Tuesday, 11 July 2017

தாத்தாவுக்குத் தாத்தா

தாத்தாவுக்குத் தாத்தா

உதயசங்கர்

நள்ளிரவு நேரம். தூங்கிக்கொண்டிருந்த கயல் உசும்பினாள். மெல்ல எழுந்து கழிப்பறைக்குப் போனாள். கழிப்பறை விளக்கைப் போட்டாள். உள்ளே நுழைந்தாள். உடனே அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தாள். அப்பாவும் அம்மாவும் அலறியடித்துக் கொண்டு எழுந்தார்கள். அப்பா ஓடி வந்து
“ என்னம்மா..கயல்..என்ன? என்ன? என்னாச்சி? “ என்று பரபரப்புடன் கேட்டார். கயல் பயந்த முகத்துடன்,
“ பாத்ரூம்ல பூச்சி…பூச்சி..” என்று சொல்லிக்கொண்டே கண்களை மூடிக்கொண்டாள். கயலின் அப்பா பாத்ரூமிற்குள் எட்டிப்பார்த்தார். சுவரில் உயரே ஒரு கரப்பான்பூச்சி நின்று கொண்டிருந்தது. தன்னுடைய உணர்கொம்புகளை அங்கும் இங்கும் ஆட்டியபடி தலையை உருட்டிக் கொண்டிருந்தது. உணர்கொம்புகளால் எதையோ மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தது. அப்பா அதைப்பார்த்தார். உடனே திரும்பி,
“ என்னடா கயல்! இதுக்குப் போய் கத்தலாமா? கரப்பான்பூச்சி சுவத்தில தானே இருக்கு..”
“ எனக்குப் பயமாருக்கு.. அத விரட்டுங்கப்பா… “
” கயல்குட்டி… பூச்சி நம்மைவிட ரொம்பச் சின்னது.. அது தான் நம்பளப் பார்த்துப் பயப்படணும்… நாம் பயப்படலாமா? “
கயல் அழுகிற மாதிரி நின்றிருந்தாள். படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்த கயலின் அம்மா ,
“ ஏங்க அந்தக்கரப்பானை விரட்டுங்க… உங்க விளக்கத்தைக் காலைல வைச்சிங்கோங்க..”
என்று சொன்னாள். அப்பா உடனே கழிப்பறைக்குள்ளே போய் அங்கேயிருந்த வாரியலை எடுத்து ஓங்கினார். சுவரில் இருந்த கரப்பான்பூச்சிக்கு வரக்கூடிய ஆபத்து தெரிந்து விட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடி ஒளிந்து கொண்டது. அப்பா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வெளியே வந்தார்.
“ பூச்சியை விரட்டியாச்சி…”
கயல் பயந்தபடியே கழிப்பறைக்குள்ளே போனாள். திரும்பி வந்து ரொம்ப நேரத்துக்குத் தூக்கம் வரவில்லை. அந்தக்கரப்பான் பூச்சியே கண்ணுக்குள் தெரிந்தது. ச்சே! இந்தப்பூச்சிகளை எல்லாம் ஏன் தான் இயற்கை படைச்சதோ? இதனாலே என்ன பயன்? பார்க்கவே அருவெறுப்பாய்…ஐயே.. இப்படியே யோசித்துக் கொண்டிருந்த கயல் எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை.
கயல் கண்விழிக்கும்போது அவளுடைய உருவம் மாறியிருந்தது. அவள் இப்போது ஒரு சிறுபூச்சியாக மாறியிருந்தாள். அதுவும் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காத வெங்காயப்பாச்சாவாக மாறியிருந்தாள். அவளுக்கு முன்னால் சமையலறை மசாலா சாமான்கள் இருந்த கண்ணாடி பாட்டில்கள் இருந்தன. அவள் தன்னுடைய பின்னங்கால்கள் ஒரு உந்து உந்தி தவ்விக்குதித்தாள். கேஸ் சிலிண்டருக்குப் பின்னால் போய் விழுந்தாள். அங்கே பழைய நூலாம்படை இருந்தது. முன்னால் இருந்த சின்னக்கால்களால் முகத்தைத் துடைத்தாள். கண்களையும், தலையையும் உருட்டிப் பார்த்தாள். சற்றுத்தள்ளி ஏதோ ஈரமாய் இருப்பதைப்போல இருந்தது. அந்த ஈரத்தை நோக்கி மெல்ல நடந்தாள். அது அந்த வீட்டில் இருந்த கயல் என்ற சின்னப்பிள்ளை சிந்திய பால் துளி. அதன் அருகில் போனதும் பாலை தன்னுடைய சிறிய வாயினால் உறிஞ்சினாள். இத்தூணூண்டு சாப்பிட்டதும் வயிறு நிறைந்து விட்டத்து. சின்ன வயிறு தானே. அப்படியே திரும்பி அந்தக்கேஸ் சிலிண்டர் அடியில் இருட்டுக்குள் போய் உட்கார்ந்து கொண்டாள்.
திடீரென அவளை யாரோ உசுப்பினார்கள். அவளுக்கு இருட்டிலும் பார்வை தெரிந்தது. அவளுக்கு அருகில் நீண்ட உணர்கொம்புகளை நீட்டிக்கொண்டு அங்கும் இங்கும் பரபரப்பாய்  அலைந்தது ஒரு கரப்பான் தாத்தா. வெங்காயப்பாச்சா அதைப்பார்த்து
“ ஏந்தாத்தா.. அங்கிட்டும் இங்கிட்டும் அலையறே.. சும்மா ஒரு இடத்தில கிடக்க முடியாதா..”
“ இந்த வீட்டில கயல்னு ஒரு பொண்ணு இருக்கா அவளுக்குப் பூச்சின்னாலே பிடிக்கமாட்டேங்கு… என்னைய அவள் பார்த்துட்டு ஒரே கூப்பாடு.. அவளோட அப்பா வேற விளக்குமாத்தை எடுத்துகிட்டு வந்துட்டாரு… தலை தப்பிச்சதே பெரிய பாடு..”
“ உனக்கு எவ்வளவு வயசாவுது தாத்தா?  “
என்று கயல் பாச்சா கேட்டாள். கரப்பான் தாத்தா முன்னங்கால்களால் தலையைச் சொறிந்தது. பின்னர் கரகரத்த குரலில்,
“ பூமி தோன்றிய பிறகு பூமியில தோன்றிய மூத்த உயிரினங்களில் நாங்களும் ஒண்ணு.. அதாவது சுமார் மூணு கோடி வருடத்துக்கு முன்னாடியே என்னோட மூதாதையர்கள் பூமியில பிறந்துட்டாங்க… இந்த உலகத்தில நாங்க இல்லாத இடமே இல்லை… நாலாயிரத்து அறுநூறு வகையான கரப்பான் பூச்சிகள் இருக்கோம். அதில முப்பது வகையான கரப்பான் பூச்சிகள் மட்டும் தான் மனிதர்களோட சேர்ந்து வாழப்பழகியிருக்கோம்… எங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப காலத்துக்குப் பின்னால தான் மனுசங்க தோன்றினாங்க.. இயற்கை ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு மாதிரி உருவாக்கியிருக்கு…. “
என்று பெரிய விஞ்ஞானி மாதிரி மீசைகளை நீட்டி நீட்டி முழக்கியது.
“ அதெல்லாம் சரி தாத்தா… பூச்சிகளினால என்ன பயன்னு கயல்பாப்பா கேக்குறா? “ என்று கயல் பாச்சா கேட்டாள். அதைக்கேட்டவுடன் கரப்பான் தாத்தாவின் மீசை துடித்தது. சிலிண்டரின் கீழேயே வட்டமாய் சுற்றிச்சுற்றி வந்து வீரநடை போட்டது. பிறகு கயல்பாச்சாவை கோபமாய் ஒரு பார்வை பார்த்தது.
“ சரி சரி.. போதும் பதில் சொல்லுங்க தாத்தா? “
“ சொல்றேன்… இந்த உலகம் என்ன மனிதர்களுக்காக மட்டுமா உருவானது? மனிதர்களுக்கு பயன்படாத எல்லாமே அழிந்து விட வேண்டியதுதானா? எந்த உயிரும் மனிதர்களுக்காக உருவாகவில்லை… மனிதன் தான் எல்லா உயிர்களையும் அவனுடைய தேவைக்காகப் பயன்படுத்துகிறான்… இயற்கை தன்னை சமநிலைப்படுத்தவே எல்லாஉயிர்களையும் படைக்கிறது… எந்த உயிரும் கீழானதோ இல்லை மேலானதோ கிடையாது.. ஒவ்வொருத்தருக்கும் அவர் அவருக்கான வேலை இருக்கிறது…. தெரியுமா? “
என்று கீச்சிட்டது. கயல் பாச்சா காதுகளைப் பொத்திக் கொண்டது.
“ இன்னொரு விசயமும் இருக்கு..கயல் பாப்பா..எங்களப்பார்க்கும்போது அருவெறுப்பாப்பார்த்தாலும் எங்களை வச்சி என்ன என்னல்லாம் பண்ணுறாங்க தெரியுமா?  எங்களால எல்லா தட்பவெப்ப நிலையிலும் உயிர்வாழமுடியும்… அது மட்டுமல்ல அணுகுண்டு கதிரியக்கம் கூட எங்களைப் பாதிக்காது… அது எப்படின்னு ஆராய்ச்சி பண்ணுறாங்க.. உலகம் பூரா இருக்கிற அறிவியல் மாணவர்கள் எங்களை வைச்சி பாடம் படிக்கிறாங்க.. மருந்துகள் கண்டுபிடிக்கிறாங்க.. பல நாடுகளில் எங்களை உணவாச் சாப்பிடுறாங்க.. ஆனாலும் பார்த்த உடனே கொல்லணும்னு ஓடி வராங்க…”
என்று கரப்பான் தாத்தா சொல்லிக்கொண்டிருக்கும்போதே சிலிண்டரை நகர்த்துகிற சத்தம் கேட்டது. பளீரென வெளிச்சம். வெளிச்சத்தைப் பார்த்ததும் கரப்பான் தாத்தா விருட்டென்று ஓடி விட்டது. கயல் பச்சா தவ்விக்குதித்தது. அரையடி தூரம் தான் போக முடிந்தது. அதற்குள் கயல் கையில் வாரியலோடு நின்றாள். அதைப் பார்த்த கயல் பாச்சாவுக்கு குலை நடுங்கியது. கயல் வாரியலை ஓங்கினாள்.
“ வேண்டாம்.. வேண்டாம் கயல்.. நான் தான்.. நீ..தான்.. நான்..நீ..”
என்று கயல் பாச்சா உளறியது. கண்விழித்த கயல் சுற்றும்முற்றும் பார்த்தாள். எதிரே இருந்த சுவரில் ஒரு கரப்பான்பூச்சி நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.
கயல் பாப்பா இப்போது கத்தவில்லை.

நன்றி - வண்ணக்கதிர்


.






Monday, 10 July 2017

காந்தீயத்தை விழுங்கிய இந்துத்வா



காந்தீயத்தை விழுங்கிய இந்துத்வா

உதயசங்கர்


மேற்கத்திய சிந்தனையாளர்கள் இந்து மதத்தை ஒருமைவாதமதமாக, இந்தியத்துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்த மதமாகவும், சித்தரித்திருந்த வரலாற்றை இந்து மத அடிப்படைவாதம் அப்படியே எந்த விமரிசனமுமின்றி ஏற்றுக் கொண்டது. அதாவது வேதகாலத்தில் சொர்க்கமாக இருந்தது…என்கிற நேர்கோட்டு கற்பனாவாதச் சிந்தனை அதற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல இந்துத்வாவின் இந்து மதம் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதில்லை. அது கற்பனாவாதவரலாற்றையும் இறுகிய தன்மையையும் கொண்டிருந்தது. அதன்மீது புனிதத்தை ஏற்றி ஒளி மிக்கதாக புனைவுகளை உருவாக்கி கதைகளின் மூலம் மீண்டும் பிராமணிய அதிகாரத்தை நிலைநிறுத்துவதையே முக்கியக் குறிக்கோளாக கொண்டிருந்தது. இந்தியா முழுவதுமுள்ள இந்துக்கள் அத்வைதவாதிகள் என்று வெளிப்படுத்த நினைத்தது. இந்தியாவின் பன்மைத்தன்மையை மறுதலித்து இந்தியர்களையெல்லாம் இந்துக்களாக ஒன்று திரட்ட முயற்சித்தது. ஆரியப்பெருமையையும், பார்ப்பனப்பெருமையையும் மீட்டெடுப்பது தான் இந்துக்களின் குறிக்கோள் என்று இந்துமத அடிப்படைவாதம் முன்வைத்தது. இந்துக்கலாச்சாரத்தேசியத்தை மீட்டெடுக்க ஒவ்வொரு இந்துவும் தன்னுடைய உயிரையே கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று முழக்கமிட்டது. இதற்கு சாதகமாக புராண, இதிகாசக்கதைகளை மீண்டும் புனைந்தது. இந்துத்வவாதிகள் தங்களை இந்து மதத்தின் ஏகப்பிரதிநிதிகளாக காட்டிக் கொண்டனர். மனுவின் சநாதன இந்து தர்மத்தைக் கடைப்பிடித்ததினால் பெண்களை அவமதிக்கவும் உதாசீனப்படுத்தவும், செய்தனர். வர்ணாசிரமக்கோட்பாட்டை தீவிரமாகப் பின்பற்றவும் அதை நிலைநிறுத்த முயற்சித்ததன் மூலம் தங்களுடைய மேலாண்மையை உறுதிப்படுத்த நினைத்தனர். அதன் மூலம் தீண்டாமை நிலைத்திருக்கச் செய்தனர்.

வெளியீடு - நூல்வனம் பதிப்பகம்

தொடர்பு எண் - 9176549991

Sunday, 9 July 2017

பேய் பிசாசு இருக்கா? - நூல் வெளியீடு

கேள்விகள் கேளு

கேள்வி கேட்பது என்பது மனித இயல்பு. அதனால் தான் அறிவியல் வளர்ந்தது. அறிவியல் மட்டும் அல்ல. வரலாறு, புவியியல், உயிரியல், என்று ஏராளமான துறைகள் உருவாகவும், வளரவும் காரணமாக இருந்தது கேள்விகள் தான். எல்லாவற்றையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்டான் மனிதன். பகுத்தறிவின் விதைகள் இவைதான்.
தாய் மொழி பேசப்படித்தவுடனேயே குழந்தைகள் அது என்ன? இது என்ன? என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுகின்றன. அந்தக் கேள்விகளுக்கான பதில் புரியாவிட்டாலும் கேட்டுக்கொள்கின்றனர். ஆனாலும் புரியவில்லை என்று பெரிதாகக் கவலைப்படுவதில்லை. கேள்விகள் வெள்ளம் என சீறி வந்து கொண்டே இருக்கின்றன.
பத்து வயதுக்கு மேல் குழந்தைகள் தங்கள் கேள்விகளுக்குப் பதில்களை எதிர்பார்க்கின்றனர். அதுவும் பொறுப்பான பதில்களை எதிர்பார்க்கின்றனர். உண்மையான பதில்களை எதிர்பார்க்கின்றனர். சின்னஞ்சிறு பிராயத்தில் பெரியவர்களால் உண்டான பயம், சந்தேகங்களை விளங்கிக் கொள்ள நினைக்கின்றனர்.
மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரை அவனுக்குச் சில சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன.
நாம் வாழும் இந்த உலகம் எப்படி உண்டானது?
கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?
பேய் பிசாசு இருக்கா?
மனிதனுக்கும் இந்த உலகிலுள்ள மற்ற உயிர்களுக்கும் என்ன தொடர்பு?
பல்லி பலன் சொல்லுமா?
பூனை குறுக்கே போனால் போகிற காரியம் கெட்டுப்போகுமா?
இப்படி நிறையக் கேள்விகள் பதில்களைத் தேடிக் கொண்டே இருக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கான எளிய பதில்களே இந்தக் கட்டுரைகள். இந்தப்பதில்கள் உண்மையில் பதில்கள் இல்லை. ஒரு மாற்று சிந்தனை முறையின் அறிமுகம். அறிவியல்பூர்வமான அணுகுமுறை, பகுத்தறிவின் துவக்கம்.

வெளியீடு - வானம் பதிப்பகம்

தொடர்பு எண் - 9176549991



Saturday, 8 July 2017

ராஜாவைக் காணோம்…..

ராஜாவைக் காணோம்…..
உதயசங்கர்

பழைய பழைய காலத்தில் வங்காளவிரிகுடா கடலில் ஒரு தீவு இருந்தது. அந்தத்தீவில் ஒரு பத்தாயிரம் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அதற்கு ஒரு ராஜாவும் மந்திரிப்பிரதானிகளும் இருந்தார்கள். அந்தத் தீவுக்குப் பெயர் வேண்டாமா? ஆமாம். அந்தத்தீவுக்கு ஒரு பெயர் இருந்தது. ஆனால் அதைப் பெயர் என்று சொல்ல முடியாது. அந்தத்தீவுக்கு எண் 420 என்று பெயரிட்டிருந்தார்கள். அந்தத்தீவின் ராஜாவுக்கு எண் 421 என்று பெயர். மந்திரிகளுக்கு 370, 371, 372, 373, என்று வரிசையாக பெயர் வைத்திருந்தார்கள். அப்படியானால் மக்களுக்கு சுழியத்திலிருந்து ஒன்று இரண்டு மூன்று என்று பத்தாயிரம் வரையிலான எண்களை சூட்டியிருந்தார்கள். எல்லோரும் அவர்களுடைய எண்களை மறந்து விடக்கூடாது என்று அந்த எண்களை கொட்டை எழுத்தில் ஒரு அட்டையில் அச்சிட்டு கழுத்தில் தொங்க விட்டிருந்தார்கள். எல்லோரும் அந்த எண்களைக் கொண்டே அழைத்தார்கள்.
“ ஏய் பதினெட்டு சாப்பிட்டுட்டு சீக்கிரம் பள்ளிக்கூடம் போ..”
என்று அம்மா காலையில் கத்தினார். அம்மா போட்ட சத்தத்தில் திடுக்கிட்டு கையில் இருந்த பையைக் கீழே தவற விட்டார் அப்பா. உடனே
“ பதினைஞ்சு…. பதினைஞ்சு… உனக்கு எத்தனை தடவை சொல்லியிரு்க்கேன்.. இப்படிக் கத்தாதேன்னு..”
என்று கத்தினார். அப்போது அந்த வீட்டின் கடைக்குட்டிப்பாப்பாவான பத்தொன்பது தண்ணீரை வீட்டில் கொட்டி மொழுகிக் கொண்டிருந்தாள். அம்மா அப்பாவைப் பார்த்து,
“ வரும்போது டாக்டர். இரண்டாயிரத்தைப் பார்த்து மருந்து வாங்கிட்டு வந்திருங்க..” என்றார்.
இப்படி அந்த நாடு முழுவதும் எண்களை வைத்தே எல்லா மக்களும் அறியப்பட்டார்கள். எங்கே போனாலும் கழுத்தில் தொங்க விட்டிருக்கும் அட்டையிலுள்ள எண்ணைப் பதிய வேண்டும். அவரவர் வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்றாலும் அந்த எண்ணை வாசலில் இருக்கும் கணிணியில் பதிந்து விட்டு காத்திருக்க வேண்டும். அனுமதி கிடைத்த பிறகே உள்ளே நுழைய முடியும். அலுவலகம் சென்றாலும் அப்படித்தான். கடைகளில் போய் உணவுப்பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் அப்படித்தான். அரசாங்க அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், பேருந்து, ரயில், விமானம், என்று எல்லாக்காரியங்களுக்கும் எண்ணைப் பதிய வேண்டும். அவ்வளவு ஏன்? பள்ளிக்கூடத்தில் போடுகிற மதிய உணவு கூட அந்த எண் இருந்தால் தான் கிடைக்கும். இப்படி எல்லாம் எண்கள். எங்கும் எண்கள்.
அந்த எண்கள் எல்லாம் அரண்மனையில் உள்ள மகாக்கணிணியில் ஏற்கனவே பதிந்து வைக்கப்பட்டிருந்தது. அதனால் யார் எங்கே போனாலும், என்ன செய்தாலும் அரண்மனைக்குத் தெரிந்து விடும். எல்லோரிடமும் உள்ள பணம், பொருட்கள், அவர்கள் பார்க்கும் திரைப்படங்கள், இசை, படிக்கும் புத்தகங்கள், என்று எண் 420 தீவில் வசிக்கும் அத்தனைபேரின் முழுவிவரமும் அரண்மனையில் இருந்தது. யாரும் அரண்மனைக்குத் தெரியாமல் எதுவும் செய்ய முடியாது. இதையெல்லாம் தெரிந்து கொள்ள எண் 420 தீவு ராஜா 421 ஒரு பெரிய தொடுதிரை வைத்திருந்தார். அந்தத் தொடுதிரையை முடுக்கிவிட்டால் போதும்.
“ எண் 253 இப்போது குளிக்கிறார் “
“ எண் 565 இப்போது கக்கூஸ் போகிறார்..”
” எண் 679 இப்போது ராஜாவுக்கு எதிராகப் பேசுகிறார்..”
“ எண் 1088 புத்தகம் வாசிக்கிறார்..”
” எண் 9877 இப்போது வீட்டுப்பாடங்கள் எழுதுகிறார்…”
“ எண் 6455 யாருக்கும் தெரியாமல் பணத்தைத் திருடுகிறார்..”
” எண் 8888 மிட்டாயை  ஒளித்துவைக்கிறார்..”
என்று எல்லோருடைய நடவடிக்கைகளும் ராஜாவுக்குத் தெரிந்து விடும். சரி. அதனால் என்ன? ராஜா 421 அரசாங்கத்துக்கு எதிராகவோ, ராஜாவுக்கு எதிராகவோ யாராவது யோசிக்கிறார்கள் என்றாலே அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து விடுவார். அவர்களுடைய எண்ணையும் பிடுங்கிவிடுவார். அவர்களுக்கு எண் இல்லாததால் அவர்களைப் பற்றி யாருக்கும் தெரியாது.
என்ன நடந்தாலும் அவரவர் எண் அட்டையை மட்டும் தொலைத்து விடக்கூடாது. அப்படித் தொலைத்து விட்டால் என்ன ஆகும்? எதிர்பாராத விதமாக சிலர் அவர்களுடைய எண் அட்டையைத் தொலைத்து விட்டார்கள். அவ்வளவு தான். அவர்களால் அவர்களுடைய வீட்டிற்குள் நுழைய முடியவில்லை. அலுவலகமோ பள்ளிக்கூடமோ செல்ல முடியவில்லை. கடைகளில் உணவுப்பொருட்கள் வாங்க முடியவில்லை. பையில் பணம் இருந்தாலும் ஹோட்டல்களில் சாப்பிட முடியவில்லை. அப்படியே தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்க வேண்டியது தான்.
” எப்போதும் இந்தத்தீவு இப்படியே தான் இருந்ததா? ”
என்று எண் 155 அவனுடைய தாத்தா 1119-இடம் கேட்டான். அப்போது தாத்தா 1119 சொன்னார்.
“ இல்லடா கண்ணா! ஒரு காலத்தில் எல்லோருக்கும் பெயர் இருந்தது. இந்தத் தீவின் பெயர் ஐந்திணை. என்னோட பெயர் சந்தனமாறன். உன்னோட அப்பாவோட பேரு தமிழழகன், உன்னோட அம்மாவோட பேரு அழகி, எல்லாம் இந்த ராஜா வந்தபிறகு அவருக்குத் தெரியாம எதுவும் நடந்திரக்கூடாது என்ற பயத்தில் இப்படிப் பண்ணிட்டாரு…அறிவியலை தவறாப்பயன்படுத்திட்டாரு “
இதைக்கேட்ட எண் 155-க்கு வருத்தமாக இருந்தது. எண் 155 க்கு இரண்டு கிளிகள் நண்பர்களாக இருந்தனர். தினமும் வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் சாயங்காலம் பறந்து வரும் கிளிகள். அந்தக் கிளிகளிடம் எண்155 தினமும் நடக்கிற விசயங்களைச் சொல்வான். அப்படித்தான் அன்றும் எண்களினால் வருகிற குழப்பங்களையும் பிரச்சினைகளையும் சொன்னான். எப்போதும் யாரோ தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பதினால் யாரும் சுதந்திரமாக இருக்க முடியவில்லை.அவனுடைய வருத்தத்தைக் கேட்ட கிளிகள் ஒன்றும் சொல்லாமல் பறந்து போய் விட்டன. எண்155 சோகத்துடன் வீட்டுக்கு வந்து படுத்து விட்டான்.
அடுத்த நாள் தொலைக்காட்சியில் பிரேக்கிங் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது. ராஜா 421 காணாமல் போய் விட்டார். அரண்மனையிலிருந்து காலையில் நடைப்பயிற்சி செய்ய பூங்காவுக்குச் சென்றவரைக் காணவில்லை. அவருடைய அடையாளஎண் அட்டை செயல் இழந்து விட்டது என்ற அறிவிப்பு ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால் உண்மையில் ராஜா தெருக்களில்  அலைந்து திரிந்து கொண்டிருந்தார். அவருடைய கழுத்தில் அடையாளஎண் அட்டை இல்லாததால் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. ராஜா தெருத்தெருவாக,
“ நான் தான் ராஜா…நான் தான் ராஜா…”
என்று கூவிக்கொண்டே போனார். யாரும் அவரைக் கவனிக்கவில்லை. ஏன் எண் 155 கூட அவரைப் பார்த்தான். யாரோ அடையாளஎண் அட்டை தொலைத்தவர் என்று பேசாமல் போய் விட்டான். மாலையில் வீட்டுக்குப் போனதும் வேப்பமரத்தடிக்குப் போனான். அங்கே அவனுடைய நண்பர்களான அந்த இரண்டு கிளிகள் உட்கார்ந்திருந்தன. ஒரு கிளியின் வாயில் ராஜாவின் அடையாளஎண் அட்டை கயிறுடன் இருந்தது.
மறுநாள் காலை நாடே அல்லோலப்பட்டது. ஆம். நாடு முழுவதும் அடையாளஎண் திட்டம் நீக்கப்பட்டது. இனி அவரவர் விருப்பம் போல பெயர்களை வைத்துக் கொள்ளலாம். இந்தத் தீவின் பெயர் இனி ஐந்திணை. தேவைக்கு அதிகமான தகவல்கள் கணிணியில் இருந்து நிரந்தமாக அழிக்கப்பட்டது. மக்கள் நிம்மதியாக, சுதந்திரமாக வாழ்ந்தார்கள்.
அடையாளஎண் அட்டை தொலைந்து தெருக்களில் திரிந்த ராஜாவை எப்படிக் கண்டுபிடித்தார்கள்? என்ற கதைகள் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஓடிக்கொண்டிருந்தது.
தொலைந்து போன ராஜா421 அடையாளஎண் அட்டை செந்தமிழ்ச்செல்வனின் மேசை இழுப்பறையில் கிடந்தது.
என்ன விழிக்கிறீர்கள்? செந்தமிழ்ச்செல்வன் தான் பழைய  எண் 155 ஐயையும் அவனது நண்பர்களையும் மறந்துட்டீங்களா?
கீக்க்கீகீகீகீ! கிக்கீக்கீ..!



Friday, 7 July 2017

பீட்டர்ஸ்பர்க்கின் கோவில்பட்டிக்கிளை

பீட்டர்ஸ்பர்க்கின் கோவில்பட்டிக்கிளை

உதயசங்கர்

1970-80-களில் புரட்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்தது கோவில்பட்டி. அன்றாடம் ஊரின் தெருக்களில், காந்தி மைதானத்தில் முக்குக்கு முக்கு இருந்த டீக்கடைகளில் தோழர்கள், தொழிற்சங்கவாதிகள், எழுத்தாளர்கள், இளைஞர்கள், அறிவுஜீவிகள் கூடி நின்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள். தத்துவம் சார்ந்த வாதங்களும், இலக்கியம் சார்ந்த வாதங்களும், நடைமுறை அரசியல் சார்ந்த வாதங்களும் புழுதியில் சிந்திக் கொண்டேயிருந்தன. அந்த வாதங்களை கால்களில் அளைந்து கொண்டே மக்கள் அலைந்து திரிந்தார்கள். இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது. ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்.சோ.அழகிரிசாமி இருந்தார். எளிமையின் அர்த்தமாக இருந்த அந்தத்தோழர் கோவில்பட்டியின் அடையாளம். நாங்கள் புத்தம்புதிதாக இலக்கிய உலகத்திற்குள் நுழைந்த போது எங்களை இருகரம் நீட்டி அரவணைத்தவர்கள் இடதுசாரி அமைப்பைச்சார்ந்த தோழர்களே. அநேகமாக தமிழகத்தின் எல்லாப்பகுதிகளிலும் இப்படித்தான் நிகழ்ந்திருக்கும். அரவணைத்த இரண்டு கரங்களில் ஒன்றில் மாக்சிம் கார்க்கியின் தாய் இருந்தது, .மற்றொன்றில் நிகலொய் ஒஸ்திராவ்ஸ்கியின் வீரம் விளைந்தது இருந்தது.
அன்று ஒரு புதிய உலகத்திற்குள் நுழைந்தோம். அது ஒரு கோடை இரவு. கரிசல் நகரமான கோவில்பட்டியின் வெயில் அன்று பெய்து தீர்த்திருந்தது. நாங்கள் எப்போதும் கூடிப்பேசும் காந்திமைதானத்து  மண்ணிலிருந்து இன்னமும் ஆவி கிளம்பிக்கொண்டிருந்தது. அமைதியாக நாங்கள் உட்கார்ந்தோம். யாரோ தாய் நாவலைப் பற்றி பேச்செடுத்தார்கள். அப்போது தான் கவனித்தேன். எங்கள் வட்டத்துக்கு வெளிவட்டத்தில் அந்த மீசைக்கார முரட்டுத்தனமான எழுத்தாளன் தன்னுடைய சுருட்டைப் புகைத்தபடி உட்கார்ந்திருந்தார். எங்கள் இயல்பான தெனாவெட்டோடு தான் அவருடைய தாய் நாவலைப் பற்றிப் பேசினோம். அவர் மீசையைத் தடவிக்கொண்டே ” பார்த்தீங்களா தோழர்கள் எப்படிப் பேசுகிறார்கள்? “ என்று சொல்லித் திரும்பிப்பார்த்து சிரித்தார். அவருடைய முதுகுக்குப் பின்னால் தன்னுடைய கீற்றுக்கண்களால் எங்களைப் பார்த்துச் சிரித்தபடி விளாடிமீர் இலியீச் லெனின் உட்கார்ந்திருந்தார். அவர் தன்னுடைய உறுதியான குரலில் எங்களிடம் ” வீரம் விளைந்தது வாசித்தீர்களா தோழர்?” என்றார். இரண்டு பாவெல்களை எங்களால் மறக்கமுடியவில்லை. தாய் நாவலில் வரக்கூடிய பாவெல் புரட்சிக்குக் கட்டியம் கூறினான். வீரம்விளைந்தது நாவலில் வரக்கூடிய பாவெல் புரட்சியை நிலை நிறுத்தினான். நாங்கள் புரட்சியின் நாயகர்களான பாவெல்களை எங்களுக்குள் வரித்துக் கொண்டோம்.
மிகயீல் ஷொலகோவின் அவன் விதி, பரீஸ் வசீலியேவின் அதிகாலையின் அமைதியில், பரீஸ் பொலயோவின் உண்மை மனிதனின் கதை, மண் கட்டியை காற்று அடித்துக் கொண்டு போகாது, சக்கரவர்த்தி மகாபீட்டர், என்று தோழர்கள் கொடுத்த புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தோம். அப்போது கோவில்பட்டிக்குப் புதிதாக வந்து இணைந்து கொண்ட எழுத்தாளர் ஜோதிவிநாயகம், இன்னொரு ருஷ்யாவைக் காட்டினார். அதுவரை புரட்சியின் கனல் வீசிக்கொண்டிருந்தது காந்தி மைதானம். துப்பாக்கி முழக்கங்களும், போர்ப்பாடல்களும், வெற்றி முழக்கங்களும், யுத்தவியூகங்களுமாய் நாளும் ஒரு நாவலைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்த எங்களுடைய இறுகிய முகங்கள் சட்டென்று பூ மலர்ந்தமாதிரி மர்மமான புன்னகையுடன் விரிந்தன.
இப்போது காந்திமைதானத்தில் பனி பொழிந்து கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று வீசியது. உடல் நடுக்கியது. என்ன குளிர்! என்று சொல்லியபடியே செய்யது பீடியைச் சுண்ட இழுத்தார் கவிஞர் கிருஷி. நாங்கள் உடம்பைக் குறுக்கிக் கொண்டோம். எங்களிடமிருந்து சற்றுத்தள்ளி உட்கார்ந்திருந்தவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. நீண்ட தாடியும் மெலிந்த உடலும், ஏறிய நெற்றியும் தாஸ்தயேவ்ஸ்கியின் சாடையைக் காட்டியது. லேசாக இருமினார். அப்படியே பனி பொழிந்து கொண்டிருக்கும் வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாதிரி இருந்தது. தூரத்தில் ஒரு பெண். வெண்ணிற இரவுகளில் வந்த நாஸ்தென்கா தான் அது. தலையில் கைக்குட்டையைக் கட்டியிருந்தாள். தாஸ்தயேவ்ஸ்கியின் அருகில் வந்து உட்கார்ந்தாள். நாங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். இப்போது தாஸ்தயேவ்ஸ்கி நாஸ்தென்காவைப் பார்த்து ஏக்கப்பெருமூச்சை விட்டார். எழுந்து அங்கும் இங்கும் நான்கடிகள் நடந்தார். அப்படியே சில கணங்கள் நின்றார். போய்விடப்போவதைப்போல திரும்பி சில தப்படிகள் நடந்தார். பின்னர் யாரும் எதிர்பாராதவண்ணம் நாஸ்தென்காவின் முன்னால் போய் மண்டியிட்டார். நாஸ்தென்காவின் வலது கையைப் பிடித்தபடி பேச ஆரம்பித்தார். அவர் பேசப்பேச அந்தக்குரல் அந்தக்குரல்…. என்னுடைய குரலாக மாறியது. வெண்ணிற இரவுகளின் கனவுலக வாசியாக நானே மாறியிருந்தேன். ஆனால் என்னுடைய நாஸ்தென்கா..? இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன். நாஸ்தென்கா!
கோவில்பட்டியின் மற்றுமொரு இலக்கியச்சந்திப்பு மையமாக கதிரேசன் கோவில் மலை இருந்தது. ஒரு அந்திப்பொழுதில் சூரியனின் கதிர்கள் சாய்ந்து விழுந்து கொண்டிருந்த வேளை மலையின் மடியெங்கும் விரிந்து பரந்திருந்த கோரைப்புற்கள் காற்றில் ஆடின. ஆடிக்கொண்டிருந்த அந்தப்புல்வெளி எப்போது ருஷ்யாவின் ஸ்தெப்பி புல்வெளியாக மாறியது? உங்களுக்குத் தெரியுமா? அன்று நாங்கள் சிங்கிஸ் ஐத்மாத்தவின் ஜமீலாவை வாசித்திருந்தோம். எங்களுக்கு முன்னால் விரிந்திருந்த அந்த ஸ்தெப்பிப்புல்வெளியில் தானியாரின் குதிரை வண்டி ஓடிக்கொண்டிருந்தது. அந்த வண்டியின் பின்னால் ஜமீலாவின் வண்டியும் ஓடியது. காற்றின் கீதத்தில் காதல் கனிந்திருந்தது. ஜமீலாவின் வண்டியில் அவளையே பார்த்துக் கொண்டு அவளுடைய மைத்துனான கிச்சினே பாலா நின்று கொண்டிருந்தான். அவனுடைய அண்ணனின் மனைவியான ஜமீலா போர்முனையில் காயம் பட்டு திரும்பிவந்த யாருமற்ற அநாதையான தானியாரைக் காதலிக்கிறாள். அவனால் நம்பவே முடியவில்லை. முரடனான, அழகற்ற தானியாரின் மீது ஜமீலா காதல் கொள்வதற்கு எது காரணமாக இருக்கும்? கிச்சினேபாலா யோசிக்கிறான். தானியாரும் ஜமீலாவைக் காதலிக்கிறான். ஸ்தெப்பியின் புல்பரப்பில் தானியாரின் பாடல் துடிக்கிறது. அதைக் கேட்ட பிறகே ஜமீலா தானியாரின் வண்டியில் ஏறி மலைக்கு அப்பால் போய்க் கொண்டிருக்கிறாள். கிச்சினே பாலா வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய அருமையான ஜமீலா போய்க் கொண்டிருப்பதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறான். காதலின் உன்னதம் பொங்கும் அந்த ஸ்தெப்பிப்புல்வெளியில் நான் கிச்சினேபாலா…இல்லையில்லை தானியார்..என்னுடைய ஜமீலா..போய்க்கொண்டிருக்கிறாள். ஆனாலும் நான் அமைதியாக இருக்கிறேன்..சிங்கிஸ் ஐத்மாத்தவ் என்னுடைய தவிப்பைப்பார்த்துச் சிரிக்கிறார்.
கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அலாதியான தனிமையில் தனியே உட்கார்ந்திருந்தது. ஓவியம் போல அசையாமல் இருக்கும் வேப்பமரங்களில் எப்போதாவது வந்து உட்காரும் ஒன்றிரண்டு காகம். அதுவும் அசையாமல் இருந்திருந்து பார்த்து விட்டு தான் உய்ரோடு இருப்பதைத் தானே உறுதிப்படுத்திக் கொள்வதைப் போல கா..கா..கா.. என்று கரைந்து விட்டுப் பறந்து போய் விடும். ஒரு அதிகாலை நான் ரயில்வே ஸ்டேஷனின் தவத்தைக் கலைக்காமல் அங்கிருந்த சிமிண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன். ரயில் வருவதற்கு வெகுநேரம் இருந்தது. நீண்ட அங்கியும், பணக்காரத்தோற்றமும், நீளமான தாடியும் கொண்ட தளர்ந்த வயதான லியோ டால்ஸ்டாய் சற்று தூரத்தில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்தார். அவர் முகம் துயருற்றிருந்தது. அவருடைய முடிவை அவரே பார்க்கப்போவது போல விரக்தியுடன் கைகளை நெட்டி முறித்தார். அங்கியின் பையிலிருந்து காகிதத்தை எடுத்து ஏதோ எழுதினார். அவர் எழுதியதை மீண்டும் பைக்குள் வைத்து விட்டு நிமிர்ந்து பார்க்கும்போது பிளாட்பாரத்தில் அன்னாகரீனா நடந்து வந்து கொண்டிருந்தாள். இன்னும் சற்று நேரத்தில் வரப்போகிற ரயிலின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்யப்போகிறாள்.
குடும்ப உறவைத் தாண்டி விரான்ஸ்கியுடனான அவளுடைய காதலே அவளை இந்த முடிவுக்குத்தள்ளுகிறது. ஆனால் அன்னா தான் லெவின், கிட்டி இருவரின் கருத்து வேறுபாட்டைத் தீர்த்து வைக்கிறாள். குடும்பம், என்ற அமைப்பின்  உன்னதத்தை அவர்களுக்குப் புரிய வைக்கிறாள். சுதந்திரமான பெண்ணான அன்னாவின் வாழ்வில் ஏதோ ஒரு வெற்றிடம் இருக்கிறது. அந்த வெற்றிடத்தில் விரான்ஸ்கி வந்தமர்கிறான். அன்பே நிறைந்த அன்னாவின் உள்ளம் அலைக்கழிகிறது. ஒரே நேரத்தில் அளவுகடந்த காதலும், அளவு கடந்த வெறுப்பும் விரான்ஸ்கியின் மீது உண்டாகிறது. தத்தளிக்கும் அன்னா எடுக்கும் முடிவை டால்ஸ்டாயே விரும்பவில்லை. அவர் அன்னாவிடம் எவ்வளவோ சொல்லிப்பார்க்கிறார். அன்னா எதையும் கேட்கவில்லை. அவருடைய முடிவே போலும் அவர் உணர்ச்சிக்கொந்தளிப்பில் அந்த சிமிண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தார். அன்னாவை என் லட்சியக்காதலியாகக் கொண்டிருந்த என்னால் அதற்கு மேல் அங்கிருக்கப்பிடிக்கவில்லை. டால்ஸ்டாயிடம் சொல்லிக்கொள்ளக்கூடத் தோன்றவில்லை. எப்படியும் இரவில் காந்தி மைதானத்துக்கு வருவார். அவருடைய புத்துயிர்ப்பு பற்றியோ, கிரேஸ்சர் சோனட்டா பற்றியோ, போரும் வாழ்வும் பற்றியோ நாங்கள் பேசும்போது வந்து அருகில் அமர்ந்து கேட்பார். அப்போது பேசிக்கொள்ளலாம்.
இவான் துர்கனேவின் ஆஸ்யாவும், முதல்காதலும், ஆச்சரியமளித்தன. அவருடைய  தந்தையரும் தனயரும் வாசித்து விட்டு நாங்கள் கொண்டிருந்த கம்பீரமான துர்கனேவ் மூன்று காதல்கதைகளில் தன்னுடைய மெல்லுணர்வுகளை எல்லாம் கொட்டித்தீர்த்திருந்தார். நாங்களும் முணுமுணுத்தோம். காதல் ஒரு வசீகரமான மர்மம்.
வேலை இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த காலத்தில் ஒரு விட்டேத்தியான மனநிலை இருந்தது. அப்போது தான் நான் தான் உங்கள் கதாநாயகன் என்று சொல்லிக்கொண்டு லெர்மென் தேவ் வந்தார். நம் காலத்து நாயகன் நாவலை நாங்கள் நம்முடைய சமூகச்சூழலோடு ஒப்பிட்டோம். செகாவின் ஆறாவது வார்டில் பைத்தியக்காரத்தனத்துக்கு சற்றும் குறைவில்லாமல் நம்முடைய சமூகம் இருந்ததைக் கண்டோம். அலெக்சாண்டர் குப்ரின் மாணிக்கக்கங்கணம் என்ற மகத்தான காதல் கதையை எழுதினார்.
ருஷ்யா கோவில்பட்டியில் இருந்தது. பீட்டர்ஸ்பர்க்கின் பனிபொழியும் தெருக்களில் நடந்து திரிந்தோம். லெனின்கிராட் மைதானத்தில் அமர்ந்து உலக அரசியலைப் பற்றி விவாதித்தோம். ருஷ்ய, சோவியத் இலக்கியங்களில் வந்த நடாஷாவையும், ஆஸ்யாவையும், அன்னாவையும், ஜமீலாவையும், நாய்க்காரச்சீமாட்டியையும், காதலித்துக்கொண்டிருந்தோம்.  சோவியத் புத்தகங்கள் இல்லாத வீடுகளே இல்லை. குழந்தைகள் பத்திரிகை, சினிமா பத்திரிகை, அறிவியல் பத்திரிகை என்று பத்திரிகைகள் வீடுகளுக்கு வந்து கொண்டிருந்தது. வாசிப்பின் வழியே எங்களுக்கான ஒரு உலகைப் படைத்துக்கொண்டோம்.
இந்த ஆண்டும் வெயில் கொளுத்துகிறது. ஆவி பறக்கிறது. ஆனால் பனி பொழியவில்லை. பீட்டர்ஸ்பர்க் நகரமாக மாறுகிற மாயாஜாலம் நடக்கவில்லை. இப்போதும் கதிரேசன் கோவில் மலை இருக்கிறது. கீழே ஸ்தெப்பிப்புல்வெளி இல்லை. காற்றில் நிறைந்து வரும் காதலின் கீதம் இல்லை. காங்கிரிட் காடுகள் முளைத்து புகை விடுகின்றன. இப்போதும் தோழர்கள் இருக்கிறார்கள். புரட்சி பற்றிய கனவின் சுவடு கூட அவர்களிடம் இல்லை. ஆனால் புஷ்கினும், டால்ஸ்டாயும், தாஸ்தயேவ்ஸ்கியும், செகாவும், கார்க்கியும், லெர்மன் தேவும், குப்ரினும், ஷொலகோவும்,, அலக்சி டால்ஸ்டாயும், சிங்கிஸ் ஐத்மாத்தவும், வசீலியும், அமானுஷ்யமாய் தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள். யாரோ ஒரு இளம் வாசகன் அவர்களுடைய படைப்புகளை வாசிக்கும்போது அருகில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த இளம் வாசகனின் முகத்தில் தெரியும் உணர்ச்சி மாற்றங்களைக் கண்டு புன்னகை பூக்கிறார்கள். காலத்தால் அழியாத தங்களுடைய படைப்புகளின் மீதான நம்பிக்கையோடு சற்று கர்வத்துடன் என்னைப்பார்த்துச் சிரிக்கிறார்கள்.

காலமும் சிரிக்கிறது நம்பிக்கையுடன்.

நன்றி - அந்திமழை

Thursday, 6 July 2017

இடாலோ கால்வினோ சிறுகதைகள்

இடாலோ கால்வினோ
சிறுகதைகளைப் பற்றிய ஒரு சுருக்கமான மதிப்பீடு

தமிழில் - உதயசங்கர்

( இடாலோ கால்வினோ தலை சுற்றவைக்கும் குறிக்கோளைக் கொண்ட எழுத்தாளர்.  பலவகையான கதைகளை எழுதியுள்ள  அவருடைய ஒவ்வொரு கதையும் புனைவின் சாத்தியங்களுக்குள் நிகழ்த்தப்படும் ஒரு புதிய சாகசம்.)
1983 – ஆம் ஆண்டு இளவேனிற்காலத்து நியூயார்க் நகரத்தில் அவர் பேசும்போது,
“ நான் எழுதியுள்ள பெரும்பாலான புத்தகங்களும், இனி எழுதப்போகிற புத்தகங்களும் என்னால் அப்படி ஒரு புத்தகத்தை ஒரு போதும் எழுதமுடியாது என்ற எண்ணத்திலிருந்து உருவானவையே. எப்போது அப்படி ஒரு புத்தகம் எழுதுவது என்பது என்னுடைய உணர்திறன்களுக்கும் அல்லது செயல்திறன்களுக்கும் அப்பாற்பட்டது என்று எனக்குள்ளேயே முடிவு செய்கிறேனோ அப்போது நான் உட்கார்ந்து அந்தப்புத்தகத்தை எழுத ஆரம்பித்து விடுவேன்.”
என்று குறிப்பிடுகிறார்.
கால்வினோ பெரும்பாலான படைப்புகளைப்போலவே இந்த அறிவிப்பும் உடனடியான முரண்நகையாகவும் மிகத்தீவிரமானதாகவும் ஆனது. அந்த வாக்கியத்தை அவருடைய புத்தகப்பட்டியல் முழுமையாக நியாயப்படுத்தவும் செய்கிறது. 1940-களின் இறுதியிலிருந்து 61 வயதில் ஒப்பீட்டளவில் சீக்கிரமாக அவர் மரணமடைந்த 1985- வரை அவர் தனித்துவமிக்க பலதிறப்பட்ட படைப்புகளை நவீன காலத்தின் அனைத்து எழுத்தாளர்களைப்போலவே படைத்தவர். அதாவது இரண்டாவது உலக யுத்த காலத்திலும், யுத்தகாலத்திற்குப்பின்பும் நியோரியலிசக் கதைகளை எழுதியவர். ( இளம் கால்வினோ கலகக்காரராக இருந்திருக்கிறார். 1956 –ஆண்டில் ஹங்கேரியின் மீதான சோவியத்தின் படையெடுப்புக்கு கொஞ்சம் முன்புவரை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ) பழங்கதைகள், அரசியல் உருவக்கதைகள், வரலாற்று நாவல்கள், அறிவியல் கோட்பாடுகளால் உத்வேகம் பெற்ற கதைகள், சிந்தனைப்பரிசோதனைகள், பழைய காலச்சீட்டுக்கட்டைப்பயன்படுத்தி விவரணைகளை எழுதுதல், கம்ப்யூட்டரின் வழி விவரணைகளை எழுதுதல் என்று எல்லாவிதமான முயற்சிகளையும் செய்து பார்த்தவர். 1970 – களின் இரு முனைகளிலும், அவர் வெளியிட்ட புலப்படாத நகரங்கள், ( Invisible cities ) ஒருவேளை பனிக்கால இரவின் மீது ஒரு பயணி, ( If on a winters night a traveler ) என்ற இரண்டு நாவல்களும் ஃபேண்டசியைப் பயன்படுத்தி யதார்த்தத்தை சுட்டிக்காட்டுகிற மிகச்சிறந்த முன்மாதிரிகள் என்று சொல்லலாம். கட்டமைப்பு ரீதியாக இந்தப்புத்தகங்கள் அவருக்கு ஆரம்பத்தின் மீது இருக்கும் பெருவிருப்பும், முடிவின் மீது இருக்கும் நம்பிக்கையின்மையையும் காட்டுகிறது. இந்த நிலைமை தான் அவரை வழக்கமாக ஒரு ஆவேசநிலையிலிருந்து மற்றொன்றிற்கு அதாவது அடுத்து எழுதவே முடியாத ஒன்றை நோக்கிப்போகச்செய்கிறது. 1959 – ஆம் ஆண்டு எழுதிய அவருடைய “ இல்லாத படைவீரனின் இரங்கல் ( THE NONEXISTENT KNIGHT MOURNS ) என்ற நாவலில்  உணர்ச்சிக்கொந்தளிப்பை எப்படி அவநம்பிக்கை எதிர்நிலையில் சமன் செய்கிறது என்று கதைசொல்லியாக வெளிப்படுத்துவார்.
“ ஒருவர் ஒரு வித உற்சாகத்தோடு எழுத ஆரம்பிப்பார். ஆனால் ஒரு நேரத்தில் பேனா வெறுமனே தூசிபடிந்த மையோடு உராய்ந்து கொண்டிருக்கும். ஒரு சொட்டு வாழ்க்கைகூட காகிதத்தில் சிந்தாது. வாழ்க்கை வெளியே இருக்கும். ஜன்னலுக்கு வெளியே, ஒருவருக்கு வெளியே இருக்கும். அதைப்பார்க்கும் போது ஒருபோதும் ஒருவரால் எழுதிக்கொண்டிருக்கும் அந்தப்பக்கத்துக்குள் நுழைந்து இன்னொரு உலகத்தை திறந்தோ, இடைவெளியைத் தாண்டிக்குதித்தோ தப்பித்து விடமுடியாது. “
1940-களின் இறுதியில் கால்வினோ அவருடைய யுத்தகால அநுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான ஹெமிங்வேயக்கதைகளை  எழுதினார். எப்படியோ ஏற்கனவே சில கதைகளில் தேவதைக்கதைத்தன்மை புகுந்து விட்டிருந்தது. உதாரணத்திற்கு விலங்குக்காடு ( ANIMAL WOOD )  இந்தத்திசை வழியே தான் 1950-களில் அவருடைய படைப்புகள் இருந்தன. வாசகர்கள் எதிர்பார்த்திருந்த இத்தாலிய சமூகத்தின் நியோரியலிச நாவல் தோன்றவில்லை. பின்னால் அவர் விளக்கமளித்தார்:
“ நான் எந்தப்புத்தகத்தை எழுத வேண்டுமோ எந்தப்புத்தகத்தை என்னிடமிருந்து எதிர்பார்த்தார்களோ அதை எழுதுவதற்குப்பதில் நான் புத்தகத்தில் மாயஜாலம் செய்து கொண்டிருந்தேன். நானே வேறு ஒரு காலத்திலிருந்து வேறு ஒரு நாட்டிலிருந்து யாரோ ஒரு எழுத்தாளர் எழுதிய அந்த மாதிரியான புத்தகங்களை வாசிக்க, மேன்மையான ஒன்றை கண்டுபிடிக்க நினைத்திருந்தேன்..”
அந்தப்புத்தகம், வரலாற்று ஃபேண்டஸியான துர்க்குணப்பிரபு, ( THE CILOVEN VISCOUNT 1951) அதே மாதிரியான பாணியிலான இரண்டு புத்தகங்கள் மரங்களின் சீமான் ( THE BARON IN THE TREES ), இல்லாத வீரன் ( THE NONEXISTANT KNIGHT ) வெளிவந்தன. அதே காலகட்டத்தில் ( 1956) இத்தாலிய நாட்டுப்புற கதைகளை கால்வினோ தொகுத்துக்கொண்டிருந்தார். இத்தாலிய தீபகற்பத்திலுள்ள கதைகளைப் பற்றி கறாரான ஒரு மதிப்பீட்டுக்கு வருவதற்கான அறிவார்ந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்தத் திட்டம் அவருடைய விருப்பார்ந்த “ ஃபேண்டஸியாக வெடித்துக்கிளம்பும் யதார்த்தத்தின் சக்தி “ கருதுகோளை இறுக மூடிவிட்டது. அதற்குப்பின்னால் வந்த அவருடைய படைப்புகளில் சில விதிவிலக்குகளைத் தவிர  அபராதம்1963 கதை ( THE FINE 1963 STORY ) 1953 –ல் நடந்த தேர்தலைப்பற்றிய கதையான காவல்காரர் ( WATCHER ) அவர் முயற்சித்திருந்தார். அதன் பிறகு அவர் யதார்த்தவாதத்தை கைவிட்டுவிட்டார்.
1960-களிலிருந்து கால்வினோவின் எழுத்துமுறை அடிக்கடி வேறொரு வடிவத்தை அடைந்தது. அவருக்கும் வாசகனுக்கும் இடையில் அல்லது அவருக்கும் ஒரு கோட்பாட்டுக்கும் இடையிலான ஒரு விளையாட்டுபோல ஆனது. அதிசயத்தக்க வகையில் டி ஜீரோ மற்றும் இரவு ஓட்டுநர் ( 1967 ) ஆகிய கதைகளில் கதாபாத்திரங்களே இல்லாமலே கூட கதை சொல்லும் சுவாரசியத்தைத் தக்கவைக்க முடிந்தது. இந்தக்கதைகள் கால்வினோவை OULIPO குழுவுடன் அணி சேரவைத்தது. OULIPO பாரீசிலிருந்த ஒரு குழு. அதில் ரேமண்ட் க்யுனிவா, ஜார்ஜஸ் பெரெக் போன்றவர்கள் இருந்தார்கள். அவர்கள் கணிதத்திலிருந்த இறுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் இலக்கியத்தில் உள்ள சுதந்திரத்தையும் இருண்மையையும் ஊடுபாவச்செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் இந்தப்பயணங்களில் விருப்பமுள்ள பயணியாக இல்லை. என்றாலும் கோரே விடால் 1974-ல் எழுதிய ஒரு புகழ் பெற்ற கட்டுரையில்- நியுயார்க் ரிவ்யூ ஆப் புக்ஸ் ஆங்கிலம் பேசும் உலகில் வெற்றிகரமாக கால்வினோவை அறிமுகம் செய்திருந்தது. – அதிருப்தியுடன் “ டி ஜீரோ ஃபோர்ஹேவால் இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கக்கூடும். இந்தப்போட்டி அவருக்கு ராப்பே-க்ரில்லெட்டை ஞாபகப்படுத்தினாலும் இதை பாராட்டுக்காகச் சொல்லவில்லை என்று தெளிவுபடுத்திருப்பார்.
அந்தக்கதைகள் அவருடைய காஸ்மிகாமிக்ஸ் தொகுப்பில் வெளிவந்தன. அந்ததொடர் 1964-க்கும் 1968-க்கும் இடையில் எழுதப்பட்ட கால்வினோவின் மிகச்சிறந்த படைப்புகள். பின்னால் அந்தத் தொகுப்பில் 1980-களின் பின்பகுதியில் புதிதாகச் சிலவற்றை சேர்த்தாலும் ஆசிரியரே சொல்வதைப்போல அவையெல்லாம் பப்பாயி காமிக்ஸை எழுதிய லியோபார்டி, சாமுவல் பெக்கட், ஜியோர்டனோ புருனோ, லெவிஸ் கரோல், மாட்டாவின் சில ஓவியங்கள், லாண்டோல்ஃபி, இம்மானுவேல் காண்ட், ஃபோர்ஹே, ஆகியோரின் சில படைப்புகள், கிராண்ட்வில்லேயின் சித்திரங்கள் இவையெல்லாவற்றுக்கும் கடன்பட்டிருக்கிறது. பெரும்பாலும் உச்சரிக்க முடியாத பெயருடைய  Qfwfq கூடுவிட்டு கூடு பாய்கிற கதாபாத்திரத்தால் கதை சொல்லப்படுகிறது. ( எனக்கு ராபெர்ட் கூவர்ஸினுடைய kwoofk –கோடு செல்வது மகிழ்ச்சியைத்தரும்.) ஒவ்வொரு கதையும் ஒரு அறிவியல் அறிக்கையைத் துவக்கமாகக் கொண்டிருக்கும். அதிலிருந்து புனைவின் வழியாக யதார்த்தம், கற்பனாவாதம், இருத்தலியல், வானியல், பூமியியல், பரிணாம உயிரியல், என்று Qfwfq பெரும்வெடிப்பு ( BIGBANG ) காலத்திலிருந்து சுற்றிக்கொண்டிருப்பான். அவனை நாம் ஆழ்வெளியின் கழிவுகளூடே, ஆதிமுன்னோர்களுடன், இனப்பெருக்க அலைக்குளத்தில், பூமியின் ஆழடுக்குகளில் பின் தொடர்ந்து கொண்டிருப்போம். மார்ட்டின் மெக்லாலின் குறிப்பிடுவதைப்போல கால்வினோவின் நிரந்தமான குறிக்கோள் என்பது இப்போது இருக்கும் இடத்திலிருந்து இலக்கியத்தின் குறிக்கோளை உயர்த்துவது தான். அவர் விளக்கமுடியாததை விளக்கும்படி இலக்கியத்துக்கு சவால் விட்டார். அண்டத்திலிருந்து பிண்டம், பெரும்வெடிப்பிலிருந்து அணுக்கள் உடைந்துபிரிவது வரை இலக்கியத்தில் கொண்டுவர விரும்பினார். இதற்காக அவர் பயன்படுத்திய மொழி அதிரடியானது. இறுக்கமான விவரணைகளின் வழி பிரபஞ்சத்தின் தோற்றக்கோட்பாடுகளான அண்டவியல் கொள்கையோடு நிரந்தரநிலை கொள்கையை இணைத்து எழுதினார்.
“ எங்கும் வெளி வளைந்தே இருக்கிறது. ஆனால் சில இடங்களில் மற்ற இடங்களை விட நன்றாக வளைந்திருக்கிறது. பைகளைப்போல, பாட்டில்கழுத்துவளைவு போல, பிறைகளைப்போல வளைந்திருக்கிறது. அங்கே சூனியம் நசுக்கப்படுகிறது. ஒவ்வொரு இருநூற்றைம்பது மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை இந்த பிறைவளைவுகள் இருக்கின்றன. அங்கே ஒரு மெல்லிய மணியோசை கேட்கும். உடனே பளபளக்கும் ஹைட்ரஜன் அணு உருவாகும். முத்துச்சிப்பிகளின் ஓடுகளுக்கிடையில் முத்து உருவாவதைப்போல..”
நான் அறிந்தவரையில் மற்ற எழுத்தாளர்களை விட கால்வினோவின் கதையை வாசிக்கத்தொடங்குவது என்பது யாருமறியாத பூமியை நோக்கிப் பயணம் மேற்கொள்வதைப் போலாகும். அதில் எதிர்பார்ப்பின் ஆனந்தத்தை கால்வினோ உள்பொதிந்து வைத்திருப்பார்.ஆனால் அதே நேரத்தில் அவருடைய படைப்பில் சோகமும், கூடிக்கொண்டே வரும் அவநம்பிக்கையும் சாரமாக இருக்கும். உலகத்தின் முடிவைப்பற்றிய சித்திரங்களை ஒரு ஆவேசவெறியுடன் தொடர்ந்து சித்தரிப்பதை அவரது படைப்புகளில் பார்க்கலாம். ஏன் அவரது படைப்புகளில் மிகக்குறைந்த முக்கியத்துவத்துடனே பயங்கரம் இடம் பெற்றிருக்கும். இதற்கு நல்ல உதாரணமாக அர்ஜெண்டைனா எறும்பு ( 1953 ) என்ற் கதையில் ஒரு கணவன், மனைவி, குழந்தை, ஒரு புதிய கிராமத்துக்கு ஒரு புதிய வாழ்வைத் தொடங்குவதற்கு மிகுந்த நம்பிக்கையோடு ( இது தான் கால்வினோவின் நிரந்தரக்கரு ) செல்வார்கள். ஆனால் அங்கே வீடுகள், ஏன் அந்தப்பிரதேசம் முழுவதும் எறும்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். உண்மையில் இந்தக்கதை கோரே விடால் சொல்வதைப்போல, அச்சுறுத்துகிற, விசித்திரமான காஃப்கா எழுதுவதைப் போன்ற ஒன்று. அது காற்றில் பயத்தையும் மர்மத்தையும் நேரடியான அலங்காரமற்ற மொழியில் கட்டி எழுப்புகிறது. காஃப்காவைப் பற்றி கால்வினோவின் குறிப்பான ” வெளிப்படையான மொழியைப் ஒரு உருவெளித்தோற்றம் உருவாகும் வரை பயன்படுத்திக்கொண்டேயிருப்பது.” என்று சொல்லலாம்.
” என்னுடைய ஆசான் காஃப்கா “  என்று ஒரு நேர்காணலில் கால்வினோவின் மீது தாக்கம் செலுத்தியவர்களைப் பற்றி கேட்டபோது கால்வினோ சொன்னார். காஃப்காவின் இருப்பு கால்வினோவின் படைப்புகளில் எல்லாம் இருந்தது. அர்ஜெண்டைனா எறும்பு தொடங்கி 1984-ல் எழுதிய உருக்குலைதல் ( IMPLOSION) வரை எல்லாக்கதைகளிலும் காஃப்காவின் தாக்கம் இருக்கிறது. அடக்கம் கதையில் கால்வினோ இலக்கியத்தின் மிக முக்கியமான உள்முகச்சிந்தனைக் கதாபாத்திரங்களான தண்டனைபெற்ற ஹேம்லட்டையும், ( அந்தக்கதை “ வெடித்துச்சிதறு அல்லது உருக்குலைந்து போ “ இது தான் இப்போது கேள்வி என்று Qfwfq சொல்கிறான். )  காஃப்காவின் வளை என்ற கதையில் வருகிற மூஞ்சூறு போன்ற உயிரினத்தையும் அழகாக, இணைத்து கருந்துளைகளைப் பற்றி பிரபஞ்சத்தின் மரணத்தைப் பற்றி ஆழ்ந்த சோகமான சிந்தனைகளை எழுதுகிறார். அழிவைப் பற்றி ஒவ்வொருவருடைய இதயத்திலும் ஒளிந்திருக்கும் அந்தப்பயம்:
“ நிச்சயமில்லாத எல்லைகளைக் கொண்ட பிரபஞ்சத்தில் அநுமானமான அரைகுறை விண்பொருட்களின் பொறுப்பற்ற நடவடிக்கையை நீங்களாக அதியற்புத கற்பனை செய்து திசை திரும்பாதீர்கள். இங்கே உங்கள் கவனத்தை பால்வெளியின் மையத்தை நோக்கித் திருப்புங்கள். நம்முடைய எல்லாகணக்குகளும், சாதனங்களும் பிரபஞ்சத்தின் உள்ளே கண்ணுக்குத்தெரியாத ஒரு பெரிய உட்கரு இருப்பதைச் சொல்கின்றன. கதிரியக்கத்தின் வலைகளும், வாயுக்களும் கடைசியாக உருக்குலைந்த காலத்திலிருந்தே அங்கே  சிறைப்பட்டிருக்கின்றன. அவைகள் எதைக்காட்டுகிறதென்றால், மையத்தில் இருக்கும் காலியான துளைகள்  ஒரு பழைய எரிந்தடங்கிய எரிமலையாக இருக்கலாம். சுற்றியிருப்பதெல்லாம் கிரகங்களின் வட்ட ஒழுங்கு, நட்சத்திரக்கூட்டம், பால்வெளியின் துணைநிலைகள். நமது பால்வீதியில் உருக்குலைதலின் மையம் தனக்குள் மூழ்கிக்  கொள்வதிலேயே இருக்கிறது.”
கடைசி காஸ்மிகாமிக்ஸின் இறுதி வரி,இது “ நான் என்னுடைய மூஞ்சுறு வளையில்  தோண்டிக்கொண்டே இருப்பேன்”  காஃப்காவின் வளை என்ற கதையோடு ஒரு உறவை ஏற்படுத்துகிறது. காஃப்கா அந்தக்கதையை முடிக்காமலேயே இறந்து போனார் அல்லது அப்படித் தெரிகிறது. கையெழுத்துப்பிரதியின் கடைசிப்பக்கம் முழுவதும் நிறுத்தல் குறியே இல்லாமல் எழுதப்பட்டிருக்கிறது என்ன பொருத்தம்! கால்வினோ தன்னுடைய கடைசிக்கதைகளில் ஒன்றான துணுக்குகளின் தொகுப்பு அது தான் என்னுடைய எழுத்து. அப்படித்தான் அவர் அழைத்தார். அந்தக்கதை முடியவில்லை. நின்று விட்டது. கால்வினோவின் வாழ்க்கையும் கூட ஒரு முடிவுக்கு வந்து சேரவில்லை. மூளையிலுள்ள ரத்தக்குழாய் வெடிப்பினால் திடீரென உடைந்து போய்விட்டது; அடுத்த சாத்தியமில்லாத புத்தகம் இன்னும் எழுதப்படாமல் காத்துக்கொண்டிருக்கிறது.

நன்றி - உன்னதம்





“



Monday, 22 May 2017

கரிசக்காடு: ஏஞ்சலும் அவளது தோழியும் மற்றும் மகேஷூம் அவனது நண்ப...

கரிசக்காடு: ஏஞ்சலும் அவளது தோழியும் மற்றும் மகேஷூம் அவனது நண்ப...: ஏஞ்சலும் அவளது தோழியும் மற்றும் மகேஷூம் அவனது நண்பனும் உதயசங்கர் நீல நிற வானத்திலிருந்து நேரே சரிந்து இறங்கியது போலிருந்த பூங்கா...

Sunday, 21 May 2017

ஏஞ்சலும் அவளது தோழியும் மற்றும் மகேஷூம் அவனது நண்பனும்

ஏஞ்சலும் அவளது தோழியும் மற்றும் மகேஷூம் அவனது நண்பனும்

உதயசங்கர்

நீல நிற வானத்திலிருந்து நேரே சரிந்து இறங்கியது போலிருந்த பூங்கா சாலையின் துவக்கத்தில் ஏஞ்சல் தோன்றிவிட்டாள். வழியெங்கும் குல்மொகர் மரங்கள் ரத்தச்சிவப்பாய் பூத்துக்குலுங்கிக்கொண்டிருந்தன. தர்ச்சாலை தெரியாதபடிக்கு தரையில் பூக்கள் சிதறிக்கிடந்தன. மஞ்சள் கலந்த சிவப்பு தரையில் பளீரிட்டது. மரத்திலும் சிவப்பின் நிழல் அடர்ந்து பார்ப்பதற்கு சாலை முழுவதும் சிவப்புக்கம்பளம் விரித்தது போல இருந்தது. மகேஷ் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தச்சாலையின் கீழ்புறத்தில் பூங்காசாலை நகரின் முக்கியச்சாலையோடு  இணைகிற இடத்தில் ஒரு ஆலமரம் விருட்சமாய் படர்ந்திருந்தது. அந்த ஆலமரத்தின் கீழே தான் மகேஷூம் அவனது நண்பனும் பைக்கை நிறுத்தி அதில் சாய்ந்துக்கொண்டு ஒரு காலை பைக்கின் பெடலிலும் இன்னொரு காலை தரையிலும் ஊன்றி நின்று கொண்டிருந்தார்கள். ஆள் நடமாட்டம் உள்ள சாலை தான். ஆனால் மகேஷுக்கு மட்டும் எப்படி என்றே தெரியாது, ஏஞ்சலின் தலை சாலைமேட்டில் தோன்றும்போதே மகேஷ் பார்த்து விடுவான். மகேஷ் அவளைப்பார்த்தவுடன்,
 “ டேய் மக்கா…மக்கா… அங்க பார்டா… என்னமா ஜொலிக்கிறா! பின்னாடி அந்த சூரியஒளி அவ மேலே பட்டுத்தெறிக்கிறத பாருடா…”
என்று அவனுடைய நண்பனிடம் பரவசமாய் புலம்புவான். மகேஷின் நண்பன் சிரிப்பான். அவன் சிரிப்பில் ஒரு கைப்பு இருக்கும். ஆனால் அந்த பரவசமனநிலையை மகேஷ் கைவிடுவதாக இல்லை. இருநூறு மீட்டர் தூரத்தில் இறங்கி வந்து கொண்டிருக்கும் அவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். ஏஞ்சல் அன்று நீல நிறத்தில் புடவை உடுத்தியிருந்தாள். எப்போதும் போல் முந்தானையைப் பறக்க விட்டிருந்தாள். சிறகுகள் அடிக்க மெல்ல இறங்கிய மயில்போல ஒயிலாக நடந்து வந்து கொண்டிருந்தாள் ஏஞ்சல். மஞ்சள்கலந்த கோதுமை நிறத்தில் இருந்த அவள் ஒரு போதும் கண்ணைப்பறிக்கும் நிறத்தில் உடை உடுத்துவதில்லை. மென்மையான நிறங்களில் அவள் உடுத்திய உடைகள் அவளைப்பளிச்சென்று காட்டியது. பின்னியும் பின்னாமலும் ஈரம் ததும்பி நிற்கும் அவளுடைய தலைமுடி பின்னால் இடுப்புக்குக்கீழே இறங்கியிருந்தது. அவள் அருகில் வரவர மகேஷூக்கு ரத்தஓட்டம் அதிகரிக்கும். உடம்பெங்கும் ஒரு படபடப்பும் நடுக்கமும் தொற்றிக்கொள்ளும். அவளுக்கும் இது தெரியும் அவனைக்கடந்து செல்லும்போது தலையைத் திருப்பாமலே ஒருபார்வை பார்ப்பாள். மகேஷின் ஈரக்குலையைக் கவ்வும். அவன் முகத்தில் ரத்தம் ஊறுவதை உணர்வான். அந்த உணர்வோடு திரும்பி அவனது நண்பனைப் பார்ப்பான். அவன் முகத்தில் வெறுப்பு கடலென பொங்கிக்கொண்டிருக்கும். அப்படியே காறித்துப்புவான்.
 ” என்னடா ஆச்சு..? ஏண்டா இப்படி பண்றே..”
“ எலேய் உனக்குத்தெரியலையா…? அவகூட ஒருத்தி வாரா பாருடா.. அவளும் அவள் முகரக்கட்டையும்…பாக்கச்சகிக்கல..”
“ எங்கடா வாரா… அவ மட்டும் தானே வாரா..”
“ கண்ணைத்திறந்து நல்லாப்பாரு…”
“ எனக்கு ஒண்ணுமே தெரியல..”
“ தெரியாதுடா..தெரியாதுடா… இப்ப உங்கண்ணுக்கு ஒண்ணுமே தெரியாது…”
தூரத்தில் ஏஞ்சல் மட்டுமே தெரிய அருகில் வர வர ஏஞ்சலின் முதுகிலிருந்து பிறந்தவள் மாதிரி அவளுடைய தோழி வருவாள். கட்டையான பரட்டைத் தலைமுடியும், பெரிய தடித்த உதடுகளும் சப்பையான மூக்கும், அகன்று விரிந்த இடுப்பும், எப்போதும் சிடுசிடுத்தமுகமும் கொண்ட ஏஞ்சலின் தோழி எப்போதும் அடர்ந்த நிறத்திலேயே சுடிதார் அணிந்திருப்பாள். இன்று கரும்பச்சை நிறத்தில் அவள் அணிந்திருந்த சுடிதார் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது. அவள் பார்வையில் ஒரு சந்தேகத்தேள் கொட்டுவதற்குத் தயாராக எப்போதும் தன் கொடுக்கைத் தூக்கி வைத்திருக்கும். ஒருபோதும் சிரித்திராத அந்த முகம் பாறையைப் போல இறுகிப் போயிருக்கும். நடந்து வரும்போதோ அல்லது போகும்போதோ ஏஞ்சலும் அவளது தோழியும் ஒரு பொழுதும் பேசிக்கொண்டதாகப் பார்த்ததில்லை. ஆனால் அவளின் ஒவ்வொரு பார்வையையும் ஏஞ்சல் உணர்ந்திருந்தாள்.
ஏஞ்சலின் தோழி ஒரு போதும் மகேஷையோ, அவனது நண்பனையோ சிநேகமாக இல்லையில்லை சுமூகமாகக்கூடப் பார்த்ததில்லை. அவள் பேசுகிற மாதிரி தெரியாது. தடித்த உதடுகள் அசையும். அவ்வளவு தான் ஏஞ்சல் மகேஷின் நண்பனைப் பார்ப்பாள். அதுவரை இருந்த வெளிச்சம் மறைந்து முகம் இருண்டு விடும். லேசான நடுக்கம் உடலில் பரவியது. மகேஷ் கூட அவனது நண்பனை விட்டு விட்டு வர நினைத்தான். அது என்ன அவ்வளவு எளிதான காரியமா? மகேஷின் தைரியமே அவன் தானே.
ஏஞ்சல் முக்கியசாலையில் திரும்பும்போது மகேஷைப்பார்த்து ஒரு சிரிப்பைச் சிந்துவாள். அதுபோதும். மகேஷும் அவனுடைய நண்பனும் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். மறுபடியும் மறுநாள் காலையில் அந்த பூங்காசாலையில் ஆலமரவிருட்சத்தினடியில் காத்திருப்பார்கள். மகேஷின் நண்பனுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்றாலும் பாலியகாலத்திலிருந்தே அவனுடைய நெருங்கிய நண்பன் மகேஷ். இருவரும் ஒன்றாகவே படித்தார்கள். ஒரே மார்க் வாங்கினார்கள். மகேஷ் கொஞ்சம் குட்டை. சற்று ஒல்லி. பயந்தாங்கொள்ளி. ஆனால் வசீகரமான முகம். மகேஷின் நண்பன் கருப்பாக இருந்தாலும் உயரமாக ஜிம்பாடியுடன் இருந்தான். மகேஷின் நண்பனின் முரட்டுத்தனம் அவனுடைய உடல்மொழியில் தெரியும். முகத்தில் யாரையும் மதிக்காத ஒரு அலட்சியபாவம். மகேஷோடோ இல்லை அவனோடோ யாராவது எதிர்த்துப்பேசினால் கூடப் பிடிக்காது. உடனே கையை ஓங்கி விடுவான். எந்த வம்புச்சண்டைக்கும் தயாராக இருப்பவன்.
ஏஞ்சல் வேலைபார்க்கிற கம்ப்யூட்டர் செண்டருக்கு அடிக்கடி மகேஷும் அவனது நண்பனும் அவனுடைய வேலைக்காக ரெசியூம் பிரிண்ட் அவுட் எடுக்கப்போவார்கள். மகேஷ் அப்போது தான் ஏஞ்சலைப்பார்த்தான். கண்டதும் காதல் தான். ஆனால் ஏஞ்சல் அவ்வளவு எளிதாக பிடி கொடுக்கவில்லை. அவள் யாரைக்கண்டோ பயந்தாள். மகேஷின் நண்பன் தான்
“ அவ அந்தக் குட்டச்சியைப்பார்த்து பயப்படுதா… பரட்டைத்தலைக்கு இருக்கிற திமிரப்பாரேன்..”
என்று திட்டினான். மகேஷ் இல்லையில்லை என்று தலையாட்டினான். ஆனால் அவனுக்கும் அந்த அச்சம் இருந்தது. யார் இந்தத்தோழி? கரிய நிழல்போல எப்போதும் கூடவே வருகிறாள்? ஏஞ்சல் அந்தத்தோழி இல்லாமல் தனியே வருவதே இல்லை. அப்போது மகேஷின் நண்பன் சொன்னான்.
“ ஏன் நீ கூடத்தான் நான் இல்லாமல் தனியா எங்கேயும் போறதில்லை..”
அதைக்கேட்டதும் மகேஷ் முகம் சுளித்தான். ஞாயிற்றுக்கிழமை கம்ப்யூட்டர் செண்டர் லீவு. அன்று ஏஞ்சலைப்பார்க்க முடியாது. பார்க்க முடியாத அந்த நாளில் மகேஷ் ஏங்கிப்போவான். அன்று முழுவதும் அவனுடைய நண்பனிடம் அவளைப்பற்றிப் பேசிக்கொண்டேயிருப்பான். மகேஷின் நண்பனும் அவன் பேசுவதை தலைகுனிந்தவாறு கேட்டுக்கொண்டேயிருப்பான். எப்போதாவது,
“ கூட அவ ஃபிரெண்டும் இருக்கா பாத்துக்கோ…” என்று எச்சரிப்பான்.
அதற்கு மகேஷ் சிரித்தவாறே
“ அவ இருந்தா அவபாட்டுக்கு இருந்துட்டுப்போறா…”
என்று அலட்சியமாகச் சிரிப்பான்.
“ நீ எப்பயுமே வெளிச்சத்தை மட்டுமே பாக்கே… பக்கத்திலேயே இருட்டும் இருக்கு.. பாத்துக்க..”
என்று கட்டைக்குரலில் சொன்னான் மகேஷின் நண்பன்.
 ஒரு ஞாயிறு காலைப்பொழுதில் பூங்காசாலையில் சும்மா அந்த ஆலமரத்தடியில் வந்து நின்றிருந்தான். அன்று அபூர்வமாக அவன் மட்டுமே தனியாக வந்திருந்தான். சூரியன் அப்போது தான் எழுந்து சுதாரித்துக்கொண்டிருந்த வேளை. குல்மொகர் மரங்களின் சிவந்த பூக்களில் சூரியனின் காலைக்கிரணங்கள் பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. மஞ்சள் வெயில் தார்ச்சாலையை மென்மையாக மாற்றிவிட்டிருந்தது. கூட்டம் கூட்டமாய் மேகங்கள் தங்கச்சரிகை விளிம்பிட்டு மெல்ல ஊர்வலம் போய்க்கொண்டிருந்தன. அந்த வேளையில் தந்தத்தின் நிறத்தில் சுடிதார் அணிந்து மெல்ல நடந்து வந்துகொண்டிருந்தாள் ஏஞ்சல். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளும் தனியாக அவளுடைய தோழி இல்லாமல் வந்து கொண்டிருந்தாள். 
இடது பக்கம் லேசாகச் சாய்ந்த அவளுடைய நடையில் ஒரு பாந்தம் இருந்தது. அவளும் அவனைப்பார்த்து விட்டாள். அவள் திடுக்கிட்டது தெரிந்தது. இடது கையால் அவளுடைய துப்பட்டாவின் முனையைப் பிடித்துக்கொண்டு வலது கையில் மார்போடு பைபிளை அணைத்துக் கொண்டே மெல்ல நடந்து வந்தாள். அவளுடைய மெலிந்த விரல்களிலிருந்து வெளிப்பட்ட அன்பினால் பைபிள் துடித்துக்கொண்டிருந்தது. மகேஷ் அந்தக்கணத்தில் இயேசுவைத் தன் ஜீவனாக ஏற்றுக்கொள்ளத் தயாரானான். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலையில் நடமாட்டம் அதிகம் இல்லை.
மகேஷின் இதயம் துடிக்கிற சத்தம் அவனுக்கு வெளியில் கேட்டது. அவளை நிறுத்திச் சொல்லிவிடவேண்டும் என்று ஆசைப்பட்டான். அவள் அருகில் வந்தபோது ஓரடி அவளைப்பார்த்து நெருங்கியும் விட்டாள். படபடப்புடன் அவள் அவனை ஏறிட்டுப்பார்த்தாள். அந்தக்கண்களில் அன்பின்ஓளியைப் பார்த்தான். சூரியனின் கதிர்கள் விளிம்பிட்ட அவளைப்பார்க்கும்போது அவனுக்குள் தீராத தாகம் எழுந்தது. நா வறண்டது. எச்சிலை ஊற வைத்து விழுங்கினான். அவள் உண்மையில் அந்த ஓளியில் தேவதை போலவேத் தோன்றினாள். மகேஷுக்கு நடந்து கொண்டிருப்பது கனவா என்று கூடச் சந்தேகம் வந்தது. முன்னால் நிழல் விழுந்த அவள் உருவத்தின் அழகு அவனை மெய்மறக்கச்செய்தது. அந்தக்கணத்தில் அவன் ஏஞ்சலின் பரிபூர்ண அன்பை உணர்ந்தான். இது போதும். அந்தக்கணம் இனி வாழ்வில் என்றாவது வருமா?
அன்று மகேஷ் முடிவெடுத்தான். வாழ்ந்தால் இனி ஏஞ்சலோடு தான் வாழவேண்டும். அதைக்கேட்ட மகேஷின் நண்பன் கோபப்பட்டான்.
“ நீ அவளோட வாழ்றதுக்காக நான் அவ ஃப்ரெண்ட் …அதான்..அந்தப்பரட்டைத்தலை பிசாசோட வாழணுமா? “
என்று கேட்டான். மகேஷுக்கு அவன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை. மலங்க மலங்க விழித்தான். ஆனால் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. மகேஷின் நண்பன் அவனை விட்டு எங்கேயும் போகமாட்டான். போகவும் முடியாது.
மகேஷுக்கு சென்னை ஐ.டி. கம்பெனியில் சுமாரான சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆரம்பத்தில் குறைவான சம்பளமாக இருந்தாலும் போகப்போக சம்பளம் அதிகமாகும் வேலைப்பாதுகாப்பும் உண்டு என்ற தைரியத்தில் சேர்ந்து விட்டான். ஆறுமாதம் கழிந்த பிறகு ஊருக்குச் சென்றான். அவனுடைய நண்பனுடன் ஏஞ்சலின் வீட்டுக்குச் சென்றான். ஏஞ்சலின் அம்மா கார்மெண்ட்ஸிலும், அப்பா ஜவுளிக்கடையிலும் வேலை பார்த்தார்கள். ஒரு தம்பி ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். அங்கே ஏஞ்சலும் அவளது தோழியும் இருந்தார்கள். கொஞ்சம் தயங்கினாலும் அவர்களுக்குச் சம்மதம். மகேஷும் வீட்டில் பேசி வற்புறுத்தித் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.
ஒரு வழியாகத் திருமணம் முடிந்து சென்னைக்கு தனிக்குடித்தனம் போனார்கள். புதுமணத்தம்பதிகளைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வர சம்பந்திகளும் போயிருந்தார்கள். ஏஞ்சலின் தோழியும், மகேஷின் நண்பனும் இல்லாமலா. அவர்களும் உடன் போயிருந்தார்கள். எல்லோரும் திரும்பி விட்டார்கள். ஏஞ்சலின் தோழி ஏஞ்சலோடேயே தங்கி விட்டாள். மகேஷின் நண்பனும் மகேஷோடு தங்கி விட்டான்.
எப்படி நான்குபேரும் ஒரே வீட்டில் ஒரே படுக்கையறையில் இருக்கமுடியும் என்று சந்தேகப்படும் வாசகர்களுக்கு ஏஞ்சலும், மகேஷும், சேர்ந்து ஒரே குரலில்  
“ எப்போது நாங்கள் தனியாக இருந்தோம்? “ என்று கேட்கிறார்கள்.


 நன்றி - மலைகள்.காம்

Thursday, 18 May 2017

ஆறுகால் பூச்சியும் ஆயிரங்கால் புழுவும்

ஆறுகால் பூச்சியும் ஆயிரங்கால் புழுவும்

உதயசங்கர்

மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது. வராந்தாவில் நின்று கொண்டு மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் வந்தனா. அப்போது வீட்டு வாசலில் கருப்புசிவப்பு நிறத்தில் ஒரு பூச்சி ஊர்ந்து கொண்டிருந்தது. அந்தப்பூச்சியைப் பார்த்த வந்தனா கத்தினாள்.  
“ அப்பா பூச்சி..பூச்சி… “  அவளுடைய சத்தத்தைக் கேட்டுவிட்டு வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த அப்பா
“ எங்க இருக்கு பூச்சி..”
வந்தனா சுட்டிக்காட்டினாள். அதைப்பார்த்த அப்பா,
“ ஓ இது ரயில்ப்பூச்சி “ என்று சொன்னார்.
“ ரயில்ப்பூச்சியா? “
“ ஆமாண்டா செல்லம்… அப்படித்தான் நாங்க சின்னப்பிள்ளைகளாக இருக்கும்போது கூப்பிடுவோம்….”
என்றார் அப்பா. அதைக்கேட்ட வந்தனா,
“ அப்பா ரயில்ப்பூச்சி கதை சொல்லுங்களேன்…”
என்று சொன்னாள். அப்பா உடனே,
“ கதை வேணுமா?… சயின்ஸ்…வேணுமா?..” என்று கேட்டார் அப்பா.
“ முதல்ல கதை…” என்று வந்தனா சொன்னதைக் கேட்ட அப்பா சிரித்தார். வராந்தாவில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து வந்தனாவைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு கதை சொல்ல ஆரம்பித்தார். ரயில்ப்பூச்சியின் கதை.
பூமியில் அப்போது தான் ஒவ்வொரு உயிராகத் தோன்றிக்கொண்டிருந்தன. இயற்கையன்னை தன் படைப்புகள் ஒவ்வொன்றாய் படைத்துக் கொண்டிருந்தாள். முதலில் ஒரு செல் உயிரியான அமீபாவைப் படைத்தாள். ஒரு செல் உயிரியான அமீபாவிலிருந்து இரண்டு செல் உயிரியான ஆமீபா தோன்றியது. இரண்டு செல் ஆமீபாவிலிருந்து நாலு செல் உயிரியான இமீபா தோன்றியது. இமீபாவிலிருந்து எட்டுசெல் உயிரியான ஈமீபா தோன்றியது. இப்படியே புழுக்கள் தோன்றின. கண்ணுக்குத் தெரியாத புழுக்கள் தோன்றின. எந்த எந்த இடத்தில் உருவானதோ அந்த அந்த இடத்தின் நிறம் புழுக்களுக்குக் கிடைத்தது. மண்ணுக்குள் தோன்றியதால் மண்ணின் நிறம் மண்புழுக்களுக்குக் கிடைத்தது. பூக்களில் தோன்றிய புழுக்களுக்கு பூக்களின் வண்ணவண்ண நிறம். இலைகளில் தோன்றிய புழுக்களுக்கு இலைகளின் பச்சை நிறம். மரங்களில் தோன்றிய புழுக்களுக்கு மரத்தின் நிறம். எல்லாப்புழுக்களும் தங்களுடைய உடலை தள்ளிக்கொண்டு ஊர்ந்தன. அப்படித்தள்ளி தள்ளிப்பழகியதில் அவைகளின் உடம்பு சுருங்கி விரிய ஆரம்பித்தது. வேகமாகப் போக முடியவில்லை. ஓரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து போய்க்கிடலாம். அவ்வளவுதான். இப்படி விதவிதமான புழுக்கள் தோன்றி மண்ணில் ஊர்ந்தன.
அதன் பிறகு பூச்சிகள் தோன்றின. கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் தோன்றின. பின்னர் சிறிதுபெரிதாய் ஏராளமான பூச்சிகள் தோன்றின. ஒவ்வொரு பூச்சியும் ஒவ்வொரு நிறம். இயற்கையன்னை தன் திறமைகளைப் பயன்படுத்தி வண்ணங்களைத் தீட்டினாள். கூடுதலாக ஒவ்வொரு பூச்சிக்கும் சிறகுகளைப் படைத்தாள். சிறகுகளோடு ஆறு கால்களையும் கொடுத்தாள். தன்னுடைய ஒரு படைப்பு இன்னொரு படைப்பு மாதிரி இருக்கக்கூடாது என்று கவனமுடன் புதிது புதிதாகப் படைத்துக் கொண்டிருந்தாள். உலகம் பூச்சிகளால் நிறைந்தது. பூச்சிகள் பறந்து திரிந்து கொண்டேயிருந்தன. விதம் விதமான பூச்சிகள் பறந்து அலைவதைப் பார்த்த இயற்கையன்னைக்கு மகிழ்ச்சி.
கீழே மண்ணில் ஊர்ந்து கொண்டிருந்த புழுக்கள் தலையைத் தூக்கிப் பார்த்தன. பூச்சிகள் அங்கிட்டும் இங்கிட்டும் பறந்தன. தன்னுடைய கால்களினால் வேகமாக நடந்தன. பூச்சிகள் சிரமப்பட்டு ஒரு மணி நேரத்தில் கடக்கும் தூரத்தை பூச்சிகள் ஒரு நொடியில் பறந்து கடந்தன. மேலே பறக்கும் பூச்சிகள் கீழே ஊர்ந்து கொண்டிருக்கும் புழுக்களைத் தாழ்வாக நினைத்தன. சில பூச்சிகள் புழுக்களைச் சுற்றி வந்து கும்மியடித்தன. கேலி பேசின. புழுக்களுக்கு அவமானமாக இருந்தது. இயற்கையன்னை தங்களை ஏமாற்றி விட்டாள் என்று நினைத்தன.
ஒரு சமயம் இத்தினூண்டு கடுகு மாதிரி இருந்த பூச்சி மரத்தில் மரப்பட்டைகளுக்குக் கீழே பேசாமல் படுத்து உறங்கிக் கொண்டிருந்த கருப்பு, சிவப்பு வரிசையாகக் கோடு போட்ட புழுவை தன் சிறகுகளால் விர்ர்ர்ர்…..விர்ரென்று அடித்து எழுப்பியது.
“ பார்த்தியா… எப்பூடி.. நான் நினைச்சா பறப்பேன்… இல்லைன்னா நடப்பேன்…எனக்குப் பெருமையா இருக்கு நல்லவேளை உங்களைப்போல மூட்டை மாதிரி உடம்பை இழுத்து இழுத்து தேய்ச்சிக்கிட்டே போக வேண்டியதில்லை ஹா…ஹா…ஹா..”
என்று வக்கணை வழித்தது. அந்தக்கருப்புசிவப்புப் புழுவுக்கு வருத்தமாகி விட்டது.
“ டேய் நாம்பாட்டுக்குப் பேசாம என் வேலையைப் பாத்துக்கிட்டிருக்கேன்…. நீ ஏன் வந்து வம்பு பண்றே….”
“ டேய் உடம்புதேய்ச்சி… நம்ம ரேஞ்சே வேறே…. உனக்குத் தெரியணும்ல….”
இதைக்கேட்ட கருப்புசிவப்புப்புழுவுக்குக் கோபம் வந்து விட்டது. அவ்வளவு தான். உடனே தன்னுடைய உடம்பைத் தேய்த்து தேய்த்து அந்த மரத்தின் உச்சிக்குச் சென்றது. உச்சியில் நின்று தலையைத் தூக்கியது.
“ ஏ..இயற்கையன்னையே! எங்களை நீ ஏமாத்திட்ட… உன்னோட குழந்தைகள்ல ஒருத்தர நல்லாக்கவனிச்சி ஒருத்தர கவனிக்காம விட்டுட்டியே… இதுக்கு ஒரு பதில் சொல்லு..”
என்று சொல்லியது. அதோடு வானத்தைப் பார்த்தபடியே அன்னந்தண்ணி குடிக்காமல் பட்டினி கிடந்து இயற்கையன்னையை வேண்டி தவம் இருந்தது. ஏழுபகல், ஏழு இரவு கழிந்தது. கருப்புசிவப்புப்புழு மெலிந்து துரும்பாகிவிட்டது. எட்டாவதுநாள் காலையில் கருப்புசிவப்புப்புழுவுக்கு முன்னால் ஒரு ஒளி தோன்றியது. பச்சிலைசெடிகொடிகளை ஆடைகளாய் உடுத்திய இயற்கையன்னை கருப்புசிவப்புப்புழுவின் முன்னால் தோன்றினாள்.
“ நான் யாரையும் குறைவாகவோ மிகையாகவோ படைக்கவில்லை. இந்த பூமியில் இன்னும் படைக்கவேண்டிய படைப்புகள் ஏராளமாக இருக்கின்றன. எந்த ஒரு படைப்பும் மற்றொன்றைப் போல இருக்கக்கூடாது அப்போது தான் இயற்கையின் சமநிலை எப்போதும் நிலைத்திருக்கும்… எல்லா உயிர்களும் எனக்குச் சமமானவை தான்….”
என்று அன்பாகச் சொன்னாள். அதைக் கேட்ட கருப்புசிவப்புப்புழு கண்களில் கண்ணீர் வழிந்தது.
“ இல்லை அன்னையே! எங்களால் வெகுதூரம் போகமுடியவில்லை…. எங்களுக்கு சிறகுகள் அல்லது கால்கள் வேண்டும்…. தயை புரியுங்கள்…”
அதைக்கேட்ட இயற்கையன்னை கலகலவென்று சிரித்தாள். அவ்வளவு தான் கருப்புசிவப்புப்புழுவுக்கு கால்கள் முளைத்தன. உடலில் ஒரு இடம் விடாமல் கால்கள். ஆயிரங்கால்கள் முளைத்தன. கருப்புசிவப்புப்புழுவுக்குச் சந்தோசம். தன்னுடைய பின்னங்கால்களில் நின்று உடலைத்தூக்கி இயற்கையன்னைக்கு நன்றி சொன்னது. இயற்கையன்னை புழுவிடம் விடைபெற்று மறைந்தாள்.
கருப்புசிவப்புப்புழு இப்போது முன்னாலும் வேகமாக ஊர்ந்தது. பின்னாலும் வேகமாக ஊர்ந்தது. எப்படி வேண்டுமானாலும் திரும்ப முடிந்தது. சுருண்டு படுத்துக்கொள்ள முடிந்தது. மரத்தின் உச்சியிலிருந்து அமைதியாகத் திரும்பியது. மெல்ல கீழே இறங்கி தன்னுடைய இருப்பிடமான மரப்பட்டையின் பின்னால் போய் படுத்துக் கொண்டது.
இப்போது இயற்கையன்னையிடம் தவமாகப் பெற்ற ஆயிரங்கால் பூச்சியை மரவட்டைப்பூச்சி என்றும் ரயில்ப்பூச்சி என்றும் குழந்தைகள் அழைத்தார்கள். குழந்தைகள் எப்படி அழைத்தாலும் அழகு தானே!


 நன்றி - வண்ணக்கதிர்

ரகசியக்கோழி 001

ரகசியக்கோழி 001

உதயசங்கர்

கரும்பூரில் முத்தம்மா என்ற அம்மாள் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தாள். பெரிய பெண்ணின் பெயர் பெரியமாரி. அடுத்த பையனின் பெயர் சின்னமாரி. இரண்டு குழந்தைகளும் பள்ளியில் நன்றாகப்படித்து வந்தார்கள். அவர்களுடைய அப்பா கட்டிட வேலை செய்து வந்தார். ஒரு நாள் சாரத்திலிருந்து தவறி விழுந்து இறந்து போனார். அதன்பிறகு முத்தம்மா வீட்டுவேலை, காட்டு வேலை என்று எல்லாவேலைகளையும் செய்து வந்தாள். எப்படியாவது பிள்ளைகளைப்படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவர்கள் வீட்டில் ஒரு சேவலும் நான்கு கோழிகளும் இருந்தன. கோழிகள் இடும் முட்டைகளை அருகில் இருந்த பெட்டிக்கடையில் கொடுத்து சமையலுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொள்வாள். சிலசமயம் அவளுடைய பையன் சின்னமாரிக்கும் அவித்தோ, பொரித்தோ கொடுப்பாள். சின்னமாரி என்ன சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருந்தான். ஆனால் அறிவாளி. பள்ளிக்கூடத்தில் நன்றாகப்படிப்பான். கணக்குப்பாடம் என்றால் அவனுக்கு இனிக்கும். துப்பறியும் கதைகள், காமிக்ஸ் கதைகள், எல்லாவற்றையும் விழுந்து விழுந்து படிப்பான். அவனுக்கு துப்பறியும் நிபுணர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை.
அதனால் எப்போதும் எதையாவது தேடிக்கொண்டேயிருப்பான். ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டு வந்த சின்னமாரி அம்மா கவலையோடு குடிசை வாசலில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். அம்மா வளர்க்கும் செவலைக்கோழி மட்டும் தினசரி காலையில் திறந்து விட்டதும் காணாமல் போய் விடுகிறது. ஆனால் சாயங்காலம் அடைகிற நேரம் வந்து சேர்ந்து விடும். முத்தம்மாவுக்கு இது தான் கவலை. அது மட்டுமல்லாமல் முட்டை இடுவதுமில்லை. திறந்து விடும்போது முட்டை இருப்பதைப் பார்த்துத் தான் மேயவிடுவாள். மற்றகோழிகள் முட்டையிடும் நேரம் எங்கே மேய்ந்து கொண்டிருந்தாலும் நேரே வீட்டுக்கு வந்துவிடும். ஆனால் செவலைக்கோழி மட்டும் வரவில்லை.
 அன்று இரவு சின்னமாரியிடம் முத்தம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். சின்னமாரியின் துப்பறியும் மூளை வேலை செய்தது. நாளைக்குப் பள்ளிக்கூடம் கிடையாது. அந்தச் செவலைக்கோழி எப்படி காணாமல் போய் திரும்பி வருகிறது என்று துப்பறிந்து பார்க்கலாம். உடனே அம்மாவிடம் ரகசியமான குரலில் ( துப்பறியும் நிபுணர்கள் சத்தமாய் பேசக்கூடாதில்லையா! ) தன்னுடைய திட்டத்தைச் சொன்னான்.
அம்மா காலையில் கோழிகளை அடைத்து வைத்திருக்கும் பஞ்சாரத்தைத் தூக்கி கோழிகளைத் திறந்து விட்டாள். கோழிகள் கேக்க்க்கேக்க்கேக்க்க்க்கே என்று மாறி மாறிக் குரல் கொடுத்தன. உறக்கம் கலைந்து இறக்கைகளை விரித்து நீட்டி சோம்பல் முறித்தன. கருப்புவெள்ளைக் கோழி, வெள்ளைக்கருப்புக்கோழி, சாம்பல்கோழி, செவலைக்கோழி, எல்லாம் முற்றத்தில் அம்மா விசிறியிருந்த குருணை அரிசியை அவசர அவசரமாக கொத்தின. செவலைக்கோழி மட்டும் ரெண்டு வாய் சாப்பிட்டு விட்டு மெல்ல முற்றத்தை விட்டு இறங்கியது. அப்படியே தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடியே எதிரே இருந்த குப்பை மேட்டைப்பார்த்து போனது.
இப்போது சின்னமாரி குடிசை வாசலில் வந்து நின்று செவலைக்கோழி போவதையே பார்த்துக் கொண்டு நின்றான். குப்பை மேட்டின் உச்சியில் நின்று திரும்பிப்பார்த்தது செவலைக்கோழி. சின்னமாரியைப் பார்த்ததும் அப்படியே அப்பாவி மாதிரி கீழே குனிந்து இரையைக் கொத்துவது போல சும்மா கொத்திக் கொத்திப் போட்டது. அப்படியே கண்ணை உருட்டி உருட்டி சின்னமாரி நிற்கிறானா என்று பார்த்தது. சின்னமாரி செவலைக்கோழியைப் பார்க்காத மாதிரி நின்றான். அப்படியே பராக்கு பார்ப்பது மாதிரி குப்பை மேட்டை நோக்கி நடந்தான். செவலைக்கோழி அவன் வருவதைப் பார்த்ததும் சுதாரித்துக் கொண்டது. குப்பை மேட்டிலிருந்து இறங்கி குடிசை முற்றத்துக்கே வந்தது. இப்போது சின்னமாரி குப்பை மேட்டிலிருந்து வீட்டு முற்றத்தில் தனியே மேய்ந்து கொண்டிருக்கும் செவலைக்கோழியைக் கவனித்தான். செவலைக்கோழி ஒரு நொடிக்கொருமுறை தலையைக் குனிவதும் நிமிர்ந்து சின்னமாரியைப் பார்ப்பதுமாக இருந்தது. அப்போது சின்னமாரியின் பின்னாலிருந்து இரண்டு கைகள் அவனுடைய கண்களைப் பொத்தின.
“ யாருன்னு சொல்லு பாக்கலாம்..” என்று தகரக்குரலில் பரமசிவன் கத்தினான். மற்றநேரம் என்றால் சின்னமாரியும் தெரியாத மாதிரி  கணேசன் தானே… ரமேஷு… இல்லையில்லை.. குண்டு ரமணி… என்று விளையாட்டு காட்டுவான். ஆனால் இப்போது அவன் துப்பறிந்து கொண்டிருக்கும்போது அதை இடைஞ்சலாகவே நினைத்தான்.
“ சரி.. சரி.. விடுறா..பரமா..” என்று கத்தினான். அதைக்கேட்ட பரமசிவனுக்கு ஏமாற்றமாகி விட்டது. ஆனால் கைகளை எடுக்காமல்
“ இல்லை..பரமசிவன் இல்லை..” என்று அடம் பிடித்தான். சின்னமாரிக்குக் கோபம் வந்தது. உடனே அவனுடைய கைகளைத் தட்டி விட்டான். திரும்பிப்பார்த்தால் செவலைக்கோழியைக் காணவில்லை. வீட்டைச்சுற்றி ஓடிப் போய்ப் பார்த்தான். காணவில்லை. தெருவுக்கு ஓடிப் போய்ப் பார்த்தான். காணவில்லை. எப்படி மாயமாக மறைஞ்சது? என்று யோசித்தான்.
குப்பைமேட்டிலிருந்து பார்த்தால் தெருவில் நாலைந்து வீடுகள் தான். தெரியும். பரமசிவன் வீட்டில் மாடு வளர்க்கிறார்கள். அவனுடைய வீட்டில் வைக்கோல்படப்பு இருக்கும். வீட்டைச்சுற்றி கோட்டைச்சுவர் கட்டியிருப்பார்கள்.  அதைத் தவிர ஒளியவோ, மறையவோ இடம் கிடையாது. சின்னமாரி அப்படியே தெருவுக்குள் மேலும் கீழும் நடந்தான். மற்ற வீடுகளை நோட்டம் விட்டான். எங்கும் காணவில்லை.
பரமசிவன் வீட்டிற்குப் போனான். அவன் இல்லை. கடைக்குப் போயிருந்தான். அவன் வரட்டும் என்று வீட்டு வாசலில் காத்திருந்தான். கருப்புவெள்ளைக்கோழி, வெள்ளைக்கருப்புக்கோழி ,சாம்பல்கோழி, எல்லாம் தெருவில் உள்ள சாக்கடையில் கிண்டி மேய்ந்து கொண்டிருந்தன. செவலைக்கோழியை மட்டும் தான் காணவில்லை. இன்னிக்குக் கண்டுபிடிக்காமல் விடக்கூடாது என்று நாலாபக்கமும் பார்த்துக் கொண்டிருந்தான். பரமசிவன் வீட்டு வாசலில் ஒரு சின்ன இறகு கிடந்தது. அதைக் கையில் எடுத்தான். அது செவலைக்கோழி இறகுதான். இங்கேதான் பக்கத்தில் எங்கேயோ இருக்கிறது.
அப்போது பரமசிவன் வீட்டு வைக்கோல்படப்பிலிருந்து சிறகடிக்கும் சத்தம் மெல்லக் கேட்டது. சின்னதாக க்கெ என்ற கோழியின் சத்தமும் கேட்டது. சின்னமாரிக்குச் சந்தேகம். எல்லாக்கோழியும் மேய்ந்து கொண்டிருக்கும்போது இது மட்டும் ஏன் தனியாக அலைகிறது? ஆனால் கோழி இருக்கும்போது போய் கலவரப்படுத்தக்கூடாது என்று நினைத்தான். மாலை வரை காத்திருக்கலாம் என்று நினைத்தபடியே வீட்டுக்கு வந்து மறுநாள் படிக்க வேண்டிய பாடங்களைப் படித்தான். அம்மா கேட்டதுக்கு “ பொறு..பொறு.. சாயங்காலம் வரை பொறு..” என்று சொன்னான்.
மாலையில் சின்னமாரி, பரமசிவன் வீட்டுக்கு முன்னாடி எல்லோரையும் கூட்டி வைத்து விளையாடினான். வழக்கமாக கோழிகள் அடைகிற நேரம் வந்து விட்டது. அப்போதும் செவலைக்கோழி வரவில்லை. மற்ற கோழிகள் எல்லாம் வீட்டைப் பார்த்து போய்க் கொண்டிருந்தன. இனியும் தாமதித்தால் இருட்டி விடும். இது தான் சரியான சமயம் என்று சின்னமாரி நினைத்தான். பரமசிவனிடம் சொன்னான். இரண்டுபேரும் உள்ளே வைக்கோல்படப்பு இருந்த இடத்திற்குப் போனார்கள். ஒரு சத்தமும் இல்லை. அமைதியாக இருந்தது. வைக்கோல்படப்பின் தெற்குமூலையில் ஒரு சிறிய பொந்து மாதிரி இருந்தது. சின்னமாரி உற்றுப்பார்த்தான். ஒரு கோழியின் கால்தடம் தெரிந்தது. அந்த இடத்திற்கு அருகில் போய் நின்றான். பரமசிவன் வாயைத் திறந்தான். அப்படியே அவன் வாயில் கையை வைத்து பொத்தினான். இருவரும் அமைதியாக நின்றார்கள்.
என்ன ஆச்சரியம்?
அந்தப்பொந்திலிருந்து கிய்யா கிய்யா என்ற சத்தம் கேட்டது. சின்னமாரி உட்கார்ந்து குனிந்து பார்த்தான். அந்தப் பொந்தின் நுழைவாயில் தாண்டி செவலைக்கோழி உட்கார்ந்திருந்தது. அதைச் சுற்றி அன்று தான் பொரித்திருந்த ஏழு கோழிக்குஞ்சுகள் நின்று கொண்டிருந்தன. சின்னமாரிக்குச் சந்தோசமாக இருந்தது. ஓடிப்போய் அம்மாவைக்கூட்டிக் கொண்டு வந்தான். அம்மாவுக்கு ஏகத்துக்கு மகிழ்ச்சி.

“ அட திருட்டுக்கள்ளி குஞ்சு பொரிக்கதுக்குத்தான் இப்படி ஒளிஞ்சி ஒளிஞ்சி போனியாக்கும்.. “ என்று செவலைக்கோழி கழுத்தைத் தடவிக்கொண்டு கொஞ்சினாள். செவலைக்கோழி ‘ கெக்க்கேக்க்கேக்கே  “ என்று சொல்லி ஒத்துக்கொண்டது. அன்று செவலைக்கோழிக்கு ரகசியக்கோழி 001 என்று சின்னமாரி பெயர் சூட்டு விழா நடத்தினான். எல்லோருக்கும் குருணை அரிசியும், கூடவே தவிடும் கஞ்சித்தண்ணியும் விருந்தாக அளித்தான். எல்லாக்கோழிகளும் போட்டி போட்டுக்கொண்டு விருந்தைச் சாப்பிட்டன. மகிழ்ச்சியில் கெக்கெக்க்கேக்க்கே என்று மாறி மாறி செவலைக்கோழியை வாழ்த்தின.
நன்றி - தமிழ் இந்து மாயாபஜார்