Tuesday, 18 February 2025

குயிலிடம் சொன்ன கதை

 

குயிலிடம் சொன்ன கதை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்




      நல்ல கோடைகாலம். மாமரத்தில் இலைகள் துளிர்த்து நிறைந்திருந்தன. மாமரத்தின் அடியில் கதைப்பாட்டியும், சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் உட்கார்ந்திருந்தார்கள். இளம் மாவிலைகளின் சிவப்பு நிறத்தில் பார்வதி இருந்தாள் என்று கதைப்பாட்டி சொன்னாள். அப்போது மாமரத்தின் கிளையில் ஒரு குயில் வந்து அமர்ந்தது. அது பாடத்தொடங்கியது.

என்ன ஒரு இனிமையான குரல்! எப்படியான இசை!

யாரும் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். குயிலின் பாட்டுக்குப் பதிலாக சின்னுவும் பாடினாள். குயில் கதைப்பாட்டியின் முன்னால் வந்து உட்கார்ந்தது.

“ பாடு குயிலக்கா! “ என்று நாய்க்குட்டி கெஞ்சியது.

“ நான் பாடுவதால் என்ன பயன்? “ என்று குயில் வருத்தத்துடன் சொன்னது.

“ ஏன்? என்னாச்சு? “ என்று கதைப்பாட்டி கேட்டார்.

“ எல்லாருக்கும் என்னுடைய பாட்டு மட்டும் தான் பிடிச்சிருக்கு.. என்னை யாருக்கும் பிடிக்கவில்லை.. என்னுடைய நிறத்தைப் பாருங்கள் கதைப்பாட்டி.. இயற்கை என்னை கருப்பு நிறத்தில் முக்கியெடுத்து விட்டது என்று தோன்றுகிறது.. சின்னுவைப் பார்த்தீர்களா? என்ன அழகான நிறம்! பழுத்த மாம்பழம்போல, குட்டி முயலைப் பாருங்கள்..என்ன அழகு..” என்று சொன்னது குயில்.

பூனைக்குட்டி இரண்டு கால்களில் எழுந்து நின்று,

“ என்னுடைய கண்கள் கூட பளிங்குக்கல் மாதிரி இருக்கும் பாரு..”

என்று சொன்னது.

குயில் குமுறி அழுதது.

அப்போது கதைப்பாட்டி சொன்னாள்,

“ குயிலே.. இயற்கை உனக்குக் கொடுத்த நிறத்தைப் பற்றிக் கவலைப்படாதே.. உனக்கு நல்ல இசை, மயிலுக்கு அழகு, யானைக்கு அறிவு, கதைப்பாட்டிக்குக் கதை, இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணு கொடுத்திருக்கிறது.. அதை நினைத்து மகிழ்ச்சியுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்..”

நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள்

Monday, 17 February 2025

பெர்ரா புளூக்கோ ஸ்பிச்செபுப்பியோ! அல்லது பாழாய் போன புரட்டனே!

 

பெர்ரா புளூக்கோ ஸ்பிச்செபுப்பியோ! அல்லது பாழாய் போன புரட்டனே!

 

உதயசங்கர்




திட்டுங்கள் பந்தலியோனே! நன்றாகத் திட்டுங்கள்! ரோஸேல்லியின் கடை வாசலில் தினம் தினம் இரவும் பகலும் ஜெம்மாவைப் போல விழிகளைத் தொலைத்து விட்டு வரமாட்டானா? சானின் வரமாட்டானா? அவனுடைய ஜெம்மா என்ற கிசுகிசுப்பு கேட்காதா? ஏதோ சில காரணங்களினால் காலதாமதமாகிவிட்டது, என்னை மன்னித்து விடு ( அட! அது பொய்யாகக்கூட இருந்து விட்டுப் போகட்டுமே ) என்று முழங்காலில் தண்டனிட்டு ஜெம்மாவை முதன்முதலில் பிரியும் போது அணைத்தானே ஸானின் அப்படி அணைக்கும் அந்தக் காட்சியைப் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்த உங்களைப் போலவே நானும் வீண் நம்பிக்கையில் காத்துக் கொண்டிருந்தேன் ஏமாற்றிவிட்டான் ஸானின் இல்லை துர்கனேவ்.

பந்தலியோனே திட்டுங்கள்! ஸானினைத் திட்டுங்கள்! துர்கனேவைத் திட்டுங்கள்! பசப்பியான மாரியாவைத் திட்டுங்கள்! போலஸவைத் திட்டுங்கள்! எல்லாரும் புரட்டர்கள்! பாழாய் போன புரட்டர்கள்! முதல் காதலின் அதிகாலைப்பனித்துளி வானிலிருந்து மெல்ல மிதந்து அப்போது தான் மலர்ந்த மலரின் மெல்லிதழ் மீது மேகம் போல வந்தமர்கிற அந்தத் தூயகாதலை மறந்து விட்ட ஸானினைத் திட்டுங்கள் பந்தலியோனே!

பெர்ரா புளூக்கோ ஸ்பிச்செபுப்பியோ

எனக்கு பிராங்கபர்ட் தெரியாது. ருஷ்யமொழியோ, நீங்கள் பேசும் இத்தாலி மொழியோ தெரியாது. ரோஸேல்லியின் மிட்டாய்க்கடையும் தெரியாது. ஜெம்மாவும் அம்மா பாவப்பட்ட பிராவு ரோஸேல்லியையும் தெரியாது. ஸானினைக் கதாநாயகனாக வரித்துக் கொண்ட எமிலியோவையும் தெரியாது. ஜெம்மாவைத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட கனவான் வறண்ட கார்ல் கிளியூபெரையும் தெரியாது. ஜெம்மாவின் வீட்டு நாயான தர்த்தாலியாவையும் தெரியாது. ஏன் துர்கனேவ் என்ற மாபெரும் இலக்கிய மேதையை நாற்பது வருடங்களாகத் தான் தெரியும். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய மூன்று காதல் காதைகள் நூலையும் தந்தையரும் தனயரும் நாவல்களைப் படித்த பிறகு தான் தெரியும். என் வாழ்வில் மறக்க முடியாத இலக்கிய ஆளுமையாக துர்கனேவ் மாறி விட்டார்.

என் இளமைக்காலத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை, மனதின் சலனங்களை, என்னவென்று விளங்காத உருவமற்ற உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து என் கண்முன்னே என்னையே நிறுத்திவிட்டார் துர்கனேவ். முதல் காதல் நாவலில் வரும் ஜீனா தேவதையாக நினைக்கும் விளாட்மீராக அப்போது இருந்தேன். முதல் காதலின் தூய அன்பில் திளைத்துக் கொண்டிருந்தேன். அப்படி தான் ஆஸ்யா. அவளை எப்படி மறக்கமுடியும்? அவளை நிராகரித்தவனை இன்றும் நான் சபிக்கிறேன். வசந்தகால வெள்ளத்தில் வரும் ஜெம்மா இன்றும் என்னுடைய லட்சியமாக இருக்கிறாள்.

ருஷ்ய எழுத்தாளர்கள் காதலைப் பற்றி எழுதும்போது காதல் தேவதையான வீனஸின் மடியில் உட்கார்ந்து எழுதுகிறார்களோ என்று தோன்றும். டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்கி, அந்தோன் சேகவ், அலெக்சாண்டர் குப்ரின், மாக்சிம்கார்க்கி, என்று ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு எழுதியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் வாசிக்கும் போது அன்பின் சுடரொளி மனம் முழுவதும் நிறைந்து அறிவும், உடலும் அன்பின் ஒளியை வீசும். இந்த உலகம் மிக அழகானதாக மாறி விடும் ரசவாதத்தை உணரமுடியும். இந்தப் பிரபஞ்சத்தையே காதலிப்பவராக நம்மை மாற்றிவிடும். மனித வாழ்க்கையின் அர்த்தமே இந்த உன்னதக் கணங்கள் தானென்று தோன்றும்.

நம் வாழ்விலும் கடந்து சென்ற தூய அன்பின் நினைவுகளை மீட்டெடுக்க முடியும். கதகதப்பான அந்த வெப்பத்தில் நடைமுறை வாழ்வின் கசடுகளைக் கழுவிக் கொள்ளவும் சில கணங்களேனும் உன்னதஉணர்வு நிலைகளில் நாம் சஞ்சரிக்கவும் முடியும்.

காதல் முதல் காதல் எவ்வளவு விசித்திரமானது? எத்தனை எளிமையானது? எத்தனை தூய்மையானது? இவான் துர்கனேவ் அவர்களே! நான் உங்களை என் இதயத்தின் அடியாழத்திலிருந்து வாழ்த்துகிறேன். நீங்கள் உலக இலக்கிய வரலாற்றில் மூன்று காதல் கதைகளின் வழியாக நிரந்தரமான இடத்தைப் பிடித்து விட்டீர்கள். 

ஆனால் பந்தலியோனே திட்டுவது சரிதான். எப்படித்தான் மனது வந்ததோ! புகலற்ற, மாசுமருவற்ற தன்னுடைய ஓரப்பார்வையிலேயே பொங்கிப்பிரவகிக்கும் தன்னுடைய அன்பைத் தெரிவித்த ஜெம்மாவை மறக்க எப்படித்தான் மனது வந்ததோ? எத்தனையோ இத்தாலியத் துன்பியல் நாடகங்களில் நடித்திருந்தாலும் தன்னுடைய உணர்ச்சிகளையெல்லாம் மனதில் அடக்கிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் ஜெம்மா கண்களைத் துடைத்துக் கொள்ளும் காட்சியை மட்டும் பந்தலியோனே வால் மறக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை ஜெம்மாவைப் பார்க்கும்போதும் பந்தலியோனேவின் நெஞ்சில் ஒரு கேவல் வெடித்துக் கிளம்பும். நீங்கள் அதைக் கவனிக்கத் தவறி விட்டீர்கள் துர்கனேவ். ஏனெனில் கிழட்டுப்பந்தலியோனேவும் ஜெம்மாவின் மீது தூய அன்பைக் கொண்டிருந்தான். ஏன் கிழவர்களுக்குக் காதல் வரக்கூடாதா? நானே இருபது வயதிலும் ஜெம்மாவின் மீது அன்பு செலுத்தினேன். இந்த அறுபத்திநாலு வயதிலும் எனக்கு அவள் மீதான் அன்பு குறையவில்லையென்பது மட்டுமல்ல பெருகியிருக்கிறது.

அவளுக்காகத் தான் ஸானின் நடத்திய துவந்த யுத்தத்தில் துணையாளாகப் போனான் பந்தலியானே.. அது வரை ஏற்றிராத அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க அவன் எவ்வளவு பயிற்சி எடுத்தான் தெரியுமா? ஏனெனில் ஜெம்மாவைப் பார்த்தவுடனேயே ஸானினின் கண்களில் பொங்கித் திரையெறிந்த காதலை உணர்ந்து கொண்டான். ஜெம்மாவுக்கு இவனை விட மிகப்பொருத்தமான கனவான் யாரும் இருக்க முடியாது என்று நினைத்தான். ஏற்கனவே ரோஸேல்லியின் குடும்பநண்பராகவும், வேலையாளாகவும் பாதுகாவலராகவும் இருந்த பந்தலியானே இப்படித்தானே யோசித்திருக்க முடியும்.

ஸானின் நீயும் தான் எவ்வளவு நல்லவன். ஜெம்மாவை நீ எந்தளவுக்கு நேசித்திருந்தால் இருவர் சண்டைக்குத் துணிந்திருப்பாய். ஜெம்மாவின் மீதான உன் காதலுக்காக உயிரையே பணயம் வைத்தாயே. எப்படி அந்த பசப்பல்காரி மாரியா நிக்கலாயெவ்னாவின் மோகவலையில் வீழ்ந்தாய் ஸானின்?. தூய்மையான நேசத்தை விடவும் உடலிச்சை அவ்வளவு வலிமையானதா? எவ்வளவு நுட்பமாக, எவ்வளவு ஆழமாக தூய காதலையும், உடலிச்சையையும் எதிர்நிலைகளில் வைத்து சதுரங்கம் ஆடியிருக்கிறீர்கள் துர்கனேவ்.

தன் தூய காதலைப் பணயம் வைத்து ஆடித் தோற்றுப் போன ஸானினிடம் தான் எனக்கும் பந்தலியானோவுக்கும் மனத்தாங்கல். ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணியைப் போல ஆண்களைத் தன் கால்களால் எத்தி விளையாடிய மாரியாவை எப்படிப் புரிந்து கொள்ளாமல் போனாய் ஸானின்? புதிய புதிய ஆண்களைத் தேடி அடிமைப்படுத்திய மாரியாவை மட்டும் குறை சொல்ல மாட்டேன். பந்தலியோனேவும் நானும் தான் மாரியாவின் மாளிகையில் பார்த்தோமே. அவளுடைய காலடியில் அமர்ந்து அவளுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்ததைப் பார்த்தோமே. நீயும் பந்தலியோனேவைப் பார்த்தாய். உன் முகம் வெளுத்து சவக்களை படிந்து விட்டதைக் கண்டு தான், உன் துரோகத்தைத் தாங்க மாட்டாமல் தான் பந்தலியோனே சொன்னார்.

பெர்ரா புளூக்கோ ஸ்பிச்செபுப்பியோ

ஆமாம். அப்படித்தான் சொன்னார். உனக்குள்ளும் அந்தச் சாத்தான் ஒளிந்திருக்கிறான். இல்லையென்றால் முதல் பார்வையிலேயே மாரியா நிக்கலாயெவ்னாவின் காமாந்தகத்தை நீ அறிந்தும் அந்தக் காட்டுக்குள் போவாயா? அவள் பின்னாலேயே வளர்ப்பு நாயைப் போல அலைந்து சீரழிந்து விரட்டப்பட்டப் பிறகு ஜெம்மாவைத் தேடினாயே.

நல்லவேளை. அப்போது பந்தலியோனே உயிருடனில்லை. பிராவு ரோஸேல்லியும் உயிருடனில்லை. உன்னைத் தன் லட்சியக்கதாநாயகனாக நினைத்த எமிலியோவும் உன்னை முன்மாதிரியாக நினைத்தே போரில் கலந்து கொண்டு உயிர் நீத்து விட்டான். ஒரு கணம் நீ நினைத்துப் பார்த்தாயா? எவ்வளவு நம்பிக்கையுடன் ஜெம்மா உன்னை அனுப்பினாள்! 

   முதல் காதல் என்பதே புரட்சி ஆகும். உருவாகி விட்ட வாழ்க்கையின் ஒரே மாதிரிச் சரியான அமைப்பு ஒரு நொடியில் இடிந்து தகர்ந்து விடுகிறது. இளமை தடையரணுக்குப் பின்னே போராடத் தயாராக நிற்கிறது. அதன் ஒளிவீசும் கொடி உயரே பறக்கிறது. மேற்கொண்டு நேரப்போவது சாவோ, புதுவாழ்வோ, எது ஆயினும் அதற்குத் தன் உவகை பொங்கும் வணக்கத்தை அது தெரிவிக்கிறது. “

இப்படிச் சொன்னது நீங்கள் தானே துர்கனேவ். மனிதனது அந்தரங்க உனர்ச்சிகளுக்கும் வரலாற்றுப்பிரசனைகளையும் மிக அற்புதமாகப் பின்னித் தரும் உங்கள் கலைத்திறன் போற்றத்தக்கது. கவித்துவமான உரைநடையில் வாசகனின் மனதில் உணர்ச்சிகளைத் தூண்டும் கவிஞராகத் திகழ்கிறீர்கள். ஒரு குழந்தை கலைடாஸ்கோப்பைத்  திருப்பித் திருப்பி புதிய புதிய காட்சிகளைப் பார்ப்பதைப் போல மனித மனதின் ஆழங்களில் மூழ்கி ஒளிவீசும் முத்துகளை மட்டுமல்ல, இருள் படிந்த மூலைகளையும் காட்டுகிற வல்லமை உங்கள் கலைத்திறனுக்கு இருக்கிறது துர்கனேவ்.

நீங்கள் என்ன தான் திட்டமிட்டு ஸானினை மாரியாவின் காமத்துக்குப் பலி கொடுத்தாலும், உங்களையும் மீறி ஸானின் காலங்கடந்தேனும் மீண்டும் ஜெம்மாவைத் தேடி வருகிறானே. ஆனால் அதைவிட எங்கள் ஜெம்மா! என்ன மாதிரியான அற்புதமான பெண் அவள்! ஸானினைச் சபிக்கவில்லை. திட்டவில்லை. வெறுக்கவில்லை. அவளைப்போலவேயிருக்கும் மகளின் புகைப்படத்தை ஸானினுக்கு அனுப்பி வைக்கிறாளே. இவான் துர்கனேவ் அவர்களே! உங்கள் திட்டத்தையும் மீறி மனித மனதின் அடியாழத்தில் தூய அன்பின் ஒரு துளித்தேன் தங்கியிருப்பதை நீங்களே நிரூபித்துவிட்டீர்கள்.

” காதல் என்பது துன்ப உணர்வு, வாழ்வின் மகத்தான மர்மங்களில் ஒன்று, இயற்கையின் உற்பாத சக்திகளின் வெளிப்பாடு இது. இந்த ஆற்றலுக்கு முன்னால் மனிதன் முற்றிலும் தற்காப்பு அற்றவன், புகலற்றவன். காதல் மனிதர்களை விதி போலத் தாக்குகிறது. ஆர்வமாகப் பீரிடுகிறது. வாழ்க்கையில் கவிதை ஒளி பரப்புகிறது. பின்பு துன்பமாக முடிகிறது..”

இதையும் நீங்கள் தான் சொல்லியிருக்கிறீர்கள். வசந்த காலவெள்ளத்தை வாசித்து முடித்தவுடன் ஒரு காவியச்சோகம் கவிவதை உணரமுடிகிறது. அந்தக் காட்சியில் ஸானின் கையறுநிலையில் அடைத்துக் கிடக்கும் ரோஸேல்லி மிட்டாய்க்கடை முன்னால் நிற்கிறான். உள்ளே முதல் நாள் முதல்முறை பார்த்த ஜெம்மாவின் புன்னகை உறைந்திருக்கிறது. ஸானின் பெருமூச்சு விடுகிறான். பந்தலியோனேவும் நானும் கூட பெருமூச்சு விடுகிறோம். வாழ்க்கையென்னும் புதிரில் மனிதனின் நிலை என்ன? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

ருஷ்ய இலக்கியத்தின் கொடியை உலகமெங்கும் பறக்கவிட்ட இவான் துர்கனேவ் அவர்களே! உங்களை ஜெம்மாவுக்காக, ஆஸ்யாவுக்காக, ஜெனயீதாவுக்காக நானும்  பந்தலியோனேவும் வாழ்த்துகிறோம்.

காதலுடன்

உதயசங்கர்.

 

( வசந்த கால வெள்ளம் குறுநாவலுக்கு எழுதிய முன்னுரை )

புத்தகம் – வசந்த கால வெள்ளம் – இவான் துர்கனேவ்

வெளியீடு – பாரதி புத்தகாலயம்



Sunday, 16 February 2025

கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் பெண்ணியம்.

 

கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் பெண்ணியம்.

உதயசங்கர்



கலை  தானே அறியாத சில ரகசியங்களை தன் இதயத்தின் ஆழத்தில் பொதிந்து வைத்திருக்கிறது. அந்த ரகசியங்களை அறிந்துகொள்ளவே கலைஞன் மீண்டும் மீண்டும் கலையைப் படைக்கிறான். அந்த ரகசியங்கள் அவனுக்குக் கிளர்ச்சியூட்டுகின்றன. அவனுடைய ஆசையைத் தூண்டுகின்றன. அவனை மேலும் மேலும் முன்னேறச்சொல்கின்றன. இருளும் ஒளியும் முயங்கி விசித்திரமான விலங்குகளும் தேவதைகளும் வாழும் காட்டுக்குள் அவன் முன்னேறுகிறான். விட்டு விலகமுடியாத வசீகரமும், அதற்குள்ளேயே வெளியேற வழியில்லாத புதிர்க்குகைகளும் அவனை அங்கேயே சுற்றிச் சுற்றி அலைக்கழிக்கின்றன. அந்த ரகசியங்கள் முதல் காதலின் பரிசுத்தமான ஏக்கத்தைப் போல மனதின் அடியில்போய்த் தங்கி விடுகின்றன. களங்கமற்ற குழந்தையின் சிரிப்பொலி காற்றில் என்றும் நிலைத்திருப்பதைப் போல ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

ஒவ்வொரு முறை எழுதும்போதும் அந்த ஏக்கம் காற்றில் அலைக்கழியும் சுடரொளி அணையும் முன் ஒருகணம் பளீரெனத் தெரிகிற காட்சியைப் போல தெரிகிறது. கண்ணை மறைத்த இருளில் காட்சியின் தடயங்கள் அப்படியே தங்கி விடுகிறது. அந்தத் தடயங்கள் இன்னும் ஆவேசமூட்டுகின்றன. இன்னும் ஆர்வமூட்டுகின்றன. அந்த இருளின் ஒளியில் அவன் மேலும் மேலும் முன்னேறுகிறான். எப்படியாவது அந்த ரகசியத்தைக் கண்டு பிடிக்கவேண்டும் என்பதே அவனுடைய அவா. அது என்னவாக இருக்கும்? அது எப்படி இருக்கும்? அது ஏன் அப்படி ரகசியமாக இருக்கிறது? அவற்றை தெரிந்து கொள்ளாவிட்டால் தன்னுடைய தலையே வெடித்து விடும்போல அவன் நினைக்கிறான். அதற்காகவே உன்மத்தம் பிடித்தவன் போல எழுதி எழுதிப் பார்க்கிறான்.

எழுத எழுத அவன் தேடிய அந்த ரகசியங்கள் அவனுடைய மனதுக்குள்ளேயே இருப்பதைக் காணமுடிகிறது. அவை இந்த யதார்த்த வாழ்க்கையிலிருந்து தான் உருவானவை என்பதை உணரமுடிகிறது. மானுட உண்மைகளின் ஒளிக்கீற்றுகளே அந்த ரகசியங்களென்று புரிந்து கொள்ளமுடிகிறது. ஆதிக்குகை ஓவியத்திலிருந்து இன்றுவரை கலை அதையே தன் லட்சியமாகக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

கலையின் ஆதாரம் மனித வாழ்க்கையெனும்போது கலைஞன் அந்த வாழ்வை எழுதிப்பார்க்கிறான். அவன் எழுத எழுத வாழ்க்கை அவனுக்குக் கண்ணாமூச்சி காட்டுகிறது. வாழ்க்கையை வாழ்கிற மனிதர்களின் மனப்போக்குகளை, மனம் செயல்படும் விதங்களை, மனதின் தந்திரங்களை, மனதின் குரூரங்களை, மனதின் பேரன்பை, ஆசாபாசங்களை, மனதின் இயக்கவியலை, மீண்டும் மீண்டும் வேதாளத்தைச் சுமந்த விக்கிரமாதித்தன் போல தன் படைப்புகளில் எழுதிப்பார்க்கிறான் கலைஞன். மனிதர்களைப் பற்றிய அனைத்தும் புரிந்து விட்டது போலத் தெரிகிறது. ஆனால் ஒரு கணத்தில் எல்லாம் மாறிவிடுகிறது. மனித வாழ்க்கை விசித்திரமானதாகத் தெரிகிறது. மனிதர்கள் விந்தையாகி நிற்கிறார்கள். மனிதமனம் புதிர் நிறைந்த தோட்டமாகத் தெரிகிறது. அங்கே பல அபூர்வமான, அதிசயமான உணர்வுகள் பூக்கின்றன. காரணமின்றியே பல முட்களும் பூக்கின்றன. ஏனென்று தெரியவில்லை. யதார்த்தவாழ்க்கை மனிதர்களை ஆழிப்பேரலை போலச் சுற்றிச் சுற்றி சுழட்டியடிக்கிறது. அந்தப் பேரலையில் சிக்கிய மனிதர்கள் அதன் வீச்சுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிடுகிறார்கள். கலைஞனும் அந்தப் பேரலையில் சிக்கியவன் தான். அதனால் தான் மானுடவாழ்வின் தீராத பக்கங்களை மீண்டும் மீண்டும் எழுதிப்பார்க்கிறான்.

கு. அழகிரிசாமியெனும் மகத்தான கலைஞனும் அதற்கு விதிவிலக்கல்ல. அவருடைய இளமைக்காலத்தில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியதும், வாழ்க்கை குறித்த பொருள்முதல்வாதக்கண்ணோட்டம் கொண்டிருந்ததும் மிக முக்கியமான காரணம். அதனால் தான் வாழ்வின் அத்தனை சிடுக்குகளுக்கும் காரணம் புறவயமான யதார்த்தச் சிக்கல்களும் அதன் விளைவான உளவியல் பாதிப்புகளும் தான் என்பதில் உறுதியாக இருக்கிறார் கு.அழகிரிசாமி.

மானுட உண்மைகளில் விலங்குணர்ச்சிகளான பசியும், தாகமும், காதலும், காமமும் மட்டுமல்ல மானுடம் தன்னுடைய நீண்ட பயணத்தில் உருவாக்கிய தார்மீகநெறிகளான அன்பும், பாசமும், நேசமும், சமத்துவமும், சகோதரத்துவமும், சுதந்திரமும் மிக முக்கியமான பங்கைச் செலுத்துகின்றன. அடிப்படை விலங்குணர்வுகளும் தார்மீக நெறிகளும் ஒன்றுக்கொன்று முரண்படும் மையங்களிலெல்லாம் அதைப் புரிந்து கொள்ள கலைஞன் முயற்சிக்கிறான். அப்படிப்பட்ட முயற்சிகளைச் செய்யாத எழுத்தாளர்களே கிடையாது.

ஆனால் அந்த முரண்கள் ஒரு கட்டத்தில் தெளிந்த நீரோடும் ஆற்றின் ஆழத்தை அறிய முடியாததைப் போல மயக்குகிறது. மர்மமாக இருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும் போது எளிமையானதாகத் தெரியும். சுலபமாய் அவிழ்த்துவிடும் சிடுக்கைப் போலத் தெரியும். கறாரான நாகரீக சமூகத்தின் மாறிக் கொண்டேயிருக்கும் விதிமுறைகளைக் கொண்டு தீர்க்கமுடியாத ஆழ்ந்த பிரச்னை என்று புரியும்.

கு.அழகிரிசாமியின் கதைகளில் வருகிற பெண்கள் அத்தனை எளிமையானவர்கள். அத்தனை ஆழமானவர்கள். அவர்களுடைய வாழ்க்கையிலிருந்தே அவர்கள் மீளமுடியாமல் தத்தளிக்கிறார்கள். அதற்கெல்லாம் காரணங்களாக ஆண்களே இருக்கிறார்களென்பதை அறிந்தவர்கள். இதுவரையிலும் கூட யாரும் சொல்லாத வாழ்க்கையை கு.அழகிரிசாமியின் கதைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவருடைய கதைகளை வாசிக்கும்போது கலைடாஸ்கோப்பை எத்தனை முறை திருப்பிப் பார்த்தாலும் அத்தனை முறையும் பன்முக வண்ணச்சித்திரங்களைக் காட்டுவதைப் போல பெண் கதாபாத்திரங்கள் மிளிர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.

பல கதைகளில் ஆண்களின் உலகத்தில் பார்வையாளர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் வியப்பூட்டுபவர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் அதிர்ச்சியூட்டுபவர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் இந்த சமூகத்தின் முகத்திலறைபவர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் ஏதும் செய்யவியலாதவர்களாக இருக்கிறார்கள். பெண்களைப் புரிந்து கொள்ள முடியாது, அவர்கள் மர்மமானவர்கள் என்ற தேய்வழக்குகளுக்கு மாறாக அவர்களுடைய குணாதிசயங்கள் யதார்த்தச்சூழலிலிருந்து உருவாகின்றன என்பதை கு.அழகிரிசாமி அற்புதமாகத் தன்னுடைய கதைகளில் படைத்திருக்கிறார்.

 

பொருள்வயின் துயருரும் பெண்கள்

1942 – ல் எழுதப்பட்ட வள்ளியின் வாழ்க்கை கதையில் வரும் துப்புரவுத்தொழிலாளியான வள்ளி அதிகாலையிலேயே வந்து இருபது வீடுகளுக்கும் மேலாக வாசல் தொளித்து விட்டு கல்லுடைக்கப் போக வேண்டும். தாமதமாகப் போனால் மேஸ்திரி பூணிட்ட கம்பால் அடிக்கவும் செய்வார். கையில் காயத்துடன் தன்னுடைய வேலையைச் செய்யும் வள்ளியைப் பார்த்து அனுதாபப்படும் இளைஞன் யோசிக்கிறான்.

“ பனி, வெயில், பசி, தாகம் இவற்றை உணரும் ஒரு மனித உடலை சமூகத்தின் எந்தக் கட்டளையையும் நிறைவேற்றும்படியான யந்திரம் ஆக்கிவிட்டது மனித நாகரீகம்! “ கணவன் திருட்டுப்பழியினால் சிறையிலிருக்கிறான். அவளுடைய மகன் ஒரு ஹோட்டலிலே பாத்திரம் தேய்த்துக் கொண்டிருக்கிறானென்பதை அவள் மகிழ்ச்சியுடன் சொல்கிறாள். ஏழைகள் வாழ்வதற்கு ஏதாவதொரு பற்றுக் கோடு தேவைப் படுகிறது. வள்ளி தன்னுடைய மகனைப் பற்றுக்கோடாக்கிக் கொண்டு பனியிலும் வெயிலிலும் கருமமே கண்ணாக வேலை செய்கிறாள். வள்ளியின் ஒரு நாள்க்காலைப் பொழுதை நம் கண்முன்னால் காட்சிப் படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த வள்ளிகளின் வாழ்வையே உணரச்செய்கிறார் கு.அழகிரிசாமி.

1943 – ஆம் ஆண்டு எழுதப்பட்ட பித்தளை வளையல் கதையில் வரும் கோமதியின் ஏழ்மை பொன் முலாம் பூசப்பட்ட பித்தளைவளையல்களை வாங்குவதறகு மட்டுமே அனுமதிக்கிறது. அந்தப் பித்தளை வளையலை அணிந்து கொண்டு அவள் செல்லும்  விசேஷ வீட்டில் மற்ற பணக்காரப் பெண்களால் அவமானப்படுத்தப்படுகிறாள். வறுமையின் மீதான கோபத்துடன் இருப்பவளை கணவன் சமாதானம் செய்கிறான். இந்தபொன்மேனிக்கு நிகராக எந்தப் பொன்னும் நிற்க முடியுமோ என்று காதல்வசனம் பேசிச் சமாதானம் செய்கிறான்.

யதார்த்தத்தில் இந்த வார்த்தைகளால் அவளுடைய வளையல்கள் பொன்னாக மாறப்போவதில்லையென்றாலும், வறுமையின் விளைவாக உருவான வெறுமையை இட்டு நிரப்புகின்றன அந்தச் சொற்கள். அந்த நேரத்தில் அவர்களிருவருக்கும் தேவைப்படும் சொற்களாக இருக்கின்றன. கோமதி அந்தச் சொற்களைக் கொண்டு அவளுடைய மனப்புண்ணை ஆற்றுகிறாள்.

1943 – ஆம் ஆண்டு எழுதப்பட்ட குழந்தையின் தியாகம் கதை தொடங்கும் போது முக அமைப்பினால் எப்போதும் சிரிப்பதைப் போலவே தோற்றமளிக்கும் சின்னி கணவனை இழந்து கைக்குழந்தையுடன் குமாரபுரம் பண்ணையாரின் வயலில் வேலை செய்கிறாள். காட்டு வேலைக்குப் பழக்கமில்லாத அவளுடைய உடல் நோவுகளால் குழந்தையும் நோய்வாய்ப்படுகிறான். பணம் கொடுத்த அதிகாரத்தினால் எதையும் எள்ளலும் ஏகடியுமாகப் பார்க்கும் பண்ணையார் ராமசாமிக்கு சின்னியின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டாலும் அவளாக கனிந்து வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறான். ஆனால் அவனுடைய லட்சியத்தினால் சின்னியின் குழந்தை இறந்துவிட ராமசாமி செயலற்று சின்னியைப் பயபக்தியுடன் பார்ப்பதாக்க் கதை முடிகிறது. வறுமையின் கோரத்தினால் சின்னியின் குழந்தைத் தன்னைத் தியாகம செய்து தாயின் கௌரவத்தைக் காப்பாற்றுகிறது.

1949 – ஆம் ஆண்டு எழுதிய திரிபுரம் கதை, கு.அழகிரிசாமியின் கலைச்சிகரங்களில் ஒன்றெனச் சொல்லலாம். கி.ராஜநாராயணனும், கு.அழகிரிசாமியும் அவர்களுடைய கதைகளில் பஞ்சகாலத்தைப் பற்றியும் அந்தக்காலத்தில் மனிதர்கர்கள் வாழ்ந்த அவலமான வாழ்க்கையைக் குறித்தும் எழுதிச் சென்றிருக்கிறார்கள். அழகிரிசாமியின் திரிபுரம் கதையில் பஞ்சத்தினால் புலம்பெயர்ந்து செல்லும் தாயும் மகளும் படும் துயரத்தைக் கொதிக்கும் மனதுடன் சொல்கிறது. பஞ்சமும் பசியும் பட்டினியும்  மனிதர்களை எத்தகைய இழிநிலைக்குத் தள்ளி விடுகிறதென்பதையும், மண்ணில் கிடந்த வெள்ளரிக்காய்க்காகத் தாயும் மகளும் இடும் கௌரவச்சண்டையும், பசியைப் போக்க  தன் மகளையே சோரம் போகவைக்கும் நிலையையும் மனம் பதைபதைக்கச் சொல்கிறார் கு.அழகிரிசாமி. கதை முடிவில் உரத்த குரலில் தன் கண்டனத்தையும் பதிவு செய்கிறார்.

வெங்கட்டாமாவினால் நிலை கொள்ளமுடியவில்லை. அம்மா கடையை விட்டு அப்பால் நகர்ந்ததும் அம்மாவிடமிருந்து அவ்வளவு பணத்தையும் வாங்கினாள். வலது கையிலிருந்து இடது கையில் பணத்தைப் போட்டாள்.  இடது கையிலிருந்து வலது கையில் போட்டாள். வியந்து வியந்து பார்த்தவண்ணம் பணத்தைக் கையில் போட்டுக் குலுக்கினாள். எவ்வளவு எளிதாக இவ்வளவு பெரிய தொகை கிடைத்து விட்டது என்பதை நினைக்கும்போது அவளால் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. உரக்கச் சிரித்தாள். விட்டு விட்டுப் பலமுறை சிரித்து விட்டாள். அந்தச் சிரிப்பு எதற்கு என்று அவளுக்கே புரியவில்லை. பாண்டியனிடம் சிவபிரான் வாங்கிய பொற்பிரம்படியைப் போல அவள் சிரித்த சிரிப்பு எங்கெல்லாம் பிரதிபலிக்க இருந்ததோ அவளுக்குத் தெரியாது. அவள் மனிதன் கட்டிய ஒழுக்கத்தை நோக்கிச் சிரித்தாள். ஒழுக்கக் கேட்டை நோக்கிச் சிரித்தாள். நாகரிகத்தையும் அநாகரித்தையும் பார்த்துச் சிரித்தாள். பணக்காரர்களை, ஏழைகளை, ஆண்களை, பெண்களை, பஞ்சத்தை – இப்படி எத்தனையோ அடங்கிய உலகத்தையே நோக்கிச் சிரித்தாள். இது வெங்கட்டம்மாவுக்குத் தெரியுமோ என்னவோ?

சிவன் சிரித்துத் திரிபுரத்தை எரித்தான். இவள் சிரிப்பு என்ன செய்யப் போகிறதோ? அதை இப்போது யார்தான் அறிவார்கள்? அந்தக் காலத்துப் புத்தி மான்களும் கூட ஏழை அழுத கண்ணீருக்குத்தான் வாளை உபமானமாகச் சொன்னார்களே ஒழிய ஏழை சிரித்த சிரிப்பைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவில்லையே! “

கு.அழகிரிசாமியின் கலைச்சிகரங்களில் ஒன்றான ராஜா வந்திருக்கிறார் (1950) கதையில் வரும் தாயம்மாளும் மங்கம்மாவும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகத் திகழ்கிறார்கள். மேலெல்லாம் சொறிசிரங்குடன் வரும் அனாதைச் சிறுவனைக் குளிப்பாட்டும் தாயம்மா எல்லாம் சரியாகி விடும்.. இனி எல்லாம் சரியாகி விடும்.. என்று சொல்லும் போது தாய்மையின் அன்பில் ஒளிவீசுகிறாள். அவளே அந்தச் சிறுவனுக்கு உடுத்திக் கொள்ள துணியேதுமில்லையே என்று தவிக்கும்போது மங்கம்மா

“ பாவம் அந்தத் துண்டைக் கொடு அம்மா “ என்று சொல்லும்போது உன்னதமான மானுடத்தருணத்தை கு.அழகிரிசாமி நம் கண்முன்னால் நிகழ்த்திக் காட்டுகிறார். அந்த ஏழ்மையிலும் அன்பை வரமென நமக்களித்து பாடம் போதிக்கிறார்கள் அந்த இரண்டு பெண்கள்.

1952 – ல் எழுதிய பாலம்மாள் கதையில் தாங்கை ஆசையாய் வாங்கிக் கொடுத்த புஷ்பராகக் கம்மலை குடும்பத்தின் தேவைக்காக மீண்டும் மீண்டும் அடகு வைத்து மீண்டும் மீண்டும் மீட்டு கடைசியில் அவளுக்கு வயதான பிறகு அவற்றைக் காதில் போடுகிற வாய்ப்பு கிடைக்கிறது. பாலம்மாள் போட்டுக் கொண்டாலும் ஊர் அவள் காதுபடவே,

“ கிழவிக்கு ஆசையைப் பார்த்தாயா? பாட்டி. நல்ல வாலிப மாப்பிள்ளை ஒருவன் இருக்கிறான். கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா? “

என்று பேசுகிறார்கள். காலங்கடந்த அவளுடைய ஆசை நிராசையாகவே போய் விட்டது. வறுமையினால் கையில் கிடைத்த கம்மல்களும் கூட அவளைக் கேலி பேசுகின்றன. அந்தக் கம்மல்கள் வாழ்வில் அவள் பலவற்றையும் குறியீடாகச் சொல்வதாகவும் வாசிக்கமுடியும்.

இப்படி யதார்த்த வாழ்வெனும் தீராத கடலலைகளில் சிக்கித் தவித்து அல்லலுறும் பெண்களின் சித்திரங்களை அற்புதமாகப் படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி.

 

பெண்மனக்கடலில் ஒயாது வீசும் அலைச்சித்திரங்கள்

மிகுந்த கூருணர்வு மிக்கவர்கள் பெண்கள். அவர்களுடைய தியாகம், அன்பு, கருணை, இரக்கம், வலி, வேதனை, துன்பம், துயரம் ஆகியவற்றாலேயே இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆண்களின் சட்டங்களுக்கும், தர்மநியாயங்களுக்கும் இன்றுவரை தங்களைப் பலி கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். பெண்களின் உணர்வுகளையும், வாழ்க்கையையும் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று ஆண்களே தீர்மானிக்கிறார்கள். அவற்றின்படி நடக்க பெண்களை நிர்ப்பந்திக்கிறார்கள். பெண்ணை பத்தினியாகவும், பரத்தையாகவும் ஆணே மாற்றுகிறான். பெண்களுக்கென்று தனியே உணர்வுகள், ஆசைகள், காதல், காமம், இல்லையா என்று கேட்டால் பெண்கள் பதில் சொல்வதில்லை. அந்தக் கேள்வியை மர்மமான புன்னகையுடன் கடந்து செல்கிறார்கள்.

மர்மமான அந்தப் புன்னகைதான் எழுத்தாளனை வசீகரிக்கிறது. அவன் அந்தப் புன்னகையில் இருக்கும் மர்மத்தைக் கண்டு பயப்படுகிறான். மகிழ்ச்சியடைகிறான். உவகை கொள்கிறான். அந்த மர்மத்தைக் கட்டுடைக்க அவரகளிடமே இறைஞ்சுகிறான். அதனால் தான் மகத்தான படைப்பாளிகளான டால்ஸ்டாய் கிரெய்ஸர் சோனட்டாவை  எழுதுகிறார். தாஸ்தயேவ்ஸ்கி வெண்ணிற இரவுகளை எழுதுகிறார். சிங்கிஸ் ஐத்மாத்தவ் ஜமீலாவை எழுதுகிறார். செகாவ் டார்லிங்கை எழுதுகிறார். அலெக்சாந்தர் குப்ரின் மாணிக்கக்கங்கணத்தை எழுதுகிறார். துர்கனேவ் ஆஸ்யாவை எழுதுகிறார். மாணிக் பந்தோபாதயாயா நீலகண்டபறவையை எழுதுகிறார். கு.ப.ரா, சிறிது வெளிச்சத்தையும், ஆற்றாமையையும் எழுதுகிறார். தி.ஜானகிராமனும் மோகமுள்ளையும் மரப்பசுவையும், அம்மா வந்தாளையும், செம்பருத்தியையும் எழுதுகிறார். இவர்கள் மட்டுமல்ல இவர்களைப் போல எண்ணற்ற எழுத்தாளர்கள் இன்றும் பெண்களின் அந்த மர்மமான புன்னகைக்குப் பின்னால் ஊர்வலமாகப் போய்க் கொண்டேயிருக்கிறார்கள்.

கு.அழகிரிசாமியும் காலத்தால் அழியாத பெண்களைப் படைத்திருக்கிறார். அழகிரிசாமியின் பெண்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

ஏழ்மையின் காரணமாகத் தியாகம் என்னும் இருள்பள்ளத்துக்குள் தள்ளிவிடப்பட்டவர்கள், தன்னுடைய அறியாமையினால் தன் வாழ்க்கையை இழந்தவர்கள், ஆண்களின் செயல்களுக்குப் பார்வையாளர்களாக இருப்பவர்கள், அன்பும் கருணையும் உருவானவர்கள் என்று சொல்லலாம்.

1942 – ல் எழுதப்பட்ட இரவு கதையில் நண்பனின் அழகற்ற மனைவியுடன் த்ற்செயலாகத் தனியே இருக்கும் கதைநாயகனுக்கு இரவில் மட்டுமே மனவிகாரம் தோன்றுவதும் அது குறித்த விசாரமும் தான்.  கதை எதைப் பற்றிப் பேசப்போகிறதென்பதை கதையின் முதல் வரியிலேயே சொல்லிவிடுகிறார் ஆசிரியர்.

சாயங்கால நேரம். பனிரெண்டு மணி நேரம் காத்திருந்த பகல்செல்வன் இரவுப் பெண்ணைத் தழுவி ஐக்கியமாகும் வேளை. என்ன வேண்டியிருக்கிறது. காதலாம் தழுவலாம். பகல் செல்வனுக்கு வெறி பிடித்ததும் சரி. இரவுப்பெண் இருட்டில் வந்ததும் சரி. இல்லாவிட்டால் தன்னுடைய அழகுக்கு அவன் அந்த இரவுப்பெண்னின் அவலஷ்ணத்தைப் பட்டப்பகலில் வெட்ட வெளிச்சத்தில் பார்த்திருந்தால் அவளைத் தழுவ இசைந்திருப்பானா? 

கதையில் இரவும் ஒரு கதாபாத்திரமாக வருகிறஹு. இந்தக் கதை முழுவதும் பெண்ணைச் சுற்றியே நடந்தாலும் அவள் ஒரு பார்வையாளராகவே இருக்கிறார். அவருடைய உணர்வுகளைப் பற்றியோ, கணவனின் செயல் மீதான எதிர்வினையோ எங்கும் பதிவாகவில்லை. கதை முடிந்த பின்னும் அந்தப் பெண் கதாபாத்திரம் இன்னொரு கதையை நமக்குச் சொல்கிறார்.

1942 –ல் எழுதிய வனஜம் கதையில் வயதுக்கு வராத பதினான்கு வயது சிறுமியிடம் காதல்வயப்பட்ட ஆணைப் பற்றிய கதையாக இருந்தாலும் கதை நெடுக வனஜமே ஆக்கிரமிக்கிறாள். வனஜத்தின்  வெகுளித்தனமும், பாலீர்ப்பற்ற உரையாடல்களும் ஆணைக் குழப்புகினறன. சிறுமியாக இருந்த வனஜம் ஒரு கணத்தில் பெரிய பெண்ணாக மாறுகிற தருணத்தை அற்புதமாகப் படம் பிடித்திருப்பார் கு.அழகிரிசாமி. அதுவரை இருந்த கள்ளங்கபடற்ற அந்தக் குழந்தை மனதில் கல் விழுந்து விட்டது. பதட்டத்துடன் போங்கள் போங்கள் என்று விரட்டுகிறாள். இனி என் பக்கத்தில் நீங்கள் வரக்கூடாது என்று பெரிய மனுஷியாகப் பேசுகிறாள். நுட்பமான உணர்வு மாற்றத்தைச் சித்தரிக்கும் இந்தக் கதையைப் போல வேறொரு கதை தமிழில் வந்திருக்கிறதாவென்று தெரியவில்லை.

1948 – ல் எழுதிய சிரிக்கவில்லை கதை கு.அழகிரிசாமியின் கலையின் மிக முக்கியமான கல்வெட்டு என்றுச் சொல்லலாம். ராஜாராமன் மீதான ஆர்வத்தாலும் பாலீர்ப்பு என்று அறியாமலும் வருகிற வெகுளியான பாப்பம்மாள் ராஜாராமனைப் பார்ப்பதற்காகவே சுற்றிச் சுற்றி வருகிறாள். ஒருமுறை ராஜாராமனிடம் முத்தமும் பெறுகிறாள். ஆனால் அதை அவள் விகல்பமில்லாமல் ஏற்றுக் கொள்கிறாள்.

“ ராஜாரமனுக்கு முத்தத்தில் சுகானுபவம் பொதிந்திருந்தது. பாப்பம்மாளுக்கோ முத்தம் குஷியாகத் தான் இருந்தது. அவளைப் பொறுத்த மட்டிலும் முத்தத்திற்காகத்தான் முத்தம். வேறு எதற்காகவும் அல்ல! “

ராஜாராமன் வேறொரு பெண்ணுடன் திருமணம் முடித்து வரும்போதும் அதே வெகுளித்தனத்துடன் வளைய வளைய வருகிறாள். ஆனால் ராஜாராமனுக்குக் குழனந்தை பிறந்ததும் தான் அவளுக்கு யதார்த்தம் புரிகிறது. ராஜாராமனைப் போலவே இருந்த குழந்தை அவளுடைய ஏதோ ஒரு நம்பிக்கையை அடியோடு சாய்த்து விட்டது. இனி ராஜாராமன் அவனுடைய மனைவிக்கு மட்டுமே சொந்தம் என்பதைக் குழந்தை ஒவ்வொரு கணமும் சிரித்துச் சிரித்து நிரூபித்தது.

அவள் யாருடனும் பேசாமல் அழத் தொடங்குகிறாள். கு.அழகிரிசாமி கதையை இப்படி முடிக்கிறார்,

“ அவளுடைய மானசீகப்பற்றுவரவுக் கணக்கி. ஒரு பெரிய தப்பு விழுந்து விட்டது. பற்று வரவுக் கலங்களில் வரவு வைக்கவேண்டியதைப் பற்று என்றோ, பற்று எழுத வேண்டியதை வரவு என்றோ பதிவு செய்து விட்டாள். கணக்குப் பார்த்தால் மாறி மாறித் தப்பு விழுந்து கொண்டிருந்தது. “

பாப்பம்மாளின் உளவியல் மாற்றம் குறித்தோ, மனதில் என்ன நிகழ்ந்ததென்றோ வாசகர் அறியமுடியாத புதிராக முடித்து பெண் மனம் மர்மமானது. கடலை விட ஆழமானது. என்றெல்லாம் கதை விடவில்லை கு.அழகிரிசாமி.

பாப்பம்மாளின் உளவியல் மாற்றத்தை  நடைமுறை வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கிறார். வாசகருக்குத் தெளிவாகத் தெரிவிக்கவிரும்புகிறார். எனவே தான் பற்றுவரவுக்கணக்காகத் தருகிறார். கு.அழகிரிசாமியின் வாழ்க்கைப்பார்வையை இதிலிருந்து அறிந்து கொள்ள முடியுமென்பது சிறப்பு. 

1949 – ஆம் ஆண்டு எழுதிய திரிபுரம் கதையில் வரும் தாயும் மகளும் அதுவரை தமிழ்ச்சிறுகதைகளில் சித்தரிக்கபடாத கதாபாத்திரங்கள். பசியும் வறுமையும் மனிதர்களின் மாண்புகளையும் மனித உறவுகளையும் கீழ்மையானதாக மாற்றிவிடுவதைப் நம் மனம் பதைபதைக்கச் சொல்கிறார் கு.அழகிரிசாமி. கீழே மண்ணில் கிடந்த வெள்ளரிக்காயை எடுத்து அது என்ன காய் என்று கேட்பதிலுள்ள பாசாங்கைக் கண்டு மகள் தாயுடன் சண்டையிட்டு இருவரும் ரத்தம் வர பிறாண்டிக் கொள்கிறார்கள். ஆனாலும் மனம் ஆறாத தாய் பின்னர் வந்து காலில் மிதிபட்டு மேலும் நசுங்கியிருந்த அந்த வெள்ளரிக்காயைத் தின்கிறாள்.

“ வெள்ளரிக்காயை ஊதினாள். கடைசியில் தின்றே விட்டாள். ஒரு மட்டும் அவளுக்கு நிம்மதி பிறந்தது. ஏதோ இனி யுகக்கணக்கில் பசியில்லாமல் இருக்கலாம் போல அவளுக்குத் தோன்றியது.. சந்தோஷத்துடன் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டாள். “

யுகக்கணக்கில் பசியில்லாமல் இருக்கலாம் என்ற வரிகளில் அந்தக் கதாபாத்திரத்தித்தின் மனதை அப்படியே தருகிற கு.அழகிரிசாமி அதற்கடுத்த பத்தியிலேயே யதார்த்த நிலைமையை அவளுக்குப் புரிய வைக்கிறார்.  அவர்களிருவரும் சண்டையிடுவதும் பின்னர் குரூரமான யதார்த்தத்துக்கு முன்னால் மண்டியிட நேர்வதையும் கலையழகுடன் காட்சிப்படுத்துவதில் கு.அழகிரிசாமி மிளிர்கிறார்.

1952 – க்கு முன் எழுதிய் கதையில் வரும் ராஜம் சின்னஞ்சிறு பெண். அவளைக் குழந்தைப் பேற்றை நோக்கித் தள்ளிவிட்ட குற்றவுணர்ச்சியில் தவிக்கும் கணவனைத் தன் ஒற்றைச் செய்கையால் தான் இன்னும் குழந்தையல்ல என்பதை உணர்த்துகிற பெண்ணைக் காட்டுகிறார். பெண்கள் எந்தக் கணத்தில் பெரிய மனுஷிகளாக மாறுகிறார்களென்பதை எழுதிப்பார்க்கிறார் கு.அழகிரிசாமி.

1952 – க்கு முன் எழுதிய காதல்போட்டி கதையில் பூனை எலியாகவும் எலி பூனையாகவும் மாறி மாறி ஒருவரையொருவர் வெறுத்தும் விரும்பியும் நெருங்கியும் விலகியும் நாடகத்தை அழகாக எழுதியுள்ள கு.அழகிரிசாமி. இருவரின் அன்புக்குமிடையில் நிலவுகிற ஈகோ போட்டியையும் அதன் விளைவாக ஏற்படுகிற அனர்த்தத்தையும் விரிவாகச் சொல்லிச் செல்கிறார். கடைசியில் இருவருமே அந்தப் போட்டியில் தோற்றுப் போகிறார்கள். இறுதி வரிகளில்

“ பாமா திரும்பிப் பார்த்தாள்.

ராகவனுடைய கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

பாமாவுக்கோ உடம்பு முழுவதுமே நடுங்கியது. “

என்று கவித்துவத்துடன் முடித்திருப்பார் கு.அழகிரிசாமி. இப்படி பெண்ணின் எண்ணவோட்டங்களை அழகின் விலை கதையிலும் சித்தரித்திருப்பார் கு.அழகிரிசாமி. காலகண்டி கதையில் வருகிற கிழவி நாடகத்தில் காலகண்டியாக நடிக்கிற தன் மகனைப் பற்றி சுற்றிலுமிருக்கிற பெண்கள் சாபமிடும் போதெல்லாம் கோபமும் ஆங்காரமும் கொள்கிறாள். ஆனால் எதுவும் பேசாமல் ஒவ்வொரு பெண் பேசும்போதும் அந்தத் திசை நோக்கி ஆக்ரோஷத்துடன் வெறித்துப் பார்த்து வாயை மென்று கொண்டேயிருக்கிறாள். உச்சகட்டத்திம் தாளமுடியாத கிழவி அந்தப் பெண்களுடன் சண்டையிட்டு புழுதியில் புரள்கிறாள். மகன் மீதுள்ள பாசம் அவளை ஆங்காரம் கொள்ள வைத்ததென்றாலும், காலகண்டியாக நடித்த நடிகரின் தத்ரூபமான கலைத்திறனே அப்படி பேச வைத்ததென்பதையும் சொல்லிச்செல்கிறார். தாயின் பாசம் கொஞ்சம் கொஞ்சமாக வெறியாக மாறுவதைச் சொல்லும்போது அழகிரிசாமியின் கலை உச்சத்துக்குப் போகிறது. கலைக்கும் யதார்த்தக்குமான போராட்டமென குறியீட்டு வடிவமும் கொள்கிறது.

1952 – முன் எழுதிய அழகம்மாள் கதை கு.அழகிரிசாமியின் கதைகளின் உச்சம் என்று சொல்லலாம். மூன்று கதாபாத்திரங்களின் மனப்போராட்டங்களே கதை. அத்தனை மனப்போராட்டங்களும் அழகம்மாளைச் சுற்றியே நடக்கின்றன. கிருஷ்ணக்கோனாரின் மீதான பரிவுடன் அவரைக் கவனித்துக் கொண்டிருக்கிற அழகம்மாள் மகன் கோபால் வந்ததும் முற்றிலும் வேறொரு பெண்ணாக மாறிவிடுகிறாள். தியாகம் என்ற பெயரில் தான் இழந்தை வாழ்க்கையை எப்படியாவது மீட்டெடுக்க அலைபாய்கிறாள். விதவிதமான சேலைகள், அலங்கராம் என்று மற்றவர்களின் சிரிப்பதையும் பொருட்படுத்தாமல் அலைந்து திரிகிறாள். கோபாலுக்கு சங்கடமாக இருக்கிறது. நாசூக்காகச் சொல்லியும் காட்டுகிறான். தன் சொந்த மகனாக இருந்தாலும் கோபால் வந்து விட்டால் கிருஷ்ணக்கோனார் புழுவாய்த்துடிக்கிறார். அழகம்மாள் அத்தனை வன்மத்துடன் அவரிடம் நடந்து கொள்கிறாள். நகரத்தில் படித்துக் கொண்டிருக்கிற மகனைத் தேடி வருகிற பெரியவர்கள், பண்ணையார்களைப் பார்த்து அவளுக்குத் தன்னை மகனின் கௌரவத்துக்கு ஈடாக மாற்றும் எண்ணமோ, கழிந்த வாழ்க்கையின் கசப்புத்துளிகளின் சுவையை இனிப்பாக மாற்றுகிற முயற்சிகளையோ செய்து பார்க்கிறாள். அதன் உச்சமாகத்தான் ஒரு சேலை விவகாரத்தில் அவள் வெடித்துச் சிதறுகிறாள்.

சேனைத்தனத்தோட – உன்னை

சேர்ந்திருக்கக் கிட்டலையே

என்று ஒப்பாரி வைக்கிறாள் அழகம்மாள். பயந்து போன கோபால் கதவைத்தட்டி அழைக்கிறான். அம்மா கதவைத் திறந்ததும் அம்மா அம்மா என்னம்மா? என்று கேட்கும்போது பத்து வருடங்களுக்கு முன்னால் இறந்து போன அப்பாவை நினைத்து அழுவதாகச் சொல்கிறாள். அவள் உண்ஐயைச் சொல்லவில்லை என்று கோபாலுக்கும் தெரியும். வெளியே அப்பாவும் கேவிக் கேவி அழுது கொண்டிருக்கிறார்.

மூன்று பேரும் சேர்ந்து மூன்று பேருக்கும் தெரிந்த ஒன்றை ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் மறைத்தார்கள். மறைந்து நிற்கும் ரகசியம் மூன்று பேரின் பேச்சுக்கு நடுவிலே வந்து முள்ளைப் போலக் குத்திக் கொண்டிருந்தது.

தமிழ்ச்சிறுகதைகளில் அழகம்மாளுக்கு இணையாக இன்னொரு கதை இன்னமும் எழுதப்படவில்லை. கு.அழகிரிசாமியின் கலை மேதைமை ஒளிரும் சிகரம் என்று அழகம்மாள் கதையைச் சொல்லலாம்.

முடிவுரை

கு.அழகிரிசாமியின் கதைகளில் வரும் கிராமத்துப் பெண்கள் துயர் மிக்க தங்களுடைய வாழ்க்கையினால் அல்லலுற்றாலும் தங்கள் அடையாளத்தை இழக்காதவர்கள். வறுமையால் வாடினாலும் கருணை மிக்கவர்கள். கணவனால் கைவிடப்பட்டாலும் தொடர்ந்து போராடுபவர்கள். ஆண்களின் அசட்டுத்தனத்தைப் பார்த்துச் சிரித்தபடியே பெரிய மனுஷி போல பெருந்தன்மையுடன் ஆண்களை அரவணைத்துக் கொள்பவர்கள். காலங்கடந்த தங்கள் ஆசையைக் குழி தோண்டி புதைத்துவிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்பவர்கள். வாழ்க்கையில் நாம் அன்றாடம் பார்க்கும் சாதாரணப்பெண்கள் தான். ஆனால் குழகிரிசாமியின் கலைமேதைமையொளியால் அவர்கள் அசாதாரணமான பெண்களாக மாறுகிறார்கள்.

மனிதவாழ்வை மேன்மைப் படுத்துவதே கலையின் லட்சியம் என்று கொண்டோமானால் கு.அழகிரிசாமியின் கதைகளில் வரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நம்முடைய வாழ்க்கையின் அர்த்தங்களை மேலும் ஒளி கூட்டுகிறார்கள்.

கு.அழகிரிசாமியின் கதைகள் தோற்றத்துக்கு எளிமையாகத் தோன்றினாலும் அந்த எளிமைக்குப் பின்னாலிருக்கும் ஆழம் நமக்குள் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் உள்ளேயிழுத்துக் கொண்டேயிருக்கும். தமிழ்ச்சிறுகதைகளில் தனக்கென தனித்துவமான பாணியைக் கைக்கொண்ட கு.அழகிரிசாமியின் கதைகள் என்றென்றும் வாசிக்க வாசிக்கப் புதுமையாகத் திகழ்பவை. காலங்களைக் கடந்தும் நம்முடன் அவை உரையாடிக் கொண்டேயிருக்கும்.

நன்றி - புக் டே

 

 

 

Saturday, 15 February 2025

கல்லின் கதை

 

கல்லின் கதை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



ஒரு நாள் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் விளையாட வரவில்லை. நாய்க்குட்டி காட்டில் குள்ளநரி வீட்டுக்கு விருந்துக்குப் போய் விட்டது. குள்ளநரியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.

பூனைக்குட்டிக்கு பாலும் சோறும் சாப்பிட்டு சலித்துவிட்டது. அதனால் ஏதாவது மாமிசம் சாப்பிட வேண்டுமென்ற ஆசையில் எலியைப் பிடிக்கப் போயிருந்தது.

சின்னுவுக்கும் போரடித்தது. தட்டாங்கல் விளையாடலாம் என்று கற்களைப் பொறுக்கினாள். ஒரு கல் நல்ல முல்லைப்பூ மணம் வீசியது. சின்னு அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு கதைப்ப்பாட்டியிடம் போனாள்.

கதைப் பாட்டி கதைப்பாட்டி..இந்தக் கல்லுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு மணம்.. முல்லைப்பூ மணம் வீசுது? “ என்று கேட்டாள்.

கதைப்பாட்டி சொன்னாள்,

“ சின்னுக்குட்டி.. இவ்வளவு நாளும் இந்தக் கல் முல்லைப்பூச் செடிக்குக் கீழே கிடந்தது.. முல்லைப்பூக்கள் பூத்து கீழே உதிரும்போது இந்தக் கல்லின் மீது விழுந்து மூடிக் கொள்ளும்.. அதனால் தான் முல்லைப் பூ மணம் கல்லில் வீசுகிறது..”

“ முல்லைப் பூ மணத்துடன் கிடக்கும்

கல்லுக்கும் கிடைக்கும் புகழ்மாலை “

என்று கதைப்பாட்டி பாடினாள்.

“ என்ன அர்த்தம் ? “ என்று சின்னு கேட்டாள்.

“ நல்ல மனிதர்களுடன் நட்பாக இருந்தால் நாமும் நல்லவர்களாக இருப்போம் என்று அர்த்தம். அதனால் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..தெரிஞ்சுதா? “ என்று கதைப்பாட்டி சொன்னாள்.

நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

 

7.

Friday, 14 February 2025

காக்காவின் தீர்ப்பு

 

காக்காவின் தீர்ப்பு

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



ஒரு நாள் பூனையும் நாயும் சண்டை போட்டன. பூனை ஆற்றில் முகம் பார்த்தது. தன் உடலெங்கும் நாக்கினால் நக்கி சுத்தப்படுத்தியது.

“ என்ன் ஒரு அழகு! பார்த்தியா..நீண்ட கண்கள், இளம் பழுப்பு நிறத்தில் தோல்ச்சட்டை, பெரிய வால், மென்மையான கைகளும் கால்களும், நடக்கும்போது சத்தமே கேட்காது. நான் ஞீம்ம் ஞீம்ம் என்று சிணுங்கினாலும் சரி உறுமினாலும் கேட்பவர்கள் மயங்கி விடுவார்கள் “

ஆற்றங்கரையில் படுத்திருந்த நாய்க்குட்டி அதைக் கேட்டது. அதுக்குக் கோபம் வந்தது. உடனே எழுந்து ஆற்றுக்குள் குதித்துக் குளித்தது. வெளியே வந்து உடலை உதறிக் கொண்டே பூனைக்குட்டிக்கு முன்னால் வந்து நின்றது.

“ உன்னோட நீண்ட கண்களையும் பெரிய வாலையும் வைத்து என்ன பயன்? என்னுடைய எஜமானன் என்னைப் பார்க்காமல் ஒரு நாளும் உறங்கவே மாட்டார். சின்னு அக்காவிடம் கேட்டுப்பார்..அப்போது தெரியும் உனக்கு..என்னுடைய மடங்கிய காதுகளையும் பழுப்பு நிறக்கண்களையும் பாரு..”

என்று சொன்ன நாய்க்குட்டி இரண்டு கால்களிலும் நின்று கொண்டு சவால் விடுத்தது. வாக்குவாதம் முற்றி ரகளையாகிப் போனது. இரண்டும் அடிபிடி நடத்தி மண்டையை உடைத்துக் கொள்வார்கள் என்ற நிலை வந்தது.

அப்போது கசுமலா காக்கா தலையிட்டது.

“ ஹேய்.. ஹேய்.. நண்பர்களே! உங்களுக்குள் அடித்துக் கொண்டு சாகப்போகிறீர்களா? “

என்று சொன்னது. நாய்க்குட்டி,

“ அப்படி என்றால் நீ சொல்லு.. எங்கள் இருவரில் யார் அழகு? “

என்று கேட்டது.

“ ஆமாம் சொல்லு..இன்னிக்கு முடிவு தெரிஞ்சாகணும் நான் இல்லை என்று நீ சொன்னே அவ்வளவு தான் உன்னை ஒரு வழி பண்ணிருவேன்..” என்று பூனைக்குட்டியும் முதுகை வளைத்துத் தூக்கிக் கொண்டு சவால் விட்டு கேட்டது.

கசுமலா காக்காவின் நிலைமை சிக்கலாகி விட்டது.

நாய்க்குட்டி எதுவும் பேசவில்லை. ஆனால் பல்லைக்காட்டிக் கொண்டு நின்றது. உறுமவும் செய்தது. என்ன செய்வது? நாய்க்குட்டி தட்டில் மிச்சம் வைக்கிற சோறைச் சாப்பிட்டுச் சுத்தம் செய்வது கசுமலா காக்கா தான். வயிறு நிறைய நாய்க்குட்டிக் கொடுக்கும். பூனைக்குட்டியை நம்ப முடியாது. சத்தமில்லாமல் பின்னால் வந்து தாவிப் பிடிப்பதில் பலே கில்லாடி.

முடிவில், கசுமலா காக்கா தன்னுடைய தொண்டையைச் சரி செய்து கொண்டு இப்படிச் சொன்னது,

“ நண்பர்களே! இந்த அழகு.. அழகுன்னு சொல்வதில் பெரிய அர்த்தம் இல்லை.. உண்மையான அழகு நீண்ட கண்களிலோ, மடங்கிக் கிடக்கிறக் காதுகளிலோ இல்லை..”

“ பிறகு..”

நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஒன்றுபோலக் கேட்டார்கள். அப்போது கசுமலா காக்கா என்ன சொன்னது தெரியுமா? ,

“ உண்மையான அழகு இதயத்தில் இருக்கிறது.. அப்படிப் பார்த்தால் சின்னு தான் மிக மிக அழகு.. சின்னுவின் இதயத்தின் அழகு தான் அவளுடைய கண்களில் தெரிகிற கவர்ச்சி..”

அதைக் கேட்ட நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஏற்றுக் கொண்டார்கள். உடனே அவர்கள் இரண்டு பேரும் சின்னுவைத் தேடி ஓடினார்கள்.

நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

Thursday, 13 February 2025

முயலும் ஆமையும்

 

முயலும் ஆமையும்

உதயசங்கர்



காட்டுக்குள்ளே ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தில் ஒரு வயதான ஆமை வாழ்ந்தது. மிகவும் வயதான ஆமை. ஆமை எவ்வளவு காலம் வாழும் தெரியுமா? நூற்றைம்பது வயது வரை வாழும். சில சமயம் குளத்திலிருந்து வெளியேறி மெல்ல மெல்ல நடந்து ஆற்றங்கரைக்குப் போகும். சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் குளிக்கிற இடத்துக்கு வரும். வெயிலில் காய்ந்து கொண்டே விளையாட்டை ரசிக்கும். கதைப்பாட்டியிடம் உலக நடப்புகளைப் பேசும்.

காட்டுக்குள்ளே ஒரு குட்டி முயல் இருந்தது. அதுவும் இடையில் குதித்து ஓடும். ஒரு நாள் சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆமை வந்தது. சற்று நேரத்தில் குட்டி முயலும் வந்தது. ஆமை கேட்டது.

“ இது யாரு? பார்த்தால் தாடிக்காரரைப் போல இருக்கு..”

குட்டி முயல் சொன்னது,

“ ஆமை மாமா தானே.. பந்தயம் நடந்த கதை எனக்குத் தெரியும்..”

“ போடா சின்னப்பயலே! உன்னுடைய முப்பாட்டனுடன் ஓடி வெற்றி பெற்றவனாக்கும்.இப்போது நூறாவது வயதிலும் நான் உன்னைத் தோற்கடிப்பேன்...”

என்று ஆமை சொன்னது. அதைக் கேட்ட குட்டி முயல் உறுதியுடன் சொன்னது,

“ சரி.. பந்தயம் வைத்துக் கொள்வோம்.. என்னுடைய முப்பாட்டனின் தோல்விக்குப் பதில் சொல்லிவிட்டு மறுவேலை பார்க்கிறேன்.. இப்போதும் உலகம் முழுவதும் குழந்தைகள் என்னுடைய முப்பாட்டன் தோற்றதைச் சொல்லிச் சிரிக்கிறார்கள் இல்லையா? அதை இன்றுடன் தீர்த்து வைக்கிறேன்..”

ஓட்டப்பந்தயத்துக்கு இரண்டு பேரும் தயாரானார்கள். வயதான ஆமை பயத்துடன் எல்லாரையும் பார்த்தது. பூனைக்கு குட்டி முயலின் நிறமும், பேச்சும் பிடிக்கவில்லை. பூனை ஆமையிடம் சொன்னது,

“ நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் அங்கே போய்ச் சேரும்போது இவன் வாலைக் கடித்தபடி தொங்கினால் போதும் மற்றது எல்லாம் தானாக நடக்கும்..”

இரண்டு பேரும் தயாரானதைப் பார்த்த கதைப்பாட்டி மூட்டையிலிருந்து ஒரு விசிலை எடுத்து ஊதினாள். வேக வேகமாக முன்னால் ஓடிய குட்டி முயலின் பின்னாலேயே ஓடிய ஆமை குட்டி முயலின் வாலைக் கடித்தபடி தொங்கியது. முக்கால்வாசி தூரம் கடந்த பிறகும் ஆமையின் பிடியிலிருந்து விடுவிக்க முடியவில்லை. வேகமாக வாலைச் சுழற்றியது. காற்றில் ஆமை குட்டிக்கரணம் போட்டுக் கொண்டே எல்லைக்கோட்டைத் தாண்டி விழுந்தது.

சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும்

“ ஹிபிப் ஹிபிப் ஹூர்ரே..” என்று ஆரவாரம் செய்தபடி ஓடினார்கள்.

முயல் அதே வேகத்தில் காட்டுக்குள் ஓடிப் போய் விட்டது.


நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

 

Tuesday, 11 February 2025

சின்னுவும் சிங்கமும்

 சின்னுவும் சிங்கமும்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்




சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஆலமரத்தடியில் விளையாடுவார்கள். அந்த ஆலமரத்திற்குச் சற்று தூரத்தில் ஒரு ஆறு ஓடுகிறது.  ஆறு ஓடுகிற சத்தம் கேட்டுக்கொண்டே கதைப்பாட்டியின் மடியில் தலை வைத்து சின்னு படுத்திருப்பாள். அவளுடைய காலில் தலை வைத்து நாய்க்குட்டி படுத்திருக்கும். நாய்க்குட்டியில் வயிற்றில் தலை வைத்து பூனைக்குட்டி படுத்திருக்கும். ஆற்றின் பாடலைக் கேட்டுக் கொண்டே மூன்று பேரும் உறங்குவார்கள்.

அவர்கள் ஆற்றை ஆறம்மா என்று அழைப்பார்கள். ஆறம்மாவின் கரையில் போய் விளையாடலாமா? என்று கேட்டாள் சின்னு. நாய்க்குட்டி பௌ என்றது. பூனைக்குட்டி மியாவ் என்றது. ஆற்றின் அக்கரையில் ஒரு பெரிய காடு இருந்தது. பெரிய பெரிய மரங்கள் நிறைந்த இருண்ட காடு.

ஒரு நாள் ஆறம்மாவின் கரையில் மூன்று பேரும் பாட்டுப்பாடி ஆடிக் கொண்டிருந்தார்கள். சின்னு ஆ ஆ ஆ ஆ என்று பாடினாள். நாய்க்குட்டி பௌ பௌ பௌ என்றும் பூனைக்குட்டி மியாய் மியாவ் மியாவ் என்றும் பாடி ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

“ ஹேய்.. நிறுத்து..” என்று ஒரு கர்ச்சனை ஆற்றின் அக்கரையில் இருந்து கேட்டது.  மூன்று பேரும் துள்ளிக்குதித்து பார்த்தால் மறுகரையில் ஒரு சிங்கம். காட்டுக்குள் இருந்து வந்த வயதான சிங்கம் ஆற்றில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. தண்ணீரைக் குடித்தபிறகு அந்த வயதான சிங்கம், சிரித்துக்கொண்டே,

“ யார் நீங்கள்? “ என்று கேட்டது. நாய்க்குட்டி வாலை கால்களுக்கு அடியில் வைத்துக் கொண்டு சின்னுவின் பின்னால் ஒளிந்து கொண்டது. பூனைக்குட்டி நாய்க்குட்டியின் பின்னால் ஒளிந்தது.

“ நாங்கள் இங்கே தண்ணீர் குடிக்க வந்தோம்..” என்று சின்னு சொன்னாள்.

“ நீங்கள் இந்தப்பக்கம் காட்டுக்குள் வாருங்கள்.. நானும் விளையாட வாரேன்..”

என்று சிங்கம் சொன்னது.

” வேண்டாம் வேண்டாம்.. உப்பும் மிளகும் சேர்த்து எங்களைத் தின்பதற்கா? “ என்றாள் சின்னு. வயதான சிங்கம் சிரித்தது. பிறகு கேட்டது,

“ யாரு சொன்னார்கள்..”

“” இந்த ஆற்றைக் கலக்கியது நீ இல்லாமல் இருக்கலாம்.. உன்னுடைய தாத்தா கலக்கினார் என்று சொல்லி ஆட்டினைக் கொன்று தின்ற கதை எங்களுக்குத் தெரியும்..அங்கிருந்தே பேசினால் போதும்..”

 என்று சொன்னது பூனைக்குட்டி.

“ இந்தக் கதை எல்லாம் உங்களுக்குச் சொன்னது யார்? “

“ கதைப் பாட்டி..” என்று மூன்று பேரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

சிங்கத்தின் முகம் சிவந்து விட்டது. மீசை முடி சிலிர்த்தது.

“ உங்களுடைய கதைப்பாட்டியினால் ஒரு விலங்கையும் வேட்டையாடிச் சாப்பிட முடியவில்லை..” என்று சொல்லிக்கொண்டே மெல்ல மெல்ல காட்டுக்குள் சென்றது. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கசுமலா காக்கா பறந்து சென்று சிங்கத்தின் தலையில் ஒரு கொத்து கொத்தியது

நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

Monday, 10 February 2025

காக்கா கொண்டு போச்சு!

 

காக்கா கொண்டு போச்சு!

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



ஓரு ஊரில் ஒரு பாட்டி இருந்தாள். கதை சொல்கிற பாட்டி. கதை கேட்கிற குழந்தைகள் அவரை கதைப்பாட்டி என்று அழைத்தார்கள். கதைப்பாட்டியின் கையில் ஒரு மூட்டை உண்டு. அதற்குள் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. கதைப்பாட்டியிடம் குழந்தைகள் கேட்கும்போது அந்த மூட்டையில் நிறைய கதைகள் இருக்கின்றன என்று சொல்வாள். உண்மையாகத்தான் இருக்க வேண்டும். அந்த மூட்டையில் ஒரு ஆரஞ்சுப்பழத்தைப் போட்டால் உடனே ஆரஞ்சுப்பழத்தைப் பற்றி ஒரு கதை வரும். ஒரு வாழைப்பழத்தைப் போட்டால் உடனே வாழை மரத்தைப் பற்றி ஒரு கதை வரும்.

ஒரு நாள் கதைப்பாட்டி ஒரு ஆலமரத்தடியில் மூட்டையைத் தலைகாணியாக வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அப்போது சின்னு என்ற இரண்டு வயதுக்குழந்தை அம்மாவைத் தேடி வீட்டை விட்டு வெளியில் வந்தாள். அவள் கதைப்பாட்டியின் அருகில் வந்தாள்.

யார் அது படுத்து உறங்குவது? கதைப்பாட்டியா! வெள்ளை வெளேரென்று வெளுத்த தலைமுடி. பளபளன்னு மினுங்கும் மூக்குத்தி.

ஹாய்! சின்னு அவளே வரைந்த அவளுடைய படத்தை மூட்டைக்குள் போட்டாள். கதைப்பாட்டி விழித்து எழுந்து சின்னுவை மடியில் உட்கார வைத்துக் கொண்டாள். சின்னுவைப் பற்றி ஒரு கதை சொன்னாள்.

ஒரு ஊரில் சின்னு என்ற ஒரு குறும்புக்காரக்குழந்தை இருந்தாள். சின்னுவின் அம்மா சோம்பேறி. சின்னு எந்த விளையாட்டு விளையாடவேண்டும் என்று கேட்டாலும் அதை எடுத்துக் கொடுப்பதற்குச் சோம்பல் படுவாள். சின்னுவின் அம்மா சொல்வாள்,

“ ஐய்யோ! அதை காக்கா கொண்டு போச்சு சின்னு.. காக்கா கொண்டு போச்சு..”

எல்லாவிளையாட்டுச் சாமான்களையும் காக்கா கொண்டு போய் விட்டால் சின்னு எதை வைத்து விளையாடுவாள்? சின்னுவுக்குக் கோபம் வந்தது. மூக்குக்கு மேல் கோபம். அம்மா உறங்கும்போது வீட்டை விட்டு வெளியேறினாள். காக்காவைத் தேடினாள். காக்காவிடம் கேள்வி கேட்டே ஆகணும். போகிற வழியில் காக்கா வாழைமரத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள். சின்னு விளையாட்டுச்சாமான்களைப் பற்றிக் கேட்டபோது, காக்கா சொன்னது,

“ ஐய்யோ! அதை பூனை கொண்டு போச்சு.. பூனை கொண்டு போச்சு..”

சின்னு பூனையைத் தேடி நடந்தாள். பூனையைப் பார்த்தாள். சின்னு பூனையைப் பயமுறுத்தினாள். பயந்து போன பூனை என்ன சொன்னது தெரியுமா?

“ ஐய்யோ! நாய்க்குட்டி கொண்டு போச்சு! சின்னு நாய்க்குட்டி கொண்டு போச்சு! “

சின்னுவுக்கு குழப்பமாக இருந்தது. என்ன உலகம்! ஒரு சின்னப்பிள்ளையை விளையாட விடவில்லையே. வீட்டுக்குப் போகும் வழியும் மறந்து விட்டது. அப்படியே நடந்து வரும்போது கதைப்பாட்டி உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

அப்போது என்ன நடந்தது தெரியுமா?

தலைமுடியெல்லாம் காற்றில் பறக்க சின்னுவின் அம்மா அழுது கொண்டே ஓடி வந்தாள். சின்னு ஒரு குதி குதித்து கதைப்பாட்டியின் பின்னால் ஒளிந்து கொண்டாள். சின்னுவின் அம்மா கதைப்பாட்டியின் முன்னால் வந்து நின்று அழத்தொடங்கினாள்.

“ சின்னுவைக் காணவில்லை.. கதைப்பாட்டி.. சின்னுவை எங்காவது பார்த்தீர்களா? கடவுளே நான் இனிமே எப்படி உயிருடன் இருப்பேன்..”

அதை எல்லாம் கேட்டபிறகு கதைப்பாட்டியின் பின்னால் ஒளிந்திருந்த சின்னு முன்னால் வந்தாள்,

“ காக்கா கொண்டு போச்சு.. சின்னுவைக் காக்கா கொண்டு போச்சு..”

என்றாள். கதைப்பாட்டி விழுந்து விழுந்து சிரித்தாள். சின்னுவின் அம்மா சின்னுவை அப்படியே அள்ளி எடுத்து நிறைய முத்தங்கள் கொடுத்தாள்.

அதன்பிறகு எப்போதும் சின்னுவுக்கு விளையாட்டுச்சாமான்கள் கிடைத்துக் கொண்டிருந்தன.

நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

Sunday, 9 February 2025

சின்னுவும் கதைப்பாட்டியும்!

 

1.   சின்னுவும் கதைப்பாட்டியும்!

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்


 

சின்னு வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். மாங்காய் வியாபாரி அங்கே வந்து ” மாம்பழம்.. மாம்பழம் ” என்று கத்தினார்.. தலையில் கூடையை வைத்திருந்தார். அதைப் பார்த்த சின்னு விளையாட்டை நிறுத்தினாள். பிறகு,

“ மாமா மாமா .. கூடையில் என்ன இருக்கு? “

 

“ பழுத்த மாம்பழம்.. காசுக்கு இரண்டு பழுத்த மாம்பழம்..”

என்று மம்மது மாமா பதில் சொன்னார். சின்னக்குழந்தைகள் கையில் காசு எப்படியிருக்கும்? அதனால் சின்னுவுடன் விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் தலை குனிந்து நின்றார்கள். அப்போது மம்மது மாமா மறுபடியும் பாடினார்,

“ வாங்கிக்கோ.. குழந்தை.. வாங்கிக்கோ குழந்தை.. பசிக்கும் போது சாப்பிடலாமே.. வாங்கிக்கோ குழந்தை..”

சின்னு கையை நீட்டினாள். மம்மது மாமா ஒரு குட்டி மாம்பழத்தைக் கொடுத்தார். அதைப் பார்த்த கமலாக்காக்கா பறந்து வந்தது. மாம்பழத்தைக் கொத்திக் கொண்டு பறந்து போய் விட்டது. சின்னு பின்னால் ஓடினாள். சின்னுவின் பின்னால் நாய்க்குட்டி ஓடியது. நாய்க்குட்டியின் பின்னால் பூனைக்குட்டியும் ஓடியது. கமலாக்காக்கா மரக்கிளையில் உட்கார்ந்தது.

சிறிது நேரம் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. முன்னொரு காலத்தில்  கமலாக்காக்காவை நீலாண்டன் குள்ளநரி ஏமாற்றிய கதையை சின்னுவின் காதில் சொன்னது பூனைக்குட்டி.

சின்னு காக்காவிடம் கேட்டாள்,

“ காக்கா காக்கா.. உன்னுடைய கூடு எங்கே? “

கமலாக்காக்கா பதில் சொல்லவில்லை. முன்பு ஒரு குள்ளநரி ஏமாற்றியதை நினைத்துப் பார்த்தது. இனி ஒருத்தரும் தன்னை ஏமாற்ற விடக்கூடாது என்று நினைத்தது.

. அப்போது நாய்க்குட்டி கேட்டது,

“ காக்கா கூட்டில் ஒரு குஞ்சு இருக்கிறது இல்லையா? “

அதைக் கேட்டதும் கமலாக்காக்காவின் கண்கள் நிறைந்து விட்டன. வெகு நேரமாகி விட்டது. இன்னமும் குஞ்சுக்குத் தீனி கொண்டு போய் கொடுக்கவில்லை. இந்த மூன்று பேரும் போய்விட்டால் மாம்பழத்தைக் கொண்டு போய் கொடுக்கலாம். அப்போது பூனை கேட்டது,

“ காக்காக்குஞ்சுக்குத் தீனி கொடுக்கவில்லை என்றால் பசித்து அழும் இல்லையா?”

“ அதைக் கேட்ட கமலாக்காக்காவுக்கு நெஞ்சு வெடித்து விடும் போல இருந்தது. அது வாயைத் திறந்து கா..கா..கா.. கா.. என்று கரைந்தது.

மாம்பழம் கீழே விழுந்தது. அதை சின்னு தன்னுடைய பாவாடையில் ஏந்திக் கொண்டாள். பிறகு நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சின்னுவும் ஆடிக் கொண்டே கதைப்பாட்டியிடம் போனார்கள். கதைப்பாட்டி மாம்பழத்தைத் துண்டு போட்டு கொடுத்தாள். எல்லாரும் சாப்பிட்டு முடித்தபிறகு, சின்னு தன் கண்களை விரித்து,

“ காக்கா பாவம் இல்லையா? “

கண்களைத் துடைத்துக் கொண்டே, “ ஆமாம் பாவம்.. தான்..” என்றது பூனைக்குட்டி.

உதடுகளை நக்கித் துடைத்துக் கொண்டே நாய்க்குட்டியும்,

“ ஆமாம் ஆமாம்.. பாவம் தான் “ என்றது.


நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

புக் டே