Thursday, 7 September 2017

கிகி நத்தையின் குதியாட்டம்

கிகி நத்தையின் குதியாட்டம்

உதயசங்கர்
ஒரு வாரமாய் மழை.  காடுமேடு எங்கும் செடிகளும், கொடிகளும், மரங்களும், தளிர்த்து பச்சை பசேல் என்று நின்றிருந்தன. காடுகளில் புதிய உயிர்கள் பிறந்தன.. புழுக்கள், பூச்சிகள், எறும்புகள், ஈசல்கள், நத்தைகள், வண்ணத்துப்பூச்சிகள், ரயில்பூச்சிகள், என்று ஏராளமான உயிரினங்கள் பிறந்து அங்கும் இங்கும் அலைந்து திரிந்தன.
குருமலைக்காட்டில் இருந்த புளியமரத்தின் வேர் முண்டில் ஏராளமான நத்தை முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவந்தன. சேகி நத்தை தன்னுடைய முட்டைகள் அத்தனையும் பொரிந்து குஞ்சுகள் சுற்றிச் சுற்றி அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. எல்லோரையும் தன்னுடைய நீண்ட கண்களால் பார்த்தும் உணர்கொம்புகளால் தடவியும் கொடுத்து உற்சாகப்படுத்தியது.  சேகி நத்தையின் குஞ்சுகளான பிகி, சிகி, டுகி, லிகி, எகி, இகி, எல்லாம் அசைந்து அசைந்து செல்லத் தொடங்கின. முதுகில் இருந்த மெல்லிய கூட்டுடன் அவை மிக மிக மெதுவாக ஊர்ந்தன. ஆனால் கிகி நத்தைக்குஞ்சு மட்டும் அசையாமல் இருந்தது. அப்படியே உட்கார்ந்தபடியே சுற்றிலும் நடப்பதை தன்னுடைய கண்களால் பார்த்துக் கொண்டிருந்தது. சேகி நத்தை கிகியின் அருகில் வந்து
“ ம்ம்ம் எழுந்து வா..கிகி…”
கிகி அம்மாவைப் பார்த்தது. அசையாமலேயே,
“ முடியல..” என்று சொன்னது.
“ அப்படிச் சொல்லக்கூடாதுடா… முயற்சி செய்ஞ்சி பாரு.. டுகி எகி எல்லோரும் எப்படி ஓடுறாங்க.. பாரு..”
கிகி அம்மா சொன்னதைக் கேட்டு மெல்ல எழுந்து ஊர்ந்து செல்ல முயற்சித்தது. அதற்கு முதுகில் பெரிய சுமை இருப்பதைப் போல இருந்தது. உடம்பை உதறி சுமையை கீழே தள்ளிவிடப் பார்த்தது. அது புரண்டு விழுந்தது தான் மிச்சம்! ஒருக்களித்துக் கிடந்த உடம்பை நிமிர்த்த முடியாமல் கிடந்தது. சேகி நத்தை தான் வந்து கிகியைத் தள்ளி நிமிர்த்தியது.
“ அம்மா என் முதுகில இருக்கிற கூட்டை எடுத்துரு… எனக்கு வேண்டாம்..”
என்றது கிகி.
“ அதையெல்லாம் தனியா எடுக்கமுடியாதுடா… நம்மோட பாதுகாப்புக்காக இயற்கையின் ஏற்பாடு.. தெரியுமா?..”
“ ம்ம்ம்ஹூம் எனக்குக் கூடு வேண்டாம்.. கூடு இல்லைன்னா நான் வேகமா அந்த புழு போகிற மாதிரி போவேன்… என்னால இந்தச் சுமையைத் தூக்கிட்டு நடக்க முடியல..”
அப்போது ஒரு புழு கிகியைக் கடந்து போய்க்கொண்டிருந்தது. கொஞ்சதூரம் போன அந்தப்புழு திரும்பி வந்து கிகியிடம் “ நாம ஓட்டப்பந்தயம் வைச்சிக்கிடலாமா… யார் ஜெயிக்கிறான்னு..பார்ப்போம்..” என்று சொல்லிச் சிரித்தது. கிகி புழுவுக்கு முதுகைக்காட்டித் திரும்பிக் கொண்டது. ஒரு நொடியில் புழு கிகியின் முன்னால் வந்து,
“ நீ ஜெயிச்சேன்னா நான் உன்னை என் முதுகில வைச்சி எல்லா இடத்துக்கும் தூக்கிட்டுப்போறேன்.. ஆனால் நான் ஜெயிச்சேன்னா… நீ இந்தக்காட்டிலேயே இருக்கக்கூடாது…என்ன சம்மதமா? “
என்று சொல்லிவிட்டு எகத்தாளமாகச் சிரித்தது. கிகிக்கு அழுகையே வந்து விட்டது. அது சேகி அம்மாவிடம் “ எனக்கு கூடு வேண்டாம்… எனக்குக் கூடு வேண்டாம்.. எனக்குக் கூடு வேண்டாம்..” என்று திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது. சேகிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
“ கிகி.. முதல்ல அழறத நிறுத்து.. கூடு நமக்குப் பாதுகாப்பு…”
“ ம்ம்ம்ம்ம்ஹூம்… எனக்குக் கூடு வேண்டாம்.. எனக்குக்கூடு வேண்டாம்..”
என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது. அப்படிச் சொல்லிக்கொண்டே தனக்கு முன்னால் அந்தப்புழு வேக வேகமாகப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தது. அப்போது தான் அது நடந்தது.
எங்கிருந்தோ ஒரு தவிட்டுக்குருவி பறந்து வந்தது. டக்கென்று சிறகுகளை மடக்கி புழுவின் அருகில் நின்றது. லபக் ஒரு நொடி தான். புழு குருவியின் வாய்க்குள் போய் விட்டது. அப்படியே இரண்டு கால்களாலும் தத்தித் தத்தி நடந்து சேகி நத்தையின் அருகில் வந்தது. தவிட்டுக்குருவியின் காலடிச்சத்தம் கேட்டதுமே சேகி கூட்டுக்குள் அடைந்து கொண்டது. அதன் குஞ்சுகள் எகி, இகி, லிகி, டுகி, கிகி, பிகி, சிகி, எல்லாம் கூட்டுக்குள் சுருண்டு கொண்டன. தவிட்டுக்குருவி சேகியைப் புரட்டியது. அதற்குள் ஒரு பசையால் வாய்ப்பகுதியில் பூசிவிட்டது சேகி. அந்தப்பசை துர்நாற்றம் அடித்தது. தவிட்டுக்குருவி இரண்டு முறை சேகியை உருட்டி விட்டுப் பறந்து போய்விட்டது.
நடந்ததை எல்லாம் உடலைக் கூட்டுக்குள் மறைத்துக் கொண்டு கண்களை மட்டும் வெளியில் நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது கிகி. தவிட்டுக்குருவி பறந்து போனதும் சேகி வெளியில் வந்தது. அது கிகியின் அருகில் வந்து எதையோ சொல்ல வாயைத் திறந்தது.

” கூடு வேண்டும்..கூடு வேண்டும்..கூடு வேண்டும்..” என்று சொல்லிக் குதித்துக் கொண்டிருந்தது கிகி. எகியும், இகியும், சிகியும், டுகியும், பிகியும், லிகியும், கிகியின் குதியாட்டத்தைப் பார்த்து கூடுகள் குலுங்கச் சிரித்தன. சேகியும் சிரித்தது.
நன்றி - சுட்டி-விகடன்

No comments:

Post a Comment