Saturday 1 September 2012

பெருமாள்சாமியின் பேருந்துப் பயணம்

 

உதயசங்கர்

images (4)

பெருமாள்சாமிக்கு இந்த உலகமே எதிரியாகத் தோன்றியது.அப்படியும் எளிதாகச் சொல்லிவிட முடியாது. மற்றவர்களை விட பேருந்தில் பயணம் செய்கிறவர்கள் தான் முக்கியமான எதிரிகளாகத் தெரிகிறார்கள். அப்படி மொத்தமாகச் சொல்லிவிட முடியுமா என்று பெருமாள்சாமியிடம் கேட்டால் இல்லையில்லை, பேருந்தில் உறங்குபவர்கள் தான் என்று கோபத்தின் உச்சியிலிருந்து மெல்ல மெல்லக் கீழிறங்கி சமதளத்துக்கு வருவான். பெருமாள்சாமியின் துரதிருஷ்டம் அவனுடைய வீடு கோவில்பட்டியில் இருந்தது. அலுவலகம் திருநெல்வேலியில். அவன் வேலை பார்க்கிற அலுவலகத்தின் எந்தப் பிரிவும் கோவில்பட்டியில் கிடையாது. மாற்றலாகி வருவதற்குத் துளியும் வாய்ப்பில்லை. சரி. அதனாலென்ன இவன் குடும்பத்தோடு திருநெல்வேலிக்குப் போய் விடலாமே என்று தானே நீங்கள் நினைக்கிறீர்கள். அதுவும் முடியாது. ஏனென்றால் அவன் மனைவி வேலை பார்க்கும் அலுவலகம் கோவில்பட்டியில் மட்டுமே இருக்கிறது. திருநெல்வேலியில் கிடையாது. இதென்னடா அதிசயம் என்று ஆச்சரியப்படுகிறீர்கள், இல்லையா! இதைவிட ஆச்சரியங்களாலும் அதிசயங்களாலும் இந்த உலகம் நிரப்பப்பட்டிருக்கிறதே. இதனால் வாழ்நாளில் பாதியைப் பிழைப்புக்காக பிரயாணத்திலேயே கழித்துக் கொண்டிருக்கும் ஏராளமான அலுவலர்களின் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராகி விட்டான்.

காலையில் உற்சாகமாய் எரியும் ஜோதி ஏந்தி கிளம்பி மாலையில் ஜோதி அணைந்து கரிக்கட்டையாகி எப்படா படுப்போம் என்று படுக்கையில் விழும் ஜடமாகி விடுவதைப் பற்றிக் கூட பெருமாள்சாமி அலட்டிக் கொண்டதில்லை. அப்புறம் என்ன என்று கேட்க வருகிறீர்கள். மீண்டும் இந்தக் கதையின் முதல் ஐந்து வரிகளை ஞாபகப் படுத்திக்கொள்ளுமாறு பெருமாள்சாமி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறான். சரி பேருந்து தானே பிரச்னை. ரயிலில் போக வேண்டியது தானே என்று நீங்கள் வழங்குகிற ஆலோசனைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறான் பெருமாள்சாமி. ஆனால் அவன் வீட்டிலிருந்து ரயில்நிலையம் வெகுதூரத்தில் இருந்தது அல்லது ரயில்நிலையத்திலிருந்து வெகுதூரத்தில் அவன் வீடு கட்டும்படியாகி விட்டது. அதற்கு அவன் என்ன செய்ய முடியும்? அப்படி ஒருவேளை அவன் துணிந்து அவனுடைய வீட்டிலிருந்து ரயில்நிலையம் புறப்பட்டுச் செல்வானேயானால் அதுவே ஒரு பெரும் பிரயாணமாகி விடும். அது மட்டுமல்ல, நகரங்களின் எல்லைகள் விரிவதைத் தொடர்ந்து தோன்றிய புதிய மற்றும் கூடுதல் பேருந்து நிலையத்திற்கருகில் அவன் ஏற்கனவே கட்டியிருந்த வீடு அமைந்து விட்டது. வீட்டு வாசலில் வந்து நிற்கும் பேருந்தில் ஏறாமல் ஒரு பெரும் பிரயாணம் செய்து ரயில்நிலையம் சென்று இன்னுமொரு பெரும் பிரயாணம் செய்து திருநெல்வேலிக்குச் செல்வது உசிதமல்ல என்றபடியால் பெருமாள்சாமி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தான்.

அவசரமில்லாமல் வீட்டை விட்டுப் புறப்பட்டு கோவில்பட்டியிலிருந்தே புறப்படுகிற பேருந்தில் இடம் பிடிப்பான். பேருந்தில் ஏறி நிதானமாக ஒவ்வொரு இருக்கையிலும் இருக்கக் கூடிய ஆட்களின் உயரம், எடை, பருமன், இவற்றை சூட்சுமக் கண்களால் அளந்து சராசரியாகத் தன்னைப் போலுள்ள நபரின் அருகில் இடம் இருந்தால் அதில் உட்கார்ந்து கொள்வான் பெருமாள்சாமி. சில சமயம் சன்னலோர இருக்கை கிடைத்து விட்டால் அதில் உட்கார்ந்து கொண்டு பக்கத்து இருக்கையில் தன்னுடைய அலுவலகப்பையை வைத்து இடத்தை ஆக்ரமித்துக் கொள்வான். யார் கேட்டாலும் ஆள் வருது என்பான். தனக்குப் பொருத்தமான ஜோடி நபர் வந்தால் மட்டுமே அவர் இந்த இருக்கையைக் கவனிக்காவிட்டாலும் கூட மெனக்கெட்டுக் கூப்பிடுவான்.

“ சார்..சார்.. இங்க வாங்க.. இடம் இருக்கு..”

அவர் ஒரு கணம் குழம்பிப் போவார். தெரிந்த நண்பர் தானோ என்று அவன் முகம் பார்த்து சிரிக்க முயற்சி செய்வார். முன்பின் தெரியாத நபரென்று உணர்ந்ததும் புன்னகை உறைந்த முகத்துடன் அப்படியே உட்காருவார். முன்பின் தெரியாத நபர் வலுக்கட்டாயமாகத் தன்னை அழைத்து உட்கார வைப்பதில் மர்மங்கள் ஏதும் மறைந்திருக்குமோ என்ற சந்தேகம் அவர் தலைக்குள் குடைய அடிக்கடித் திரும்பி பெருமாள்சாமியைப் பார்த்து முறைத்துக் கொண்டே எச்சரிக்கையாக வருவார். ஆனால் பெருமாள்சாமி இதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டான். அப்படியே சன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடுவான். அவன் முகத்தில் ஒரு ஆபத்தைத் தவிர்த்த திருப்தி தவழும்.

சிலநாட்களில் இந்த அழைப்பே ஆபத்தைக் கொண்டு வருவதும் உண்டு. பேருந்து இன்னும் முழுதாகக் கிளம்பியிருக்காது. மெல்ல அவன் தோள்பட்டையில் ஒரு தலை உரசும். திரும்பாமலேயே அவனுக்குத் தெரிந்து விடும். பேருந்து இஞ்சினின் உர்ர்…உர்ர்.. என்ற சத்தம் கேட்டதுமே உறங்கி விழுகிற ஆட்களும் இருக்கிறார்களே. பெருமாள்சாமி என்ன செய்வான்? அவனுக்கு பேருந்தில் உறக்கமே வருவதில்லை. இரவு விடிய விடிய முழித்திருந்தாலும் பயணத்தில் உறக்கம் வருவதில்லை. நீங்கள் நினைப்பதைப் போல அவனுக்கு பேருந்தில் உறங்குபவர்களின் மீது பொறாமையோ, கோபமோ, விரோதமோ, கிடையாது. அப்படி யாரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று பெருமாள்சாமி அன்போடு கேட்டுக் கொள்கிறான். அவன் தோளில் சாய்ந்து உறங்குபவர்களைக் கண்டு தான் அவன் பயப்படுகிறான்.

அவன் அப்படிப் பயப்படுவதற்குக் காரணமில்லாமல் இல்லை. ஒரு தடவை அவனருகில் உட்கார்ந்திருந்தவர் மெல்ல மெல்லத் தலையாட்டித் தூங்கிக் கொண்டே வந்தார். தலையாட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வந்து அவன் தோளில் வந்து முட்டி ஓய்வு பெற்றது. அப்படியே தன் உடல்பாரத்தை முழுவதுமாய் பெருமாள்சாமியின் மீது சாய்த்து அயர்ந்து உறங்கி விட்டார். அவனால் அசையக் கூட முடியவில்லை. பேருந்து நிறுத்தங்களோ, சடன் பிரேக்குகளோ, அவனுடைய நெளிப்புகளோ எதுவும் அவரை எழுப்பவில்லை. அவனும் ஒன்றிரண்டு முறை விரல்களால் தொட்டுத் தட்டியெழுப்பினான். ஆனால் அவரோ அவருடைய வீட்டின்படுக்கையறையில் இரவின் இருளில் தன்னை மறந்து உறக்கத்தின் ஆழத்தில் மூழ்கிக் கிடப்பவரைப் போல உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பவே முடியாதோ என்ற பயம் அவனுக்குள் வேர் விட்டுக் கிளை பரப்பிக் கொண்டிருந்தது. ஆனால் என்ன ஆச்சரியம்!

“ தாழையூத்து.. தாழையூத்து… தாழையூத்து டிக்கெட்டெல்லாம்.. எந்திரிச்சி வாங்க..”

என்ற நடத்துநரின் குரல் கேட்டது தான். சட்டெனக் கண்களைத் திறந்து அதுவரை எதுவுமே நடக்காதது போல எழுந்தவர் பெருமாள்சாமியை ஓரக்கண்ணால் கூடப் பார்க்காமல் விறுவிறுவென்று வாசலுக்குப் போய்விட்டார். அவர் எழுந்து போனபிறகுதான் பெருமாள்சாமி கவனித்தான். தோள்பட்டையில் ஈரம் பிசுபிசுத்தது. குனிந்து பார்த்தால் தோள்பட்டை முழுவதும் நல்ல திக்காய் எண்ணெய்க்கறையும் இலவச இணைப்பாக ஜொள்ளையும் வடித்து ஒரு மேப்பை வரைந்து விட்டுப் போயிருந்தார் அந்தப் புண்ணியவான். பாருங்கள் நீங்களே முகத்தைச் சுளிக்கிறீர்கள். அப்படியென்றால் பெருமாள்சாமிக்கு எப்படியிருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்களேன்.

இது தான் இப்படியென்றால் இன்னொரு முறை வேறு இடமே கிடைக்காமல் மூன்று பேர் உட்காரும் இருக்கையின் நடுவில் மாட்டிக் கொண்டான். இரண்டு பக்கங்களிலும் கிங்கரர்கள் போல உட்கார்ந்து கொண்டு அவன் மீதே இடதும் வலதுமாக உடலைச் சாய்த்து உறங்கிக் கொண்டே வந்தார்கள். அவன் அப்படியே சப்பளிந்து போய்விட்டான். திருநெல்வேலியில் இறங்கும் போது உடம்பு அப்படி வலித்தது. அலுவலகம் சென்று விடுப்பு எடுத்துக் கொண்டு ஊர் திரும்பிவிட்டான். இது மட்டுமில்லை. சிலருடைய தலை ஆடுகிற வேகத்தைப் பார்க்கும் போது எந்த நேரத்தில் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் வந்து நம்மீது மோதுமோ என்று பயமாக இருக்கும். ஒவ்வொரு கணமும் அந்தத் தாக்குதலைச் சமாளிக்கவும் தடுக்கவும்,அவன் தயாராக இருக்க வேண்டும். அதற்காகப் பிரயாணம் முழுவதும் வேறு எந்த சிந்தனையுமின்றி ஆடுகிற அவர்களது தலையையே பார்த்துக் கொண்டு வந்திருக்கிறான் பெருமாள்சாமி. எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். தொடர்ந்து இப்படியே உங்களுக்கு நடந்து கொண்டிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதைத்தான் பெருமாள்சாமியும் செய்தான்.

பெருமாள்சாமி சில யுத்த வியூகங்களை வகுத்தான். சராசரிக்கும் குறைவான உயரமும், சராசரிக்கும் குறைவான எடையும் சராசரியை விட மெலிந்த பூஞ்சையான உடலமைப்பும் கொண்ட அவனால் நியூட்டனின் மூன்றாவது விதியான சமமான எதிர்வினை புரிய முடியாது. ஆனால் உறக்கத் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும் உபாயங்களை யோசித்தான். முதலில் உட்காரும்போதே முன்னெச்சரிக்கையாக ஆட்களைத் தேர்வு செய்து உட்கார்ந்து கொள்வது ஒரு உபாயம். இதில் சில சமயங்களில் தோல்வி கிடைக்கிறது. ஏனென்றால் பேருந்து நகரும் வரை யாருடைய சுயரூபத்தையும் கண்டு பிடிக்க முடிவதில்லை. இரண்டாவது உபாயமாக அருகில் உட்கார்ந்திருப்பவர் தூங்கி மேலே சாயத்தொடங்கும் போது சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்து விடுவது. அப்படி எழுந்து விட்டால் சாய்பவரின் சாய்வுப்பரப்பின் மையம் மாறி அவர் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல அப்படியே சாய்ந்து விழுந்து திடுக்கிட்டு, எழுந்து உட்கார்ந்து சுதாரிப்பதற்குள் தன் இருக்கையில் உட்கார்ந்து பாவம் போல வேறு எங்காவது பார்த்துக் கொண்டிருப்பான். விழுந்து எழுந்தவருக்கு என்ன நடந்ததென்றே புரியாது. சுற்றிச் சுற்றிப் பார்ப்பார். அவனையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வருவார். அதன் பிறகு கண்ணுக்குத் தெரியாத சதிவலையில் சிக்கி விடுவோமோ என்ற பயத்தில் உறங்கமாட்டார்கள். ஒரு வேளை திரும்பவும் அப்படி உறங்கினால் இதேமாதிரி வைத்தியத்தை ஒன்றிரண்டு முறை செய்து பார்ப்பான் பெருமாள்சாமி. ஆனால் இதிலும் ஒரு ஆபத்தைச் சந்திக்க நேர்ந்தது. ஒரு முறை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாய் சாய்ந்து விழுந்தவர் எழுந்திரிக்கவேயில்லை. அப்படியே உறங்கிவிட்டார். எழுப்பவே முடியவில்லை. பெருமாள்சாமி தன் இருக்கையைப் பறி கொடுத்துவிட்டு நின்று கொண்டே வந்தான்.

இப்படியில்லாமல் இரண்டு பேருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு இரண்டு பேரும் உறங்கி விழுந்தால் என்ன செய்வது என்று கேட்க நினைக்கிறீர்கள் இல்லையா? வேறென்ன ஆயுதப்பிரயோகம் தான். பயந்து விட வேண்டாம். அப்படிப் பயப்படுகிற அளவுக்கு பெருமாள்சாமி பயங்கரவாதியுமில்லை. அவனாகவே சுயமாக யோசித்துச் செயல்படுத்தும் தற்காப்புக்கலை தான் இந்த ஆயுதப்பிரயோகம். இரண்டு கட்டைவிரல் நகங்களையும் வெட்டிக் கூராக்கிக் கொள்வான். இரண்டு பக்கங்களிலும் அவனுடைய ஏரியாவின் எல்லைகளை மானசீகமாக வகுத்துக் கொள்வான். அப்புறமென்ன. அந்த எல்லைக்கோடுகளின் ஆரம்பத்தில், ஜேம்ஸ்பாண்ட் தன் இரண்டு கைகளில் துப்பாக்கிகளோடு நெஞ்சுக்குக் குறுக்கேமறுக்கேக் கைகளைக் கட்டிக் கொண்டிருப்பதைப் போல இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டிருப்பான். இதில் முக்கியமான விஷயம் ஆமை தன் ஓட்டுக்குள் தலையை மறைத்துக் கொள்வதைப் போல கட்டைவிரல் ஆயுதங்களை மற்ற நான்கு விரல்களுக்குள் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அவரவர் எல்லைகளைத் தாண்டி அவனுடைய ஏரியாவில் யாராவது தலையைச் சாய்த்தால் போதும். சுளீரென்று மின்சாரம் தாக்கியதைப் போலத் துள்ளி எழுந்து விடுவார்கள். தாக்கியது எது? தாக்கியவர் யார்? என்று அவர்களால் கண்டுபிடிக்கவே முடியாது. முகத்தைத் தடவிக் கொண்டே சந்தேகத்துடன் சுற்றும்முற்றும் பார்த்தபடியே வருவார்கள்.

பெருமாள்சாமி இந்தக் கொரில்லா முறைத் தாக்குதல்களுக்குப் பின்பு செய்வதெல்லாம் எதுவுமே தெரியாதது போல முகபாவனையை மாற்றிக் கொள்வான். இத்தனை வன்முறை தேவையா என்று கேட்பவர்களிடம் பெருமாள்சாமி தன்னுடைய பதினைந்து ஆண்டுகால பேருந்து பிரயாண வரலாற்றையும் அதில் அவன் பெற்ற விழுப்புண்களைப் பற்றியும் சொல்வதற்குத் தயார் என்று தெரிவித்துக் கொள்கிறான். என்ன எழுந்து விட்டீர்கள்! பயப்படாதீர்கள். இப்போதல்ல. நீங்கள் விரும்பினால் உங்களுக்கு தொலைக்காட்சியின் மெகா தொடர்கள் மீது சலிப்பேற்பட்டாலோ, எப்.எம்.மின் தமிங்கிலிஷ் குரல்களினால் எரிச்சல் ஏற்பட்டாலோ, சினிமா செய்திகளைத் தவிர வேறு எதையும் பிரசுரிக்காத பத்திரிகைகள் மீது கோபமேற்பட்டாலோ, நடிகர்களின் முதலமைச்சர் கனவுகளினால் வருத்தம் ஏற்பட்டாலோ ஆய்ஞ்சு ஓய்ஞ்சு உட்கர்ந்திருக்கும் போது பெருமாள்சாமி அந்த வரலாற்றைச் சொல்வதற்குத் தயாராக இருக்கிறான். அதோடு அது எந்த வகையிலும் உங்களுக்குப் போராடிக்காது என்று மினிமம் கேரண்டி தருகிறான். சரி இந்த யுத்தவியூகத்திலாவது வெற்றி ஏற்பட்டதா என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறீர்கள் தானே. இல்லை என்று சொல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையில் இருக்கிறான் பெருமாள்சாமி. இதிலும் எதிர்பாராத விபத்து நடந்தது. மோதிய முகத்தின் வேகமோ, முரட்டுத்தனமோ கட்டைவிரல் நகம் பாதியாய் ஒடிந்து வலி உயிர் போய் விட்டது நகக்கண் ஓரமெல்லாம் ரத்தம் துளிர்த்து விட்டது. பேனா பிடித்து எழுதவே ஒரு வாரம் ஆகி விட்டது.

அவனும் அவனுடைய யுத்ததந்திரங்களை மாற்றிக் கொண்டேயிருந்தான். உறங்கிச் சாய்பவர்களைத் தட்டி எழுப்பித் திட்டுவது, முறைப்பது, முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்வது, என்று பலவழிகளை மாற்றி மாற்றி செய்து பார்த்தான். சில சமயங்களில் இந்த அவஸ்தையிலிருந்து தப்பிப்பதற்காக நின்று கொண்டே வந்திருக்கிறான். கால் வலிக்கும் என்றாலும் நிம்மதியாய் இருந்தது. ஆனால் நின்று கொண்டும் உறங்கிச் சாய்பவர்களை என்ன செய்ய முடியும்? அன்றாடம் பிரயாணம் ஒரு பெரிய பிரச்னையாகி விட்டது பெருமாள்சாமிக்கு. யாரிடம் சொன்னாலும் அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

கடைசியில் ஒரு சிறந்த வழியைக் கண்டுபிடித்தான். நடத்துநர் உட்காரும் இருவர் இருக்கை காலியாக இருக்கும் பேருந்தில் மட்டும் பிரயாணம் செய்வது என்று முடிவு செய்தான். அதற்காக எவ்வளவு நேரமானாலும் காத்திருந்தான். நடத்துநர் அமரும் இருவர் இருக்கையில் அமர்ந்து விட்டதும் பிரச்னை தீர்ந்து விட்டது. அருகில் உட்கார்ந்திருக்கும் நடத்துநரால் அவ்வளவு குறுகிய பிரயாணத்தில் உறங்கமுடியாதே. பிரயாணம் முழுதும் ஆட்களை ஏற்றி இறக்கவும், டிக்கெட் கொடுக்க, கணக்கு பார்க்க என்று வேலை சரியாக இருக்குமே. எப்படி இந்த எளிய யோசனை தன் மூளைக்கு எட்டாமல் போயிற்று என்று பெருமாள்சாமி தன்னையே திட்டிக் கொண்டான். புது உற்சாகத்துடன் ஒரு வாரகாலம் பிரயாணங்களை வெற்றிகரமாக எந்தவித யுத்தபயமுமின்றி நடத்தினான் பெருமாள்சாமி.

இன்று திங்கட்கிழமை. பள்ளிக்கூடம் போகத் தயங்குகிற பிள்ளைகளைப் போல அலுவலகம் செல்லத் தயங்கித் தயங்கி ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து நடத்துநர் அமரும் இருவர் இருக்கையில் இடம் பிடித்து உட்கார்ந்தான். டிக்கெட் போடுவிட்டு அருகில் வந்து உட்கார்ந்த நடத்துநர், கணக்குப் பார்க்க ஆரம்பித்தார். அவன் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே யோசித்தான். வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருந்து விடுவதில்லை. மாற்றம் என்பது ஒன்றே மாறாதது. இப்படி யோசித்ததும் இந்தச் சிந்தனையை அவனே புதிதாகக் கண்டுபிடித்ததைப் போல சந்தோஷத்துடன் வெளியே பின்னால் ஓடிக்கொண்டிருந்த மரங்களைப் பார்த்துப் புன்னகை செய்தான்.

அப்போது ஒரு தலை அந்தப் புன்னகையின் மீது மெல்லச் சாய்ந்து இறங்கிக் கொண்டிருந்தது.

3 comments:

  1. பிரமாதம்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது. ஆனால் பேருந்து பிரயாணம் சிரமம் தான். இப்போது கைபேசியும் சேர்ந்து கொண்டது. ஒன்று பேசிக் கொல்கிறார்கள்; இன்றேல் பாட்டுப் போட்டு கொல்கிறார்கள்.
    நன்றி.

    ReplyDelete
  3. பேருந்து பயண அனுபவங்களை அழகாக எழுதியுள்ளீர்கள்!

    ReplyDelete