Friday, 13 July 2012

எப்படி வாழ்கிறாய்?

imagesCA20VS3S

உதயசங்கர்

 

உன் பிறந்த நாளன்று

ஒரு ரோஜாவையேனும் தந்ததில்லை

ஆனால் முட்களால் கீறியிருக்கிறேன்

உன் திருமணநாளன்று

ஒரு சாக்லேட் கூட கொடுத்ததில்லை

ஆனால் வெறுப்பின் கசப்பை

உமிழ்ந்திருக்கிறேன்

உன் ஆசைகளின் பதியன்களுக்கு

ஒரு நாளேனும் நீருற்றியதில்லை

ஆனால் மிதித்து நடந்திருக்கிறேன்

உன் கனவுகளின் வானவில்லை

கண்டு மகிழ்ந்ததில்லை

ஆனால் கலைத்து குழப்பியிருக்கிறேன்

உன் சிறகுகளின் யத்தனிப்பை

ஒரு நாளும் அவதானித்ததில்லை

ஆனால் வளரவிடாமல் வெட்டியிருக்கிறேன்

இத்தனை குரூரமான என்னுடன்

எப்படி வாழ்கிறாய் என் சகியே?

Thursday, 12 July 2012

பேய், பிசாசு இருக்கா?

 

உதயசங்கர்

ghost

பேய், கொள்ளிவாய்ப் பிசாசு, ரத்தக்காட்டேரி, முனி, மோகினி, சாத்தான், இவை எல்லாம் இருக்கிறதா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? இதென்ன கேள்வி?

கண்டிப்பா எல்லாம் இருக்கு. எங்க ஊர் கம்மாய்க்கரைக்கு மேல இருக்கிற புளியமரத்தில் பேய் இருக்கு. சுடுகாட்டுப் பக்கம் ராத்திரி நேரம் போகவே மாட்டாங்க. அங்கே கொள்ளிவாய்ப் பிசாசு அலையுமாம். ஊருக்கு தெக்காம இருக்கிற ஒத்தைப் பனை மரத்து வழியா ஒத்தையில யாரும் போக மாட்டாங்க. அதில் முனி இருக்குதாம். பஞ்சாயத்து ஆபீசுக்கு வடக்கே இருக்கிற கிணத்துப்பக்கம் நடுச்சாமத்திலே மோகினி நடமாட்டம் இருக்குதாம்.. சல்..சல்..சல்..னு சலங்கை சத்தம் கேட்குதாம். அம்மாடி நெனச்சாலே உடம்பெல்லாம் புல்லரிக்குது. பயம்மா இருக்குது. வேற ஏதாச்சும் கேளுங்க.

இப்படித்தான் சொல்வீர்கள்

அநேகமாக எல்லாக்குழந்தைகளுமே இப்படி நம்புகிறவர்கள் தான். இப்படி குழந்தைகளாக இருந்து பெரியவர்களானவர்களும் இப்படி நம்புகிறவர்கள் தான். நாம் பார்க்கும் சினிமா, தொலைக்காட்சித் தொடர், படிக்கிற பேய்க்கதைப் புத்தகங்கள் பெரியவர்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்கிற திகில் கதைகளிலும் இப்படிப்பட்ட பேய் பிசாசுகள், சர்வசாதாரணமாய் வந்து போகின்றன. பழிக்குப் பழி வாங்குகின்றன. இல்லையா?

ஏன் இந்தக் கதைகளில் வரும் பேய்கள் நம்மை பயமுறுத்துகின்றன? முதலில் அவை நம்மைப் போன்ற உருவத்தில் இல்லை. அடுத்தது சாதாரணமாக மனிதர்கள் செய்ய முடியாத காரியங்களைச் செய்கின்றன. பறந்து செல்வது, நினைத்தவுடன் நினைத்த உருவத்துக்கு மாறுவது, காற்றில் மறைந்து விடுவது, வித விதமான பொருட்களை, உதாரணத்துக்கு லட்டு, பணியாரம், வடை, முறுக்கு, போன்ற அதிருசியான பண்டங்களை வரவழைப்பது, இப்படி சாதாரணமாய் நடக்க முடியாத வேலைகளையெல்லாம், திரைப்படங்களில், புத்தகங்களில், தொலைக்காட்சித் தொடர்களில், இந்தப் பேய்கள் செய்கின்றன இல்லையா?

இவை நம் மனதில் ஒரு பயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன.

உங்கள் ஊரிலுள்ள எல்லாப் பேய்களுக்கும் ஒரு கதை இருக்கும். கேட்டிருக்கிறீர்களா? இதுவரை கேட்டதில்லை என்றால் இனிமேல் கேட்டுப் பாருங்கள். பேய்களைப் போலவே, பிசாசு, முனி, மோகினி, ரத்தக்காட்டேரிகளுக்கும் தனித்தனியே கதை இருக்கும்.

இந்தக் கதைகளில் பொதுவாக பின்வரும் காரணங்கள் இருக்கும்.

1. கொஞ்ச வயதில் திடீரென இறந்து போனவர்கள்

2. உற்றார் உறவினர்களின் கொடுமைகளினால் தற்கொலை செய்து கொண்டவர்கள்

3. ஏதாவது ஒரு காரணத்துக்காக கொலை செய்யப் பட்டவர்கள்

4. பழிக்குப் பழி வாங்க இறந்த பிறகும் அலைபவர்கள்

5. நிறைவேறாத ஆசைகளோடு இறந்து போனவர்கள்

இன்னும் பல காரணங்களும் இருக்கலாம். சரி இருக்கட்டுமே.

இப்போது சிலகேள்விகள் நமக்குத் தோன்றுகின்றன.

பெரும்பாலும் இந்த உருப்படிகள் எல்லாம் ஏன் ராத்திரியிலேயே சுற்றுகின்றன? அதுவும் ஏன் ஊருக்கு ஒதுக்குப்புறமான, இருட்டான இடங்களிலேயே வசிக்கின்றன? ஏன் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலேயே அலைகின்றன? சர்வ வல்லமை படைத்த இந்தச் சங்கதிகள் இரும்பு, செம்பு, விளக்குமாறு, நெருப்பு, இவற்றை கண்டு மட்டும் பயந்து சாவதேன்? பேய்களே இல்லாத ஊர் இருக்கிறதா? மனிதர்களுக்கு மட்டும் தான் பேயா? விலங்குகள் பறவைகள், பூச்சிகள், எல்லா உசுப்பிராணிகளுக்கும் பேய் உண்டா?

மனிதர்களை விட வளர்ச்சியடைந்த மிருக இனம் இந்த உலகில் இல்லை. அந்த மனிதனே ஆதிகாலத்திலிருந்து இருட்டைக் கண்டு பயந்தான். கண் தெரியாத இருட்டில் பல ஆபத்துகளை எதிர்கொண்டான். அதனால் இருட்டு அவனை பயமுறுத்தியது. எனவே தாங்கள் வாழ்வதற்கு பேய்களும் இருட்டைத் தேர்ந்தெடுத்துக் கொண்டன. எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை, தெருக்களில் பேய்கள் இருப்பதில்லை. அதிக ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் குடியிருப்பதாகச் சொல்வதும் நம்புவதும் எளிது.

என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று நீங்கள் கேட்கிறீர்கள் இல்லையா?

மனிதன் தான் பேய், பிசாசு, மோகினி, முனி, எல்லோரையும் உருவாக்குகிறான். மனிதர்கள் இருந்தால் தான் பேய்களும் இருக்கும். மனிதர்கள் இல்லாத ஊர்களில் பேய்களும் இருப்பதில்லை. பறவைகள், விலங்குகள், பூச்சிகள், ஆகியவற்றுக்கு பேய்களோ, பிசாசுகளோ இல்லை. ஏனெனில் மனிதனுடைய மூளையில் தான் மற்ற அனைத்து யிரினங்களையும் விட கற்பனாசக்தியும், ஞாபகசக்தியும் அதிகம். மனிதன் மட்டும்தான் திரும்ப யோசித்துச் சொல்லும்படியான கனவுகளைச் காண்கிறான். நாம் இரவில் தூங்கும்போது காணும் பல கனவுகள் மறுநாள் காலையில் ஞாபகத்துக்கு வருகிறதல்லவா? அதை நாம் நம்முடைய நண்பர்களிடம் சொல்லி மகிழ்வதில்லையா?

மனித இனத்தின் வளர்ச்சியில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த பழங்கால மனிதர்கள் உணவுப்பற்றாக்குறை காரணமாக ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்கு இடப்பெயர்ச்சி செய்தனர். அப்படி போகும்போது ஏற்கனவே அங்கே இருந்த மனிதர்களுடன் சண்டை போட நேர்ந்தது. அந்தச் சண்டைகளில் நிறையப் பேர் செத்துப் போனார்கள். எஞ்சி உயிர் பிழைத்தவர்களுக்கு தங்களுடனே இருந்து இறந்து போனவர்களைப் பற்றிய ஞாபகங்கள் இருக்குமல்லவா? அவர்களுடைய நடையுடை பாவனைகள், குரல், முகம், அவர்களது விருப்பு வெறுப்புகள் எல்லாம் தெரிந்திருக்குமல்லவா? மனிதமூளையின் ஞாபக செல் அடுக்குகளில் பதிவான இந்த விவரங்கள் கனவுகளில் திடீர் திடீரென காட்சிகளாக வந்தன. கனவுகளைப் பற்றியும், மூளையின் செயல்பாடுகளைப் பற்றியும் அறியாத பழங்கால மனிதர்கள் அவற்றை இறந்து போன மனிதர்கள் ஆவி ரூபத்தில் வந்து பேசுவதாக நினைத்தனர். ஒருவேளை, வேறு உலகத்தில் அவர்கள் உயிருடன் இருப்பதாகக் கற்பனை செய்தனர். அறிவியல் பார்வையும், அறிவியலறிவும், சரியாக வளராத காலம் அது. எனவே இறந்து போனவர்கள் பேய்களாகச் சுற்றுவதாகச் சொன்னார்கள். சில பேருக்கு நரம்புத் தளர்ச்சி நோய் ( ஹிஸ்டீரியா ) ஏற்பட்டு இறந்தவர்களைப் போலப் பேசவும், நடக்கவும் செய்தனர்.

அறிவியல் முன்னேற்றம் இல்லாத பழைய காலகட்டத்தில் உருவான பல மூடநம்பிக்கைகளைப் போல இந்தப் பேய், பிசாசுகள், பற்றிய மூட நம்பிக்கையும் உருவாகி விட்டது. இவை கதைகள் மூலமாக பரம்பரை பரம்பரையாகக் குழந்தைகளுக்குச் சொல்லப் பட்டு வருகின்றது. குழந்தைகளைப் பயமுறுத்த அவர்களைச் சொன்னபடி கேட்க வைப்பதற்காக பெரியவர்கள் சொல்கிற இந்தக் கதைகள் பசுமரத்தாணி போல மனசில் பதிந்து விடுகிறன. பெரியவர்களான பிறகும் இருட்டிலும், ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளிலும் போகும் போது இந்தக் கதைகள் சிறு வயதில் ஏற்படுத்திய பய உனர்வுகளைத் தூண்டி விடுகின்றன. அந்த மாதிரியான நேரங்களில் இலை உதிர்ந்து விழும் சத்தம், பூச்சிகளின் கீச்சொலி, ஏன் நம்முடைய காலடிச் சத்தமே கூட பயமுறுத்துகிறது. சுற்றிலும் கேட்கிற சிறு ஒலிகளும், இருட்டும், சேர்ந்து அடிவயிற்றைப் பிசைகின்றன. பய உணர்வு தாக்குகிற முதல் உறுப்பு வயிறு என்பதால் வயிறு கலங்கி ‘ வெளிக்கி” வருவது போலவோ, ’ ஒண்ணுக்கு’ வருவது போலவோ உணர்வு தோன்றுகிறது. சிலருக்கு இந்தப் பய உணர்ச்சி காய்ச்சலை ஏற்படுத்தி விடுகிறது.

மற்றவர்களுக்கு இது போதும். அவனை பேய் அடித்து விட்டது என்று சொல்லி விடுவார்கள். அப்புறம் இது கதை கதையாகக் கண்,மூக்கு,காது, வைத்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கும். இப்படியே இந்தக் கதைகளில் பேய், பிசாசுகள், வாழ்ந்து கொண்டேயிருக்கின்றன.

மற்றபடி இவை இருப்பதற்கு எந்த விதமான அறிவியல் அடிப்படையும் கிடையாது. அப்படியா?

ஆமாம். பூமி தோன்றியதிலிருந்து கோடிக்கணக்கான உயிரினங்கள் பிறந்து இறந்து விட்டன. அவையெல்லாம் பேய்களாக மாறினால் என்ன ஆகும்? அனைத்து உயிரினங்களுக்கும் மரணம் என்பது இயற்கையானது. ஒவ்வொரு உயிரினமும் தங்களுடைய பரிணாம வளர்ச்சியின் வழியாக தங்களது வாழ்நாளை அதாவது ஆயுளை உருவாக்கியுள்ளன. கொசுக்களுக்கு ஒரு வாரம், ஈக்களுக்கு ஒரு மாதம், பூனைக்கு பனிரெண்டு வருடம், யானைக்கு எழுபது வருடங்கள், மனிதனுக்கு நூறு வருடங்கள், ஆமைக்கு இருநூறு வருடங்கள் இப்படி…இப்படி… இது இயற்கையான ஆயுட்காலம்.

ஆனால் விபத்திலோ, நோயிலோ, இயற்கைச் சீற்றங்களினாலோ, எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் இறந்து போகலாம். ஏன் தினசரி நம் காலடியில் நூற்றுக்கணக்கான எறும்புகள் இறந்து போகின்றன. அவையெல்லாம் பேய்களாக மாறி கடிக்க ஆரம்பித்தால்………

அப்படியெல்லாம் நடக்காது. மற்ற உயிரினங்களை விட்டு விடுவோம். குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய பிறகு கோடிக்கணக்கான மனிதர்கள் இந்த பூமியில் பிறந்து வளர்ந்து இயற்கையாகவோ, அகாலமாகவோ, இறந்து போயிருக்கிறார்கள். அவர்கள் பேய்களாக மாறியிருந்தால் மக்கள் தொகை பெருக்கம் மாதிரி பேய்த்தொகைப் பெருக்கம் அதிகமாகி நாம் இருப்பதற்கே இடமிருக்காதே. நாம் இப்போது நின்று கொண்டிருக்கும் பூமிக்குக் கீழ், வசித்துக் கொண்டிருக்கும் வீடுகளுக்குக் கீழே பூமியில் நூற்றுக்கணக்கான வருடங்களாக இறந்து போன உயிரினங்களும், மனிதர்களும், மக்கி மண்ணாகிக் கிடக்கின்றனர். இது ஒரு தொடர் சங்கிலி. பிறப்பதும் இறப்பதும்.இப்போது புரிகிறதா? பேய்கள் எங்கேயிருக்கின்றன? நம்முடைய கற்பனையில் தான்.

மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியில் தான் உணர்ச்சி செல்கள் இருக்கின்றன. பயம், மகிழ்ச்சி, ஏமாற்றம், பாசம், சுகம், இப்படி உணர்ச்சிகளின் பிறப்பிடமாக ஹைபோதாலமஸ் இருக்கிறது. இந்த செல்களில் தூண்டுதல் ஏற்பட்டதும், நினைவிலிருந்து கற்பனைச் சித்திரங்கள், சினிமா, தொலைக்காட்சித் தொடர்களிலிருந்து உருவான பிம்பங்கள் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் கண்முன்னே காட்சிகளாய் விரிகின்றன. உடனே நாளமில்லாச் சுரப்பிகளின் தலைவனான பிட்யூட்டரி சுரப்பியின் ஆணையின் பேரில் அட்ரீனலின் சுரப்பி திபுதிபுவென சுரக்கிறது. உடனே உடலெங்கும் புல்லரிக்கிறது. வயிறு கலங்குகிறது. மற்றவை தொடர்கின்றன.

மனிதமனம் உருவாக்கும் பேய் தான் மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது. இந்தக் கற்பனையான பேயை விரட்டுவதாகச் சொல்லி பிழைப்பு நடத்தும் பூசாரிகள், சாமியார்கள், உருவாகி எல்லோரையும் ஏமாற்றுகிறார்கள். இந்தப் பேய்களையும் பேயோட்டும் சாமியார்களையும் எளிதாக விரட்டி விடலாம். எப்படி? பேய்களுக்கு வெளிச்சம் என்றால் பயம். அதுவும் அறிவியல் வெளிச்சம் என்றால் அவ்வளவு தான்.

தலை தெறிக்க ஓடி விடும்.

Wednesday, 11 July 2012

ரேடியோ பல்லி

மலையாளத்தில் – மாலி

 

தமிழில் – உதயசங்கர்

lizard

”ராமு கதை கேட்கறீயா?”

கேட்டது யார்? ராமு சுற்றிலும் பார்த்தான். யாரையும் பார்க்க முடியவில்லை.

“கதை கேட்கறீயான்னு கேட்டேன்..” மறுபடியும் கேள்வி.

”கண்டிப்பா கேட்கறேன்..ஆனா கேக்கறது யாருன்னு முதல்ல தெரியணும்” என்று ராமு சொன்னான்.

“ரேடியோவுக்குள்ளே பார்..” என்றது அந்தக் குரல்.

ராமு அங்கே பார்த்தான்.ஒரு பல்லி.

“பல்லியே! நீங்களா பேசியது?” என்று ராமு கேட்டான்.

“ஆமா..நான் தான்..” என்று பல்லி சொல்லியது.

பழுதான ரேடியோ அது. ராமுவின் அப்பா அதை சரி செய்ய முயற்சித்தார். முடியவில்லை. அதை அப்படியே ஒரு பெஞ்சில் வைத்திருந்தார்.

“சரி.. கதை சொல்லு! கேட்கறேன்..” என்று ராமு சொன்னான்.

பல்லி ஒரு கதை சொல்லியது.

”இன்னொரு கதை..” என்று ராமு ஆவலுடன் கேட்டான்.

“ஒரு நாளைக்கு ஒரு கதைதான் சொல்வேன்..” என்று பல்லி சொன்னது.

ரெண்டாம் நாள் ரெண்டாவது கதை.

“பல்லி! நீங்கள் எப்படி ரேடியோவுக்குள்ளே போனீங்க?” என்று ராமு கேட்டான்.

“அது ரொம்ப சுவாரசியமானது ராமு. என்னோட அம்மா முட்டையிட இதற்குள் வந்தாள். இட்ட முட்டைகளை அம்மா எண்ணி வைத்தாள். அப்புறம் ஒரு நாள் முட்டைகளை எடுத்துட்டு வேற இடத்துக்குப் போனாள்.போகும்முன்பு இன்னொரு தடவை முட்டைகளை எண்ணினாள். எண்ணிக்கை சரியாயிருக்குன்னு நினைத்தாள். ஆனால் அம்மா நினைச்சது தப்பு. ஒரு முட்டை குறைவாக இருந்தது. அந்த முட்டை உருண்டு வேற இடத்தில் கிடந்தது. அதிலிருந்து தான் நான் பிறந்தேன். பிறந்ததிலிருந்து இங்கே தான் இருக்கிறேன்” என்று பல்லி சொன்னது.

பதினைந்து நாட்கள் கழிந்தன. பதினைந்து கதைகளும் கேட்டாயிற்று. எவ்வளவு அருமையான கதைகள்!

“பல்லி உங்களுக்கு இந்தக் கதைகள் எங்கேயிருந்து கிடைத்தன?” என்று ராமு கேட்டான்.

“ரேடியோவில குழந்தைகளுக்கான கதைகள் இருக்கே..பொதுவாக சில கதைகள் நல்லாயிருக்கும்.. அதையெல்லாம் நான் சேகரிச்சு வைத்திருந்தேன்.. எங்கே சேகரிச்சு வைத்திருந்தேன் தெரியுமா? என் வாயிலியா?இல்லை. என் மூக்கிலியா? இல்லை. என் வாலிலா? இல்லை அப்புறம் எங்கே? என் மனசில்..!” என்று பல்லி சொல்லியது.

நாற்பது நாட்கள் கழிந்தன.அப்போது ராமு நாப்பது கதைகள் கேட்டிருந்தான். ஒரு கதை கூட மோசமாக இல்லை.

“பல்லி பெரியவர்களுக்கான கதைகளும் இருக்குமே! நீங்க அதையும் கேட்டிருக்கீங்களா..” என்று ராமு கேட்டான்.

“இல்லை.. அதைக் கேட்டா எனக்கு தூக்கம் வந்துரும். தூங்கறதுக்கு எனக்குப் பிடிக்காது..” என்று பல்லி நல்லுரை பகர்ந்தது.

நூற்றியொரு நாட்கள் கழிந்தன. நூற்றியொரு கதைகளும் கேட்டாச்சு. நூற்றியிரண்டாம் நாள் வந்தது.

“நூத்தியிரண்டாவது கதையைச் சொல்லு..” என்று ராமு ஆவலுடன் கேட்டான்.

“இல்ல.. நூத்தியொரு கதைகள் தான் என்னிடம் இருந்தன.. நான் என்ன செய்ய?” என்று பல்லி பெருமூச்சுடன் சொல்லியது.

ராமுவுக்கு மிகுந்த ஏமாற்றமாகி விட்டது.

“ராமு நான் உனக்கு கதைகள் சொன்னேன்..பதிலுக்கு நீ எனக்கு ஒரு உதவி செய்வியா? என்னை வெளியே விடறதுக்கு உன்னோட அப்பாகிட்ட சொல்றியா?” என்று பல்லி ஆவலுடன் கேட்டது.

ராமு எல்லாவற்றையும் அப்பாவிடம் சொன்னான். அப்பா உடனே என்ன செய்தார் தெரியுமா? ரேடியோவின் பின்புறம் திருகாணிகளைக் கழற்றினார். கனம் குறைந்த பலகையை எடுத்து வைத்தார். வெளியே போவதற்கு பல்லிக்கு எளிதாக இருந்தது.

“எங்கே போறீங்க பல்லி?” என்று ராமு கேட்டான்.

“அடுத்த வீட்டில் ஒரு புதிய ரேடியோ வந்திருக்கு.. அதைச் சுவத்தில மாட்டியிருக்காங்க.. நான் ரேடியோவுக்கும் சுவத்துக்கும் நடுவுல போய் இருந்துக்குவேன்.. பழுதாச்சின்னா நான் உள்ளே போய் இருந்துக்குவேன்.. எனக்கு இன்னமும் குழந்தைகள்  கதைகள் கேட்கணும்..நான் போகட்டுமா? வணக்கம்.” என்று பல்லி சொன்னது.

”வணக்கம்” என்று நான் சொன்னேன்.

ரேடியோபல்லி ஊர்ந்து போனது.

Tuesday, 10 July 2012

ரகசியம்

உதயசங்கர்

 

விரல்களில் பிடித்திருந்த சிகரெட்டுடன் கீழேunusual_sculptures_500

விழுகின்ற கணம்வரை சிவசுவுக்குத் தெரியாது

தான் இறந்து விடுவோம் என்று

இன்னும் புகைந்து கொண்டிருக்கிற சிகரெட்டின்

புகைக்குள் மறைந்து போனான்

எதையும் விழுங்க மறுத்த தொண்டக்குழியில்

வளர்ந்த புற்று மரணப்பூனையின் காலடியென்பதை

ஆறுமாதம் கழித்து உணர்ந்த முத்து

பூனைக்கண்களைத் திறந்த படியே

பூனையின் வயிற்றுக்குள் சென்றான்

கவிதைக்காக வாழ்வைப் பணயம் வைத்த

அப்பாஸின் மூளையில் மரணம்

உயிரைப் பணயம் வைத்திருப்பது தெரியாமல்

விவாதித்துக் கொண்டிருந்தான்

மரணத்தைப் பற்றித் தன் கவிதைகளில்

சூதாட்டப் புதிர்ப்பாதைகளில்

நானும் மரணமும்

ஒருவரை ஒருவர் தேடிக் கொண்டிருக்கிறோம்.

எப்படியும் ஒரு நாள் சந்திக்கப்போகிறோம்.

எந்தத் திருப்பத்தில் என்பதில் தான்

ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது

வாழ்வின் ரகசியம்.

Monday, 9 July 2012

கனிவின் சிகரம் கமலாலயன்

உதயசங்கர்yali-metal-statue-250x250

 

சுளித்தோடும் வாழ்வின் கரைகளில் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம். எத்தனையோ மனிதர்களோடு பழகுகிறோம். எத்தனையோ பேர்கள் நண்பர்களாக மாறுகிறார்கள். சிலர் ரயில் சிநேகத்தைப் போல அவர்களது ஸ்டேஷன் வந்ததும் இறங்கிப் போய் விடுகிறார்கள். அதன்பின்பு தொடர்பே இருப்பதில்லை. அவர்களைப் பற்றிய ஞாபகங்கள் மட்டுமே நம் மனதில் இருந்து கொண்டிருக்கும். அதுவும்கூட காலக்கரையான்களின் அரிப்பில் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து காலாவதியான சித்திரம் போல மெலிதாய் தன் பூர்வவாசனையைக் கொண்டிருக்கும். சிலர் நம் வாழ்வில் மிகமுக்கியமானவர்களாக என்றும் இருப்பார்கள் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால் அவர்களுடைய வாழ்வின் பாதையில் நாம் முக்கியமற்றவர்களாகி விடுவோம். என்னுடைய பால்யகாலநண்பர்கள் எவ்வளவோ பேர் இப்போது காணாமல் போயிருக்கிறார்கள். சிலரைக் காலம் தன் முடிவிலிக்குள் அழைத்துக் கொண்டு விட்டது. அப்போது அத்யந்தமாய் இருந்தவர்கள் இப்போது சிறுபுன்னகைக்கு மட்டுமே பெறுமதியாக மாறிவிட்டதும் உண்டு. பத்திருபது வருடங்கள் வரை மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் கூட சட்டென முன்பின் தெரியாதவர்களாகி விடுகிற முரணும் இந்த வாழ்வில் நடப்பதும் உண்டு. வாழ்க்கை விசித்திரமானது. அதன் புதிர் வழிகளை யாரும் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதனால் தான் வாழ்க்கை சுவாரசியமாகவும் இருக்கிறது.

ஆனால் இந்த வாழ்க்கையின் சாராம்சமே மனித உறவுகள் தானே. மனிதன் இந்தப் பிரபஞ்சத்தோடு, சகல ஜீவராசிகளோடு, சகமனிதர்களோடு ஏற்படுத்திக் கொள்கிற உறவுகளே மனிதவாழ்வின் அர்த்தம். இந்த அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாததினால் தான் இத்தனை வேறுபாடுகளும், மாறுபாடுகளும், துன்பங்களும், துயரங்களும், என்று தோன்றுகிறது. மனிதவாழ்வு முடியும் போது மீதமாக இருப்பது மனிதன் சமூகத்தோடும், சகமனிதர்களோடும் கொண்ட உறவு தான். இந்த உறவைப் பேணுவதிலும் போற்றுவதிலும் தான் நம்முடைய வாழ்வின் சீர்மை இருக்கிறது. சிலரைப் பார்த்தவுடனேயே பிடித்து விடுகிறது. சிலரிடம் பழகியபிறகு பிடிக்கிறது. சிலரின் அன்பு பிடிக்கிறது. சிலரின் அக்கறை பிடிக்கிறது. சிலரின் அறிவு பிடிக்கிறது. சிலரின் தன்னம்பிக்கை பிடிக்கிறது. சிலரின் தைரியம் பிடிக்கிறது. இவையெல்லாம் இருக்கிற நண்பர்கள் நிறையப் பேர் எனக்கு இருக்கிறார்கள் என்பதே எனக்குப் பெருமை. இன்னமும் அப்படியான நண்பர்களைச் சந்தித்துக் கொண்டே இருப்பதும் வாழ்வின் வரம் என்று நினைக்கிறேன்.

என்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பான ‘ யாவர் வீட்டிலும்’ 1988-ல் திருவண்ணாமலையில் வெளியிடப்பட்டது. அதை வாசித்த காலஞ்சென்ற இலக்கிய விமர்சகர் க.நா.சு. தினமணியில் என்னுடைய தொகுப்பு பற்றியும், என் அருமை நண்பர் எழுத்தாளர் கௌதமசித்தார்த்தனுடைய முதல் சிறுகதை நூலைப் பற்றியும் பாராட்டி எழுதியிருந்தார். அந்தச் சமயத்தில் வேலூர் சத்துவாச்சேரியில் என்னுடைய சிறுகதைப் புத்தகத்துக்கான நூல் அறிமுகக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் என்னுடைய நூலை அறிமுகம் செய்து பேசியவர் எழுத்தாளர் கமலாலயன். அந்த முதல் சந்திப்பிலேயே அவர் காட்டிய அன்பும், அக்கறையும், கனிவும், அது வரை நான் எதிர்கொள்ளாதது. போலியான வறட்டுத்தனமும், கூர்மையான விமரிசனக் கத்திகளோடும் யாரும் அண்ட முடியாத பூச்சாண்டிகளாக கோவில்பட்டி இலக்கியவாதிகள் இருந்தார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசி அவர்களுடைய படைப்புகளை கீறிப் பிளந்து அந்தப் படைப்பாளிக்கு ஒரு தாழ்வுமனப்பான்மையை உருவாக்குவதில் கோவில்பட்டி இலக்கியவாதிகள் கை தேர்ந்தவர்களாக இருந்தார்கள். எனக்கும் அந்தச் செயற்கையான பூச்சாண்டி ஒப்பனை அப்போது உவப்பாகவேயிருந்தது. ஏனெனில் நானும் உள்ளுக்குள் பூனையைப் போல நடுங்கிக் கொண்டிருந்ததும் காரணமாக இருக்கலாம். இதனால் 80-களில் தமிழிலக்கியஉலகில் ஒரு சொல்வழக்கே உருவானது. யாராவது புதிதாய் புத்தகம் வெளியிட்டால் உடனே “ போய் கோவில்பட்டிக்குப் போய் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கிட்டு வா..” என்று கேலி செய்யும் அளவுக்கு கோவில்பட்டித் திமிர் இருந்தது. அந்தச் சூழ்நிலையில் வளர்ந்த எனக்கு அவருடைய பாராட்டும் உற்சாகமும் மிகுந்த கூச்சத்தைக் கொடுத்தது. நான் முதல்முதலாக என்னை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்த தருணம் அது. அப்போதே அவர் நிறையக் கதைகள் நா.பா. வின் தீபத்தில் எழுதியிருந்தார். நுட்பமான விஷயங்களை மிகச் சன்னமான குரலில் அருகில் அமர்ந்து உரையாடுகிற மாதிரியான கதைகளுக்குச் சொந்தக்காரர். அப்போது அவர் வேலூரிலுள்ள ஒரு தொழிற்சாலையில் டெக்னீசியனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அன்றிலிருந்து துவங்கிய எங்களுடைய தோழமை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எழுபதுகளில் திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையின் அடிவாரக்கிராமங்களில் நண்பர்களுடன் சேர்ந்து பள்ளிக்குழந்தைகளுக்கு இரவு நேர வகுப்புகளை நடத்தத் தொடங்கிய கமலாலயனை புத்தகங்களும்,இந்த உலகின் மீதான பேரன்பும் சமூகத்தின் அசமத்துவம் குறித்தான கேள்விகளூம் இயல்பாகவே இடதுசாரி இயக்கச் சிந்தனைகளுக்குக் கொண்டு வந்து சேர்த்தன. இடதுசாரி தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு.வில் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக நிர்வாகத்தால் பழி வாங்கப்பட்டு வேலையைப் பறி கொடுத்தார். அதன் பிறகு த.மு.எ.ச. வின் சிந்தனைத் தளங்களில் ஒன்றாகத் தீவிரப் பணிபுரிந்தார். அவருடைய சிறுகதைகளில் உழைப்பாளி மக்களே பிரதான கதாபாத்திரங்கள். மெல்லிய உணர்வுகளின் துடிப்பைத் துல்லியமாகப் படம் பிடிக்கும் அவரது கதைகள் பெரும்பாலும் அவருடைய சொந்த அநுபவங்களே. கண்டக்டராக, தொழிலாளியாக, பண்பாட்டு ஊழியராக, அவர் வாழ்வை எதிர் கொண்ட விதமே அவருடைய படைப்புகள். வேலை பறிபோனதும், அறிவொளி இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். அறிவொளிக்காலம் முடிந்த பிறகு கருத்துக்கூடத்தோடு இணைந்து இன்னமும் எழுதப்படாத மக்கள் இலக்கியத்தை, மக்களிடமிருந்து சேகரிக்கும் பணியில் இணைந்தார். எழுத்தின் அதிகாரம் செல்லுபடியாகாத சாதாரண மக்களின் சொல்கதைகள், நாட்டுப்புறக்கதைகள், கிராமியக்கதைகள், நாட்டுப்புறப்பாடல்கள், சொலவடைகள், விடுகதைகள், என மக்கள்மனதை தகவமைக்கிற மக்கள் இலக்கியத்தை சேகரிக்கும் பெரும்பணியில் ஈடுபடுத்திக் கொண்டார்.

ஏற்கனவே எழுதப்பட்ட இலக்கியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை எளிய வடிவத்தில் மிகக் குறைந்த விலையில் கொண்டு சென்றது கருத்துக்கூடம். அதில் தன்னலமற்ற உழைப்பை நல்கியவர்கள் பேரா.ச.மாடசாமி, தமிழ்ச்செல்வன், ரத்தினவிஜயன், கமலாலயன், போன்ற தோழர்கள் தான். மகத்தான ஒரு மாற்றம் உருவாகிவிடும் போலத் தான் தெரிந்தது. கருத்துக்கூடத்தின் காலம் முடிந்த பிறகு வளர்கல்வி இயக்கத்திலும், குழந்தைகள் நலத்திட்டத்திலும் இணைந்து தன் பங்களிப்பைச் செய்தார் கமலாலயன். இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் எனக்குக் கடிதம் எழுதத் தவறமாட்டார். என்னுடைய எழுத்துகளை, புத்தகங்களைப் படித்து விட்டு உடனுக்குடன் கடிதம் எழுதுவார். அப்போது தொலைபேசிகள், அலைபேசிகள், இல்லாத காலம். கடிதம் ஒன்று தான் தூரத்திலிருக்கும் இதயங்கள் பேசிக்கொள்ளும் தொடர்புசாதனமாக இருந்தது. வாரம் ஒரு கடிதம், சில சமயம் வாரத்துக்கு இரண்டு கடிதம் என்று நாங்கள் பரஸ்பரம் எழுதிக் கொள்வதுண்டு. சில சமயம் கடிதம் தொடர்கதை போல ஒன்று, இரண்டு, மூன்று எனத் தொடர்வதும் உண்டு. இன்று பெரும்பாலும் கடிதம் அலுவலக நடைமுறைகளுக்கான விஷயமாக மாறி விட்டது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் மாற்றங்கள் வருவது இயற்கை. இப்போது எல்லாம் விரல்நுனியில். ஒரு சிறு யந்திரம் மூலமாக எத்தனை தூரத்தையும் கடந்து பேசி விடும் ஆற்றல் மனிதனுக்கு வந்து விட்டது. என்னால் மிகச்சிலரிடம் மட்டுமே மனம் விட்டு பேசிக் கொள்ள முடிந்ததென்றால் அவர்களில் கமலாலயனும் ஒருவர். என்னுடைய மகிழ்ச்சியை, வருத்தத்தை, ஏமாற்றத்தைப் பகிர்ந்து கொள்கிற ஆத்மார்த்தமான நண்பர் கமலாலயன். தோழமை என்பதின் முழு அர்த்தத்தை அவரிடமே நான் தெரிந்து கொண்டேன்.

வாழ்க்கையின் கொடிய பற்சக்கரங்களில் சிக்கிய கலைஞன் கமலாலயன். ஆனால் வாழ்க்கையோடு போராடிக் கொண்டே தன் கலையின்அடர்த்தியைக் காப்பாற்றிக் கொண்டிருப்பவர். அவருடைய வாழ்வின் போராட்டங்களை வேறொருவராக இருந்தால் இதற்குள் வாழ்வைச் சபித்து சரணாகதி அடைந்திருப்பார். கலையின் காற்றுகூட படாத இடத்துக்குத் தலைமறைவாகிப் போயிருப்பார். ஆனால் கமலாலயன் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார். தன் கலைக்காகவும், வாழ்க்கைக்காகவும். தொடர்ந்த இந்தத் துயர்மிகு பயணத்தில் அவருடைய துணைவியாரின், குழந்தைகளின், ஒத்துழைப்பு மகத்தானது. அவர்களுடைய ஊக்கத்தினாலேயே இன்னமும் நம்பிக்கை தளராமல் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகையில்லை.

எனக்கு மனம் சோர்வுறும் போது நல்ல புத்தகங்களை வாசிப்பேன் அல்லது கமலாலயனிடம் பேசுவேன். புத்தகங்களை வாசித்து முடித்ததும் அது வரை இருந்த சோர்வு மாயமாகிவிடும். வாழ்வின் மீது மகத்தான நம்பிக்கை ஊற்றெடுக்கும். இந்த வாழ்வோடு மல்லுக்கட்ட ஆவேசம் பொங்கியெழும். மனம் உற்சாகமாகி விடும். இதுவெல்லாம் கமலாலயனிடம் பேசும்போதும் நேரும். நான் உளறுகிற அத்தனை விஷயங்களையும் பொறுமையாகக் கேட்பார். என் கோபம், வருத்தம், எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டு அவருடைய மென்மையான குரலில் என்னை ஆற்றுப்படுத்துவார். அந்தக் குரல் அதிலிருக்கும் கனிவு, வறண்ட என் மனதில் அன்பைப் பொழியும். ஈரமான இதயம் அவருக்கு நன்றி சொல்லும்.

தமிழில் மிகமுக்கியமான மொழிபெயர்ப்பாளர். அவருடைய மொழிபெயர்ப்பில் மிகச் சமீபமாக வெளிவந்த ’ புவி முழுமைக்குமான நீதி- சே குவேரா ‘, ‘ மனிதர்கள் விழிப்படையும்போது – கோதாவரி பருலேக்கர் ‘ ‘ யதார்த்தத்தை வாசித்தல் – பாவ்லோ பிரேயர்’ புத்தகங்கள் தமிழ்ச் சிந்தனையில் ஒரு கொதிப்பை ஏற்படுத்தியவை. அதேபோல அவர் எழுதிய மேரி மெக்லியோட் பெத்யூன் என்ற கறுப்பினப் பெண்ணின் சுயசரிதை நூல் அற்புதமான புத்தகம். அந்தப் புத்தகத்தைத் தொடாதே உனக்குப் படிக்கத் தெரியாது என்ற வார்த்தைகளின் வலியை தன் நெஞ்சில் சுமந்த மேரியே கறுப்பினக்குழந்தைகளுக்கான முதல் பள்ளிக்கூடத்தை உருவாக்கியவர். வாசிக்க வாசிக்க உத்வேகமூட்டும் கதை மேரி மெக்லியோட் பெத்யூனின் கதை. உணர்ச்சி பொங்கும் நடையில் அதை எழுதியிருப்பதன் மூலம் கமலாலயன் தமிழுக்குத் தன் கொடையை அளித்துள்ளார். அவருடைய பார்வைகள் மாறும் என்ற சிறுகதைத் தொகுப்பு முக்கியமான கதைகளைக் கொண்டது. மானுடவீதி, நம் எல்லோரிடத்திலும் ஒரு சிற்பி, போன்ற நூல்கள் தமிழில் கவனம் பெறவேண்டியவை.

சமகால இலக்கிய உலகம் போட்டிகளாலும், பொறாமைகளாலும், குழுஅரசியலாலும் தன்முனைப்புகளாலும் தன்னைப் போர்த்திக் கொண்டுள்ளது. உண்மையான மதிப்பீடுகளை விட சிபாரிசுகள், முக்கியமானவை. எழுத்தின் தரத்தை விட விளம்பரம் செய்யும் புரோமோஷன்கள் அவசியமானவை. இப்படிப்பட்ட காலகட்டத்தில் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் தன் பங்களிப்பை செய்து கொண்டிருக்கும் கமலாலயன் போன்றவர்கள் கவனிக்கப்படாமல் போவதில் ஆச்சரியமில்லை. உரிய அங்கீகாரம் கிடைக்காமல் ஓரங்கட்டப் படுவதில் வியப்பதற்கு எதுவுமில்லை. கமலாலயன் இதைப் பற்றிக் கவலைப்படவுமில்லை. நான் பல நேரங்களில் வருத்தப்பட்டு பேசும் போது தன்னுடைய கனிவின் சிகரத்திலிருந்து மிக மெதுவான குரலில் கமலாலயன் சொல்லுவார்.

“ எதுக்கு உதயசங்கர் கவலைப்படறீங்க.. நாம செய்றத செய்ஞ்சுகிட்டே இருப்பம்.. எல்லாத்தையும் காலம் பாத்துக்கிடும்….”

அது தான் கமலாலயன். என் அருமைத் தோழர் கமலாலயன்!.

நன்றி – மீடியா வாய்ஸ் 

Sunday, 8 July 2012

இரவின் காட்டில்..

 

திரைப்பட இயக்குநர் குமார் ஸஹானி

 

தமிழில் – உதயசங்கர்

John_Abraham_director_300 

உர்பினோ என்ற புராதன இத்தாலி நகரத்தில், குன்றின் உச்சிக்கு வளைந்து செல்கிற வெள்ளைக்கல்பாதை எங்களை அற்புதமான தோரணவாயில்களினூடாக ஒரு மியூசியத்தில் கொண்டு போய்ச் சேர்த்தது. கன்னிமேரியின் சிலைக்கு முன்னால் என்னை மறந்தநிலையில் நான் நின்றதை நினைத்துப் பார்க்கிறேன். அவள் குழந்தையைச் சாய்த்துப் பிடித்திருந்தாள். அந்தக் குழந்தையின் கண்களால் நம்மைக் கட்டிப் போடப் போவதைப் போல. கற்சிலைகளுக்கு நாம் அர்ச்சனை செய்கிற சிவப்புப் பூக்கள் அந்த விக்கிரகங்களைச் சுற்றிலும் ஒளி வீசிக் கிடந்தன. கடைசியில் ஒருவன் எப்போதும் மரியத்தின் பார்வையில் திரும்பிச் செல்கிறான். சொந்த அவயவங்களைப் போல அவள் அந்தக் குழந்தையைப் பிடித்திருந்தாள். ’ அவன் அவளுடைய பலியாவான் ‘ சாந்தமும் தெளிவுமாக அடக்கமான ஒரு வார்த்தை.

மரியத்தினுடைய பார்வையை விடத் தீர்க்கமாக அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொண்டு எனக்கருகில் ஜான் ஆபிரகாம் நின்று கொண்டிருந்தார். ‘ ஆமாம் ‘ என்று நான் சொன்னேன். அதற்கு மேல் நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

பலி கொடுக்கப்பட வேண்டிய குழந்தை தான் தானென்று ஜானுக்குத் தெரிந்திருந்தது. ஒரு வகையில் இது அவருடைய தீர்மானமாகவும் இருந்தது. நம்முடைய அமைப்பின் சூழ்நிலைகளினால் நாம் இதைப் போன்ற பழைய நடைமுறைகளை யோசிக்கிறோமோ என்று நான் அதிர்ச்சியடைவதுண்டு. இந்த தரித்திரபூமியை உய்விப்பதற்காக தன்னுடைய கலைப்படைப்புகளைப் பலி கொடுத்து, எல்லாம் இழந்து இளமையிலேயே இறந்து போகிற தீர்க்கதரிசியாக விதிக்கப்பட்டவனோ கலைஞன்?

” அம்ம அறியானில்” வருகிற அம்மா பலஹீனமானவள். ஆனால் அவள் பிறந்தவுடன் இறந்து போகிற ஏராளமான குழந்தைகளுக்கு உயிர் தருகிறாள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர் கொடுக்க வேண்டியிராவிட்டால் அவர்கள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமையைத் தருவதற்கு ஜான் விரும்பினார். அதொன்றும் எளிதானதில்லை. பெயர்கள் ஒவ்வொரு விதத்தில் வேறுபடும். அவை அவர்களை ஜாதி, மத, சமூக வட்டத்துக்குள் ஒதுக்கித் தள்ளிவிடும். அதைத் தாண்டி அவர்களால் போக முடிவதில்லை.

” அம்ம அறியான் “ வெளியிடுவதற்கு முன்பு மக்களோடு சேர்ந்து வேலை செய்து மக்களிடம் சென்றடைவதைப் பற்றி ஜான் சொன்னார். முகமில்லாத மக்களின் பேரில் பேசுகிற எல்லாசர்வாதிகாரிகளையும், அரைத் தெய்வங்களையும் பற்றி யோசித்துக் கொண்டே ஆடிட்டோரியத்தில் பெரிய நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நான் சிந்தனையில் மூழ்கிப் போனேன்.

ஆனால் ஜான் வித்தியாசமானவராக இருந்தார். அவருடைய குரல் தாழ்ந்தும் சாந்தம் நிறைந்தும் இருந்தது. இரவின் காட்டில் அலைந்து திரிந்து வந்து சேர்ந்தவனின் களைத்துப் போன குரலாக இருந்தது. அந்தக் குரலிலிருந்து அவர் சோர்ந்து போயிருந்தார் என்று தோன்றியது. அவருக்குக் கொஞ்சம் குடிக்கவேண்டும் போலிருந்தது. வார்த்தைகளில் வேகம் குறைந்திருந்தது. அம்மாவினுடைய களங்கமில்லாத ஏக்கத்தை அதனூடே பார்க்க முடிந்தது.

யதார்த்தத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற வேண்டி நம்மைச் சுற்றி மூடியுள்ள வெளிச்சம் புகமுடியாத கூடுகளை ஜான் ஒரு போதும் சகித்ததில்லை. ஒரு தடவை நாங்கள் சேர்ந்து சென்ற புகைவண்டிப் பிரயாணத்தில் அவர் சந்தோஷமான முகங்களைப் பார்த்து கை தட்டிச் சந்தோஷப்பட்டார். தான் என்ற அகங்கார முகமூடியணிந்தவர்களை அவர் ஒரு தாயின் கனிவுடன் பார்த்தார்.

1985 ஆம் ஆண்டு ஜூனில் பெசாரோவில் அவருடைய மிகப் புகழ்பெற்ற திரைப்படம் திரையிடப்பட்ட போது முன்னாலிருந்து அவர் ஊளையிட்டார். எல்லாவிதமான பொய்யான புகழுரைகளையும் ஒதுக்கித் தள்ளினார். தன்னைப் பற்றி அறிந்த ஒரு கலைப்படைப்பின் பொய்யான சுமைகளை நிராகரிப்பதற்காக மட்டுமில்லை. சொந்த இமேஜுக்காக சினிமாக்காரர்கள் போடும் பொய்யான நடிப்பையும் கிழித்தெறிவதற்காகவும் தான்.amma

இமேஜிலிருந்து மட்டும் உருவாகும் ஆளுமை வெறும் சூனியம் தான் என்று பின்னால் அறிந்து கொள்ள முடியும். தான் யாரென்று அறியுமுன்பே கண்ணாடியில் சொந்த பிரதிபிம்பத்தைத் தெரிந்து கொள்கிற குழந்தையைப் போல இமேஜினுடைய பொய்யான பாத்திரத்தில் ஒருவன் தன்னை அடைத்துக் கொள்வானோ? குளிக்கும்போது தன் பிரதிபிம்பத்தைப் பார்க்கிற இளைஞனிடமிருந்து தான் “ அம்ம அறியான் “ தொடங்குகிறது. பின்னால் வாழ்வையிழந்த ஏராளமான முகங்களில் இந்தப் பிரதிபிம்பம் நிழலாகத் தொடர்ந்து வரும். மறுபுறத்தில் உயிருள்ள ஒரு உடம்பின் செல்களைப் போல மக்கள்தொகை பெருகிக் கொண்டே போகிறது. கர்ப்பப்பையிலிருந்து வெளியே வருவதற்குள் தன்னை உருவாக்கிக் கொள்ளவும் , வெளியே வந்து வளர்ந்து முரண்பாடுகளோடு, சொல்ல முடியாத வேதனைகளை அநுபவிக்க வேண்டி வரும் என்பது தான் விதி. வெளியுலகிற்குப் பாய்ந்து வரும்போது ஆயிரம் மரணம் நேர்ந்தாலும் அது கோழைத்தனமாகாது. துணிவு மிக்கது. புழுவுக்கும் பட்டாம்பூச்சிகளுக்கும் கூட பிரிவுகளும் மரணமும் உண்டு.

வேறு எதற்காக இல்லையென்றாலும் ஒரு கனவை நனவாக்க வேண்டி மோசமான பிர்ச்னைகளை எதிர்கொள்ள வேண்டி தன்னை அர்ப்பணிக்க ஜான் நினைத்தார்.

முதல் கேரளப் பிரயாணத்துக்குப் பின் நானும் என் மனைவியும் ஜானை சென்னையில் சந்தித்தோம். திருச்சூருக்குப் பக்கத்தில் சொர்க்கம் போல ஒரு இடம் கண்டுபிடித்திருப்பதாக எங்களிடம் சொன்னார்.

“ வாங்க.. எங்க ஊருக்கு வந்து இருங்க..” என்று ஜான் கூறினார்.

“ நாங்க அங்கே வந்து என்ன செய்ய ஜான்? “

“ நீங்க திரைப்படம் எடுங்க.. உங்களுக்காக நான் உழைக்கிறேன்.. பசிக்கும் போது சீனிக்கிழங்கும் மீனும் தர்றேன்..”

தன்னைப் பாதித்தவர்களிடம் ஜான் கொள்ளும் ஆவேச உணர்ச்சி ஜானைத் தெரியப்படுத்தும். டெல்லியில் லோதி கார்டன்ஸில் ஒரு இரவில் ஜான் ஒரு முதிர்ந்த மரத்தைக் கட்டியணைத்துக் கொண்டார். அவருடைய முகம் முழுவதும் எறும்புகள் ஊர்ந்து கடித்தன. வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான ஒரு நிமிடமாக இந்த நிகழ்வை வெகுகாலம் வரை ஜான் நினைவு கொண்டிருந்தார்.

எல்லா நிலைகளிலும் ஜானுடைய இடைவிடாத நாடோடி வாழ்க்கை உறுதியாகவே இருந்தது. அதில் தார்மீகம் எதுவுமில்லை. ஆனால் ஏக்கங்கள் இருந்தன. அம்மாவிடம் கொண்ட பொறாமை ஜானை ஒரு நார்சிஸ்ட் ஆக்கி விட்டது. ஆக்கசக்தி, அழிவுசக்திகளையெல்லாம் தன் மீது ஏற்றிக் கொள்கிற ஒரு குட்டி நார்சிஸ்ட் நம் எல்லோரிடமும் இருக்கிறான். ஒரு கட்டம் வரை ஜான் அம்மாவோடு கொண்ட பொறாமை, அவர் பாட்டில்களைப் பிடித்ததைப் போல என்றும் பால் சுரக்கும் மார்புகளைப் பிடித்துக் குடித்ததனால் இருக்கலாம்.

இந்தப் பொறாமையை ஜான் தன்னுடைய கடைசிக் காலத்தில் கடந்துவிட வேண்டுமென்று உணர்ந்தார் என்று எனக்குத் தோன்றியது. தனக்கேயுரிய வழியில் அவர் அந்த அம்மாவாக மாறுவதற்கு ஆசைப்பட்டார். இலைகளும், பூக்களும் மலர்ந்து சேர்கிற பூங்காற்றின் ஸ்பரிச சுகத்தை அவர் விரும்பினார். நிலைபாட்டிற்கான ஜியோமிதி அவரை வசீகரித்தது. ஆனால் சூனியவெளியிலுள்ள அறிவுப்பூர்வமான சிறகசைப்புகள் அம்மாவினெதிரே அவமானங்களாயின. உண்மையில் தான் நிலை நிறுத்த விரும்பிய முடிவில்லாத உறவு ஒருவேளை ஜானுக்குப் போரடித்திருக்கலாம்.

வயக்காட்டில் அடர்ந்த பச்சைப்புற்களின் மீது நின்று தலையைத் திருப்பினார். இசையிலும், அவர் விரும்பிய மற்ற விஷயங்களிலும் திருப்தியே அடைந்தார். பெண்களிடம் மடோன்னாவைப் போல ஆக வேண்டும் என்று வேண்டினார். அந்தப் பெண்களும் அவர் தங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறார் என்று புரிந்து கொண்டார்கள்.

போகப் போக உலகத்துக்கு அர்ப்பணிக்கப் படுகிற பலிக்குழந்தையிடத்திலும் கண்ணாடி பிம்பத்திலும் தன்னைத் தேடினார். கன்னி மேரியுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்தார். கியோவானி பெல்லினியுடைய 1460 க்கும் 1464 க்கும் இடையிலுள்ள ஓவியங்களில் ஜான் தன்னைத் தானே கண்டு கொண்டிருக்க வேண்டும். தன்னுடைய சரீரத்திலிருந்து வெளியேறிய நிமிஷத்திலேயே வேறாக மாறிவிடுகிற குழந்தையின் சரீரத்தைக் கண்டு ஆனந்தப்படுகிற மடோன்னா தான் இந்த ஓவியங்களில் இருந்தாள். உலகத்தோடு தன்னை வேறுபடுத்துகிற ஏதோ ஒன்று போல, தான் ஆசைப்படுகிற ஒரு அழகிய கனவின் வெளிப்பாடு அந்த முகத்தில் இருந்தது.

ஜானுடைய அடுத்த திரைப்படத்தில் அம்மாவிடம் ஒரு பிணமோ, கடிதமோ, செய்தியோ, கொண்டு போகத் தேவையில்லை. அவருக்கு நூறு வயது ஆகியிருக்கும். அவருக்கு வேண்டி ஒரு பலி அவசியமாகவும் இருக்கும்.

( ஜான் ஆபிரகாம் நினைவாக..)

Saturday, 7 July 2012

சிலுவை

உதயசங்கர்death2

 

எத்தனையோ முறை சொல்லியும்

எனக்கான தேநீரில்

எப்போதும் நீங்கள் சர்க்கரையைச் சேர்த்து விடுகிறீர்கள்

மற்றபடி

தயாரிப்புமுறையில் குறையில்லை

சிலவேளைகளில்

பிறவிப்பெருங்கடலை நீந்தி முடித்த

எறும்புகள் சில மிதந்து கொண்டிருக்கலாம்

சிலவேளைகளில் தேயிலையின் துவர்ப்பு கூடி

தொண்டையில் யுத்தம் நடத்தலாம்

சிலவேளைகளில்

தேயிலையின் அடையாளமே

தெரியாமலும் இருக்கலாம்

ஆனால் தோழரே

எத்தனையோ முறை சொல்லியும்

எனக்கான தேநீரில்

எப்போதும் நீங்கள் சர்க்கரையைச் சேர்த்து விடுகிறீர்கள்

உலகத்தை ஒரு சுவை இரண்டாகப் பிரிப்பதை

புரிந்து கொள்ளவில்லை நீங்கள்

சர்க்கரைச்சிலுவையைச் சுமந்துக் கொண்டு

திரிகிறேன் நான்

சிலுவையில் அறையப்படும் நாளை

எதிர்பார்த்து

உயிர்த்தெழும் அதிசயத்தில் நம்பிக்கையில்லை

யாரும் காப்பாற்ற வருவார்களென்று

கனவு காணவும் இல்லை

எனக்குத் தெரிகிறது என்

கல்வாரி மலையுச்சி

என் நாவில் ஒரு துளி மதுரம்.

என் கண்ணில் ஒரு துளி உப்பு.

Friday, 6 July 2012

எழுத்தாளனின் பிறப்பு

 

எஸ். கே. பொற்றேகாட்S._K._Pottekkatt

 

தமிழில்- உதயசங்கர்

 

நான் ஹைஸ்கூல் மாணவனாக இருந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சி தான் என்னைச் சிறுகதை எழுதும்படி தூண்டியது. தன்னுடைய மகனை நன்றாக வளர்க்கவும், அவனுக்குக் கல்வி தருவதற்காக தன்னுடைய கை முதலையெல்லாம் விற்றுச் செலவழித்து அதுவும் போதாமல் பக்கத்து வீடுகளில் வேலைகள் செய்து நிறைய்ய கஷ்டங்களை அநுபவித்த எழுத்தறிவில்லாத ஒரு வயதான அம்மாள் இருந்தாள். அவள் ஆசைப்பட்ட படியே அந்த மகன் ஒரு அரசாங்க உத்தியோகஸ்தன் ஆனான். பிறகு அவனுக்கு ஏற்ற அரசாங்க ஊழியையைத் திருமணம் முடித்து தூரமாய் ஓரிடத்தில் சுகமாய் வாழ்ந்தான். அவனுடைய அம்மாவைக் கவனிக்காமல் விட்டு விட்டான். தனிமையிலும் பசி பட்டினியிலும் கிடந்துழன்ற அந்தக் கிழவி தன்னுடைய மகனின் மனதைக் கரைப்பதற்காக நீண்ட கடிதங்கள் எழுத என்னைத் தேடி வருவாள். நான் ஸ்கூல் ஹோம்வொர்க் செய்து கொண்டிருப்பேன். பாவம் அந்த அதிர்ஷ்டம் கெட்ட கிழவி ஏதாவதொரு ஸ்டேஷனரிக் கடையில் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிய கோடிட்ட கடிதம் எழுதும் தாளும், முத்திரை உறையையும், ஒரு கையில் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் தடவித்தடவி படிகளேறி என் வீட்டு வராந்தாவிற்கு வருகிற காட்சி இப்போதும் என் கண்முன்னே தெரிகிறது. அவள் கடிதத் தாளையும் உறையையும் என் மேஜையினருகில் வைத்துத் தரையில் முழங்கால் மடித்து அமர்வாள்.

தன்னுடைய கஷ்டங்களையும், மகனுக்காக அவள் செய்த தியாகங்களையும் பொங்கி வரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டும், மூக்கைச் சிந்திக் கொண்டும் ஒவ்வொன்றாகச் சொல்லுவாள். அவன் வயிறு நிறைய சாப்பிடுவதற்காக நான் பட்டினி கிடந்தேன். அவனுக்கு ஸ்கூலில் உபகரணப்பெட்டி வாங்கப் பணமில்லாததால் என்னுடைய இடுப்பில் ரெம்ப காலமாய் கிடந்த ஒரு பொற்காசை விற்றேன். இதெல்லாம் அவனுக்கு ஞாபகமிருக்கிறதா என்று எழுதிக் கேள். இப்போது அவனுக்கு என்னைப் பிடிக்கவில்லை. அவன் என்னைக் குஷ்டம் பிடித்த நாயை ஒதுக்குவது போல ஒதுக்கிவிட்டான். இதையெல்லாம் அவன் மனசு இரங்கும்படி எழுதி அனுப்ப வேண்டும் என் மகனே! ( இது என்னிடம்). தெய்வத்தை மறக்க வேண்டாம் என்றும் சொல்ல வேண்டும்.

மன்னிக்கவே முடியாத, நன்றி கெட்ட தன் மகன் மீது அந்தக் கிழவிக்கு எந்த வெறுப்பும் இல்லை. அவனை மயக்கிக் கொண்டு போன அந்தச் சிமிட்டியின் மீது தான் அவளுடைய வெறுப்பு முழுவதும் இருந்தது.

எனக்கு அந்த மூதாட்டியின் பரிதாபநிலையைப் பார்த்து அநுதாபம் தோன்றியது. அவள் கண்ணீரைக் கலந்து சொல்லிய கதைகள் என்னை உணர்ச்சிகரமாக்கியது. அவள் சொன்னதையெல்லாம் வரிசைப்படுத்திச் சொந்தமாய் சில சரஸ்வதி சமாச்சாரங்களையும் சேர்த்து அந்த மடையனான மகனுக்குத் தொடர்ந்து கடிதங்கள் எழுதி அனுப்பினேன். இரண்டு மூன்று மாதங்கள் கழிந்த பிறகு, அவன் மனைவிக்குத் தெரியாமல் அம்மாவுக்கு ரகசியமாய் கொஞ்சம் பணம் அனுப்பத் தொடங்கினான். அவன் மனம் மாறியது சொந்த புத்தியாலா அல்லது என்னுடைய கடிதங்களில் எழுதிய வாக்கியங்களினாலா என்று எனக்குத் தெரியாது. கடைசியில் சொன்னது தான் உண்மையென்று குழந்தைகளுக்கேயுரிய வழக்கத்தில் நான் நம்பினேன். அந்த மகன் ஒரு தடவை அம்மாவைப் பார்க்க வரவும் செய்தான். அப்போது அவன் அவளிடம் யார் இந்தக் கடிதங்களையெல்லாம் எழுதிக் கொடுத்தது என்று கேட்டதாகவும் ஒரு ஸ்கூல் மாணவன் என்று கிழவி பதில் சொன்னதாகவு நான் தெரிந்து கொண்டேன். உடனே எனக்குப் பெருமை தாங்கமுடியவில்லை.

ரெம்பநாள் மகனின் ஆதரவில் சுகமாய் வாழும் முன்பே அந்தக் கிழவி முடிவில்லாத அமைதியைத் தேடி மண்ணிற்குக் கீழே போய்ச் சேர்ந்தாள். ஏறத்தாழ முழுக்குருடியாக இருந்த அந்த மூதாட்டி தான் என்னை சிறுகதை எழுத வைத்த என்னுடைய முதல் குருநாதர். அவளுடைய மகனுக்கு அன்று நான் எழுதிய கடிதங்கள் தான் என்னுடைய ஆரம்பகாலச் சிறுகதைகள் என்று சொல்லலாம். சிறுகதைகளினால் மற்றவர்கள் மனசைக் கரைய வைக்கும் திறமை எனக்கிருக்கிறதா என்று நான் சொல்ல முடியாது. ஆனால் எரிகிற நெஞ்சும், காய்ந்த வயிறுமாய் கஷ்டப்பட்ட ஒரு தரித்திரத்தாயின் அந்திமக்காலத்தைக் கொஞ்சம் நம்பிக்கைக்குரியதாக்கினேன். பாசமில்லாத ஒரு இளைஞனுக்கு ஹிருதய அன்பின் ஒரு சித்திரத்தை வரைந்து காண்பித்து அவன் மனதை இளகவைக்கவும் முடிந்தது என்று நான் பெருமையுடன் நம்புகிறேன்.

நன்றி- கிரந்த லோகம்

மார்ச் 1950

Thursday, 5 July 2012

கதாவெளியில் விரியும் சிறகுகள்

DSC_0007  

உதயசங்கர்

 

கணந்தோறும் துடிதுடிப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கைப் பேராற்றில் தான் கலைஞனும்

ஒரு கை நீரள்ளி அருந்துகிறான். அவன் அருந்துகிற ஒவ்வொரு துளியும் இந்த வாழ்வின் காட்சிகளை வேறு ஒரு கோணத்தில் அவனுக்குக் காட்டுகிறது. வாழ்வின் நுட்பங்களை அவனுடைய கலைமனம் ரசவாதம் செய்து கலையாக மாற்றுகிறது. படைப்பின் நுட்பங்களில் நாம் கவனம் கொள்கிற போது கலைஞனின் கலைத்துவத்தை நம்மால் உணரமுடிகிறது. யாரும் கவனிக்காத, எல்லோரும் அலட்சியப் படுத்துகிற எவருக்கும் ஒரு பொருட்டாக இல்லாத, அற்பமென, துச்சமென, நினைக்கிற எதுவும் கலைஞனின் மனதில் முக்கிய இடம் பிடிக்கிற விசித்திரத்தைப் பார்க்கிறோம். இந்த விசித்திரத்தின் வழியே தான் தன் ஊனை உருக்கி உயிரைக் கரைத்து கலையாகப் படைக்கிறான்.

மானுடத்தின் சாராம்சம் மனித உறவுகளே.மனித உறவுகளில் ஏற்படும் முடிவுறாத சிடுக்குகளைப் புரிந்து கொள்ளவே கலைஞன் முயற்சிக்கிறான். உறவுகளின் வழி வக்கிரங்களும்,குரூரங்களும், அலட்சியங்களும் விளைவதைக் கண்டு மனம் துயருற்ற கலைஞன் மீண்டும் மீண்டும் தன் படைப்பின் மூலம் விளங்கிக் கொள்ள விழைகிறான். அதையே மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்கிறான். ”கனவில் உதிர்ந்த பூ” என்ற தன்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பின் மூலம் குறிப்பிடத் தகுந்த சிறுகதைஎழுத்தாளராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட நாறும்பூநாதனின் இரண்டாவது தொகுப்பு இது.

எல்லோருடைய வாழ்விலும் அப்பாவுக்கென்று தனித்தஒரு இடம் உண்டு. நல்லதும் கெட்டதுமாக அப்பாவினால் பாதிப்படையாத குழந்தைகளே இருக்க மாட்டார்கள். பிஞ்சிளம் பருவத்தில் அப்பா என்கிற படிமம் மனதில் ஏற்படுத்திய ஆதர்சம்,அப்பாவின் விரல் பிடித்து அவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நடந்த பரவச உணர்வு, அப்பாவின் சட்டை, அப்பாவின் செருப்பு, அப்பாவின் பேனா, அப்பாவின் பேனா, அப்பாவின் புத்தகம், என்று அப்பாவின் உலகமே அற்புதமாகத் தோன்றும்.இளம் வயதில், சாகச நாயகனாக தெரியும் அப்பா, வளர வளர, மேக்கப் கலைந்த கோமாளியாகத் தோன்றுவதும், வில்லனாக மாறுவதும் நடக்கும். அப்பாவின் அலட்சியமும் கண்டிப்பும், அங்கீகரிக்க மறுக்கும் அப்பாத்தனமும், உலகிலேயே மிக மோசமான ஆள் தன்னுடைய அப்பாதான் என்று தோன்றும். விதிவிலக்குகள் இருக்கலாம்.ஆனால் அப்பாவாக தானே மாறும் போது, தன் அப்பாவின் குணாதிசயங்கள் வேறு ஒளியில் துலங்கும். கலைடாஸ்கோப்பின் ஒரு சிறுகோண மாற்றத்தில் வாழ்வு விசித்திரத் தோற்றங்களை உருவாக்குகிறதே. இந்தத் தொகுப்பிலும் அப்பா என்ற படிமத்தின் பன்முகத் தோற்றங்களை “கையெழுத்து, அப்பாவின் கடிதம், முகம்,” போன்ற கதைகளில் காண முடிகிறது. கடினசித்தம் கொண்ட அப்பாவாகத் தெரிகிற அந்த மனிதர் எழுதுகிற கடிதங்களில் அவருடைய பரிசுத்தமான- அது பத்தாம்பசலித்தனமாகக் கூட இருக்கலாம்- அன்பு ஒளி வீசுகிறதே. அதே போல’முகத்திலும், இலை உதிர்வதைப்போல’ கதைகளில் அம்மாவின் படிமம் எழுந்து உருக்கொள்கிறது.இயல்பான, பாந்தமான, பதவிசான, அம்மா.

இந்தத் தொகுப்பிலுள்ள மற்ற கதைகளில் ‘பிடிபடாத சூத்திரங்கள், யாருக்குத் தண்டனை, ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’ போன்ற கதைகளின் களன் வித்தியாசமாக அமைந்துள்ளதைக் குறிப்பிடவேண்டும். நாறும்பூநாதனிடம் இயல்பான ஒரு எள்ளல் தொனி கதைகளில் ஊடும் பாவுமாக நெய்யப் பட்டிருக்கிறது. அதே போல பிடிபடாதசூத்திரங்களில் வரும் கணக்கு வாத்தியாரும், யாருக்குத் தண்டனையில் வருகிற வேதநாயகமும் தமிழுக்குப் புதியவர்கள்.

கலைஅமைதி கூடி ஆழ்ந்த லயம் சேர்ந்த ஒரு சுருதியைப் போல, வெடித்துக் கிளம்பி மனசை உலுக்கும் ஒரு கிராமியப் பாடலைப் போல அபூர்வமாய் ‘ரயில்வே தண்டவாளங்களும் சில புறாக்களும்’ கதை உருவாகியுள்ளது. இதில் வருகிற சாமிக்கண்ணுவின் மனசு நாறும்பூநாதன் என்ற கலைஞனுக்கு பிடிபட்டிருக்கிறது.

நாறும்பூநாதனின் பெரும்பாலான கதைகளில் வீடும் குடும்பமும் முக்கியக் களன்களாக அமைந்திருக்கின்றன.பாலியத்தின் நினைவுச் சுவடுகளைப் பின்பற்றி எழுதிப் பார்த்திருக்கிற கதைகள். அதனால் அதன் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானது தான். சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் மறுபடியும் எழுதத் துவங்கியிருக்கிற நாறும்பூநாதனின் இந்தக் கதைகள் ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளன் மீண்டும் தமிழ்ச் சிறுகதை வெளிக்குள் பிரவேசிக்கப் போவதைப் பிரகடனப் படுத்துவதாகவே இருக்கின்றன.

தமிழ்க் கதாவெளியின் பரிமாணங்கள் மாறிக் கொண்டேயிருக்கின்றன. உலகச் சிறுகதைகளை எழுதும் எழுத்தாளர்களை கொண்டிருப்பதில் கதாவெளி பெருமை கொள்கிறது. இந்த வெளியில் எல்லாப் பறவைகளும் பறந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தொகுப்பைப் பிடித்து உன்னி எழும்பி வெளியில் சிறகுகள் விரித்து பறக்க எத்தனிக்கிற நாறும்பூநாதன்! அதற்கான எல்லா முயற்சிகளும் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன.

அதோ கதாவெளியில் தன் சிறகுகளை விரித்து உயரே உயரே பறந்து கொண்டிருக்கிற ஒரு பறவை….என் இனிய நண்பன் நாறும்பூ!

ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்

நாறும்பூநாதன்

விலை – ரூ 70/

வெளியீடு – வம்சி புக்ஸ்

19. டி.எம். சாரோன்

திருவண்ணாமலை.

Wednesday, 4 July 2012

எழுத்தாளனின் பிறப்பு

 

ஸி.வி.பாலகிருஷ்ணன்

 

தமிழில்- உதயசங்கர்

c.v.balakrishnan

ஆயிரத்தொரு இரவுகளில் விறகு வெட்டியின் மந்திரச் சொற்களால் திறந்த மலைக்குகைக்குள் அவன் நுழைந்த போது உண்டான ஒளிவெள்ளம் தான் என்னுடைய இளம் பிராயத்தில் என்றோ ஒரு நாள் கதைகளின் உலகத்திற்குள் பிரயாணம் செய்தபோது எனக்கும் தோன்றியது. எங்கே திரும்பினாலும் கதைகள்! கதைகள்!

கதைகளில் சில கண்ணீரால் நனைந்திருந்தன. மற்றும் சிலவற்றில் ரத்தத்தின் வாடை இருந்தது. சில கதைகளிலிருந்து செத்துப் போனவர்கள் முறைத்துப் பார்க்கிறார்கள். சில கதைகளில் அவர்கள் பேயாட்டம் போடுகிறார்கள். சில கதைகளினூடே போராளிகள் பயமின்றி நடந்து போகிறார்கள். வேறு சில கதைகளில் கடல் இரைச்சலும், புயற்காற்றும் வீசுகிறது. இன்னும் சில கதைகளில் பூரண சௌந்தரியமாய் தீச்சுவாலைகள்.

அந்தக் காலத்தில் அந்தர்யாத்ம ராமாயணமும், கிருஷ்ணகாதையும், தவிர வேறு எந்தப் புத்தகங்களும் வீட்டிலிருந்ததாக ஞாபகமில்லை. பக்கத்து வீட்டுப் பெரியவர் சாயங்கால வேளைகளில் மகாபாரதத்திலுள்ள பாடல் வரிகளைச் சத்தமாய் வாசிப்பார். பொதுவாக கிராமங்களில் காவியங்களின் மீது மிகுந்த பிரியம் இருந்தது. வள்ளத்தோல் கவிதைகளை எங்கு வேண்டுமானாலும் கேட்கலாம். அந்தந்தப் பிரதேசத்தில் நிகழ்ந்த துரதிருஷ்டமான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதுகிற கல்யாணிக்குட்டியின் கஞ்சத்தனம் என்பது போன்ற காவியங்களை ரசித்து அருகிலுள்ள அச்சகத்தில் அச்சடித்து சந்தைகளிலும், வீடுகளிலும், விற்பனை செய்து கொண்டிருந்த கிராமத்துக்கவிகள் ஏராளம். ஆனாலும் என்ன காரணமோ கவிதை என்னை ஈர்க்கவில்லை. வாசித்து உணர்ந்து கொள்ள என்பதல்ல காரணம். மனசில் தங்கியது கவிஞர் இடசேரியின் கவிதை மட்டும் தான். அதற்கு இடசேரி தன் கவிதைகளினூடே நிறைய கதைகள் சொல்லியிருப்பதும் காரணமாக இருக்கலாம்.

வாசிக்கத் தொடங்கிய நாட்களில் என்னை மிகவும் பாதித்தவர் எஸ்.கே.பொற்றேகாட். ஜனரஞ்சகமான விவரணையும், மிகவும் சூட்சுமமான அநுபவங்களைக் கூட எளிதாக எழுதுகிற வாழ்க்கைப் பார்வையும் வாசகர்களிடம் ஆர்வத்தையும் ஆச்சரியத்தையும் எப்போதும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற கதையோட்டமும், ஏறத்தாழ இறுதிவரை ஆர்வத்தை ஏற்படுத்துகிற விறுவிறுப்பும் அவரை மற்ற கதாசிரியர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. பொற்றேகாடினுடைய கதைகளை வாசிக்கும்போது அவர் நமக்கு முன்னால் நின்று கொண்டு உற்சாகமாய் கதை சொல்லிக் கொண்டிருப்பதான சித்திரம் தோன்றும். கதை எழுதுதலின் பயிற்சிமுறை ரகசியங்களை வெளிப்படுத்துகிற எளிதான, மிகவும் சரளமான கதை சொல்லலாக இருந்தன பொற்றேகாடின் கதைகள். அன்று பொற்றேகாடின் கூடவே தகழியும், உரூபும், பஷீரும், காரூர் நீலகண்ட பிள்ளையும், தொடர்ந்து கதைகள் எழுதிக் கொண்டிருந்தனர். டி.பத்மநாபனையும், எம்.டி. வாசுதேவன் நாயரையும் பின்னும் சிறிது காலம் கழித்தே வாசித்து அறிந்து கொண்டேன். சுற்றிலுமுள்ள மிகச் சாதாரணமான மனித வாழ்விலிருந்து அவர்கள் உருவாக்கிய கதைச் சித்திரங்கள் ஒளி வீசின. அவர்களைப் பின் தொடர்ந்தே நான் வாழ்க்கையை நேருக்கு நேர் பார்க்கத் தொடங்கினேன். அப்போது முன்பு பார்க்காத பல விஷயங்கள் வெற்றிலையில் மை தடவிப் பார்ப்பதைப் போல எனக்குத் தெளிவாகத் தெரிந்தன. அந்த விஷயங்களே பின்னர் கதைகளாக மாறின.

சிறு வயதில் என்னுடைய ஒரே ஆசை எழுத்தாளன் ஆக வேண்டும் என்பது தான். இதை நான் வாய் விட்டுச் சொன்னபோது, கேட்ட கேலியும், கிண்டலும் இப்போதும் என்னுடைய காதுகளில் முழங்கிக் கொண்டிருக்கின்றன. அன்று கேலி செய்த என் தாய்மாமன் பல வருடங்களுக்குப் பிறகு புற்று நோய் பீடித்து இறக்கும் தருவாயில் என்னிடம், “ நீ எழுதியது அத்தனையும் நான் வாசித்திருக்கிறேன்..” என்று சொன்னார். அதைக் கேட்டபோது என் கண்களில் நீர் தளும்பியது. தொண்டையில் ஒரு விம்மல் எழுந்து வந்தது.

தாய்மாமனைப் பற்றித் தான் முதலில் ஒரு கதை எழுதியிருந்தேன். மருமக்கள் தாயம் வழியிலுள்ள ஒரு வீட்டில் அன்பும், சிநேகமும் கிடைக்காமல் வளர்கிற ஒரு குழந்தை தான் அதில் நாயகன். நான் அந்தக் கதையை என்னுடைய இரும்புப் பெட்டியில் ஒளித்து வைத்திருந்தேன். ஆனால் தாய்மாமன் அதைக் கண்டு பிடித்து விட்டார். கதையைப் படித்து விட்டு அவருக்கு வந்த கோபத்தைப் பார்த்த அம்மாவும், ஆச்சியும், நான் பெரிய தவறைச் செய்து விட்டதாக நினைத்தார்கள். பின்பு விஷயம் தெரிந்த பிறகு, ஒரு கதை எழுதியதற்குத் தானா? என்று அடுக்களையில் நின்று கேட்டனர்.

சொல்ல ஆரம்பித்தது ஆயிரத்தொரு இரவுகளில் வரும் விறகு வெட்டியைப் பற்றியல்லவா? மலைக்குகையிலிருந்து ஏராளமாக தங்கநாணயங்களையும் ரத்தினக்கற்களையும் வாரிக் கொண்டு விறகுவெட்டி வெளியேறினார்.

நான் உள்ளே சென்ற கதைக்குகையின் வாசல் அடைத்தே கிடந்தது. அதைத் திறப்பதற்கு உச்சரிக்க வேண்டிய மந்திரச் சொற்களை நான் மறந்து போய் விட்டேன். தன்னுள்ளே நிறையக் கதைகளைக் கொண்டுள்ள இந்தக் குகையிலிருந்து எனக்கு வெளியேற வேண்டும் என்று தோன்றவேயில்லை.

நன்றி- கரண்ட் புக்ஸ் புல்லட்டின் ஜூன் 2001

Tuesday, 3 July 2012

கனவின் சுடரைக் கைகளில் ஏந்தி..

 

உதயசங்கர்

maryMcLeodBethune_jpg

வாழ்வின் மிகச் சில கணங்களில், ஒரு சொல்லோ, ஒரு காட்சியோ, ஒரு புத்தகமோ, ஒரு மனிதரோ, நமக்கு உத்வேகமளிக்கிறார்கள். அதைக் கேட்கிற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கிறது. ஆனால் அது கோரும் உழைப்பையும், தீவிரத்தையும், அர்ப்பணிப்பையும், தருவதற்கு யாரும் முன் வருவதில்லை. ஏனெனில் அது உயிரையே காவு கேட்கிறது. நம் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் தன் பலிபீடத்தில் பலி பொருட்களாக வேண்டுகிறது. தான், தனது, தன் குடும்பம், என்று தந்திரக்கூட்டுக்குள் வாழ்கின்ற எல்லோருக்கும் கமலாலயனின் ‘ உனக்குப் படிக்கத் தெரியாது ‘ குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தும்.

மேரி மெக்லியோட் பெத்யூன் என்ற பெண்மணியின் உறுதியான அர்ப்பணிப்பு, ஒரு இனத்தின் எழுச்சிக்கே வித்திட்டுள்ளது. கறுப்பினமக்களுக்கு கல்வியுரிமை மறுக்கப்பட்டிருந்த காலத்தில் பிறந்து வளர்ந்த மேரி, ஒரு வெள்ளைச்சிறுமியின் ‘ உனக்குப் படிக்கத் தெரியாது ‘ என்ற அவமானச் சொற்களால் இதயத்தால் ஆழமான ஆறாத காயத்தைப் பெறுகிறாள். அந்தக் காயத்தினால் துவண்டு விடாமல் அதன் வழியாகவே தன் தீராஉறுதியைப் பெறுகிறாள். காயத்தின் வலியிலிருந்து அவள் மட்டும் உத்வேகம் பெற்று, சிறந்த பெண்மணியாகவில்லை. தன் கறுப்பினத்தையே அந்த வலியின் சிறகுகளில் ஏற்றி உத்வேகமடைய வைக்கிறாள். அதற்காக அவள் நடந்த கரடுமுரடான பாதைகளும், எதிர்ப்புகளும், அவளை மேலும் மேலும் உறுதியானவளாக்கியது. ஜனநாயக உணர்வுடைய சில வெள்ளையினத்தவரிமிருந்தும் கிடைத்த உதவிகளைக் கொண்டு தன் கறுப்பினத்தின் முன்னேற்றத்துக்காக இருபத்திநான்கு மணி நேரமும் சிந்தித்த பெண்மணியாக மேரி மெக்லியோட் பெத்யூன் வாழ்ந்திருக்கிறார்.

வெறுமனே ஒரு ஐந்து மாணவர்கள் மட்டுமே இருந்த ஒரு சிறிய அறையில் மரப்பெட்டியே மேஜையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பள்ளி மேரி மெக்லியோட்டின் அயராத உழைப்பால் அறுநூறு மாணவர்களைக் கொண்ட பள்ளியாகவும் கல்லூரியாகவும் உயர்ந்த வரலாறு. அது மட்டுமல்ல. கற்பித்தல் முறைமையிலும் பெரும் மாற்றத்தைச் செய்து பார்த்திருக்கிறார் மேரி மெக்லியோட் பெத்யூன் என்பது இந்தப் புத்தகத்தில் அங்கங்கே வருகிற குறிப்புகளை வாசிக்கும் போது தெரிகிறது.

பருத்திக்காட்டில் ஏதுமறியாத சிறுபெண்ணாக உழைத்து வந்த மேரி மெக்லியோட்டின் வாழ்க்கை அமெரிக்க நாடே போற்றுகிற ஆளுமையாக வளர்ந்த வரலாறு. இந்த வரலாறு முழுவதும் மேரி மெக்லியோட்டின் ரத்தமும் வியர்வையும் சிந்தப் பட்டிருக்கிறது. எல்லோரும் கனவுகள் காண்கிறோம். மேரி மெக்லியோட் ஒரு சமூகத்துக்கான கனவைக் காண்கிறார். அடிமைகளாக இருந்த காலத்தின் ஈரம் உலர்வதற்கு முன்பே அதைப் புரட்டிப் போட்டு மாற்றுவதற்கு கல்வி எனும் ஆயுதத்தைக் கையிலெடுத்துப் போராடியிருக்கிறார்.

“ க்ரு க்ளக்ஸ் க்ளான்” என்ற வெள்ளை நிறவெறி அமைப்பின் அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தீரமான மன உறுதியைக் காட்டியிருக்கிறார். கறுப்பர்களுக்கு வாக்குரிமை தரக்கூடாது என்ற பயமுறுத்தல்களுக்கு எதிராக வாக்குரிமை அளிக்க முதல் ஆளாய் புறப்பட்டிருக்கிறார். லின்ச்சிங் எனப்படும் கறுப்பர்களைக் கேள்வி முறையின்றி மரங்களில் தூக்கிலிட்டுக் கொன்ற இனவெறி அமைப்பு வலுவாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் மேரி மெக்லியோட் பெத்யூன் இத்தகைய செயல்களைச் செய்திருக்கிறார். எனவே தான் “உனக்குப் படிக்கத் தெரியாது “ என்ற இந்த நூல் மேரி மெக்லியொட் ஒரு ஆளுமையாக வளர்ந்த வரலாறாக மட்டுமின்றி அமெரிக்கக் கறுப்பின மக்களின் வரலாறாகவும் விரிகிறது.

உனக்குப் படிக்கத் தெரியாது என்ற சொற்களால் அவமானப் படுத்தப்பட்ட சின்னஞ்சிறு மேரி மெக்லியோட் இறுதி வரை அதை மறக்கவில்லை. ஒவ்வொரு முரை துவளும்போதும் அந்த வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்து அவருக்குப் புதிய உத்வேகமளிக்கிறது. இளம் பிராயத்தில் எல்லோருக்குமே லட்சியங்கள் உருவாவது உண்டு. காலத்தின் சிலந்தி வலைப் பின்னலில் அன்றாட வாழ்க்கை சிக்கிச் சின்னாபின்னாமாகும்போது அந்த லட்சியங்களின் நிழல் கூடத் தெரியாமல் வாழ்ந்து முடிக்கிற சாமானியர்களான நமக்கு மேரி மெக்லியோட் என்ற ஆளுமையின் வரலாற்றை வாசிக்கும் போதும் வாசித்து முடிந்த பின்னரும் உத்வேகமளிக்கும் என்றால் மிகையில்லை.

இந்த அபூர்வமான ஆளுமையைத் தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிற கமலாலயன் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர், சிறுகதையாசிரியர், எப்போதெல்லாம் மனம் சோர்வடைகிறதோ அப்போதெல்லாம் வாசிப்பதற்காக நம் கையில் எப்போதும் இருக்க வேண்டிய புத்தகம் உனக்குப் படிக்கத் தெரியாது.

உனக்குப் படிக்கத் தெரியாது

கமலாலயன்

விலை: 60/

வெளியீடு- வாசல் பதிப்பகம்

40 டி - வசந்த நகர்

மதுரை- 625003

அலைபேசி – 9842102133

நன்றி- புத்தகம்பேசுது

Monday, 2 July 2012

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்

சாதத் ஹசன் மண்ட்டோ

ஆங்கிலத்தில் – காலித் ஹசன்

தமிழில்- உதயசங்கர்

manto

இந்த சம்பவம் கிழக்குபஞ்சாப்பும் மேற்கு பஞ்சாப்பும் இந்து முஸ்லீம் கலவரத்தினால் சூறையாடப்பட்ட காலத்தில் நடந்தது. பல நாட்களுக்கு கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. மனிதர்களிடம் இருந்த அணைக்க முடியாத பெருந்தீயை இயற்கை அணைத்தது. ஆனாலும் ஏதுமறியாதவர்களின் மீதான கொலைவெறித்தாக்குதலோ, இளம்பெண்கள் மீதான பாலியல் வன்முறையோ நிற்கவில்லை. பயந்த, அநாதரவான பெண்களைக் கடத்திக் கொண்டு போவதற்காக இன்னமும் பதுங்கித் திரியும் இளைஞர் கூட்டத்தை இன்னமும் பார்க்கலாம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கொலை, கொள்ளை, சூறையாடுதல், எல்லாம் சிலர் நினைப்பதைப் போல அவ்வளவு கஷ்டமாக இல்லை. ஆனால் என்னுடைய நண்பன் திரு. எஸ்ஸுக்கு அது அவ்வளவு சுலபமானதாக இல்லை.

அவனுடைய கதையை உங்களுக்குச் சொல்வதற்கு முன்னால் நான் திரு.எஸ்ஸை அறிமுகம் செய்கிறேன். உருவத்திலும், பார்வையிலும் நம் எல்லோரையும் போல சாதாரணமான ஒரு ஆள் தான். அதே மாதிரி பெரும்பாலோர் நினைப்பது போல ஒன்றுமில்லாததற்கு ஏதாவது கிடைத்தால் சரிதான் என்று நினைப்பவன். ஆனால் இது வேறு ஒரு விஷயம். ஒரு விசித்திரமான விபத்து நிகழ்வதற்கு அவன் காரணமாக இருந்து விட்டான். அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பதை அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

நாங்கள் பள்ளியில் படிக்கும்போது அவன் ஒரு சாதாரண மாணவன். விளையாட்டுகளை விரும்புவான். ஆனால் தீவிரமான விளையாட்டு வீரனல்ல. விளையாட்டின் போது விவாதம் வளர்ந்தால் அவன் தான் சண்டைக்கு முதல் ஆளாய் இருப்பான். நன்றாக விளையாடுபவனாக அவ்ன் ஒரு போதும் இருந்ததில்லை என்றாலும் நல்ல சண்டைக்காரனாக இருந்திருக்கிறான்.

அவனுக்கு ஓவியத்தில் ஆர்வம் இருந்தது. ஆனால் ஒரே ஒரு வருடத்திலேயே கல்லூரியை விட்டு வெளியேற வேண்டியதாகி விட்டது. அதன் பிறகு அவன் ஒரு சைக்கிள் விற்பனை கடையை வைத்திருந்தான் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம்.

இந்தக் கலவரங்கள் ஆரம்பித்தபோது, முதன் முதலில் எரிந்து சாம்பலான கடைகளில் அவனுடைய கடையும் ஒன்று. வேறு ஒன்றும் செய்ய முடியாததால் கொள்ளைக்காரர்களோடும் கலவரக்காரர்களோடும், அவன் சேர்ந்து கொண்டான். அப்போது இதொன்றும் அசாதரணமானதில்லை. அது உண்மையில் பொழுதுபோக்குவதற்கான வழியாகவும், மதத்துவேஷபழியுணர்வுக்கு ஒரு மாற்றாகவும் இருந்தது என்று நான் சொல்வேன். அது விசித்திரமான காலம். இது அவனுடைய கதை. அதுவும் அவன் சொந்த வார்த்தைகளிலேயே………

உண்மையில் மழை ஊற்றிக்கொண்டிருந்தது. வானம் வெடித்து விடுமோ என்று தோன்றியது. என்னுடைய மொத்த வாழ்க்கையிலும் அப்படி ஒரு மழையைப் பார்த்ததில்லை. நான் என் வீட்டுப் பால்கனியில் உட்கார்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் கும்பலோடு சேர்ந்து பல கடைகளிலும், வீடுகளிலும் கொள்ளையடித்த பொருட்களின் மிகப் பெரும் குவியல் கிடந்தது. ஆனால் எனக்கு இப்போது அதில் ஆர்வம் இல்லை. அவர்கள் என்னுடைய கடையை எரித்து விட்டார்கள். என்னை நம்புங்கள்.இப்போது எனக்கு அது பெரிய விஷயமாகத் தொன்றவில்லை. அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் நான் நிறையக் கொள்ளைகளையும், அழிவுகளையும், பார்த்துவிட்டேன். அதனால் அதில் ஒன்றும் பெரிய பாதிப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. மழையின் ஓசையை அலட்சியப்படுத்துவது கஷ்டமாக இருந்தது. ஆனால் அதே நேரம் விசித்திரம் போலும் ஒரு உலர்ந்த மலட்டுத்தனத்தை நான் உணர்ந்து கொண்டிருந்தேன். காற்றில் ஒரு துர்நாற்றம் வீசியது. என்னுடைய சிகரெட் கூட துர்வாடை வீசியது. அவ்வளவு ஏன் நான் அப்போது என்ன யோசித்துக் கொண்டிருந்தேன் என்று கூட நிச்சயமாக எனக்குத் தெரியவில்லை. திடீரென என்னுடைய முதுகுத்தண்டில் ஒரு நடுக்கம் ஓடியது. வெளியே பாய்ந்து சென்று என்னைக் கட்டிப் பிடித்துக் கொள்ள ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு வர வேண்டும் என்ற சக்தி மிக்க விருப்பம் தோன்றியது. மழை மேலும் வலுத்தது. நான் எழுந்து என்னுடைய மழைக்கோட்டை எடுத்து அணிந்து கொண்டேன். எனக்குத் தைரியமூட்டுவதற்காக எனக்கு முன்னால் கிடந்த கொள்ளைக் குவியலிலிருந்து ஒரு சிகரெட் டின்னை எடுத்துக் கொண்டு மழையில் வெளியே போனேன்.

சாலைகள் ஆளரவமற்று இருள் மூடியிருந்தது. சுற்றும்முற்றும் ராணுவவீரர்கள் கூட- அந்த நாட்களில் அது மிகச் சாதாரணம்- கண்ணுக்குத் தென்படவில்லை. நான் எந்தநோக்கமுமில்லாமல் மணிக்கணக்காக நடந்து கொண்டிருந்தேன். தெருக்களில் பல இறந்த உடல்கள் கிடந்தன. ஆனால் அவை எனக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சிறிது நேரத்துக்குப் பின்பு நான் சிவில் லைன்ஸ் ஏரியாவில் இருந்தேன்.. அந்த சாலைகளில் வாழ்வின் எந்த அறிகுறியும் தெரியவில்லை. திடீரென நான் அணுகி வருகிற ஒரு காரின் சத்தத்தைக் கேட்டேன். நான் திரும்பிப் பார்த்தேன். அது ஒரு சிறிய ஆஸ்டின் கார். தலைதெறிக்கும் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. எனக்கு என்ன நேரும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் சாலையின் நடுவில் நின்று கொண்டு காரை நிறுத்த மூர்க்கமாக என் கைகளை ஆட்டிக் கொண்டிருந்தேன்.

அந்தக் காரின் வேகம் குறையவில்லை. ஆயினும் நான் அசையப் போவதில்லை என்று முடிவு செய்திருந்தேன். மிகச் சில அடி தூரத்தில் அந்தக் கார் இடதுபுறமாக வளைக்கப்பட்டது. அதன் பின்னால் ஓட முயற்சித்ததில் நான் கீழே விழுந்தேன். ஆனால் உடனே எழுந்து கொண்டேன். எனக்குக் காயம் எதுவுமில்லை. அந்தக் காரின் பிரேக் போடப்பட்டதும், கார் தரையில் கிறீச்சிட்டு வழுகிச் சாலையை விட்டு விலகி ஓடியது. கடைசியில் அது ஒரு மரத்தின் மீது மோதிய பிறகே நின்றது. நான் அதை நோக்கி நகரத் தொடங்கினேன். படாரெனத் திறந்த காரின் கதவு வழியே சிவப்பு நிற மழைக்கோட்டு அணிந்த ஒரு பெண் குதித்து வெளியேறினாள். என்னால் அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அந்த இருளில் அவளுடைய மினுமினுக்கும் மழைக்கோட்டு தெளிவாகத் தெரிந்தது. என்னுடைய உடலை ஒரு வெப்ப அலை கவ்விப் பிடித்தது.

நான் அவளை நோக்கி வருவதைப் பார்த்த அவள் ஓடத் தொடங்கினாள். ஆயினும் நான் அவளைச் சில அடி தூரத்திலேயே பிடித்து விட்டேன். என்னுடைய கைகளினால் அவளைச் சுற்றி வளைத்து இறுக்கிப் பிடித்த போது “ யாராவது எனக்கு உதவி செய்யுங்கள் “ என்று ஆங்கிலத்தில் கத்தினாள். அதை இப்போது நினைக்கும்போது நான் அவளைப் பிடித்ததை விட அவளுடைய வழுவழுப்பான மழைக்கோட்டைத் தான் இறுக்கிப் பிடித்தேன் என்று தோன்றுகிறது.

“ ஆர் யு எ இங்கிலிஷ்வுமன்?” என்று நான் அவளிடம் கேட்டேன். நான் ஆங்கிலத்தில் கேட்கும்போது ’ எ ‘ இல்லை ‘ ஆன் ‘ போட்டிருக்கவேண்டும் என்று மிகத் தாமதமாகவே நினைவுக்கு வந்தது.

“ இல்லை “ என்று அவள் பதிலளித்தாள். நான் ஆங்கிலப் பெண்களை வெறுத்தேன். ஆகையால் நான் அவளிடம், “ அப்படின்னா பரவாயில்லை..” என்று சொன்னேன். அவள் உருதுவில் கத்தத் தொடங்கினாள்.

“ நீ என்னைக் கொல்லப் போறே.. நீ என்னைக் கொல்லப் போறே..”

நான் ஒன்றும் பேசவில்லை. நான் அவளுடைய வயதையும் பார்ப்பதற்கு அவள் எப்படி இருப்பாள் என்றும் யூகிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அவளுடைய மழைக்கோட்டின் தலைமூடி அவளுடைய முகத்தை மறைத்திருந்தது. நான் அதை அகற்ற முயற்சித்தபோது அவள் தன்னுடைய இரண்டுகைகளாலும் முகத்தை மூடிக் கொண்டாள். நான் அவள் மீது பலத்தைப் பிரயோகிக்கவில்லை. அதற்குப் பதில் நான் அவளை இழுத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தேன். பின் கதவைத் திறந்து காருக்குள் அவளைத் தள்ளினேன். நான் காரை இயக்கினேன். எஞ்சின் இயங்கத் தொடங்கியது. நான் அதைப் பின் பக்கமாக எடுக்க முயற்சித்தேன். அது ஒத்துழைத்தது. கவனமாக அதை வளைத்து சாலையின் மீது கொண்டு வந்தபிறகு ஓட்டத் தொடங்கினேன்.

என்னுடைய வீட்டுக்கு முன்னால் வந்த பிறகே நான் கார் எஞ்சினை அணைத்தேன். என்னுடைய முதல் எண்ணம் அவளைப் பால்கனிக்குக் கொண்டு செல்வது தான். ஆனால் நான் பின்னர் என் மனதை மாற்றிக் கொண்டேன். அவள் அத்தனை படிக்கட்டுகளையும் அவளாகவே ஏறி வந்து விடுவாளா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. நான் வேலைக்காரப் பையனைக் கத்திக் கூப்பிட்டேன்.

” வரவேற்பறை கதவைத் திற..” என்று அவனிடம் சொன்னேன். அவன் அதைச் செய்த பிறகு நான் அவளை அந்த அறைக்குள் தள்ளிக் கொண்டு போனேன். இருளில் அவலைப்பிடித்து மெதுவாக அங்கேயிருந்த சோபாவின் மீது தள்ளினேன்.

“ என்னைக் கொல்லாதே.. தயவு செய்து என்னைக் கொல்லாதே..”

அவள் மறுபடியும் கதற ஆரம்பித்தாள். அது எனக்கு வேடிக்கையாக இருந்தது. போலியான குரலில் நானும்,

“ நான் உன்னைக் கொல்லமாட்டேன்.. நான் உன்னைக் கொல்லமாட்டேன்..கண்ணே..”

என்று சொன்னேன். அவள் அழ ஆரம்பித்தாள். அங்கேயே சுற்றிக் கொண்டிருந்த வேலைக்காரப் பையனை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னேன். நான் என்னுடைய பையிலிருந்து ஒரு தீப்பெட்டியை எடுத்தேன். மழை அதை நனைத்திருந்தது. பல வாரங்களாகவே மின்சாரமும் இல்லை. மாடியில் ஒரு டார்ச் லைட் இருந்தது. நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

“விளக்கு தேவைப்படுவதற்கு நான் ஒன்றும் படங்கள் எடுக்கப் போவதில்லையே..”

எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டேன். என்னுடைய மழைக்கோட்டை கழற்றித் தரையில் வீசினேன்.

“ உன்னோடதை நான் கழட்டறேன்…”

என்று நான் அவளிடம் தெரிவித்தேன்.சோபாவிலிருந்த அவளை நான் இருளில் தடவினேன்.ஆனால் அவள் அங்கே இல்லை. ஆயினும் நான் கவலைப்படவில்லை.அவள் அந்த அறைக்குள் எங்கேயோ தான் இருக்கவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தை அலசத் தொடங்கினேன். சில நிமிடங்களில் நான் அவளைக் கண்டு பிடித்து விட்டேன். உண்மையில் நாங்கள் பின்புறமாக மோதிக் கொண்டோம்.என் கை எதிர்பாராவிதமாக அவளுடைய தொண்டையில் பட்டுவிட்டது. மறுபடியும் அவள் கத்தத் தொடங்கினாள். நான்,

“ நிறுத்து நான் உன்னைக் கொல்லப் போவதில்லை….”

என்று சொன்னேன்.

அவளுடைய அழுகையை அலட்சியம் செய்துகொண்டே அவளுடைய மழைக்கோட்டின் பொத்தான்களைக் கழட்டத் தொடங்கினேன்.அது ஏதோ ஒரு பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப் பட்டிருந்ததால் மிகவும் வழுவழுப்பாக இருந்தது.அவள் தொடர்ந்து அழுது கொண்டே என்னிடம் இருந்து விடுபடப் போராடிக் கொண்டிருந்தாள்.ஆனால் ஒருவழியாக நான் அவளை அவளுடைய மோசமான மழைக்கோட்டிலிருந்து விடுவித்து விட்டேன்.அவள் அதற்குக் கீழே சேலை கட்டியிருந்தாள் என்று தெரிந்தது. நான் அவள் முழங்காலைத் தொட்டேன். அது உறுதியாக இருந்தது. என் உடல் முழுவதுமொரு தீவிரமான மின்சாரஅலை பாய்ந்து சென்றது.ஆனால் நான் அவசரப்பட விரும்பவில்லை.

நான் அவலை அமைதிப்படுத்த விரும்பினேன்.

“ கண்ணே! நான் உன்னைக் கொலை செய்வதற்காக இங்கே கொண்டு வரவில்லை பயப்படாதே. வெளியிலிருப்பதை விட இங்கே நீ பாதுகாப்பாக இருக்கலாம். நீ வெளியே போக விரும்பினால் சுதந்திரமாகப் போகலாம்..ஆனால் நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால் இந்தக் கலவரங்கள் எல்லாம் முடியும்வரை நீ என்னுடனே இருந்து விடு.நீ ஒரு படித்த பெண்..வெளியில் மக்கள் காட்டுமிருகங்களாக மாறி விட்டார்கள்..நீ அந்த மிருகங்களிடம் சிக்கிக் கொள்வதை நான் விரும்பவில்லை…”

“ நீ என்னைக் கொல்லமாட்டியே..” அவள் அழுதாள்.

“ இல்லை சார்..” என்று நான் சொன்னேன். அவளை நான் சார் என்று அழைத்ததைக் கேட்டுவெடித்துச் சிரித்தாள். அவளுடைய சிரிப்பு என்னை உற்சாகப் படுத்தியது.

“ கண்ணே..என்னுடைய ஆங்கிலம் ரெம்ப பலகீனமானது…”

என்று ஒரு சிரிப்புடன் சொன்னேன். கொஞ்சநேரத்துக்கு அவள் எதுவும் பேசவில்லை. பிறகு அவள்,

“ நீ என்னைக் கொல்ல விரும்பவில்லையென்றால் எதுக்காக என்னை இங்கே கொண்டு வந்தாய்? “

என்று கேட்டாள். அது ஒரு இக்கட்டான கேள்வி. என்னால் உடனே அதற்கான பதிலை யோசிக்கமுடியவில்லை. ஆனால் நானே,

“ நான் உன்னைக் கொல்ல விரும்பாததற்கு எளிய காரணம் தான். நான் மனிதர்களைக் கொல்வதை விரும்பவில்லை அவ்வளவு தான்.. உன்னை ஏன் இங்கே கொண்டு வந்தேன்..நான் நினைக்கிறேன்..ஏன்னா நான் தனியா இருக்கேன்…”

என்று சொல்லிக் கொண்டிருப்பதை நானே கேட்டுக் கொண்டிருந்தேன்.

“ ஆனா உங்ககூட ஒரு வேலைக்காரப்பையன் இருக்கானே..”

“ அவன் வேலைக்காரன் தானே.. அவன் ஒரு விஷயமே இல்லை..”

அவள் அமைதியாகி விட்டாள். நான் ஒரு குற்றவுணர்ச்சியை அநுபவிக்க ஆரம்பித்தேன். நான் எழுந்து,

“ எல்லாத்தையும் மறந்திருவோம்.. நீ இங்கிருந்து போகவேண்டுமென்று விரும்பினால் நான் உன்னைத் தடுக்கமாட்டேன்…”

என்று சொன்னேன். நான் அவளுடைய கையைப் பிடித்தேன். பிறகு நான் ஏற்கனவே தொட்டிருந்த அவளுடைய முழங்காலை நினைத்துப் பார்த்தேன். முரட்டுத்தனமாக என் நெஞ்சோடு அவளை அழுத்தினேன். என் முகவாய்க்குக் கீழே அவளுடைய சூடான மூச்சுக் காற்றை உணர்ந்தேன். நான் என் உதடுகளை அவளுடைய உதடுகளோடு பொருத்தினேன். அவள் நடுங்கத் தொடங்கினாள்.

“ பயப்படாதே கண்ணே.. நான் உன்னைக் கொல்ல மாட்டேன்..”

என்று நான் கிசுகிசுத்தேன்.

“ தயவு செய்து என்னைப் போகவிடுங்கள்…”

என்று அவள் தழுதழுத்த குரலில் சொன்னாள். நான் என் கைகளை மெல்ல இழுத்தேன். ஆனால் பிறகு ஒரு வேகத்தில் அவளைத் தரையிலிருந்து உயரே தூக்கினேன். அவளுடைய இடுப்பிலிருந்த சதை மிகமிக மென்மையாக இருந்ததைக் கவனித்தேன். அவள் ஒரு சிறிய கைப்பையையும் வைத்திருப்பதை அப்போது தான் கண்டுபிடித்தேன். நான் அவளை அந்த சோபாவில் கிடத்தி அவளிடமிருந்த அந்தக் கைப்பையை எடுத்து தூரத்தில் வைத்தேன்.

“ என்னை நம்பு.. அதில் ஏதாச்சும் விலையுயர்ந்த பொருட்கள் இருந்தால் அது பத்திரமாக இருக்கும்.. அதோட நீ விரும்பினா நான் உனக்கு நிறைய்ய பொருட்களைத் தரமுடியும்…”

நான் அவளிடம் உறுதியளிக்கும் விதமாகச் சொன்னேன்.

“ எனக்கு எதுவும் தேவையில்லை..” என்றாள்.

“ ஆனால் எனக்குக் கொஞ்சம் தேவையிருக்கிறது..” என்று பதில் சொன்னேன்.

“ என்ன?” என்று அவள் கேட்டாள்.

“ நீ..” என்று நான் பதில் சொன்னேன். அவள் எதுவும் சொல்லவில்லை. நான் அவளுடைய முழங்காலைத் தடவத் தொடங்கினேன். அவள் எதிர்ப்பெதுவும் காட்டவில்லை. நான் அவளுடைய நிராதரவான நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்துவதாக அவள் நினைக்கலாமோ என்ற உணர்வு வரவே நான்,

“ நான் உன்னைக் கட்டாயப்படுத்தவிரும்பவில்லை.. உனக்கு விருப்பமில்லையென்றால் நீ போகலாம்.. உண்மையாகவே..”

என்று சொன்னேன். நான் எழுந்திரிக்கப் போன சமயத்தில் அவள் என்னுடைய கையைப் பற்றி அவளுடைய மார்பில் வைத்தாள். அவளுடைய இதயம் வேகவேகமாக துடித்துக் கொண்டிருந்தது. நான் கிளர்ச்சியடைந்தேன். அவளை என் கரங்களில் திரும்பவும் எடுத்து

“ கண்ணே..” என்று கிசுகிசுத்தேன். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் அடங்காத வெறியோடு முத்தமிட்டுக் கொண்டோம். அவள் தொடர்ந்து ஆசையோடு “ கண்ணே..” என்று மென்மையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அந்தப் பைத்தியக்காரத்தனமான வேளையில் நான் என்ன உளறினேன் என்பதை கடவுள் தான் அறிவார்.

“ நீ எல்லாவற்றையும் கழட்டி எறி..” என்று நான் சொன்னேன். அதற்கு அவள்,

“ ஏன் நீங்களே அவற்றைக் கழட்டக் கூடாதா? “ என்று உணர்ச்சிபூர்வமாகச் சொன்னாள். நான் அவளைக் கொஞ்சத் தொடங்கினேன். அவள்,

“ நீங்கள் யார்?” என்று கேட்டாள். நான் அதைச் சொல்கிற மனநிலையில் அப்போது இல்லை. எனவே நான் “ உன்னுடையவன் கண்ணே…” என்று சொன்னேன்.

“ நீங்கள் ஒரு குறும்புக்காரர் “ என்று என்னை அவளோடு இழுத்து அழுத்திக் கொண்டே மோகத்தோடு சொன்னாள். நான் அவளுடைய ரவிக்கையைக் கழட்ட முயற்சி செய்தேன். ஆனால் அவள் என்னிடம்,

“ தயவு செய்து என்னை அம்மணமாக்காதீங்க..” என்று சொன்னாள்.

“ அதனால் என்ன.. இருட்டுதானே…! “ என்று நான் சொன்னேன். Modern Art101

“ வேண்டாம்..வேண்டாம்..”

அவள் என் கரங்களை விலக்கி அவற்றை முத்தமிட ஆரம்பித்தாள்.

“ வேண்டாம்.. தயவு செய்து வேண்டாம்.. எனக்கு வெட்கமா இருக்கு..”

“ சரி ரவிக்கையை மறந்திரு எல்லாம் பிரமாதமா நடக்கும்..”

என்று நான் சொன்னேன். அங்கே ஒரு அமைதி. அவள் தான்,

“ நீ கோபப்படலை இல்லையா?..”

என்று சொல்லி உடைத்தாள்.

“ இல்லை.. நான் ஏன் கோபப்படணும்… உன் ரவிக்கையை கழட்ட விரும்பல.. சரி நல்லது.. ஆனால்…”

என்னால் அந்த வாக்கியத்தை முடிக்க முடியவில்லை. பிறகு கொஞ்சம் முயற்சி செய்து,

“ எப்படியோ.. ஏதாச்சும் நடக்கணும்.. நான் என்ன சொல்ல வர்றேன்னா.. உன் சேலையக் கழட்டு…”

என்று சொன்னேன்.

“ எனக்குப் பயமாருக்கு..” என்று சொன்ன அவளுடைய குரல் உலர்ந்து போயிருந்தது.

“ யாரைப் பார்த்து பயப்படறே..” என்று நான் சத்தத்தோடு சொன்னேன்.

“ எனக்குப் பயமாருக்கு..” என்று மறுபடியும் பதில் சொன்னவள் அழ ஆரம்பித்தாள்.

“ பயப்படறதுக்கு எதுவுமே இல்லை.. “ என்று நான் ஆறுதலளிக்கும் குரலில் சொன்னேன்.

“ நான் உன்னைத் துன்புறுத்தமாட்டேன்.. ஆனால் நீ உண்மையிலேயே பயந்தேன்னா.. நாம அதை மறந்துருவோம்…நீ இங்கேயே சில நாட்களுக்குத் தங்கியிரு.. எப்ப உனக்கு சகஜமாக நீ உணர்றீயோ.. எப்ப என்னைப் பார்த்துப் பயப்படாம இருக்கியோ..அப்ப பார்த்துக்கலாம்…”

என்று நான் சொன்னேன்.

“ இல்லை…இல்லை…” என்று சொன்ன அவள் அவளுடைய தலையை என்னுடைய தொடைகளில் சாய்த்தாள். நான் அவளுடைய தலையை என்னுடைய விரல்களினால் வருடிக் கொடுத்தேன். கொஞ்சநேரத்துக்குப் பிறகு அமைதியடைந்தாள். பிறகு திடீரென அவளை நோக்கி என்னை வேகமாக இழுத்தாள். நானே திடுக்கிட்டுப் போய் விட்டேன். அவள் பயங்கரமாக நடுங்கிக் கொண்டிருந்தாள்.

கதவைத் தட்டுகிற சத்தம் கேட்டது. வெளியிலிருந்து ஒளியின் கீற்றுகள் அந்த இருண்ட அறைக்குள் ஊடுருவி வரத் தொடங்கின. அது வேலைக்காரப்பையன்.

“ நான் ஹரிக்கேன் விளக்கைக் கொண்டு வந்திருக்கேன்.. தயவு செய்து எடுத்துக்கிறீங்களா?”

“ சரி..” என்று நான் பதிலளித்தேன்.

“ வேண்டாம்.. வேண்டாம்..” என்று பயந்த குழப்பமான குரலில் சொன்னாள்.

“ ஏன் அதில என்ன வரப்போகுது.. நான் திரியைக் குறைச்சி ஒரு மூலையில வைச்சிர்ரேன்..”

என்று நான் சொன்னேன். நான் கதவைத் திறந்து ஹரிக்கேன் விளக்கை வாங்கி அறையின் ஒரு மூலையில் வைத்தேன். இன்னமும் என்னுடைய கண்கள் அந்த வெளிச்சத்துக்குப் பழக்கப்படாததினால் சில விநாடிகளுக்கு என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. இதற்கிடையில் அவள் இன்னும் மூலையை நோக்கி நகர்ந்து போயிருந்தாள்.

“ வா..இப்ப..நாம இந்த விளக்கு முன்னாடி உட்கார்ந்து கொஞ்சநேரம் பேசிக்கிட்டிருப்போம்.. எப்ப நீ விருப்பப்படறீயோ.. அப்ப நான் விலக்கை அணைச்சிடறேன்..”

என்று நான் பதில் சொன்னேன். விளக்கை எடுத்துக்கொண்டு நான் சில அடிகள் அவளை நோக்கிப் போனேன். அவள் முகத்தைச் சேலையினால் மறைத்துக் கொண்டாள்.

“ நீ ஒரு விசித்திரமான பெண்.. நான் உன்னோட. மாப்பிள்ளை மாதிரி தானே..”

என்று சொன்னேன்.

திடீரென வெளியே ஒரு பயங்கரமான வெடிச்சத்தம் கேட்டது. அவள் முன்னால் பாய்ந்து என் கைகளில் விழுந்தாள்.

“ அது வெடிகுண்டு தான்.. பயப்படாதே..”

“ இந்த நாட்களில் இது ஒன்றுமே இல்லை…”

என்று நான் சொன்னேன். இப்போது என் கண்கள் அந்த ஒளிக்குப் பழக்கப்பட்டுவிட்டது. அவளுடைய முகம் இப்போது நன்றாகத் தெரிய ஆரம்பித்தது. நான் அந்த முகத்தை ஏற்கனவே பார்த்தமாதிரியான ஒரு உணர்வு தோன்றியது. ஆனால் இன்னமும் அந்த முகத்தை என்னால் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை.

நான் அவளுடைய தோள்களில் என் கைகளை வைத்து எனக்கு நெருக்கமாக இழுத்தேன். கடவுளே! நான் என்ன பார்த்தேன் என்பதை உனக்கு விளக்கமுடியாது. அது ஒரு வயதான பெண்ணின் முகம். ஆழமான முகப்பூச்சு இருந்தாலும் சுருக்கம் விழுந்து காணப்பட்டது. மழையினால் அவளுடைய ஒப்பனை திட்டுத் திட்டாக கரைந்திருந்தது. அவளுடைய தலைமுடி சாயம் பூசப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தலைமுடியின் வேர்கள் வெள்ளையாக இருந்தன. அவளுடைய முந்தலையில் பிளாஸ்டிக் பூக்கள் கொண்ட ஒரு தலைமாட்டியை அணிந்திருந்தாள். நான் அதிர்ச்சியில் உறைந்து போய் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு நான் ஹரிக்கேன்விளக்கைக் கீழே வைத்து விட்டு,

“ நீ விருப்பப்பட்டா போகலாம்…”

என்று சொன்னேன். அவள் ஏதோ சொல்ல விரும்பினாள். என்னைப்பார்த்த அவள் மழைக்கோட்டையும் கைப்பையையும் எடுத்துக்கொண்டு சொல்லவேண்டாம் என்று முடிவெடுத்து விட்டாள். அவளைப் பார்க்காமலேயே அவளுடைய பொருட்களை அவளிடம் ஒப்படைத்தேன். அவள் சில நிமிடங்கள் அவளுடைய பாதங்களை உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தாள். பிறகு கதவைத் திறந்து வெளியேறி விட்டாள்.

என்னுடைய நண்பன் அவனுடைய கதையை முடித்தபிறகு நான் அவனிடம்,

“ உனக்கு அந்தப் பெண் யார் என்று தெரியுமா? “ என்று கேட்டேன்.

“ இல்லை.. தெரியாது…” என்று அவன் பதில் சொன்னான்.

“ அவள் தான் பிரபலமான ஓவியர் மிஸ். எம்….” என்று அவனிடம் சொன்னேன்.

“ மிஸ்.எம்மா?.... பள்ளிக்கூடத்தில படிக்கும்போது யாருடைய ஓவியங்களைக் காப்பியடிக்க முயற்சி செய்ஞ்சிக்கிட்டிருந்தேனோ அவங்களா?...” என்று கத்தினான்.

’ ஆமாம்.. கலைக்கல்லூரியின் முதல்வராக இருந்தார்.. அவருடைய மாணவிகளுக்கு அசையாப்படங்கள் வரையக் கற்றுக்கொடுத்தாள். அவள் ஆண்களை வெறுத்தாள்…”

“ இப்ப எங்க இருக்காங்க..” என்று அவன் பட்டெனக் கேட்டான்.

“ சொர்க்கத்தில்..” நான் பதில் சொன்னேன்.

“ என்ன சொல்றே?...” என்று அவன் கேட்டான்.

இறந்துபோனாள். நீ தான் அவளைக் கொலை செய்தாய்.. நீ இரண்டு பெண்களைக் கொலை ”அந்த இரவில் உன்னுடைய வீட்டை விட்டு வெளியேறிய அவள் ஒரு கார் விபத்தில் செய்த கொலைகாரன். ஒருத்தி மிகப் பெரிய ஓவியர். இன்னொருத்தி அந்த இரவில் முதன்முதலாக உன்னுடைய வரவேற்பறையில் பெண்ணாகப் பிறந்தாளே.. உனக்கு மட்டுமே தெரிந்த அவளைக் கொன்றாய்..”

என்னுடைய நண்பன் எதுவும் பேசவில்லை.

நன்றி – உயிர் எழுத்து

Sunday, 1 July 2012

கலையின் இயங்கியல் – சிறு குறிப்பு

 

உதயசங்கர்

abstract 

எந்தவொரு கலைப்படைப்பின் முதல் நோக்கம் கலை இன்பமே. பின்னர் அந்தப் படைப்பிலிருந்து கிடைக்கும் அநுபவபகிர்வு. அந்த அநுபவப்பகிர்வின் வழியாக நாம் புரிந்து கொள்கிற சிந்தனைத்தளம். இது ஒரு படைப்பை வாசிக்கிற வாசகனின் பயணம் என்று சொல்லலாம். இந்தப் பயணத்தின் முடிவில் படைப்பாளியும் வாசகனும் ஒரே இடத்தில் சந்திக்கலாம். அப்போது அடுத்த பயணத்துக்கான ஆயத்தங்களைச் செய்ய முயற்சிக்கிறார்கள். அந்தப் பயணம் இருவரையும் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.

கலைஞன் தன்னுடைய வாழ்வில் எதிர் கொள்ள நேரிடும் நிகழ்வுகளில் சில அநுபவப்பொறிகள் மின்னலெனக் கருக்கொண்டு மனதில் வளர்கின்றன. வளர்ச்சியின் வேகமும், ஆழமும், கலைஞனின் மொழி ஆளுமை, படைப்பாற்றலில் உள்ள தீவிர வேட்கை, வாசிப்பு அநுபவம், அவனுடைய அழகியல் கோட்பாடு, இவற்றின் அடிப்படையிலேயே இருக்கும். வெளிப்பாட்டுக்குத் தேவையான உத்வேகம் புறவயமாகவோ, அகவயமாகவோ, எந்த நிலையிலும், எந்த நேரத்திலும் பிறக்கலாம். அப்போது காகிததில், கணிணியில் பதிவு செய்யும் நிகழ்வு நடக்கிறது. இந்தப் புறவயமான வெளிப்பாட்டுக்கு முன்னரே மனசுக்குள் பலமுறை வீரியமிக்க மொழியலகுகளை மாற்றி, மாற்றிப் போட்டு எழுதிப் பார்த்தபிறகே காகிதத்தில் எழுதும் துணிவு வந்தது.

கலைஞன் சுய அநுபங்களிருந்தோ, அறிவனுபவங்களிலிருந்தோ, புராணிக, சரித்திர, தொல்கதை வாசிப்பனுபவங்களிலிருந்தோ, தத்துவார்த்த அனுபவங்களிலிருந்தோ, தன் படைப்புக்கான உத்வேகத்தைப் பெறலாம். ஆனால் அந்த உத்வேகம், படைப்பின்சிறு பொறி நின்று நிதானித்து நன்றாக அடைகாக்கப்பட்டு, முழு உருவம் அடைந்த பிறகு வெளிவந்திருக்கிறதா அல்லது அவசரமாக, அரைகுறையாக வெளிவந்திருக்கிறதா என்பதை எந்த எளிய வாசகனும் கண்டுபிடித்து விடுவான். இதற்கு ஒரளவு வாசிப்பனுபவமும், நுண்ணுணர்வும் இருந்தாலே போதுமானது.

கலைஞனிடம் பிறந்த படைப்பு வாசகனிடமே நிறைவடைகிறது. அது மீண்டும் கலைஞனிடத்தில் வாசகானுபவக்குறிப்புகளுடன் வரும்போது வேறொன்றாக மாறிவிடுகிறது. அது வெறும் அரூபமான குறியியல் சூத்திரமாக இருப்பதில்லை. ஒவ்வொரு வாசகர் வாசிக்கும் போதும் அது அவரிடத்தில் அவருடைய உணர்ச்சித் தளம், சிந்தனைத்தளம், ஆகியவற்றில் செயல்பட்டு பௌதீகசக்தியாக மாறுகின்ற வல்லமை கொண்டதாகிறது. கலைஞனித்திலிருந்து வெளிப்படும் படைப்பு தன் வெளிப்பாட்டுச் செயல் முடிந்ததும் தாயிடமிருந்து தொப்புள்க்கொடி அறுந்த குழந்தையைப் போல சுயம்புவாகி விடுகிறது. அந்தப் படைப்பின் மீது படைப்பாளிக்கு தன் படைப்பு என்ற உரிமையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஏனெனில் படைப்பாளியிடமிருந்து வெளிப்பட்ட படைப்பு உறைநிலையிலேயே இருக்கிறது. வாசகன் அதை வாசிக்கும் போதே அது உயிர்பெறுகிறது. படைப்பு முழுமையடைகிற இடமாக வாசகனே இருக்கிறான். வாசகன் கரங்களால் தொடும் வரை படைப்பு மண்ணில் புதைந்த விதையே போல் படைப்பு தற்காலிக உறக்கம் கொள்கிறது. மண்ணைக் கீறி மலரச் செய்வது வாசகனே.

படைப்பு வாசகனால் வாசிக்கப்படும்போது ஒரே தளத்தில் அர்த்தத்தையும் தரலாம். பல தளங்களில் பல அர்த்தங்களையும் தரலாம். பலருக்கு பலவிதமாகவும் அர்த்தம் தரலாம். இதற்கு வாசகனின் நுண்ணுணர்வு, இலக்கியப்பயிற்சி, சமூக அக்கறை, இவை காரணங்களாக இருக்கும். எனவே ஒரே படைப்பு காலந்தோறும் வெவ்வேறு மாதிரியாக வாசிக்கப்படுவதும் நிகழும். ஆனால் அதற்கு படைப்பில் அதற்கான அடிப்படைக் கூறுகள் இருக்கவேண்டும். பாதைகள் தெரியாத கும்மிருளாய் படைப்பு இருந்து அதில் பல்வேறு அர்த்தங்கள் இருப்பதாகப் பாவனை செய்யும் படைப்பாளிகளும், படைப்புகளும் உண்டு. அதற்காக படைப்பின் அடிப்படை கலை அழகியல் முறைமையிலிருந்து பிறழ்ந்து வெறும் சொற்கோர்வையாகவோ, நேரடியான,செய்தியாகவோ, பிரச்சாரமாகவோ, படைப்பு விளங்குமானால் அது காலத்தால் நிராகரிக்கப்படும்.

எல்லாவெளிப்பாடும் அடிப்படையில் பிரச்சாரமே. ஆனால் அந்த வெளிப்பாட்டுமுறையின் அடிப்படைத் தர்க்கநியதிகள் அதில் தொழிற்பட்டிருத்தல் வேண்டும். அதுவே அந்த வெளிப்பாட்டை செய்தி எனவும், பேச்சு எனவும், கவிதை எனவும், கதை எனவும், இன்ன பிற கலைவடிவங்கள் எனவும் வகை பிரிக்கிறது.

படைப்பு எளிமையானதாக இருக்க வேண்டும். ஆனால் இது அந்தப் படைப்பிற்கான அடிப்படை விதியாகக் கொள்ள முடியாது. மொழியின் மீதும், தன் கலைச்சிந்தனைகளின் மீதும் ஆளுமையும் தெளிவும் சித்திக்கும்போது படைப்பில் எளிமை உருவாகும். ஆனால் எளிமையானதெல்லாம் கலையாகி விடாது என்ற எச்சரிக்கையுணர்வும் தேவைப்படுகிறது.

ஒரு படைப்பு படைக்கப்படும்போது தன்னுணர்வுப்பூர்வமானது. அறிவும் உணர்வும் ஊடாடி நெசவு செய்கிற காரியமாக படைப்பு திகழ்கிறது. அனுபவப்பொறி பற்றித் தீயாய் எரியும்வரை வேண்டுமானால் தன்னுணர்வும், தன்னுணர்வுமற்ற நிலையில் படைப்பு தன் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அதுவுமே முன்னனுபவங்களின், வாசிப்பனுபபவங்களின் சாரம் ஊறிக் கிடக்கும் ஊற்றின் கண் தான். மற்றபடி, அநுபூதிநிலை, தெய்வீக உணர்வு, என்பதெல்லாம் மூட நம்பிக்கைகளே.

எல்லா அறிவுத்துறைகளையும் போலவே படைப்பிலக்கிய அறிவுத்துறையிலும் படைப்பின் நுட்பங்கள் குறித்தான ஆய்வும், அடிப்படை அலகுகள் குறித்த உரையாடலும் அவசியம். அப்போது தான் வாசகனுக்கும் ஏன் படைப்பாளிக்கும் கூட படைப்பின் சூட்சுமங்களை விளங்கிக் கொள்ளமுடியும்.

DSC01492

Saturday, 30 June 2012

பூனை குறுக்கே போனா!

 

உதயசங்கர்

OciCatB_004

பூனை குறுக்கே போனா என்ன? என்னவா. சரியாப்போச்சு. போகிற வேலை நடக்காது. எடுத்த காரியம் உருப்படாது. அதாவது நாம் ஒரு காரியத்துக்காகப் புறப்பட்டு போகும் வழியில் ஒரு பூனை குறுக்கே போனால் அன்று அந்த வேலை நடக்காது. அப்படியா ?

இதைச் சகுனம் என்று சொல்கிறார்கள் . அடிக்கடி சகுனம் சரியில்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறீர்களா ? சரி சகுனம் என்றால் என்ன? நடக்கப்போவதைப் பற்றி முன்கூட்டியே தெரிவிக்கிற சிக்னல்கள் அல்லது சமிக்ஞைகள் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையா/ இல்லை.

அறிவியல் சரியாக வளராத காலத்தில் நமது தாத்தாக்களுக்கு, தாத்தாக்களுக்கு, தாத்தாக்கள் நடந்த நிகழ்ச்சிகளுக்கு அவர்களுக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொல்லி வைத்து விட்டுப் போய் விட்டார்கள். அவைகள் எல்லாம் மூட நம்பிக்கைகளாக வளர்ந்து விட்டன.

அப்படின்னா தாத்தாக்கள் சொன்னதெல்லாம் தப்பா? இல்லை. அப்படிச் சொல்லமுடியாது. பழைய காலத்தில், மனிதர்கள் தங்களுடைய கஷ்டங்களுக்கும், நஷ்டங்களுக்கும், காரணம் தெரியாமல் தவித்தார்கள். அதே போல் தற்செயலாக நடக்கிற பல விஷயங்களும் அவர்களுக்குப் புரியவில்லை. எல்லாத்துக்கும் காரணம் தேடினார்கள். அப்போது தற்செயலாகப் பாதையின் குறுக்கே போன பூனை அன்று நடக்காமல் போன காரியத்துக்குக் காரணமாக ஆகிவிட்டது. உடனே பூனை மனிதர்களுடைய வாழ்வில் ஒரு கெட்ட சகுனமாக மாறி விட்டது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், மனிதர்களை விட குறைந்த அறிவுள்ள பூனையால் நாம் செய்யப் போகிற காரியத்தை நடக்கவிடாமல் செய்ய முடியுமா? யோசித்துப் பாருங்களேன்.

பூனை ஏன் பாதையின் குறுக்கே போகிறது? பாதையிலோ, சாலையிலோ, இடது புறமாகவே நடக்க வேண்டும் என்பது நமக்கு மட்டும் தானே. மிருகங்கள், பறவைகள், பூச்சிகளுக்குக் கிடையாதே. அவற்றுக்கு எங்கே உணவு கிடைக்குமோ அந்த இடத்தை நோக்கிப் போகும் இல்லையா? எலிகள் இருக்கும் இடத்தைத் தேடியோ, பாலும் தயிரும் இருக்கும் இடத்தைத் தேடியோ பூனை அங்கும் இங்கும் வரும் போகும் இல்லையா?

இப்படித் தன் பாட்டுக்கு சாப்பாட்டுக்கு அலைகிற அப்பிராணியைப் போய் நம்முடைய காரியத்தை நடக்கவிடாமல் செய்வதாகச் சொல்வது நியாயமா?

இது மூடநம்பிக்கையா. இல்லையா.

அடுத்ததாகப் பல்லி, சுவர்களில் விளக்கு வெளிச்சத்துக்கு வரும் பூச்சிகளைத் தின்பதற்கு அலைவதை நாம் பார்த்திருக்கிறோம். அது சுவரில் நடப்பதற்கு தன் ஐந்து விரல்களுக்கு நடுவே வெற்றிடத்தை உருவாக்குகிறது. அதன் மூலம் சுவரைப் பற்றிக் கொண்டு நடக்கிறது. தலைகீழாகவும், அதனால் இரையைப் பிடிக்க ஓட முடிகிறது. அதன் வேகம், பதுங்கி வாலைச் சுழட்டியபடி நாக்கை வினாடிக்கும் குறைவான நேரத்தில் பூச்சிகளை லவட்டுகிற லாவகம். பார்க்க, பார்க்க நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இல்லையா!

அந்தப் பல்லியையும் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே குறி சொல்கிற மூடநம்பிக்கைக்குள் இழுத்து வந்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?

பல்லி சொல்லும் பலன், பல்லி விழும் பலன், என்று இரண்டு விதமாகப் பிரித்துச் சகுனம் சொல்லியிருக்கிறார்கள். கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது சரி தானா?

சுவரில் பறந்து வந்து ஒட்டுகிற சிறு பூச்சிகளை நோக்கி வேகமாகப் போகும் போது எப்போதாவது அதன் பிடிமானம் தவறாதா? அப்படி அதன் நிலை தவறிக் கீழே விழும்போது மனிதர்கள் யாராவது இருந்தால் அவர்கள் மீது தானே விழும். அதற்குப் பல்லி பொறுப்பாக முடியுமா? அப்படி விழும்போது, சரி இவன் காலில் விழுவோம் என்றோ, அவன் தலையில் விழுவோம் என்றோ, இன்னொருத்தன் கையில் விழுவோம் என்றோ முடிவு செய்தா விழும்?

சரி எங்கே விழுந்தாலும் உயிர் பிழைக்க வேண்டும் என்கிற பதட்டம் தானே அதுக்கு இருக்கும். பாவம் அதைப் போய் தலையில் விழுந்தால் கலகம், நெற்றியில் விழுந்தால் பதவி என்று மனிதர்களுடைய உறுப்பு வாரியாகப் பலன் எழுதியிருக்கிறார்களே! வேடிக்கையாக இல்லை.

எங்கே விழுந்தாலும் பாவம் பல்லி. இசகு பிசகா விழுந்துட்டா பல்லியல்லவா செத்து விடும். யோசித்துப் பாருங்கள்.

வீட்டுச் சுவரில் அலைந்து கொண்டு அற்பமான பூச்சிகளைத் தின்று வாழும் பல்லியினால் நமது வாழ்க்கையில் நடக்கப் போகிற நிகழச்சிகளைத் தீர்மானிக்க முடியுமா? அறிவியல் பூர்வமாக இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?

அடுத்ததாக பல்லி ஏன் கத்துகிறது? பொதுவாக இரண்டு காரணங்கள் இருக்கும். ஒன்று உணவை அதாவது பூச்சிகளைப் பார்த்து சப்புக் கொட்டி எழுப்பும் ஒலி. அல்லது பெண் துணையைத் தேடி ஆணோ, ஆண் துணையைத் தேடிப் பெண்ணோ, இனப்பெருக்கத்துக்காக அழைக்கும் ஒலி. இல்லையென்றால் எதிரியுடன் சண்டையிடும் போதோ, எதிர் பாராத வேதனையின் போதோ, ஒலி எழுப்பலாம்.

ஆனால் இதைப் போய் பல்லி மனிதர்களுக்குப் பலன் சொல்கிறது என்று மனிதர்களாக நினைத்துக் கொண்டால் பாவம் பல்லி என்ன செய்யும்? இப்படியான மூடநம்பிக்கையை என்னவென்று சொல்வது? அதிலும் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு திசையில் இருந்து கொண்டு பல்லி குரல்கொடுத்தால் ஒவ்வொரு விதமான பலன் உண்டாகுமாம்.

பல்லிக்குக் கிழமை தெரியுமா?

பல்லிக்குத் திசை தெரியுமா?

என்ன முட்டாள்த்தனம்!

ஆறறிவு படைத்த மனிதனால் செய்ய முடியாத ஒரு காரியம் ஒரு பல்லி தன்னுடைய கீச்சுக் குரலில் கத்துவதால் மட்டும் நடந்து விடுமா?

யோசித்துப் பாருங்கள்!

பூனை, பல்லியோடு மட்டும் விடவில்லை. ஆந்தை கத்தும் பலன், காகம் கரையும் பலன், கழுதை கத்தும் பலன், கருடனைப் பார்க்கும் பலன் என்று எதையும் விட்டு வைக்கவில்லை.

நல்லவேளை சிங்கம் கர்ஜிக்கும் பலன், புலி உறுமும் பலன், என்று சொல்லாமல் விட்டார்கள்!

இவைகளையெல்லாம் அறிவியல்பூர்வமாக, பகுத்தறிவுப்பூர்வமாக கடுகளவாவது ஏற்றுக் கொள்ள முடியுமா?

தாத்தாக்களுக்குத் தாத்தாக்களுக்குத் தாத்தாக்கள் சொன்னவை எல்லாவற்றையும் நாம் அப்படியே சரி என்று ஏற்றுக் கொள்ள முடியுமா? முடியாது. ஏன்?

அறிவியல் வளர்கிறது. மனிதர்களின் அறிவும் அநுபவமும் வளர்கிறது. எனவே சகுனம் என்றும், பல்லி, ஆந்தை, கருடன், கழுதை சொல்லும் பலன்கள் என்றும் சொல்லி மனிதனின் வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளக் கூடாது.

பூனை குறுக்கே போவதைப் பார்த்து எலிகள் பயந்து ஓடி ஒளியலாம்.

ஆனால் நாம் மனிதர்கள்.lizard

Friday, 29 June 2012

பேனா தொலைந்து போகவில்லை

 

உதயசங்கர்

296354_223030614425623_100001560597711_608844_2065706084_n

கலை தன்னைத் தேர்ந்து கொண்டவர்களை சூதின் புதிர்வழிகளுக்குள் சிக்க வைக்கிறது. விந்தையான வாழ்வின் கணந்தோறும் கலைஞன் தன்னை இழந்து கொண்டேயிருக்கிறான். ரத்தப்பலி கேட்கும் இந்த வாதனையை மிகுந்த மகிழ்ச்சியோடே ஏற்றுக் கொள்கிற கலைஞனுக்கு தன் கலையைத் தவிர மற்ற எல்லாமே இரண்டாம பட்சம் தான். தன்னுடைய உன்னதமான வாழ்வுக்காக அல்ல மானுடத்தின் உன்னதவாழ்வுக்காகவே கலைஞன் தன் வாழ்நாள் முழுவதும் போராடுகிறான். இந்தப் போராட்டத்தில் பட்டினி கிடக்க நேர்ந்தாலும் கஞ்சனின் கைப்பணம் போலத் திரும்பத் திரும்பத் தன் கலையை உச்சிமுகர்ந்து நெஞ்சோடணைத்துக் கொள்கிறான். ஆனால் வாழ்க்கை சவால் விட்டுக் கொண்டே செல்கிறது. கைக்கும் வாய்க்குமான போராட்டத்தில் தன் கலையின் அத்துகளைக் கரையான்கள் அரித்து விடாமல் பாதுகாத்து வருவதே மிகப் பெரிய சாதனை.

கடந்த இருபது வருடங்களாகத் தான் எழுதிய கதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கும் மு.அப்பணசாமி எண்பதுகளில் கோவில்பட்டியிலிருந்து வேர் விட்டுக் கிளம்பிய இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். சுதந்திரப் பத்திரிகையாளராக, வாய்மொழி வரலாற்று ஆசிரியராக, நாடக ஆசிரியராக, எல்லோராலும் அறியப் பட்டவர். ஆறாம்திணை என்ற முதல் இணைய இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். அவருடைய பேனா தொலைந்து போனது என்ற சிறுகதைத் தொகுப்பில் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளினூடாக ஆழ்ந்த அர்த்தத்தைத் தேடிப் பயணப்படுகிற கதைகளாகக் கோர்க்கப் பட்டிருக்கின்றன.

சலிப்பூட்டும் அன்றாட வாழ்வின் கசங்கல்களின் இருளில் கலைஞனே தன் கலை மொழியின் மூலம் புதிய வெளிச்சத்தைக் காட்டுகிறான். பெரும்பாலான கதைகளில் பெண் என்ற படிமம் தன் பன்முகதரிசனத்தைக் காட்டுகிறவளாக உருவாகியிருக்கிறாள்.வாழ்வின் கொடூரங்களுக்குத் தன்னைப் பலி கொடுத்தவளாக வருகிறாள். “ தாயீயாக” அழிந்தபோதில் அக்காவாகக் ”கிணற்றில்” அம்மாவாகப் “ பஞ்சினிருளில் “ கண்ணம்மாவாக ”விரல்களின் ஸ்ருதியில் “ என்று அழுத்தமான சித்திரங்களாக மனதில் பதிகிற பெண்கள் நம்மைக் கலங்க வைக்கின்றனர். அதே போல விட்டேத்தியான, வன்முறை நிறைந்த ஏலாத அப்பாக்களும் வருகிறார்கள். தொகுப்பில் விரவிக் கிடக்கிற கதைகளின் வழியே அம்மா அப்பாவின் ஆகிருதிகள் வளர்ந்து வருவதை உணர முடிகிறது.

எல்லா எழுத்தாளர்களுக்குமே பழைய நினைவுகளைப் போற்றுதல் என்பது ஒரு இயல்பான குணாதிசயம். அப்பணசாமியும் பேனா தொலைந்து போனது, அனாந்தரம், நான் ஊருக்குத் திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறேன் அங்கு யாரும் இல்லை. போன்ற கதைகளின் வழியே தன் பால்ய கால வாழ்க்கையை, எழுதிப் பார்க்கிறார். மனித மன விகாரங்களைச் சொல்லும் கதைகளாக, இது கதையல்ல், அகம் பிரம்மாச்மி, பாஷாணகிரந்தம், போன்றவை திகழ்கின்றன.

தமிழில் மிகவும் அருகிப்போன உருவகக்கதையை நரிக்குரல் சிம்மம் வழியே எழுதியிருக்கிறார் அப்பணசாமி. வேலையின்மையின் வெம்மையை, வீட்டின் நெருக்குதல்களை, புளிச்சக்கைகளுக்கு நடுவே வெண் தாள் சுவடிகள் கதைகளிலும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். அதிலும் குறிப்பாக புளிச்சக்கைகளின் நடுவே என்ற கதையின் வெறுமை நம்மை மூச்சடைக்க வைக்கிறது.

முதலில் இருக்கக்கூடிய மூன்று கதைகளும் மிகச் சமீபத்தில் எழுதப்பட்ட கதைகள் என்பது மொழி நடையிலும் உத்தியிலும் வெளிப்பட்டிருக்கிறது. மற்ற கதைகளின் மொழி அபூர்வமான கவித்துவமும் நுட்பமும் கூடிய மொழியாக அமைந்துள்ளது.

‘ ஆட்டு மந்தை போல் கடல் காற்று உடலை உராய்ந்து உராய்ந்து நீவி விட்டது’

-அனாந்தரம்

‘ குட்டியான செட்டைகள் கொண்ட குருவியின் மனம் அலையும் தூரத்துக்கும், நீண்ட செட்டைகள் கொண்ட கிறீச்சிட்டான் பறவையின் மனம் அலையும் தூரத்துக்கும் தன் மனதைப் படர விட்டு, சுண்டி இழுத்தாள்’.- தாயீ

’ தனது ஆழம் காணமுடியாது வறண்டு கிடந்த மனதைப் போல கானல் சுரந்து புதைந்த பள்ளம் போல வெட்ட வெளியில் ஒரு கிணறு’- கிணறு

‘ கான்கிரீட் கண்கள் நிறைந்த கபாலங்களாகக் கட்டிடங்கள் ‘- முரண் சிதைவு

நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடி ஊசலாடி அவநம்பிக்கையின் இருள் பள்ளத்திலேயே விழுகிறவர்களாக அப்பணசாமியின் கதாபாத்திரங்கள் இருக்கின்றனர். இன்றைய வாழ்வின் நெருக்கடியும், அவலமும், அது தானே. ஒவ்வொரு கதையிலும் மொழிநடை, உத்தி, பாணி, என்று வெவ்வேறு விதமாக பரிசோதனை முயற்சிகளைச் செய்து பார்த்திருக்கிறார் அப்பணசாமி. இருளின் விதவிதமான வர்ணஜாலங்களைப் பிரதிபலிக்கிற தனித்துவமான கதைகளை எழுதியுள்ளார். வளமான தமிழ்ச் சிறுகதை உலகிற்கு பேனா தொலைந்து போனது மூலம் தன் அழுத்தமான வரவைப் பதிவு செய்திருக்கிறார்.

காலத்தின் நீள்பரப்பில், வாழ்க்கைப்போராட்டத்தில் கசப்பை விழுங்கி, விழுங்கி, கைத்துப் போன மன உலகில் தன்னை அவநம்பிக்கைவாதியென்று பிரகடனப்படுத்த வேண்டிய அளவுக்கு கொண்டு தள்ளியிருக்கிற சமூகச் சூழலில் அப்பணசாமி என்ற கலைஞன் தன் கலையின் மூலம் தன்னை நிருபித்துக் கொண்டிருக்கிறார். அதற்குப் பெரும் சாட்சியாக பேனா தொலைந்து போனது என்ற இந்தத் தொகுப்பு விளங்குகிறது. அப்பணசாமியின் கைப்பான புன்னைகையின் மீது கலை தன் ஒளியை வீசுகிறதே…….

பேனா தொலைந்து போனது

அப்பணசாமி

விலை – 60/

வெளியீடு – பாரதி புத்தகாலயம்

சென்னை -600018

நன்றி- புத்தகம் பேசுது.

Thursday, 28 June 2012

இனிக்கும் திராட்சை

உதயசங்கர்red-fox-and-grapes-shakila-malavige

அன்று இருட்டியதிலிருந்தே நரியாருக்கு எதுவுமே சாப்பிடக் கிடைக்கவில்லை. என்றுமே இப்படி நடந்தது கிடையாது. பொழுது அடையும் போது படுத்து உறங்கிய புதரிலிருந்து வெளியே வந்து உடம்பை நெளித்து நீட்டி நீண்ட கொட்டாவி விடுவார் நரியார்.

தலையை உதறி கண்களை அகலத் திறந்து பார்த்தால் எதிரே அவர் தின்பதற்கு ஏதாவது தயாராக இருக்கும். ஒரு முயல் மேய்ந்து கொண்டிருக்கும். ஒரு காட்டுக் கோழி உட்கார்ந்து கொண்டிருக்கும். ஒரு கௌதாரி பம்மிக் கொண்டிருக்கும். அட, ஒண்ணுமில்லைன்னா ஒரு காட்டெலியாவது அலைந்து திரிந்து கொண்டிருக்கும். உடனே மின்னலடித்த மாதிரி மூளை சுறுசுறுப்படையும். உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் ரத்தம் துடிக்கும். அப்படியே பாய்ந்து அதை லபக்கென்று பிடித்து உணவாக்கிக் கொள்வார். அப்படிச் சாப்பிடும் போதே பற்களையும் துலக்கிக் கொள்வார்.

ஆனால் இன்னிக்கு அதிசயமாய் இருக்கிறது. தூங்கி எழுந்து வெளியே வந்து பார்த்தால் ஒரு சுடுகுஞ்சியைக் கூடக் காணவில்லை. ஒரு முயலோ,ஒரு எலியோ, அட ஒரு வெட்டுக்கிளியைக் கூடப் பார்க்கமுடியவில்லையே. எல்லோரும் வேறு காட்டுக்கு ஓடிப் போய் விட்டார்களா? நரியாருக்கு எதுவும் புரியவில்லை. பசி வயிற்றைக் கவ்வியது.

உணவைத் தேடி ஓட வேண்டிய நிலைமை வந்து விட்டதே. காற்றில் மூக்கால் வாசனையை உறிஞ்சி உறிஞ்சிப் பார்த்தது. பசியும் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஆனால் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தார் நரியார். இதுவரை கண்ணுக்கு எதுவுமே அகப்படவில்லை. என்ன சோதனை இது?

நிலவு பொழிந்து கொண்டிருந்தது. கொஞ்சம் நின்று யோசிக்கலாம் என்று நினைத்த நரியார் சட்டென நின்றார். சுற்றும் முற்றும் பார்த்தார். காட்டை விட்டு வெகுதூரம் வந்திருந்தார் நரியார். ஏதோ ஒரு வாசனை காற்றில் மிதந்து வந்தது. ஒரு பழவாசனை. சரி இன்னிக்கு சைவச்சாப்பாடு தான் என்று முடிவு செய்து கொண்டார். பழவாசனையை முகர்ந்து கொண்டே அதன் பின்னால் ஓடினார்.

திராட்சைப் பழத்தோட்டம். அங்கே திராட்சைப் பழங்கள் கொத்துக் கொத்தாய் பழுத்துத் தொங்கிக்கொண்டிருந்தன. நன்றாகப் பழுத்த கருந்திராட்சைப் பழங்கள். நரியாரின் நாக்கில் எச்சில் ஊறியது. உடனே நரியார் நல்ல வாகான தூரத்தில் போய் நின்று திரும்பி ஓடி வந்து துள்ளிக் குதித்தார். பழங்களைத் தொடக் கூடமுடியவில்லை. திரும்பவும் போய் ஓடி வந்தார். ம்ஹூம்..

சோர்வாய் இருந்தது. அப்போது அவருடைய கொள்ளுத் தாத்தா சொன்ன கதை ஞாபகத்துக்கு வந்தது. அதான் ச்சீ..ச்சீ..இந்தப் பழம் புளிக்கும் என்று தாத்தா சொன்னாரோ. கிடைக்கலன்னா இப்படி ஏதாச்சிம் சொல்லிக் கிட வேண்டியதான். அப்படியே திராட்சை கொடி நிழலில் உட்கார்ந்து யோசித்தார். திரும்பிப் போய் வேறு உணவு தேடலாமா என்று நினைத்தார். இத்தனை முறை முயற்சி செய்தும் கிடைக்கவில்லயே. இல்லை. கொள்ளுத்தாத்தாவைப் போல் மனந்தளரக் கூடாது. மாத்தி யோசிக்க வேண்டும். என்ன செய்யலாம்? சில நொடிகளில் பளிச் சென்று ஒரு யோசனை வந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தார் நரியார். ஒரு பெரிய கல் கிடந்தது. அதை மூக்கால் தள்ளிக் கொண்டு வந்தார். திராட்சைப் பழங்களுக்குக் கீழே வைத்து விட்டு, கல்லிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளிப் போய் நின்றார். ஓடி வந்து அந்தக் கல்லில் முன்கால்களை ஊன்றி பின்கால்களை காற்றில் உதைத்து ஓங்கி ஒரு குதி குதித்தார்.

என்ன ஆச்சரியம்!

குதித்திறங்கிய நரியாரின் வாயில் ஏராளமான பழக்குலைகள். மேலும் நிறையப் பழங்கள் தரையில் விழுந்து சிதறின.

வயிறு முட்ட அந்தப் பழங்களைத் தின்றார்.

பின்பு “ அடடா.. இந்தப் பழம் இனிக்கும்..” என்று சொல்லிக் கொண்டே காட்டைப் பார்த்து ஓடினார்.

Wednesday, 27 June 2012

கடைசியாய் ஒரு வாய்ப்பு

உதயசங்கர்

sher-christopher-1

இன்னும் கூட

கடைசியாய் ஒரு வாய்ப்பு

உங்களுக்கு இருக்கிறது

நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதற்கும்

இறந்து கொண்டிருப்பதற்குமிடையில்

கடைசியாய் ஒருவாய்ப்பு

உங்கள் மதுக்கோப்பையிலிருந்து

கடைசிச் சொட்டு உங்கள் நாவை நோக்கி

பேரரருவியென வீழும் முன்னால்

உன்மத்த இசைக்கோவை

உங்கள் மூளைவெளியைத்

தன் நாவால் சுருட்டி விழுங்கும் முன்னால்

இருள் தன் சிறகுகள் வீசி ஒளியின் இறுதிக்கணத்தை

தன் அடி வயிற்று மடிப்புகளில்

மறைத்துக் கொள்வதற்கும் முன்னால்

ஒரு விபத்து தன் குரூரக்கரங்களால்

உங்களை அரவணைக்கும் முன்னால்

அதிகாரக் கொலையாளியின் கரங்களில்

உயிர் குடிக்கும் கைவாளாய்

ஏதுமறியாத நீங்கள் மாறுவதற்கும் முன்னால்

கடைசியாய் ஒரு வாய்ப்பு

வாழ்வின் இக்கணமே காத்திருக்கிறது

நீங்கள் கடந்தும் சென்றிருக்கலாம்

கவனிக்காமலும் சென்றிருக்கலாம்

ஆனாலும் இன்னும்கூட

கடைசியாய் ஒரு வாய்ப்பு.

Tuesday, 26 June 2012

கொண்டையில்லாத சேவல்

மலையாளத்தில்- மாலிsculptures71

தமிழில்- உதயசங்கர்

 

அந்தச் சேவலுக்கு ஒரு கெட்டகுணம் இருந்தது. தேவையில்லாமல் அதிகமாய் பேசுவான். ஒருமுறை அவன் கூனன்பூனையைப் பார்த்தான். அவனிடம்,” டேய்! கூனா..உசுப்பிராணின்னா தலையில் கொண்டை வேணும்..உன் தலையில் கொண்டை இல்லை..அதனால நீ உசுப்பிராணியே இல்லை..” என்று சொல்லி முடிக்கும்முன்பே கூனன்பூனை பாய்ந்து ஒரு கடி! சேவல் தலைக் கொண்டை பூனையின் வாயில்!

அன்றிலிருந்து அந்தச் சேவலுக்கு ஒரு பட்டப்பெயர் உண்டானது-’கொண்டையில்லாச் சேவல்’.

அவன் பக்கத்துவீட்டுக் கோழியிடம்,”ஏடி! நான் மேகத்தைவிட உயரமாகப் பறக்கப் போறேன் தெரியுமா?” என்றான்.

அதற்கு அந்தக் கோழி,”கொண்டையில்லாச் சேவலே! என்ன இருந்தாலும் நீ ஒரு கோழியினம் தானே! அதனால பறப்பே..ஒத்துக்கிறேன்..ஆனால் ரொம்ப உயரமா எல்லாம்முடியாது..ரொம்ப தூரத்துக்கும் முடியாது..உன்னோட ஆசையை நீ விட்ரு!” என்று உபதேசம் செய்தது.

கொண்டையில்லாச் சேவல் விடவில்லை. அவனுக்கு பிடிவாதமும் கௌரவமும் உண்டு. உயரப் பறக்க படித்தே ஆக வேண்டும். அவன் போய் காக்காவைப் பார்த்தான்.

“காக்கா! நீ எனக்குச் சொல்லிக்கொடு..” என்று வேண்டினான்.

அதைக் கேட்ட காக்கா,” கொண்டையில்லாச் சேவலே! நீ கொஞ்சம் அடக்கஒடுக்கமா இருந்துக்கோ..அதான் உனக்கு நல்லது..” என்று சொல்லி விட்டுப் பறந்து சென்றது. கொண்டையில்லாச் சேவல் மைனாவைப் போய்ப் பார்த்தது.

”மைனா மைனா எனக்குச் சொல்லிக்கொடு..”என்று வேண்டினான்.

“கொண்டையில்லாச் சேவலே எனக்கு வேற வேலை இருக்கு...!”என்று மைனா சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டது.

காக்காவும் கைகழுவி விட்டது. மைனாவும் கைகழுவி விட்டது.இவர்களை விட கழுகன் பலசாலி. கொண்டையில்லாச்சேவல் கழுகனைப் போய் பார்த்தான்.

”கழுகா, எனக்குச் சொல்லிக்கொடு..சும்மா ஒண்ணும் வேண்டாம்! தெரியுதா.. எனக்குக் கிடைக்கிற புழுக்கள்ல பாதிப் புழுக்கள் உனக்குத் தாரேன்..” என்று கொண்டையில்லாச் சேவல் சொன்னான்.

“கொண்டையில்லாச் சேவலே! உயரப் பறக்கிறது உனக்கு ஒத்து வராது..சும்மா ஆசைப் பட்டு பிரயோசனமில்லை..நீ உன் வேலையைப் பாரு..” என்று கழுகன் சொன்னான்.

கொண்டையில்லாச்சேவல் விடவில்லை. அவன் கழுகனைத் தொந்தரவு செய்தான். கழுகனுக்கு இரக்கம் வந்தது.

“சரி! நான் சொல்லிக் கொடுக்கிறேன்..முதல் பாடத்தை ஆரம்பிப்போமா..நீ என் முதுகில் ஏறிக்கோ..நான் உன்னைய தூக்கிகிட்டு உயரத்தில் பறக்கிறேன்..”என்று கழுகன் சொன்னான்.

கொண்டயில்லாச்சேவல் உற்சாகமாகி விட்டான். அவன் கழுகனின் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டான். கழுகன் சிறகுகளை விரித்து உயரே பறக்கத் தொடங்கினான்.கொண்டையில்லாச்சேவல் கண்களை மூடிக் கொண்டான்.திறக்கவில்லை. இரண்டு பேரும் எங்கே போயிருந்தாங்க தெரியுமா? தென்னை மரத்தை விட உயரமாய் பறந்து போனார்கள். கொண்டையில்லாச்சேவல் இவ்வளவு உயரமாய் பறப்பது இதுதான் முதல்தடவை. தலை சுற்றுவது போல் இருந்தது.கொஞ்சநேரம் கழிந்தது. அப்போது? கொண்டையில்லாச்சேவல் கீழே பார்த்தது. கீழே..ரொம்ப கீழே..கிடந்தது, பூமி. தென்னைமரமே புல்லு மாதிரி தான் தெரிந்தது.

கழுகன் இன்னும் மேலே பறந்து கொண்டிருந்தான்.கொண்டையில்லாச்சேவல் மிகவும் பயந்து போய்விட்டான்.அவன் கழுகனோட இறகுகளை இறுகப் பிடித்துக் கொண்டான்.பிடியை விட்டால்..அவ்வளவுதான்.முடிஞ்சது காரியம்!

“கழுகா! தயவு செஞ்சு என்னைக் கீழே இறக்கி விடேன்..” என்று கெஞ்சினான்.

ஆனால் கழுகன் உயரே போய்க் கொண்டேயிருந்தான்.கொண்டையில்லாச்சேவலுக்குக் கீழே பார்ப்பதற்கே பயம். அவன் கண்களை இறுக்கி மூடிக் கொண்டான்.

“கொண்டையில்லாச்சேவலே! நான் இப்போ உன்னை தள்ளிவிடப் போறேன்..” என்று கழுகன் சொன்னான்.

”அய்யோ தள்ளிராதே..நான் செத்துருவேன்..என்னைக் காப்பாத்து..உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்..” என்று கொண்டையில்லாச்சேவல் .

“இனிமேல் நீ மேகங்களை விட உயரமா பறக்கணுமா..” என்று கழுகன் கேட்டான்.

“இல்ல வேண்டாம்..” என்று கொண்டையில்லாச்சேவல் சொன்னான்.பின்னர் கழுகன் அவனைக் கீழே இறக்கி விட்டான்.

பக்கத்துவீட்டுக்கோழி “என்னாச்சு உன் முதல்பாடம்..” என்று கேட்டது.

கொண்டையில்லாச்சேவல் கொஞ்சமும் தயங்காமல்,” கழுகன்,காக்கா, மைனா, எல்லாம் மோசமான பறவைங்க..உயரப் பறக்கிறது..அவங்களுக்குச் சரிதான்..கோழியின் அந்தஸ்துக்கு அது தேவையில்லை..” என்று சொன்னான்!