Wednesday, 22 August 2012

டிட்வாலின் நாய்

 

சாதத் ஹசன் மண்ட்டோManto-02

ஆங்கிலத்தில்- காலித் ஹசன்

தமிழில்- உதயசங்கர்

ராணுவவீரர்கள் பல வாரங்களாகவே அரணாக அவரவர் நிலைகளில் இருந்தனர். ஆனால் ஒவ்வொருநாளும் சடங்குக்காக ஒரு டஜன் சுற்று பரஸ்பரம் சுட்டுக் கொள்வதைத் தவிர சண்டை என்று ஒன்றும் இல்லை. சீதோஷ்ண நிலை மிகவும் ரம்மியமாக இருந்தது. காட்டுமலர்களின் வாசனையால் காற்று நிரம்பிக் கனத்திருந்தது. இயற்கை தன் வழியே போய்க் கொண்டிருந்தது. படைவீரர்கள் பாறைகளுக்குப் பின்னே மலைத்தாவரங்களைச் சூடித் தங்களை உருமாற்றிக் கொண்டு ஒளிந்திருப்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பறவைகள் எப்போதும் போல பாடின. மலர்கள் பூத்துக் குலுங்கின. தேனீக்கள் சோம்பேறித்தனமாக இரைந்தன.

ஒரு குண்டு வெடிக்கும்போது தான் பறவைகள் திடுக்கிட்டு பறந்து செல்கின்றன. ஏதோ இசைக்கலைஞன் தன் வாத்தியத்தில் ஒரு அபஸ்வரத்தைத் தட்டியது போல. அது செப்டம்பர் மாதத்தின் கடைசி. வெப்பமாகவும் இல்லை. குளிர்ச்சியாகவும் இல்லை. அதைப் பார்க்கும்போது கோடைகாலமும் குளிர்காலமும் தங்களுக்குள் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டமாதிரி இருந்தது. நீலவானத்தில் பஞ்சுமேகங்கள் நாள் முழுவதும் ஏரியின் மீது மிதக்கும்படகுகளைப் போல மிதந்து கொண்டிருந்தன.

படைவீரர்கள் முடிவில்லாத, எதுவுமே பெரிதாய் ஒன்றும் நிகழாத இந்த யுத்தத்தினால் களைப்புற்றிருந்தனர். அவர்களுடைய நிலைகளை தாக்கி வெல்ல முடியாது. அந்த இரண்டு குன்றுகளும்- அதில் தான் அவர்கள் இருந்தனர் – எதிர் எதிராக இருந்தன. இரண்டும் ஒரே விதமான உயரம். அதனால் யாருக்கும் சாதகமில்லை. கீழே பள்ளத்தாக்கில் வேகமாகச் செல்லும் ஒரு ஓடை கற்படுக்கையின் மீது பாம்பைப் போல வளைந்து நெளிந்து சென்று கொண்டிருந்தது.

விமானப்படை இந்த யுத்தத்தில் ஈடுபடுத்தப்படவில்லை. இரண்டு தரப்பினரிடமும் பெரிய துப்பாக்கிகளோ, பீரங்கிகளோ இல்லை. இரவில் அவர்கள் பெரும் தீயை மூட்டுவார்கள். அந்தக் குன்றுகளில் எதிரொலித்து வரும் அவர்களின் குரலை ஒருவருக்கொருவர் கேட்பார்கள்.

இப்போது தான் கடைசிச் சுற்று தேநீர் முடிந்தது. நெருப்பு குளிர்ந்து விட்டது. வானம் தெளிந்து விட்டது. காற்றில் குளிர்ச்சி பரவியிருந்தது. கூரான, இனிய தேவதாரு மரக்காய்களின் மணம் வீசியது. படைவீரர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே உறங்கி விட்டனர். இரவுக் காவலரான ஜமேதார் ஹர்னாம்சிங் மட்டும் விழித்திருந்தார். இரண்டு மணியளவில் அவன் காவலை ஏற்றுக் கொள்ள காண்டாசிங்கை எழுப்பிவிட்டான். பிறகு அவன் படுத்துக் கொண்டான். ஆனால் தூக்கம் வானத்திலிருந்த நட்சத்திரங்களைப் போல அவன் கண்களிலிருந்து வெகுதூரத்திலிருந்தது. அவன் ஒரு பஞ்சாபிக் கிராமியப்பாடலை முணுமுணுக்கத் தொடங்கினான்.

“ ஒரு ஜோடி செருப்பு வாங்கி வா என் காதலா

நட்சத்திரங்கள் பதித்த ஒரு ஜோடி செருப்பு

வேண்டுமானால் நீ உன் எருமையை விற்றுவிடு

ஆனால் எனக்கு வாங்கி வா

நட்சத்திரங்கள் பதித்த ஒரு ஜோடி செருப்பு “

அந்தப் பாட்டு அவனை உணர்ச்சிவயப்படுத்தியது. உற்சாகத்தையும் தந்தது. அவன் ஒருவர் பின் ஒருவராக மற்றவர்களையும் எழுப்பினான். பாண்டாசிங் அங்கிருந்த படைவீரர்களில் இளமையானவன். இனிமையான குரலையுடையவன். “ஹீர் ரஞ்சா” பஞ்சாபி துயரக்காதல் காவியத்திலிருந்து ஒரு காதல் கவிதையைப் பாட ஆரம்பித்தான். ஒரு ஆழ்ந்த சோகம் அவர்கள் மீது கவிந்தது. அந்தச் சாம்பல் நிறக்குன்றுகள் கூட அந்தப் பாடலின் துயரத்தில் மூழ்கியது போல இருந்தது.

இந்த மனநிலையை ஒரு நாயின் குரைப்பொலி தகர்த்தது. ஜமேதார் ஹர்னாம்சிங்,

” எங்கேருந்து இந்தப் பொட்டைநாய்க்குட்டி முளைச்சி வந்தது…”

என்று சொன்னான். அந்த நாய் மீண்டும் குரைத்தது. அதன் சத்தம் மிக அருகில் கேட்டது. புதர்களில் சலசலப்பு தெரிந்தது. பாண்டாசிங் துப்பறிவதற்காக எழுந்து போனான். ஒரு சாதாரணக் கலப்பின நாயைக் கயிற்றில் கட்டி இழுத்து வந்தான். அது வாலை ஆட்டிக் கொண்டிருந்தது.

” நான் இதை புதர்களுக்குப் பின்னாலக் கண்டுபிடிச்சேன்.. அது எங்கிட்டே அதோட பேரு ஜுன் ஜுன்னு சொல்லிச்சு”

என்று பாண்டாசிங் சொன்னான். எல்லோரும் வெடித்துச் சிரித்தனர்.

அந்த நாய் ஹர்னாம்சிங்கிடம் சென்றது. அவன் அவனுடைய சாமான்பையிலிருந்து பிஸ்கட்டை எடுத்துத் தரையில் எறிந்தான். அந்த நாய் அதை மோந்து பார்த்தது. பின்னர் அதைச் சாப்பிடப்போகும் போது ஹர்னாம்சிங் அதைத் தட்டிப் பறித்தான்.

” நில்லு.. நீ ஒரு பாகிஸ்தான் நாயா இருந்தா..”

அவர்கள் எல்லோரும் சிரித்தனர். பாண்டாசிங் அந்த மிருகத்தைத் தட்டிக் கொடுத்தான். பின்னர் ஹர்னாம்சிங்கிடம்,

” ஜமேதார் சாகிப்.. ஜுன் ஜுன் ஒரு இந்திய நாய்..”

என்று சொன்னான்.

” நீ உன் அடையாளத்தை நிருபிச்சுக் காட்டு..”

ஹர்னாம்சிங் அந்த நாய்க்கு ஆணையிட்டான். அது தன்னுடைய வாலை ஆட்ட ஆரம்பித்தது.

” இது அத்தாட்சியில்லை.. எல்லாநாயும் தான் வாலை ஆட்டும்..”

என்று ஹர்னாம்சிங் சொன்னான். பாண்டாசிங்,

” அவன் பாவம் ஒரு அகதி “

என்று நாயின் வாலோடு விளையாடிக் கொண்டே சொன்னான். ஹர்னாம்சிங் ஒரு பிஸ்கட்டை அந்த நாயிடம் எறிந்தான். அதைக் காற்றிலேயேக் கவ்விக் கொண்டது.

“ நாய்கள் கூட இப்போ அவங்க இந்தியரா பாகிஸ்தானியான்னு முடிவு செய்ஞ்சுக்கணும்..”

என்று படைவீரர்களில் ஒருவன் குறிப்பிட்டான். ஹர்னாம்சிங் தன்னுடைய சாமான் பையிலிருந்து இன்னொரு பிஸ்கட்டை எடுத்தான்.

“ எல்லா பாகிஸ்தானியரும் நாய்கள் உட்பட சுடப் படுவார்கள்..”

என்று சொன்னான். உடனே ஒரு படைவீரன்,

” இந்தியா ஜிந்தாபாத்..”

என்று கத்தினான். அந்த நாய் பிஸ்கட்டை கடிக்கப்போனது அப்படியே நின்று விட்டது. தன்னுடைய வாலை கால்களுக்கிடையில் நுழைத்துக் கொண்டு பயந்துபோய் நின்றது. ஹர்னாம்சிங் சிரித்தான்.

” நீ ஏன் உன்னோட சொந்த நாட்டைப்பார்த்துப் பயப்படுறே…? இங்க பாரு ஜுன் ஜுன் இந்தா இன்னொரு பிஸ்கட்..”

திடுதிப்பென்று காலைப் பொழுதின் வெளிச்சம் யாரோ இருட்டறையில் விளக்கைப் போட்டதைப் போல பரவியது. அது டிட்வால் என்றழைக்கப்பட்ட அந்தப் பிரதேசத்தின் குன்றுகள் மீதும் பள்ளத்தாக்குகளிலும் படர்ந்தது.

யுத்தம் பல மாதங்களாகத் தொடர்ந்து கொண்டேயிருந்தது. யார் வெற்றி பெறுவார்கள் என்று யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.

ஜமேதார் ஹர்னாம்சிங் அவனுடைய பைனாகுலர் வழியாக அந்தப் பகுதியை ஆராய்ந்து கொண்டிருந்தான். எதிர்புறமாக இருந்த குன்றிலிருந்து புகை எழுந்து வந்ததைப் பார்க்க முடிந்தது. அப்படியென்றால் இவர்களைப் போலவே எதிரியும் காலையுணவைத் தயாரிப்பதில் சுறுசுறுப்பாக இருக்கிறான்.

பாகிஸ்தான் ராணுவத்தின் சுபேதார் ஹிம்மத்கான் அவனுடைய பெரிய மீசையை ஒரு முறை முறுக்கி விட்டுக் கொண்டே டிட்வால் பகுதியின் வரைபடத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் அவனுடைய வயர்லெஸ் ஆபரேட்டர் அந்தப் படைப்பிரிவுக் கமாண்டரிடமிருந்து உத்தரவுகளைப் பெறுவதற்காகத் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான். சில அடி தூரத்தில் பஷீர் என்ற படைவீரன் பாறையில் சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்திருந்தான். அவனுடைய துப்பாக்கி அவனுக்கு முன்னால் கிடந்தது.

“ எங்கே கழித்தாய் இரவை என் அன்பே! என் நிலவே! எங்கே கழித்தாய் இரவை! “

என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தான். பாடலில் சந்தோஷமடைந்த அவன் இன்னும் சத்தமாக வார்த்தைகளை ரசித்துப் பாட ஆரம்பித்தான். திடீரென அவன் சுபேதார் ஹிம்மத்கானின் அலறலைக் கேட்டான்.

” எங்கே கழித்தாய் இந்த இரவை?”

ஆனால் இது பஷீரைப் பார்த்தல்ல. அவன் கத்தியது ஒரு நாயைப் பார்த்து. சிலநாட்களுக்கு முன்பு அது எங்கிருந்தோ அவர்களிடம் வந்து சேர்ந்தது. அந்த முகாமில் சந்தோஷமாகத் தங்கியிருந்தது. திடீரென நேற்று இரவு காணாமல் போய் விட்டது. ஆனால் இப்போது அது செல்லாத காசைப் போலத் திரும்பி வந்து விட்டது.

பஷீர் புன்னகைத்தான். அந்த நாயைப் பார்த்துப் பாட ஆரம்பித்தான்.

” எங்கே கழித்தாய் இந்த இரவை

எங்கே கழித்தாய் இந்த இரவை? “

ஆனால் நாய் வாலை மட்டும் ஆட்டியது. சுபேதார் ஹிம்மத்கான் ஒரு மிட்டாயை அதனிடம் வீசியபடியே,

” அதுக்குத் தெரிந்ததெல்லாம் வாலை ஆட்டறது மட்டும் தான்..முட்டாள்..”

என்று சொன்னான். அப்போது பஷீர்,

” அது கழுத்தில என்ன சுத்தியிருக்கு..?”

என்று கேட்டான். படைவீரர்களில் ஒருவன் அந்த நாயைப் பற்ரி இழுத்தான். கழுத்தில் கிடந்த கயிற்றுப்பட்டியைக் கழட்டினான். அதில் ஒரு சிறிய அட்டை கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது.

” என்ன சொல்லுது அது..”

என்று வாசிக்கத் தெரியாத அந்தப் படைவீரன் கேட்டான். பஷீர் முன்னால் வந்து கொஞ்சம் கஷ்டப்பட்டு எழுதியிருப்பதைக் கண்டுபிடித்தான்.

” அது ஜுன் ஜுன்னு சொல்லுது..”

சுபேதார் ஹிம்மத்கான் தன்னுடைய புகழ் வாய்ந்த மீசையை இன்னுமொரு தடவை திருகி விட்டுக் கொண்டே,

” பஷீரேய்..! அது ரகசிய வார்த்தை.. வேற எதாச்சும் சொல்லுதா..?”

என்று கேட்டான்.

” ஆமாம் சார்.. அது ஒரு இந்திய நாய்ன்னு சொல்லுது..”

உடனே சுபேதார் ஹிம்மத்கான்,

” அப்படின்னா என்ன அர்த்தம்? “

என்று கேட்டான். பஷீர் தீவிரமாக,

” ஆனால் அது ரகசியம்..”

என்று பதிலளித்தான்.

” அப்படி ரகசியம் இருந்தா அது ஜுன் ஜுன்கிற வார்த்தையில தான் இருக்கும்..”

என்று இன்னொரு படைவீரன் தன்னுடைய புத்திசாலித்தனமான யூகத்தைத் துணிந்து வெளிப்படுத்தினான்.

சுபேதார் ஹிம்மத்கானும்,

” ஏதாச்சும் இருக்கலாம்.. அதிலே..”

என்று குறிப்பிட்டான். கடமையுணர்வுடன் பஷீர் மீண்டும் அதை முழுவதுமாக வாசித்தான்.

” ஜுன் ஜுன் இது ஒரு இந்திய நாய்..”

சுபேதார் ஹிம்மத்கான் வயர்லெஸ் போனை எடுத்தான். அவனுடைய படைப்பிரிவு கமாண்டரிடம் அவர்களுடைய முகாமில் நாய் திடீரெனத் தோன்றியது, முந்திய இரவில் மறைந்து போனது, மறுபடியும் இன்று காலையில் திரும்பியது என்று விவரமாகச் சொன்னான். படைப்பிரிவு கமாண்டர்,

” நீ என்ன பேசிக்கிட்டிருக்கே. .”

என்று கேட்டார்.

சுபேதார் ஹிம்மத்கான் மீண்டும் அந்த வரைபடத்தை ஆராய்ந்தான். அவன் ஒரு சிகரெட் பாக்கெட் அட்டையைக் கிழித்தான். அதிலிருந்து ஒரு சிறிய துண்டை எடுத்து பஷீரிடம் கொடுத்து,

” இப்ப இதில குர்முகியில.. அதான் அந்தச் சீக்கியர்களோட பாஷையில எழுது..”

என்று சொன்னான்.

” நான் என்ன எழுதணும்..?”

”ம்ம்…..நல்லது…”

திடீரென பஷீருக்கு ஒரு ஆவேசம் தோன்றியது.

” சுன் சுன் ஆமாம் அது தான் சரி.. நாம ஜுன் ஜுன்னை சுன் சுன்னால எதிர்ப்போம்..”

சுபேதார் ஹிம்மத்கானும் அதை ஆமோதிக்கிற மாதிரி,

” பிரமாதம்.. அதோட இதையும் சேத்துக்கொ.. இது ஒரு பாகிஸ்தானிய நாய்..”

என்று சொன்னான். அவனே நாயின் கழுத்துப்பட்டியில், எழுதிய அந்தக் காகிதத்தைத் திணித்து,

” இப்ப போய் உன்னோட குடும்பத்தோட சேந்துக்கோ..”

அவன் அதற்கு சாப்பிட ஏதோ கொடுத்தான். பிறகு,

” இங்க பாரு நண்பா.. நம்பிக்கைத் துரோகம் கூடாது.. நம்பிக்கைத் துரோகத்துக்குத் தண்டனை மரணம் தான்..”

என்று சொன்னான்.

அந்த நாய் வாலை ஆட்டிக் கொண்டே அதனுடைய உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. பிறகு சுபேதார் ஹிம்மத்கான் அந்த நாயை இந்திய நிலையைப் பார்த்த மாதிரி திருப்பி,

” போ..இந்தச் செய்தியை எதிரிட்ட கொண்டு போ.. ஆனால் திரும்பி வரணும்.. இது உன்னோட கமாண்டரின் கட்டளை..”

என்று சொன்னான். நாய் வாலை ஆட்டியபடியே அந்த இரண்டு குன்றுகளுக்கு நடுவேயுள்ள பள்ளத்தாக்கிற்குச் செல்லும் வளைந்த மலைப்பாதை வழியே கீழே இறங்கியது. சுபேதார் ஹிம்மத்கான் அவனுடைய துப்பாக்கியை எடுத்து காற்றில் சுட்டான்.

பகலில் இந்த மாதிரி விஷயங்களுக்கு இது கொஞ்சம் சீக்கிரம் என்று இந்தியர்கள் குழப்பமடைந்தனர். ஏற்கனவே சலிப்பில் இருந்த ஜமேதார் ஹர்னாம்சிங் கத்தினான்.

“ நாம அவங்களுக்குத் திருப்பிக் கொடுப்போம்..”

இரண்டு பக்கமும் ஒரு அரை மணி நேரத்துக்கு துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டனர். உண்மையில் அது முழுவதுமே காலவிரயம்தான். கடைசியில் ஜமேதார் ஹர்னாம்சிங் கொடுத்தவரை போதும் என்று கட்டளையிட்டான். அவன் அவனுடைய நீளமான தலைமுடியைச் சீவினான். கண்ணாடியில் அவனைப் பார்த்துக்கொண்டே, பாண்டாசிங்கிடம்,

“ எங்கே போச்சு..அந்த நாய்..ஜுன் ஜுன் “

என்று கேட்டான். அதற்கு பாண்டாசிங்,

” நாய்கள் எப்போதுமே வெண்ணெயைச் சீரணிப்பதில்லைன்னு....பழமொழி இருக்கே..”

என்று தத்துவார்த்தமாகச் சொன்னான். திடீரென கண்காணிப்புப் பணியிலிருந்த படைவீரன்,

“ அதோ அந்த நாய் வருது..” என்று கத்தினான்.

ஹர்னாம்சிங், “ யாரு ?” என்று கேட்டான். அதற்கு அந்தப் படைவீரன்,

” அது பேரென்ன? ஜுன் ஜுன்..”

என்று பதில் சொன்னான். உடனே ஹர்னாம்சிங்,

” அது என்ன செய்யுது..”

என்று கேட்டான். அந்தப்படைவீரன் பைனாகுலர் வழியே கூர்ந்து பார்த்துக் கொண்டே,

” அது நம்மைப் பாத்து வருது..”

என்று பதில் சொன்னான். ஜமேதார் ஹர்னாம்சிங் அவனிமிருந்து பைனாகுலரைப் பறித்து அதன் வழியே பார்த்துக் கொண்டே,

“ அது தான்.. அது கழுத்தில ஏதோ சுத்தியிருக்கே.. இரு..இரு.. அது பாகிஸ்தான் மலையிலிருந்து வருதே..ஙொத்தாலோக்க..”

என்று சொன்னான். அவன் அவனுடைய துப்பாக்கியை எடுத்து குறி பார்த்துச் சுட்டான். துப்பாக்கிக்குண்டு அந்த நாய் எங்கிருந்ததோ அதற்கு அருகில் எங்கோ பாறையில் பட்டுத் தெறித்தது. அந்த நாய் நின்று விட்டது.

சுபேதார் ஹிம்மத்கான் இந்தச் சத்தத்தைக் கேட்டதும் அவனுடைய பைனாகுலர் வழியே பார்த்தான். அந்த நாய் ஒரு சுற்று சுற்றித் திரும்பி வந்த வழியே திரும்பியது.

” தைரியசாலி யுத்தகளத்தை விட்டு ஓட மாட்டான்.. முன்னேறிப்போ.. உன் வேலையை முடி “

என்று அந்த நாயைப் பார்த்து அவன் கத்தினான். அதைப் பயமுறுத்த பொதுவான திசையில் துப்பாக்கியால் சுட்டான். அதேநேரம் ஹர்னாம்சிங்கும் சுட்டான். அந்த நாய்க்கு சில அங்குல தூரத்தில் குண்டு பாய்ந்து சென்றது. காதுகளை படபடவென அடித்துக் கொண்டு காற்றில் துள்ளி விழுந்தது. சுபேதார் ஹிம்மத்கான் மறுபடியும் சுட்டான். சில கற்களில் பட்டுச் சிதறியது.

அது மிக விரைவில் அந்த இரண்டு படைவீரர்களுக்கான விளையாட்டாக மாறி விட்டது. உயிர் பயத்தில் நாய் சுற்றிச் சுற்றி வட்டமடித்துக் கொண்டேயிருந்தது. ஹிம்மத்கானும், ஹர்னாம்சிங்கும் பயங்கரமாகச் சிரித்தனர். அந்த நாய் ஹர்னாம்சிங்கை நோக்கி ஓடத் தொடங்கியது. அவன் சத்தமாக அதை வைதுகொண்டே சுட்டான். துப்பாக்கிக் குண்டு நாயின் காலில் பாய்ந்தது. அது ஊளையிட்டது. திரும்பி ஹிம்மத்கானை நோக்கி ஓடத் தொடங்கியது. அதைப் பயமுறுத்துவதற்காகச் சுடப்பட்ட குண்டுகளைத் தான் அங்கேயும் சந்திக்க வேண்டியிருந்தது.

” தைரியமான பையனாய் இரு.. உனக்குக் காயம் பட்டாலும் உனக்கும் உன் கடமைக்குமான இடைவெளியிலிருந்து அசையாதே… போ…போ…போ…”

என்று பாகிஸ்தானி கத்தினான்.

நாய் திரும்பியது. அதன் ஒரு கால் இப்போது சுத்தமாய் உபயோகமில்லாமல் ஆகி விட்டது. அது காலை இழுத்துக் கொண்டு ஹர்னாம்சிங்கை நோக்கி நகர்ந்தது. அவன் தன்னுடைய துப்பாக்கியை எடுத்துக் கவனமாகக் குறி பார்த்துச் சுட்டுக் கொன்றான்.

சுபேதார் ஹிம்மத்கான் பெருமூச்சு விட்டுக் கொண்டே,

” பாவம் அந்தப் பயல் தியாகியாகி விட்டான்..”

என்று சொன்னான். ஜமேதார் ஹர்னாம்சிங் இன்னமும் சூடாக இருக்கும் அவனுடைய துப்பாக்கியின் குழலைத் தடவிக்கொடுத்துக் கொண்டே,

” அது ஒரு நாயைப் போலச் செத்தது..”

என்று முணுமுணுத்தான்.

நன்றி- தி எண்ட் ஆஃப் கிங்டம் அண்டு அதர் ஸ்டோரிஸ்.

நன்றி- மலைகள் இணைய இதழ்

Tuesday, 21 August 2012

தீட்டு, தீண்டாமை, விலக்குதல்…….

 

உதயசங்கர்

Mohan Das (99)

இந்திய சமூகத்தின் நடைமுறை வாழ்வில், தீட்டு, தீண்டாமை, விலக்குதல், இந்த மூன்று செயல்களும் மிக முக்கியமானவையாகக் கடைப்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எந்தக் கேள்வியுமின்றி, எந்த விமர்சனப்பார்வையுமின்றி இவற்றை மக்கள் மனதார ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இதை பண்பாட்டு விழுமியங்களாக, பாரம்பரிய உன்னதங்களாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள். அதனால் தான் சாதாரண மக்களே,

“ அதுக்காக நம்ம பாரம்பரியத்தை, பழக்க வழக்கத்தை சம்பிரதாயத்தை விட்டுர முடியுமா? “

“ தீட்டுக் கழியாம எங்கேயும் போகக் கூடாது..”

“ அதைத் தொடாதே.. தீட்டாயிரும்..”

என்று சொல்வதைக் கேட்க முடிகிறது. அது மட்டுமல்ல. ஜனநாயகஎண்ணம் கொண்டவர்களுக்குக் கூட இந்த கொடிய நடைமுறைகள் கண்ணை உறுத்துவதில்லை. அநுதாபமும், பரிதாபமும், உதவியும் செய்தால் போதுமானது என்ற சிந்தனை வருகிறது. ஒட்டு மொத்தமாக இந்த நடைமுறைகளை ஒழிப்பதற்கான செயல் திட்டம் பண்பாட்டுத் தளத்தில் துவங்கப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு முதலில் பிராமணியமும், மனுதர்மமும் எப்படி தீட்டை, தீண்டாமையை, விலக்குதலை, மக்கள் மனதில் தந்திரமாகப் புகுத்தியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இவற்றின் உள்ளார்ந்த தத்துவம் என்ன? என்பதையும் அந்தத் தத்துவத்தின் நடைமுறைகள் என்ன? என்பதைக் குறித்தும் புரிந்து கொண்டால் தான் பண்பாட்டுத் தளத்தில் அதை எதிர் கொள்வதற்கான புதிய பண்பாட்டு ஆயுதங்களை உருவாக்கமுடியும்.

விலக்குதல், தீட்டு, தீண்டாமை, என்ற வார்த்தைகள் மேலோட்டமாகப் பார்க்க ஒரே அர்த்தமுள்ளவை போலத் தோன்றினாலும் அடிப்படையில் மிக ஆழமான வேறுபாடுகளைக் கொண்டவை. பெரும்பாலும் தங்களுடைய தொடர்பெல்லைக்கு வெளியே நிறுத்துதல் என்ற அளவில் இந்த மூன்று செயல்களும் ஒரே மாதிரியான அர்த்தம் தருவதாகக் கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் அடிப்படை வாழ்வாதாரமான உடல், உணவு, உடை, உறைவிடம், தான். ஆனால் விலக்குதலும், தீட்டும், தற்காலிகமானவை. நடைமுறையில் எல்லோர் வாழ்விலும் இந்தத் தீட்டும், விலக்குதலும், அவர்களுடைய வாழ்வனுபங்களூடாக நடக்கின்றன. தலித்துகள் உட்பட எல்லோரும் இதைக் கடைப்பிடிக்கின்றனர்.

விலக்குதலை மிகச் சாதாரணமாக, சுய காரணங்களாக, எனக்குக் கத்தரிக்காய் பிடிக்காது, எனக்கு முட்டை பிடிக்காது, சாப்பிட்டால் ஒவ்வாமை வந்து விடும். உடல் நலம் கெட்டுவிடும் அவரைப் பிடிக்காது, இவரைப்பிடிக்காது பச்சை நிறம் பிடிக்காது இன்ன பிற விஷயங்களைச் சொல்லலாமென்றால் சமூகக் காரணங்களாக ஊர் விலக்கம், சாதி விலக்கம், வீட்டு விலக்கம் என்று சொல்லலாம். சுயகாரணங்கள் ஒவ்வொரு தனிநபரைப் பொறுத்தும் மாறிக் கொண்டேயிருக்கும். ஒவ்வொருவருடைய விருப்பு வெறுப்புகளைப் பொறுத்தும் வேறு வேறு பொருட்கள், வேறு வேறு நபர்கள், வேறு வேறு விஷயங்கள் என்று மாறிக் கொண்டேயிருக்கும். அதே போல சாதி விலக்கம், ஊர் விலக்கம், வீட்டு விலக்கமும் ஒரு இனக்குழு அல்லது சாதியின் எழுதப்படாத விதிமுறைகளைப் பின்பற்றாததற்கான தண்டனையாக அந்த இனக்குழு அல்லது சாதியின் கூட்டுச் சமூகம் எடுக்கிற முடிவுப்படி ஒரு தனி நபர் அல்லது ஒரு குடும்பம் அந்த இனக்குழு அல்லது சாதியிலிருந்து விலக்கப்படும். ஆனால் இதில் மிக முக்கியமான விஷயம் விலக்கப்பட்ட அந்தத் தனிநபர் அல்லது குடும்பம் மீண்டும் அந்த இனக்குழு அல்லது சாதியில் மீண்டும் சேருவதற்குப் பரிகாரம் உண்டு. அதை அந்த இனக்குழு அல்லது சாதியின் கூட்டுச் சமூகமே பரிகாரத்தைச் சொல்லிவிடும். பரிகாரம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இதே மாதிரி தான் ஊர் விலக்கமும், வீட்டு விலக்கமும். இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் விலக்குதலுக்கு பரிகாரம் இருக்கிறது என்பதும் அதைச் செய்தால் மீண்டும் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பது தான். விலக்குதல் சேர்த்தலையும் இணைத்தபடியே தான் வருகிறது. இதையும் தீண்டாமை என்று சொல்லலாமென்றால் அது தற்காலிகமானது என்பது மட்டுமல்ல அதில் தீண்டுதலுக்கான நடைமுறையும் இருக்கிறது.

மனிதனின் பிறப்பு, இறப்பு, பூப்படைதல், பெண்களின் மாதவிடாய் நாட்கள், போன்றவற்றை தீட்டாக கற்பித்து வந்திருக்கிறார்கள். இதெல்லாவற்றுக்கும் அசுத்தம் எதிர்வு தூய்மை என்ற கருதுகோளை முன்வைத்தும், அசுத்தமான இடங்களில் தான் ஆவிகள் நடமாடும் என்ற கற்பிதத்தின் அடிப்படையிலும் தீட்டைக் கடைப்பிடிக்கிறார்கள். குழந்தை பிறந்த வீடென்றால் பதினாறு நாட்கள் கழித்து தாயையும், குழந்தையும் வீட்டோடு சேர்க்க ‘ வீடு சேர்த்தல் ‘ என்ற சடங்கை நிகழ்த்துகிறார்கள். அன்றிலிருந்து வீட்டுக்குள் தாயும் குழந்தையும் சேர்க்கப்பட்டு அன்றாட நடைமுறை வாழ்வில் இணைகிறார்கள். அவர்கள் இப்போது வெளியே வரலாம். எல்லோருடனும் கலந்து பழகலாம். அது வரை அவர்கள் தீட்டானவர்கள். தீண்டத்தகாதவர்கள். ஆக பிள்ளை பிறந்தவீட்டுத் தீட்டு ஒரு சடங்கின் ( பரிகாரம் ) மூலம் கழிக்கப்படுகிறது.

பெண் பூப்படைதலும் தீட்டு. அவளைத் தனியே வீட்டு முற்றத்திலோ, தனிக்குடிலிலோ, தனிமைப்படுத்தி வெளியுலகிலிருந்து விலக்கி வைத்து, தலைக்குத் தண்ணீர் ஊற்றினாலும், புண்ணியார்த்தனம் என்ற சடங்கை ( பரிகாரம் ) ஒரு பிராமணர் வந்து செய்த பிறகே அந்தத் தீட்டு கழிகிறது. தீட்டுக் கழிந்த பின்னே அந்தப்பெண் வெளியுலகோடு கலந்து பழகலாம். அது வரை இருந்த தற்காலிகத் தீண்டாமை மாறி தீண்டுதலுக்கான நடைமுறை வந்து விடுகிறது. அதன் பிறகும் அது தொடர்கிறது என்பது பெரிய கொடுமை. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நாட்களில் பெண் தனிமைப்படுத்தப் படுவதும், மூன்று நாட்களோ ஐந்து நாட்களோ கழிந்து அவள் குளித்தபிறகு தான் வீட்டுக்குள் மற்ற பொருட்களைத் தீண்ட அநுமதிக்கப்படுவாள். அது வரை அவளுக்குத் தனித் தட்டு, தம்ளர், படுக்கை, உடை, உறைவிடம். வயதாகி மாதவிடாய் நிற்கும்வரை அந்தப் பெண் இந்தத் தற்காலிகத் தீண்டாமையிலிருந்து தப்பமுடியாது. ( இப்போது நகரங்களில் நவீன வாழ்வின் பல காரணிகளால் இந்தப் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது ) இங்கேயும் தீண்டாமை தற்காலிகமானது. தீண்டப்படுவதற்கான பரிகாரத்தையும் கொண்டிருக்கிறது.

இறப்பு வீட்டிலும் பதினாறாவது நாள் விஷேசம் முடியும் வரை அந்த வீடும் அந்த வீட்டிலுள்ள உறுப்பினர்களும் தீட்டாகவேக் கருதப்படுகிறார்கள். கருமாதி விஷேசம் ( பரிகாரம்) முடிந்ததும் அந்த வீடும், வீட்டிலுள்ளவர்களும் தீட்டுக் கழிந்தவர்களாகி விடுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் மற்றவர்களைத் தீண்டுவதோ மற்றவர்கள் அவர்களைத் தீண்டுவதோ தீட்டாகாது. இதுவும் தற்காலிகமான தீண்டாமை தான்.

மேலே குறிப்பிட்ட தீட்டு குறித்த முக்கியமான நிகழ்வுகளில் தற்காலிக தீட்டினால் விலக்கப்பட்ட மனிதர்களை, பொருட்களை, தீட்டு கழியுமுன்பே தீண்டிவிட்டால் தீண்டியவர் தன்னுடைய உடலைக் கழுவிச்( குளித்து) சுத்தம் செய்வதன் மூலம் உடனே அந்தத் தீட்டைக் கழித்து விடலாம். தீட்டினால் விலக்கப்பட்டவர்கள் தான் தீட்டு கழிவதற்காகக் குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து சடங்கு நடத்திய பின்பே மற்றவர்களைத் தீண்ட முடியும். ஆனால் மற்றவர்களுக்கு அது தேவையில்லை. தீட்டுக்காரரைத் தொட்ட தீட்டை குளித்தால் போக்கி விடலாம். தீட்டு நிகழ்வுகள் நடைபெற்ற வீட்டுக்காரர்கள் சில நாட்கள் தீண்டத் தகாதவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களைத் தீண்டியவர்கள் சிறிது நேரத்துக்கு தீண்டத் தகாதவர்களாக இருந்து உடனே குளித்து தன் தீண்டாமையைப் போக்கிக் கொள்ளலாம்.

இப்படிச் சில நாட்கள், சிறிது நேரம் தீண்டத் தகாதவர்களாக, மற்றவர்களிடமிருந்து விலக்கப்பட்டவர்கள், விலக்கப்பட்ட பொருட்கள், விலக்கப்பட்ட இடம், சில சடங்குகளைச் செய்வதன் மூலம் மீண்டும் தீண்டத்தக்கவர்களாக மாறுகிறார்கள். இப்படி தன் வாழ்நாள் முழுவதும் பிறப்பு, சாவு, பூப்படைதல், மாதவிடாய் காலம், என்று மாறி மாறி தற்காலிகமாகத் தீண்டத்தகாதவர்களாகவும், பரிகாரங்களுக்குப்பின் தீண்டத்தக்கவர்களாகவும் நிலை மாறிக் கொண்டேயிருக்க வைப்பதன் மூலம் பிராமணியம் தீண்டாமை என்ற வருணாசிரமத்தின் இழிவான நடைமுறையை எல்லோரையும் பின்பற்ற வைத்துள்ளது. இது தான் பிராமணியத்தின் இழிவான தந்திரம்.

நடைமுறையில் எல்லாசாதியினரும் தங்கள் வாழ்நாளில் சில காலம் தீட்டினால் தீண்டத் தகாதவர்களாக இருப்பதனால் தீண்டாமைக்கு அவர்களுடைய மனம் வசமாகிவிட்டது. அதை இயல்பாகப் பார்க்கும் மனநிலை உருவாகிறது. சாதியப்படிநிலையை ஏற்றுக் கொள்ள வைத்ததன் மூலம் வருணாசிரமப்படிநிலையில் கீழ் நிலையில் இருக்கும் தலித்துகளை தீண்டத்தகாதவர்களாக வைத்திருப்பதை எந்தக் கேள்வியும் இன்றி உறுதிப்படுத்தும் நடைமுறை உருவாகிறது. தலித் மக்களின் எழுச்சியை, விழிப்புணர்வைச் சகிக்க முடியாத மனநிலை பிராமணியத்தால் சமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இந்தச் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயம், தீட்டு எல்லாம் பயன்படுகிறது. பண்பாட்டுத் தளத்தில் முற்போக்கு எண்ணம் கொண்ட எல்லோரும் குறிப்பாக இடது சாரிகள் இந்தச் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயங்களுக்கு எதிராக சமரசமில்லாத யுத்தம் தொடுக்க வேண்டிய காலம் இது.

புகைப்படம் – மோகன்தாஸ் வடகரா

Monday, 20 August 2012

காத்திருத்தல்

Modern Art101

நீ எனக்காகக் காத்திருக்க வேண்டாம்

உன் வழியில் நீ சென்று விடு

காத்திருத்தல் எவ்வளவு கொடிய துயரமென்று

நானறிவேன்

கழியும் ஒவ்வொரு கணமும்

அவமதிப்பின் விஷம் உடலில் ஏற

திருவிழாவில் கைவிட்டு விட்டுப் போன

அம்மாவைத் தேடிப் பரிதவிக்கும்

குழந்தையைப் போல தேம்பி அழும் மனதை

நானும் அறிவேன்

கோபத்தின் சிவப்புக்கொடி படபடக்க

சமாதானத்துக்கான எல்லாவழிகளும்

அடைபட்டுக் கொண்டிருக்க

காத்திருத்தல்

என்றென்றும் மறக்க முடியாத

ஒரு பயங்கரக் கனவாக மாறும்முன்பே

நீ உன் வழியில் சென்று விடு

என் முன்னே பல வழிகள்

எந்த வழி உன்னிடம் என்னைக் கொண்டு சேர்க்குமென்று

எனக்குத் தெரியவில்லை

காத்திருந்தபின்பு சந்திக்கும் அந்த நொடி

கலவிஉச்ச இன்பமே என்றாலும்

எனக்காக நீ காத்திருக்க வேண்டாம்

உன் வழியில் சென்று விடு

ஒருபோதும்

சந்திக்க முடியாத நம் சந்திப்பின்மீது

காலத்தின் கருணை பொழியட்டும்.

Sunday, 19 August 2012

முன்னொரு காலத்திலே

 

ஒரு நகரம், சில நண்பர்களைப் பற்றிய நினைவுக் குறிப்புகள்

நூல்மதிப்புரை

புத்தகன்

 

இந்தப் புத்தகத்தை நீங்கள் வாசித்தால், இப்படி ஒன்றை நாமும் எழுத வேண்டும் என்ற ஆசை துளிர்ப்பது நிச்சயம். ஒவ்வொருவரும் எங்கோ பிறந்து, இடம் பெயர்ந்து, என்னவோ மாறி, புதுப்புது நண்பர்களோடு தனது பயணத்தைத் தொடந்துகொண்டு இருந்தாலும்.. பிறந்த ஊர், நம்முடைய வீட்டுக்கு முதன்முதலாக வந்த நண்பன், ஓசியில் கிடைத்த முதல் புத்தகம், எழுதியதைப்பாராட்டிய முதல் ரசிகன் என்பதெல்லாம் மறக்கமுடியாது. அப்படி சில நினைவுகளின் தாழ்வாரம் இது.

பிறிதொரு மரணம் தொகுப்பின் மூலம் தமிழ்ச்சிறுகதை உலகில் தன்னை இணைத்துக் கொண்ட உதயசங்கர், வைக்கம் முகமது பஷீர் தொடங்கி சமகாலக் கதைகள் வரை மலையாளத்தில் இருந்து தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தவர். அவரது சொந்த நகரமான கோவில்பட்டி தான் இந்தப் புத்தகத்தின் களம். அதை ஒரு சோவியத் ரஷ்யாவாக வர்ணித்து இருப்பது தான் இதன் அடித்தளம்.

தடுக்கி விழுந்தால் கோவில்பட்டியில் ஒரு எழுத்தாளனின் udhayasankar cover1[4]தலையில் தான் முட்ட வேண்டும் என்பார்கள். ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி, உதயசங்கர், கௌரிசங்கர், வித்யாஷங்கர், தேவதச்சன், நாறும்பூநாதன், அப்பாஸ், அப்பணசாமி, மாரீஸ், ஜோதிவிநாயகம், சிவசு, சாரதி, என்று எண்ணிக்கொண்டே போகலாம். கோவில்பட்டிக்கு அந்தப் பக்கம் கி.ராஜநாராயணனும் இந்தப் பக்கம் கந்தர்வனும் இருந்தார்கள்.

80 – களின் தொடக்க காலத்தில் கிளம்பியவர் உதயசங்கர். “ இத்தனை சிறிய நகரத்தில் இத்த்னை எழுத்தாளர்கள் ஒரே காலகட்டத்தில் எழுத வந்தது போல், தமிழ்நாட்டில் வேறெங்கும் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. ஒரே நேரத்தில் 20 எழுத்தாளர்கள் ஒரே இடத்தில் சிந்திக்கவும், பேசவும், விவாதிக்கவுமான சூழல் இருந்தது. படைப்புச் செயல்பாட்டில் ஆரோக்கியமான போட்டி நிலவியது.” என்கிறார் உதயசங்கர்.

இவான் துர்கனேவின் ’மூன்று காதல் கதைகள்’ படித்துக் காதலர்களாகி.. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாசித்து தோழர்களாகி, ‘சிலந்தியும் ஈயும்’ படித்து வர்க்கங்களை உணர்ந்து டி.எஸ்.எலியட் படித்து கவிஞர்களாகித் திரிந்த ஓர் இளைஞர் கூட்டத்தையே புத்தகங்கள் ஒன்று சேர்த்துள்ளது. இலக்கியம், அரசியல், சாளரங்களைத் திறந்துவிட எல்லா ஊர்களிலும் பாலு, பால்வண்ணன் போன்றவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்துக்குள் முத்துசாமி என்பவர் வருகிறார். எதுவுமே எழுதவில்லை அவர். எல்லா விவாதங்களிலும் இருக்கிறார். யோசித்துப் பாருங்கள். எல்லாஊர்களிலும் முத்துசாமிகளும் இருப்பார்கள்.

“ வாழ்க்கை தன் கொடூரமான பற்களால் பல கலைஞர்களைக் கிழித்து எறிந்திருக்கிறது. வாழ்க்கைக்குச் சவால் விட்டுக் கொண்டே, கலைஞன் ஜெயித்துக் கொண்டு இருக்கிறான். அந்த வெற்றிக்காகத் தன்னை பலியிட்டேனும்..” என்று சொல்லும் உதய்சங்கர், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஊருக்கு வருகிறார். இந்த ஊர் அவருக்குப் பிடிக்கவில்லை. எல்லோருக்கும் முன்னொரு காலத்தில் பார்த்த ஊர் நிச்சயம் பிடிக்கும்!

வெளியீடு- வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை. விலை ரூ 70/

நன்றி- ஜூனியர் விகடன் 22-8-12

Saturday, 18 August 2012

மனதை வசப்படுத்தும் கலைஞன் வண்ணதாசன்

 

உதயசங்கர்

Vannadasan

ஒருவருடன் பார்க்காமல் பேசாமல் பழகாமல் அவரை நம் மனதுக்கு மிக நெருக்கமாக உணரமுடியுமா?, நம் குடும்பத்தில் சொந்த அண்ணாச்சி போலவோ, நீண்ட நாட்கள் ஒரே தெருவில் அருகருகே குடியிருந்து பிரிந்த, எப்போது சந்தித்தாலும் தோளில் கை போட்டு பிரியத்துடன் கைகளைப் பிடித்துக் கொண்டு ஈரம் ததும்பும் விழிகளோடு விட மறுக்கும் பாலிய சிநேகிதன் போலவோ, உரிமையுடன் அடுக்களைக்குள் சென்று குளிர்ச்சியாய் ஒரு சொம்புத் தண்ணீர் குடித்து விடும் சொந்தம் போலவோ தாமிரபரணி ஆற்றில் குளித்து வரும்போது ஈரக்கால்களில் ஒட்டிய மணல் தெருவெங்கும் பரவி ஆற்றின் மணத்தை ஊருக்கே அளிப்பதைப் போலவோ, அதிகாலைக்குளிரில் இசக்கியம்மன் படித்துறையில் உடலும் மனமும் குளிர குளிர போடும் முங்காச்சி போலவோ சந்திக்காத போதும் சந்தித்துக் கொண்டேயிருப்பதைப் போலவோ, ஏக்கம் தரும் ஒரு ஆளுமை அவர்.. தன் கலையாளுமை மூலம் எல்லோரையும் அணுக்கமாக்கிக் கொள்ளும் வல்லமை படைத்த வண்ணதாசன்.

80 – களில் கவிதை எழுதிக் கொண்டிருந்த நான் சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, கு.அழகிரிசாமி, லா.ச.ரா, கி.ரா, சுந்தரராமசாமி, பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன், என்று தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தேன். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் வேலை தேடுவதான பாவனையில் இலக்கியம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது கோவில்பட்டியில் பெரும் இளைஞர்குழாம் இலக்கியவேள்வி நடத்திக் கொண்டிருந்தது. வாசிப்பு அதன் உச்சக்கட்டத்தில் இருந்தது. எங்கெங்கிருந்தோ, யார் யாரோ புத்தகங்கள் கொண்டு வந்தார்கள். போட்டி போட்டுக் கொண்டு வாசித்தோம். இருபத்திநாலுமணி நேரமும் புத்தகங்கள் ஓய்வில்லாமல் வாசிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. புத்தகங்களுக்காகச் சண்டைகள் நடந்தன. புத்தகங்களுக்காக பழமும் விட்டனர். அப்படி மாறிக் கொண்டே வந்த புத்தகங்களில் அந்தப் புத்தகம் வித்தியாசமாக இருந்தது. அந்தப் புத்தகத்தின் வடிவமைப்பு எங்களுக்கு அற்புத உணர்வைத் தந்தது. அப்படி ஒரு புத்தகத்தை நாங்கள் அதுவரை பார்த்ததில்லை. கலைக்கமுடியாத ஒப்பனைகள் என்ற அந்த வண்ணதாசனின் சிறுகதை நூல் எங்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. அஃக் பரந்தாமன் அதை வடிவமைத்திருந்தார். சிறுகதைகளை வாசிக்க வாசிக்க வேறொரு புதிய உலகத்துக்குள் நுழைந்த மாதிரி இருந்தது. ஆனால் நாங்கள் பார்த்த அதே பழைய உலகம் தான். வண்ணதாசன் என்ற கலைஞனின் மொழியில் புத்தம்புதிதாய் வேறொன்றாய் இந்த உலகம் தெரிந்ததே. எங்களுக்கு ஏற்கனவே தெரிந்த மனிதர்கள் இப்போது புதிதாகத் தெரிந்தார்கள். வண்ணதாசன் இந்த உலகத்தை மாற்றி விட்டார். இந்த மனிதர்களை மாற்றி விட்டார். எங்கள் மனதை மாற்றி விட்டார்.. வண்ணதாசனின் கதைகள் இந்த ரசவாதத்தை எல்லோரிடமும் ஏற்படுத்தும். நாங்கள் வண்ணதாசனின் கதைகளைக் கொண்டாடினோம்.

குறிப்பாக எனக்கு நான் வெகுநாட்களாக மறந்திருந்த புதையலின் ரகசியம் ஒன்று ஞாபகத்துக்கு வந்ததைப் போல இருந்தது. என் பாலியகாலம் முழுவதும் என் கண்ணில் ஆடியது. என் மனதில் அந்த நாட்களின் இனிமை மீண்டும் தேனாய் இனித்தது. என் பள்ளிவிடுமுறை நாட்களை கழித்த என்னுடைய ஆச்சியும் தாத்தாவும், திருநெல்வேலி மீனாட்சிபுரமும், புளியந்தோப்புத்தெருவும், சியாமளாதேவி கோவிலும், உலகம்மன் கோவிலும், சிக்கிலிங்கிராமமும், குறுக்குத்துறையும், சுப்பிரமணியன் கோவிலும், பாப்புலர் தியேட்டரும், வயக்காட்டு வழியே நடந்து போய் சினிமா பார்த்த ரத்னா தியேட்டரும், தட்டாக்குடித் தெருவும், கொக்கிரகுளமும், சுலோச்சன முதலியார் பாலமும், தாத்தாவின் விரலைப் பிடித்துக்கொண்டே நடந்து போன பாளையங்கோட்டை ஊரும், வழியில் வந்த ஊசிக்கோபுரமும், பாளையங்கோட்டை அசோக் தியேட்டரும், பாளையங்கோட்டை வாய்க்காலும், வழியெங்கும் பெரிய பெரிய மருத மரங்களும் எல்லாம் என் மனதை அலைக்கழித்தன.

காய்ந்து வெப்பம் உமிழும் தண்ணீர்ப்பஞ்சம் மிக்க கரிசல் பூமியான கோவில்பட்டி என் வாழ்விடமாக இருந்தது. புரண்டோடும் தாமிரபரணியின் கரைகளில் செழித்து எங்கும் பச்சைபசேலென்று வயக்காடுகள் நிறைந்த, தெருக்கள் தோறும் அவித்த பச்சை நெல்லின் வாசம் பொங்கிய, திருநெல்வேலி என் மனதின் கனவாக இருந்தது. வண்ணதாசனின் கதைகளைப் படித்தவுடன் என் மனதின் அடியாழத்தில் புதைந்து கிடந்த இனிய நினைவுகள் தன் சிறகுகள் விரித்து பறந்தன. நான் அந்தத் தொகுப்பிலுள்ள கதைகளை பலமுறை வாசித்தேன்.

ஏற்கனவே கோவில்பட்டியில் தர்சனா என்ற வீதி நாடகக்குழு ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பங்கேற்ற பல நண்பர்கள் மனோகர், வித்யாஷங்கர், கௌரிஷங்கர், போன்றவர்கள் வேலை கிடைத்தும், வேலை தேடியும் வெளியூர் சென்று விட்டனர். அதன் பிறகு நாங்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் சிருஷ்டி என்ற நாடகக்குழுவை நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது வத்திராயிருப்பில் பொன்.தனசேகரன், புதுப்பட்டி நடராஜன் அண்ணாச்சி ஆகியோர் ஏற்பாட்டில் பேரா.ராமானுஜம், மு.ராமசாமி, ராஜு, ஆகியோர் நடத்திய ஐந்து நாள் நாடகப்பயிற்சி முகாமில் நான் கலந்து கொண்டேன். நாடகப்பயிற்சியின் போது இரண்டு முறை பெண்ணாக நடிக்க வேண்டி வந்த போது என்னுடைய பெயரை தனலட்சுமி என்றே சொன்னேன். அதைக் கேட்ட புதுப்பட்டி நடராஜன் அண்ணாச்சியும், வைகை குமாரசாமி அண்ணாச்சியும் என்ன தனுமை தனலட்சுமியா? என்று கேலி செய்தார்கள். வண்ணதாசன் அந்த அளவுக்கு என்னைப் பாதித்திருந்தார்.

நான் ஒன்றிரண்டாய் கதைகளை எழுதத் துணிந்தபோது வண்ணதாசனின் பாதிப்பில் அவருடைய நடையை ஈயடிச்சான் காப்பி பண்ணி கான மயிலாட அதைக் கண்ட கோழி ஆடியதைப் போல எழுதிப் பார்த்தேன். எதுவும் தேறவில்லை. அவருடைய எழுத்தின் தனித்தன்மையை யாராலும் காப்பியடிக்க முடியாது. ஏனெனில் அது அவருடைய மனதில் எழுந்து வருகிற மனிதநேயமிக்க சுயம்புவான ராகம். அந்த ராகத்தை வேறொருவர் இசைக்க முடியாது. மனிதர்களை இத்தனை அழகாய் யாராவது வர்ணித்திருக்க முடியுமாவென்று தெரியவில்லை. நாம் அன்றாடம் பார்க்கிற உலகநாதனும், பிரமநாயகமும், ஆச்சியும், பாட்டையாவும், எப்படி இவ்வளவு அழகானவர்களாக மாறினார்கள்? சண்டையும் சல்லியமுமாய் வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்களா இவர்கள்? இந்த உலகம் எப்படி இவ்வளவு அழகாக மாறிப் போனது? முருங்கைப்பூக்களும், ஒரு நிமிடமும் ஓரிடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் பாய்ந்து கொண்டேயிருக்கும் அணிலும், அந்தியின் வர்ணஜாலமும், காலையில் எழுந்தவுடன் உதடுகளில் ஒட்டிக் கொள்கிற பழைய பாடலும், என்று உலகம் மாறித் தெரிவதை எப்படிக் கவனிக்கத் தவறினோம்? காட்சிச் சித்தரிப்புகளின் மூலம் மனிதர்களின் மனதை வெளிப்படுத்திய மனச்சித்திரக்காரன் வண்ணதாசன். ஒற்றைவரித் தீட்டலில் ஒரு மகத்தான மானுடநாடகத்தை உணர்த்திச் செல்லும் மகாகலைஞன். வண்ணதாசனின் கதைகளை வாசிக்கும் யாவரும் வசியப்படுத்தப் பட்டவர்களைப் போல மாறி விட நேர்வதும், அதன் பிறகு அவர்களுக்கு இந்த உலகம் அழகாகவும் அன்பாகவும் தெரிவதும் நடக்கும். அதன் பிறகான அவர்களுடைய வார்த்தைகளில் பிரியம் பொங்கும்.

82- ஆக இருக்கலாம். கோவில்பட்டி பேருந்து நிலைய வணிகவளாகத்தில் கிராஜூவேட் பரமன் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட வண்ணதாசனின் அருமை நண்பர் பரமசிவன் ஒரு டீக்கடை திறந்தார். அங்கே அவரைச் சந்திக்க அடிக்கடி வண்ணதாசன் வருவதாகக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்கப் போயிருந்தேன். அந்தச் சமயத்தில் அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் வெளிவந்திருந்தது. நான் என்னுடைய கதை வெளியாகியிருந்த செம்மலரை கையில் வைத்திருந்தேன். நெடிதுயர்ந்த, உருவமும் சாந்தமான முகமும், பாந்தமான குரலும் அணுக்கமான உடல்மொழியும் அவரோடு நீண்ட நாள் பழகிய உணர்வைத் தந்தது. என் கதையைப் படித்து விட்டு “ ஷங்கர், எழுதுங்க.. யார் என்ன சொன்னாலும் கவலைப்படாம நீங்க பாட்டுக்கு எழுதுங்க..” என்று சொன்னார். உண்மையில் அந்த வார்த்தைகள் என் ஆழ்மனதில் தங்கி விட்டது. இன்றுவரை அதைக் கடைப்பிடித்து வருகிறேன்.

வேலை கிடைத்து வடமாவட்டங்களில் ஒரு பதினான்கு வருடங்கள் சுற்றியலைந்த பிறகு மீண்டும் சொந்த ஊருக்கு வந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு வண்ணதாசனை நேரில் சந்தித்த போதும் கால இடைவெளி சிறிதுமின்றி அதே அந்நியோன்யத்துடன் அவர் உரையாடினார். அவருடைய கதைகள், கவிதைகள், கடிதங்கள், ஓவியம், பேச்சு, உரையாடல், எல்லாமும் ஒரு கலைநேர்த்தியோடு இருப்பதைக் கவனித்திருக்கிறேன். அது பலருக்கு மெனெக்கிடலாக இருக்கிறபோது அவருக்கு இயல்பாக இருக்கிறது. மனிதர்கள் மீது அவர் கொண்டுள்ள பேரன்பைப் போல.

நான் ஆறாங்கிளாஸ் அல்லது ஏழாங்கிளாஸ் படித்துக் கொண்டிருந்த சமயம் தாத்தாவுடன் பாளையங்கோட்டையிலிருந்த மாமா வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது எங்கே சென்றாலும் நடை தான். மீனாட்சிபுரத்திலிருந்து ஆத்துக்குள் இறங்கி ( இறங்கும் முன்பு டவுசர், சட்டையைக் கழட்டிக் கையில் வைத்துக் கொண்டு ) குறுக்கே புகுந்து கொக்கிரகுளத்தில் கரையேறி அப்படியே பொடி நடையாய் பாளையங்கோட்டைக்குப் போய்விட்டு திரும்புகிற சமயத்தில் அபூர்வமாய் ஒரு டவுண் பஸ் வந்தது. அந்த பஸ்ஸை விட்டால் பிறகு ஒரு மணி நேரம் கழித்துத் தான் அடுத்த பஸ் வரும். பஸ் வந்து நின்றதும் எல்லோரும் ஏறுகிறார்கள். நான் கீழே குனிந்து பார்க்கிறேன். புழுதி மணலில் சில்லரைக் காசுகள் கொட்டிக் கிடக்கின்றன. எல்லாம் ஐந்து பைசா, பத்து பைசா, நாலணா, எட்டணா, காசுகளாகக் கிடக்கின்றன. நான் அந்தக் காசுகளை புழுதியுடன் அள்ளி டவுசர் பையில் போடுகிறேன். என் தாத்தா என்னை பஸ்ஸில் ஏறச் சொல்லிக் கத்துகிறார். இன்னும் புழுதியில் தெரிந்தும், தெரியாமலும் காசுகள் கிடக்கின்றன. எனக்கு அதை விட்டு விட்டு வர மனசில்லை. ஆனால் தாத்தா கூப்பாடு போடுகிறார். அந்தக் காசுகள் எல்லாம் அந்தக் காலத்தில் அலட்சியம் செய்யக்கூடியக் காசுகளும் இல்லை. எனக்கு அந்தக் காசுகள் ஆரஞ்சு மிட்டாய்களாக, சேவு, மிக்சராக, ஐஸ், சவ்வுமிட்டாயாகத் தெரிகிறது தாத்தாவின் சத்தத்தில் நான் பஸ் ஏறி விட்டேன். மிகப் பெரிய புதையலை விட்டு விட்ட மாதிரி ஏமாற்றமடைந்தேன். பொறுக்கிய சில்லரைகள் ஐந்தாறு ரூபாய் தேறியது என்றாலும் பொறுக்காமல் விட்ட காசுகளைப் பற்றியே கவலைப்பட்டேன். இப்போதும் கைகளில் அந்த நாணயங்களின் குளிர்ச்சி எனக்குக் கிளர்ச்சியூட்டுகிறது. அந்தக் குளிர்ச்சியை வண்ணதாசனின் கதைகளை வாசிக்கும் போது உணர்கிறேன்.

எப்போதெல்லாம் வண்ணதாசனை வாசிக்கிறேனோ, எப்போதெல்லாம் அவரைப் பற்றிப் பேசவோ, எழுதவோ செய்கிறேனோ அப்போதெல்லாம் திருநெல்வேலியின் ஸ்பரிசம் என் மனதை வருடும். தாமிரபரணியின் தாமிரவாசம் என் உடலில் தோன்றும். மீண்டும் என் பாலியகாலம் தன் வண்ணங்களின் விகசிப்பை எனக்குள் ஏற்படுத்தும். என் அபூர்வக்கனவுகளை மீண்டும் நான் காண்பேன். அதற்காகவே  மீண்டும் மீண்டும் வண்ணதாசனை வாசிப்பேன். மகத்தான கலைஞன் எங்கள் வண்ணதாசன்!

Friday, 17 August 2012

எழுத்துகளின் தேசம்

உதயசங்கர்Mohan Das (28)

சின்னமுத்து ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தான். மூணாங்கிளாஸ் படித்துக் கொண்டிருக்கும் போது அவனுடைய அப்பா இறந்து விட்டார். கட்டிடவேலையில் கையாளாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது தவறி மாடியில் இருந்து விழுந்து விட்டார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் ஒரு மாதகாலம் சிகிச்சை பெற்றும் பலனில்லாமல் போய் விட்டது. அப்பாவைக் கவனிக்க வேண்டி அம்மாவும் வேலைக்குப் போகவில்லை. அதனால் ஏகப்பட்ட கடன். அம்மாவுக்கு என்ன செய்றதுன்னு தெரியல. சின்னமுத்துவின் படிப்பு நிறுத்தப் பட்டது. சின்னமுத்துவுக்கும் கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க வேறு வழி தெரியல. அழுகை அழுகையாய் வந்தது. ஒரு நாள் முழுக்க அழுது கொண்டிருந்தான். அம்மா ஒரு வாக்குறுதி தந்தாள். கடன் அடைந்துவிட்டால் அவனை மறுபடியும் பள்ளிக்கூடம் அனுப்பி படிக்க வைப்பதாகச் சொல்லியிருந்தாள். பாவம் அவளும் என்ன செய்வாள்.

டீக்கடை அண்ணாச்சி ரெம்ப நல்லவர். எப்போதாவது அவன் டீக்கிளாஸைக் கழுவும் போது தவறிக் கீழே விழுந்து உடைந்து விட்டால் மட்டும் அவ்ன் பிடதியில் ஒரு அடி விழும். மற்றபடி திட்டுவதோடு சரி. சின்னமுத்து சுறுசுறுப்பான பையன். துறுதுறுவென வேலை பார்த்துக் கொண்டிருப்பான். டீக்குடித்த தம்ளர்களை உடனுக்குடன் சுத்தமாகக் கழுவி வைப்பான். காலை எட்டு மணிக்கு தெருக்களில் இருக்கிற கடைகளுக்குப் போய் அங்கே வேலை பார்ப்பவர்களிடம்,

“ அண்ணே, டீ, காப்பி, பால், பஜ்ஜி, வடை, போண்டா, வேணுமாண்ணே!”

என்று கேட்டு அலைவான். அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டு கேட்டவர்களுக்கு கேட்டமாதிரிச் சரியாகக் கொண்டு போய் கொடுப்பான். ஆள்களுக்குத் தான் எத்தனை விதமான ருசி! வித் அவுட் சுகர், அரைச்சீனி, லைட், ஸ்டிராங், டபுள்ஸ்டிராங், மலாய் போட்டு,கடுங்காபி, பிளாக் டீ, என்று புதிய புதிய வார்த்தைகளைக் கற்றுக் கொண்டான். எல்லாத்தையும் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்வான். அண்ணாச்சியும் அழகாக அப்படியே போட்டுக் கொடுப்பார். அதையெல்லாம் கொண்டு போய் கொடுத்து விட்டு திரும்பப் போய் தம்ளர்களையும் காசையும் வாங்கிக் கொண்டு வந்து அண்ணாச்சியிடம் கொடுப்பான். சிலபேர் அப்புறம் காசு தருகிறேன் என்பார்கள். அதை நினைவில் வைத்துக் கொள்வான். அன்று இரவுக்குள் அதை வாங்கி விடுவான். ஞாபகம் வைத்திருப்பது ஒன்றும் சின்னமுத்துவுக்கு பெரிய விசயம் இல்லை. அவன் மூணாங்கிளாஸ் படித்துக் கொண்டிருக்கும் போதே பதினாறாவது வாய்ப்பாடு வரை மனப்பாடம் செய்து தப்பில்லாமல் ஒப்பிப்பானே.

மத்தியான வேளையில் வியாபாரம் கொஞ்சம் மந்தமாக இருக்கும். அப்போது தான் அண்ணாச்சியும் உட்காருவார். அவனும் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து அன்று வந்த தினசரி நாளிதழ்களை எழுத்துக் கூட்டி வாசிப்பான். ஒவ்வொரு செய்தியையும் வாசித்து முடித்தவுடன் அவனுக்கு மகிழ்ச்சி பொங்கும். பாதி நாளிதழ்களைத் திருப்புவதற்குள் மறுபடியும் வியாபாரம் சூடு பிடித்து விடும். அவன் ஏக்கத்துடன் நாளிதழை வைத்து விட்டு மறுபடியும் சுறுசுறுப்பாக அலைய ஆரம்பிப்பான். இரவு ஒன்பது மணிக்கு கடையை மூடி விட்டு வீட்டுக்கு புறப்படுவார் அண்ணாச்சி. அவனுக்கு அந்த நாளிதழ்களை வீட்டுக்குக் கொண்டு போய் படிக்கவேண்டும் என்று ஆசை ஆசையாக இருக்கும். ஒரு நாள் அண்ணாச்சி நல்லமனநிலையில் இருக்கும் போது மெதுவாகக் கேட்டான்.

“ அண்ணாச்சி..இந்தப் பேப்பரை நான் கொண்டு போகட்டா..”

“ எதுக்குலே..”

“வீட்ல.. வைச்சிப் படிக்க..”

“ இன்னம் என்னல.. படிப்பு..அதான் படிச்சி கிழிச்சிட்டீல்ல..”

என்று சொல்லி அதிர்வேட்டு போல சிரித்தார். அவன் அந்தத் தாளை எடுத்து மடித்து டவுசர் பைக்குள் வைத்துக் கொண்டான். கொஞ்ச நாளீலேயே அண்ணாச்சியின் குணாதிசயங்களைத் தெரிந்து கொண்டு விட்டான் சின்னமுத்து. வீட்டுக்குப் போய் சாப்பிட்டு முடித்ததும் உடம்பு அடித்துப் போட்டதைப் போல வலிக்கும். தூக்கம் கண்களைச் சுழற்றும். ஆனால் விளக்கைப் போட்டு, கொண்டு வந்த செய்தித்தாளை முழுவதும் படித்துவிட்டான். அவ்ன் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அம்மா கண்கலங்கினாள். சின்னமுத்துவுக்கு நாளிதழைப் படித்து முடித்ததும் அபூர்வமான புன்னகை பொங்கி வந்தது. அந்தச் சிரிப்புடனே தூங்கி விட்டான்.

ஒரு நாள் சின்னமுத்துவின் கனவில் வெள்ளைவெளேரென்று ஒரு ஊர் வந்தது. அங்கே எல்லாமனிதர்களும் கன்னங்கரேர் என்று கருப்பாய் இருந்தார்கள். என்ன ஆச்சரியம்! சின்னமுத்து அந்த ஊரின் மீது பறந்து கொண்டிருந்தான். நம்ப முடியாமல் திரும்பிப் பார்த்தால் கைகளோடு சேர்ந்து இறக்கைகள் முளைத்திருந்தன. அதை விட ஆச்சரியம் அருகில் நெருங்க நெருங்க அங்கே இருந்த மரங்கள், செடிகள், பறவைகள், பூச்சிகள், விலங்குகள், மனிதர்கள், எல்லாமே ஏதோ ஒரு எழுத்து வடிவில் இருந்தனர். குளத்தில் தண்ணீர் இல்லை. அதற்குப் பதில் குளம் முழுவதும் எழுத்துகள் நிரம்பியிருந்தன. அதில் நீந்திக் கொண்டிருந்த வாத்துகளும் எழுத்துக்களாகவே இருந்தன. எழுத்து மரத்தில் எழுத்துப்பூக்கள் பூத்திருந்தன. எழுத்துக் காய்களும் எழுத்துப்பழங்களும் தொங்கிக் கொண்டிருந்தன.

சின்னமுத்து அங்கே உள்ள ஒரு எழுத்துத் தோட்டத்தில் இறங்கினான். எழுத்துப் பட்டாம்பூச்சிகள் அவனைச் சுற்றிச் சுற்றி வந்து பாட்டுப் பாடின. அவனைப் பார்க்க ஊரிலிருந்த எல்லோரும் வந்தனர். முன்பே அவனைத் தெரிந்தவர்கள் போல அவனிடம் கைகுலுக்கிப் பேசினார்கள். எல்லோரும் அவர்களைத் தாங்களாகவே அறிமுகம் செய்து கொண்டனர். ஒருவர் அவனிடம் கைகுலுக்கியபடியே,

“ என் பெயர் ‘க’ ” என்றார். இன்னொருவர் முதுகை வளைத்தபடி வந்தார்.

“ என் பெயர் “ஏ’ “ என்று சொன்னார். சின்னமுத்துவுக்கு அவர்கள் எல்லோரும் நன்றாகத் தெரிந்தவர்களாகவே இருந்தனர். சிலர் கை குலுக்கும்போதே அவர்கள் உருவத்தைப் பார்த்து அவர்களுடைய பெயரைச் சொல்ல ஆரம்பித்து விட்டான். அவ்னுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது ஒரு சுழற்காற்று வீச ஆரம்பித்தது. எல்லா எழுத்துகளும் பறக்க ஆரம்பித்தன. “சின்னமுத்து” என்று அந்தக் காற்று அலறியது. அந்தச் சத்தத்தில் அவன் முழித்து விட்டான். அவனுடைய அம்மா அவ்ன் தலைமுடியைக் கோதி விட்டுக் கொண்டே அருகில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான்.

“ கண்ணு.. மணி ஆயிருச்சிடா.. எந்திரிச்சி பல் தேய்ச்சி குளிடா”

என்று அன்போடு சொன்னாள். அவன் எழுந்து வேலைக்குக் கிளம்பினான்.

அன்றிலிருந்து எங்கே எந்தத் துண்டு பேப்பர் கிடைத்தாலும்கூட சின்னமுத்து படித்துக் கொண்டே திரிந்தான். ரோட்டில் போகும்போது கூட படித்துக் கொண்டே போனான். ஒரு முறை டீயைக் கொட்டி விட்டான். ஒரு முறை சைக்கிளில் மோதி விட்டான். நல்லவேளை ஒருமுறை மோட்டார்சைக்கிள்காரன் பிரேக் போட்டு நிறுத்தினான். யார் என்ன திட்டினாலும் சிரித்தான். அண்ணாச்சியும் சத்தம் போட்டுப் பார்த்தார். ஆனால் அவன் வாசிப்பதை நிறுத்தவே இல்லை.

ஒரு நாள் டீக்கடை அண்ணாச்சி அவனிடம்,

“ பள்ளிக்கூடம் போறியாடா?”

என்று கேட்டார். பள்ளிக்கூடம் என்ற வார்த்தையைக் கேட்டதும் சின்னமுத்துவின் முகம் மலர்ந்தது. அவன் வேகமாகத் தலையாட்டினான். அண்ணாச்சி அவனைப் பார்த்து,

“ ஆனா கலையிலியும் சாயந்திரமும் வேலைக்கு வந்துரணும்..சரியா..”

என்று சொன்னார். சின்னமுத்து உற்சாகமாய்

“ சரி அண்ணாச்சி..” என்று கத்தினான். அவர் சிரித்துக் கொண்டே,

” நாளைக்கி உங்கம்மாவை வரச்சொல்லு..” என்று சொல்ல சின்னமுத்து உடனே,

” ரெம்ப நன்றி அண்ணாச்சி “ என்று சொன்னான். அதைக் கேட்ட அண்ணாச்சிக்கு வெட்கமாகப் போய் விட்டது. அவர் அதிர் வேட்டுப் போல சிரித்துக் கொண்டே,

“ அடச்சீ.. படுக்காளிப் பயலே ..” என்று சொல்லி சின்னமுத்துவின் கன்னத்தில் தட்டினார். சின்னமுத்துவைச் சுற்றி எழுத்துகள் பறந்து கொண்டிருந்தன. சின்னமுத்துவும் அந்த எழுத்துக்களோடு காடு, மலை, நாடு நகரங்களின் மீது பறந்து கொண்டிருந்தான்.

புகைப்படம்-மோகன்தாஸ் வடகரா

Wednesday, 15 August 2012

நமது வீட்டில் புராதனச் சடங்குகள்

karpoor

உதயசங்கர்

 

கலையும், அறிவியலும், மருத்துவமும், மந்திரமும், சடங்குகளும், ஆதியில் ஒன்றாகவே இருந்தன. ஆதிமனிதன் தன் வாழ்வில் எதிர்கொண்ட எதிர்பாராத புயல், மழை, மின்னல், நெருப்பு, வெள்ளம், வறட்சி, உற்பத்திக்குறைவு, போன்ற இயற்கை உற்பாதங்களுக்கான காரணங்களை அறியாததினால் தன்னை மீறிய சக்தியினைக் கட்டுப்படுத்த மந்திரங்களை சடங்குகளைக் கண்டுபிடித்தான். சடங்குகள், மந்திரங்கள் மூலமாக தனக்கு இழப்புகள் நேராதிருக்கும் வளம் பெருகும் என்று நம்பினான். ஒரு கற்பனையான செயல் மூலமோ, போலச்செய்தல் மூலமோ, யதார்த்த வாழ்வினை மாற்றிவிடலாம் என்று நினைத்தான். இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. இயற்கையின் எல்லாப் பொருட்களிலும் ஆவி உள்ளுறைந்து இருப்பதாகவும் அவற்றின் ஆசாபாசங்களினால் தான் இயற்கையில் எல்லா உற்பாதங்களும் நிகழ்வதாகவும் முடிவு செய்தான். அவற்றிலும் நல்ல ஆவிகள் என்றும், கெட்ட ஆவிகள் என்றும் பிரிவினை இருப்பதாக நம்பினான். எனவே கெட்ட ஆவிகளைச் சடங்குகளின் மூலம், மந்திரங்களின் மூலம் சாந்தப்படுத்தினால் தனக்கு எந்த உபத்திரவமும் நேராது என்றும் அதே போல நல்ல ஆவிகளை வழிபடுவதின் மூலம் வளம் கொழிக்கும் என்றும் நம்பினான். இயற்கை சக்திகளின் இயக்கம் குறித்த அறிவின்மையினால் தனக்குப் புரியாத, தன்னை விடச்சக்தி வாய்ந்த இயற்கை நிகழ்வுகளைக் கற்பனையான செயல் மூலம் கட்டுப்படுத்திவிடலாம் என்ற அறிவியலறிவின் தொட்டில் பருவத்திலிருந்த ஆதிமனிதனின் நம்பிக்கையே ஆதியில் மந்திரங்களையும் சடங்குகளையும் தோற்றுவித்தது எனலாம்.

ஏனெனில் ஆதிமனிதன் இயற்கைப் பொருட்களையே வழிபட்டான். தனக்குத் துன்பம் தருகிற இயற்கைப்பொருட்களையும், தனக்கு அழிவை ஏற்படுத்துகிற இயற்கைப் பொருட்களையும் மட்டுமல்ல தனக்கு வளம் சேர்க்கிற இயற்கைப் பொருட்களையும் மந்திரங்கள் சடங்குகளின் வழியாக வணங்கினான். இதில் மந்திரங்கள் தான் முதலில் தோன்றியிருக்கிறது. அதன் பின்னரே சடங்குகள் தோன்றியிருக்கின்றன. ஆதியில் மனிதர்களுக்கு கடவுள் இல்லை. இயற்கையையே அவன் மந்திரங்கள் வழி வழிபட்டுக் கொண்டிருந்தான். அதனால் இயற்கையில் அவன் உற்றுக் கவனித்த நிகழ்வுகளை போலச் செய்யும் பாவனை நிகழ்வுகளையே அவன் மந்திரங்களாக உருவாக்கினான். உருளைக்கிழங்குச் செடி வளர்வதைப் பாவனையான செயல் மூலம் அவன் நிகழ்த்தினானெண்று ஜார்ஜ் தாம்சன் விளக்குவார். அதே போல மழை வேண்டுமென்றால் இடி, மின்னல், மழை போல பாவனை நடனங்கள் செய்து தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற கட்டளையிடுவதும் நடக்கும் என்று தேவி பிரசாத் சட்டோபாத்யாயா கூறுகிறார்.

ஆதியில் மனித சக்திக்கு மீறிய ஒரு சக்தியினை வழிபாடு, பலி, போன்ற செயல்களின் மூலம் வேண்டித் தாங்கள் விரும்புவதைப் பெற்று விடலாம் என்ற கருதுகோள் சில திட்டமிடப்பட்ட செயல்கள் மூலம் உருவாவதைச் சமயம் என்று சொல்லலாம்.அடிப்படையில் ஒரு விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுதலையும், வழிபாட்டையும் கொண்டது சமயமென்றால் பாவனைச் செயல்களையும் கட்டளையிடுதலையும் கொண்டது மந்திரமென்று சுருக்கமாகச் சொல்லலாம். சமயங்கள் தோன்றிய பிறகு மந்திரமும் சடங்கும் சேர்ந்து மந்திரச்சடங்குகளாகி விட்டன என்று ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன் சொல்கிறார்.

ஆதி மனிதன் தன் அறிவுவளர்ச்சியின் ஆரம்பக்கட்டத்தில் செய்த புராதன மந்திரச் சடங்குகள் இன்றும் நமது வீடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அறிவியலின் அற்புதங்கள் எதுவும் சமயத்தின் ஆதிக்கத்தை அசைக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல: மக்களின் பொதுப்புத்தியில் பரம்பரை பரம்பரையாக இந்த மந்திரச்சடங்குகள் சொல்லப்பட்டு கல்வெட்டு போல பதிந்திருப்பதும் ஒரு காரணம். மக்களின் பொதுப்புத்தியில் தலையிடாத வரை இந்த விதமான மந்திரச் சடங்குகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். நான்கு வகையான மந்திரச்சடங்குகள் இருக்கின்றன என்றும் தூய மந்திரம், தீய மந்திரம், உற்பத்தி மந்திரம், பாதுகாப்பு-அழிப்பு மந்திரம், என்றும் மானிடவியலாளர் பிரேசர் பிரிக்கிறார்.

வீடுகளில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லையென்றால் உடனே நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக் கொள்வது இப்போதும் நடைபெறுகிற நிகழ்வு. மாரி நோய் வந்தவர்கள் மாரியம்மனுக்கு கண் உரு செய்து போடுவதாகவும், காலிலோ, மற்ற உடல் பகுதிகளில் வரும் நோய்கள் குணமாக அந்தந்த உடல் உறுப்புகளை செய்து காணிக்கையாகப் போடுகிற வழக்கத்தை நாம் பார்த்திருக்கலாம். அதே போல குழந்தை இல்லாதவர்கள் குறிப்பிட்ட கோவில்களில் உள்ள மரங்களில் தொட்டில் செய்து போடுவதும், இவையெல்லாம் ஒத்தது ஒத்த விளைவை உருவாக்கும் என்ற மந்திரச் சடங்கின் அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன. அதாவது உண்மையான உடலுறுப்பை ஒத்த செயற்கையான உடலுறுப்பை செய்து கோவிலுக்குக் கொடுப்பதாக நேர்ந்து கொள்வதின் மூலம் பாவனையான செயலைச் செய்து ( பொருளைக் கொடுத்து ) சாந்தப் படுத்துகிற வேலையை இந்த மந்திரச் சடங்கு செய்கிறது. தொட்டிலில் தன்னுடைய குழந்தையைப் போட்டு ஆட்ட வேண்டுமென்பது எல்லாப் பெண்களின் ஆசை. அந்த ஆசையை கோவில் மரத்தில் பாவனையான பொம்மைத் தொட்டிலை குழந்தைப் பொம்மையை இட்டுக் கட்டி விடுவதும் இந்த ஒத்த மந்திரத்தின் எச்சம் தான்.

சாதாரணமாக வெள்ளிக்கிழமைகளில் எல்லோர் வீடுகளிலும் வாசலில் சூடம் எரிவதைக் காணலாம். இது வியாபார ஸ்தலங்களிலும் நடக்கிறது. வீடுகளில் பெண்கள் நாலு சூடன்கட்டிகளை கைகளுக்குள் வைத்துக் கொண்டு வீட்டிலுள்ள எல்லோர் தலை, கை கால், உடல், முழுவதும் மூன்று முறை சுற்றி தூ தூ தூ வென மூன்று முறை துப்பச் சொல்லி வாசலில் கொண்டு போய் கொளுத்துவதை இப்போதும் பார்க்கலாம். அதே மாதிரி குழந்தைகளை அலங்காரம் செய்து கன்னத்தில் கருப்பாகத் திருஷ்டிப் பொட்டு வைத்து விடுவது, ஒரு கையில் உப்பையும், ஒரு கையில் மிளகாயையும் வைத்து உடல் முழுவதும் தடவி எரிகின்ற அடுப்பில் போடுவது, அப்படிப் போடும்போது “ ஊர்க்கண்ணு, உறவுக்கண்ணு, பாவிக்கண்ணு, பரப்பாக்கண்ணு, நாய்க்கண்ணு, நரிக்கண்ணு, எல்லாக்கண்ணும்….” என்று சொல்வதென்பதும், அடுப்பில் போடுகிற உப்பும்,மிளகாயும் வெடித்துச் சிதறுகிற போது “ பார்த்தியா எவ்வளவு கண்ணேறு பட்டிருக்கு..” என்று சொல்வதும் நடக்கிறது.

அதே போல முச்சந்தியில் பிடிமண்ணை எடுத்து தலை சுற்றி அடுப்பில் எரிவதும், கோழிமுட்டையை தலை சுற்றி வீதியில் எரிவதும், பூசணிக்காயைச் சுற்றி நடுச்சாலையில் போட்டு உடைப்பதும், கன்றை ஈன்ற பசுவின் நஞ்சுக்கொடியை பால் வடியும் மரங்களில் கட்டித் தொங்க விடுவதும், தொத்து மந்திரம் என்ற சடங்கின் எச்சம் தான்.

இயற்கையின் உற்பாதங்கள், எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, புதுக்கட்டிடங்கள் கட்டும் போது பூசணிக்காயைக் கட்டுவது, அகோரமாய் வைக்கோல் பொம்மை செய்து கட்டுவது, சீனிக்காரம், மிளகாய், எலுமிச்சம்பழம் இவற்றைக் கோர்த்து வண்டிகளில் கட்டுவது, காத்துக்கருப்பு அண்டாமலிருக்க கறுப்புக்கயிறு கையிலோ, காலிலோ கட்டுவது, கர்ப்பிணிப் பெண்கள் வெளியே செல்லும் போது வேப்பிலை, அடுப்புக்கரி, இரும்புத் துண்டு போன்றவற்றை கொடுத்தனுப்புவது, எல்லாம் பாதுகாப்பு மந்திரமாகும்.

நோய்கள் குணமாக, நினைத்த காரியம் பலிதமாக, தெய்வங்களுக்கு மிருகங்களை, பறவைகளைப் பலி கொடுக்க நேர்ந்து கொள்வது, தீமையை மாற்றித் தருகிற மந்திரமாகும். மழைக்காக கொடும்பாவி எரித்தலும் இத்தகைய மந்திரசடங்கே.தீமைகளை எரித்து நன்மைகளைப் பெறவே இத்தகைய பலிகள் தரப்படுகின்றன. இன்று அரசியல் தலைவர்கள், கொடுங்கோலர்கள், மக்கள் விரோதிகள், ஆகியோரின் கொடும்பாவி எரிப்பையும் இந்த மந்திரச்சடங்கின் எச்சமாகவே கொள்ளலாம்.

ஆவிகள் உறைந்திருக்கும் காடுகளிலிருந்து மரங்களை வெட்டியெடுத்துக் கொண்டு வந்து கட்டிடங்கள் கட்டும் போது அந்த மரங்களுடன் அந்த ஆவிகளும் சேர்ந்து வந்து கட்டிடங்களில் குடியேறிவிடும் என்பது பழைய நம்பிக்கை. அந்த ஆவிகளை வெளியேற்றவே தச்சுக்கழித்தல் என்ற சடங்கு. கட்டிடங்களில் வேலை செய்த தச்சாசாரியே அந்தச் சடங்கைச் செய்கிறார். கோழியின் தலையை அறுத்து அதன் ரத்தத்தை நிலை,கதவு, ஜன்னல், மற்ற மரவேலைகள் உள்ள இடங்களில் தடவுவதின் மூலம் மரங்களின் வழியாக வந்த ஆவிகளை ரத்தவாடை காண்பித்து ஈர்த்துக் கொண்டு போய் வெளியேற்றுகிற சடங்கு தான் தச்சுக்கழித்தல்.

இந்தச் சடங்குகள் எல்லாம் ஆதியிலிருந்தே சிற்சில மாற்றங்களுடன் இன்று வரை தொடர்ந்து கொண்டேயிருக்கும் புராதனச் சடங்குகள். இவற்றில் பிராமணமதத்தின் சடங்குகளும் கலந்து குழம்பியிருக்கின்றன. இன்றளவும் இந்தச் சடங்குகளில் பெரும்பாலானவை வெகுமக்களால் தீவிரமாக பின்பற்றப்படுகின்றன. அர்த்தமற்ற இந்தச் சடங்குகளின் தாத்பரியம் பற்றித் தெரியாமலேயே நமது வீடுகளிலும், அலுவலகங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாமும் மௌன சாட்சிகளாக மக்களின் பொதுப்புத்தியில் தலையிடும் திட்டங்களின்றி அமைதியாக இருக்கிறோம். அறிவியலின் மகத்தான சாதனைகள் எதுவும் மக்களுடைய பொதுப்புத்தியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மக்களின் பொதுப்புத்தி என்பது தர்க்கசாஸ்திரத்தையோ, நிரூபணங்களையோ, எதிர்பார்ப்பதில்லை. அதற்கு நம்பிக்கை மட்டுமே போதுமானது. மக்களின் பண்பாட்டை ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்திக் கொண்டு போவது இந்தப் பொதுப்புத்தி தான் என்பதை நாம் உணர்ந்தோமானால் இதன் முக்கியத்துவம் புரியும். பழைய நம்பிக்கைகளில் நாம் தலையிடுவதென்பது பழைய பிற்போக்கான பண்பாட்டு விழுமியங்களில் தலையிடுவதென நாம் உணரவேண்டும். அப்போது இத்தகைய சடங்குகளின் காலப்பொருத்தமின்மை குறித்து நாம் மற்றவர்களுக்கு விளக்க வேண்டும். அதன் மூலம் மக்களின் பொதுப்புத்தியில் புதிய அறிவியல்பூர்வமான தர்க்கஞானத்தை உருவாக்க முடியும். இல்லையென்றால் அரசியலில் முற்போக்காகவும், பொதுப்புத்தியில் பிற்போக்கான மக்கள் திரளோடு நாம் எதிர் நோக்கும் உன்னத லட்சியத்தை அடைவதற்கு மிகுந்த காலதாமதமாகும்.

புதிய பண்பாட்டு மேலாண்மைக்கான பயணத்திசையில் பயணம் துவங்க வேண்டிய தருணம் இது. அதற்கான வேலைத் திட்டங்களை உடனடியாக உருவாக்க வேண்டும்.

Tuesday, 14 August 2012

ஐந்து பேரும் ஒரு வீடும்

உதயசங்கர்children 01

 

கையூர் என்ற ஊரில் சுட்டான், பாம்பான், மோதிரான், சுண்டான், கட்டையான், என்று ஐந்து சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து பகலில் கடுமையாக உழைத்தனர். உழைப்பில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருந்ததால் எத்தனை கடினமான வேலையையும் மிக எளிதாக அவர்கள் செய்து முடித்தனர். அவர்களுடைய உழைப்பினால் வயல் செழித்தது. தானியங்கள் ஏராளமாய் விளைந்தன. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.

இரவில் அவர்கள் அனைவரும் உறங்குவதற்கு ஒரு முற்றவீடு இருந்தது. அந்த முற்றவீட்டில் அவர்களே தூண்களாகவும், கூரையாகவும் மாறிப் பாதுகாப்பாக ஓய்வு எடுத்துக் கொண்டனர். விடிந்ததும் அவர்கள் உற்சாகமாய் வேலைக்குக் கிளம்பி விடுவார்கள்.

ஒரு நாள் இரவில் தூக்கம் வராமல் சுண்டான் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தது. அதற்குக் காரணமும் இருந்தது. அன்று மதியம் வேலை செய்து கொண்டிருந்தபோது, கட்டையான் சுண்டானைப் பார்த்து,”ஏலேய்..சோனிப் பயலே..நல்லாப் பாத்துப் பிடிலேய்…” என்று திட்டியது.

இதைக் கேட்டதும் சுண்டானின் முகம் சுண்டி விட்டது. அப்போதிலிருந்து சுண்டானுக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றிக் கொண்டேயிருந்தது. சுண்டான் இரவெல்லாம் யோசித்து யோசித்து ஒரு திட்டம் தீட்டியது.

காலையில் எழுந்தவுடன், பாம்பானையும், சுட்டானையும், மோதிரானையும், தனித்தனியே பார்த்துப் பேசியது. கட்டையானின் கர்வத்தை அடக்க வேண்டும் என்று தந்திரமாய் பேசியது. எல்லோரும் சேர்ந்து அவனை விரட்டவேண்டும் என்றது. அதை மற்றவர்களும் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் சுண்டான் அதையும் இதையும் சொல்லி மற்ற அனைவரையும் ஏற்றுக் கொள்ளச் செய்து விட்டது. அன்று மாலைவரை கட்டையானுடன் மற்ற நான்கு பேரும் சண்டை போட்டுக் கொண்டேயிருந்தனர். கட்டையான் கோபித்துக் கொண்டு போய் விட்டான்.

கட்டையான் போன பிறகு வேலை கடுமையாகத் தெரிந்தது. இரவில் அனைவரும் உறங்க முற்றவீட்டுக்கு வந்தனர். அயர்ந்து போய் படுக்கலாம் என்று வந்தால் ஒரு தூணும், கூரையின் ஒரு பகுதியும் இல்லை. அது கட்டையானின் இடம். அதனால் அந்த முற்றவீடு ஒரு பக்கமாகச் சாய்ந்து விட்டது. குளிர்ந்த காற்று உள்ளே வர ஏதுவாக இருந்தது. யாராலும் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.

மறுநாள் காலையில் சோர்வுடன் அனைவரும் எழுந்தனர். அன்று வேலையே பார்க்க முடியவில்லை. முன்பு மிக எளிதாக செய்த வேலைகள் இன்று மிகக் கடினமாக இருந்தன. சரியாக உறக்கமும் இல்லாததால் மத்தியானத்துக்குள் நான்கு பேரும் அசந்து விட்டனர். வேலை செய்யவே முடியவில்லை. அப்போதே முடிவு செய்து விட்டனர். போய் கட்டையானைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து விடவேண்டும்.

கட்டையானைக் கூட்டிக் கொண்டு வந்ததும், சுட்டானும்,மோதிரானும், பாம்பானும், சேர்ந்து சுண்டானைக் குறை சொல்ல ஆரம்பித்தனர். சுண்டானை வெளியேற்ற வேண்டும் என்று கூப்பாடு போட்டனர்.

கட்டையான் அவர்களை அமைதிப் படுத்தியது.

“மறுபடியும் சுண்டான் செய்த தவறையே நீங்களும் செய்யக் கூடாது. நான் சுண்டானைத் திட்டியதும் தவறு தான்..நாம் ஐந்து பேரும் ஒற்றுமையாக் இல்லாவிட்டால் இந்த உழைப்பும் அதன் பலன்களும் இல்லை. அதே போல நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது..அதைத் தெரிந்துகொண்டாலே போதும்.. ஒருவருக்கொருவர் பொறாமைப்படவோ, வெறுப்படையவோ தேவையில்லை..” என்று கட்டையான் சொன்னது.

அதைக் கேட்ட சுண்டானும் மனம் நெகிழ்ந்து எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டது.

அன்றிலிருந்து அந்த ஐந்து பேரும் முற்றவீட்டில் சுகமாக வாழ்ந்து வந்தனர்.

Sunday, 12 August 2012

ப்ளம் பழத்தில் கல்

தால்ஸ்தோய்

தமிழில்- உதயசங்கர்

images (2)

அம்மா இரவு உணவுக்குப் பிறகு குழந்தைகள் சாப்பிடுவதற்காக கொஞ்சம் ப்ளம் பழங்களை வாங்கி வைத்திருந்தாள்.எல்லாப் பழங்களையும் ஒரு தட்டில் வைத்து மேஜை மீது வைத்திருந்தாள்.வான்யா இது வரை ப்ளம் பழமே சாப்பிட்டதில்லை.எனவே பழங்களை மோப்பம் பிடித்துக் கொண்டே இருந்தான்.

அவன் அதை மிகவும் விரும்பினான். ஒரு பழத்தையாவது சாப்பிட்டுப் பார்க்க அவனுக்கு அடக்க முடியாத ஆசை வந்தது.பழங்களைச் சுற்றிச் சுற்றியே அலைந்து கொண்டிருந்தான்.சாப்பாட்டுஅறையில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு பழத்தை எடுத்துச் சாப்பிட்டு விட்டான்.அம்மா சாப்பிடுவதற்கு முன்பு பழங்களை எண்ணிப் பார்த்தாள்.ஒரு பழம் குறைந்திருப்பதைக் கண்டு பிடித்தாள்.அவள் உடனே அதை அப்பாவிடம் சொன்னாள்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அப்பா,”குழந்தைகளே, யாராச்சும் ஒரு ப்ளம் பழத்தைச் சாப்பிட்டீங்களா?” என்று கேட்டார்.எல்லோருமே “இல்லை” என்று சொன்னார்கள்.முகம் சிவந்து போன வான்யாவும்,”இல்லை நான் சாப்பிடலை..”என்று சொன்னான்.

அப்பா,”நீங்க யாராச்சும் சாப்பிட்டிருந்தா அது நல்லதில்லை..ஏன்னா ப்ளம் பழத்துக்குள்ளே சின்னக் கல் இருக்கும். அதை எப்படிச் சாப்பிடணும்னு தெரியாம கல்லை முழுங்கிட்டா, கண்டிப்பா அவங்க மறுநாளே செத்துருவாங்க.. அதான் நான் பயப்படறேன்..”என்று சொன்னார்.

இதைக் கேட்டதும் வான்யாவின் முகம் வெளுத்து விட்டது.உடனே அவசர அவசரமாக”நான் அந்தக் கல்லை சன்னல் வழியே தூர எறிஞ்சிட்டேனே..” என்று சொன்னான்.

எல்லோரும் சிரித்தனர்.வான்யாவுக்கு அழுகை வந்தது.

Saturday, 11 August 2012

கடல்பிரயாணத்தில் அதிசயங்கள்

மலையாளத்தில் – மாலி

தமிழில் – உதயசங்கர்

Josies-beach-calm-sea

ஒரு ஊரில் அந்தோணி என்று ஒரு பையன் இருந்தான். அவனுடைய அப்பா ஒரு செம்படவன். அந்தோணியை அவனுடைய அப்பா கடலுக்குள் கூட்டிப் போனதில்லை. ஏனெனில் அந்தோணி ரெம்பவும் சின்னப்பையன். அவனுடைய அப்பா ஒவ்வொரு நாளும் கலையில் தனியே கடலுக்கு மீன் பிடிக்கப் போவார்.

தானும் கடலுக்குப் போகவேண்டும் என்று அந்தோணிக்கு ஆசை தோன்றியது.ஆனால் அவனிடம் படகு இல்லை.துடுப்பு இல்லை. வலை இல்லை. எல்லாவற்றையும் சேகரிக்கவேண்டும்.

அந்தோணி குருவியம்மாவைப் பார்த்தது.

”குருவியம்மா! எனக்கு ஒரு முட்டைத்தோடு தாயேன்..” என்று அது கேட்டது.

“அந்தோணி! நேத்து என்னோட ஒரு முட்டை உடைஞ்சி ரெண்டாயிருச்சி..அதிலிருந்து என்னோட குருவிக்குஞ்சு வந்திருச்சி..உடைஞ்ச அந்த முட்டையோட பாதியை நீ எடுத்துக்கோ..” என்று குருவியம்மா சொன்னது.

அந்தோணி வாத்துமாமாவைப் பார்த்தான்.

”வாத்து மாமா! எனக்கு ஒரு ஜோடி துடுப்பு தாயேன்..” என்று கேட்டான்.

“என்னோட காலில் கட்டுற துடுப்புதானே அந்தோணி! எங்கிட்ட ஆறு ஜோடி துடுப்பு இருக்கு..ஒருஜோடியை நீ எடுத்துக்கோ..” என்று வாத்துமாமா சொன்னது.

அந்தோணி சிலந்தியண்ணனைப் பார்த்தது.

“சிலந்தியண்ணே! எனக்கு ஒரு வலை தாயேன்.” என்று அது வேண்டியது.

“அந்தோணி! நான் ஒரு புது வலை பின்னியிருக்கேன்.. அதை நீ எடுத்துக்கோ..” என்று சிலந்தியண்ணன் சொல்லியது.

அந்தோணி முட்டைதோட்டைக் கடலில் இறக்கினான். அதில் ஏறிக்கொண்டான். பின்பு, வாத்துமாமாவின் துடுப்புகளை வீசினான். அப்படியே கடலுக்குள் சென்று விட்டான். பின்பு சிலந்திவலையை எடுத்து வீசினான்.

சிலந்தி வலையில் ஒரு திமிங்கிலம் சிக்கியது.

“என்னைக் கொல்லாதே!” என்று யாசித்தது.

“உன்னைக் கொல்லாம இருந்தா எனக்கு என்ன தருவே?” என்று அந்தோணி கேட்டான்.

“புதுசா சில அதிசயங்கள காட்டுறேன்..” என்று திமிங்கிலம் சொன்னது.

அந்தோணி திமிங்கிலத்தை சிலந்திவலையிலிருந்து விடுவித்தான். திமிங்கிலம் அந்தோணியின் முட்டைத்தோடுபடகில் ஏறியது.திமிங்கிலமே வாத்துத்துடுப்பினால் தண்ணீரை வலித்தது. அவர்கள் திமிங்கிலத்தின் வீட்டைச் சென்று அடைந்தார்கள். அங்கே திமிங்கிலத்தின் மனைவி, நான்கு குழந்தைகள், இருந்தார்கள். அவர்கள் அந்தோணிக்கு நிறைய பெரிய பந்துகளைக் கொடுத்தனர். பச்சை,நீலம், சிவப்பு, முதலான நிறங்களில் உள்ள பவழப்பந்துகள்.அந்தோணி, திமிங்கிலம், திமிங்கிலத்தின் மனைவி, திமிங்கிலக்குட்டிகள், எல்லோரும் முட்டைத்தோடு படகில் ஏறினர். இப்போது எல்லோரிலும் இளைய திமிங்கிலக்குட்டி படகு வலித்தது.

முன்னால் அடர்ந்த சிவப்பில் ஒரு வெளிச்சம்!.

“என்ன அது?” என்று அந்தோணி கேட்டான்.

“அதுவா கடல்தீ” என்று திமிங்கிலத்தின் மனைவி சொன்னாள்.

கடல் முழுவதும் தீ பிடித்து எரிகிறது. குளிர்ந்த தீ. முட்டைத்தோடுபடகு கடல்தீக்குள் புகுந்து முன்னே சென்றது. அந்தப் பக்கத்தில் என்ன இருக்கிறது? வளைந்தவில் போன்ற பாலம். ஏழு நிறங்களில் அந்தப் பாலம் ஒளிர்ந்தது.

“இது என்ன பாலம்?” என்று அந்தோணி கேட்டான்.

“வானவில்பாலம்..” என்று மூத்த திமிங்கிலக்குட்டி சொன்னது.

இந்தப் பக்கத்துக் கடல், அந்தப் பக்கத்துக்கடல், ரெண்டையும் சேர்ப்பதுதான் வானவில்பாலம். முட்டைத்தோடுபடகு எல்லோருடன் வானவில்பாலத்தில் ஏறி அந்தப் பக்கத்தில் இறங்கியது. அந்தப் பக்கத்தில் மஞ்சள்கடல். அங்கேயும் ஒரு வானவில்பாலம். அதற்கு அப்புறம் வெள்ளைக்கடல். அங்கேயும் ஒரு வானவில்பாலம். அப்படியே தொடர்ந்து போய்க்கொண்டேயிருந்தது.

வெகு நேரம் ஆகி விட்டது.

“அப்பா வருவதற்கு முன்பு நான் வீட்டுக்குப் போகணும்..இல்லேன்னா அப்பா கோபப்படுவார்..” என்று அந்தோணி சொன்னார்.

திமிங்கிலம் வாலினால் தண்ணீரில் மூன்று முறை அடித்தது. முன்னால் ஒரு காற்று வந்து நின்றது. அது ஒரு புயற்காற்று.

“திமிங்கிலசாமி! தங்களுக்கு என்ன வேண்டும்?” என்று புயற்காற்று கேட்டது.

“அந்தோணியை உடனே அவன் வீட்டில் கொண்டு போய் சேர்க்கணும்” என்று திமிங்கிலம் ஆணையிட்டது.

திமிங்கிலம்,திமிங்கிலத்தின்மனைவி, திமிங்கிலக்குட்டிகள்,-எல்லோரும் முட்டைத்தோட்டிலிருந்து இறங்கினார்கள்.அந்தோணி மட்டும் முட்டைத்தோட்டுப் படகில் இருந்தான். புயற்காற்று முட்டைத்தோட்டுப் படகைக் கையில் எடுத்தது. பின்பு ஒரே ஊது! முட்டைத்தோடுப்படகு வானத்தில் பறந்து போய்விட்டது. அஞ்சே அஞ்சு நிமிசம். முட்டைத்தோடுபடகு, அந்தோணி, வாத்துத்துடுப்பு, சிலந்திவலை, எல்லாம் அந்தோணியின் வீட்டில் இருந்தார்கள்.

அந்தோணி முட்டைத்தோட்டை குருவியம்மாவுக்குக் கொடுத்தான். வாத்துதுடுப்புகளை வாத்துமாமாவிடம் கொடுத்தான்.சிலந்திவலையை சிலந்தியிடம் கொடுத்தான்.

மாலையில் அப்பா வந்தார். அந்தோணி எல்லாவற்றையும் விவரமாக சொன்னான்; எள்ளளவு வித்தியாசமும் இல்லாமல்.

அப்பா சொன்னார்: “நான் நம்புறேன்..”

Friday, 10 August 2012

பாய்மரப்பாடல்

உதயசங்கர்

Mohan Das (17)

ததும்பிக் கொண்டிருக்கிறது என் கோப்பை

பீத்தோவனின் இசைக்கோர்வையை

தன் உடலில் வரைந்து திமிறிய

கடலின் அலைகளைப் போல

உயர்ந்தும் தாழ்ந்தும்

எதையோ வேண்டுகிறது உன்னிடம்

துடிதுடிப்புடன் தன் இதயத்தை

உன் திசை நோக்கிப் படகாய் செலுத்துகிறது 

உயிர்க்காற்றின் காதலைச்

சடசடக்கும் பாய்மரத்துணியில் 

பாடல்களாய் எழுதுகிறது 

நடுங்கும் உன் உதடுகளின்

கரைகளில் சலசலக்கும் சிற்றோடையாய்

ஊர்ந்து உன் உயிரை

என் கடலில் முத்தெடுக்க

அழைக்குமென் கோப்பையின்

குரல் கேட்கிறதா?

ததும்பும் என் கோப்பைக்கும்

உன் உதடுகளுக்கும் உள்ள தூரத்தில்

ஊஞ்சலாடுகிறது.

என் வாழ்வும் சாவும்

புகைப்படம் – மோகன்தாஸ் வடகரா

Thursday, 9 August 2012

ரத்தக்காட்டேரி டிரைவர்

 

ஹாருகி முரகாமி

 

ஆங்கிலத்தில்- கிகி

 

தமிழில்- உதயசங்கர்

113553-haruki-murakami

சில நேரங்களில் மோசமான விஷயங்களும், மோசமான அதிர்ஷ்டமும் சேர்ந்து குவியும். ஆனால் அது ஒரு பொதுக்கருத்து தான். எனினும் ஒரே மனிதனுக்கே தொடர்ந்து மோசமான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தால், மேலும் மேலும் அது குவிந்து கொண்டேயிருந்தால், அப்புறம் அது ஒருபோதும் பொதுவானதில்லை. அது தனிப்பட்டதாக மாறி விடுகிறது. அந்த வகையில் பொதுக்கருத்து என்று யோசிப்பது எந்த உதவியும் செய்யாது. ஏனெனில் அது அனுதாபத்தையே விரும்புகிறது. இப்படி இந்த விஷயங்கள் எல்லாம் இன்று எனக்கு நடந்தது என்று எண்ணிப்பாருங்கள். நான் யாருக்காகக் காத்துக் கொண்டிருந்தேனோ அந்தப் பெண்ணைத் தவற விட்டுவிட்டேன். என்னுடைய உள்ச்சட்டையின் பொத்தானைக் காணவில்லை. நான் சந்திக்க விரும்பாத ஒருவரை ரயிலில் சந்தித்தேன். பல்வலியின் முதல் குத்தல்வலியை உணர்ந்தேன். அப்புறம் இப்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. நான் ஒரு வாடகைக்காரில் மாட்டிக் கொண்டேன். ஒரு விபத்து காரணமாக போக்குவரத்து குழப்பத்தில் சிக்கிக் கொண்டேன். யாராவது இதையெல்லாம் பொதுவான விஷயங்கள் என்று சொன்னால் அவரைக் கல்லைக் கொண்டு எறிவேன். நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களில்லையா?

இதனால் தான் மற்றவர்களோடு ஒத்துப்போவது ரெம்பக் கஷ்டமாக இருக்கிறது. சிலசமயங்களில் நான், என் வாழ்க்கையை வாசலில் கிடக்கும் ஒரு நல்வரவுப்பாயாகக் கற்பனை செய்கிறேன். வாசலில் கதவுக்கருகில் சும்மா கிடந்துகொண்டு என்னுடைய நேரத்தையெல்லாம் கழித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அநேகமாக நல்வரவுப்பாய் உலகத்திலும் ஒருவர் பொதுமைப்படுத்தவும் கூடும். நல்வரவுப்பாய்களுக்கும் அவர்களுக்கேயுரித்தான பிரச்னைகள் இருக்கும், அவர்களுக்கேயுரிய உயர்வுதாழ்வுகள் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாம் என்ன செய்ய முடியும்? இது பெரிய விஷயமாக இல்லாமலும் இருக்கலாம்.

எது எப்படியோ நான் ஒரு வாடகைக்காரில் போய்க் கொண்டிருக்கிறேன். மாட்டிக்கொண்ட உணர்வுடனும், சிக்கிக் கொண்ட உணர்வுடனும். காரின் மேற்கூரையில் மழை விழுந்து அடிக்கிறது. என்னால் விட்டு விட்டு வரும் மீட்டரின் கிளிக் ஓசையைக் கேட்க முடிகிறது. காரின் கூரை மீது மழை மோதும் சத்தம் ஒரு இயந்திரத்துப்பாக்கியால் என் மூளையைத் துளைப்பது போல இருக்கிறது.

விஷயங்கள் இன்னும் சிக்கலாகுவதற்குக் காரணம் நான் மூன்று நாட்களுக்கு முன்பு தான் சிகரெட்டை விட்டிருந்தேன். நான் எதையாவது யோசித்து நேரம் போக்க முயற்சி செய்தேன். ஆனால் மூளையில் எதுவும் தோன்றவில்லை. அதனால் நான் ஒரு பெண் வரிசைக்கிரமமாக ஆடை கழற்றுவதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தேன். முதலில் கண்ணாடி, பின்னர் கைக்கடிகாரம், அடுத்தது மென்மையான உலோகச் சத்தத்துடன் கழற்றப்படுகிற பிரேஸ்லெட், அதன் பிறகு………..

“ மன்னியுங்கள் “ காரின் டிரைவர், சட்டையின் முதல் பொத்தானை கழற்றுகிற் என் கவனத்தைத் திருப்பிக் கேட்டார்.

“ ரத்தக்காட்டேரிகள் உண்மையில் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? “

“ ரத்தக்காட்டேரிகள்? “ என்று திருப்பிச் சொன்ன நான் அமைதியாகி விட்டேன். நான் காரின் பின்னோக்குக் கண்ணாடி வழியே டிரைவரைப் பார்வையிட்டேன். அவரும் திருப்பி பின்னோக்குக் கண்ணாடி வழியே என்னைப் பார்த்தார்.

“ ரத்தக்காட்டேரிகன்னு நீங்க சொல்றது ரத்தத்தைக்குடிக்கும் பிராணிகளையா? “

“ ஆமாம்.. அவைகள் இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்களா? “

“ சினிமாக்களில் ரத்தக்காட்டேரிகள்..பறக்கிற வௌவால்களா பாத்திருக்கேன்.. ஆனால் நிஜத்தில்….? “

“ அதே தான்.. அதே தான்..” அவர் பதிலளித்தார். கார் இரண்டடி தூரம் முன்னுக்குச் சென்றது.

“ எனக்குத் தெரியாது.. அதைப்பத்தி யோசிச்சதில்லை..” என்றி நான் சொன்னேன்.

“ இது பதிலில்லை..நீங்க நம்பறீங்களா..?நம்பலையா..? அதுக்கு எனக்குப் பதில் சொல்லுங்க…”

“ நான் ரத்தக்காட்டேரிகளை நம்பல…”

“ அப்படின்னா நீங்க ரத்தக்காட்டேரிகள் இருக்குன்னு நம்பல… சரிதானே..? “

“ நான் ரத்தக்காட்டேரிகளை நம்பல..” நான் என் பைக்குள்ளிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து அதை என் வாய்க்குள் வேகமாகத் திணித்தேன். அதைப் பற்ற வைக்காமல் விட்டு விட்டேன்.

“ சரி..பேய்களைப்பற்றி என்ன நெனக்கிறீங்க.. பேய்கள நீங்க நம்பறீங்களா..? “

“ பேய்கள் இருக்குன்னு உணர்றேன்..”

“ நான் உங்க உணர்தலைப் பற்றிக் கேட்கல.. பேய்கள் இருக்குன்னு நீங்க நெனைக்கிறீங்களா இல்லையா? அது தான் என் கேள்வி.. எனக்கு நீங்க ஆமாம் அல்லது இல்லைன்னு சொல்லுங்க…”

“ ஆமாம்.. நான் பேய்களை நம்பறேன்..” நான் உளறினேன்.

“ ஆனால் நீங்க ரத்தக்காட்டேரிகளை நம்பல..”

“ இல்லை.. நான் நம்பல..”

“ சரி ரத்தக்காட்டேரிகளுக்கும் பேய்களுக்கும் என்ன வித்தியாசம் ?

“ பேய்கள் லௌகீக உலகத்தின் எதிர்கோட்பாடு..” என்று நான் மென்று விழுங்கினேன். அது மடத்தனம் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஆனால் இப்படிப் பட்ட மடத்தனங்களைக் கொட்டுவது என்னுடைய பலங்களில் ஒன்று.

“ ம்ம்ம் ”

“ ஆனால் ரத்தக்காட்டேரிகள் நம்முடைய உடலிருப்பின் சிதைவு.. அவைகள் உடல் என்று சொல்லப்படுவதிலிருந்து மாறி விடுகின்றன. “

“ சரி.. பேய்கள் இந்த உலகத்தின் எதிர்கோட்பாடு என்பதை ஏற்றுக் கொண்டேனானால் பின் எப்படி நான் அதே இருத்தலின் சிதைவு தான் ரத்தக்காட்டேரிகள் என்ற யூகத்தை எப்படி நான் ஏற்றுக் கொள்ள முடியும்? “

“ ம்ம்ம்.. இது நல்ல கேள்விதான்.. அப்படின்னா அது முடிவில்லாத சந்தேகங்களை திறந்து விடுகிறது..இல்லையா? “

“ நீங்க புத்திசாலி.. உங்களுக்குத் தெரியுமா? “ என்று சொல்லி என்னைப் பார்த்து கார் டிரைவர் புன்னகைத்தார்.

“ அதைப் பத்தி எனக்குத் தெரியாது.. நான் ஏழு வருஷத்துக்கு முன்னால காலேஜிலிருந்து பட்டம் வாங்கியிருக்கேன்..”

என்று சொன்னேன். டிரைவர் தொடர்ந்து காரை ஒரு அங்குலம் முன்னுக்கு நகர்த்திக் கொண்டிருந்தார். அவர் ஒரு மெலிந்த சிகரெட்டை வாயில் வைத்து எங்களுக்கு முன்னால் உள்ள கார்களைப் பார்த்தபடியே அதைப் பற்ற வைத்தார். ஒரு இனிப்பு வாசனை காருக்குள் பரவியது.

” ஆனால் ஒருவேளை ரத்தக்காட்டேரிகள் உண்மையிலேயே இருந்தா.. அப்ப எப்படி? “

” அப்படியிருந்தா அது கொஞ்சம் கவலைப்படவேண்டிய விஷயம் தான்.. இல்லையா ?”

” அது போதும்னு நெனைக்கிறீங்களா? “

” இல்லை.. உண்மையில அப்படியில்ல..”

” நீங்க சொல்றது சரி தான்.. ஆனாலும் நம்பிக்கையைப் பற்றி யோசிங்க.. அது உண்மையிலே உயர்ந்தது.. அது மலைகளையே நகர்த்தி விடும்.. உங்களுக்குத் தெரியுமா நீங்க ஒரு மலை இருக்குன்னு நம்புனீங்கன்னா அது இருக்கும்.. நீங்க நம்பலைன்னா அது இருக்காது..”

ஏதோ ஒரு காரணத்தினால் அது எனக்கு ஒரு பழைய டோனோவன் பாடலை ஞாபகப்படுத்தியது.

” அது சரி தானா? “

” சரி தான் “

நான் ஆழ்ந்த பெருமூச்சை விட்டேன். பற்ற வைக்காத சிகரெட் என் வாயில் இன்னமும் இருந்தது.

” சொல்லுங்க நீங்க ரத்தக்காட்டேரிகளை நம்பறீங்களா? “

” ஆமாம்.. நான் நம்பறேன் “

” ஏன்? “

” ஏன்னா..? நான் நம்பறேன்.”

” உங்களால நிருபிக்க முடியுமா? “

” நம்பிக்கைக்கும் அத்தாட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை..”

” நீங்க அப்படிச் சொன்னா….” நான் மறுபடியும் அந்தப்பெண்ணின் சட்டைப் பொத்தான்களிடம் சென்றேன். ஒன்று, இரண்டு, மூன்று..

” ஆனால் என்னால நிருபிக்க முடியும்..”

என்று அந்த டிரைவர் சொன்னார்.

” உண்மையாகவா? “

” உண்மையாக “

” எப்படி ? “

” ஏன்னா நான் ஒரு ரத்தக்காட்டேரி..”

நாங்கள் சற்று நேரம் அமைதியாக இருந்தோம். கார் ஒரு பதினைந்து அடி தூரத்துக்கு மேல் போகவில்லை. மழை தொடர்ந்து கூரை மீது அடித்துக் கொண்டிருந்தது. மீட்டர் 1500 யென்னுக்கு மேல் காண்பித்தது.

“ கொஞ்சம் உங்க லைட்டரைத் தரலாமா? ”

“ நிச்சயமா.. ஒண்ணும் பிரச்னையில்லை..”

நான் என் சிகரெட்டை அவனுடைய வெள்ளை லைட்டரினால் பற்ற வைத்தேன். மூன்று நாட்களுக்குப் பின் முதல் முறையாக என்னுடைய நுரையீரல் முழுமைக்கும் நிகோட்டினால் உணவளித்தேன்.

” நாம ரெம்ப நேரமா இங்க சிக்கிக்கிட்டிருக்கோம்.. இல்லையா? “

” நிச்சயமா.. ரத்தக்காட்டேரிகளைப் பற்றி பேசிக் கொண்டே..” என்று நான் பதிலளித்தேன்.

” ஆமாம் “

” நீங்க உண்மையிலே ஒரு ரத்தக்காட்டேரியா..? “

” ஆமாம். நான் ரத்தக்காட்டேரி தான் அதொண்ணும் நான் பொய் சொல்ற விஷயம் இல்ல..”

” நானும் அப்படி நெனக்கல.. எவ்வளவு நாளா நீங்க ரத்தக்காட்டேரியா இருக்கீங்க..”

’ பத்து வருசத்துக்கும் மேலே.. மூனிச் ஒலிம்பிக்ஸ் காலத்திலிடருந்து இருக்கும்னு நினைக்கிறேன்..”

” எனக்கு ஞாபகமிருக்கு… மார்க் ஸ்பிட்ஸ், ஒல்கா கோர்பட். சில இஸ்ரேலியர்களும் கொல்லப் பட்டாங்க இல்லையா? “

“ ஆமாம் நானும் அப்படித்தான் நெனைக்கிறேன்..”

” நான் இன்னொரு கேள்வி கேட்கலாமா? “

” கேளுங்க..”

” ஏன் நீங்க கார் ஓட்டுறீங்க..”

” நான் வழக்கமான இன்னொரு ரத்தக்காட்டேரியா இருக்க விரும்பல.. ஒரு நீண்ட அங்கியை அணிந்து கொண்டு வண்டியை ஓட்டிக் கொண்டு..இல்லைன்னா பாழடைந்த கோட்டையில வாழ்ந்து கொண்டு… சுத்தமோசம்.. நான் உங்களை மாதிரி தான்.. நாங்க யாரும் அவ்வளவு வித்தியாசமானவங்க இல்ல.. நானும் வரி கட்டறேன்.. உங்களுடையதைப் போலவே என்னுடைய ஹாங்கோ ஸ்டாம்பும் நகரத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.. நான் டிஸ்கோதெ போகிறேன். பச்சின்கோ விளையாடுகிறேன். இதெல்லாம் விசித்திரமா இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்களா? “

“ இல்ல.. உண்மையில இல்ல.. ஆனால் நாம இரண்டு பேரும் ஒண்ணுபோல கிடையாது இல்லையா? “

“ என்ன விஷயம்? நீங்க என்னை நம்பலையா?”

“ நான் உங்களை நம்பறேன்.. நீங்க மலை இருக்குன்னு நம்பினா அது இருக்கும்..”

என்று நான் வேகமாகச் சொன்னேன்.

“ சரி பிறகு..”

“ அப்படின்னா நீங்க சில சமயம் ரத்தம் குடிப்பீங்க..”

“ ஆமாம் என்ன இருந்தாலும் நான் ரத்தக்காட்டேரி தானே..”

“ சொல்லுங்க சில ரத்தம் மத்ததை விட ருசியா இருக்குமா? “

“ ஆமாம்.. உண்மைதான்.. உதாரணத்துக்கு உங்களோட ரத்தம் நல்லதில்லை.. ஏன்னா நீங்க ரெம்ப புகைக்கிறீங்க..”

“ ஆனால் நான் கொஞ்ச காலத்துக்கு அதை விட்டிருந்தேன்.. ஆனால் நான் நினைக்கிறேன் அது ஒரு விஷயமில்லை..”

“ ரத்தம் குடிக்கிறதைப் பத்தி பேசுறதுன்னா நான் பெண்களோட ரத்தத்தைத் தான் தேர்ந்தெடுப்பேன்கிறதை ஒத்துக்கிறேன்… உண்மையிலேயே..”

“ இது ஒத்துக்கிற மாதிரி இருக்கு..சரி எந்த நடிகையிடம் சுவையான ரத்தம் இருப்பதாக நீங்க நினைக்கிறீங்க..? “

“ நான் என்னோட பற்களை கயோகோ கிசிமோடோவின் கழுத்தில் பதிக்க விரும்புவேன். அப்புறம் கிமி சிங்யோஜியின் ரத்தமும் சுவையானது தான். ஆனால் எனக்கு காரிமோமோய் மீது ஆர்வமில்லை. அவள் சுதந்திரமானவள்..”

“ ரத்தம் குடிப்பது நல்லதா? “

“ ஆமா எனக்கு..”

நாங்கல் பதினைந்து நிமிடத்துக்குப் பின்னர் பிரிந்து விட்டோம். நான் என்னுடைய அபார்ட்மெண்டுக்குள் நுழைந்தேன். விளக்கைப் போட்டு விட்டு குளிர் சாதனப்பெட்டியிலிருந்து ஒரு பியரை எடுத்தேன். அதன் பிறகு நான் மதியத்துக்கு முன்னால் தவறவிட்ட பெண்ணை அழைத்தேன். நான் கூப்பிட்டது சும்மா அன்றைய தினம் நாங்கள் ஒருவரையொருவர் பார்க்கவில்லையென்ற காரணத்துக்காகத் தான்.

“ கேளு.. கொஞ்ச நாளைக்கு கருப்பு வண்ணம் பூசிய நகர் நம்பர் பிளேட் உள்ள கார்களில் பயணம் செய்யக்கூடாது.. சரியா?”

“ ஏன் கூடாது? “

“ ஏன்னா அந்தக் கார் டிரைவர் ஒரு ரத்தக்காட்டேரி..”

“ உண்மையாகவா?”

“ உண்மையாக “

“ நான் கவலைப் படணுமா? “

“ ஆமாம் “

“ அப்ப்டின்னா நான் கருப்பு வண்ணம் பூசிய நகர் நம்பர் பிளேட் உள்ள கார்களில் பிரயாணிக்கக் கூடாது.. சரியா..? “

“ ஆமாம் “

“ நன்றி “

“யு ஆர் வெல்கம்..”

” குட் நைட் “

“ உனக்கும் “

நன்றி – நற்றிணை காலாண்டிதழ்

Wednesday, 8 August 2012

ஆரோக்கியமும் மருத்துவமும்

உதயசங்கர்

Mohan Das (63)

மருத்துவம் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது ஆங்கில மருத்துவம் தான். சுமார் இருநூற்றைம்பது ஆண்டு கால வெள்ளையர்களின் ஆட்சி நமக்குத் தந்த சீதனங்களில் இந்த ஆங்கில மருத்துவமும் ஒன்று. நம்முடைய ஆதி மருத்துவமுறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ஆங்கில மருத்துவ முறையை மறுதலித்துப் பிறந்த ஹோமியோபதி மருத்துவம், சீன மருத்துவமுறைகளான அக்குபஞ்சர், அக்குப்பிரசர் மருத்துவம் என்று மருத்துவமுறைகள் இருந்தாலும் எல்லோருக்கும் நினைவில் வருவது ஆங்கில மருத்துவமுறை மட்டும் தான். அது மட்டுமல்ல ஆங்கில மருத்துவ முறை தவிர்த்த மற்ற மருத்துவ முறைகள் குறித்து கேலியான சிரிப்புடன் நாட்டு வைத்தியம் என்று பொதுப்படையான பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். எப்படி நம்முடைய தாய்மொழியான தமிழையே வாசிக்கவும், எழுதவும் தெரியாமல் பல தலைமுறைகள் வளர்ந்து கொண்டிருப்பதோடு, அதைக் கேவலமாகவும் நினைக்கிற மனோபாவமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில் என்ன நோய் என்றாலும் ஆங்கிலமருத்துவம் என்ற சிந்தனை பரவியிருப்பதில் ஆச்சரியமில்லை.

முதலாளித்துவத்தின் நுகர்வுக் கலாச்சாரத்தில் பொருட்கள், உடைகள், உணவு, நீர், ஆரோக்கியம் எல்லாமே சந்தையில் விற்பனை செய்கிற பொருட்கள் தான். கொசுக்களை ஒழிப்பதை விட கொசுக்களை விரட்டுவதற்கான கொசுக்கொல்லிகளை விற்பனை செய்வது தான் முதலாளித்துவத்துக்கு உகந்தது. எதில் எதிலெல்லாம் லாபம் சம்பாதிக்க முடியுமோ அதில் எல்லாம் தன் கை வரிசையைக் காட்டுவதோடு மட்டுமல்ல அதற்கான நுகர்வோராக நம் மனநிலையை வசியப்படுத்தி நம்மைத் தயாரிப்பதிலும் கில்லாடி. அதனால் தான் இன்று பெரும்பாலான குடும்பங்களில் மருத்துவத்துக்காக தங்கள் வருமானத்தில் பாதிக்கு மேல் செலவு செய்ய நேரிடுகிறது. ஒரு தும்மல் போட்டாலும் சரி, ஒரு நாள் தலைவலி, காய்ச்சல் என்றாலும் சரி, மருத்துவமனையை நோக்கி படையெடுக்கிறோம். அதுவும் குழைந்தைகளுக்கென்றால் கேட்கவே வேண்டாம். அங்கு மருத்துவரும் ரத்தம், மலம், நீர், எக்ஸ்ரே,( இது இப்ப ரெம்பப்பழசு ), ஸ்கேன் என்று ஏராளமான டெஸ்டுகளை எடுக்கச் சொல்கிறார். எல்லா டெஸ்டுகளையும் எடுத்த பிறகு அவர் ஒரு முடிவுக்கு வந்து மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார். அத்துடன் எதிர்காலத்தில் இதனால் ஆபத்திருக்கிறது என்று பயமுறுத்தவும் செய்கிறார். தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். பெற்றோர்களும் சாதாரண சளித்தொந்தரவை எம் பிள்ளைக்கு பிரைமரி காம்ப்ளக்ஸ் என்ற ஆங்கில வார்த்தையை உச்சரிப்பதில் தாங்கள் குழந்தை மீது கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறார்கள். மருந்து, மாத்திரைகள், டானிக்குகள் ( டானிக்குகளின் மீது அப்படி என்ன தான் மோகமோ ! ) ஆனால் உண்மையில் நடப்பதென்ன தெரியுமா?

குழந்தைகளோ, பெரியவர்களோ, நோயினால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் தொடர்ந்து சாப்பிடும் இந்த மருந்து மாத்திரைகளினாலும், டானிக்குகளினாலும் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் சரி தேவைக்கு அதிகமாக தொடர்ந்து எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகள் நம்முடையை உடலின் நோய்/மருந்து ஏற்கும் திறனை வெகுவாகப் பாதிக்கும். அதாவது நம்முடைய உடலின் தற்காப்பு செயல்முறைகளைப் பாதிப்பது மட்டுமல்லாமல் உடலின் முக்கிய உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகம், இதயம், ஆகியவற்றையும் பாதிக்கும். நாளாவட்டத்தில் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்புசக்தி குறைந்து எல்லாவற்றுக்கும் மருந்துகளைச் சார்ந்தே வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும். அப்படியானால் மருந்துகளே வேண்டாமா?

குழந்தைகளின் நோய்களில் பெரும்பாலானவை ஒவ்வாமையினால் உருவாகிறது. குளிர், அல்லது வெப்பம் ஒவ்வாமை, உணவு ஒவ்வாமை, தூசி ஒவ்வாமை, மலச்சிக்கல், மன அழுத்தம், இவற்றில் பெரும்பாலான ஒவ்வாமைகளை தவிர்த்தாலே நோய் வராது. ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான உடல், மற்றும் மன அமைப்புடனே பிறக்கின்றன. அது மட்டுமல்ல ஒவ்வொரு குழந்தையும் வெப்பம்தாங்கிகளாகவோ, குளிர்தாங்கிகளாகவோ, இரண்டையும் தாங்க முடியாதவர்களாகவோ, தங்களுக்கென்று தனித்துவமான வெப்பமானியுடன் பிறந்து வளர்கிறார்கள். வெப்பம்தாங்கிகளுக்குக் குளிர் ஒத்துக் கொள்ளாது, குளிர் தாங்கிகளுக்கு வெப்பம் ஒத்துக் கொள்ளாது, இரண்டுமே ஒத்துக் கொள்ளாத குழந்தைகளும் உண்டு. மிதமான வெப்பம் அல்லது குளிர் மட்டுமே ஒத்துக் கொள்ளும். இதற்கு மாறான சீதோஷ்ணநிலைகள் குழந்தையின் உடல்நிலையில் மாறுபாட்டை உண்டுபண்ணும். பெற்றோர்கள் இவற்றையெல்லாம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். இதற்கு பெரிய மருத்துவர்களோ, ஆய்வுகளோ தேவையில்லை. ஒரு குழந்தைக்கு வெயில் காலத்தில் அதிகமான வியர்க்குருக்களோ, வேனல்கட்டிகளோ வருமென்றால் அந்தக் குழந்தை வெப்பம் தாங்க முடியாதவர்களாக அதாவது குளிர்தாங்கிகளாக இருக்கும். அதேபோல ஒரு குழந்தை குளிர் காலத்தில் சளி, இருமல், தும்மல், என்று அதிகமான சளித்தொந்தரவுகளால் சங்கடப்படுமானால் அந்தக் குழந்தை குளிர்தாங்க முடியாததாக அதாவது வெப்பம் தாங்கியாக இருக்கும். இன்னும் சில குழந்தைகள் வெப்பத்தையும் தாங்காது, குளிரையும் தாங்காது, மிதமான சீதோஷ்ணநிலையில் நன்றாக இருக்கும். மற்ற காலங்களில் ஏதாவது தொந்திரவுகள் இருந்து கொண்டேயிருக்கும்.

இது எல்லோருக்கும் பொருந்தும். நாம் அனைவருமே தனித்துவமானவர்கள் என்பதால் நம் உடலில் மாறுமை அல்லது நோய் வந்தால் அதுவும் தனக்கே உரிய தனித்தன்மையுடன் இருக்கும். உதாரணத்துக்கு இருமல் வெளிக்காற்றில் ஒருவருக்கு வராது. ஆனால் வீட்டுக்குள் அதிகமாக வரும். இது அந்த நபரின் தனித்தன்மையான இருமல். சிலருக்கு இரவில் மட்டுமே இருமல் வரும். சிலருக்கு இரவோ, பகலோ, கீழே தலையைச் சாய்த்தவுடன் வரும். நிமிர்ந்து உட்கார்ந்தால் வராது. சிலருக்கு தூங்கி எழுந்தவுடன் இருமல் வரும். அதன் பிறகு இருக்காது. ஆனால் நோய் என்னவோ இருமல் தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கே உரிய தனித்தன்மையுடன் அது வெளிப்படுகிறது. நம்முடைய ஆதி மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோ, மருத்துவமுறைகள் இந்தத் தனித்தன்மையைக் கணக்கில் எடுத்துக் கொண்டே நோய்க்கான மருந்தைத் தெரிவு செய்கின்றன. ஆனால் ஆங்கில மருத்துவ முறைக்கு தனித்துவம் பற்றிக் கவலையில்லை. அது அதன் அடிப்படைத் தத்துவத்திலேயே கிடையாது. எனவே மேலே சொன்ன அத்தனை வகையான இருமலுக்கும் ஒரே மாதிரியான மருந்துகளையே தரும். இப்படி நோயாளிகளை தனித்துவமிக்க மனிதர்களாகப் பார்க்காமல் மந்தைகளாகப் பார்த்து மொத்தமாக ஒரே விதமான மருந்துகளைத் தருகின்றது. இதனால் ஒவ்வொரு உயிரின் தனித்துவமிக்க உடற்செயல்பாட்டியல் மாறுகிறது. அது மட்டுமில்லை. பக்க விளைவுகள் இல்லாத மருந்துகளே ஆங்கில மருத்துவத்தில் கிடையாது.

சேவையாக இருந்த மருத்துவம் இன்று செல்வம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளதால் மருத்துவர்களும் மருத்துவ அறவுணர்வின்றி, மனிதாபிமானமின்றி, சக மனிதன் என்ற அநுதாபமின்றி, பணத்தைக் கறப்பதிலேயேக் குறியாக இருக்கின்ற அவலநிலை இருக்கிறது. இதனால் தேவையில்லாத டெஸ்டுகள், தேவையில்லாத மருந்துகள், தேவையில்லாத ஊசிகள், தேவையில்லாத டானிக்குகள், என்று நோயாளியின் உயிரோடு விளையாடுகிறார்கள். தாங்கள் பணம் சம்பாதிக்க நோயாளியின் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. மருத்துவக்கல்வி தனியார் கைவசம் போனபிறகு ஒருவர் மருத்துவக்கல்வியை முடிக்க கிட்டத்தட்ட இருபது லட்சம் ரூபாய் செலவாகிறது. அவர் படித்து முடித்தவுடன் அதைச் சம்பாதிக்க வேண்டும், அதற்கு மேலும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதன் விளைவாக நோயாளிகளை பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளிடம் பணயம் வைத்து தன் வசூல் வேட்டையை நடத்துகிறார். இது தான் இன்றைய பொதுவான சூழ்நிலை. இதில் விதிவிலக்குகள் இருக்கலாம்.

ஆரோக்கியம் பற்றி, நோய்களைப் பற்றி குறிப்பாக எந்தெந்த நோய்களுக்கு மருந்து சாப்பிடவேண்டும், எதுஎதற்குத் தேவையில்லை என்று கல்வி கற்கும் போதே கற்பித்திருந்தால் இத்தனை மருந்துக் கடைகளுக்கு வேலையிருக்காது. அதோடு நம்முடைய ஆதி மருத்துவமுறைகளை அரசாங்கம் ஆதரித்து அந்த மருத்துவமுறைகளைப் பரப்புவதற்கான வழிமுறைகளைச் செய்ய வேண்டும். மக்களும் கடன் வாங்கியாவது ஆங்கில மருத்துவத்தில் தான் சிகிச்சை செய்வேன் என்ற மந்தை மனோபாவத்தை விட்டு நம்முடைய மருத்துவ முறைகளுக்குப் போக வேண்டும். நம்முடைய ஆதி மருத்துவ முறைகளில் பக்கவிளைவுகள் கிடையாது. ஒருவருடைய நோயின் தனித்தன்மையைப் பார்த்து மருந்துகள் கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. மீண்டும் அந்த நோய் வருவதில்லை. ஒப்பீட்டு நோக்கில் ஆங்கில மருத்துவத்தை விட எளிமையானது. அதிக செலவில்லாதது. இத்தனை சாதகங்கள் நம்முடைய மருத்துவ முறைகளில் இருக்கின்றன.

அதற்காக ஆங்கில மருத்துவ முறையே வேண்டாம் என்று சொல்ல வில்லை. அறுவைச் சிகிச்சை, விபத்தில் உயிர்காப்பு, மாற்று அறுவைச்சிகிச்சை, போன்ற துறைகளில் ஆங்கில மருத்துவத்தின் பணி அளப்பரியது. ஒருங்கிணைந்த மருத்துவ முறையே இப்போதைய தேவை. நோயின் தன்மைக்கேற்ப அது சித்தா, அல்லது ஆயுர்வேதம்,அல்லது யுனானி அல்லது ஹோமியோ அல்லது அக்குபஞ்சர், அல்லது அக்குபிரஷர், அல்லது ஆங்கில மருத்துவமுறையாக இருக்கலாம். இத்தகைய ஒருங்கிணைந்த மருத்துவமுறையே எதிர்காலத்தில் ஒரு வலுமிக்க சமுதாயத்தை உருவாக்கும்.

நன்றி – இளைஞர் முழக்கம்

புகைப்படம் – மோகன்தாஸ் வடகரா

Tuesday, 7 August 2012

இறப்புச் சடங்குகளின் பின்னால்..

 

உதயசங்கர்

imagesCAUS9Z8Z

ஒவ்வொரு மனிதனின் பிறப்பிலிருந்தே சடங்குகள் தொடங்கி விடுகின்றன. ஆதி இனக்குழுச் சமூகத்தில் கருக்கொண்ட இந்த சடங்கியல் முறைகள் தாங்கள் அறியாத இயற்கையின் மர்மங்களை விளங்கிக் கொள்ளும் முயற்சியாகவும், இயற்கையைச் சாந்தப்படுத்துகிற முயற்சியாகவும், உற்பத்தி, வளமைக்கான வேண்டுதலாகவும், பிரார்த்தனையாகவும், கொண்டாட்டமாகவும் உருவாகி நிலை பெற்றிருக்கின்றன. இந்த முயற்சிகளை வேறு குறியீடுகளினால் பிரதிநிதித்துவம் செய்து மொழியின் மூலம் மந்திரங்களாகவும், சாங்கியம் என்று சொல்லப் படுகிற செய்முறைகளில் உருவாக்கப்படும் விசித்திரமான , குழந்தைத்தனமான, அகவயமான செயல்களே தொன்மங்களாகின்றன. இந்தத் தொன்மங்கள் என்பவை ஆதி மனிதன் இந்த உலகைப் புரிந்து கொண்ட விதத்தைக் குறிக்கும் உருவகங்களே. அதனால் இது கலையோடு நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. இவற்றில் தர்க்கஞானத்தை புகுத்த முடியாது. உணர்வுநிலையில் மட்டுமே இயங்கக் கூடியது. திரும்பத் திரும்ப ஒலிக்கப்படும் ஒரே மாதிரியான ஒலிக்குறிப்புகளும் அதன் விசித்திரமான சூழலும் அதைச் செய்கிறவரின் வித்தியாசமான உடல்மொழியும் அதில் ஈடுபடுகிற சாதாரண மக்களின் மனதில் ஒரு உளவியல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தங்கள் கோரிக்கைகள், வேண்டுதல்கள், கேட்கப்பட்டு விட்டதாக, அல்லது சாந்தியடைந்து விட்டதாக மனதில் ஒரு திருப்தி ஏற்படுகிறது. இனி கேடுகள் எதுவும் வராது என்று மனம் நம்புகிறது. அந்த நம்பிக்கையே வாழ்வை மேலே அடுத்தடுத்து கொண்டு செலுத்த உதவுகிறது.

ஆதி மனித உணர்வுகளை சடங்கியல்களை இறுகிய வடிவமாக நிறுவனமயமாக்கப்படும் சமயம் மாற்றுகிறது. அது மட்டுமல்லாமல் அந்தச் சடங்குகளைச் செய்ய உளவியல் ரீதியான நிர்ப்பந்தமும் கொடுக்கிறது. சமயத்தின் நடைமுறைகளையும், தெய்வீகக்கதைகளையும் புகுத்தி மக்கள் மனதை வசப்படுத்துகிறது. மக்களை கட்டாயப்படுத்துகிறது. இந்த நடைமுறைகளிலும், புராணக்கதையாடல்களிலும் சமயத்தின் தத்துவக்கூறுகளை நிலை நிறுத்தி சமூகத்தில் தன்னையும், சமூக உற்பத்தி முறையையும் உறுதிப்படுத்துகிறது. உற்பத்திமுறைகள் மாற, மாற சமயம் அதற்கேற்ப விஞ்ஞான விளக்கங்களையும் கொடுத்துக் கொள்கிறது. இதன் மூலம் மக்கள் மனதில் எந்த விதமான சந்தேகங்களோ, கேள்விகளோ வரவிடாமல் சமயம் பார்த்துக் கொள்கிறது.

இயற்கையில் எல்லாப்பொருட்களும் மாற்றத்துக்குரியது. மாற்றம் ஒன்றே மாறாதது. பிறப்பு, இறப்பு இயற்கையானது. ஆனால் இயற்கையின் மற்ற உயிரினங்களை விட மேலான அறிவை தன் உழைப்பின் மூலம் பெற்ற மனிதனுக்கு பிறப்பும் இறப்பும் புதிராகவே இருந்தது. எப்படி ஒரு உயிர் உருவாகிறது என்று தெரியாமலிருந்ததைப் போலவே எப்படி ஒரு உயிர் இறக்கிறதென்றும் தெரியவில்லை. தன்னுடனே வாழ்ந்து கொண்டிருந்த ஒருவனை இனி எவ்வப்போதும் காணமுடியாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் வேறு ஒரு உலகத்தில் வாழப் போகிறான் என்று உருவகிப்பதன் மூலம் மனம் சாந்தியடைந்தது. எனவே சாவுச் சடங்குகளில் இம்மை, மறுமை கருத்தாக்கங்கள் உருவாகின்றன. இந்த பூலோகத்தை விட்டு மேலோகம் செல்வதாக கற்பனை விரிகிறது. எனவே தான் இறந்தவரை நீர்மாலை எடுத்து ( நீர் நிறைந்த கும்பம் செழிப்பின் அடையாளம் ) குளிப்பாட்டி, புத்தாடை உடுத்தி, சந்தனம், குங்குமம், இட்டு உணவு கொடுத்து ( வாய்க்கரிசி ) போகும் வழிச்செலவுக்கு நாணயமும் நெற்றியில் ஒட்டி, பூம்பல்லக்கில் வைத்து அனுப்புகிற விதமாய் சடங்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதே போல அந்தக் காலத்தில் நெருப்பைக் காப்பாற்றி சுடுகாடு வரை கொண்டு செல்வது மிகவும் கடினமான காரியமாக இருந்ததனால் கொள்ளிச்சட்டி என்று எப்போதும் நெருப்பெரியும் மண்கலயத்தைத் தூக்கிச் செல்லும் வழக்கம் உருவானது.

சுடுகாட்டில் நீர் நிறைந்த மண்குடத்தைத் தூக்கிக் கொண்டு இறந்தவரின் உடலைச் மூன்று முறை சுற்றி வர ஒவ்வொரு சுற்றுக்கும் நாவிதர் ஒரு ஓட்டையை அந்தக் கலயத்தில் போடுவார். மூன்று சுற்று முடிந்ததும் அந்தக் கலயத்தை உடைத்து விடுவார்கள். பண்டைய காலம் தொட்டே நீர் நிறைந்த கும்பம் செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்டு வந்தது என்பதினால் இறந்தவர் போய் விட்டாலும் அந்தக் குடும்பத்தில் செழிப்பு தங்கியிருக்க வேண்டும் என்ற காரணத்தினால் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பதினாறாவது நாள் விஷேசம் முடியும் வரை ஒரு சிறிய கும்பத்தில் மலர்களிட்டு விளக்கு முன் வைக்கும் பழக்கமும் இந்தச் செழிப்பு நம்பிக்கையில் வந்ததே.

பிராமணசாதியினருக்கு அடுத்து வந்த இடைநிலைச் சாதியினர் எரிக்கும் ( சுடுகாடு ) வழக்கமும், அதற்கடுத்த நிலையில் இருந்த சாதியினர் புதைக்கின்ற ( இடுகாடு ) வழக்கமும் கொண்டிருந்தனர். எரித்த மறுநாள் ஆற்றுகிற சடங்காக தீயாற்றுதல் நடைபெறுகிறது. எரிந்த சாம்பலை எடுத்து, தாம்பாளத்தில் வைத்து சந்தனம், பால், தேன், திருநீறு, நவதானியங்கள் ஆகியவற்றால் அபிசேகம் செய்து இறுதியில் ஒரு குச்சியினால் நிலம் வரைந்து அதில் அந்தக் குச்சியினால் உழுது நவதானியங்களை விதைத்து நீருற்றி உடனே ஒரு கொப்பும் குலையுமாக செடி ஒன்றை அந்த நிலத்தில் நட்டு வைத்து விடுவார்கள். வேளாண்சமூகம் தன்னுடைய குலம் தழைக்க இறந்தவரின் சாம்பலை தங்கள் நிலத்தில் கலந்து விடுவதின் மூலம் வளமை பெறுவதாகவும் உருவகிக்கிற போலச் செய்தல் சடங்கு முறைகள். இதில் ஆதிச் சடங்கியல் முறைகளின் கூறுகள் இருக்கின்றன. சுடுகாட்டில் இறந்தவரின் சடலம் எரிந்து கொண்டிருக்கும்போதே மொட்டை போடுவது இறந்தவரின் ஆண்வாரிசுகள், அல்லது கொள்ளி வைக்கும் பாத்தியதை உள்ள ஆண்களே. இந்தச் சடங்குகள் சாதிக்குச் சாதி சில வித்தியாசங்களுடன் நடக்கிறது. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத சாதிகளில் அவர்களுடைய இனக்குழுவின் சடங்கியல் முறைகள் பின்பற்றப்படுகின்றன. உதாரணத்துக்கு தெலுங்கு பேசும் சாதியினர் மொட்டை போடுவதில்லை. அதற்குப் பதில் மீசையை அல்லது முன்கையில் சிறிது ரோமத்தை மழித்துக் கொள்கிறார்கள்.

இது வரையான இறப்புச் சடங்குகளில் பிராமணர்கள் தலையீடு இல்லை என்பதைக் குறித்துக் கொள்ளவேண்டும். ஐந்தாம் நாள் இறந்தவரின் பெண்பிள்ளைகள் இறந்தவருக்கு செய்யும் படையல் நிகழ்ச்சி ( கிழமை செய்தல்)  நடைபெறுகிறது. நவதானியங்களை அவித்து சிறுபண்டங்களைச் செய்து, இறந்தவருக்கு விருப்பமான பண்டத்தையும் செய்து விளக்கு முன் படைத்து கும்பிடுகிறார்கள். அதற்கு முன் வீட்டு வாசலில் நின்று இறந்தவர் கைலாயமும், வைகுந்தமும் போவதற்கு பெண்கள் தலைமுடியை விரித்துப் போட்டு நெஞ்சிலடித்துக் கொண்டு பாடுகிறார்கள். ஒரு வேளை இறந்தவரின் ஆத்மா பந்தபாசம் காரணமாக அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தால் அதை வழியனுப்புகிற ஒரு சடங்காகவே இது இருக்கிறது.

” கைலாயம் உங்களுக்கு

கத்தரிக்காய் எங்களுக்கு

வைகுந்தம் உங்களுக்கு

வழுதனங்காய் எங்களுக்கு “

என்கிற மாதிரி இந்த உலக வாழ்க்கையை விட்டு விடைபெறச் சொல்லி பாடுகிறார்கள்.

பிறகு இறந்தவரின் வீடு தீட்டாகக் கருதப்படுகிறது. பதினாறாவது நாள் விஷேசம் நடத்தும்வரை துட்டி கேட்கப்போகிறவர்கள் கேட்டுவிட்டு வந்ததும் தீட்டைக் கழிக்க குளிக்கிறார்கள். பதினாறாவது நாள் விஷேசத்துக்கு பிராமணர் அழைக்கப்பட்டு பிண்டம் வைத்து இறந்தவரின் ஆவியைச் சாந்தி செய்யும் மந்திரங்கள் ஓதி வீடு முழுவதும் மாட்டு மூத்திரத்தைத் தெளித்து தீட்டுக் கழித்து, இறந்தவருக்குப் படைப்பதற்காக வாங்கிப் படையல் வைக்கப்படும் அத்தனை சாமான்களையும் ( அது அவர் எழுதிக் கொடுப்பது தான் ) புது வேட்டி துண்டையும் சடங்குகளை நடத்தியதற்காக ஃபீஸையும் வாங்கிக் கொண்டு பிண்டங்களை அருகாமையில் இருக்கும் நீர்நிலையில் கரைத்து விடச் சொல்கிறார். அன்று அந்த வீட்டிலுள்ளோர் எல்லோரும் தலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து தீட்டைக் கழிக்கிறார்கள். உடல், உடை, உணவு, இருப்பிடம், எல்லாவற்றிலும் தீட்டு என்கிற தீண்டாமையைக் கற்பித்து அதை மக்கள் மனங்களில் அவர்களின் ஒப்புதலோடு ஏற்றுக் கொள்ள வைத்தது தான் பிராமணியத்தின் வெற்றி.

மேற்சொன்ன சாங்கியங்களில் அறிவியல் பூர்வமானதென்று எதுவும் கிடையாது. இறந்தவர் நோய்வாய்ப்பட்டு இறந்திருந்தால் அந்த வீட்டை கிருமிநீக்கம் செய்ய வேண்டும் என்பது மட்டும் தான் இதில் உள்ள ஒரே அறிவியல் உண்மை. சுடுகாட்டுச் சடங்குகளில் கூட ஒரு இனக்குழுவின் பண்பாட்டு அசைவுகள் இருக்கிறதென்று உணரமுடிகிறது. அதுவும் இப்போது காலத்துக்கு ஒவ்வாததாக மாறி விட்டது. ஆனால் பதினாறாவது நாள் விஷேசம் என்ற பெயரில் பிராமணரை அழைத்துச் செய்கிற சடங்குகள் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற விஷேசம். முன்னோர் வழிபாடு என்பது பண்பாட்டு அசைவு. ஆனால் பித்ருக்களாக காக்கா வந்து உணவு எடுக்கவும், திதி என்ற பெயரில் ஆண்டு தோறும் நடக்கும் விஷேசமும், அமாவாசை தோறும் பித்ருக்களுக்காக விரதம் இருந்து அவர்களுக்கு உண்ட பிறகே தாங்கள் உண்ணும் சடங்கு பிராமணிய தந்திரம். இப்படி இனக்குழுவின் சடங்கியல் முறைகளில் அவர்களுக்கே உரித்தான பண்பாட்டு அசைவுகள் இருந்ததென்றால் அதில் தங்களுடைய வேதகாலச்சடங்கியல் முறைகளையும் கலந்து விட்டது பிராமணீயம். இதனால் எவையெல்லாம் அந்த இனக்குழுவின் பண்பாட்டு அசைவுகள், எவையெல்லாம் பிராமணமதத்தின் சடங்கியல் கூறுகள் என்று அறிய முடியாமல் போய் விட்டது. பிராமணீயத்தை நோக்கிய மேல்நிலையாக்கத்தில் உள்ள விருப்பமும் மிகச் சுலபமாக பிராமணியம் எல்லாச் சடங்குகளுக்குள்ளும் கலந்து விடுவதற்கு ஏதுவாக இருந்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இது மனுதர்மசாஸ்திரத்தை அறிந்தோ அறியாமலோ எல்லோரும் கடைப்பிடிக்க வழி வகை செய்கிற ஒரு ஏற்பாடாக அமைந்து விட்டது.

தீட்டு என்கிற ஒன்றை மக்கள் ஏற்று கொண்டிருக்கும் வரை பிராமணியமும், மனுதர்மமும் நிலைத்திருக்கும் என்றே தோன்றுகிறது.

2

ஒவ்வொருவருடைய மரணத்தை அர்த்தப்படுத்துவது அவர்களுடைய வாழ்க்கை தான். அந்த வாழ்க்கையில் அவர் தான் வாழும் சமூகத்துக்காக, தன் சகமனிதர்களுக்காக, என்ன செய்திருக்கிறார் என்பதே காலங்காலமாக நினைக்கப்படும். மானுடவிடுதலைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணிக்கிற தோழர்களும் மரணமடையும் போது நாம் அவரைக் கைவிட்டு விடுகிறோம். அது வரை அவர் எதையெல்லாம் மறுத்தும் எதிர்த்தும் தன் வாழ்நாள் முழுவதும் போரிட்டாரோ பிரச்சாரம் செய்தாரோ இயங்கினாரோ அவரைச் சடங்குகளின் கையில் ஒப்படைத்து விட்டு வாளாவிருக்கிறோம். பல நேரங்களில் அவருடைய சாதி அந்தச் சூழ்நிலையைக் கையாளுகிறது. அதற்கு ஒரு காரணமாக தோழர்களின் குடும்பங்களும் இருக்கின்றன. ஆனால் அதற்கும் நாம் தான் காரணம் என்று தோன்றுகிறது. தோழர்களின் குடும்பங்களுக்குள் நம்முடைய பண்பாட்டுக் கருத்தியல்களைக் கொண்டு போவதற்கான திட்டம் நம்முடைய அமைப்புகளிடம் போதுமானதாக இல்லை.

வாழ்கிற வரை கம்யூனிஸ்ட்டாக மட்டுமே மற்றவர்களால் அடையாளம் காணப்பட்ட தோழர்கள் மரணமடைந்தவுடன் அவருடைய சாதியைச் சேர்ந்தவராக, அவருடைய மதத்தைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்தப் படுகிறார். அவருடைய சாதியைச் சேர்ந்த இறுதி ஊர்வல வண்டியில் எல்லாச்சாங்கியங்களும் செய்யப்பட்டு நெற்றியில் குங்குமம் சந்தனம் நாணயம் சகிதமாக, சனிக்கிழமை என்றால் கூடவே ஒரு கோழிக்குஞ்சையும் கட்டிக் கொண்டு முன்னால் தன் வாரிசுகள் கொள்ளிச்சட்டி தூக்கிக் கொண்டு நடந்து வர சாதிக்காரர்கள் முன்னால் நடந்து செல்ல பின்னால் தயக்கத்துடன் நம்முடைய தோழர்கள் நடக்கத் தன் இறுதிப் பயணத்தைத் தொடர்கிறார். தான் இது வரை வாழ்ந்த முற்போக்கான வாழ்வின் அர்த்தம் என்ன? என்று தன் தலையை ஆட்டி ஆட்டிக் கேள்வி கேட்டுக் கொண்டே போகிறார். எத்தனையோ பேரை தன்னுடைய விசாலமான அறிவுத் திறமையினால் விவாதக்கூர்மையினால் வென்றெடுத்து முற்போக்கு இயக்கங்களுக்குள் கொண்டு வந்த தோழர். தீண்டாமை, சாதிவெறி, மதவெறி, மூடநம்பிக்கை இவற்றுக்கெல்லாம் எதிராக சமரசமற்ற போரைத் தன் வாழ்நாள் முழுவதும் நடத்திய அந்தத் தோழருக்கு தனக்கு நடந்து கொண்டிருக்கும் சடங்குகளைத் தடுக்க முடியவில்லை. துணைக்குத் தன் தோழர்களும் இல்லை. அவர்கள் மிகவும் பின்னால் வருகிறார்கள். அவர்களுக்கு இன்னமும் இதன் முக்கியத்துவம் தெரியவில்லை. எப்போதும் அவருக்கு உடன்பாடில்லாத விஷயங்களுக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் அவரது உரத்தகுரல் இப்போது மௌனமாக இருக்கிறது.

பிராமணியமும் மனுதர்மசாஸ்திரமும் நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றன. நாம் என்ன செய்யப் போகிறோம்?

நன்றி - தீக்கதிர்

Monday, 6 August 2012

உயிர்ச்சுவை

உதயசங்கர்

149

வெயில் பொழியும் என் முற்றம்

நீருக்காய் வாய் தவிக்கும் தவிட்டுக்குருவி

என் சன்னல் வழி மேகம் வந்து

என்னை எழுப்பியது

நீரும் உணவும் வைத்திருக்கிறேன்

இருக்கின்ற இடத்தை விட்டு

எல்லா இடங்களிலும் தத்தித் தாவுகிறாய்

நிழல் தேடி அலைகிறாய்

பயப்படத் தேவையில்லை

நானும் வேடனில்லை

என் அன்பு ஒரு துளி தான்

ஆனாலும் அது என் அன்பு

வேறு யாருடையதைப் போலுமில்லாத

என் அன்பை ருசித்துப் பார்

என் உயிரின் சுவை தெரியும்.

Thursday, 2 August 2012

கனவு

உதயசங்கர்

Midsummer_s_Night_Dream

கனவில் ஒரு வானம் வந்தது

கனவில் ஒரு பூமி வந்தது

கனவில் ஒரு கானகம் வந்தது

கனவில் சில மிருகங்கள் வந்தன

கனவில் எண்ணிலா புட்கள் பறந்தன

கனவில் பல பூச்சிகள் இசைத்தன

கனவில் பல வண்ணங்கள் குழைந்தன

கனவில் எம் மக்கள் சிரித்தனர்

கனவில் ஒரு காதலியும் வந்தாள்

கனவில் ஒரு கனவும் வந்தது

கனவில் வந்த கனவுக்குச்

சிங்கப்பல் இருந்தது

அது என் கனவுகளின் கனவுகளைக்

காவிச் சென்றது.

Wednesday, 1 August 2012

அந்த அளவுக்கு நேசித்ததால்..

 

இ.எம். ராதா

தமிழில் – உதயசங்கர்

ems

என்னுடைய அப்பாவை முதன்முதலாக என்று பார்த்தேன்? இரண்டோ, மூணோ வயதிருக்கலாம். அன்றிலிருந்து என் ஞாபகத்திலுள்ள விஷயங்களை எழுதுகிறேன். நான் கொஞ்சம் கூச்ச சுபாவமுடையவள் அப்பாவைப் பார்க்கும் போதும் இந்தச் சுபாவம் கொஞ்ச நேரத்துக்கு இருக்கும். பக்கத்தில் சென்று விட்டாலோ பிரிந்து வருவது அத்தனை கஷ்டம். அரசியல் விவகாரங்களில் ஏற்பட்ட மாற்றம் குடும்பத்திலும் ஏற்பட்டது. அன்று வரை அங்கேயும் இங்கேயுமாக அலைந்து கொண்டிருந்த அப்பாவும் அம்மாவும் நான் பிறந்த பிறகு தான் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். அதற்குப் பிறகு தான் சசி பிறந்தான்.

நானும் சசியும் குழந்தைகளாக இருந்த போது அப்பாவின் நெருக்கமும், அன்பும், அரவணைப்பும் வேண்டும் என்கிற அளவுக்குக் கிடைத்தது. ஆனால் மூத்தவர்கள் இரண்டு பேருக்கும் அக்காவுக்கும் அண்ணனுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. ஐந்து வயதாகும் போது தான் அண்ணன் அப்பாவையே முதன்முதலில் பார்த்தான் – அதுவும் வெகுதூரத்திலிருந்து.

அப்பா என்ற நிலையிலிருந்து தன் குழந்தைகளுக்கு அவர்களுடைய இளம்பிராயத்தில் அன்பும் அரவணைப்பும் தராமல் போனதில் அவருக்கு வருத்தம் இருந்தது. அதனால் எங்களுடைய குழந்தைகளிடம் அவர்களுடைய தாத்தா போதும் போதுமென்கிற அளவுக்குப் பிரியத்தையும் அன்பையும் செலுத்தினார்.

நாங்கள் வளர்ந்து வரும்போது அப்பாவைப் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள முடிந்தது. கட்சிக் கூட்டங்கள் பலசமயம் எங்கள் வீட்டிலேயே நடந்ததால் பல முக்கியத் தலைவர்களோடு நெருங்கிப் பழகுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. முதல் மந்திரியாக இருந்த போதும் சரி, இல்லாத போதும் சரி பொதுநிகழ்ச்சிகளுக்குப் போகும் போது எங்களையும் கூட்டிக் கொண்டு போவார்.

வாழ்க்கையில் எப்போதும் அன்பு மலரச் செய்ய வேண்டும் என்று அப்பா எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். சாப்பாடு சாப்பிட்ட தட்டை தானே கழுவுதல், தன்னுடைய துணிகளைத் தானே துவைத்தல் ஆகிய வேலைகளை நாங்களே செய்ய வேண்டும் என்று சொல்லுவார். நாங்கள் எந்தச் சிறிய தவறும் செய்ய அநுமதித்ததில்லை.

முதல் மந்திரியாக இருந்த போதும் சரி, இல்லாத போதும் சரி ஒரே மாதிரியான வாழ்க்கை முறையைத் தான் கடைப்பிடித்தார். ஸ்கூலுக்குப் போவதற்கோ, வேறு காரியங்களுக்கோ அப்பா இல்லாமல் அரசாங்கக் காரை எடுத்துச் செல்ல அநுமதிப்பதில்லை. அப்பாவின் சுபாவம் தெரியுமென்பதால் நாங்களும் அதே மாதிரி உருவாகி வளர முடிந்தது. சாதாரணக் குழந்தைகளின் அப்பாவைப் போல அல்ல எங்களுடைய அப்பா என்ற உணர்வு எங்களை இன்னும் பொறுப்புள்ளவர்களாக்கியது.

மேலே குறிப்பிட்டதெல்லாம் அப்பாவிடம் உள்ள கண்டிப்பைக் காட்டுகிறது. இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு. ஒரு அப்பாவினுடைய எல்லாக்கவலைகளும் அவரிடம் இருந்தது. தவறைக் கண்டால் சுட்டிக் காண்பிக்கவும் அதைத் திருத்தவும் முயற்சி செய்தார். சாதாரண நம்பூதிரிச் சமூகத்தில் இருப்பதைப் போல ஆண் பெண் வித்தியாசம் எங்கள் குடும்பத்தில் இல்லை. சாந்தி நகரில் வீடு விற்ற போது கிடைத்த பணத்தைச் சமமாக எங்கள் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்தார்.

எங்களுக்கெல்லாம் திருமணம் முடிந்த பிறகு எங்களோடு சேர்ந்து சினிமா, நாடகம், பார்க்க கூட வருவதற்கு உற்சாகம் காட்டியிருக்கிறார். சாலையில் எங்களோடு சேர்ந்து நடந்து வரும்போது சாலையின் இரு பக்கத்திலும் போகிறவர்கள் ஆச்சரியத்துடன் நின்று விடுவார்கள். ஏனென்றால் ஏதாவது ஊர்வலத்தின் முன்னால் மட்டுமே போகிறவர், சினிமாவுக்குப் போகும்போதும் அதே மாதிரி சாலையின் நடுவே நடப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.

அப்பா தன் அரசியலை அம்மாவிடம் ஒரு போதும் நிர்ப்பந்தித்து திணித்ததில்லை. எல்லோருக்குமே அவரவர் சொந்த விருப்பு வெறுப்புகளையொட்டி நடந்து கொள்ளும் சுதந்திரம் இருந்ததென்றாலும் யாரும் அதைத் துர்ப்பிரயோகம் செய்யவில்லை.

அரசியல்வாதிகளுக்கு தலைவராகவும், வரலாற்றாசிரியராகவும், தோழராகவும், குருவாகவும் இருந்தார். ஆனால் எங்களைப் பொறுத்தவரை அப்பா நல்ல நண்பராக இருந்து எந்தப் பிரச்னையைப் பற்றியும் பேச, அதற்கு என்ன வழி என்று பார்க்கவும் எங்களுக்கு உதவி செய்தார்.

அப்பாவின் மரணம் எதிர்பாராத பேரிடியை எங்களுக்குத் தந்து விட்டது. அந்த அதிர்ச்சியிலிருந்து நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம் என்று சொன்னால் அது சரியாக இருக்காது. மறதி மனிதனுக்குப் பெரிய வரப்பிரசாதம் என்றல்லவா சொல்கிறார்கள். மறக்க நினைக்கும் போதெல்லாம் அப்பாவைப் பற்றிய நினைவுகள் பொங்கி வருகின்றன. ஏனென்றால் நாங்கள் கூட அறிந்திராத ஆழமுள்ளது அந்த உறவு. அப்பாவின் மரணம் உண்மையாயிருக்க, அதை ஏற்றுக் கொள்ள எங்கள் மனது இன்னமும் பழகவில்லை.

எங்களுடைய செயல்களைக் கண்காணிக்கவும், எந்தப் பிழையும் எங்களை நெருங்காதிருக்கவும் அப்பா ஒரு அரூபமாக, ஒரு நினைவாக, எங்கேயோ இருந்து கொண்டிருப்பார் என்ற எண்ணம் எங்களை இன்னும் வலிமையுள்ளவர்களாக்குகிறது.

நன்றி – மாத்ரூபூமி

இ.எம்.எஸ் நினைவு மலர் 1998