Tuesday, 8 July 2025

வாசிப்பு எனும் பண்பாடு

 

வாசிப்பு எனும் பண்பாடு




சமீபகாலங்களில் குழந்தைகளிடம் புத்தகம் வாசியுங்கள் புத்தகம் வாசியுங்கள் என்ற குரலும்ஆசிரியர்களிடம் வாசிக்காத ஆசிரியர்கள் யோசிக்க மாட்டார்கள் என்ற திட்டுகளும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். என்னவோ ஒட்டுமொத்த பொதுச்சமூகமும் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பது போலவும், இதில் ஆசிரியர்களும், குழந்தைகளும் தான் வாசிக்காமல் இருப்பதைப் போலவும் ஒரு தோற்றம் உருவாகிக் கொண்டிருக்கிறது. முன்பு பேரூந்திலோ, ரயிலிலோ பயணம் செய்யும் பயணிகளில் பலர் ஏதோ புத்தகம்,இதழ்கள், பத்திரிகை, வாசித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். இப்போது அப்படி வாசிப்பவர்கள் அரியவகை உயிரினமாக மாறி விட்டார்கள்.
எனவே தமிழ்ச்சமூகம் வாசிப்பைத் தன் பண்பாட்டு நிகழ்ச்சி நிரலாக மாற்ற சில மக்கள் ரசனை சார்ந்த யோசனைகள்.

1.
பொதுமக்களை அதிகம் ஈர்க்கக்கூடிய திரைப்படங்களனைத்திலும் ஏதாவது ஒரு புத்தகம் பற்றிய அறிமுகம் செய்ய வேண்டும்.

2.
தமிழ் தெரிந்த நடிகர், நடிகைகள், தாங்கள் கொடுக்கும் நேர்காணல்களில் புத்தகங்களைப் பற்றிப் பேச வேண்டும்.

3.
முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏதாவதொரு புத்தகம் பற்றிப் பேச வேண்டும்.

4.
அனைத்து அரசியல் கட்சியிலுள்ள அரசியல்வாதிகளும் தங்களுடைய மேடைப்பேச்சாக இருந்தாலும் சரி, நேர்காணலாக இருந்தாலும்சரி, ஊழியர் கூட்டமாக இருந்தாலும் சரி, ஏதாவதொரு புத்தகம் பற்றிப் பேச வேண்டும்.

5.
தொழிற்சங்கங்கத்தலைவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை விளக்கிப் பேசும்போது புத்தகங்களைப் பேச வேண்டும்.

6.
தொழிற்சங்கங்கள் புத்தகம், பத்திரிகை வாங்க மத்திய, மாநில, அரசாங்கங்களிடம் தனி அலவன்ஸ் கேட்கலாம்.

7.
தொலைக்காட்சி ஊடகங்கள் தினம் ஒரு புத்தகம் பற்றி எழுத்தாளர்களைப் பேசச் சொல்லி, ஒளிபரப்ப வேண்டும்.

8.
வானொலி, எப்.எம். போன்ற ஊடகங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு புத்தகங்களை அறிமுகம் செய்ய வேண்டும்.

9. 
யூ.டியூபர்கள் ஒவ்வொரு பதிவிலும் ஒரு புத்தகத்தைப் பற்றிப் பேச வேண்டும்.

10.
இலக்கிய அமைப்புகள் மாதந்தோறும் புத்தக விமரிசனக்கூட்டங்களைக் கட்டாயம் நடத்த வேண்டும்.

11.
புத்தக வாசிப்பறை என்று வாய்ப்புள்ள இடங்களில் உருவாக்க வேண்டும்.

12.
எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களைத் தவிர மற்றவர்களின் புத்தகங்களையும் வாசித்து அறிமுகம் செய்ய வேண்டும்.

13.
பெற்றோர்கள் தினம் நூல் வாசிப்பதற்கென்று தினம் ஒரு மணிநேரம் ஒதுக்க வேண்டும். அவர்கள் குழந்தைகளோடு சேர்ந்து வாசிக்க வேண்டும். வாசித்த நூல்களைப் பற்றி குழந்தைகள் முன்னால் உரையாட வேண்டும்.

14.
முகநூல் உட்பட அனைத்துச் சமூக ஊடகங்களில் இருப்பவர்களும் தினம் ஒரு புத்தகத்தையாவது அறிமுகம் செய்ய வேண்டும்.

14.
எந்தத்துறை சார்ந்த அதிகாரிகளாக இருந்தாலும் சரி அவர்களுடைய அலுவல் கூட்டங்களில் புத்தகம் பற்றிப் பேச வேண்டும். முதலமைச்சர் ஒவ்வொரு அமைச்சரவைக் கூட்டத்திலும் ஒரு ஐந்து நிமிடங்கள் ஒரு புத்தகம் பற்றிப் பேச வேண்டும்.

15.
புத்தகங்களைப் பற்றிப் பேசுவதற்கென்றே ஒவ்வொரு தெருவிலும் தெரு வாசிப்பு இயக்கத்தைத் தொடங்க வேண்டும்.




 

 

1 comment:

  1. சிறப்பான யோசனைகள்.நடைமுறைக்கு கொண்டு வர தனிமனித மாற்றங்கள் அவசியம் என்பதை பதிவு உணர்த்துகிறது.
    வாரம் ஒரு புத்தகம் குறித்து பேச வேண்டும் என்ற யோசனையை சென்ற வாரத்தில் வீட்டில் மகளுடன் திட்டமிட்டு செயல்படுத்த துவங்கியுள்ளேன்.

    ReplyDelete