Thursday, 19 August 2021

அந்நியமாதலின் கலை

 

அந்நியமாதலின் கலை – காஃப்காவின் நுண்மொழிகளை முன்வைத்து…..

உதயசங்கர்

 


“ மெய்மையின் மிகு ஒளியால் மின்னுவது நம் கலை: வெகு விரைவாக விலகிச்செல்லும் முகச்சுழிப்பின் மேல் பட்டுத் தெறிக்கும் அந்த ஒளி உண்மையானது, வேறெதுவும் உண்மை அல்ல. “ ----- காஃப்கா

காலையில் நீங்கள் எழுந்திரிக்கும் போது ஒரு கரப்பான் பூச்சியாக மாறியிருந்தால் என்ன நடக்கும்? ஒரு மனிதனை எதிர்கொள்வதற்கும் ஒரு கரப்பான் பூச்சியை எதிர்கொள்வதற்குமிடையிலான இருத்தலியல் பதட்டத்தையே ஃப்ரான்ஸ் காஃப்கா தன்னுடைய உருமாற்றம் சிறுகதையில் எழுதியிருந்தார். அந்தக்கதை 1915 –ல் வெளியான சமயத்தில் இருத்தலியல் என்ற கோட்பாடே உருப்பெறவில்லை நாற்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு எழுத்தாளர் இன்றுவரை உலக இலக்கியத்தில் தன்னுடைய தாக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறார் என்பது இன்னமும் அவர் காலத்தின் சமூக யதார்த்தம் மாறிவிடவில்லை என்பதையே குறிக்கிறது.  இப்போது அவர் எழுதிய நுண்மொழிகள் தமிழில் கே.கணேஷ்ராம் மொழிபெயர்ப்பில் காஃப்காவின் நுண்மொழிகள் என்ற தலைப்பில் அற்புதமான வடிவமைப்பில் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே காஃப்காவின் உருமாற்றமும், விசாரணையும், சில சிறுகதைகளும் தமிழில் வெளியாகியிருந்தாலும் காஃப்காவின் வாழ்க்கை தரிசனங்களையும் தத்துவப்பார்வையையும் வெளிப்படுத்துகிற விதமாக காஃப்காவின் நுண்மொழிகள் நூல் இருக்கிறது என்று சொல்லலாம்.

காஃப்கா என்ற எழுத்தாளர் எப்படி உருவானார்? ஒருவருடைய அகவாழ்க்கை எப்படி ஒருவரின் புற வாழ்க்கையையும் அவருடைய பார்வையையும் உருவாக்குவதில் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதைப் பற்றியும் காஃப்காவை முன் வைத்து உரையாடிப்பார்க்கலாம்.

ஒருவர் ஏன் எழுதவேண்டும்? எழுதியே தீர வேண்டும் என்ற வெறியோ, எழுதாமலிருக்க முடியாது என்ற நெருக்கடியோ எப்போது ஏற்படுகிறது? ஏன் ஒருவன் எழுத்தாளனாகிறான்? கவிஞனாகிறான்? கலைஞனாகிறான்? மலையாளமொழியின் மகாகவியான கி.சச்சிதானந்திடம் நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள் என்று கேட்டபோது பைத்தியம் பிடிக்காமலிருப்பதற்காக எழுதுகிறேன் என்று பதில் சொன்னார். அவருடைய குடும்பத்தில் பரம்பரை நோயாக மனநோய் இருந்து வருவதால் அப்படிப்பட்ட மனநோய் தன்னைத்தாக்கி விடக்கூடாதேயென்று தான் கவிதை எழுதத்தொடங்கியதாகச் சொன்னார். இன்னொரு எழுத்தாளர் தான் நேசித்த பெண்ணுக்காக எழுதத்துணிந்ததாகச் சொன்னார். மற்றொருவர் தன்னை நிருபிப்பதற்காக எழுதவதாகச் சொல்கிறார். சகிக்க முடியாத இந்த வாழ்க்கையிலிருந்து ஆசுவாசம் கொள்வதற்காக எழுதுகிறேன் என்கிறார் ஒருவர். ஒருவர் சமூகத்துக்காக, சமூகத்தை மாற்றுவதற்காக எழுதுவதாகச் சொல்லும் போது எனக்காக மட்டுமே எழுதுகிறேன் என்று ஒருவர் முணுமுணுப்பதைக் கேட்க முடிகிறது. தாழ்வு மனப்பான்மையினால் எழுதுகிறேன் என்று சொல்லும் போது புறவுலக அழுத்தத்தைத் தாங்க முடியாமல் எழுதுவதாக மற்றொருவர் சொல்கிறார். பணத்துக்காக, புகழுக்காக, காதலுக்காக, விருதுகளுக்காக, சில குறிப்பிட்ட காரியங்களுக்காக, எழுதுவதாக, ஆயிரக்கணக்கான காரணங்களைச் சொல்லமுடியும். மனிதமனதின் கோடிக்கணக்கான பின்னங்களை ஒருவரால் புரிந்து கொள்ள முடிந்தால் இந்தக் காரணங்களையும் ஒருவேளை புரிந்து கொள்ள முடியலாம்.

ஆனால் கலையின் வித்துக்குள் மனப்பிறழ்வின் கூறு இருப்பதைச் சாதாரணமாக எல்லோராலும் கண்டுபிடித்துச் சொல்லி விடமுடியும். மார்க்சீய அறிஞர். ஜார்ஜ் தாம்சனின் தனது மனிதசாரம் என்ற நூலில் கலைஞர்கள் தனித்துவமான குழுவாகத் தங்களுக்கென்றே தனித்துவமான பழக்கவழக்கங்களோடு, வாழ்க்கைமுறையை மேற்கொள்வதாக எழுதுகிறார். திரும்ப திரும்பச் சொல்லப்படும் மந்திரமொழியினால் புறவுலக யதார்த்தத்தைக் கட்டுப்படுத்தமுடியுமென்று அவர்கள் நம்பினார்கள். அதனால் மந்திரக்கவிதைகளை அவர்கள் படைத்தார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழ்ந்த அவர்களே கவிஞர்களாகவும், மருத்துவர்களாகவும், பூசாரிகளாகவும் மாறினார்கள் என்று சொல்கிறார்.

கலையின் வரலாறும் உளவியல் ஆய்வுகளும் இதை நிரூபித்திருக்கின்றன. ஏனெனில் கலைஞர்கள் மட்டுமே இந்த உலகை வேறுமாதிரியாகப் பார்க்கிறார்கள். அந்தப் கற்பனையின் வழியே அவர்கள் ஒரு புதியதொரு உலகைப் படைக்கிறார்கள். கற்பனையாகக் கண்ட உலகத்தை வார்த்தைகளின் வழியே புனைவாக மாற்றி உயிர் கொடுத்து வாசகர்களை நம்பவைக்கிறார்கள். இந்தக் கற்பனைக்கும், பாவனைக்கும், புனைவுக்கும், அவர்கள் உலகியல் தர்க்க அறிவை உதறி கலையியல் தர்க்கத்தைக் கைக்கொள்கிறார்கள். கலையின் தர்க்கம் எந்த கட்டுப்பாடுகளுமற்றது. தன்னை வெளிப்படுத்தும் ஆவேசம் மட்டுமே அதற்கு இருக்கும். எனவே தான் பல சமயங்களில் பல எழுத்தாளர்களின் படைப்புகளைச் சமகாலத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை.

இன்று உலகம் முழுவதும் புகழடைந்திருக்கிற ஃபிரான்ஸ் காஃப்காவின் படைப்புகளும் அவருடைய காலத்தில் போற்றப்படவோ, புரிந்து கொள்ளப்படவோ இல்லை. காஃப்காவை ஜெர்மன் மொழியில் எழுதிய பொகிமியாவைச் சேர்ந்த யூத எழுத்தாளர் என்றே அழைக்கிறார்கள். பொகிமியா என்ற நாடு ஆஸ்திரியா ஹங்கேரி, பேரரசு, வியன்னா ஆகியவற்றின் சில பகுதிகளையும் இன்றைய செக்கோஸ்லோவிய நாட்டின் மேற்குப் பகுதியையும் உள்ளடக்கியது. பொகிமியாவில் இருந்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் இசைஞர்களும் வழக்கத்துக்கு மாறான வித்தியாசமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். யாரும் யாருடனும் நிரந்தரமான உறவு வைத்திருப்பதில்லை. சாகசவிரும்பிகளாகவும், நாடோடிகளாகவும், சுற்றியலைபவர்களாகவும் தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்தனர். இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பிறகே செக்கோஸ்லோவேக்கியக் குடியரசு தோன்றியது.

. காஃப்கா அப்போது பொகிமியாவின் தலைநகர் என்றழைக்கப்பட்ட ப்ரேக் நகரில் 1883 –ல் ஜூலை மாதம் 3 –ஆம் தேதி ஒரு மத்திய தரவர்க்க யூதக்குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை  ஹெர்மன் காஃப்கா ப்ரேக் நகரத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான பெரிய ஃபேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். அவருடைய கடையில் பதினைந்துபேர் வேலை பார்த்தனர். அவர் வீட்டிலும் வெளியிலும் சர்வாதிகாரியாக, கொடுங்கோலராக இருந்தார். தந்தையின் ஆதிக்கவுணர்வு ஃபிரான்ஸ் காஃப்காவின் வாழ்நாள் முழுவதிலும் கருநிழலாய் அவர் மீது கவிந்திருந்தது. காஃப்கா அவருடைய தந்தைக்கு 100 பக்கங்களுக்கு மேலாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவருடைய தந்தையின் ஆதிக்கமும், கண்டிப்பும் அவரை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்று விரிவாகச் சொல்லியிருக்கிறார். தனது தந்தையைப் பற்றி காஃப்கா கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,

“ சக்தியிலும், ஆரோக்கியத்திலும், பசியுணர்விலும், உரக்கப்பேசுவதிலும், சகிப்புத்தன்மையிலும், பேச்சுக்கலையிலும், சுய திருப்தியிலும், ஆதிக்கத்திலும், சமயோசித அறிவிலும் மனித இயல்பை அறிந்து கொள்வதிலும் ஒரு உண்மையான காஃப்காவியனாக இருந்தாரென்று குறிப்பிடுகிறார்.

அப்பாவுக்கு மட்டுமல்ல தன் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு சகோதரிகளுக்கு என்று எல்லோருக்கும் நூற்றுக்கணக்கான கடிதங்களை எழுதினார் காஃப்கா. தன்னைச் சுற்றியிருந்தவர்களிடமிருந்து விலகியிருப்பவராகவும், அதிகம் பேசாதவராகவும், கூச்ச சுபாவியாகவும் பார்ப்பவர்களுக்குத் தோற்றமளித்த காஃப்காவுக்கு தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்த கடிதங்கள் ஒரு வடிகாலாக இருந்தன. ஆனால் அவரிடம் பழகுபவர்களிடம் மிகவும் சகஜமாக, இனிமையாக, நட்பார்ந்த முறையிலும் உறவு கொண்டிருந்தார் காஃப்கா.

அப்பாவின் ஆதிக்கத்திலிருந்து காஃப்கா விடுபட எடுத்த முயற்சிகளெல்லாம் மேலும் இருளையே கொண்டு வந்து சேர்த்தன. காஃப்காவின் படைப்புகளிலெல்லாம் அந்த இருளை நாம் தரிசிக்கமுடியும்.

காஃப்காவின் தாயார் ஜூலி தந்தைக்கு நேர்மாறாக அமைதியான பெண்மணி. மது உற்பத்தி செய்து சில்லறை விற்பனை செய்யும் ஒரு பணக்காரருடைய மகள். ஜூலி தினமும் 12 மணிநேரம் கணவர் நடத்திய ஃபேன்சி ஸ்டோரிலேயே அதை நிர்வாகம் செய்யும் வேலையைச் செய்து கொண்டிருந்தார். இந்தத் தம்பதினருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் காஃப்காவுக்கு முன்னால் பிறந்த இரண்டு ஆண்குழந்தைகள் ஜார்ஜும், ஹெய்ன்றிச்சும், குழந்தைப்பருவத்திலேயே இறந்து விட்டார்கள். அதன் பிறகு பிறந்த காஃப்கா குடும்பத்தின் மூத்த சகோதரரானார். அவருக்குப் பிறகு மூன்று பெண்குழந்தைகள்  எல்லி, வல்லி, ஒட்டிலி, ஆகியோரும் பிறந்தார்கள். வீட்டிலிருந்த ஒரே ஆண்குழந்தையாக காஃப்கா இருந்ததினால் அப்பா என்ற கொடுங்கோலரின் கவனம் முழுவதும் காஃப்கா மீதே இருந்தது. எப்போதும் கண்டிப்பின் சவுக்குநுனி அவரைப் பதம் பார்த்துக் கொண்டேயிருந்தது. தாயும் தந்தையும் வியாபாரநிறுவனத்தில் அக்கறையுடன் இருந்ததினால் குழந்தைகள் எல்லாருமே தாதிகளாலும் வேலைக்காரர்களாலுமே வளர்க்கப்பட்டார்கள்.

எப்போதும் அப்பாவின் இரண்டு கண்கள் அவரைக் கண்காணித்துக் கொண்டேயிருப்பதாக பிரமை தோன்றி அவரை மனதளவிலும் உடலளவிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நம்பிக்கையின்மையும், தாழ்வு மனப்பான்மையும், விரக்தியும், பதட்டவுணர்வும், அவரை வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டேயிருந்தன. தன்னை எப்போதும் புகார் சொல்லிக்கொண்டேயிருக்கும் தன்னுடைய அப்பாவை எப்படியாவது திருப்தியடையச் செய்யவேண்டுமென வாழ்நாள் முழுவதும் ஆசைப்பட்டார். அதற்காகவே கல்லூரிப்படிப்பில் அவருக்கு விருப்பமான இராசயனப்பாடத்தை விட்டு விட்டு சட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்தார்.

அங்கே 1901 – ஆம் ஆண்டு சட்டப்படிப்பின் முதலாம் ஆண்டு முடிவில் மேக்ஸ் ப்ராடைச் சந்தித்தார். அன்றிலிருந்து இறுதிக்காலம் வரை மேக்ஸ் ப்ராட் காஃப்காவின் உற்ற நண்பராக இருந்தார்.  ப்ராடின் மூலம் ஜெர்மனியில் வெளியாகியிருந்த தாஸ்தயேவ்ஸ்கி, ஃப்ளாபர்ட், கோகோல், கிரில்லிபார்ஜர், ஹென்ரிச் வோன் க்ளெஸ்ட் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையெல்லாம் வாசித்தார் காஃப்கா. அதில் கிரில்லி பார்ஜரையும், ஹென்ரிச்சையும் தன்னுடைய உடன்பிறந்த சகோதரர்கள் என்று சொல்லிப் பெருமையடைந்தார். 1906 – ஆம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து விட்டு 1907 – ஆம் ஆண்டு ஒரு இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து அந்த வேலை பிடிக்காமல் 1908- ல் அதிலிருந்து விலகி வேறு ஒரு கம்பெனியில் சேருகிறார். 1911 –ல் தங்கை எல்லிஸின் கணவரோடு சேர்ந்து ஆஸ்பெஸ்டாஸ் கம்பெனி ஒன்றைத் தொடங்கி அதில் வேலை பார்க்கிறார். அவருடைய பலவீனமான உடல்நிலையை இன்னும் மோசமாக்கி விடுகிறது. அதிலிருந்தும் வெளியேறி தீவிரமான எழுத்துப்பணியில் ஈடுபடுகிறார்.

1912 – ஆம் ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி, மேக்ஸ் ப்ராடின் உறவினரான ஃபெலிஸ் பாயர் என்ற பெண்ணைச் சந்தித்து அவருடன் காதலில் விழுந்தார். பெலிஸ் பாயரைப் பற்றி காஃப்காவே,  ஒட்டிய கன்னம், துருத்திய கன்ன எலும்புகள், நீண்ட நாடி, ஈரப்பசையில்லாத உலர்ந்த கண்கள், உடைந்த வெள்ளை முடி, மொத்தத்தில் யாரையும் அருகில் நெருங்க விடாத கடுமையான முகத்தைக் கொண்டவர் என்று சித்தரிக்கிறார். ஆனால் காஃப்கா அவருக்கு ஏராளமான கடிதங்கள் எழுதுகிறார். அந்தக் கடிதங்களும் காஃப்காவின் மறைவுக்குப் பின் புத்தகமாக வெளிந்திருக்கிறது.

ஃபெல்ஸ் பாயருடன் உறவிலிருந்த காலகட்டத்தில் அவர் படைப்பாக்கரீதியில் காத்திரமான படைப்புகளைப் படைத்திருக்கிறார். உருமாற்றம், விசாரணை, தீர்ப்பு, கோட்டை போன்ற படைப்புகள் இந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டவை. ஃபெலிஸுடன் இரண்டுமுறை நிச்சயதார்த்தம் நடந்து முறிந்து விடுகிறது. அதற்கு மிகமுக்கியமான காரணம் காஃப்கா ஒரே நேரத்தில் அதீத பாலியல் விருப்புள்ளவராகவும் அதே நேரம் அதில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சவுணர்வும் கொண்டிருந்தார். அதே போல குடும்பம் மாதிரியான நிரந்தரமான அமைப்பில் தன்னால் பொருந்திப்போக முடியாது என்று ஆழமாக நம்பினார். அதனால் தொடர்ந்து பெண்களுடன் உறவு கொள்பவராகவும் அதே நேரம் அந்த உறவை நீடிக்க விரும்பாதவராகவும் இருந்தார் காஃப்கா.

ஃபெலிஸ் பாயருடன் காதலுறவிலிருக்கும்போதே  ஃபெலிஸின் தோழியான மார்க்ரெட் பிளாச்சோடும் உறவு வைத்துக்கொள்கிறார். மார்க்கரெட்டுக்கு காஃப்காவின் மூலமாக ஒரு குழந்தையும் பிறந்தது ஆனால் அது காஃப்காவுக்கே தெரியாது என்று காஃப்காவின் வரலாற்றாசிரியர்கள் சிலரும் அதை மறுத்தும் கருத்துகள் இருக்கின்றன. ஆனாலும் பெலிஸுடன் இரண்டுமுறை திருமணத்துக்காக நிச்சயம் செய்கிறார். ஒவ்வொரு முறையும் காஃப்கா நிச்சயதார்த்துக்குப் பிறகு உறவை முறித்து விடுகிறார்.

இறுதிவரை திருமணம் முடிக்காமலேயே வாழ்ந்து முடித்த காஃப்காவுக்கு இருந்த பிளவுண்ட ஆளுமைச் சிதைவு நோய் அவரை உறுதியாக எந்த முடிவையும் எடுக்க அனுமதிப்பதில்லை. அதே நேரத்தில் சதாநேரமும் அவரை வேட்டையாடிய காமத்தை எதிர்கொள்ளவும் அவரால் முடியவில்லை. பாலியல் தொழிலாளர் விடுதிகளுக்குப் போயிருக்கிறார். போர்னோகிராபி பார்ப்பதில் விருப்புடையவராக இருந்திருக்கிறார்.  மூன்றாவதாகவும் அவருடைய விருப்பத்தின் படியே  படிப்பறிவில்லாத, ஏழ்மையான, தங்கும்விடுதியில் அறை உதவியாளராக இருந்த ஜூலி என்ற பெண்ணுடன் நிச்சய்தார்த்தம் நடந்தது. ஆனால் திருமணத்தேதிக்கு முன்பே அவர் இன்னொரு பெண்ணுடன் ஓடிபோனார்.

1912 – 1915 க்குமிடையில் அவருடைய இரண்டு சிறுகதை நூல்கள் 1. Contemplation, 2. A Country Doctor, வெளியாகின. இலக்கிய இதழ்களில் பல சிறுகதைகளும் வெளியாகியிருந்தன என்றாலும் அவருடைய படைப்புகள் யாராலும் கவனிக்கப்படவேயில்லை.  அதனால் விரக்தியடைந்த காஃப்கா தன்னுடைய ஏராளமான கையெழுத்துப்பிரதிகளை  எரித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய நண்பரான மேக்ஸ் பிராடிடமும் அவரிமுள்ள பிரதிகளை அழித்து விடச்சொல்லியிருக்கிறார். காஃப்காவின் படைப்புகளின் மீது மேக்ஸுக்கு இருந்த நம்பிக்கையின் காரணமாக அவர் அழிக்கவில்லை.

1915 – ஆம் ஆண்டு முதல் உலகப்போர் தொடங்கிய போது காஃப்கா ராணுவச்சேவை செய்யத் தேர்வுக்காகச் சென்றிருந்தார். காஃப்காவின் பலவீனமான உடல்நிலை காரணமாக அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. காஃப்கா பள்ளிப்பருவத்திலேயே அனார்க்கிஸ்ட் இளைஞர் கழகத்துடனும், சோசலிச இளைஞர் கழகத்துடனும் தொடர்பிலிருந்தார். அவர்களுடைய பல கூட்டங்களில் கலந்து கொண்டார். பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது தன்னை ஒரு சோசலிஸ்ட் என்று தெரிந்து கொள்ளும்படியாக சிவப்புநிற அடையாளச்சின்னத்தை அணிந்து கொண்டு போனார். காஃப்காவின் அரசியல் பார்வையென்பது அனார்க்கிசமாகவும் சோசலிசமாகவும் இருந்திருக்கிறது. இறுகிய, கெட்டிதட்டிப்போன சமூகத்தை தகர்த்துவிட்டு புதிய சமூகத்தை உருவாக்க வேண்டுமென்ற கொள்கையுடைய அனார்க்கிச இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்களுடன் தொடர்பிலிருந்திருக்கிறார்.

1917 – ஆம் ஆண்டு ஜனவரியில் அவருக்கு காசநோய் இருப்பதைக் கண்டறிந்தார்கள். உடனே அவர் தன்னுடைய இளையசகோதரியான ஒட்டிலியாவின் ஊரான ஜூராவுக்குச் செல்கிறார். ஜுராவ் ஒரு பொகிமியக் கிராமம். அங்கே ஒட்டிலியா ஒரு பண்ணைத்தோட்டத்தில் வேலை பார்க்கிறார். அங்கே இருந்த எட்டு மாதங்களும் காஃப்காவின் வாழ்வில் மிக அமைதியான காலமாக இருந்தது. அங்கே தான் காஃப்கா தன்னுடைய நுண்மொழிகளை எழுதுகிறார். எந்த வரிசையும் இல்லாமல் அவர் எழுதிய நூற்றியொன்பது நுண்மொழிகள் தமிழின் சிறந்த மொழிபெயர்ப்பாளரான கே.கணேஷ்ராமினால் மொழிபெயர்க்கப்பட்டு நூல்வனம் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கிறது.

நுண்மொழிகள் அல்லது அபாரிசம் ( APHORISM ) என்று சொல்லப்படுகிற செவ்வியல் வடிவம் பொதுவாக ஐரோப்பிய அறிவுஜீவிகளின் தத்துவ தரிசனங்களையும், வாழ்க்கை பற்றிய ஆழமான அவதானிப்புகளையும், இறுதியான விதிமுறைகளையும் பற்றிச் சொல்வதாக இருக்கிறது. சாக்ரடீஸுக்கு முன்னாலேயே இருந்திருக்கிறது என்றும் அவற்றில் அறம், புதிர், தரிசனம், தத்துவக்குறிப்பு, பிரபஞ்சம் மற்றும் இயற்கை பற்றிய அவதானிப்புகள், மறைஞான சூட்சுமப்புதிர்கள், மானுட மீட்சிக்கான சிந்தனைகள், தனிமனித வாழ்வின் மீதான விசாரணையாகவும் இருக்கின்றன என்றும் காஃப்காவின் நுண்மொழிகள் இவை அனைத்தின் தொகுப்பாகவு இருக்கின்றன என்றும் தன்னுடைய பின்னுரையில் எழுதுகிறார் கே.கணேஷ்ராம்.

இந்த மாதிரியான வடிவம் இலக்கியம் என்றில்லை மருத்துவத்துறையிலும் எழுதப்பட்டிருக்கிறது. ஹோமியோபதி மருத்துவமுறையைக் கண்டுபிடித்த மேதையான சாமுவேல் ஃபிரெடெரிக் ஹானிமன் தன்னுடைய மருத்துவமுறையின் விதிமுறைகளை 291 அபாரிசம்களாக எழுதி 1810 – ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். ஆக நுண்மொழிகள் என்ற இலக்கியவடிவம் அனைத்துத்துறைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. செறிவான குறைந்த வார்த்தைகளில் தான் கண்டடைந்த தரிசனங்களை, சிந்தனைகளை, அநுபவங்களை எழுதுதல் என்று பொதுவாக நுண்மொழிகளைப் பற்றி சொல்லலாம்.

 ஜூராவ் கிராமத்தின் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுப்புறமும், அப்பா, வேலை, பெண்கள், அலுவலகம், என்ற பிடுங்கல்களுமில்லாத அந்தக் காலத்தில் காஃப்காவின் மனம் முன்னெப்போதுமில்லாத அமைதியை அடைந்திருக்கிறது. வெங்காயச்சருகுத்தாளை எட்டாக மடித்து எழுதியிருக்கிறார் காஃப்கா. அதையுமே மேக்ஸ் பிராடிடம் அழித்து விடவே சொல்லியிருக்கிறார். ஆனால் நல்லவேளையாக மேக்ஸ் அதைச் செய்யவில்லை. 1918 –ல் ஜூராவிலிருந்து வெளியேறி ப்ரேக் நகருக்குச் செல்கிறார். அங்கே 1920- ஆம் ஆண்டு மீண்டும் ஒரு காதல் அனுபவம் பத்திரிகையாளரான மெலினா ஜெசன்காவுடன் ஏற்படுகிறது. நீண்டகாலம் இருந்த உறவென்றால் அது மெலினாவுடனாக உறவு தான். 1923 – ஆம் ஆண்டு விடுமுறைக்காலத்தில் கடற்கரை நகரத்துக்குச் சென்ற காஃப்கா கிண்டர் கார்டன் டீச்சரான டோரா டையமொண்ட்டுடன் காதல் கொள்கிறார். காஃப்காவின் இறுதிக்காலம் வரை டோரா அவருடன் இருந்தார். தொண்டையில் ஏற்பட்ட காசநோயினால் சாப்பிடமுடியாமல் பட்டினியால் காஃப்கா 1924- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி தன்னுடைய நாற்பதாவது வயதில் வியன்னாவுக்கு அருகிலுள்ள கியர்லிங் என்ற நகரத்தில் காலமானார்.

மேக்ஸ் பிராடு தான் காப்பாற்றி வைத்திருந்த காஃப்காவின் படைப்புகளனைத்தையும் காஃப்காவின் மறைவுக்குப் பிறகு ஒவ்வொன்றாக வெளியிட்டார்.

காஃப்கா தன்னுடைய நுண்மொழிகளில் தன்னுடைய புனைவுகளில் பயன்படுத்திய பூடகமான மொழியை விட இன்னும் மறைஞான மொழியைப் பயன்படுத்துகிறார். யூத இறையியல் சிந்தனைகளும், கிறித்துவத்தத்துவமும், அவருடைய நுண்மொழிகளில் விரவிக் கிடக்கின்றன. அத்துடன் அவருக்கு தத்துவவாதிகளான கீர்க்கேகாடு, பாஸ்கல், ஹெப்பெல் ஆகியோரின் சிந்தனைகளின் தாக்கமும் இருந்தது.

காஃப்கா வாழ்வினை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி அவருடைய நுண்மொழியொன்றில்,

“ மனிதன் இழைக்கும் தவறுகள் அனைத்தும் பொறுமையின்மையிலிருந்தே கிளை விடுகின்றன. முறையான அணுகுநெறியிலிருந்து உரிய காலத்துக்கு முன்பே முறிந்து விடுகிறது. உண்மையெனத் தோன்றுவதை உண்மையெனத் தோன்றுமாறு விவரிப்பதே அந்த அணுகுநெறி..

என்று சொல்லும்போது நம்மிடம் புதிய சிந்தனை பிறக்கிறது. மனிதன் பொறுமையற்றவன். பொறுமையின்மையின் விளைவாகவே அவன் சென்று சேர இடத்துக்குச் செல்லமுடியாமல் போகிறது என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார். நுண்மொழிகளில்,

“ கூண்டு ஒன்று பறவையைத் தேடித்திரிந்தது.. 

என்ற கவித்துவமான வரிகளை வாசிக்கும்போது அமைப்புகள் சுதந்திரத்தைச் சிறைப்பிடிக்கத் தீட்டுகிற திட்டங்களை யோசிக்க முடிகிறது. தனிமனித விசாரணைகளாக அவர் எழுதியுள்ள,

“ ஒருவர் ஒரே பொருளை வெவ்வேறு விதமாக அவதானிப்பதால் அந்த ஒருவருள் பல்வேறு அகநிலைகள் அமைந்திருப்பதாகத் தோன்றுகிறது..

புறவயத்தின் பாதிப்பு மனிதர்களில் எப்படி வெவ்வேறு விதமான அகவயமான பிரதிமைகளை உருவாக்குகின்றது என்பதை செறிவாகச் சொல்லும் நுண்மொழி அது. அநேகமாக நிறைய நுண்மொழிகள் இந்த விதமான பார்வையையே கொண்டிருக்கின்றன.

“ மனிதகுலத்திற்கு முன் உன்னை சோதித்து அறிவாய், அது சந்தேகப்படுபவனைச் சந்தேகிக்கவும் நம்பிக்கை உடையவனை நம்பவும் கற்றுக்கொடுக்கும்..

காஃப்காவின் அகவாழ்க்கையே அவருடைய புறவாழ்க்கை பற்றிய சிந்தனைகளைத் தீர்மானித்தது என்று சொல்லலாம்.

“ மிகக்குறைவான பொய்களைச் சொல்லுவதற்கு வழி மிகக்குறைவான பொய்களைச் சொல்லுவதுதான். ஒருவருக்கு பொய்களைச் சொல்வதற்கு மிகக்குறைவான வாய்ப்புகளை வழங்குவது அல்ல..

எளிமையான வார்த்தைகளில் எளிமையான உண்மைகளை எழுதியிருக்கும் காஃப்கா படைப்பூக்கமும் சுதந்திரமுமே பிரபஞ்சத்தின் பூரணத்துவத்துக்குக் காரணமென்று ஒரு நுண்மொழியில் சொல்கிறார்.

எல்லையற்ற பூரணமும் பிரபஞ்சத்தின் பரப்பும் தீவிரப்படைப்பூக்கம் மற்றும் சுதந்திரமான சிந்தனையின் உச்சபட்ச சேர்க்கையின் விளைவே….

அவனது அயற்சியோ பெரும்போரில் ஈடுபட்ட வீரனுக்குரியது. அவனது தொழிலோ அலுவலகத்தின் ஒரு மூலையை வெள்ளை அடிப்பது..

என்று வாழ்வின் அபத்தம் பற்றி எழுதியிருக்கிறார். ஒவ்வொரு நுண்மொழியையும் சிந்திக்க சிந்திக்க வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு அர்த்தங்களைத் தரும் அழகைக் கொண்டிருக்கிறது.

செறிவான மொழியில் எழுதப்பட்டிருக்கிற காஃப்காவின் நுண்மொழிகளை அதேமாதிரியான செறிவான மொழியில் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார் கே.கணேஷ்ராம். காஃப்கா எந்த வடிவத்தில் காகிதத்தில் எழுதினாரோ அதே மாதிரியான வடிவத்தில் நேர்த்தியான தயாரிப்பில் பார்த்தவுடன் கையிலெடுக்கும் விதமாக புத்தகத்தைத் தயாரித்திருக்கிறார் நூல்வனம் மணிகண்டன். காஃப்காவை மீண்டும் கண்டெடுக்கவும் அவருடைய படைப்புகளை வாசிப்பதற்குமான தூண்டுதலாக இந்த நூல் அமைத்திருக்கிறது.

காஃப்காவின் எழுத்துகள், அவர் மற்றவர்களுக்கு எழுதிய கடிதங்கள், அவருடைய நாட்குறிப்புகளின் வழியாக காஃப்கா ஆட்டிசம், தூக்கமின்மை, பிளவுண்ட ஆளுமைச்சிதைவு, ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். அவற்றின் விளைவாக அவரிடம் அந்நியமாதல், இருத்தலியல் பதட்டம், குற்றவுணர்ச்சி, அபத்தவுணர்வு, ஆகியவை இருந்தனவென்று அதுதான் அவருடைய குணாதிசயத்தையும் எழுத்தையும் உருவாக்கியது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தந்தையின் ஆதிக்கத்தால் பீடிக்கப்பட்ட காஃப்காவுக்கு எல்லாவிதமான ஆதிக்க, அதிகார, உணர்வுகளுக்கும் எதிரான மனநிலையைக் கொண்டிருந்தார். அதை அபத்தமான வடிவத்தில் வெளிப்படுத்தினார். உருமாற்றத்தில் வரும் திடீரென கரப்பான் பூச்சியாக மாறிய கிரிகோரை அவரது குடும்பம், அலுவலகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதையே அபத்த நாடகமாகச் சித்தரித்திருப்பார் காஃப்கா. எல்லாவிதமான ஆதிக்கத்தையும் எதிர்க்கும் கலையை எழுதியவர் காஃப்கா. அதனாலேயே 1945- ஆம் ஆண்டுக்குப் பிறகு காஃப்கா ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் மீண்டும் கண்டெடுக்கப்படுகிறார். கம்யூனிச நாடான புதிய  செக் குடியரசில் காஃப்காவின் படைப்புகள் மார்க்சியத்தின் அந்நியமாதலைப் பிரதிபலிக்கும் படைப்புகள் என்று போற்றப்பட்டன.

காஃப்கா நிலப்பிரபுத்துவ சமூகத்திலிருந்து நவீன முதலாளித்துவ சமூக மாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட அதிகாரவர்க்க அழுத்தத்தினால் அந்நியமாதலுணர்வுக்கும் இருத்தலியல் பதட்டத்துக்கும் ஆளானார். மாறிவரும், சமூக ஒழுங்கை, தகர்ந்து வரும் அதிகாரவர்க்க பிரபுத்துவ சமூகத்தை தன்னுடைய படைப்புகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் காஃப்கா என்ற மதிப்பீடுகளும் முன்னெழுந்து வந்தன. காஃப்கா தன்னுடைய கதைகளில் ஏற்படுத்திய இக்கட்டான சூழ்நிலையை காஃப்கேஸ்க்யூ என்றழைத்தார்கள். ஆங்கில அகராதியிலும் அந்த வார்த்தை இடம் பெற்றது. ஒருவகையில் காஃப்கா காரல் மார்க்சின் அந்நியமாதலையே எழுதினாரென்று போற்றப்பட்டது. அதனால் ஜெர்மானிய இலக்கியத்தில் காஃப்காவின் யதார்த்தமும் ஃபேண்டசியும் கலந்த இலக்கியபாணி மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது..

இதற்கு எதிராக காஃப்காவின் படைப்புகளில் அத்தகைய பார்வை ஏதுமில்லை. அவர் காலத்தில் அப்படிப்பட்ட புறவய சமூக யதார்த்த நிலை இல்லை என்ற கருத்தும் அந்தக் காலத்தில் மேலோங்கியிருந்தது. 1960-களுக்குப் பிறகு காஃப்கா உலகெங்குமுள்ள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்பட்டார். உலகமுழுவதுமுள்ள எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், தத்துவசிந்தனையாளர்கள் இன்னமும் காஃப்காவின் படைப்புகளின் மீது வெவ்வேறுவிதமான வாசிப்பையும் கருத்துகளையும் முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காஃப்காவை வாசிக்கும் வாசகர்களும் அவருடைய படைப்புகளின் வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு தரிசனங்களை கண்டடையலாம். அதற்கு காஃப்காவின் நுண்மொழிகள் மிகச்சிறந்த உதாரணம்.

நன்றி - புக் டே

Monday, 16 August 2021

மானுட மனசாட்சியின் உரத்த குரல் சாதத் ஹசன் மண்டோ

 


மானுட மனசாட்சியின் உரத்தகுரல் சாதத் ஹசன் மண்டோ

உதயசங்கர்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிறுகதை எழுத்தாளரான சாதத் ஹசன் மண்டோ தன்னுடைய கல்லறை வாசகத்தைத் தான் இறப்பதற்கு முந்திய வருடத்தில் அதாவது 1954 ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் தேதி இப்படி எழுதி வைத்திருந்தார்,

“ இங்கே கிடக்கிறான் சாதத் ஹசன் மண்டோ. அவனுடன் சேர்ந்து சிறுகதைக்கலையின் அத்தனை மர்மங்களும், கலைத்திறன்களும் புதைக்கப்பட்டு விட்டன. டன் கணக்கிலான மண்ணுக்கடியில் கிடக்கும் அவன், கடவுளை விட மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளன் அவன் தானோ என்று வியந்து கொண்டிருக்கிறான்..”

தன்னுடைய கலையின் மீது எத்தகைய நம்பிக்கை இருந்திருந்தால் இத்தனை கர்வத்துடன் எழுதமுடியும் அதுதான் சாதத் ஹசன் மண்டோ. உலகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், ஆசியக்கண்டத்தின் ஈடு இணையற்ற எழுத்தாளருமான சாதத் ஹசன் மண்டோ 1912-ஆம் ஆண்டு மே மாதம் 11 – ஆம் தேதி பஞ்சாபிலுள்ள லூதியானா மாவட்டத்திலுள்ள சம்ராலா என்ற நகருக்கு அருகிலுள்ள பாப்ரௌடி என்ற கிராமத்தில் பிறந்தார். அவருடைய முன்னோர்கள் காஷ்மீரைச் சேர்ந்த பணக்கார வியாபாரிகள். மண்டோவின் தாத்தா பாஷ்மானியா என்று சொல்லப்படும் காஷ்மீரில் வீடுகளில் வளர்க்கப்படும் சங்தாங்கி ஆடுகளின் கம்பளிரோமங்களை வாங்கி விற்கும் வியாபாரியாக இருந்தார். பின்னர் அமிர்தசரஸை நோக்கி குடும்பம் குடிபெயர்ந்தது. மண்டோவின் அப்பா மௌல்வி குலாம் ஹசன் தீவிரமான மத அபிமானியாக இருந்தார்.  அவர் இரண்டு திருமணம் முடித்து மொத்தம் 12 குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தார். மண்டோ மௌல்வி குலாம் ஹசனின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தார். மண்டோ தன்னுடைய மூத்த சகோதரர்களிடம் மிகுந்த பயபக்தியுடன் இருந்தார். ஏனெனில் அவர்கள் அவரைவிட வயது மிகவும் மூத்தவர்களாக மட்டுமல்ல நன்கு படித்தவர்களாகவும் இருந்தார்கள். மண்டோவின் அப்பா கண்டிப்பானவர். சம்ராலாவின் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற மண்டோவின் அப்பாவுக்கு கத்தியைப் போன்ற கூர்மையான நாக்கும் கண்டிப்பான வழிமுறைகளும் கொண்டிருந்தார். அதனால் மண்டோ அப்பாவைக் கண்டு எப்போது பயந்து கொண்டேயிருந்தார். அவரிடம் ஏற்பட்ட கலகக்குணத்துக்கு அவருடைய அப்பா ஒரு காரணமாக இருக்கலாம். அம்மாவின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த மண்டோ.  மற்ற குடும்பத்தினருடன் அவ்வளவு நெருக்கமாக இல்லை.

மண்டோவின் அப்பா மண்டோ கஷ்டப்பட்டுப் படிக்கவேண்டும், மண்டோவின் மற்ற சகோதரர்களைப் போல வெளிநாடு சென்று படித்து பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்று நினைத்தார். ஆனால் மண்டோவிடம் வளர்ந்து வரும் மதஈடுபாடின்மையையும், மரியாதையின்மையையும் கண்டு மனம் வெதும்பினார். மண்டோவுக்கு வழக்கமான பள்ளிக்கல்வியில் ஈடுபாடில்லை. அவர் இண்டர்மீடியட்டில் இரண்டு முறை தோற்றுப்போனார். அதிலும் குறிப்பாக பின்னாளில் உருது இலக்கியத்தில் சாதனைகள் செய்த மண்டோ உருது மொழிப்பாடத்தில் தோல்வியடைந்தது முரண்நகை. இந்தத் தோல்வியின் விளைவாக அவர் சிற்றின்பக்கேளிக்கைகளில் முழுமூச்சாக இறங்கினார். 1930 – களின் துவக்கத்தில் சூதாட்டம், புகைபிடித்தல், கஞ்சா, சோம்பிக்கிடத்தல், போன்றவற்றில் மூழ்கிக்கிடந்தார். ஆனால் அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக முஸாவர் பத்திரிகையின் ஆசிரியரான அப்துல் பாரி அலியுடனான சந்திப்பு 1933 – ல் மண்டோவின் இருபத்தியோராம் வயதில் நிகழ்ந்தது.  அவருடன் சேர்ந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அறிமுகமானது. பாரி அலி மண்டோவைச் சந்தித்தபோதே அவருடைய திறமையைக் கண்டு கொண்டார். அவர் மண்டோவின் புரட்சிமோகத்தை இலக்கியத்தின் பக்கம் திசை திருப்பினார். அவருக்கு ருஷ்ய இலக்கியத்தையும் பிரெஞ்சு இலக்கியத்தையும் அறிமுகப்படுத்தி ஈடுபாடு கொள்ள வைத்தார். ஆஸ்கார் வைல்டு, மாப்பாசான், விக்டர் ஹியுகோ போன்றவர்களின் கலைத்திறனை அறிமுகப்படுத்தினார். எழுத்தின் மூலம் வருமானம் ஈட்டலாம் என்ற பாதையையும் அவர் காட்டிக் கொடுத்தார். அவர் உடனே லூதியானாவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினசரியான மாசாவாத் என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். அதில் மண்டோ புரட்சிகரக்கவிதைகளையும், கட்டுரைகளையும், மொழிபெயர்ப்புகளையும் செய்யத் தொடங்கினார்.

விக்டர் ஹியுகோவின் The last days of a condemned man என்ற நாடகத்தை உருதுவில் மொழிபெயர்த்தார். அதை லாகூரிலுள்ள லாகூர் புக் ஸ்டோர் என்ற நிறுவனம் ஒரு கைதியின் கதை என்ற பெயரில் வெளியிட்டது. அதன் வெற்றியினால் அவர் ஆஸ்கர் வைல்டின் வேரா அல்லது நிகிலிஸ்டுகள் என்ற நாடகத்தை 1934 –ல் மொழிபெயர்த்தார். அந்த நாடகம் அவருக்கு மிகப்பெரும் உத்வேகத்தைக் கொடுத்தது. பின்னாளில் அவர் அந்த நாட்களைப் பற்றி எழுதும்போது அவரும் அவருடைய நண்பர்களும் அமிர்தசரசின் வீதிகளில் நடந்து போகும்போது ஏதோ மாஸ்கோவில் புரட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்களைப் போல உணர்ந்ததாக எழுதினார். மாவீரன் பகத்சிங்கும் அவரை மிகவும் பாதித்திருந்தார். மண்டோ ஆரம்பம் முதலே ஒரு இடதுசாரியாகவும் சோசலிஸ்டாகவும் வளர்ந்தார். பின்னாளில் முற்போக்கு எழுத்தாளர் சங்கமே கூட அவருடைய படைப்புகளின் மீது விமரிசனங்களை வைத்தபோதும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.

பாரி அலி மண்டோவை அவருடைய சொந்தப்படைப்புகளை எழுதும்படி வற்புறுத்தினார். மண்டோ மிகவிரைவிலேயே திறமையான எழுத்தாளராகப் பரிணமித்தார். அவருடைய முதல் கதையாகச் சொல்லப்படுகிற தமாஷா என்ற கதை ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பின்னணியாகக் கொண்டது.

அவருடைய பாலியகால நண்பரொருவரின் வற்புறுத்தலினால் அலிகாரிலுள்ள முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் 1934 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சேர்ந்தார். வழக்கம்போல அங்கே அவரால் மாணவனாக சோபிக்கமுடியவில்லை. ஆனால் அங்கேயிருந்த ஒன்பது மாதங்களில் ஏராளமான கதைகளையும் கட்டுரைகளையும் எழுதி பத்திரிகைகளில் வெளியிட்டார்.

மண்டோவுக்கு அப்போது இருபத்திமூன்று வயதிருக்கும். அவருக்கு காசநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. நெஞ்சுவலியைக் குறைப்பதற்காக அவர் நாட்டுச்சாராயத்தை அதிகமாகக் குடிக்க ஆரம்பித்தார். ஆனால் போதிய பலன் தராததால் அவர் மலைப்பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டார். அவருடைய முன்னோர்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர் இப்போது தான் காஷ்மீருக்குப் போனார். காஷ்மீரும் அந்த மக்களும் அவரைக் கவர்ந்தனர். அங்கே தான் ஒரு ஆடு மேய்க்கும்பெண் மீது அவருடைய முதல் வசந்தம் வீசியது.

அவர் அமிர்தசரஸ் திரும்பி அங்கிருந்து லாகூருக்கு பராஸ் என்ற பத்திரிகையில் நிரந்தரவேலை கிடைத்துப் போனார். ஆனால் அந்தப்பத்திரிகையின் தன்மை அவருக்கு ஒத்துவரவில்லை. 1935 – ல் மும்பைக்கு வேலை தேடி வந்தார். முசாவ்விர் என்ற சினிமா வாராந்திரியின் ஆசிரியராகச் சேர்ந்தார். மண்டோ மும்பையைத் தீவிரமாக நேசித்தார். அதன் அழகும் ஒயிலும் ஸ்டைலும் அவரை அப்படியே ஈர்த்து விட்டன. இரண்டுமுரை மும்பையை விட்டு வெளியேறியிருந்தார். ஒருமுறை ஆல் இண்டியா ரேடியோவில் வேலை செய்வதற்காக, அது குறுகிய காலம், இரண்டாவது முறை பிரிவினைக்குப் பிறகு நிரந்தரமாக மும்பையை விட்டுப் பிரிந்தார். அவர் சாகும்வரை மும்பையின் மீதான காதல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. 1935 – 1947 வரையில் மும்பையிலிருந்த மண்டோ முதலில் சினிமா பத்திரிகையாளராக இருந்து பின்னர் இம்பீரியல் சினிமா கம்பெனியின் ஸ்கிரிப்ட் ரைட்டராக சேர்ந்தார். முதலில் அவர் எழுதி வெளியான திரைப்படம் படுதோல்வியடைந்தது. ஒரே நேரத்தில் சினிமா அவருக்கு ஆசைகாட்டவும் ஏமாற்றவும் செய்தது. ஆனாலும் அவர் விடவில்லை.

ஒரு சமயம் அவர் சினிமாக்களுக்கு எழுதிக்கொண்டே இரண்டு பத்திரிகைகளுக்கு ஆசிரியராகவும், இடையிடையே ரேடியாவுக்கும் பங்களித்துக் கொண்டிருந்தார். அவருடைய முதல் சிறுகதைத்தொகுப்பு 1940 ஆம் ஆண்டு வெளியானது. இரண்டாவதாக 1942 –ல் அவருடைய கட்டுரைத்தொகுப்பு வெளியானது. அதன் பிறகு 1943 ஆம் ஆண்டு அவர் டெல்லிக்குப் போனார். அங்கே இருந்த இரண்டு ஆண்டுகளும் அவருடைய சொந்த வாழ்வில் பெரும் இழப்புகளைச் சந்தித்த ஆண்டுகளாக இருந்தன. அவருடைய அம்மாவும் அவருடைய மூத்தமகனும் இறந்து போனார்கள். இந்த இரண்டு இழப்புகளும் அவருக்கு பேரிடியாக இருந்தது மட்டுமல்லாமல் அவருடைய வாழ்நாள் முழுவதும் இழப்பின் துயரம் தொடர்ந்தது.

ஆல் இண்டியா ரேடியோவில் அப்போது பேர்பெற்ற இயக்குநராக இருந்த பித்ராஸ் புகாரியுடன் தீர்க்கமுடியாத முரண்பாடுகள் ஏற்பட்டன. மண்டோவுக்கு மாதாந்திரச்சம்பளம் கிடைத்த வேலை என்பதைத் தவிர மற்றபடி டெல்லியில் மண்டோ மகிழ்ச்சியாக இல்லை. அந்த வேலையைத் துறந்து மீண்டும் மும்பைக்கு வந்தார்.

முதலில் மீண்டும் முசாவ்விர் பத்திரிகையில் சேர்ந்து வேலை செய்து கொண்டே ஃப்ரீலான்சராக திரைப்படங்களுக்கு எழுதினார்.  1943 –ல் மும்பையில் ஃபிலிமிஸ்தான் என்ற படக்கம்பெனியில் சேர்ந்தார். அந்தக்கம்பெணி புகழ்பெற்ற பம்பாய் டாக்கீஸிலிருந்து பிரிந்து வந்த அவருடைய நெருங்கிய நண்பர்களான ஷியாம், அசோக்குமார், சேர்ந்து ஆரம்பித்திருந்தார்கள். அந்தக்கம்பெனிக்காக பல வெற்றிகரமான திரைப்படங்களுக்குக் கதைகளை எழுதினார்.

நாடு கொந்தளித்துக் கொண்டிருந்த காலம். தவிர்க்கமுடியாத பிரிவினையை நோக்கி இந்தியா தள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. மும்பையில் திடீர் திடீரென்று கலவரங்கள் வெடித்தன. 1947 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி நாட்டின் பிரிவினை அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே மண்டோவின் மனைவியும் குழந்தைகளும் பாகிஸ்தானுக்குப் போய் விட்டனர். மண்டோவுக்கு மும்பையை விட்டுப் போக மனமில்லை. அவர் இந்தியாவில் இருந்து விடவே விரும்பினார். ஆனால் பம்பாய் டாக்கீஸ் நிர்வாகம் இஸ்லாமியர்களை வேலையிலிருந்து நீக்கிய நிகழ்வு அவருக்கு முதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாள் திடீரென்று மண்டோ அவருடைய பைகளை எடுத்துக் கொண்டு பாகிஸ்தானுக்குக் கிளம்பினார். ஏன் அப்படி அவர் திடீரென்று புறப்பட வேண்டும் என்பதற்கான காரணங்கள் உடனே யாருக்கும் தெரியவில்லை. ஆனால் மண்டோ அவருடைய நினைவோடைக்குறிப்புகளில் மும்பையில் அவருடைய கடைசிநாட்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அதை அவருடைய மிக நெருங்கிய நண்பரான புகழ்பெற்ற திரைநட்சத்திரம் ஷியாமுக்கு அர்ப்பணித்திருந்தார்.

” ஒரு நாள் நானும் ஷியாமும் ராவல்பிண்டியிலிருந்து அகதியாக வந்திருந்த ஒரு சீக்கியக்குடும்பத்துடன் இருந்தோம். அங்கே என்ன நடந்தது என்று அவர்கள் விவரித்ததைக் கேட்டபோது திகைத்துப்போய் அதிர்ச்சியில் உறைந்திருந்தோம். அந்தக் கொடூரமான சம்பவங்களைக் கேட்ட  ஷியாம் அழுதுவிட்டான். அவனுடைய மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது என்பதை என்னால் உணரமுடிந்தது. நாங்கள் அங்கிருந்து கிளம்பிய பிறகு நான் ஷியாமிடம்,

“ நான் ஒரு முஸ்லீம்.. என்னைக்கொல்லணும்னு உனக்குத் தோணலையா..” என்று கேட்டேன். அதற்கு அவன் இறுக்கமாக

” இப்போது இல்லை.. ஆனால் அவங்க இஸ்லாமியர்கள் செய்த அட்டூழியங்களைச் சொன்ன போது எனக்கு அப்படித் தோன்றியது அப்போது நான் உன்னைக் கொன்றிருப்பேன்..”  என்று சொன்னான். அவனுடைய வார்த்தைகள் என்னை ஆழமாகப் பாதித்தது. அவனைப்போலவே நானும் அவனைக்கொன்றிருக்கமுடியும். அதைப்பற்றி பின்னால் சிந்தித்தபோது இந்தியாவின் மதக்கலவரத்தின் இரத்தப்பாதையின் பின்னாலுள்ள உளவியலைப் புரிந்து கொள்ள முடிந்தது. “

கிட்டத்தட்ட இதுவே மண்டோ தன்னுடைய அருமைக்காதலியான மும்பையை விட்டுப்பிரிந்து பாகிஸ்தானுக்குச் செல்ல முக்கியமான காரணமாக இருந்தது என்று சொல்லலாம். ஆனால் பலரும் பலகாரணங்களைச் சொன்னார்கள். புதிய நாட்டில் புதிய வாழ்க்கையை வளமாகத் தொடங்கலாம் என்று நினைத்துப் போய் விட்டாரென்றும். எல்லாவற்றையும் அழித்துவிட்டு மீண்டும் புதிதாக தொடங்கலாம் என்று போனாரென்றும் பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த இந்துக்கள் கைவிட்டுச் சென்ற பெரிய பெரிய மாளிகைகளை இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து வரும் இஸ்லாமியர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்ற செய்தியின் அடிப்படையில் மாளிகை கிடைக்கும் என்று போய்விட்டாரென்றும் அவருடைய அருமையான மனைவி, குழந்தைகளைப் பிரிந்திருக்கமுடியாமல் போய் விட்டாரென்றும், அவர் நேசித்த மும்பை சினிமா அவரை விரட்டி விட்ட விரக்தியில் போய் விட்டாரென்றும்,  

1948 ஆம் ஆண்டிலிருந்து 1955 ஆம் ஆண்டு அவருடைய மறைவு வரை அவர் பாகிஸ்தானில் லாகூரில் இருந்த காலத்தில் மிகத்தீவிரமான எழுத்தாளராக இயங்கினார். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒரு என்ற விகிதத்தில் எழுதியிருக்கிறார். ஒரே கதையை வேறு வேறு மாதிரி எழுதியிருக்கிறார். ஒரே கதையை முடிவுகளை மாற்றி மாற்றி எழுதியிருக்கிறார். பல கதைகள் வெவ்வேறு தொகுப்புகளிலும் திரும்பத்திரும்ப இடம் பெற்றிருக்கின்றன. அந்த நாட்களில் இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளின் மீது துயரத்தின் கருநிழல் இரவாய் கவிந்திருக்க எப்போது வெளிச்சம் வரும் என்று யாருக்குமே தெரியாதிருந்த காலத்தில் மிகுந்த மன உளைச்சலுடன், கைக்கும் வாய்க்குமான வறுமையுடன் மனதின் உணர்வெழுச்சிகளைத் தாங்கமுடியாமல் அதீதக்குடியுடன் அலைக்கழிந்திருக்கிறார் சாதத் ஹசன் மண்டோ.

அவரைத் துரத்திக்கொண்டேயிருந்த பிரமைகளான கரும்பிசாசுகளிடமிருந்து தப்பிக்கவும் கொடூரமான கற்பனைக்காட்சிகளிடமிருந்து விடுதலையடையவும்  குடியிடம் சரணடைந்திருக்கிறார். அந்தப் பிசாசுகளை குடி வெற்றிகொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் மனநலமருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை எடுத்திருக்கிறார். எப்போதோ மருத்துவர்கள் அவருக்கு மரணஎச்சரிக்கை செய்து விட்டார்கள். இனி குடித்தால் அவ்வளவுதான். உயிருக்கு உத்திரவாதமில்லை. ஆனால் சாதத் ஹசன் மண்டோவும் குடிக்காமலிருக்க முயற்சித்தார். ஆனால் அவருக்கு மழுங்கடிக்கப்பட்ட, பாவனையான, போலியான, சமூக அக்கறையை முன்வைத்து எழுதத்தெரியவில்லை. அவருடைய  கூருர்ணவுகள் சமூகத்தின் அவலங்களைப் பார்த்து தங்களுடைய கூர்மைகளால் அவரையே குத்திக்கிழித்தன. அந்தக்காலத்தில் அவர் கேட்ட, பார்த்த, படித்த ஒவ்வொரு சம்பவமும் அவரைக் கூறுபோட்டன. உணர்வெழுச்சியை ஏற்படுத்தின. அந்த உணர்வெழுச்சியின் உக்கிரத்தை அவர் எழுதுவதின் மூலமே சமனப்படுத்தியிருக்கிறார். அதற்குக் குடி தேவையாயிருந்திருக்கிறது.

மண்டோவின் வாழ்க்கையை முன்வைத்து இரண்டு திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. மண்டோ – நந்திதா தாஸ் இயக்கத்தில் 2018 –ல் வெளிவந்த திரைப்படம். அதில் மண்டோவின் இந்திய-பாகிஸ்தான் வாழ்க்கை சுருக்கமாக ஆனால் மிகவலிமையாக வெளிப்பட்டிருக்கிறது. இன்னொரு திரைப்படம் பாகிஸ்தானில் வெளியாகியிருக்கிறது. மண்டோ – இயக்கம் - சர்மட் சுல்தான் கஸூத் ( SARMAD SULTAN KASOOT ) . அந்தத் திரைப்படம் மூன்று மணிநேரம் ஓடக்கூடிய படம். தொலைக்காட்சி தொடராக வெளியாகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அந்தத் திரைப்படத்தில் மண்டோவின் பாகிஸ்தான் வாழ்க்கை மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறது.  இரண்டு படங்களுமே மண்டோவின் கதாபாத்திரத்தை ஓரளவுக்கு நம் கண்முன்னால் கொண்டு வந்திருக்கின்றன. மண்டோவை வாசிக்கிறவர்கள் அந்தத் திரைப்படங்களையும் பார்க்கும் போது இன்னும் கூட அவருடைய கதைகள் கூடுதல் அர்த்தத்தைக் கொடுக்கும்.

அவரைச் சதாகாலமும் போலியான மனிதசமூகம் அணிந்திருக்கும் நாகரிகமான ஆடைகளுக்குப் பின்னாலிருக்கும் அழுகிய புண்களில் வடிந்து கொண்டிருக்கும் சீழ் தொந்திரவு செய்து கொண்டேயிருந்திருக்கிறது. அதைவிட அதைக் கண்டும் காணாமல் தன்னுடைய சுயநலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களின் பொறுப்பின்மை, அவருக்குள் ரௌத்திரத்தை கொழுந்து விட்டெரியச் செய்து கொண்டேயிருந்தது. அதனால் எப்படிச் சொன்னால் இந்த சமூகத்துக்கு உறைக்கும் என்று ஒவ்வொரு கதையிலும் சொல்லிச் சொல்லிப் பார்க்கிறார். எந்தவித அலங்காரமுமின்றி அப்பட்டமாக பச்சையாக எழுதினார் மண்டோ. அப்படி எழுதுவதின் மூலம் மட்டுமே சமூகத்தின் சொரணையை விழிக்கவைக்க முடியும் என்று நம்பினார். ஆனால் பொதுச்சமூகம் அவருடைய கதைகளை அப்படிப் பார்க்கவில்லை. பிரிட்டிஷ் இந்தியாவிலும், சுதந்திரப்பாகிஸ்தானிலும் ஆறுமுறை அவருடைய கதைகளுக்காக நீதிமன்றத்தில் ஏறி இறங்கியிருக்கிறார். ஒரு முறை தண்டிக்கவும் பட்டிருக்கிறார். ஆனால் மேல்முறையீட்டில் அதிலிருந்து விடுவிக்கவும் பட்டிருக்கிறார். அப்படி ஒரு சம்பவத்தில்,

“ எழுத்தாளனின் உணர்வுகள் காயப்படும்போது மட்டுமே அவன் தன்னுடைய பேனாவைக் கையிலெடுக்கிறான்.. “ என்று ஒரு நீதிபதியிடம் சொல்லியிருக்கிறார்.  அவருடைய காலத்தில் ஒரு பக்கம் அரசாங்கம் அவரை கம்யூனிஸ்ட் என்று குற்றப்படுத்தியது என்றால் இன்னொருபக்கம் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் மற்ற இலக்கியவாதிகளும் கூட அவரை பிற்போக்குவாதியென்றும் ஆபாச எழுத்தாளரென்றும், இறந்தவர்களை வைத்துப் பிழைப்பு நடத்துபவரென்றும்,  தூற்றியிருக்கிறார்கள். அவருடைய கதைகளைப் பற்றிய விமரிசனங்களுக்கு,

“ என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றே அர்த்தம். என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவனவெல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்தச்சமூக அமைப்பினையே குறிக்கிறது. என் இலக்கியத்தை எதிர்ப்பதைக் காட்டிலும் இப்படிப்பட்ட இலக்கியங்கள் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும் சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள். அதுதான் சிறந்த வழி..

 என்று நெஞ்சுரத்துடன் பதிலளிக்கிறார் மண்டோ. மண்டோ மட்டுமே இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடந்த இருண்டகாலத்தின் கதைகளை பதிவு செய்தவர். மண்டோ மட்டுமே மனிதனுக்குள் கொடூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார். மதம் என்ற நம்பிக்கை மனித உயிர்களை எப்படியெல்லாம் பலி வாங்கியிருக்கிறது என்பதைத் தன்னுடைய படைப்புகளில் அந்தக் குரூரத்தை வாசகனும் உணரும்படிச் சொல்லியிருக்கிறார்.  சாமானியர்கள், விளிம்புநிலை மக்கள், பாலியல் தொழிலாளிகள், அடித்தட்டு மக்கள், என்று சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உலகை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டியவர் மண்டோ. அவர்களுடைய வாழ்வின் அவலங்களை, ஆசாபாசங்களை, வக்கிரங்களை, வாசகமனம் அதிரும்படி எழுதியர் மண்டோ. சமன் குலைந்த சமூகத்தில் சமன் குலையச் செய்யும் எழுத்தை எழுத்தியவர் மண்டோ. தன்வாழ்நாள் முழுவதும் கலகக்காரராகவே வாழ்ந்தார் மண்டோ. சமூகத்தின் எல்லாவிதமான அதிகாரங்களையும்,  போலித்தனமான ஒழுக்கக்கோட்பாடுகளையும் கேள்வி கேட்டார் மண்டோ.

 அவருடைய படைப்புகளின் கலையுணர்வு ஆக்ரோசமானது ஆனால் கலையின் பூரணத்துவம் கொண்டது. அவருடைய கலையில் கலகக்குரல் கேட்டுக்கொண்டேயிருந்தது ஆனால் அதில் கலையின் மகத்துவம் பொங்கிக்கொண்டேயிருந்தது. அவருடைய கலையுணர்வு உரத்தகுரலில் பேசுவது ஆனால் அந்தக்குரலில் பிரச்சாரம் கிடையாது. அவருடைய கலையுணர்வு நேரடியானது ஆனால் நுட்பங்கள் நிறைந்தது. அவருடைய கலையுணர்வு யதார்த்தமானது ஆனால் யாரும் அதுவரை போகாத வழிகளில் சென்றது. அவருடைய கலையுணர்வு வாழ்க்கையின் இருளை வெளிச்சம் போட்டுக் காட்டியது ஆனால் அந்த வெளிச்சத்தில் இந்த உலகமே பைத்தியக்காரத்தனமாகத் தெரிந்தது.

ஒருவகையில் மண்டோவின் எழுத்துகள் பிரிவினை கால இந்திய பாகிஸ்தான் மக்கள் சமூகத்தில் என்ன நடந்தது என்பதற்கான இலக்கிய வரலாற்று ஆதாரம். நாகரீக சமூகம் நெருக்கடிக்காலங்களில் எப்படி மனிதனுக்குள் இருக்கும் கொடூரகுணங்களை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறது என்பதற்கான உளவியல் பாடங்கள். குற்றவியலுக்குப் பின்னாலுள்ள சிந்தனைகள், நியாயங்கள் என்று எல்லாவற்றையும் எழுதிப்பார்த்தவர் மண்டோ. அவருடைய படைப்புகளின் வெக்கை நமது சிவில் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி தன்னையே விசாரணை செய்யத் தூண்டுபவை.

இருபத்திமூன்று வயதில் அவர் முதல் கதையை எழுதினார். அதன்பிறகான இருபது வருடங்களில் இருபத்தியிரண்டு சிறுகதை தொகுப்புகளையும், ஒரு நாவலையும், ஐந்து ரேடியோ நாடகங்களின் தொகுப்பையும், மூன்று கட்டுரைத் தொகுப்புகளையும், இரண்டு நினைவோடைத் தொகுப்புகளையும் தன்னுடைய நாற்பத்திமூன்று வயதுக்குள் எழுதியிருக்கிறாரென்றால் அவருடைய எழுத்தின் வீரியம் நமக்குப் புலப்படும்.

இந்தத்தொகுப்பிலுள்ள கதைகளெல்லாம் மண்டோ பாகிஸ்தான் போனபிறகு எழுதப்பட்டவை. பாகிஸ்தான் சென்றபிறகு அவருடைய மனவெழுச்சியும் சிந்தனைகளும் எப்படியிருந்தன என்பதற்கான சாட்சி. அவருடைய வாழ்க்கையின் மிகவும் கொந்தளிப்பான காலகட்டம் என்று கூடச் சொல்லலாம்.

மண்டோவுக்கு கிரிக்கெட்டின் மீது காதல் இருந்தது. அவர் இறப்பதற்கு முன்னால் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட் மேட்சைப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார். ஏற்கனவே லிவர் சிரோசிஸ் நோயினால் மரணத்தின் விளிம்பிலிருந்த மண்டோ அன்று பத்திரிகையில் ஒரு செய்தியைப் படித்துவிட்டு மன அமைதியின்றி தத்தளித்திருக்கிறார். குஜராத்தில் பேரூந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணையும் அவளுடைய குழந்தையையும் ஐந்தாறுபேர் கடத்திக்கொண்டு போய் அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணமாக குளிர் இரவில் நடுரோட்டில் விரட்டி விட்டிருக்கிறார்கள். அந்த இரவின் குளிரில் அவளும் குழந்தையும் விரைத்து செத்திருக்கிறார்கள். இந்தச் செய்தியை வாசித்த மண்டோ வீட்டை விட்டு வெளியேறியவர் அளவுக்கதிகமாக குடித்திருக்கிறார். அவர் வீட்டுக்கு வந்ததும் ரத்தவாந்தி எடுத்திருக்கிறார். அதைப்பார்த்த அவருடைய சகலை ஹமீது ஜலாலின் மகனிடம், இது  வெத்திலை எச்சில் யாரிடமும் சொல்லாதே என்று சொல்லியிருக்கிறார். அந்தச் சிறுவனும் யாரிடமும் சொல்லவில்லை. நள்ளிரவில் படுக்கையில் வலியும் வாந்தியும் எடுத்து மனைவியை அழைத்துச் சொன்னபிறகுதான் மருத்துவர் அழைக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர் அவருடைய நிலைமையைப் பார்த்து உதட்டைப் பிதுக்க, மண்டோவின் இறுதிக்கணங்கள் தொடங்கி விட்டன.  கல்லறையில் குளிர்வதைப்போல குளிர்கிறது என்று சொன்ன மண்டோ இரண்டு போர்வைகளால் போர்த்திக்கொண்டிருக்கிறார். கடைசியாக ஒரு பெக் விஸ்கியைக் கேட்டு வற்புறுத்தியிருக்கிறார். கொஞ்சம் விஸ்கியை வாங்கிவந்து ஒரு ஸ்பூன் வாயில் ஊற்றினார்கள். இரண்டாவது ஸ்பூன் வாயிலிருந்து வெளியே வழிந்து விட்டது. உடலில் ஒரு நடுக்கம் ஓடி மறைந்தது. ஆம்புலன்சில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டார் என்று அறிவித்தார்கள். ஹமீது ஜலால் எழுதும்போது, பொறுப்பற்ற ஆட்டங்களை ஆடிய மண்டோவிற்கு பலமுறை அவுட் கொடுக்காமலிருந்த கடவுள் கடைசியில் 1955 ஆம் ஆண்டு ஜனவரி 18 அன்று விரலை உயர்த்தி அவுட் கொடுத்து விட்டாரென்று எழுதுகிறார்.

அவருடைய கதைகளை உருதுவிலிருந்து ஆங்கிலத்தில் பலர் பலவிதமாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இன்னும் மொழிபெயர்க்கப்படாத ஒரு நாவல் உட்பட ஏராளமான படைப்புகள் இருக்கின்றன. மண்டோவே பல கதைகளை, தொகுப்புகளை, பலபதிப்பாளர்களிடம் அன்றைன்றையத் தேவைக்காக விற்றிருக்கிறார். அதனால் தான் பல விதமான வேறுபட்ட தொகுப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால் வாழ்ந்தபோது தன்னுடைய எழுத்தின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த மண்டோ அவருடைய மனைவி சஃபியா மண்டோவிடம்

“ நான் ஏராளமாக எழுதியிருக்கிறேன். நான் இறந்தாலும் நீ வசதியாக வாழலாம்.. என்று சொல்லிக் கொண்டேயிருப்பார் ஆனால் உண்மையில் பதிப்பாளர்கள் அவர் எல்லாவற்றுக்கும் பணம் வாங்கி விட்டாரென்று சொல்லி கையை விரித்து விட்டனர்…என்று அவருடைய மூத்தமகள் நுஸாத் மண்டோ சொல்கிறார்…மண்டோ இறந்தபோது அவருடைய மகள்களான நிஹாத் மண்டோ, நுஸாத் மண்டோ, நஸ்ரத் மண்டோ ஆகியோருக்கு முறையே ஒன்பது, ஏழு, ஐந்து வயது தான் பூர்த்தியாகியிருந்தது. சஃபியா மண்டோ தனியே அவர்களை வளர்த்து ஆளாக்கினார். மண்டோ தன்னுடைய கதைகளை எழுதியதும் முதலில் சஃபியாவிடம் தான் வாசித்துக்காட்டுவார். தன்னுடைய குடும்பத்தினர் மீது அளவு கடந்த பிரியம் கொண்டிருந்த மண்டோ அதைவிட ஆழமான பிரியத்தை இந்த சமூகத்தின் மீது வைத்திருந்தார். அது தான் அவருக்கு வரமாகவும் சாபமாகவும் அமைந்தது.

இந்தத் தொகுப்பிலுள்ள பத்து கதைகளும் மண்டோவின் கலைமேதைமையை உணர்த்தக்கூடியவை. இந்தத் தொகுப்பின் பெரும்பாலான கதைகள் ரக்‌ஷானந்த ஜலீல் உருதுவிலிருந்து மொழிபெயர்த்திருந்த நிர்வாணக்குரல்கள் தொகுப்பிலிருந்தும், சில கதைகள் காலித் ஹசன் உருதுவிலிருந்து மொழிபெயர்த்திருந்த ராஜ்யத்தின் முடிவு என்ற தொகுப்பிலிருந்தும் எடுக்கப்பட்டிருக்கின்றன. மண்டோ அசாதாரணத்தையே கதையாக்குகிறார். யாரும் பார்க்கத் துணியாத காட்சிகள், யாரும் பார்த்திராத கதாபாத்திரங்கள் யாரும் யோசித்திராத சம்பவங்கள், என்று கதைப்பின்னலில் எல்லோரும் சாதராணமாகத் தவறவிடுகிற அல்லது அலட்சியப்படுத்திச் செல்கிற அல்லது அருவெறுப்பு கொள்கிற வாழ்வின் சித்திரங்களை நுண்மையாகச் சித்தரிக்கிறார். இதிலுள்ள ஒவ்வொரு கதையும் அசாதாரணமானது. பிஸ்மில்லா என்ற விசித்திரமான பெயர் கொண்ட பெண்ணின் கதையின் மர்மம் கடைசியில் விலகும்போது ஏற்படும் அதிர்வின் அலை நம்மை நடுங்கச்செய்யும். ஆறுதல் கதையில் சாரதாவுக்கு நேர்ந்த அவமான உணர்வை ஆற்றுப்படுத்துகிற காட்சி மிகவும் நுட்பமானது. மெழுகுவர்த்தியின் கண்ணீர் பாலியல் தொழிலாளியின் ஒரு இரவின் இருளில் ஒற்றைக்கண்ணாய் எரியும் மெழுகுவர்த்தியின் ஒளி வரையும் சோகச்சித்திரம். நிர்வாணக்குரல்களில் வாழ்க்கையின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றான காமத்தின் குரல்களை ஒன்றுபோல மொட்டைமாடியில் சாக்குகள் சுற்றிலும் திரையாகக் கட்டப்பட்ட கட்டில்கள் புலம்புகின்றன. விசித்திரமான அந்த வாழ்நிலைக்கு எல்லாரும் பழகிவிட அதைக்கண்டு அஞ்சி ஓடி மனநிலை பிறழ்கிற கதாபாத்திரம் வாழ்வின் குரூரத்தைச் சொல்கிறது.

தோற்றுக்கொண்டேயிருப்பவன் கதையில் ஒரு பாலியல் தொழிலாளியைக் காப்பாற்றுவதாகக் கொள்ளும் பெருமை மீது இறுதியில் கொடுக்கும் அடி தடுமாறச்செய்கிறது. காமத்தின் கடும் அவஸ்தையில் பாலியல் விடுதிக்குச் செல்ல நினைக்கும் ஒருவனின் மனச்சஞ்சலங்களும் அவஸ்தைகளும் மண்டோ என்ற இலக்கியாளுமையின் வரிகளில் சாக்கடையான சமூகத்தின் அவலத்தைக் காட்டுகிறது. சூபிகளின் கோவில்களில் நடக்கும் குழந்தைப்பேறு நேர்த்திக்கடன்களும் அதன் பிறகு பிறக்கும் குழந்தைகளை கோவிலில் கொடுத்துவிட்டு வரும் ஒரு பெண்ணின் மன அவஸ்தை. யாசித் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகும் நடந்த ராஜீய ரீதியிலான மறைமுக யுத்தத்தைப் பற்றிய கதை. இஸ்லாமிய புராணத்திலிருந்த ஒரு வில்லன் கதாபாத்திரம் எப்படி மாறுகிறது என்பது தான் இந்தக்கதை. மிகவும் புகழ்பெற்ற தோபாதேக்சிங் கதையை வாசிக்கும்போது நாம் வாழும் இந்த நிலத்துக்கு என்ன அர்த்தமிருக்கிறது என்ற கேள்வி எழாமல் போகாது. மனதை அதிரவைக்கும் கதை. கேள்விக்குறியான கௌரவம் கதையில் வரும் மீசை மம்மது பாயைக் கண்டு எல்லாரும் பயப்படுகிறார்கள், ஆனால் அந்த மம்மது பாய் ஏன் அழுகிறான் என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிற கதை. எல்லாக்கதைகளும் துல்லியமான விவரனைகளுடன், நேர்த்தியான கதைசொல்லலுடன், அழுத்தமான கதாபாத்திரங்களுடன் எழுதப்பட்டிருப்பது மண்டோவின் மேதைமைக்குச் சான்று. மண்டோவின் இருநூற்றைம்பது கதைகளில் தமிழில் இதுவரை ஐம்பது கதைகளுக்குள் தான் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும். அவருடைய அத்தனை கதைகளும் நாவலும் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படும் போது மண்டோவின் மகாமேதைமை இன்னும் சூரியனாய் பிரகாசிக்கும்.

மண்டோவின்  சிறுகதைகள் உலக இலக்கியத்தில் வைத்துப் போற்றப்படவேண்டியவை. அவரை மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலமே சிவில் சமூகம் தன்னுடைய மனப்பிறழ்வுகளை கண்டுணர்ந்து சரி செய்து கொள்ள முடியும். எல்லாரும் சகோதரத்துவதுடன், சமத்துவத்துடன் வாழ்வதற்கு மண்டோவை வாசிக்கவேண்டும்.

 மீண்டும் மீண்டும் மண்டோவை வாசிப்போம்.

 முன்னெப்போதையும் காட்டிலும் மண்டோ இன்று தேவைப்படுகிறார்.

நன்றி - புக் டே

 

Sunday, 8 August 2021

மின்னுவின் ஆசை

 

மின்னுவின் ஆசை


உதயசங்கர்

மின்னு சுண்டெலி தப்பித்ததே பெரிய காரியம். ஒரு விநாடி தாமதம் ஆகி இருந்தால் அவ்வளவு தான். வெள்ளைப்பூனை லபக் என்று விழுங்கியிருக்கும். பகலில் வெளியே வர முடியவில்லை. பெரியவர்கள், சிறுவர்கள்,  பூனைகள், நாய்கள், வண்டிகள், வாகனங்கள், என்று ஆபத்துகள். இரவில் எல்லாரும் உறங்கிய பிறகு இரை தேடலாம் என்றால் பூனை, நாய்கள், தொந்திரவு. ச்சே! என்ன வாழ்க்கை! என்று யோசித்துக்கொண்டு அதன் வீட்டிலேயே படுத்துக் கிடந்தது.

மின்னுவின் நண்பனான பன்னு வந்து கூப்பிட்டது.

“ மின்னு வரலையா? வீட்டுச்சமையலயில் பலகாரம் வாசனை தூக்குது..வா வா சீக்கிரம்..

மின்னு பன்னுவைப் பார்த்து,

“ இல்ல.. நான் வரலை.. நீ போ..

ஒரு விநாடி நின்று மின்னுவைப்பார்த்த பன்னு விருட்டென்று பாய்ந்து சென்றது. மின்னு யோசித்தது. இனி இரவில் போய் இரை தேடக்கூடாது. பகலில் எல்லாரையும் போல கம்பீரமாக அலைய வேண்டும். யாரைக்கண்டும் பயப்படக்கூடாது. பூனை மாதிரி.. வாலை ஆட்டிக்கொண்டு ஒய்யாரமாக நடக்கவேண்டும்.

மின்னு நினைத்தது எப்படி தெரிந்ததோ பூனை தேவதை மின்னுவின் முன்னால் வந்து நின்றது. மின்னுவுக்கு ஆச்சரியம்.

“ மின்னு.. நீ பகலில் அலைய வேண்டுமா? “

 மின்னு உற்சாகமாகத் தலையாட்டியது. உடனே பகல்பொழுதாகி விட்டது. மின்னு தெருவின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. அதன் காதில்

“ இப்போது நீ மியாவ் என்று கத்த வேண்டும்..என்ற குரல் கேட்டது. மின்னு வாயைத் திறந்து மியாவ் என்றது. அது கீச் என்ற சத்தமாகக் கேட்டது. தெருவின் அந்தப் பக்கத்தில் ஒரு பெரிய நாய் திரும்பிப்பார்த்தது. உடனே அங்கேயிருந்து பாய்ந்து வந்தது. அம்மாடி.. ஓடறா மின்னு.. என்று ஓடி ஒரு சாக்கடைப்பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.

ரொம்ப நேரம் கழித்து மின்னு வெளியே வந்தது. மறுபடியும் அந்தக்குரல் கேட்டது.

“ வாலை உயரே தூக்கி வைத்துக் கொள்ளவேண்டும். அப்படியே உடலை ஒயிலாக அசைத்து முதலில் முன்னங்கால்களை வைக்க வேண்டும். பின்பு பின்னங்கால்களைக் குறுக்கே வைக்க வேண்டும். அப்படியே மெல்ல நடந்து போகவேண்டும்..அது தான் பூனை நடை. மனிதர்கள் மிகவும் விரும்புவார்கள்..

மின்னு வாலை உயரே தூக்கியது. நுனி வால் மட்டும் தான் ஆடியது. ஆனால் உயரே வரமாட்டேன் என்று அடம் பிடித்தது. சரி என்று உடலைத் தூக்கியது கால்கள் குட்டையாக இருந்ததினால் தூக்க முடியவில்லை. சரி விடு. நடக்கலாம் என்று நடந்து பார்த்தது. பின்னங்கால் முன்னங்காலில் முட்டி கீழே விழுந்து சட்டி பானை மாதிரி உருண்டு கொண்டே இருந்தது.

எப்படியோ எழுந்து விட்டது.

“ இனிமேல் தான் முக்கியமான வேலை இருக்கிறது.. பதுங்கியிருந்து  ஒரு எலியைப் பிடிக்கவேண்டும்..

என்று மறுபடியும் பூனை தேவதையின் குரல் கேட்டது. மின்னுவுக்கு அதிர்ச்சி. என்னது நான் என் உறவினரையேக் கொல்லவேண்டுமா? அது முடியாது. என்று கத்தியது.

“ இப்போது புரிந்ததா மின்னு? இயற்கையில் ஒவ்வொரு உயிரும் தான் எப்படி வாழவேண்டும்? எதைச் சாப்பிடவேண்டும்? எப்போது இரை தேடவேண்டும்? பகலிலா? இரவிலா? என்று பரிணாமவளர்ச்சியின் போது த்தில் கற்றுக் கொள்கிறார்கள்.. யாரும் யாரைப் பார்த்தும் பொறாமை கொள்ள வேண்டாம்..

என்றது. மின்னுவுக்குப் புரிந்தது போல தலையாட்டியது.

“ உனக்குப்பின்னால் ஒரு பூனை உன்னைப்பிடிக்க பாயப்போகிறது மின்னு..என்ற குரல் கேட்டது. அவ்வளவு தான் மின்னு ஒரே பாய்ச்சலில் பாய்ந்து வீட்டுக்குள் வந்து விட்டது.

வயிறு பசித்தது. அங்கே பன்னு வாயில் வடையுடன் மின்னுவுக்காக காத்துக்கொண்டிருந்தது. 

ஐய்! சக்கா ஐய்!

நன்றி - துளிர்

 

Monday, 2 August 2021

குட்டி இளவரசனோடு ஒரு அற்புதப்பயணம்

 

குட்டி இளவரசனோடு ஒரு அற்புதப்பயணம்


உதயசங்கர்

குழந்தைகளின் கனவுகள் எல்லையற்றவை. அந்தககனவுகளில் குழந்தைகள் தங்கள் இதயத்தையே அர்ப்பணிக்கிறார்கள். அந்தக் கனவுகளில் எண்கள் இல்லை. மதிப்பீடுகள் இல்லை. வறட்டுத்தனமான அறநெறிகள், நன்னெறிகள், நீதிநெறிகள் இல்லை. ஆனால் அன்பும் நேசமும் பொங்கித்ததும்புகின்றன. குழந்தைகளின் உலகத்தை கண்களால் அல்ல.. இதயத்தால் பார்க்க முடிந்தால் மட்டுமே நீங்கள் குழந்தைகளைப் புரிந்து கொள்ள முடியும். கண்களால் பார்க்கமுடியாதவற்றையும் கூட இதயம் பார்த்து விடும். இதைத்தான் குட்டி இளவரசன் சொல்கிறான். குட்டி இளவரசனின் உலகத்தைப் புரிந்து கொள்ள முடியும். அகாதமான சகாரா பாலைவனத்தில் குட்டி இளவரசனைக் கண்டெடுத்த, அவனை மீண்டும் தேடிச்சென்று காணாமல் போன அந்துவான் எக்சுபரியைப் புரிந்து கொள்ள முடியும். அந்துவான் ஏன் சின்னஞ்சிறிய கோளான பி.612 லிருந்து குட்டி இளவரசனை இங்கே அழைத்து வந்து, அவனுக்கு உலக இலக்கியத்தில் நிரந்தரமான இடத்தை அளிக்க அவரால் எப்படி முடிந்தது என்று அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் பெரியவர்கள் கண்களால் அல்ல. எண்களால் பார்க்கிறார்கள். எண்கள் கேள்விகளாகப் பெருஞ்சுமையை குழந்தைகளின் மீது இறக்குகிறது. அந்தச் சுமை தரும் மன அழுத்தம் காரணமாக குழந்தைகள் தங்களுடைய மகிழ்ச்சியை இழக்கிறார்கள். இதில் நகைமுரண் என்னவென்றால் தாங்களும் ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்தோம். இப்போது குழந்தைகள் காணும் கனவுகளையெல்லாம் தாங்களும் கண்டிருக்கிறோம் என்பதையே பெரியவர்கள் மறந்து விட்டது தான். அதனால் தான் சகாரா பாலைவனம் போல அவர்களுடைய இதயம் ஈரமில்லாமல் காய்ந்து போயிருக்கிறது.

ஒரு கோடியே நாற்பது லட்சம் பிரதிகளைத் தாண்டி இன்னமும் விற்றுக்கொண்டேயிருக்கிற, 301 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிற குட்டி இளவரசனை எப்படிப் புரிந்து கொள்வது? ஏன் அந்தப் புத்தகம் செவ்வியலாகக் போற்றப்படுகிறது? குட்டி இளவரசன் கதையை மீண்டும் மீண்டும் திரைப்படங்களாகவும், நாடகங்களாகவும், எடுத்து வருகிறார்களே. குட்டி இளவரசனின் கதையில் வரக்கூடிய உடை, பொருள், விமானம், கிணறு, குட்டிக்கோள்கள் எல்லாவற்றையும் செயற்கையாக உருவாக்கி அருங்காட்சியகங்களாக நிறுவி உலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. குட்டி இளவரசனின் நூல் வயது வாரியாக மீளுருவாக்கம் செய்யப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

1900 – ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி பிறந்த அந்துவான் எக்சுபரி உயர்குடியைச் சேர்ந்தவர். எழுத்தாளர். ராணுவச்சேவைக்காக பிரான்ஸ் நாட்டு ராணுவத்தில் சேர்ந்து விமானம் ஓட்டுவதற்கும் கற்றுக்கொண்டார். விமானம் ஓட்டுவது அவருக்கு சாகசமாகவும், பெருவிருப்பமாகவும் மாறிவிட்டது. அதுதான் அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. 1925 – ஆம் ஆண்டு  தன்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பான ( AVIATOR ) விமான ஓட்டி என்ற நூலை வெளியிட்டார். பின்னர் 1929 – ஆம் ஆண்டு தென்னக அஞ்சல் (  SOUTHERN MAIL ) என்ற நூலை வெளியிட்டார். பிறகு 1931 – ஆம் ஆண்டு அவர் எழுதிய இரவு விமானம் ( NIGHT FLIGHT ) என்ற நூல அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தது. 1935 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பிராங்குகளுக்காக நடந்த விமானப்பந்தயத்தில் அவரும் அவருடைய நண்பரான ஆந்த்ரே பிரிவொட்டும் கலந்து கொண்டனர். அந்த விமானம் கிட்டத்தட்ட இருபது மணிநேரப் பயணத்துக்குப்பிறகு எரிபொருள் தீர்ந்து போய் சகாரா பாலைவனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.  குடிக்கத்தண்ணீரில்லை. ஒருநேரத்துக்கு மட்டுமேயான உணவு இருந்தது. உயிர் வாழ்வோமா? இல்லை ஆள் அரவமற்ற அந்தப் பாலைவன மணலில் புதைந்து போவோமா என்ற நிலையற்ற கணங்களில் மனம் மயங்கி கானல் காட்சிகளாய் பிரமைகளாய், தோற்றப்பிழைகளாய், கண்டவையே குட்டி இளவரசனை எழுதத்தூண்டுகோலாக இருந்தன. காணாமல் போன அவரைக் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால் அந்துவான் தோற்றப்பிழையாகக் கண்ட குட்டி இளவரசனை உடனே எழுதிவிடவில்லை. 

1939 –ல் அவர் காற்று, மணல், விண்மீன்கள் என்ற நாவலை எழுதி வெளியிட்டார். இதற்கிடையில் 1940 -களில் பிரான்ஸின் மீது ஜெர்மனியின் படையெடுப்பு நடந்தது. பிரான்ஸ் வீழ்ந்தது. அந்துவான் உடனே அமெரிக்காவுக்குத் தப்பிச்சென்றார். அங்கிருக்கும்போது தான் 1942 – ஆம் ஆண்டு கோடைகாலத்தில் குட்டி இளவரசனின் முதல் பிரதியை எழுதத்தொடங்கினார். அமெரிக்கா ஜெர்மனியின் நாஜிகளுக்கு எதிராக போரில் இறங்கத் தயங்கிக்கொண்டிருந்த சமயம் அது. 1941 முதல் 1943 வரை நியூயார்க் நகரத்தில் தங்கியிருந்த அந்துவான் இடையில் ஒரு ஐந்து மாதங்கள் வசந்தகாலத்தில் கனடாவிலுள்ள கியூபெக் நகரில் தங்கியிருந்தார்.

அங்கே குட்டி இளவரசனை எழுதத் தொடங்கினார். அவருக்குத் திருப்தி ஏற்படும்வரை மீண்டும் மீண்டும் எழுதினார். முப்பதாயிரம் வார்த்தைகளில் எழுதப்பட்ட முதல் பிரதியை பதினைந்தாயிரம் வார்த்தைகளாகக் குறைத்தார். 1943-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குட்டி இளவரசன் ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் பிரஞ்சு மொழியிலும் அமெரிக்காவில் வெளியானது. அப்போது ஜெர்மனியின் ஆதிக்கத்திலிருந்த பிரான்சில் அந்த நூல் தடைசெய்யப்பட்டது.  ஜெர்மனியின் ஆதிக்கத்திலிருந்து பிரான்ஸ் விடுதலையடைந்த பிறகே பிரான்சில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

1943-ல் குட்டி இளவரசன் வெளியான சில வாரங்களில் பிரஞ்சு விடுதலைப் படையில் சேர்ந்து ஜெர்மானியப்படைகளின் நடமாட்டத்தை அறிந்து கொள்ள உதவுகிற உளவு விமானத்தை ஓட்டிச்சென்றார். இரண்டு முறைகளுக்கு மேல் நாஜிகளின் நடமாட்டம் பற்றி வெற்றிகரமாக உளவறிந்து வந்தார். தன்னுடைய நாற்பத்திநான்கு வயதில் 1944 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒற்றறியச்சென்ற அந்துவான் மத்தியத்தரைக்கடல் பகுதியின் மீது பறக்கும்போது காணாமல் போனார்.  அவர் எப்படி மறைந்தார் என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது. சமீபத்தில் தான் அவர் சென்ற விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்துவான் என்ன ஆனார் என்று யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவர் எழுதிய குட்டி இளவரசனைத் தேடியே அவர் பி612 கோளுக்குச் சென்று விட்டார் என்று எல்லாரும் நம்புகிறார்கள்.

குட்டி இளவரசன் நூலை அவர் லியோன் வெர்த் என்ற பெரியவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தார். லியோன் வெர்த் அந்துவானை விட இருபத்தியிரண்டு வயது மூத்தவர். எழுத்தாளராகவும் கலை விமரிசகராகவும் இருந்த லியோன் இடதுசாரி போல்ஸ்விக்காக இருந்தார். அவர் தான் அந்துவானின் மிகச்சிறந்த நண்பராக இருந்தார். அதனால் தான் அவருக்குச் சமர்ப்பணம் செய்யும்போது,

“ இந்தப்புத்தகத்தைப் பெரியவர் ஒருவருக்குச் சமர்ப்பித்தற்காக நான் குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இதற்கு முக்கியக்காரணம் ஒன்று உண்டு. இந்தப் பெரியவர் தான் உலகத்திலேயே எனக்குக்கிடைத்த சிறந்த நண்பர். மற்றொரு காரணமும் உண்டு. இந்தப் பெரியவர் எல்லாவற்றையும் புரிந்து கொள்வார். குழந்தைகளின் புத்தகங்களைக்கூட. மூன்றாவது காரணம் இவரோ பிரான்ஸ் நாட்டில் இப்போது பசியிலும் குளிரிலும் வசிப்பவர். இவருக்கு உண்மையான ஆறுதல் தேவை. இந்தக் காரணங்கள் எவையுமே போதவில்லை என்றால் இந்தப்புத்தகத்தை ஒரு காலத்தில் குழந்தையாக இருந்த இந்தப் பெரியவருக்குச் சமர்ப்பிக்க விரும்புகிறேன். பெரியவர்கள் எல்லாருமே முதலில் குழந்தைகளாக இருந்தவர்கள் தாம். ( ஆனால் சிலருக்கு மட்டுமே இது நினைவிருக்கும் ) ஆகவே என் சமர்ப்பணத்தைத் திருத்தி அமைக்கிறேன்;

லியோன் வெர்த்துக்கு

அவர் சிறுபையனாக இருந்தபோது “

இரண்டாம் உலகயுத்தம் முடிவடைந்தபிறகு அந்துவான் குட்டி இளவரசனை லியோனுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார் என்பது அந்துவானின் மறைவுக்குப் பிறகே லியோனுக்குத் தெரியும். அப்போது லியோன்,

“ அந்துவான் இல்லாத அமைதி முழுமையான அமைதியில்லை “ என்று சொல்லியிருந்தார்.

குட்டி இளவரசன் நூலின் கதையை மேலோட்டமாகப்பார்த்தால் மிக எளிமையானது. குட்டி இளவரசன் என்ற வேற்றுக்கோள் குழந்தை ஆறு கோள்களுக்குப் பயணம் சென்று விட்டு ஏழாவதாக பூமிக்கு வருகிறான். அங்கேயும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற பிறகு சகாரா பாலைவனத்தில் கதையாசிரியரான அந்துவானைச் சந்தித்து அவனுடைய பயண அனுபவங்களைச் சொல்கிறான். சொல்லி முடித்தபிறகுதன்னுடைய கோளுக்குத் திரும்பிச் செல்கிறான். ஆனால் இந்தக் கதைக்குள் குட்டி இளவரசனுக்குக் கிடைக்கும் அனுபவங்களும் அந்த அனுபவங்களைச் சித்தரிக்கும் விதமும் நமக்கு வாழ்க்கை குறித்த நிறைய சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது.  செய்கிறான்.

கதையாசிரியரான அந்துவான் ஆறுவயதில் படம் வரைவதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். ஆனால் அவர் வரைந்த படத்தைப் பார்த்த பெரியவர்களுக்குப் புரியவில்லை. ஒரு மலைப்பாம்பு வயிற்றுக்குள் இருக்கும் யானையை அவர்களால் பார்க்க முடியவில்லை. அவர்கள் ஒரு தொப்பியையே பார்த்தார்கள். அன்றிலிருந்து அந்துவான் பெரியவர்களிடம் படத்தைக் காட்டுவதில்லை என்பதோடு படம் வரைவதை விட்டு விட்டார். அதன்பிறகு வளர்ந்து ஒரு விமானியாகி சகாரா பாலைவனத்தில் விமானம் பழுதாகி விழுந்த விமானத்தை தன்னந்தனியாகப் பழுது பார்த்துக்கொண்டிருக்கும்போது அங்கு திடீரென்று குட்டி இளவரசன் வருகிறான். தனக்கு ஒரு ஆடு படத்தை வரைந்து கொடுக்கும்படி கேட்கிறான். முதலில் அவன் யார்? எங்கிருந்து வந்தான்? என்று புரியாமல் திகைத்த அந்துவானிடம் அவன் மீண்டும் ஒரு ஆட்டை வரைந்து கொடுக்கச்சொல்கிறான். அதிலிருந்து தொடங்குகிறது கதை.  அந்துவான் வரைந்து கொடுக்கும் ஆடுகளின் சித்திரங்கள் குட்டி இளவரசனுக்குத் திருப்தியளிக்கவில்லை. ஆடு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெட்டியை வரைந்து அதற்குள் ஆடு அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்வதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறான் குட்டி இளவரசன். ஆட்டைக்கட்டிப்போட ஒரு கயிறும் முளைக்குச்சியும் வரைந்து தருவதாகச் சொல்லும் அந்துவானிடம் ஆட்டைக் கட்டுவதா? என்ன விந்தையான எண்ணம்? என்று கேட்கிறான். அதன் வழியே குழந்தைமையின் அற்புதத்தை நமக்கு உணர்த்துகிறார் அந்துவான்.

ஆடு செடிகளை மேய வேண்டும் என்று அறிந்து கொண்டதில் குட்டி இளவரசனுக்கு மகிழ்ச்சி. ஏனெனில் பவோபாப் மரங்களை மேய வேண்டும் என்று ஆசைப்படுகிறான். பத்து யானைகள் வந்து மேய்ந்தாலும் தின்று தீர்க்க முடியாத பிரம்மாண்டமான மரமான பவோபாப் மரத்தை ஒரு ஆடு எப்படி மேயமுடியும் என்று அந்துவான் கேட்கும்போது குட்டி இளவரசன் விவேகத்துடன் பதில் சொல்கிறான். ஒரு காலத்தில் பவோபாப் மரங்களும் செடிகளாக இருக்கும் தானே. அப்போது ஆடு மேய்ந்து விடும் அல்லவா. பவோபாப் மரங்கள் பெருகினால் கோள் வெடித்துச் சிதறி விடும் என்கிறான். மிக முக்கியமான விஷயம் அந்துவான் நாஜிக்களையே பவோபாப் மரங்களாகச் சித்தரிக்கிறார். அந்த விஷச் செடிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று குட்டி இளவரசனின் மூலமாகச் சொல்கிறார்.

உலகையே தன் ஆளுகைக்குக்கீழ் கொண்டுவருவதற்காகவும் ஒரே இனம் தான் இந்த உலகை ஆளவேண்டுமென்ற முட்டாள்த்தனமான கருத்தியலுக்காகவும்  இனவெறியையும், ஆதிக்கவெறியையும், பரப்பிவிட்ட ஜெர்மனியின் ஹிட்லர் உலகையே அடிமைகொள்ள நாஜிப்படையை உருவாக்கினான். அந்த நாஜிக்களுக்கு எதிரான ஒரு நூல் குட்டி இளவரசன். அதுமட்டுமல்ல அப்போதைய உலகப்போர் காரணமாக விரக்தியடைந்த மக்களுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் ஒரு பிரதியாகவும் குட்டி இளவரசன் விளங்குகிறது.

குட்டி இளவரசனின் கோள்கூட பி612 என்ற எண்ணாக இருப்பதற்குப் பெரியவர்கள் தான் காரணம். ஏனெனில் பெரியவர்களுக்கு எண்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர்கள் வாழ்க்கையை எண்களாலேயே அளக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் எண்களை ஏளனமாகக் கருதுகிறார்கள்.

குட்டி இளவரசன் ஒரு வீட்டைவிட சற்று பெரிதாக இருக்கும் தன்னுடைய கோளில் இருக்கும் ஒரே ஒரு மலர் கொண்ட கர்வத்தையும் அலட்சியத்தையும் தாங்கமுடியாமலேயே கோளை விட்டு புறப்படுகிறான். அப்படி அவன் ஆறு சின்னஞ்சிறு கோள்களுக்கும் பூமியெனும் பெருங்கோளுக்கும் போய் வரும்போது சந்தித்த அனுபவங்களின் மூலம் அவன் வாழ்க்கையின் அர்த்தம், அன்பு, கருணை, பேராசை, அதிகாரம், அறியாமை, அபத்தம், எல்லாவற்றையும் உணர்கிறான். மரணம் என்பது உண்மையில் மரணமல்ல என்ற இருத்தலியல் கோட்பாட்டைப் பேசுகிறான். குட்டி இளவரசனை வாசிக்கும் போது ஒரே நேரத்தில் அது காலத்தின் படைப்பாகவும், காலத்தைத் தாண்டிய படைப்பாகவும் விளங்குவது தெரியும்.

 முதல் கோளில் குடிமகன்களே இல்லாத ராஜாவைச் சந்திக்கும் குட்டி இளவரசன் அவருடைய வெற்று அதிகாரத்தின் கோமாளித்தனத்தை உணர்கிறான். தன் மேலங்கியால் கோள் முழுவதையுமே ஆக்கிரமித்துக் கொண்டு தானே சட்டமியற்றவும் அந்த சட்டத்தைத் தானே மீறவுமான அதிகாரவிளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிற ராஜா குட்டி இளவரசனையும் அங்கே தங்கச்சொல்கிறார். தனக்குத்தானே நீதி வழங்குவது தான் இருப்பதிலேயே மிகவும் கடினமானது என்கிறார் ராஜா. அதிகாரத்தின்  கோமாளித்தனமான விளையாட்டைக் கண்டு விரக்தியடைந்து அங்கிருந்து கிளம்பி விடுகிறான் குட்டி இளவரசன். அப்படிப்புறப்படும் போது பெரியவர்கள் விசித்திரமானவர்கள் என்று சொல்கிறான்.

 அடுத்த கோளில் ரசிகனைத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு தற்பெருமைக்காரனைச் சந்திக்கிறான். அந்தத் தற்பெருமைக்காரன் தன்னை யாராவது பாராட்டிக் கொண்டேயிருக்கவேண்டும் என்று விரும்புகிறான். குட்டி இளவரசன் அந்தத் தற்பெருமைக்காரனிடமும் சலிப்படைந்து அடுத்த் அகோளுக்குச் செல்லும்போது பெரியவர்கள் நிச்சயம் விசித்திரமானவர்கள் தான் என்று சொல்கிறான்.

அடுத்த கோளில் ஒரு குடிகாரனைச் சந்திக்கிறான். குடிப்பதற்கானக் காரணத்தை அந்தக் குடிகாரன் சொல்வதைக் கேட்டு குட்டி இளவரசன் குழம்புகிறான். அங்கிருந்து கிளம்பும் போது பெரியவர்கள் மிகமிக விசித்திரமானவர்கள் என்று நினைக்கிறான்.

அடுத்த கோளில் அவன் சந்திக்கும் வியாபாரி தனக்கு ஐம்பது கோடியே பதினாறு லட்சத்து இருபத்தியிரண்டாயிரத்து எழுநூற்று முப்பத்தொன்று விண்மீன்களுக்குச் சொந்தக்காரன் என்று சொல்கிறான். அந்த விண்மீன்களின் எண்ணிக்கையை காகிதத்தில் எழுதி பத்திரமாகப் எட்டகத்தில் பூட்டி வைத்துக் கொள்வதால் அவை எனக்குச் சொந்தமென்கிறான்.  விசித்திரமான அந்த வியாபாரியை விட்டுப் புறப்படும்போதும் குட்டி இளவரசன் பெரியவர்கள் அசாதாரணமானவர்களாக இருக்கிறார்கள் என்கிறான்.

அடுத்த கோளில் ஒரு நிமிடத்தில் பகலும் ஒரு நிமிடத்தில் இரவும் வந்து விடுகிறது. அந்தக் கோளில் விளக்கேற்றுபவர் ஒரு நிமிடத்தில் விளக்கை ஏற்றவும் ஒரு நிமிடத்தில் விளக்கை அணைக்கவுமான பணியை விடாது செய்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே நாற்பத்திநாலு முறை சூரிய அஸ்தமனமாகும் கோளிலிருந்து தான் குட்டி இளவரசன் வந்திருப்பான். அவனுக்கு சூரிய அஸ்தமனம் எப்போதும் பிடித்த விஷயம். இந்தக் கோளில் இருபத்தி நாலு மணிநேரத்தில் ஆயிரத்து நானூற்று நாற்பது சூரிய அஸ்தமனங்கள் நிகழும் இந்தக் கோளை விட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து செல்லும் குட்டி இளவரசன் அந்த விளக்கேற்றும் மனிதரை மற்றெல்லோரையும் விட உயர்வாக நினைப்பான். அவனை நண்பனாக்கிக் கொள்ள விரும்புவான்.

அடுத்த கோளில் வெறும் புத்தகத்தில் வாழும் புவியியல் ஆய்வாளரைச் சந்திக்கிறான். குட்டி இளவரசனின் கேள்விகளுக்கு அந்த ஆய்வாளர் தரும் பதில்கள் அவனுக்கு ஏமாற்றமளிக்கின்றன. மலர்களைப் பற்றிக்கவலைப்படாத அந்த புவியியலாளரின் கோளை விட்டு பூமிக்கோளுக்குப் பயணப்படுகிறான்.

ஏழாவது கோளான பூமியில் மனிதர்களைத் தேடி அலைகிறான். ஆப்பிரிக்க பாலைவனத்தில் வந்து விழும் அவன் முதலில் ஒரு பாம்பைச் சந்தித்து மனிதர்களைப் பற்றிக் கேட்கிறான். பாலைவனத்தில் தனிமையாக இருக்கிறது என்று சொல்கிற குட்டி இளவரசனிடம் மனிதர்கள் எங்கேயும் தனியாகத்தான் வசிக்கிறார்கள் என்று பாம்பு சொல்கிறது. மரணம் பற்றிப் புதிராகப் பேசும் அந்தப் பாம்பை விட்டு அகன்று ஒரு மலரைச் சந்திக்கிறான். மலரிடம் மனிதர்களைப் பற்றிக் கேட்கும்போது வேரில்லாமல் காற்றில் மிதந்து செல்லும் அவர்களை வெகுகாலத்துக்கு முன்னால் பார்த்திருக்கிறேன் என்று மலர் சொல்கிறது. அடுத்து மலையின் மீது ஏறி நின்று மனிதர்களைத் தேடுகிறான். அது அவன் குரலையே எதிரொலிக்கிறது. மனிதர்களுக்குக் கற்பனைவளம் குறைவு என்றும் அதனால் தான் சொன்னதையே திரும்பச்சொல்கிறார்களென்றும் நினைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்கிறான்.

மணல் பாறை பனி என்று பயணிக்கிற குட்டி இளவரசன் பாதைகளைக் காண்கிறான். பாதைகள் ஒரு ரோஜாத்தோட்டத்துக்கு அவனைக் கொண்டு செல்கிறது. தனியாக இருக்கும்போது ரோஜாவின் தனித்துவமான மதிப்பு தோட்டமாக இருக்கும்போது சாதாரணமாகிவிடுவதைக் கண்டு மனம் வெதும்புகிறான் குட்டி இளவரசன். அவனைச் சந்திக்கும் நரி அன்பு என்பதே பழக்கம் என்று சொல்கிறது. நரியிடம் பழக்கப்படுத்திக்கொண்ட குட்டி இளவரசனுக்கு தன்னுடன் பழகிய தன்னுடைய கோளில் இருக்கும் ரோஜாமலரைத் தேட ஆரம்பிக்கிறது.

அங்குமிங்கும் எதற்கென்றே தெரியாமல் ரயில்களில் போய் வந்து கொண்டிருக்கும் மனிதர்களை வழியனுப்பும் பாயிண்ட்ஸ்மேனைச் சந்திக்கிறான். அவன் குழந்தைகளுக்கு மட்டுமே தாங்கள் எதைத்தேடுகிறோம் என்று தெரியும் என்று சொல்கிறான். தண்ணீர் தாகத்தைத் தணிக்க மாத்திரையைச் சாப்பிடச் சொல்லும் ஒரு வியாபாரியைச் சந்திக்கிறான். அதனால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்கிறான் வியாபாரி. அந்த நேரத்தில் என்னால் ஒரு ஊற்றைத் தேட முடியும் என்கிறான் குட்டி இளவரசன்.

அங்கிருந்து தான் விபத்தில் சிக்கிய அந்துவானைப் பாலைவனத்தில் சந்திக்கிறான். பாலைவனத்தில் ஒரு கிணறு இருப்பதைக் கண்டு சொல்கிறான். மனிதர்கள் தேடுவது என்ன வென்று தெரியாமலே சுழலில் சிக்கிக்கொள்வார்கள் என்று சொல்கிறான். அந்த இடத்தில் தான் எட்டு நாட்களுக்கு முன்னால் தான் விழுந்ததாகச் சொல்கிறான் குட்டி இளவரசன். இப்போது அவனுடைய கோளில் இருக்கும் மலருக்கு அவன் தான் பொறுப்பாளி. உடனே அங்கே செல்லவேண்டும். பாம்பினால் கடிபட்டு இறந்து போகிறான். ஆனால் தான் இறப்பதாகத் தெரிவது உண்மையல்ல. அந்தக்கோளுக்கு இத்தனை எடையுள்ள உடலுடன் போகமுடியாது அதனால் நீ நம்பாதே. என்று சொல்லி சுருண்டு விழுகிறான். அந்துவானிடம் விண்மீன்களைப் பார்க்கும்போது அங்கிருந்து உண்னைப்பார்த்துச் சிரிப்பேன் என்று அந்துவானிடம் சொல்கிறான்.

காவியத்துயரமான அந்தக் காட்சியில் அந்துவானுடன் சேர்ந்து நமக்கும் கண்கலங்குகிறது. நாவல் முழுவதும் குட்டி இளவரசனின் எண்ணங்களும் உரையாடல்களும் நம்முடைய துருப்பிடித்த உணர்வுகளைக் கூர் தீட்டுகின்றன. புதிய பார்வைகளும் தரிசனங்களும் கிடைக்கின்றன. அந்துவான் குட்டி இளவரசனின் மூலம் வாழ்க்கையை விசாரணை செய்கிறார். அதில் பெரியவர்களும் அவர்களின் உலகப்பார்வையும் குட்டி இளவரசனால் எள்ளி நகையாடப்படுகிறது. பெரியவர்கள் விசித்திரமானவர்கள் தானே.

அதோ! குட்டி இளவரசன் தன்னுடைய சிறிய கோளான பி612 – ல் தன்னுடைய கர்வமிக்க மலரோடும் பெட்டியில் அடைக்கப்பட்ட ஆட்டுக்குட்டியுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். காலையில் எழுந்ததும் எரிமலைகளைச் சுத்தம் செய்கிறான். எங்காவது தெரியாத்தனமாக பவோபாப் செடிகள் முளைப்பதாகத் தெரிந்தால் தன்னுடைய ஆட்டுக்குட்டியிடம் மேய்ந்து விடச்சொல்கிறான்.

அதோ வானத்தைப் பாருங்கள். குட்டி இளவரசன் உங்களைப் பார்த்துச் சிரிக்கிறான். இரவில் வானத்தைப் பாருங்கள். அப்போது தெளிவாகத்தெரியும்.  

அதற்கு நீங்கள் ஒரு குழந்தையாக மாறவேண்டும்.

நன்றி - Bookday.in



 

Sunday, 1 August 2021

சூரியனும் குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சும்

 

சூரியனும் குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சும்

உதயசங்கர்

காலை விடிந்தது. சூரியன் கண்களை மெல்லத் திறந்து உலகத்தைப் பார்த்தான். வெளிச்சத்தினால் கண்கள் கூசின. மறுபடியும் கண்களை மூடி கொஞ்சம் கொஞ்சமாய் கால்க்கண்களைத் திறந்தான். அரைக்கண்களைத் திறந்தான். முக்கால் கண்களைத் திறந்தான். பிறகு முழுக்கண்களையும் திறந்தான். இப்போது கண்கள் கூசவில்லை. மேலேயிருந்து கீழே பூமியை வேடிக்கை பார்த்தான். அப்படியே மெல்ல வானத்தில் காவல் நடைப்பயிற்சி செய்யப் புறப்பட்டான்.

கீழே ஒரு கூரை வீட்டின் முற்றத்தில் ஒரு சிட்டுக்குருவி அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது. அது ஓலைகளுக்கு நடுவில் கூடு கட்டி குஞ்சுகள் பொரித்திருந்தது. கூட்டில் இரண்டு குஞ்சுகள் இருந்தன. இரண்டு குருவிக்குஞ்சுகளில் ஒன்று ரொம்பக்குட்டியாயிருந்தது. ஆனால் அந்தக்குட்டிக் குட்டி குருவிக்குஞ்சு சுறுசுறுப்பாக இருந்தது. கூட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க முடியவில்லை. அங்கே சுற்றிச் சுற்றி வந்தது. அம்மாவிடம்,

“ நான் எப்ப பறக்கலாம்? சொல்லுங்கம்மா.. நான் எப்ப பறக்கலாம்? சொல்லுங்கம்மா..என்று கேட்டுக்கொண்டேயிருந்தது. அம்மாக்குருவி,

“ குட்டிக்குட்டி குருவிக்குஞ்சே! இறகு முளைக்கணும்.. சிறகு முளைக்கணும்.. வால் முளைக்கணும்.. கால் வளரணும்.. அப்புறம் பறக்கலாம் குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சே! “

என்று சொன்னது. குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சுக்கு எல்லாம் உடனே நடக்கணும் என்று நினைத்தது. அது தன்னுடைய உடலை மீண்டும் மீண்டும் பார்த்தது. அப்போது உச்சி வெயில் வந்து விட்டது. நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த சூரியன் அந்தக் கூரை வீட்டுக்கு மேலே வந்து நின்றது.

வெளிச்சத்தினால் கண்கள் கூசிய குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு கூட்டிலிருந்து வெளியே எட்டிப்பார்த்தது. சூரியன் சிரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து அதற்கும் சிரிப்பு வந்தது. கிய்யா கிய்யா என்று சிரித்தது. குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சின் சிரிப்புச்சத்தத்தை கேட்ட சூரியன் அங்கேயே நின்று விட்டது.

குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு சூரியனிடம், “ கிய்யா கிய்யா சூரியன் மாமா சூரியன் மாமா நானும் உங்களை மாதிரி வானத்தில் பறந்து மிதக்கணும்…என்று பேசியது. அதற்கு சூரியன்,

“ ஆகா அதுக்கென்ன.. உன் சிறகுகளை அசைத்து மேலே பறந்து வா..என்று பதில் அளித்தது. உடனே குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு தன் சின்னஞ்சிறு சிறகுகளை அசைத்தது. என்ன ஆச்சரியம்! அது பறக்கத் தொடங்கிவிட்டது. ஆமாம். மேலே மேலே பறந்தது.

முதலில் ஊர்ந்து செல்லும் எறும்பு மேகங்களைக் கடந்தது. பின்னர் தாவிக்குதிக்கும் முயல் மேகங்களைக் கடந்தது. அப்புறம் பாய்ந்து செல்லும் மான் மேகங்களைக் கடந்தது. கர்ச்சித்துக்கொண்டிருந்த சிங்கமேகங்களைக் கடந்தது. கன்னங்கரேலென்று பிளிறிக்கொண்டிருந்த யானை மேகங்களைக் கடந்தது. அப்படியே பறந்து பறந்து சூரியனுக்கு அருகிலேயே போய்விட்டது.

“ கிய்யா கிய்யா சூரியன் மாமா! சூரியன் மாமா! நான் வந்துட்டேன்..என்று கத்தியது. சூரியன் அந்தக்குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சை தன் முதுகில் தூக்கி வைத்துக் கொண்டது. குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு ரொம்ப தூரம் பறந்து வந்திருக்கிறதல்லவா. அதற்கு சிறகுகள் வலிக்குமல்லவா. அதனால் சூரியனின் முதுகில் உட்கார்ந்து உலகத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்தது.

உலகத்தை வேடிக்கை பார்ப்பது வேடிக்கையாக இருந்தது.

இருட்டத் தொடங்கிவிட்டது. சூரியன் மாமாவின் காவல் நேரம் முடிந்து விட்டது. இனி நிலா அத்தை வந்து விடுவாள். வேடிக்கை பார்த்துப்பார்த்து சோர்ந்து போய் உறங்கி விட்டது குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு. உறங்கிக்கொண்டிருந்த குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சை அப்படியே பூப்போல சூரியன் நிலா அத்தையிடம் கொடுத்தது. நிலா அத்தை குளிர்ந்த தன் கரங்களால் அதை வாரி அணைத்து அப்படியே கீழே இறங்கினாள்.

கூரை வீட்டிலிருந்த கூட்டில் பத்திரமாக அதை வைத்தாள். உறங்கிக்கொண்டே நிலா அத்தையின் கைகளைப் பிடித்த குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சை மெல்ல தட்டிக்கொடுத்தாள். குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு உறக்கத்தில் சிரித்தது. குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு பெரிய குருவியாகி வானத்தில் அங்கும் இங்கும் சர் சர்ரென்று பறந்து கொண்டிருப்பதாகக் கனவு கண்டது.

நன்றி - வண்ணக்கதிர்



 

Wednesday, 7 July 2021

கத்திக்கப்பல்

 

    கத்திக்கப்பல்

உஉதயசங்கர்

 

 கப்பலில் போகவேண்டும் என்று அரவிந்த் ஆசைப்பட்டான்.. அவனுடைய அப்பா  தூத்துக்குடி துறைமுகத்துக்குக் கப்பல் பார்க்க அழைத்துச் சென்றிருந்தார். பிரம்மாண்டமாய் நின்று கொண்டிருந்த கப்பலைப் பார்த்த அரவிந்த் ஆ வென்று வாயைப் பிளந்தான். கப்பலில் ஏறிப் பார்த்தான். அன்று இரவு அவன் ஒரு கப்பலில் ஏறினான்.

அரவிந்த் வெள்ளைச்சீருடை அணிந்திருந்தான். குட்டிப்பையன் குட்டிச்சீருடை அணிந்திருந்தான். அவனைப் பார்த்து ஊழியர்கள் வணக்கம் சொன்னார்கள். கப்பல் அலைகளில் ஏறி இறங்கி தாலாட்டியது. மிதந்து கொண்டிருந்த கப்பலில் அரவிந்த் உறங்கிக்கொண்டிருந்தான்.

“ மணி ஏழாச்சு.. இன்னும் என்ன தூக்கம்? “ என்று அம்மாவின் குரல் கேட்டது. கப்பலில் எப்படி அம்மா வந்தாள்? என்று யோசித்துக் கொண்டே கண்களைத் திறந்தான். வீட்டில் கட்டிலில் படுத்திருந்தான். சோ என்று சத்தம் கேட்டது. சன்னல் வழியே பார்த்தான். மழை பெய்து கொண்டிருந்தது. இரண்டு நாட்களாய் விடாமல் மழை. புயலும் வீசியதாய் அம்மா சொன்னாள். அரவிந்த் எழுந்து உட்கார்ந்து மழையை வேடிக்கை பார்த்தான்.

தெருவில் மழைநீர் ஓடிக்கொண்டிருந்தது.

திடீரென்று அரவிந்துக்கு யோசனை. உடனே அவன் ஒரு காகிதத்தை எடுத்தான். அதை மடித்துக் கப்பல் செய்தான். அதுவும் கத்திக்கப்பல். அழகான கப்பல். பிறகு ஒரு காகிதக்கொடி செய்தான். ஒரு பொடிக்குச்சியில் காகிதக்கொடியை ஒட்டினான். அதை கத்திக்கப்பலின் உச்சியில் செருகி வைத்தான்.

மழை வெறித்து விட்டது. ஆனால் தெருவில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அரவிந்த் மெல்ல அவனுடைய கப்பலுடன் வெளியே போனான். கத்திக்கப்பலைத் தண்ணீரில் விட்டான். அரவிந்த் அதில் ஏறிக் கொண்டான். முதலில் கத்திக்கப்பல் தடுமாறியது. கவிழ்ந்து விடுவது போல ஆடியது. பிறகு தடுமாறாமல் வேகமாக தண்ணீரில் மிதந்து சென்றது. அரவிந்த் அதன் முகப்பில் நின்றான். மிதந்து சென்ற கப்பல் அந்தத் தெருவைக் கடந்தது. அவனுடைய பள்ளிக்கூடத்தைத் தாண்டியது. பள்ளிக்கூடத்தில் யாரும் இல்லை. யாராவது இருந்தால் கையை ஆட்டலாம் என்று நினைத்தான். ஆனால் பள்ளி வாசலில் மணி என்ற நாய்க்குட்டி மட்டும் நின்று கொண்டிருந்தது. அரவிந்த்,

“ மணி! நான் கப்பல்ல போறேன்.. வெளிநாடு போய்ட்டு வாரேன்..என்றான். மணி மழைநீரை ஒரு உதறு உதறிவிட்டு பௌ என்று குரைத்தது. பின்னர் கத்திக்கப்பல் ஒரு வாய்க்காலுக்குச் சென்றது. அங்கே ஒரு தவளை வாயைத் திறந்து கப்பலைப் பார்த்தது.

“ நானும் வரட்டா? “ என்று கேட்டது. அரவிந்த் யோசித்தான்.

“ இல்லை இல்லை.. நான் திரும்பிவர நாளாகும்..என்றான். “ ஓ அப்படியா.. எனக்கு முட்டைகளிட வேண்டும்…நிறைய வேலைகள் இருக்கு..என்று சொல்லி ஒரு குதிகுதித்தது.

வாய்க்காலில் ஓடிய கத்திக்கப்பல் ஒரு குளத்துக்குச் சென்றது. குளத்தில் ஒரு நண்டு வேகமாக கத்திக்கப்பலைப் பிடிக்க வந்தது. ஆனால் கத்திக்கப்பல் அதன் பிடியில் சிக்காமல் அங்குமிங்கும் வளைந்து வளைந்து சென்றது.

 குளம் நிரம்பி ஆற்றுக்குச் சென்றது. கத்திக்கப்பலும் ஆற்றுக்குச் சென்றது. ஆற்றங்கரையில் ஒரு பையன் அழுது கொண்டிருந்ததைப் பார்த்த கத்திக்கப்பல் நின்று விட்டது.

“ ஏன் அழுகிறே..என்று அரவிந்த் கேட்டான்.  அதற்கு அந்தப்பையன்,

“ நான் சாப்பிட்டு இரண்டு நாளாச்சு.. ஆத்துத்தண்ணியைத் தான் குடிச்சிகிட்டிருக்கேன்.. எனக்குப் பசி தாங்கல..

உனக்கு வீடு இல்லையா? “

“ புயல்ல எங்க வீடு அடிச்சிகிட்டுப் போயிருச்சி.. அப்பா இல்லை.. அம்மா எங்காவது சாப்பாடு கிடைக்குமான்னு தேடப்போனாங்க.. இன்னும் வரலை..

என்றான் அந்தப்பையன். அரவிந்த் கப்பலிலிருந்து ஏராளமான உணவுப்பொட்டலங்களை எடுத்து அந்தப்பையனிடம் கொடுத்தான்.

“ உனக்கு வேற ஏதாவது வேணுமா? சும்மா கேளு..

என்று கேட்டான் அரவிந்த்.

“ எனக்குப் படிக்கப்புத்தகம் வேணும்..என்றான். அரவிந்த் கத்திக்கப்பலின் அலமாரியிலிருந்து புத்தம் புதிய கதைப்புத்தகங்களை எடுத்துக் கொடுத்தான். அந்தப்பையன் அரவிந்துக்கு நன்றி சொன்னான்.

 இப்போது ஆறு நிதானமாக ஓடியது. அரவிந்துக்கு இந்த உலகத்தை மாற்ற வேண்டும் என்று தோன்றியது.  

ஆற்றின் இரு கரையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான் அவன்.

ஆறு ஓடி ஓடி கடலில் சென்று கலந்தது. கத்திக்கப்பலும் கடலுக்குள் சென்றது. கடலில் பெரும் அலைகள் வீசின. கத்திக்கப்பலை மேலும் கீழும் அசைத்தன. கத்திக்கப்பலின் கேப்டன் யார்? அரவிந்த் இல்லையா? அவன் கத்திக்கப்பலை அழகாக ஓட்டினான்.

இப்போது கடல் அமைதியாகி விட்டது. கத்திக்கப்பல் கடலின் நடுவில் மிதந்து கொண்டிருந்தது. இனி கவலையில்லை. அதன் உச்சியில் ஒரு கொடி காற்றில் பறந்து கொண்டிருந்தது.

அரவிந்த் எங்கே?

அதோ!

அங்கே கப்பலின் மேல்தளத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் மடியில் ஒரு புத்தகம் விரிந்து கிடந்தது.

  எதிரே நிலா மறைவதையும் புதிய சூரியன்  உதிப்பதையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

நன்றி -
பொம்மி