Sunday, 14 September 2014

நோயும் ஆரோக்கியமும் - ஒரு உளவியல் மற்றும் தத்துவப்பார்வை

 

உதயசங்கர்

abstract-landscape-paintings-common-thread 

நோய் என்பது ஒரு வெளிப்பாடு, ஒரு இருத்தல் நிலை, ( state of being ) ஒரு குறிப்பிட்ட நெருக்கடியான சூழ்நிலையில் உடலும் மனமும் மேற்கொள்ளும் செயல். அந்த வெளிப்பாடு அல்லது செயலின் மூலமாகவே உயிரைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். உயிர் வாழ்வததொன்றே உயிரின் உச்சபட்ச லட்சியம். அந்த லட்சியத்துக்காக புறவயமாகவும், அகவயமாகவும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது உயிரியக்கம். அந்த மாற்றங்களையே நாம் பொதுவாக நோய் என்கிறோம் இந்த மாற்றங்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம். ஒன்று அகவயமான, புறவயமான நெருக்கடிகள் ஒட்டு மொத்த உயிரியக்கத்தில் நிரந்தரமாக ஏற்படுத்தும் மாற்றங்கள். ( chronic ) இரண்டாவது அவ்வப்போது தற்காலிகமாக புறவயமாக ஏற்படும் நெருக்கடிகளைச் சமாளிக்க உடலோ மனமோ மேற்கொள்ளும் செயல்கள். ( acute ). மூன்றாவது விபத்து, அறுவைச்சிகிச்சை, போன்ற வெளிப்படையான தாக்குதல்களுக்கு ( mechanical injuries ). ஈடு கொடுத்து உயிரியக்கம் ஏற்படுத்தும் மாற்றங்கள்.

நோய் என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதலாவதாக ஒட்டுமொத்த உயிரியக்கத்தில் ஏற்படும் பாதிப்புகள், அடுத்ததாக குறிப்பிட்ட இடங்களில், உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகள். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அல்லது நெருக்கடியில் உயிரியக்கம் உயிர் மீட்சிக்காக எடுக்கும் நடவடிக்கையினால் மட்டுமே அந்த உயிர் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். எளிய உதாரணமாக தூசி நிறைந்த காற்றைச் சுவாசிக்கும் போது உயிரியக்கம் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் நுரையீரல்களைப் பாதுகாக்கவும் எடுக்கும் நடவடிக்கையான தும்மல், இருமல், மூக்கு ஒழுகுதல், போன்றவை அந்த நேரத்தில் அவசியமான நடவடிக்கை. அது நோய் அல்ல. அந்தச் சூழ்நிலையில் உயிரியக்கம் எடுக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கை. இந்தச் செயலுக்கு மருந்துகளோ, இதைச் சரி செய்ய வேண்டிய அவசியமோ கிடையாது.

ஒரு குறிப்பிட்ட நெருக்கடிநிலையில் உயிரியக்கம் அந்த நெருக்கடி நிலையிலும், அந்த நெருக்கடிநிலையிலிருந்து மீண்ட பிறகும் உயிர் வாழ வேண்டியுள்ளது. இதற்காக அந்த நெருக்கடிநிலைக்கு ஏற்றவாறு ஒரு தனித்தன்மையுள்ள நிலையை உயிரியக்கம் மேற்கொள்கிறது. அத்தகைய நிலைதான் நோய் நிலையாக ஆகிறது. குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்றவாறு இணங்கிப் போவதற்காக உயிரோடிருப்பதைத் தொடர்ந்து இயக்கும் உயிர் இயக்கம் சார்ந்த எதிர்வினையே நோய். அதாவது நமது உயிரியக்க அமைப்பினால் மேற்கொள்ளப்படும் தனித்தன்மையுள்ள நிலை.

நோய் என்பது நீக்கப்பட வேண்டியதல்ல. மாற்றப்படவேண்டிய ஒன்று.

மேலே குறிப்பிட்ட நெருக்கடியோ, சூழ்நிலையோ, இல்லாத போதும் அப்படிப்பட்ட சூழ்நிலை இருப்பதான பாவனையில் உயிரியக்கம் எடுக்கும் அதே நடவடிக்கைகள் அதாவது தும்மல், இருமல், மூக்கு ஒழுகுதல், போன்றவை தான் சரி செய்யப்பட வேண்டியவை. இதையே நோய் என்கிறோம். கடுமையான நெருக்கடிகளிலிருந்தும், சூழ்நிலைகளிலிருந்தும் தன்னைக் காத்துக் கொள்ள உயிர் மேற்கொள்ளும் நடவடிக்கையே நோய் என்று புரிந்து கொணடோமானால் இந்த நடவடிக்கைகள் உயிரியக்கத்தில் சில பதிவுகளை ஏற்படுத்தும். இந்தப் பதிவுகள் மீண்டும் இதே போன்ற சூழ்நிலை அல்லது நெருக்கடிகள் வரும்போது மட்டுமே மீண்டும் இதே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் உயிரியக்கத்தில் ஏற்பட்ட நலிவு காரணமாக இந்த நடவடிக்கைகள் தொடர்கின்றன. அதாவது இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால் தான் நலமாக இருக்கமுடியும் என்ற தவறான பதிவு காரணமாக உண்மையில் நெருக்கடியான சூழ்நிலையில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் இப்போது அப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலை இல்லாத போதும் தேவையான நடவடிக்கை என்ற பாவனை ஏற்பட்டு நிகழ்கிறது. அதன் மூலமே உயிர் தன்னை மீட்டுக் கொண்டதாகக் கற்பிதம் செய்கிறது. இந்தக் கற்பிதமே நோய்.

துரத்திவரும் அல்சேஷன் நாயிடமிருந்து தப்பிக்க ஓடுவது என்பது தான் அந்தச் சூழ்நிலையில் உயிரியக்கம் செய்ய வேண்டிய பொருத்தமான எதிர்ச்செயல். ஆனால் எந்த நாயும் துரத்தாத போதும் அல்லது குட்டி நாய் துரத்தும் போதும் தலை தெறிக்க ஓடும் பொருத்தமற்ற எதிர்ச்செயல் தான் நோய்நிலை. ஒரு முறை ஏற்பட்ட அநுபவமானது ( நெருக்கடிநிலை ) தங்களுடைய வேர்களின் மூலம் சில அனிச்சையான செயல்களை உருவாக்கி விடுகிறது. அந்த அநுபவத்தின் மூலம் ஏற்பட்ட நோய்நிலை தன் வேர்களை உயிரியக்கத்தில் விட்டுச் செல்வதன் மூலம் எத்தனை முறை பூட்டிய வீட்டின் பூட்டை இழுத்துப் பார்த்தாலும் மனம் சமாதனமடைவதில்லை என்பது மட்டுமில்லாமல் அனிச்சைச் செயலாக மாறி விடுவதும் உண்டு. பூட்டை இழுத்துப் பார்க்கும் நடவடிக்கை திருடர்களைப் பற்றிய நியாயமான பயத்தினால் அந்தச் சூழ்நிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை. ஆனால் எந்த திருட்டுப் பயமும் இல்லாத போதும் பூட்டை இழுத்துப் பார்க்கும் பொருத்தமற்ற எதிர்ச்செயல் நோயாக மாறி விடுகிறது. அப்படி அனிச்சைச் செயலைச் செய்வதன் மூலமே அவர் தான் நலமாக இருப்பதான உணர்வைத் தருகிறது. ஆனால் தொடர்ச்சியான பொருத்தமற்ற எதிர்ச்செயல்கள் நோயின் ஆணிவேராக உருப்பெறுகின்றது. இந்த நோயின் வேர்கள் உயிரியக்கத்தில் வேர் கொண்டு விடுவதால் நாளடைவில் இதன் வளர்ச்சிப்போக்கில் விதை செடியாகி மரமாகி பூத்து காய்த்து கனிந்து விடுவதைப் போல இந்த நோய்நிலையும் பரம்பரை நோயாக மாறுகிறது.

நோயிலிருந்து மீட்டல்

ஒரு நெருக்கடிநிலைக்கு பொருத்தமற்ற எதிர்ச்செயலைச் செய்வதன் மூலம் நோய்நிலை உருவாகிறது. அதாவது அல்சேஷன் நாய்க்கும் குட்டி நாய்க்கும் உள்ள வித்தியாசத்தை உணரமுடியாமல் அல்சேஷன் நாய்க்கு எடுத்த எதிர்ச்செயலையே குட்டி நாய்க்கும் எடுக்கிறது உயிரியக்கம். இந்த நோய்நிலையைக் குணப்படுத்த பொருத்தமற்ற எதிர்ச்செயலை மாற்ற வேண்டும். நீக்கக்கூடாது. அதாவது பின்னால் துரத்திவருவது அல்சேஷன் அல்ல. அது ஒரு குட்டி நாய். அல்சேஷன் அளவுக்கு பயங்கரமானதோ, ஆபத்தானதோ இல்லை. அதற்கு தலைதெறிக்க ஓடும் எதிர்ச்செயல் தேவையற்றது. அல்சேஷனைக் கண்டு ஓடுவதற்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்று உயிரியக்கம் உணரவைத்தலே நோயிலிருந்து மீட்டல் ஆகும். அப்படி உணரும்போது உயிரியக்கம் பொருத்தமான எதிர்ச்செயலை பொருத்தமான நெருக்கடிநிலை அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கும்.

ஆரோக்கியம்

இதற்கு மாறாக ஆரோக்கியம் அந்தக் கணத்தில், அந்தக் கணத்தின் உயிர்த்துடிப்பை உணர்ந்து அதற்கு ஏற்ற மாதிரி ( கூடுதலாகவோ குறைவாகவோ அல்லாமல் ) எதிர்வினை புரிவதும், எதிர்கொள்வதும், சூழ்நிலையின் பரிமாணத்துக்கேற்ப துடிதுடிப்புடன் செயல்படுவதும், நெருக்கடியின் தன்மைக்கேற்ப உயிரியக்கம் பொருத்தமான எதிர்ச்செயல்கள் புரிவதும் இயற்கைவிதிகளுக்கேற்ப உயிர் தன்னைத் தகவமைத்துக் கொள்வதும் நிகழ்கிறது. சரியான சூழ்நிலையில் வளர்ந்து வரும் செடி பொருத்தமான எதிர்ச்செயல்கள் புரிவதன் மூலம் சரியான சமயத்தில் சரியான காலத்தில் பூக்கிறது. அந்தப் பூக்கள் மணம் வீசி அனைவருக்கும் மகிழ்வூட்டுகிறது. ஆரோக்கியம் ஒன்றே எந்தத் தடையுமின்றி தன்னை முழுமையாகத் அர்ப்பணிக்கத் தூண்டுவது. எல்லா நரம்புகளும் முறுக்கேற்றப்பட்ட, வாசிப்பதற்குத் தயாராக உள்ள வீணை போன்றது ஆரோக்கியம். அதில் எல்லாஸ்வரங்களும், எல்லாராகங்களும் அலைகடலென பொங்கி வரும். அதற்கு எந்தத் தடையும் கிடையாது. எந்தத் தயக்கமோ, பயமோ, பிரமையோ, பலகீனமோ கிடையாது. இசைவெள்ளமென பாய்ந்து பரவத் தயாராக இருக்கும். ஆனால் ஏதேனும் ஒரு நரம்பு பலகீனமாக இருந்தாலோ, அறுந்து போயிருந்தாலோ, அந்த வீணையால் முழுமையான, பரிபூரணமான இசையைத் தர முடியாது. என்ன முயற்சி செய்தாலும் இசை ஊனமாகவே தான் பிறக்கும்.

எனவே ஆரோக்கியம் என்பது ஐ யாம் ஓ.கே. யூ ஆர் ஓகே. மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அவர்கள் அறிவாளிகளாகவும், படைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே உற்பத்தித்திறன் மிக்கவர்களாக இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும் போதே சமூகமாக வாழவும் அந்தச் சமூகத்தில் ஒற்றுமையாக வாழவும் விழைகிறார்கள்.மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அமைதியாக வாழவும், படைப்பூக்கம் மிக்கவர்களாக வாழவும் தயாராகிறார்கள். படைப்பூக்கம் மிக்கவர்களே சமூகத்தில் மகிழ்ச்சியும் சாந்தியும் நிலவச் செய்கிறார்கள்.

ஆரோக்கியமும் சிலபல முன்நிபந்தனைகள் கொண்டது. ஒரு தனிமனிதனோ, மனிதக்கூட்டமோ ஆரோக்கியமாக இருக்க அவர்களுடைய தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் மட்டும் காரணிகளாக இருக்க முடியாது. அவர்கள் வாழும் சமூகம், ஏற்றதாழ்வுகளில்லாத, சமத்துவமான, எல்லோருக்கும் இடமளிக்கிற, எல்லோரையும் அங்கீகரிக்கிற, எல்லோருக்கும் சமவாய்ப்பு தருகிற, போட்டி,பொறாமைகள் இல்லாத, பள்ளம் மேடில்லாத, நீதியான, அறவுனர்ச்சிமிக்க சமுகமாக இருக்கும்போதே சமூகம் முழுமைக்குமான உண்மையான ஆரோக்கியம் சாத்தியம். அதுவரை ஆரோக்கியம் என்பது தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் பெரும்போராட்டமே.

Camera360_2014_1_12_113310

Thursday, 4 September 2014

யாரும் யாரும்

உதயசங்கர்

unspeakable-grief-of-knowing

யாரும் காணாத ஒரு கனவில்

யாரும் கேட்காத ஒரு இசை

யாரும் சொல்லாத ஒரு சொல்லில்

யாரும் படைக்காத ஒரு படைப்பு

யாரும் உண்ணாத ஒரு விருந்தில்

யாரும் தின்னாத ஒரு பண்டம்

யாரும் நுகராத ஒரு மணமுள்ள மலரில்

யாரும் காணாத ஒரு வண்டு

யாரும் செய்யாத ஒரு காதலில்

யாரும் தொடாத ஒரு ஸ்பரிசம்

யாரும் பார்க்காத ஒரு காலத்துகளில்

யாரும் மரணிக்காத ஒரு மரணம்

யாரும் இல்லாத பெருவெளியில்

யாரும் யாருமற்ற நான்.

DSC00088

Wednesday, 3 September 2014

பதட்டநோயும் மானுட சமூகமும்

 

உதயசங்கர்

மனிதகுலம் தோன்றிய காலந்தொட்டு காலங்காலமாக நோய்களினாலும், இனக்குழுச் சண்டைகளினாலும், இயற்கைப்பேரிடர்களினாலும், இறந்தவர்களை விட கடந்த நூற்றாண்டில் இறந்தவர்கள் அதிகம். கடந்த நூற்றாண்டில் தொடங்கிய அந்தத் துயரம் இன்னும் தீர்ந்தபாடில்லை. கடந்த நூற்றாண்டில் வளர்ந்து வந்த முதலாளித்துவ நாடுகள் தங்களது வியாபாரச்சந்தையை விரிவுபடுத்துவதற்காக நாடுகளைப் பிடிக்க போர்களை நடத்தினர். முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களில் கோடிக்கணக்கான மக்களைக் கொன்றொழித்தனர். அப்போதிருந்து இப்போது வரை உலகமுழுவதும் மக்கள் நிரந்தரமான அச்சத்திலேயே வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இனம், மொழி, மதம், சாதி, பிரதேசம், என என்னென்ன வழிகளில் எல்லாம் பிரிவினைகளை ஏற்படுத்த முடியுமோ அந்த வழிகளிலெல்லாம் பிரிவினைகளை ஏற்படுத்தி வாழ்வை நிச்சயமின்மையின் கொடுங்கரங்களில் கொடுத்து விட்டிருக்கின்றனர். ஒவ்வொரு பெருந்துயரிலிருந்தும் மீண்டு மறுபடியும் இன்னொரு பெருந்துயரில் தங்கள் இன்னுயிரை விடுகின்றனர் மக்கள். சுழன்றடிக்கும் சுனாமி அலைகள் போல தொடர்ந்து நிரந்தரமான பயத்திலும், துன்பத்திலும் தள்ளப்பட்டுள்ள மக்கள் எப்போதும் பதட்டத்திலேயே இருக்கும்படி வைக்கப்பட்டுள்ளார்கள்.

 

பதட்டநோயின் அறிகுறிகள்

பதட்டநோய் ஒரு வித மனதில் ஒருவித இறுக்கத்தை உருவாக்குகிறது. அதோடு ஒரு முட்டுச்சந்துக்குள் மாட்டிய உணர்வு, திசை தெரியாத வெளியில் தனியே இருப்பதான உணர்வு, உயிர்பயம், அடிவயிற்றில் வலி, மூச்சுத்திணறல், படபடப்பு, நெஞ்சிலோ அடிவயிற்றிலோ பாரம், எப்போதும் பய உணர்வு, அழுத்தும் கவலைகள், எல்லாவிதமான பயங்கள் ( phobias ) அசுத்தத்தின் மீதான ஒவ்வாமையுணர்வு, என்று பலவிதமான அறிகுறிகள் இருக்கலாம். ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட காரணிகள் இருக்கும் வாய்ப்புகள் உண்டு.

சிக்மண்ட் ஃபிராய்ட் எல்லாவிதமான உளவியல் நோய்களுக்கும் பதட்டநோயே காரணம் என்று சொல்கிறார். பதட்டநோய் நாம் நினைப்பதை விட மிக நுட்பமாக, மிக வலிமையாக நமது ஆழ்மனதில் நுழைந்து நம்முடைய உடல் நிலைகளிலும், உளவியலிலும் பெரும் மாற்றங்களை உருவாக்க வல்லது. பதட்டநோயின் அறிகுறிகளென சொல்லப்பட்டிருப்பதை விட எண்ணிலடங்கா அவதாரங்களை எடுக்கக்கூடியது.

 

பதட்டநோயின் பரிணாமம்

வரக்கூடிய ஆபத்தை முன்னுணரும் மூளையின் எதிர்வினையே பதட்டநோய்வேராக இருந்திருக்க முடியும்.. பாலூட்டிகளின் மாறிக் கொண்டேயிருக்கும் மூளை வளர்ச்சியின் விளைவாகவும், அச்சுறுத்தல் அகற்றப்பட்ட பின்பும் ஞாபகச்சில்லுகளில் பதிந்து விட்ட அநுபவச்சிற்பங்களாகவும் பதட்டநோய் இருக்கிறது. பதட்டநோய் உயர்பாலூட்டி இனங்களில் பரிணாமவளர்ச்சி அடைவதற்கு முன்பே புதிய ( நியோ ) - பாலூட்டிகளின் மூளையிலே பதிந்திருக்கிறது. புதிய ( நியோ ) பாலூட்டிகளே பகுத்தறிவையும், முடிவெடுக்கும் குணாதிசயத்தையும் கொண்டிருந்தவை. அதனாலேயே மனிதமூளை தொழில்நுட்பம், சட்டதிட்டம், போன்ற நவீனப்பிரச்னைகளைத் தாங்குகிற சக்தியைப் பெற்றிருக்கின்றன. அதேவேளையில் ஊர்வனவும் தொல்பாலூட்டிகள் சந்தித்த பிரச்னைகளான ஆபத்தைத் தவிர்த்தல், போட்டி, இணைவிழைச்சு, போன்றவற்றை எதிர்கொள்ளும் சக்தியையும் பெற்றிருக்கின்றன. இந்த மூன்று மூளைகளின் பரிணாமவளர்ச்சியும் ஒருங்கிணைந்தும் சுதந்திரமாகவும் இன்றைய உயர்நிலை பாலூட்டிகளான மனிதனிடம் செயல்படுகின்றன.

 

எது பதட்டநோய்?

பதட்டநோயை வரையறுப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். ஒரு வகையில் சாதாரண தற்காலிக உணர்ச்சிநிலை தான் பதட்டநோயாக மாறுகிறது என்று சொல்லலாம். உணர்ச்சிகளின்அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள உயிரியக்கம் மேற்கொள்ளும் ஒரு தற்காப்பு நடவடிக்கையே பதட்டம் என்று சொல்லலாம். அது ஒவ்வாத உணர்ச்சிநிலையாக இருக்கலாம். மிகச்சிறந்த சாதனைகளைத் தருவதற்கான நேர்மறையான ஊக்கசக்தியாகவும் பதட்டநோய் இருக்கக்கூடும். எந்தக் கட்டத்தில் ஒரு உணர்ச்சி நேர்மறையான பதட்டநோயாகவும், எதிர்மறையான பதட்டநோயாகவும் மாறுகிறது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். வாழ்க்கை சூழ்நிலைக்கு அல்லது நெருக்கடிக்கு பொருத்தமற்ற எதிர்வினையை உயிரியக்கம் எடுப்பதே இத்தகைய பதட்டநோய்க்குக் காரணம். இளமைக்காலத்தில் மீண்டும் மீண்டும் ஏற்படும் வாழ்க்கை அழுத்தங்கள் பதட்டநோயைக் கட்டமைக்கின்றன.

 

பதட்டநோயின் வகைகள்

PicsArt_22-03-2014 09_06_07 PM

புறவயமாகவோ அகவயமாகவோ ஏற்படும் அழுத்தத்தினால் உணர்ச்சிநிலையில் உருவாகும் தற்காப்புநிலை உடல் செயல்பாடுகளிலும் மாற்றங்களை உண்டாக்கும். இது நீண்டநாள் நோயாகவும் மாறும். பதட்டநோயைப் பொறுத்தவரை பொதுவாக மூன்று விதமாக பிரிக்கலாம். பரம்பரையாக உயிரியல் ரீதியாக சுலபத்தில் இலக்காகும் தன்மை. வாழ்வில் ஏற்பட்ட அநுபங்களினால் உளவியல் ரீதியாக சுலபத்தில் இலக்காகும் தன்மை, சில குறிப்பிட்ட வாழ்வநுபவங்கள் அல்லது சம்பவங்களினால் ஏற்படும் குறிப்பிட்ட உளவியல் பாதிப்புக்கு இலக்காகும் தன்மை, இவற்றுள் கடைசியாக வகைப்படுத்தப்பட்ட பதட்டநோய் சமூகபயம், ஆட்கொள்ளப்படும் உளவெறி, குறிப்பிட்ட பயங்கள், பீதி, இவற்றின் காரணமாக உருவாகிறது.

மேலும் பல காரணங்களாக, சுயபாதுகாப்புக்கு ஆபத்து, மனசாட்சியின் நெருக்கடியின் விளைவாக தோன்றும் முரண்பாடு, கொள்கையில் தோல்வி, சுயமரியாதை இழப்பு, அன்றாடம் ஏற்படும் சிறிய அல்லது பெரிய அழுத்தங்கள், தவறான நம்பிக்கைகள், தவறான சிந்தனைகள், உடல் நோய்கள், சமூகமுரண்பாடுகள், பாலுறவு பிரச்னைகள், பேராசை, உளவியல் விபத்து, போன்றவையினால் பதட்டநோய் தோன்றும்.

 

பதட்டநோய் மருத்துவ வரலாறு

முதன்முதலாக வரலாற்றில் உளவியல்-உடற்கூறியல் நோய் மத்திய கால இஸ்லாமிய வரலாற்றில் பெர்சிய உளவியல் மருத்துவர்களான அகமது இபின் சாகுல் அல்-பல்கியும், காலி அப்பாஸும் இந்த நோயைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றனர். அவர்களே முதன்முதலாக ஒரு மனிதனது மனமும் உடலும் ஒன்றையொன்று பாதிக்கின்றது என்று கண்டுணர்ந்தார்கள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஃபிரான்ஸ் அலெக்சாண்டர் உடலுக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்தார். ஜார்ஜ் குரோட்டெக்குடன் ஏற்பட்ட தொடர்பினால் சிக்மண்ட் ஃபிராய்ட் உளவியல்-உடலியல் நோய்களைப் பற்றி ஆழ்ந்த ஈடுபாடு காட்டத்தொடங்கினார். அந்தக் காலத்தில் ஜார்ஜ் குரோட்டெக் உடல்நோய்களை உளவியல் சிகிச்சையின் மூலம் குணமாக்கும் சாத்தியங்களைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தார்.ஹோமியோபதியின் பிதாமகரான ஹானிமன் தன்னுடைய ஆர்கனான் நூலில் மனதுக்கும் உடலுக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி நோயில் காணப்படும் எல்லாக்குறிகளையும் ( symptoms ) அதாவது உடற்குறிகளுடன் முக்கியமான மனக்குறிகளையும் ஒரு மருத்துவர் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் அந்நோயை அழிக்கச் சரியான ஒத்த மருந்தை தேர்ந்தெடுக்க முடியும். அதாவது எந்த மருந்து இயற்கை நோய் தோற்றுவித்த உடற்குறிகளையும், மனக்குறிகளையும் நோயற்ற ஒருவரின் உடலில் தோற்றுவிக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும், என்று அழகாக விவரித்துள்ளார். ஆக மனம் உடலையும், உடல் மனதையும் பாதிக்கவே செய்கிறது. பதட்டநோய் மனதில் ஏற்படும் நெருக்கடியினால் மட்டுமல்ல, உடலில் ஏற்படும் மாறுபாடுகளினாலும் வரும்..

கற்காலத்துக்கு முன்பிருந்தே உயிர்பயத்தினால் ஏற்பட்ட பதட்டநோய் மனித நாகரிகம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய விசுவரூபம் எடுத்திருக்கிறது. நவீன சமூகத்தின் சிக்கல்கள், இன்னும் மனிதனை பதட்டமுள்ளவனாக்கியிருக்கிறது. வேற்றுமையின்மை, ஏற்றதாழ்வின்மை, சமத்துவம், நிச்சயத்தன்மை, பாதுகாப்புணர்வு, வாழ்வுக்கான உத்திரவாதம், எல்லோருக்கும் சமவாய்ப்பு, என்று மானுட சமூகம் முன்னேறிச் செல்லும் போது தான் பதட்டநோய் மனிதர்களிடமிருந்து முற்றிலும் ஒழிந்து போகும்.

Tuesday, 2 September 2014

ஆசைராஜாவின் ஆசை

உதயசங்கர்Photo-0115

 

ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தார். உலத்திலுள்ள அத்தனை பொருட்கள் மீதும் அவர் ஆசைப்பட்டார். அவர் ஆசைப்படாத பொருளே இல்லை என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் அவர் ஆசை மீதே ஆசை கொண்டவர். அதனால் மக்கள் அவரை ஆசைராஜா என்று அழைத்தனர். ஆசைராஜாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டாமா? உடனே அவருடைய மந்திரிபிரதானிகள் அவர் ஆசைப்பட்ட எல்லாத்தையும் அது உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் என்ன விலையாக இருந்தாலும் வரவழைத்து ராஜாவிடம் கொடுத்தனர். இப்படி ஆசைராஜா உலகத்திலுள்ள எல்லாவற்றையும் அநுபவித்து விட்டார். உடைகளா? உலகத்திலேயே மிகச்சிறந்த உடைகள் அவரிடம் ஏராளமாய் இருந்தன. அவற்றையெல்லாம் உடுத்தி உடுத்தி அவருக்குச் சலிப்பு வந்து விட்டது. அதேபோல உலகிலே மிகச்சிறந்த உணவுகளைச் சாப்பிட ஆசை கொண்டார். உடனே அவருடைய மந்திரிபிரதானிகள் உலகத்திலுள்ள அத்தனை சிறந்த உணவுப்பண்டங்களைச் சமைக்கும் சமையல்காரர்களை கூட்டிக் கொண்டுவந்து ஆசை ராஜாவுக்கு விதவிதமாய் சாப்பாடு செய்து கொடுத்தனர். சிறிது நாட்களிலே ஆசைராஜாவுக்கு அதிலும் சலிப்பு வந்து விட்டது.

உலகத்திலே மிக மென்மையான மெத்தை அவருக்குக் கசந்து விட்டது. மிகச்சிறந்த கலைப்பொருட்களும் அவருடைய ஆசைக்கு முன்னால் வெகுநாள் நிற்க முடியவில்லை. ஆசைராஜாவுக்கு எதுவும் ஆர்வமூட்டவில்லை. அவர் எப்போதும் எரிச்சலுடனும் கோபத்துடனும் இருந்தார். இதனால் மந்திரிப்பிரதானிகள் கவலை கொண்டனர். உடனே நாடெங்கும் முரசறைந்து ஆசை ராஜாவின் ஆசையை யார் தூண்டுகிறார்களோ அவர்களுக்கு ஆசைராஜாவின் அருமை மகளான இளவரசியைத் திருமணம் முடித்துக் கொடுத்து நாட்டில் பாதியும் தருவதாக அறிவிப்பு செய்தனர்.

இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்டு உலகத்தின் எல்லாமூலைகளிலிருந்தும் இளைஞர்கள் வந்தனர். ஒவ்வொருத்தரும் விதம் விதமாகப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், உணவுப்பொருட்கள், கலைப்பொருட்கள், கவிதைகள் என்று ஆசைராஜாவின் முன்னால் வந்து காண்பித்தனர். ஆசைராஜாவுக்கு எதுவும் ஆர்வத்தைத் தூண்டவில்லை. ஆசையை மூட்டவில்லை. வந்த எல்லோரும் ஏமாற்றத்தோடு திரும்பிப் போனார்கள். அப்போது அரண்மனைக்குத் துணி துவைக்கும் சலவைக்காரன் சலவைத்துணியைக் கொடுக்கப்போகும்போது இளவரசியைப் பார்த்து விடுகிறான். மணம் முடித்தால் இளவரசியைத்தான் மணம் முடிக்க வேண்டும் என்று மனதில் சபதம் எடுத்துக் கொண்டான்.

ஆசைராஜாவின் அறிவிப்பை அவனும் கேட்டான். அவனும் என்னவெல்லாமோ யோசித்துப்பார்த்தான். எதுவும் பிடிபடவில்லை. இளவர்சியைக் கலியாணம் முடிக்க முடியாமல் போய் விடுமே என்று கவலைப்பட்டான். கவலை அவனைப் பாடாய்படுத்தியது. அவன் மெலிந்து துரும்பாகி விட்டான். அதைப்பார்த்த அவனுடைய பாட்டி, “ ஏண்டா பேரப்புள்ள என்னடா கவலை.. எதாயிருந்தாலும் சொல்லு.. “ என்று கேட்டாள். கடைசியில் அவனும் பாட்டியிடம் அவன் கவலையைச் சொன்னான். அவனுடைய பாட்டியும், “ அடக் கோட்டிக்காரப்பயலே இதுக்குத்தானா இம்புட்டு கவலைப்பட்டே…” என்று சொல்லி அவனை அருகில் அழைத்து காதில் ரகசியம் சொன்னாள். அதைக்கேட்ட அவனும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தான்.

அன்று அரசவையில் வழக்கம்போல ஆசைராஜா எரிச்சலுடன் உட்கார்ந்திருந்தார். சற்றுமுன்னர் அவர் முன்னால் பல்லியையும் பாச்சாவையும் கொண்டு வந்த இரண்டு பேரை சிறையில் அடைக்கச் சொல்லி விட்டார். மூன்றாவதாக அரண்மனைச் சலவைக்காரன் போனான். அவன் கையில் எதுவும் கொண்டு போகவில்லை. மந்திரிப்பிரதானிகள் அவனிடம், “ ராஜாவுக்கு என்ன கொண்டு வந்தாய்? “ என்று கேட்டனர். அவன் அமைதியாக அரசவையில் உள்ளவர்களை ஒரு முறை நிதானமாகப் பார்த்தான். பின்னர் மடியிலிருந்து ஒரு புளியம்பழத்தை எடுத்து எல்லோருக்கும் காண்பித்து விட்டு வாயில் வைத்து ருசித்து சப்புக் கொட்டினான். அதைப் பார்த்த ஆசைராஜாவுக்கு வாயில் தானாக எச்சில் ஊறியது. அரசவையில் இருந்த மந்திரிப்பிரதானிகள் எல்லோருடைய வாயிலும் எச்சில் வழிந்தது. ஆசைராஜா சிம்மாசனத்திலிருந்து எழுந்து ஓடி வந்தார்.

“ என்னால ஆசைய அடக்க முடியல.. அடக்க முடியல..” என்று வாய்விட்டுச் சொல்லிக் கொண்டே சலவைக்காரனிடம் கையேந்தினார். அவனும் தயாராக வைத்திருந்த இன்னொரு புளியம்பழத்தை எடுத்து ஆசைராஜாவிடம் கொடுத்தான். ஆசைராஜா முகத்தைச் சுளித்து, பல் கூச சப்புக் கொட்டி புளியம்பழத்தை ருசித்தார். மந்திரிப்பிரதானிகளும் ருசித்தனர்.

ஆசைராஜா சொன்ன மாதிரி பாதி நாட்டையும் கொடுத்து இளவரசியையும் கலியாணம் முடித்துக் கொடுத்தார். அதன் பிறகு என்ன செய்தார் தெரியுமா? நாடெங்கும் புளியமரங்களை நட்டு வளர்த்தார். அதன்பிறகு அவருடைய ஆசைநோய் அடங்கி விட்டது.

கதை சொன்னவர் – டி.சந்திரலேகா/ மருதன்வாழ்வு

நன்றி- தமிழ் இந்து

Monday, 1 September 2014

இன்னும் ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு

உதயசங்கர்ki.ra

அன்று மழை பெய்து கொண்டிருந்தது

மாரிஸும் நானும்

இடைசெவல் பேருந்து நிறுத்தத்திலிருந்து

நடந்து வந்து கொண்டிருந்தோம்

உங்கள் வீட்டிற்கு நயினா..

கந்தகபூமியின்

கரிசல்காட்டு மக்களின்

மனசின் ஈரம் போல

வரவேற்றீர்கள் உங்கள் இசைக்குரலால்

ஓலைப்பாயில் மோளும்

ஓசையுடன் இலக்கிய சர்ச்சைகள்

ஆரவாரமான கூப்பாடுகள்

வசியம் செய்து

வசத்துக்கு கொண்டு வந்தீர்கள்

உங்கள் இனிய குரலால்

உங்களிடமிருந்து

புதிய தகவலோ வாழ்வநுபவமோ

முன்கூட்டியே

ஒரு மெலிதான செருமலை

அனுப்பி வைக்கும் எங்களுக்கு

இலக்கியத்தை மட்டுமில்லை

வாழ்க்கையையும் பார்ப்பது எப்படியென்று

வலிமையாகக் கற்றுக்கொடுத்தீர்கள்

உங்கள் மென்மையான குரலில்

2

இருளும் ஒளிரும்

விருவோடிய மண்ணை

வெறித்தபடி திரிந்தோம்

விரக்தியுடன் நாங்கள்

மெலிந்துயர்ந்த உருவத்தில்

அதிராத நடையில்

ராயங்கல ஸ்ரீ கிருஷ்ண ராஜநாராயணப்பெருமாள் ராமனுஜன்

என்று எல்லோருக்கும் அன்பான

எங்கள் நயினா நீங்கள் வந்தீர்கள்

கீற்றாய் சிந்திய புன்ன்கையுடன்

நீங்கள் கரிசல்க்காட்டை

உழுது வைக்கச் சொன்னீர்கள்

மழை வருமா என்றோம்

நீங்கள் எங்களிடம்

விதை விதைக்கச் சொன்னீர்கள்

முளைக்குமா என்றோம்

எங்களை வெள்ளாமைக்குத்

தயாராகச் சொன்னீர்கள்

வீடு வந்து சேருமா என்று சந்தேகப்பட்டோம்

தீர்க்கதரிசி நீங்கள்

மழை பொழிந்தது

விதை முளைத்தது

வெள்ளாமை வீடு சேர்ந்தது

வாய்மொழி இலக்கியமாம்

வட்டார இலக்கியமாம்

கரிசல் இலக்கியமாம்

என்று ஏகடியம் பேசிச் சிரித்தவர்கள்

இன்று தமிழுக்குப் பெருங்கொடையென்று

புல்லரித்து அலைகிறார்கள்

பிராமண வெள்ளாள மேலாண்மை

இலக்கியக் கரம்பைக்கட்டிகளை

உடைத்தது உங்கள் முன்னத்தி ஏர்

தமிழிலக்கியத்திற்கு

புதிய திசை காட்டினீர்கள்

தமிழையும் புதிதாக மாற்றினீர்கள்

புதிய காற்று வீசிக்கொண்டிருக்கிறது

இப்போது

3

மடிசஞ்சியான

மத்தியதர வர்க்க தமிழிலக்கியத்தில்

உழைக்கும் கிராமத்தான்களும்

உரிமை கோர வைத்தவர் நீங்கள்

விதவிதமான பசியை மட்டுமல்ல

கரிசல்க்காட்டு பண்டங்களின்

விதவிதமான ருசிகளையும்

சொன்னீர்கள்

கரிசல்ச்சீமையின்

புதிய எழுத்தாளர் படையை

அணி திரட்டியவர் நீங்கள்

கரிசல் இலக்கியத்தின்

மூலவர் நீங்கள்

உற்சவ மூர்த்தியும் நீங்களே

இப்போது வெக்கையும்

வியர்வையும் பொங்கும்

புதிய மனிதர்கள்

புதிய இலக்கியத்துக்குள்

நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்

4

தேசிய நெடுஞ்சாலையில்

கடக்கும்போதெல்லாம்

ஒரு குழந்தையின்

குதூகலம் பொங்கிவரும்

இடைசெவலைப் பார்க்கும்போது

எங்கள் ஞானத்தந்தை

சுற்றித் திரிந்த பூமியல்லவா

5

இன்னும்

ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு

இதோ இடைசெவல் பஸ் நிறுத்தம்

உங்கள் வீட்டிற்கு

நடந்து கொண்டிருக்கிறோம்

நானும் மாரீஸும்

ஒரு நூற்றாண்டாய் மழை

பெய்து கொண்டிருக்கிறது

கனிவான சிரிப்புடனும்

கருப்பட்டிக் காப்பியுடனும் நீங்கள்…

Sunday, 31 August 2014

சூரியனைச் சிறைப் பிடியுங்கள்

 

உதயசங்கர்

மண்டியா தேசத்தில் மண்டு ராஜா மண்டு ராஜா என்று ஒரு ராஜா ஆண்டு வந்தார். அவரிடம் அடிமண்டு அடிமண்டு என்று ஒரு மந்திரி வேலை பார்த்தார். ராஜா என்றால் சும்மாவா? ரத கஜ துரபதிகளுடன் எல்லா ராஜாக்களையும் போல அரண்மனை அரசசபையிலிருந்து கொண்டே,

” அடிமண்டு மந்திரி நாட்டில் மாதம் மும்மாரி பெய்கிறதா ? “

என்று கேட்பார். உடனே அடிமண்டு மந்திரியும்

“ அப்படியே மன்னா..”

என்று கூவுவார்.

ஆனால் இருவருமே அரண்மனையை விட்டு வெளியே போனதில்லை. வெளியே வெயிலடிக்கிறதா மழை பெய்கிறதா என்று கூடத் தெரியாது. ஏனெனில் மண்டு ராஜா ஏற்கனவே ஒரு உத்தரவு போட்டிருந்தார். அடிமண்டு மந்திரி எப்போதும் அவரைத் தனியே விட்டுவிட்டு போகக் கூடாது. மண்டு ராஜா தூங்கப் போகும்போது மட்டும் தான் அவர் போகலாம். மறுநாள் காலையில் மண்டு ராஜா எழுந்திரிக்கும் போதே அவர் கண்முன்னால் அடிமண்டு மந்திரி இருக்க வேண்டும். அதனால் அவர்கள் இருவருக்குமே அரண்மனைக்கு வெளியே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியாது. சூரியன், சந்திரன், தெரியாது. நட்சத்திரங்கள் தெரியாது. புல்,பூண்டு, தெரியாது. செடி, கொடி, தெரியாது பறவைகள், விலங்குகள் தெரியாது. அரண்மனையில் எழுந்து குளித்து, உடை உடுத்தி சாப்பிட்டு , பின்னர் குளித்து, உடை உடுத்தி, சாப்பிட்டு, பின்னரும் குளித்து, உடை உடுத்தி சாப்பிட்டு, இப்படியே இரவு வரை பொழுது போகும். இதில் சலிப்பு ஏற்படும்போது ஆட்டம் பாட்டம் பார்ப்பார்கள். சிலசமயம் பல்லாங்குழி, தாயம், விளையாடுவார்கள்.

திடீரென்று ஒரு நாள் மண்டு ராஜாவின் தோலின் நிறம் பாலைப் போல வெளுத்துப் போயிருந்தது. கண்ணாடியில் அவரைப் பார்த்து அவரே பயந்து போனார். உடனே அரண்மனை வைத்தியர்களும் ஜோசியர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்குப் பார்த்த உடனேயே தெரிந்து விட்டது. வைட்டமின் டி சத்துக் குறைபாட்டினால் வந்துள்ள தோல் நோய். அதற்கு ஒரே ஒரு மருந்து தான் இருக்கிறது. சூரிய ஒளியில் குளித்தால் எல்லாம் சரியாகி விடும். ஆனால் இதை மண்டு ராஜாவிடம் சொன்னால் தலை போய்விடும். எனவே எல்லோரும் சேர்ந்து ஒரே குரலில்,

” மன்னா.. இந்த நோய் கோடியில் ஒருவருக்கு வரக்கூடிய நோய்.. எங்களுக்கு ஒரு வாரகாலம் அவகாசம் கொடுங்கள்..”

என்று கூவினர். அதைக்கேட்ட உடனே ராஜாவுக்குப் பெருமை தாங்க முடியவில்லை. கோடியில் ஒருவரல்லவா அவர்.

“ம்ம்சரி..”

என்று உறுமினார்.

ஒருவாரம் கழித்து வந்த வைத்தியர்கள் தேங்காய் எண்ணெய்க்கு நிறமேற்றி கொண்டு வந்து ராஜா முன்னால் வைத்தனர்.

“ மண்டு ராஜா மண்டு ராஜா தினமும் காலையிலும் மாலையிலும் இந்த எண்ணெயை உடலில் தேய்த்துக் கொண்டு மூன்று சுற்றுகள் அரண்மனையைச் சுற்றி வர வேண்டும். இது அரண்மனை தோஷம் எனவே அரண்மனையைச் சுற்றினால் தான் மருந்து வேலை செய்யும் “

என்று கூவினர். “ சரி அப்படியே ஆகட்டும்..” என்று ராஜா உறுமினார். மறுநாள் காலையில் மண்டுராஜாவும் அடிமண்டு மந்திரியும் எழுந்து உடல் முழுவதும் எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். அப்போது தான் சூரியனும் அடிவானிலிருந்து வெளியே வந்தான். சூரியஒளி அன்றைக்குத் தான் மண்டுராஜாவின் உடலிலும் அடிமண்டு மந்திரியின் உடலிலும் பட்டது. சூரியனின் வெளிச்சத்தையும் அதன் சூட்டையும் மண்டுராஜாவால் பொறுக்க முடியவில்லை. உடனே அவர்,

“ அடிமண்டு மந்திரி.. அடிமண்டு மந்திரி.. யார் இந்த விளக்கை அங்கே மாட்டியது.. உடனே அதை அணைக்கச் சொல்லும்..”

என்று உறுமினார். அடிமண்டு மந்திரியும் காவலாட்களை அழைத்து,

“ யாரங்கே.. உடனே அந்த விளக்கை அணையுங்கள்.. ராஜாவுக்கு சூடு தாங்க முடியவில்லை….”

என்று கத்தினார். உடனே காவலாட்கள் சூரியனை அணைத்துவிடுவதற்காக துணி, போர்வை, பஞ்சு, தண்ணீர் என்று சகல பொருட்களுடன் போனார்கள். பகல் முழுவதும் நடந்தனர். சூரியனும் தூரமாய் போய்க் கொண்டிருந்தான். மாலையானதும் மறையத் தொடங்கினான். தங்களைப்பார்த்து பயந்துதான் சூரிய விளக்கை அணைத்து விட்டார்கள் என்று மகிழ்ச்சியுடன் கத்திக் கொண்டு வந்து மண்டுராஜாவிடம் சொன்னார்கள். மண்டு ராஜாவுக்கும் மகிழ்ச்சி. எல்லோருக்கும் பரிசு கொடுக்கச்சொன்னார். ஆனால் மறுநாள் காலையில் மறுபடியும் சூரியன் வந்து விட்டான். மண்டுராஜா, அடிமண்டு மந்திரி தலைமையில் மறுபடியும் விளக்கை அணைக்க எல்லோரும் ஓடினர். மறுபடியும் மாலையானதும் சூரியன் மறைந்து விட வெறுங்கையுடன் திரும்பி வந்தனர்.

மண்டு ராஜாவும் அடிமண்டு மந்திரியும் நாடெங்கும் முரசு முழங்கி செய்தி சொல்லச் சொன்னார்கள்.

“ இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் காலையில் தோன்றி மாலையில் தலைமறைவாகி விடும் சூரியனைத் தேடப்படும் குற்றவாளியாக மண்டியா தேசம் அறிவிக்கிறது. சூரியனைப் பிடித்துக் கொண்டு வருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்….”

நாடே எல்லாவேலைகளையும் விட்டு விட்டு சூரியனைப் பிடிக்க காலையில் புறப்பட்டுப் போவதும் மாலையில் திரும்புவதுமாக இருந்தார்கள். இப்போது மண்டுராஜாவுக்கோ, அடிமண்டு மந்திரிக்கோ மண்டியா தேச மக்களுக்கோ எந்தத் தோல் நோயும் இல்லை. எல்லாம் குணமாகிவிட்டது. ஆனால் மண்டு ராஜாவும், அடிமண்டு மந்திரியும் சர்வதேச நாடுகளுக்கும் சூரியனைப் பிடித்துத் தரசொல்லி ஓலை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் நாட்டுக்கும் ஓலை வந்திருக்கிறதா கேட்டுப்பாருங்கள்.!

நன்றி – தமிழ் இந்துfat-king-cartoon-fantasy-character-illustration-funny-fairytale-36067727

Saturday, 30 August 2014

குழந்தைகளின் அற்புத உலகில்

kuzhanthaikalin arputha ulagil உதயசங்கர்

நம் நாட்டில் பூமியெங்கும் கதைகள் இடைவெளியின்றி முளைத்துக் கிடக்கின்றன.

குழந்தைகள் பிறந்து பாடுகின்ற தாலாட்டில் உறவு முறைகளை குழந்தைக்கு அறிமுகப்படுத்துவதும்,( மாமா அடிச்சாரோ மல்லிகைப்பூ செண்டாலே, அத்தை அடிச்சாரோ அல்லிப்பூ செண்டாலே, ) குழந்தைகள் விளையாடும் போது வரலாற்று நிகழ்வுகளைக் கதைப் பாடலாகப் பாடுவதும் ( ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்தது… இம்புட்டு பணம் தாரேன் விடுடா துலுக்கா.. விடமாட்டேன் மலுக்கா..) இப்படி கதைகளோடு பிறந்து கதைகளோடு வளர்ந்து வருகிறோம். ஆனால் இன்று குழந்தைகள் எப்படியிருக்கிறார்கள்? ஏன் கதைகள் குழந்தைகள் உளவியலில் ஒரு தீர்மானகரமான முக்கிய பாத்திரம் வகிக்கிறது என்று நாம் நினைக்கிறோம். நம்முடைய குழந்தைகளிடம் நாம் கதைகளைச் சொல்லியிருக்கிறோமா? நம் பள்ளிக்கூடங்களில் கதைகளைச் சொல்வதற்கான ஏதாவது ஏற்பாடு இருக்கிறதா?

வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி வந்ததிலிருந்து குடும்ப உறுப்பினர்களே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை என்றான பிறகு குழந்தைகளிடம் மட்டும் பேசுவதற்கு நேரம் கிடைத்து விடவா போகிறது? அப்படியே பேசினாலும் பாடம், பரீட்சை, மதிப்பெண், ரேங்க், இவைகளைத் தவிர வேறு விசயங்கள் பேச முடிகிறதா? நிதானமாக பொறுமையாக, குழந்தைகளிடம் அவர்கள் பார்க்கிற இந்த உலகத்தைப் பற்றி, பள்ளிக்கூடத்தைப் பற்றி, அவன்/ அவளுடைய நண்பர்கள் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டறிந்திருக்கிறோமா? குழந்தைகளின் மன அழுத்தம் பற்றி நாம் என்றாவது கவலைப்பட்டிருக்கிறோமா? நம்முடைய குழந்தைகளை தொலைக்காட்சிப்பெட்டி, சினிமா, ரஜினி, விஜய், அஜித், என்று யார் யாரோ வளர்க்க அநுமதிக்கிறோமே, நாம் என்றாவது நம்முடைய குழந்தையை நாம் தான் வளர்க்கவேண்டும் என்று நினைத்திருக்கிறோமா? அப்படி நினைத்திருந்தால் நாம் நம்முடைய குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லியிருக்கவேண்டும். சொல்லியிருக்கிறோமா?

வெளியீடு- என்.சி.பி.ஹெச்.

விலை.ரூ.90

Saturday, 17 May 2014

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்- புத்தகமதிப்புரை

 

கமலாலயன்

1497597_437038946422644_650455706_n

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் விளைவுகள், மனிதகுலம் தன் வரலாறு நெடுக கடந்து வந்திருக்கிற இருண்ட நரகத்தின் கூறுகள், எத்தனையோ லட்சக்கணக்கான, இந்துக்கள்- முஸ்லீம்களான சாதாரண மனிதர்கள் தாம் அந்த நரக வாதையை அநுபவித்தவர்கள். மதவெறியர்கள் மூட்டிய தீ நாக்குகளுக்கு இரையாகி மடிந்த லட்சோப லட்சம் மக்களின் சாம்பற்குவியல்கள் இரு நாடுகளிலும் இன்னமும் நிறைந்து தான் கிடக்கின்றன. பீனிக்ஸ் பறவைகளைப் போல மகத்தான கலைப்படைப்பாளிகள் இத்தகைய துயரங்களின் போதுதான் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். தங்களின் உயிரை விலையாகக் கொடுத்தேனும் அத்துயரங்களுக்குக் கலை வடிவம் தந்து விடுகிறார்கள். என்றோ, எங்கேயோ நடந்து முடிந்து போன நிகழ்வுகளே ஆயினும் அத்துயரப்பதிவுகள் காலத்தை வென்று உயிர் வாழ்கின்றன. மனச்சாட்சி உள்ள எந்த ஒரு மனிதனையும் இவை உலுக்கி விடுகின்றன. எதிர்காலச் சந்ததியினருக்கு இவை எச்சரிக்கை விளக்குகளாகி நிலை பேறடைகின்றன.

இந்தியத்துணைக்கண்டம் சந்தித்துக் கடந்து விட்ட ஆனால் சமீப காலங்களில் மீளவும் உயிர் பெற்று எழுந்து கோர நடனமாடுகிற அந்தத் துயரமும், குரூரமும் மிக்க காலத்தில் சோகந்தோய்ந்த குரல்கள் சாதத் ஹசன் மண்ட்டோவினுடையது. உருது மொழியிலக்கியத்தின் உன்னதமான படைப்பாளியான இவர் 1912, மே 11 ஆம் தேதி பிறந்தவர். அவரது நூறாவது பிறந்த ஆண்டான 2012- இல் தமிழில் அவருடைய படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பெற்று வந்தன. நண்பர் ராமாநுஜம் மண்ட்டோவின் மிகச்சிறந்த கதைகள் சொல்லோவியங்கள் நனவோடைப் படைப்புகளைத் தமிழாக்கி வழங்கியதன் மூலம் ஒரு மாபெரும் படைப்பாளியின் மறுவாசிப்பை நமக்குச் சாத்தியமாக்கியவர். அவரைத்தொடர்ந்து இப்போது கரிசல் காட்டின் கதை சொல்லியான உதயசங்கர், மண்ட்டோவின் 13 சிறந்த சிறுகதைகளை மொழியாக்கம் செய்து நமக்குத் தந்திருக்கிறார்.

உதயசங்கர், 1980-களிலிருந்து இன்று வரை உயித்துடிப்புடன் இயங்கி வரும் படைப்பாளி. ஏழு சிறுகதைத் தொகுதிகள், ஒரு குறுநாவல் தொகுதி, இந்து கவிதைத் தொகுதிகள், மலையாளத்திலிருந்து தமிழுக்கு ஒன்பது மொழியாக்க நூல்கள்,இரண்டு கட்டுரை நூல்கள், ஒரு குழந்தைப் பாடல் நூல்-ஆக 25 நூல்களின் ஆசிரியர். மானுட நதியின் கட்டற்ற பிரவாகத்தினூடே பயணித்தவாறே அதன் போக்கை முற்போக்கான திசை வழியில் கொண்டு செல்லுவதற்குத் தன்னாலியன்ற பங்களிப்பை செய்து வருபவர். மண்ட்டோவைப் பற்றி உதயசங்கர் எழுதிய உணர்ச்சிமயமான கட்டுரை ஒன்றை, இச்சிறுகதை மொழிபெயர்ப்பு நூலின் அறிமுகக் கட்டுரையாக இணைந்திருப்பது மிகமிகப் பொருத்தமான அமைவு.

நுட்பமான படைப்பு மனநிலையும், சக மனிதர்களின் மீது எல்லையற்ற நேசமும் கொண்ட எந்த ஒரு கலைஞனும் மண்ட்டோவைத் தனது நெருங்கிய உறவாக உணர்ந்து சொந்தம் கொண்டாடாமல் இருக்கவே முடியாது. உதயசங்கரும் ‘மண்ட்டோ மாமா’ வை உரிமையுடன் சொந்தம் கொண்டாடியிருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை.

பிரிவினையின், மதவெறியின் கொடூரங்கள் ஒருவர் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், மண்ட்டோவின் இந்தக் கதைகளை அவர் அவசியம் படித்தே ஆகவேண்டும். முதல் கதையான ‘டிட்வாலின் நாய்’ ஒரு நையாண்டியான தொனியில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்புறத்து இராணுவ நிலைகளில், அவரவர் முகாம்களில் இருந்தவாறே ‘எதிரி’ நாட்டின் மீது ‘சும்மா’ சுட்டுக் கொண்டிருக்கிறார்கள் இருநாட்டு வீரர்களும். யார் வெற்றி பெறுவார்கள் எனத் தெரியாத ஒரு பைத்தியக்காரத்தனமான போர் அது. இரு படைநிலைகளுக்கும் நடுவே, தற்செயலாகத் தெரியாத்தனமாக வந்து மாட்டிக் கொள்கிறது ஒரு நாய். இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் மாறிமாறி இந்த விரட்டியடித்து நடத்தும் ‘துப்பாக்கிச் சூடு’ விளையாட்டில் ‘தியாகியைப் போல் செத்துப் போகிறது அது.

நாய்தான் என்றில்லை; இருஎஆட்டு இராணுவங்களின் தாக்குதல்களுக்கு நடுவே மனிதர்களும் ‘நாய்களைப்’ போல் செத்துப் போகிறார்கள். என்பதையே இக்கதை குறியீட்டுத் தனமையில் வெளிப்படுத்துவதாகவும் வாசிக்கவும். இதன் இன்னொரு பரிமாணம் யுத்தகளப் பயங்கரங்கட்கு நடுவிலும் என்றும் போல் உயிர்ப்புடன் திகழும் இயற்கையின் தரிசனப்பதிவுகள்; “ சீதோஷ்ணநிலையில் ரம்மியமும் காட்டு மலர்களின் வாசனையும் நிரம்பிய இயற்கை தன் வழியே போய்க்கொண்டிருக்கிற போது திடீரென்று வெடிக்கிற குண்டுகள் எல்லாவற்றையும் சீர்குலைத்துச் சிதறடித்து விடுகின்றன. பஞ்சாபி கிராமியப் பாடலைப் பாடுகிற இராணுவ வீரனின் துயரக்குரல் ஒரு புறம். அப்பாடலில் ஓர் ஏழைக்காதலி தனது காதலனிடம் எருமையை விற்று விட்டாவது நடசத்திரங்கள் பதித்த ஒரு ஜோடி செருப்பை வாங்கி வர வேண்டுமென்று மன்றாடுகிறாள். இவ்வாறான அத்தனை உயிர்க்குரல்களையும், துப்பாக்கிக்குண்டுகளின் முழக்கம் ஈவிரக்கமின்றிச் சாகடித்து விடுகிறது.

சாலையோரமாக.. புதிதாய்ப் பிறந்த ஒரு குழந்தை நனைந்த லினன் துணியால் சுற்றப்பட்டுக் கிடப்பதை போலீசார் லாகூரில் கண்டெடுக்கிறார்கள். குளிரில் அது விறைத்தே செத்திருக்க வேண்டும். ஆனால் அது உயிருடன் இருந்தது; மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. அந்தக்குழந்தை யார்? பரஸ்பரம் தமது நிறைவின்மையை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு முழுமையடைந்து ஏதோ காரணத்தினால் பிரிந்து போன இரு ஆத்மாக்களின் விளைபொருளா அது?

‘ நான் ஓர் ஆண்; இன்று நீ என் வாழ்வில் முழுமையைக் கொண்டு வந்தாய். நாளை வேறொரு பெண். இன்று நீ நிரப்பிய வெறுமை மறுபடியும் தோன்றும். அப்போது அங்கே அதை நிரப்ப மற்றவர்கள் இருப்பார்கள்..” இப்படியான குரூரமான வார்த்தைகள் உயிருடன் கல்லால் அடிப்பதைப் போல அந்தப் பேதைப் பெண்ணைத் தாக்குகின்றன. அவள் மன்றாடுகிறாள்: “ இப்படியான குரூரமான வார்த்தைகள் உயிருடன் கல்லால் அடிப்பதைப் போல அந்தப் பேதைப் பெண்ணைத் தாக்குகின்றன. அவள் மன்றாடுகிறாள்: “ நடந்தது ஒரு விபத்து. ஆனால் அவன் அதிலிருந்து முழுதாக எந்தச் சேதாரமுமில்லாமல் எழுந்து நடந்து போய்விட்டான். ஆனால் என் காதில் ஒரு குரல் கிசுகிசுக்கிறது. ஒரு கண்ணீர்த்துளி என்னுடைய சிப்பிக்குள் நழுவி விழுந்து ஒரு முத்தை உருவாக்கியது. நான் காத்துக் கொண்டிருக்கும் ஒரு மடி. என்னுடைய கைகள் அதை ஏந்திக் கொள்வதற்காக நீள்கின்றன. இல்லை.. அதை என்னிடமிருந்து பறிக்காதீர்கள். என்னிடம் இருந்து அதை எடுத்துச் செல்லாதீர்கள்..” இப்படியெல்லாம் கடவுளின் பெயரால் அவள் எவ்வளவோ கெஞ்சி, அரற்றிய போதிலும், அவளிடமிருந்து பறிக்கப்பட்டு விட்ட உன்னதமான கனிதான் அந்தக் குழந்தையா?

தினசரி செய்தித்தாள்களில் நாம் படித்து விட்டு கொஞ்ச நேரத்தில் மறந்து போகும், சாலையோரக்குப்பைத் தொட்டிகளில் கிடக்கும் குழந்தைகளுள் ஒன்றாகக்கூட இது இருக்கலாம். மண்ட்டோவின் கலைத்தூரிகை இந்த அவலத்தை எத்தனை உயிர்ப்புடன் சொல்லோவியமாய் தீட்டியிருக்கிறது என்பதை இக்கதையைப் படித்தால் மட்டுமே உணரமுடியும்.

மதவெறியின் போதையில் நிலை மறந்துபோன மனிதர்கள், தமது எதிரி மதத்தைச் சேர்ந்த குடும்பத்தினரைக் கொன்று குவிக்கிறார்கள். பெண்களைச் சீரழிக்கிறார்கள். அந்த வகையில் ஐஷர்சிங்கின் கும்பலில் மாட்டிக் கொண்ட ஒரு நிராதரவான குடும்பத்தினர் ஏழுபேரில் ஆறு பேரை அவனுடைய கிர்பான் கத்தி கொன்று விடுகிறது. ஏழாவது நபர் ஓர் அழகான இளம்பெண். அவளை ஐஷர்சிங் கொல்லவில்லை. அவளைத் தூக்கிக் கொண்டு நகருக்கு வெளியே ஓடுகிற ஐஷர்சிங் அவளிடம் தனது துருப்புச்சீட்டை இறக்க முற்படுகிறான். அப்போதுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மை அவனுக்குத் தெரிய வருகிறது. பனிக்கட்டியை விட குளிர்ந்து போய்.. என்ற இக்கதையின் இரண்டே கதாபாத்திரங்களும் ஒரு பிணமும் நமது இரத்தத்தை உறைய வைத்து விடுகிற மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒரு கட்டுரையின் தலைப்பைப் போலமைந்த இக்கதை விடுதலைக்கு முன்பு-பின்பு என இரு சமயங்களிலும் மக்களின் எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக முன் வைக்கிறது: “ என்ன முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறாய்? என்ன புதிய அரசியலமைப்புச் சட்டம்? எல்லாம் அதே பழைய அரசியலமைப்புச் சட்டம் தான் முட்டாளே!..” என்று குதிரை வண்டிக்காரன் மங்குவைப் பார்த்துச் சொல்லப்படுகிற இந்த வார்த்தைகள், விடுதலையடைந்த இந்தியாவின் சாதாரண குடிமக்கள் எல்லோருக்குமே ஏதேனும் ஒரு வகையில் பொருந்துபவையாகத் தான் இருக்கின்றன.

காட்டுக்கள்ளி கதையில் வருகிற சர்தார், நவாப், ஹைபத்கான், மூவரும் ஒரு முக்கோணத்தின் மூன்று முனைகள். ஹைபத்கானின் காதல், நவாப் என்கிற விலைமகளின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கிறது. ஆனால் ஹைபத்கானின் மனைவியான சகீனா என்ற பெண்ணின் வருகை, நவாப் வாழ்வின் இறுதி அத்தியாயத்தை மிகக் குரூரமான எழுத்துகளில் எழுதி முடித்தே விடுகிறது. உன்மத்தம் நிறைந்த காதலின் மறுபக்கம், உயிரையும் பறிக்கிற வெறுப்பாகவும் வினைபுரிவதை காட்டுக்கள்ளி சொல்லுகிறது. சர்தார், நவாப், போன்ற காட்டுக்கள்ளிகளைப் பாதுகாப்பதற்கு யாரிருக்கிறார்கள் இங்கே? மனப்பரப்பெங்கும் துயரத்தை நிரப்பி விடுகிற கதை இது.

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண் கதை கிழக்கு-மேற்கு பஞ்சாப் பகுதிகளில் இந்து-முஸ்லீம் கலவரங்களின் போது, கலவரக்காரர்களிடமிருந்து தப்புவதற்காக காரில் விரைவாக வந்து விபத்திற்குள்ளாகும் பிரபல பெண் ஓவியர் மிஸ்.எம்-மின் கதை. கலைக்கல்லூரி ஒன்றின் முதல்வரான அந்த முதிய வயதுப் பெண் ஆண்களை வெறுத்து வந்தவர். ஆனால் மழை பெய்து கொண்டிருந்த அந்த இரவில் கார் விபத்திலிருந்து தன்னை மீட்டுக் கொண்டு வந்த கதைசொல்லியின் வீட்டு வரவேற்பறையில் தான் முதன்முதலாகத் தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்து, அன்று புதிதாய்ப் பிறக்கிறாள். ஆனால் இருளில் முகம் தெரியாதபோது மோகம் பொங்க அவளை இறுக்கி அணைக்க முயலுகிற கதைசொல்லி திரு.எஸ்- நீ விருப்பப்பட்டா போகலாம் என்று சற்றுமுன் தான் தன்னைப் பெண்ணாக உணர்ந்த மிஸ்.எம்மைப் போகச் சொல்லுகிறான். அந்த மழையிரவில் ஏதோ சொல்ல முயன்று முடியாமல் மௌனமாக வெளியே போய்விடுகிற அவள் அன்றிரவே ஒரு கார் விபத்தில் இறந்து போய்விட்டதாக திரு.எஸ்ஸிடம் அவனுடைய நண்பன் சொல்லுகிறான். நாம் அறிந்தோ அறியாமலோ அன்றாடம் கொன்று குவிக்கிற பல மனிதர்களுள் ஒருத்தியைப் பற்றிய கதை இது. பல சமயங்களில் கொல்லப்படுவது வெறும் உடல்கள் மட்டுமேயல்ல என்ற உண்மை நெஞ்சில் அறைகிறது நம்மை.

கடவுளின் மனிதன் கதையின் ஜீனாவையும் அவருடைய அம்மா பதானையும் எப்படி மறக்க முடியும்? கடவுளின் பெயரால் கடவுளின் பிரதிநிதிகள் என்று தம்மை முன் நிறுத்திக் கொண்டு ஏமாற்றித் திரிகிற கயவர்களின் பிரதிநிதியாக மௌல்விசாகிப் வருகிறான். ஜீனா, பதான், இரண்டு பேரையும் வஞ்சித்து அநுபவிப்பதற்கு அந்தப் போலி மௌல்வியின் தாடி, மீசை, அலங்கார ஆன்மீகச் சொல்லாடல்கள் இவற்றை விடவும் அவனுக்கு முதன்மையாக உதவுவது பதானின் கணவனும் ஜீனாவின் தந்தையுமான சௌத்ரி மௌஜீவின் மதநம்பிக்கையும் இறையச்சமும் தான் என்பது நம் முகத்திலறைகிறது.

கடவுளின் பணியைச் செய்து கொண்டு கதையில் வருகிற பனியா வகுப்பு வியாபாரி, நமது சமகாலத்து லாபவேட்டைக் கொள்ளைக்காரர்களின் வகை மாதிரியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். விண்ணை முட்டுகிற வசிப்பிடக்கட்டடங்களின் அடித்தளத்திற்குள் அனுதினமும் புதையுண்டு போய்க் கொண்டிருக்கும் மனிதர்களின் அவலக்குரல்களை, நேரடியாக அல்லாமல் அந்த வியாபாரிகள் உணர்ச்சி ஏதுமற்ற வறட்டு விவரிப்பின் மூலமே நையாண்டி செய்து பதிவு செய்திருக்கிறார் மண்ட்டோ.

சிராஜ் ஒரு புதிரான பாலியல் தொழிலாளி. பத்து ஆண்டுகட்கு முன் லாகூரின் ஓட்டல் ஒன்றில் தன்னை ஏமாற்றிவிட்டு ஓடிப்போன அதே ஆளைக் கண்டுபிடித்து அதே ஒட்டல் அறையில் தன் பழைய கணக்கைத் தீர்த்து விடுகிறாள். எல்லோருக்கும் விடுதலை கதையில் பாணரான கபீர் விடுதலையடைந்த பூமியில் தான் சந்திக்கிற வெவ்வேறு மனிதக்குழுக்களிடமிருந்து எழுப்புகிற பல கேள்விகளாலும் பதில்களாலும் தனது எதிர்வினைகளாலும் நெய்யப்பட்ட ஒரு அற்புத மாலையைக் கதையாகத் தொடுத்திருக்கிறார் மண்ட்டோ. துக்கத்தின் அடையாளமாகக் கருப்புப் பட்டைகளை அணிந்திருக்கிற மனிதர்களிடமும் கபீர் ஓர் அர்த்தமுள்ள கேள்வியை எழுப்புகிறார். அவர்கள் கபீரை, ‘ நீ ஒரு கம்யூனிஸ்ட். ஐந்தாம்படை பத்திரிகையாளர் ‘ என்று பலவாறாக ஏசுகிறார்கள். அன்று முதல் முறையாக கபீர் சிரிக்கிறார். ஆனால் நண்பர்களே நான் கருப்போ, சிவப்போ, பச்சையோ, எந்தப் பட்டையும் அணியவில்லை..என்ற கபீரின் வாக்குமூலத்தை ஒரு வகையில் மண்ட்டோவினுடையதாகவும் வாசிக்க முடியும்.

இத்தொகுப்பின் எல்லாக்கதைகளிலும் நாம் சந்திக்கிற மனிதர்கள், நல்லவர்களா? கெட்டவர்களா? மென்மையும் அன்பும் கொண்டவர்களா? குரூரமும் வெறுப்புமே நிறைந்தவர்களா? உண்மையில் மனிதர்கள் இருவகையையும் சேர்ந்தவர்களுமாகத்தான் இருக்கிறார்கள். அப்படித்தான் அவர்கள் இருந்திருக்க முடியும். மண்ட்டோ யார் பக்கம்? இறுதியாகப்பார்த்தால் அவர் எளிய நிராதரவான மனிதர்களின் ஆன்மாக்களின் பாதுகாவலராக இருப்பதை நாம் உணர முடியும்.

சாதாரண அடித்தட்டு மக்கள் விளிம்பு நிலையினர், பாலியல் தொழிலாளிகள் போன்ற சாமானியர்களின் வாழ்க்கை அவலங்களை வாசக மனங்கள் அதிரும்வகையில் சொன்னவர் மண்ட்டோ. அனைத்து அதிகாரநிறுவனங்கட்கும், மேலாதிக்கக்கருத்துகளுக்கும் எதிரான போர்க்குரல் மண்ட்டோவினுடையது. ஆபாசமான கதைகளை எழுதியவர் என்று பலமுறை நீதிமன்றங்களால் அலைக்கழிக்கப்பட்ட, குற்றம் சுமத்தப்பட்ட எழுத்தாளர் அவர்.

மண்ட்டோவின் காலம் இந்திய வரலாற்றில் கொந்தளிப்பு நிறைந்த சமன் குலைந்த பிரிவினையின் வெறி மிகுந்த காலம். இயல்பாகவே தன் மனசாட்சியின் குரலைப்பின்பற்றி படைப்பு நேர்மை மிக்க கதைகளை எழுதியவர் மண்ட்டோ. உதயசங்கரின் கலையுள்ளம் மண்ட்டோவின் மனவுலகை முழுமையாகவும் ஆழமாகவும் உள்வாங்கி இக்கதைகளின் மொழியாக்கத்தில் முனைப்புடன் இயங்கியிருப்பதின் வெளிப்படை இந்தத் தொகுப்பு.

” சாதத் ஹசன் என்ற மனிதனை அவனுடைய சிந்தனைகளை செயல்களை அவனுடைய குடும்பத்தார், நண்பர்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை. அவனை ஒரு பைத்தியக்காரனாகவே நினைத்தார்கள். ஆனால் மண்ட்டோ என்ற படைப்பாளியை தன் ஊனை உருக்கி உயிரைச்செலுத்தி அவன் படைத்த மகத்தான படைப்புகளை உலகம் இன்னமும் கொண்டாடுகிறது.” என்கிறார் உதயசங்கர். ஆம் உண்மை தான். முன்பு ராமாநுஜமும் இப்போது உதயசங்கரும் மொழிபெயர்த்துத் தந்திருக்கும் படைப்புகளின் வழியாக நாம் மண்ட்டோ என்ற மகத்தான படைப்பாளியின் மன உலகிற்குள் பிரவேசித்து உலாவி வருவதற்கு முடிந்திருக்கிறது.

“ நாமே அறியாத நம் மனதின் அத்த்னை மூலை முடுக்குகளிலும் பயணித்து அங்கே கொட்டிக் கிடக்கும் சாக்கடையையும், சகதியையும் அள்ளியெடுத்து வெளியே எறிந்து சுத்தப்படுத்துகிறான் கலைஞன். அங்கே கலையின் பொன்னொளியால் அன்பெனும் சுடரை ஏற்றுகிறான்…” என்று பொருத்தமான, தேர்ந்த சொற்களால் உதயசங்கர் மண்ட்டோவிற்குப் புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

இத்தொகுப்புக் கதைகளில் ஒரு எழுத்தைக்கூட மனம் நெகிழாமல் பதறாமல் ஆத்திரப்படாமல், வெறுக்காமல், நேசிக்காமல், சாதாரணமாக உங்களால் கடந்து போய் விட முடியாது. அந்த அளவிற்கு உயிர்ச்சத்து நிரம்பிய வலிமைமிக்க வாழ்க்கையின் உக்கிரங்களாகிய எரிமலை வெடித்துச் சிதறிப் பிரவாகமெடுத்ததைப் போன்ற கதைகள் இவை!

நன்றி- உங்கள் நூலகம் மார்ச் 2014

Thursday, 15 May 2014

கொசுமாமாவும் கொசுமாமியும் பாயாசம் செய்ஞ்ச கதை

உதயசங்கர்

mosquito

ஒரு ஊரில் கொசுமாமாவும், கொசுமாமியும், ஒரு குட்டையில் குடித்தனம் நடத்தி வந்தார்கள். ஒரு நாள் வெளியே ஊரைச் சுற்றிப்பார்த்து விட்டு வந்த கொசுமாமாவுக்கு பாயாசம் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. உடனே கொசுமாமா கொசுமாமியிடம்

“ பாயாசம் சாப்பிட வேணும்… உடனே நீயும் செய்ய வேணும் “

என்று ராகத்துடன் பாடியது. அதைக் கேட்ட கொசுமாமி,

“ பாயாசம் செய்வதற்கோ பானையிலோ அரிசியில்லை..” என்று பதில் ராகம் பாடியது. உடனே கொசுமாமா விர்ரெனப்பறந்து நெல்வயலுக்குச் சென்றது. அங்கே முற்றிய நெற்கதிர்கள் தலை சாய்த்து கிடந்தன. அதில் ஒரு நெல்லிடம் போய்,

“ பாயாசம் செய்ய வேணும்.. பானையிலோ அரிசியில்லை.. முற்றிய நெல்லே நீ என்னுடன் வருவாயா? “

என்று கேட்டது. அதைக் கேட்ட நெல்,

“ என்னை வளர்த்த கதிரைக் கேள் கொசுமாமா..”

என்று சொல்லியது. கொசுமாமா நெற்கதிரிடம் சென்று,

” பாயாசம் செய்ய வேணும்.. பானையிலோ அரிசியில்லை.. முற்றிய நெல்லே.. நெல்லை வளர்த்த கதிரே எனக்கு ஒரு நெல் தரவேணும்…”

என்று கேட்டது. அதைக்கேட்ட நெற்கதிர்,

”.. என்னை வளர்த்த வயலிடம் போய்க் கேள் கொசுமாமா..”

என்றது. உடனே கொசுமாமாவும் வயலிடம் போய்,

“ பாயாசம் செய்ய வேணும்..பானையிலோ அரிசியில்லை… முற்றிய நெல்லே.. நெல்லை வளர்த்த கதிரே.. கதிரை வளர்த்த வயலே எனக்கு ஒரு நெல் தரவேணும்…”

என்று கேட்டது. அதற்குத் தண்ணீரும்,

“.. எனக்கு உயிர் கொடுத்த நீரிடம் கேள் கொசுமாமா….”

என்று சொல்லியது.

உடனே கொசு மாமாவும் நீரிடம் போய்,

“ பாயாசம் செய்யவேணும்.. பானையிலோ அரிசியில்லை.. முற்றிய நெல்லே.. நெல்லை வளர்த்த கதிரே.. கதிரை வளர்த்த வயலே வயலுக்கு உயிர் கொடுத்த நீரே.. எனக்கு ஒரு நெல் தர வேணும்..”

என்று கேட்டது. அதற்கு நீர் ,

“ நிலத்தை உழுது நீர் பாய்ச்சி பயிர் வளர்த்த உழவனிடம் கேள் கொசுமாமா..”

என்று சொல்லியது.

அங்கிருந்து பறந்த கொசுமாமா உழவன் காதில் போய்,

“ பாயாசம் செய்ய வேணும்..பானையிலோ அரிசியில்லை.. முற்றிய நெல்லே.. நெல்லை வளர்த்த கதிரே.. கதிரை வளர்த்த வயலே… வயலுக்கு உயிர் கொடுத்த நீரே.. உழுது நீர்பாய்ச்சி பயிர் வளர்த்த உழவரே.. எனக்கு ஒரு நெல் தரவேணும்…”

என்று கேட்டது. அதற்கு அந்த உழவன்,

“ நான் சொல்வதை நீ செய்ய வேண்டும் கொசுமாமா..”

என்று சொன்னார். கொசுமாமாவும் ,

“ சொல்லுங்கள் உழவரே… தட்டாமல் செய்திடுவேன்…”

என்று சொல்லியது. உழவரும்,

“ குட்டையிலே குடித்தனம் நீ செய்யக்கூடாது கொசுமாமா… குழந்தைகளை கொசுமாமி கடிக்கக்கூடாது கொசுமாமா.. தூங்கும்போது தொந்திரவு செய்யக் கூடாதுகொசுமாமா..சம்மதமா சொல்லு..கொசுமாமா…”

என்று சொன்னார். உடனே கொசுமாமா

“ பாயாசம் செய்ய வேணும்..பானையிலோ அரிசியில்லை.. நிலத்தை உழுது நீர்பாய்ச்சி பயிர் வளர்த்த உழவரே..நீர் சொன்னபடி செய்திடுவேன்…”

என்று சொல்லியது. உடனே உழவர் நீரிடம் சொல்ல, நீர் வயலிடம் சொல்ல, வயல் கதிரிடம் சொல்ல, கதிர் நெல்லிடம் சொல்ல, நெல்லும் கொசுமாமாவுடன் புறப்பட்டுச் சென்றது. நெல்லைக் கூட்டிச் சென்ற கொசுமாமா, கொசுமாமியிடம்,

“ பாயாசம் செய்ய வேண்டும்.கொசுமாமி.. பானை நிறைய அரிசி உண்டு.. கொசுமாமி..”

என்று பாடியது. கொசுமாமியும், “ பாயாசம் செய்திடுவேன்.. கொசுமாமா.. பானை நிறைய அரிசி உண்டு. கொசுமாமா…” என்று பதில் சொன்னாள். கொசுமாமாவும் கொசுமாமியும் பாயாசம் செய்து ருசியாக சாப்பிட்டு குசியாகப் பறந்து போனார்கள்.

கதை சொன்னவர்- உ.மல்லிகா

Sunday, 11 May 2014

கோடைகாலம் கொடுங்காலமா?

summer

உதயசங்கர்

ஒவ்வொரு கோடைகாலத்திலும் பெரும்பாலானவர்கள் “ யப்பா..இந்த வருஷம் வெயில் அதிகமப்பா…தாங்கமுடியல..” என்று சொல்வதைக் கேட்கலாம். புவிவெப்பமயமாதலால் ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை கூடுவது உணமைதான் என்றாலும் கோடைகாலமே வராமல் போய்விட்டால் என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள். இயற்கையின் சுழற்சியில் பருவங்கள் மாறி மாறி வந்து கொண்டிருப்பதால் பூமியில் உயிர்கள் ஜீவித்திருக்கின்றன. ஒரே பருவகாலம் நீடித்திருந்தால் புவியில் பல்லுயிர்ப்பெருக்கம் நிகழாது. கோடை, குளிர், வசந்தம், மழை, என்று இயற்கை சுழன்று பூமியை உயிர்கள் வாழ்வதற்கான இடமாக நிலைத்திருக்க வைக்கிறது.

நமது உடலின் கழிவுகள், சிறுநீரகம் மூலம் சிறுநீராக, வியர்வைச்சுரப்பிகள் மூலம் வியர்வையாக, மலக்குடல் மூலம் மலமாக வெளியேறுகிறது. , கோடைகாலத்தில் உடலின் வெப்பநிலை உயர்வதால், நம்முடைய உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்துக் கொள்ள நமது உடல் மருத்துவர் வியர்வைச் சுரப்பிகளை இயங்க வைக்கிறார். வியர்வைச்சுரப்பிககளின் மூலம் உடலின் கழிவுகளை வெளியேற்றும் அதே வேளையில் உடல் வெப்பநிலையை சமச்சீராக வைத்துக் கொள்ளச் செய்கிறார். அப்போது உடலிலிருந்து அதிக நீர் வெளியேறுவதால் தாக உணர்ச்சி ஏற்படுகிறது. நல்ல சுத்தமான தண்ணீரைக் குடிப்பது மட்டும் தான் வியர்வையின் மூலம் ஏற்படும் தண்ணீர் இழப்பை ஈடுகட்டுவதற்கான முதன்மையான வழி. எனவே மற்ற காலங்களை விட கோடைகாலத்தில் அதிகமான தண்ணீர் அருந்துவதின் மூலம் கோடைகாலத் தீவிர ( Acute diseases) நோய்களை பெரும்பாலும் தவிர்த்து விடலாம்..

பொதுவாகக் கோடைகாலத்தில் வரக்கூடிய நோய்களாக, ஜலதோஷம், காய்ச்சல், வயிற்றோட்டம், சிறுநீரகக்கல், நீர்க்கடுப்பு, வியர்க்குரு, வேனல்கட்டி, வெப்பமயக்கம், போன்றவற்றைச் சொல்லலாம்.

வெயிலில் போய்விட்டு வந்தவுடன் வியர்வை அடங்குமுன் குளிர்ந்த நீரைக் குடிப்பது பழக்கம். குளிர்ந்த நீர் தொண்டையில் இறங்கும்போது அவ்வளவு சுகமாக இருக்கும். ஆனால் அதனால் தாகம் அடங்காது. அது மட்டுமல்ல வெயிலில் அலைந்து கொண்டிருக்கும் போது உடலின் வெப்பநிலையைச் சமச்சீராக வைத்துக் கொள்ள வியர்வைச் சுரப்பிகள் செய்யும் வேலை முடியும் முன்பே வெளியிலிருந்து உடலுக்குள் செல்லும் குளிர்நீர் வியர்வைச் சுரப்பிகளின் வேலையை நிறுத்திவிடுகிறது. ரத்தக்குழாய்கள் குளிர்ந்து சுருங்கி விடுகிறது. ரத்தக்குழாய்கள் திடீரெனச் சுருங்குவதால் வியர்வைச்சுரப்பியின் வேலை தடைப்படுகிறது. வெளியேறும் நீர் அப்படியே வெளியேறவும் முடியாமல் உள்ளே போகவும் முடியாமல் திகைத்து தோலின் துவாரங்களை அடைத்து வியர்க்குருவை உண்டுபண்ணுகிறது. இந்த வியர்க்குருவே சிலநேரம் வேனல்கட்டியாக மாறுகிறது. இதெல்லாம் உடலின் வெப்பம் வெளியேற முடியாமல் போகும்போது ஏற்படும் தொந்திரவுகள். அதேபோல உடலின் திடீர்சீதோஷ்ண மாற்றத்தினால் சளிச்சவ்வுகள் அதிக நீரை உற்பத்தி செய்ய ஜலதோஷம் உண்டாகிறது. சிலநேரங்களில் ஜலதோஷக்காய்ச்சல் வரும். எனவே வெயிலில் போய்விட்டு வந்தவுடன் உடனே குளிர்ந்த நீரைப் பருகாமல் சற்று நேரம் கழித்து வியர்வை அடங்கியதும் பருகினால் உடல் தன் சமச்சீரான நிலைக்கு வந்து விடும். அதுவும் குளிர்பதனப்பெட்டியில் உள்ள நீரையோ, மென்பானங்களையோ அருந்தவே கூடாது.

தாகம் அடங்குவதற்கு, இளநீர், மோர், பானக்காரம், தர்பூசணி, நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கள் சாப்பிடுவது நல்லது.

கோடைகாலத்தில் உடலிலுள்ள நீர் வெளியேறும்போது நீர்ச்சத்து குறைந்து விடுகிறது. அதற்கு ஈடாக நீரை அருந்தாவிடில் ரத்தத்திலுள்ள உப்புச்சத்துகளை சிறுநீரகம் வெளியேற்றும்போது சிறுநீரகக்குழாய்களிலோ, சிறுநீரகத்திலோ படிகமாகத் தங்கி கல்லாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே சிறுநீரகக்கற்கள் உருவாகாமல் தடுக்க கோடைகாலத்தில் அதிகமான நீர் இளநீர், மோர், அருந்த வேண்டும்.

கோடைகாலத்தில் உணவுப்பொருட்கள் வெப்பநிலை உயர்வு காரணமாக சீக்கிரம் கெட்டுப்போய்விடும். எனவே கெட்டுப்போன உணவை, வீட்டிலோ, ஹோட்டலிலோ சாப்பிட்டால் கெட்டுப்போன உணவிலுள்ள விஷத்தை வெளியேற்ற வயிற்றோட்டத்தை உடல்மருத்துவர் ஏற்படுத்துகிறார். கோடைகாலத்தில் கெட்டுப்போன உணவைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஒருவேளை அப்படிச்சாப்பிட்டதால் வருகின்ற வயிற்றோட்டத்துக்கு உப்பும்சர்க்கரையும் சேர்ந்த கரைசல், நீர், எளிய உணவு, ஓய்வு இவையே போதுமானது.

உடல்வெப்பம் அதிகமாவதாலும் நீர் சரியாகக்குடிக்காததாலும் சிறுநீர் பிரிவது குறைந்து சிறுநீர்க்குழாய்த்தொற்று ஏற்படும். இதன் விளைவாக நீர்க்கடுப்பு வருகிறது. இதைத் தவிர்க்கவும் அதிகமான நீர் அருந்த வேண்டும்.

அதிகநேரம் வெயிலில் வேலை செய்தால் உடலின் வெப்பநிலை அதிகரிப்பதுடன், நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டு இதயத்துக்கும் மூளைக்கும் செல்லும் ரத்தம் தடைபடுவதினால் வெப்பமயக்கம் ஏற்படுகிறது. மரணத்தை விளைவிக்கக்கூடியது. எனவே தொடர்ந்து இரண்டுமணி நேரத்துக்கு மேல் வெயிலில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

எனவே கோடைகாலத்தை கொடுங்காலமாக நினைக்கவேண்டியதில்லை. இயற்கையின் சுழற்சியை வரவேற்போம். கோடையின் நிழல்தரும் குளிரை அநுபவிப்போம். மரங்கள் பூப்பதற்கும், காய்ப்பதற்கும், வெப்ப சுழற்சி அவசியம். கோடையில் நமது ஆடை கைத்தறி, கதர், காட்டனாக இருக்கட்டும். குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். இளநீர், மோர், பானக்காரம், பழங்கள், தர்பூசணி, நீர்ச்சத்துள்ள காய்கறிகள், நிறைய சாப்பிட்டுப் பழகுவோம்.

கோடையை அநுபவிப்போம். கொளுத்தும் வெயிலை சுட்டுப்பொசுக்குவோம்.

 

நன்றி- இளைஞர் முழக்கம் மே 2014

Saturday, 10 May 2014

குழந்தைகளின் கதை உலகம் பெரிது….

DSC01118 புத்தக மதிப்புரை

குழந்தைகளின் கதை உலகம் பெரிது….

வீரபத்ர லெனின்

குழந்தைகள் நம்மிடம் கதை கேட்டால் ஒரு ஊருல ஒரு ராஜா என்று ஆரம்பித்து அவர்கள் தூங்கும் வரை பல கதைகளை அடுக்கிக் கொண்டே போவோம். இப்படிப் போகும்போது அவர்களும் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தியன் போல பல கேள்விகளை கேட்பார்கள். அவற்றுக்கும் பதில்களைச் சொல்லிக் கொண்டே போவோம்.

நாம் சிறு வயதில் கேட்ட கதைகளை ஞாபகப்படுத்திக் கூறுவோம். இல்லையென்றால் படித்ததில் பிடித்ததைச் சொல்லுவோம். பலபேருக்கு ஒரு சில கதைகளுக்கு மேல் தெரியாது. சொன்ன கதைகளையே நாம் சொல்லும்போது, “ இதத்தான நேத்தும் சொன்னீங்க, அதத்தானே அன்னைக்கு சொன்னீங்க..” எனக் கேட்டு நம்மைத் துளைத்தெடுத்து விடுவார்கள்.

குழந்தைகள் கதைதானே கேட்கிறார்கள் நாம் ஏதாவது ஒன்றை அடித்து விட வேண்டியது தான் என்ற எண்ணமும் நமக்கு இருக்கக்கூடாது. ஏனென்றால் நாம் கூறிய கதைகள் அவர்கள் மனதில் பசுமரத்தில் ஆணிபோல் பதிந்து விடும். நாம் சொல்லும் கதைகள் பயனுள்ள அறிவை விரிவு செய்கிற விதத்தில் இருக்க வேண்டும்.

இப்படிச் சொல்லும் கதைகளுக்கு பாடப்புத்தகங்களில் உள்ள கதைகளோடு மற்ற பிற கதைப்புத்தகங்களையும் படிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதை எளிமைப்படுத்தும் விதத்தில் பாரதி புத்தகாலயம் “ புக்ஸ் ஃபார் சில்ரன் “ என 15 தலைப்புகளில் வண்ணப்படங்களுடன் குழந்தைகளுக்கான கதைகளை சிறு புத்தகக்கொத்தாக வெளியிட்டுள்ளது.

என்னுடைய காக்கா, சின்னத்தேனீ பாடுது, மாடப்புறாவின் முட்டை தொலைந்து போன கதை, புலி வருது புலி, ஐந்து பூனைக்குட்டிகளின் கதை, கொள்ளு பிறந்த கதை, யானை வழி, யானையும் தையல்காரனும், மல்லனும் மகாதேவனும், யானையும் அணிலும், மண்ணாங்கட்டியும் காய்ந்த இலையும், வாலறுந்த குரங்கின் கதை, ஆமையும் குரங்கும் வாழை நட்ட கதை, கொக்கும், கொசுவும், மரங்கொத்தியும் உப்பு விற்ற கதை, இந்த 15 தலைப்புகளில், படித்தால் குழந்தைகளுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் உதயசங்கர் அழகிய தமிழைக் கையாண்டுள்ளார். புத்தகத்தில் உள்ள ஓவியங்கள் அனைத்தும் சிறப்பு.

மல்லனும் மகாதேவனும் என்ற கதையில் இரண்டு நண்பர்கள் காட்டுவழியாகச் செல்லும்போது கரடி ஒன்று வந்து விடுகிறது. இதனால் இருவரும் பயந்து விடுகின்றனர். மல்லன் கரடியிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொள்கிறான். மகாதேவனோ என்ன செய்வது என்று தெரியாமல் தன் சிறுமூளையைக் கசக்கி இறந்தாற் போல் நடித்து தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்கிறான். இந்தக் கதையில் பிரச்னைகள் வந்தால் பயந்து விடாமல் அதை எப்படிச் சமாளிப்பது என்பதையும் ஆபத்து என்றால் நண்பனை விட்டு விட்டு நாம் மட்டும் தப்பித்தால் போதும் என்ற கெட்ட எண்ணம் இருக்கக்கூடாது என்பதையும் உணர்த்துகிறது.

இக்கதையைக் குழந்தைகள் கேட்டாலும், படித்தாலும், அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையும் மற்றவர்களை எந்தச் சந்தர்ப்பத்திலும் கைவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் அந்தப் பிஞ்சுகள் மனதில் பதியும்.

மண்ணாங்கட்டியும் காய்ந்த இலையும், என்ற கதை ஒருவருக்குப் பிரச்னை என்றால் அவரை எப்படி காப்பாற்றுவது என்று கூறுகிறது. சின்னத்தேனீ பாடுது என்ற சிறிய கொத்தில் பாடுது, கேளு பாப்பா கேளூ, என்று குழந்தைகளைக் கேள்வி கேட்கும் அறிவைப் பாடல் மூலம் தூண்டுகிறார் உதயசங்கர்.

குழந்தைகளின் படிப்பு ஆர்வத்தைத் தூண்ட பெற்றோர்கள் இந்த 15 புத்தகக்கொத்தை வாங்கித் தர வேண்டும். பாரதி புத்தகாலயம் ஏற்கனவே இதுபோல் சில கதைப் பூங்கொத்துகளை வெளியிட்டுள்ளன. நல்ல முயற்சி. தொடர வேண்டும். நாமும் குழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுப்பதுபோல் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கும் கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும். கதைகளை விரும்பாத குழந்தைகள் இல்லை. இத்தகைய புத்தகங்களின் தேவை வற்றுவதில்லை.

15 நாடோடிக் கதைகள்

ஆசிரியர்கள்- கெ.டி.ராதாகிருஷ்ணன், சுஜா,சூசன், ஜார்ஜ், இ.என்.ஷீஜா, விமலாமேனன், ராமகிருஷ்ணன்குமரநல்லூர்,

தமிழில்- உதயசங்கர்

வெளியீடு- புக்ஸ் ஃபார் சில்ரன்

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை-600018

விலை-ரூ.525/

Wednesday, 20 November 2013

புதிய அரசியலமைப்புச்சட்டம்..

சாதத் ஹசன் மண்ட்டோ

ஆங்கிலத்தில்- காலித் ஹசன்

தமிழில்- உதயசங்கர்manto2

குதிரைவண்டிக்காரனான மங்கு தான் அவனுடைய நண்பர்களிலேயே மிகச்சிறந்த அறிவாளி என்று கருதப்பட்டான். அவன் பள்ளிக்கூடத்துக்கு உள்ளே சென்று எப்படியிருக்கும் என்று இதுவரை பார்த்ததில்லை. கறாரான கல்வித்தகுதி என்று பார்த்தோமானால் அவன் பூஜ்யம் தான். ஆனால் சூரியனுக்குக் கீழே அவனுக்குத் தெரியாத எந்த விஷயமும் இல்லை.லௌகீகஉலகத்தைப் பற்றிய அவனுடைய இந்தப்பன்முகஅறிவைப் பற்றி குதிரைவண்டி நிலையத்திலுள்ள, அவனுடைய எல்லாநண்பர்களுக்கும் தெரியும். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய அவர்களுடைய ஆர்வத்தை அவன் எப்போதும் திருப்திப்படுத்திவிடுவான்.

ஒரு நாள் அவன் அவனுடைய இரண்டு சவாரிகள் பேசிக் கொண்டிருந்ததிலிருந்து இந்து முஸ்லீம்களுக்கிடையில் இன்னொரு மதக்கலவரம் வெடித்துவிட்டது என்று தெரிந்து கொண்டான்.

அன்று மாலையில் அவன் நிலையத்துக்கு வந்தபோது குழம்பிப்போயிருந்தான். அவனுடைய நண்பர்களுடன் உட்கார்ந்து, ஹூக்காவில் நீண்ட ஒரு இழுப்பு புகையை இழுத்துவிட்டான். அவனுடைய காக்கிநிறத் தலைப்பாகையை எடுத்துவிட்டு கவலைதோய்ந்த குரலில், “ இது அந்தப் புனிதரின் சாபம் தான். அன்றாடம் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருவரையொருவர் அடித்துக்கொள்வார்கள். ஒருமுறை அக்பர் பாதுஷா ஒரு முனிவரை அவமரியாதை செய்துவிட்டார். அந்த முனிவர் ,” என் கண்முன்னே நிற்காதே.. உன் ஹிந்துஸ்தான் எப்போதும் கலவரங்களாலும், ஒழுங்கின்மையாலும் பீடித்திருக்கும்…” என்று சாபம் கொடுத்துவிட்டதாக பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். நீங்களே பாக்கறீங்கள்ல அக்பரோட ஆட்சி முடிந்ததிலிருந்து என்ன நடக்கிறது இந்தியாவில் கலவரங்களைத்தவிர..” என்று சொன்னான்.

தன்னிச்சையாக அவன் ஹூக்காவை இழுத்து பெரிய மூச்சு விட்டு, “ இந்த காங்கிரஸ்காரங்க… இந்தியா சுதந்திரம் அடையணும்னு விரும்பறாங்க..இன்னிக்கி நான் சொல்றேன் கேட்டுக்கோ.. ஆயிரம் வருஷம் ஆனாலும் அவங்களால அது முடியாது..வேணும்னா ஆங்கிலேயர்கள் போகலாம்.. ஆனா அதுக்கப்புறம் இத்தாலிக்காரனையோ, ருஷ்யாக்காரனையோ நீ பார்ப்பே… எனக்குத் தெரிஞ்சவரை ருஷ்யாக்காரன் ரெம்ப முரட்டுத்தனமானவங்க.. நான் சத்தியம் செய்றேன் ஹிந்துஸ்தான் எப்போதும் அடிமையாத்தான் இருக்கும்…ஆமாம் அந்த முனிவர் அக்பருக்குக் கொடுத்த சாபத்தின் இன்னொரு விஷயத்தைச் சொல்ல நான் மறந்துட்டேன்… இந்தியா எப்போதும் அந்நியர்களாலேயே ஆளப்படும்….” என்று சொன்னான்.

மங்கு வாத்தியாருக்கு பிரிட்டிஷ்காரர்களைப் பிடிக்காது. அவன் அவர்களை வெறுப்பதற்கான காரணம் என்னவென்றால் அவர்கள் இந்தியர்களின் விருப்பத்துக்கு மாறாக இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல அட்டுழியம் செய்வதற்கான எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் அவர்கள் விட்டுவைப்பதில்லையென்று அவனுடைய நண்பர்களிடம் சொல்வது வழக்கம். ஆனால் உண்மையான விஷயம் என்னவென்றால் அவனுக்கு பிரிட்டிஷ்காரர்களைப் பற்றிய தாழ்வான அபிப்பிராயம் தோன்றுவதற்கு அங்கு படைமுகாமிலிருந்த கோரா படைவீரர்கள் தான் காரணம். அவர்கள் அவனை நாயை விடக் கேவலமான பிறவி போல நடத்துவார்கள். அதுவுமல்லாமல் அவன் அவர்களுடைய வெள்ளை நிறத்தை வெறுத்தான். அவன் யாராவது ஒரு பிரிட்டிஷ்காரனை அல்லது செம்பவளநிற கோரா படைவீரனை எதிர்கொள்ள நேர்ந்து விட்டால் குமட்டிக்கொண்டு வரும். ’ அவங்க சிவப்பு முகங்க எனக்கு அழுகிக் கொண்டிருக்கும் பிரேதங்களை ஞாபகப்படுத்தும் ’ என்று விருப்பத்துடன் சொல்லிக்கொண்டிருப்பான்.

ஒரு குடிகாரகோரா படைவீரனோடு ஏற்பட்ட அடிதடிச்சண்டைக்குப் பிறகு பலநாட்களுக்கு அவன் மனவருத்ததோடு இருந்தான்.அவன் நிலையத்துக்குத் திரும்பிய பிறகு வைது கொண்டே ஹூக்காவைப் பிடிப்பான். அல்லது அவனுக்குப் பிடித்த ஏர் படம் போட்ட பிராண்ட் சிகரெட்டுகளைப் புகைக்கும் போது திட்டுவான்.

அப்போது அவன் தலையாட்டிக் கொண்டே சொல்வான்,” பாரு அவங்களை…. வீட்டுக்கு ஒரு மெழுகுவர்த்தி எடுக்க வருவாங்க.. உனக்குத் தெரியாம எடுத்துகிட்டு போயிருவாங்க.. அந்த மனுசக்குரங்குகளுக்கு முன்னால நிற்கவே என்னால முடியாது.. அவங்க உனக்கு ஆணையிடுறதப் பார்த்தீன்னா ஏதோ நாம அவங்கப்பனோட அடிமை மாதிரி…!”

சிலசமயங்களில், மணிக்கணக்காக அவர்களைத் திட்டியபிறகும், அவனுடைய கோபம் தீராது. அவனுக்கு அருகில் உட்கார்ந்திருப்பவரிடம் “ பாரு அவங்களை…குஷ்டம் பிடிச்சவங்களை மாதிரி.. .செத்து அழுகிக் கொண்டிருக்கிற மாதிரி… நான் அவங்கள ஒரே அடியிலே சாய்ச்சிருவேன்…ஆனா அவங்களோட திமிர்த்தனத்தை எப்படி எதிர்கொள்ள…? நேற்று ஒருத்தனோட தகராறு..அவனோட அதிகாரத்தைப் பார்த்து எனக்கு வந்ததே கோபம்…நான் அவன் மண்டையை உடைச்சிருப்பேன்..ஆனா நான் என்னைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கிட்டேன்…அந்தக் கழிசடையோட சண்டை போடறது என்னோட தகுதிக்குக் குறைவானதில்லையா..” என்று சொல்வான்.

அவனுடைய சட்டைக்கையினால் மூக்கைத் துடைத்துக் கொள்வான். மறுபடியும் அவனுடைய வசவைத் தொடர்வான். “ கடவுள் சத்தியமாகச் சொல்றேன்… இந்த இங்கிலீஷ் கனவான்களைக் கேலி செய்றதே எனக்குப் பிடிக்கல… ஒவ்வொரு தடவையும் அவங்களோட சனியன்பிடிச்ச மூஞ்சிகளைபார்த்தவுடனேயே என்னோட ரத்தம் கொதிக்க ஆரம்பிச்சிரும்… உம்மேல சத்தியமா சொல்றேன்..இவங்கள ஒழிக்கணும்னா ஒரு புதிய சட்டம் தான் கொண்டு வரணும்…”

ஒருநாள் வாத்தியார் மங்கு மாவட்ட நீதிமன்றத்திலிருந்து இரண்டு சவாரிகளை ஏற்றிக்கொண்டு போனான். அவர்களுடைய உரையாடலிலிருந்து இந்தியாவில் ஒரு புதிய சட்டம் வரப்போகிறதென்று தெரிந்து கொண்டான்.அவர்கள் மிக விரைவில் அறிமுகப்படுத்தப் போகிற இந்திய அரசுச்சட்டம் 1935 ஐப் பற்றிப் விவாதித்துக் கொண்டு வந்தார்கள்.

“ ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து இந்தப் புதிய சட்டம் அமலுக்கு வரப்போவதாகச் சொல்கிறார்கள்… இது எல்லாவற்றையும் மாத்திரும்னு நம்புறியா..? ”

“ எல்லாம் மாறாது..ஆனால் நிறைய மாற்றங்கள் வரும்னு சொல்றாங்க… இந்தியர்களுக்கு விடுதலை கிடைச்சிரும்..”

“ அப்படின்னா நம்மோட வட்டி? “ என்று ஒருவர் கேட்டார். அநேகமாக அவர்கள் வழக்குக்காக நகரத்துக்கு வந்த லேவாதேவிக்காரர்களாக இருக்க வேண்டும்.

“ உண்மையில் எனக்குத் தெரியல… வழக்கறிஞரைக் கேட்கணும்…” என்று அவருடைய நண்பர் பதில் சொன்னான்.

வாத்தியார் மங்கு ஏற்கனவே ஏழாவது சொர்க்கத்துக்குப் போய் விட்டான். சாதாரணமாக அவனுடைய குதிரை மெதுவாகப் போவதாக திட்டிக் கொண்டே வருகிற பழக்கம் உண்டு. அதோடு சவுக்கை வீசி அடிக்கவும் தயங்க மாட்டான். ஆனால் இன்று எதுவும் செய்யவில்லை. அவ்வப்போது அவன் திரும்பி அவனுடைய பயணிகளைப் பார்த்துக் கொண்டான். மீசையைத் தடவி விட்டுக் கொண்டான். குதிரையின் கடிவாளத்தை ஆதூரத்துடன் தளர்வாக விட்டு,” வாடா மகனே உன்னால என்ன செய்ய முடியும்னு அவங்களுக்குக் காட்டுவோம்…. போவோம் வா..” என்று சொன்னான்.

அவனுடைய சவாரிகளை இறக்கிவிட்டு விட்டு அனார்கலி வணிகவளாகத்தில் அவனுடைய மிட்டாய்க்கடை நண்பனான டினோவின் கடையின் முன் நிறுத்தினான். அவன் ஒரு பெரிய கிளாஸ் லஸ்ஸியை வாங்கிக் ஒரே மூச்சில் குடித்தான். திருப்தியுடன் ஒரு பெரிய ஏப்பமிட்டு, கூவினான், “ அவர்கள் நரகத்துக்குப் போக..! “.

அவன் சாயந்திரம் குதிரைவண்டி நிலையத்துக்குப் போனபோது அவனுடைய நண்பர்கள் யாரும் அங்கில்லை. அவன் வெகுவாக ஏமாற்றமடைந்தான். ஏனெனில் அவன் அந்தச் சிறந்த செய்தியை அவனுடைய ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் வந்திருந்தான். அவனுக்கு சீக்கிரத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் வரப்போகிறது… அது எல்லாவற்றையும் மாற்றப்போகிறது …என்று யாரிடமாவது சொல்லியே ஆக வேண்டும்.

ஒரு அரைமணி நேரத்துக்கு அவனுடைய கையில் சவுக்கைப் பிடித்தபடி அமைதியின்றி சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருந்தான். அவனுடைய மனசு பல விஷயங்களைப் பற்றி, எதிர்காலத்தில் நடக்கவிருக்கிற நல்ல விஷயங்களைப் பற்றி யோசித்தது. நாட்டில் வரப்போகிற புதிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிய செய்தி புதிய சாத்தியங்களைத் திறந்து விட்டது. அவன் அவனுடைய மூளையின் அனைத்து விளக்குகளையும் எரிய விட்டான். இந்தியாவில் ஏப்ரல் 1 ஏற்படுத்தப்போகிற விளைவுகளைப் பற்றி கவனமாகப் பரிசீலித்தான். அவன் புளகாங்கிதமடைந்தான். அந்த கழிசடை லேவாதேவிக்காரர்கள் வட்டியைப் பற்றிப் பேசிக் கொண்டதைப் பற்றி நினைத்தவுடன் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். ‘ இந்தப் புதிய சட்டம் கொதிக்கிற சுடுதண்ணீர் மாதிரி ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் இந்த மூட்டைப்பூச்சிகளை கொன்றொழித்து விடும் ‘ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். இந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டம் இந்த வெள்ளைஎலிகளை ( பிரிட்டிஷ்காரர்களுக்கு அவன் வைத்திருந்த பெயர்.) ஒரேயடியாக அவைகளுடைய இருண்டபொந்துகளுக்குள் விரட்டியடித்து விடும். இனி பூமியில் எங்கும் தலையெடுக்க முடியாது. சிறிது நேரம் கழித்து நாதூ என்ற வழுக்கைத்தலை குதிரைவண்டிக்காரன் அவனுடைய தலைப்பாகையை எடுத்து கையில் வைத்துக் கொண்டு மெல்ல நடந்து வந்தான். வாத்தியார் மங்கு அவனுடைய கையைப் பிடித்துப் பலமாகக் குலுக்கிக் கொண்டே, “ உனக்கு ஒரு சிறந்த செய்தி வைத்திருக்கிறேன்.. அதைக் கேட்டால் உன் வழுக்கைத் தலையில் முடி முளைச்சாலும் முளைச்சிரும்..” என்று சொன்னான்.

பிறகு அவன் அந்தப் புதிய அரசியலமைப்பு சட்டம் இந்தியாவுக்குக் கொண்டு வரப் போகிற மாற்றங்களைப் பற்றி விவரிக்கத் தொடங்கினான். “ கொஞ்சம் பொறுத்துப் பாரு… என்னெல்லாம் நடக்கப்போகுதுன்னு….நான் இன்னைக்குச் சொல்றேன் கேட்டுக்கோ…. ருஷ்யாவின் ராஜா அவர்கள் போகின்ற பாதையைக் காட்டப் போகிறார்..”.

வாத்தியார் மங்கு பல வருடங்களாக கம்யூனிச அரசாங்கத்தைப் பற்றிப் பல கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறான். அதிலுள்ள பல விஷயங்களை புதிய சட்டங்களை, இன்னும் புதிய திட்டங்களை, அவன் மிகவும் விரும்பினான்.அதனால் தான் அவன் இந்தியாவின் புதிய சட்டத்தோட ருஷ்யாவின் ராஜாவை தொடர்பு படுத்தினான். ஏப்ரல் 1 ஆம் தேதி வரப்போகிற மாற்றங்கள் ருஷ்யாராஜாவின் செல்வாக்கினால் தான் ஏற்படுகிறது என்று நம்பினான். அவனைப் பொறுத்தவரை உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் ஒரு ராஜாவினால் தான் ஆளப்படுகிறது என்று உறுதியாக நினைத்தான்.

சில வருடங்களாக பெஷாவர் நகரில் சிவப்புச் சட்டை இயக்கம் மிகவும் பிரபலமாக செய்திகளில் அடிபட்டது. வாத்தியார் மங்குவுக்கு இந்த இயக்கம் ருஷ்யராஜாவுக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்புடையது அதனால் இயல்பாகவே புதிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் தொடர்புடையது. இந்தியாவின் பல நகரங்களில் அடிக்கடி குண்டுவெடிப்புகள் நடந்ததாகத் தகவல்கள் வெளியாயின. வெடிபொருட்கள் வைத்திருந்ததாக பலர் பிடிபட்டதாக வாத்தியார் மங்கு கேள்விப்பட்டபோதும், தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளில் பலர்மீது வழக்கு தொடர்ந்த போதும் அவன் புதிய சட்டம் வருவதற்கு இவையெல்லாம் காரணம் என்று விளங்கிக் கொண்டான்.

ஒருநாள் அவனுடைய குதிரைவண்டியில் இரண்டு பாரிஸ்டர்கள் ஏறினார்கள் அவர்கள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி உரக்க விவாதித்துக் கொண்டே வந்தார்கள். அதில் ஒருவர் சொன்னார், “ அது சட்டத்தின் இரண்டாவது பிரிவு என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை…அது இந்திய கூட்டாட்சியைப் பற்றியது. அப்படி ஒரு கூட்டாட்சி உலகத்தில் எங்கேயும் இல்லை..அரசியல் ரீதியாகப் பார்த்தால் அது ஒரு பெரிய பேராபத்து…உண்மையில் சொல்லப்போனால், முன்மொழிந்திருப்பது கூட்டாட்சியைப் பற்றித் தான் வேறொன்றுமில்லை.”

அந்த பேச்சின் பெரும்பகுதியும் ஆங்கிலத்திலேயே நடந்ததால் வாத்தியார் மங்குவால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இந்த இரண்டு பாரிஸ்டர்களும் புதிய சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றும் இந்தியா விடுதலை அடைவதை விரும்பவில்லை என்றும் அவன் மனதில் பட்டது. ‘ தவளைகள் ’ என்று என்று அவன் வாய்க்குள் முணுமுணுத்தான்.

இந்த நிகழ்ச்சிக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் மொசாங் போவதற்காக மூன்று அரசுக்கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு போனான். அவர்கள் புதிய சட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்தார்கள்.

“ புதிய சட்டத்தோடு பல புதிய விஷயங்கள் நடக்கப்போகுதுன்னு நான் நெனைக்கிறேன்…கொஞ்சம் கற்பனை பண்ணிப்பாரு.. நாம சட்டசபைகளை தேர்ந்தெடுக்கப் போறோம்.. ஒருவேளை திருவாளர் ………………….. தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் எனக்கு எப்படியும் அரசாங்கவேலை கிடைத்து விடும்….”

“ ஓ பல புது விஷயங்களும் நிறையக் குழப்பங்களூம் நடக்கும். இன்னும் சொல்லப்போனால் நாம் ஏதோ ஒன்றில் நம் கைகளை வைக்கப்போகிறோம் என்று எனக்கு உறுதியாகத் தெரிகிறது..”

“ இதை என்னால ஒத்துக்கொள்ள முடியல..”

“ இயல்பாகவே இப்ப இருக்கிற ஆயிரக்கணக்கான வேலையில்லாப்பட்டதாரிகளின் எண்ணிக்கை குறையும்..”

இந்தப் பேச்சு வாத்தியார் மங்குவைப் பொறுத்தவரை அவனைப் புளகாங்கிதமடையச் செய்தது புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒளிமிக்கதாகவும் நம்பிக்கை நிறைந்ததாகவும் அவனுக்குத் தெரிந்தது. . ஒரே விஷயம் என்னவென்றால் அவன் புதிய சட்டத்தை ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு அவனுடைய குதிரைவண்டிக்காக சௌத்ரி குடாபக்ஸிடமிருந்து வாங்கிய அற்புதமான பித்தளை முலாம் பூசிய அலங்காரவிளக்கோடு ஒப்பிட்டுப் பார்க்கவே முடிந்தது. புதிய சட்டம் அவனுக்கு கதகதப்பான இனிய உணர்வைத் தந்தது.

பின்வந்த வாரங்களில் வாத்தியார் மங்கு மாற்றங்களைப் பற்றி ஆதரவாகவும் எதிராகவும் நிறையக் கேள்விப்பட்டான். ஆனால் அவனுடைய மனதில் உறுதியாக தோன்றிவிட்டது. அவன் ஏப்ரல் 1 ஆம் தேதியில் எல்லாம் மாறிவிடும் என்ற நம்பிக்கையை அவன் பாதுகாத்து வந்தான்.

கடைசியில் மார்ச் மாதத்தின் முப்பத்தியொரு நாட்களும் முடிவுக்கு வந்தன. வழக்கத்தை விட சீக்கிரமாக வாத்தியார் மங்கு எழுந்த போது குளிர்ந்த காற்று வீசியது. அவன் குதிரை லாயத்துக்குப் போனான். அவனுடைய குதிரை வண்டியைத் தயார் செய்து ரோட்டிற்கு கொண்டு போனான். இன்று அவன் அதீத மகிழ்ச்சியிலிருந்தான். ஏனெனில் புதிய சட்டம் வரப்போவதை அவனுடைய கண்களால் அவன் பார்க்கப்போகிறான்.

காலைப் பனியில் அவன் நகரத்தின் அகலமான, குறுகலான தெருக்களுக்குள் சுற்றி வந்தான். ஆனால் எல்லாம் அப்படியே பழைய மாதிரியே பாழடைந்து கிடந்தன. அவன் வண்ணங்களையும் ஒளியையும் பார்க்க விரும்பினான். அங்கே எதுவுமில்லை. அவன் அவனுடைய குதிரைக்காக புதிய இறகுக்குஞ்சம் ஒன்றை அந்தப் பெருநாளைக் கொண்டாடுவதற்காகக் கொண்டு வந்திருந்தான். அது ஒன்று தான் அங்கே அவனால் பார்க்கமுடிந்த சிறிதளவு வண்ணம். அது அவனுக்குக் கொஞ்சம் செலவையும் தந்து விட்டது.

குதிரையின் குளம்படிகளின் கீழே சாலை கருப்பாகவே இருந்தது. விளக்குதூண்கள் பழைய மாதிரியே இருந்தன. கடைகளின் விளம்பரப்பலகைகள் மாறவில்லை. புதிதாக எதுவும் நடக்காதமாதிரி மக்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். இருந்தாலும் அது ரெம்ப சீக்கிரம் தான். பெரும்பாலான கடைகள் மூடியிருந்தன. ஒன்பது மணிக்கு முன்னால் நீதிமன்றம் திறக்காது அதுக்கு அப்புறம் புதிய சட்டம் அமுலுக்கு வந்துவிடும் என்ற சிந்தனை வர அவனை அவனே ஆறுதல்படுத்திக் கொண்டான்.

அரசுக்கல்லூரிக்கு முன்னால் அவன் நின்ற போது மணிக்கூண்டுக் கடிகாரம் கிட்டத்தட்ட அதிகாரமாய் ஒன்பது தடவை அடித்து ஓய்ந்தது. மெயின் கேட் வழியே அழகாக உடையணிந்த மாணவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் மிகவும் அலங்கோலமாக வாத்தியார் மங்குவுக்குத் தெரிந்தார்கள். ஏதாவது வண்ணமயமாக, இன்னும் வியக்கிற மாதிரி நடக்க வேண்டும் என்று விரும்பினான்.

அவன் குதிரைவண்டியை முக்கிய வணிகவளாகமான அனார்கலியை நோக்கி ஓட்டினான். பாதிக்கடைகள் திறந்திருந்தன. மிட்டாய்க்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொது வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் வியாபாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அவர்களுடைய விற்பனைப் பொருட்கள் எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும்வண்ணம் கடை ஜன்னல்களில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் எதுவும் வாத்தியார் மங்குவை ஈர்க்கவில்லை. அவன் புதிய அரசியலமைப்பு சட்டத்தை அவனுடைய குதிரையைப் பார்ப்பது போல தெளிவாகப் பார்க்கவேண்டும் என்று விரும்பினான்.

வாத்தியார் மங்குவும் எதிர்பார்த்துக்காத்திருப்பதற்கு முடியாதவர்களில் ஒருவன். அவனுடைய முதல்குழந்தை பிறந்தபோதும் அவனால் அமைதியாக உட்கார்ந்திருக்க முடியவில்லை. குழந்தை பிறப்பதற்கு முன்பே அதைப் பார்க்க விரும்பினான். பலமுறை மனைவியின் வயிற்றில் அவனுடைய காதுகளை வைத்து குழந்தை எப்போது வெளியில் வரும் என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்வான். அல்லது குழந்தை எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்வான். ஆனால் அவனால் எதையும் கண்டுபிடிக்க முடியாது. ஒருநாள் அவன் அவனுடைய மனைவியைப் பார்த்து எரிச்சலுடன் கத்தினான்,

“ என்ன ஆச்சு உனக்கு? நாள்பூரா படுக்கையிலே கிடக்கிறே..பிணம் மாதிரி..ஏன் நீ எழுந்து வெளியில் போய் சுற்றி நடந்து கொஞ்சம் சக்தியை சேர்த்து வைக்க வேண்டியது தானே..குழந்தை பிறப்பதற்கு உதவி செய்யலாம்ல.. நான் சொல்றேன் இப்படியே இருந்தா அவன் எப்படி வருவான்.”

வாத்தியார் மங்கு எப்போதும் அவசரத்திலிருந்தான். அவனால் காரியங்கள் ஒரு வடிவத்துக்கு வரும்வரை காத்திருக்க முடியவில்லை. அவனுக்கு எல்லாம் உடனே நடந்து விட வேண்டும். ஒருமுறை அவனுடைய மனைவி கங்காவதி அவனிடம் சொன்னாள்,

“ கிணறே இன்னும் தோண்ட ஆரம்பிக்கல.. அதுக்குள்ள பொறுமையில்லாம தண்ணி குடிக்க அவசரப்படறே…”

இன்று காலையில் அவன் எப்போதும் இருக்கிற மாதிரி அந்தளவுக்கு பொறுமையில்லாமல் இல்லை.அவன் சீக்கிரம் வந்ததே புதிய சட்டத்தை அவனுடைய கண்களால் பார்ப்பதற்குத் தான். எப்படி காந்திஜியையும், நேருவையும் பார்ப்பதற்காக அவன் பல மணி நேரம் காத்திருந்தானோ அப்படி அவன் புதிய சட்டத்தைப் பார்ப்பதற்காக வந்திருந்தான்.

பெரிய தலைவர்களென்றால் வாத்தியார் மங்குவைப் பொறுத்தவரை ஊர்வலமாக வரும்போது ஏராளமான மாலைகள் சூட்டப்பட்டும் வருபவர்கள். ஒருவேளை அந்த ஊர்வலத்தில் போலீசாரோடு ஏதாவது சில தள்ளுமுள்ளுகள் நடந்து விட்டால் அந்தத் தலைவர் மங்குவின் பார்வையில் எங்கோ உயரத்திற்கு போய் விடுவார். புதிய அரசியலமைப்பு சட்டமும் அப்படியான பரபரப்பாக அமுலாவதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினான்.

அனார்கலி வணிகவளாகத்திலிருந்து அவன் கடைவீதிக்குப் போனான். மோட்டார் ஷோ ரூம் முன்னால் அவனுக்கு ஒரு சவாரி படையணி நிலையத்துக்குக் கிடைத்தது. அவர்கள் பணத்தைக் கொடுத்து விட்டு உடனே அந்த இடத்தை விட்டு அவர்கள் வழியில் சென்றனர். வாத்தியார் மங்குவுக்கு இப்போது நம்பிக்கை வந்தது. படையணிநிலையத்திலிருந்து புதிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தான்.

அவனுடைய சவாரி குதிரை வண்டியிலிருந்து இறங்கியதும் வாத்தியார் மங்கு குதிரை வண்டியின் பின்னிருக்கைக்குச் சென்று ஒரு சிகரெட்டை பற்ற வைத்தபடியே யோசிக்க ஆரம்பித்தான். அவனுக்கு நேரம் கிடைக்கும்போது இப்படித்தான் அவன் ஆசுவாசப்படுத்திக் கொள்வான். அவன் அடுத்த சவாரியைப் பார்க்கவில்லை. அவன் புதிய சட்டத்தினால் வரக்கூடிய மாற்றங்கள் குறித்து அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தான்.

குதிரைவண்டிகளுக்கு குதிரைவண்டி எண் கொடுக்கும் இப்போதைய முறையை புதிய சட்டஒழுங்குமுறையில் எப்படி மாற்றலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான். அப்போது ஒரு கோரா படைவீரன் விளக்குத்தூணுக்கருகில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான்.

அவனுக்கு ஏற்பட்ட முதல் உள்ளுணர்வு வண்டியில் அவனை ஏற்றக்கூடாது. அவன் அந்தக் குரங்குகளை வெறுத்தான். ஆனால் அவர்களுடைய பணத்தை ஏற்றுக் கொள்ளாமலிருப்பது புத்திசாலித்தனமுமல்ல என்று அவனுக்குத் தோன்றியது. புதிய இறகுக்குஞ்சம் வாங்க நான் செலவழித்த பணத்தை மீட்ட மாதிரி இருக்கும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

அவன் வண்டியைத் திருப்பி இருந்த இடத்திலிருந்து கொண்டே சாவகாசமான முறையில் கேட்டான், ” பகதூர் சாகிப் உங்கள எங்கே கூட்டிக் கொண்டு போக வேண்டும் ஐயா..? “ என்று கேட்டான். இந்த வார்த்தைகளை அவன் வெளிப்படையான வெறுப்புடனே கேட்டான். அப்போது அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அந்தத் துடுக்குத்தனமான கோரா உடனே அங்கிருந்து மறைந்து விடவேண்டும் என்பதைத் தவிர வேறொன்றும் அவன் விரும்பவில்லை.

காற்றை எதிர்த்து சிகரெட்டைப் பற்றவைக்க முயற்சி செய்து கொண்டிருந்த கோரா திரும்பி குதிரைவண்டியைப் பார்த்து நடந்தான். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்தனர். வாத்தியார் மங்குவுக்கு இரண்டு துப்பாக்கிகள் நேருக்குநேராக சுட்டுக் கொள்வதைப் போல உணர்ந்தான்.

கடைசியில் அவன் அடக்கிவைக்கப்பட்ட சீற்றத்தோடு அந்த படைவீரனைப் பார்த்துக் கொண்டே கீழே இறங்கினான்.

“ நீ பேசாம வாறீயா இல்ல ஏதாவது பிரச்னைப் பண்ணப்போறீயா “ என்று கோரா தன்னுடைய உடைந்த உருதுவில் கேட்டான். “ இந்தப் பன்னியை எனக்குத் தெரியும் “ என்று மங்கு தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். இது அவனே தான் ஒரு வருடத்துக்கு முன்னால் அவனிடம் சண்டை போட்டவனே தான் என்று நிச்சயப்படுத்திக் கொண்டான். அப்போது அவன் குடித்திருந்தான். வாத்தியார் மங்குவை அவன் வைதான். அத்தனை வசவுகளையும் அவமானங்களையும் அமைதியாக ஏற்றுக் கொண்டான். அந்த வேசைமகனின் மண்டையை உடைக்க வேண்டுமென்று விரும்பினான். ஆனால் அந்த வழக்கு நீதிமன்றத்துக்குப் போனால் இந்த எளிய குதிரைவண்டிக்காரனின் கழுத்தைப் பிடிப்பார்கள் என்று அவனுக்குத் தெரியும்.

“ நீங்க எங்கே போகணும்? “ என்று வாத்தியார் மங்கு கேட்டான். இப்பொழுது இந்தியாவில் புதிய அரசியலமைப்பு சட்டம் அமுலுக்கு வந்திருக்கிறது என்பதை அவன் மறக்கவில்லை.

“ ஹீரா மண்டி… நடனமாடும் பெண்கள் கடைவீதிக்கு….” என்று கோரா சொன்னான்.

“ அதுக்கு அஞ்சு ரூபா ஆகும்..” என்று வாத்தியார் மங்கு சொன்னான், அப்போது அவனுடைய மீசை நடுங்கியது.

“ என்னது அஞ்சு ரூபாயா…உனக்கென்ன பைத்தியமா..” என்று கோரா நம்ப முடியாமல் கத்தினான்.

“ இந்தா பாரு.. உனக்கு உண்மையிலேயே போகணுமா… இல்ல என்னோட நேரத்த வீணாக்க விரும்புறீயா…” என்று வாத்தியார் மங்கு அவனுடைய முஷ்டியை இறுக்கிக் கொண்டு கேட்டான்.

கோராவுக்கு அவர்களுக்கிடையில் நடந்த சண்டை ஞாபகத்துக்கு வந்து விட்டதால் நெஞ்சை நிமிர்த்தும் வாத்தியார் மங்குவின் கோபத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவனுடைய திமிர்த்தனத்துக்கு இன்னொரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தான் கோரா. அவன் இரண்டடி முன்னால் போய் அவனுடைய பிரம்பை அந்த இந்தியனின் தொடை மீது வீசினான்.

வாத்தியார் மங்கு கடுமையான வெறுப்புடன் அவனை விட சிறிய உருவமான கோராவைப் பார்த்தான். பிறகு அவனுடைய கையை உயர்த்தி தாடையில் ஓங்கி அடித்தான். தொடர்ந்து இரக்கமில்லாமல் அந்த ஆங்கிலேயனை அடித்துக் கொண்டேயிருந்தான்.

கோராவுக்கு உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று நம்பமுடியவில்லை. அவன்மீது தொடர்ந்து இறங்கிக் கொண்டிருந்த அடிகளைத் தடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் அவனுக்கு அதிர்ஷ்டமில்லை. அவனுடைய எதிரி கிட்டத்தட்ட பைத்தியக்காரமனநிலையை தொட்டுக் கொண்டிருந்ததை அவனால் பார்க்க முடிந்தது.கையறுநிலையில் அவன் உதவிக்காக சத்தம் போட ஆரம்பித்தான். இது இன்னும் வாத்தியார் மங்குவின் ஆக்ரோஷத்தை அதிகப்படுத்தியது. அடிகள் இன்னும் பலமாக விழுந்தது. அவன் கோபத்துடன் அலறினான், “ ஏப்ரல் 1 ஆம் தேதியிலும் அதே வீறாப்பா.. மகனே! இப்போ எங்களோட ராஜ்யம் நடந்துக்கிட்டிருக்கு ”

கூட்டம் கூடி விட்டது. எங்கிருந்தோ இரண்டு போலீஸ்காரர்கள் வந்தார்கள் மிகுந்த முயற்சி செய்து அந்த துரதிருஷ்டசாலியான ஆங்கிலேயனைக் காப்பாற்றினார்கள். அது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. அங்கே வாத்தியார் மங்குவை இடது பக்கம் ஒரு போலீஸ்காரனும் வலது பக்கம் இன்னொரு போலீஸ்காரனும் பிடித்துக் கொள்ள எதிர்த்து விரிந்த தன் நெஞ்சை முன்னுக்குத் தள்ளியபடி அவன் நின்று கொண்டிருந்தான்.+ அவன் வாயில் நுரை தள்ளியது. ஆனால் கண்களில் ஒரு விநோதஒளி வீசியது. சுற்றிலும் திகைத்துபோய் நின்று கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து வாத்தியார் மங்கு, “ அந்த நாட்கள் போய்விட்டன நண்பர்களே! நாம் எதற்கும் லாயக்கில்லாதவர்களாக இருந்த காலம்.. இப்போது புதிய சட்டம்…ஆம் புதிய அரசியலமைப்பு சட்டம்! புரிந்ததா? “ என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

அந்த ஆங்கிலேயனின் முகம் வீங்கிப் போயிருந்தது. அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவனுக்கு இன்னும் என்ன நடந்தது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. வாத்தியார் மங்கு உள்ளூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான். எல்லாநேரமும் காவல்நிலையத்துக்குள்ளேயும் “ புதிய சட்டம்…புதிய அரசியலமைப்புச் சட்டம்..” என்று அலறிக் கொண்டிருந்தான்

“ என்ன முட்டாள்த்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறாய்? என்ன புதிய அரசியலமைப்புச் சட்டம்.. எல்லாம் அதே பழைய அரசியலமைப்புச் சட்டம்…தான் முட்டாளே..” என்று அவனுக்குச் சொல்லப்பட்டது.

பின்னர் அவர்கள் அவனை சிறையில் அடைத்தனர். 1400463_750454114981778_1170040150_oஅக்டோபர் 20 ஆம் தேதி தாம்பரத்தில்  சாதத் ஹசன் மண்ட்டோவின் சிறுகதைத் தொகுப்பான ‘ சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்’ என்ற நூல்( மொழிபெயர்ப்பு- உதயசங்கர் )  மார்க்சியக்கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர். சீதாராம் யெச்சூரி வெளியிட்டார். இது ஒரு நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் வெளியீடு. விலை ரூ.145/-

Wednesday, 9 October 2013

கடவுளின் மனிதன்

 

சாதத் ஹசன் மண்டோ

ஆங்கிலத்தில்- காலித் ஹசன்

தமிழில்- உதயசங்கர்

Saadat_hasan_manto

சௌத்ரிமௌஜூ அவனுடைய ஹூக்காவைப் புகைத்துக் கொண்டு இலைகள் அடர்ந்த ஒரு அரசமரத்தின் கீழ் ஒரு கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்திருந்தான். உச்சிப்பொழுது வெப்பமாயிருந்தது. ஆனால் வயல்களிலிருந்து வீசிய மெல்லிய தென்றல் ஹூக்காவின் ஊதா நிறப்புகையைக் கலைத்து விசிறியடித்தது.

அவன் அதிகாலையிலிருந்தே அவனுடைய வயலை உழுது கொண்டிருந்தான். ஆனால் இப்போது சோர்ந்து போய்விட்டான். சூரியன் சுட்டெரித்தான். ஆனால் அதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டில்லை. அவன் கிடைத்த அந்த ஓய்வை அநுபவித்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய ஒரே மகளான ஜீனா அவனுடைய மதிய உணவான சுட்டரொட்டியும் மோரும் கொண்டு வருவதை எதிர்பார்த்து அவன் அங்கே உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தான். வீட்டு வேலைகளில் அவளுக்கு உதவி செய்ய யாரும் இல்லையென்றாலும் அவள் எப்போதும் நேரத்திற்கு வந்து விடுவாள். அவன் ஒரு கோபாவேசத்தில் அவளுடைய அம்மாவை இரண்டு வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து விட்டான்.

ஜீனா அப்பாவை நன்றாகக் கவனித்துக் கொள்கிற கீழ்ப்படிதலுள்ள மகளாக இருந்தாள். அவள் ஒருபோதும் சும்மா இருந்ததில்லை. அவளுடைய வீட்டு வேலைகள் முடிந்து விட்டால் அவள் கை ராட்டினத்தில் நூல் நூற்கும் வேலையைச் செய்வாள். எப்போதாவது தான் அவளுடைய தோழிகளிடம் கதை பேசப்போவாள்.

சௌத்ரிமௌஜூக்கு அதிக நிலம் இல்லை. ஆனால் அவனுடைய எளிய தேவைகளுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. அந்தக் கிராமம் சிறியது. பல மைல் தூரத்தில் ரயில்நிலையம் இருந்தது. அந்த கிராமத்தை ஒரு மண்சாலை தான் இன்னொரு கிராமத்தோடு இணைத்தது. அதில் தான் சௌத்ரிமௌஜூ மாதம் இரண்டு முறை பலசரக்கு வாங்கப் போவான்.

அவன் மகிழ்ச்சியானவனாகவே எப்போதும் இருந்தான். ஆனால் அவனுடைய விவாகரத்திலிருந்து அவனுக்கு வேறு குழந்தைகள் இல்லை என்கிற விஷயம் அவனைத் தொந்திரவு செய்து கொண்டேயிருந்தது. இருந்தாலும் அவன் சிறந்த மதப்பற்றாளனாக இருந்ததால் இதெல்லாம் கடவுளின் சித்தம் என்று தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டு சமாளித்தான்.

அவனுடைய நம்பிக்கை ஆழமானது. ஆனால் அவனுக்கு மதத்தைப் பற்றி எதுவும் தெரியாது. கடவுள் இருக்கிறார், அவரை வணங்க வேண்டும். முகமது அவருடைய தீர்க்கதரிசி. குரான் முகமதுக்குக் கடவுள் வெளிப்படுத்திய செய்தி. அவ்வளவு தான் அவனுக்குத் தெரியும்.

அவன் ஒருபோதும் நோன்பு இருந்ததில்லை. தொழுகை நடத்தியதில்லை. உண்மையில் அந்த கிராமம் மிகச் சிறியது என்பதால் அதில் ஒரு மசூதி கூட இல்லை. மக்கள் தங்கள் வீடுகளில் தொழுதனர். பொதுவாகவே கடவுளுக்குப் பயந்தவர்களாக இருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் குரான் ஒரு பிரதி இருந்தது. ஆனால் யாருக்கும் அதை எப்படி வாசிப்பது என்று தெரியாது. அது வீட்டிலுள்ள மேலடுக்கில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். எப்போதாவது யாராவது உறுதிமொழி எடுக்க வேண்டி வரும்போது பயன்படுத்தப்படும்.

திருமணங்களில் சடங்குகளை நடத்துவதற்காக ஒரு மௌல்வியை அந்தக் கிராமத்துக்கு வரவழைப்பார்கள். இறுதிச் சடங்குப் பிரார்த்தனைகளை கிராமத்துக்காரர்களே செய்து விடுவார்கள். அரபியில் இல்லை. அவர்களுடைய சொந்த மொழியான பஞ்சாபியில் பிரார்த்தனை செய்வார்கள். சௌத்ரிமௌஜூக்கு அந்த மாதிரியான நேரங்களில் கிராக்கி அதிகமாக இருக்கும். அவன் அவனுக்கென்று சுயமாக அஞ்சலி உரையை உருவாக்கிக் கொள்வான்.

உதாரணத்திற்கு,ஒரு வருடத்துக்கு முன்னால் அவனுடைய நண்பன் டினூ தன் மகனை இழந்து விட்டான். சௌத்ரிமௌஜூ கல்லறைக்குள் பிரேதத்தை இறக்கிய பிறகு கிராமத்தார்களிடம் இரங்கல் உரையை நிகழ்த்தினான்.

எப்பேர்ப்பட்ட அழகான, பலசாலியான இளைஞன் அவன்! அவன் எச்சிலைத் துப்பினால் அது இருபது அடி தூரம் தள்ளி விழும். அதேபோல அவனுடைய அடிவயிற்றில் அவ்வளவு சக்தி இருந்தது. அதனால் அவனால் இந்தக் கிராமத்திலிருக்கிற எந்த இளைஞனை விடவும் மிகத் தூரமாக மூத்திரம் பெய்ய முடியும். மல்யுத்தப்போட்டியில் அவன் ஒருபோதும் தோற்றதில்லை. நீங்கள் சட்டை பொத்தானைக் கழட்டுகிற மாதிரி அவன் எதிரியின் பிடியிலிருந்து மிகச் சுலபமாகத் தன்னை விடுவித்துக் கொள்வான்.

டினூ என் நண்பனே! உனக்கான தீர்ப்பு நாள் ஏற்கனவே இங்கே எழுதப்பட்டு விட்டது. நீ அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று நான் சந்தேகப்படுகிறேன். நீ கட்டாயம் இறந்து விடுவாய் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இவ்வளவு பெரிய அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டு நீ எப்படி வாழப்போகிறாய்? ஓ….எத்தனை அழகிய வாலிபன் உன்னுடைய மகன்! எனக்கு உண்மையில் தெரியும் தங்க ஆசாரியின் மகள் நெட்டி அவனுடைய காதலைப் பெறுவதற்காகப் பலமுறை வசிய மந்திரத்தை ஏவினாள். ஆனால் அவன் அவளை நிராகரித்து விட்டான். அவளுடைய அழகும் இளமையும் அவனை மயக்கவில்லை. கடவுள் சொர்க்கத்தில் அவனுக்கு ஒரு எழில் அணங்கை வழங்கட்டும். அங்கும் அவன் தங்க ஆசாரியின் மகள் நெட்டியிடம் இருந்ததைப் போலவே அந்த எழில் அணங்கிடம் மயங்காமல் இருக்கட்டும். கடவுள் அவன் ஆத்மாவை ஆசீர்வதிக்கட்டும்.

இந்தச் சுருக்கமான உரையை மிக உணர்ச்சிகரமாக நிகழ்த்துவான். சௌத்ரிமௌஜூ உட்பட எல்லோருக்கும் அழுது விடுவார்கள்.

மௌஜூ அவனுடைய மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று முடிவு செய்த போது அவன் மௌல்விக்கு ஆளனுப்பவில்லை. அவனுக்கு மூத்தவர்களிடமிருந்து அவன் கேள்விப்பட்டிருந்தான். அதற்குத் தேவையானதெல்லாம் அவன் மூன்று முறை ‘ தலாக்…தலாக்…தலாக்..’ என்று சொல்ல வேண்டியது தான். உண்மையில் அதைத் தான் அவன் செய்தான். மறுநாள் அவன் வருத்தப்பட்டான். அதோடு அவனை நினைத்தே அவன் வெட்கப்பட்டான். கணவன், மனைவிக்குள் வருகிற தினசரிச் சச்சரவுக்கு மேல் பெரிய தீவிரமான எதுவும் அதில் கிடையாது. அது விவாகரத்தில் முடிய வேண்டிய அவசியமும் இல்லை.

அவனுடைய மனைவி பதானை அவன் விரும்பவில்லை என்று சொல்லமுடியாது. அவன் அவளை விரும்பினான். அவள் இளமையாக இல்லையென்றாலும் அவள் உடம்பு கட்டுக்கோப்பாக இருந்தது. அதோடு அவனுடைய மகளுக்குத் தாய் அவள். இதற்கு மேல் என்ன வேண்டும். ஆனால் அவன் அவளைத் திரும்பி அழைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அப்படியே வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

ஜீனா அவளுடைய அம்மா இளமையில் இருந்ததைப் போலவே அழகாக இருந்தாள். சிறு பெண்ணாக இருந்த அவள் இரண்டு வருடங்களில் இளமையான, கவர்ச்சியான, பெண்ணாக, வளர்ந்திருந்தாள். அவன் அடிக்கடி அவளுடைய திருமணத்தைப் பற்றிக் கவலைப்பட்டான். குறிப்பாக அந்த நேரங்களில் அவனுடைய மனைவியைத் தேடுவான்.

அவன் இப்போது அவனுடைய கயிற்றுக் கட்டிலில் சாய்ந்து கொண்டு இன்பமாகப் புகைத்துக் கொண்டிருந்தான். அப்போது

“ கடவுளின் ஆசீர்வாதங்களும், சாந்தியும் உன் மீது இறங்கட்டும்…”

என்ற குரல் கேட்டது.

அவன் திரும்பினான். அங்கே ஒரு வயதான மனிதர் தூய வெள்ளாடை உடுத்தி காற்றில் அலைபாயும் தாடியுடன், தோள்வரை வளர்ந்த நீண்ட தலைமுடியுடன், நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். எங்கேயிருந்து அவர் முளைத்து வந்தார் என்று ஆச்சரியத்துடன் மௌஜூ அவரை வணங்கினான்.

அந்த மனிதர் உயரமாக இருந்தார். அவருடைய முகத்தில் பெரிய கருப்பிந்திய கண்கள் குறிப்பிடத்தகுந்ததாக இருந்தன.அவர் தலையில் ஒரு பெரிய வெள்ளைத் தலைப்பாகையும் அவருடைய ஒரு தோளில் மஞ்சள் துண்டும் அணிந்திருந்தார்.அவருடைய கையில் வெள்ளிப்பிடி போட்ட கைத்தடி வைத்திருந்தார். அவருடைய பூட்ஸ் மென்மையான தோலால் செய்யப்பட்டிருந்தது.

சௌத்ரிமௌஜூ உடனே அவரால் கவரப்பட்டான். இன்னும் சொல்லப்போனால் அவருடைய அழுத்தமான பெரியமனிதத் தோற்றத்தினால் அவனுக்கு வியப்பு விளிம்பிட்ட ஒரு ஆழ்ந்த மரியாதை அவர் மீது தோன்றியது. அவன் கட்டிலிலிருந்து எழுந்து,

“ நீங்கள் எங்கிருந்து எப்போது வந்தீர்கள்?”

என்று கேட்டான்.

அந்த மனிதர் புன்முறுவலோடு,

“ நாங்கள் கடவுளின் மனிதர்கள் சூன்யத்திலிருந்து வருவோம்.. எங்களுக்கு போவதற்கு வீடு கிடையாது. எந்தக் கணத்தில் வருவோம்.. எப்போது போவோம் என்று யாருக்கும் தெரியாது.. அந்தக் கடவுள் அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற எங்களுக்கு வழி காட்டுவார்.. அதேபோல அந்தக் கடவுள் தான் எங்களுடைய பிரயாணத்தை எங்கே நிறுத்தவேண்டும் என்றும் கட்டளையிடுவார்..”

என்று சொன்னார். சௌத்ரிமௌஜூவை இந்த வார்த்தைகள் மிகவும் பாதித்தன. அவன் அந்தப் புனிதரின் கையைப் பிடித்து மிகுந்த மரியாதையுடன் முத்தமிட்டு கண்களில் ஒற்றிக் கொண்டான். பின்பு,

“ என்னுடைய எளிய வீடு உங்களுடையது..”

என்று சொன்னான்.

அந்தப் புனிதர் புன்னகையுடன் கட்டிலில் உட்கார்ந்தார். அவருடைய இரண்டு கைகளாலும் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு அதில் தலை சாய்த்துக் கொண்டு,

“ உன்னுடைய எந்தக் காரியம் கடவுளின் கண்களுக்குப் பிடித்து அவர் இந்தப் பாவியை உன்னிடம் அனுப்பியிருக்கிறார் என்று யார் சொல்ல முடியும்? “

என்று சொன்னார். உடனே சௌத்ரிமௌஜூ,

“ மௌல்வி சாகிப்.. நீங்கள் கடவுளின் ஆணைப்படியா என்னைத் தேடி வந்தீர்கள்?”

என்று கேட்டான். அந்தப் புனிதர் தலையை உயர்த்தி கோபமான குரலில்,

“ அப்படின்னா உன்னுடைய கட்டளையின் பேரில் இங்கே வந்தேன் என்று நினைக்கிறீயா.. உனக்குக் கீழ்ப்படிவோமா இல்லை நாப்பது வருடங்களாக பணிவுடன் அந்தக் கடவுளைத் தொழுது வந்ததிருக்கிறோம். கடைசியில் அவர் அவருடைய அருளைப் பெற எங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் அவருக்குக் கீழ்ப்படிவோமா?..”

என்று சொன்னார். சௌத்ரிமௌஜூ பயந்து விட்டான். அவனுடைய எளிய கிராமத்துப் பாணியில் அவன் தேம்பிக் கொண்டே,

“ மௌல்வி சாகிப் நாங்கள் படிப்பறிவில்லாத மக்கள் இதைப்பற்றியெல்லாம் எதையும் அறியாதவர்கள்.. எங்களுக்கு எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூடத் தெரியாது..உங்களைப் போன்ற கடவுளின் மனிதர்கள் கிடையாது.. அதனால் கடவுளின் கண்களில் பாவமன்னிபை நாங்கள் பார்த்ததேயில்லை..”

என்று சொன்னான்.

“ அதற்காகத் தான் நாம் இங்கிருக்கிறோம்..”

என்று அந்தப் புனிதர் பாதிக்கண்களை மூடிக் கொண்டே சொன்னார்.

சௌத்ரிமௌஜூ கீழே தரையில் உட்கார்ந்து கொண்டு விருந்தினரின் கால்களை அமுக்கி விட்டுக் கொண்டிருந்தான். அப்போது ஜீனா அவனுடைய சாப்பாட்டுடன் அங்கு வந்தாள். அவள் அந்த அந்நியரைப் பார்த்தவுடன் அவளுடைய முகத்தை மூடிக் கொண்டாள்.

“ யார் அது சௌத்ரிமௌஜூ? “

“ என்னுடைய மகள்..மௌல்வி சாகிப்..”

மௌல்வி சாகிப் ஓரக்கண்ணால் ஜீனாவைப் பார்த்துக் கொண்டே,

“ எங்களைப் போன்ற பிச்சைக்காரங்க முன்னால ஏன் அவள் முகத்தை மூடணும்னு கேளு..”

என்று சொன்னார்.

“ ஜீனா.. மௌல்வி சாகிப் கடவுளோட விஷேசத் தூதுவர்.. முக்காட்ட எடுத்துரு..”

என்று அவன் சொன்னான். ஜீனா அவளிடம் சொல்லப்பட்டதைச் செய்தாள். மௌல்வி சாகிப் அப்படியே அவளை மேலும் கீழும் அளவெடுத்துக் கொண்டே,

“ உன்னோட மகள் அழகாக இருக்கிறாள்..சௌத்ரிமௌஜூ..”

என்று சொன்னார். ஜீனா வெட்கப்பட்டாள். மௌஜு,

“ அவள் அவளோட அம்மா மாதிரி..”

என்று சொன்னான். ஜீனாவின் இளமை பொங்கும் கன்னியுடலை நோட்டமிட்டுக் கொண்டே,

“ அவளோட அம்மா எங்கே? “

என்று கேட்டார். அதற்கு எப்படிப் பதில் சொல்வதென்று தெரியாமல் சௌத்ரிமௌஜூ தயங்கினான். திரும்பவும் மௌல்வி சாகிப்,

“ அவளோட அம்மா எங்கே? “

என்று கேட்டார். மௌஜூ வேகவேகமாக,

“ அவ இறந்துட்டா..”

என்று சொன்னான். அதைக்கேட்டு திடுக்கிட்ட ஜீனாவைக் கவனமாகப் பார்த்தார். பிறகு அவர்,

“ நீ பொய் சொல்றே..”

என்று முழங்கினார். மௌஜூ அவர் காலில் விழுந்தான். குற்றவுணர்ச்சியுடன்,

“ ஆமாம். நான் உங்க கிட்ட பொய் சொன்னேன்..தயவு செய்ஞ்சு என்ன மன்னிச்சிருங்க.. நான் ஒரு பொய்யன்.. உண்மை என்னன்னா.. நான் அவளை விவாகரத்து பண்ணிட்டேன்..மௌல்வி சாகிப்..”

என்று சொன்னான்.

“ நீ ஒரு பெரிய பாவி.. அந்தப் பெண் செய்த தவறு தான் என்ன? “

“ எனக்குத் தெரியல..மௌல்வி சாகிப்.. அது வந்து உண்மையிலே ஒண்ணுமில்லை..ஆனா கடைசியில அவளை விவாகரத்து செய்யும்படியாயிருச்சி.. உண்மையில நான் ஒரு பாவி.. நான் மறுநாளே என்னோட தப்ப உணர்ந்துட்டேன்.. ஆனால் ரெம்பத் தாமதமாகியிருச்சி..அதுக்குள்ளே அவ அவளோட அப்பாஅம்மாகிட்ட போயிட்டா..”

மௌல்வி சாகிப் தன்னுடைய வெள்ளிக் கைப்பிடி போட்ட கைத்தடியினால் மௌஜூவின் தோள்களைத் தொட்டு,

“ கடவுள் பெரியவர்.. அவர் கருணையும் அன்பும் கொண்டவர்.. அவர் விரும்பினால் எல்லாத் தவறுகளையும் சரி செய்து விடலாம்.. அது தான் அவருடைய கட்டளையாக இருந்தால் அவருடைய இந்த வேலைக்காரன் உன்னை உன்னுடைய மீட்சியை நோக்கி வழி நடத்தவும் உனக்கு மன்னிப்பு வழங்கவும் சக்தி படைத்தவனாகிறான்..”

என்று சொன்னார். முழுமையான பணிவுடனும் நன்றியுடனும் சௌத்ரி மௌஜூ அவருடைய கால்களில் விழுந்து அழுதான். மௌல்வி சாகிப் ஜீனாவைப் பார்த்தார். அவளுடைய கன்னங்களிலும் கண்ணீர் வழிந்தோடியது.

“ இங்கே.. வா..பெண்ணே..” என்று கட்டளையிட்டார் அவர்.

அவருடைய குரலில் அப்படியோரு அதிகாரம் இருந்தது. அவளால் அதற்குக் கீழ்ப்படியாமல் இருக்க முடியவில்லை.அவள் சாப்பாட்டை ஓரமாக வைத்து விட்டு அவரை நோக்கி நடந்தாள். மௌல்வி சாகிப் அவளுடைய கைகளைப் பற்றி இழுத்து,

“ உட்கார்..”

என்று சொன்னார்.

அவள் கீழே தரையில் உட்காரப்போனாள். ஆனால் மௌல்வி சாகிப் அவளை அவர் பக்கமாக இழுத்து,

“ என் பக்கத்தில இங்கே உட்கார்..”

என்று உத்தரவிட்டார். ஜீனா உட்கார்ந்தாள். மௌல்வி சாகிப் அவருடைய கைகளால் அவளுடைய இடுப்பைச் சுற்றி வளைத்து அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டே,

“ சரி.. எங்களுக்காக என்ன கொண்டு வந்திருக்கிறாய்..? ”

என்று கேட்டார். ஜீனா விலக நினைத்தாள். ஆனால் மௌல்வி சாகிப்ப்பின் பிடி கிடுக்கிப் பிடியாக இருந்தது.

“ சுட்ட ரொட்டியும் மோரும் கொஞ்சம் கீரையும் கொண்டு வந்திருக்கேன்..”

என்று தாழ்ந்த குரலில் சொன்னாள். மௌல்வி அவளுடைய மெல்லிய இடையை மறுபடியும் ஒரு தடவை பிசைந்தார். பின்பு,

“ அப்படியா..போ.. போய் அதைக் கொண்டு வந்து எங்களுக்குச் சாப்பாடு போடு..”

ஜீனா எழுந்தவுடன் மௌல்வி சாகிப் தன்னுடைய கைத்தடியினால் மௌஜூவின் தோள்களில் மெல்லத் தட்டி,

“ மௌஜூ.. என்னுடைய கைகளைக் கழுவ உதவி செய்..”

மௌஜூ அருகிலிருந்த கிணற்றுக்குச் சென்றான். ஒரு வாளியில் நல்ல தண்ணீரைக் கொண்டு வந்தான். ஒரு உண்மையான சிஷ்யனைப் போல அவன் மௌல்வி சாகிப் அவருடைய கைகளைக் கழுவ உதவினான். ஜீனா உணவை அவருக்கு முன்னால் வைத்தாள்.

மௌல்வி சாகிப் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டார். பின்பு அவர் அவருடைய கைகளைக் கழுவத் தண்ணீர் ஊற்றும்படி ஜீனாவுக்கு ஆணையிட்டார். அவள் கீழ்ப்படிந்தாள். அவருடைய செய்கையில் அப்படி ஒரு அதிகாரம் இருந்தது.

மௌல்வி சாகிப் சத்தமாக ஏப்பமிட்டார். அதை விட சத்தமாக கடவுளுக்கு நன்றி சொன்னார். ஈரக்கைகளால் அவருடைய தாடியைக் கோதி விட்டுக் கொண்டே கட்டிலில் சாய்ந்தார். ஒரு கண்ணால் ஜீனாவையும், இன்னொரு கண்ணால் அவளுடைய அப்பாவையும் கவனித்தார். அவள் சாப்பாட்டுப்பாத்திரங்களை எடுத்துக் கொண்டு போனாள். மௌல்வி சாகிப் மௌஜூவிடம்,

“ சௌத்ரி.. நாம் சற்று ஓய்வெடுக்கப் போகிறோம்..”

என்று சொன்னார்.

சௌத்ரி அவருடைய கால்களையும் பாதங்களையும் கொஞ்சநேரம் அமுக்கி விட்டான். அவர் உறங்கிவிட்டார் என்பதை உறுதிசெய்த பிறகு அங்கிருந்து நகர்ந்து அவனுடைய ஹூக்காவை பற்ற வைத்தான். அவன் சந்தோஷமாக இருந்தான். அவனுடைய நெஞ்சிலிருந்து மிகப்பெரிய பாரத்தை அகற்றியது போல அவன் உணர்ந்தான். அவனுக்குத் தெரிந்த எளிய வார்த்தைகளால் கருணையின் தேவர்களில் ஒருவரை மௌல்வி சாகிப்பின் வடிவில் கடவுள் அவனிடம் அனுப்பி வைத்தற்காக இதயபூர்வமாக நன்றி சொன்னான்.

மௌல்வி சாகிப் ஓய்வெடுப்பதையே சற்று நேரம் அங்கேயே இருந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அவனுடைய வயலுக்கு வேலை செய்யப் போனான். அவனுடைய பசி கூட அவனுக்குத் தெரியவில்லை. உண்மையில் மௌல்வி சாகிப்புக்கு உணவளிக்கும் கௌரவமே அவனுக்குப் பெரிய விஷயமாக இருந்தது.

மாலையில் அவன் வேலை முடிந்து திரும்பியபோது மௌல்வி சாகிப் அங்கில்லாதது மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. அவன் அவனையே சபித்துக் கொண்டான். அந்த இடத்தை விட்டு போய் அவன் கடவுளின் மனிதரை அவமானப்படுத்தி விட்டான். ஒருவேளை போவதற்கு முன்னால் அவர் அவனைச் சபித்து விட்டும் போயிருக்கலாம். அவன் பயத்தில் நடுங்கினான். கண்ணீர் அவனுடைய கண்களில் குளமாய் கட்டியது.

அவன் கிராமத்தில் மௌல்வி சாகிப்பைத் தேடிப்பார்த்தான். ஆனால் அவரைக் காணவில்லை. மாலை இரவினுள் மூழ்கிக் கொண்டிருந்தது. ஆனால் மௌல்வி சாகிப்பைப் பற்றி ஒரு துப்பும் தெரியவில்லை. அவனுடைய வீட்டை நோக்கி ஏதோ இந்த உலகத்தையே அவனுடைய தோள்களில் சுமப்பதைப் போல அவன் தலையைக் குனிந்து கொ்ண்டே நடந்தான். கிராமத்திலிருந்து இரண்டு இளைஞர்களை அவன் எதிர்கொண்டான். அவர்கள் பயந்து போயிருந்தார்கள். முதலில் அவர்கள் என்ன நடந்ததென்று சொல்லவில்லை. அவன் வற்புறுத்திக் கேட்டபிறகே அவர்களுடைய கதையைச் சொன்னார்கள்.

கொஞ்ச நாளைக்கு முன்னால் அவர்கள் கடுமையான நாட்டுச்சாரயத்தைக் காய்ச்சி வடித்து மண்பானையில் ஊற்றி ஒரு மரத்தின் அடியில் புதைத்து வைத்தார்கள். அன்று மாலை அவர்கள் அந்த இடத்துக்குப் போனார்கள். அவர்களுடைய விலக்கப்பட்ட செல்வத்தைத் தோண்டியெடுத்தார்கள். அதைக் குடிக்கப்போகும் சமயம் ஒரு வயதான மனிதர் ஒரு விசித்திரமான ஓளி முகத்தில் வீச திடீரென அந்த இடத்தில் பிரசன்னமாகி அவர்கள் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டார்.

அவர்கள் செய்யவிருந்த பாவச்செயலுக்காக அவர்களைக் கடுமையாக ஏசினார். கடவுளே மனிதர்கள் தொடவேக்கூடாது என்று விலக்கிவைத்திருந்ததைக் எப்படி அவர்கள் குடிக்க நினைக்கலாம் என்று கேட்டார். அவர்கள் திகிலடைந்துபோய் அந்த இடத்தை விட்டு மண்பானையை அங்கேயே விட்டு விட்டு ஓடிப்போய் விட்டார்கள்.

சௌத்ரி மௌஜூ அவர்களிடம் சொன்னார், அந்த விசித்திரமான ஒளி வீசும் வயதான மனிதர் யார் தெரியுமா அவர் கடவுளின் புனிதர். அவர் அவமானப்படுத்தப் பட்டதால் அநேகமாக அந்த முழுக்கிராமத்தின் மீதும் சாபம் விட்டுப் போயிருக்கலாம்.

கடவுள் நம்மை காப்பாற்றட்டும் என் மக்களே...கடவுள் நம்மை காப்பாற்றட்டும்…..என் மக்களே.. என்று அவன் முணுமுணுத்தவாறே அவனுடைய வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஜீனா வீட்டிலிருந்தாள். ஆனால் அவன் அவளிடம் பேசவில்லை. மௌல்வி சாகிப்பின் சாபத்திலிருந்து தப்பமுடியாது என்று அவன் மனதார நம்பினான்.

ஜீனா மௌல்வி சாகிப்பிற்கும் சேர்த்துக் கூடுதல் உணவு தயாரித்திருந்தாள்.

அவள் “ அப்பா மௌல்வி சாகிப் எங்கே? ” என்று கேட்டாள்.

“ போய்ட்டாரு.. அவர் போய்ட்டாரு.. எப்படி கடவுளின் மனிதரால் நம்மைப் போன்ற பாவிகளோடு சேர்ந்து இருக்க முடியும்? “ என்று வருத்தந்தோய்ந்த குரலில் அவன் சொன்னான்.

ஜீனாவும் வருத்தப்பட்டாள். ஏனென்றால் மௌல்வி சாகிப் அவளுடைய அம்மாவை திரும்பி வரவழைக்க ஒரு வழி கண்டுபிடிப்பதாக வாக்களித்திருந்தார். இப்போதென்றால் அவர் போய் விட்டார் அவளை அவளுடைய அம்மாவுடன் சேர்த்து வைப்பதற்கு. இனி யாரிருக்கிறார்கள்? ஜீனா கீழே மணைப்பலகையில் உட்கார்ந்தாள். உணவு குளிர்ந்து கொண்டிருந்தது.

கதவை நோக்கி நெருங்கி வரும் காலடி ஓசையை அவர்கள் கேட்டார்கள். அப்பாவும் மகளும் துள்ளியெழுந்தார்கள். திடீரென மௌல்வி சாகிப் உள்ளே நுழைந்தார். கிளியாஞ்சட்டி விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் அவர் தடுமாறிக் கொண்டே வருவதைப் பார்த்துவிட்டாள். அவருடைய கையில் ஒரு சிறிய மண்கலயத்தை வைத்திருந்தார்.

மௌஜூ அவர் கட்டிலில் உட்காருவதற்கு உதவி செய்தான். அவனிடம் அந்த மண்கலயத்தைக் கொடுத்துக்கொண்டே மௌல்வி சாகிப்,

” இன்று கடவுள் நம்மை பெருஞ்சோதனைக்கு ஆட்படுத்திவிட்டான். எதிர்பாராதவிதமாக உன் கிராமத்திலிருந்து கொடிய பாவமான சாரயம் குடிக்கவிருந்த இரண்டு இளைஞர்களைச் சந்தித்தேன். நாம் அவர்களை நிந்தித்த போது அவர்கள் ஓடி விட்டார்கள். நாம் மிகுந்த துக்கத்திலிலாழ்ந்து விட்டோம். அவ்வளவு இளம்வயதில் இவ்வளவு கொடிய பாவமா? ஆனால் அவர்களுடைய இளமைதான் அவர்களை இந்தப்பாவத்தைச் செய்யத் தூண்டியது என்று நாம் உணர்ந்தோம். கடவுளின் மேலோக நீதிமன்றத்தில் அவர்களை மன்னித்தருளுமாறு நாம் பிரார்த்தனை செய்தோம். நமக்கு என்ன பதில் கிடைத்ததென்று உனக்குத் தெரியுமா? “ என்று கேட்டார்.

” தெரியாது..” என்று உணர்ச்சிவயப்பட்டு சௌத்ரி மௌஜூ கூறினான்.

“ அந்த பதில் என்னவென்றால் நீ அவர்களுடைய பாவத்தின் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராய் இருக்கிறாயா? அதற்கு நாம் சொன்னோம் சரி எல்லாம்வல்ல இறைவனே. அதன் பிறகு நாம் குரலைக் கேட்டோம்.. இந்த மண்கலயத்திலுள்ள அத்தனை சாராயத்தையும் குடிக்கும்படி ஆணையிடுகிறேன். நாம் அந்தப் பையன்களை மன்னித்தருளுவோம்..”

மௌஜூக்கு மயிர்க்கூச்செரிந்தது. “ பிறகு நீங்கள் அதைக் குடித்தீர்களா?”

மௌல்வியின் நாக்கு இன்னும் குழறியது, “ ஆமாம் நாம் குடித்தோம்.. அந்த இளம்பாவிகளின் ஆத்மாக்களைக் காப்பாற்றுவதற்காக..இந்த உலகத்தில் வணங்கவேண்டிய ஒரே ஆளான கடவுளின் கண்களுக்கு முன்னால் மதிப்பைச் சம்பாதிப்பதற்காக.. இன்னும் கொஞ்சம் மீதமிருக்கிறது அதையும் நாம் தான் குடிக்கவேண்டுமென ஆணையிடப்பட்டிருக்கிறோம்.. இப்பொழுது அதைக் கவனமாகப் பத்திரப்படுத்து.. ஒரு சொட்டுகூட வீணாகிவிடக்கூடாது..பாத்துக்கோ..”

மௌஜூ அந்த மண்கலயத்தை எடுத்தான். அதனுடைய வாயை ஒரு சுத்தமான துணியினால் மூடிக்கட்டினான். பின்னர் அதை அவனுடைய எளிய வீட்டிலுள்ள ஒரு இருட்டறையில் வைத்தான். அவன் திரும்பிய போது மௌல்வி சாகிப் கட்டிலில் கைகால்களைப் பரப்பிக் கொண்டு கிடந்தார். ஜீனா அவருடைய தலையைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள்.அவர் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தார், “ யார் மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்களோ அவர்களே கடவுளின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.. அவர் இந்தக் கணத்தில் உன்மீது பிரீதியோடு இருக்கிறார்.. நாமும் உன்மீது பிரீதியோடு இருக்கிறோம்..”

பிறகு மௌல்வி சாகிப் அவருக்கு பக்கத்தில் அவளை உட்காரவைத்து அவளுடைய நெற்றியில் ஒரு அழுத்தமான முத்தத்தைப் பதித்தார். அவள் எழுந்து கொள்ள முயற்சி செய்தாள் ஆனால் அவளால் அவரிடமிருந்து விடுவித்துக் கொள்ள முடியவில்லை. மௌல்வி சாகிப் அவளைக் கட்டியணைத்துக் கொண்டு மௌஜூவிடம் சொன்னார், ” சௌத்ரி நான் உன் மகளுடைய உறங்கிக் கொண்டிருக்கும் விதியை எழுப்புகிறேன்..”

மௌஜூ மிகுந்த உணர்ச்சிவசப்பட்டான். அவனால் நன்றியைக் கூட சரியாகச் சொல்ல முடியவில்லை. அவனால் சொல்ல முடிந்ததெல்லாம்,

“ எல்லாம் உங்களுடைய பிரார்த்தனைகளாலும் அன்பினாலும் வந்தது…”

அவ்வளவு தான். மௌல்வி சாகிப் ஜீனாவை அவருடைய நெஞ்சோடு சேர்த்து இறுக்கிக் கொண்டு சொன்னார், “ உண்மையில் கடவுள் தன்னுடைய அனுக்கிரகத்தை உனக்கு அளித்துவிட்டார். ஜீனா நாளை நாம் உனக்கு புனித பிரார்த்தனையைச் சொல்லிக் கொடுப்போம்.. நீ அதை எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தால் கடவுளின் கண்களுக்கு எப்போதும் நீ ஏற்றவளாக இருப்பாய்..”

மறுநாள் மௌல்வி சாகிப் தாமதமாக எழுந்தார். மௌஜூ ஒருவேளை அவன் அவருக்குத் தேவைப்படலாமோ என்று பயந்து வயலுக்குப் போகவில்லை. கடமையுணர்வோடு அவன் காத்திருந்தான். மௌல்வி கண் விழித்தபோது அவர் தன்னுடைய முகத்தைக் கழுவவும், கைகளைக் கழுவவும் அவன் உதவினான். அவருடைய விருப்பத்திற்கிணங்க அந்த மண்கலயத்தை எடுத்துக் கொண்டு வந்தான்.

மௌல்வி சாகிப் முணுமுணுத்தபடியே ஒரு தொழுகை நடத்தினார். பிறகு மண்கலயத்தின் வாயை மூடியிருந்த துணியை அகற்றி விட்டு மூன்று முறை பானைக்குள் ஊதினார். மூன்று பெரிய கோப்பைகள் நிறைய மதுவைக் குடித்தார். பிறகு இன்னொரு பிரார்த்தனையை முணுமுணுத்தார். வானத்தை அண்ணாந்து பார்த்து முழக்கமிட்டார்.

“ கடவுளே நீ எங்களைச் சோதிக்கும் சோதனையை நாங்கள் விரும்புவதாக நீ நினைத்து விடக்கூடாது..”

பிறகு அவர் மௌஜூவைப் பார்த்து, “ சௌத்ரி, நீ உடனே உன்னுடைய மனைவியின் கிராமத்துக்குப் போய் அவளை அழைத்துக்கொண்டு வரவேண்டும் என்று இப்போதுதான் புனிதகட்டளையை நாம் பெற்றோம்… நாம் எதிர்பார்த்திருந்த சமிக்ஞை கிடைத்துவிட்டது…” என்று சொன்னார்.

மௌஜூவுக்குப் புல்லரித்தது. அவன் குதிரையின் மீது ஏறினான். மறுநாள் அவளை அழைத்து வருவதாக சத்தியம் செய்தான். ஜீனாவிடம் மௌல்வி சந்தோஷமாகவும் வசதியாகவும் இருப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தினான்.

ஜீனாவின் தந்தை போனபிறகு அவள் வீட்டுவேலைகளில் மூழ்கி விட்டாள். மௌல்வி சாகிப் நிதானமாகக் குடித்துக் கொண்டேயிருந்தார். பிறகு அவர் சட்டைப்பையிலிருந்து ஜெபமாலையை எடுத்து அவருடைய விரல்களில் உருட்ட ஆரம்பித்தார். ஜீனா வேலைகளையெல்லாம் முடித்தவுடன் அவர் அவளைச் மேனியலம்பும் சடங்குகளைச் செய்யச் சொன்னார்.

அவள் அப்பாவியாக “ மௌல்விசாகிப், எப்படி அதைச் செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியாது..” என்று சொன்னாள்.

அவசியமான மதச்சடங்குகளைப் பற்றிய அறிவு கூட இல்லாமைக்காக அவளை மென்மையாக மௌல்விசாகிப் கடிந்து கொண்டார். பின்பு அவர் அவளுக்கு மேனியலம்பும் சடங்கை எப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். இந்த சிக்கலான பயிற்சி உடல்களின் நெருக்கம் மூலம் நிகழ்ந்தேறியது.

மேனியலம்பும் சடங்குக்குப் பின்னால் மௌல்விசாகிப் பிரார்த்தனைபாயைக் கேட்டார்.

அந்த வீட்டில் அப்படியொன்று இல்லை. மௌல்விசாகிப் அதிருப்தியடைந்தார். அவர் அவளிடம் ஒரு படுக்கைவிரிப்பைக் கொண்டுவரும்படி சொன்னார். உள்ளறையில் அதைத் தரையில் விரித்து ஜீனாவை உள்ளே வரும்படி ஆணையிட்டார். அதோடு வரும்போது அந்தப்பானையையும், கோப்பையையும் கொண்டு வரச் அறிவுறுத்தினார்.

மௌல்விசாகிப் கோப்பையில் நிறைய ஊற்றி, அதில் பாதியைக் குடித்தார். பிறகு தன் விரல்களில் ஜெபமாலையை உருட்ட ஆரம்பித்தார். ஜீனா அதை மௌனமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

வெகுநேரத்துக்கு மௌல்விசாகிப் ஜெபமாலையை சுறுசுறுப்பாக உருட்டிக்கொண்டிருந்தார். அவருடைய கண்கள் மூடியிருந்தன. பிறகு அவர் கோப்பைக்குள் மூன்றுமுறை ஊதி விட்டு ஜீனாவைக் குடிக்குக்கும்படிச் சொன்னார்.

ஜீனா நடுங்கும்கரங்களால் அதைக் கையில் எடுத்தாள். மௌல்விசாகிப் இடிக்குரலில் சொன்னார்,” நீ இதைக் குடிக்கும்படி நாம் கட்டளையிடுகிறோம். உன்னுடைய எல்லாவேதனைகளும், துன்பங்களும் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.”

ஜீனா அந்தக்கோப்பையை அவளுடைய உதடுகளுக்குக்கருகில் கொண்டு போனாள். ஒரே மூச்சில் அதைக் குடித்துவிட்டாள். மௌல்விசாகிப் புன்னகைத்தார்.

“ நாம் நம்முடைய சிறப்புப்பிரார்த்தனையைத் தொடரப்போகிறோம்…ஆனால் எப்பொழுதெல்லாம் நாம் சுட்டுவிரலை உயர்த்துகிறோமோ அப்பொழுதெல்லாம் பானையிலிருந்து அரைக்கோப்பை ஊற்றிக் குடிக்கவேண்டும்..தெரிந்ததா?”

அவர் அவளை பதில்சொல்ல அநுமதிக்கவில்லை. அவள் ஆழ்ந்த மயக்கத்துக்குள் போய்க்கொண்டிருந்தாள். ஜீனாவின் வாயில் ஒரு மோசமான ருசி. நெஞ்சில் தீ எரிவதைப்போன்ற எரிச்சல். அவள் எழுந்து சென்று வாளிவாளியாய் குளிர்ந்த நீரைக் குடிக்க விரும்பினாள். ஆனால் அதற்கு அவளுக்குத் தைரியமில்லை. திடீரென்று மௌல்விசாகிப்பின் சுட்டுவிரல் உயர்ந்தது. அவள் மனோவசியம் செய்யப்பட்டவளைப் போல ஏற்கனவே மௌல்விசாகிப் சொல்லியமாதிரி அரைக்கோப்பை ஊற்றி ஒரே மடக்கில் குடித்தாள்.

மௌல்விசாகிப் தொடர்ந்து பிரார்த்திக் கொண்டிருந்தார்.அவளால் ஜெபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று உரசும் சத்தத்ததைக் கேட்க முடிந்தது. அவளுடைய தலை சுற்றியது. அவள் உறக்கம் வருவதைப்போல உணர்ந்தாள். ஒரு முகம் மழிக்கப்பட்ட இளைஞனின் மடியில் இருப்பதாகவும், அவன் அவளிடம் அவளைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பதாகவும் சொல்லிக்கொண்டிருப்பதைப் போல அவளுக்கு ஒரு தெளிவில்லாத, கிட்டத்தட்ட தன்னுணர்வில்லாத உணர்வு தோன்றியது.

அவள் உணர்வுக்கு வந்தபோது அவள் உள்ளே தரையில் படுத்திருந்தாள். மங்கலான கண்களால் சுற்றிலும் பார்த்தாள். ஏன் அவள் அங்கே படுத்துக்கிடக்கிறாள்? எப்போதிருந்து? எல்லாமே பனிமூட்டமாக இருந்தது. மறுபடியும் தூங்க விரும்பினாள். ஆனால் அவள் எழுந்துவிட்டாள். மௌல்விசாகிப் எங்கே? அப்புறம் அந்த சொர்க்கம் எங்கே மறைந்து போனது?

அவள் திறந்தவெளி முற்றத்திற்குப் போனாள். கிட்டத்தட்ட சாயங்காலமாகி விட்டதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். மௌல்விசாகிப் மேனியலம்பும் சடங்கைச் செய்து கொண்டிருந்தார். அவள் வருகிற சத்தம் கேட்டு புன்னகைமுகத்துடன் திரும்பினார் மௌல்விசாகிப். அவள் அறைக்குத் திரும்பி தரையில் அமர்ந்து அவளுடைய அம்மா வீட்டுக்குத் திரும்பி வரப்போவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். இன்னும் ஒரு இரவு இருக்கிறது.அவளுக்கு ரெம்பப் பசித்தது. ஆனால் அவள் சமையல் செய்ய விரும்பவில்லை. அவளுடைய மனம் முழுவதும் விளங்காத, பதிலில்லாத கேள்விகள் நிறைந்திருந்தன.

திடீரென மௌல்விசாகிப் கதவருகில் தோன்றினார். “ நாம் உன்னுடைய அப்பாவுக்காக விசேசபிரார்த்தனைகள் செய்ய வேண்டும். நாம் இரவு முழுவதும் கபர்ஸ்தானில் இருந்து பிரார்த்தனை செய்துவிட்டு காலையில் திரும்பி வருவோம். உனக்காகவும் நாம் பிரார்த்தனை செய்வோம்..” என்று சொன்னார்.

அவர் மறுநாள் காலையில் தோன்றினார். அவருடைய கண்கள் சிவந்திருந்தன. பேசும்போது லேசாக வாய் குழறியது. அவரால் நிலையாக நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தார். அவர் வெளிமுற்றத்துக்கு நடந்துபோய் ஜீனாவை உணர்ச்சியுடன் இறுக்கிக் கட்டிப் பிடித்து முத்தமிட்டார். ஜீனா மனைப்பலகையில் உடகார்ந்துகொண்டு கடந்த இருபத்திநாலு மணி நேரத்தில் நடந்த புதிரான, அரைகுறைஞாபகங்களோடு உள்ள நிகழ்வுகளை புரிந்துகொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய அப்பா திரும்பி வரவேண்டும் என்று விரும்பினாள். இரண்டுவருடங்களாக வீட்டை விட்டு போயிருந்த அம்மாவும் திரும்பி வரவேண்டும் என்று விரும்பினாள். அப்புறம் அங்கே அந்த சொர்க்கம்… அவளை அழைத்துக் கொண்டு போயிருந்தது என்ன வகையான சொர்க்கம்? அப்புறம் மௌல்விசாகிப்…. அவரா..அவளை சொர்க்கத்துக்கு கூட்டிப் போனது…அப்படியிருக்காது.. ஏன்னா ஒரு இளைஞன் அதுவும் தாடியில்லாதவனாக அவள் ஞாபகத்தில் வந்தான்.

மௌல்விசாகிப் அவளைப்பார்த்து, “ ஜீனா உன்னோட அப்பா இன்னும் வரல்ல..” என்று சொன்னார். அவள் ஒன்றும் சொல்லவில்லை.

அவர் திரும்பவும், “ இரவு முழுவதும் உன்னோட அப்பா என்னுடன் பிரார்த்தனையில் இருந்தான்..இப்பொழுது உன்னுடைய அம்மாவுடன் வந்திருக்கவேண்டுமே…”. என்று சொன்னார்.

ஜீனாவால் சொல்லமுடிந்ததெல்லாம் இதுதான்,” எனக்குத் தெரியல.. அவர் வந்துக்கிட்டிருப்பாரு..அம்மாவைக் கூட்டிக்கிட்டு..ஆனா உண்மையில் எனக்கு ஒண்ணும் தெரியாது…”

முன்கதவு திறந்தது. ஜீனா எழுந்தாள். அங்கே அவளுடைய அம்மா. இருவரும் ஒருவர் கைகளில் ஒருவர் விழுந்தனர். இருவருக்கும் கண்ணீர் பெருகியது. மனைவியின் பின்னால் மௌஜூவும் வந்தான். மிகுந்த மரியாதையுடன் மௌல்வி சாகிப்பை வணங்கினான். பின்னர் தன்னுடைய மனைவியிடம், “ பதான் நீ மௌல்விசாகிப்பை வணங்கவில்லையே….” என்று சொன்னான்.

பதான் மகளிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, கண்களைத் துடைத்தாள். பின்னர் மௌல்விசாகிப்பை வணங்கினாள். அதுவரை தன்னுடைய ரத்தச்சிவப்பான கண்களால் பதானையே முறைத்துப்பார்த்துக் கொண்டிருந்த மௌல்விசாகிப், “ நாம் உனக்காக இரவு முழுவதும் பிரார்த்தனையில் இருந்தோம்; இதோ நீ வந்து விட்டாய்.. கடவுள் நம்முடைய பிரார்த்தனைகளைச் செவிமடுத்துவிட்டார்.. இனி எல்லாம் நல்லபடியாய் நடக்கும்..” என்று சொன்னார்.

சௌத்ரிமௌஜூ தரையில் உட்கார்ந்து மௌல்விசாகிப்பின் கால்களை அமுக்கி விட்டுக் கொண்டிருந்தான். தொண்டை தழுதழுக்க, அவன் தன் மனைவியிடம், “ பதான், இங்கே வா… மௌல்விசாகிப்புக்கு உன் நன்றியைத் தெரிவி…. எனக்கு எப்படிச் சொல்லணும்னு தெரியல..” என்று சொன்னான்.

பதான் முன்னால் வந்து,” நாங்கள் ஏழை எளிய கிராமத்து ஆட்கள்…எங்களிடம் செய்வதற்கு எதுவுமில்லை…..புனித கடவுள்மனிதரே!..” என்று சொன்னாள்.

மௌல்விசாகிப் பதானை கூர்மையாகப் பார்த்துக் கொண்டே,” மௌஜூ சௌத்ரி நீ சொன்னது சரிதான்.. உன் மனைவி அழகாக இருக்கிறாள்.. இந்த வயதிலும் அவள் இளமையாகத் தெரிகிறாள்.. அவள் இன்னொரு ஜீனா… அவளை விட மேல்… நாம் எல்லாவற்றையும் சரி செய்வோம்.. பதான், கடவுள் உன்மீது அன்பும் கருணையும் கொள்ள தீர்மானித்துவிட்டார்…..” என்று சொன்னார்.

சௌத்ரி மௌஜூ மௌல்விசாகிப்பின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டேயிருந்தான். ஜீனா சமையலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து மௌல்விசாகிப் எழுந்தார். பதானின் தலையை ஆதூரத்துடன் தட்டிக் கொடுத்துக் கொண்டே மௌஜூவிடம்,” எல்லாம் வல்ல கடவுளின் விதிப்படி எப்போது ஒரு மனிதன் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டபிறகு மீண்டும் அவளை கூட்டிக் கொண்டு வரவேண்டுமானால் அவள் இன்னொரு மனிதனைத் திருமணம் செய்து விவாகரத்து செய்தபிறகே தன்னுடைய முதல் கணவனுடன் சேர முடியும்….” என்று சொன்னார்.

மௌஜு மெல்லிய குரலில், “ நானும் கேள்விப்பட்டிருக்கேன்.. மௌல்விசாகிப்..” என்று சொன்னார்.

மௌல்விசாகிப் அவனை எழுந்து நிற்கச் சொன்னார். அவனுடைய தோளில் அவருடைய கையைப் போட்டுக் கொண்டு, “ நேற்று ராத்திரி நீ செய்த தவறுக்காக உன்னை தண்டிக்காமலிருக்குமாறு எல்லாம் வல்ல கடவுளிடம் மன்றாடினோம்..அசரீரி சொல்லியது என்னவென்றால்,எவ்வளவு நாள் தான் மற்றவர்களுக்காக உன்னுடைய பரிந்துரைகளை நான் ஏற்றுக் கொள்வது? உனக்காக எதையாவது கேள். அதை நாம் வழங்குகிறோம்… நாம் மீண்டும் மன்றாடினோம்.. பிரபஞ்சத்தின் அரசரே..எல்லாநிலங்களின் கடல்களின் இறைவனே, நாம் எதையும் நமக்காகக் கேட்பதில்லை.. நீங்கள் எமக்கு போதுமானதைக் கொடுத்திருக்கிறீர்கள்..மௌஜூ சௌத்ரி அவனுடைய மனைவிமீது அன்பாக இருக்கிறான். அதற்கு அந்தக்குரல், நாம் அவனுடைய அன்பையும் உன்னுடைய விசுவாசத்தையும் சோதிக்கப்போகிறோம்… நீ தான் அவளை ஒருநாள் திருமணம் செய்து மறுநாள் அவளை விவாகரத்து செய்து மௌஜூவிடம் ஒப்படைக்கவேண்டும்..இதைத்தான் நாம் உனக்கு வழங்கமுடியும்.. ஏனெனில் நீ நாப்பது வருடங்களாக என்னை விசுவாசமாக வணங்கிவருகிறாய்…என்றது.” என்று சொன்னார்.

மௌஜூ உணர்ச்சிவசப்பட்டு,” நான் ஏற்றுக் கொள்கிறேன் மௌல்விசாகிப்.. நான் ஏற்றுக்கொள்கிறேன்..” என்று சொன்னான். பிறகு அவன் பதானைப்பார்த்தான். அவனுடைய கண்கள் உள்ளே பொங்கிய மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது. “ சரியா பதான்..? ” என்று கேட்டவன் அவளுடைய பதிலுக்காகக் காத்திருக்காமல் “ நாங்கள் இருவரும் ஏற்றுக்கொள்கிறோம்..” என்று சொன்னான்.

மௌல்விசாகிப் அவருடைய கண்களை மூடி ஒரு பிரார்த்தனையைப் பாடினார்.பின்பு அவர்களுடைய முகத்தில் ஊதிவிட்டார். அவருடைய கண்களை மேலுலகத்தை நோக்கி உயர்த்தியபடியே, “ எல்லாவானங்களீன் கடவுளே! நீங்கள் வைத்துள்ள இந்த சோதனையில் நாங்கள் தோற்றுவிடாமலிருக்க எங்களுக்கு வலிமையைத் தாரும்..” என்றார்.

பிறகு அவர் மௌஜூவிடம், “ இப்போழுது நாம் போகிறோம்.. ஆனால் நீயும் ஜீனாவும் இன்று இரவு மட்டும் எங்காவது சென்றுவிடவேண்டும் என்று விரும்புகிறோம்.. நாம் பிறகு வருகிறோம்..” என்றார்.

மாலையில் அவர் திரும்பி வரும்போது, ஜீனாவும், மௌஜூவும் கிளம்புவதற்குத் தயாராக இருந்தார்கள். மௌல்விசாகிப் வாய்க்குள்ளேயே ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவர் அவர்களிடம் பேசவில்லை. அவர்களைப் போகச்சொல்லி சைகை செய்தார். அவர்கள் போய்விட்டார்கள்.

மௌல்விசாகிப் கதவைத் தாழ்ப்பாள் போட்டார். பிறகு பதானிடம்,” இந்த ஒரு இரவு நீ என்னுடைய மனைவி… உள்ளே போ.. படுக்கையைக் கொண்டுவந்து இந்த கட்டிலில் விரித்து வை. நாம் ஒரு சிறு தூக்கம்போட விரும்புகிறோம்…” என்று சொன்னார்.

பதான் உள்ளே சென்று படுக்கையை கொண்டுவந்து கயிற்றுக்கட்டிலில் அழகாக விரித்தாள்.மௌல்விசாகிப் அவளிடம் அவருக்காகக் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு உள்ளே போனார்.

ஒரு அகல்விளக்கின் நிழலான ஒளி அந்தச் சிறிய அறையை அலங்கரித்தது. அந்த மண்பானை மூலையில் இருந்தது. மௌல்விசாகிப் அதில் ஏதாவது மீந்திருக்கிறதா? என்று அதைக் குலுக்கிப்பார்த்தார். அதில் இருந்தது. அவர் அந்தப்பானையை உதடுகளுக்குக் கொண்டுபோய் அவசரமாக சில மிடறுகள் குடித்தார். அவருடைய மஞ்சள்நிற பட்டுத்துணியினால் வாயைத் துடைத்துவிட்டு வெளியே வந்தார்.

பதான் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். மௌல்விசாகிப்பின் கைகளில் ஒரு கோப்பையை வைத்திருந்தார். அவர் அதில் சில புனிதமந்திரங்களை மூன்றுமுறை ஓதி அதை பதானிடம் கொடுத்து,” இதைக் குடி….” என்று சொன்னார்.

அவள் குடித்த உடனேயே புரையேறிச் சிரமப்பட்டாள். ஆனால் மௌல்விசாகிப் அவளுடைய முதுகில் பலமாகத் தட்டிக் கொடுத்துக்கொண்டே,” உனக்குச் சரியாயிரும்..” என்று சொல்லிவிட்டி படுத்துக்கொண்டார்.

அடுத்தநாள் காலையில் ஜீனாவும், மௌஜூவும் திரும்பிவந்த போது பதான் முற்றத்தில் கிடந்த கட்டிலில் படுத்துறங்கிக் கொண்டாள். மௌல்விசாகிப் அருகில் எங்கும் இல்லை. ஒருவேளை அவர் வயல்கரைகளில் நடைப்பயிற்சிக்குப் போயிருக்கலாம் என்று மௌஜூ நினைத்தான். அவன் மனைவியை எழுப்பினான். அவள் கண்களைத் திறந்ததும் “ சொர்க்கம்…சொர்க்கம்..” என்று பிதற்றினாள். அவள் மௌஜூவைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தாள்.

அவன்,” மௌல்விசாகிப் எங்கே? “ என்று கேட்டான்.

பதான் இன்னும் தள்ளாட்டத்தில் தான் இருந்தாள். “ மௌல்விசாகிப்பா… எந்த மௌல்விசாகிப்? அவர் எங்கே என்று எனக்குத் தெரியாது…அவர் இங்கே இல்லை…” என்று சொன்னாள்.

“ வேண்டாம் …நான் போய் அவரைத் தேடிப்பார்த்துட்டு வாரேன்..” என்று மௌஜூ கூவினான்.

அவன் கதவருகில் போய்க்கொண்டிருக்கும்போது பதானின் அலறலைக் கேட்டான். அவள் தலையணைக்கடியிலிருந்து ஏதையோ எடுத்தபடியே நடுங்கிக் கொண்டிருந்தாள்.

அவள், “ இது என்னது?..” என்று கேட்டாள்.

மௌஜூ, ‘ முடி மாதிரி தெரியுது..” என்று சொன்னான்.

பதான் அந்தக் கறுப்புக்குவியலைத் தரையில் வீசினான். மௌஜூ அதை எடுத்து சோதித்துப் பார்த்துவிட்டு, “ மனிதமுடி மாதிரி இருக்கு..” என்று சொன்னான்.

” மௌல்விசாகிப்பின் தாடியும் தோள்வரை தொங்கிய தலைமுடியும்…தான் இது .” என்று ஜீனா கூக்குரலிட்டாள். மௌஜூ குழப்பமடைந்தான்.

“ அப்படின்னா மௌல்விசாகிப்பை எங்கே? “ என்று அவன் கேட்டான். பிறகு அவனுடைய எளிய எதையும் நம்பும் மனசில் உடனே ஒரு பதில் தோன்றியது.

“ ஜீனா…பதான்… உங்களுக்குப் புரியலையா.. அவர் கடவுளின் மனிதரில்லையா? அவர் அற்புதங்கள் செய்வார்... நம்முடைய இதயங்கள் என்ன விரும்பியதோ அதைக் கொடுத்துவிட்டு அவரை நாம் ஞாபகப்படுத்திக்கொள்ள நமக்கு இதை விட்டு விட்டுப் போயிருக்கிறார்…” என்று சொன்னான்.

அவன் அந்த பொய்த்தாடியையும் தலைமுடியையும் முத்தமிட்டான். பக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டான். பின்னர் அவற்றை ஜீனாவிடம் கொடுத்தான்.

“ போ… போய் இவற்றை சுத்தமான துணியில் சுற்றி அந்தப் பெரிய மர அலமாரியின் மேல் வை… கடவுளின் அருள் நமது வீட்டை விட்டு அகலாதிருக்கட்டும்..” என்று சொன்னான். ஜீனா உள்ளே போனாள். மௌஜூ பதானின் அருகில் உட்கார்ந்து அவளிடம்,” நான் பிரார்த்தனை செய்வது எப்படி என்று கற்றுக் கொள்ளப்போகிறேன்… ஒவ்வொரு நாளும் என்னுடைய பிரார்த்தனைகளில் அந்தச் சாமியாரை ஞாபகப்படுத்துவேன்….”

பதான் மௌனமாக இருந்தாள்.