Sunday, 8 August 2021

மின்னுவின் ஆசை

 

மின்னுவின் ஆசை


உதயசங்கர்

மின்னு சுண்டெலி தப்பித்ததே பெரிய காரியம். ஒரு விநாடி தாமதம் ஆகி இருந்தால் அவ்வளவு தான். வெள்ளைப்பூனை லபக் என்று விழுங்கியிருக்கும். பகலில் வெளியே வர முடியவில்லை. பெரியவர்கள், சிறுவர்கள்,  பூனைகள், நாய்கள், வண்டிகள், வாகனங்கள், என்று ஆபத்துகள். இரவில் எல்லாரும் உறங்கிய பிறகு இரை தேடலாம் என்றால் பூனை, நாய்கள், தொந்திரவு. ச்சே! என்ன வாழ்க்கை! என்று யோசித்துக்கொண்டு அதன் வீட்டிலேயே படுத்துக் கிடந்தது.

மின்னுவின் நண்பனான பன்னு வந்து கூப்பிட்டது.

“ மின்னு வரலையா? வீட்டுச்சமையலயில் பலகாரம் வாசனை தூக்குது..வா வா சீக்கிரம்..

மின்னு பன்னுவைப் பார்த்து,

“ இல்ல.. நான் வரலை.. நீ போ..

ஒரு விநாடி நின்று மின்னுவைப்பார்த்த பன்னு விருட்டென்று பாய்ந்து சென்றது. மின்னு யோசித்தது. இனி இரவில் போய் இரை தேடக்கூடாது. பகலில் எல்லாரையும் போல கம்பீரமாக அலைய வேண்டும். யாரைக்கண்டும் பயப்படக்கூடாது. பூனை மாதிரி.. வாலை ஆட்டிக்கொண்டு ஒய்யாரமாக நடக்கவேண்டும்.

மின்னு நினைத்தது எப்படி தெரிந்ததோ பூனை தேவதை மின்னுவின் முன்னால் வந்து நின்றது. மின்னுவுக்கு ஆச்சரியம்.

“ மின்னு.. நீ பகலில் அலைய வேண்டுமா? “

 மின்னு உற்சாகமாகத் தலையாட்டியது. உடனே பகல்பொழுதாகி விட்டது. மின்னு தெருவின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. அதன் காதில்

“ இப்போது நீ மியாவ் என்று கத்த வேண்டும்..என்ற குரல் கேட்டது. மின்னு வாயைத் திறந்து மியாவ் என்றது. அது கீச் என்ற சத்தமாகக் கேட்டது. தெருவின் அந்தப் பக்கத்தில் ஒரு பெரிய நாய் திரும்பிப்பார்த்தது. உடனே அங்கேயிருந்து பாய்ந்து வந்தது. அம்மாடி.. ஓடறா மின்னு.. என்று ஓடி ஒரு சாக்கடைப்பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.

ரொம்ப நேரம் கழித்து மின்னு வெளியே வந்தது. மறுபடியும் அந்தக்குரல் கேட்டது.

“ வாலை உயரே தூக்கி வைத்துக் கொள்ளவேண்டும். அப்படியே உடலை ஒயிலாக அசைத்து முதலில் முன்னங்கால்களை வைக்க வேண்டும். பின்பு பின்னங்கால்களைக் குறுக்கே வைக்க வேண்டும். அப்படியே மெல்ல நடந்து போகவேண்டும்..அது தான் பூனை நடை. மனிதர்கள் மிகவும் விரும்புவார்கள்..

மின்னு வாலை உயரே தூக்கியது. நுனி வால் மட்டும் தான் ஆடியது. ஆனால் உயரே வரமாட்டேன் என்று அடம் பிடித்தது. சரி என்று உடலைத் தூக்கியது கால்கள் குட்டையாக இருந்ததினால் தூக்க முடியவில்லை. சரி விடு. நடக்கலாம் என்று நடந்து பார்த்தது. பின்னங்கால் முன்னங்காலில் முட்டி கீழே விழுந்து சட்டி பானை மாதிரி உருண்டு கொண்டே இருந்தது.

எப்படியோ எழுந்து விட்டது.

“ இனிமேல் தான் முக்கியமான வேலை இருக்கிறது.. பதுங்கியிருந்து  ஒரு எலியைப் பிடிக்கவேண்டும்..

என்று மறுபடியும் பூனை தேவதையின் குரல் கேட்டது. மின்னுவுக்கு அதிர்ச்சி. என்னது நான் என் உறவினரையேக் கொல்லவேண்டுமா? அது முடியாது. என்று கத்தியது.

“ இப்போது புரிந்ததா மின்னு? இயற்கையில் ஒவ்வொரு உயிரும் தான் எப்படி வாழவேண்டும்? எதைச் சாப்பிடவேண்டும்? எப்போது இரை தேடவேண்டும்? பகலிலா? இரவிலா? என்று பரிணாமவளர்ச்சியின் போது த்தில் கற்றுக் கொள்கிறார்கள்.. யாரும் யாரைப் பார்த்தும் பொறாமை கொள்ள வேண்டாம்..

என்றது. மின்னுவுக்குப் புரிந்தது போல தலையாட்டியது.

“ உனக்குப்பின்னால் ஒரு பூனை உன்னைப்பிடிக்க பாயப்போகிறது மின்னு..என்ற குரல் கேட்டது. அவ்வளவு தான் மின்னு ஒரே பாய்ச்சலில் பாய்ந்து வீட்டுக்குள் வந்து விட்டது.

வயிறு பசித்தது. அங்கே பன்னு வாயில் வடையுடன் மின்னுவுக்காக காத்துக்கொண்டிருந்தது. 

ஐய்! சக்கா ஐய்!

நன்றி - துளிர்

 

Monday, 2 August 2021

குட்டி இளவரசனோடு ஒரு அற்புதப்பயணம்

 

குட்டி இளவரசனோடு ஒரு அற்புதப்பயணம்


உதயசங்கர்

குழந்தைகளின் கனவுகள் எல்லையற்றவை. அந்தககனவுகளில் குழந்தைகள் தங்கள் இதயத்தையே அர்ப்பணிக்கிறார்கள். அந்தக் கனவுகளில் எண்கள் இல்லை. மதிப்பீடுகள் இல்லை. வறட்டுத்தனமான அறநெறிகள், நன்னெறிகள், நீதிநெறிகள் இல்லை. ஆனால் அன்பும் நேசமும் பொங்கித்ததும்புகின்றன. குழந்தைகளின் உலகத்தை கண்களால் அல்ல.. இதயத்தால் பார்க்க முடிந்தால் மட்டுமே நீங்கள் குழந்தைகளைப் புரிந்து கொள்ள முடியும். கண்களால் பார்க்கமுடியாதவற்றையும் கூட இதயம் பார்த்து விடும். இதைத்தான் குட்டி இளவரசன் சொல்கிறான். குட்டி இளவரசனின் உலகத்தைப் புரிந்து கொள்ள முடியும். அகாதமான சகாரா பாலைவனத்தில் குட்டி இளவரசனைக் கண்டெடுத்த, அவனை மீண்டும் தேடிச்சென்று காணாமல் போன அந்துவான் எக்சுபரியைப் புரிந்து கொள்ள முடியும். அந்துவான் ஏன் சின்னஞ்சிறிய கோளான பி.612 லிருந்து குட்டி இளவரசனை இங்கே அழைத்து வந்து, அவனுக்கு உலக இலக்கியத்தில் நிரந்தரமான இடத்தை அளிக்க அவரால் எப்படி முடிந்தது என்று அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் பெரியவர்கள் கண்களால் அல்ல. எண்களால் பார்க்கிறார்கள். எண்கள் கேள்விகளாகப் பெருஞ்சுமையை குழந்தைகளின் மீது இறக்குகிறது. அந்தச் சுமை தரும் மன அழுத்தம் காரணமாக குழந்தைகள் தங்களுடைய மகிழ்ச்சியை இழக்கிறார்கள். இதில் நகைமுரண் என்னவென்றால் தாங்களும் ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்தோம். இப்போது குழந்தைகள் காணும் கனவுகளையெல்லாம் தாங்களும் கண்டிருக்கிறோம் என்பதையே பெரியவர்கள் மறந்து விட்டது தான். அதனால் தான் சகாரா பாலைவனம் போல அவர்களுடைய இதயம் ஈரமில்லாமல் காய்ந்து போயிருக்கிறது.

ஒரு கோடியே நாற்பது லட்சம் பிரதிகளைத் தாண்டி இன்னமும் விற்றுக்கொண்டேயிருக்கிற, 301 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிற குட்டி இளவரசனை எப்படிப் புரிந்து கொள்வது? ஏன் அந்தப் புத்தகம் செவ்வியலாகக் போற்றப்படுகிறது? குட்டி இளவரசன் கதையை மீண்டும் மீண்டும் திரைப்படங்களாகவும், நாடகங்களாகவும், எடுத்து வருகிறார்களே. குட்டி இளவரசனின் கதையில் வரக்கூடிய உடை, பொருள், விமானம், கிணறு, குட்டிக்கோள்கள் எல்லாவற்றையும் செயற்கையாக உருவாக்கி அருங்காட்சியகங்களாக நிறுவி உலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. குட்டி இளவரசனின் நூல் வயது வாரியாக மீளுருவாக்கம் செய்யப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

1900 – ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி பிறந்த அந்துவான் எக்சுபரி உயர்குடியைச் சேர்ந்தவர். எழுத்தாளர். ராணுவச்சேவைக்காக பிரான்ஸ் நாட்டு ராணுவத்தில் சேர்ந்து விமானம் ஓட்டுவதற்கும் கற்றுக்கொண்டார். விமானம் ஓட்டுவது அவருக்கு சாகசமாகவும், பெருவிருப்பமாகவும் மாறிவிட்டது. அதுதான் அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. 1925 – ஆம் ஆண்டு  தன்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பான ( AVIATOR ) விமான ஓட்டி என்ற நூலை வெளியிட்டார். பின்னர் 1929 – ஆம் ஆண்டு தென்னக அஞ்சல் (  SOUTHERN MAIL ) என்ற நூலை வெளியிட்டார். பிறகு 1931 – ஆம் ஆண்டு அவர் எழுதிய இரவு விமானம் ( NIGHT FLIGHT ) என்ற நூல அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தது. 1935 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பிராங்குகளுக்காக நடந்த விமானப்பந்தயத்தில் அவரும் அவருடைய நண்பரான ஆந்த்ரே பிரிவொட்டும் கலந்து கொண்டனர். அந்த விமானம் கிட்டத்தட்ட இருபது மணிநேரப் பயணத்துக்குப்பிறகு எரிபொருள் தீர்ந்து போய் சகாரா பாலைவனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.  குடிக்கத்தண்ணீரில்லை. ஒருநேரத்துக்கு மட்டுமேயான உணவு இருந்தது. உயிர் வாழ்வோமா? இல்லை ஆள் அரவமற்ற அந்தப் பாலைவன மணலில் புதைந்து போவோமா என்ற நிலையற்ற கணங்களில் மனம் மயங்கி கானல் காட்சிகளாய் பிரமைகளாய், தோற்றப்பிழைகளாய், கண்டவையே குட்டி இளவரசனை எழுதத்தூண்டுகோலாக இருந்தன. காணாமல் போன அவரைக் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால் அந்துவான் தோற்றப்பிழையாகக் கண்ட குட்டி இளவரசனை உடனே எழுதிவிடவில்லை. 

1939 –ல் அவர் காற்று, மணல், விண்மீன்கள் என்ற நாவலை எழுதி வெளியிட்டார். இதற்கிடையில் 1940 -களில் பிரான்ஸின் மீது ஜெர்மனியின் படையெடுப்பு நடந்தது. பிரான்ஸ் வீழ்ந்தது. அந்துவான் உடனே அமெரிக்காவுக்குத் தப்பிச்சென்றார். அங்கிருக்கும்போது தான் 1942 – ஆம் ஆண்டு கோடைகாலத்தில் குட்டி இளவரசனின் முதல் பிரதியை எழுதத்தொடங்கினார். அமெரிக்கா ஜெர்மனியின் நாஜிகளுக்கு எதிராக போரில் இறங்கத் தயங்கிக்கொண்டிருந்த சமயம் அது. 1941 முதல் 1943 வரை நியூயார்க் நகரத்தில் தங்கியிருந்த அந்துவான் இடையில் ஒரு ஐந்து மாதங்கள் வசந்தகாலத்தில் கனடாவிலுள்ள கியூபெக் நகரில் தங்கியிருந்தார்.

அங்கே குட்டி இளவரசனை எழுதத் தொடங்கினார். அவருக்குத் திருப்தி ஏற்படும்வரை மீண்டும் மீண்டும் எழுதினார். முப்பதாயிரம் வார்த்தைகளில் எழுதப்பட்ட முதல் பிரதியை பதினைந்தாயிரம் வார்த்தைகளாகக் குறைத்தார். 1943-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குட்டி இளவரசன் ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் பிரஞ்சு மொழியிலும் அமெரிக்காவில் வெளியானது. அப்போது ஜெர்மனியின் ஆதிக்கத்திலிருந்த பிரான்சில் அந்த நூல் தடைசெய்யப்பட்டது.  ஜெர்மனியின் ஆதிக்கத்திலிருந்து பிரான்ஸ் விடுதலையடைந்த பிறகே பிரான்சில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

1943-ல் குட்டி இளவரசன் வெளியான சில வாரங்களில் பிரஞ்சு விடுதலைப் படையில் சேர்ந்து ஜெர்மானியப்படைகளின் நடமாட்டத்தை அறிந்து கொள்ள உதவுகிற உளவு விமானத்தை ஓட்டிச்சென்றார். இரண்டு முறைகளுக்கு மேல் நாஜிகளின் நடமாட்டம் பற்றி வெற்றிகரமாக உளவறிந்து வந்தார். தன்னுடைய நாற்பத்திநான்கு வயதில் 1944 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒற்றறியச்சென்ற அந்துவான் மத்தியத்தரைக்கடல் பகுதியின் மீது பறக்கும்போது காணாமல் போனார்.  அவர் எப்படி மறைந்தார் என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது. சமீபத்தில் தான் அவர் சென்ற விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்துவான் என்ன ஆனார் என்று யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவர் எழுதிய குட்டி இளவரசனைத் தேடியே அவர் பி612 கோளுக்குச் சென்று விட்டார் என்று எல்லாரும் நம்புகிறார்கள்.

குட்டி இளவரசன் நூலை அவர் லியோன் வெர்த் என்ற பெரியவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தார். லியோன் வெர்த் அந்துவானை விட இருபத்தியிரண்டு வயது மூத்தவர். எழுத்தாளராகவும் கலை விமரிசகராகவும் இருந்த லியோன் இடதுசாரி போல்ஸ்விக்காக இருந்தார். அவர் தான் அந்துவானின் மிகச்சிறந்த நண்பராக இருந்தார். அதனால் தான் அவருக்குச் சமர்ப்பணம் செய்யும்போது,

“ இந்தப்புத்தகத்தைப் பெரியவர் ஒருவருக்குச் சமர்ப்பித்தற்காக நான் குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இதற்கு முக்கியக்காரணம் ஒன்று உண்டு. இந்தப் பெரியவர் தான் உலகத்திலேயே எனக்குக்கிடைத்த சிறந்த நண்பர். மற்றொரு காரணமும் உண்டு. இந்தப் பெரியவர் எல்லாவற்றையும் புரிந்து கொள்வார். குழந்தைகளின் புத்தகங்களைக்கூட. மூன்றாவது காரணம் இவரோ பிரான்ஸ் நாட்டில் இப்போது பசியிலும் குளிரிலும் வசிப்பவர். இவருக்கு உண்மையான ஆறுதல் தேவை. இந்தக் காரணங்கள் எவையுமே போதவில்லை என்றால் இந்தப்புத்தகத்தை ஒரு காலத்தில் குழந்தையாக இருந்த இந்தப் பெரியவருக்குச் சமர்ப்பிக்க விரும்புகிறேன். பெரியவர்கள் எல்லாருமே முதலில் குழந்தைகளாக இருந்தவர்கள் தாம். ( ஆனால் சிலருக்கு மட்டுமே இது நினைவிருக்கும் ) ஆகவே என் சமர்ப்பணத்தைத் திருத்தி அமைக்கிறேன்;

லியோன் வெர்த்துக்கு

அவர் சிறுபையனாக இருந்தபோது “

இரண்டாம் உலகயுத்தம் முடிவடைந்தபிறகு அந்துவான் குட்டி இளவரசனை லியோனுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார் என்பது அந்துவானின் மறைவுக்குப் பிறகே லியோனுக்குத் தெரியும். அப்போது லியோன்,

“ அந்துவான் இல்லாத அமைதி முழுமையான அமைதியில்லை “ என்று சொல்லியிருந்தார்.

குட்டி இளவரசன் நூலின் கதையை மேலோட்டமாகப்பார்த்தால் மிக எளிமையானது. குட்டி இளவரசன் என்ற வேற்றுக்கோள் குழந்தை ஆறு கோள்களுக்குப் பயணம் சென்று விட்டு ஏழாவதாக பூமிக்கு வருகிறான். அங்கேயும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற பிறகு சகாரா பாலைவனத்தில் கதையாசிரியரான அந்துவானைச் சந்தித்து அவனுடைய பயண அனுபவங்களைச் சொல்கிறான். சொல்லி முடித்தபிறகுதன்னுடைய கோளுக்குத் திரும்பிச் செல்கிறான். ஆனால் இந்தக் கதைக்குள் குட்டி இளவரசனுக்குக் கிடைக்கும் அனுபவங்களும் அந்த அனுபவங்களைச் சித்தரிக்கும் விதமும் நமக்கு வாழ்க்கை குறித்த நிறைய சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது.  செய்கிறான்.

கதையாசிரியரான அந்துவான் ஆறுவயதில் படம் வரைவதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். ஆனால் அவர் வரைந்த படத்தைப் பார்த்த பெரியவர்களுக்குப் புரியவில்லை. ஒரு மலைப்பாம்பு வயிற்றுக்குள் இருக்கும் யானையை அவர்களால் பார்க்க முடியவில்லை. அவர்கள் ஒரு தொப்பியையே பார்த்தார்கள். அன்றிலிருந்து அந்துவான் பெரியவர்களிடம் படத்தைக் காட்டுவதில்லை என்பதோடு படம் வரைவதை விட்டு விட்டார். அதன்பிறகு வளர்ந்து ஒரு விமானியாகி சகாரா பாலைவனத்தில் விமானம் பழுதாகி விழுந்த விமானத்தை தன்னந்தனியாகப் பழுது பார்த்துக்கொண்டிருக்கும்போது அங்கு திடீரென்று குட்டி இளவரசன் வருகிறான். தனக்கு ஒரு ஆடு படத்தை வரைந்து கொடுக்கும்படி கேட்கிறான். முதலில் அவன் யார்? எங்கிருந்து வந்தான்? என்று புரியாமல் திகைத்த அந்துவானிடம் அவன் மீண்டும் ஒரு ஆட்டை வரைந்து கொடுக்கச்சொல்கிறான். அதிலிருந்து தொடங்குகிறது கதை.  அந்துவான் வரைந்து கொடுக்கும் ஆடுகளின் சித்திரங்கள் குட்டி இளவரசனுக்குத் திருப்தியளிக்கவில்லை. ஆடு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெட்டியை வரைந்து அதற்குள் ஆடு அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்வதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறான் குட்டி இளவரசன். ஆட்டைக்கட்டிப்போட ஒரு கயிறும் முளைக்குச்சியும் வரைந்து தருவதாகச் சொல்லும் அந்துவானிடம் ஆட்டைக் கட்டுவதா? என்ன விந்தையான எண்ணம்? என்று கேட்கிறான். அதன் வழியே குழந்தைமையின் அற்புதத்தை நமக்கு உணர்த்துகிறார் அந்துவான்.

ஆடு செடிகளை மேய வேண்டும் என்று அறிந்து கொண்டதில் குட்டி இளவரசனுக்கு மகிழ்ச்சி. ஏனெனில் பவோபாப் மரங்களை மேய வேண்டும் என்று ஆசைப்படுகிறான். பத்து யானைகள் வந்து மேய்ந்தாலும் தின்று தீர்க்க முடியாத பிரம்மாண்டமான மரமான பவோபாப் மரத்தை ஒரு ஆடு எப்படி மேயமுடியும் என்று அந்துவான் கேட்கும்போது குட்டி இளவரசன் விவேகத்துடன் பதில் சொல்கிறான். ஒரு காலத்தில் பவோபாப் மரங்களும் செடிகளாக இருக்கும் தானே. அப்போது ஆடு மேய்ந்து விடும் அல்லவா. பவோபாப் மரங்கள் பெருகினால் கோள் வெடித்துச் சிதறி விடும் என்கிறான். மிக முக்கியமான விஷயம் அந்துவான் நாஜிக்களையே பவோபாப் மரங்களாகச் சித்தரிக்கிறார். அந்த விஷச் செடிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று குட்டி இளவரசனின் மூலமாகச் சொல்கிறார்.

உலகையே தன் ஆளுகைக்குக்கீழ் கொண்டுவருவதற்காகவும் ஒரே இனம் தான் இந்த உலகை ஆளவேண்டுமென்ற முட்டாள்த்தனமான கருத்தியலுக்காகவும்  இனவெறியையும், ஆதிக்கவெறியையும், பரப்பிவிட்ட ஜெர்மனியின் ஹிட்லர் உலகையே அடிமைகொள்ள நாஜிப்படையை உருவாக்கினான். அந்த நாஜிக்களுக்கு எதிரான ஒரு நூல் குட்டி இளவரசன். அதுமட்டுமல்ல அப்போதைய உலகப்போர் காரணமாக விரக்தியடைந்த மக்களுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் ஒரு பிரதியாகவும் குட்டி இளவரசன் விளங்குகிறது.

குட்டி இளவரசனின் கோள்கூட பி612 என்ற எண்ணாக இருப்பதற்குப் பெரியவர்கள் தான் காரணம். ஏனெனில் பெரியவர்களுக்கு எண்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர்கள் வாழ்க்கையை எண்களாலேயே அளக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் எண்களை ஏளனமாகக் கருதுகிறார்கள்.

குட்டி இளவரசன் ஒரு வீட்டைவிட சற்று பெரிதாக இருக்கும் தன்னுடைய கோளில் இருக்கும் ஒரே ஒரு மலர் கொண்ட கர்வத்தையும் அலட்சியத்தையும் தாங்கமுடியாமலேயே கோளை விட்டு புறப்படுகிறான். அப்படி அவன் ஆறு சின்னஞ்சிறு கோள்களுக்கும் பூமியெனும் பெருங்கோளுக்கும் போய் வரும்போது சந்தித்த அனுபவங்களின் மூலம் அவன் வாழ்க்கையின் அர்த்தம், அன்பு, கருணை, பேராசை, அதிகாரம், அறியாமை, அபத்தம், எல்லாவற்றையும் உணர்கிறான். மரணம் என்பது உண்மையில் மரணமல்ல என்ற இருத்தலியல் கோட்பாட்டைப் பேசுகிறான். குட்டி இளவரசனை வாசிக்கும் போது ஒரே நேரத்தில் அது காலத்தின் படைப்பாகவும், காலத்தைத் தாண்டிய படைப்பாகவும் விளங்குவது தெரியும்.

 முதல் கோளில் குடிமகன்களே இல்லாத ராஜாவைச் சந்திக்கும் குட்டி இளவரசன் அவருடைய வெற்று அதிகாரத்தின் கோமாளித்தனத்தை உணர்கிறான். தன் மேலங்கியால் கோள் முழுவதையுமே ஆக்கிரமித்துக் கொண்டு தானே சட்டமியற்றவும் அந்த சட்டத்தைத் தானே மீறவுமான அதிகாரவிளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிற ராஜா குட்டி இளவரசனையும் அங்கே தங்கச்சொல்கிறார். தனக்குத்தானே நீதி வழங்குவது தான் இருப்பதிலேயே மிகவும் கடினமானது என்கிறார் ராஜா. அதிகாரத்தின்  கோமாளித்தனமான விளையாட்டைக் கண்டு விரக்தியடைந்து அங்கிருந்து கிளம்பி விடுகிறான் குட்டி இளவரசன். அப்படிப்புறப்படும் போது பெரியவர்கள் விசித்திரமானவர்கள் என்று சொல்கிறான்.

 அடுத்த கோளில் ரசிகனைத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு தற்பெருமைக்காரனைச் சந்திக்கிறான். அந்தத் தற்பெருமைக்காரன் தன்னை யாராவது பாராட்டிக் கொண்டேயிருக்கவேண்டும் என்று விரும்புகிறான். குட்டி இளவரசன் அந்தத் தற்பெருமைக்காரனிடமும் சலிப்படைந்து அடுத்த் அகோளுக்குச் செல்லும்போது பெரியவர்கள் நிச்சயம் விசித்திரமானவர்கள் தான் என்று சொல்கிறான்.

அடுத்த கோளில் ஒரு குடிகாரனைச் சந்திக்கிறான். குடிப்பதற்கானக் காரணத்தை அந்தக் குடிகாரன் சொல்வதைக் கேட்டு குட்டி இளவரசன் குழம்புகிறான். அங்கிருந்து கிளம்பும் போது பெரியவர்கள் மிகமிக விசித்திரமானவர்கள் என்று நினைக்கிறான்.

அடுத்த கோளில் அவன் சந்திக்கும் வியாபாரி தனக்கு ஐம்பது கோடியே பதினாறு லட்சத்து இருபத்தியிரண்டாயிரத்து எழுநூற்று முப்பத்தொன்று விண்மீன்களுக்குச் சொந்தக்காரன் என்று சொல்கிறான். அந்த விண்மீன்களின் எண்ணிக்கையை காகிதத்தில் எழுதி பத்திரமாகப் எட்டகத்தில் பூட்டி வைத்துக் கொள்வதால் அவை எனக்குச் சொந்தமென்கிறான்.  விசித்திரமான அந்த வியாபாரியை விட்டுப் புறப்படும்போதும் குட்டி இளவரசன் பெரியவர்கள் அசாதாரணமானவர்களாக இருக்கிறார்கள் என்கிறான்.

அடுத்த கோளில் ஒரு நிமிடத்தில் பகலும் ஒரு நிமிடத்தில் இரவும் வந்து விடுகிறது. அந்தக் கோளில் விளக்கேற்றுபவர் ஒரு நிமிடத்தில் விளக்கை ஏற்றவும் ஒரு நிமிடத்தில் விளக்கை அணைக்கவுமான பணியை விடாது செய்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே நாற்பத்திநாலு முறை சூரிய அஸ்தமனமாகும் கோளிலிருந்து தான் குட்டி இளவரசன் வந்திருப்பான். அவனுக்கு சூரிய அஸ்தமனம் எப்போதும் பிடித்த விஷயம். இந்தக் கோளில் இருபத்தி நாலு மணிநேரத்தில் ஆயிரத்து நானூற்று நாற்பது சூரிய அஸ்தமனங்கள் நிகழும் இந்தக் கோளை விட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து செல்லும் குட்டி இளவரசன் அந்த விளக்கேற்றும் மனிதரை மற்றெல்லோரையும் விட உயர்வாக நினைப்பான். அவனை நண்பனாக்கிக் கொள்ள விரும்புவான்.

அடுத்த கோளில் வெறும் புத்தகத்தில் வாழும் புவியியல் ஆய்வாளரைச் சந்திக்கிறான். குட்டி இளவரசனின் கேள்விகளுக்கு அந்த ஆய்வாளர் தரும் பதில்கள் அவனுக்கு ஏமாற்றமளிக்கின்றன. மலர்களைப் பற்றிக்கவலைப்படாத அந்த புவியியலாளரின் கோளை விட்டு பூமிக்கோளுக்குப் பயணப்படுகிறான்.

ஏழாவது கோளான பூமியில் மனிதர்களைத் தேடி அலைகிறான். ஆப்பிரிக்க பாலைவனத்தில் வந்து விழும் அவன் முதலில் ஒரு பாம்பைச் சந்தித்து மனிதர்களைப் பற்றிக் கேட்கிறான். பாலைவனத்தில் தனிமையாக இருக்கிறது என்று சொல்கிற குட்டி இளவரசனிடம் மனிதர்கள் எங்கேயும் தனியாகத்தான் வசிக்கிறார்கள் என்று பாம்பு சொல்கிறது. மரணம் பற்றிப் புதிராகப் பேசும் அந்தப் பாம்பை விட்டு அகன்று ஒரு மலரைச் சந்திக்கிறான். மலரிடம் மனிதர்களைப் பற்றிக் கேட்கும்போது வேரில்லாமல் காற்றில் மிதந்து செல்லும் அவர்களை வெகுகாலத்துக்கு முன்னால் பார்த்திருக்கிறேன் என்று மலர் சொல்கிறது. அடுத்து மலையின் மீது ஏறி நின்று மனிதர்களைத் தேடுகிறான். அது அவன் குரலையே எதிரொலிக்கிறது. மனிதர்களுக்குக் கற்பனைவளம் குறைவு என்றும் அதனால் தான் சொன்னதையே திரும்பச்சொல்கிறார்களென்றும் நினைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்கிறான்.

மணல் பாறை பனி என்று பயணிக்கிற குட்டி இளவரசன் பாதைகளைக் காண்கிறான். பாதைகள் ஒரு ரோஜாத்தோட்டத்துக்கு அவனைக் கொண்டு செல்கிறது. தனியாக இருக்கும்போது ரோஜாவின் தனித்துவமான மதிப்பு தோட்டமாக இருக்கும்போது சாதாரணமாகிவிடுவதைக் கண்டு மனம் வெதும்புகிறான் குட்டி இளவரசன். அவனைச் சந்திக்கும் நரி அன்பு என்பதே பழக்கம் என்று சொல்கிறது. நரியிடம் பழக்கப்படுத்திக்கொண்ட குட்டி இளவரசனுக்கு தன்னுடன் பழகிய தன்னுடைய கோளில் இருக்கும் ரோஜாமலரைத் தேட ஆரம்பிக்கிறது.

அங்குமிங்கும் எதற்கென்றே தெரியாமல் ரயில்களில் போய் வந்து கொண்டிருக்கும் மனிதர்களை வழியனுப்பும் பாயிண்ட்ஸ்மேனைச் சந்திக்கிறான். அவன் குழந்தைகளுக்கு மட்டுமே தாங்கள் எதைத்தேடுகிறோம் என்று தெரியும் என்று சொல்கிறான். தண்ணீர் தாகத்தைத் தணிக்க மாத்திரையைச் சாப்பிடச் சொல்லும் ஒரு வியாபாரியைச் சந்திக்கிறான். அதனால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்கிறான் வியாபாரி. அந்த நேரத்தில் என்னால் ஒரு ஊற்றைத் தேட முடியும் என்கிறான் குட்டி இளவரசன்.

அங்கிருந்து தான் விபத்தில் சிக்கிய அந்துவானைப் பாலைவனத்தில் சந்திக்கிறான். பாலைவனத்தில் ஒரு கிணறு இருப்பதைக் கண்டு சொல்கிறான். மனிதர்கள் தேடுவது என்ன வென்று தெரியாமலே சுழலில் சிக்கிக்கொள்வார்கள் என்று சொல்கிறான். அந்த இடத்தில் தான் எட்டு நாட்களுக்கு முன்னால் தான் விழுந்ததாகச் சொல்கிறான் குட்டி இளவரசன். இப்போது அவனுடைய கோளில் இருக்கும் மலருக்கு அவன் தான் பொறுப்பாளி. உடனே அங்கே செல்லவேண்டும். பாம்பினால் கடிபட்டு இறந்து போகிறான். ஆனால் தான் இறப்பதாகத் தெரிவது உண்மையல்ல. அந்தக்கோளுக்கு இத்தனை எடையுள்ள உடலுடன் போகமுடியாது அதனால் நீ நம்பாதே. என்று சொல்லி சுருண்டு விழுகிறான். அந்துவானிடம் விண்மீன்களைப் பார்க்கும்போது அங்கிருந்து உண்னைப்பார்த்துச் சிரிப்பேன் என்று அந்துவானிடம் சொல்கிறான்.

காவியத்துயரமான அந்தக் காட்சியில் அந்துவானுடன் சேர்ந்து நமக்கும் கண்கலங்குகிறது. நாவல் முழுவதும் குட்டி இளவரசனின் எண்ணங்களும் உரையாடல்களும் நம்முடைய துருப்பிடித்த உணர்வுகளைக் கூர் தீட்டுகின்றன. புதிய பார்வைகளும் தரிசனங்களும் கிடைக்கின்றன. அந்துவான் குட்டி இளவரசனின் மூலம் வாழ்க்கையை விசாரணை செய்கிறார். அதில் பெரியவர்களும் அவர்களின் உலகப்பார்வையும் குட்டி இளவரசனால் எள்ளி நகையாடப்படுகிறது. பெரியவர்கள் விசித்திரமானவர்கள் தானே.

அதோ! குட்டி இளவரசன் தன்னுடைய சிறிய கோளான பி612 – ல் தன்னுடைய கர்வமிக்க மலரோடும் பெட்டியில் அடைக்கப்பட்ட ஆட்டுக்குட்டியுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். காலையில் எழுந்ததும் எரிமலைகளைச் சுத்தம் செய்கிறான். எங்காவது தெரியாத்தனமாக பவோபாப் செடிகள் முளைப்பதாகத் தெரிந்தால் தன்னுடைய ஆட்டுக்குட்டியிடம் மேய்ந்து விடச்சொல்கிறான்.

அதோ வானத்தைப் பாருங்கள். குட்டி இளவரசன் உங்களைப் பார்த்துச் சிரிக்கிறான். இரவில் வானத்தைப் பாருங்கள். அப்போது தெளிவாகத்தெரியும்.  

அதற்கு நீங்கள் ஒரு குழந்தையாக மாறவேண்டும்.

நன்றி - Bookday.in



 

Sunday, 1 August 2021

சூரியனும் குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சும்

 

சூரியனும் குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சும்

உதயசங்கர்

காலை விடிந்தது. சூரியன் கண்களை மெல்லத் திறந்து உலகத்தைப் பார்த்தான். வெளிச்சத்தினால் கண்கள் கூசின. மறுபடியும் கண்களை மூடி கொஞ்சம் கொஞ்சமாய் கால்க்கண்களைத் திறந்தான். அரைக்கண்களைத் திறந்தான். முக்கால் கண்களைத் திறந்தான். பிறகு முழுக்கண்களையும் திறந்தான். இப்போது கண்கள் கூசவில்லை. மேலேயிருந்து கீழே பூமியை வேடிக்கை பார்த்தான். அப்படியே மெல்ல வானத்தில் காவல் நடைப்பயிற்சி செய்யப் புறப்பட்டான்.

கீழே ஒரு கூரை வீட்டின் முற்றத்தில் ஒரு சிட்டுக்குருவி அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது. அது ஓலைகளுக்கு நடுவில் கூடு கட்டி குஞ்சுகள் பொரித்திருந்தது. கூட்டில் இரண்டு குஞ்சுகள் இருந்தன. இரண்டு குருவிக்குஞ்சுகளில் ஒன்று ரொம்பக்குட்டியாயிருந்தது. ஆனால் அந்தக்குட்டிக் குட்டி குருவிக்குஞ்சு சுறுசுறுப்பாக இருந்தது. கூட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க முடியவில்லை. அங்கே சுற்றிச் சுற்றி வந்தது. அம்மாவிடம்,

“ நான் எப்ப பறக்கலாம்? சொல்லுங்கம்மா.. நான் எப்ப பறக்கலாம்? சொல்லுங்கம்மா..என்று கேட்டுக்கொண்டேயிருந்தது. அம்மாக்குருவி,

“ குட்டிக்குட்டி குருவிக்குஞ்சே! இறகு முளைக்கணும்.. சிறகு முளைக்கணும்.. வால் முளைக்கணும்.. கால் வளரணும்.. அப்புறம் பறக்கலாம் குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சே! “

என்று சொன்னது. குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சுக்கு எல்லாம் உடனே நடக்கணும் என்று நினைத்தது. அது தன்னுடைய உடலை மீண்டும் மீண்டும் பார்த்தது. அப்போது உச்சி வெயில் வந்து விட்டது. நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த சூரியன் அந்தக் கூரை வீட்டுக்கு மேலே வந்து நின்றது.

வெளிச்சத்தினால் கண்கள் கூசிய குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு கூட்டிலிருந்து வெளியே எட்டிப்பார்த்தது. சூரியன் சிரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து அதற்கும் சிரிப்பு வந்தது. கிய்யா கிய்யா என்று சிரித்தது. குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சின் சிரிப்புச்சத்தத்தை கேட்ட சூரியன் அங்கேயே நின்று விட்டது.

குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு சூரியனிடம், “ கிய்யா கிய்யா சூரியன் மாமா சூரியன் மாமா நானும் உங்களை மாதிரி வானத்தில் பறந்து மிதக்கணும்…என்று பேசியது. அதற்கு சூரியன்,

“ ஆகா அதுக்கென்ன.. உன் சிறகுகளை அசைத்து மேலே பறந்து வா..என்று பதில் அளித்தது. உடனே குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு தன் சின்னஞ்சிறு சிறகுகளை அசைத்தது. என்ன ஆச்சரியம்! அது பறக்கத் தொடங்கிவிட்டது. ஆமாம். மேலே மேலே பறந்தது.

முதலில் ஊர்ந்து செல்லும் எறும்பு மேகங்களைக் கடந்தது. பின்னர் தாவிக்குதிக்கும் முயல் மேகங்களைக் கடந்தது. அப்புறம் பாய்ந்து செல்லும் மான் மேகங்களைக் கடந்தது. கர்ச்சித்துக்கொண்டிருந்த சிங்கமேகங்களைக் கடந்தது. கன்னங்கரேலென்று பிளிறிக்கொண்டிருந்த யானை மேகங்களைக் கடந்தது. அப்படியே பறந்து பறந்து சூரியனுக்கு அருகிலேயே போய்விட்டது.

“ கிய்யா கிய்யா சூரியன் மாமா! சூரியன் மாமா! நான் வந்துட்டேன்..என்று கத்தியது. சூரியன் அந்தக்குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சை தன் முதுகில் தூக்கி வைத்துக் கொண்டது. குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு ரொம்ப தூரம் பறந்து வந்திருக்கிறதல்லவா. அதற்கு சிறகுகள் வலிக்குமல்லவா. அதனால் சூரியனின் முதுகில் உட்கார்ந்து உலகத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்தது.

உலகத்தை வேடிக்கை பார்ப்பது வேடிக்கையாக இருந்தது.

இருட்டத் தொடங்கிவிட்டது. சூரியன் மாமாவின் காவல் நேரம் முடிந்து விட்டது. இனி நிலா அத்தை வந்து விடுவாள். வேடிக்கை பார்த்துப்பார்த்து சோர்ந்து போய் உறங்கி விட்டது குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு. உறங்கிக்கொண்டிருந்த குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சை அப்படியே பூப்போல சூரியன் நிலா அத்தையிடம் கொடுத்தது. நிலா அத்தை குளிர்ந்த தன் கரங்களால் அதை வாரி அணைத்து அப்படியே கீழே இறங்கினாள்.

கூரை வீட்டிலிருந்த கூட்டில் பத்திரமாக அதை வைத்தாள். உறங்கிக்கொண்டே நிலா அத்தையின் கைகளைப் பிடித்த குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சை மெல்ல தட்டிக்கொடுத்தாள். குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு உறக்கத்தில் சிரித்தது. குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு பெரிய குருவியாகி வானத்தில் அங்கும் இங்கும் சர் சர்ரென்று பறந்து கொண்டிருப்பதாகக் கனவு கண்டது.

நன்றி - வண்ணக்கதிர்



 

Wednesday, 7 July 2021

கத்திக்கப்பல்

 

    கத்திக்கப்பல்

உஉதயசங்கர்

 

 கப்பலில் போகவேண்டும் என்று அரவிந்த் ஆசைப்பட்டான்.. அவனுடைய அப்பா  தூத்துக்குடி துறைமுகத்துக்குக் கப்பல் பார்க்க அழைத்துச் சென்றிருந்தார். பிரம்மாண்டமாய் நின்று கொண்டிருந்த கப்பலைப் பார்த்த அரவிந்த் ஆ வென்று வாயைப் பிளந்தான். கப்பலில் ஏறிப் பார்த்தான். அன்று இரவு அவன் ஒரு கப்பலில் ஏறினான்.

அரவிந்த் வெள்ளைச்சீருடை அணிந்திருந்தான். குட்டிப்பையன் குட்டிச்சீருடை அணிந்திருந்தான். அவனைப் பார்த்து ஊழியர்கள் வணக்கம் சொன்னார்கள். கப்பல் அலைகளில் ஏறி இறங்கி தாலாட்டியது. மிதந்து கொண்டிருந்த கப்பலில் அரவிந்த் உறங்கிக்கொண்டிருந்தான்.

“ மணி ஏழாச்சு.. இன்னும் என்ன தூக்கம்? “ என்று அம்மாவின் குரல் கேட்டது. கப்பலில் எப்படி அம்மா வந்தாள்? என்று யோசித்துக் கொண்டே கண்களைத் திறந்தான். வீட்டில் கட்டிலில் படுத்திருந்தான். சோ என்று சத்தம் கேட்டது. சன்னல் வழியே பார்த்தான். மழை பெய்து கொண்டிருந்தது. இரண்டு நாட்களாய் விடாமல் மழை. புயலும் வீசியதாய் அம்மா சொன்னாள். அரவிந்த் எழுந்து உட்கார்ந்து மழையை வேடிக்கை பார்த்தான்.

தெருவில் மழைநீர் ஓடிக்கொண்டிருந்தது.

திடீரென்று அரவிந்துக்கு யோசனை. உடனே அவன் ஒரு காகிதத்தை எடுத்தான். அதை மடித்துக் கப்பல் செய்தான். அதுவும் கத்திக்கப்பல். அழகான கப்பல். பிறகு ஒரு காகிதக்கொடி செய்தான். ஒரு பொடிக்குச்சியில் காகிதக்கொடியை ஒட்டினான். அதை கத்திக்கப்பலின் உச்சியில் செருகி வைத்தான்.

மழை வெறித்து விட்டது. ஆனால் தெருவில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அரவிந்த் மெல்ல அவனுடைய கப்பலுடன் வெளியே போனான். கத்திக்கப்பலைத் தண்ணீரில் விட்டான். அரவிந்த் அதில் ஏறிக் கொண்டான். முதலில் கத்திக்கப்பல் தடுமாறியது. கவிழ்ந்து விடுவது போல ஆடியது. பிறகு தடுமாறாமல் வேகமாக தண்ணீரில் மிதந்து சென்றது. அரவிந்த் அதன் முகப்பில் நின்றான். மிதந்து சென்ற கப்பல் அந்தத் தெருவைக் கடந்தது. அவனுடைய பள்ளிக்கூடத்தைத் தாண்டியது. பள்ளிக்கூடத்தில் யாரும் இல்லை. யாராவது இருந்தால் கையை ஆட்டலாம் என்று நினைத்தான். ஆனால் பள்ளி வாசலில் மணி என்ற நாய்க்குட்டி மட்டும் நின்று கொண்டிருந்தது. அரவிந்த்,

“ மணி! நான் கப்பல்ல போறேன்.. வெளிநாடு போய்ட்டு வாரேன்..என்றான். மணி மழைநீரை ஒரு உதறு உதறிவிட்டு பௌ என்று குரைத்தது. பின்னர் கத்திக்கப்பல் ஒரு வாய்க்காலுக்குச் சென்றது. அங்கே ஒரு தவளை வாயைத் திறந்து கப்பலைப் பார்த்தது.

“ நானும் வரட்டா? “ என்று கேட்டது. அரவிந்த் யோசித்தான்.

“ இல்லை இல்லை.. நான் திரும்பிவர நாளாகும்..என்றான். “ ஓ அப்படியா.. எனக்கு முட்டைகளிட வேண்டும்…நிறைய வேலைகள் இருக்கு..என்று சொல்லி ஒரு குதிகுதித்தது.

வாய்க்காலில் ஓடிய கத்திக்கப்பல் ஒரு குளத்துக்குச் சென்றது. குளத்தில் ஒரு நண்டு வேகமாக கத்திக்கப்பலைப் பிடிக்க வந்தது. ஆனால் கத்திக்கப்பல் அதன் பிடியில் சிக்காமல் அங்குமிங்கும் வளைந்து வளைந்து சென்றது.

 குளம் நிரம்பி ஆற்றுக்குச் சென்றது. கத்திக்கப்பலும் ஆற்றுக்குச் சென்றது. ஆற்றங்கரையில் ஒரு பையன் அழுது கொண்டிருந்ததைப் பார்த்த கத்திக்கப்பல் நின்று விட்டது.

“ ஏன் அழுகிறே..என்று அரவிந்த் கேட்டான்.  அதற்கு அந்தப்பையன்,

“ நான் சாப்பிட்டு இரண்டு நாளாச்சு.. ஆத்துத்தண்ணியைத் தான் குடிச்சிகிட்டிருக்கேன்.. எனக்குப் பசி தாங்கல..

உனக்கு வீடு இல்லையா? “

“ புயல்ல எங்க வீடு அடிச்சிகிட்டுப் போயிருச்சி.. அப்பா இல்லை.. அம்மா எங்காவது சாப்பாடு கிடைக்குமான்னு தேடப்போனாங்க.. இன்னும் வரலை..

என்றான் அந்தப்பையன். அரவிந்த் கப்பலிலிருந்து ஏராளமான உணவுப்பொட்டலங்களை எடுத்து அந்தப்பையனிடம் கொடுத்தான்.

“ உனக்கு வேற ஏதாவது வேணுமா? சும்மா கேளு..

என்று கேட்டான் அரவிந்த்.

“ எனக்குப் படிக்கப்புத்தகம் வேணும்..என்றான். அரவிந்த் கத்திக்கப்பலின் அலமாரியிலிருந்து புத்தம் புதிய கதைப்புத்தகங்களை எடுத்துக் கொடுத்தான். அந்தப்பையன் அரவிந்துக்கு நன்றி சொன்னான்.

 இப்போது ஆறு நிதானமாக ஓடியது. அரவிந்துக்கு இந்த உலகத்தை மாற்ற வேண்டும் என்று தோன்றியது.  

ஆற்றின் இரு கரையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான் அவன்.

ஆறு ஓடி ஓடி கடலில் சென்று கலந்தது. கத்திக்கப்பலும் கடலுக்குள் சென்றது. கடலில் பெரும் அலைகள் வீசின. கத்திக்கப்பலை மேலும் கீழும் அசைத்தன. கத்திக்கப்பலின் கேப்டன் யார்? அரவிந்த் இல்லையா? அவன் கத்திக்கப்பலை அழகாக ஓட்டினான்.

இப்போது கடல் அமைதியாகி விட்டது. கத்திக்கப்பல் கடலின் நடுவில் மிதந்து கொண்டிருந்தது. இனி கவலையில்லை. அதன் உச்சியில் ஒரு கொடி காற்றில் பறந்து கொண்டிருந்தது.

அரவிந்த் எங்கே?

அதோ!

அங்கே கப்பலின் மேல்தளத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் மடியில் ஒரு புத்தகம் விரிந்து கிடந்தது.

  எதிரே நிலா மறைவதையும் புதிய சூரியன்  உதிப்பதையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

நன்றி -
பொம்மி

Tuesday, 22 June 2021

குட்டி இளவரசர்களின் கைகளில் ஆதனின் பொம்மைகள்

 

 


குட்டி இளவரசர்களின் கைகளில் ஆதனின் பொம்மைகள்

உதயசங்கரின் ஐந்து குழந்தை இலக்கிய நூல்களை முன்வைத்து


கமலாலயன்



   தமிழில் குழந்தை இலக்கியங்களின் வரவும்,வளர்ச்சியும் பலரின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது. பல புதிய எழுத்தாளர்கள் குழந்தைகளுக்காகவும்,இளையோருக்காகவும் நிறைய புதிய கதைகளை எழுதத் தொடங்கியுள்ளனர்.கதை சொல்லிகள் பலரும் ஆடிப்பாடி, கொண்டாட்டங்களுடன் இந்தக்கதைகளையும்,ஏற்கெனவே மரபு வழி வந்திருக்கும் கதைகளையும் சிறார்களிடம் நேரடியாக அல்லது இணையவழி நிகழ்வுகளின் மூலம் சொல்லி வருகின்றனர்.

   உதயசங்கரின் ஐந்து நூல்கள் மிக சமீபகாலத்தில் வெளியாகியுள்ளன.2021, பிப்ரவரி மாதத்திலேயே ஆதனின் பொம்மை, அலாவுதீனின் சாகசங்கள், புலிக்குகை மர்மம், பொம்மைகளின் நகரம் ஆகிய நான்கும், கடந்த 2020 அக்டோபரில் குட்டி இளவரசனின் குட்டிப்பூ என்ற இளையோர் நாவலும் வந்துள்ளன. பிரெஞ்சு மொழியில் அந்துவான் செயிண்ட் எக்ஸ்பெரி எழுதியலிட்டில் ப்ரின்ஸ்என்ற நாவலைத் தமிழில் வெ. ஸ்ரீராம் - மதனகல்யாணிமொழிபெயர்த்துகுட்டி இளவரசன்என்ற நாவலாகத் தந்திருக்கிறார். தமிழ் எழுத்தாளர்கள், தேர்ந்த வாசகர்கள் அனைவரின் மனங்களிலும் அவன் அழியாத இடம் பெற்று விட்டவன். இப்போது, உதயசங்கர் அந்தக் குட்டி இளவரசனைத் தேடி மீண்டும் சஹாரா பாலைவனத்திற்கு அந்துவானை அனுப்பி ஒரு தேடலை நிகழ்த்தியிருக்கிறார். அந்துவானையே ஒரு விண்கலமாக மாற்றி பால்வெளியின் கோள்கள் பலவற்றுக்கு குட்டி இளவரசனைப் பயணிக்கச் செய்திருக்கிறார்.

சிறந்த தமிழ்மொழிபெயர்ப்பாளரான முனைவர் கே. கணேஷ்ராம்,( சுழலும் சக்கரங்கள், காஃப்காவின் நுண்மொழிகள் உள்ளிட்ட பல மொழிபெயர்ப்புகளின் ஆசிரியர் )  தன் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் : ” ‘குட்டி இளவரசனின் குட்டிப்பூதமிழ்ச்சிறார் புனைவெழுத்தின் ஒரு மைல்கல். முதல் ஊடிழைப்பிரதி என்னும் பெருமையும் இதற்குண்டு.“ அதோடு, இந்தக் குறுனாவலில், “ குட்டி இளவரசனைக் குழந்தைமை நிரம்பியவனாகவும், அதே சமயம் சமகால வாழ்வை வளரிளம் பருவத்தினருக்கும் விளக்கிச் சொல்லும் சமூக அரசியல் சூழலியல் கூரறிவு நிரம்பியவனாகவும் உதயசங்கர் படைத்திருக்கிறார்எனவும் கணேஷ்ராம் பாராட்டுகிறார்.இந்த நூலை மிக அழகான வண்ணப்படங்களுடன் நல்ல தாளில் வானம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஓவியர் ராஜனின் அட்டைப்படமும்,ஓவியங்களும் அருமை.

அந்துவான் செயிண்ட் எக்ஸ்பெரிக்கு, தான் படைத்த, கி.பி.1942-இல் சஹாரா பாலைவனத்தில் சந்தித்துப் பிரிந்த குட்டி இளவரசனை மீண்டும் தேடிப் போய்ப் பார்த்தாக வேண்டும் என்ற தீரா விருப்பம்.பழுதடைந்து கிடக்கும் தன் பழைய விமானத்தைச் சரி செய்துகொண்டு சஹாராவை நோக்கிப் பறக்கிறார். அதே இடத்தில்,முன்பு போலவே விமானம் மணலில் மோதி இறங்குகிறது. கொஞ்ச தூரத்திலேயே, ஒரு கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துக்கொண்டு நிற்கும் குட்டி இளவரசனையும் பார்த்து விடுகிறார்.அவனை மறுபடிப் பிரிய மனமின்றி, தானே ஒரு விண்கலமாக மாறி, அவனுடனேயே பால்வெளியில் ஒவ்வொரு கோளாகப் பயணம் செய்யத் தொடங்குகிறார்.

குட்டி இளவரசனின் குட்டிக்கோளான பி-612 இல், அவனுடைய அன்புக்குரிய குட்டிப்பூவும் அவனும் மட்டுமே இருந்தார்கள்.அவர்களுக்கிடையே நிலவி வந்த எல்லையற்ற பேரன்பே பெரும் வெறுப்பாக மாறியதன் விளைவு, அவனே ஓர் ஆட்டை உருவாக்கி பூவை விழுங்கச் செய்து விடுகிறான். பூவோ தன் பங்குக்குத் தன்னைச் சுற்றி விஷ முள்களை வளர்த்திருக்கிறது. தான் நேசித்த பூவையே கொன்று விட்டோமே என்ற கழிவிரக்கம்,மனதில் ஊறிய வெறுப்பின் விஷம் தலைக்கேறிய நிலையில் விழுந்து கிடக்கிறான்.

அந்துவான் விண்கலமாக மாறி இளவரசனுடன் பறக்கிறார். கோ கோளின் ராஜாவான கோரா அதிகாரக்கோமாளியாகக் கூத்தடித்துக் கொண்டிருக்கும் கொடுமையைக் கண்டு, “ அதிகாரம் கோமாளித்தனத்தின் உச்சம்என்று அவனைத் துச்சமாக அலட்சியப்படுத்திப் பறக்கிறான் குட்டி இளவரசன். ஒரு காலத்தில் தண்ணீர்,காற்று,மலை,கடல் ஆறு,ஏரி,மீன்கள் பறவைகள், உயிரினங்கள் எல்லாமும் இருந்த ஒரு கோளில் இன்று எதுவும் இல்லை. சுவாசிக்கக் காற்றும் இல்லாதவாறு அங்கே மனிதர்களின் நுகர்வுப் பேராசையின் கோர விளைவுகள் அரங்கேறியுள்ளன.மீண்டும் அங்கே எல்லாவற்றையும் உயிர்ப்பித்துத் தந்துவிட்டு தன் பயணத்தைத் தொடர்கிறான். தற்பெருமைத் தவளைகளின் கோள், அடிமைகளின் சங்கிலிகளால் அதிர்ந்து கொண்டிருக்கும் கோள், எண்கோணக்கோள் என அடுத்தடுத்துப் போகும் கோள்களில் மனிதர்கள் தங்களைத் தாங்களே அலைபேசிகளின் திரையுடன் பிணைத்துக்கொண்டு செயலிகளின் கட்டளைகளுக்கேற்ப அடிமை வாழ்வை நடத்தும் கொடுமைகளைக் காண்கிறான். வாழ்க வாழ்க கோளில் கட் அவுட்டுகளில் வாழும் கதானாயகர்களுக்குப் பாலபிஷேகம் செய்து கொண்டு வாழும் மனிதர்களைக் கான்கிறான்., குப்பை மலைகளின் நடுவே பெரும்பான்மை மக்களை வாழச் செய்துவிட்டு உயர்ந்தவர்கள்என அதிகாரம் செய்து கொண்டிருக்கும் மிபூ கோளின் நிலை கண்டு கொதித்துப்போய் அந்தக்கோளையே பால்வெளியில் இருந்த தடம் தெரியாமல் அழித்து விட்டுப்போகிறான் குட்டி இளவரசன்.

 திரும்பும் வழியில், பி-867 கோளில், குட்டி இளவரசியைச் சந்தித்து ,அவள் இழந்துவிட்ட புஸ்ஸி பூனையை வரைந்து மீட்டுத்தந்த குட்டி இளவரசன், அவளுடன் உரையாடுகிறான். “ அன்பு,வற்றாமல் ஓடும் ஜீவனதிஇரு கரை தொட்டு எல்லா உயிர்களும் செழிக்க உயிர் தரும் அற்புதம்.அது நமக்கானது மட்டுமல்லஅழிவற்றது அது. பூத்துக்கொண்டேயிருக்கும் பூவைப்போன்றது. அன்பு நிபந்தனைகளற்றது…” என குட்டி இளவரசி தெளிவுபடுத்துகிறாள்.

அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் அனுபவங்களிலிருந்தே ஒளி கிடைக்கும். அடுத்தவர் ஒளியில் நாம் நடக்க முடியாதுஎன்ற அந்த இளவரசியின் வார்த்தைகளோடு குட்டி இளவரசன்,தன் கோளான பி-612 இல் வந்து இறங்குகிறான்.ஆட்டின் வயிற்றுக்குள் சிறைப்பட்டிருந்த தன் குட்டிப்பூவை விடுவிக்கிறான்.” ஆத்திரத்தில் அறிவிழந்து விட்டேன்இனி நீயில்லாமல் என்னால் ஒரு கனமும் தனியே இருக்க முடியாதுஎன்று பூவிடம் மன்னிப்புக் கோருகிறான். பூவின் முகம் மெல்ல மலரத் தொடங்குகிறது. அதன் நறுமணம் கோள் முழுவதும் பரவி, அதில் அன்பின் அமுதம் வழிந்தோடியது. அதன் தேன்சுவையில் கோள் மட்டுமன்றி பால் வெளியே நனைந்தது.


புலிக்குகை மர்மம்ஒரு சுவாரசியமான துப்பறியும் கதை போன்ற ஜாலியான கதை.வானம் பதிப்பக வெளியீடு இது.அட்டைப்படம் ஆவலைத்தூண்டும். ஓவியர்.பிள்ளையின் கைவண்ணத்தை உள்ளோவியங்களிலும் காண்கிறோம். கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிக்காகப் புலிக்குகை மைதானத்துக்குப் போகிறார்கள், பாலுவும் அவனுடைய குழுவினரும். சொர்ணமலையின் அடிவாரத்தில், மேற்குத்திசையைப் பார்த்து,பிரம்மாண்டமாக வாயைத் திறந்து ஒரு புலி உறுமுவதைப் போன்ற தோற்றம் தரும் குகை அது. அங்கே சில அயல் மனிதர்களின் நிழலான நடமாட்டம் பாலுவின் கவனத்தைக் கவர்கிறது. புலிக்குகைக்குள் போகவும் வரவுமாக அவர்கள் அங்கே தென்படும் காட்சிகள்,அவன் கவனத்தில் பதிந்தாலும், கிரிக்கெட் மேட்சின் மும்முரத்தில் அந்தக் குழு ஈடுபட்டிருக்கிறது. மேட்ச் முடியும் நேரத்தில், மாதாங்கோயில் டீமில் நாகுவின் தம்பி மாரியைக் காணோம். இதை மிகத்தாமதமாகவே உணர்கிறார்கள் பாலுவும்,குழுவினரும். பிறகு ? தேடல் தொடங்குகிறது. கேப்டன் பாலுவும்,குழுவும் நிகழ்த்தும் வீரசாகசங்களால், மாரி கிடைப்பதோடு, செண்பகவல்லியம்மன் கோயிலின் மண்டபத்துக் கல்பலகைக்குக் கீழே இருக்கும் புதையலை எடுக்க சதிவேலை செய்யும் சமூகவிரோதிகளும் பிடிபடுகிறார்கள். ஒரே நாளில், இந்தக்குழு புகழ் பெற்று விடுகிறது.


கையடக்கமான வடிவில், அழகான அட்டை,உள்ளோவியங்களுடன் வானம் பதிப்பகம் வெளியிட்டுள்ள  ஆதனின் பொம்மைமற்றோர் இளையோர் நாவல். கேப்டன் பாலு,தன் மாமா வீட்டுக்கு விடுமுறையில் போகிறான். கீழடி என்ற அந்த குக்கிராமம், வைகைக்கரையில் இருக்கிறது. அங்கே கிடைக்கும் சுடுமண் ஓட்டில் வரையப்பட்டிருக்கும் பொம்மை, மூவாயிரம் வருடங்களுக்கு முந்தைய ஆதனின் பொம்மையாக இருக்கறது . ஆதன், பாலுவைச் சந்தித்து தங்கள் பூர்வகுடி வரலாற்றைச் சொல்கிறான். சிந்துவெளியில் தொடங்கும் அந்தக் கதை,இங்கே கீழடி மண்ணில் புதையுண்ட ஓடுகளில்,பொம்மைகளில் மீண்டும் உயிர்த்தெழுகிறது ! வரலாற்றையும், புனைவையும் சமகால இளையோரின் விருப்பு வெறுப்புகளையும் கீழடி மண்ணோடு குழைத்துத் தந்திருக்கிறார் உதயசங்கர்.

ஆதி மதுரையம்பதி நகரில், வற்றாத வைகை நதி ஓடிக்கொண்டிருந்த காலம்இன்றைய பாலுவின் மூதாதையருள் ஒருவனான ஆதன், தங்கை வெண்ணிலையுடன் ஓடி விளையாடிய தெருக்களில் மீண்டும் ஒரு பயணத்தை னிகழ்த்துகிறான் கேப்டன் பாலு. கால ஊஞ்சலில் ஆதனும், பாலுவும் ஆடும் ஆட்டம், கடந்த கால வரலாற்றின் ஒளி மிகுந்த பக்கங் களையும், அதோடு அதிகார மையங்களின் போட்டிகளால் சிதைந்த சிந்து வெளியின் வண்ணமிகு வரலாற்றையும் நம் கண்களின் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது.இந்த நாவலில், மதுமிதா என்ற பெண், பாலுவின் மாமா மகள். இன்றைய சமகாலப்பெண்களின் முன்மாதிரியாகத் திகழக்கூடிய ஓர் ஆளுமை மிக்க கதாபாத்திரம்.


பாரதி புத்தகாலயம் சமீப காலமாக குழந்தைகளுக்கென நிறைய நூல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. புக்ஸ் ஃபார் சில்ட்ரென் சார்பில் பாரதி வெளியிட்டுள்ள ‘அலாவுதீனின் சாகசங்கள்மற்றொரு புனைவு. ஓவியர் வாசனின் அழகான அட்டையும்,உள்ளோவியங்களும் கதையின் சுவாரசியத்தை அதிகரிக்கின்றன. அற்புத விளக்கினுள் அடைபட்டிருந்த ஜீனி பூதத்தை விடுதலை செய்த முந்தைய அலாவுதீனைத் தேடி, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தமிழ்னாட்டின் தெற்குப்பகுதியில், ஊத்துமலைக்குப் பக்கம் கான்சாபுரம் வந்து சேர்கிறதுஅந்த பூதம். இன்றைய அலாவுதீன்,அந்த ஊரின் ஏழை டெய்லர் மகன்.ஜீனி பூதம்,அலாவுதீன், மாய மோதிரம் மூவரும் இணைந்த கூட்டணி சாகசப் பயணங்களை நிகழ்த்துகிறது. மணல்கோட்டையினுள் அடைபட்டுக்கிடக்கும் குழந்தைகளை விடுவிக்கிறது. கடவுளின் பெயரால் மூவாயிரம் ஆண்டுகளாகச் சண்டையிட்டுக்கொண்டி ருக்கும் திசா நாட்டின் அவலத்துக்குக் காரணமான நெட்டை முனிகளை விரட்டியடிக்கிறார்கள். விசித்திரக்குள்ளர்களையும்,குள்ளிகளையும் ஏமாற்றி அவர்களை மோதவிடும் சூனியக்கார மந்திரவாதிகளை வெல்கின்றனர். அழகுபுரம் நாட்டின் அழகுராஜா உலகெங்குமிருந்து அழகுக்கலை னிபுணர்களைக் கொண்டு தன்னை அழகுபடுத்துவதையே முழுனேர வேலையாகச் செய்து கொண்டிருக்கிறார்.’ஆரோக்கியமே அழகுஎன்பதை அந்த நாட்டு மக்களுக்கு உணர்த்தும் அதே வேளையில் அலாவுதீன்ஜீனி குழு, திருந்த மறுக்கும் அழகுராஜாவை வாலில்லாக் குரங்காக்கி விடுகிறது ! குழந்தைகள்,பெண்கள்,ஆண்கள் யாரும் யாரையும் பரஸ்பரம் சந்திக்க விடாமல் பெரும் சுவர்களால் பிரித்து வைத்திருக்கும் உத்தர் நாட்டு ராஜாவால் ஏற்படும் தீமைகளை எதிர்த்துப் போராடி வெற்றி காணும் அலாவுதீனும்,ஜீனியும் சமகாலத்தில் கொரானா வைரசை ஒழிக்கப் போராடுவதுடன் இந்த நாவல் நிறைவடைகிறது.


 தமிழ்னாடு அறிவியல் இயக்கம் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து அறிவியல் நூல்களை தமிழில் ’அறிவியல் வெளியீடு’கள் மூலம் வெளியிட்டு குழந்தைகளுக்கும்,இளைய வாசகர்களுக்கும் சேவை செய்து வருகிறது. இப்போது இளையோருக்கான புனைவு இலக்கியத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.  பொம்மைகளின் நகரம் நாவல் அந்த வகையில் ஒரு புது வரவு.சசி மாரீசின் ஓவியங்கள் வித்தியாசமானவை.  . பழங்கோட்டை என்ற ஊரின் எல்லைக்கப்பால், வெகுதூரத்தில் இருக்கும் கனவுக்காடு அந்த ஊர் மக்களின் கனவுகளில் மட்டுமே வருகிறது. அந்தக்கனவு காண்பவர்களை அதன்பிறகு ஊருக்குள் பார்க்கவும் முடிவதில்லை. அவர்களை எங்கே காண்பது ? தன் அப்பா பாண்டியனை அதே போல் கனவுக்குப்பின் பார்க்க முடியாமல் தவிக்கும் தமிழ்ச்செல்வன், கனவுக்காட்டுக்குள் எப்படியேனும் நுழைந்தே தீருவது என முடிவு செய்கிறான். அவனும்,அவனுடைய பிரியத்துக்குரிய நண்பர்களான சியான் வெள்ளெலி, கருப்பன் எறும்பு, தேன் சிட்டுகளின் ராஜாவான தேசி ஆகியோருடன் புறப்பட்டுப்போகிறான்.

யாரும் நுழையாக் காட்டைச் சூழ்ந்து நீரும், நெருப்பும், மணலும்,வானமும், காற்றும் காவலிருந்தன. அவற்றைத்தாண்டி காட்டுக்குள் நுழைய சியான் வெள்ளெலி தன் எலிப்படையையே திரட்டி வந்து உதவுகிறது.இப்படியே அடுத்தடுத்து எதிர்ப்படும் அண்டரண்டப்பட்சி,ஆமைச்சிங்கம்,கழுகுராஜா போன்ற தடைகளை வென்று பொம்மைகளின் நகருக்குள் நுழைந்து விடுகிறார்கள் தமிழ்ச்செல்வனின் குழுவினர். பொம்மைராஜாவும்,அவனுடைய படைகளும் அழிந்ததுமே பொம்மைகளாக்கப்பட்டிருந்த மனிதர்கள், தமிழ்ச்செல்வனின் அப்பா பாண்டியன் உள்பட அவ்வளவு பேரும் விடுதலையடைந்து விடுகிறார்கள். வீட்டுக்குப் போகும் தமிழ்ச் செல்வனையும்,குழுவையும் கண்டதும், “ எங்கேடா போய்ட்டு வர்றே, இவ்வளவு நேரமா ?” என்று கேட்கிறார் பாண்டியன். “சும்மா…” என்று சிரிக்கிறான் தமிழ்ச்செல்வன். சியானும், கருப்பனும், தேசிராஜாவும் சேர்ந்து சிரிக்கிறார்கள்.பாண்டியனும்தான் !

ஆக, குட்டி இளவரசர்களின் கைகளில் ஆதனின் பொம்மைகள் இப்போது வந்து சேர்கிற காலம் ! இந்த நாள்களில் மனிதர்களின் பேராசையால் உலகமே அங்காடிக்கோள் ஆக்கப்பட்டிருக்கின்ற சூழல். ஆளும் அழகு ராஜாக்களின் கோட்டுகளும் சூட்டுகளும் இலட்சக்கணக்கில் விலையாகின் றன.கொரானா வைரசால் கொத்துக்கொத்தாக மனிதர்கள் சாகும் சூழலில், புதிய பாராளுமன்றக்கட்டடங்களும், ராஜமாளிகைகளும் கட்டும் பணிகளே முன்னுரிமை பெறுகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்தும், உலகமய வணிகச் சதிகள் சார்ந்தும், சாதி-மத மோதல்களை உருவாக்கி மனிதர்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மோதவிட்டு இரத்தம் குடிக்கும் அதிகார வெறியர்கள் குறித்தும் குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. காரணம், நாளைய சமுதாயம் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்காக எதை மீதம் வைத்திருக்கிறது என்ற கேள்வியை உரத்துக்கூவ வேண்டியவர்களாக அவர்கள் உள்ளனர். மாபெரும் எழுத்தாளர்களும், புகழ் பெற்ற பத்திரிகையாளர்களும் கூட, இன்றைக்கு நடக்கும் மேற்கண்ட அக்கிரமங்கள் குறித்து வாய்திறவாமல் கள்ளமவுனம் சாதிக்கும் சூழல். அதைவிட மோசம், இந்த மனிதவிரோதச்செயல்களை தமது சுயலாபங்களுக்காக ஆதரித்துப் பேசவும்,எழுதவும் அவர்கள் தயாராகி வரும் நிலை.இவற்றையெல்லாம் குழந்தைகளும்,இளையோரும் புரிந்து கொள்ள இந்த ஐந்து நாவல்களுமே பெரிதும் பயன்படக்கூடியவையாக உள்ளன. எதையும் வெளிப்படையாகப் பேசாமல்,புனைவின் மொழியில் தந்திருக்கிறார் உதயசங்கர் ! இவற்றை நல்ல முறையில் வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலயம், வானம் பதிப்பகம்,அறிவியல் வெளியீடுகள் ஆகிய வெளியீட்டாளர்களுக்கு வாழ்த்துகளும்,பாராட்டுகளும்.               

 நன்றி புத்தகம் பேசுது ஜூன் 2021