Wednesday, 18 March 2020

அம்மா எங்கே?


அம்மா எங்கே?

உதயசங்கர்

வயநாட்டிலுள்ள அம்புகுத்தி மலையடிவாரம் அடர்ந்த காட்டின் நடுவில் ஒரு புல்வெளியில் வேங்கை மரத்தின்கீழ் ஒரு குட்டியானை துள்ளிக்குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. குட்டியானை அப்பு பிறந்ததிலிருந்தே சுட்டி தான். ஒரு இடத்தில் நிற்காது. அங்கேயும் இங்கேயும் துள்ளிக்குதிக்கும். அம்மாவின் கால்களில் போய் முட்டும். ஒரு செடியிடம் போய் சண்டை போடும். தும்பிக்கையால் பூவைப்பறித்துக்கொண்டு ஓடும். கோரம்புல்லைப் பிடுங்கி வாய்க்குள் திணிக்கும். அவை நாக்கை அறுத்தவுடன் அப்படியே துப்பி விடும். மேலே பறக்கும் காகத்தைப் பார்த்துப் பிளிறும்.
“ வா வா என்கூட விளையாட வா “ என்று தும்பிக்கையை அலைத்துக் கூப்பிடும். மரத்தில் புள்ளிக்குயில் கூவினால் அதற்குப் போட்டியாக அப்புவும் குட்டிக்குரலால் கத்தும். அம்மா அப்பு செய்கிற குறும்புகளைப் பார்த்து ரசித்துக் கொண்டே நிற்கும். கூட்டத்தை விட்டு குட்டியானை தூரமாய் போய் விட்டால் அம்மா பெருங்குரலில் பிளிறும். உடனே அப்பு ஓடி வந்து கூட்டத்துடன் சேர்ந்து கொள்ளும்.
கூட்டத்திலிருந்த மற்ற யானைகளும் அப்புவைப் பார்த்துப் பெருமைப்படுவார்கள். அவர்களிடமும் குறும்புகள் செய்யும் அப்பு. எல்லோரும் அவரவர் வேலையைப் பார்த்தாலும் அவ்வப்போது ஹாங்.. என்று சிறுகுரல் கொடுத்து அப்பு இருப்பதை உறுதி செய்து கொள்வார்கள். ஏதாவது ஆபத்தான காரியங்களை அப்பு செய்தால் அம்மா கடுமையாக அதட்டும். அந்தக் குரலைக் கேட்டதும் அப்பு நல்லபிள்ளை மாதிரி அம்மாவிடம் வந்து ஒட்டிக்கொள்ளும். தும்பிக்கையால் அம்மாவின் தும்பிக்கையைத் தடவிக்கொடுத்து சமாதானப்படுத்தும். அம்மா நடக்கும்போது அதன் கால்களை ஒட்டியே உரசிக்கொண்டே நடப்பதில் அப்புவுக்கு அவ்வளவு ஆனந்தம்.
திடீரென அப்படியே நின்று அம்மாவைப் பார்க்கும். அம்மா எவ்வளவு அழகு.
“ என் அம்மா! என் அம்மா!” என்று குதூகலிக்கும். ஆனால் அப்புவால் பசி பொறுக்க முடியாது. ஓடி வந்து அம்மாவின் மடியில் முட்டி பால் குடிக்கும். வயிறு நிறைந்தவுடன் கடைவாயில் பால் ஒழுக அம்மாவைப் பார்த்து மகிழ்ச்சியாகக் குரல் கொடுக்கும். மற்ற நேரங்களில் அம்மா சாப்பிடுகிற இலை தழைகளை வாயில் சவைத்துத் துப்பிக்கொண்டிருக்கும். ஒரு வெட்டுக்கிளியையோ, வண்ணத்துப்பூச்சியையோ, பூணில் குருவியையோ, கொண்டலாத்தியையோ, விரட்டிக் கொண்டு திரியும்.
இன்று இரவு அவர்களுடைய கூட்டம் வலசை போகவேண்டும். வயநாட்டிலிருந்து சத்தியமங்கலம் காட்டுப்பகுதிக்கு போய்ச்சேரவேண்டும். இப்போது கிளம்பினால் ஒரு மாதத்திற்குள் அந்தக் காட்டை அடைந்து விடலாம். அப்புவை அம்மா கவனித்துக் கொண்டேயிருந்தது. பாதையெல்லாம் பழக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வருடங்களாக அவர்களின் முன்னோர்கள் போய் வந்த பாதை. எல்லோரின் ஞாபகத்திலும் அந்தப் பாதை அப்படியே மனப்பாடமாய் இருந்தது. அன்று அவர்கள் நட்சத்திரங்களின் ஒளியில் புறப்பட்டார்கள்.
ஒரு வாரம் நடந்திருப்பார்கள். திடீரென வழி முட்டி நின்றது. அங்கே ஐந்து மாடிக்கட்டடம் ஒன்று முளைத்திருந்தது. அதை விட்டு விலகி வெகுதூரம் சுற்றி நடந்தார்கள். மறுபடியும் ஒரு இடத்தில் வழி முட்டியது. அந்த இடத்தில் வேலி போட்டு அடைத்திருந்தார்கள். கரும்பு, வாழை பயிரிட்டிருந்தார்கள். கரும்பின் வாசனையால் வேலியின் அருகில்போன ஒரு யானை தும்பிக்கையால் தொட்டதும் விர்ரென மின் அதிர்ச்சி ஏற்பட்டது. அப்படியே துள்ளி ஓடி விட்டது. மற்ற யானைகளையும் எச்சரித்தது. அப்பு எல்லாவற்றையும் பார்த்து மிரண்டு போயிருந்தது. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
மறுபடியும் பழைய பாதையைத் தேடி யானைக்கூட்டம் நடந்தது அப்போது தூரத்தில் நெருப்பு வெளிச்சம் தெரிந்தது. பெரிய நெருப்பும் அதிலிருந்து டம்டமார் என்று ஓசைகளும் கேட்டன. நெருப்பைச் சுற்றிலும் மனிதர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள். யானைகளுக்கு ஒன்றும் புரியவில்லை. பாதை மாறி வந்து விட்டோமோ என்று ஒன்றுக்கொன்று முணுமுணுத்தன. அப்பு இதுவரை நெருப்பைப் பார்த்ததில்லை. முதல்முறையாக அதைப் பார்த்ததும் பயந்து நடுங்கியது. அம்மாவின் பின்னாலேயே அண்டிக் கொண்டு நடந்தது.
” டமார் “ என்று வேட்டுச்சத்தம் கேட்டது. அத்துடன் வானத்தில் நெருப்பின் வெளிச்சம் தெரிந்தது. அப்புவின் மூளை குழம்பி விட்டது. என்ன நினைத்ததோ திரும்பி காட்டுக்குள் ஓட ஆரம்பித்தது. இருட்டில் முட்டி மோதி ஓடியது. அம்மாவின் பிளிறல் சத்தம் கேட்டது. ஆனால் அப்பு நிற்கவில்லை. ஓட ஓட அம்மாவின் சத்தம் கேட்கவேயில்லை.  ஒரு பெரிய பள்ளத்தில் தடுமாறி விழுந்தபோது தான் அதன் ஓட்டம் நின்றது.
கும்மிருட்டு. பூச்சிகளின் ரீங்காரம் மட்டுமே கேட்டது. இரவாடிகளான ஆந்தைகளின் குரல் விட்டு விட்டு கேட்டது. புலியின் உறுமலும் நரிகளின் ஊளைச்சத்தமும் மான்களின் செருமலும், காட்டெருமைகளின் பொருமலும் கேட்டது. அப்பு மெல்ல எழுந்து பள்ளத்திலிருந்து எழுந்தது. ஒரே இருட்டு. வழி தெரியவில்லை. அம்மாவைத் தேடிப் பிளிறியது.
” ஹாங்ஹாங்..அம்மா அம்மா எனக்குப் பயமாருக்கு அம்மா “
அம்மாவைக் காணவில்லை. அம்மாவின் செல்லமான அதட்டலும் கேட்கவில்லை. வயிறு பசித்தது. எப்படிப் பாதை மாறியது? அம்மா தேடிக்கொண்டிருப்பாளே. எங்கெல்லாம் அலைகிறாளோ. அப்பா அண்ணன், அக்கா எல்லோரும் தேடுவார்களே. என்ன நடந்தாலும் அம்மா கூடவே இருந்திருக்க வேண்டும். வலசை போகாமல் அலைவார்களே என்று வருந்தியது. அம்மாவை விட்டு ஓடி வந்திருக்கக்கூடாது என்று அப்பு நினைத்தது.
“ அம்மா.. அம்மா.. நீ எங்கேருக்கே?..ஹூங் ஹூங் அம்மா அம்மா ”
என்று அழுது கொண்டே தட்டுத்தடுமாறி திசை தெரியாமல் நடந்து போய்க்கொண்டிருந்தது. அதன் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
அம்மா அம்மா அம்மா நீ எங்கே?
அன்று இரவு முழுவதும் அலைந்தது அப்பு
இப்போதும் அம்மாவைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறது.
அம்மா அம்மா அம்மா நீ எங்கேருக்கே?
அப்புவின் குரல் உங்களுக்கு கேட்கிறதா?
அப்புவை அதன் அம்மாவிடம் சேர்த்து விடுங்கள்.
நன்றி - மாயாபஜார்

Tuesday, 17 March 2020

கொண்டாட்டத்தின் முதல் ஆளாக...


Sunday, 1 March 2020

கொண்டாட்டத்தின் முதல் ஆளாக...

வண்ணதாசன்













சுகா என்றால்  தான் எல்லோருக்கும் தெரியுமே. அவருடைய முன்னெடுப்பில் ஒரு கூட்டம். திருநெல்வேலி வட்டாரச் சொற்களைச் சேகரிப்பது குறித்து ஒரு பத்துப் பேர் பூர்வாங்கமாக உட்கார்ந்து பேசினோம். உதய சங்கர் எனது இடது பக்கத்து நாற்காலியில் இருந்தார்.

உதய சங்கரின் எழுத்துகளை எனக்குப் பிடிக்கும். என்னைப் பொருத்தவரை, த.மு.எ.க.ச அமைப்பின் இப்போதைய மிக நல்ல புனை கதை எழுத்தாளர் அடையாளம் அவர்தான்.  வழக்கமாக ‘இப்போ என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க சங்கர்? என்று கேட்பேன். வாசலில் ஏறி அறைக்குள் வருவதற்கு நடையேறும் வரை புகைத்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும். அவரிடம் இருந்த சிகரெட் வாடை பிடித்திருந்தது.  அந்தக் கிறக்கத்தில் இருந்ததால் பேச்சுக் கொடுக்கவில்லை. அவரும் சும்மா இல்லை. ஒரு சீப்பை எடுத்து பஸ் பயணத்தில் கலைந்திருந்த சிகையை ஒழுங்கு படுத்திக்கொண்டு இருந்தார். சீராகப் படிந்திருக்கிறதா எல்லோரும் விரல்களால் நீவிப் பார்த்துக் கொள்வோம் தானே.

அது முடிந்ததும் , மடியில் வைத்திருந்த  - இல்லை, அது நாற்காலிக் கால் பக்கம் தரையில் இருந்தது -- தோள்ப் பையிலிருந்து  அவருடைய சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான  ‘துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர்’  புத்தகப் பிரதி ஒன்றை எடுத்து சுகாவிடம் கொடுத்தார். இன்னொன்று நாறும் பூ நாதனுக்கு என நினைக்கிறேன்.  மூன்றாவது பிரதியை என்னிடம் கொடுத்தார். மூன்றுதான் கொண்டுவந்ததாகச் சொன்னார்.  அதைத் தவிர இன்னொரு மிக அழகான புத்தகத்தைக் காட்டினார். கே.கணேஷ்ராம்  மொழிபெயர்த்திருக்கும்  ’காஃப்காவின் நுண்மொழிகள்’.  அதுவும் நூல் வனம் வெளியீடுதான். இவ்வளவு அழகான வடிவமைப்பில், கட்டுமானத்தில் பதிப்பிக்கப்பட்டிருக்கும் ஒரு தமிழ்ப்  புத்தகத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. சொல்லப் போனால், திருப்பிக் கொடுக்கவே மனசில்லை/.

‘எல்லாம் இப்போ எழுதினதா சங்கர்?’ என்று கேட்டேன். ‘ஆமா, அண்ணாச்சி. இது போக அஞ்சாறு இன்னம்  இருக்கு. அதை எல்லாம் திருத்தி எழுதணும்’ என்றார். ஏற்கனவே  பத்திரிக்கைகளில் வெளிவந்தது, இன்னும் வராதது எல்லாம் நிரந்து இருக்கிற தொகுப்பு என்று தெரிந்தது. நான் சங்கரிடம் சொன்னேன், ‘நானும் ஒரு ஒண்ணரை வருஷமா கதைண்ணு எதுவும் எழுதவே இல்லை. ஒருவேளை  இதிலே இருக்கிற உங்க கதையை எல்லாம் படிச்சால் ஏதாவது தோணுமே என்னமோ/’ என்றேன். உண்மையாகவே, அப்படி ஏதாவது ஒருத்தருடைய ஒரு கதை, அதிலிருக்கிற ஒரு வரி வந்து கதவைத் திறந்துவிட்டுவிடாதா என்று எனக்கு ஆசைதான்.

ஷோபா சக்தியின்  ’இச்சா’  வாசிப்பில் இருந்தது. 203, 204 பக்கங்கள் வந்திருந்தேன். வீட்டுக்கு வந்ததும் உதய சங்கர் தொகுப்பை வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். அவர் என்னை மாதிரி ஆள் இல்லை. இரட்டைக் கோடு போட்ட நோட்டில் எழுதமாட்டார்,  கோடு போட்டது போடாதது எல்லாவற்றிலும் எழுதுகிறவர். புதிது புதிதாகச் சோதனை பண்ணிக் கொண்டே இருப்பார். ‘துண்டிக்கப்பட்ட தலையில் தொகுப்பிலும் முதல் ஐந்து கதைகள் அப்படித்தான் இருந்தன.கொஞ்சம் திகட்டி விடுமோ என்று கூட. அப்படி எல்லாம் இல்லை என்று,   ஆறாவதாக ’அப்பாவின் கைத்தடி’   என்று ஒரு கதை வருகிறது.  அதன் கடைசி நான்கைந்து வரிகளையும், ’அப்படியே உறங்கிவிட்டாள் ஈசுவரி அக்கா’ என்று முடிகிற   வரியையும்  படித்த பிறகு  எப்படியோ ஆகிவிட்டது. அந்தக் காலம் என்றால், பஸ் பிடித்து உதய சங்கரைப் பார்க்கக் கோவில் பட்டி கூடப் போயிருப்பேன்.

அடுத்து வந்த ’கானல்’, ‘நொண்டிநகரம்’, ‘மரப்பாச்சிகளின் நிலவறை, கிருஷ்ணனின் அம்மா’  எல்லாம் ஒன்றை விட ஒன்று கூடுதலாகப் போய்க் கொண்டே போய் இன்னொரு உச்சமாக  ‘அன்னக்கொடி’.   கதை ஒருமாதிரி இப்படித்தான் முடியும் என்று தெரிகிறது, ஆனால் அந்த ‘இப்படித்தான் முடியும்’முக்கு முன்னால் அது எழுதப்பட்டிருக்கும் விதம்?.  கருப்பையாவின் வனத்தோடு  நேற்றிரவு வாசிப்பை முடித்துக்கொண்டேன்.

இன்றைக்கு ‘முதல் ஜோலியாக’ மீதி யிருந்த எட்டுக் கதைகளையும் வாசிக்க ஆரம்பித்தாயிற்று. பதிநான்காவது கதையான  ’அறை எண் 24 -மாயா மேன்சன்’  படித்ததும் மீண்டும் அந்த ‘அப்பாவின் கைத்தடி’   இடத்திற்கு மனம் போய்விட்டது. யாரிடமாவது இதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று தோன்றி, நாறும் பூ நாதனுக்கு, உதய சங்கருக்கு, கடலூர் சுவாமி நாதனுக்கு எல்லாம் வாட்ஸாப்பில் கிறுக்குப் பிடித்த மாதிரி எதையோ அனுப்புகிறேன். மேலே இருக்கிற படம் கூட, மாயா மேன்ஷன் படித்தவுடன்  நானே என்னை எடுத்துக்கொண்டது தான். அதில் என் கண்கள் கொஞ்சம் மினுங்குவது மாதிரி இருக்கின்றன என்றால் அந்த மினுக்கத்தின் மாயம் உதயசங்கர்  கதைகள் உண்டாக்கியது.

எல்லோரும் தான் புத்தர் கதை எழுதிப்பார்க்கிறார்கள்.  ‘முதல் காட்சி’  அப்படி ஒரு கபிலவஸ்து, கௌதமன், யசோதா  கதையே. அது எழுதப்பட்டிருக்கும் விதம் ,தடாகம் பற்றி வரும் அந்த நீண்ட பத்தி,தேரோட்டி சன்னா  திறந்து வைக்கிற அந்த முதல் காட்சி.!  ஒரே மாதத்தில் இருபது கதைகள் எழுதினதாக உதயசங்கர் என்னிடம் நேற்றுச் சொன்னார். அதற்கு ‘ நீங்களும் அப்படி எழுதுவீங்க அண்ணாச்சி’ என்று  உற்சாகப்படுத்துகிற அர்த்தம்.  சாமி வந்து தான் வரிசையாக இப்படி எழுதியிருக்க வேண்டும்.

 ’புற்று’, ’’துண்டிக்கப்பட்ட தலையில் சூடியரோஜா மலர்’  ஒரு வகைச் சோதனை எனில், ’அந்தர அறை’, ‘நீலிச் சுனை’  இன்னொரு வகைச் சோதனை. எதுவும் வெற்றுச் சோதனை இல்லை. ஒன்றுமே இல்லாத நடைத் திருகலை வைத்து அந்தரத்தில் நடத்தும் பாவலா கிடையாது.  எல்லாம்  தரையோடு தரையாக, மனிதரோடு மனிதராக, வாழ்வோடு வாழ்வாக, அதனதன் அசலோடும்  புதிரோடும்  புனையப்பட்டவை. இந்த வாழ்வை விடச் சோதனை இருக்கிறதா என்ன?

’துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர்’  என்ற இந்த சிறுகதைத் தொகுப்புக்காக. , உதய சங்கர்  என்ற  கலைஞன்  கொண்டாடப்பட  வேண்டியவன்.  நான் அந்தக் கொண்டாட்டத்தை முதல் ஆளாகத் துவங்கி வைக்கிறேன்.

சொல்ல முடியாது, இதே கையோடு நான் மறுபடியும் கதை எழுத மாட்டேனா என்ன?

Sunday, 15 March 2020

உருப்படியில்லாத ராஜாக்களின் கதைகள்


உருப்படியில்லாத ராஜாக்களின் கதைகள்
அண்டாமழை நூல் மதிப்புரை

நூலினி

உங்க எல்லோருக்கும் புத்தகம் பிடிக்கும் தானே? ‘
இது என்ன கேள்வி? நாங்க தான் துளிர் படிக்கிறோமே! “
துளிர் ஒரு மாத இதழ்.. நான் சொல்றது புத்தகம்..”
..நாங்க கதப் புத்தகம் படிப்போமே! ‘
நல்லது.. கதைப்புத்தகம் மட்டுமில்ல.. அறிவியல், வரலாறு இப்படி நிறைய விஷயங்களைப் பத்தி பல புத்தகங்கள் இருக்கு.. அவற்றையும் நாம் தேடிப் படிக்கணும்.. சரி, படிச்சா மட்டும் போதுமா? படிக்கிற புத்தகம் பத்தி நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கிட்டா இன்னும் நல்லாயிருக்குமில்ல? “
கண்டிப்பா..”
சரி. அப்போ.. புத்தகங்களுக்குள்ள ஒரு பயணம் போய்ட்டு வருவோமா?”
ம் போலாமே! “
இந்த்த்தடவை நான் பயணம் கூட்டிட்டுப் போகப்போறதுஅண்டாமழைங்கிற புத்தகத்துக்குள்ள தான். இதை எழுதியவர் உதயசங்கர். இது ஒரு கதைப்புத்தகம். இதுல எல்லாமே ராஜாக்களப் பத்தின கதைகள் தான்.. ஒவ்வொரு ராஜாவும் ஒவ்வொரு விதம்.. ஆனால் எல்லோருக்குமே என்ன ஒற்றுமைன்னா யாருமே உருப்படியா இல்லை...
ஒரு கதைல வர்ற ராஜா சோம்பேறி.. தூக்க்க்கலக்கத்துல இருக்கும்போது அவர்கிட்ட கோப்புகள்ல கையெழுத்து வாங்கி மோசடி நடக்குது.. காடு அழிக்கப்படுது.
இன்னொரு கதைல ராஜா தொலைக்காட்சில வந்து மக்களுக்கு கிலி ஏற்படுத்துறாரு. நாட்டுக்காக மக்களைத் தியாகம் செய்யச் சொல்றாரு. ஆனால் அவர் மாளிகை மட்டும் ஆடம்பரமாக செல்வச்செழிப்போட இருக்கு.
அப்புறம் ஒரு கதைல வர்ற யாருக்குமே பேர் கிடையாது..கைபேசி மாதிரி எல்லோருக்குமே எண்கள்தான் அடையாளம். ஊரோட எண் 420 ராஜாவோட எண் 421. எண்கள் பதிஞ்ச அடையாள அட்டை இல்லேன்னா அந்த ஊர்ல எதுவுமே நடக்காது. ஒரு நாள் ராஜாவே தன்னோட எண்ணைத் தொலைச்சுட்டு தெருவுல திரியறாரு. இப்படி ஒரு வேடிக்கையான கதை.
வேறோரு கதைல எதுக்கெடுத்தாலும் வரி, திடீர்னு மக்கள்கிட்ட இருக்கிற தங்கம், வெள்ளி, இதெல்லாம் செல்லாதுன்னு ராஜா அறிவிச்சிடுறாரு.. மக்களுக்கு எல்லாம் ஒரே கஷ்டம்.
மற்றொரு கதைல யாரும் உழைக்கக் கூடாது திருடித்தான் பிழைக்கணும்னு ஒரு சட்டம் போட்டுடறாங்க. இத்தனைக்கும் மக்கள் எல்லோரும் நல்லா உழைச்சிக்கிட்டிருந்த ஊரு..அது. என்ன கொடுமைடா இது!
இலவசம் இலவசம் இலவசம்னு ஒரு கதை. அதுல நிறையப் பொருட்களாஇ அரசே மக்களுக்கு இலவசமா கொடுக்குது. ஆனா ஒரு கைல கொடுத்து இன்னொரு கைல பறிக்கிற கதைதான் இது. காத்தாடிய இலவசமா கொடுத்துட்டு அந்த ஊர்ல காத்துக்கு வரி போட்டுடறாங்க.
சிமிழ்,பந்தி,கலுங்கு,தலையாளம், பன்னடம்,உங்காலி,எராத்திஇப்படி பல மொழிகள்ல பேசி ஒத்துமையா வாழ்ந்த ஒரு ஊர்லஇனிமே எல்லோரும் பந்தி மொழில தான் பேசணும்னு ஒரு ராஜா சொல்றாரு.. ஏழு மொழிகள்ல பேசிட்டு இருந்தவங்கள ஒரே மொழி பேச்ச்சொன்னா எப்படி?
இந்தக் கதைகள்ல வர்ற கதாபாத்திரங்களோட பேர்களையெல்லாம் கேட்டா சிரிப்பு சிரிப்பா வரும். இடி ராஜா, தோலிருக்கச் சுளை முழுங்கி ராஜா, பொன்னுக்கு வீங்கி மந்திரி, பக்காத்திருடன், முக்காத்திருடன், அரைக்காத்திருடன், குப்புற ராஜா, கலிராஜா, இப்படியெல்லாம் பேர்கள்!
சரி. இப்படி எல்லாக்கதைலயும் மக்களூக்குப் பிரச்சினைகள்< கஷ்டங்கள்< கொடுக்கிற மாதிரியே இருக்கே. இதுக்கெல்லாம் என்ன தான் தீர்வுன்னு கேக்கறீங்களா? கதைகளோட முடிவுல தீர்வும் சொல்லப்படுது.. ஒரு கதைல கிளி மூலமா தீர்வு. இன்னொரு கதைல வானவில், அப்புறம் உழைப்புதேவதை, இன்னொரு கதைல சிவப்பு, நீலம், கருப்பு நிறங்கள்ல தேவதைகள் வந்து தப்பு செய்றவங்க மேலே பொடிகளைத் தூவி விரட்டி அடிக்கிறாங்க.
பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அதற்குத் தீர்வு காண்பது தான் மனிதர்களுக்கு அழகு.
என்ன உடனே இந்தப் புத்த்கத்த வாங்கி படிக்கணும்னு ஆவலா இருக்கா? புத்தகம் பத்தின விவரங்கள் கீழே இருக்கு. அவசியம் உங்க அம்மா அப்பாகிட்ட சொல்லி வாங்கிப்படிங்க.
அண்டாமழை ( சிறார் கதைகள் )
ஆசிரியர்உதயசங்கர்
வெளியீடுவானம் பதிப்பகம்
சென்னை.
தொடர்புக்கு - 9176549991.
நன்றி - துளிர் நவம்பர் 2019



Wednesday, 4 March 2020

துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர் - மதிப்புரை


துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்

ஜெகநாத் நடராஜன்
சீண்டுவார் யாரும் அற்ற எளிய மனிதர்களின் கதைகள், உதயசங்கரின் கதைகள். அந்த மனிதர்களுக்கு தங்கள் நிலையைப் பற்றிய எவ்வித அசூயையும் இல்லை. யாவரின் உதவியுமில்லாம்ல் தாங்களே தங்கள் வாழ்வினின்று தடம்மாறி விலகிச்செல்ல அவர்கள் எத்தனிக்கிறார்கள். அடுத்தவர் இடைஞ்சலாக இல்லாமலிருந்தாலே அது ஒரு அற்புதம் போல நிகழ்ந்து விடும். இங்கிருந்து அங்கு சென்றால் என்ன இருக்கிறது என்று தெளிவாகத் தெரியாவிட்டாலும் இங்கிருந்து வெளியேறுவது என்பது அவர்களின் பிரயத்தனமாக இருக்கிறது. ஆனால், ஒவ்வொருவருக்கும் இன்னொருவர் இடைகட்டையாக இருக்கிறார்கள்.
அது வாழ்வில் சாதாரணவிஷயம் தான். இயல்பாக நிகழ்வது தான். ஆனால் சில நேரங்களில் தங்களுக்கு தாங்களே இட்டுக்கட்டிக்கொண்ட விசித்திரக்கற்பனைகளும், அது இட்டுச்செல்லும் மீண்டும் திரும்ப முடியாத முனைகளும் அவர்களைச் சிக்கலுக்கு உள்ளாக்குகின்றன. எனினும், இக்கதைகளின் மனிதர்கள் எளிய மனிதர்களாக இருப்பதால் வாழ்விற்கு மிக நெருக்கமானதாக இருக்கிறது. நுட்பமான சித்தரிப்புகளால் ஒரு ரசனைக்குரிய படைப்புகளாக மாறியிருக்கிறது. இத்தகைய ரசனை அந்தக் கதாபாத்திரங்களிலும் இருக்கிறது.
ஏதோ ஒன்றைச் செய்ய விரும்புபவர்களாக, ஏன் என்ற கேள்வியுடையவர்களாக, எதிர்பாராத சந்திப்புகள் தரும் வாழ்வின் திடீர் திருப்பங்களில் அதிர்ச்சியுறுபவர்களாக, சகமனிதர்களின் அன்பை ஆச்சரியத்தோடு பார்க்கும் அற்பத்தனத்தை சில நேரம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
பால்யகாலம், வாலிபக்காலம், வயோதிகக்காலம், என்ற மூன்று நிலைகளில் இக்கதைகள் இருக்கின்றன. நாம் அன்றாடம் பார்த்த மனிதர்களோடு நாமும் உலா வந்து கொண்டே இருக்கிறோம்.
திருநெல்வேலி, கோவில்பட்டி பகுதிகளில் வாழ்கின்ற மனிதர்களின் வாழ்க்கை அவர்களின் பார்வையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அன்பைச் செலுத்த விரும்பும், அனுதாபத்தைப் பெற விரும்பும் மனிதர்கள். காதல், வேலையின்மை, வேலை, குடி, திருமணம், தற்கொலை, மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருத்தல் என்று சஞ்சரிக்கிறார்கள். தங்கள் கடந்த கால வாழ்வைப் பரிகாசித்து சிரிக்கிறார்கள். அதில் நொய்மை இல்லை. எப்படியாகினும் வாழ்வை வாழ்கிறார்கள்.
தன் மனைவி சார்ந்த இன்னொரு மதக்கடவுளோடு பேசும் அம்மாவை ஆச்சரியமாகப் பார்க்கும் மகன்; தன் காதலி தான் காதலிப்பது தெரியாமலேயே இன்னொருவனுக்கு மனைவியாகி, தன் வீட்டுக்கு எதிரே குடிவந்த போது இன்னும் காதலித்து அதுவும் கண்டுகொள்ளப்படாமல் மனநோய்க்கு ஆளாகிற ஒருவன்; பெண்களைத் திருடிக்கொண்டுபோய் ஒற்றை மார்பை அறுக்கும் கூட்டம் பற்றிய கதையை இன்னொரு நாட்டில் கேட்கும் ஒருவன்; குடித்தபின் உலாவும் உலகிற்கும், நிஜ உலகிற்குமிடையே இருக்கும் முரண் என எல்லோர் கதைகளும் சொல்லப்படுகின்றன. எல்லோரும் ஏதோ ஒரு பயம் உந்தித்தள்ள நடமாடுகிறார்கள். எல்லாமனிதர்களுக்குமுள்ள அற்பத்தனத்தைக் கொண்டிருக்கும் சிலர், அதை நேரம் கிடைக்கையில் அள்ளிப்போட்டு வேடிக்கை பார்க்கவும் தவறுவதில்லை.
மதுரைக்கு நேர்முகத்தேர்வுக்கு பேருந்தில் பயணம் செய்யும் ஒருவன், தனக்கு முன்னாலிருந்த பெண்ணைச் சீண்டி அனைவராலும் அடிக்கப்பட்டு பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட கதையைச் சாதாரணமாக எங்கோ ஒரு இடத்தில் சொல்கிறான்.
மரப்பாச்சி பொம்மை மீது ஈர்ப்பு கொண்டு அதே ஈர்ப்பை தன் ஆச்சியின் மீதும் கொண்டு அவளை முகர்ந்து பார்க்கவும், அவளது விரலி மஞ்சள் மணத்தை நுகரவும் தலைப்படும் ஒருவன், ஒரு கட்டத்தில் ஆச்சியை நிர்வாணமாகப் பார்த்து விட அவன் கையில் கிடைக்கும் மரப்பாச்சியெல்லாம் ஆச்சியின் உருவம் போல சேர்ந்து அவனை வதைக்கின்றன. அவன் மணமானபோதும் அந்த மரப்பாச்சிகளை பத்திரமாக வைத்துக்கொள்கிறான். பக்கத்தில் படுக்க வைக்கிறான். அவன் மனைவியிடம் இதெல்லாம் உன்னை ஒன்றும் செய்யாது என்று மன்றாடுகிறான். அவள் சண்டைக்கு வர, அவன் கொடுக்கும் ஒரே அடியில் அவள், அவனிடமிருந்து காணாமல் போகிறாள்.
அப்பாவின் கைத்தடி கதையில் நடக்கமுடியாமல் படுக்கைப்புண் வந்து கிடக்கும் அப்பாவை மீறி ஒருமுறை காதலனோடு ஓட முடிவெடுத்தவள், இருளில் நடக்கும்போது கால்கள் கைத்தடியில் பட்டுவிட, விழிக்கும் அப்பாவின் கைத்தடியால் அடி வாங்குகிறாள். இன்னொரு முறை ஜாக்கிரதையாக வீட்டை விட்டுச் செல்லும்போது கண்டுவிட்ட அவள் சகோதரி அமைதியாக அழுகிறாள். எண்ணற்ற கேள்விகள் அவள் கண்ணீரோடு சுரந்து தலையணையை நனைக்கின்றன.
சில கேள்விகளை வாழ்வின் வெளியினின்றுதான் கேட்கவேண்டும். ஆனால் பதிலே கிடைக்காத கேள்விகள் அவை. உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றி சம்பாதித்த தன் கணவன் இல்லாத குறையைத் தீர்க்கும் குடும்பத்தின் மூத்தமகனுக்கு பெண் பார்க்க ஏன் அவன் அம்மா விரும்பவில்லை என்று அவன் நண்பன் தன்னையே கேட்டுக்கொள்கிறான்.
படிப்பே வராத தன் பள்ளித்தோழன் மிகப் பெரிய பணக்காரனானதும் படித்தவன் பரிகாசிக்கப்படுகிறான். ‘ பாரு உங்கூடப் படித்தவன் எப்படி இருக்கான்னு.’ என்று அவன் காதருகே கேட்கும் குரல்கள் வாழ்வின் ஒழுங்கு என்று கட்டப்பட்டு வந்திருப்பதை சீட்டுக்கட்டு போல கலைத்துப் போடுகின்றது.
கிராக்கி தேடி அலையும் பாலியல் தொழிலாளி, லாட்ஜ் ஒன்றில் பார்க்கும் அம்மை கண்ட ஒருவனை தன் வீட்டுக்கு அழைத்து வந்து பணிவிடை செய்து கணவனாக அவனைக் கனவு கண்டு தோற்கிறாள். மலம் அள்ளி, மூத்திரம் பிடித்து ஊற்றி, அவனோடு புதிதாய் கல்யாணம் செய்து கொண்டவள் போல பேசிப்பேசி முதன்முறையாக உறவு கொள்பவள் போல் வெட்கி நாணி வாழும் வாழ்வின் முடிவில் அவனைப் பார்த்துக் கொண்டதற்குக் கூலியாகத் தலையணைக்குக் கீழ் நூறு ரூபாயை வைத்து விட்டு காணாமல் போகிறான். அவள் அவனை சீ என்று கோபத்தோடு காறித்துப்பும்போது அவள் உடம்பிலும் அம்மை துளிர்த்திருக்கிறது. வாழ்வு அப்படித்தான்.
தன் மனைவி பூனையைக் கொஞ்சுவது போல் தன்னைக் கொஞ்சாத கோபத்தில் ஒருவர் பூனைகளைக் கொல்கிறார். அது அவர் மகன் பார்வையில் கதையாகச் சொல்லப்படுகிறது.
தங்களுக்குள் யாரோ பேசும் பிரமையில் தாங்கள் செல்ல விரும்பாத இடங்களுக்குச் செல்வதை நிறையப்பாத்திரங்கள் உணர்கின்றன. பயந்து நடுங்குகின்றன. தனக்கென ஒருத்தி இருந்தாலும் தன் கற்பனைக்கென ஒரு உருவைக் கொண்டு சிலர் திரிகிறார்கள். ஆசைகள் சர்ப்பத்தைப் போல ஆங்காங்கே நெளிகின்றன. மோகினிகள், நிர்வாணமான பெண்கள், விரிந்த யோனிகள், காமத்தின் பூச்சாரல் அடித்துக் கொண்டேயிருக்கிறது.
சில கதாபாத்திரங்களால் கணநேரத்தில் இந்த உலகை விட்டு இன்னொரு மாய உலகிற்கு செல்லமுடிகிறது. அவர்களுக்குப் பிரத்தியேகமான உலகை அவர்கள் உருவாக்கி மீட்சி அடைகிறார்கள். பல்வேறு காரணங்களால் அல்லது ஏதோ ஒரு இனம் காணாத அச்சுறுத்தலால் ஒடுங்கி, உலகைப்பார்க்கும், சகமனிதர்களை வேடிக்கை பார்க்கும் இந்தக் கதாபாத்திரங்களின் எளிமை தான் கதைகளின் மிகப்பெரிய பலம்.
அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அத்தை, ஆச்சி, அப்பா, நண்பன், மனைவி, என்று பல்வேறு உறவுகள் இக்கதைகளை மேவி நிரவுகின்றன. சந்தோஷத்தையும், சந்தோஷத்தின் வாயிலாக நிம்மதியையும் தேடும் இந்தக் கதாபாத்திரங்கள் ஓரளவு அதனை அடைகிறார்கள். ஆனால் அடைவதற்கு முன் களைத்துச் சோர்ந்து விடுகிறார்கள்.
பல கதைகளில் மரணம் ஒரு ரகசிய கதாபாத்திரமாக உலா வந்து கொண்டிருக்கிறது. இருமுறை தற்கொலை செய்துகொள்ள முயன்ற ஒருவனை, “ போகணும்ன்னா போய் விடு “ என்று சிகிச்சை பார்க்கும் மருத்துவர் கேலி செய்கிறார். மூன்றாவது முறை அவன் தற்கொலை செய்யத் திட்டமிட்டு இன்னொரு ஊருக்குப்போய் லாட்ஜுக்குச் செல்லும்போது அவனுக்கு முன்னால் பலர் அங்கு தற்கொலை செய்து கொண்ட ஆல்பமிருக்கிறது. அதில் ஒரு படத்தில் அவனும் இருக்கிறான்.
மனிதர்களோடு கூடவே இருந்து வேடிக்கை பார்க்கிற சகமனிதர்கள் திடீரென்று வீட்டை விட்டு காணாமல் போகிறார்கள். நிஜவாழ்வின் பீதி தாங்காமல் சில கதைகளின் பாத்திரங்கள் கானகம், மலைகள், சிகரங்கள், நதிகள், குகைகள், என்று ஓடி ஒளிகிறார்கள். நொண்டி நகரம், துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர் கதையின் ஒவ்வொரு இதழும் இன்னும் சொல்லாத கதையெல்லாம் சொல்லும்போலும்.
முதலிரவில் தன்னைக்கூர்ந்து பார்த்த கணவனின் கண்கள் தந்த பயம், அவன் சாவுக்கு இழுத்துக் கொண்டு கிடக்கும்போதும் வருகிறது, கருப்பையாவின் வனம் சிறுகதையில்.
சமகால பகடிகள் நிறைய இடங்களில் இயல்பாக நிகழ்கின்றன. த்தோலக்க எனும் வார்த்தைகள் காரணகாரியத்தோடு ஒலிக்கின்றன. அவனோடது இனிக்குதா? என்று காதல் கொண்ட மகளை அப்பன் கேட்பது, காதலியோடு இன்னொரு ஜாதிக்காரன் பேசினால் அவன் தலை கொய்யப்படுவது என்று நுண்ணிய சமகாலச்சித்திரங்களும் உண்டு.
புனைவின் யுக்தி என்று எதற்கும் உதயசங்கர் மெனக்கெடவில்லை. பதாகையாக இக்கதைகளைத் தாங்கிப்பிடிக்கும் முன்னுரை என்னுரை கூட இதில் இல்லை. அது கர்வமாக இருப்பின் மகிழ்ச்சி.

நன்றி - அம்ருதா 

துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்
சிறுகதைத்தொகுப்பு
உதயசங்கர்
வெளியீடு – நூல்வனம்
விலை – ரூ.200/
தொடர்பு -9176549991



Sunday, 23 February 2020

யானை புகுந்த வகுப்பு


யானை புகுந்த வகுப்பு

உதயசங்கர்

பிரவீன் காலையில் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டான். வீட்டை விட்டு வெளியே வந்தபோது டிங் டாங் என்று மணியோசை கேட்டது. பார்த்தால் ஒரு குட்டியானை போய்க் கொண்டிருந்தது. பிரவீனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படியே வைத்தகண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். குட்டி யானை.. பார்க்கவே அவ்வளவு அழகு!
குட்டியானையின் முதுகில் அலங்காரத்தையல் விளிம்பிட்ட சிவப்பு நிறத்துணி போடப்பட்டிருந்தது. அதன்மேல் ஒரு சங்கிலி முதுகில் குறுக்கே போடப்பட்டிருந்தது. அந்தச் சங்கிலியின் இரண்டு முனைகளிலும் இரண்டு மணிகள் தொங்கின. குட்டியானை அசைந்து அசைந்து நடக்கும்போது டிங் டாங் என்று ஒலி எழுப்பின.  குட்டியானையின் கழுத்துக்கு அருகில் பாகன் உட்கார்ந்திருந்தான். அவன் தன்னுடைய கால்களை குட்டியானையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றுக்குள் நுழைத்திருந்தான். அவன் கையில் ஒரு அங்குசம் இருந்தது.
கொஞ்ச நேரம்கூட சும்மா இருக்கவில்லை குட்டியானை. ஆடியது. தும்பிக்கையைச் சுழற்றியது. தூக்கியது. ஒரு காலைத் தூக்கியது. முன்னும் பின்னும் கால்களை வைத்து அசைந்தது. பிரவீனை அப்படியே வசீகரித்து விட்டது குட்டியானை. அப்படியே பின்னால் போனான். யானை நகைக்கடை தெரு, அங்காடித்தெரு, காந்தி தெரு, நேரு நகர் என்று போய்க் கொண்டேயிருந்தது. நேரு நகர் தாண்டும்போது தான் திடுக்கிட்டான். பிரவீனுக்குத் திடீரென பள்ளிக்கூடத்துக்கு நேரமாகி விட்டதே என்ற நினைவு வந்தது. அவ்வளவு தான் திடு திடுவென ஓடினான். பள்ளிக்கூடத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது பள்ளியில் பிரார்த்தனை நேரம் முடிந்து விட்டது. அவனுக்கு பயம் வந்து உடல் நடுங்கத்தொடங்கியது.
ஐந்தாவது வகுப்பு ஆ பிரிவு வாசலில் நின்று கொண்டிருந்தான். வகுப்பாசிரியர் அவனைப் பார்த்தார்.
“ ஏண்டா லேட்டு? “
அவன் பதில் சொல்லவில்லை. அப்படியே நின்றான். மறுபடியும் ஆசிரியர்,
“ சொல்லுடா ஏண்டா லேட்டு? “
“ ஐயா.. யானை..”
“ என்னது யானையா? “
என்று சொல்லிக்கொண்டே அவன் அருகில் வந்தார்.
ஐந்தாம் வகுப்பு ஆ பிரிவு வாசலில் ஒரு குட்டியானை நின்று கொண்டிருந்தது. அந்தக் குட்டியானை தன்னுடைய தலையை அங்கும் இங்கும் ஆட்டியது. தும்பிக்கையினால் தரையைத் துழாவியது. தும்பிக்கையைத் தூக்கி காற்றை முகர்ந்தது. விசிறியைப் போன்ற தன்னுடைய பெரிய காதுகளை ஆட்டியது. வாயை அசை போட்டது. வகுப்பாசிரியர் சற்று பின்னால் போனார். உடனே குட்டியானை வகுப்புக்குள் நுழைந்து விட்டது. மாணவர்கள் எல்லோரும் ஓ வென்று மகிழ்ச்சியில் சத்தம் போட்டனர். தும்பிக்கை நுனியினால் சிறிய சாக்பீசை எடுத்து கரும்பலகையில் குட்டியானை என்று எழுதியது. மேஜை மேலிருந்த பிரம்பை எடுத்து கீழே போட்டு மிதித்தது. பின்னர் மெல்ல ஆடி அசைந்து வகுப்பறையைச் சுற்றி வந்தது. அப்படி அதுவரும்போது டிங் டாங் டிங் டாங் டிங் டாங் என்று சத்தம் கேட்டது. கடைசி வரிசை பெஞ்சில் உட்கார்ந்திருந்த கார்த்திக்கின் புத்தகத்தை எடுத்து வாசிப்பது போல நடித்தது. வாசித்ததை பிளிறிக் காட்டியது. அப்படியே ஒவ்வொரு பையனின் தலையிலும் தும்பிக்கையை வைத்துத் தடவியது.
அப்போது ஒரு பையன் குட்டியானைக்கு ஒரு சாக்லேட் கொடுத்தான். சாக்லேட்டின் பேப்பரைப் பிரித்து வாயில் போட்டது. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த குட்டியானை வகுப்பறையே அதிரும்படி குரல் கொடுத்தது. அந்த நிமிடம் வகுப்பறையே காடாக மாறிவிட்டது. குட்டியானை மரங்களிலிருந்து இலைகளை பறித்துத் தின்றது. பழங்களைத் தின்றது. தென்னை மரத்திலிருந்து பச்சை ஓலைகளை தின்றது. கரும்புத்துண்டுகளைச் சாறு வழிய வழியச் சாப்பிட்டது. ஓடையில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரைத் தும்பிக்கையினால் சத்தமாக உறிஞ்சி வாய்க்குள் விட்டது. தும்பிக்கையினால் தண்ணீரை மழைத்துளிகளாக விசிறியது. கீழே விழுந்து புரண்டது. மண்ணை அள்ளி முதுகில் போட்டுக் கொண்டது.
அப்புறம் பெஞ்சுகளின் இடையில் ஓடியது. மாணவர்களை முதுகில் சுமந்து கொண்டு நடந்தது. குட்டியானையின் கண்களில் மகிழ்ச்சி பொங்கியது. மாணவர்கள் எல்லோரும் அந்தக் குட்டியானையின் பின்னால் அதன் வாலைப்பிடித்துக் கொண்டே ஓடினார்கள். கடைசியில் வகுப்பாசிரியரும் ஓடினார். குட்டியானையின் ஒவ்வொரு சேட்டைக்கும் எல்லோரும் சிரித்தனர். அப்போது ஒரு பையன் யானையிடம் ஐந்து ரூபாய் நாணயத்தை நீட்டினான்.
யானை அப்படியே நின்றது. அதன் முகத்திலிருந்த மகிழ்ச்சி மறைந்தது. கண்களில் கண்ணீர் வழிந்தது.
“ என்னைய பிச்சை எடுக்க வைக்காதீங்க..” என்று உரத்தகுரலில் பிளிறியது. பின்னர் அப்படியே அமைதியாக பெஞ்சில் போய் உட்கார்ந்து கொண்டது.
வகுப்பாசிரியர் அருகில் வந்து யானையின் தலையைத் தடவிக்கொடுத்தார். பிரவீன் மெல்லத்தலையைத் தூக்கிச் சிரித்தான்.
நன்றி - வண்ணக்கதிர்


Sunday, 16 February 2020

துப்பறியும் துர்கா


துப்பறியும் துர்கா

உதயசங்கர்

துர்கா எப்படி துப்பறியும் துர்கா ஆனாள் தெரியுமா? என்னது நம்ம பக்கத்து வீட்டுக்குட்டிப்பொண்ணு துர்கா துப்பறியும் நிபுணரா என்று ஆச்சரியப்படுகிறீர்கள் இல்லையா! அப்படி அவளுடைய அம்மா மீனாட்சி தான் கூப்பிடுகிறாள். ஆனால் அவளுக்கு இன்னும் அப்படி ஒரு பெயரை அவளுக்கு அம்மா சூட்டியிருப்பது தெரியாது.. அவளுடைய அம்மா துப்பறியும் கதைகளை சின்னவயதில் படிப்பாள். துப்பறியும் சங்கர்லால், துப்பறியும் சாம்பு, இவர்களை எல்லாம் அவளுக்கு ரொம்பப்பிடிக்கும். ஏன் எல்லாக்கதைகளிலும் ஆம்பிளைப் பசங்களே துப்பறிவாளராக இருக்கிறாங்க என்று கேள்வி அவளுக்கு வரும். அவளும் துப்பறிந்து பார்த்தாள். வகுப்பில் காணாமல் போன கோமதியின் பென்சிலைக் கண்டுபிடித்தாள். அது சிவகாமியின் பைக்குள் போய் ஒளிந்து கொண்டதைக் கண்டு பிடித்தாள். பென்சிலிடம் “ நீ ஏன் ஓடிப்போனாய் ? “ என்று கேட்டதுக்கு பென்சில்
 ” கோமதி தினம் பென்சிலைச் சீவிச் சீவிக் கரைக்கிறா.. அப்புறம் நான் குட்டியாயிருவேன்ல..” என்றது. கோமதியிடம் பென்சிலின் வருத்தத்தைச் சொல்லி இனிமேல் அவசியமில்லாமல் பென்சிலைச் சீவக்கூடாது என்று அறிவுரை சொன்னாள். மீனாட்சிக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது. இது தான் அவள் முதலும் கடைசியுமாக கண்டுபிடித்தது. அவள் எப்போதும் கண்களை உருட்டிக்கொண்டு அங்கேயும் இங்கேயும் பார்த்துக் கொண்டே திரிந்ததைப் பார்த்த அவளுடைய அம்மா
“ என்னாச்சி.. ஏன் கண்ணைத் தரையிலேயே நட்டுக்கிட்டே திரியிறே.. முழி பிதுங்கி வெளியே வந்துரும் “ என்று கத்தினாள். மீனாட்சி பயந்து விட்டாள். ஆனால் துப்பறிவதை அவள் விடவில்லை. வீட்டில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் மீனாட்சி தான் கண்டுபிடித்தாள். பெரியவளானதும் எல்லாம் மறந்து போய் விட்டது.
துர்கா தவழ ஆரம்பித்ததுமே துப்பறிகிற வேலையைத் தொடங்கி விட்டாள். தரையில் கண்ணுக்கே தெரியாமல் வரிசையாகப் போய்க் கொண்டிருந்த சித்தெறும்புகளின் பின்னால் தவழ்ந்து போனாள். எறும்பு வரிசையில் கடைசியாகப் போய்க் கொண்டிருந்த எறும்பு திரும்பி துப்பறியும் துர்காவிடம் வந்து தன் முன்கால்களைத் தூக்கி,
“ பாப்பா எங்க பின்னாடி வராதே.. பீ கேர்ஃபுல்..” என்று எச்சரித்தது. துப்பறியும் துர்கா உடனே நின்று விட்டாள். அப்படியே வேறு எங்கோ பராக்கு பார்ப்பதைப் போல தலையை அங்கிட்டும் இங்கிட்டும் திருப்பினாள். எறும்பு வேகவேகமாக திரும்பிப் போனபோது துப்பறியும் துர்காவும் பின்னாலேயே போனாள். எறும்புகளின் வரிசை எங்கே போச்சு தெரியுமா? அப்படியே அடுக்களைக்குள் போனது. துப்பறியும் துர்காவும் அடுக்களைக்குள் போனாள். எறும்பு வரிசை அடுக்களையில் இருந்த அலமாரி மீது ஏறியது. துப்பறியும் துர்காவும் அலமாரி வரை போய் முட்டி நின்றாள். அண்ணாந்து பார்த்தாள். மேலே பார்த்தால் துர்காவின் பால் டப்பா இருந்தது. எறும்பு வரிசை அந்த டப்பாவின் மீது ஏறிக் கொண்டிருந்தது. துர்கா அலமாரியின் கதவுகளைப் பிடித்துக் கொண்டு மெல்ல எழுந்து நின்றாள். எறும்புகளைப் போல அலமாரியில் ஏறமுடியுமா என்று காலைத் தூக்கினாள். அப்படியே சப்பென உட்கார்ந்தாள். லேசாக வலித்தது. சுற்றும் முற்றும் யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்தாள். பால் டப்பாவைப் பார்த்ததும் வயிறு பசித்தது. அருகில் அம்மாவும் இல்லை. உடனே அழ ஆரம்பித்து விட்டாள்.
அழுகைச் சத்தம் கேட்டதும் எங்கிருந்தோ அம்மா ஓடி வந்தாள். துப்பறியும் துர்காவைத் தூக்கி,
“ என்னடா செல்லம்? இங்கே என்ன பண்றே? என்ன வேணும் செல்லத்துக்கு? “ என்று கேட்டாள். துப்பறியும் துர்கா அலமாரியில் இருந்த பால்டப்பாவைக் காட்டினாள்.
“ செல்லத்துக்குப் பசிக்கிதா? “
அம்மா பால் டப்பாவை எடுத்தாள். அதில் எறும்புகள் அப்போது தான் உள்ளே நுழைந்து கொண்டிருந்தன. எறும்புகளைப் பார்த்த அம்மா அவற்றைக் கீழே தட்டி விட்டாள்.
“ ஆகா! எறும்புக்குப் பின்னாடி துப்பறிய வந்தியா செல்லம்! துப்பறியும் துர்கா! துப்பறியும் துர்கா! “ என்று துப்பறியும் துர்காவைத் தூக்கிக் கொஞ்சினாள். துர்காவுக்கு கூச்சமாக இருந்தது.
“ அப்படி என்ன பெரிசா செய்ஞ்சிட்டேன்! இன்னும் இருக்கு.. “ என்கிற மாதிரி சுற்றிலும் பார்த்தாள். கீழே எறும்புகள் துப்பறியும் துர்காவைப் பார்த்து,
“ இரு உன்னைக் கவனிச்சிக்கிறோம்..” என்று முன்காலைத் தூக்கி சபதம் போட்டுக் கொண்டே ஓடி ஒளிந்தன. எறும்புகள் ஓடுவதைப் பார்த்து துர்கா கெக்கேக்கே என்று சிரித்தாள். அம்மாவும் துப்பறியும் துர்காவைப் பார்த்துச் சிரித்தாள்.
நன்றி - வண்ணக்கதிர்

Friday, 14 February 2020

இது யாருடைய முட்டை?


இது யாருடைய முட்டை?

உதயசங்கர்

வயலூரில் இந்த ஆண்டு நல்ல மழை. அதனால் நெல்வயலில் நல்ல விளைச்சல். அந்த ஊரில் இயற்கை விவசாயம் தான் நடக்கிறது. ரசாயன உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதில்லை. அதே போல பாரம்பரியமான நெல் வகைகளை அவர்கள் பயிர் செய்தார்கள். மாப்பிள்ளை சம்பா, கட்டிச்சம்பா, சீரகச்சம்பா, கம்பஞ்சம்பா, காட்டுச்சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, புழுதிச்சம்பா, இலுப்பைப்பூ சம்பா, துளசிச்சம்பா, கொட்டாரச்சம்பா,சன்னச்சம்பா, கிச்சலி சம்பா, நீலச்சம்பா, கருடன் சம்பா, கட்டைச்சம்பா, மிளகுச்சம்பா, என்று நெல்வகைகளை விதைத்து நல்ல மகசூல் வந்தது.
அறுவடை முடிந்த வயலில் பறவைகளும், எலிகளும், எறும்புகளும் சுறுசுறுப்பாக அலைந்து கொண்டிருந்தன. எறும்புகள் எல்லாம் அறுவடையின்போது கீழே சிந்திய நெல்மணிகளை முதுகில் சுமந்து கொண்டு வரப்புகளில் இருந்த அவர்களுடைய புற்றுக்குள் கொண்டு போய் சேமித்து வைத்தனர். அப்போது சுள்ளான் எறும்பு தலையைக் குனிந்து கொண்டே போய் ஒரு பெரிய பாறை மீது மோதியது. முன்கால்களால் தலையைத் தடவிக் கொண்டது. அந்தப் பாறையின் மீது ஏறி மேலும் கீழும் அலைந்தது. அது பாறை கிடையாது. அந்தப்பொருளின் மீது ஒரு பறவையின் வாசனை வீசியது. உடனே சுள்ளான் கீழே இறங்கி அவர்களுடைய கூட்டத்தில் பெரியவரான குண்டுத்தாத்தாவை அழைத்து வந்தது. குண்டுத்தாத்தா அதைப் பார்த்தவுடன்,
அட கோட்டிக்காரா.. இது ஒரு பறவையின் முட்டை.. அறுவடை நடக்கும்போது அந்தப்பறவை இந்த முட்டையை விட்டு விட்டுப் போயிருக்கும்சரி வா.. நம்ம வேலையைப் பார்ப்போம்.. “ என்று சொல்லி விட்டு முன்னால் நடந்தது. ஒரு கணம் யோசித்த சுள்ளான்,
தாத்தா இந்த முட்டையை அதனுடைய அம்மாவிடம் சேர்த்தால் என்ன? பாவமில்லையா அந்தப்பறவை! “
யாருடைய முட்டைன்னு தெரியாமல் எப்படி சேர்ப்பாய்? “
பறக்கிற எல்லோரிடமும் கேட்போம்..”
குண்டுத்தாத்தாவுக்கு மனசில்லை. ஆனால் சுள்ளான் பேச்சைத் தட்டமுடியவில்லை. சுள்ளானைப்போல அறிவாளி எறும்பு அவர்களுடைய கூட்டத்தில் இல்லை. உடனே செய்தி பறந்தது. எறும்புகள் எல்லாம் சேர்ந்து அந்த முட்டையைத் தூக்கிக் கொண்டு நடந்தார்கள். முன்னால் சுள்ளான்
கொண்டு சேர்ப்போம் அண்ணே
கொண்டு சேர்ப்போம்
முட்டையை அம்மாவிடம்
கொண்டு சேர்ப்போம்..”
என்று பாடிக் கொண்டே போனது. அப்போது எதிரே ஒரு காகம் ஒரு வயல் எலியைப் பிடிப்பதற்காக பறந்து வந்தது. அது பிடிப்பதற்குள் அந்த எலி ஓடி வரப்பில் இருந்த வளைக்குள் ஒளிந்து கொண்டது. ஏமாந்து திரும்பிய காகத்திடம்,
அக்கா அக்கா காக்காக்கா
உங்க முட்டையா பாருக்கா..” என்று கேட்டது சுள்ளான். காகம் அந்த முட்டையைப் பார்த்தது.
கா கா காக்காஇல்லை தம்பிகளா.. என்னோட முட்டையில இளநீல நிறத்தில புள்ளி போட்டிருக்கும்..  ரொம்பப்பெரிசு.. நான் மரத்தில கூடு கட்டி முட்டையிடுவேன்.. இது என்னோட முட்டையில்லை தம்பிகளா?..கா காகா காஎன்று சொல்லிவிட்டு பறந்து விட்டது. எறும்புகள் மறுபடியும் முட்டையைச் சுமந்து கொண்டு முட்டையின் அம்மாவைத் தேடிப் போனார்கள். வயல் வரப்பில் ஒரு ஓணான் கண்களை உருட்டி ஆசையோடு எறும்புகளைப் பார்த்தது. நாக்கைச் சப்புக் கொட்டி, முதுகைத் தூக்கிக் கொண்டு தலையை ஆட்டியது. சுள்ளான் அதற்கு பக்கத்தில் போகாமல் தூரமாய் நின்று கொண்டு,
முட்டைக்கண்ணு ஓணானே
நாக்கு நீண்ட ஓணானே
முட்டையைப் பாரு ஓணானே
உன்னோடதா ஓணானே
என்று கேட்டது. உடனே ஓணான் திரும்பி முட்டையை ஒரு கண்ணாலும், எறும்புகளை இன்னொரு கண்ணாலும் பார்த்தது. வாலை ஆட்டிக் கொண்டு எங்கோ பார்ப்பது போல பார்த்துக் கொண்டு,
என்னோட முட்டை ரொம்பச்சிறுசுவெள்ளையா இருக்கும்.. பல்லிமுட்டையை விட கொஞ்சம் பெரிசா இருக்கும்இது என்னோட முட்டையில்லை… “ என்று சொல்லிக் கொண்டே எறும்புகளைப் பிடிக்க நாக்கை நீட்டியது. ஆனால் அதற்குள் எறும்புகள் வெகுதூரம் போய் விட்டன. நல்லவேளை பிழைத்தோம் என்று சுள்ளான் நினைத்தது. அப்போது எங்கிருந்தோ சர்ரென காட்டுப்புறாக்கள் கூட்டமாய் வயலில் வந்திறங்கின.
உயரே பறக்கும் புறாக்கா
உன்னைத் தானே பாருக்கா
உன்னோட முட்டையா பாருக்கா
உடனே தாரோம் சொல்லுக்கா..”
என்று சுள்ளான் பாடியது. புறாக்கள் குனிந்து நெல்லைக் கொத்துவதிலே  மும்முரமாக இருந்தன. சுள்ளான் காத்திருந்தது. தலை நிமிர்ந்த ஒரு புறா,
இல்லையில்லை தம்பிகளா
எங்க முட்டையில்லை..
அவ்வளவு பெரிசுமில்லை
இவ்வளவு சிறுசுமில்லை
இவ்வளவு அழுக்குமில்லை
அவ்வளவு வெள்ளையுமில்லை
எங்க முட்டையில்லை
இல்லையில்லை தம்பிகளா
என்று சொல்லி விட்டு மறுபடியும் நெல்லைக் கொத்தத்தொடங்கியது. எறும்புகள் மறுபடியும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தன. வரப்பில் ஒரு கௌதாரி தன் குஞ்சுகளுடன் கரையான் புற்றைக் கிளைத்து, கெ கெ கெ என்று குஞ்சுகளை அழைத்து இரை எடுக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது.
அம்மா அம்மா கௌதாரி
சும்மா கொஞ்சம் பாரும்மா
உன்னோட முட்டையா சொல்லும்மா
சொன்னா தாரோம் செல்லம்மா
என்று சுள்ளான் கேட்க, கௌதாரி நிமிர்ந்து பார்த்து,
முட்டையின் அம்மா நானில்லை
என் முட்டையில் புள்ளிகள் இருக்காது..
நான் இட்ட முட்டைகள் அஞ்சு
பொரிச்ச குஞ்சுகளும் அஞ்சு
முட்டையின் அம்மா நானில்லை..”
என்று சொல்லி விட்டு கரையானைப் பிடித்து குஞ்சுகள் அருகில் போட்டது. எறும்புகள் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தன. அப்போது குண்டுத்தாத்தா சுள்ளானுக்கு முன்னால் போய்,
டேய் துடுக்குப்பயலே! நீ வேண்டாதவேலை பார்க்கிறாய்.. இப்படியே முட்டையை போட்டுட்டு போவோம்.. சொன்னாக்கேளு..”
என்று கத்தியது. அப்போது தான் ஒரு பறவையின் அழுகைக்குரல் கேட்டது.
நான் போட்ட தங்கமுட்டை காணலியே
நான் போட்ட வைரமுட்டை காணலியே
நான் போட்ட பட்டுமுட்டை காணலியே
எங்கதைய யார் கேப்பா
எங்கண்ணீரை யார் துடைப்பா
அந்தப் பாட்டைக்கேட்ட சுள்ளான் அழுது கொண்டிருக்கிற அந்தப்பறவையைத் தேடியது. ஒரு புதர்ச்செடிக்குள் தலையை புதைத்துக் கொண்டு ஒரு காடை தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தது. சுள்ளான் அதற்கு முன்னால் போய்,
அழாதே காடையக்கா
தேம்பாதே காடையக்கா
முட்டையைப் பாருக்கா
கண்ணீரை துடையக்கா
என்று சொன்னதைக் கேட்டதும் காடை உடனே தலையைத் திருப்பி அந்த முட்டையைப் பார்த்தது. புள்ளிபோட்ட அரக்கு கலர் முட்டையைப் பார்த்ததும் அதன் கண்கள் மின்னின. கீச் கீச் கீச் என்று கத்திக்கொண்டு அந்த முட்டையைச் சுற்றிச் சுற்றி வந்தது. சுள்ளானுக்கும், குண்டுத்தாத்தாவுக்கும் முட்டையைச் சுமந்து கொண்டு வந்த எறும்புகளுக்கும் நன்றி சொன்னது.
என்னோட தங்க முட்டை
என்னோட வைரமுட்டை
கொண்டு வந்த எறும்புகளே
உங்களுக்கு கோடி நன்றி
என்று மகிழ்ச்சியில் கூத்தாடியது. சுள்ளான் மற்ற எறும்புகளிடம்
இது காக்காமுட்டையில்லை.. ஓணான் முட்டையில்லை, புறா முட்டையில்லை, கௌதாரி முட்டையில்லை  இது ஒரு காடை முட்டை.. “ என்று சொல்லிக் கொண்டிருந்ததைப் பெருமையுடன் குண்டுத்தாத்தா பார்த்துக் கொண்டிருந்தது.

நன்றி - மாயாபஜார்