Monday 28 October 2019

மாயாவின் பொம்மை


மாயாவின் பொம்மை

உதயசங்கர்
மாயாவின் கையில் எப்போதும் அந்த பொம்மை இருந்தது. அழகான மரப்பொம்மை. போனமாதம் அவள் அப்பா, அம்மாவுடன் டெல்லிக்குச் சுற்றுலா போயிருந்தாள். கன்னோட்பிளேஸ் என்ற இடத்தில் இருந்த கைவினைப் பொருட்கள் விற்கும் கடையில் அந்தப் பொம்மையைப் பார்த்தாள். பார்த்தவுடன் அந்தப் பொம்மையை மாயாவுக்குப் பிடித்து விட்டது. அது ஒரு ஆதிவாசிப்பெண்ணின் பொம்மை. கருப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை, என்று எல்லா வண்ணங்களும் அதன் முகத்தில் பூசப்பட்டிருந்தது. அகன்று விரிந்த வெள்ளைக்கண்களில் கருவிழி நேரில் பார்ப்பதைப் போல இருந்தது. கண்ணாடித்துண்டுகள் பதித்த ஆடை அணிந்த அந்தப்பொம்மை மாயாவுக்கு மிகவும் பிடித்து விட்டது.
இந்த ஆண்டு பள்ளியிறுதி வகுப்பு போகிறாள் மாயா.  பள்ளிக்கூடம் போய்வரும் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் மாயா அந்தப்பொம்மையைத் தூக்கிக் கொண்டு அலைந்தாள். அதைக் குளிப்பாட்டினாள். அதற்கு ஒப்பனை செய்தாள். சோறு ஊட்டுவதாகப் பாவனை செய்தாள். எப்போதும் அந்தப் பொம்மையுடன் பேசிக்கொண்டிருந்தாள். படுக்கும்போதும் பொம்மையை அருகில் படுக்கவைத்துக் கொண்டாள்.
ஒரு நாள் இரவில் மாயா கழிப்பறை போவதற்காக எழுந்தபோது லேசான அழுகைச் சத்தம் கேட்டது. அவள் விளக்கைப் போட்டுப் பார்த்தாள். சத்தம் எதுவும் இல்லை. கழிப்பறை போய்விட்டு வந்து படுத்தாள். உறங்கி விட்டாள். காலையில் அம்மாவிடம்,
“ அம்மா ராத்திரி யாரோ அழுகிற சத்தம் கேட்டுச்சிம்மா.. எந்திரிச்சி லைட்டைப் போட்டுப் பார்த்தேன்.. ஒண்ணும் கேட்கலை..” என்றாள். அம்மா சிரித்துக் கொண்டே
“ ஏதாவது கனவு கண்டிருப்பேம்மா.” என்று சொன்னார்கள். மாயாவும் அப்படித்தான் நினைத்தாள். அப்புறம் இரண்டு நாட்கள் கழிந்தது. அன்று பௌணர்மி. முழுநிலா ஒளி வீசிக்கொண்டிருந்தது. அன்று இரவில் மாயாவின் காதுக்கருகில் யாரோ சிரித்ததைப் போலிருந்தது. மாயா கண் விழித்தாள். அருகில் படுக்கவைத்திருந்த அந்தப்பொம்மையைக் காணோம். விளக்கைப் போட்டு கட்டிலுக்கடியில் தேடினாள். மேசையில் தேடினாள். அவளுடைய பீரோவில் தேடினாள். அவளுடைய பையில் தேடினாள். எங்கும் இல்லை. தூக்கம் வராமல் யோசித்துக் கொண்டேயிருந்தாள். அப்படி யோசிக்கும்போது வேறெங்கும் போகவில்லை. அந்தப்பொம்மை சன்னலில் நின்று வெளியே பௌணர்மி நிலவைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நினைத்தாள். அப்படியே தூங்கி விட்டாள்.
என்ன ஆச்சரியம்! காலையில் முழித்துப் பார்க்கிறாள். பக்கத்தில் கிடக்கிறது அந்தப்பொம்மை. கையில் அந்தப்பொம்மையை எடுத்து உற்றுக்கவனித்தாள். அந்தப் பொம்மையின் ஆடையில் கண்ணாடித்துண்டுகளுக்கு நடுவே பச்சை நிறத்தில் செடிகளும் கொடிகளும் மரங்களும் வரையப்பட்டிருந்தன. மாயாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
இன்னொரு நாள் நடுஇரவில் மழை பெய்தது. அப்போது மாயா எழுந்திரிக்கவில்லை. ஆனால் காலையில் பார்த்தால் அந்தப்பொம்மையின் ஆடை நனைந்திருந்தது.
மாயாவின் வீடு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தது. சுற்றிலும் மரங்களோ, செடிகளோ, இல்லை. கீழே இருந்த ஒரு பூங்காவில் மட்டுமே குரோட்டன்ஸ் செடிகளைப் பார்க்கலாம். மாயா அந்தப் பொம்மையுடன் பூங்காவுக்குப் போய் வரும் நாளில் அழுகையோ, சிரிப்போ, கேட்பதில்லை. மாயா அப்பாவிடம் சொல்லி சிறு தொட்டிகளில் செடிகளை வாங்கி வைத்தாள். அவளுடைய அறையில் ஓரமாக வெளிச்சம் படுகிற இடத்தில் அந்தச் செடிகளை வைத்துத் தண்ணீர் விட்டாள்.
அடுக்கு மாடிக்குடியிருப்பின் கீழே அப்பாவிடம் சொல்லி வேம்பு, ஆல், அரசு, என்று விருட்சங்களின் கன்றுகளை வைக்கச் சொன்னாள். அந்தக் கன்றுகளை ஊன்றி வைத்த அன்று இரவு மாயா ஒரு கனவு கண்டாள். அந்தக் கனவில் அந்த ஆதிவாசிப்பொம்மை வந்தது. அவளுடைய அம்மாவைப் போலவே முகம் இருந்தது.
“ என் அருமை மக்களே! இப்பத்தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கு.. இயற்கை இல்லாம மனிதர்கள் இல்லை.. நானும் ஒரு விருட்சம் தான்.. அருணாச்சலப்பிரதேசக்காட்டில் நூறாண்டுகளுக்கு மேல் சுதந்திரமாக இருந்தேன்.. எங்கோ அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்காக என்னை வெட்டினார்கள்… அன்றிலிருந்து தினம் அழுது கொண்டேயிருப்பேன்… இனிமேல் எனக்குக் கவலையில்லை.. மகளே! நீ செய்த காரியத்தை ஒவ்வொரு மனிதரும் தினமும் செய்தால் போதும்… இயற்கை அழியாது… மனிதர்களும் அழிய மாட்டார்கள்..”
என்று குனிந்து மாயாவின் நெற்றியில் முத்தமிட்டது. திடுக்கிட்டு முழித்த மாயா அருகில் பார்த்தாள் அந்த ஆதிவாசிப்பெண் பொம்மை அப்படியே கிடந்தது. மாயா அவளுடைய நெற்றியைத் தொட்டாள்.
முத்தமிட்ட ஈரம் கையில் பட்டது.

நன்றி - பஞ்சு மிட்டாய் சிறுவர் இதழ்




5 comments:

  1. நல்லதொரு கதை. எத்தனை எத்தனை மரங்களையும், இயற்கையையும் அழித்து விட்டோம்...

    சிறப்பான கதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. Great story...

    Suspense & moral value brought up nicely. May God bless you to write more such stories...

    ReplyDelete
  3. மிக மிக அருமையான கதை , மாணவருக்கு சொல்லுவோம்

    ReplyDelete
  4. மிக அருமை. அனைவருக்கும் இக்கதைகள் தேவை,

    ReplyDelete
  5. மிக அருமையான கதை. இயற்கை சூழலை மனதில் பதியும்படி புனையப்பட்ட குட்டிக் கதை. நன்றி

    ReplyDelete