தெரிகிறார். ஆனால் அவர்களின் காதலைச் சொல்லிக் கொள்ளவில்லை, இது சரியா ஐயா? இல்லை தாங்கள் வேறு கண்ணோட்டத்தில் எழுதினீர்களா?
இன்னுமொரு சந்தேகம் ஐயா, வெயில் கதையின் இறுதியில் சாவித்திரி சொல்லிவிட்ட இன்றளவு பொய்க்காகவும் அவன் கண்ணீர் விடுவது போல முடித்திருந்தீர்கள் ஐயா. அது என்ன பொய் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. இதை அறிந்தால் தான் கதையை முழுமையாக உணர்ந்த ஒரு திருப்தி கிடைக்கும் அதனாலேயே கேட்கிறேன் ஐயா.
இது போன்ற கேள்விகளுக்கு பதிலைக் கண்டடைவதிலேயே இலக்கியத்தின் சுவாரசியம் அமைந்திருக்கிறது. ஆனால் என் அறிவிற்கு சில பதில்கள் கிடைக்க மாட்டேன் என்கிறது ஐயா. தாங்களே பதில் கொடுத்தால் நன்றாக இருக்கும் ஐயா❤️
+++±++++++++++++±+
வணக்கம் சபரி.
1. இலக்கியமென்பதே உணரவைப்பது தான். எல்லாவற்றையும் வெளிப்படையாகவோ நேரிடைசொல்வதல்ல.
2. வாசகனின் கலையுணர்வையும், கூருர்ணவையும் ஒவ்வொரு படைப்பும் தூண்டி விடுகிறது. சிலசமயங்களில் அந்தக் கதையின் இடைவெளிகளை வாசகனே நிரப்பச் சொல்கிறது.
3. இதுவரை எழுதப்பட்ட கதைகளெல்லாம் யாரும் எழுதாத கதைகளோ, சொல்லாத கதைகளோ கிடையாது. அப்படியென்றால் கதை என்றால் என்ன? ஏன் எழுத வேண்டும்? என்ற கேள்விகள் வரலாம்.
4.வாழ்வெனும் வாணலியில் வெடிக்கும் கடுகு போன்ற நம் வாழ்வனுபவங்களை நுண்ணோக்கி கொண்டு எழுத்தாளர் காட்டுகிறார். அப்போது இதுவரை கண்ணுக்குத் தெரியாத, அல்லது முக்கியத்துவமில்லையென்று ஒதுக்கப்பட்ட கடுகின் பிரபஞ்சம் வாசகனுக்கு மட்டுமல்ல, எழுத்தாளனுக்கே கூடத் தெரிகிறது.
5. அந்தப் பிரபஞ்சத்தில் தான் மனிதர்களின் மேன்மை, கீழ்மை, நம்பிக்கை, அன்பு, நேசம், காதல், பெருந்தன்மை, குரூரம், குழப்பம் எல்லாம் ஸ்பாட் லைட் வெளிச்சத்தில் பூதாகாரமாய் தெரிகிறது.
6.அதைப் பார்க்கும் வாசகன் படைப்பின் உள்ளார்ந்த உணர்வைப் புரிந்து கொள்கிறான். அது தான் எழுத்தாளரின் நோக்கமும் கூட.
7. வெளிப்படையாக மற்றவர்கள் காதுகிழிய உரத்துக்கூவிச் சொல்வதற்கு இலக்கியம் தேவையில்லை. ஆனாலும் இலக்கியம் பிரச்சாரம் செய்யும். அதன் நுண்மையான கூறுகளின் வழியே மனித மனதில் பிரச்சாரம் செய்யும்.
8. மனித மனதை ஆராய்ந்து அது எப்படியெல்லாம் செயல்படுகிறதென்பதை சொல்லும். சில நேரங்களில் உரத்த குரலிலும் கூவும். தாங்க முடியாத வலி வரும்போது நாம் வாய்விட்டு கத்துவதில்லையா? அப்படித்தான்.
9. ஆனால் எல்லாக்கதைகளைக் குறித்தும் அதை எழுதியவர் விளக்கமளிக்க முடியாது அல்லது கூடாது. ஏனெனில் அப்படி அவர் கொடுக்கும் விளக்கம் வாசகனின் பன்முக வாசிப்பைக் குறுகலாக்கிவிடும்.
10.ஆசிரியரே சொல்லிவிட்டார் அப்படித்தானென்று சொல்லக்கூடாது. அவர் எழுதிய படைப்பு வாசகன் வாழும் காலம், அவனுடைய வாசிப்பனுபவம், அவனுடைய வர்க்கப்பின்னணி இவையெல்லாவற்றைப் பொறுத்து வெவ்வேறு அர்த்தம் தரும். .
11.ஒரு பிரிவுக்கவிதையில் உங்களுடைய கணிப்பு சரிதான். 1980-ல் எழுதப்பட்ட மூன்று அறிவுஜீவிகளுக்கிடையிலான உணர்ச்சிப் போராட்டம்.
12. வெயில் கதையும் அப்படித்தான். அந்த காலகட்டத்தில் ஒரு பெண்ணைப் பார்ப்பதோ, பேசுவதோ, அசாத்தியம். இப்போதே ஆணவப்படுகொலைகள் சாதாரணமாக நடந்து கொண்டிருக்கும்போது 45 ஆண்டுகளுக்கு முன்னால் எப்படியிருந்திருக்கும்? அதனால் பெண்கள் விரும்பினாலும் வெளிப்படுத்த மாட்டார்கள். பயத்தினால் பொய் சொல்வார்கள். வேலையில்லாத்திண்டாட்டம் தலைவிரித்தாடிய காலமது. வெயில் கதையும் அதைப் பற்றியது தான். அப்படியென்றால் சாவித்திரி என்ன சொல்லியிருப்பாளென்பது புரியும் தானே.
புத்தகத்தை ஆழ்ந்து வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றியும் அன்பும் சபரி.
தொடர்ந்து வாசியுங்கள்.