Saturday, 12 May 2012

வெண்ணிற இரவுகள் போர்த்திய நகரம்

dostovesky

கரிசல் நகரமான கோவில்பட்டியில் மேமாத வெயில் பொழிந்து நகரம் தைப்பாறிக்கொண்டிருந்த இரவு. வேர்வையின் கசகசப்பும் புழுக்கமும் ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தியது. நானும் ரெங்கராஜுவும் ஆளுக்கொரு சிகரெட்டைப்பிடித்தபடி காந்திமைதானத்தில் உட்கார்ந்திருந்தோம். எதுவும் பேசிக்கொள்ளவில்லை. திடீரென்று மாயம் போல காற்று குளிர்ந்தது. சில நிமிடங்களிலேயே பனிபொழிய ஆரம்பித்து விட்டது. அப்போது தான் கவனித்தேன். இரவின்மீது வெண்ணிறத்தைப் போர்த்திய தாஸ்தயேவ்ஸ்கி எங்களருகில் உட்கார்ந்திருந்தார். நான் ரெங்கராஜிடம் கிசுகிசுத்தேன். தாஸ்தயேவ்ஸ்கி வெண்ணிற இரவுகள் தாஸ்தயேவ்ஸ்கி என்ற முணுமுணுத்தேன். ரெங்கராஜுவும் திரும்பிப் பார்த்தார். ஆனால் தாஸ்தயேவ்ஸ்கி எங்களைப் பார்க்கவில்லை. இருளை ஊடுருவி துளைத்துச் சென்று கொண்டிருந்தது அவரது பார்வை. ஒரே நேரத்தில் ஒரு குழந்தையின் கண்களைப் போல களங்கமற்றும் ஒரு பைத்தியக்காரனின் கண்களைப் போல உன்மத்தம் ஏறியும் ஒரு குற்றவாளியின் கண்களைப் போல வன்மத்துடனும் ஒரு ஞானியின் கண்களைப் போல ஒளியுடனும் அலைபாய்ந்து கொண்டிருந்தது அவரது விழிகள்.

என்னால் ரொம்பநேரம் பொறுமையாக இருக்க முடியவில்லை. மெல்லச் செருமினேன். அவருடைய கவனம் கலையவில்லை. குளிர்ந்த இரவின் கதகதப்பில் உணர்ச்சிமிக்க அவரது உதடுகள் துடித்தன. நாஸ்தென்கா. எனக்கு அந்தப் பெயரைக்கேட்டதுமே ஒரு விரல் சொடுக்கில் கோவில்பட்டி நகரமே பீட்டர்ஸ்‡ பர்க் நகரின் சாயல் கொண்டு விட்டது. இதோ நானும் ரெங்கராஜுவும் ஆற்றங்கரையில் உள்ள ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறோம். எங்கள் மீது இரவின் அமைதி இனிமையாய் இறங்கிக் கொண்டிந்தது. நடுநிசி நகரம் ஆழ்ந்த உறக்கத்தில் தன் கனவுகளைக் கண்டுகொண்டிருந்தது. நாங்கள் உட்கார்ந்திருந்த பெஞ்சிற்கு அடுத்த பெஞ்சில் எனதருமை நாஸ்தென்காவும் அந்த கனவுலகவாசியும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

அந்தக் கனவுலகவாசியின் நாடகப்பாங்கான, உணர்ச்சிக் சுழலில் திணறிய குரல் கேட்டுக் கொண்டிருக்கிறது. தன் வாழ்வில் கனவுகளைத் தின்று, கனவுகளைச் சுவாசித்து, கனவுகளால் தன்னைச் சுற்றிப் பின்னிய கூட்டிற்குள் அன்பின் ஒரு துளிச்சுவைக்காக ஏங்கி பீட்டர்ஸ்பர்க்கின் இரவுகளில் அலைந்து திரியும் கனவுலகவாசியும், கண்தெரியாத பாட்டியின் கண்டிப்பில், ஊக்கினால் பாட்டியின் உடையோடு தன் உடையையும் சேர்ந்து மாட்டி ஒரு கைதியைப் போல வாழ்ந்து வருகிற, காதலுக்காக, ஆதரவான ஒரு வார்த்தைக்காக ஏங்கி கொண்டிருக்கிறார்கள். வெண்ணிற இரவுகளை வாசிக்க வாசிக்க உன்னதமான அன்பின் பேரொளியும் ஏக்கமும் துயரமும் எங்கள் மீது கவிந்து பெருகிறது. உலக இலக்கியத்தில் இவ்வளவு உணர்ச்சிபூர்வமான ஒரு காதல் கதையைப் படிக்கமுடியுமா என்பது சந்தேகம் தான்.

ரூஷ்யாவின் மகாகலைஞன் தாஸ்தயேவ்ஸ்கியின் கலைமேதமை எங்களை வியப்பிலாழ்த்தியது. அன்று இரவு முழுவதும் அருள் வந்தவர்களைப் போல நகரத்து வீதிகளில் சுற்றிக் கொண்டிருந்தோம். கதையின் பல பகுதிகளை மனப்பாடமாக ஒப்பிக்க முயற்சி செய்ததும் நினைவிலிருக்கிறது. இருபதுகளின் நடுவில் பார்க்கிற எல்லாவற்றின் மீதும் காதல் ததும்பிக்கவியும் பருவத்தில் நாங்கள் இருந்தோம். எங்களுடைய மனக்கிளர்ச்சியை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை. ஏதேதோ பேசிக் கொண்டே வந்தோம். தாஸ்தயேவ்ஸ்கியைப் பற்றி, அவருடைய கலை ஆளுமையைப் பற்றி அவருடைய நாவல்களைப் பற்றி என்னவெல்லாமோ பேசினோம்.

1821ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிறந்த தாஸ்தயேவ்ஸ்கி 1849ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு மயிரிழையில் உயிர் பிழைத்தவர். வாசிக்கிற யாரையும் ஆழ்ந்த உணர்ச்சிகளுக்குள் ஆழ்த்திவிடும் எழுத்து தான் தாஸ்தயேவ்ஸ்கியுடையது. அன்றாட நடைமுறை வாழ்வின் புறவயமான சித்தரிப்பிற்குப் பின்னுள்ள ஒரு யதார்த்தத்தைத்தான் தாஸ்தயேவ்ஸ்கி தனது படைப்புகளின் வழியாக உலகிற்குக் காட்டினார். வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்று மட்டுமல்ல அது எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வெளிப்படுத்த விரும்பினார். இவருடைய பெரும்பாலான படைப்புகளில் சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள சிறிய பணியாளர்களும் வேலையற்றவர்களும் குற்றவாளிகளும், மனநிலை பிறழ்ந்தவர்களுமே முக்கியக் கதாபாத்திரங்கள். இதனாலேயே தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில் சாதாரண கதாபாத்திரங்கள் கூட ஒரு அசாதாரணத்துவத்தை பெறுகின்றனர்.

தாஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய படைப்புகளில் மற்றெந்த ரஷ்ய இலக்கியவாதிகளை விடவும், நகர்ப்புற நவீன மனிதனின் பிரச்சனைகளை சிக்கலான வாழ்வின் பின்னங்களை அதிகமாக எழுதியவர். மனித மனதின் ஆன்மீக நெருக்கடிகளின் இருட்குகையினுள் ஒளி பாய்ச்சிய கலைஞன் தாஸ்தயேவ்ஸ்கி. மனதின் அடுக்குகளை விரிக்க விரிக்க அது ஒரு மாயாஜாலம் போல ஒளியும் இருளுமாக காட்சி தருகிறதே. அந்த ஒளியையும் இருளையும் அப்படியே காட்சிப்படுத்தியவர் தாஸ்தயேவ்ஸ்கி. யாருக்காக ஒருவன் சாகவும் தயாராக இருக்கிறானோ அவனையே அவன் கொல்வதும் நேசிப்பவர்களை வெறுக்கவும், வெறுப்பவர்களை நேசிக்கவும், மர்மமும் விந்தையுமிக்க வாழ்வின் கணநேரத் தூண்டுதலினால் தான் சற்றும் நினைத்திராத காரியங்களைச் செய்ய நேர்வதும் அல்லது திட்டமிட்ட காரியங்களை கைவிட நேர்வதுமான மனதின் விசித்திரங்களை, ஒரே நேரத்தில் பேரன்பும் குரோதமும், பெருங்கருணையும் குரூரமும், பாவங்கள் செய்யும் தூண்டுதல்களும், பாவமன்னிப்பைக் கோரும் உருகுதல்களும் என்று புதிராய் விளங்கும் மனதின் இருண்ட பக்கங்களை ஆராய்ந்தவர் தாஸ்தயேவ்ஸ்கி. மனிதன் என்று விடுகதைக்கு விடைதேடி அலைந்தவர் தாஸ்தயேவ்ஸ்சி.

உளவியல் என்ற அறிவியல் துறை உருவாகத் தொடங்கியது 1860 - 70 காலகட்டத்தில் தான். ஆனால் தாஸ்தயேவ்ஸ்கியின் புகழ்பெற்ற படைப்புகளான இரட்டையர்கள், பாவப்பட்டவர்கள், குற்றமும் தண்டனையும், முட்டாள், போன்றவை இதற்கு முன்பே ஏற்கனவே வெளியாகிவிட்டன. உளவியலின் தந்தை என்று கூறப்படும் பிராய்டின் உளவியல் கருதுகோள்கள் பலவற்றுக்கும் ஆதாரமாக தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள் இருந்தன. அதே போல நனவோடை உத்தி என்று உணர்ச்சிப் பிரவாகமான உத்தியை அற்புதமாக தன்படைப்புகளில் முதன்முதலில் வெளிப்படுத்தியவர் தாஸ்தயேவ்ஸ்கிதான். அவர் மறைந்த மூன்றாண்டுகளுக்கு பின்னரே நனவோடை உத்திபற்றி மேற்கத்திய இலக்கிய உலகம் பேச ஆரம்பித்தது.

நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையில் சிக்கித் துயருறும் மனசாட்சியை உடையவராக இருந்தார் தாஸ்தயேவ்ஸ்கி இந்த மனசாட்சியின் தர்மசங்கடமே அவரது கதாபாத்திரங்களின் எண்ணற்ற போராட்டங்களுக்கும், ஆன்மீக துயருக்குமான முக்கியமான காரணம், சுதந்திரம் அன்பு இவைதான் மனித வாழ்க்கையின் முதுகெலும்பு என்று உறுதியாக நம்பினார் தாஸ்தயேவ்ஸ்கி. அன்பின் மேல் கட்டி எழுப்பப்படும் வாழ்க்கையே முழுமையான மனிதத் தன்மையுடையதாக இருக்கும் என்று நினைத்தார். இருண்ட வாழ்க்கையின் ஷேக்ஸ்பியர் என்ற புகழப்பட்ட தாஸ்தயேவ்ஸ்கி ருஷ்யா உலக இலக்கியத்திற்கு வழங்கிய கொடை.

இப்போதும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய அந்த வெண்ணிற இரவின் ஸ்பரிசத்தை உணர முடிகிறது. களங்கமற்ற காதலின் நெருக்கடி, தவிப்பு, அர்ப்பணிப்பு, மனதில் எவ்வளவு ஒளியைப் பாய்ச்சுகிறது. வாழ்வின் மீதான நம்பிக்கையும், காதலும் பொங்குகிறது. வெண்ணிற இரவுகளின் நாஸ்தென்காவும் அந்த கனவுலகவாசியும் தங்கள் காதலை அறிவித்து குழம்பி மயங்கி. இரவெல்லாம் பீட்டர்ஸ்பர்க்கின் புறவழிச்சாலைகளில் ஆற்றங்கரையில் சுற்றித் திரிகையில் நம் மனம் குதூகலிக்கிறதே. நாஸ்தென்கா ! என தருமை நாஸ்தென்கா என்று அவளுடைய கரங்களைப்பற்றிக் கொள்ள ஆவல் பொங்குகிறதே. நானும் ரெங்கராஜுவும் பொங்கித் திரை எறியும் காதல் உணர்வுகளுடனேயே அன்று பிரிந்து சொன்றோம்.

என் வீடு இருந்த அந்தக் குறுகலான சந்து மிகப்பெரிய வீதியாக விரிந்தது. வெண்ணிற நிலவொளியின் கீழே யாரையோ எதிர்பார்த்தவண்ணம் அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்தேன். இருளின் கடைசியிலிருந்து சுடரும் ஒளியைப் போல என் நாஸ்தென்கா வருவாளோ ? ஏதோ அரவம் கேட்டது. நான் கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு நின்று கொண்டிருக்கிறேன். அன்பைப் பொழிந்து கொண்டிருக்கிறது நிலவு. நான் நின்று கொண்டிருக்கிறேன் இப்போதும், என் நாஸ்தென்காவுக்காக.

Friday, 11 May 2012

.சங்கரநாராயணனும் கிங்கரயானையும்

ELEPHANT CARTOON_jpg[1] மலையாளத்தில்- மாலி                                தமிழில்- உதயசங்கர்

சங்கரநாராயணன் பின்னால் பதுங்கி பதுங்கிச் சென்றான். கிங்கரயானையுடைய வாலிலிருந்து ஒரு ரோமத்தைப் பறித்தெடுத்தான்.பிறகு எடுத்தானே ஒரு ஓட்டம்! கிங்கரயானைக்கு கோபமான கோபம்! ஆனல் சங்கரநாராயணணனின் பின்னால் ஓடவில்லை. ஏனெனில் சாமி ஊர்வலத்தில் அது போய்க் கொண்டிருந்தது.

ஆனால் கிங்கரயானை நினைத்துக் கொண்டேயிருந்தது. சங்கர நாராயணனைப் பிடிக்கணும். ஒரு தடவை அதற்கு ஒரு வாய்ப்பு வந்தது. சங்கரநாராயணன் பெரிய குளத்தில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தான். கிங்கரயானை குளக்கரைக்கு வந்தது. சங்கரநாராயணன் ஒரு தடவை முங்கி எழுந்தான். பார்த்தால் எதிரே கிங்கரயானை. சங்கரநாராயணன் குளத்தின் அக்கரைக்கு நீந்தினான் கிங்கரயானை விட்டுருமா? அந்தப் பெரிய குளத்தில் ஒரு பாய்ச்சல்! நான்கு கால்களும் தண்ணீருக்கு அடியில் துழாவ, த்லையும் உடம்பும் கூட தண்ணீருக்குக் கீழே முங்கி இருக்க, தும்பிக்கையின் நுனி மட்டும் தண்ணீரின் மேல் தெரிந்தது. சங்கரநாராயணன் நீந்திக் கொண்டே திரும்பிப் பார்த்தான். கிங்கரயானையைக் காணவில்லை. ஆனால் தும்பிக்கையின் நுனி மட்டும் நெருங்கி வருகிறது. சங்கரநாராயணன் ஆவேசத்தோடு நீந்தி அக்கரைக்குப் போய்ச் சேர்ந்தான்.பின்னாலேயே கிங்கரயானையும் அக்கரையில் ஏறியது. சங்கரநாராயணன் முன்னே ஒரு பெரிய மதில் சுவர் இருந்தது. அவன் அதில் ஏறி அந்தப் பக்கம் குதித்தான். அதோ கிங்கரயானையும் மதில்சுவரைத் தாண்டிக் குதிக்கிறது. சங்கரநாராயணன்,”அய்யய்யோ” என்று அலறினான் பின்னால் வந்த கிங்கரயானையும் ’ப்பேங்’ என்று பிளிறியது. சங்கரநாராயணனை இப்போது கிங்கரயானை பிடித்து விடும்.

சங்கரநாராயணன் எதிரே ஒரு தென்னை மரத்தைப் பார்த்தான். உடனே அவன் அதில் ஏறினான். யானை தென்னைமரம் ஏறாது என்று நினைத்தான். ஆனால் என்ன நடந்தது தெரியுமா?. அதோ..கிங்கரயானை வேகமாக தென்னைமரம் ஏறி வருகிறது. சங்கரநாராயணன்,”அய்யய்யோ” என்று மறுபடியும் அலறினான். கிங்கரயானையும் ‘ப்பேங்’ என்று பிளிறியது.சங்கரநாராயணன் தென்னைமரத்தின் உச்சிக்கு வந்தான். வேகமாக ஒரு தேங்காயைப் பறித்தான். யானையைக் குறி பார்த்து எறிந்தான். கிங்கரயானை எறி பட்டு கீழே விழுந்து விடும் என்று நினைத்தான்.ஆனால் என்ன நடந்தது தெரியுமா? கிங்கரயானை வாயைத் திறந்து தேங்காயைப் பிடித்தது. பின்பு கடமுடா கடமுடான்னு சவைத்துத் தின்றது. தேங்காய்,சிரட்டை, நார், மட்டை, எல்லாத்தையும் ஒரே வாயில் போட்டுத் தின்றது. சங்கரநாராயணனுக்குத் தப்பிக்க ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. அம்பத்தியேழுஅடி தூரத்தில் ஒரு புளியமரம் இருக்கிறது. புளியமரத்தில் குதிக்கவில்லையென்றால் அவ்வளவு தான் நிச்சயமாய் யானை பிடித்து விடும். சங்கரநாராயணன் தென்னைமர உச்சியிலிருந்து புளியமர உச்சிக்கு ஒரு பாய்ச்சல்! யானை தாண்டிக் குதிக்காது என்று நினைத்தான். ஆனால் என்ன நடந்தது தெரியுமா? அதோ காற்றில் பறந்து வருகிறது கிங்கரயானை! ஒரு பறவை பறப்பதைப் போல. பெரிய காதுகளை சிறகுகளைப் போல வீசிக் கொண்டு பறந்து வருகிறது. சங்கரநாராயணன் வேகவேகமாக புளியமர உச்சியிலிருந்து புளியமரத்தின் அடிக்கு இறங்கினான். அதேமாதிரி கிங்கரயானையும் செய்தது. சங்கரநாராயணன் அப்போதும்,”அய்யய்யோ” என்று அலறினான். கிங்கரயானையும்,’ப்பேங்’என்று பிளிறியது. கூப்பாடு போட்டுக் கொண்டே சங்கரநாராயணன் நிலத்தில் ஓடினான்.கிங்கரயானையும் பின்னால் பிளிறிக் கொண்டே ஓடியது. சங்கரநாராயணனின் அருகில் நெருங்கி விட்டது யானை. தும்பிக்கையை நீட்டியது. தொட்டுவிட்டது போலவே இருந்தது.

உடனே ஏதாவது செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால் யானை பிடிப்பது உறுதி. நல்லவேளையாய் எதிரே ஒரு வீட்டைப் பார்த்தான். வீட்டின் முற்றத்தில் ஏதோ கிடந்தது. என்ன அது? ஒரு சிறிய ஊதுகுழல். அதை பார்த்த உடனேயே சங்கரநாராயணனுக்கு என்ன செய்யவேண்டும் என்றூ புரிந்து விட்டது. வீடுகளில் குழந்தைகள் வைத்து விளையாடுகிற ஊதுகுழல். சங்கரநாராயணன் ஊதுகுழலுக்குள் ஏறினான். நுழைந்து முன்னால் போனான். அந்தப் பகுதியின் வாசலுக்குப் போய் வெளியே குதிக்க வேண்டும்.. அப்படியே செய்யவும் செய்தான். கிங்கரயானையும் ஊதுகுழலுக்குள்ளே ஏறி விட்டது.நுழைந்து முன்னால் போனது. அந்தப் பகுதியின் வாசலுக்குப் போய் வெளியே குதிக்க வேண்டும். அந்த வாசலுக்கு வந்து விட்டது.தும்பிக்கையும் கொம்புகளும் வெளியே வந்து விட்டது. அதற்கு பின்னாலேயே வயிறும் பின்கால்களூம் வெளியே வந்து விட்டது. சங்கரநாராயணன் ஓடிப் போவதை கிங்கரயானை பார்த்தது. ஆனால் கிங்கரயானையால் எதுவும் செய்ய முடியவில்லை.கிடந்தமாதிரியே கிடந்தது. ஏன் தெரியுமா? கிங்கரயானையின் வால் புல்லாங்குழலுக்குள் மாட்டிக் கொண்டதே!

elephant

Wednesday, 9 May 2012

கருப்பட்டிக் காப்பியும் காரச்சேவும் இடைசெவல் நயினாவும்

 

ki.ra

கல்லூரிப்படிப்பு முடிந்திருந்த நேரம். அதற்கு சிறிது நாட்களுக்கு முன்பு கோவில்பட்டியில் உள்ள இலக்கியவாதிகளின் அறிமுகம். இலக்கிய புத்தகங்களின் வாசிப்பு என்று எனது இலக்கிய அறிவு குழந்தைப் பருவத்திலிருந்தது. புத்தங்களை வாசிக்க வாசிக்க எழுத்தாளர்கள் மீது பிரமிப்பு ஏற்பட்டது. அவர்களைச் சந்திக்கின்ற போதெல்லாம் அவர்கள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஒரு புதிய வெளிச்சம் தந்தது. கனவுகளில் எழுத்தாளர்கள் வந்தார்கள். எழுத்தின் மீதான பிரேமை கூடிக்கொண்டிருந்தது. ஆனால் மிகப்பெரிய தயக்கம் என்முன்னால் மலைபோல நின்று கொண்டிருந்தது. இயல்பிலேயே மிகுந்த தயக்கமும் கூச்ச சுபாவமுடைய நான் எழுத்தாளர்களைச் சந்திக்கும் போதும் சரி, படித்த புத்தகங்களைப் பற்றிய கருத்துகளைக் கேட்கும்போதும் சரி எதுவும் பேசியதில்லை. கருத்துகள் முட்டிமோதிக் கொண்டிருந்தாலும் வாயைத் திறக்க மாட்டேன். அதையும் மீறி ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசி, அதைப்பற்றி மீண்டும் யாராவது கேட்டுவிட்டால் வெலவெலத்து போய்விடும் உலகமே என் வார்த்தைகளில் இருண்டு விடுமோ என்று பயந்து போய் பேசாமலிருந்து விடுவேன்.

இலக்கியம், அரசியல், தத்துவம், என்று எழுத்தாளர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது இதுவரை இல்லாத புதிய உலகத்திற்கு நான் போய் வருகிற மாதிரி இருக்கும். அந்த உலகத்தின் அழகும் பயங்கரமும் என்னை வசீகரித்தது. அந்த வசீகரத்தின் பின்னால் ஒடி ஓடித் திரிந்தேன். யாருடைய கைப்பிள்ளையாகவும் இருக்கத் துணிந்தேன். அப்போது என் பள்ளித் தோழனாகவும் கல்லூரித் தோழனாகவும் இருந்த மாரீஸ் மிக லகுவாக எல்லா எழுத்தாளர்களிடமும் பழகுவதையும், அவர் மனதுக்குப் பட்டதை பட்டென்று முகதாட்சண்யமின்றி சொல்வதையும் கண்டு அவர் மீது பொறாமைப்பட்டிருக்கிறேன்.

இரவுகளில் எங்கள் ஜமா எப்போதும் காந்திமைதானத்தில் கூடிக் கலைய நள்ளிரவு தாண்டிவிடும். அப்படி ஒரு சந்திப்பில் மாரீஸ் என்னிடம் நாளை கி.ராவைப்பார்க்க இடை செவல் போகலாம் வர்றியா ? என்றார். அப்போது தான் படித்து முடித்திருந்ததால் வேலையின்மையின் வெம்மை தாக்காத நேரம், அதோடு இந்தக் கிறுக்கும் சேர்ந்துவிட்டதால் நான் நடந்து திரிந்ததாக நினைவில்லை. பறந்து கொண்டிருந்தேன். இடைசெவலில் கி.ராஜநாராயணனைப் பார்க்கப் போகிறோம் என்றதும் சரி என்று சொல்லிவிட்டேன். அப்போது தான் அவருடைய கதவு சிறுகதைத் தொகுப்பும் கிடை குறுநாவலும் படித்திருந்தேன். அதை படித்த போது இலக்கியம் வேறு மாதிரியிருந்தது. அந்த எழுத்து நடையின் மீது ஒரு அந்நியோன்யமான உணர்வு எப்படியோ தோன்றியதை உணர முடிந்தது. அவரைச் சந்திக்க மறுநாள் காலை நானும், மாரீஸும், கவிஞர் முருகனும் சென்றோம். பேருந்து நிறுத்தத்திலிருந்து இடைசெவல் கிராமத்திற்குள் நுழைவதற்கு எப்படியும் ஒரு முக்கால் கி.மீ தூரம் இருக்கும். பலமுறை இந்த இடைவழி தூரத்தைக் கடப்பதற்கு பல மணி நேரம் எடுத்திருக்கிறோம். நின்று பேசி, நின்று பேசி, நடந்து கொண்டேயிருப்போம். சில தடவை நயினா பேருந்து நிறுத்தம் வரை கூட வந்து வழியனுப்புவார்.

அவருடைய வீட்டில் அறையில் இருந்த ஒழுங்கு எங்களை ஆச்சரியப்படுத்தியது ஏனென்றால் எழுத்தாளர்கள் நடைமுறை வாழ்க்கையில் அக்கறையற்றவர்கள் என்கிற சித்திரம் எனக்குள் உருவாகிக் கொண்டிருந்தது. அதில் ஒரு பெருமிதமும் இருந்தது. ஆனால் நயினாவின் அறையில் சுத்தமும் ஒழுங்கும் அப்படி ஆட்சிசெய்தன. அப்போது அவர் புகைத்துக் கொண்டிருந்த காலம் பீடிக்கட்டிலிருக்கும் பீடிகளைத் தரம் பிரித்து தனியே அடுக்கி வைத்திருப்பார். புகை பிடிக்கும் எண்ணம் வந்ததும் பீடிகளின் அருகிலேயே இருக்கும் கத்தரிக்கோலை எடுத்து பீடியின் முனையை வெட்டி விட்டு புகைக்கத் துவங்குவார். அதைப் பார்க்கப் பார்க்க புகைக்கும் ஆசை யாருக்கும் வரும்.ki-rajanarayanan-keni

கரிசல் வட்டாரச் சொல் அகராதிக்கான சொற்களை அகர வரிசைப்படுத்தும் வேலையினைத்தான் நானும், மாரீஸீம், முருகனும் செய்தோம். கணவதியம்மா மணக்கும் மோரும், மதியச்சாப்பாடும், கருப்பட்டிக் காப்பியும், சேவும் தந்து உபசரித்துக் கொண்டேயிருப்பார்கள். அத்தனை இணக்கமான தம்பதிகளை இதுநாள் வரை வேறெந்த எழுத்தாளர் வீட்டிலும் நான் பார்த்ததில்லை. சுரங்கத்தைத் தோண்டியயடுத்த மாதிரி சொற்கள் குவிந்து கொண்டேயிருந்தன. அவ்வப்போது வரும் சந்தேகங்களை நயினாவிடம் கேட்டால் போதும் உரையாடல் தொடங்கிவிடும் உரையாடல் என்பது ஒருகலை. அதில் நயினா வல்லவர். அணுக்கமாக அமர்ந்து நெருங்கிய பாந்தமான குரலில் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அத்தனை விவரங்கள், கதைகள், விவரணைகள், இலக்கிய சர்ச்சைகள் என்று பேசிக் கொண்டேயிருப்போம். அப்போது நாங்கள் இருபதுகளில் இருந்தோம். நயினா அறுபதை எட்டிக் கொண்டிருந்தார். வயதின் இடைவெளியை அவருடைய பேச்சு குறைத்துவிடும். சம வயதினர் போலும் அவர் எங்களிடம் பகிர்ந்து கொண்டே சமாச்சாரங்கள் ஏராளம் அப்போது கோவில்பட்டியில் ஒரு புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருந்த நேரம். தேவதச்சன், கெளரிஷ­ங்கர், வித்யாஷ­ங்கர், பூமணி, அப்பாஸ், தமிழ்ச்செல்வன், பிரதீபன், ஜோதிவிநாயகம், உதயசங்கர், நாறும்பூநாதன், சாரதி, திடவை பொன்னுச்சாமி, முருகன், அப்பணசாமி, கோணங்கி என்று நகரத்துக்குள்ளேயே ஒரு பெரிய பட்டாளம் இருந்தது. எந்தத் திசைவழி நடந்து சென்றாலும் இரண்டு இலக்கிய வாதிகள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பார்கள். எப்போதும் விவாதம் ... விவாதம் ... விவாதம் ... கோவில்பட்டி நகரமே கொந்தளித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றும் சதா வெளியூர்களிலிருந்து எழுத்தாளர்கள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அவர்களின் வாய்மொழிக் கதைகள் மூலமாகவும் கோவில்பட்டி இலக்கிய வட்டாரம் தமிழ் இலக்கிய உலகில் பிரசித்தி பெறத் தொடங்கிறது. இதற்கெல்லாம் பின்புலமாக நயினா இருந்தார். அவர் காரசாரமான விவாதங்களின் பங்கெடுத்ததில்லை. இலக்கியக் கூட்டங்களில் ஆவேசமாக உரையாற்றியதுமில்லை. இலக்கிய அரசியலில் தன்னை முன்னிறுத்தும் சாணக்கிய வேலைகளைச் செய்ததுமில்லை. ஆனால் கோவில்பட்டி இலக்கியச் சூழலுக்குப் பின் திரையாக இருந்தார். புதிய இளைஞர் படையைக் கண்டு பெருமிதம் அடைந்தார். அதை பலபேரிடம் சிலாகிக்கவும் செய்தார். இத்தனைக்கும் இலக்கிய விமரிசனவிவாதங்களில் அவரையும் நாங்கள் விட்டுவைத்ததில்லை.

அவர் ஆரம்பத்திலிருந்தே வட்டார இலக்கியத்தின் மீதும், குறிப்பாக தான் வாழ்ந்த தனித்துவமிக்க கரிசல் மண்ணின் மீதும் தீராத நம்பிக்கை வைத்திருந்தார். வட்டாரமொழி இலக்கியம் குறித்து எத்தனையோ எதிர்மறை விமர்சனங்கள் வந்தபோதும் அவர் விடாப்பிடியான நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கைவீண் போகவில்லை.

பெரும்பாலும் உயர்சாதி இலக்கியமாகவே இருந்து வந்த தமிழிலக்கியத்தில் கிராமத்தின் குரலை அழுத்தமாகச் சொன்னவர் நயினா தான். ஒரு வகையில் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் வாழ்க்கை தமிழிலக்கியத்தில் பிரதிபலிக்க முன்னத்தி ஏர் பிடித்தவரும் நயினாதான். இன்று வட்டாரமொழி இலக்கியம், இத்துணை அங்கீகாரம் பெற்றிருக்கிற தென்றால் அதற்கு நயினாவின் தொடர்ந்த இலக்கியச் செயல்பாடுகளே காரணம். அவர் எங்கேயிருந்தாலும் அங்கே ஒரு இலக்கியச் சூழல் உருவாகிவிடும். கோவில்பட்டியில் அவர் எங்கள் பின்புலமாக இருந்த காலம் இங்குள்ள இலக்கியவாதிகளின் பொற்காலம் என்று சொல்லாம். அதை நினைத்து நாங்கள் இப்போதும் பெருமை கொள்கிறோம்.

பல சமயங்களில் நானும் மாரீஸீம் பேசிக் கொள்ளும் போது எங்கள் கண்களில் அந்த நாட்களின் ஞாபகங்கள் நிழலாடும்; இடைசெவல் சென்று வந்ததைப் பற்றி கோவில்பட்டி நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஞாபகம் கொள்ள வேறுவேறு ஞாபகங்கள் இருக்கும். எனக்கும் என் துணைவியாருக்கும் மேலும் நெருக்கமான நினைவுக்குறிப்பு உண்டு. என் திருமணத்திற்கு ஒரு எழுத்தாளர் திருமாங்கல்யம் எடுத்து தர வேண்டும் என்று நாங்கள் பேசும் போது உடனடியாக எங்கள் ஒருமித்த கருத்தாக நயினாவையும் கணவதியம்மாவையும் கூப்பிடலாம் என்று முடிவுசெய்தோம். என் துணைவியாரின் சொல்லாடலில் கைதட்டி கலியாணம் என்ற பெயர் பெற்ற என் திருமணத்தின் புகைப்படத்தொகுப்பில் நயினாவையும் கணவதியம்மாவையும் அடிக்கடி நானும் என் குடும்பத்தாரும் பார்த்துக் கொள்வோம். இன்று வரையான எழுத்திற்கும் எனக்கும் உள்ள உறவுக்கு நயினா ஒரு முக்கியக் காரணம் என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

எண்பத்திஐந்து வயதைக் கடந்தும் இன்னும் தமிழிலக்கியத்திற்கு தன்னுடைய பங்களிப்பை செய்து கொண்டிருக்கும் நயினா புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் உத்வேகமளிக்கிறார் என்பது மிகையில்லை. மாரீஸிடம் நான் சொல்கிறேன். நயினாவை அவரது நூறாவது வயதில் பார்க்க வேண்டும். அதற்கு அவர் சொல்கிறார். “அதென்ன பிரமாதம் அப்பவும் நயினா நமக்கு கருப்பட்டிக் காப்பியும் காரச்சேவும் கொடுத்து ஏகப்பட்ட சங்கதிகளைச் சொல்லுவார்”. உண்மை தானே.

Tuesday, 8 May 2012

விலகிப் போய்..

unspeakable-grief-of-knowing

விலகிப் போய்க் கொண்டிருக்கிறாய் நீயென

எனக்குத் தெரியும்

மரத்துப் போகச் செய்யும் உன் கை விரல்களின்

குளிர்மை கிசுகிசுத்தது ரகசியமாய்

உன் இலக்குகள் மாறி விட்டன

என்னைக் கடந்து செல்லும்

உன் பார்வைக் கோடுகளின் தடம்

ஊர்ந்தலைகிறது ஒரு பூரானைப் போல

உன் பயணத் திசையில்

எனக்கான நிறுத்தம் எதுவுமில்லை

இத்தனைக்கும் பிறகு

உன்னை விட்டு விலகிட

நானும் அந்தரங்கமாய் ஆசைப் படுகிறேன்

சிலவேளை

என் நினைவுகளில் குரோதத்தின் சிறுவிதை

முளை விட்டிருந்தால்

என் கனவுகளில் துரோகத்தின் கரும்விஷம்

சுரந்திருந்தால்

என் இதயத்தில் கைவிடப்படுதலின்

கூர்வாள் குத்திக் கிழித்திருந்தால்

எல்லாம் எனக்கும் சுலபமாக இருந்திருக்கும்

Monday, 7 May 2012

நாகுவின் கோல்

hockey

எங்கள் தெருவிலேயே நான் தான் முதன் முதலில் ஒரிஜினல் ஹாக்கி மட்டையுடன் விளையாடப் போனது. ஏழாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என்று நினைக்கிறேன். என்னுடைய அப்பா வார்ப்பில் விட்டுப் போயிருந்த வேம்பயர் ஹாக்கி மட்டையோடு வீட்டுக்கு வந்தார். அது வரை நானும் எல்லோரையும் போல வளைந்த விறகுக்கட்டையோடு விளையாடப் போவேன். அநேகமாக ஊரிலுள்ள பெரும்பாலான பசங்க அப்படித்தான். விறகுக்கடைகளுக்குப் போய் முனையில் வளைந்த விறகுக் கட்டைகளைக் காசு கொடுத்து வாங்கவோ, வீட்டில் வாங்கும் விறகுகளில் அந்த மாதிரியான வளைவான விறகுக்கட்டையையோ தேடி எடுத்துக் கொண்டு காந்தி மைதானத்தில் கூடி விடுவோம். ஏகப்பட்ட அணிகள் அங்கே விளையாடிக் கொண்டிருக்கும். எப்போதும் விறகுக் கட்டைகளைச் சுழற்றிக் கொண்டு பசங்க அலையிறதைப் பார்க்கிறதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அப்படி விளையாடிக் கொண்டிருக்கிற விறகுக் கட்டைகளுக்கு மத்தியில் நான் உண்மையான ஹாக்கி மட்டையுடன் விளையாண்டால் எப்படி இருக்கும். பசங்க மத்தியில் பெரிய மரியாதை. எனக்கும் பெருமித உணர்வு. மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடியது. என் அப்பாவை நான் நன்றியோடு நினைத்துக் கொண்டேன்.

என் அப்பாவின் அம்மா இறந்த பிறகு அப்பா திசை தெரியாமல் காடோசெடியோன்னு அலைந்து திரிந்திருக்கிறார். கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டு திரிந்தவர் எப்படியோ டாக்டர்.துரைராஜ் வீட்டில் வேலைக்குச் சேர்ந்து அவருடைய நன்மதிப்பைப் பெற்றதினால் அவருடைய செல்லப் பிள்ளையாகவே இருந்திருக்கிறார். அவர் தான் அப்பாவுக்கு லட்சுமி மில்லில் வேலை வாங்கிக் கொடுத்து அவரை ஒரு ஆளாகியதாக அப்பா அடிக்கடி சொல்லுவார். டாக்டர் துரைராஜுக்கு ஹாக்கி விளையாட்டின் மீது அவ்வளவு வெறி. அவ்ர் குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஹாக்கி விளையாடுவார்கள். அவருடைய தம்பி எட்வெர்டு,அவருடைய மகன் ரவி, என்று எல்லோரும் அந்த விளையாட்டின் மீதுபிரியமாக இருந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்துதான் அப்பா உடைந்து கிடந்த ஹாக்கி மட்டையை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்.

நாகு ஹாக்கி மட்டையை ரிப்பேர் செய்வதில் விற்பன்னன். இத்தனைக்கும் அவனிடம் ஒரு ஹாக்கி மட்டை கூடக் கிடையாது. நானும் அவனும் போய் நாலணாவுக்கு வச்சிரமும் சுற்றிக்கெட்டுவதற்கு பாவாடை நாடாவும் வாங்கிக் கொண்டு வந்தோம். எங்கள் வீட்டுக்குப் பின்னால் இருந்த இருளப்பசாமி கோவில் ஒரு நந்தவனம் போல இருந்தது. அங்கே இருந்த ஒரு புளிய மரத்திற்குக் கீழே உடைந்த பானையின் பெரிய துண்டைச் சேகரித்து வந்து கற்களை வைத்து அடுப்பு மூட்டி உடைந்த பானைத் துண்டை வைத்து வச்சிரத்தை அதில் போட்டு காய்ச்சினோம். அடுப்பு எரிய குச்சிகள் பொறுக்கிக் கொடுப்பது என் வேலை. பதமாய் கிண்டிக் கிண்டிக் காய்ச்சவேண்டியது நாகுவின் வேலை. நாகு ஒவ்வொன்றையும் மிகுந்த பொறுப்புடனும் அக்கறையுடனும் செய்தான். ஏதோ ஒரு புனிதமான காரியத்தைச் செய்கிற தீவிரமான முகபாவம் அவனுக்கு இருந்தது.

வச்சிரம் கொதித்துப் பாகாய் வந்ததும் உடைந்த மண்பானைச் சட்டியை இறக்கி ஒரு குச்சியில் அந்த வச்சிரத்தை எடுத்து உடைந்த ஹாக்கி மட்டையின் இரண்டு பாகங்களிலும் தடவி ரெண்டையும் பிசகாமல் இறுக்கி ஒட்ட வைத்து வாங்கி வைத்திருந்த பாவாடை நாடாவினால் சுற்றிக் கட்டி இரண்டு நாட்களுக்கு அசங்காமல் வைத்து விட்டோம். மூன்றாவது நாள் உடைந்த ஹாக்கி மட்டையை ஒட்ட வைத்திருக்கிறோம் என்று சொன்னால்கூட யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி செய்து கொடுத்திருந்தான் நாகு. அதற்காக ஹாக்கி மட்டையை நாகுவுக்கு இரண்டு நாட்கள் விளையாடக் கொடுத்தேன். இந்த ஹாக்கி மட்டையினால் விளையாட்டில் என்னுடைய மதிப்பு கூடி விட்டது. எல்லோரும் என்னைத் தன்னுடைய அணியில் சேர்ப்பதில் குறியாக இருந்தார்கள். அப்போது தான் என்னுடைய ஹாக்கி மட்டையை ஆளுக்குக் கொஞ்ச நேரம் வாங்கி விளையாடிக் கொள்ளலாம் என்ற நப்பாசைதான்.

நாகு நல்ல விளையாட்டுக்காரன்.அவன் எப்போதும் நடு முன்னணி வீரனாகத் தான் களமிறங்குவான். எப்போது எங்கே இருக்கிறான் என்று கண்டு பிடிக்க முடியாது. எதிரணியின் கண்களில் மண்ணைத் தூவுவதில் மன்னன். இங்கே இருக்கிற மாதிரி இருக்கும் பார்த்தால் கோல் போஸ்ட்டுக்கு அருகில் போய் நிற்பான். ஆள் கட்டையாக இருந்தாலும் அவனுடைய சுறுசுறுப்பு அவனை பெரிய விளையாட்டு வீரனாக்கியிருந்தது. அவன் இருக்கிற அணி எப்போதும் ஜெயித்து விடும். அதனால் எல்லோரும் அவன் இருக்கிற அணிக்குப் போவதற்கு ஆசைப்படுவார்கள். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தெருவுடன் போட்டி. பல போட்டிகள் சண்டையில் முடிந்து விடும். அதிலும் வடக்குத் தெரு பயல்கள் ரெம்ப முரட்டுத்தனமாக விளையாடுவார்கள். எப்போதும் கை கால்களில் சிராய்ப்புடன் அலைந்து கொண்டிருந்த நாட்கள் அவை. அப்படி இல்லாத பையன்கள் குறைவு தான்.

தென் தமிழகத்தில் மிகவும் பிரபலமான விளையாட்டு ஹாக்கி தான். அதுவும் குறிப்பாக கோவில்பட்டியில் ஹாக்கி விளையாடத்தெரியாத பையன்களே இருக்கமாட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் ஒருவர் இருந்தாரென்றால் அவர் டாக்டர் துரைராஜ் தான். அவர் தான் கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர். அது மட்டுமல்ல. முதல் முதலாக கோவில்பட்டி ஹாக்கி கிளப் என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி அதைப் பலபோட்டிகளுக்கு அனுப்பி வைத்து ஊக்கப்படுத்தினார். அதோடு அவருடைய தொடர்ந்த முயற்சியினால் அரசும் மக்களும் சேர்ந்து நிலத்தை வாங்கி ஹாக்கி மைதானத்தை உருவாக்கினார்கள். தொடர்ந்து ஹாக்கி போட்டிகள் நடைபெற வேண்டுமென்பதற்காக அவரைக் குடும்பமருத்துவராக வைத்திருந்த கோவில்பட்டி மற்றும் கோயம்புத்தூர் லட்சுமி மில் முதலாளிகளிடம் பேசி குப்புசாமி நாயுடு அகில இந்திய ஹாக்கி மைதானமாக மாற்றினார். Dhyan_Chand_1936_semifinal

இந்த மைதானத்தில் விளையாடாத இந்திய அணிகளே கிடையாது. இந்திய ஹாக்கியின் தந்தை தயான்சந்த் விளையாடிய பெருமை இந்த மைதானத்துக்கு உண்டு. அது மட்டுமல்ல பல ஒலிம்பிக் வீரர்களுக்கு, தேசிய அணி வீரர்களுக்கு, மாநில அணி வீரர்களுக்கு, பயிற்சிக் களமாக இருந்தது. மே மாதம் வந்து விட்டால் போதும் ஊரே ஹாக்கி போட்டிகளைப் பற்றிப் பேச ஆரம்பித்து விடும். போன ஆண்டு கோப்பையை யார் வாங்கினார்கள். அந்த அணிகளின் தராதரம் பற்றியெல்லாம் விமர்சனம் நடக்கும். போட்டிகள் குறித்த அறிவிப்பு வந்து விட்டால் அவ்வளவு தான். வேறு எந்த விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தாலும் எல்லோரும் ஹாக்கி விளையாடத் தொடங்கி விடுவார்கள். ஒவ்வொரு நாளும் செய்திகள் காட்டுத்தீ போல பசங்க மத்தியில பரவும்.

“ டேய் ..எம்.இ.ஜி. பெங்களூர், வந்திருச்சாம்டா..”

“ ஏர்லைன்ஸோட செமிபைனல்ல தோத்தவங்க தானடா..”

“ ஒரு தடவையாச்சும் நம்ம கோவில்பட்டி டீம் ஜெயிக்கணும்டா..”

என்று பேச்சு பேச்சு எப்போதும் ஹாக்கி பற்றியே பேச்சு. வீடுகளில் அம்மாக்களில் வசவு நாறிப்போகும்.

“ வேனா வெயில்ல ஏண்டா விறகுக்கட்டையைத் தூக்கிகிட்டு அலையிற.. ஊருல அடிக்கிற வெயில்பூராம் ஒந்தலையில தான்.. மூஞ்சியும் முகரக்கட்டையும் பாரு..”

ஆனாலும் நாங்கள் கேட்பதில்லை. ஹாக்கி போட்டிகள் தொடங்கி விட்டால் திருவிழா போல ஆகிவிடும். ஊரிலுள்ள நண்டு நசுக்கான், இளவட்டங்கள், பெரிசுகள், என்று போட்டி நடக்கும் நேரங்களில் ஊர்வலம் போல மைதானத்துக்குப் போய் வந்து கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு மேட்ச் முடிந்ததும் ஹாக்கி வீரர்களைச் சுற்றி பசங்க கூட்டம் மொய்த்து விடும். அவரை அண்ணாந்து பார்த்துக்கொண்டே அவர் பின்னாலேயே போவோம். சிலர் அவர் வைத்திருக்கும் ஹாக்கி மட்டையைத் தொட்டுப் பார்த்து மகிழ்வார்கள். சிலர் துணிச்சலாய் அவருடைய ஹாக்கி மட்டையைக் கேட்பார்கள். அந்த வீரர்கள் ஹிந்தியில் கேட்கும் கேள்விகளுக்கு ஹை ஹை.. என்றோ ரூப்பு தேரா மஸ்தானா என்றோ பாடிக்காட்டுவார்கள். வீரர்கள் சிரிப்பதைப் பார்த்து ஏகக் குஷியாகி விடும். வீரர்களை அவர்கள் தங்கியிருக்கும் தங்கும் விடுதியிலோ, பயணிகள் விடுதியிலோ கொண்டு போய் விட்ட பிறகே அவரவர் வீடுகளுக்குப் போவோம். நான் பெரியவனாகி இந்த மாதிரி ஹாக்கி விளையாட்டு வீரனாகத் தான் போக வேண்டும் என்று மனதில் சங்கல்பம் எடுத்துக் கொண்டேன்.

ஆனால் இன்று நிலைமயே வேறு. கிரிக்கெட் என்ற பகாசூரன் இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியைக் கபளீகரம் செய்து விட்டான். அது மட்டுமல்ல இன்று சமூகத்தைப் பிடித்துள்ள கொடிய நோயான ரியல் எஸ்டேட் பிஸினஸால் ஹாக்கி மைதானமே ஸ்வாகா செய்யப் படும் நிலைமை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சினால் தற்காலிகமாகக் காப்பாற்றப் பட்டிருக்கிறது. என் இளம்பருவ நினைவுகளில் இந்த குப்புசாமி நாயுடு ஹாக்கி மைதானத்தை மறக்கமுடியாது. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. எங்களுடைய சிறுவர் அணி, கோவில்பட்டி டவுண் ஹாக்கி கிளப் என்ற பெயரில் பெரியவர்களுக்கான ஹாக்கி போட்டிகளுக்கு முன்னால் நடைபெறும் சிறுவர்கள் ஹாக்கி போட்டியில் முதல் பரிசைப் பெற்றது. அதில் கிடைத்த லட்சுமி மில்லின் வெள்ளைத்துணியில் சட்டை தைத்துப் போட்டுக் கொண்டு ரெம்ப நாளைக்குப் பீத்திக் கொண்டு திரிந்தது வேறு விஷயம். அன்று நாங்கள் முதல் பரிசைப் பெறுவதற்கு முக்கியக் காரணம் நாகு போட்ட கடைசி நிமிடக் கோல். அந்தக் கணத்தை இப்போது நினைத்தாலும் மனம் கிளர்ச்சியடைகிறது.

சிறுவர்கள் ஹாக்கிபோட்டியில் இறுதிப் போட்டிக்கு எங்களுடைய கோவில்பட்டி டவுண் ஹாக்கி கிளப்பும், இலுப்பையூரணி ஸ்போர்ட்ஸ் கிளப்பும் வந்து சேர்ந்தோம். இலுப்பையூரணி வலுவான டீம். எல்லோரும் ஹாக்கி மட்டையிலேயே பிராக்டீஸ் செய்ஞ்சவங்க. காலில் பூட்ஸ், சாக்ஸ், யூனிபார்ம், என்று பக்கா டீமாக இருந்தார்கள். அது மட்டுமல்ல முரட்டுத்தனமான பசங்களாகவும் இருந்தனர். இதுவரை எந்த ஒரு டீமிடமும் தோற்றதில்லை என்பது மட்டுமில்லை ஜெயித்ததும் ஒன்பது கோல் பத்து கோல் போட்டுத் தான். எங்கள் அணியில் ஆளுக்கொரு நிறத்தில் உடை. யாருக்கும் பூட்ஸ் கிடையாது. நிறையப் பேர் இந்த மேட்சுக்கு வந்தபிறகு தான் ஹாக்கி மட்டையைக் கையில் பிடித்துப் பார்க்கிறார்கள். அது வரை விறகுக் கட்டை தான். அதே போல நாங்கள் தக்கிமுக்கி ஒன்றில் ஜெயித்து, ஒன்றில் தோற்று அப்படிஇப்படியாகத் தான் இறுதிப் போட்டிக்கு வந்தோம். ஏற்கனவே இலுப்பையூரணி அணியின் விளையாட்டைப் பார்த்திருக்கிறோம். எனவே நாங்கள் கவலைப் படவில்லை. எங்களைப் போலவே இலுப்பையூரணி அணியும் ஜெயிப்பது உறுதி என்பதால் அவர்களும் கவலைப் படவில்லை.

போட்டி ஆரம்பித்த பிறகு என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை. எங்கள் அணியில் அது வரை உருப்படியாக விளையாடாதவன் எல்லாம் நன்றாக விளையாடினான். அது வரை ஓடாதவன் எல்லாம் உயிரைக் கொடுத்து ஓடினான். மொத்தத்தில் எங்கள் அணி மிகச் சிறப்பாக விளையாடியது. முதலில் இலுப்பையூரணி அணி கொஞ்சம் அசால்ட்டாக விளையாடியது. பிறகு சுதாரித்துக் கொண்டு விளையாடினாலும் அந்த அணியால் கோல் எதுவும் போடமுடிய வில்லை. நேரமாக ஆக அவர்கள் முரட்டுத்தனமாக விளையாட ஆரம்பித்தார்கள். ஆறுமுகத்தின் காலில் அடித்து விட்டார்கள். விளையாட்டின் இறுதி நிமிடங்களில் பந்து எங்கள் அணியின் கைவசமே இருந்தது. என்னிடம் வந்த பந்தை நான் நாகுவிடம் பாஸ் பண்ண முயற்சிக்கும் போது என்னைக் கீழே தள்ளினான் ஒருத்தன். நான் அப்ஜெக்சன் பவுல் என்று மட்டையை உயர்த்திக் காட்டும் போது அது என்னைக் கீழே தள்ளியவனின் தலையில் பட்டு விட்டது. அவ்வளவு தான் எல்லோரும் என்னை நோக்கி ஓடி வர யாருக்குமே தெரியாமல் எப்படித்தான்பந்தைக் கடத்தினானோ நாகு கோல் போஸ்டை நோக்கிப் பறந்து விட்டான். அவர்கள் சுதாரிப்பதற்குள் கோல்கீப்பரை ஏமாற்றுவதில் கில்லாடியான நாகு மிகச் சுலபமாகக் கோலைப் போட்டு விட்டான். கோல்ல்ல்ல். ஆம் நாங்கள் ஜெயித்து விட்டோம். அந்த வருடம் எங்கள் கால்கள் தரையில் படவில்லை. எங்கள் முதுகில் சிறகுகள் முளைத்திருந்தன.

நன்றி: மீடியா வாய்ஸ்

Sunday, 6 May 2012

அன்பின் உருவம் அர்ப்பணிப்பின் சிகரம்

images

பெரியவர்களிடம் இற்றுத் தூர்ந்துபோன ஊற்றுக்கண்களான அன்பும், அர்ப்பணிப்பும் குழந்தைகளிடம் பொங்கிப் பிரவகிக்கின்றன. அப்படியென்றால் பெரியவர்களிடம் அன்பென்ற பொருளே இல்லையா? அர்ப்பணிப்பின் அழகே இல்லையா? இருக்கின்றன. எல்லாம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து நடைமுறைத் தந்திரமாக வெளிப்படுகின்றன. பிரதிபலன் நோக்கி வெளிப்படுகின்றன. சுயநலம் சார்ந்து செயல்படுகின்றன. தன்னை முன்னிறுத்தத் தகவமைத்துக் கொள்கின்றன. ஆனால் எந்த எதிர்பார்ப்புமின்றி, பிரதிபலன் பார்க்காது, தன்னை முன்னிறுத்தும் அவசியமின்றி அன்பைக் குழந்தைகளே வெளிப்படுத்துகின்றன. அது எப்படி? குழந்தைகள் மீது பெற்றோர்கள் தானே பேரன்பு செலுத்தி பேணிப்பாதுகாத்து வளர்க்கிறார்கள் என்ற கேள்வி வருகிறதே. தாயை விட அன்பிற்கு மிகச் சிறந்த உதாரணம் சொல்ல முடியுமா? என்று யோசிக்கலாம். உண்மைதான், தாயன்பு பேரன்பு தான். ஆனால் அதிலும் குழந்தையிடம் போலன்றி சிறிது எதிர்பார்ப்பு இருக்கிறது. உயிரியல் தூண்டுதலினாலும், சமூகத்தின் உள்ளுணர்வுத் தொகுப்பினாலும் ஒரு தாய் தன் குடும்பத்தைப் பேணிப்பாதுகாக்க முற்படுகிறாள். அதன் வழியாகவே குழந்தை வளர்ப்பும் நிகழ்கிறது.

குழந்தைக்கு அப்படியில்லை. எந்த எதிர்பார்ப்புமின்றியே இந்த பூமிக்கு வருகிறது. கண் திறந்தபொழுது தொடங்கி காணும் பொருட்கள், உயிர்கள் யாவற்றையும் நேசிக்கத் தொடங்குகிறது. அன்பின் அலைகளால் மூழ்கடிக்கிறது. அம்மாவை விட்டு அகல மறுக்கிறது. தூங்கும் அப்பாவின் மீது விழுந்து புரள்கிறது. மரப்பாச்சியோ, பார்பியோ எப்போதும் கூட்டிக்கொண்டே அலைகிறது. அதன் எல்லாக் காரியங்களிலும் அன்பு ததும்புகிறது. இந்த அன்பிற்கும் பெரியவர்களின் அன்பிற்கும் உள்ள பெரிய வித்தியாசம் அர்ப்பணிப்புணர்வுதான். அர்ப்பணிப்புடன் கூடிய அன்புப் பெருவெள்ளத்தில் எல்லாவற்றையும் மூழ்கடிக்கிறது. அதனால்தான் தான் நம்பும் பெரியவர்கள் என்ன சொன்னாலும் கேட்கிறது குழந்தை. குதி என்று சொன்னால் சற்றும் யோசிக்காமல் குதிப்பதற்குக் காரணம் அர்ப்பணிப்புதான் ஒவ்வொரு சின்னச் சின்னக் காரியத்தையும் நூறு சதவீத ஈடுபாட்டுடன் செய்கிறது குழந்தை. எறும்பின் பாதையைப் பின் தொடர்வதாக இருக்கலாம், கைகளிலிருக்கும் பொருட்களைக் கொண்டு விளையாடும் விளையாட்டாக இருக்கலாம். புதிதாக அது கண்டு பிடித்த ஒரு சொல்லாக இருக்கலாம். மீண்டும் மீண்டும் மிகுந்த ஈடுபாட்டுடன் அதைச் செய்கிறது. குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்கள். நாம் செய்கிற எந்தக் காரியத்திலும் அன்பும் அர்ப்பணிப்பும் செலுத்த முடிந்தால் அந்தக் காரியமே பேரழகு பெற்று ஒளிரும்.

பெரியவர்கள் தங்களுடைய வசதிக்கேற்பவே குழந்தைகளிடம் தங்கள் அன்பைச் செலுத்துகிறார்கள். தங்கள் ஓய்வு நேரத்தின்போது சில நேரம் கடமையாக சில நேரம் குழந்தையின் வற்புறுத்தல் அல்லது தொந்தரவு தாங்க முடியாமல், சிலநேரம் குழந்தையை ஏமாற்ற இப்படி அவர்களுடைய அன்றாட வாழ்க்கை நடைமுறைகளுக்கு யாதொரு பங்கமும் வராதவண்ணம் குழந்தைகளை நேசிக்கிறார்கள். என்றாவது ஏதாவது இடையூறு, தொந்தரவு நேர்ந்து விட்டால் போச்சு, அதைத் தாங்கள் குழந்தைக்காக செய்த மிகப்பெரிய தியாகமாகச் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். குழந்தைகள் தங்களுடைய இயல்பான வளர்ச்சியை இடையூறு செய்யும் பெரியவர்களை ஒரு நாளும் குறை சொல்வதில்லை. மாறாக தீராத நேசத்தைக் காட்டுகிறார்கள்.

குழந்தைகள் உறங்கும்போது தூக்கிக் கொஞ்சுகிறார்கள். தீவிரமாக விளையாடிக் கொண்டிருக்கும் போது இடையூறு செய்து தூக்கிக்கொண்டு போய் விடுகிறார்கள் பெரியவர்கள். குழந்தைகளின் விருப்பத்திற்கு மாறாகப் பெரியவர்களின் வசதியே கணக்கில் கொண்டு குழந்தைகளை வளர்க்கிறார்கள். இவற்றால் எல்லாம் இயல்பான குழந்தையின் மனதில் அதன் வளர்ச்சிப் போக்கில் புண்படுத்தப்பட்டு பெரியவர்களின் கட்டளை அல்லது எண்ணம் புகுந்து விடுகிறது. அப்போது குழந்தை தடுமாறுகிறது. செய்யலாமா? வேண்டாமா? என்று தயங்குகிறது. போகலாமா வேண்டாமா? என்று யோசிக்கிறது. எப்போதும் பெரியவர்களின் அதட்டும் குரலினைக் கொண்ட கடுமையான முகமே அதனைப் பயமுறுத்துகிறது. தன் சொந்த இயல்பான உள்ளுணர்வைப் பின்பற்றத் தவறி விடுகிறது. பாதை தடுமாறி ஒரே நேரத்தில் குழந்தையாகவும், பெரியவர்களாகவும் இருக்க நேர்கிற நெருக்கடியைச் சந்திக்கிறது. இத்தகைய நெருக்கடியின் விளைவாக அதன் ஆளுமையில் சின்னச் சின்ன கீறல்கள் ஏற்படுகின்றன.

ஏனெனில் குழந்தைகள் பெரியவர்களை அலட்சியப்படுத்த முடியாது. பெரியவர்களைச் சார்ந்திருக்கிறார்கள் என்பதையும் தாண்டி குழந்தைகள் அவர்களை நேசிக்கிறார்கள். அளவற்ற நேசத்தின் விளைவாகவே பெரியவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டும். அதன்படி நடக்க வேண்டும் என்ற பேரவா குழந்தைகளுக்கு எழுகிறது. அதன் விளைவாகவே தன் இயல்பூக்க உணர்வை கைவிட்டுவிட்டு பெரியவர்களின் சொல்படி கேட்கத் தொடங்குகிறது.

அதுமட்டுமல்லாமல் குழந்தை பெரியவர்களின் மீது கொண்ட பேரன்பினால் அவர்களை உற்றுக் கவனிக்கிறது. அவர்களைப் போலவே நடந்து கொள்ள விரும்புகிறது. இது குழந்தைக்கு அளவிலா மகிழ்ச்சி ஊட்டுகிற காரியமாக இருக்கிறது. பெரியவர்களின் சட்டையைப்போடுவது, பெரியவர்களின் செருப்புகளைப் போட்டு நடப்பது, போன்ற காரியங்களில் குழந்தைக்கு ஏற்படும் உற்சாகத்தைப் பாருங்கள். உணர்ச்சிகள் மட்டுமே ததும்பி நிற்கும் பருவத்தில் குழந்தையின் மொழியே அன்புதான். பெற்றோர், உற்றோர், நாய், பூனை, மாடு, ஈ, எறும்பு, பொம்மை, செப்புச் சாமான்கள் என்று உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் மீது இந்த அன்பினால் தன்னைப் பிணைத்துக் கொள்கிறது இந்தக் குழந்தை. குழந்தையின் அன்பில் வேற்றுமை கிடையாது. சுனையூற்றின் நீர்போல தூய்மையானதாக அது திகழ்கிறது. குழந்தையே அன்பின் உருவமாக ஒளிவீசுகிறது. அதன் ஒவ்வொரு செல்லிலும் தன்னை அர்ப்பணிக்கும் அன்பு ததும்பி நிற்கிறது. அதனாலேயே குழந்தை எல்லோரையும் தன்னுடனேயே இருக்கச் சொல்கிறான். எப்போதும் பெரியவர்களுடன் இருந்து பெரியவர்கள் பேசுவதை, செய்வதைக் கவனிக்க விரும்புகிறான். ஆனால் பெரியவர்கள் அதை விரும்புவதில்லை. அவர்களுக்கு வேலை இருக்கும்போது குழந்தையும் வேறுவேலைகள் செய்யவேண்டும். அவர்கள் உறங்கும்போது குழந்தையும் உறங்கவேண்டும். அவர்கள் சாப்பிடும்போது குழந்தையும் சாப்பிட வேண்டும். மொத்தத்தில் பெரியவர்களுடைய பெரிய வாழ்க்கையை குழந்தைகளிடம் திணிக்கிறார்கள்.

இந்தத் திணிப்பை எதிர்த்துக் குழந்தைகள் கலகம் செய்கிறார்கள். எப்படியாவது பெரியவர்களுக்குப் புரிய வைத்துவிட முயற்சிக்கிறார்கள். அவர்கள் புரிந்து கொண்டு விடமாட்டார்களா என்று ஏக்கத்துடன் அண்ணாந்து பார்க்கிறார்கள். ளநேசம் பொங்கும் முகத்துடன் பெரியவர்களைத் தொட்டு உணர்த்த விரும்புகிறார்கள். புரிந்து கொள்ளுங்கள்! எங்களைப் புரிந்து கொள்ளுங்கள்! என்று மன்றாடுகிறார்கள்.

ஆனால், நடைமுறை வாழ்வின் கொடூரமான பற்சக்கரங்களில் கிழிபட்டு நார்நாராகிக் கொண்டிருக்கும் அதற்கான காரணங்களையே புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை எனும்போது தொலைந்துபோன நுட்பமான உணர்வுகளின் ததும்புதலில் திளைத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை எப்படிப் புரிந்து கொள்வார்கள்? குழந்தைகள் தங்களுடைய அன்பையும் அர்ப்பணிப்பையும் பெறுவதற்கு யாருமின்றி விசும்புகிறார்கள். அந்த விசும்பல் சத்தம் கேட்கிறதா?

Thursday, 3 May 2012

செய்திகளைத் தின்பவன்

popal

எப்போதும் செய்திகளைத் தின்று

கொண்டிருந்தவனைப் பார்த்திருக்கிறீர்களா நீங்கள்?

விபத்தில் சிதைந்தவர்களை

பரிதாபத்துடன் தின்றான்

கள்ளக்காதல் வன்மக்கொலையை

பொசுங்கும் காமநாற்றத்துடன் தின்றான்

கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட சிறுமியை

அழுதுகொண்டே தின்றான்

மித்ரதுரோகக் கொலையை

நொறுக்குத்தீனியாகத் தின்றான்

அரசுக்கொலைகளை அச்சத்துடன் தின்றான்

காதல் கொலைகளைக் கனிவுடன் தின்றான்

கருணைக்கொலைகளை காணாமல் விட்டான்

சொத்துக் கொலைகளை அருவெறுப்புடன் தின்றான்

பொழித்தாவா கொலைகளை

சீ..தூ..வெனத் தின்றான்

உரிமைப்போரில் நிகழ்ந்த கொலைகளை

கோபத்துடன் தின்றான்

அகதிக்கொலைகளை சாபமிட்டுக்கொண்டே தின்றான்

கொலைகளைத் தின்று கொலைகளைத் தின்று

அஜீரணமானது மூளை

கொலைகளால் மலிந்த உலகினை மாற்ற

செய்வதென்ன என்று யோசித்தது

ஐஸ்கிரீம் பார்லரில் சென்றமர்ந்து

கனவு கண்டது ஒரு பொன்னுலகம்

பிறக்கப் போவதாக.

Tuesday, 1 May 2012

கடவுளின் பணியைச் செய்து கொண்டு…… –சாதத் ஹசன் மாண்டோ

Manto-02  

தமிழில்- உதயசங்கர்

 

நான் இந்தியாவின் மேற்குப் பகுதியிலுள்ள குஜராத் மாநிலம் கத்தியவாரிலிருந்து வந்திருக்கிறேன். பனியா வகுப்பைச் சேர்ந்தவன். பரம்பரையாக வியாபாரம்செய்து வருகிறவன்.கடந்த வருடம் பிரிவினையின் போது உலகமே தலைகீழாக, தாறுமாறாக, குழப்பமடைந்த போது நான் தற்காலிகமாக கொஞ்சநாள் என் தொழிலிருந்து விலகியிருந்தேன். கஞ்சா விற்பனையில் கொஞ்சம் சம்பாதித்ததைத் தவிர.

ஆயிரக்கணக்கான அகதிகள் இங்கேயிருந்து அங்கும், அங்கேயிருந்து இங்கும் குடியேற ஆரம்பித்தனர். ஒரு நாள் நானும் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்வதென்று முடிவு செய்தேன். அங்கே செய்வதற்கு ஏதாவது இருக்கும் என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன். கஞ்சா இல்லையென்றால் வேறு ஏதாவது. நான் கிளம்பி விட்டேன் நான் அங்கே போவதற்கு சிறிது காலம் பிடித்தது. ஆனால் முடிவில் எப்படியோ சமாளித்து விட்டேன். போகும்போது கொஞ்சம் பணமும் சம்பாதித்துக் கொண்டே.

பாகிஸ்தானில் தொழில் செய்வதற்காகவே குடியேறியிருப்பதால் நான் சூழ்நிலையைக் கவனமாக பரிசீலனை செய்தேன். அப்போது இந்துக்கள் கைவிட்டு விட்டுச் சென்ற சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. எங்கு வேண்டுமானாலும் நுழைந்து விடும் திறமையும், மனிதர்களோடு சுலபமாகப் பழகி விடும் இயல்பும் எனக்கு இருந்ததால் அங்கே சரியான இடங்களில் சரியான நண்பர்களை ஏற்படுத்திக் கொண்டேன். மிக விரைவிலேயே என் பெயரில் ஒரு வீடு ஒதுக்கப் பட்டது. நான் உடனடியாக அதை விற்று அந்த விற்பனையில் நல்ல பணம் சம்பாதித்தேன். இது நம்பிக்கைக்குரிய தொழிலாகத் தெரிந்தது. நான் ஒரு நகரத்திலிருந்து இன்னோரு நகரத்திற்கு இடம் பெயர ஆரம்பித்தேன். அங்கே எனக்கு ஒதுக்கப்படும் சொத்துக்களை அதற்கான பத்திரங்கள் கிடைத்ததும் எவ்வளவு சீக்கிரம் விற்று விட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விற்றேன்.

எல்லா வேலைகளுக்கும் கடும் முயற்சி வேண்டும். வாழ்வில் எதுவும் சுலபமில்லை. அதனால் நான் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்கமுடியும் என்று நம்பவில்லை. அது ஒரு நிரந்தரமான போராட்டம். சில நேரங்களில் முகப்புகழ்ச்சியே தேவையான வேலைகளைச் செய்து விடும். வேறு சில சமயங்களில் லஞ்சம் அல்லது ஒரு மாலை விருந்து,மாலையில் ஒரு ‘ நல்ல பொழுதுபோக்கு’ கூட நமக்குத் தேவையான வேலைகளைச் செய்து விடும். நான் என்ன தெரிந்து கொண்டேன் என்றால் நான் எப்போதும் ஓடிக் கொண்டேயிருந்தேன். நான் ஒரு நகரத்துக்குச் சென்று அங்கேயுள்ள குடியிருப்பு பகுதிகளை மேற்பார்வையிட்டு, ஒரு நல்ல வீட்டை தேர்ந்தெடுத்து பின்பு அதை எப்படியாவது சொந்தமாக்கிக் கொள்வது என்று செய்து கொண்டிருந்தேன்.

கடின உழைப்பு எப்போதும் நல்ல பலனை பெற்றுத் தரும். எனவே ஒரு வருட காலத்திலேயே அது நடந்தது. எப்படியோ நான் கணிசமான செல்வத்தைக் குவித்து விட்டேன். இப்போது ஒரு மனிதன் நன்றாக வாழ்வதற்கு எதெல்லாம் தேவையோ அதெல்லாம் என்னிடம் இருந்தது. ஒரு அழகிய வீடு, வங்கியில் ஏராளமான பணம், வேலைக்காரர்கள், ஒரு பெரிய கார். வியாபாரச் சொத்துக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

ஆனாலும் எனக்கு அமைதியில்லை. நான் கஞ்சா வியாபாரம் செய்யும் போதும் இப்படியான மன அழுத்தம் அடிக்கடி வருவதுண்டு. ஆனால் அதை நான் இப்போது அநுபவித்துக் கொண்டிருப்பதோடு ஒப்புமை சொல்ல முடியாது. நான் ஒரு மிகப் பெரிய சுமையில் கீழ் இருப்பதாக உணர்ந்தேன். அது என்ன என்று என்னால் சொல்லமுடிய வில்லை.

நான் புத்திசாலி. ஏதாவது என்னைத் தொந்தரவு செய்தால் நான் எப்படியாவது அது என்ன என்று கண்டு பிடித்து விடுவேன். அதே போல இப்போதும் அத்ன் ஆழத்திற்குச் சென்று பார்ப்பது என்று முடிவு செய்தேன். என் மீது என்ன தவறு இருக்கிறது?

பெண்கள்?.. நல்லது. நான் வில்லங்கம் இல்லாதவன். குஜராத்தில் என்னுடைய மனைவியை இழந்து விட்டேன். ஆனால் என்ன? வேறு பெண்கள் இருக்கிறார்களே. உதாரணத்திற்கு என்னுடைய தோட்டக்காரனின் மனைவி. ருசிக்கு எந்தக் காரணமும் தேவையில்லை. இந்த விசயத்தில் நான் நம்புகிற ஒரே விசயம் ஒரு பெண்ணிடம் உள்ள இளமை தான். அவள் படித்திருக்கவேண்டும், அல்லது அவளுக்கு நடனமாடத் தெரியவேண்டும் அல்லது உங்களூக்கு தெரிந்ததெல்லாம் அவளுக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்பதெல்லாம் முக்கியமல்ல. நான் என்னைப் பற்றித்தான் சொல்லமுடியும். எனக்கு இளமையான பெண்களைப் பிடிக்கிறது. அவ்வளவு தான்.

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நான் ஒரு புத்திசாலி மனிதன். அதனால் என் வாழக்கையில் ஏதோ ஒன்றை இழந்தமாதிரி உணர்ந்தேன். என்னுடைய தொழில் நன்றாக நடந்தது. என்னுடைய வங்கிக் கணக்கு ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே போனது. எனக்காக நிறைய மனிதர்கள் வேலை செய்தார்கள். உண்மையில் நான் எந்தவொரு பெரிய முயற்சியும் எடுக்காமலேயே பணம் வந்து சேர்ந்து கொண்டிருக்கிற நிலைமையை அடைந்து விட்டேன். மிகுந்த சிந்தனைக்குப் பிறகு நான் பதிலைக் கண்டுபிடித்து விட்டேன். நான் அமைதியின்றி இருந்ததற்குக் காரணம் என்னவென்றால் நான் பாகிஸ்தானுக்கு வந்ததிலிருந்து எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை.

கத்தியவாரில் இருக்கும் போது நான் என்பங்கிறகு சில நல்ல காரியங்களைச் செய்திருக்கிறேன். உதாரணத்திற்கு என்னுடைய நண்பன் பாண்டுரெங்கன் இறந்த போது நான் அவனுடைய மனைவியை என்னுடைய வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு வந்து விட்டேன். அதன் மூலம் குறைந்தது இரண்டு வருடங்களுக்காகவாவது பெண்களின் பழமையான தொழிலில் அவள் ஈடுபடாமல் தடுக்கமுடிந்தது. இன்னொரு நண்பன் விநாயக் அவ்னுடைய மரக்காலை உடைத்துக் கொண்ட போது நான் உடனே அவனுக்கு வேறொன்றை வாங்கிக் கொடுத்தேன். எனக்கு நாற்பது ரூபாய் செலவானது. கொஞ்சம் அப்படி இப்படி இருந்திருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் வந்ததிலிருந்து எந்த புண்ணிய காரியத்தையும் செய்யவில்லை. அதனால் தான் என் மனம் அமைதியின்றித் தவித்தது.

நான் என்னென்ன நல்ல காரியங்களைச் செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். தருமம் செய்யலாமா? சரி. ஒரு நாள் நகரம் முழுவதும் சுற்றி வந்தேன். நகரம் முழுவதும் நிர்வாணமான பசித்த தரித்திரங்கள் நிறைந்திருந்தனர். அவர்கள் எல்லோருக்கும் உணவும் உடையும் யாருடைய உதவியும் இல்லாமல் கொடுத்தால் என்ன? எல்லோருக்கும் பொது உணவறை ஒன்றை ஏற்படுத்தினால் என்ன? அது நடைமுறையில் சாத்தியமில்லை. அதைச் செய்யவேண்டுமானால் ஏராளமான தானியங்களை வாங்க வேண்டும். அது கறுப்புச் சந்தையில் மட்டுமே கிடைக்கும். ஒரு நல்ல காரியத்துக்காக சில ஒழுக்கக் கேடான விசயங்களைச் செய்வதில் என்ன நன்மை இருக்கப் போகிறது?

ஒவ்வொரு நாளும் நான் மணிக்கணக்கில் துயரங்களின் கதைகளையும், துரதிருஷ்டங்களின் கதைகளையும் கேட்டுக் கொண்டு பொழுதைக் கழித்தேன். ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு ஒரு துயரமான கதை இருந்தது. தெருக்களில் படுத்துறங்கியவர்களுக்கும் பரந்த வெளிகளில் தங்கியிருந்தவர்களுக்கும் விலையுயர்ந்த வீடுகளில் தங்கியிருந்தவர்களுக்கும் சொல்வதற்கு ஒரு கதை இருந்தது. நடந்து செல்பவனும் மகிழ்ச்சியாக இல்லை. ஏனெனில் அவனுக்கு வசதியான புதிய செருப்புகள் இல்லை. காரில் செல்கிறவனும் திருப்தியாகைல்லை. தன்னால் புதிய மோஸ்தர் கார் வாங்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தான். உண்மையில் எல்லாப் புகார்களும் உண்மையானவை, நியாயமானவை.

முன்பு ஒரு தடவை சோலாப்பூரின் ஆமினாபாயின் சிடால்கர் பாடிய கஜல் என் நினைவுக்கு வந்தது. ( கடவுள் அவருடைய ஆத்மாவுக்கு சாந்தி அளிக்கட்டும்.) அதிலே ஒரு வரி: யாராலும் இன்னோருவரின் தேவையைப் பூர்த்தி செய்து விட முடியாது. அப்படித்தான் நானும் இருந்தேன். உதவி செய்வதற்குத் தயாராக இருந்தேன். ஆனால் உதவி செய்ய முடியாமல் இருந்தேன். இங்கே உதவி தேவைப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தார்கள். மிகுந்த யோசனைக்குப் பின்னால் நான் தர்மம் செய்வதல்ல இதற்குப் பரிகாரம் என்ற முடிவுக்கு வந்தேன். நான் பல அகதிகள் முகாமுக்குப் போய் பார்த்தேன். அங்கே தர்மத்தின் காரணமாகப் பெரும்பாலானவர்கள் சோம்பேறிகளாக இருந்தார்கள். அவர்கள் வேலை செய்வதற்கு விரும்பவில்லை. முகாமுக்குள்ளே நாள் முழுதும் சுற்றிக் கொண்டு சீட்டு விளையாடிக் கொண்டோ அல்லது கிசுகிசுக்களைப் பேசிக் கொண்டோ எப்போதும் இலவசமாக கிடைக்கும் உணவை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதை நான் பார்த்தேன். எப்படி இந்தப் பிச்சைக்காரர்கள் பாகிஸ்தானுக்காக ஏதாவது செய்ய முடியும்? தருமம் செய்தல் என்பது நல்ல காரியத்திற்கு அருகில் கூட வர முடியாது என்ற முடிவுக்கு நான் வந்தேன். அப்படியென்றால் என்ன செய்வது?

அன்றாடம் நூற்றுக் கணக்கான அகதிகள் முகாமில் இறந்து கொண்டேயிருந்தார்கள். அடிக்கடி பரவுகிற தொற்று நோயால் நகரத்திலுள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. நான் ஒரு இலவச மருத்துவமனையைக் கட்டுவதற்கு முடிவு செய்தேன். நான் அதற்கான திட்டத்தை நிறைவு செய்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டேன். நான் ஒப்பந்தங்களுக்கான அறிவிப்பை வெளியிடுவேன். கணிசமான தொகையை ஒப்பந்தங்களுக்கான கட்டணத் தொகையாக வசூலிப்பேன். என்னுடைய சொந்தக் கம்பெனி ஒன்றை நிறுவி அதற்கு கட்டிட ஒப்பந்தத்தைக் கொடுப்பேன். எடுத்துக்காட்டாக ஒரு லட்சம் ரூபாய் ( அந்தக் கட்டிடம் கட்டுவதற்கு எழுபதாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகாது எனவே சுத்தமாக ஒரு முப்பதாயிரம் ரூபாய் கிடைக்கும் ) கொடுத்து என்னுடைய இலக்கை அடந்து விடுவேன். ஆனால் நான் அந்த யோசனையைக் கை விட்டு விட்டேன். ஏனெனில் அவர்கள் எல்லோருடைய உயிரையும் காப்பாற்றி விட்டால் என்ன ஆவது? மோசம்! இங்கே மக்கள் தொகை நெருக்கடி உண்டாகி விடாதா? அதை இந்த நாடு எப்படிச் சமாளிக்கமுடியும்?

யோசித்துப் பார்க்கும் போது அதிகமான எண்ணிக்கையில் மக்கள் இருப்பது தான் இந்தத் துன்பங்களுக்குக் காரணம் என்று தோன்றியது. மக்கள் தொகையின் அளவு பெருத்துக் கொண்டே போகிறது. ஆனால் நிலத்தில் விளையும் தானியங்களின் அள்வு அப்படியே இருந்தது. மழையாலும் மக்களின் இனவிருத்திவேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஆகையால் நான், மருத்துவமனை கட்டுவது அர்த்தமில்லாதது என்ற முடிவுக்கு வந்தேன்.

பிறகு எனக்கு மசூதி கட்டும் எண்ணம் வந்தது. கடவுள் சோலாப்பூரின் வயதான ஆமினாபாய் சிடால்கரை அவருடைய சொர்க்கத்தின் அமைதிக்குள் வைத்திருப்பார். ஏனெனில் நீங்கள் உயரேபோன பிறகு உங்கள் பெயர் நிலைத்திருக்க செய்ய வேண்டிய நல்ல காரியங்களைப் பற்றி வழக்கமாக அவள் பாடுவாள். அவள் எப்போதும் பாடுகிற நல்ல காரியங்கள் என்னென்ன தெரியுமா? கிணறு தோண்டுதல், பாலங்கள் கட்டுதல், மசூதிகளை ந்ர்மாணீத்தல். ஆனால் இதுவும் அவ்வளவு நல்லவிசயமாக இல்லை. ஏனெனில் நகரத்தில் ஏராளமான மசூதிகள் இருந்தன. மசூதிகள் நிறைய இருந்தால் நம்பிக்கையாளர்களூக்கும் மதத் தீவிரவாதிகளுக்கும் நிறைய சண்டை நடக்கும். அதில் இன்னும் ஒரு எண்ணிக்கையைக் கூட்ட நான் விரும்பவில்லை.

அதற்குப் பதில் நான் மெக்காவுக்குப் புனிதப் பயணம் போக முடிவு செய்தேன். ஆனால் என்னுடைய முடிவை செயல்படுத்த ஆரம்பிக்குமுன்பே கடவுள் எனக்கு ஒரு பதிலைத் தந்து விட்டார். நகரத்தில் ஒரு மக்கள் பேரணி நடந்தது. அது பெருங்குழப்ப்த்தில் முடிந்தது. முப்பது பேர் மிதித்துக் கொல்லப்பட்டார்கள். மறுநாள் காலை பத்திரிகைகளில் அந்த சம்பவம் பிரசுமான போது, அவர்கள் கொல்லப்படவில்லை. தியாகிகளாகிவிட்டார்கள் என்று வந்திருந்தது.

இது என்னைச் சிந்திக்க வைத்தது. நான் பல்வேறு தலைசிறந்த மதப் பண்டிதர்களைச் சந்தித்தேன். அவர்கள் விபத்துகளில் இறப்பவர்கள் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள். ஏனென்றால் அது அவருடைய தவறு அல்ல.எனவே தியாகி என்ற பேறு அவர்களூக்குக் கிட்டும் என்று உறுதியாகச் சொன்னார்கள்..ஒவ்வொரு மனிதனும் அடய் விரும்புகிற உன்னத நிலையும் அதுதான் என்று சொன்னார்கள். வெறுமனே சாவதற்குப் பதில் மக்கள் தியாகிகளாகச் சாகலாம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். இது அற்புதமில்லையா? சாதாரணமாக மரணமெய்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? முழுக்க மோசம். தியாகம் ஒன்று தான் இந்த அவலவாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைத் தரமுடியும்.

மிக உன்னதமான இந்த விசயத்தைப் பற்றி நான் மேலும் யோசித்துக் கொண்டிருந்தேன். நான் சுற்றிலும் பார்த்ததென்ன? கூட்டம் கூட்டமாய் குழி விழுந்த கண்களும், போதிய உணவின்றி மஞ்சள் பாரித்த முகங்களும் ஏழ்மையின் சுமையின்கீழ் நசுங்கி கந்தலான உடைகளோடு பேய்களைப் போல அலைந்து கொண்டிருந்த பரிதாபமான ஜீவன்கள்! குப்பை மேட்டில் வீசப்பட்ட கழிவுப் பொருட்களைப் போல கலகலத்த குடிசைகளில் வாழ்ந்து கொண்டு நகரத்திலுள்ள் கடைவீதிகளிலனாதரவான மிருகங்களைப் போல ஊர்ந்து கொண்டிருந்தார்கள்.இந்த மக்கள் எதற்காக உயிர் வாழ வேண்டும்? நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன். எப்படி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? யாருக்கும் தெரியாது. அங்கே அவர்கள் ஆயிரக்கணக்கில், பசியினாலும், தாகத்தினாலும், குளிரினாலும், வெப்பத்தினாலும், செத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்? துக்கம் அனுஷ்டிக்கப்படாமலும், நினைவு கொள்ளப் படாமலும் இறந்து கொண்டிருப்பது…

அவர்கள் இறந்த போது அவர்களுக்கு என்ன நடந்தது? எதுவுமே இல்லை. ஆகையால் மிகச் சிறந்த யோசனை எனக்கு தோன்றி விட்டது. நிரந்தரமாக பசியாலும், நோயிலும், வலியிலும், வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த மக்கள் ஏன் தியாகிகளாக இறக்கக் கூடாது? இந்த உலகத்தில் அவர்களுக்கென்று ஒரு கௌரவமான இடத்தை அவர்கள் ஏன் அடையக் கூடாது. அவர்களுடைய மெலிந்த முகத்தைப் பார்க்க விரும்பாதவர்கள் கூட அவர்களைப் பூஜிப்பார்களே!

கேள்வி என்னவென்றால் இந்த மக்கள் தியாகிகளாவதற்கு விரும்புவார்களா? அவர்கள் விரும்புவார்கள் என்று நான் உறுதியாக நம்பினேன். ஏனெனில் அவர்கள் நல்ல இஸ்லாமியர்கள். நல்ல முஸ்லீம்கள் உயர்ந்த தியாகத்திற்காக எப்போதும் ஏங்கிக் கொண்டிருப்பவர்கள். ஏன் இந்துக்களும் சீக்கியர்களும் கூட இப்போது தியாகத்திற்காக ஆசைப் படுவார்கள். ஆனால் நான் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளானேன். மெலிந்த தரித்திரன் ஒருவனிடம் ,நான் அவன் தியாகியாவதற்கு விரும்புகிறானா என்று கேட்டேன். அவனுக்கு அப்படி எந்த லட்சியமும் இல்லை என்று சொல்லி விட்டான்.

என்னால் உரிந்து கொள்ள முடியவில்லை. இந்த துரதிருஷ்டப்பிராணி வாழ்ந்து என்ன செய்யப் போகிறான்? நான் அவனிடம் விவாதிக்க முயற்சித்தேன்.

“ பார் நண்பனே! நீயோ வயதானவன். எப்படியிருந்தாலும் ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதத்திற்கு மேல் நீ உயிரோடு இருக்க முடியாது. இப்போது உன்னுடைய பலகீனத்தினால் உன்னால் நடக்கக் கூட முடிய வில்லை. உன்னுடைய குத்திருமலுக்குள் நீ நுழைந்து விட்டால் நீ வெளியே வந்து சேர்வது அதிசயம் தான். உன்னிடம் ஒரு நயாபைசா கூட இல்லை. உன்னுடைய வாழ்நாளில் ஒரு நாள் கூட சுகமாக இருந்ததில்லை. உன்னைப் பொறுத்தவரை இனி எதிர்காலம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நீ ஏன் வாழ விரும்புகிறாய்? எதற்காக? ராணுவத்தில் சேர முடியாத அளவுக்கு உனக்கு வயதாகி விட்டது இல்லையென்றால் உன்னுடைய நாட்டிற்காக சண்டையிட்டு மடிய உனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். நீ ஏன் தியாகியாவதற்கான ஏற்பாடுகளைச் செய்யக் கூடாது? “

என்று நான் கேட்டேன். அதற்கு அவன்,

“ எப்படி அதற்கான ஏற்பாடுகளைச் செய்வது? “

என்று கேட்டான். உடனே நான் அவனுக்கு விளக்கிச் சொல்ல ஆரம்பித்தேன்.

“ ஒரு வாழைப் பழத்தோல் உனக்கு முன்னால் தரையில் கிடக்கிறது என்று வைத்துக் கொள்.. நீ அதில் கால் வைத்து வழுக்கி விழுந்து விட்டால் அந்த அதிர்ச்சியிலிருந்து நீ தப்பிக்க முடியாது..என்பது தெளிவு. அப்படி நீ இறந்து தியாகியாகி விடலாம்…”

death ஆனால் அவன் என்னுடைய விளக்கத்தை ஏற்கவில்லை. அதற்குப் பதில் அவன்,

“ நீ என்ன என்னைப் பைத்தியக்காரன் என்று நினைத்துக் கொண்டாயா? நானே என்னுடைய கண்களைத் திறந்து கொண்டு வாழைப் பழத்தோலில் விழுவேனா? எனக்கு வாழ ஆசையில்லையா என்ன? “

என்று சொன்னான். கடவுளே! இந்தத் துரதிருஷ்டம் பிடித்த எலும்புக்கூடு தான் அப்படிச் சொல்லியது. அவன் வாழ்ந்து கொண்டிருந்தததாக அவன் நினைத்தான்.

அவனுடைய பேச்சு எனக்கு வருத்தமளித்தது. அதை விட வருத்தமளித்த விசயம் என்னவென்றால், மிகச் சுலபமாக தியாகியிருக்கவேண்டியவன் அதற்கு இரண்டு நாட்களூக்குப் பின்னால் தர்மாஸ்பத்திரியில் இரும்புக் கட்டிலில் இருமிக் கொண்டே செத்துப்போனான் என்பது தான்.

பிறகு அங்கே அந்தப் பெண். வாயில் பற்களில்லை. வயிற்றில் குடலே இல்லை. அவளைப் பார்க்கும் போது அவளூடைய இறுதி மூச்சை எப்போது வேண்டுமானாலும் அவள் விட்டு விடுவாள் என்று தோன்றியது. நான் அவளுக்காக மிகுந்த பரிதாபப் பட்டேன்.அவளுடைய வாழ்நாள் முழுவதும் துயரத்திலும் ஏழ்மையிலும் கழித்திருந்தாள். நான் என் கைகளில் அவளைத் தூக்கி ரயில் தண்டவாளங்களின் மீது படுக்க வைத்தேன். ஆனால் ரயில் வருகிற சத்தத்தைக் கேட்டவுடனே ஸ்பிரிங் பொம்மை போல துள்ளியெழுந்து ஓடியே போய் விட்டாள்.

என் இதயம் நொறுங்கி விட்டது. ஆனாலும் நான் விடவில்லை.நான் சத்தியத்தின் குறுகலான நேர்வழியைக் கண்டு கொண்டேன். அதனால் நான் அதிலிருந்து சுலபமாக விலகிச் செல்ல மாட்டேன்.

முகலாய மன்னர்கள் காலத்திய ஒரு பழைய கட்டிடம் நகரத்தில் இருந்தது. அங்கே நூற்று ஐம்பத்தியோரு சிறிய அறைகள் இருந்தன. அனுபவமிக்க என்னுடைய கண்களால் ஒரே பார்வையில் முதல் பெரிய மழை ஏற்கனவே ஒழுகிக் கொண்டிருக்கும் கூரையைத் தகர்த்து விடும் என்று மதிப்பிட்டு விட்டேன். நான் சில ஆயிரம் ரூபாய்கள் கொடுத்து அந்த இடத்தை வாங்கினேன். அதை வீடில்லாத ஓரு ஆயிரம் பேருக்கு வாடகைக்கு விட்டேன். மாதம் ஒரு ருபாய்க்கு மேல் வாடகை வாங்க வில்லை. இரண்டு மாதங்களுக்கு நான் வாடகையைப் பெற்றுக் கொண்டேன். முன்பு நான் மதிப்பிட்ட மாதிரியே மூன்றாவது மாத ஆரம்பத்தில் நகரத்துக்கு முதல் மழை வந்தது. கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்து எழுநூறு ஆண்கள், பெண்கள், குழந்தைகளைத் தியாகிகளாக்கி விட்டது.

என்னுடைய இதயம் லேசாகி விட்டது. இப்போது இந்த உலகத்தில் எழுநூறு பேருக்கு உணவு உடை தேவையில்லை. அதை விட பெரிய விசயம் அவர்கள் எல்லோரும் தியாகிகளாகி சொர்க்கத்திற்குப் போய் விட்டார்கள்.

என்னுடைய இந்த நல்ல வேலை தொடர்ந்தது. என்னுடைய முயற்சிகளினால் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேர் தியாகத்தின் இனிய பானத்தை அருந்தாமல் ஒரு நாளும் கழிந்ததில்லை. எல்லா வேலைகளுக்கும் உழைப்பு தேவைப் படுகிறது. சோலாப்பூரின் வயதான ஆமினா பாய் சிடால்கர் எப்போதும் பாடுவதைப் போல.. அது போகட்டும்.. என்னால் அந்த வார்த்தைகளை நினைவு படுத்தமுடியவில்லை. என்னுடைய புனிதமான இலக்கை அடைவதற்கு நான் மிகுந்த பிரயாசைப் பட வேண்டியதிருந்தது என்று சொல்வது போதுமானது. ஒரு துரதிருஷ்டசாலி இருந்தான். அவனுடைய வழியில் பத்து முறை வாழைப் பழத் தோலை வீசியும் அவனை சொர்க்கத்திற்கு அனுப்ப முடியவில்லை. எப்படியோ மரணத்தைப் போல தியாகமும் முன்கூட்டியே தீர்மானிக்கப் படுகிறது போலும். ஒரு நாள் அவன் குளீயலறையில் வழுக்கி விழுந்து மேன்மையான தியாகிகளின் கூட்டத்தில் சேர்ந்து விட்டான்.

இப்போது நான் மிகப்பெரிய வசிப்பிடக் கட்டிடத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறேன். இரண்டு லட்சரூபாய் மதிப்பிலான கட்டிட ஒப்பந்தத்தை என்னுடைய சொந்தக் கம்பெனி எடுத்திருக்கிறது. குறைந்தது எழுபத்தைந்தாயிரம் ரூபாயாவது லாபம் ஈட்டி விடலாம் என்பதில் ஊறுதியாக இருக்கிறேன். கட்டிடத்தை காப்பீடும் செய்திருக்கிறேன். மூன்றாவது மாடி உயரும்போது மொத்தக் கட்டிடமும் இடிந்து சரியும் என்று மதிப்பிட்டிருக்கிறேன். அதற்காகவே தரம் குறைவான பொருட்களையே நான் பயன் படுத்தியிருக்கிறேன். கட்டிட வேலைக்காக அமர்த்தப் பட்டுள்ள முந்நூறு பணியாளர்களுக்கு யோகம் தான். ஒருவர் கூட உயிர் பிழைக்க முடியாது. ஆனால் உடனே நிரந்தரமான தியாகவுருவை அடைவார்கள்.

ஒருவேளை சிலர் அதில் பிழைப்பார்களேயானால் அதற்கு என்ன அர்த்தம் என்றால் அவர்கள் பாவிகள். அன்பும் கருணையும் கொண்ட கடவுள் அவர்களை மேன்மையான தியாகநிலைக்கு அநுமதிக்க விரும்பவில்லை என்று அர்த்தம்.

நன்றி- நற்றிணை காலாண்டிதழ்

அன்பின் வழியது

 

அழும் பொம்மைகளை

குழந்தைகளுக்குப் பிடிக்காது

அழும் குழந்தைகளுக்கு

பிடித்து விடுகின்றன

பொம்மைகளை

- அ. வெண்ணிலா

குழந்தைகள் பெரியவர்களின் உதவிகளை நாடாது தன் காரியங்களைத் தானாகவே செய்வதற்கு முயற்சிகள் செய்யும்போது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. குழந்தைகள் இப்பூவுலகில் பிறந்ததிலிருந்து தன்னுடைய உடல், மனம் இரண்டின் இடையறாத உழைப்பின் வழியாகவே தன்னை மனிதனாக உருமாற்றும் ரசவாதத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். அவன் சுற்றிலுமுள்ள சூழ்நிலையைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்கிறான். அதற்கு முதலில் பெரியவர்களின் உதவிகள் தேவைப்படுகிறது. அதனால் பெரிதும் பெரியவர்களைச் சார்ந்தே அவன் வாழ்கிறான். அவர்களைப் போல் செய்கிறான். ஆனால் மனமும் உடலும் வளர வளர பெரியவர்களைப் போல் செய்யாமல் தானாகவே எல்லாவற்றையும் செய்து பார்க்க ஆவல் அவனுக்குள் கிளர்ந்து எழுகிறது. அது எத்தனை அழகற்றதாக இருந்தாலும் எத்தனை ஒழுங்கற்று இருந்தாலும் பரவாயில்லை ஆனால் அந்த செயல் அவனாகவே தன் முழு மனதையும் உடலியக்கத்தையும் ஒன்றிணைத்து செய்த செயலல்லவா? மனிதப் பிறவியான உள்ளுணர்வு அவனை வழிநடத்துகிறது.

பெரியவர்களைப் பின்பற்றித் தானாகவே சீப்பை எடுத்து தலைமுடியை வாருகிறான். தன் சட்டையைத் தானே போட முயல்கிறான். முகப்பவுடரை மேலும் கீழும் சிந்தி கொஞ்சம் முகத்திலும் போட்டுக்கொள்கிறான். இப்படி ஒவ்வொரு செயலை ஆரம்பிக்கும்போதும், முடிக்கும்போதும் அவனுக்குள் ஒரு பெருமித உணர்வு பொங்குகிறது. பெரிய சாதனை புரிந்து விட்ட மகிழ்ச்சியில் கைகளைத் தட்டுகிறான். குதித்தாடுகிறான். சிரிப்பு பொங்குகிறது. அவனைப் பொறுத்தமட்டில் அது மிகப்பெரிய சாதனை தான். தலைமுடி நட்டக்குத்தலாக நிற்கிறது. முகத்தில் பவுடர் திட்டுத்திட்டாக இருக்கிறது. சட்டையின் ஒரு கை போடப்படவேயில்லை. டவுசரை ஒரே காலில் நுழைத்திருக்கிறான். அதனால் என்ன? இதெல்லாம் யாருடைய உதவியுமின்றி அவனாகவே செய்த காரியங்களல்லவா?

இங்கே தான் பெரியவர்கள் வந்து குழந்தைகளிடம் தகராறு செய்கிறார்கள். எல்லாவற்றையும் செய்து முடித்த அவனுடைய பெருமிதஉணர்வில் அவமானத்தை ஏற்படுத்துகிறார்கள். அவன் செய்த அலங்காரத்தைக் குலைத்து அலங்கோலம்(!) செய்கிறார்கள். தலைமுடி வாருதல், பவுடர் போடுதல், உடை உடுத்தல் எல்லாவற்றையும் கச்சிதமாகச் செய்து விடுகிறார்கள். குழந்தையின் மனம் எதிர்க்கிறது. முரண்டு பிடிக்கிறது. எதிர்ப்புணர்வை வளர்க்கிறது.

அதேபோல் குழந்தைகள் யதார்த்த உலகத்தை எப்படிப் புரிந்து கொள்கிறார்கள்? தொடு உணர்வின் மூலமே தங்கள் புலனுணர்வினை கூர்மைப்படுத்திக்கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு மனம் என்ற ஒன்றில் அனுபவங்கள் சேகரமாகி அறிவின் கிரணங்கள் ஒளிவீசத் தொடங்குகின்றன. எனவே எல்லாப் பொருட்களையும் தொட்டுத்தடவி, உணர்கிறார்கள். ஆனால் பெரியவர்களோ, குழந்தைதான் என் உயிர், குழந்தைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன், என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்கிறார்களேயொழிய, குழந்தை வீட்டில் ஒரு பொருளைத் தொட்டு விட்டாலோ, எடுத்துவிட்டாலோ கூப்பாடு போடுகிறார்கள். இந்தச் சத்தத்தைக் குழந்தையால் புரிந்து கொள்ள முடிவதில்லை. எதுக்கு இந்த ஆள் இந்தக் கூப்பாடு போடறான்? நான் தொடத்தானே செஞ்சேன்.. என்று ஆச்சரியப்படுகிறான். இயல்பாகவே பெரியவர்களின் தற்காப்புணர்வு குழந்தை பொருட்களை உடைத்து விடுவானோ, அழுக்காக்கி விடுவானோ, பாழாக்கி விடுவானோ என்று பயம் கொள்கிறது. உடனே என்னதான் நேசம் இருந்தாலும் எஜமான மனோபாவம் தலையெடுத்து விடுகிறது. அவர்கள் சொல்படி குழந்தை கீழ்ப்படியவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

கூலி வேலை செய்கிற சாதாரண மக்கள் தங்கள் மழலைகளைத் திட்டி, அறைந்து, வீதிக்கு விரட்டி விடுகிறார்கள். அந்தக் குழந்தையை விட மூத்த குழந்தையிடம் பொறுப்பினை விட்டுவிட்டு தன் வாழ்விற்கான போர்க்களத்தை எதிர்கொள்ளப் போய் விடுகிறார்கள். கணவன், மனைவி இருவரும் வேலை பார்க்கிறவர்களாக இருந்தால் கிரஷ்ஷிலோ, ஆயாக்களிடமோ குழந்தைகளை விட்டுவிட்டுப் போய் விடுகிறார்கள். கிரஷ்ஷிலும் சரி, ஆயாக்களும் சரி குழந்தைகள் எப்போதும் உயிர்த்துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதை விட தூங்கிக்கொண்டிருப்பது உத்தமம் என்று நினைத்து விடுகிறார்கள். எனவே குழந்தைக்கு தேவையில்லை என்ற போதிலும் குழந்தையைத் தூங்க வைக்கிறார்கள். பெற்றோர்களுக்குமே இந்த விதமான மனநிலை இருப்பது துரதிர்ஷ்டவசம்தான் குழந்தை அங்கும், இங்கும் ஓடக்கூடாது. சாமான்களைத் தொடக்கூடாது, சத்தம் போடக்கூடாது. எந்த ஒரு காரியத்தையும் திரும்பத் திரும்பச் செய்யக்கூடாது. படியேறி ஏறி இறங்குதல், தாழ்ப்பாளைப்போட்டு போட்டு இழுத்தல், ஓடி ஓடிச் சத்தம் எழுப்புதல், இப்படி எதையும் செய்யக்கூடாது. குழந்தைகள் சாப்பிடவேண்டும். உறங்க வேண்டும், அமைதியாக உட்கார்ந்து விளையாடவேண்டும். டி.வி சத்தம், எப்.எம் சத்தம், பக்கத்துவீட்டுச் சத்தம், தெருச்சத்தம், ரோட்டுச்சத்தம் எல்லாவற்றையும் சகித்துக் கொள்கிற பெரியவர்களால் குழந்தைகள் போடுகிற சத்தத்தை மட்டும் சகித்துக்கொள்ள முடிவதில்லை. அதற்காக அவர்களுக்கு தங்கள் குழந்தைகள் மீது அன்பில்லை என்று சொல்லமுடியாது. அறியாமைதான் காரணம்.

குழந்தை சிறியவனாய் இருக்கும்போது அவனை ஒரு பொருள் மாதிரி போகும் இடங்களுக்கெல்லாம் தூக்கிக் கொண்டு அலைந்து பெருமை பாராட்டுவார்கள் பெரியவர்கள். ஆனால் அவனே நடக்கப்பழகி நடக்க ஆரம்பித்து விட்டால் வெளியே விடுவதில்லை. எதிர்பாரா ஆபத்துகளிலிருந்து அவனைக்காக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அவனுடைய எல்லா நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதென்பது நல்லதல்ல. அவனது உடல் மன ஆரோக்கியத்திற்கு உகந்ததும் அல்ல. குரங்கிலிருந்து மனிதனாக மாறிய பரிணாம வளர்ச்சியில், கைகளைப் பயன்படுத்தியதும் இரண்டு கால்களால் நிமிர்ந்து நடந்ததும் தீர்மானகரமான பங்கு வகித்துள்ளது. குட்டிமனிதனான குழந்தையும், தன் கைகளையும், கால்களையும் ஓயாது பயன்படுத்தவே விழைகிறான். அதன் மூலமே தனக்குள் மறைந்து கிடக்கும் மனிதனை வளர்த்தெடுக்க முனைகிறான்.

குழந்தையின் இயக்கம் என்பது தானாக அல்லது தற்செயலாக நடப்பதில்லை. அது குழந்தைக்குள் உறைந்திருக்கும் மனிதனின் உள்ளுணர்வின் வழிகாட்டுதலின் படியே நடக்கின்றன. அவை எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது. குழந்தை தானாகவே, தனக்குப் பிரியமான வேலையைத் தானே தேர்ந்தெடுத்து நிறைவேற்றுகிறது. சும்மா ஓடவோ, குதிப்பதோ அல்லது காரணமில்லாமல் பொருட்களைக் கையில் எடுப்பதோ, கலைத்துப் போடுவதோ அல்ல. பெரியவர்கள் செய்வதைப் பார்த்து தானாக அந்தச் செயலைப் படைக்க வேண்டும் என்ற உந்துதல் காரணமாகவே அப்படி நடந்து கொள்கிறான்.

குழந்தையிடம் தோன்றுகிற உழைக்கும் உணர்வை முதலில் நாம் மதிக்கவேண்டும். பல நேரங்களில் சிறு சிரமங்களை அது ஏற்படுத்தினாலும், குழந்தைகளின் மன வளர்ச்சியினை உத்தேசித்து சில தியாகங்களைப் பெரியவர்கள் செய்யவேண்டும். குழந்தை விரும்பிச் செய்கிற செயலின் சூழ்நிலையை அவனிடமே ஒப்படைத்து விடவேண்டும். அவன் சிரமப்படுவானோ என்று நினைத்துத் தலையிடுகிற பெரியவர்களை அவன் விரும்புவதில்லை. ஏனெனில் அவனுடைய அனுபவ நிகழ்வில் ஏற்படும் எந்தக் குறுக்கீடும் அவன் உள்ளத்தில் மகிழ்ச்சியை உருவாக்குவதில்லை. பெரியவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் மீது அன்பு என்பது அவனது தேவைகளைக் கவனித்துக் கொள்வது என்பது மட்டுமல்ல, அவன் மனிதனாக வளர்வதற்கான சூழலை உருவாக்குவதும், அந்தச் சூழலுக்குள் அவசியமின்றி தலையிடாமல் இருக்கவும் வேண்டும். அப்போது குழந்தைக்குள் உறைந்து இருக்கிற மனிதன் மெல்ல முகிழ்ப்பான்

dep_2432274-Children-Art

Monday, 30 April 2012

எம்.ஜி.ஆர் ராக்கையா

mgr

ராக்கையா எம்.ஜி.ஆரின். தீவிர ரசிகன். எம்.ஜி.ஆரின் படங்களை முதல் நாள் முதல் காட்சியில் திரைக்கு முன்னால் வெகு அருகில் உட்கார்ந்து பார்ப்பான். கை தட்டி விசில் அடித்து ஒரு பெரும் கொண்டாட்டமாகக் கொண்டாடி விடுவான். அதே போல எம்.ஜி.ஆர் படங்களைப் பலமுறை பார்த்து மனப்பாடம் செய்வதில் கில்லாடி. எம்.ஜி.ஆரின் உரிமைக்குரல் படத்தை மட்டும் இருபத்தியேழு தடவை பார்த்திருக்கிறான். பல நாட்கள் காலையில் பள்ளிக்கூடத்தை மட்டம் போட்டு விட்டு, பல நாட்கள் மதியம் பள்ளிக்கூடத்தை மட்டம் போட்டு விட்டுப் போய் பார்த்திருக்கிறான். திரைப்படத்தில் வருகிற எம்.ஜி.ஆர் மாதிரி எப்போதும் உற்சாகமாக இருப்பான் ராக்கையா.

எம்.ஜி.ஆர் படப்பாடல்களை வாய் எப்போதும் முணுமுணுத்துக் கொண்டிருக்கும். ஒரு வார்த்தை பிசகாமல் அப்படியே ஒப்பிக்கிற ராக்கையாவுக்கு பாடங்கள் எதுவும் மண்டையில் ஏறவில்லை. அவனில்லாமல் நாங்கள் எந்த முக்கியமான காரியத்துக்கும் போனதில்லை.
சிரித்த முகமும் துறு துறுவென துடிக்கும் உடல்மொழியும் கொண்ட ராக்கையா கூட இருந்தாலே போதும் யாருக்கும் உற்சாகம் தானாகத் தொற்றிக் கொள்ளும். அதே போல எந்த வேலைக்கும் அஞ்சாதவன் ராக்கையா. எப்படியோ அவனுக்கு எங்களைப் பிடித்து விட்டது. எப்போதும் எங்களுடனேயே சுற்றிக் கொண்டிருந்தான்.நாங்கள் எப்போதாவது போகிற திரைப்படங்களுக்கு அவனைக் கூட்டிக் கொண்டு போவோம். அவன் தான் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் கவுண்டரில் ஏறிக் குதித்து சண்டை போட்டு டிக்கெட் வாங்கி விடுவான். நான், நாதன், சாரதி, கந்தசாமி, எல்லோரும் போட்ட சட்டை கலையாமல் உள்ளே போய் திரைப்படம் பார்ப்போம்.


அப்படி ஒரு முறை வசந்தமாளிகை படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு போவதென்று முடிவு செய்து விட்டோம். டிக்கெட் எடுக்க வேண்டுமே. ராக்கையாவை விட்டால் எங்களுக்கு வேறு யாரையும் தெரியாது. ஆனால் சிவாஜி படத்திற்கு ராக்கையா வருவானா? என்று சாரதி சந்தேகப்பட்டான். நாதன் தான் அதெல்லாம் வருவாண்டே என்று சொன்னான். எனக்கு உறுதியாகச் சொல்லமுடியவில்லை. இருந்தாலும் கேட்டுப் பார்க்கலாம் அவன் வந்தால் இன்று போவோம். இல்லையென்றால் இன்னும் ஒரு வாரம் கழித்து கூட்டம் குறைந்த பிறகு போவோம் என்று கந்தசாமி சொன்னான்.

ராக்கையா வந்ததும் சாரதி தான்,“ டேய் ராக்கு.. நீ பிரண்ட்ஸுக்காக ஒரு காரியம் செய்யணும்னா செய்வியால..” என்று முக்கி முனகிக் கேட்டான். அவன் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

“ என்ன வசந்தமாளிகை டிக்கெட் எடுத்துக் கொடுக்கணுமாக்கும்..’
என்று சொன்னான். நாங்கள் அதிர்ந்து போனோம்.

அன்று சரியான கூட்டம். வழக்கம் போல கூட்டத்துக்குள் முண்டியடித்து கவுண்டருக்குள் ஏறிக் குதித்து வரிசையிலிருந்தவர்களுடன் மல்லுக் கட்டி டிக்கெட் எடுத்து விட்டான். எங்களுடைய டிக்கெட்டுகளுடன் கவுண்டருக்கு அருகில் காத்திருந்தான். நாங்கள் கூட்டம் குறைந்து வரிசையில் போனோம்.

அப்போது கந்தசாமி தான் ராக்கையாவைப் பார்த்து கேட்டான்,“ எல நீ சாரம் கட்டியிருந்தியே அதை எங்கல..” அப்போது தான் ராக்கையாவும் கவனித்தான். அவன் இடுப்பில் கட்டியிருந்த சாரத்தைக் காண வில்லை. வெறும் டவுசர் பனியனோட நின்று கொண்டிருந்தான். கவுண்டர் வழியெல்லாம் தேடிப் பார்த்தோம். சாரம் கிடைக்கவில்லை.

நாங்கள் விரும்பிப் பார்க்கிற திரைப்படங்கள் அவனுக்குப் பிடிக்காது. படம் ஆரம்பித்தவுடனேயே தூங்கி விடுவான். சரியாக இடைவேளை சமயத்தில் எழுந்து ஐஸ், முறுக்கு என்று தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு வந்து எங்களுக்குக் கொடுப்பான். அதேபோல என்ன வேலை சொன்னாலும் செய்வதற்குத் தயாராக இருந்தான். ஏதாவது நினைத்துக் கொள்வானோ என்று நாங்கள் தான் பயப்படுவோம். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எம்.ஜி.ஆர். புன்னகை சிந்துவான். அவ்வளவு தான். உடனே சிட்டாய் பறந்துபோய் அந்த வேலையைச் செய்து விட்டுத் திரும்புவான். பெரும்பாலான நேரங்களில் எங்கள் நண்பர்கள் குழாமில் உள்ள யாருடைய வீட்டிலாவது கிடப்பான். அங்கேயே சாப்பிடவும் செய்வான். வீட்டிலுள்ள எல்லோரிடமும் மிகச் சுலபமாகப் பழகி விடுவான். பல நேரங்களில் வீட்டிலுள்ளவர்களே அவனைத் தேடுவார்கள்.

வீட்டில் மட்டும் தான் என்றில்லை யாரிடமும் மிகச் சுலபமாகப் பழகி விடுகிற இயல்பான குணம் ராக்கையாவுக்கு. பழகிய ஐந்தாவது நிமிடத்திலே பல வருடம் பழகியவன்போல அன்யோன்யமாகி விடுகிற வசீகரம் அவனிடம் இருந்தது. அதனால் யாரும் அவன் மீது கோபப் படவே மாட்டார்கள். அப்படியே கோபம் வந்தாலும் வந்த சில நிமிடங்களிலே அவனே சகஜமாக்கி விடுவான். அதனால் பள்ளிக்கூடத்தில் அவன் படிக்கவில்லையென்றால் கூட வாத்தியார்கள் அவனை அதிகம் அடித்ததையோ, திட்டியதையோ நாங்கள் பார்த்ததில்லை. எல்லா வாத்தியார்களும் அவனிடம் ஏதோ ஒரு விதத்தில் வேலை வாங்கியிருப்பார்கள். யாருக்கும் அஞ்சுவதோ, வெட்கப்படுவதோ, கிடையாது. நாங்கள் மிகுந்த யோசனைக்காரர்களாக இருந்ததால் எங்களுக்கு ராக்கையாவின் துணை பெரிய பலமாக இருந்தது. பள்ளிக்கூடத்தில் அவன் கூட இருந்தானென்றால் எங்களைப் பிடிக்காத எதிரிகள் சற்று விலகியே போவார்கள். அப்படியே யாராவது எங்களிடம் வாலாட்டினால் ராக்கையா எம்.ஜி.ஆர். மாதிரியே சிரித்துக் கொண்டே சண்டைபோடுவான். திரைப்படத்தின் சவுண்ட் எபெக்ட்ஸை அவன் வாயினாலே கொடுத்துக் கொள்வான்.

நாங்கள் அவன் கூட துணை நடிகர்கள் மாதிரி நின்று கொண்டு அவனை உற்சாகப்படுத்திக் கொண்டிருப்போம். அடி வாங்கிக் கொண்டு வந்தாலும் சரி, அடி கொடுத்து விட்டாலும் சரி, ஒரே சிரிப்புதான். தலைமுடியைக் கோதி விட்டுக் கொண்டு ,” பயகள புரட்டி எடுத்திட்டேன்ல..” என்று சொல்லுவான். எங்களுக்குப் பெருமையாக இருக்கும்.

கோவில்பட்டியின் ஊர் விளையாட்டான ஆக்கியை ஊரிலுள்ள நண்டுநசுக்கான் தொடங்கி பெரியவர்கள் வரை தெருக்காடுகளிலும், மைதானங்களிலும், விளையாடிக்கொண்டிருப்பார்கள். நாங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? எங்களுடன் ராக்கையாவும் விளையாடுவான். ஒருபோதும் அவன் கோல் போட்டதே இல்லை. அவனிடம் பந்து கிடைத்தால் அதைக் கொண்டுட்டு ஓட மாட்டான். நாலு அடி ஓடுவதற்குள் பந்தை எதிரணியிடம் விட்டு விடுவான். எல்லோரும் திட்டுவார்கள். அவன் அதைப் பற்றிக் கவலைப் படமாட்டான். ஆனால் அதற்காக அவனை விளையாட்டில் சேர்க்காமல் இருந்ததில்லை.

பின்னர் கிரிக்கெட் விளையாட்டு பேமஸ் ஆனது. ரேடியோவில் நேர்முக வர்ணனை கேட்டு ” சார் ரன் கேலியே ” என்ற மூச்சு விடாத ஹிந்தி வர்ணனை எங்களைக் கவர்ந்தது. நாங்கள் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினோம். இரவு பகல் பாராமல் கிரிக்கெட் விளையாடினோம். காந்திமைதானமே எங்கள் கூப்பாட்டில் அரண்டு போனது. அதிலும் ராக்கையா ஒரு பந்தைக் கூட கேட்ச் பிடித்ததில்லை. ஒரு பந்துகூட பவுலிங் போட்டதில்லை. ஒரு ரன் கூட எடுத்ததில்லை. ஆனாலும் எங்களுடன் விளையாடினான். இப்படி எங்களுடன் இரண்டறக் கலந்து விட்டான் ராக்கையா. எங்கள் இளம் பருவ நினைவுகளை ராக்கையாவை விட்டு விட்டு யோசிக்க முடியுமா என்று தெரியவில்லை. நாங்கள் கல்லூரி போனபோது அவன் கல்லூரி வரவில்லை. ஐ.டி.ஐ. படிக்கப்போய் விட்டான். அப்போதும் தினமும் மாலையில் நாங்கள் சந்தித்துக் கொண்டிருந்தோம். ஐ.டி.ஐ. முடித்த அவன் கோயம்புத்தூர் லட்சுமி மில்லில் வேலைக்குப் போய் விட்டான்.

நாங்கள் கல்லூரிப் படிப்பு முடித்து இந்தியாவின் வேலை இல்லாப்பட்டதாரிகளாக உலகை வலம் வந்து கொண்டிருந்தோம். இலக்கியம், அரசியல், தத்துவம், என்று புத்தகங்களை வாசித்துக் கொண்டும், விவாதித்துக் கொண்டும், அலைந்து கொண்டிருந்தோம். மனசில்லா மனசோடு வேலை தேடுவதாகப் பாவனை செய்து கொண்டு கனவுகளின் கதகதப்பில் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தோம்.

எங்கள் செட்டில் முதலில் வேலைக்குப் போனது ராக்கையா தான். அடுத்து நாதன் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தான். அடுத்து நான் அல்லரைசில்லரையாகச் சில வேலைகளைப் பார்ப்பதும் விடுவதுமாய் இருந்தேன். சாரதி வருவாய்த்துறையில் சேர்ந்தான். கந்தசாமி அஞ்சல் அலுவலகத்தில் சேர்ந்தான். முதலில் வேலைக்குச் சேர்ந்த ராக்கையா தான் முதலில் கலியாணமும் முடித்தான். அவன் கலியாணம் முடித்தது அவனுடைய தாய்மாமன் மகளைத் தான். கலியாணத்தில் ராக்கையா வைத்த ஒரே கோரிக்கை கலியாண வீட்டில் எம்.ஜி.ஆர். பாட்டைத் தவிர வேறு யாருடைய பாட்டையும் போடக் கூடாது. ஏனெனில் அவனுடைய மாமா சிவாஜி ரசிகர். அவனுடைய கோரிக்கையைக் கேட்டு நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம்.

கலியாணம் முடிந்து ராக்கையா குடும்பத்தோடு கோயம்புத்தூர் சென்று விட்டான். அதன் பிறகு ஆறு மாதங்களாக அவனைப் பார்க்கவில்லை. ஆனால் கேள்விப் பட்ட செய்திகளும் நல்லதாக இல்லை. அவன் விரும்பிக் கலியாணம் முடித்த அவனுடைய மாமா மகள் அவனை மதிக்கிறதில்லை. எப்போதும் அவனை வைது கொண்டே இருக்கிறாள். எங்களுக்கு கேட்கச் சங்கடமாக இருந்தது. ஆனால் பெரிதாகக் கவலைப் படவில்லை. ராக்கையா எதையும் சமாளித்து விடுவான் என்று நினைத்தோம். அவனுடைய உற்சாகத்தின் அலையில் எல்லாம் கரை சேர்ந்து விடும் என்று பேசிக்கொண்டோம். அதற்கடுத்த சில வாரங்களில் ராக்கையா ஊருக்கு வந்தான். நாங்கள் ஆவலுடன் அவனைச் சந்திக்கப் போனோம். எங்களைப் பார்த்ததும் சிரித்தான். ஆனால் அதில் பழைய உற்சாகம் இல்லை. நண்பர்கள் சந்திக்கும்போது செய்கிற வழக்கமான ஏற்பாட்டைப் போல இரவு இரண்டாம் காட்சிக்கு போவதெனத் திட்டம் போட்டோம்.

நாங்கள் எல்லோரும் சரியான நேரத்தில் கூடி விட்டோம்.ஆனால் இன்னும் ராக்கையாவைக் காணவில்லை. ராக்கையாவுக்காகவே எம்.ஜி.ஆரின் பழைய படமான பணக்காரக்குடும்பம் திரைப்படத்துக்குப் போவதென்று முடிவு செய்திருந்தோம். தியேட்டரில் படம் போடுவதற்கான முதல் மணி அடித்து விட்டது. இன்னும் ராக்கையா வரவில்லை. தூரத்தில் சோர்ந்த நடையுடன் ராக்கையா வந்து கொண்டிருந்தான். கந்தசாமி கத்தினான்.

“ டேய் சீக்கிரம் வாடா படம் போடப் போறான்..இப்படி மெதுவா வாரே..”
அதற்கு இருளுக்குள்ளிருந்து பதில் வந்தது.

“ நொண்டிக்காலை இழுத்துகிட்டு வர வேண்டாமா..அவசரம்னா நீங்க போங்க..”

நாங்கள் முதல் முறையாக ராக்கையாவின் சிறுவயதிலேயே இளம்பிள்ளை வாதத்தினால் சூம்பியிருந்த இடது காலையும், அவன் சோர்வுடன் கெந்திக் கெந்தி நடந்து வருவதையும் பார்த்தோம். எங்கள் கண்கள் கலங்கின.

Saturday, 28 April 2012

கலையாத ஒப்பனையுடன் காற்றில் கலந்தவர்

safther  
எங்கள் நால்வரில் நாறும்பூநாதன், சாரதி, முத்துச்சாமி நான் ‡ முத்துச்சாமி தான் வயதில் இளையவர். அதே போல உருவிலும் சற்று குள்ளமானவர். அவர் நாறும்பூநாதனின் வீட்டுக்கு அருகில் இருந்தார். இன்னும் சொல்லப் போனால் நாறும்பூநாதனை விட்டு இணைபிரியாமல் இருந்தார். அவருடைய லட்சியக்கதாநாயகனாக அநேகமாக நாறும்பூநாதனே இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். நாறும்பூநாதன் என்ன செய்தாலும் அதை உடனே அவரும் செய்துபார்த்து விடுவார். இது இளம்பருவத்துக்குப் பின்னும் தொடர்ந்தது என்பது என் அனுமானம்.

எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும் எங்களில் வயதில் இயைவரான முத்துச்சாமியுடன் நானும் சாரதியும் அதிகமாகச் சண்டை போடுவோம். எல்லாம் சில்லரைச் சண்டையாக சில்லரைக்கான சண்டையாக இருக்கும். முத்துச்சாமியிடம் சில குணவிசேஷங்கள் இருந்தன. மிகுந்த சிக்கனமும், கட்டுப்பாடும் உறுதியான மனமும் கொண்டவராக இருந்தார். எதனாலும் சபலம் கொள்ளாத சித்தம் அவருக்கு. நாங்கள் அப்படியல்ல எல்லாவிதமான அலைக்கழிப்புகளுக்கும் எங்களை ஆட்படுத்திக் கொண்டிருந்தோம். அதனால் சிலபல நன்மைகளும் தீமைகளும் நிகழ்ந்தன என்பது வேறுவிஷயம். ஆனால் முத்துச்சாமியின் அந்த உறுதி எங்களுக்குப் பொறாமையையும் சிலசமயம் எரிச்சலையும் ஏற்படுத்தியது.

நண்பர்களுக்குள் கணக்கு வழக்குபார்க்கக் கூடாது என்பது எங்கள் கட்சி. நண்பர்களாயிருந்தாலும் கணக்குன்னா கணக்குத் தான் என்பது அவருடைய கட்சி. இதனால் அடிக்கடி சண்டை போட்டு பின் பேசிக்கொள்வோம். ஆனால் நான்குபேரும் சேர்ந்தே தான் சுற்றிக்கொண்டிருந்தோம் கையயழுத்துப் பிரதி நடத்தினோம். எழுத்தாளர்களிடமும் இலக்கியவாதிகளிடமும், தொழிற்சங்கத் தலைவர்களிடமும். பழகினோம். நிறைய்யப் பேசினோம். நிறைய்யக் கேள்விகள் கேட்டோம். நிறைய்ய வாசித்தோம். நிறைய்ய நிறைய்ய அவர்கள் பேசுவதைக் கேட்டோம். ஆனால் இவை எல்லாவற்றிலும் முத்துச்சாமி பார்வையாளராக மட்டுமே இருந்தார். ஊக்கத்துடன் பங்குபெற்றதாக என் ஞாபகத்தில் இல்லை.

தீடீரென ஒரு நாள் இரவில் காந்தி மைதானத்தில் எழுத்தாளர்கள் கெளரிஷங்கர், துரை, மனோகர் (திரைக்கலைஞர் சார்லி) தேவதச்சன், மாரீஸ், திடவைப்பொன்னுச்சாமி நான் நாறும்பூநாதன் முத்துச்சாமி, சாரதி, ராம், அப்பாஸ் எல்லோரும் கூடிப்பேசிக் கொண்டிருந்த போது திடீரென தர்சனா என்று நிஜநாடக இயக்கம் கருக்கொண்டது உடனே ஒரு வாரத்திற்குள் நாடகங்கள் தயாராகி நாடகம் நடத்துவதற்கு தர்சனா களமிறங்கியது. தேவதச்சனின் பத்துரூபாய் பேரா. ராமனுஜத்தின் வேலை, தலைவர் மரணம் என்று எல்லாம் பத்து அல்லது இருபது நிமிடநாடகங்கள். அப்போது தான் சென்னையில் பாதல்சர்க்கார் மூன்றாவது அரங்கம் பற்றியும் வீதிநாடகங்களைப் பற்றியும் பயிற்சிப்பட்டறை நடத்தி முடித்திருந்தார். தமிழ்நாட்டின் தென்பகுதியில் தர்சனா ஏறத்தாழ ஒரு வருடத்திற்குள் நூறு முறைகளுக்குமேல் நாடகங்களை நிகழ்த்தியது. கோவில்பட்டி வீதிகளிலும் தொழிற்சங்க அரங்குகளிலும், சுற்றிலுமுள்ள கிராமங்களிலும், இந்திய சோவியத் நட்புறவுக்கழகத்தின் சார்பாகவும் ஏராளமான இடங்களில் நாங்கள் இந்த நாடகங்களை நிகழ்த்தினோம்.

கிராமங்களில் எங்களை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் பேண்ட், சட்டையுடன் ஸ்டெப் கட்டிங் முடியுடன் நாங்கள் விவசாயியாக தொழிலாளியாக நடித்தது அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது. நாங்கள் நாங்களாகவே நடித்தோம். மக்களிடம் மிகுந்த வரவேற்பும் பெற்றோம். எங்கள் நாடகங்களில் நடிப்பதற்கான ஒத்திகை என்பது ஒரு கூட்டு விவாதம் மட்டுமே மற்றபடி நடித்து பார்ப்பதோ, வசன மனப்பாடமோ கிடையாது. நடிக்கும் போது புதிது புதிதாய் பேசுவோம். நாடகங்களும் புதிய புதிய பரிமாணங்களுக்கு மாறிக் கொண்டிருக்கும். நாடகக் குழுவின் முக்கிய நடிகர்களாக மனோகர், (திரைக்கலைஞர் சார்லி) கெளரிஷங்கர், துரை, திடவைபொன்னுச்சாமி, நான் நாறும்பூநாதன், இருந்தோம். எங்களுடன் முத்துச்சாமியும் இருந்தார், எல்லாவற்றிலும் பார்வையாளராக மட்டும் இருந்தவர் நாடகங்களில் நடிப்பதற்கு பேராவல் கொண்டிருந்தார். எந்தச் சிறிய வேடமாக இருந்தாலும் மனமுவந்து ஏற்றுக்கொண்டார். வழக்கமாக நடிக்கிறவர்கள் யாரும் வரவில்லையென்றால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார். சுருண்ட தன் தலைமுடியை அடிக்கடி வாரிக்கொண்டும் கருத்த தன்முகத்தை அடிக்கடிக் கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டு நாடகம் தொடங்குமுன்னரே ஒரு பதட்டநிலைக்கு வந்து விடுவார். தர்சனா நாடகங்கள் துவக்குவதற்கு முன்னால் நாடகக்குழுவினர் மொத்தமாக மேடையேறி நாடகக் குழுவைப் பற்றி பிரகடனப்படுத்துவோம்.

தர்சனா ஒரு கண்ணாடி
தர்சனா ஒரு விதைக்கலயம்
தர்சனா ஒரு கருப்பை
தர்சனா ஒரு கிட்டதர்சனி
தர்சனா ........................................
தர்சனா ........................................
நாங்கள் இந்துக்களல்ல, முஸ்லீம்களல்ல... கிறித்தவர்களல்ல, நாங்கள் தாகூரின் கீதாஞ்சலிகள் ...
பாரதியின் குயில்பாட்டுக்கள் ...
பாடித்திரியும் வானம்பாடிகள் ...

இந்த விதமான ஒரு பிரகடனத்திற்குப் பின் எங்கள் நாடகங்கள் தொடங்கும். இதில் எப்போதும் வரிசையில் நின்று சொல்லும் போது யாராவது சொல்வதற்கு மறந்து போய் மேடைப்பதட்டத்தில் அப்படியே நின்று விடுவார். முத்துச்சாமி அப்படி மறந்து போனவருக்குச் சரியாக எடுத்துக்கொடுப்பார். தர்சனாவில் நடித்த மனோகர், துரை, கெளரிஷங்கர் வேலை காரணமாக ஊரை விட்டுப்பிரிந்து சென்றனர். அதற்குள் நாங்கள் தமிழ்ச்செல்வன் தலைமையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் செயல்பட ஆரம்பித்திருந்தோம். எனவே புதிதாய் சிருஷ்டி என்றொரு நாடகக்குழு உருவானது. மற்றெல்லா விவாதக்களன்களிலும் ஒதுங்கியே இருந்த முத்துச்சாமி நாடகக்களத்தில் மட்டும் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்குகொண்டார்.
நானும் வேலை கிடைத்து தமிழ்நாட்டின் வடபகுதிக்குச் சென்று விட்டேன். எப்போதும் கோவில்பட்டியை எனது தலையில் சுமந்து கொண்டே அலைந்தேன். ஊருக்கு வரும் பொழுதுகளை என் நண்பர்களுடனேயே கழிக்க விரும்பினேன். அப்போது முத்துச்சாமியும் போஸ்ட் ஆபீசில் வேலைக்குச் சேர்ந்து விட்டார். அவரைச் சந்தித்த போது, என்னைப் பார்த்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி,

“என்னப்பா ... இப்படியாயிருச்சி ...” என்றார். எனக்கு எதுவும் புரியவில்லை.

ஒரு கணஇடை வெளிக்குப்பிறகு, சப்தர் ஹஸ்மியை... அநியாயமாக் கொன்னுட்டாங்களே...” என்றார் தீவிரமான குரலில். பேசிக்கொண்டிருந்த கொஞ்சநேரமும் சப்தர்ஹஸ்மியைப் பற்றியும் பழைய நாடக நினைவுகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.

சப்தர் ஹஸ்மி மகத்தான மக்கள் நாடகக் கலைஞன் ஆட்சியாளர்களின் உயிர்நாடியை தன் கலையால் உலுக்கிய கலைஞன் இடதுசாரி இயக்கத்தின் கலைஞர்களில் தலைசிறந்தவன். வீதி நாடகங்களில் புதிய புதிய சோதனை முயற்சிகளை மேற்கொண்டு மக்களிடம் நேரடியாகச் சென்ற கலைஞன் அதிகாரத்திற்கெதிரான ஓங்கி ஓலித்த அந்தப்புரட்சிக்குரலை அடித்துக் கொலை செய்து கலையின் வரலாற்றுப்பக்கங்களில் தன் கறைபடியச் செய்துவிட்டது அன்றைய காங்கிரஸ் அரசு. ஆனால் சப்தர் மறையவில்லை நாடெங்கிலும் பல்லாயிரக்கணக்கான நாடகக்குழுக்களாக முளைத்தெழுத்தார். அதிகாரம் நடுநடுங்க இன்னும் இன்னும் உரத்து உரத்து முழங்கிக் கொண்டிருக்கிறார்.

எப்படியாவது ஊருக்கு வந்தால் போதும் என்று பதினான்கு வருடங்களுக்குப்பின் ஊர்வந்து சேர்ந்தேன் ஊரைப்பற்றிய என் பிம்பம், பிரமை ஊர்வந்து சேர்ந்ததும் சிதைந்து விட்டது. வந்த கொஞ்சநாட்களிலேயே நான் கண்ட கனவு கலைந்து விட்டது. ஆனால் இன்னமும் சில பழைய நண்பர்கள் பழைய ஞாபகத்தின் மெலிதான சாயலோடு இருந்தார்கள். முத்துச்சாமியும் இருந்தார். அவ்வப்போது சந்திக்கிற பொழுதுகளில் சிறு குசலவிசாரணை ஒரு தேநீர் என்று போய்க்கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் முத்துச்சாமி என்னை தொலைபேசியில் அழைத்து பேச வேண்டும் என்று சொன்னார்.

எங்களுடைய பாலியகால நினைவுச் சின்னமான அதே டீக்கடை முக்கில் சந்தித்தோம். அப்போது தான் அந்த அதிர்ச்சியான தகவலைச் சொன்னார். தனக்கு கேன்சர் இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும், சோதனைச்சாலை முடிவுகளுக்காக சென்னை சென்றிருப்பதாகவும் சொன்னார். கேட்ட ஒரு கணம் உள்ளுக்குள் அதிர்வு தொடங்கிவிட்டது. சமாளிப்பதற்கு வெகுவாக முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆனால் முத்துச்சாமியும் அவருடைய கலக்கத்தை வெளிக்காட்டாமல் பேசிக்கொண்டிருந்தார். ஒரு வேளை கேன்சர் தான் என்றால் என்னென்ன வழிகளில் வைத்தியம் செய்யலாம் என்று நிதானமாகக் கேட்டார். நான் எனது உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் எனக்குத் தெரிந்த வழிமுறைகளை குறிப்பாக ஹோமியோபதி மருத்துவமுறைச்சிகிச்சை பற்றியும் அவரிடம் சொன்னேன். விடைபெறும் போது நம்பிக்கையுடன் சென்றார்.

அதற்கு சில நாட்களுக்குப்பிறகு நான் கேள்விப்பட்ட செய்தி நல்லதாயில்லை. சென்னையில் புற்றுநோய் சிகிச்சையில் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. பின்னர் மூன்று மாதங்கள் கழிந்தபிறகே ஊர் வந்து சேர்ந்த அவரைப் பார்க்கப் போயிருந்தேன். புற்றுநோய்ச் சிகிச்சையினால் சுருண்டு அடர்ந்த அவருடைய முடி உதிர்ந்து எலும்புக்கூடாக காட்சியளித்தார். பொங்கி வந்த விம்மலை அடக்கிக்கொண்டேன். வலிந்து ஏற்படுத்திக் கொண்ட உற்சாகத்தோடு அவரிடம் இனி எல்லாம் சரியாகிவிடும். சிகிச்சை அறிக்கைகளைப் பார்த்து விட்டு, குணமாகிவிட்டது என்று எழுதப்பட்டிருக்கிறது, என்று சொன்னேன். முத்துச்சாமி முன்பு நான் சொன்னதை நினைவில் வைத்திருந்ததாலோ என்னவோ இனிமேல் வராமலிருக்க ஹோமியோபதி சிகிச்சை எடுக்கலாமா யாரிடம் எடுக்கலாம் ? என்று கேட்டார் அதற்கான வழிவகைகளைச் சொன்னன். அவரும் கோட்டயம் சென்று ஹோமியோபதி டாக்டர். ஆர்.பி. பட்டேல் அவர்களைச் சென்று சந்தித்து மருந்து சாப்பிட்டுவந்தார்.

ஆனால் நாளுக்குநாள் உடல்நிலை நலிந்துகொண்டே வந்தது கண்கூடாகத் தெரிந்தது. இடையில் பல வருடங்களாக சந்திக்காமலே இருந்த நாங்கள் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தோம். வாரம் இரண்டு தடவையோ மூன்று தடவையோ அவர் வீட்டுக்குச் சென்று பழைய பாலியகால மகிழ்ச்சியான வேடிக்கையான நிகழ்வுகளை ஞாபகப்படுத்தி உற்சாகப்படுத்தி நம்பிக்கையூட்டினேன். அதிலும் குறிப்பாக தர்சனா சிருஷ்டி நாடக நிகழ்வுகளைப் பற்றி அதன் நிகழ்வுகளில் நடந்த சம்பவங்களைப் பற்றியும் பேசும் போது நான் மறந்து போயிருந்த பல விஷயங்களை அவர் நினைவுபடுத்தினார். புற்றுநோய் சிகிச்சையினால் ஒளியிழந்த அவர் கண்கள், இந்தத் தருணங்களில் மட்டும் தன்னிடம் மீந்திருந்த ஒளியை பிரகாசிக்கச் செய்தன என்று நினைக்கிறேன் பளபளக்கும் அந்தக் கண்களின் கனவுப்பாதை வழியே அவர் பழைய நாட்களின் சந்தோஷ நிழலில் இளைப்பாறினார். புன்னகை சிந்தும் முகத்தோடு நான் பேசுவதையே கேட்டுக் கொண்டிருப்பார். நானும் அவரும் மட்டும் அந்த வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதான பிரமை அவ்வப்போது வரும். அவர் குடும்பத்து உறுப்பினர்கள் நிழலாக நடமாடிக்கொண்டிருப்பார்கள். அப்போது அவர் நினைவுபடுத்திச்சொன்னது தான் தர்சனா நாடகக் குழுவின் பிரகடனம். கொஞ்சநாட்களில் என் வருகை அவருக்கு அவசியமாகிவிட்டது. நான் பேசிவிட்டுசென்ற பிறகு கொஞ்சம் தெம்பாக இருக்கிறார் என்று அவர் குடும்ப உறுப்பினர்கள் சொன்னபோது நானும் எல்லாம் சரியாகி முத்துச்சாமி மீண்டும் நடமாடி விடுவார் என்று தான் நம்பியிருந்தேன்.

திடீரென ஒரு நாள் இரவு நான் பணி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது முத்துச்சாமியின் வீட்டிலிருந்து அலைபேசி அழைப்பு உடனே வீட்டுக்கு வரச் சொன்னார்கள். அப்போதே எனக்குள் ஒரு பதட்டம். அவர் வீட்டில் பலர் கூடியிருந்தார்கள். படுக்கையில் முத்துச்சாமி கிடந்தார். ஏற்கனவே சிறிய உருவம் இன்னும் சிறிதான மாதிரி ஒடுங்கிக் கிடந்தார். கண்கள் பாதி திறந்த நிலையில் கைகளில் நாடி ஒடுங்கிக்கொண்டிருந்தது. நான் எதுவும் பேசுகிற மனநிலையில் இல்லை. சுற்றிலும் அவர் மனைவி உறவினர்கள் என் முகத்தைப் பார்த்தே தெரிந்து கொண்டார்கள். ஒரு ஓலம் கிளம்பியது. என் வயிற்றை பிசைந்த துக்கம் ஒரு பெரும் விம்மலாக வெளிப்பட கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே நான் வெளியே வந்துவிட்டேன். முத்துச்சாமி எங்கள் பாலியகால நண்பர் தர்சனாவை தன் கனவாக அடைகாத்த அருமைத் தோழன் தன் கலையாத ஒப்பனையுடனேயே காற்றில் கலந்து விட்டார். 

Tuesday, 24 April 2012

மறக்க முடியாத மாணிக்கக் கங்கணம்

kuprin

கோவில்பட்டிக்கு அப்போது வசந்தகாலம். தமிழ்நாட்டில் நிலவி வந்த அத்தனை இலக்கிய போக்குகளும் முட்டி மோதிக் கொண்டிருந்த அபூர்வ காலம். தினமும் இலக்கிய விவாதங்களும் தத்துவப் போர்களும் நிகழ்ந்து கொண்டிருந்த பரபரப்பான காலம். புதிய புதிய அனுபவங்கள் நெருக்கியடித்துக் கொண்டு மனசுக்குள் நுழைந்து கொண்டிருந்தன. வாழ்க்கையை அதற்குப் பின் ஒரு போதும் அவ்வளவு உயிர்த்துடிப்புடன் உணர்ந்ததேயில்லை. 1983ம் ஆண்டில் ஜுன் மாதம் வழக்கம் போல நாங்கள் கூடும் டீக்கடையில் புதிதாக ஒருவர் ஜமாவில் சேர்ந்திருந்தார். ஆறடி உயரத்தில் பிடறி வரை தொங்கிய தலை முடியுடன் கண்ணாடிக்குப் பின்னால் பரபரத்த விழிகளுடன் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். பேச்சின் இடைவெளியில் அவர் திருநெல்வேலி திம்மராஜபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜோதி விநாயகம் என்று அறிமுகம் செய்து கொண்டேன். அவரிடம் பேச்சுக்கொடுக்காமல் அவரையே கவனித்துக் கொண்டிந்தேன். முதலில் அவ்வளவு சுவாரசியமானவராகத் தெரியவில்லை. மேலும் கோவில்பட்டி எழுத்தாளர்களுக்கேயுரிய ஒரு அலட்சியமும் இருந்தது. ஆனால் பின்வரும் நாட்களில் அவர் எனக்கு எவ்வளவு முக்கியமானவராக மாறப்போகிறார் என்று மட்டும் தெரிந்திருந்தால்...

கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய ஆளுமையின் ஆகிருதி தெரியத் தொடங்கியது. மூடுண்ட குறுகிய விவாதக்களன்களை உடைத்து இந்தப் பரந்த உலகஇலக்கியப் பரப்பின் பெருவெளியில் எங்களை நிறுத்தியவர் ஜோதிவிநாயகம். கலையின் படைப்பாக்க அழகியல் அனுபவங்களை உணர்த்தியவர். உலக இலக்கியங்களாக புகழ்பெற்ற நூல்களின் சாராம்சமான நுட்பங்களை விளக்கியவர். எந்தக் குறுகிய சிந்தனை யோட்டத்திற்குள்ளும் சிக்காமல் வாழ்வின், கலையின், தத்துவத்தின் அடிப்படை உண்மைகளைத் தேடி தொடர்ந்து விவாதம் செய்தவர். எண்பதுகளின் துவக்கத்திலேயே எங்களுக்கு கிராம்சியை அறிமுகப்படுத்தியவர். அவரது ஆலமரத்தோப்பும் தோப்பாகாக் காளான்களும் என்று கட்டுரை தீவிர விவாதங்களையும், புதிய வெளிச்சங்களையும் அளித்தது. தேடல் என்ற சிறுபத்திரிகையின் ஆசிரியர். அவர் வேலை பார்த்தது விளாத்திகுளத்தில். ஆனால் மையங்கொண்டிருந்தது, கோவில்பட்டியில். அவருடைய நீண்ட கைகளின் அரவணைப்புக்குள் நானும் எழுத்தாளர் கோணங்கியும் மயங்கிக் கிடந்தோம். வேகவேகமாக கைகளையும் பிடறி மயிர் குலுங்க தலையையும் ஆட்டி அவர் பேசும்போது விரைவில் கைகலப்பு நிகழ்ந்து விடும் என்றே தூரத்திலிருந்து பார்ப்பவர்கள் நினைப்பார்கள். ஆனால் தன் வாதத்தை தீவிரமாக முன்வைத்துப் பேசும் உறுதியின் வெளிப்பாடுகள் தான் அவை. படைப்பின் நுட்பங்களைக் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்ட ஜோதிவிநாயகம் இதுவரை பேசப்படாத எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்படி அவர் செய்த பல எழுத்தாளர்களில் அவருக்கு மிகவும் பிடித்தவர் ருஷ்ய எழுத்தாளர் அலக்சாண்டர் குப்ரின். குப்ரின் எழுதிய மாணிக்கக்கங்கணம் என்ற ஒரு சிறுகதையே அவரை உலக இலக்கிய வரிசையில் சேர்த்துவிடும் என்பார். உண்மைதான்.

எளிய தந்தி கிளார்க்கான ஷெல்த்கோவ் பிரபுக்குல சிற்றரசி வேராவைக் காதலிக்கிறான். அவருடைய திருமணத்திற்கு முன்பிருந்தும் அவருடைய திருமணத்திற்குப் பின்பும் கூட. முதலில் அவனுடைய கடிதங்கள் தொந்தரவு செய்கின்றன. அதை வேரா நிறுத்துகிறாள். அவனுடைய உச்சக்கட்டமுட்டாள் தனமாக அவளுக்குப் பிறந்த நாள் பரிசாக மாணிக்கக் கங்கணத்தை அனுப்புகிறான். வேராவின் கணவனும், சகோதரனும் நேரில் சென்று அவனிடம் பேசுகிறார்கள். அவன் ஒருமுறை மட்டும் வேராவிடம் பேசிக் கொள்ளட்டுமா என்று அவள் கணவனிடம் அனுமதிகேட்டு விட்டு பேசுகிறான். இனிமேல் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது என்கிறான். மறுநாள் தற்கொலை செய்துகொள்கிறான். அதுவரை அவனைப்பார்த்திராத வேரா முதல் முறையாக அவனது இறந்த உடலை வந்து பார்க்கிறாள். தன்னைக் கடந்து சென்று விட்ட மகத்தான காதலை உணர்கிறாள். ஷெல்த்கோவின் இறுதிவேண்டுகோளின் படி பீத்தோவனின் சானட் இரண்டு ஓபஸ் 2 லார்கோ அப்பாஸியனோட்டோவை பியானோவில் வாசிக்கச் சொல்லி ஷெல்த்கோவிடம் மன்னிப்பைக்கோருகிறாள்.

உண்மையில் இந்தக் கதையை இப்போது வாசிக்கும்போது கூட கண்கள் கலங்குகின்றன. அலக்ஸாண்டர் குப்ரீனின் (1870 - 1938) அதிகமான படைப்புகள் தமிழில் வரைவில்லை.

பூ.சோமசுந்தரம் மொழிபெயர்ப்பில் ருஷ்ய அமர இலக்கிய ஆசிரியர்கள் 1 என்ற தொகுப்பில் உள்ள கதையே இது. ஜோதிவிநாயகம் சொன்னபிறகு எத்தனைமுறை இந்தக்கதையைப் படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. வாசிக்கும் போது நம் வாழ்வின் மகத்தான காதலின் தருணங்களை நம்மைக் கடந்து சென்ற காதலின் உன்னதங்களை நினைவு கொள்ள முடியும். வேரா உயிரற்ற ஷெல்த்கோவின் உடலைச் சந்திக்கிற பக்கங்கள் உலக இலக்கியத்தின் உன்னதமான பக்கங்கள். அலெக்சாண்டர் குப்ரின் எங்கே உங்கள் கைகளைத் தாருங்கள். பற்றிக் குலுக்க விரும்புகிறேன்.

விளாத்திகுளம் வைப்பாற்றில் இரவு நேரத்தில் பல மணி நேரங்கள் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். நானும் ஜோதிவிநாயகமும், கோணங்கியும் எங்கள் வாழ்வின் மிக அந்தரங்கமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். அப்போதெல்லாம் அவர் ஒரு பாடலை ஹம்மிங் செய்து கொண்டிருப்பார். அதுகூட அதிகம் பிரபலமடையாத ஒரு பாடல்தான் யாரந்த நிலவு ஏனிந்த கனவு மிக அபூர்வமான பொழுதுகளில் கரகரத்த குரலில் பாடவும் செய்வார் அப்போது இருளிலும் அவர் கண்கள் மின்னுவதையும் குரல் நடுங்குவதையும் உணர்ந்திருக்கிறேன்.

வாழ்வின் சூழலில் தூக்கியயறியப்பட்ட நான் வேலை கிடைத்து வடஆற்காடு மாவட்டத்தில் விழுந்தபிறகு அவருடனான தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாக தொய்வடைந்தது. 1996 ஆம் வருடம் ஜோதி விநாயகத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருக்கிறார். திம்மராஜபுரம் வீட்டிற்கு நானும் நாறும்பூநாதனும் சென்றிருந்தோம். கட்டில் நீளம் போதாமல் வெளியே நீண்டு கொண்டிருந்த கால்களைத் தான் முதலில் நான் பார்த்தேன். ஒரு கணம் இதயம் நடுங்கியது. அடிவயிற்றில் பிசைவது போன்ற வலி. உள்ளே அந்த ஆஜானுபாவனான, தன் நீண்டகைகளை ஆட்டி, பிடறிமுடி குலுங்க பேசிக்கொண்டிருந்த கோவில்பட்டி எழுத்தாளர்களுக்குப் புதிய பிரதேசங்களை அறிமுகப்படுத்திய, தமிழிலக்கியத்தின் முக்கியமான ஆளுமையாக உருவாகிக் கொண்டிருந்த ஜோதி விநாயகம் மரணப்படுக்கையில் கிடந்தார். மரணத்தின் வாசனை வீடு முழுவதும். அவரருகில் அமர்ந்து அவர் கைகளைப்பற்றி ஆறுதல் சொன்னேன். அவை வெற்று வார்த்தைகள் என்று அவரும் உணர்ந்திருப்பார். எதுவும் பேசவில்லை. பொங்கிய கண்ணீரை அடக்க முடியாமல் அவசர அவசரமாக கைக்குட்டையை எடுத்து துடைந்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டேன். எங்கள் அன்புக்குரிய ஜோதி ! மரணத்தால் உங்களை வெல்ல முடியாது. கோவில்பட்டி தெருக்களில், நீங்கள் நடந்து சென்று பாதைகளில், நின்று குடித்த டீக்கடைகளில், அமர்ந்து விவாதித்த காந்திமைதானத்தில் நீங்கள் வாழ்கிறீர்கள் ! ஜோதி ! உங்கள் இறுதிக்கணங்களில் பற்றிய கைகளின் ஸ்பரிசம் இன்னும் என் கைகளில் துடிக்கிறது. குளிர்ந்த அந்தஸ்பரிசம் அலக்ஸாண்டர் குப்ரினுடையதா, மகத்தான காதல் கதையான மாணிக்கக் கங்கணத்தின் நாயகனாக ஷெல்த்கோவினுடையதா இல்லை எங்கள் அன்புக்குரிய ஜோதியினுடையதா என்று குழம்பித் தவித்துக் கொண்டிருக்கிறேன். கண்கள் தவிக்கின்றன உங்களைத் தேடி கண்களில் கண்ணீர் பொங்குகிறது.

Saturday, 21 April 2012

வெங்காச்சி சொல்லியது

download  

என்னுடைய பால்ய காலத்தில், திருநெல்வேலி என் கனவுப் பிரதேசமாகவே இருந்தது. பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சுன்னா, நானும் என் தம்பி கணேசனும் அம்மாவை அரித்தெடுக்க ஆரம்பித்து விடுவோம். திருநெல்வேலியில் வெங்காச்சியும், சாமி தாத்தாவும் இருந்தார்கள். கோவில்பட்டி லட்சுமி மில்லில் வேலை பார்த்த அப்பாவின் சாப்பாட்டுக்கு ஒரு வழி பண்ணிவிட்டு அம்மா கிளம்புவாள். காய்ந்த கரிசல் ஊரான கோவில்பட்டியில், தண்ணீர் எடுத்தே வாடிப்போன எங்க அம்மாவின் முகத்திலும் அபூர்வமான அழகு மிளிரும். கும்மரிச்சம் போட்டுக்கொண்டு, பைகளைத் தூக்கிக்கிட்டு பஸ் ஸ்டாண்டுக்குப் போய், திருநெல்வேலி பஸ்ஸுக்காகக் காத்துக் கிடப்போம்.

அப்போது லயன் கம்பெனி பஸ்ஸும், எம்.ஆர்.கோபாலன் பஸ்ஸும் மாறி மாறி ஷண்டிங் அடிக்கும். பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏறி உட்கார்ந்ததுமே, திருநெல்வேலி போய்விட்ட உணர்வு வந்துவிடும். கயத்தாறு தாண்டியதுமே நெல்லைச் சீமையின் குளிர்ந்த காற்று தாலாட்டத் தொடங்கிவிடும். தம்பி கணேசன், அந்தக் காற்று பட்டதுமே அப்படியே கிறங்கி அம்மாவின் மடியில் படுத்து விடுவான். தாழையூத்து தாண்டியதும் அம்மா அவனை எழுப்பத் தொடங்குவாள்.

‘‘ஏ... மூதி.. எந்திரில.. பஸ்ஸில ஏர்ற வரைக்கும் என்ன குதியாட்டம் போட்ட. இப்ப உறங்கறதப்பாரு. ஏல ஆச்சி ஊரு வந்துட்டல்ல.. எந்தி...’’

எனக்கு ஆச்சரியமாய் இருக்கும். அம்மா கோவில்பட்டியில் இருக்கும்வரை இப்படிப் பேசிப் பார்த்ததேயில்லை. பாஷையே மாறிவிட்டதே. குரலில் ஒரு ஈரமும், அன்பும் எப்படி பிரவகிக்கிறது? நான் அம்மாவையே பார்த்துக் கொண்டிருப்பேன்.

திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து பைகளைத் தூக்கிக்கொண்டு நானும் அம்மாவும் நடப்போம். பின்னால், ஓலைக்கொட்டானில் கட்டிய கருப்பட்டி மிட்டாயையும், காரச்சேவையும் கணேசன் தூக்கிக்கொண்டு வருவான். பெரிய மருத மரங்களும், அதன் நிழலும் அடர்ந்த அந்தச் சாலைகள் எங்களை வரவேற்கக் காத்திருக்கும். மீனாட்சிபுரம் போகும் வழியிலுள்ள பெருமாள்கோயில் தெருவில்தான் தாத்தா, வக்கீல் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். ‘வ.சீனிவாசய்யர், அட்வகேட்’ என்ற கருப்புப் பலகை தொங்கும் இரும்பு அளிக்கு ஓரத்தில், மேலே ஏறிச் செல்லும் மரப்படியில், நான்தான் முதலில் ஏறிச் செல்வேன்.

எழுத்து மேசை மீது குனிந்து, கேஸ் கட்டுகளை விரித்து, குண்டான மை பேனாவினால் எழுதிக் கொண்டிருக்கும் தாத்தா, நிமிர்ந்து பார்ப்பார்.

‘‘ஏ... அய்யா... வா.. வா.. அம்மை வந்திருக்காளா...’’ என்று கேட்பார். நான் வாயெல்லாம் இளித்துக்கொண்டு தலையாட்டுவேன். எனக்குப் பின்னால் ஓலைக்கொட்டானை கையில் பிடித்துக்கொண்டே தத்தக்கா பித்தக்கா என்று படியேறி வருவான் கணேசன். அவன் வந்து சேருவதற்குள், தாத்தா எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, கீழே இறங்க ஆயத்தமாகி விடுவார். கணேசனை அப்படியே தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வருவார். தாத்தாவைப் பார்த்ததும், அம்மா இரண்டு கைகளையும் கூப்பி, ‘‘சேவிக்கிறேன்ப்பா...’’ என்று சொல்லுவாள்.

பரஸ்பர குசல விசாரிப்புகளுக்குப் பின்பு, தாத்தா நடக்கத் தொடங்குவார். நான் ஒருபக்கம் தாத்தாவின் பெரிய விரலைப் பிடித்துக்கொள்வேன். இன்னொரு புறம் கணேசன் பிடித்துக்கொள்வான். தாத்தாவின் இரண்டு கை விரல்களிலும் கல் மோதிரம் இரண்டும், நெளிவு ஒன்றும் கிடக்கும். தெரு முக்கிலிருந்து நாயுடு கடையில் எங்களுக்கு ஆரஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுப்பார். பின்னர், பெருமாள்கோயில் அருகிலேயே நின்று கொண்டிருக்கும் மாட்டு வண்டியைக் கூப்பிடுவார்.

எங்களை அதில் ஏற்றிவிட்டு அம்மாவிடம், ‘‘ரெண்டு கேஸ் கட்டு கிடக்கு.. முடிச்சிட்டு சாமிகிட்டே சொல்லிட்டு வாரேன்...’’ என்று சொல்லிவிட்டுப் போவார். நாங்கள் தாத்தா எங்களிடம்தான் சொல்வதாக நினைத்து, மிட்டாய் எச்சில் வழிய தலையாட்டுவோம்.

ஓங்கு தாங்கான உருவத்துடன், கூர்ந்த நாசியும், மேடேறிய நெற்றியும், தங்க பட்டன் மாட்டிய சட்டையும், அதன் மீது பட்டுச்சரிகை அங்கவஸ்திரமும் அணிந்து, தாத்தா கம்பீரமாய் இருப்பார். எங்களுக்குத் தாத்தாவைப் பார்க்கப் பார்க்கப் பெருமையாக இருக்கும். அம்மா எங்களுடன் இரண்டு நாள் இருந்துவிட்டுப் போய்விடுவாள். அப்புறம் லீவு முடிகிற வரைக்கும் எங்களைப் பிடிக்க முடியாது. அங்கே என் சேக்காளிகளான தனபால், ராதா, அம்பலவாணன், உலகநாதன், காந்திமதிநாதன் என்று எல்லோரும் எப்போதும் ஆற்றிலேயேதான் கிடப்போம்.

தண்ணீரே பார்த்திராத என்னுடைய ஊரான கோவில்பட்டியிலிருந்து, தாமிரபரணி தண்ணீருக்காகவே வாழ்கிற திருநெல்வேலிக்குப் போய் சும்மா இருக்க முடியுமா? ஆச்சி என்ன சத்தம் போட்டாலும் கேட்பதில்லை. காலை, மதியம், மாலை என்று முப்பொழுதும் ஆற்றுக்குள் மிதந்து கொண்டேயிருப்போம். முழங்கால் ஆழத்தில் நான் முங்குநீச்சல் போட்டால், என் தம்பி கணேசன் கணுக்கால் ஆழத்தில் முங்குநீச்சல் பழகுவான். முதுகுபூரா நனையாமலே குளித்து முடிப்பான். கண்கள் சிவக்கச் சிவக்க நாங்கள் வீட்டுக்கு வருவோம்.

ஆச்சி எங்களை செல்லமாக,

‘‘எல.. சளிப்பிடிச்சி ஜொரம் வந்துச்சின்னா... ரெண்டு பேரையும் கோவில்பட்டி பஸ் ஏத்தி விட்ருவேன். கேட்டியா? ஏ சின்ன முடிவான், உன்னயத்தான். சிலுப்பட்டத்தப்பாரு...’’

வைவாள்.

எங்களுக்கு வெங்காச்சியைப் பிடிக்காது. காரணம் வேறொன்றுமில்லை. தாத்தா வாங்கிட்டு வரும் தின்பண்டங்களை வாங்கி வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தருவாள். அடுக்களையில் எங்களுக்கு எட்டாத உயரத்தில் கண்ணாடி பாட்டிலில் மிக்சர், ஓமப்பொடி, இனிப்புச்சேவு என்று போட்டு வைத்திருப்பாள். காலையிலும் சாயந்திரமும் அவள் தருகிற கொஞ்சூண்டு தின்பண்டம், எங்கள் யானைப்பசிக்கு காங்காது. அதனால், ஆச்சியிடம் ஒரு விலகல் இருந்தது. அதோடு தாத்தாவுக்குப் பொருத்தமில்லாத கட்டை குட்டையான உருவத்தோடும், திருநெல்வேலி பிராண்ட் எத்துப்பற்களோடும் கருப்பாகவும் இருந்தாள் வெங்காச்சி.

டபடபவென ஐஸ்காரர் ஐஸ்பெட்டி மூடியைத் தட்டிக் கொண்டு வருவார். ராத்திரியில் சவ்வு மிட்டாய்காரர் பொம்மை வைத்த கம்பைத் தூக்கிக்கொண்டு, அதில் மலைப்பாம்பென சுற்றியிருக்கும் மூன்று கலரில் இனித்துக் கிடக்கும் சவ்வு மிட்டாயை வாட்சு, தேளு, பாம்பு, பொம்மை என்று காசுக்கு ஏத்த மாதிரி செஞ்சு கொடுப்பார். எல்லாவற்றையும்விட, கடைசியில் ஒரு இணுக்கு கன்னத்தில் ஒட்டிவிடுவாரே! அதில்தான் அம்புட்டுப் பேருக்கும் பிரியம். தாத்தா இருந்தால் காசு கொடுப்பார். ஆச்சியிடம் அவ்வளவு ஈசியா வாங்க முடியாது. கெஞ்சிக் கூத்தாடி, ரெண்டு பேருக்கும் சேர்த்து இரண்டு பைசா கொடுப்பாள். அன்று எனக்கும் கணேசனுக்கும் சண்டைதான்.

வீட்டுக்கு எதிரே, ஒரு பெரிய பூவரசமரம் இருந்தது. என் வயசுப் பையன்கள், அந்தப் பூவரசு இலையைச் சுருட்டி குழலாக்கி ‘பீ... பீ...’ என்று ஊதிக்கொண்டு திரிய, நான் காற்றும் எச்சிலும் வடிய இலையைக் கசக்கி எறிவேன். வாரம் ஒருமுறை தாத்தாவுக்கு சவரம் செய்ய நாவிதர் வருவார். அவர் வந்து போகும்வரை, நாங்கள் அவரைச் சுற்றியே இருப்போம். சிரைக்கிற கத்தியை சாணைக்கல்லில் அவர் தீட்டுவதும், அவர் வைத்திருக்கும் குளிர்ந்த ஸ்படிகக் கல்லும், நுரை வருவதற்கு அவர் போடும் சோப்பும், எங்களுக்கு தீராத ஆச்சரியத்தைக் கொடுக்கும்.

அதைவிட ஆச்சரியமாய், எங்களுடைய தாத்தா உடம்பெங்கும் சவரம் செய்வார். வழுவழுவென்று சிவந்த பழமாகி நிற்பார். எப்போதாவது அந்த நாவிதரிடம் நாங்களும் மாட்டிக்கொண்டு, தலையைக் குனியவைத்து மெஷின் போடுகிறபோது, அழுது பொங்கிவிடுவோம். அழுதாலும் விட்டால்தானே? ஆனால், நாவிதர் வந்துவிட்டால் ஆச்சிக்குப் பிடிக்காது. முணுமுணுத்துக் கொண்டேயிருப்பாள். என்ன முணுமுணுக்கிறாள் என்று எங்களுக்குப் புரியாது.

ஆச்சி வீட்டு திருணையில், படர்கொடி போட்டிருப்பார்கள். ஆடிமாசம் புடலை, அவரை, பாகற்காய் என்று கொடி படர்ந்து திருணை குளுகுளுவென்று இருக்கும். மேலே தட்டட்டியில் பூசணிக்கொடி போட்டிருப்பார்கள். எங்களுக்கு எல்லாமே ஆச்சரியமாக இருக்கும். ஒரு புதிய உலகத்துக்குள் வந்துவிட்ட மாதிரி, ஆச்சரியங்கள் மாளவே மாளாது. அந்தத் திருணையில்தான் நாங்கள் படுத்திருப்போம். ஆச்சியும் எங்களோடு படுத்திருப்பாள். ஒருநாள் இரவு ஒண்ணுக்கு முட்டிக்கிட்டு எழுந்தபோது, விசும்பல் சத்தம் கேட்டது.

நான் பயந்து போய்,

‘‘ஆச்சி...’’ என்றேன்.

விசும்பல் நின்று வெங்காச்சி,

‘‘என்னல.. பேசாம படுல..’’

என்றாள்.

மறுநாள் காலை நாங்கள் எழுந்திரிக்கும்போது, வீட்டுக்கு முன்னால் மாட்டுவண்டி நின்று கொண்டிருந்தது. தாத்தா குளித்து முடித்து, வெளிர் நீலச் சட்டையின் மீது அங்கவஸ்திரம் தரித்து, கைகளில் மோதிரங்களுடன் கிளம்பிக் கொண்டிருந்தார். ஆச்சியும் எழுந்து காப்பி போட்டு, வட்ட கப்பில் ஆற்றிக் கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களில் தாத்தா,

‘‘போய்ட்டு வாரேன்.. பயகள் பத்திரம்..’’

என்று சொல்லிவிட்டு மாட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.

வண்டி நகண்டதுதான். அதுவரை சிரித்துக் கொண்டிருந்த வெங்காச்சியின் முகம் மாறிவிட்டது. நான் எழுந்து கண்களைக் கசக்கிக் கொண்டே,

‘‘ஆச்சி.. தாத்தா எங்க போறாங்க...’’ என்று கேட்டேன்.

ஒரு கணம் என்னைப் பார்த்த வெங்காச்சி சொன்னாள்,

‘‘எஞ்சக்களத்தி வீட்டுக்கு...’’

அப்போது எனக்குப் புரியவில்லை.