Tuesday, 19 September 2017

ஊர்சுற்றி ராஜாவின் கதை

ஊர்சுற்றி ராஜாவின் கதை

உதயசங்கர்

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். ராஜா என்றால் ஒரு பெயர் இருக்க வேண்டுமே! அந்த ராஜாவின் பெயர் ஊர்சுற்றி ராஜா. ஆனால் அவர் உண்மையில் ராஜா இல்லை. அந்த ஊரில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை  ஒருவர் ராஜாவாகத் தேர்ந்து எடுக்கப்படுவார். அந்த ஊர் மக்கள் ஐந்தாவது ஆண்டின் இறுதியில் ஒரு பூனையின் கையில் ஒரு மாலையைக் கொடுத்து அனுப்புவார்கள். அந்தப்பூனை யார் கழுத்தில் அந்த மாலையைப் போடுகிறதோ அவர் தான் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ராஜாவாக இருப்பார். அந்த ஊரில் அப்படி ஒரு வழக்கம் இருந்தது. போன ஆண்டு ஒரு பூனை கையில் மாலையைக் கொடுத்து அனுப்பினார்கள். அந்தப்பூனை சுவர் மீது ஏறியது. மாடியில் குதித்தது. சன்னல் வழியே நுழைந்தது. ஓட்டுச்சாய்ப்பில் ஓடியது. மக்களும் அதன் பின்னால் ஓடினார்கள். சுவர் மீது ஏறினார்கள். சுவரில் ஏறிக்குதித்தார்கள். ஓட்டுச்சாய்ப்பில் ஓடினார்கள். சன்னல் வழியே நுழைய முடியவில்லை. அதனால் கதவைத்திறந்து ஓடினார்கள். ஊரே அந்தப்பூனையின் பின்னால் ஓடியது.
அந்தப்பூனை ஓடி ஓடி ஒரு டீக்கடையின் முன்னால் போய் நின்றது. அந்த டீக்கடைக்குச் சொந்தக்காரர் மோசடி முத்துச்சாமி. மக்களிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஒருவருக்கொருவர் சண்டை மூட்டி விடுவார். அதனால் அவருக்கு மோசடி முத்துச்சாமி என்று பெயர் வந்தது. அவர் செய்த ஒரே நல்ல காரியம் அவர் தினமும் அந்தப்பூனைக்கு அரைடம்ளர் பால் கொடுப்பது மட்டும் தான். வழக்கமாக அவர் பால் கொடுக்கும் நேரம் அது என்பதால் பூனை அங்கே போய்விட்டது. அவருடைய கழுத்தில் மாலையைப் போட்டு விட்டு அவர் கொடுக்கும் பாலுக்காக அண்ணாந்து பார்த்தது. ஆனால் மோசடி முத்துச்சாமி பூனைக்குப் பால் ஊற்றவில்லை.
மக்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேறு வழியில்லை. பழைய பழைய பழக்கம் என்பதால் அதை அப்படியே மூடப்பழக்கமாக ஏற்றுக் கொண்டனர். எனவே டீக்கடைக்காரர் மோசடி முத்துச்சாமி அந்த ஊரின் ராஜாவாகி விட்டார். அவர் ராஜாவானதும் என்ன செய்தார் தெரியுமா? மக்களுக்கு நல்லது எதாவது செய்தார் என்று நினைத்தீர்களா? ராஜாவாக பதவி ஏற்றதும்
” மகா மந்திரியாரே உலகநாடுகள் எத்தனை?”
 என்று மகாமந்திரியிடம் கேட்டார். அவரும்
“ முந்நூற்றி ஐம்பத்தைந்து நாடுகள் இருக்கின்றன ராஜாவே! “
ராஜா ஒரு நிமிடம் யோசித்தார்.
“ சரி… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டுக்குப் பயணத்திட்டம் போடுங்கள்…”
என்றார். அதைக்கேட்ட மகாமந்திரி,
“ ராஜா இங்கே… நமது நாட்டில்…??..”
என்று இழுத்தார். உடனே மோசடி முத்துச்சாமி,
“ ஹ்ஹ்ஹ்ஹாஹாஹா… அது தான் நீங்கள் இருக்கிறீர்களே! இதை விட்டால் எனக்கு வேறு வாய்ப்பு கிடைக்காது..ஹிஹிஹி..”
என்று இளித்தார். மகாமந்திரியாரும் ராஜாவின் பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடு. இன்று அமெரிக்காவில் இருப்பார். நாளை ரஷ்யாவுக்குப் போய்விடுவார். அடுத்தநாள் சிங்கப்பூர். அதற்கு மறுநாள் ஆப்பிரிக்கா. இப்படி உலகநாடுகளைச் சுற்றிக்கொண்டிருந்தார். சொந்த நாட்டு மக்கள் ராஜாவைப் பார்க்கமுடியவில்லை. தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் தான் பார்க்க முடிந்தது. நாட்டில் புயல்,வெள்ளம் வந்தது. ஊர்சுற்றி ராஜா டூனிசியாவில் இருந்தார். பஞ்சம், வறட்சி மக்கள் பசி,பட்டினியால் கஷ்டப்பட்டார்கள். ஊர்சுற்றி ராஜா ஆஸ்திரேலியாவில் இருந்தார். மக்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
வருடத்தில் ஒரு நாள் சொந்த நாட்டுக்கு வந்தார். வருடம் முழுவதும் சுற்றிக் கொண்டேயிருந்ததால் அவருக்கு அவருக்கு அவருடைய சொந்த நாடே மறந்து போய் விட்டது. வானூர்தியில் வந்து இறங்கியதும்
“ இது எந்த நாடு? இந்த மக்களை எல்லாம் எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே..”
என்று கேட்டார். மக்கள் எல்லோரும் ராஜாவிடம் அவர்களுடைய குறைகளை சொல்ல அரண்மனைக்குத் திரண்டு வந்தனர்.
அதற்குள் அடுத்த சுற்று ஊர்சுற்றக்கிளம்பி விட்டார் ராஜா. ஒரு வருடத்தில் திரும்ப வருகிற ஊர்சுற்றி ராஜாவை எந்த நாடும் வரவேற்கவில்லை. வரவேண்டாம் வரவேண்டாம் என்று சொன்னார்கள். எல்லா நாடுகளிலும் விமானநிலையத்திலேயே ஊர்சுற்றி ராஜாவைத் திருப்பி அனுப்பி விட்டார்கள்.
வேறு வழியில்லாமல் சொந்த நாட்டுக்குத் திரும்பினார் ஊர்சுற்றி ராஜா. அங்கே அதற்குள் மக்கள் அனைவரும் ஓட்டுப்போட்டு வேறு ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். அவரும் மக்களுடைய விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி ஆட்சி செய்தார். சொந்த நாட்டுக்கு வந்த ஊர்சுற்றி ராஜாவை விமானநிலையத்தில் நிறுத்தித் திருப்பி அனுப்பி விட்டார். ஊர்சுற்றி ராஜாவுக்கு போவதற்கு இடமில்லை. மக்களை மறந்த ஊர்சுற்றி ராஜா வானத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தார்.

மேலே பாருங்கள்! உங்கள் ஊரின் மீது ஒரு விமானம் சுற்றிக் கொண்டிருக்கிறதா? அதில் ஊர்சுற்றி ராஜா இருந்தாலும் இருக்கலாம்!
நன்றி - வண்ணக்கதிர்

1 comment:

  1. அருமையான கதை ஐயா
    ஆனால் யாரையோ நினைவுபடுத்துகின்ற மாதிரி இருக்கிறது

    ReplyDelete