இந்திய
நாடோடிக்கதை 6
மாறாத
குணம்
ஆங்கிலம்
வ்ழி தமிழில் – உதயசங்கர்
அடர்ந்த காட்டு வழியே ஒரு வழிப்போக்கன் நடந்து போய்க் கொண்டிருந்தான். காட்டின் அந்தப்பக்கத்தில் அவனுடைய ஊர் இருந்தது. காட்டைச்
சுற்றிப் போகலாம். ஆனால் வெகுதூரம். காட்டு வழியே சென்றால் சீக்கிரம் சென்று விடலாம். ஆனால்
இந்தக் காட்டில் புலி, நரி, காட்டுநாய்,
கரடி, பாம்புகள், போன்ற விலங்குகளும் உண்டு. அதனால்
பயந்து கொண்டே தான் அந்த வழிப்போக்கன் சென்றான்.
ஒரு சிறிய சத்தம் கேட்டாலும் அவனுக்கு நடுக்கம் வ்ந்து விடும். காட்டில்
பாதிதூரம் வந்து விட்டான். ஒரு ஓடையைக் கடந்து விட்டால் அவ்வளவு பயம் இல்லை. அவன்
சீட்டியடித்துக்
கொண்டே நடந்தான். அப்போது திடீரென்று ஒரு உறுமல் சத்தம் கேட்டது.
அவன் அசையாமல் நின்றான்.
அது புலியின் உறுமல். மிக
அருகில் கேட்டது. அவ்வளவுதான். அந்த வழிப்போக்கன் பக்கத்திலிருந்த மரத்தின் மீது ஏறிக் கொண்டான். புலி
அந்த இடத்தைக் கடந்து போன பிறகு இறங்கிப் போகலாம் என்று நினைத்தான். புதருக்குள்ளிருந்து புலி மெல்ல நடந்து வந்தது. வரும்போது விடாமல் தொடர்ந்து உறுமிக்கொண்டு வந்தது. அருகில்
வர வர புலியின் சத்தம் ஊளையிடுவதைப் போல மாறியது. அப்போது தான் வழிப்போக்கன் கவனித்தான்.
புலி ஒரு காலைத் தூக்கியபடி நொண்டிக் கொண்டே வந்தது. வந்த
புலி தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்து,
“
நண்பா.. எனக்கு உதவி செய்.. காலில் தைத்திருக்கும் முள்ளை எடுத்து விடு..”
என்று கூறியது. வழிப்போக்கனுக்கு ஆச்சரியமாக
இருந்தது. அவனைப் பார்த்து விட்டுத்தான் புலி புதரிலிருந்து வெளியே வந்திருக்கிறது என்று புரிந்து கொண்டான். அவன் உடல் உதறத் தொடங்கியது.
“
உனக்கு எப்படி முள் தைத்தது ? “ என்று கேட்டான்.
“
இரண்டு நாட்களாகச் சாப்பிடவில்லை.. ஒரு கடமானைப் பார்த்தேன்.. அதைப் பிடிக்கப் பாய்ந்தபோது காலில் முள் ஆழமாகத் தைத்து விட்டது.. காலையிலிருந்து வலியுடன் அலைகிறேன். நீ கொஞ்சம் எடுத்து விடு உனக்கு நன்றியுடைவனாக. இருப்பேன் ”
என்றது புலி. வழிப்போக்கனுக்குப் பாவமாக இருந்தது. கீழே இறங்கி முள்ளை எடுத்து விடலாம் என்று நினைத்தான். அப்போது திடீரென்று ஞாபகம் வந்தது. இரண்டு
நாட்களாக சாப்பிடவில்லை என்று புலி சொன்னதே. உடனே எச்சரிக்கையாக,
“
உன்னைப் பார்த்தால் பாவமாகத் தான் இருக்கிறது.. ஆனால் நீ இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை என்று சொன்னாயே.. நான் முள்லை எடுத்ததும் என்னை நீ சாப்பிட்டு விட்டால்? “
என்றான் வழிப்போக்கன். உடனே அவசர அவசரமாக புலி,
“
அப்படியெல்லாம் செய்வேனா? எனக்கு உதவி செய்பவரைச் சாப்பிடுவேனா? தயவுசெய்து என்னை நம்பு.. “
என்று கதறியது. புலியின்
கண்களில் கண்ணீர் வழிந்தது. வழிப்போக்கன் புலியை நம்பினான். அவனுடைய பாட்டி சொன்ன கதைகளில் விலங்குகளுக்கு உதவி செய்தால் அவை மிகுந்த நன்றியுடன் இருக்கும் என்று காட்சிகள் வரும். அவனுக்கு
ஒரு கற்பனை தோன்றியது.
புலியின் காலிலுள்ள முள்ளை எடுத்ததும் புலி,
“
நான் உனக்கு அடிமை.. நீ என்ன சொல்கிறாயோ அதை நான் செய்கிறேன்..”
என்று சொல்லியது.
உடனே வழிப்போக்கன்,
“
என்னை உன் முதுகில் தூக்கிக் கொண்டு என் ஊருக்குக் கூட்டிக் கொண்டு போ..” என்று ஆணையிடுகிறான். உடனே புலி அவனைச் சுமந்து கொண்டு அவனுடைய ஊருக்குப் பாய்ந்து செல்கிறது.
புலியின் மீது உட்கார்ந்து வரும் அவனைப் பார்த்து ஊர் மக்கள் பயந்து ஓடுகிறார்கள். அவனுடைய மனைவி, குழந்தைகள்
ஆச்சரியத்துடன் வரவேற்கிறார்கள்.
இப்படியொரு காட்சி அவன் முன்னால் ஓடியது. உடனே
மரத்தை விட்டு இறங்கினான். புலி மல்லாக்கப் படுத்துக் கொண்டு காலைத் தூக்கிக் காட்டியது. வழிப்போக்கன் காலில் குத்தியிருந்த முள்ளை எடுத்தான். காலில் ரத்தம் வந்தது. புலி
அந்த ரத்தத்தை நக்கியது. பிறகு எழுந்து நின்றது.
வழிப்போக்கன் ஆவலுடன் புலியை பார்த்துக் கொண்டு நின்றான்.
“
நான் உன்னுடைய அடிமை..” என்ற வார்த்தைகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். புலி வாயைத் திறந்து உறுமியது.
“
நான் உன்னைச் சாப்பிடப்போகிறேன்..”
அவ்வளவுதான். வழிப்போக்கன் பயந்து அலறிக் கொண்டே,
“
ஏ புலியே.. உதவி செய்தவரைச் சாப்பிட மாட்டேன் என்று வாக்குக் கொடுத்தாயே..” என்று கத்தினான்.
புலி,
“
ஆமாம்.. உண்மை தான்.. ஆனால் என்னுடைய பசி அந்த வாக்குறுதியை விட வலிமையாக இருக்கிறதே.. என்ன செய்ய? “
என்று நிதானமாகச் சொல்லிக் கொண்டே முன்னால் வந்தது. . வழிப்போக்கன்
அந்த மரத்தின் பின்னால் ஓடினான். புலியும் பின்னால் பாய்ந்தது. மரத்தைச் சுற்றிச் சுற்றி இரண்டு பேரும் ஓடி ஓடிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்த வழியே ஒரு நரியும் கரடியும் வந்தன. புலி
மனிதனைத் தின்பதற்காகத் துரத்துவதைப் புரிந்து கொண்டன.
“
ஏ.. மனிதா.. என்ன நடந்தது? “ என்று கேட்டது நரி.
வழிப்போக்கன் நடந்ததைச் சொல்லி,
“ இது நியாயமா? வாக்குத் தவறலாமா? இதற்கு
நான் உதவியே செய்யாமல் இருந்திருப்பேனே..“
என்று
அழுதான். புலி அவன் மீது ஒரு கண்ணை வைத்துக் கொண்டு,
“ நண்பர்களே காட்டுவிலங்குகளின் குணம் தெரியாதா? அதுவும் நான் இரண்டு நாள் பட்டினி.. நீங்களும்
அவனைப் பிடிக்க உதவி செய்யுங்கள்.. உங்களுக்கும் பங்கு தருகிறேன்..”
என்றது.
அப்போது கரடி,
“ நீ சொல்வது சரிதான்.. ஆனால் உன்னைப் பார்த்துப் பயப்படுகிறானே.. நீ அதோ அங்கே கிடக்கும் சாக்குப்பைக்குள் போ.. நாங்கள் அவனைப் பிடித்து உள்ளே அனுப்புகிறோம்.. “
என்று
சொன்னது. உடனே புலி அங்கே கிடந்த ஒரு பெரிய சாக்குப்பைக்குள் நுழைந்தது.
அவ்வளவுதான்.
உடனே
நரியும் கரடியும் அந்தச் சாக்குப்பையை கயிற்றால் இறுகக்கட்டின கொண்டது. வழிப்போக்கனும் நரியும் கரடியும் சேர்ந்து புலியைத் தடிகளால் அடித்துக் கொன்றனர்.
வழிப்போக்கன்
நரிக்கும் கரடிக்கும் நன்றி சொன்னான்.
கரடி,
“ நன்றி எல்லாம் வேண்டாம்.. எங்கள் குணம் மாறுவதற்குள் இங்கிருந்து ஓடி விடு..”
என்று
சொன்னது.
அதன்பிறகு
அந்த வழிப்போக்கன் அங்கே நிற்பானா? என்ன?
நன்றி - புக் டே