தோளில் கிளி வளர்த்த
அக்கா
உதயசங்கர்
பள்ளிக்கூட விடுப்புக்கு திருநெல்வேலி
போனால் இந்தத் தொரட்டு தான். முழுப்பரீட்சை விடுப்பில் சும்மா இருக்க விடுதாகளா. உடனே
அடுத்த கிளாஸ் பாடத்தைப் படிக்கணும்னு அம்மை கண்டிஷன். காந்திமதிநாதனுக்கு டியூஷன்
என்றால் வேப்பங்காயாக கசக்கும். கோவில்பட்டியிலேயே டியூஷன் படிக்கமாட்டேன் என்று முரண்டு
பண்ணுவான். அதுவும் பள்ளிக்கூட லீவில் தாத்தா, பாட்டி, ஊருக்குப் போய் படிக்கணும்னா
எப்படி இருக்கும். அவன் முடியாது என்று கத்தினான். அம்மை கோபத்துடன்,
“ ஏல நீ இன்னும் சின்னப்பிள்ள
இல்லை.. ஒன்பதாங்கிளாஸ் போறே.. லீவில கொஞ்சம் படிச்சேன்னா உனக்குதான நல்லது மூதி… சொல்றத
கேட்டா இங்கன இருக்கலாம் இல்லேன்னா இப்படியே திரும்பி கோவில்பட்டிக்குப் போயிருவோம்..
என்ன சொல்த..”
என்று கேட்டாள். அப்படித் திரும்பி
கோவில்பட்டிக்குக் கூட்டிட்டுப் போகமாட்டாள் என்று காந்திக்குத் தெரியும். அவன் எதுவும்
பேசாமல் வந்தான். அவன் திரும்பி கோமதியைப் பார்த்தான் அவன் கவலை இல்லாமல் முகத்தில்
சந்தோஷம் பொங்க பராக்கு பார்த்துக் கொண்டு வந்தான். அவன் அம்மையின் வலதுகை சுண்டுவிரலைப்
பிடித்துக் கொண்டு உற்சாகமாய் மற்ற கையை வீசிக்கொண்டு ஒரு தினுசாய் நடந்து வந்தான்.
காந்திக்கு முகம் வாடிவிட்டது. அம்மையின் கையில் ஒரு அம்மையார்பட்டி ஜவுளிக்கடை துணிப்பை
இருந்தது. அதில் ஓலைக்கொட்டான் பெட்டியும் பெட்டிக்குள் தாத்தாவுக்குப் பிடித்த கருப்பட்டி
மிட்டாயும் சேவும் இருந்தன. காந்தியின் தோளில் ஒரு பெரிய ரெக்சின் பை ஜிப் வைத்தது
தொங்கிக்கொண்டிருந்தது. அதில் தான் அவனுடைய சட்டை, டவுசர், தம்பியின் சட்டை டவுசர்
எல்லாம் இருந்தது. அவன் இரும்புக்கை மாயாவி புத்தகத்தையும், துப்பறியும் சங்கர்லால்
புத்தகத்தையும் உள்ளே அம்மைக்குத் தெரியாமல் வைத்திருந்தான்.
ஜங்ஷனிலிருந்து மீனாட்சிபுரத்துக்கு
அம்மையின் கையைப் பிடித்துக் கொண்டு அவனும் தம்பி கோமதிநாயகமும், ரயில் தண்டவாளத்தின்
வழியாக நடந்தார்கள். வரிசை வரிசையாக வேப்பமரங்கள் நிற்கிற ரயில்வே காலனி வீடுகளை வேடிக்கை
பார்த்தவாறே குறுக்குத்துறை ரோட்டில் ஏறினால் எதிரே நெல் வயலிலிருந்து பாலின் மணம்
காற்றில் வந்து மோதும். உயர்ந்த மருத மரங்கள் அந்த ரோட்டுக்கே தனி அழகைக் கொடுத்துக்கொண்டிருந்தன.
எப்போதாவது சைக்கிளில் போகிற ஒரு ஆள் அந்தச் சாலையின் திருப்பத்தில் போய் திரும்புகிறவரை
பார்த்துக்கொண்டிருக்கலாம். வேறு கவனத்தைத்திருப்ப எதுவும் இல்லை. அங்கங்கே வெள்ளாடுகள்
சாலையோரச் செடிகளின் மீது முன்னங்கால்களை போட்டு மேய்ந்து கொண்டிருக்கும். காந்திக்கு
ஆச்சி வீடு அப்பவே வந்து விட்டமாதிரி ஒரு உணர்வு.
ஆச்சி வீட்டில் நெல் அவிக்கும்
புழுங்கல் வாடை தெருவில் நுழையும்போதே தூக்கியது. அதை முகர்ந்த அம்மையின் முகத்தில்
திருப்தி. வாசல்படியில் ஏறும்போதே தாத்தாவும், ஆச்சியும்
“ இப்பதான் வாரியளா..” என்று சிரித்துக்
கொண்டே கேட்டார்கள். அம்மை “ சேவிக்கிறேன் அப்பா.. சேவிக்கிறேன் அம்மா.. “ என்று சொல்லிக்கொண்டே
அவர்கள் கால்களைத் தொட்டுக் கும்பிட்டாள். காந்தியும் அம்மை செய்த மாதிரியே செய்தான்.
முத்தத்தை ஒட்டி திருணை இருந்தது. ப வடிவிலான அந்த திருணையில் கொடிப்பந்தல் போட்டிருந்தாள்
ஆச்சி. பந்தலில் ரெண்டு, மூணு புடலங்காய்களில் கல்லைக் கட்டித் தொங்க விட்டிருந்தாள்
ஆச்சி. மேலே தட்டட்டியில் பூசணிக்கொடி பிஞ்சுகள் விட்டிருந்தன. அம்மா எல்லாவற்றையும்
சுற்றிச் சுற்றிப்பார்த்தாள்.
தாத்தா அவன் தலைமுடியைத் தடவிக்கொண்டே
“ எட்டு பாஸ் பண்ணிட்டியால..”
என்று கேட்டார். அவன் பெருமையுடன் தலையாட்டினான். அவர் உடனே தன்னுடைய மடியில் இருந்த
மணிபர்ஸைத் திறந்து பத்துபைசாவை எடுத்துக் கொடுத்தார். பத்துபைசாவைப் பார்த்ததும் காந்தியின்
கண்களில் ஒளி மின்னியது. ஊரில் என்ன கஜகரணம் அடித்தாலும் ஒரு பைசா, இரண்டு பைசா தான்
கிடைக்கும். காந்தி கையை நீட்டுவதற்குள் ஆச்சி குறுக்கே வந்தாள்.
“ பிள்ளயளுக்கு துட்டைக் குடுத்து
ஏம்பழக்குதீய.. கச்சேரிக்குப் போய்ட்டு வரும்போது
திம்பண்டம் வாங்கிட்டு வாங்க போறும்.. “ என்றாள். தாத்தாவின் உயரத்துக்கும் ஆச்சியின்
குள்ளத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. ஆனால் ஆச்சி பழுத்த மஞ்சள் நிறத்தில்
இருந்தாள். தாத்தா கன்னங்கரேல் என்று இருந்தார். போனதடவை அரைப்பரிட்சை விடுப்புக்கு
வந்திருந்த போது தென்காசி மாமா பொண்ணு வேணி சொன்னாள்.
” ஏய் காந்தி.. நான் ஒரு விசயம்
சொல்வேன்..யாருட்டயும் சொல்லிராதல… “
“ என்ன சீக்கிரம் சொல்லுட்டி..
” ம்ம்ம்… தாத்தா அரங்கு வீட்டிலவச்சி
ஆச்சிகிட்ட பால் குடிச்சாரு..”
“ ஐயே…இவ்வளவு தானாக்கும் ” என்று
எல்லோரும் சிரித்தனர். வேணியும் சிரித்தாள். இப்போது காந்திக்கு ஞாபகம் வந்தது. அவனறியாமல்
அவன் தாத்தாவையும் ஆச்சியையும் மாறி மாறிப்பார்த்தான்.
தாத்தா சிரித்துக்கொண்டே காந்தியின்
கையில் துட்டைக் கொடுத்தார். அவ்வளவுதான். ஒரே ஓட்டம். பின்னால் கோமதி அழுகிற சத்தம்
கேட்டது. அங்கு எடுத்த ஓட்டம். பாட்டையா கடையில் தான் போய் நின்றான். இரண்டு பைசாவுக்கு
ஆரஞ்சு மிட்டாய், மூன்று பைசாவுக்கு பொரி உருண்டையும் வாங்கினான். மீதி ஐந்து பைசாவை
டவுசர்பட்டியில் உள்ள ரகசிய அறையில் உள்ளே தள்ளினான்.
வீட்டுக்கு வந்தபோது தம்பி கோமதி
ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தான். காந்தி அவனிடம் நல்ல பிள்ளையாய் ஒரு பொரி உருண்டையையும்,
இரண்டு ஆரஞ்சு மிட்டாயையும் கொடுத்தான். கோமதியின் அழுகை உடனே நின்று விட்டது. ஆனால்
காந்தி திரும்பும் முன்னால் முதுகில் திடும் என்று அடி விழுந்தது. ஓங்கிய கையுடன் அம்மை
வெளங்கொண்டு நின்றிருந்தாள். அப்படியே வாசலுக்குத் தாவி ஓடிவிட்டான் காந்தி. “ ஏல இங்க
வாலே…. ஒழுங்கு மரியாதையா இங்க வந்துரு.. கையில ஆப்புட்டே தொலிய உரிச்சிருவேன்.. பேதியில
போவான்.. என்ன பாடுபடுத்தறான்..இதுக்குத்தான் இந்தச்சனியன்களைக் கூட்டிக்கிட்டு எங்கிட்டும்
வர்ரது கிடையாது.. ஒரே எசலிப்பு..”
என்று அம்மை ஆச்சியிடம் சலித்துக்
கொண்டாள். அப்படியே ஆச்சியைப் பார்த்தவள்,
“ ஏளா.. இந்தப்பேசரியை நான் பாக்கவே
இல்லியே.. எப்ப எடுத்தீக..”
ஆச்சியின் மூக்கில் கிடந்த அந்தச்
சிவப்புக்கல் பேசரி ஆச்சியின் மாம்பழ நிறத்துக்கு அம்சமாக இருந்தது. ஆச்சி அந்தக்கேள்வியை
விரும்பாதவள் போல
“ பிள்ளைய வளக்குது சரியில்ல பாத்துக்கோ..
இப்பவே கண்டிசன் பண்ணு .பேசாம நாளை அந்த மீனாட்சிட்ட படிக்கப்போடு..”
“ யாரைச் சொல்றளா.. “
“ அதாண்டி கோனார் வீட்டு வளவுல
வந்திருக்காளே மதுரைக்காரி.. அவ மக தான் பிள்ளையள உண்டு இல்லைன்னு பண்ணிருவா.. டீச்சருக்குப்
படிச்சிருக்காளாம்.. தைரியம்ட்டி.. அந்த மதுரை மீனாட்சிகணக்கா தோளுல ஒரு கிளி வேற…
அவ பேரைச் சொன்னா போதும் பிள்ளைய கழியுதுக..”
என்றாள் ஆச்சி. இந்தச் சதியாலோசனை
தெரியாமல் காந்திமதி நாதன் அவனுடைய பழைய சேக்காளி கோவிந்தனைக் கூட்டிக்கொண்டு ஆத்துக்குப்
போய் விட்டான்.
அன்னிக்கு ராத்திரி ஒரே வாத்துமானம் வாங்கிக் கட்டினான்
காந்தி. மறுநாள் காலையிலிருந்து மீனாட்சியக்காவிடம் டியூஷன் படிக்க வேண்டும் என்று
அம்மா கண்டிஷனாய் சொல்லிவிட்டாள்.
2.
வாளிப்பான பெரிய உடம்புடன் இருந்தாள்
மீனாட்சியக்கா. உடம்பெங்கும் சதை பிதுங்கியது. பெரிய உதடுகள். இரண்டு பக்கங்களிலும்
லேசான தெத்துப்பல், பெரிய மூக்கு. உலக்கைத்தடி போன்ற கைகள். அகன்று விரிந்த இடுப்பு.
சுருட்டைத்தலைமுடி. என்று பார்க்க விகாரமாய் இருக்க வேண்டியவள் அவளுடைய நீளமான கண்களின்
பாந்தத்தினால் அழகாகத் தெரிந்தாள். எப்போதும் அழுக்காகவே இருந்தாள். இல்லையென்றால்
அப்படித் தெரிந்தாள். அவள் ஒரு நாளும் தலைக்குக் குளித்து சீவி முடித்து பார்க்கவில்லை.
எப்போதும் கலைந்த தலைமுடியும், அழுக்கான பாவாடை, தாவணியுடனே இருந்தாள். அவளை முதலில்
பார்த்தவுடனேயே காந்திக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அவள் தோளில் இருந்ததே ஒரு கிளி அதைப்
பிடித்திருந்தது. அந்தக்கிளியும் அவளை மாதிரியே வயிறு பெருத்து குண்டாக இருந்தது. குட்டையாக
வெட்டி விடப்பட்ட இறக்கைகளை விரிக்க முயற்சி பண்ணவில்லை. அப்படியே உடம்போடு ஒட்டி வைத்த
மாதிரி இறக்கைகளை வைத்திருந்தது. எல்லோரையும் கண்களை உருட்டி உருட்டிப் பார்த்தது.
தெருவில் ஆம்பிளைகள் போகும்போது
“ ஜாக்கிரதை.. மீனாட்சி..ஜாக்கிரதை மீனாட்சி..”
என்று கத்தும். ஆனால் தெருப்பார்க்க கிடந்த
அந்த வீட்டின் முத்தத்தில் தான் மீனாட்சியக்கா வின் டியூஷன் ராஜ்ஜியம். அதனால் அந்த
வழியாகப் போகிற எல்லோரும் ஒரு தடவையாவது திரும்பி மீனாட்சியக்காவைப் பார்க்காமல் போகமாட்டார்கள்.
அவள் உட்கார்ந்தபடி, மல்லாந்து படுத்தபடி, ஒருக்களித்து இருந்தபடி, குப்புறப்படுத்தபடி,
என்று எல்லாவிதமான நிலைகளையும் எப்போதும் யாராவது
ஒருவர் பார்த்துக் கொண்டே தான் போவார்கள். சிலசமயம் மெனெக்கெட்டு கூட அந்தத்தெரு வழியே
பல தடவை ஆம்பிளைகள் நடந்து திரிவதை காந்தி பார்த்தான். அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
பெரியவர்களின் பல காரியங்கள் புரியவா செய்கிறது? மீனாட்சியக்கா எதைப்பற்றியும் கவலைப்படமாட்டாள்.
அவளுடைய தோளில் உட்கார்ந்திருக்கும் கிளி தான் அவளை எச்சரித்தபடி இருக்கும். மீனாட்சியக்காவிடம்
டியூஷன் படிக்க வருகிற பையன்கள் என்றால் “ யார்ல அது? யார்ல..அது? “ என்று அடித்தொண்டையில்
மிரட்டும். காந்திக்கு கிளியின் குரல் அப்படிப்பிடித்திருந்தது. விதம் விதமாக அது பேசுவதையே
கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் போலத் தோன்றியது. அந்தக்கிளி மீனாட்சியக்காவின் தோளைத்தவிர
வேறு எங்கும் உட்கார்ந்து காந்தி பார்க்கவில்லை. எப்போதும் அவளுடைய முகத்தையே பார்த்துக்
கொண்டிருக்கும். அவள் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும்போது அவள் வாயையே பார்த்துக்
கொண்டிருக்கும். சில சமயம் மீனாட்சியக்கா சொல்லிக் கொடுப்பதை அப்படியே கொஞ்சிக்கொண்டே
சொல்லும். பிள்ளைகள் சிரித்து உருளுவார்கள்.
எல்லோரும் பாடம் படிப்பதை விட
அந்தக்கிளியை வேடிக்கை பார்ப்பது தான் நடக்கும். அது ஒய்யாரமாக மீனாட்சியக்காவின் தோளில்
நடப்பதையும், அலகினால் மிளகாய்ப்பழங்களைக் கொரிப்பதையும் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள்.
அது கொரிக்கும்போது சிந்துகிற துகள்கள் எல்லாம் மீனாட்சியக்காவின் மீது தான் விழும்.
சிலசமயம் மீனாட்சியக்கா பிள்ளைகள் கொண்டுவந்து கொடுக்கிற திண்பண்டங்களைச் சாப்பிடும்போது
கிளி நேரடியாக வாயிலிருந்து எடுத்துக் கொள்ளும். அப்போது பிள்ளைகள் ஓவென்று ஆர்ப்பரிப்பார்கள்.
ஆனால் அதற்காக மீனாட்சியக்கா பிள்ளைகளைச் சும்மா விடமாட்டாள். பாடத்தை ஒப்பிக்காமலோ,
எழுதிக்காட்டாமலோ போய் விட்டால் அடித்தொடையில் நுள்ளி விடுவாள். மெல்ல அவளுடைய கைவிரல்களை
டவுசருக்குள் நுழைப்பாள். பிள்ளைகள் “ வேண்டாம்க்கா..வேண்டாம்க்கா.. என்று முதலில்
கூச்சப்படுவார்கள். சில சமயங்களில் அந்த விரல்கள் குஞ்சானைப் போய்க்கூடத் தொட்டு விடும்.
பையன்கள் நெளிவார்கள். ஆனால் அடித்தொடையில் இடம் கிடைத்த அடுத்த கணமே வலியினால் அலறத்தொடங்கி
விடுவார்கள். “ ஸ்ஸ்ஸ்ஸ் ஆ..ஆ ஆ.. எழுதிர்ரேன்க்கா.. படிச்சிர்ரேன்கா.. என்று உளறத்தொடங்கி
விடுவார்கள். கிள்ளிய இடமே கன்னிப்போய் விடும். என்ன கத்தினாலும் விடமாட்டாள். பொம்பிளைப்பிள்ளைகளுக்கும்
அப்படித்தான். அடித்தொடையில் தான் நுள்ளு. மீனாட்சியக்காவிடம் டியூஷன் படித்த எல்லோரும்
அழுதார்கள். ஆனாலும் பிள்ளைகள் அவளிடமே படித்தார்கள். அவளையும் அவளுடைய கிளியையும்
வேடிக்கை பார்ப்பதற்காகவே வந்தார்களோ என்று கூடத்தோன்றியது. கிளியுடன் பார்க்கும்போது
அவளைச் இன்னொரு சின்னப்பிள்ளையாகத் தெரிந்ததோ என்னவோ? இந்தப்பிள்ளைகளுக்குத்தான் என்ன
மாதிரியான ஈர்ப்பு!
3.
எல்லோரும் மீனாட்சிபுரம் ஆத்தில்
குளிப்பார்கள் என்றால் மீனாட்சியக்கா மட்டும் குறுக்குத்துறை ஆத்துக்குப் போவாள். அவள்
வாரம் ஒரு முறை பெரிய வாளி நிறையத் துணிமணிகளை போட்டு அமுக்குவாள். வீட்டிலிருக்கும்
501 பார் சோப் துண்டை கச்சிதமாக நூலை வைத்து வெட்டி எடுத்துக்கொள்வாள். போகிற வழியில்
பேட்டைஅண்ணாச்சி கடையில் ஐந்து பைசாவுக்கு 2007 சீயக்காய் தூள் பாக்கெட்டை வாங்கிக்
கொண்டு டியூஷன் பிள்ளைகள் சகிதம் ஊர்வலம் போவது போல போவாள். பேட்டை அண்ணாச்சி எப்படியும்
மீனாட்சியக்காகிட்டே ஒரு அஞ்சி நிமிசமாவது பேசாமல் விடமாட்டார். மீனாட்சியக்கா அவர்
கேட்கிற கேள்விகளுக்குச் சளைக்காமல் பதில் சொல்வாள். அவருக்குத் திருப்தியான பிறகுதான்
மீனாட்சியக்காவைப் போகவிடுவார்.
மெல்ல அசைந்து அசைந்து நடந்து
குறுக்குத்துறைப்படிக்கட்டில் உட்கார்ந்து அத்தனை துணிமணிகளுக்கும் சோப்பு போட்டு,
தலைக்கு எண்ணெய் தேய்த்து சீயக்காய் பவுடரால் முடியை அரக்கி அலசி முடித்து கிளம்பி
வர மூன்று நான்கு மணிநேரம் ஆகிவிடும். குளிக்க வரும்போது உற்சாகமாக வருகிற பிள்ளைகள்
ஒவ்வொருத்தராகக் கிளம்பி விடுவார்கள். ஒரு சுடுகுஞ்சி கூட இல்லாமல் படித்துறையே வெறிச்சென்று
இருக்கும். ஆனால் மீனாட்சியக்கா மட்டும் கர்மசிரத்தையாக அவள் வேலைகளைப் பார்த்துக்
கொண்டிருப்பாள். அவளைப்பார்க்கிறதுக்கென்று வருகிற இளைஞர்களும் அவளை வேண்டும்வரை பார்ப்பார்கள்.
அவர்கள் பார்க்கிறார்கள் என்று மீனாட்சியக்காவுக்குத் தெரிந்தாலும் அவளிஷ்டப்படி தான்
குளிப்பாள். யாரும் அவளுக்கு அருகில் கூட நெருங்கியதில்லை. அவளுடைய ஓங்குதாங்கான உருவம்
காரணமாகக்கூட இருக்கலாம். ஆச்சி கூட பக்கத்து வீட்டு சாவித்திரி அத்தைகிட்டே,
“ இப்படி பூதங்கணக்கா இருந்தா
எவன் வந்து கெட்டுவான் சொல்லு பாப்பம்… .அவளையுந்தான் எத்தனை பயக வந்து பாத்துட்டுப்போயிட்டானுவோ.”
என்று சொல்லிக்கொண்டிருந்ததை காந்தி
கேட்டிருந்தான். மீனாட்சியக்கா டியூஷன் எடுப்பதோடு சரி. டியூஷன் ரூபாய் ஒன்றோ, இரண்டோ,
அவளுடைய அம்மா தான் கேட்டு வாங்குவாள். எப்போதும் சிடுசிடுத்த முகமுடைய அந்த ஆச்சி
மீனாட்சியக்காவைப் போல இரண்டுமடங்கு குண்டாக இருப்பாள்.
4.
காந்திக்கு ஏற்கனவே கணக்கு வராது.
கணக்குப்பாடம் அன்று. மற்ற பிள்ளைகள் உலகம்மன் கோவில் சப்பரம் வருகிறது என்று சாக்கு
சொல்லிவிட்டு வரவில்லை. அவனும் கோவிந்தனைச் சாட்சிக்குக் கூட்டிட்டுப்போய் ஆச்சியிடம்
சொல்லத்தான் செய்தான். ஆனால் ஆச்சி அசருபவளா?
” அதெல்லாம் ஒன்பது மணிக்குத்தான்.
நீ எட்டு மணிக்கு டியூஷன முடிச்சிட்டு போல..”
என்று சாதாரணமாகச் சொல்லி விட்டாள்.
அவன் தோளில் கிளியுடன் இருந்த மீனாட்சியக்காவின் முன்னால் உட்கார்ந்திருந்தான். வந்திருந்த
ஒன்றிரண்டு பிள்ளைகளும் சீக்கிரமே படித்து முடித்து விட்டுப் போய்விட்டன. காந்தி மட்டும்
உடகார்ந்திருந்தான். இரண்டு கணக்குகளைப் போட்டு விட்டு போ என்று சொல்லி விட்டாள் மீனாட்சியக்கா.
அவனுக்கு எதுவும் புரியவில்லை. அப்படியே சிலேட்டை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.
அவனுக்கு முன்னால் மீனாட்சியக்கா ஒரு அழுக்குத் தலையணையைப் போட்டு அதில் கைகளை ஊன்றி
படுத்திருந்தாள். கிளி அவளுடைய தலையில் உட்கார்ந்திருந்தது. தலையில் எதையோ தேடித் தேடித்
தின்று கொண்டிருந்தது. அப்படியே தோள்வழியே இறங்கி அவளுடைய சட்டைக்கு வெளியில் பிதுங்கிய
மார்பின் வழியாகக் கீழே இறங்கியது. ஒரு முறை அப்படி இப்படி தலையைத் திருப்பிப்பார்த்தது.
காந்தியை ஒரு கணம் உற்றுப்பார்த்தது. கண்களை
மூடியிருந்த மீனாட்சியக்கா இருகைகளையும் உயரேத்தூக்கி விசும்பில் விரல்களை துளைத்து
மரக்கிளைகளாக அசைந்து நெளிந்து ஆடிக்கொண்டிருந்தாள். காந்திக்கு அதைப்பார்க்க விந்தையாக
இருந்தது. ஒரு மரம் மாதிரியும் இருந்தது. மீனாட்சியக்கா காற்றாக அசைந்தாடுகிறாள். அப்படியே
நெடுமரமாய் உருமாறினாள். அவளது உதடுகளில் கிளிச்சிவப்பு கபாடம் திறந்தது. மெல்லிய நாக்கினால்
கிளி மந்திரித்தது. காந்திக்கு ஒரே நேரத்தில் அதைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.
அதே நேரம் அவளைப்போல மரமாகி விடத் தோன்றியது. . மீனாட்சியக்காவின் முகம் கிறங்கிப்
போயிருந்தது. அவள் மரமாகி விட்டாள் என்று நினைத்தான் காந்தி. ஆனால் லேசான ஒரு முனகல்
கேட்டது. அவள் அசையாது அப்படியே கிடந்தாள். காற்றில் அசைந்தாள். காற்று நின்றதும் அசையாதிருந்தாள்.
காந்தி எழுந்து வீட்டுக்குப் போய்விடலாம் என்று நினைத்தான். அவனுக்கு அசையக்கூடப் பயமாய்
இருந்தது. அப்போது மீனாட்சியக்கா இருந்த இருப்பைப் பார்க்க கிளிப்பச்சையாக இருந்தது.
திடீரென வீட்டுக்குள்ளிருந்து மீனாட்சியக்காவின் அம்மாவின் குரல் கேட்டது.
சடக்கென்று கண்விழித்த மீனாட்சியக்காவின்
கண்முன்னால் காந்தி தான் தெரிந்தான்.
“ ஏல நீ இன்னும் போகலியா..”
“ இல்லக்கா நீங்க இந்த ரெண்டு
கணக்கப் போட்டுட்டுப் போன்னு..சொன்னீங்க..”
“ அதப்போட இவ்வள நேரமால.. உன்னைய
என்ன செய்யறன்பாரு..”
என்று கோபத்துடன் சொல்லிக்கொண்டே
மயங்கித் தவழ்ந்து மீண்டும் மரமானாள்.
அப்போது அவளுடைய விரல்கள் எல்லை
கடந்து விசும்பில் இலைக்கூட்டமாய் புலம்புகின்றன. இலையொலிக்கும் கைகளை எடுத்துக்கொண்டு
எழுந்து உட்கார்ந்தாள். காந்திக்கு உடம்பெங்கும் புல்லரித்தது. என்ன நடந்தது என்று
தெரியவில்லை. மீனாட்சியக்கா நிமிர்ந்து ஒரு கணம் அவனை உற்றுப்பார்த்தாள்.
“ நீ..வீட்டுக்குப் போ..” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள்
போய் விட்டாள். அவன் சிலேட்டை எடுத்துக் கொண்டு எழுந்திரிக்கும்போது அதுவரை அவளுடைய
தோளில் உட்காந்திருந்த அந்தக்கிளி திடீரென பறந்து வந்து அவனுடைய காதில் ஒரு கொத்து
கொத்தியது. அவன்,
“ ஐயோ.. அம்மா..” என்ற அலறிய சத்தம்
கேட்டு மீனாட்சியக்கா ஓடி வந்தாள். காதிலிருந்து ரத்தம் சொட்டியது.
“ அடப்பாதரவே..” என்று அவனை நெஞ்சோடு
அணைத்துக் கொண்டாள். மறுபடியும் அவனைப்பார்த்து பறந்து வந்த அந்தக்கிளியை மீனாட்சியக்கா
வலது கையால் ஏந்தினாள். மீனாட்சியக்கா உள்ளே ஓடிப்போய் காபித்தூளை எடுத்து வந்து ரத்தம்
வந்து கொண்டிருந்த இடத்தில் அப்பினாள். அந்தக்கிளி
சுற்றிச் சுற்றி பறந்து போகாதே காந்தி போகாதே காந்தி என்று பேசியது. நான் போறேன் நான்போறேன்
என்று கையை அசைத்தான். போகாதே போகாதே என்று கிளியின் குரல் தூரத்தில் கேட்டது. கிளிப்பச்சை
கிளிப்பச்சை என்று காடு கத்தியது.
ஆச்சி காந்தியை டியூஷனுக்குப்
போகவேண்டாம் என்று சொல்லி விட்டாள்.
“ அதென்ன அதிசயமா கிளிவளப்பு..
பிள்ளைகள கொத்த விடறது…” என்று வலது தோளில் முகவாய்க்கட்டையால் இடித்தாள். காந்தி மறுநாளிலிருந்து
டியூஷனுக்குப் போகவில்லை. ஒன்றிரண்டு நாட்கள் கழித்து கோவிந்தனோடு ஆத்துக்குக் குளிக்கப்போகும்போது
மீனாட்சியக்காவின் வீட்டைக் கடந்து போன காந்திக்கு மீனாட்சியக்கா அவனுடைய உடலில் மரமாகி
விட்ட புளகாங்கிதம் ஏற்பட்டது. திரும்பிப் பார்த்தான் காந்தி. மீனாட்சியக்காவின் தோளில்
இப்போது நூறுகிளிகள் பறந்து கொண்டிருந்தன.
மரமாகத் தன்னை மாற்றிக் கொண்டாலன்றி
கிளிகளைப் பிடிக்க முடியாது. என்று சேக்காளி கோவிந்தன் அவன் காதில் எச்சில் பட வாரத்தையைச்
சொல்லிவிட்டு ஆற்றுப்பாதையில் நடந்தான். காந்தி அவன் பின்னால் ஓடினான்.
நன்றி - கல்குதிரை 29
வணக்கம் அய்யா.
ReplyDeleteஇந்த கதை புரியவே இல்லை. தயவு செய்து ஏதாவது கிளூ கொடுக்கவும். ஒரு பேதை வாசகரின் கோரிக்கை.
நன்றி
சுகன்யா