Thursday, 7 September 2017

கிகி நத்தையின் குதியாட்டம்

கிகி நத்தையின் குதியாட்டம்

உதயசங்கர்
ஒரு வாரமாய் மழை.  காடுமேடு எங்கும் செடிகளும், கொடிகளும், மரங்களும், தளிர்த்து பச்சை பசேல் என்று நின்றிருந்தன. காடுகளில் புதிய உயிர்கள் பிறந்தன.. புழுக்கள், பூச்சிகள், எறும்புகள், ஈசல்கள், நத்தைகள், வண்ணத்துப்பூச்சிகள், ரயில்பூச்சிகள், என்று ஏராளமான உயிரினங்கள் பிறந்து அங்கும் இங்கும் அலைந்து திரிந்தன.
குருமலைக்காட்டில் இருந்த புளியமரத்தின் வேர் முண்டில் ஏராளமான நத்தை முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவந்தன. சேகி நத்தை தன்னுடைய முட்டைகள் அத்தனையும் பொரிந்து குஞ்சுகள் சுற்றிச் சுற்றி அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. எல்லோரையும் தன்னுடைய நீண்ட கண்களால் பார்த்தும் உணர்கொம்புகளால் தடவியும் கொடுத்து உற்சாகப்படுத்தியது.  சேகி நத்தையின் குஞ்சுகளான பிகி, சிகி, டுகி, லிகி, எகி, இகி, எல்லாம் அசைந்து அசைந்து செல்லத் தொடங்கின. முதுகில் இருந்த மெல்லிய கூட்டுடன் அவை மிக மிக மெதுவாக ஊர்ந்தன. ஆனால் கிகி நத்தைக்குஞ்சு மட்டும் அசையாமல் இருந்தது. அப்படியே உட்கார்ந்தபடியே சுற்றிலும் நடப்பதை தன்னுடைய கண்களால் பார்த்துக் கொண்டிருந்தது. சேகி நத்தை கிகியின் அருகில் வந்து
“ ம்ம்ம் எழுந்து வா..கிகி…”
கிகி அம்மாவைப் பார்த்தது. அசையாமலேயே,
“ முடியல..” என்று சொன்னது.
“ அப்படிச் சொல்லக்கூடாதுடா… முயற்சி செய்ஞ்சி பாரு.. டுகி எகி எல்லோரும் எப்படி ஓடுறாங்க.. பாரு..”
கிகி அம்மா சொன்னதைக் கேட்டு மெல்ல எழுந்து ஊர்ந்து செல்ல முயற்சித்தது. அதற்கு முதுகில் பெரிய சுமை இருப்பதைப் போல இருந்தது. உடம்பை உதறி சுமையை கீழே தள்ளிவிடப் பார்த்தது. அது புரண்டு விழுந்தது தான் மிச்சம்! ஒருக்களித்துக் கிடந்த உடம்பை நிமிர்த்த முடியாமல் கிடந்தது. சேகி நத்தை தான் வந்து கிகியைத் தள்ளி நிமிர்த்தியது.
“ அம்மா என் முதுகில இருக்கிற கூட்டை எடுத்துரு… எனக்கு வேண்டாம்..”
என்றது கிகி.
“ அதையெல்லாம் தனியா எடுக்கமுடியாதுடா… நம்மோட பாதுகாப்புக்காக இயற்கையின் ஏற்பாடு.. தெரியுமா?..”
“ ம்ம்ம்ஹூம் எனக்குக் கூடு வேண்டாம்.. கூடு இல்லைன்னா நான் வேகமா அந்த புழு போகிற மாதிரி போவேன்… என்னால இந்தச் சுமையைத் தூக்கிட்டு நடக்க முடியல..”
அப்போது ஒரு புழு கிகியைக் கடந்து போய்க்கொண்டிருந்தது. கொஞ்சதூரம் போன அந்தப்புழு திரும்பி வந்து கிகியிடம் “ நாம ஓட்டப்பந்தயம் வைச்சிக்கிடலாமா… யார் ஜெயிக்கிறான்னு..பார்ப்போம்..” என்று சொல்லிச் சிரித்தது. கிகி புழுவுக்கு முதுகைக்காட்டித் திரும்பிக் கொண்டது. ஒரு நொடியில் புழு கிகியின் முன்னால் வந்து,
“ நீ ஜெயிச்சேன்னா நான் உன்னை என் முதுகில வைச்சி எல்லா இடத்துக்கும் தூக்கிட்டுப்போறேன்.. ஆனால் நான் ஜெயிச்சேன்னா… நீ இந்தக்காட்டிலேயே இருக்கக்கூடாது…என்ன சம்மதமா? “
என்று சொல்லிவிட்டு எகத்தாளமாகச் சிரித்தது. கிகிக்கு அழுகையே வந்து விட்டது. அது சேகி அம்மாவிடம் “ எனக்கு கூடு வேண்டாம்… எனக்குக் கூடு வேண்டாம்.. எனக்குக் கூடு வேண்டாம்..” என்று திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது. சேகிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
“ கிகி.. முதல்ல அழறத நிறுத்து.. கூடு நமக்குப் பாதுகாப்பு…”
“ ம்ம்ம்ம்ம்ஹூம்… எனக்குக் கூடு வேண்டாம்.. எனக்குக்கூடு வேண்டாம்..”
என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது. அப்படிச் சொல்லிக்கொண்டே தனக்கு முன்னால் அந்தப்புழு வேக வேகமாகப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தது. அப்போது தான் அது நடந்தது.
எங்கிருந்தோ ஒரு தவிட்டுக்குருவி பறந்து வந்தது. டக்கென்று சிறகுகளை மடக்கி புழுவின் அருகில் நின்றது. லபக் ஒரு நொடி தான். புழு குருவியின் வாய்க்குள் போய் விட்டது. அப்படியே இரண்டு கால்களாலும் தத்தித் தத்தி நடந்து சேகி நத்தையின் அருகில் வந்தது. தவிட்டுக்குருவியின் காலடிச்சத்தம் கேட்டதுமே சேகி கூட்டுக்குள் அடைந்து கொண்டது. அதன் குஞ்சுகள் எகி, இகி, லிகி, டுகி, கிகி, பிகி, சிகி, எல்லாம் கூட்டுக்குள் சுருண்டு கொண்டன. தவிட்டுக்குருவி சேகியைப் புரட்டியது. அதற்குள் ஒரு பசையால் வாய்ப்பகுதியில் பூசிவிட்டது சேகி. அந்தப்பசை துர்நாற்றம் அடித்தது. தவிட்டுக்குருவி இரண்டு முறை சேகியை உருட்டி விட்டுப் பறந்து போய்விட்டது.
நடந்ததை எல்லாம் உடலைக் கூட்டுக்குள் மறைத்துக் கொண்டு கண்களை மட்டும் வெளியில் நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது கிகி. தவிட்டுக்குருவி பறந்து போனதும் சேகி வெளியில் வந்தது. அது கிகியின் அருகில் வந்து எதையோ சொல்ல வாயைத் திறந்தது.

” கூடு வேண்டும்..கூடு வேண்டும்..கூடு வேண்டும்..” என்று சொல்லிக் குதித்துக் கொண்டிருந்தது கிகி. எகியும், இகியும், சிகியும், டுகியும், பிகியும், லிகியும், கிகியின் குதியாட்டத்தைப் பார்த்து கூடுகள் குலுங்கச் சிரித்தன. சேகியும் சிரித்தது.
நன்றி - சுட்டி-விகடன்

Wednesday, 6 September 2017

நல்லி-திசைஎட்டும் மொழிபெயர்ப்பு விருது

இயற்கையின் அற்புத உலகில்
மலையாளத்தில் - பேரா.எஸ்.சிவதாஸ்
தமிழில் – உதயசங்கர்

1.   குட்டிப்பாப்பாவின் கண்டுபிடிப்பு

குட்டிப்பாப்பாவுக்கு சிரிப்பு வந்தது. குட்டிப்பாப்பா அப்படித்தான். எப்போதும் சிரிப்பாள். சிரிப்பு வந்தால் சிரிக்காமல் இருக்க முடியுமா? குட்டிப்பாப்பா சிரித்தாள். குட்டிப்பாப்பா பால் குடித்துக் கொண்டிருந்தாள். அதற்கு மத்தியில் தான் இந்த சிரிப்பு வந்தது. பாலும் பல்லும் அப்போது வெளியில் வந்தது. அதைக் கண்ணாடியில் பார்த்த குட்டிப்பாப்பா மறுபடியும் சிரித்தாள். சிரித்துக் கொண்டு, சிரிப்பைப் பார்த்துக் கொண்டு, இருந்தபோது குட்டிப்பாப்பாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது. சிரிப்பு பால் போன்றதா? பாலைப்போல வெள்ளையா? சந்தேகம் வந்ததும் சிரிப்பும் அதிகமானது. குட்டிப்பாப்பாவுக்கு ஒரு கருத்த மாமன் இருந்தான். கருத்த மாமனுடைய மனைவியான மாமி வெள்ளையாக இருப்பாள். மாமனும் மாமியும் சிரிக்கும்போது வெள்ளை வெள்ளையான பற்கள் வெளியே வரும். முல்லை மொட்டுகளைப் போல உள்ள பற்களைப் பார்க்கலாம். கருத்தமனிதனின் சிரிப்பும், வெளுத்த மனிதனின் சிரிப்பும் வெள்ளை வெள்ளையான பால் சிரிப்பு. சிரிப்பு வெள்ளை தான். புதிய ஒன்றைக் கண்டுபிடித்த கர்வத்தோடு குட்டிப்பாப்பா பால் முழுவதையும் குடித்து முடித்தாள். மறுபடியும் சிரித்தாள். பால் வடியும் முல்லை மொட்டு சிரிப்பு. சிரித்துக் கொண்டே குட்டிப்பாப்பா முற்றத்தில் இறங்கினாள்.”

- இந்த நூலை சிறப்பாக வடிவமைத்த வானம் பதிப்பக உரிமையாளர் அன்புத்தம்பி மணிகண்டனுக்கும், அழகான ஓவியங்கள் வரைந்த ஓவியர் ராஜனுக்கும் மிக்க நன்றி.
நல்லி-திசை எட்டும் விருதுக்குத் தேர்வு செய்த தேர்வுக்குழுவினருக்கும் மிக்க நன்றி.

Tuesday, 5 September 2017

குழந்தைகளின் அற்புத உலகில் – மதிப்புரை

குழந்தைகளின் அற்புத உலகில் – மதிப்புரை


ஜெ. பொன்னுராஜ்

         உதயசங்கரின் “குழந்தைகளின் அற்புத உலகில்” நூலை வாசிக்க வாசிக்க அது என்னை குழந்தைகளின் எதார்த்தமான உலகிற்கு கூட்டிச்சென்றது. “ஒழுங்கு  கண்டிப்பு” என்ற பெயரில் என் இளமையின் சந்தோசமான பொழுதுகளை தொலைத்துவிட்டிருந்த நான் இந்நூலை வாசிப்பதன் மூலம் எனக்குள் ஏதோ  ஒரு நிறைவை தேடிக்கொள்கிறேன்.
         நிலா வெளிச்சத்தின் விளையாட்டுக்கள், நிலாச் சோறு எல்லாம் ‘படிப்பு’ என்ற அலையில் அடித்துக்கொண்டு போய்விட்டது. டாக்டராக, பொறியாளராக தங்கள் குழந்தைகளை பார்க்க ஆசைப்படும் பெற்றோர்கள்; அவர்களின் மன உலகை ஒரு நாளாவது ஊடுருவிப் பார்த்ததுண்டா? அவர்களின் அசாத்திய கற்பனை திறனை, அறிவியல் விஞ்ஞான சிந்தனையை, விளையாட்டு ஆர்வத்தை இப்படி எல்லாவற்றையும் கூர்மழுங்கச் செய்யும் அத்தனையும் செய்கிறார்கள். குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் வாழ்வை, அன்பைத் தொலைத்து எப்போதும் ஒரு இறுக்கத்தையே சிக்கெனப் பிடித்து, அதே கண்டிப்பை தம் குழந்தைகள் மீது திணித்தும் பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பியும் கணக்கு தீர்க்கிறார்கள்.
        குழந்தைகளின் செயல்பாடுகளில் கோடிப்புதையல்கள் கொட்டிக்கிடக்கின்றன. வாழ்தலின் இன்பத்தை நோக்கியே குழந்தைகளின் சிறகுகள் விரிந்து பறக்கிறது. தங்கள் உலகத்தில் அனுமதியின்றி நுழையும் எவரையும் எதிர்த்து கலகம் செய்கின்றன குழந்தைகள். அதை புரிந்து கொள்ளாமல் வன்முறை ஆயுதங்களால் அடக்கி ஒடுக்குகிறோம்.  என்றும் சூதும் வாதும் அறியாத குழந்தைகளிடம் அத்துமீறும் அவலத்தில் தொடங்குகிறாம். வேறெங்கும் செலுத்த முடியாத அதிகாரத்தை குழந்தைகள் மீது செலுத்த, அந்த குழந்தைகள் தாம் ஒரு தனித்துவம் மிக்க தனி உயிர் என்ற உரிமையை இழக்கிறார்கள் என்ற வரிகளை வாசிக்கும் போது நிர்க்கதியாய் நிற்கும் நிராயுதபாணியின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நினைவில் வருகிறது. தங்களுடைய அறிதலின் தாகத்தை கட்டுப்படுத்துகிற, ஒடுக்குகிற அதிகாரத்தின் கரங்களுக்குள் உள்ளொடுங்கிப்போகிறார்கள் குழந்தைகள். இதனால் பெரியவர்களாகும் போது சமூகத்தில் நடக்கிற அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்கிற மந்தமான மனநிலைக்கு ஆளாகிறார்கள் என இன்றைய சமூக நிலையின் வேர்முடிச்சுகளை அவிழ்த்துக் காட்டுகிறார்.  
       குழந்தைகளுக்கு தான் செய்த காரியங்களை விட, அதன் எதிர்வினையாக நடக்கின்ற அவர்களை அதட்டுவது, மிரட்டுவது, அடிப்பது போன்ற விளைவுகள் ஆழ்மனதில் பதிந்துவிடும். பயந்து நடுங்குகிற அதன் உள்ளம் தன் வாழ்நாள் முழவதும் அந்த நடுக்கத்தை மறப்பதில்லை என்று சொல்லி, குழ்ந்தைகளிடம் குழந்தையாகவே பேசிப் பழகவேண்டியதன் அவசியத்தைச் சொல்கிறார்.  அடிவயிற்றிலிருந்து எழும் குரலில் பேசுகிறோ, அற்பம் என்றோ அற்புதம் என்றோ குழந்தைகள் உலகில் இல்லை. குழந்தை மனம் பெரியவர்களுக்கு தெரியாத ரகசியமாக இருக்கிறது என வியந்து போகிறோம். ஒரு பத்து கிலோ புத்தகப்பையை சுமந்து சாலையை கடக்க காத்திருக்கும் குழந்தைகளின் முகத்தை என்றாவது ஒரு நாள் உற்று கவனித்திருக்கிறோமா? அதில் தெரியும் நிராதரவான உணர்வை உணர்ந்திருப்போமா என குழந்தைகள் பக்கம் நின்று இடைவாரை உருவி சுழட்டுகிறார்.
      எப்படி எதிர்பார்ப்பின்றி, பிரதிபலன் பாராது அன்பை வெளிப்படுத்துகின்றன குழந்தைகள் என்றும் சொல்கிறார். ஒவ்வொரு குழந்தையிடமும் தனித்துவமாக ஓர் ஆளுமை மறைந்திருக்கிறது என குழந்தையின் ஆளுமையை வெளிப்படுத்துகிறார். பெரியவர்களாலேயே ஓரிடத்தில் ஒரு ஐந்து நிமிடம் உட்காரமுடியாத போது குழந்தைகளை வெளியில் விளையாடவிட மறுத்து அருமைக் குழந்தைகளை எதிர்கால நோயாளிகளாக்கும் அறியாமை, குழந்தைகள் கேட்பது அனைத்தையும் வாங்கிக்கொடுக்கும் மனநிலையால், கேட்டால் எல்லாம் கிடைக்குமென்ற விபரீதமான, முரட்டுத்தனமான பிடிவாத குணத்திற்கு இட்டுச்செல்லும் சூழல்களை அலசுகிறார். அடக்கியே வளர்க்கப்படும் பெண் குழந்தைகள் மிக சுலபமாக ஏமாற்றப்படுவதற்கும் இழிவுபடுத்தப்படுவதற்கும் ஆளாகும் என ஆராய்ச்சி மணியடித்து ஊருக்கு அறிவிக்கிறார். கிட்டிப்புல், கோலி, பம்பரம், கண்ணாமூச்சி கள்ளன் போலீஸ், பாண்டி என எண்ணற்ற கூடி விளையாடும் விளையாட்டுக்கள் காணாமல் போய், வீடியோ கேம்ஸ் போன்ற குழந்தையின் மனநிலைக்கும் எதார்த்தத்திற்கும் சற்றும் சம்மந்தமில்லாத விளையாட்டுக்களே குழந்தைகளுக்கு கிடைக்கின்றன என்பதை யோசிக்க வைக்கிறார். தொலைக்காட்சி போன்ற நவீன சாதனங்கள் பெருகி, திண்ணை கதைசொல்லிகள் காணாமல் போனாலும் குழந்தைகள் கதைகளை சிருஷ்டிப்பதை கூர்ந்து பார்க்கிறார்;. 
     நம்முடைய குழந்தைகளை தொலைக்காட்சி, சினிமா, நடிகர்கள் என யார் யாரோ வளர்க்க அனுமதிக்கும் நாம், என்றாவது நம்முடைய குழந்தைகளை நாம் தான் வளர்க்க வேண்டும் என நினைக்கிறோமா என்ற கேள்வி சுரீரென்கிறது. குழந்தைகளுக்கு கதைகள் மிகவும் பிடிக்கும். கதை கேட்கிறபோது அதை உள்வாங்கும் ஆர்வம், ஒர்முகத்தன்மை, கற்பனை திறன் வளர்ந்து யதார்த்த வாழ்வில் திகைப்பும் அதிர்ச்சியும் குழந்தைகள் அடைவதில்லை எனும் போது நாம் தவற விட்ட தருணங்கள்தான் எத்தனை எத்தனை.
     எல்லா குழந்தைகளையும் அவர்களது படைப்பூக்கம், திறமை, விருப்பம் சார்ந்து அரவணைத்து ஊக்குவிப்பதாக இன்றைய கல்விமுறை இல்லை என சுட்டுவிரலை நீட்டுகிறார். எப்போதும் ஓட்டமும் சாட்டமும் பேச்சும் கேள்விகளுமாய் இருக்கிற குழந்தைகளை, கையில் அடிஸ்கேலுடன் அடக்கி ஒடுக்கி கையை கட்டி வாயை பொத்தி உட்கார வைத்து வசக்கும் நர்சரிகளில் விடும் நிலையை பார்த்து கவலை கொள்கிறார்.
    இப்படி குழந்தைகளிடமிருந்து கேள்விகளை பிடுங்கிவிட்டோம். கேள்விகளில்லா உலகத்தில் அவர்களை ஊமைகளாக்கிவிட்டோம். கேள்விகளின்றி வாழ்க்கையா என கேள்வி கேட்கிறாh; நம்மைப் பாh;த்து. அனைத்தையும் அறியும் தீராத தாகம் வளரும் குழந்தைகளிடம் இருக்கும். அந்த ஆர்வத்தை, குறுகுறுப்பை, அர்ப்பணிப்பை செடியின் வேரில் வெந்நீர் ஊற்றுவது போல முரட்டுத்தனமான கல்விமுறையில் அழிக்கின்றனர். கேள்விகளே இல்லாமல் பதில்களை மட்டும் குழந்தைகளுக்கு  சொல்லிக்கொடுத்து மதிப்பெண் பெற வைக்கின்றனர் என கோபமாய் சொல்லி, எந்தக் குழந்தையும் குதூகலமாக பள்ளிக்குச் செல்வதில்லை  என்பதை காரணத்தோடு பேசுகிறார்.  
     ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு தனித்தன்மையுடன் வளர்கிறது. சமூகத்தின் பொதுப்புத்தியிலுள்ள வேலை, சம்பளம், பாதுகாப்பு போன்றவற்றால் குழந்தைகளின் தனித்தன்மைகளை அலட்சியப்படுத்துகிறோம். பள்ளிகள் உடல் மனோரீதியிலான துன்பங்களை தரும் அதிகாரத்தால், குழந்தைகளின் தனித்தன்மைகளை அழிப்பதாக சொல்லும் கூற்றை நாம் ஏற்கத்தான் வேண்டும். எந்த விமர்சனமுமில்லாமல் சமூகத்தின் அடக்குமுறைகளை சகித்துக்கொள்ளும் பொறுமையை நம்முடைய கல்வித்திட்டம் தருகிறது என இன்றைய சமூக நிலைக்கான காரணங்களை வேர்தேடி போகிறார்.
     பெரும்பாலான குழந்தைகளுக்கு மகிழ்ச்சியில்லை. குழந்தைகள் வீட்டிலும் வெளியிலும் பள்ளிகளிலும் சமூகத்திலும் ஒடுக்கப்படுகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் தங்கள் குழந்தைமையை தொலைத்தவர்கள் என்று சாட்சியாக நின்று சொல்கிறார்.
     குழந்தைகள் மனித இனம் தழைக்க, நீடித்திருக்க வந்த அற்புத மலர்கள். ஒவ்வொரு குழந்தையும் இந்த சமூகத்தின் பொக்கிஷம். அன்பே உருவான அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு சுதந்திரமான பங்கேற்புள்ள கல்வியை அவர்களுக்கு கொடுத்து ஏற்றத்தாழ்வுகளில்லாத சமத்துவமான ஒரு சமூகத்தை அவர்களிடம் கொடுப்பது நம் கடமை என தன் மனக்கிடக்கையை வெளிப்படுத்துகிறார்.
      “குழந்தைகளின் அற்புத உலகில்” என்னும் இந்த அற்புத நூல் ஒவ்வொரு பெற்றோரும் வாசிப்பதன் மூலம், விடியலுக்கான நேரம் நெருங்குகிறது என்பதோடு, முழுவதும் லயிக்காமல் கழித்துவிட்ட தன் குழந்தைமை காலத்தை சீர்தூக்கிப் பார்த்து ஒப்பீடு செய்கிற ஒன்றாகவும் பிரகாசிக்கிறது.
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


Monday, 4 September 2017

மாயக்கண்ணாடிக்கு மூன்றாவது விருது

மாயக்கண்ணாடிக்கு மூன்றாவது விருது


தமுஎகச வழங்கும் கு.சி.பா. சிறுவர் இலக்கிய விருது

” பத்து வயதுக்குட்பட்ட குழந்தையின் உளவியலில் நம்ப முடியாத கற்பனைகளும், அதிசயங்களும் அற்புதங்களும் இன்பத்தை ஏற்படுத்துகின்றன. கிளர்ச்சியடைய வைக்கின்றன. மனதில் திருப்தியை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளின் படைப்பூக்கத்தைத் தூண்டி விடுகின்றன. குழந்தைகளின் தனித்துவமான ஆளுமைக்கு அஸ்திவாரம் போடுகின்றன. வண்ணங்களும், விசித்திரமான, கோமாளித்தனமான, நம்பமுடியாத, கதாபாத்திரங்களும் கதைகளும் குழந்தையின் உணர்வு உலகை விரிக்கின்றன. குழந்தைகள் யதார்த்தத்தில் போலச்செய்வதின் மூலம் தன் படைப்புணர்வை வெளிப்படுத்துகின்றன. அந்தக்கதைகளில் உள்ள கருத்துகளும், அறவிழுமியங்களும் குழந்தைகளின் ஆழ்மனதில் மறைமுகமான கல்வெட்டாய் பதிந்து விடுகின்றன.
பத்து வயதிலிருந்து தர்க்க அறிவு முளைவிடத்தொடங்கிறது. அது வரை உணர்ச்சிமயமாக இருந்த குழந்தைகள் இப்போது தங்களுடைய அறிவு முளைவிடுவதைப் பார்க்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக அறிவின் துணையுடன் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளத்தொடங்குகின்றனர். உலகைப்பற்றி, சமூகம்பற்றி, வாழ்க்கையைப் பற்றி, தனக்கு நேரும் அநுபவங்களைப் பற்றி நல்லது கெட்டது பற்றி கருத்துகளை உருவாக்கத் தொடங்குகின்றனர். வாழ்க்கை, சமூகம், உறவுகள், இவற்றிலுள்ள நுண் அரசியலைப் புரிந்து கொள்ளத்தொடங்குகின்றனர். உடலும் உள்ளமும் உரம் பெறும் பதினைந்து வயதில் தன்னைப் பற்றிய தன்னுணர்வு அதிகமாகிறது. அதுவரை யாரையாவது சார்ந்தே இருந்த குழந்தை தன்னை ஒரு தனிமனிதனாக, தனித்துவமுள்ளவனாக உணரத்தொடங்குகிறது. அந்தத் தன்னுணர்வு  சாகசத்தையும், சவால்களையும், சாதனைகளையும் எதிர்கொள்ளும் துணிவைத் தருகின்றன. அதற்கேற்ற கதைகளையும், படைப்புகளையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதிகாரம் மோசமானது. அதிலும் அளவற்ற அதிகாரம் மிகமிக மோசமானது. இந்த உலகம் அதிகாரத்தின் படிநிலைகளால் கட்டப்பட்டிருக்கிறது. அரசு, சமூகம், குடும்பம், அனைத்திலுமே அதிகாரம் நிரம்பிவழிகிறது. அதிகாரத்தைப் பற்றிய உணர்வின்றி எல்லோரையும் அதிகாரம் செய்ய வைக்கிற நுட்பம் அதிகாரத்துக்கு இருக்கிறது. அதிகாரத்தின் மீதான பேரவா எல்லோர் மனதிலும் ஊற்று நீரென பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரத்தின் மூலம் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் குழந்தைப்பருவத்திலிருந்தே குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுகிறது அல்லது உணர்த்தப்படுகிறது.
பிறந்தவுடன் குழந்தைக்குத் தாயிடமிருந்து கிடைக்கும் அன்பு குழந்தை எதிர்கொள்ளும் முதல் நல்லுணர்வு. என்றால் அதற்கு நேரெதிரான தீய உணர்வாக அதிகாரத்தின் கொடுக்குகளால் கொட்டப்பட்டுக்கொண்டிருப்பது தான். சார்ந்து இருப்பதினாலேயே அதிகாரத்துக்குக் கீழ்ப்படிவது என்பது சின்னஞ்சிறு பருவத்திலேயே தொடங்கி விடுகிறது. அந்தக்குழந்தைப் பருவத்திலிருந்தே எல்லா இடங்களிலும், எப்போதும், ஏதாவது ஒரு வகையில் அதிகாரத்தின் கோமாளித்தனங்களையும், கொடூரங்களையும் அநுபவிப்பவர்களாக குழந்தைகள் ஆகின்றார்கள்.  இதைச் செய்யாதே, இதைச்செய், என்று அதிகாரம் ஆணையிட்டுக்கொண்டேயிருக்கிறது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், வயது மூத்தவர்கள், போவோர், வருவோர், எல்லோரும் குழந்தைகள் மீது அதிகாரம் செலுத்துகிறார்கள். கெடுவாய்ப்பு என்னவென்றால் இதை குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்காகச் செய்கிறோம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் குழந்தைகள் தங்களிடம் உள்ள இயல்பான படைப்பூக்கத்தினால் இந்த அதிகாரத்தைப் பகிடி செய்கிறார்கள். வக்கணை செய்கிறார்கள். அதிகாரமே வெட்கப்படும் அளவுக்கு அவர்கள் கேலி செய்கிறார்கள்.

மாயக்கண்ணாடி தொகுப்பிலுள்ள கதைகள் சிறுவர்களுக்கான கதைகள். அதிகாரத்தின் கோமாளித்தனங்களைப் பற்றிய கதைகள். அதிகாரம் பற்றிய நுண்ணுணர்வினை குழந்தைகளுக்குச் சொல்ல முயற்சிக்கிற கதைகள். அதன் மூலம் அதிகாரத்தின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த யத்தனிக்கும் கதைகள். அந்த விழிப்புணர்வே அன்பெனும் பெருநதியில் குழந்தைகள் எப்போதும் மூழ்கித்திளைக்க வைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட கதைகள். இந்தத் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகளை தமிழ் இந்து இணைப்பிதழான மாயாபஜாரில் வெளியிட்ட திரு. ஆதிவள்ளியப்பன், மிகக்குறைந்த காலஅவகாசத்தில் அற்புதமாக ஓவியங்கள் வரைந்து கொடுத்த ஓவியர் ஆர்.கே.பிள்ளை, அதிசயமான அட்டையை வடிவமைத்து பதிப்பிக்கும் நூல்வனம் பதிப்பாளர் என் அன்புத்தம்பி மணிகண்டன், அனைவருக்கும் என் நன்றி!”

Thursday, 24 August 2017

அப்துல் எங்கே?

 அப்துல் எங்கே?
உதயசங்கர்

“பாத்திமா இன்றும் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் உம்மாவிடம் கேட்டாள்.
“உம்மா, அப்துல் வந்தானா?“
உம்மா அவளைப் பார்த்துச் சிரிக்க முயன்றார். பிறகு பாத்திமாவின் சோகமான முகத்தைப் பார்த்ததும், “இல்லை பாத்திமா, அவன் இனி வரமாட்டான். வளர்ந்துட்டதால அவன் இனத்தோட போய்ச் சேர்ந்திருப்பான்” என்றார்.
பாத்திமாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. படிப்பறைக்குள் நுழைந்தாள். அங்கே இருந்த ஜன்னல் மூடிவைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் வந்தது.
“யாரு இந்த ஜன்னலை மூடிவச்சது? அப்புறம் எப்படி அப்துல் வருவான்?” என்று கத்தினாள். உம்மாவுக்குச் சிரிப்பு வந்தது.
“இந்தப் பெரிய மனுசிக்கு வர்ற கோபத்தைப் பாரு” என்றபடியே அவித்து வைத்திருந்த நிலக்கடலையைப் பாத்திமாவிடம் கொடுத்தார் உம்மா.
நாற்காலியில் ஏறி ஜன்னல் கதவுகளைத் திறந்து கொண்டிருந்தாள் பாத்திமா. எப்போதும் இந்த ஜன்னலில்தான் அப்துல் என்ற அணில் குஞ்சு விளையாடிக்கொண்டிருக்கும். பாத்திமா பள்ளி விட்டு வந்ததும், அவள் தோளில் ஏறி உட்கார்ந்துகொள்ளும். அவள் கொடுக்கிற கடலைப் பருப்பைக் கொறிக்கும். அப்படியே கீழே இறங்கி மேலே ஏறி விளையாடும்.
பாத்திமாவுக்குப் பொழுதுபோவதே தெரியாது. இரவில் அவள் கொடுக்கிற உணவைச் சாப்பிடும். அவளுடைய படுக்கையில் அவளுக்கு அருகில் சுருண்டு படுத்துக்கொள்ளும். அப்துல் அவளுடன் பழகுவதைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள்.
ஒரு நாள் பள்ளி விட்டு வரும்போது, தரையில் இருந்து ‘கீச்கீச்’ என்ற சத்தம் கேட்டது. பாத்திமா சுற்றும் முற்றும் பார்த்தாள். கட்டை விரல் அளவுக்குச் செக்கச்செவேல் என்று கண் திறக்காத ஓர் அணில் குஞ்சு கிடந்தது. அதைச் சுற்றிச் சுற்றித் தாய் அணில் ஓடிக்கொண்டேயிருந்தது. திடீரென்று எங்கிருந்தோ ஒரு காகம் பறந்து வருவதைப் பாத்திமா பார்த்தாள். உடனே ஓடிச்சென்று அணில் குஞ்சைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டாள்.
உம்மாவும் வாப்பாவும் முதலில் அவளைத் திட்டினார்கள். எலிக் குஞ்சைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறாள் என்று கேலி செய்தார் வாப்பா. ஆனால், பாத்திமா அசரவில்லை. வாப்பாவிடம் அடம்பிடித்துக் கடையிலிருந்து ஒரு மையூற்றியை வாங்கி வந்தாள். அந்த அணில் குஞ்சைக் கையில் ஏந்தி, மையூற்றி மூலம் பாலைச் சொட்டுச் சொட்டாக அதன் வாயில் புகட்டினாள். அணில் பாலைக் குடித்தது. அவளுடைய படுக்கைக்குப் பக்கத்தில் பழைய துண்டைச் சுருட்டி, அதில் படுக்கவைத்துக் கதகதப்பாக்கினாள்.
அணில் குஞ்சு அவளுடன் நன்றாக ஒட்டிக்கொண்டது. அவளுடைய சத்தம் கேட்டால் ‘கீச்கீச்கீச்’ என்று ஓங்கிக் குரல் கொடுத்தது. அணில் குஞ்சின் கண்கள் திறந்தன. உடலில் கருஞ்சாம்பல் நிறத்தில் ரோமங்கள் முளைக்க ஆரம்பித்தன. அணில் குஞ்சு அவ்வளவு அழகாக இருந்தது. பாத்திமா அப்துல் என்று பெயரிட்டாள்.
அப்துல் என்று கூப்பிட்ட உடனே எங்கிருந்தாலும் ஓடிவந்து, ஏறி தோளில் உட்கார்ந்துகொள்ளும். பிறகு இருவரும் பொழுதுபோவதே தெரியாமல் விளையாடிக்கொண்டிருப்பார்கள்.
நன்றாக வளர்ந்ததும் அப்துல் வெளியில் போக ஆரம்பித்தது. அருகில் இருந்த வேப்ப மரத்தில் ஏறி மற்ற அணில்களுடன் விளையாடியது. இரவில் பாத்திமாவிடம் வந்துசேர்ந்தது.
ஆனால், திங்கள் இரவிலிருந்து அப்துல் வரவில்லை. பாத்திமா ஏங்கிப் போனாள். வீட்டுக்கு வெளியே சென்று, ‘அப்துல், அப்துல்!’ என்று கூப்பிட்டுப் பார்த்தாள். ஒரு பலனும் இல்லை. பார்க்கிற அணில்களை எல்லாம் அழைப்பாள். ஒரு வாரம் ஆன பிறகும் அப்துல் வந்து சேரவில்லை.
வாப்பா சொன்னார், “பாத்திமா அது தன் இனத்துடன் சேர்ந்திருக்கும். அதுதானே இயற்கை. இனி அதுக்குன்னு ஒரு குடும்பம், மனைவி, பிள்ளை என்று ஆகணும் இல்லையா?”
பாத்திமா புரிந்த மாதிரி தலையாட்டினாள். ஆனாலும் அவளுக்கு வருத்தமாக இருந்தது.
அன்று இரவு அப்துலை நினைத்துக்கொண்டே தூங்கினாள். திடீரென்று அப்துலின் மென்மையான வால் உரசியதுபோல் இருந்தது. சட்டென்று கண் விழித்துப் பார்த்தாள். திறந்திருந்த ஜன்னலில் அவளுக்கும் அப்துலுக்கும் பிடித்த ஒரு கொய்யாப்பழம் இருந்தது!
நன்றி - மாயாபஜார் தமிழ் இந்து

Keyword பா


Thursday, 17 August 2017

தையல்சிட்டின் பாட்டு

தையல்சிட்டின் பாட்டு

உதயசங்கர்

அன்று ஞாயிற்றுக்கிழமை. காலையில் எந்த அவசரமும் இன்றி எழுந்தாள் பிரியா. பேஸ்டும் பிரஷும் எடுத்துக் கொண்டு வீட்டின் புறவாசலுக்கு வந்தாள். பிரியாவின் வீட்டுக்குப் பின்னால் ஒரு சிறிய தோட்டம் இருந்தது. ஒரு எலுமிச்சை மரம், ஒரு தேக்கு மரம், ஒரு பப்பாளி மரம் ஒரு முருங்கை மரம் என்று அடர்த்தியாய் இருந்தது. வெயில் வருவதே தெரியாது. தினசரி அதிகாலையில் குயில்களின் கூகூகூகூ சத்தம் விட்டு விட்டுக் கேட்கும். அதே போல செம்போத்தின் சத்தமும், காகங்களின் கரைதலும், தவிட்டுக்குருவிகளின் சளபுள சளபுள சத்தமும் தேன்சிட்டின் ட்வீக்…ட்வீக்…ட்வீக்.. என்ற சத்தமும், தையல்சிட்டின் ட்ட்ட்ட்ட்டீவீக்… என்ற சத்தமும்  இனிமையான சேர்ந்திசை சங்கீதம் போல கேட்டுக்கொண்டிருக்கும். அதைக் கேட்டுக்கொண்டே தான் பள்ளிக்குப் புறப்படுவாள் பிரியா. ஆகா! நம்ம வீட்டில் தான் எத்தனை உயிர்கள்?
குயிலைப் பார்க்கவே முடியாது. முருங்கையிலோ, தேக்கிலோ மறைந்து நிற்கும். பிரியாவுக்கு அதன் வாலோ, சிறகோ தான் தெரியும். பார்த்து விடலாம் என்று அவள் அசைந்தால் போதும் விருட்டென்று பறந்து விடும். செம்போத்தும் அப்படித்தான். ஆனால் அது பிரியாவின் கண்களை நேருக்கு நேர் பார்த்துவிட்டால் பறந்து விடும். அப்பப்பா செம்போத்தின் கண்களும் சரி, குயிலின் கண்களும் சரி, சிவப்பு என்றால் சிவப்பு அப்படி ஒரு சிவப்பு. தீக்கங்குகளைப் போல ஒளிவீசும். சில சமயம் கொண்டைக்குருவிகளும் வரும். ஓணான்கள் ஒன்றோ இரண்டோ, எலுமிச்சை மரத்தில் ஊர்ந்து எறும்புகளை லபக் லபக் என்று நாக்கை நீட்டி விழுங்கிக் கொண்டேயிருக்கும். கட்டெறும்பு, கடிஎறும்பு, கருப்பு எறும்பு, என்று எறும்புகளும், சின்னச்சின்ன நத்தைக்குட்டிகளும் இருக்கும். பிரியாவின் அப்பா தான் இவற்றை எல்லாம் பிரியாவுக்குக் காட்டிக்கொடுத்தார்.
சாயந்திரம் அலுவலகம் விட்டு வந்ததும் அப்பா புறவாசல் தோட்டத்தில் இருந்த படிக்கட்டில் உட்கார்ந்து பிரியாவை மடியில் உட்கார வைத்து ஒவ்வொன்றாகக் காட்டுவார். ஒவ்வொன்றைப் பற்றியும் அது என்ன செய்கிறது? ஏன் செய்கிறது?  இயற்கை என்னும் அன்னை எத்தனை எத்தனை அற்புதங்களைப் படைத்திருக்கிறாள். பிரியாவுக்கு அப்பா சொல்லச்சொல்ல ஆச்சரியமாக இருக்கும். அவள் முகம் எல்லையில்லாத ஆனந்தத்தில் புன்சிரிப்பைச் சிந்திக் கொண்டேயிருக்கும்.
அப்படித் தான் ஒரு நாள் தேக்கு மரத்தில் உள்ள உயரமான கிளையில், ஒரு தேக்கு இலை சுருண்டிருப்பதைப் பார்த்த பிரியாவின் அப்பா முகத்தில் சிரிப்பு. பிரியா,
“ என்னப்பா நீங்க மட்டும் சிரிக்கிறீங்க?.. எனக்கும் சொல்லுங்க!..”
என்றாள். பிரியாவைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு
“ தையல்சிட்டு நம்ம வீட்டில் கூடு கட்டியிருக்குடா பிரியாக்குட்டி..” என்று சொல்லிச் சிரித்தார். தையல் சிட்டைப் பார்த்திருக்கிறாள் பிரியா. ஆனால் அதன் கூட்டைப் பார்த்ததில்லை. அவளுடைய வீட்டில் தையல்சிட்டின் கூடு! ஐய்! அவளுடைய நண்பர்கள், ஐஸ்வர்யா, ஹாசினி, சில்வியா, ஐயப்பன், ஹிருதிக், எல்லோரிடமும் சொல்லுவாள். அவர்களுடைய வீடுகள் எல்லாம் அபார்ட்மெண்ட் வீடுகள் என்பதால் அவர்களுக்கு பிரியா சொல்கிற ஒவ்வொரு விஷயமும் ஆச்சரியமாய் இருக்கும்.
வீட்டு மொட்டைமாடிக்குக் கூட்டிக் கொண்டு போனார் அப்பா. அங்கிருந்து பார்க்கும்போது தையல்சிட்டின் கூடு நன்றாகத் தெரிந்தது. எவ்வளவு அழகாக இலையின் இரண்டு பக்கங்களையும் சேர்த்து தன்னுடைய கூர்ந்த மூக்கினால் தைத்திருக்கிறது. உள்ளே நார்களைக் கிழித்துக்கிழித்து பஞ்சு மாதிரி மெத்தையாக்கி வைத்திருந்தது தையல்சிட்டு. அவளைச் சற்றுத்தூக்கிக் காட்டினார் அப்பா. மொச்சைக்கொட்டை மாதிரி இரண்டு முட்டைகள் இருப்பதைப் பார்த்தாள் பிரியா.
“ அப்பா முட்டை! முட்டை!..” என்று கூவினாள். அப்போது எங்கிருந்தோ தையல் சிட்டுகள் பறந்து வந்தன. ஒவ்வொரு கிளையாக உட்கார்ந்து பிரியாவையும் அவளுடைய அப்பாவையும் சந்தேகத்துடன் பார்த்துக் கத்தின. அப்பாவும் பிரியாவும் அப்படியே அசையாமல் நின்றார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு அவர்களால் ஆபத்து இல்லை என்று தெரிந்து கூட்டில் போய் உட்கார்ந்தது பெண் தையல்சிட்டு. பிரியாவும், அப்பாவும் அப்படியே சத்தம் காட்டாமல் நழுவி விட்டார்கள்.
இப்போது என்ன நடந்திருக்கும்? கூட்டில் உள்ள முட்டைகள் எப்படியிருக்கும்? குஞ்சு பொரித்திருக்குமா? தையல்சிட்டின் முட்டைகளே இத்துணூண்டு இருந்தால் அதன் குஞ்சுகள் எப்படியிருக்கும்? பிரியாவுக்கு ஆர்வம் கூடிக்கொண்டே போனது. அவள் பல் தேய்த்துக் கொண்டே யோசித்தாள். அப்பாவிடம் கேட்க வேண்டும்.
அவள் வாய்க்கொப்பளித்து விட்டு அம்மா கொடுத்த பாலைக் குடித்து விட்டு அப்பாவைத் தேடினாள்.
“ அம்மா! அப்பாவை எங்கேம்மா?..”
“ மேலே மாடிக்குப்போனாரு..பாரு..”
பிரியா மெல்ல மாடிப்படி ஏறினாள். அப்பா மொட்டைமாடியில் நின்று கொண்டிருந்தார். பிரியா மாடிப்படி ஏறி வருகிற சத்தத்தை முன்னாலேயே கேட்டு விட்டார் அப்பா. ஆனால் கேட்காத மாதிரி இருந்தார். பிரியா அப்பாவின் பின்னால் போய் “ பேவ்வ்வ் “ என்று கத்தினாள். அவளுடைய சத்தத்தைக் கேட்டு “ ஆஆஆ..” என்று பயந்தமாதிரி நடித்தார் அப்பா. இரண்டுபேரும் சிரித்துக் கொண்டனர்.
“ அப்பா.. குஞ்சு பொரித்திருக்குமா? “
“ என்ன குஞ்சு? “
“ ஐயோ மக்கு அப்பா… அந்தத் தையல்சிட்டு குஞ்சு பொரித்திருக்குமா? “
அதைக்கேட்ட அப்பா முகத்தில் ஒரு சிறு வருத்தம் வந்தது.
“ இல்லைடா பிரியாக்குட்டி! அதோட முட்டைகளை ஒருத்தன் திருடிக்கிட்டுப் போயிட்டான்..”
“ ஏம்ப்பா திருடினான்? தையல்சிட்டு பாவம் இல்லையா? “
“ அவனும் சாப்பிடணும் இல்லையா..”
“ அவன் ஏன் முட்டையைச் சாப்பிடணும்… சோறு, குழம்பு, சாப்பிட வேண்டியதானே..”
என்று முகத்தைச் சீரியசாக வைத்துக் கொண்டு கேட்டாள் பிரியா. அவளுடைய தீவிரமான முகத்தைப் பார்த்த அப்பாவுக்குச் சிரிப்பு வந்தது.
“ சோறு குழம்பு எல்லாம் நமக்குத்தான்.. அவனுக்கு எறும்பு, பூச்சி, முட்டைகள், தான் பிடிக்கும்… நாக்கை நீட்டி லபக்குனு முழுங்கிரும்..”
“ நான் அந்தத் திருடனைக் கண்டுபிடிச்சிட்டேன்…. ஓணான் தானே!. அவங்கூட காய்...”
“ அவன் திருடன் இல்லை… பிரியாக்குட்டி! இயற்கை அன்னை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி வாழக்கத்துக்கொடுத்திருக்கா… சின்னப்புழு..பூச்சி..எறும்பிலிருந்தே… பெரிய யானை, புலி, சிங்கம், மனுசன் வரை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி உணவுப்பழக்கம்.. ஓணானோட பழக்கம் அது.. ”
 கன்னத்தில் கைகளை ஊன்றிக் கொண்டு  அப்பா சொல்வதைக் கவனமாகக் கேட்டாள். அவளுக்குப் புரியவில்லை என்றாலும் புரிந்தமாதிரி தலையாட்டிக் கொண்டாள்.
“ ஓணான் இல்லைன்னா எறும்புகளையோ, பூச்சிகளையோ, கட்டுப்படுத்தமுடியாது..ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வேலை.. அதுதான் அவங்க வாழ்க்கை…”
என்று சொல்லிய அப்பா பிரியாவை அப்படியே தூக்கி கன்னத்தில் முத்தமிட்டார். பிரியா நெளிந்தாள்.
“ கூச்சமாருக்கு..மீசை கிச்சுகிச்சு மூட்டுது..”
என்று சொன்னாள். அப்போது திடீரென,
” ட்வீக்…ட்வீக்..ட்வீக்…ட்வீக்..” என்ற சத்தம் கேட்டது.
தையல்சிட்டுகள் இரண்டும் அவர்களுடைய கூட்டைச் சுற்றிச் சுற்றி வந்தன. கிளையில் உட்கார்ந்து மறுபடியும் மறுபடியும்
“ ட்வீக்…ட்வீக்..ட்வீக்..” என்று கத்தி விட்டுப் பறந்து போய் விட்டன. அந்தக்குரலில் இருந்த பரிதவிப்பு என்னவோ செய்தது. அப்பா அமைதியாக இருந்தார். பிரியா கேட்டாள்.
” தையல்சிட்டு என்னப்பா சொல்லுது..? “
”  தன்னோட முட்டைகளைக் காணோம்னு பாட்டுபாடிட்டுப் போகுது..”
“ பாட்டா? “
“ கண்ணே என் கண்மணியே
எங்க எங்க முட்டையிட்டே?
ஏழு கடல் ஏழு மலை தாண்டி
தேக்கிலையில் முட்டையிட்டேன்..
தேக்கிலையில் இட்ட முட்டை
தேன்போல இனிக்கும் முட்டை
காணாமப்போனது என்ன?
கண்ணே! என் கண்மணியே!
கள்ளன் வந்து தூக்கினானே
நம்ம கனவு எல்லாம் பொசுக்கினானே
வேற ஒரு இடம் தேடி
நம்ம குஞ்சுகளை நாம் பொரிப்போம்..”
அப்பா பாடி முடிக்கும் போது பிரியா அழுது விடுவதைப் போல இருந்தாள். அதைப்பார்த்த அப்பா,
“ அந்தா பாரு.. பிரியாக்குட்டி! காக்காக்கூடு கட்டுது..!”
பிரியா திரும்பிப் பார்த்தாள். தேக்குமரத்தின் உச்சிக்கிளையில் இரண்டு காகங்கள் குச்சிகளை அடுக்கிக் கொண்டிருந்தன.
“ ஐய்! காக்காக்கூடு! காக்காக்கூடு!..” என்று கை தட்டினாள் பிரியா.



 நன்றி - புதிய தலைமுறை கல்வி

Sunday, 13 August 2017

ஓடிப்போன வானவில்

ஓடிப்போன வானவில்

உதயசங்கர்

உலகிலுள்ள நாடுகளுக்கு வானவில்லூர் நாட்டின் மீது கோபம். வானவில் தேவதை வானவில்லூர் நாட்டிலேயே தங்கி விட்டாள். ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு நாட்டுக்குப் பயணமாக வானவில்தேவதை போவாள். வானவில் தேவதையைப் பார்த்த உடனேயே மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஏனென்றால் வானவில்தேவதை வந்து விட்டால் மழைத்தேவதையும் பின்னாலேயே தூறல் போட்டுக் கொண்டே வந்து விடுவாள். அதனால் நாடு செழிக்கும். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் இப்போது ஒன்றிரண்டு வருடங்களாக வானவில்தேவதை எங்கும் வெளியே பயணம் போகாமல் வானவில்லூர் நாட்டிலேயே தங்கி விட்டாள். அதனால் வானவில்லூர் நாட்டில் எப்போதும் வானவில் தெரியும். எப்போதும் மழை பெய்யும். வானவில்லூர் நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.
வானவில்தேவதை அங்கேயே இருப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா?. வானவில்லில் எத்தனை நிறங்கள் இருக்கின்றன? கருநீலம்,நீலம், ஊதா, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, என்று ஏழு நிறங்கள் இருக்கின்றன. அதே மாதிரி வானவில்லூர் நாட்டில் சிமிழ், பந்தி, கலுங்கு, தலையாளம், பன்னடம், உங்காலி, எராத்தி, என்று ஏழு மொழி பேசும் மக்கள் சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள்.
ஒவ்வொரு மொழி பேசும் மக்களிடம் ஒவ்வொரு விதமான பழக்கவழக்கங்கள் இருந்தன. சிமிழ் பேசும் மக்களின் உணவு, உடை, திருவிழா, எல்லாம் ஒரு விதம். இட்லி சாப்பிட்டார்கள். வேட்டி கட்டினார்கள். மாரியம்மாளுக்குப் பொங்கல் வைத்தார்கள். பந்தி மொழிக்காரர்கள் சப்பாத்தி சாப்பிட்டார்கள். குர்தா அணிந்தார்கள். சிவனையோ, ராமனையோ, கும்பிட்டார்கள். உங்காலி மொழிபேசும் மக்கள் சந்தேஷ் இனிப்பு சாப்பிட்டார்கள். பைஜாமா அணிந்தார்கள். காளியை வணங்கினார்கள். தலையாளம் மொழி பேசும் மக்கள் புட்டு, பயறு, கப்பக்கிழங்கு சாப்பிட்டார்கள். கதகளி, தெய்யம் ஆடினார்கள். இப்படி ஒவ்வொரு மொழி பேசும் மக்களின் பழக்கவழக்கங்கள் வேறு வேறு மாதிரியாக இருந்தாலும் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து மகிழ்ந்தார்கள். யாரிடமும் எந்த பொறாமையும் இல்லை. ஒருவர் உயர்ந்தவர் என்றோ ஒருவர் தாழ்ந்தவர் என்றோ யாரும் நினைக்கவில்லை. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒவ்வொரு மொழி பேசும் ராஜா ஆட்சி செய்து வந்தார். இதையெல்லாம் பார்த்த வானவில்தேவதைக்கு வானவில்லூர் நாடு ரெம்பப் பிடித்து விட்டது.
ஒவ்வொரு மொழி பேசும் மக்களின் வீட்டில் ஒவ்வொரு நாள் தங்கி இருந்தது. வானவில்தேவதை இருந்ததால் நாட்டில் ஆண்டு முழுவதும் மழை பொழிந்தது. நாடு செழித்தது.
இந்த ஆண்டு பந்தி மொழி பேசும் டிமோந்திரர் என்று ஒருவர் வானவில்லூர் நாட்டுக்கு ராஜாவானார். அவருக்கு மற்ற மொழிகளைப் பிடிக்காது. மற்ற மொழி பேசும் மக்களை தாழ்ந்தவர்களாக நினைத்தார். பந்தி மொழிக்காரர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டவர். அதனால் எப்போதும் பந்தி மொழி பேசுபவர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைத்தார். அதனால் அவர் வானவில்லூர் நாடு முழுவதும் முரசறைந்து அறிவிக்கச்சொன்னார்.
“ இனி எல்லோரும் பந்தி மொழி மட்டும் தான் பேச வேண்டும். பந்தி மொழி பேசினால் மட்டுமே அரசாங்கவேலை கிடைக்கும். பந்தி மொழி பேசினால் மட்டும் உணவகங்களில் உணவு கிடைக்கும். பந்தி மொழி தெரிந்தால் மட்டுமே அரசின் உதவிகள் கிடைக்கும். எல்லோரும் பந்தி மொழிப்பழக்கவழக்கங்களைத் தான் கடைப்பிடிக்க வேண்டும். பாவ்பாஜி, பானிபூரி, பேல்பூரி, சப்பாத்தி தான் சாப்பிட வேண்டும். இனி எப்போதும் பந்தி மொழிக்காரர்கள் தான்  ஆட்சி செய்ய வேண்டும்..”
சிமிழ், கலுங்கு, தலையாளம், பன்னடம், உங்காலி, எராத்தி, மொழிபேசும் மக்கள் இந்த அறிவிப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள் ராஜா டிமோந்திரரிடம் போய் முறையிட்டார்கள்.
“ அரசே! அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.. வேற்றுமையில் ஒற்றுமை அதுதான் வானவில்லூரின் தாரக மந்திரம். உங்களுடைய அறிவிப்பினால் மக்களுக்குள் வேற்றுமை வளரும்.. மொழிச்சண்டை, இனச்சண்டை, மதச்சண்டை என்று மக்களுக்குள் பிரிவினை வளர்ந்து விடும். அது நாட்டுக்கு நல்லதில்லை.. “
ஆனால் ராஜா டிமோந்திரர் அதைக் கேட்கவில்லை.
மறுநாளில் இருந்து வானவில்லூர் நாட்டின் அனைத்து நடவடிக்கைகளும் பந்தி மொழியில் இருந்தன. மக்களுக்குப் புரியவில்லை. குழம்பிப் போனார்கள். ஒருவருக்கொருவர் சண்டையிட்டார்கள். அங்கங்கே போராட்டங்கள் வெடித்தன. மக்கள் வீதிகளில், கடற்கரைகளில் கூடிப் போராடினார்கள். மக்கள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. அதைப்பார்த்த வானவில்தேவதைக்கும் மகிழ்ச்சி இல்லை. அவள் வானவில்லூர் நாட்டை விட்டு பறந்து போய்விட்டாள். அவள் போனதும் வானவில்லின் ஏழுநிறங்களான கருநீலம், நீலம், ஊதா, மஞ்சள், சிவப்பு, பச்சை, ஆரஞ்சு எல்லாநிறங்களும் வானவில்லூர் நாட்டை விட்டுப் போய் விட்டன. வானவில்லூர் சாம்பல் நிறமாக மாறிவிட்டது. அதன் பிறகு வானவில்லூர் நாட்டில் மழை பெய்யவில்லை. வயல்கள் காய்ந்தன. ஆறுகள், குளங்கள், கண்மாய்கள், குட்டைகள், எல்லாம் வறண்டன. மக்கள் எல்லோரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.
அதுவரை வண்ணமயமாய் ஒளிவீசிக் கொண்டிருந்த வானவில்லூர் நாட்டில் கருப்பாய் இருட்டும், வெள்ளையாய் வெளிச்சமும் மட்டும் இருந்தன. மற்ற எந்த நிறங்களும் அங்கே இல்லை. வண்ணங்கள் இல்லாததால் குழந்தைகள் வாடிப்போனார்கள்.  வண்ணப்பொம்மைகளோ, வண்ண மலர்களோ, வண்ணத்துப்பூச்சிகளோ, எதையும் பார்க்க முடியவில்லை. அழுதார்கள். நாட்டில் எல்லோரும் வருத்தத்துடன் இருந்தனர். எல்லோரும் வானவில்தேவதையை மீண்டும் வரச்சொல்லி வேண்டினார்கள். மன்றாடினார்கள். பொங்கல் பூசை வைத்தார்கள். ஆனால் வானவில்தேவதை வரவில்லை.
நாட்டில் பஞ்சம் வந்து விட்டது. அதுவரை மற்ற நாடுகளுக்கு அனைத்துப்பொருட்களையும் ஏற்றுமதி செய்து கொண்டிருந்த வானவில்லூர் நாடு இப்போது வறுமையில் வாடியது. எல்லாப்பொருட்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளாகி விட்டது. அரண்மனை கஜானாவில் பணம் இல்லை. ராஜா டிமோந்திரருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
ஒருநாள் இரவு ராஜா டிமோந்திரர் கனவில் பந்திமொழித்தேவதை வந்தாள்.
“ டிமோந்திரா..உலகில் ஆறாயிரம் மொழிகள் உள்ளன. மக்கள் பேசும் எந்த மொழியாக இருந்தாலும் உயர்வு தாழ்வு இல்லை. நாங்கள் அனைவரும் சகோதரிகள். எங்களுக்குள் எந்த பேதமும் இல்லை. உன் எண்ணத்தை மாற்றிக்கொள். நாடு வளம் பெறும். “
என்று சொன்னாள். திடுக்கிட்டு எழுந்த ராஜா டிமோந்திரர் உடனே அந்த ராத்திரியிலே
 ” வானவில்லூர் நாட்டில் முன்பு மாதிரியே எல்லாமொழிகளுக்கும் சம உரிமையும், தகுதியும் வழங்கப்படும். எல்லா மொழிகளும் அரசு மொழியாக அங்கீகரிக்கப்படும். “
என்று எல்லா ஊர்களிலும் எல்லாத்தெருக்களிலும் முரசறைந்து அறிவித்தார்.
மறுநாள் காலையில் வானவில்லூர் நாட்டில் வானவில் தோன்றியது. லேசான தூறல் போட ஆரம்பித்தது. வானவில்லூர் நாட்டு ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தெருக்களில் இறங்கி மழையில் குதியாட்டம் போட்டனர்.

வானத்தில் இருந்து வானவில் தேவதை அதைப்பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

நன்றி- வண்ணக்கதிர்

Friday, 4 August 2017

ஆனைக்கிணறு தெரு

ஆனைக்கிணறு தெரு

உதயசங்கர்
பதினைந்து வருடங்களுக்குப்பின்னால் ஊருக்குத் திரும்புகிறான் சுந்தர். ஒன்றுவிட்ட சித்தப்பா இறந்த துஷ்டி கேட்பதற்காக இந்த ஊருக்கு மீண்டும் வரவேண்டியதாயிற்று. அடையாளம் தெரியாதபடிக்கு ஊரின் முகம் மாறிவிட்டது. பேரூந்திலிருந்து இறங்கி நூறுமீட்டர் தூரம் நடந்து சென்று வலது புறம் திரும்பினால் ஆனைக்கிணறு தெரு. இடிந்த கட்டைமண் சுவர் தான் தெருவைத் தொடங்கிவைக்கும். அதற்கு அடுத்தபடியாக தகரக்கொட்டாய் போட்ட கரீம்பாய் டீக்கடை. எப்போதும் டீயும் வடை தினுசுகளும் கலந்து தெருவே மணத்துக்கிடக்கும். நீண்ட தாடி வைத்த கரீம்பாய் ஒரு நொடி கூட நிற்காமல் ஆடிக்கொண்டேயிருப்பார்.  தலையாட்டி பொம்மை பக்கவாட்டில் ஆடுவதைப்போல லேசான ஆட்டத்துடனே டீ ஆத்துவார். வடை போடுவார். பேசுவார். காசுவாங்கி கல்லாவில் போடுவார். சுந்தருக்கும் அவனுடைய சேக்காளிகளான மணி, மாரியப்பன், இவர்களுக்கு மட்டும் எப்போதும் டீ கடன் தான். ஒரு சமயம் கூட காசு கொடுத்துக் குடித்ததில்லை. கரீம் பாய் எப்போது காசு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார். கணக்குப் பார்த்த மாதிரியே தெரியாது. அவர்கள் தான் கணக்கு நோட்டில் எழுதுவார்கள். கொடுக்கும்போது கழித்து எழுதுவார்கள். கரீம் பாயின் ஏலக்காய் டீயும், செய்யது பீடியும், தகிக்கும் அந்தத்தகரக்கொட்டாயும் அருகிலேயே இருந்த கட்டைமண் சுவரும், அவர்களுடைய வாழ்க்கையில் எத்தனையெத்தனை கனவுகளை சிருஷ்டித்திருக்கும்.
இப்போது தெருவின் துவக்கத்தில் ஆனைக்கிணறு தெரு என்று நீலநிறபலகை அம்புக்குறி போல விரலை நீட்டிக்கொண்டிருந்தது. அப்போது எந்தப்பலகையும் கிடையாது. ஆனால் ஊருக்கே தெரியும். ஆனைக்கிணறு தெரு. சுந்தர் பிறந்து வளர்ந்தது இந்தத்தெருவில் தான். இந்தத் தெருவின் ஒவ்வொரு அடியிலும் அவனுடைய பாலியகால வாழ்வின் ரேகைகள் அடர்த்தியாய் அப்பிக்கிடந்தன. வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்று யாராவது கணித்துச் சொல்லிவிட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்குமா என்ன?
 அப்பாச்சியின் மரணம் தான் சுந்தரின் மனதில் விழுந்த முதல் அடி. அதற்குப்பின் மிகக்குறுகிய காலத்திற்குள் சுந்தரின் அப்பா திடீரென இறந்து குடும்பத்துக்கு அதிர்ச்சியளித்தார். அவர் குடும்பத்துக்காகவும், அவருக்காகவும் வாங்கி வளர்த்து வந்த கடன்கள் பெரும்பாறைகளென உருண்டு வந்து குடும்பத்தின் முன்னால் உட்கார்ந்து கொண்டன. மூச்சு விடவும் நேரம் இல்லாமல் கடன் கொடுத்தவர்கள் கொத்திக்கொண்டிருந்தார்கள்.  சுந்தரும் அம்மாவும் கலியாணத்துக்குக் காத்திருந்த அக்கா செம்பாவும் ஒரு ஐந்தாம்பிறை இரவில் ஆனைக்கிணறுத்தெருவை விட்டு தலைமறைவானார்கள். அவர்களுடைய குச்சுவீட்டுக்கு ஒட்டி ஓடிய வாய்க்கால் முடியும் இடத்தில் இருந்தது ஆனைக்கிணறு. அந்த ஆனைக்கிணறு சாட்சியாகத்தான் ஓடிப்போனார்கள். அதில் தான் அம்மா, அக்கா, ஏன் அப்பாச்சி கூட அவளுடைய சிறுவயதில் குடிதண்ணீர் எடுத்தார்கள்.
நல்ல உயரமான சுற்றுச்சுவருடன் உயரமான மேடை கட்டி ஆனைக்கிணறு கம்பீரமாக இருக்கும். சுற்றிலுமிருந்த பத்து தெருக்களுக்கு குடிதண்ணீர் கொடுத்தது ஆனைக்கிணறு தான். எப்போதும் பெண்கள் கூட்டம் மொய்த்துக்கிடக்கும். கிணற்றின் இரண்டு பக்கமும் இரண்டு உருளிகளில் நல்ல வடக்கயிறு தகரவாளியுடன் கிடக்கும். அதுபோக ஏராளமான பேர் சொந்தமாகக் கயிறும் வாளியும் போட்டு இறைத்துக் கொண்டிருப்பார்கள். இரவும் பகலும் இறைப்பு நடந்து கொண்டேயிருக்கும். பத்து தெரு பெண்களையும் ஆனைக்கிணற்றில் பார்க்கலாம். அதனால் அந்தப்பத்து தெருவிலிருக்கும் ஆண்களையும் அங்கே பார்க்கலாம். அநேகமாக வீட்டிலிருக்கும் அத்தனை பேருமே தண்ணீர் சுமந்தார்கள். குழந்தைகள் நடைபழகியதுமே சின்னச் செப்புக்குடங்களை அல்லது சொம்புகளை அல்லது  தகரக்குடங்களை இடுப்பில் வைத்து தண்ணீர் எடுத்து விளையாடினார்கள். கொஞ்சநாட்களில் அந்தக்குடங்களோடு ஆனைக்கிணற்றுக்கு வந்து விட்டார்கள். வீட்டில் இருக்கும் நாலைந்து சிமெண்டு தண்ணீர்த்தொட்டிகளில் நிறைந்திருக்கும் தண்ணீரில் குழந்தைகள் எடுத்து வரும் ஒரு சொம்புத்தண்ணீரும் தன் பங்காக விழுந்திருக்கும்.
சுந்தர் பள்ளிக்கூடம் படிக்கும்போது அம்மாவிடம் கேட்டிருக்கிறான்.
“ ஏம்மா அந்தக்கிணறுக்கு ஆனைக்கிணறுன்னு பேரு வந்தது..”
“ சித்திரைத்திருளா வரும்போது தென்காசியிலிருந்து யானை வரும். அந்த யானை நம்மூருக்கு வந்தா எப்பவும் இங்கதான் தண்ணி குடிக்கும்.. அதனால ஆனைக்கிணறுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க..”
என்று சொன்னாள். ஆனால் தன்னுடைய பாம்படக்காதுகளை ஆட்டிக்கொண்டே வேறு ஒரு கதை சொன்னாள் அப்பாச்சி. செண்பகக்கோட்டை ராஜாவுக்கு தெய்வானை என்று ஒரு மகள் இருந்தாள். அழகும் அறிவும் நிறைந்த அவளுக்குக் கலியாணம் முடிக்க எட்டுத்திசையும் பொருத்தமான இளவரசனைத்தேடி ஆள் அம்பு பரிவாரங்களை அனுப்பி வைத்தான் ராஜா. ஆனால் பாவி மகள் இளவரசிக்கு ராஜாவின் படையில் ஒற்றுவேலை பார்த்துக்கொண்டிருந்த வீரன் என்ற பகடை மீது ஆசை. பகடைக்கும் இது தெரியும். அவனும் அப்படியிப்படி இளவரசி கூட பழகினான். ரகசியம் வெளியாகிவிட்டது. இளவரசி தான் காட்டிக்கொடுத்துவிட்டாள். அவள் வீரனோடு பழகியதில் சூலியாகி விட்டாள். அவ்வளவு தான் ராஜாவுக்கு தன்னுடைய பரம்பரை இழிவு பட்டதாக நினைத்தான். அப்போது எல்லாம் புரோகிதர்கள் வைச்சது தான் சட்டம். உடனே அவர்கள் தான் பரம்பரை இழிவைப்போக்க வழி சொன்னார்கள். வீரனைப் பிடிக்க முடியவில்லை. அவன் தப்பித்து விட்டான். இதுவரை அவன் போக்கிடம் எதுவெனத் தெரியாது. ஆனால் பாவம் இளவரசி.
வறண்ட பொட்டலாகக் கிடந்த இந்த இடத்தில் ஒரு கிணறு தோண்டச்சொன்னான் செண்பகக்கோட்டை ராஜா. அந்தக்கிணற்றில் ஒரு சொட்டு தண்ணீர் ஊறவில்லை. புழுதி பறந்தது. வறண்ட அந்தக்கிணற்றில் ஒரு குடம் புனித நீரை ஊற்றச் சொன்னார்கள் புரோகிதர்கள். இளவரசி தெய்வானையும் அவர்கள் சொன்னபடியே புனிதநீர்க்குடத்தைச் சுமந்து கொண்டு கிணற்றருகில் சென்றாள். அவள் குனிந்து ஊற்றிக்கொண்டிருக்கும் போது பின்னாலிருந்து யாரோ தள்ளி விட்டமாதிரி இருந்தது. அவள் வீரா என்று அலறியபடி உள்ளே விழுந்தாள். அவளுடைய அலறல் சத்தம் அடங்குவதற்குள் கிணற்றின் தூரில் அடைபட்டிருந்த ஊற்றுகளின் கண்கள் திறந்தன. அருவியிலிருந்து சோவென நீர் பாய்ந்து விழுவதைப்போல ஊற்றுகளிலிருந்து நீர் மேல்நோக்கி எழுந்தது. கிணற்றின் விளிம்பு வரை நீர் ததும்பியது. ஆனால் உள்ளே தள்ளிவிடப்பட்ட இளவரசி தெய்வானையைக் காணவில்லை. எப்படி மாயமாய் மறைந்தாள் என்று யாருக்கும் தெரியவில்லை. அதைப்பார்த்த புரோகிதர்கள் ஊரை விட்டே ஓடி விட்டார்கள். முதலில் தெய்வானைக்கிணறாக இருந்தது நாளாவட்டத்தில் ஆனைக்கிணறாகி விட்டது என்று சொன்ன அப்பாச்சி இடுப்பிலிருந்து பொடிமட்டையை எடுத்துப்பிரித்து ஆட்காட்டி விரலையும் கட்டைவிரலையும் சேர்த்து ஒரு சிட்டிகை பொடியை அள்ளியெடுத்து மூக்கில் திணித்தாள். சுந்தருக்கு அடுத்து என்ன நடக்கும் என்று தெரியும். அவன் எழுந்து பையன்களிடம் இந்தக்கதையைச் சொல்லத் தெருவுக்கு ஓடினான்.
ஆண்டு முழுவதும் இரவும் பகலும் இறவையாகிக் கொண்டிருக்கும் ஆனைக்கிணறு. இரவும் பகலும் பெண்களின் பேச்சு, சிரிப்பு, கோபம், அழுகை, சண்டை, காதல், என்று ஒரு மனிதச்சந்தையின் அத்தனை குணாதிசயங்களையும் ஆனைக்கிணற்று மேடையில் பார்க்கலாம். ஆனால் அத்தனை சத்தமும் இல்லாமல் மயானமாக சிலநாட்கள் ஆனைக்கிணறு மாறிவிடும். ஆளரவம் இல்லாமல் சின்னச்சத்தம் கூட பெருங்கூப்பாடாகக் கேட்கும் நாள் வந்தது என்றால் ஆனைக்கிணற்றில் யாரோ ஒரு பெண் மிதக்கிறாள் என்று அர்த்தம். அவன் பலதடவை பார்த்திருக்கிறான். தண்ணீரில் தலைமுடி மிதந்தலைய, புடவையின் முந்தானை விழுந்த பெண்ணின் துயரைச்சொல்வதைப்போல மேலும் கீழும் முங்கி எழுந்து கொண்டிருக்கும். அந்தக்காட்சி அவன் கண்களை விட்டு அகல ரெம்ப நாட்களாகும். அவர்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இருந்த ராணியக்கா ஒரு நாள் காலையில் ஆனைக்கிணற்றுக்குள் கிடந்தாள். கால்களைக் கயிற்றால் கட்டியிருந்தாள். புடவையை நன்றாகக் கழுத்துவரை இறுக்கியிருந்தாள். உடலை வெளியே எடுத்துப்போட்டிருந்தார்கள். அவளுடைய புருஷன் முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லை.
ராணியக்கா வேலை பார்க்கிற தீப்பெட்டிக்கம்பெனியில் கூட வேலைபார்க்கிற ஒரு ஆணோடு தொடர்பு படுத்திப் பேசியிருக்கிறான் அவளுடைய புருஷன். அவளால் தாங்க முடியவில்லை.  
பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த பேச்சியம்மாள் தன் கைக்குழந்தையோடு ஆனைக்கிணற்றில் விழுந்து இறந்துபோனாள். பக்கத்துவீட்டுக்காரி தன்னுடைய பிள்ளையை திட்டிவிட்டாள் என்ற கோபம் அவளுக்கு. மேட்டுத்தெருவில் இரவில் தனியாக வந்த பெண்ணைப்பலவந்தப்படுத்தி, கையையும் காலையும் கட்டிக்கொண்டு வந்து ஆனைக்கிணற்றில் போட்டு விட்டார்கள். யார் என்றே தெரியவில்லை. தெப்பக்குளத்தெருவில் இருந்து வந்து அக்கா, தங்கை, இரண்டுபேரும் ஒருவரையொருவர் சேர்த்து கட்டிக்கொண்டு விழுந்து இறந்துபோனார்கள். ஆனைக்கிணறு மரணக்கிணறாக மாறிக்கொண்டிருந்தது. மாசம் ஒருத்தர் இறந்து போனார்கள்.  கணவனுடன் சண்டை, பக்கத்துவீட்டுக்காரியின் ஏச்சு, கள்ளக்காதல், குழந்தைகள் சண்டை, கடன் தொல்லை, இப்படியே ஆயிரம் காரணங்கள் இருந்தன. எல்லாக்காரணங்களின் முடிவில் ஒரு பெண் ஆனைக்கிணற்றில் மிதந்தாள். ஊரில் பத்து கிணறுகள் இருந்தன. ஆனால் எல்லாத்தெருப்பெண்களும் ஆனைக்கிணற்றிலேயே தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொண்டனர்.
நிறைய்ய வீடுகளில் பெண்கள் சாமியாடினார்கள். தெய்வானை வந்திருப்பதாகச் சொன்னார்கள். ராணி வந்திருப்பதாகச் சொன்னார்கள். பேச்சியம்மாள் வந்திருப்பதாகச் சொன்னார்கள். அதைச்செய் இதைச்செய் என்று ஆணையிட்டார்கள். என்ன செய்தும் ஆனைக்கிணற்றின் பசி அடங்கவில்லை. மேலும் மேலும் உடல்களை காவு வாங்கிக்கொண்டேயிருந்தது. அப்பாச்சிக்கும் சாமி வந்தது. தலையை விரித்துப்போட்டு உட்கார்ந்த நிலையிலேயே ஆடினாள். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்  ஊஊஊஊஊ ஆஆஆஆஆ என்று வாயால் காற்றை ஊதினாள். அம்மா பயபக்தியுடன் அப்பாச்சி முன்னால் நின்று கும்பிடுவதை முதல் முறையாகப் பார்த்தான் சுந்தர். ஒரு நாளும் அம்மா அப்பாச்சியைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. எப்போது அவளைப்பார்த்து விட்டாலும் வெளியில் யாருக்கும் கேட்காதபடிக்கு வைவாள். அவள் வைவது அப்பாச்சிக்குத் தெரியும். ஆனால் ஏதாவது விசேச நாட்கள் என்றால் அப்பாச்சிக்கு சாமி வந்து விடும். அப்போது அம்மா உண்மையான பக்தியுடன் அப்பாச்சியின் காலில் விழுந்து திருநீறு பூசிக்கொள்வாள். இப்போது தெய்வானை பழிவாங்குகிறாள் என்று அப்பாச்சி சொன்னாள். நூத்தியெட்டு தேங்காயை உடைத்து சேலைஎடுத்து வைத்து கும்பிட வேண்டும் என்று சொன்னாள். தெருக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து காசு பிரித்து அதையும் செய்து பார்த்தார்கள்.
 சுந்தர் ஒருநாள் சாதாரணமாக அப்பாச்சியிடம் கேட்டான்.
“ ஏன் அப்பாச்சி பொம்பிளங்க மட்டும் ஆனைக்கிணத்துல விழுந்து சாகறாங்க. அவங்க செத்தா எல்லாம் சரியாயிருமா? .”
அதைக்கேட்டதும் அப்பாச்சி கொஞ்சநேரத்துக்கு எதுவும் பேசவில்லை. அவளுடைய கண்கள் கலங்கின. கண்களைத் துடைத்துக்கொண்டே,”
“ பொம்பிளங்கள படைச்ச கடவுளும் ஆம்பிள தானே.. பிறகு என்ன செய்யமுடியும் பொம்பிளங்க தலைவிதி அவ்வளவு தான்… செத்தா எல்லாம் சரியாயிரும்.. பிரச்னையும் தீந்திரும்… திருடியும் நல்லவளாயிருவா….ஏன் தெய்வங்கூட ஆயிருவா ”
என்று சொன்னாள். ஆச்சியின் தழுதழுத்த அந்தக்குரல் சுந்தரின் மனதை ஏதோ செய்தது. ஆனால் ஆனைக்கிணறின் துயரம் தீரவில்லை. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆனைக்கிணற்றுக்குத் தண்ணீர் எடுக்க வருகிற கூட்டம் குறைந்தது.
காலம் இருண்டது. அப்பாச்சியும் ஒரு நாள் ஆனைக்கிணற்றில் மிதந்தாள். எப்போதும் அம்மாவின் அலட்சியத்தையும், சுடுசொற்களையும், கேட்டுப்பழகியவள் தான் அப்பாச்சி. அதைப்பற்றி என்றுமே கவலைப்பட்டதில்லை. ஆனால் அன்று என்னவோ தெரியவில்லை. அப்பா ஏதோ பேசியிருக்கிறார். கேவலம் மூக்குப்பொடி மட்டை விவகாரம். மூக்குப்பொடி வாங்க காசு கேட்ட அப்பாச்சியைப் பார்த்து அப்பா,
“ நீயெல்லாம் இருந்து ஏன் கழுத்தறுக்கே… இந்த வயசில மூக்குப்பொடி ஒரு கேடா?.. மனுசந்தன்னால கண்ணுமுழி பிதுங்கிக்கிட்டு வாரேன்… என்னமோ இனிமேத்தான் சாதிக்கப்போற மாதிரி…”
என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அன்று முழுவதும் மோட்டைப்பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள் அப்பாச்சி. தரையில் எதையோ தேடுவதைப்போல விரல்களால் பரசிக் கொண்டேயிருந்தாள். சில சமயம் இடுங்கிய கண்களில் கசிந்த நீரை முந்தானையால் துடைத்துக் கொண்டாள். அம்மா அன்று அப்பாவைக் கடிந்தாள். அப்பாச்சியிடம் வாஞ்சையாய் பேசவும் செய்தாள். அவளே சுந்தரிடம் காசு கொடுத்து எஸ்.ஆர்.பட்டணம் பொடி மட்டையை வாங்கி வரச்சொல்லி அப்பாச்சியிடம் கொடுத்தாள். அப்பாச்சி அதைக் கையில் வாங்கி அருகில் வைத்துக்கொண்டாள். ஆனால் அன்று முழுவதும் பொடிமட்டையைப்பிரிக்கவில்லை. இதையெல்லாம் அம்மா தான் அப்பாச்சி இறந்த வீட்டில் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். சுந்தர் இதை எதையும் கவனிக்கவில்லை. அவன் பாப்புலர் டைப் இன்ஸ்டிடியூட்டில் டைப் முடிந்து வரும் வனஜாவின் ஞாபகமாகவே இருந்தான். மணியின் யோசனைப்படி இன்று வனஜாவிடம் எப்படியும் காதல் கடிதத்தைக் கொடுத்து விடவேண்டும் என்ற ஒரே சிந்தனை மட்டும் தான் அன்று இருந்தது. அதனால் அப்பாச்சியை ஏறிட்டுக்கூட பார்க்கவில்லை. மறுநாள் காலையில் அம்மாவின் வார்த்தைகளற்ற அலறல் சத்தம் கேட்டபிறகு தான் சுந்தருக்கு உணர்வு வந்தது.
சுந்தர் எதற்கும் அழுதோ கலங்கியோ பழக்கமில்லாதவன். எல்லாவற்றையும் உள்ளேயே அமுக்கி வைத்துக்கொள்வான். முகம் மட்டுமே அவன் மன அழுத்தத்தில் இருக்கிறான் என்று காட்டும். ஆனால் அப்பாச்சியின் தற்கொலை அவனை உலுக்கிவிட்டது. அவளுக்கு குறைந்தது எழுபத்தைந்து வயதாவது இருக்கும். இந்த வயதில் ஆனைக்கிணற்றின் மேடையில் ஏறி ஒரு ஆள் நெஞ்சுயரம் இருக்கும் சுவரில் ஏறி உள்ளே விழுவதென்றால் எவ்வளவு வைராக்கியம் இருக்க வேண்டும். அவன் உடைந்து அழுதான். கண்கள் ஈரமாகிக்கொண்டேயிருந்தது. அப்பாச்சியின் மடியில் உட்கார்ந்து புரண்டு வளர்ந்தவன் அவன். அவள் சொல்லும் கதைகளில் வரும் இளவரசிகளையும், இளவரசர்களையும், பேய்களையும் பூதங்களையும் அவன் அப்படி நேசித்தான். அப்பாச்சியின் பல்லில்லாத வழுவழுப்பான குரலில் வழுக்கி உறக்கத்தின் மௌனக்குளத்தில் மெல்ல மூழ்குவான் சுந்தர். அவளிடமிருந்து வரும் மூக்குப்பொடியின் மணம் அவனுக்கு ரெம்பப்பிடிக்கும். சிலசமயங்களில் தடுமம் பிடித்திருக்கும் போது அம்மாவுக்குத் தெரியாமல் அவனுக்கு மூக்குப்பொடி உறிஞ்சக்கொடுப்பாள்.
அவனை விட அப்பாதான் நொறுங்கிப்போய்விட்டார். வெகுநாட்களுக்கு அவருடைய முகம் குராவிப்போய் இருந்தது. உள்ளுக்குள் அவருடைய ஆவி கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்கிக் கொண்டிருந்தது. அப்பாச்சி இறந்த ஒரு வருடத்துக்குள் ஏகப்பட்ட காரியங்கள் சடுதியில் நடந்தேறின. வாடகை கொடுக்க முடியாமல் நான்குவீடுகள் மாறினார்கள். அப்பா வேலை பார்த்துவந்த ராஜகுமாரி ஜவுளிக்கடை வற்றிப்போனது. இனி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வழியில்லை என்று முதலாளி வாசலைக்காட்டினார். விசுவாசம் நீண்ட நாள் என்ற இரண்டு கயிறுகளில் கட்டிய ஊஞ்சலில் இப்பவோ பிறகோ என்று ஆடிக்கொண்டிருந்தார். ஆனால் முதலாளி சுந்தரின் அப்பாவுக்கும் வாசல் இருக்கும் திசையைக் காட்டும் முன்னாடியே அப்பா பெரிய வாசல் வழியே உலகத்தை விட்டுப்போய் விட்டார்.
சுந்தர் கரீம்பாய் கடை இருந்த இடத்தில் புதிதாக அலங்கரிக்கப்பட்டிருந்த ஸ்ரேயா தேநீரகம் முன்னால் நின்றான். ஒரு கணம் கரீம்பாய் கண்முன்னே தோன்றினார். ஒரு டீ குடிக்கலாம் என்று நினைத்தான். டீ மாஸ்டரிடம்,
“ ஒரு டீ ஸ்ட்ராங்கா… மலாய் போட்டு..”
என்று சொன்னான். அவர் அவனை ஊருக்குப் புதிது என்று கண்டு கொண்டார். கரீம்பாய் டீக்குத்தனிச்சுவையே மலாய் தான் என்று சுந்தர் சொல்வான். வேறு யாரும் கேட்கமாட்டார்கள். அவனைப்பார்த்ததுமே மலாய் போட்டு ஸ்டிராங் டீ கொடுத்துவிடுவார் கரீம்பாய்.
டீக்கடை தாண்டி வலதுபுறம் திரும்பினால் ஆனைக்கிணறு இருக்கும். இப்போதும் இருக்குமா? அவன் எதிர்பார்த்த மாதிரியே ஆனைக்கிணறு இல்லை. அப்படி ஒரு கிணறு இருந்ததற்கான எந்தச்சுவடும் இல்லாமல் அங்கே ஒரு அழகான அடுக்குமாடிக்குடியிருப்பு எழுந்து நின்றது. காலம் மாறிக்கொண்டிருக்கிறது.
சித்தி சொன்ன அடையாளங்களை வைத்து வீட்டைக்கண்டு பிடித்தான். சித்தப்பா இறந்து மூன்று மாதங்களாகி விட்டது. இப்போது எப்படி அந்தத் துக்கத்தை அனுஷ்டிப்பது என்று புரியாமல் குழம்பிப்போய் தான் சுந்தர் வீட்டுக்குள் நுழைந்தான். வருத்தமான முகத்தை அணியச் செய்த முயற்சி தோல்வியடைந்து கொண்டிருப்பதைச் சில நொடிகளிலேயே அவன் உணர்ந்து கொண்டான். ஆனால் சித்தி சிலநிமிடங்கள் கூட அந்தச் சூழ்நிலையின் தர்மசங்கடத்தில் அவனை மாட்டி விடவில்லை. சித்தி பெரிய பேச்சுக்காரி. அவளால் காலாவதியான அந்த சோகத்தைத் தொடர முடியவில்லை.
வீட்டின் குசலங்களை விசாரித்து விட்டு ரகசியம் பேசுகிற தொனியில்,
“ சுந்தா.. ஆனைக்கிணறு இருந்த இடத்தைப் பார்த்தியா… ஏழுமாடிக்கட்டடம்….”
என்றாள். சுந்தரும் அவளை மாதிரியே தாழ்ந்த குரலில்
“ ஆமா… சூப்பரா இருக்கு சித்தி.. யாரு ஓனரு..” என்று கேட்டான்.
“ யாரு.. நம்ம சம்முகம் கவுன்சிலர் அவந்தான் அந்த இடத்தை வளைச்சி கட்டிடம் கட்டிட்டான்.. ம்ஹூம்.. கட்டி என்ன பிரயோசனம்? “
” ஏன் சித்தி..? “
“ இப்பயும் அந்த மாடிக்கட்டிடத்திலே திடீர் திடீர்னு பொம்பிளக செத்துப்போறாளுக… போனமாசம் அஞ்சாவது மாடியில ஒரு பொம்பிள தீக்குளிச்சி செத்தா…நேத்திக்கி கூட மூணாவது மாடியிலேர்ந்து ஒரு பொண்ணு கீழே குதிச்சிட்டா… புருசங்கூட சண்டையாம்….அந்தத் தெய்வானை சாமியான இடமாச்சே… சும்மா விடுவாளா? “
என்று மிக முக்கியமான ரகசியத்தைச் சொல்வதைப்போல சொல்லிக் கொண்டிருந்தாள் சித்தி. சுந்தர் சில நொடிகள் எதுவும் பேசவில்லை. மனம் கசந்தது. பின்னர் ஒருவித வெறுப்பு கவிய மெல்ல வாயைத்திறந்து,
“ இது ஆண்களின் உலகம் சித்தி…..” என்றான்.
அவனை மலங்க மலங்க பார்த்தபடியே “ என்ன சொல்றே நீ..” என்றாள் சித்தி.

 நன்றி- ஆனந்த விகடன்

Sunday, 30 July 2017

காட்டிலே விநோதம்

காட்டிலே விநோதம்

உதயசங்கர்

முயலூரில் மிகப்பெரியக் காடு இருந்தது. அந்தக்காட்டில் எக்கச்சக்கமான முயல்களும் மான்களும் இருந்தன. முயல்களும் மான்களும் அதிகமாக இருந்ததால் அவற்றைத் உணவாகச் சாப்பிடும் சிங்கம், புலி, நரி, ஓநாய், குள்ளநரி, செந்நாய், போன்ற மிருகங்களும் இருந்தன. அந்தக்காட்டில் ஒவ்வொரு வருடமும் முயலூர்க்காட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கும். எப்போதும் சிங்கம் அல்லது புலி அந்தத் தேர்தலில் நிற்கும். அப்பாவி முயல்களும், மான்களும் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பார்கள். ஒரு தடவை சிங்கத்தைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பார்கள். இன்னொரு தடவை புலியைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பார்கள். தலைவர் யாராக இருந்தாலும் தினசரி தலைவர் குடியிருக்கும் குகைவீட்டுக்கு இரண்டு முயல்களும், ஒரு மானும் உணவாகப் போய் விடவேண்டும். இது தான் முயலூர்க்காட்டில் எழுதப்படுகிற முதல் சட்டம்.
இந்தச்சட்டத்தை சிங்கமும், புலியும், தலைவர் பதவி ஏற்றவுடன் போட்டு விடுவார்கள். சில முயல்களும், சில மான்களும், இந்தச்சட்டத்தை எதிர்த்தன. எதிர்த்த முயல்களும், மான்களும் மறுநாள் காணாமல் போய்விட்டன. அதனால் மற்ற சின்னப்பிராணிகள் வாயைத் திறக்கவில்லை. முயலூர்க்காட்டில் முயல்களும் மான்களும் எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததினால் தினம் ஒன்றோ இரண்டோ பேர் சிங்கத்துக்கோ, புலிக்கோ உணவாகச் செல்வதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
இயற்கையில் எந்தத்தாவரமோ, பறவையோ, மிருகமோ, புழுவோ, பூச்சியோ, எல்லாவற்றின் உற்பத்திப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இயற்கையே செய்த ஏற்பாடு தானே. இந்த ஆண்டு நரிக்கு தலைவர் ஆக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. உடனே முயல்கள் மான்கள் மாநாடு ஒன்றை நடத்தியது. நரி அழைக்கும் கூட்டம் என்பதால் மான்களும் முயல்களும் நம்பிக்கையில்லாமல் தான் வந்தன.
கூட்டத்தில் நரி முழங்கியது.
“ சகோதர சகோதரிகளே! இன்னும் எத்தனை நாளுக்கு சிங்கத்துக்கும் புலிக்கும் உணவாகிக் கொண்டிருப்பீர்கள்! நான் ஆட்சிக்கு வந்தால் முதல் சட்டமே இனி யாரும் முயல்களையோ மான்களையோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ, சாப்பிடக்கூடாது. இயற்கை மரணம் அடைந்தாலும் சாப்பிடக்கூடாது. மிகவிரைவில் முயல் கோவிலும், மான் கோவிலும் கட்டப்படும். அந்தக்கோவில்களை சிங்கமும் புலியும் சேர்ந்து கட்டி முடிக்க வேண்டும். என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தால் உங்களில் ஒருவரைக்கூட யாரும் சாப்பிட விடமாட்டேன்….”
நரியின் இந்தப்பேச்சைக் கேட்டதும் முயல்களும் மான்களும் குழம்பின. உண்மையில் இப்படி நடக்குமா? குசுகுசுவென தங்களுக்குள் பேசிக்கொண்டன. சந்தேகத்துடன் பார்த்தபோது நரி கை கூப்பிச் சிரித்துக் கொண்டிருந்தது. கைகளை மேலே தூக்கி இரண்டு விரல்களைக் காட்டியது.
“ ஊஊஊஊஊஊஊஊஊஊ……..வளர்ச்சி! வளர்ச்சி! இன்னும் வளர்ச்சி! முயல்களின் வளர்ச்சி! மான்களின் வளர்ச்சி! வளர்ச்சி ஒன்றே என் தாரகமந்திரம்!.ஊஊஊஊஊஊஊஊஊஊ.”
என்று பாட்டுப்பாடியது. நரியின் ஊளைப்பாட்டு மான்களின் முயல்களின் காதுகளைக் கிழித்தது. அவைகள் எல்லாம் சேர்ந்து,
“ ஐய்யோ… நிறுத்து..நிறுத்து.. நாங்க..உனக்கே ஓட்டுப்போடுறோம்.. தயவு செய்து பாடாதே..”
கெஞ்சின. அதைக் கேட்ட நரிக்குப் பெருமை பிடிபடவில்லை. பாட்டை நிறுத்தியது.
தேர்தல் நடந்தது. முயல்களும் மான்களும் நரிக்கு வாக்குக் கொடுத்தமாதிரியே ஓட்டுப்போட்டன. தேர்தல் முடிவு வந்தது. முடிவைக் கேட்டதும் சிங்கமும் புலியும் அதிர்ச்சியடைந்தன.
நரி ஆட்சிப்பொறுப்பு ஏற்றது. முதல் சட்டமாக மான் முயல் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த சட்டம் சரியாக அமுல்படுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க செந்நாய்களின் காவல்படையை நியமித்தது.
அன்றிலிருந்து சிங்கம், புலி, போன்ற மாமிச உண்ணிகள் பட்டினி கிடந்தன. காட்டு எலிகளைத் தின்று தங்கள் உயிரைக் காப்பாற்றின. சில மாதங்களில் முயலூர்க்காட்டில் முயல்களின் எண்ணிக்கை கூடி விட்டது. முயல்களின் உணவான புல்வெளி குறைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் முயல்கள். மரம், செடி, கொடி, பொந்து, பொடவு, குழி, குகை, எங்கும் முயல்கள் குடும்பம் குடும்பமாக இருந்தன. அதே நேரத்தில் திடீர் திடீரென்று நரி ராஜா அழைக்கிறார் என்று பல குடும்பங்களை செந்நாய்க்காவலர்கள் கூட்டிக் கொண்டு போவார்கள். அதன்பிறகு அந்த முயல் குடும்பங்களை அங்கே பார்க்க முடியாது. யாராவது கேட்டால் அவர்கள் வெளிநாடு போய்விட்டார்கள் என்று செந்நாய்க்காவலர்கள் சொன்னார்கள்.
சுட்டிமுயல் மூஜாவுக்கு நரியின் மீது முதலில் இருந்தே சந்தேகம் இருந்தது. ஒரு நாள் அமாவாசை இரவில் சுட்டிமுயல் மூஜாவின் நண்பனான கீஜோவின் குடும்பத்தை செந்நாய்க்காவலர்கள் அழைத்துக் கொண்டு போவதைப் பார்த்தது. இருளில் யாருக்கும் தெரியாமல் பின் தொடர்ந்தது.
நரியின் அரண்மனையின் பின்வாசலில் இரண்டு காட்டெருமைகள் பூட்டிய வண்டி நின்று கொண்டிருந்தது. அந்த வண்டிகளில் செந்நாய்க்காவலர்கள் கூட்டம் கூட்டமாகக் கூட்டிக்கொண்டு வருகிற முயல்களையும் மான்களையும் ஏற்றினர். அந்த வண்டிகளில் மேலூர்க்காடு, கீழூர்க்காடு என்று எழுதப்பட்டிருந்தது. அப்போது சுட்டிமுயல் மூஜாவுக்கு அருகில் வந்த இரண்டு செந்நாய்கள் கையில் கொண்டு வந்திருந்த ஒரு குட்டி முயலைக் கடித்துத் தின்றன. ஒரு செந்நாய் கேட்டது,
“ சட்டம் நமக்குக் கிடையாதா? நீ நினைச்சப்பல்லாம் ஒரு முயலைத் திங்கிறீயே..!”
“ ஹாஹாஹா எப்பவுமே சட்டம் மத்தவங்களுத்தான்.. இந்தா நரிராஜா என்ன செய்றாரு.. இந்த முயல்களையும் மான்களையும் வெளியூர்க்காடுகளுக்கு திங்கறதுக்கு விக்கிறாரு… அவருடைய அரண்மனையில் பாதாள அறைக்குள்ளே ஏராளமான முயல்களும் மான்களும் இருக்குது… அவருக்கு எப்ப வேண்டுமானாலும் திங்கலாம் இல்லையா?..எப்படி? சட்டம் அரசாங்கத்துக்கு இல்லை. நாம எல்லாம் அரசாங்க ஊழியர்கள்…ஹ்ஹாஹ்ஹா..”
என்று சிரித்தது. அதைக்கேட்ட சுட்டிமுயல் மூஜாவுக்கு வியர்த்தது. மெல்ல இருளில் நழுவித் தப்பித்து விட்டது.
மறுநாளிலிருந்து சுட்டிமுயல் மூஜா மற்ற முயல்களிடமும், மான்களிடமும் நடந்து கொண்டிருப்பதைச் சொன்னது. முதலில் யாரும் நம்பவில்லை. ஆனால் நாளாக நாளாக குடும்பம் குடும்பமாகக் காணாமல் போகும் முயல்களையும் மான்களையும் பார்த்த மற்ற முயல்களும் மான்களும் நம்பத்தொடங்கினர். அடிக்கடி முயல்களும், மான்களும் செந்நாய்களோடு சண்டை போடவும் செய்தன.
அடுத்த தேர்தலும் வந்தது. மறுபடியும் நரி சிரித்துக் கொண்டே வந்தது. முன்பு சொன்னதைப்போலவே உறுதிமொழி கொடுத்தது. நரி சொன்னதை யாரும் காது கொடுத்து கேட்கவில்லை. ஆனால் இந்த முறை முயல்களும் மான்களும் சேர்ந்து சுட்டிமுயல் மூஜோவை தேர்தலில் நிற்க வைத்தன.
அப்புறம் என்ன?
சுட்டிமுயல் மூஜோ தேர்தலில் வெற்றி பெற்றது. உடனே மான்களும் முயல்களும் சேர்ந்து சிங்கம், புலி, நரி, செந்நாய் எல்லோரையும் முயலூர்க்காட்டை விட்டுத் துரத்திவிட்டன.

நன்றி - வண்ணக்கதிர்