மாயமலர்
உதயசங்கர்
திடீரென்று தான் அதைக் கவனித்தான் மாரி. இப்போது இரண்டு நாட்களாகத்தான் இப்படி ஒரு மணம். அது ஒரு பூவின் மணம். இதுவரை அவன் அப்படி ஒரு மணத்தை முகர்ந்ததில்லை. அந்த மணம் மூக்கின் வழியே அவனுடைய உடலுக்குள் மூளைக்குள் சென்று புத்துணர்ச்சியைக் கொடுத்த து. அந்த மணம் பூவின் மணம் தானா? அவன் யோசித்தான். பூவின் மணத்தில் தோட்டத்து மண்ணின் மணமும் கலந்திருந்தது. எங்கிருந்து வருகிறது? சன்னல் வழியே வெளியிலிருந்து வருகிறதா? அவன் படுக்கையிலிருந்து எழுந்தான். மெல்ல நடந்து சன்னலுக்கு அருகில் போனான். சன்னல் மூடியிருந்த து. ஒரு கதவைத் திறந்தான். எந்த வாசனையும் இல்லை. கும்மென்ற அமைதி. தூரத்தில் ஒரு நாயின் குரைப்பு. இரவுப்பூச்சிகளின் சத்த ம்.
நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான் மாரி. தூரமாய் ஒரு நட்சத்திரம் மங்கலாய் தெரிந்த து. இரவின் குளிர்ந்த வாசனையை மட்டுமே அவனுடைய மூக்கு உணர்ந்த து. வீட்டுக்குள் திரும்பினான். மீண்டும் அதே அதிசய வாசனை.
அவனால் நம்ப முடியவில்லை. நம்பாமல் இருக்க முடியவில்லை. மீண்டும் படுக்கைக்கு வந்தான். அம்மாவும் தங்கையும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் விழிக்கவில்லை. அவர்களுக்கு இந்த மணம் தெரியவில்லையா.? மாரி குழம்பிப்போனான். அவனுடைய மனதில் ஒரு மகிழ்ச்சியான உணர்வு பொங்கியது. அம்மாவை எழுப்பிக் கேட்கலாமா? வேண்டாம். பகல் முழுவதும் கம்பெனியில் வேலை பார்த்து விட்டு வரும் அவரை எழுப்ப வேண்டாம்.
அப்பா இறந்தபிறகு அம்மா தான் எல்லாவேலைகளையும் செய்கிறார். அப்பா இருந்த போது மாரி எந்த வேலையும் செயவதில்லை. சாப்பிட்ட தட்டைக் கூட எடுக்கமாட்டான். பிறகு எப்படி கழுவுவது? அவனுடைய பள்ளிச் சீருடையைக் களைந்து அப்படியே போடுவான். அம்மா வந்து எடுக்கும்வரை அந்த இடத்திலேயே கிடக்கும். வீட்டுப்பாடம் எழுதினால் எழுதிய நோட்டும் பேனாவும் ஜாமெண்டரி பாக்ஸும் கூட அப்படியே கிடக்கும். அம்மா தான் எடுத்து வைப்பார். அம்மா திரும்பத் திரும்பச் சொல்வார்,
“ மாரிக்கண்ணா.. எடுத்து வைய்டா…. அம்மாவுக்கு முடியலை.. இன்னும் கம்பெனியில போய் நின்றுகொண்டே வேலை பார்க்கணும்…சொன்னா கேளுடா தங்கம்..”
என்று சொல்வார். அவன் கேட்காதது போல போய் விடுவான். அப்பா எதுவும் சொல்வதில்லை. அப்படியே சொல்லும்போது இருந்தால்,
“ ஆம்பளப்பிள்ளையை ஏன் வேலை வாங்கறே? “ என்று சொல்வார். அம்மாவுக்கு அதைக்கேட்தும் கோபம் வரும். இருந்தாலும்,
“ தன்னுடைய வேலைகளைத் தானே பார்க்கிறதுல ஆம்பிளப்பிள்ளை என்ன? பொம்பிளைப்பிள்ள என்ன? “
என்று முணூமுணுப்பார்.
அப்பா காலையிலேயே கட்டிட வேலைக்குப் போய் விடுவார். வீட்டுக்கு வரும் பெரும்பாலான நேரங்களில் போதையில் இருப்பார். எப்படி இருந்தாலும் குழந்தைகளுக்குத் தின்பண்டம் வாங்கிவர மறக்கமாட்டார். அதே மாதிரி அம்மாவுடன் எப்படியாவது ஏதாவது ஒரு காரணத்துக்காகச் சண்டை போடவும் மறக்க மாட்டார்.
திடீரென்று ஒரு நாள் அப்பாவை மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு போனார்கள். திரும்பி வரும்போது உயிருடன் இல்லை. மாரிக்கு அப்பாவை மிகவும் பிடிக்கும். அப்பா எதுவும் சொல்ல மாட்டார். அவனுடைய மார்க்குகளைக் கேட்கமாட்டார். கணக்கில் ஏன் குறைந்தாய்? தமிழில் இன்னும் மார்க்கு எடுத்திருக்கலாம். என்று அறிவுரை சொல்லமாட்டார். முக்கியமாக அதை எடுத்து வை. இதை எடுத்து வை என்று சொல்லிக் கொண்டே இருக்கமாட்டார். மற்றபடி அப்பாவின் அருகில் போனாலே ஒரு கசப்பான புளிப்புவாடை அடித்துக் கொண்டேயிருக்கும். சில சமயம் குமட்டலாக இருக்கும். அப்பா இறந்தபோது மாரி வாடி வதங்கிப் போனான்..
அம்மாவும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேறினாள். இப்போது அவனிடம் எதுவும் சொல்வதில்லை. அவனும் பழக்கவழக்கங்களில் அப்படியே தான் இருந்தான்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் அம்மாவுக்கு வைரஸ் காய்ச்சல் வந்து படுத்துவிட்டாள். அசைய முடியவில்லை. கண்களைத் திறக்கமுடியவில்லை. அம்மா எழுந்திரிக்காவிட்டால் எப்படிச் சாப்பிடுவது? எப்படிப் பள்ளிக்கூடம் போவது? மாரிக்குப் புரியவில்லை.
அப்போது தான் தூக்கத்திலிருந்து கண்விழித்தவன் போல அவனைச் சுற்றிப் பார்த்தான். அவன் முந்திய இரவில் சாப்பிட்ட தட்டு காய்ந்து கிடந்த து. தட்டைச் சுற்றிலும் சிந்திய சோற்றுப்பருக்கைகளை எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன. சீருடை ஒரு பக்கம், புத்தகப்பை ஒரு பக்கம், புத்தகங்கள் எல்லாம் பக்கங்களை விரித்தபடி கிடந்தன. ஜாமெண்டரி பாக்ஸிலிருந்த அத்தனை பொருட்களும் சிதறிக் கிடந்தன. படுத்திருந்த பாய், தலையணை எல்லாம் அலங்கோலமாக கிடந்தன.
அவனுக்கே அருவருப்பாய் இருந்த து. தங்கை மீனா எழுந்து அம்மாவின் அருகில் உட்கார்ந்து அம்மாவை எழுப்பிக் கொண்டிருந்தாள். அம்மா அசையவில்லை.
மாரி ஒவ்வொன்றாக எடுத்து ஒதுங்க வைத்தான். வீட்டைச் சுத்தப்படுத்தத் தொடங்கினான். பக்கத்து வீட்டிலிருந்த சரளா அக்காவிடம்
“ கஞ்சி எப்படி வைக்கணும்க்கா? ” என்று கேட்டுவிட்டு வந்தான்.
சரளா அக்கா,
“ நான் வைத்துத் தருகிறேன் மாரி “ என்று சொன்னார்.
“ பரவாயில்லைக்கா.. நான் வைச்சிருவேன்..” என்று சொல்லிவிட்டு வந்து கஞ்சி வைத்தான்.
வீட்டைப் பெருக்கினான். முந்திய நாள் கிடந்த பாத்திரங்களைக் கழுவினான். நேற்று துவைத்து காய்ந்த துணிகளை மடித்து வைத்தான். அவனுடைய பள்ளிக்கூடப்பையை ஒழுங்குபடுத்தினான். சிதறிக்கிடந்த அவனுடைய பொருட்களையெல்லாம் வரிசையாய் எடுத்து வைத்தான். தங்கையின் பொருட்களையும் ஒழுங்குபடுத்தினான்.
அன்று எல்லாருக்கும் கஞ்சி தான். அம்மாவுக்குக் கஞ்சியை ஆறவைத்துக் கொடுத்தான். நேற்று வரும்போதே அம்மா டாக்டரைப் பார்த்து மாத்திரைகளை வாங்கி வந்திருந்தார். அதை எடுத்துக் கொடுத்தான்.
வேகவேகமாக பள்ளிக்கூட த்துக்கு ஒரு நாள் விடுப்பு எழுதினான். பக்கத்துத் தெருவிலிருந்த குமாரிடம் கொடுத்து விட்டு ஓட்டமாய் ஓடி வந்தான். வரும்போது அம்மாவுக்கு ரஸ்கும் பன்னும் வாங்கி வந்தான்.
அன்று முழுவதும் அவன் அம்மாவையும் தங்கையையும் அப்படிக் கவனித்துக் கொண்டான். வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டான். இரவில் தூக்கம் அப்படி வந்த து.
அம்மா இவ்வளவு வேலைகளையும் பார்த்துவிட்டு வேலைக்கும் போய் வருகிறாரே என்று நினைத்தவுடன் அந்த வீட்டில் அந்த மணம் வீசத் தொடங்கியது. அதன் மணம் அந்த வீடு முழுவதும் நிறைந்து விட்டது.
பகலில் அந்த மணத்தை யாரும் கவனிப்பதில்லை. ஆனால் இரவில் அதன் மணம் வீட்டின் இண்டு இடுக்குகளிலும் நிறைந்திருக்கிறது. இப்போது அம்மா புன்னகையுடன் உறங்குகிறார். தங்கையோ அம்மாவின் மீது கால்களைப் போட்டுக் கனவு கண்டு சிரிக்கிறாள். மாரிக்கு இப்போது அந்த மணம் எங்கிருந்து வருகிறது என்று புரிந்து விட்டது. அந்த மாயமலர் எது என்பதும் தெரிந்து விட்டது.
அவனுடைய வீடு தான் அந்த மாயமலர் என்பதையும் அங்கே அவர்கள் மூன்றுபேருக்கும் இடையில் மலர்ந்த அன்பு தான் அந்த மணம் என்பதையும் உங்களுக்குச் சொல்ல வேண்டுமா?
நன்றி - வண்ணக்கதிர்
அன்பு ஒன்றே அனைத்திற்கும் ஆதாரமானது என்பதை விளக்கும் கதை.
ReplyDeleteவாசிக்க வாசிக்க மாரியாக சில மணித்துளிகள் பயணித்த உணர்வை ஏற்படுத்தியது.
அருமை தோழர் 👌👌👌💐💐💐