Friday, 31 July 2015

ஒரு கணமேனும்…….

 

உதயசங்கர்

 

revolution 2 அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதர்களின் வாழ்க்கையில் அளப்பரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம், போக்குவரத்து, என்று சகல தேவைகளிலும் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பசுமைப்புரட்சிக்கு முன்பு அரிசி உணவு ஆடம்பரமான உணவாக இருந்தது. மேல்சாதியினரின் அன்றாட உணவாக, அரசு அலுவலர்களின் அல்லது மாதச்சம்பளம் வாங்குபவர்களின் அன்றாட உணவாகவும் இருந்த காலமும் இருந்தது. பெரும்பாலான மக்கள் வீடுகளில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில், தீபாவளி, பொங்கல், பண்டிகைகளில் மட்டும், இட்லி, தோசையும், அரிசி சாப்பாடும் கிடைத்தது. அப்போது இட்லி தோசை பற்றியும் அரிசிச்சோறு பற்றியும் வந்த கதைகள் ஏராளம். அரிதாக ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசியே எல்லோர் வீடுகளிலும் உணவு. அதனாலேயே ஒரு ரூபாய்க்கு ஒருபடி அரிசி என்ற வாக்குறுதி சாமானியமக்களிடம் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது என்பதையும் நினைவு படுத்திக் கொள்ளலாம். அப்படியானால் பெரும்பாலான மக்களின் அன்றாட உணவாக இன்று சிறு தானியங்கள் என்று பதவிசாக சொல்லப்படுகிற கம்பு, கேப்பை, குதிரைவாலி, சாமை, தினை, போன்ற தானியங்களும், கீரை வகைகளும், இறைச்சி வகைகளும் கிழங்கு வகைகளும், உணவாக இருந்தன. காய்கறிகள் இப்போது போல எக்காலமும் தாராளமாக கிடைத்ததில்லை. பசுமைப்புரட்சி வந்த பிறகு இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது. புதிய குறுகிய கால நெல் வகைகளும், எக்காலமும் விளையும் காய்கறிகளும் உற்பத்தி செய்யப்பட்டன. அதற்கான இரசாயன உரங்கள் தயாரிக்கப்பட்டன. மக்களுக்கு எல்லாமும் எக்காலமும் கிடைத்தது.

வருடத்தில் பெரும்பாலான காலம் வெப்பமாக இருப்பதினால் விவசாயிகள் காடுகரைகளில் விவசாய வேலைகள் செய்யும் போது கோவணமோ, லங்கோடோ, ( இன்றைய ஜட்டி மாதிரியான துணியை டிசைன் செய்த ஒரு அரையாடை ) உடுத்தியிருப்பார்கள். மற்ற நேரங்களில் இடுப்பில் நாலுமுழ கைத்தறி வேட்டியும் தோளில் துண்டும் அணிந்திருப்பார்கள். பெண்களும் கைத்தறிச் சேலை மட்டுமே உடுத்தியிருப்பார்கள். அப்போதும் அரசு அலுவலர்கள், மேல்சாதியினர் மட்டுமே சட்டை, போட்டிருந்தார்கள். வெள்ளைக்காரர்களின் உபயத்தால் பேண்டும் போட ஆரம்பித்தார்கள். கைத்தறியாக இருந்த தொழில் மிஷின் தறியாக மாறியது. துணி உற்பத்தி செய்யும் மில்கள் அதிகமாயின. விதவிதமான துணிகளும் வந்தன. டெரிலின், டெரிகாட்டன், புல்வாயில், நைலக்ஸ், நைலான், பாலிஸ்டர், ஸ்பன்பாலிஸ்டர், என்று இயற்கை நூலிழைகளாலும், செயற்கை நூலிழைகளாலும் செய்யப்பட்ட விதவிதமான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன. எல்லோரும் சட்டை போட்டனர். எல்லோரும் பேண்ட் அணிந்தனர். கோவணமும், லங்கோடும் போய் ஜட்டிகள் வந்தன. இப்போது தான் மக்கள் நாகரிகமடைந்திருப்பதாக எல்லோரும் பேசிக்கொண்டனர். வேட்டி கட்டியிருப்பவரை ஏளனமாகப் பார்க்கிற மனோபாவமும் வளர்ந்தது. ஆக நாம் உடையிலும் தன்னிறைவு பெற்றோம்.

ஒட்டு வீடுகளே நகரங்களில் அதிகம். காரை வீடுகள் பெரும்பணக்காரர்களுக்கு மட்டும். கூரை வீடுகள் தான் கிராமங்களிலும் நகரங்களின் எல்லைப்பகுதிகளிலும் இருந்தன. மழைக்கு ஒழுகும் வீடுகள்,. வெயிலுக்கு அனல் கக்கும் வீடுகள். மரங்கள், சத்திரங்கள், மக்களின் புகலிடமாக இருந்தன. சிமெண்ட் ஆலைகள் வந்தன. செங்கல் சூளைகள் அதிகமாயின காங்கிரிட் வீடுகள், மாடி வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள், வாஸ்துவின் ஸ்டிரிக்டான விதிமுறைகளின் படியே கட்டப்படுகின்றன. அக்னி மூலை, வாயுமூலை, ஈசானமூலை, என்று மூலைகள் பெருகி வாசலில் கக்கூஸோ, நடு ஹாலில் செப்டிக் டேங்கும் வைக்கிற கோமாளித்தனங்களையும் செய்கிறோம். இதற்கெல்லாம் அறிவியல்பூர்வமான விளக்கம் தர விற்பன்னர்கள் வந்து விட்டார்கள். இப்போதும் ஓட்டு வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றும் தெரியத்தான் செய்கின்றன. கூரை வீடுகள் அருகியே விட்டது. மரங்களும் நிழலும் குறைந்து விட்டன. வீடுகளில் குளிர்சாதன வசதிகள் வந்து விட்டன. வீடுகளில் தொலைக்காட்சி, ஃபிரிட்ஜ், கேஸ் அடுப்பு, சோஃபாக்கள், கம்ப்யூட்டர், லேப்டாப்புகள், ஒன்றுக்கு நாலு செல்ஃபோன்கள், மிக்சி, கிரைண்டர், குக்கர், சாப்பர், டப்பர்வேர், என்று நவீன சாதனங்களால் வீடுகள் திணறிக்கொண்டிருக்கிருக்கிறன. தண்ணீர் மிக அரிதான ஒரு பொருள். ஒருவாளித்தண்ணீரில் குளியல். அல்லது குளம் குட்டை, கண்மாயில்,குளியல், கிணற்று நீர், குளத்து நீர், அடிபைப்பு தண்ணீர் தான் குடிப்பதற்கு, மண்பானை, பித்தளைப்பானைகள், தகரக்குடங்கள், குடி தண்ணீருக்காக பெரிய வரிசைகளில் காத்திருந்த காலம் இருந்தது. தண்ணீருக்காக நடந்த சண்டைகள், வழக்குகள், தாக்குதல்கள் ஏராளம். அப்போது நிலத்தடி நீருக்காக போர் போடுவது அரசாங்கத்தால் மட்டுமே முடியும். நாம் முன்னேறினோம். சொந்த வீடுகள் கட்டிய யாவரும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவரை விட ஒருவர் ஆழமாக, அகலமாக, போர் போட்டோம். பக்கத்து வீட்டுக்காரர் ஐநூறு அடி போட்டால், நாம் எழுநூற்றம்பது அடி போட்டோம். நிலத்தடி நீரை எக்குத்தப்பாய் செலவு செய்தோம். மழைநீர் ஒரு சொட்டு கூட மண்ணில் இறங்கி விடக்கூடாதென வீடெங்கும் தளம் போட்டோம். மரமோ, செடியோ, வளர்த்தால் தரையைப் பெயர்த்து விடும் என்று குரோட்டன்ஸ் செடிகளை தொட்டிகளில் வளர்த்தோம். நிலத்தடி நீர் உவர்ப்பாக இருந்ததால் ஆர்.ஓ. எனப்படும் உப்புநீர் சுத்திகரிப்பு சாதனத்தையும், குடிநீர் சுத்திகரிப்பு சாதனத்தையும் வீட்டில் வைத்தோம். நிலத்தடி நீர் வற்றி, கார்ப்பொரேஷன், முனிசிபாலிடி, பஞ்சாயத்து தண்ணீர் பிடிக்காத போது மினரல் வாட்டர் கேன்களை வாங்கிக் குடித்தோம். வெளியே எங்கு போனாலும் பொதுக்குடிநீரைக் குடித்துக் கொண்டிருந்த நாம் சுகாதார விழிப்புணர்வு அடைந்த பிறகு கோக்கோ கோலா கம்பெனியின் கின்லே வாட்டர் பாட்டிலோடு அலைந்து கொண்டிருக்கிறோம். அரசாங்கமும் தன்பங்குக்கு குடி தண்ணீரை விற்று லாபம் பார்க்கிறது.

சைக்கிள் வாங்குவது பிரம்மபிரயத்தனமாக இருந்த காலமும் ஒன்றிருந்தது. சைக்கிள் கடைக்காரர் பையன்களுக்கு தெய்வமாகத் தெரிந்தார். சைக்கிள் ஓசிக்கு ஓட்டுவதற்கு கொடுப்பவனே உண்மையான நண்பன், உறவினர், உற்றார் என்றெல்லாம் பேசப்பட்டது. சைக்கிளில் முக்காப்பெடல், அரைப்பெடல், பாரில் உடகார்ந்து ஸ்டைலாக செல்வது, ஒரு கையை விட்டு ஓட்டுவது, இரண்டு கைகளையும் விட்டு ஓட்டுவது, கேரியரில் உட்கார்ந்து செல்வது, ஊர் விட்டு ஊர் சைக்கிள் பிரயாணம் என்று சைக்கிளில் ஒரு கனவின் பல வண்ணமாக மிளிர்ந்த காலம் அது. மற்றபடி ஒரு கிலோ மீட்டரோ, பத்து கிலோ மீட்டரோ எல்லோரும் நடை தான். நடப்பதற்கு சளைப்பதில்லை யாரும். கிராமத்து மக்களும் நகரத்து மக்களும் சரி அத்தனை தலைச்சுமைகளும் சுமந்து கொண்டு நடையாய் நடந்து தேசமெங்கும் திரிந்தார்கள், அறிவியல் வளர்ச்சியால் மொபெட்டுகளும், மோட்டார் சைக்கிள்களும், கார்களும், பெருகி விட்டன. அனைத்து மத்திய தர வர்க்கத்தினரிடமும் குறைந்தது இரண்டு டூ வீலர்கள் எனப்படும் ( இந்தக்கணக்கில் சைக்கிள் வராது என்பதைக் கவனத்தில் கொள்க ) வண்டிகள் இருக்கும். அடுத்த கட்டமாக கார் வாங்குவதற்கான முயற்சியும் இருக்கும். இப்போதெல்லாம் ஊருக்குள் ஆடு, மாடு மந்தைகள் ஊர்ந்து செல்வதைப் போல இந்த மொபெட்டுகளும், மோட்டார்சைக்கிள்களும், கார்களும், செல்வதை காலை மாலை வேளைகளில் பார்க்கலாம். நடந்து செல்பவர்களை எண்ணி விடலாம். சைக்கிள் கண்ணிலேயே தெரியாது. எல்லோரும் அவசரம் அவசரமாக ஒரு எமர்ஜென்சிக்காக செல்வதைப் போல ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு, ஒரு நிமிடம் கூட நிற்கப் பொறுமையில்லாமல் பறந்து கொண்டிருக்கிறோம்.

தொலைக்காட்சியும், கம்ப்யூட்டரும் இன்று அத்தியாவசியப் பொருட்களாகி விட்டது. வீட்டில் உள்ள பெண்களின் மன அழுத்தத்தை தொலைக்காட்சி சீரியல்கள் அதிகப்படுத்துகிற பொறுப்பை எடுத்துக் கொள்ள, குழந்தைகளின் மனதை கெடுக்கிற அத்தனை சாதனங்களும் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு கம்யூட்டர் உதவி செய்ய சமூக அறம் சார்ந்த அனைத்து நடைமுறைகளையும் கை கழுவிக்கொண்டிருக்கிறோம். நம்மை நல்வழிப்படுத்த எப்போதும் எல்லாத்துறைகளிலும் தேவதூதர்கள் அவதரித்து வர வேண்டுமென்றும் அதுவரை நாம் அனைவரும் இப்படி இருப்பது இயல்பு தான் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

நம்மை இதுவரை யார் வழி நடத்தியிருக்கிறார்கள் என்று ஒரு கணமேனும் யோசித்ததில்லை. இப்போதும் நம்மை யார் வழி நடத்துகிறார்கள் என்றும் யோசிக்க வில்லை. ஆனால் கண்களை விற்று சித்திரம் வாங்கும் விநோதத்தைச் செய்து கொண்டிருக்கிறோம். நோய்களுக்காக நடைப்பயிற்சி செய்வது எப்படி எவ்வளவு நேரம், எவ்வளவு தூரம் என்று ஃபீஸ் கட்டி ஆலோசனைகள் கேட்கிறோம். நோய்கள் வந்த பிறகு உணவு குறித்து அக்கறைப்படுகிறோம். இயற்கை வேளாண்மை உற்பத்தி பொருட்களை, சிறுதானியங்களை, காய்கறிகளைத் தேடுகிறோம். ஊரெங்கும் புகை கக்கி நம் ஒவ்வொருவர் பங்குக்கும் ஒரு மி.மி. அளவாவது ஓசோனை ஓட்டை போட்டு விட்டு சுற்றுச்சூழல் பற்றி கவலைப்படுகிறோம். சகமனிதர்களோடு போட்டி போடுவதையே வாழ்வின் லட்சியமாக வைத்துக் கொண்டு ஊருக்கு அறம் பற்றி உபதேசிக்கிறோம். அளவுக்கு மீறிய பேராசையால் நம்மை மறந்து நம் சமூகத்தை மறந்த நாம் ஒழுக்கம், அறம், சமூகம் என்று பூஜ்யஸ்ரீயிடமோ, ஓஷோ, ஈசோ விடமோ யார் யாரிடமோ பணத்தையும் அறிவையும் இழக்கிறோம். யார் என்ன சொன்னாலும் நம்புகிறோம். விளம்பரங்களையே உண்மையாக நினைக்கிறோம். சினிமா கலைஞர்களை இன்னமும் கடவுளாக பாவிக்கிறோம். அவர்களை நம்மை ஆள்பவர்களாகத் தேர்ந்தெடுக்கத் தயாராக இருக்கிறோம். ஈராயிரம் வருடங்களுக்கு முன்னால் பிரித்தாள கையாண்ட பிராமணிய தந்திரமான சாதியத்தை இன்னமும் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறோம். சமாதான வாழ்வைச் சீர்குலைக்கிறார்கள் என்று தெரிந்தே மதவெறிச் சக்திகளுக்கு ஆதரவளிக்கிறோம். நம்மிடம் எங்கோ கோளாறு இருக்கிறதா?

என்ன செய்யப் போகிறோம் நாம்?

ஏன் இப்படி இருக்கிறோம்?

ஒரு கணமேனும் நாம் சிந்திக்கிறோமா?

சிந்திப்போமா?

Thursday, 30 July 2015

மருத்துவத்தின் அரசியல்

மருத்துவத்தின் அரசியல்

உதயசங்கர்


மனிதன் எப்போதும் நோயின்றி வாழவே விரும்புகிறான். சிறு தும்மல் வந்தாலும் தன் உடல்நலத்தைப் பற்றிச் சந்தேகம் வந்து விடுகிறது. உடனே மருத்துவரைத் தேடி ஓடுகிறான். தன் உடல்நலத்தைப் பேணுவதற்காக எவ்வளவு பணமும் செலவழிக்கத் தயாராக இருக்கிறான். ஆதியில் மருத்துவம் என்பது சேவைத்தொழிலாக இருந்தது. காலனிய ஆட்சியில் கொஞ்சம் கொஞ்சமாக அது பணத்தொழிலாக உருப்பெற்றது. இன்று கொஞ்சநஞ்சம் இருந்த சேவை என்ற குணாதிசயம் முற்றிலும் முற்றிலும் பணம் கொழிக்கும் தொழிற்சாலையாக மாறியிருக்கிறது. இந்த மருத்துவத்தொழிற்சாலையின் முதலாளிகள் மருந்துக் கம்பெனிகள் தான். அதன் ஊழியர்களாக நவீன மருத்துவர்கள், தொழிற்சாலை கருவிகளாக புதிய புதிய மருந்துகள், அந்த கருவிகளில் பயன்படுத்துகிற கச்சாபொருட்களாக அப்பாவி நோயாளிகள். நோய்களைக் குறித்தும் ஆரோக்கியம் குறித்தும் பதட்டத்தை நோயாளிகளிடம் ஏற்படுத்தி அவர்களிடம் மருந்துகளைப் பயன்படுத்தி ஏற்படும் விளைவாக கொள்ளை லாபம் பன்னாட்டு உள்நாட்டு மருந்துக்கம்பெனிகளுக்குப் போகிறது. திறமையாக மருந்துகளைக் கையாண்டு மருந்துக்கம்பெனிகள் லாபம் கொழிக்க உதவிய அதன் ஊழியர்களான நவீன மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை, போனஸ், பரிசு, என்று ஏராளமான சலுகைகள். ஆக நோயாளிகள் அவருடைய நோயைக் கண்டுபிடிக்கிற ( இப்போதெல்லாம் பெரும்பாலும் மருத்துவ உபகரணங்கள் தானே நோயைக் கண்டுபிடிக்கின்றன? ) மருத்துவருக்கும் அவர் பரிந்துரைக்கிற மருந்துகளுக்கும் சேர்த்து பணம் செலவழிக்கிறார்.
நோய்க்கான காரணிகள் என்னென்ன? பொதுச்சுகாதாரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நோய் விழிப்புணர்வு நடவடிக்கைகள் என்று அரசு சார்ந்தும், தனிமனித பழக்கவழக்கங்கள், சுகாதாரவிழிப்புணர்வின்மை, என்று தனிமனிதர்கள் சார்ந்தும் சொல்லலாம். இந்திய மக்களில் சரிபாதிக்கு மேல் கிட்டத்தட்ட 60 கோடிபேருக்கு மேல் கழிப்பறைவசதி கிடையாது. இவர்கள் திறந்த வெளியில் மலம்கழிக்கும் பழக்கத்தினால் சுகாதாரச்சீர்கேடு ஏற்படுகிறது. அதனால் நிமோனியா, வயிற்றாலை ( டையோரியா )போன்ற நோய்களினாலும் ஊட்டச்சத்துக்குறைபாட்டினாலும் தினம் 5000 குழந்தைகள் இறந்து போகிறார்கள். இதில் பாதிக்கும் மேற்பட்ட மரணங்கள் தடுக்கக்கூடியது.
அதே போல ஊட்டச்சத்துக்குறைபாட்டினால் ஏற்படும் இரத்தசோகை நோயினால் இந்தியப்பெண்களில் 20 முதல் 40 சதவீதம் வரை குழந்தைபேற்றில் இறந்து போகிறார்கள். அது மட்டுமல்ல உலகளவில்  இரத்தசோகையினால் ஏற்படும் இறப்புகளில் 50 சதவீதத்துக்கும் மேல் இந்தியாவில் நிகழ்கிறது.  உலக சுகாதார நிறுவனத்தின் சமீப ஆய்வறிக்கையில் இதய நோய்கள், நீண்டகால சுவாச மண்டல நோய்கள், சர்க்கரை நோய், புற்று நோய் ஆகிய தொற்று அல்லாத நோய்களினால் 60 சதவீதம் மக்கள் இறக்க நேரிடுகிறது. இத்துடன் சேர்த்து யு.என்.டி.பி. ( UNITED NATION DEVELOPMENT PROGRAMME ) யின் 2014 ஆம் ஆண்டு அறிக்கையின்படி மனித நலவாழ்வு குறியீட்டில் உள்ள 187 நாடுகளில் இந்தியா 137 ஆவது இடத்தில் இருக்கிறது என்பது பெருமைக்குரியதில்லையே.
இந்தியாவில் வறுமை காரணமாக கிராமங்களில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கை 1995 ல் 15 சதவீதம் என்றால் 2014 ல் 30 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதே போல தங்களுடைய நோய்களுக்கு சிகிச்சை எடுக்க மருத்துவமனைகளில் சேர நகரப்புறங்களில் 31 சதவீதம் பேரும் கிராமப்புறங்களில் 47 சதவீதம் பேரும் கடன் வாங்குகிறார்கள் அல்லது தங்களுடைய சொத்துகளை விற்கிறார்கள். இதற்கான முக்கியமான காரணம் என்ன?
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு உலக சுகாதார நிறுவனம், மற்றும் யுனிசெப் உதவியுடன் தொடங்கப்பட்ட ஹிந்துஸ்தான் ஆண்டி பயோடிக்ஸ், மகராஷ்டிரா ஆண்டி பயோடிக்ஸ், கர்நாடகா ஆண்டிபயோடிக்ஸ், இந்தியன் டிரக்ஸ் அண்டு பார்மசூட்டிகல்ஸ், பெங்கால் கெமிக்கல்ஸ் அண்டு பார்மசூட்டிகல்ஸ், கேரளா ஸ்டேட் டிரக்ஸ் அண்டு பார்மசூட்டிகல்ஸ், நோய்த்தடுப்பு மருந்து நிறுவனங்களாக செண்டிரல் ரிசர்ச் இன்ஸ்ட்டிடியூட், பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா , சென்னை பி.சி.ஜி தடுப்பு மருந்து லேபோரட்டரி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இந்திய மக்களுக்குத் தேவையான மருந்துகளை உற்பத்தி செய்து குறைந்த விலையில் கொடுத்தன. 1978 ல் இந்திய மருந்துக்கொள்கையும் 1979 ல் இந்திய மருந்து விலைக்கட்டுப்பாட்டுக் கொள்கையும் அறிவிக்கப்பட்டது. இதனால் உலகிலேயே மிகக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைத்தன. உலகமயமாக்கலுக்குப் பின்னால் இந்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களைச் செயலிழக்கச் செய்தன. இந்தியாவின் மருந்துக் கொள்கைகளும், மருந்து விலைக்கட்டுப்பாட்டுக் கொள்கைகளும் கூட செயலிழந்து வருகின்றன. இதனால் மருந்துகளின் விலை பலமடங்கு உயர்ந்து விட்டன. அரசின் கைவசமிருந்த மருத்துவக்கல்வியும் தனியார் வசம் போய்விட்டது. அதோடு சேவையும் போயே விட்டது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனிநபரும் தங்களுக்கு ஆகும் மருத்துவச்செலவில் 78 சதவீதம் எதிர்கொள்கிறார்கள். இதுவே இலங்கையில் 53 சதவீதம், தாய்லாந்தில் 31 சதவீதம் பூடானில் 29 சதவீதம், மாலத்தீவில் 14 சதவீதம் மட்டுமே செலவழிக்க நேர்கிறது. மக்களின் ஒட்டுமொத்த மருத்துவச்செலவில் உலகிலேயே மிகக்குறைந்த பங்களிப்பு செய்யும் கடைசி மூன்று நாடுகள், இந்தியா, ஹைத்தி, சியாராலியோ. அதே போல நாட்டின் ஒட்டு மொத்த சுகாதாரச்செலவில் அரசின் பங்காக செலவழிக்கப்படும் தொகையில் இங்கிலாந்து 96 சதவீதம் எத்தியோப்பியா 36 சதவீதம், பாகிஸ்தான் 23 சதவீதம் செலவு செய்கின்றன. ஆனால் இந்தியா வெறும் 16 சதவீதம் தான் செலவு செய்கிறது. தூய்மை இந்தியா மூலம் சுகாதாரம், ஆரோக்கியம், மக்கள் நலனைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் திட்டமிட்டிருக்கிற நமது இந்திய அரசு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் குறைவாக பொதுச்சுகாதாரநிதி ஒதுக்கியிருப்பது ஒரு முரண்நகை..
இந்தியாவில் உள்ள பாரம்பரியமான மருத்துவமுறைகளும் மாற்று மருத்துவ முறைகளும் அரசினால் பாராமுகமாக நடத்தப்படும் நிலையில் சாமானிய இந்தியனின் உயிர் இன்று பன்னாட்டு மருந்துக்கம்பெனிகளின் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்த மருந்துக்கம்பெனிகள் தயாரிக்கும் புதிய மருந்துகளை சோதனை செய்யும் சோதனைச்சாலையாக இந்தியா உருவாகியிருக்கிறது. இந்திய மருந்துக்கொள்கைகள் குறித்தும், மருந்து விலைக்கட்டுப்பாடுக்கொள்கைகள் குறித்தும், பொதுச்சுகாதாரம் குறித்தும் அதில் அரசின் பங்கேற்பு குறித்தும் உரத்துப் பேச வேண்டிய நேரம் இது. ஏனெனில் இது மக்களின் உயிர்ப்பிரச்னை.




Wednesday, 29 July 2015

சுற்றுலா போன கட்டெறும்பு

சுற்றுலா போன கட்டெறும்பு

உதயசங்கர்

சுட்டிக்கருப்பன் என்று அந்தக்கட்டெறும்புக்கு எப்படி பெயர் வந்தது தெரியுமா? அவன் எப்போதும் கூட்டத்தோடு இருக்க மாட்டான். எல்லோரும் ஒரு வழி போனால் சுட்டிக்கருப்பன் கட்டெறும்பு மட்டும் தனிவழி போவான். அதனால் எல்லோரும் சுட்டிக்கருப்பன் என்று அவனைத் திட்டுவார்கள். ஆனால் அவன் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டான். அவன் சுற்றித்திரிந்து பார்த்த இடங்களைப் பற்றி புற்றுக்குள் வந்து கதை கதையாகச் சொல்வான். அவன் காணாமல் போகும்போது திட்டுகிற எல்லோரும் அவன் கதை சொல்லும்போது அவனைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு கண்ணிமைக்காமல் அவனுடைய பாவனை நடிப்பையும் அவனுடைய பேச்சையும் கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஆனால் உணவு சேகரிக்கும் கூட்டத்தின் தலைவன் மட்டும் சிரிக்க மாட்டான். அவன் கடுமையாக சுட்டிக்கருப்பனைத் திட்டுவான். ஆனால் சுட்டிக்கருப்பன் அதைப் பற்றி கவலைப்படமாட்டான். காலில் பட்ட தூசியைத் தட்டிவிடுவது மாதிரி தட்டி விடுவான்.
அன்றும் அப்படித்தான். உணவு சேகரிக்கும் கூட்டத்தின் தலைவன் அதிகாலையிலேயே சுட்டிக்கருப்பனின் உணர்கொம்புகளைத் தட்டி,
“ டேய் ஒழுங்கா கூட்டத்தோட வரணும்… அங்க இங்க போனே தோலை உரிச்சிருவேன்… எம்பின்னாடியே தான் வரணும்.. இன்னிக்கு மக்காச்சோளம் விளைஞ்சிருக்கிற மேகாட்டுக்குப் போறோம்… இன்ன.. தெரிஞ்சிதா?..”
என்று சொல்லியது. சுட்டிக்கருப்பன் கட்டெறும்பு குதியாட்டம் போட்டுகிட்டு ஆளுக்கு முன்னாடி மேகாட்டுக்குக் கிளம்பியது. தலைவன் முன்னால் போனான். அவனுக்குப் பின்னால் அணிவகுத்து அனைவரும் வரிசை மாறாமல் காடுமேடு வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அடிக்கடி தனக்குப் பின்னால் சுட்டிக்கருப்பன் கட்டெறும்பு வருகிறதா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு தலைவன் போனான்.
. கொஞ்ச தூரத்தில் இருந்த மக்காச்சோளக் காட்டில் ஒரு இயந்திரம் விளைந்த மக்காச்சோளக்கதிர்களை அறுவடை செய்து கொண்டிருந்தது.. அறுவடை நடக்கிறது என்றால் நிறைய மக்காச்சோளம் சிந்தும். அவற்றை சேகரித்துக் கொண்டு வந்து விடலாம். வேலை எளிதாக முடிந்து விடும். ஆனால் மனிதர்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இயந்திரமும் மேலும் கீழும் வரும். எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள்.
சுட்டிக்கருப்பன் அறுவடை நடந்து கொண்டிருந்த  மக்காச்சோளக்காட்டின் குறுக்கே மறுக்கே நடந்தான். ஓடினான். அலைந்து திரிந்தான். ஒரு முறை ஒரு மனிதனின் காலில் மிதிபடத் தெரிந்தான். ஒரு முறை ஓடிக்கொண்டிருந்த இயந்திரத்தின் அருகிலேயே போய் விட்டான். நல்லவேளை… தப்பித்து விட்டான். ஆடி ஓடிக் களைத்த சுட்டிக்கருப்பன் அருகிலிருந்த ஒரு புளிய மரத்தின் நிழலுக்குப் போனான். புளிய மரத்தின் அடியில் புளியம்பூக்கள் உதிர்ந்து கிடந்தன. ஒவ்வொரு புளியம்பூவின் இதழ்களையும் துழாவினான். அதில் ஒட்டியிருந்து இத்துணூண்டு தேனை உறிஞ்சினான். அப்படியே குடித்துக் குடித்து கொட்டாம்பெட்டி மாதிரி வயிறு நிறைந்து விட்டது. தேன் குடித்த மயக்கத்தில் அருகில் இருந்த ஒரு பிளாஸ்டிக் வயர்க்கூடைக்குள் புகுந்தான். அவ்வளவு தான் தெரியும் சுட்டிக்கருப்பனுக்கு.
சிலுசிலுவென காற்று முகத்தில் அடித்தது. அதுவரை கிறங்கிப் போயிருந்த சுட்டிக்கருப்பன் கண்விழித்தான். அவன் இருந்த வயர்க்கூடை காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. மெல்ல காற்றை எதிர்த்து வந்து கூடையின் மேல் நின்று பார்த்தான். ஆகா அவன் இருந்த கூடை ஒரு சைக்கிளில் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் காற்றில் பறந்து விடுவான் போல சைக்கிள் பறந்தது. சுட்டிக்கருப்பன் பயந்து போய் விட்டான். ஐய்யய்யோ.. நம்ம கூட்டத்தை விட்டு வந்து விட்டோமே… கூட்டத்தலைவனும் ராணியும் சிக்கினால் தோலை உரித்து விடுவார்களே! என்ற பயமும் வந்தது. அப்போது சைக்கிள் ஒரு இடத்தில் நின்றது. கூடையைத் தூக்கிக் கொண்டு போய் ஒரு சிறிய ஓட்டு வீட்டுக்குள் கீழே வைத்தான் சைக்கிளை ஓட்டியவன். உடனே ஒரு குழந்தை “ப்பா…ப்பா..ப்பா…” என்று மழலையில் பேசிக் கொண்டே கூடைக்கருகில் தவழ்ந்து வந்தது. கூடையை அப்படியே கவிழ்த்தது குழந்தை. கூடையிலிருந்த தூக்குவாளி, துண்டு அழுக்குச்சட்டை எல்லாவற்றையும் இழுத்துப் போட்டது. கூடை கவிழ்ந்ததுமே ஆகா..செத்தோம்… என்று பயந்த சுட்டிக்கருப்பன் உள்ளேயே பதுங்கியது. கூடையில் தின்பண்டத்தை எதிர்பார்த்த குழந்தை தின்பண்டம் இல்லை என்றதும் அழத்தொடங்கியது. அப்போது கூடையின் அடியில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த சுட்டிக்கருப்பனைப் பார்த்து விட்டது. உடனே சுட்டிக்கருப்பனைப் பிடிக்க உள்ளே கையை விட்டது. ஐயோ  சுட்டிக்கருப்பனைத் தொட்டே விட்டது…..
நல்லவேளை அந்தக்குழந்தையின் அம்மா குழந்தையைத் தூக்கி விட்டாள். உடனே குழந்தை பெரிதாக அழத்தொடங்கியது.
 “ பிள்ளைக்கு திம்பண்டம் வாங்கிட்டு வரணும்னு தெரிய வேண்டாமா.. அப்படியே வீசுன கையும் வெறுங்கையுமாவா வர்ரது… பாருங்க எப்படி அழுதான்னு..போங்க போய் உடனே பிஸ்கட் வாங்கிட்டு வாங்க…..”
என்று குழந்தையின் அம்மா சத்தம் போட்டதும் சைக்கிளில் வந்தவர் மறுபடியும் வயர்க்கூடையை எடுத்து சைக்கிளில் வைத்துக் கொண்டு கிளம்பினார். ஒரு ரெண்டு தெரு தாண்டியிருக்கும் சைக்கிள். அங்கே ஒரு பலசரக்குக் கடைக்கு முன்னால் போய் நின்றது. கூடையைக் கீழே வைத்ததும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று சுட்டிக்கருப்பன் பாய்ந்து பலசரக்குக் கடைக்குள் நுழைந்து விட்டான்.
அடடா.. என்ன வாசனை! புளி, சீரகம், மிளகு, வெல்லம், சீனி, அரிசி, கோதுமை, பிஸ்கட் பாக்கெட்டுகளில் உள்ள மணமூட்டிகளின் வாசனை. சேவு, மிக்சர், சீவல், இவற்றின் எண்ணெய் வாசனை, என்று எல்லாம் காற்றில் கலந்து ஒரு கலவையான வாசனை வந்தது. உணர்கொம்புகளை நீட்டி வாசனைகளை முகர்ந்த படியே ஒவ்வொரு பொருளாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. குஷியில் இரண்டு கால்களால் நின்று கொண்டு ஆடியது. நமது கூட்டத்தை இங்கே கூட்டிகிட்டு வந்து விட்டால் போதுமே… ஆகா..ஆனந்தமே…! அப்போது சுட்டிக்கருப்பன் மீது பெரிய போர்வையைப் போல இருட்டு மூடியது. சுட்டிக்கருப்பனுக்கு எதுவும் புரியவில்லை. ஆள் நடமாட்டமும் இல்லை. இருட்டில் விதவிதமான பூச்சிகளும், எறும்புகளும், கரப்பான்பூச்சிகளும், சுண்டெலிகளும், கடைக்குள் சர்வ சாதாரணமாக சுற்றிக் கொண்டிருந்தன. சுட்டிக்கருப்பன் வெளியே வரவில்லை. அப்படியே அது ஏறிய வெல்லம் இருந்த மூடையில் கிடந்தது. இப்போது தான் கூட்டத்தை விட்டு வெளியேறியதற்காக முதல் முறையாக வருத்தப்பட்டது. இனி எக்காரணம் கொண்டும் நமது கூட்டத்தை விட்டு வெளியே வரக்கூடாது. என்று நினைத்தது. பிழைச்சிருந்தா மறுபடியும் நம்ம கூட்டத்தைப் பார்ப்போம். என்று நினைத்த படியே உறங்கி விட்டது.
மறுநாள் கண்விழிக்கும் போது சுட்டிக்கருப்பனைச் சுற்றி அவனுடைய தோழர்கள் நின்று கொண்டிருந்தார்கள். எப்படி தெரியுமா? காலையில் பலசரக்குக்கடைக்கு வந்த கடைக்காரர் கம்மங்கஞ்சிக்கு வெல்லம் வாங்கினார். வெல்லத்தில் சுட்டிக்கருப்பனும் இருந்தான். சைக்கிள்காரருக்கு இன்று சுட்டிக்கருப்பன் கூட்டத்தினர் இருந்த பகுதியில் தான் உழவு வேலை. அவர் கம்மங்கஞ்சியைச் சாப்பிட வெல்லம் எடுத்தபோது அதில் கிறங்கிக் கிடந்த சுட்டிக்கருப்பனை எடுத்து வெளியில் வீசினார். நேற்றிலிருந்து காணாமல் போன சுட்டிக்கருப்பனைத் தேடி அலைந்து திரிந்து கொண்டிருந்த வெல்லத்தின் வாசனையில் அருகில் வந்தால் அங்கே கிடக்கிறான் சுட்டிக்கருப்பன்!
அப்புறம் என்ன?
விடிய விடிய சுட்டிக்கருப்பன் அவன் சுற்றுலா  போன கதையை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான்.

  

Monday, 27 July 2015

பிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்

பிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்

உதயசங்கர்

இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக்கிறது. மொட்டை வெயிலில் பீடங்களாக காய்ந்து கொண்டிருந்த அய்யனார்களும், கருப்பசாமிகளும், மாடசாமிகளும், அங்காள பரமேஸ்வரி, பேச்சியம்மன், இசக்கியம்மன், காளி, என்று உக்கிரமான நாட்டார் தெய்வங்கள் பெருந்தெய்வக்கோவில்களின் ஆகம விதிகளின்படி மாற்றியமைக்கப்படுகின்றன. கோவில் கோபுரங்கள், துணை தெய்வங்கள், உருவாக்கப்படுகின்றன. கோவில் மதில் சுவர்கள் கட்டப்படுகின்றன. சுற்றுப்பிரகாரங்கள் அமைத்து அதில் பெருந்தெய்வங்கள் குடியமர்த்தப்படுகின்றன. நாட்டார் தெய்வங்களில் ஆண் தெய்வங்களை சிவனின் அவதாரங்கள் அல்லது ஏவல் கணங்கள் என்றும் பெண் தெய்வங்களை பார்வதி, லெட்சுமி, அம்சங்கள் என்றும் கற்பிக்கப்படுகின்றன. முன்பு ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ பங்குனி உத்திரம், ஆடிக்கொடை, என்று திருவிழாக்கள் நடந்து கொண்டிருந்த நாட்டார் கோவில்களில் இப்போது அனுதினமும் விளக்கு ஏற்றப்பட்டு பூஜை, புனஸ்காரங்கள் நடைபெறத்தொடங்கியிருக்கின்றன. முன்பு நினைத்தவுடன் குடும்பத்துடன் போய் குலதெய்வம் அல்லது நாட்டார் கோவில்களுக்குச் சென்று நேரடியாக கும்பிட்ட நிலைமை மாறி விட்டது. ஊருக்கு அருகில் இருக்கிற நாட்டார் கோவில்களில் ஒரு பிராமணர் அர்ச்சகராக இருக்கிறார். அவரே நாட்டார் தெய்வங்களுக்கும் ஏஜெண்டாக மாறி விட்டார். உண்டியல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நைவேத்தியம் படைக்கப்படுகின்றது. மஞ்சளும் குங்குமம் பூசி வெள்ளிக்கண் பதித்து உக்கிரமாகக் காட்சியளித்த நாட்டார் தெய்வங்கள் இப்போது சாந்தசொருபியாக உத்தரியம், பட்டு வேட்டி தரித்து அம்மாஞ்சியாக முழிக்கிறார்கள். முன்பிருந்ததை விட புரோகிதர் தொழிலுக்கு டிமாண்ட் அதிகரித்திருக்கிறது. நிறைய பிராமண இளைஞர்கள் பஞ்சகச்சமும், மேல் உத்தரியமும் குடுமியும் வைத்துக் கொண்டு மொபெட்டுகளிலும், பைக்குகளிலும் சுற்றுகிறார்கள். முன் காலத்தில் போலவே பிராமணர்களை சாமி என்று அழைக்கும் குரல்கள் இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சிவராத்திரி, பங்குனி உத்திரம், அஷ்டமி, நவமி, பாட்டிமை, பிரதோஷம் நாட்களில் கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது. முகூர்த்த நாட்களில் மட்டும் தான் கூட்டம் கூட்டமாகக் கல்யாணங்கள் நடக்கின்றன. எல்லா விஷேச நாட்களிலும் புரோகிதர்கள் கிடைப்பது மிக மிக அரிதாகி விட்டது. ஃபீஸ் எவ்வளவு கொடுத்தாலும் கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு இருபத்தியையாயிரம் வரை ஃபீஸ் வாங்கும் புரோகிதர்கள் பெருகி விட்டனர். இப்போது சமஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்வதில் எந்தத் தயக்கமுமில்லை.
அதே போல உணவு விஷயத்திலும் அசைவ உணவை கீழ்த்தரமானதாகவும் சைவ உணவை மேல்நிலையாக்கமாகவும் உருவாக்கி விட்டிருக்கிறது. அதில் அசைவ உணவிலும் மாட்டுக்கறி, பன்னிக்கறி சாப்பிடுபவர்கள் மிகக்கேவலமானவர்களாக அதாவது சாதியமைப்பில் கீழானவர்களாக கருதுகிற நிலைமை இன்றும் இருக்கிறது. ஆயிரக்கணக்கான வருடங்களாக நடைமுறையில் இருக்கிற வர்ணாசிரம அமைப்பும், மனுதர்ம சாத்திர விதிகளும் மக்களின் பொதுப்புத்தியில் ஆழமாக வேரோடியிருக்கிறது. எனவே தங்களுடைய உணவுப்பழக்கத்தைக் கூட வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலைமையை உருவாக்கி விட்டிருக்கிறது. எனவே காலங்காலமாக மாட்டுக்கறி, பன்னிக்கறி சாப்பிட்ட ஒடுக்கப்பட்ட மக்களே இப்போதெல்லாம் நாங்கள் மாட்டுக்கறி, பன்னிக்கறி, சாப்பிடுவதில்லை என்று சொல்வதும், இன்னும் உச்சமாக நாங்கள் சைவம் என்று சொல்வதும் நடந்து கொண்டிருக்கிறது. கீழ்த்தட்டிலிருந்து பொருளாதாரரீதியாக மத்திய தரவர்க்கமாக மாறுகின்ற குடும்பங்களில் டான்ஸ் கற்றுக்கொள்வது, ஸ்போக்கன் இங்கிலிஷ், ஹிந்தி, சங்கீதம் யோகாசனம், கற்றுக்கொள்வது சாதாரண விஷயமாகி விட்டது. இப்போது யோகாசனத்தை இந்தியாவே கடைப்பிடிக்கிற உளவியல் நெருக்கடி வந்து விட்டது. பயிற்சி என்பது போய் இந்து மதத்தின் அடையாளமாக மாற்றப்பட்டு விட்டது.
மிக முக்கியமான திருநாட்கள் மட்டுமே கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த காலம் போய் இன்று காலண்டரில் போடப்பட்டிருக்கிற அத்தனை பிராமணிய, பஞ்சாங்க, விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. குளிகை, எமகண்டம், நல்ல நேரம், தோஷம், சூலம், பரிகாரம், என்று அனைத்து நாட்காட்டிகளும் நிரம்பி வழிகின்றன. நல்ல நேரம் குறிக்காமல் ராக்கெட்டோ, ஏவுகணையோ கூட ஏவப்படுவதில்லை. வீடுகளில் குடும்பத்தினரின் நலன் ஒன்றையே தன்னுடைய குறிக்கோளாகக் கொண்டு தன்னைத் தியாக தீபமாக கற்பித்துக் கொண்டு வாழ்கிற பெண்களை இந்த எல்லாச்சடங்குகளையும் முன்னெடுக்கிறார்கள். அவர்களே சுமங்கலி பூஜை, லட்சுமி பூஜை, விளக்கு பூஜை, ஐஸ்வரிய பூஜை என்று விதவிதமான பூஜைகள் மூலம் அணி திரள்கிறார்கள். நெற்றியில் மட்டும் இருந்த குங்குமம் இப்போது தலைமுடி வகிடு நெடுக பரவியிருக்கிறது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் அனைத்து வெளியூர் கோவில் விழாக்களையும் பக்தி சிரத்தையுடன் எப்படி பெண்கதாநாயகி, பெண்வில்லன்களே நிறைந்த சீரியல்களைப் பார்க்கிறார்களோ அதே மாதிரி பார்த்து பரவசமடைகிறார்கள். கோவில்களுக்குச் செல்வதை தங்களுக்கான ஒரு புழங்குவெளியாக, ஒரு கொண்டாட்டமாக பார்க்கிற உளவியல் பெண்களிடம் இருக்கிறது. தொலைக்காட்சி மூலம் தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்கிறார்கள். அதன் மூலம் தாங்களும் தங்கள் குடும்பமும் மேல்நிலையாக்கத்தை அடைந்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.
மேல்நிலையாக்கம் என்பது முன்னேற்றம் என்று எடுத்துக் கொண்டால் சைக்கிள் வைத்திருக்கும் ஒருவர் மோட்டார்சைக்கிள் வாங்குவது கார் வாங்குவது என்று எடுத்துக் கொள்ளலாம். குடிசையில் இருப்பவர் வீடு கட்டி குடியேறுவது, இப்படி தங்களுடைய பௌதீகச்சூழலில் ஏற்படும் முன்னேற்றத்தையும் மேல்நிலையாக்கம் என்று சொல்லலாம். பௌதீகச்சூழலை மிக நவீனமான, விஞ்ஞான சாதனங்களை, பொருட்களை, வாங்கிக்கொள்வதன் மூலம் தங்களை மேல்நிலையாக்கம் செய்து கொள்கிறவர்கள் ஆன்மீகச்சூழலில் ஏன் மூவாயிரம் ஆண்டு பழமையான சநாதனமான, பிற்போக்குத்தனமான, சமத்துவமற்ற, சர்வாதிகாரமான,  வேதங்களையும், மனுதர்மத்தையும், வர்ணாசிரமக்கோட்பாடுகளையும் ஏற்றுக் கொள்கிறார்கள்? பௌதீகச்சூழலில் நவீனத்தைத் தேர்ந்தெடுக்கிற பெரும்பாலான மக்கள் உளவியல்ரீதியாக மிகப் பிற்போக்கான பிராமணிய மேல்நிலையாக்கத்தைத் தேர்ந்தெடுக்கிறார்களே ஏன்?
இந்திய சமூகத்தில் மிகச்சிறிய இடைவெளிக்குப் பின்பு மீண்டும் பிராமணியம் தன் ஆட்சியை விஸ்தரிக்கத் தொடங்கி விட்டது. அதற்குத் தேவையான நிரந்தர, தற்காலிக நடைமுறை உத்திகள் அதன் கருவிலேயே இருக்கின்றன. பிராமணியம் வேதகாலம் தொடங்கி தன்னை மாறி வரும் சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொண்டேயிருக்கிறது. புத்தரை விஷ்ணு அவதாரமாக்கியது தொடங்கி இந்து மதத்தின் சீர்த்திருத்தவாதிகளான ராமனுஜர், வள்ளலார், பசவண்ணர், நாராயணகுரு, அய்யன் காளி, அய்யா வைகுண்டர், வரை இந்து மத எதிர்ப்பாளர்களான சார்வாகரை எரித்தும், அம்பேத்கரைச் சொந்தம் கொண்டாடியும், பெரியாரை எதிர்த்தும், இப்படி எல்லோரையும் விழுங்கி செரித்து அவர்களை வெறும் அடையாளங்களாக மாற்றியது வரை ஒரு நீண்ட நெடிய ஆக்கிரமிப்பு வரலாறு பிராமணியத்துக்கு இருக்கிறது. மத்தியதரவர்க்கம் மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட வர்க்கமும் இந்த பிராமணியமயமாக்கலை தங்கள் வர்க்கத்தின், சமூகத்தின், சாதியின், மேல்நிலையாக்கம் என்று கருதுகின்றனர். கெடுவாய்ப்ப்பாக. பிராமணியமாக்கலையே இந்திய சமூகம் தன்னுடைய உச்சபட்ச உயர்ந்த நிலையாகக் கற்பிதம் செய்திருக்கிறது. வேதகாலசநாதனத்தைப் போலவே பகுத்தறிவுக்கும் வேதகால சார்வாகர் தொடங்கி ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. பகுத்தறிவு இயக்கம் அவ்வப்போது எழுச்சி பெற்றாலும் பதுங்கிப் பாயும் பிராமணியம் மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.
பிராமணிய மேல்நிலையாக்கத்தினால் நம் சமூகத்தின் தனித்துவமான பன்முகச்சூழல் அழிந்து ஒற்றைக் கலாச்சார சர்வாதிகாரம் உருவாகிறது. அதுமட்டுமல்ல ஒவ்வொரு இனக்குழுவின், உழைக்கும் மக்களின், கோவில்கள், முன்னோர் வழிபாடு, குலதெய்வங்கள், உணவுப்பழக்கம், இயற்கையோடு இயைந்த தனித்துவமான பண்பாட்டு அசைவுகள், ஆன்மீகவிழாக்கள், எல்லாம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பௌதீகச்சூழல் முன்னேற்றத்தினால் வாழ்க்கைத்தரத்தில் உயர்வு வரும். ஆனால் பிற்போக்கான இந்தப்பிராமணியமாக்கலினால் சமூகத்தின் வரலாற்றுச்சக்கரம் பின்னோக்கித் தள்ளப்படுகிற ஆபத்து நம்மைச் சூழ்ந்திருக்கிறது. எனவே பிராமணிய மேல்நிலையாக்கத்தின் ஆக்கிரமிப்பையும் நம்முடைய பண்பாட்டு அசைவுகளையும் பிரித்தறிய வேண்டியுள்ளது. வைதீக ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து உழைக்கும் மக்களின் எளிய ஆன்மிகத்திருவிழாக்களை மீட்டெடுத்து தங்கள் பண்பாடு குறித்த பெருமிதத்தை நிலை நாட்ட வேண்டியுள்ளது. இதற்கான பரப்புரையை தீவிரமாக நிகழ்த்த வேண்டியுள்ளது. இது தற்காலிக நடைமுறையுத்தி. நீண்ட கால யுத்தியாக அறிவியல் பூர்வமான பகுத்தறிவு இயக்கத்தைக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. வரலாற்று அறிஞர் பேரா.கே.என்.பணிக்கர், பண்பாட்டில் தலையீடு செய்கிறோம் ஆனால் பண்பாட்டுத்தலையீடு செய்கிறோமா? என்ற ஆழமான கேள்வியைக் கேட்கிறார்.
ஆதிக்கம் செலுத்துகிற பண்பாட்டுநிகழ்ச்சி நிரலில் தொடர்ச்சியான தலையீடுகள் செய்வது, அதன் மூலம் வெகுமக்களிடம் ஒரு விமர்சன விழிப்புணர்வை உருவாக்குவது என்ற அளவில் பலகீனமாகவேனும் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் எதிர் மேலாதிக்கமாக மாற்றுப் பண்பாட்டு நிகழ்ச்சி நிரலை நாம் உருவாக்கியிருக்கிறோமா? நாம் எதிர்கொள்ள வேண்டிய மிகப் பெரிய சவால் இது தான். இதைத் தனியாக இடது சாரி பண்பாட்டு அமைப்புகள் மட்டும் செய்து விட முடியாது. மாற்றுப்பண்பாடு குறித்த ஒத்த கருத்துடைய அமைப்புகளின் மிகப் பெரிய அணி திரட்டல் தேவைப்படுகிறது. காலம் விடுக்கும் கோரிக்கை இது!


Sunday, 21 June 2015

கேள்விகளில்லா பொதுவெளி

கேள்விகளில்லா பொதுவெளி
உதயசங்கர்

உலகமயமாக்கலுக்குப் பின்னர் இந்திய சமூகம் தன்னுடைய உருவத்திலும் உள்ளடக்கத்திலும் வெகுவாக மாறி விட்டது. தாராளவாத பொருளாதாரக்கொள்கைகளின் விளைவாக சமூகம் முழுவதும் ஒருவித பாதுகாப்பின்மை உணர்வு எல்லோரையும் பீடித்துள்ளது. சமூக உணர்வுநிலை குறைந்து தனிமனித நலன் முன்னெப்போதையும் விட இப்போது முன்னுக்கு வந்துள்ளது. எல்லையில்லா நுகர்வியம் ஒவ்வொருவரையும் சுயநலமிக்கதனித்தீவுகளாக மாற்றியுள்ளது. முன்பு இருந்த சமூக மனிதன் காணாமல் போய்விட்டான். அந்த சமூக மனிதனுக்கு இந்த சமூகத்தின் அனைத்து விஷயங்களையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது. இன்று உலகமயமாக்கல் அவனை நுகர்வுமனிதனாக மாற்றிவிட்டது. இந்த நுகர்வு மனிதனுக்கு தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகம் பற்றிய அக்கறையில்லை. யாரையும் எதற்கும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இத்தகைய நுகர்வுவெறி எப்படி உருக்கொண்டது?
  இன்றுசமூகப்பொதுவெளி சர்வதேச மற்றும் தேசிய முதலாளிகளால் கட்டமைக்கப்படுகிறது. இருதுருவ உலகம் சோசலிச நாடுகளின் தகர்வோடு முடிவுக்கு வந்தபிறகு உலக முதலாளித்துவம் தன்னை மாறிய சூழலுக்கு ஏற்ப உருமாற்றிக் கொண்டுள்ளது. முன்பு இருந்த தேசிய அரசு சார்ந்த நிதி மூலதனத்தினால் ஏகாதிபத்தியங்களுக்கிடையில் உட்பகை விளைந்தது. சந்தைக்காக உலகத்தை தங்களுக்குள் கூறு போடுவதில் சண்டையிட்டன. ஆனால் உலகமயமாக்கலின் விளைவாக இதுவரை தேசிய அரசு சார்ந்திருந்த தேசிய நிதி மூலதனம் சர்வதேச நிதிமூலதனமாக உருமாறியது. இந்த உருமாற்றத்தினால் தேசிய அரசைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போயிற்று. உலகம் முழுவதும் சென்று கொள்ளை லாபம் ஈட்டிட எல்லைகளை அழித்து நீர்மையாக உலகம் முழுவதும் பாய்ந்து செல்கின்றன. அப்படிப் பாய்ந்து சென்று ஊகவாணிபம் மூலம் உடனடி லாபத்தை அடைவது என்பது அதன் இலக்காக மாறுகிறது.அதனால் தான் உலக நாடுகளில் உற்பத்தியாகும் அனைத்து நுகர்பொருட்களும் நம்மை வந்தடைகின்றன. இப்போது தேசிய அரசு இந்த அந்நிய முதலீட்டை வரைமுறையற்று அநுமதிக்க வேண்டியது மட்டும். அதற்கு சாதகமான அரசைத் தேர்ந்தெடுக்க தேசிய,மற்றும் சர்வதேசிய முதலாளித்துவம் செயல்படும். இப்படி உலகம் முழுவதும் சுதந்திரமாக லாபமீட்ட ஏகாதிபத்தியங்கள் தங்களுடைய உட்பகையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். ஏகாதிபத்திய உட்பகை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைக் கண்காணிக்க ஒரு கண்காணிப்பாளரை ஏகாதிபத்தியங்கள் ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றன. அந்த சர்வதேச கண்காணிப்பாளர் அல்லது சர்வதேச சண்டியர் தான் அமெரிக்கா.
அமெரிக்கா உலகநாடுகள் அனைத்தையும் ஐ.எம்.எஃப், உலகவங்கி, ஆகியவற்றின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொருளாதார அடியாட்களை உருவாக்கி அனுப்புவதும், ஏகாதிபத்தியங்கள் வாணிபம் செய்யத் தடையாக இருக்கும் நாடுகளின் அரசுகளை எப்படியாவது தூக்கி எறிவதையும் தன்னுடைய நிகழ்ச்சி நிரலாகக் கொண்டுள்ளது. அந்த நாடுகளில் முற்போக்கான இடதுசாரி அமைப்புகளை பலவீனப்படுத்துவது, பிற்போக்கான வலதுசாரி அமைப்புகளை முன்னுக்குக் கொண்டு வருவது, மதஅடிப்படைவாதத்தை வளர்ப்பது, சின்ன நாடாக இருந்தால் அந்த நாட்டின் ஜனாதிபதியையே கஞ்சா கேசில் உள்ளே தள்ளுவது, ( உதாரணம் பனாமா.,) எதிர்ப்புகளை தனிநபர் கொலைகள் மூலம் அடக்குவது,, ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பொருளாதாரத் தடைகள் விதிப்பது, ஊடகங்களை விலைக்கு வாங்கி உலகமுதலாளித்துவத்துக்குச் சாதகமான கருத்துக்களை உற்பத்தி செய்து பிரசாரம் செய்வது போன்ற எண்ணிக்கையிலடங்கா காரியங்களின் மூலம் உலகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திருப்பணியைச் செய்து கொண்டிருக்கிறது. உலகமயச்சுரண்டலுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடிக்கும்போது நிதி மூலதனம் முரட்டுத்தனமாக மாறும். கொடிய கோரைப்பற்களோடு அது பாசிசப்பேயாக மாறும். அதற்கு வசதியாக மக்களிடம் ஏற்கனவே இருக்கும் சநாதன பழமைவாதமான பண்பாடு, கலாச்சாரம் புனிதம், ஆகியவற்றை தீ மூட்டி வளர்க்கும்.
உலகமயமாக்கலின் விளைவாக மக்களிடையே அதிகரித்து வரும் மேடுபள்ளங்கள். மேட்டில் மிகச்சிலரும் பள்ளங்களில் ஏராளமான சாமானிய மக்களும் வீழ்ந்து தங்களுடைய அடிப்படை வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகும் நிலை.  மக்களின் வாழ்க்கை நெருக்கடிகள், அவர்களை முதலாளித்துவத்துக்கு எதிராக போராடத்தூண்டும். அப்போதே வலது சாரி பிற்போக்குத்தனம் மதவாத, சாதிவெறிச் சக்திகள் காலம் காலமாக தங்களுடைய கையில் வைத்திருக்கும் கடிவாளத்தை இறுக்கிப் பிடிக்கும். அவர்களுக்குள்ளேயே கற்பிதமான வில்லன்களை உருவாக்கும். மக்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதன் வழியாக தன்னுடைய சுரண்டல் தங்கு தடையின்றி நடப்பதை உறுதி செய்து கொள்ளும்.
இத்தாலியில் பாசிசம் தோற்றம் கொள்ள இடது சாரி ஜனநாயக சக்திகள் செய்யத்தவறியதாக இரண்டு விஷயங்களைச் சொல்கிறார் கிராம்ஷி. கத்தோலிக்கத்திருச்சபையின் மேலாண்மையைத் தகர்க்கத் தவறியதும் மதசார்பற்ற ஜனநாயக அறிவியல் கலாச்சாரத்தை உருவாக்கத் தவறியதும் தான் என்று சொல்கிறார்.
நீண்டகாலத்திட்டங்களோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய வலதுசாரி சக்திகள் தன்னுடைய பாசிச செயல்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் மதவெறியர்களையும் மதப்பற்றாளர்களையும் பிரித்தறிய முடியாதபடி எல்லோருடைய ஆன்மீக நிகழ்ச்சிநிரல்களையும் தங்களுடைய கையில் எடுத்தது. பெண்களை விளக்குபூஜை, காமாட்சிபூஜை, மாங்கலியபூஜை, சர்ஸ்வதி பூஜை, லட்சுமி பூஜை, என்று ஒன்று திரட்டியது. அதற்கு வீடுகளில் உள்ள ஆண்களும் மன இசைவைத் தருகிற நெருக்கடியைத் தருவது, குழந்தைகளை திரட்டி ஆன்மீக பஜனைகள் செய்வது, யோகாசனம், மருத்துவ முகாம்கள் மூலம் பொது மக்களைத் திரட்டி அவர்கள் மத்தியில் ஆன்மீகத்தின் பெயரால் மதவெறி விதைகளைத் தூவி வளர்ப்பது, இளைஞர்களுக்கு உடற்பயிற்சி என்ற பெயரில் காகாவில் சேர்த்து அவர்களிடம் வன்முறை வெறியைத் தூண்டுவது, இது போதாதென்று பிரதோஷம், அஷ்டமி, நவமி, என்று காலாவதியான மூடநம்பிக்கைகளுக்கு புத்துயிரளித்து தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளில் கோவில் மற்றும் மதம் சார்ந்த நடவடிக்கைகளை இன்றியமையாதாதாக மாற்றுவது என்று செயல்படுகின்றன. தொடர்ந்து அவர்கள் செய்த இந்த நடவடிக்கைகளின் பலனை அதிகாரத்தைக் கைப்பற்றியதன் வழியாக இன்று அநுபவிக்கிறார்கள்.
தங்களுடைய மேலாதிக்கத்துக்கு எதிராக கிளம்பும் எதிர்க்குரல்கள், மாற்றுக்கருத்துக்கள், பொதுவெளி விவாதங்கள் அடக்கப்படுகின்றன. அதிகாரம் தன் கொடுங்கரங்களால் பொதுவெளிஜனநாயகத்தின் குரல்வளையை இறுக்கிக் கொண்டிருக்கிறது. முதலில் சமூகத்தின் மனசாட்சிகளாக மாற்றத்திற்கான காரணிகளாக, விரிந்து பரந்த விவாதங்களை உருவாக்குபவர்களாக விமரிசனங்களை தங்கள் நுண்மான்நுழைபுலம் கொண்டு முன்வைப்பவர்களாக, இருக்கிற அறிவுஜீவிகளையும், எழுத்தாளர்களையும் வன்முறை மூலமாகவும் சட்டபூர்வமாகவும் கூட முடக்குகிறது. டோனி வெண்டிகர், பெருமாள் முருகன், முதலியவர்களின் நூல்களை முடக்குவதில் தொடங்கி நரேந்திர தபோல்கர், பன்சாரே, அபிஜித், போன்றோரைக் கொலை செய்வதன் வழியாக ஒரு செய்தியை உரக்கச் சொல்கிறது. தன் வழியில் குறுக்கிடுபவர்களை எவ்வகையிலும் அகற்றத் தயாராக இருக்கிற செய்தி தான் அது.
ஐ.ஐடியில் பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டிருப்பது மற்றுமொரு எச்சரிக்கை. கல்விக்கூடங்களிலும் தங்களுடைய கண்காணிப்பை உறுதிப்படுத்துகிறது. ஒட்டு மொத்த சமூக வெளியையும் தன்னுடைய கண்காணிப்பின் கொடும்பரப்பிற்குள் கொண்டு வந்திருக்கிறது. எல்லாம் சட்டப்படியே நடக்கிறது.
இந்தியாவின் விடுதலைப் போராட்டகாலத்தில் முன்னுக்கு வந்த காலனியாதிக்க எதிர்ப்பு, மதச்சார்பின்மை, இந்திய தேசிய வாதம், சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி, தேசிய முதலாளித்துவம் தன்னுடைய வளர்ச்சிக்காக நிலை நிறுத்திய தாராள ஜனநாயக உணர்வு, சுதந்திரமான ஊடகங்களின் எழுச்சி, லட்சியவாதத்தின் எழுச்சி, இடதுசாரிகளின் எழுச்சிமிக்க தலையீடு, எல்லாம் சேர்ந்து இந்திய சமூகத்தின் பொதுவெளியில் மிகக் காத்திரமான ஜனநாயக எழுச்சியையும், சமூகத்தின் உள்ளடக்கத்தில் முற்போக்கான வளர்ச்சியையும் ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் இந்துத்துவாவும் செய்த சூழ்ச்சிகளின் விளைவாக உலகவரலாறு காணாத மதக்கலவரம் நடந்த போதும் அதிலிருந்து மீளும் வல்லமை பொதுவெளி சமூகத்துக்கு இருந்தது. இந்திய அறிவுஜீவிகளும் எழுத்தாளர்களும் முன்வைத்த மாற்றுக்கருத்துகளையும், விமரிசனங்களையும் விவாதங்களையும் ஏற்றுக் கொண்டு முன்னேறியது. மதச்சார்பற்ற சக்திகளின் கை ஓங்கியிருந்த சமயம் அது. எனவே மதவெறிச்சக்திகள் பதுங்கியிருந்தன பாய்வதற்கான தருணம் நோக்கி. எப்படி சோவியத்தில் கத்தோலிக்க திருச்சபை சோசலிசத்துக்கு எதிராக தன் பிரச்சாரத்தைத் தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருந்ததோ அப்படியே தங்களுடைய இந்துத்வா நிகழ்ச்சி நிரலைக் கைவிடாமல் தொடர்ந்து பண்பாட்டு தளத்தில் நடத்திக் கொண்டிருந்தது. யாருக்கும் சந்தேகம் வராதபடிக்கு விதவிதமான அமைப்புகள் உருவாகி கோவில்களை ஆக்கிரமித்தன. இந்து மதத்தின் எந்தவகைமைக்குள்ளும் வராத பெரும்பான்மை மக்களை பிரிட்டிஷ் அரசாங்கமும் இந்துத்வா சக்திகளும் கோவில்களில் ஒன்றிணைத்தன .மதசார்பற்ற சக்திகளின் நிகழ்ச்சிநிரலில் ஏற்பட்ட பண்பாட்டு வெற்றிடத்தை மிகச் சாதுரியமாக பயன்படுத்திக் கொண்டன
இன்றைக்கு இந்திய சமுகத்தின் பொதுவெளி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய கையில் போய்க் கொண்டிருக்கிறது. எழுத்தாளர்களூம் அறிவுஜீவிகளும், அறிவியலாளர்களும் அச்சுறுத்தப்பட்டு அமைதியாக்கப் பட்டுவிட்டால் பின் கேள்வி கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். கேள்விகளில்லா அந்தப் பொதுவெளியில் உலகமுதலாளித்துவமும் மதவெறியும் தங்களுடைய கோரத்தாண்டவத்தை ஆடத்தொடங்கி விடும். முன்னெப்போதையும் விட இப்போது தான் இந்திய அறிவுஜீவிகள், மதசார்பற்ற அறிஞர்கள், எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்கள், இடதுசாரிகள் சமூகநீதி விழைவோர், சமத்துவச்சிந்தனையாளர்கள், ஆகியோரின் ஒன்றிணைந்த ஒரே குரல் மிக மிக அவசியமாயிருக்கிறது. வரலாற்றில் மனித மாண்புகளை உயர்த்திப்பிடிக்க வேண்டிய தருணம் இது.!
நன்றி - வண்ணக்கதிர்


Thursday, 18 June 2015

எறும்புகள் கட்டிய போட்டி வீடு

எறும்புகள் கட்டிய போட்டி வீடு
உதயசங்கர்
மழை பெய்து ஓய்ந்து விட்டது. மண்ணுக்குள்ளே பாதுகாப்பாய் ஆழத்தில் குடியிருந்த சிவத்தான் எறும்பு மெல்ல வெளியே வந்தது. தன்னுடய உணர்கொம்புகளினால் காற்றைத் துழாவியது. இப்போது மேல்மண் காயத்தொடங்கி விட்டது. மறுபடியும் வேலையை ஆரம்பிக்க வேண்டியது தான். என்று நினைத்தது. இந்த மழை வருவதற்கு முன் மிகப்பெரிய புற்று கட்டியிருந்தார்கள் சிவத்தானின் கூட்டத்தார். வேலையாள் எறும்புகளின் அயராத உழைப்பை ராணியார் எறும்பான சிவப்புத்தலை சிங்காரியே பாராட்டியிருந்தார்கள். இந்த இடத்தைக் கண்டுபிடித்து சொன்னது சிவத்தான் தான். இதற்கு முன் அவர்கள் இருந்த புற்றில் அடிக்கடி ஒரு பாம்பு வந்து குடியிருந்து கொண்டது. என்ன கடித்தாலும் அதற்கு சுரணையே இல்லை. அது மட்டுமல்ல அருகில் இருந்த கருவை மரக்காட்டில் நிறைய ஓணான்களும் இருந்தன. அவை ஒன்று மாற்றி ஒன்று புற்று வாசலில் உட்கார்ந்து கொள்ளும். உணவு தேடிக் கொண்டு வரும் எறும்புகளை தன்னுடைய நீண்ட பசை நாக்கை நீட்டி வாய்க்குள் போட்டுக் கொள்ளும். அதனுடைய தோலும் ரப்பர் மாதிரி இருக்கும். என்ன கடித்தாலும் வலிக்காது.
ஒரு நாள் மாலை நான்கு ஓணான்கள் புற்று வாசலில் உட்கார்ந்து கொண்டு வேலையாட்களில் பாதியை விழுங்கி விட்டது. அன்றிரவு சிவத்தான் ராணி சிவப்புத்தலை சிங்காரியுடன் ஆலோசனை செய்து புதிய இடம் தேடுவதற்கான ஆணையை வாங்கியது. அப்படி அலைந்து திரிந்து கண்டு பிடித்த இடம் தான் இந்த கரிசல் மண். அருகில் மரங்களோ, ஓணான்களோ, இல்லை. சிவத்தானுக்கு ரெம்ப சந்தோஷம். ஒரு நாள் இரவில் சிவப்புத்தலை சிங்காரியின் தலைமையில் அனைவரும் இந்த இடத்திற்கு வந்து புற்று மாளிகை கட்டினர். அந்த மாளிகையின் அமைப்பைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தது ராணி சிவப்புத்தலை சிங்காரி. வேலையாட்களுக்கும் அவைகளின் தலைவனான சிவத்தானுக்கும் ஒரு பெரிய வெட்டுக்கிளியைப் பரிசாகக் கொடுத்தாள். அதிலிருந்து சிவத்தானுக்கு ரெம்பப் பெருமை.  தலையைத் தூக்கிக் கொண்டே திரிந்தது. தன்னுடைய முன்காலைத்தூக்கி தலையைச் சொறிந்தது. போன தடவை கட்டியதை விட பெரிதாகக் கட்ட வேண்டும். உள்ளே போய் வேலையாட்களை அழைத்து மாளிகை கட்டுவதற்கான திட்டங்களைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தது சிவத்தான்.
அப்போது ஏதோ ஒரு வாசனை காற்றில் வந்ததை உணர்கொம்புகள் சொல்லியது. சிவத்தான் சுற்றும் முற்றும் பார்த்தது. சற்று தூரத்தில் ஒரு எறும்பு வந்து கொண்டிருந்ததைப் பார்த்தது. உடனே சிவத்தானுக்குக் கோபம் வந்து விட்டது. நம்முடைய இடத்தில் இன்னொருத்தனா? நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்தைக் கண்டு பிடித்திருக்கிறோம். இந்த இடத்திற்கு வந்த பிறகு தான் ராணி சிவப்புத்தலை சிங்காரி நிம்மதியாக முட்டைகளை இட்டுக் கொண்டேயிருக்கிறாள். அதனால் கூட்டத்தில் வேலையாட்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. இந்த இடத்தில் இன்னொருத்தனா விடக்கூடாது என்று நினைத்தது சிவத்தான். உடனே அதை நோக்கி வேகமாக குடுகுடுவென ஓடியது.
” ஏய்…நில்லு..நில்லு… எங்க போறே…”
“ எம்பேரு கருப்பன்.. இங்க எங்கேயாவது தங்கறத்துக்கு இடம் கிடைக்குமான்னு பார்க்க வந்தேன்..”
“ இந்த ஏரியாவுக்குள்ள வராதே… இது எங்க ஏரியா…”
“ நண்பா.. நாங்க ஏற்கனவே இருந்த இடத்தில இப்ப சாக்கடை ஓடுது.. அந்த வெள்ளத்தில  என்னோட கூட்டத்தைச் சேர்ந்தவுங்க நிறைய பேரு போய்ட்டாங்க.. இப்ப நாங்க கொஞ்ச பேரு தான் இருக்கோம்.. அதான் புதுசா இடம் பாத்துட்டு வரச்சொல்லி எங்க ராணி கருப்புத்தலை சிங்காரி அனுப்பிச்சாங்க…” என்று அந்த கருப்பு எறும்பான கருப்பன் சொன்னது. அது மிகவும் பலகீனமாக இருந்தது. சரியாக நிற்க முடியாமல் அடிக்கடி ஒரு பக்கமாகச் சாய்ந்து கொண்டேயிருந்தது. ஆனால் சிவத்தான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவனுடைய கவலையெல்லாம் இந்த இடத்தில் வேறு யாரும் குடி வந்து விடக்கூடாது. கருப்பனை மிரட்டுவதற்காக தன்னுடைய உணர்கொம்புகளினால் லேசாகத் தள்ளி விட்டது. கருப்பன் ஒரு பக்கமாக விழுந்து விட்டது. அதனால் எழுந்திரிக்க முடியவில்லை. அதைப் பார்த்து சிவத்தானுக்குப் பாவமாகி விட்டது. அருகில் சென்று அதற்குக் கை கொடுத்து தூக்கி விட்டது.
“ கருப்பா உன்னைப் பாத்தா பாவமாத்தான் இருக்கு.. ஆனா இங்க தான் நாங்க சுதந்திரமா இருக்கோம்.. வேற யாருடைய தொந்திரவும் இருக்கக்கூடாது்ன்னு எங்க ராணி சிவப்புத்தலை சிங்காரி உத்தரவிட்டிருக்கிறார்கள்……”
“ நண்பா.. இந்த உலகத்தில நமக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் ஒரு இடம் இருக்கிறது… ஒருத்தரை ஒருத்தர் சாராமல் வாழ முடியாது.. சமாதானம்.. சகோதரத்துவம் சகவாழ்வு.. இது தான் நாம் வாழும் இந்த பூமி நமக்குச் சொல்வது… இயற்கை உன்னைச் சிவப்பாகவும் என்னைக் கருப்பாகவும் படைத்திருப்பதற்கும் காரணம் இருக்கிறது… நண்பா…”
என்று சொல்லி விட்டு மூச்சு வாங்கியது கருப்பன். சிவத்தான் அலட்சியமாக,
“ இந்தக் கதை எல்லாம் வேண்டாம்.. இந்த இடத்துக்கு வராதே… அவ்வளவு தான்..”
என்று சொன்னது. மறுபடியும் தன்னுடைய உணர்கொம்புகளை முன் கால்களினால் தடவி விட்டுக் கொண்டு கருப்பன் எறும்பு,
“ நண்பா… நீ இங்கே வருவதற்கு முன்னால் இங்கே யார் இருந்தா தெரியுமா? அதுக்கு முன்னால யார் இருந்தான்னு தெரியுமா? நம்மோட வாழ்க்கை ஒரு வாரமோ பத்து நாளோ…. அதுக்கப்புறம் யார் இந்த இடத்துக்கு வரப்போறாங்கன்னு உனக்குத் தெரியுமா? .. நீ ஒரு பக்கம் இருந்தா நான் ஒரு பக்கம் இருந்துக்கிறேன்… எங்க கூட்டமே அழியிற நிலைமையில இருக்கு… என்னன்னவோ வித்தியாசம் இருந்தாலும் நாம் எல்லோரும் எறும்புக் கூட்டம் தானே…”
இதைக் கேட்ட சிவத்தானுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. கருப்பனைக் கனிவோடு பார்த்தது. கருப்பன் தள்ளாடிக் கொண்டிருந்தது. பிறகு சிவத்தான் கருப்பனிடம்,
“ இவ்வளவு அறிவு எனக்கில்லை கருப்பா.. ஆனால் எங்களைத் தொந்திரவு செய்ய மாட்டீர்கள் என்றால் நீங்களும் உங்கள் கூட்டத்தாரும் இங்க வந்து வீடு கட்டிக்கோங்க… தயவு செய்ஞ்சி என்னோட முரட்டுத்தனத்தை மன்னிச்சிரு…”
இதைக் கேட்டதுமே கருப்பனுக்கு புதுத்தெம்பு வந்த மாதிரி இருந்தது. “ மிக்க நன்றி நண்பா..” என்று தன்னுடைய உணர்கொம்புகளால் சிவத்தானின் உணர்கொம்புகளைத் தட்டிக் கொடுத்தது. சிவத்தானும் தன்னுடைய முன் காலால் கருப்பனைத் தடவிக் கொடுத்தது.

மறுநாள் அங்கே இரண்டு எறும்புப்புற்றுகள் எழும்பிக் கொண்டிருந்தன. 
நன்றி- மாயாபஜார் தமிழ் இந்து

Tuesday, 9 June 2015

எங்கிருந்து தொடங்குவது?

எங்கிருந்து தொடங்குவது?

உதயசங்கர்

இந்திய நாகரீகத்தை வேதகாலத்திலிருந்து தொடங்குகிறார்கள் பழமைவாதிகள். அதற்கு வேதங்களை ஆதாரமாகக் கொள்கிறார்கள். ஒரு சமூகத்தின் வரலாற்றை நாகரீகத்தை பண்பாட்டை, வாழ்க்கை முறையை, அதன் வழிபாட்டு முறையை, அறிந்து கொள்ள இலக்கியப் பிரதிகள் மட்டும் போதுமானவைதானா? அதற்கு துல்லியமான பொருள்சார் பண்பாட்டு சான்றுகள், அகழ்வாராய்ச்சிகள், தொல்லியல் சான்றுகள், மானிடவியல் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் என்று ஏராளமான தரவுகளை ஒருங்கிணைத்தே நாம் கடந்த கால வரலாற்றை, சமூகத்தைப் புரிந்து கொள்ள முடியும். பெரும்பாலும் இலக்கியத்தில் அந்தந்தக் கால வரலாறு எழுதப்படுவதில்லை. இலக்கியச்சான்றுகளில் அந்தந்தக் கால சமூகத்தின் அறவிழுமியங்கள், ஆசை, விருப்பம், வெற்றிகள், ( பெரும்பாலும் தோல்விகள் இருப்பதில்லை ) இல்லாமைகள், காதல், என்று உணர்வு சார்ந்த விழுமியங்களே மிகுந்திருக்கும். இந்த உணர்வுச்சித்தரிப்பிற்கு இடையில் ஆங்காங்கே விரவிக் கிடக்கும் சில பௌதீகச்சான்றுகளை துணையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதையே முழுவதுமாக வரலாற்றுத் தரவாக எடுக்கும் போது தவறான முடிவுகளுக்கே கொண்டு சேர்க்கும்.
சமகால அரசியல் பலன்களுக்காக பெரும்பாலான அரசியல் சக்திகள் தங்கள் பெருமைகளை வரலாற்றுக் காலத்துக்கும் முன்னால் கொண்டு செல்ல முயற்சிப்பதும், வரலாற்றின் பொன்னொளியில் தங்களுடைய முன்னோர்களை முழுக்காட்டி தற்காலப்பலன்களுக்கு அவர்களை முதலீடாக்குவதும் நிகழ்கிறது. இதனால் வரலாற்றை திரித்து அல்லது மறைத்து அல்லது உருமாற்றி எழுதுவது நடக்கிறது.
 ஒரே மொழியைப் பேசுபவர்கள் அல்லது அந்த மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே இனமாக இருக்க வேண்டியதில்லை. இனம் என்பது ஒரே மொழி பேசுபவர்கள் அல்ல. அப்படி எடுத்துக் கொண்டால் இந்தியாவைப் பிற்காலத்தில் ஆராய்ச்சி செய்பவர்கள் இங்கே இந்தியா முழுவதும் இருக்கும் ஆங்கிலத்தின் செல்வாக்கைக் கண்டு இந்தியாவில் 20 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆங்கிலேய இனமே வாழ்ந்ததாகப் பிழையாக நினைக்கக்கூடும். எனவே ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு மக்கள் திரள்  இந்தியாவுக்குள் அவ்வப்போது வந்திருக்கின்றனர். மேய்ச்சல் நிலங்களைத் தேடி வந்த இடையர்கள் கூட்டம் இந்தியாவில் குடியேறியவர்கள். அவர்கள் அனைவரும் ஒரே இனக்குழுவினர் அல்ல. குடியேறிய ஆரிய மொழி பேசும் அந்த இனங்களுக்கிடையிலும் பகைமையும் சண்டைகளும் நடந்திருக்கின்றன பகைக்கும் சண்டைகளுக்கும் அப்போதிருந்த காரணம் சமயக்கோட்பாட்டிலிருந்த வேறுபாடுகளே என்பதுவும் ரிக் வேதப்பாடல்களில் மிகத்தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றன. அந்தவேதகாலத்தில் சப்த சிந்து பிரதேசத்தில் புரு, யது, துர்வஷ், அணு, திருஹ்ய, என்ற ஐந்து ஆரிய இனக்குழுக்கள் இருந்ததாக ரிக் வேதம் ( 1-108-8 ) கூறுகிறது. பின்னர் இந்த ஐந்து இனக்குழுக்கள் 12 இனக்குழுக்களாகப் பிரிந்திருக்கிறார்கள்..  இந்தியாவுக்குள் ஆரியர்களின் வருகை கி.மு.1500 வாக்கில் .நிகழ்ந்திருக்கிறது. அதற்கு 1500 வருடங்களுக்கு முன்பு அதாவது கி.மு. 3000 மாவது ஆண்டுகளிலே மொகஞ்சோதரா, ஹரப்பா நாகரிகம் மிக முன்னேறியதாக இருந்திருக்கிறது என்று அகழ்வாராய்ச்சிகள் நிருபிக்கின்றன.
சிந்து சமவெளி மக்கள் தாமிரத்தையும் வெண்கலத்தையும் பயன்படுத்தினார்கள். தாமிரத்தினால் ஆன மோதிரங்கள், கோடாரிகள், ஈட்டிகள், கத்திகள், வேல்கம்புகள், மற்றும் காவி நிற மட்பாண்டங்களும் கிடைத்திருக்கின்றன. மிகச் சிறந்த கைவினைஞர்களும் அங்கிருந்திருக்கின்றனர். கல் வேலைப்பாட்டில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள்., பருத்தி ஆடை தயாரித்திருக்கிறார்கள். கண்ணாடி மணிகள், பாசி மணிகள், இவற்றைக் கோர்த்து மாலைகள் செய்திருக்கிறார்கள். தந்த வேலை, சுண்ணாம்பு உற்பத்தி, செய்பவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆடுகள், மாடுகள், பன்றிகள் ஆகியவற்றை வீட்டுப்பிராணிகளாக பழக்கியிருக்கிறார்கள். மாட்டிறைச்சி, சாப்பிட்டிருக்கிறார்கள். அரிசி, கோதுமை, ,கம்பு, அவரை, உளுந்து, பட்டாணி, போன்ற தானியங்களைப் பயிர் செய்திருக்கிறார்கள். கட்டிடக்கலையில் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். கோட்டைகள் கட்டப்படிருக்கின்றன. மதிற்சுவர்களின் மீது வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. வீடுகள் சுட்ட மற்றும் சுடப்படாத களிமண்ணால் கட்டப்பட்டிருக்கின்றன. அனைத்து வீடுகளிலும் தனித்தனி அறைகள் குளியலறைகள், குப்பைத்தொட்டிகள், இருந்திருக்கின்றன. பெரும்பாலான வீடுகள் இரண்டு மூன்று தளங்களைக் கொண்டதாக இருந்திருக்கின்றன. மாடமாளிகைகளும் சிறு வீடுகளும் அருகருகே இருந்திருப்பதைப் பார்க்கும்போது வர்க்க வேறுபாடு அங்கே நிலைகொண்டிருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு நகர நிர்மாணம் மிகவும் திட்டமிடப்பட்டு கட்டியதற்கான அனைத்துச் சான்றுகளும் இருக்கின்றன. நீர் வடிகால் வாய்க்கால்கள், சாக்கடை நீர் வடிகால் வாய்க்கால்கள், கட்டப்பட்டிருக்கின்றன. கழிவு நீர் வெளியேற்றம் ஹரப்பா நாகரிக மக்களின் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
விவசாயத்திற்காக நீரைக்கட்டுப்படுத்தும் பல வழிமுறைகளைக் கையாண்டார்கள். மரக்கலப்பையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தாய்த்தெய்வ வழிபாடு இருந்திருக்கிறது என்பது அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் நிர்வாணச்சிலையிலிருந்து தெரிகிறது.அதே போல லிங்கவழிபாடும் இருந்திருக்கிறது. ஹரப்பா மக்கள் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கமிருந்திருக்கிறது. 2000 –க்கும் மேற்பட்ட ஹரப்பா முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஹரப்பா மக்களின் எழுத்துக்களை இன்னும் வாசித்தறிய முடியவில்லை. அந்த எழுத்துக்களை வாசித்தறியும் போது மேலும் பல விஷயங்கள் தெரியும்.
கி.மு.1800 வாக்கில் ஹரப்பா நகரங்கள் காலியாகி விட்டன. நகரில் வாழ்ந்த மக்கள் அழிந்திருக்க வேண்டும் அல்லது வேறு பகுதிகளை நோக்கி புலம் பெயர்ந்திருக்க வேண்டும். ஹரப்பா நாகரிகம் சிதைந்து அழிந்ததற்கு இரண்டு முக்கியக் காரணிகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சிந்து மற்றும் ராவி நதிகளின் பாதைகள் மாறியதால் ஒருபுறம் வறட்சியும் மறுபுறம் வெள்ளமும் ஏற்பட்டு சிந்து சமவெளி நகரங்களும் மக்களும் அழிந்திருக்கலாம். அடுத்தது கி.மு.1500 வாக்கில் இந்தியாவுக்குள் வந்த ஆரியர்கள் தொடுத்த யுத்தங்களினால் அழிந்தன. அதற்கு சாட்சியாக குடியிருப்புகள் எரிந்த சாம்பலின் மொத்த அடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. மொகஞ்சோதராவில் மனித எலும்புக்கூடுகளின் குவியல், ஒரு வீட்டில் கிடந்த எலும்புக்கூடுகளின் குவியல், கிணற்றடியில் கிடந்த பெண்ணின் எலும்புக்கூடு ஆகியவை இந்தப் படையெடுப்பு குறித்த ஆதாரங்களாக கிடைத்திருக்கின்றன. அதே போல ரிக் வேதத்தில் ஆரியர்கள் அல்லாதவர்களின் நகரங்கள் அழிக்கப்பட்டதைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.
பொதுவாகவே ஆரியர்களை ஆரிய மொழி அதாவது சமஸ்கிருதம் பேசும் ஒரே பண்பாட்டு முறையைக் கொண்ட மக்கள் கூட்டத்தினர் என்றே பார்க்கப்பட்டனர். இந்திய மரபில் இனம் என்ற வரையறை முற்றிலும் அந்நியமானது. அது ஐரோப்பாவின் கருத்தாக்கம். இந்தியாவைப் பொறுத்தவரை மொழி வேறுபாடு, வர்ணாசிரம தர்மத்தின் படிநிலை வேறுபாடு, சமய வேறுபாடு இவையே மாறுபட்ட மக்கள் திரளைப் பிரிப்பதற்கான வரையறை. ஒரு முறை கூட இந்தியாவுக்கு வந்திராத இந்திய வரலாற்றியலாளர் மாக்ஸ்முல்லர்,தான் முதன்முதலில் ஆரிய இனக்கோட்பாட்டை உருவாக்கியவர். ஆரிய மொழிக்குடும்பமான, சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்கம், ஜெர்மானிக், ரோமான்ஸ்,ஆகிய மொழிகளிடையே இருந்த ஒப்புமையின் காரணமாக மாக்ஸ்முல்லர் இந்திய மற்றும் ஐரோப்பியப் பண்பாட்டின் வழியாக உலகமுழுவதும் விரிந்து பரந்த ஆரிய இனம் என்ற பார்வையை உருவாக்கினார்.
“ நமது மிக நெருங்கிய அறிவுலக உறவினர்களான இந்தியாவின் ஆரியர், சமஸ்கிருதம் என்ற அற்புத மொழியை உருவாக்கியவர்கள், நமது அடிப்படையான கருத்தாக்கங்களின் உருவாக்கத்தில் உடனுழைத்தவர்கள் இயற்கை மதங்களிலேயே மிக இயற்கையான மதத்தின் தந்தையர், மிக வெளிப்படையாகப் பொருள் உணர்த்தும் புராணங்களை இயற்றியவர்கள். மிக நுட்பமான மெய்யியலை உருவாக்கியவர்கள், மிக விரிவான சட்ட இயலைத் தந்தவர்கள்,  ”
என்ற லட்சியச்சித்திரத்தின் மூலம் வேதகாலத்திலிருந்தே இந்தியப்பண்பாடும் நாகரிகமும் தொடங்குவதாக கற்பிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் மொழியையும் இனத்தையும் ஒன்றாக்கிய அபத்தம் நிகழ்ந்தது.  வர்ணாசிரமத்தர்மத்தினை நடைமுறைப்படுத்தியதின்  மூலம் ஆரியர்களின் இனத்தூய்மை பாதுகாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இத்தைகைய கருத்தாக்கத்தின் விளைவே ஜெர்மனியின் ஹிட்லர் தூய ஆரிய இனக்கோட்பாட்டை முன் வைத்து யூதர்களை இன அழிப்பு செயதான். அதையே இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். வழிமொழிந்தது..ஆர்.எஸ்.எஸ்ஸின் முகமூடிகளில் ஒன்றான பி.ஜே.பி. இன்று ஆட்சி அதிகாரத்தில் ஏறியதும் வேதகாலத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்று முழங்குகிறது. இதில் விசித்திரம் என்னவென்றால் வேதகாலத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி கலப்பில்லாத தூய ஆரிய இனம் என்று ஒன்று கிடையாது ஆரிய இனம் மட்டுமல்ல உலகின் எந்தவொரு இனமும் கலப்பின்றி பல்கிப் பெருகவில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் இந்த ஆரிய இனக்கோட்பாடு இந்தியாவின் மேல்சாதியினருக்கு வேதகாலத்தைப் பொற்காலமாகப் பார்க்கும் பார்வையைக் கொடுத்தது. இதுவே வேத காலத்தை கி.மு. 4000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் தள்ளவும் ஆரியர்களும் இந்தியாவிலிருந்த பூர்வகுடிகளே என்றும் நிறுவவும், இல்லாத சரஸ்வதி நதியைத் தேடிப்பார்க்கவும், மொகஞ்சோதரா முத்திரையில் உள்ள மாட்டை குதிரையாக மாற்றி வரலாற்றைத் திருத்தவும் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. ஆனால் உண்மையில் இந்தியாவின் பண்பாடு ஹரப்பா, மொகஞ்சோதராவிலிருந்து ஆய்வுக்குள்ளாக்கப்பட வேண்டும்.  நாகரிகத்தில் மிக முன்னேறிய ஒரு சமூக அமைப்பு வேதகாலத்திற்கு முன்னால் இருந்திருக்கிறது என்பது நிருபணமாகியிருக்கிறது. இந்தியப் பண்பாட்டின் மூலம் ஹரப்பா அல்லவா? அதாவது கி.மு.3000 ஆண்டுகளிலிருந்தே தொடங்க வேண்டும் இல்லையா? அப்படியானால் ஏன் இந்தியப்பண்பாட்டின் துவக்ககாலம் வேதகாலம் என்றும் ஆரியர்களே அதன் மூலகர்த்தாக்கள் என்றும் நிறுவ முயற்சிப்பது ஏன்? சிவில் சொசைட்டியின் பொதுப்புத்தியில் வேதங்களை புனிதமானதாக, கேள்விக்கப்பாற்பட்ட தெய்வீக நிலைக்கு ஏற்றிவிட்டால் பிராமணியம் மீண்டும் அரியணையில் ஏறவும், சமூக,பொருளாதார, பண்பாட்டு, ஆன்மீக, அதிகாரத்தைக் கைப்பற்றவும் அதை நிரந்தரமாக்கவும் முடியும். இந்தத் திட்டங்களை முறியடிக்க வேதங்களின் உண்மையான உள்ளடக்கம் பற்றி, மநுதர்ம தந்திரங்களைப் பற்றி, இந்தியாவின் பன்முகத்தன்மை பற்றி, பொய்யான மேல்நிலையாக்கம் குறித்த மாயைகள் குறித்து மக்களின் பொதுப்புத்தியில் இருக்கும் சித்திரங்களை தகர்க்க மீண்டும் மீண்டும் தலையீடு செய்து கொண்டிருக்க வேண்டும்.
அப்போது தான் அறிவியல்பூர்வமற்ற பொய்யும் புனைசுருட்டும் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் இந்திய வலது சாரிகளின் குரூரமுகம் சாமனிய மக்களுக்குப் புரியும். இந்திய நாகரீகத்தின் உண்மையான மதசார்பற்ற முகம் வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளிரும்.
துணை நூல்கள்- 1. பண்டைக்கால இந்தியா-டி.என்.ஜா
                 2.வரலாறும் கருத்தியலும் – ரொமிலா தாப்பர்

                  3. ரிக் வேதகால ஆரியர்கள்- ராகுல் சாங்கிருத்தியாயன்.

Friday, 5 June 2015

இந்து மதம் ஒரு கற்பிதமா?

இந்து மதம் ஒரு கற்பிதமா?

உதயசங்கர்

முதலில் இந்து என்ற பெயர் மதம் சார்ந்ததோ, இனம் சார்ந்ததோ, சாதி சார்ந்ததோ இல்லை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்து என்ற வார்த்தை பூகோளரீதியாகவே தோன்றியிருக்கிறது.  சிந்து அல்லது இண்டஸ் நதியைச் சுற்றியிருந்த நிலப்பகுதியில் வாழ்ந்தவர்களைக் குறிக்கும் சொல்லாகவே அது குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலத்தில் வசித்த அனைவரும் பூகோளரீதியாக இந்துக்கள் என்று அழைக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இது புதிய குடியேறிகளின் பார்வையில் ” மற்றவர்கள் “ ( OTHERS ) என்ற அர்த்ததிலேயே இருந்தது. அதே போல ஆரம்ப கால வெளிநாட்டுத் தொடர்புகளின் மூலமாக இந்தியாவுக்குள் வந்தவர்களை இனரீதியாக துருக்கியர் என்றோ, பூகோளரீதியாக யவனர் என்றோ, கலாச்சார ரீதியாக மிலேச்சர் என்றோ ( அதாவது சமஸ்கிருதம் பேசாதவர்கள், சாதியமைப்புக்கு வெளியில் இருந்தவர்கள், தூய்மையற்றவர்கள், கீழ்ச்சாதியினர், பழங்குடியினர், மற்றும் அந்நியர்கள் ( அவர்கள் உயர்செல்வாக்குடையவர்களாக இருந்த போதிலும் அனைவரும் மிலேச்சர் தான் ) அழைக்கப்பட்டனர். எனவே ஆரம்பகாலங்களில் மக்களுக்கு மத அடையாளம் இல்லை.
மதம் என்ற கருத்தாக்கமே பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஒன்று. வெள்ளைக்காரர்களுக்கு இங்குள்ள பல சமயப்பிரிவுகளைப் புரிந்து கொள்ள முடிய வில்லை. அவர்கள் தங்களுடைய மதமான கிறித்துவ மதத்தைப் போல ஒற்றை நிறுவன மதத்தை கற்பனையாக உருவாக்கினர். மதம் என்ற கருத்தாக்கத்துக்கு சகல அதிகாரம் கொண்ட ஒற்றை நிறுவனம், திருச்சபை, ஒற்றைக்கடவுள், கடவுளின் தூதர், ஒற்றைப்புனித நூல், என்ற அக உறுப்புகள் கொண்டது. உதாரணத்திற்கு கிறித்துவமாக இருந்தால் கத்தோலிக்க திருச்சபை, கடவுளாக பிதா, கடவுளின் தூதராக ஏசு, புனித நூலாக பைபிள், என்று பார்க்கலாம். ஆனால் அப்படி ஒரு ஏற்பாடே இந்து மதத்தில் கிடையாது. ஏன்?
..சமயம் என்பது நிறுவனமயமாகாத சிறு குழுக்கள் தனித்தனியாகவோ, சேர்ந்தோ, இனரீதியாகவோ, சாதி ரீதியாகவோ, ஏராளமான தெய்வங்களை வழிபடும் முறை என்று கூறலாம். இந்தச் சமயக்குழுக்கள் தங்கள் வழிபாட்டுச் சடங்கியல் முறைகளில் மிகுந்த வேறுபாடுகளும் மாறுபாடுகள் கொண்டவர்கள். ஆதியிலிருந்தே ஏராளமான சமயக்குழுக்களே இங்கிருந்தன ஆரியர்கள் வேதமரபான ஸ்ருதி ( வேதங்கள் ), ஸ்மிருதி ( வேதங்களின் துணை நூல்கள், தர்ம சாத்திர நூல்கள் ), இவைகளை அடிப்படையாகக் கொண்டே தங்களுடைய சமய மரபைக் கடைப்பிடித்தனர். அவர்களுக்கு முன்பு இங்கே இருந்த பழங்குடியினரை தஷ்யூக்கள் என்று அழைத்ததும் அவர்களோடு போரிட்டதும் சமய வழிபாட்டு சடங்கியல் வேறுபாடுகளுக்காகவே. எனவே ஆரியர்களின் தர்மசாத்திரக்கோட்பாட்டின் படி இரு பிறப்பாளர்களான ( துவிஜர் ) பிராமணர், சத்திரியர்,களுக்கு மட்டுமே ஆரம்பத்தில் வேதங்களை ஓதவும், கேட்கவும் உரிமையுண்டு. எனவே வேதங்கள் எல்லோருக்குமான புனித நூலாக எப்போதும் இருந்ததில்லை.
ஆதியில் வேதமதமான பிராமண மதமும், பௌத்த, சமண, ஆசீவகம் இணைந்த சிராவண மதமுமே இரு பெரும் சமயக்குழுக்களாக இருந்திருக்கின்றன. பிராமண மதத்திற்கும், சிராவண மதத்திற்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் இருந்தன. பிராமணியத்துக்கும் சிராவணத்துக்கும் இடையிலான பகை கடுமையாக இருந்தது. வேத மதமான பிராமணிய மதத்தில் யாகச்சடங்குகளே முக்கியப்பங்கு வகித்தன. அஸ்வதமேத, புருஷ, ராஜ சூய, என்று யாகங்களும் பலிகளும் மட்டுமே கொண்டது யாகச்சடங்குகளை மட்டுமே வலியுறுத்திய வேத மரபிலிருந்து விக்கிரக வழிபாட்டை மேற்கொண்ட புராண மதம் தோன்றியது. வேதங்கள் காற்றில் சுயமாக உருவானது அதாவது அபௌருஷயம் என்று வைதீக மரபும், வேதங்கள் சிவனால் அருளப்பட்டது என்று சைவர்களும் வேதங்கள் விஷ்ணுவால் அருளப்பட்டது என்று வைணவர்களும் நம்புகின்றனர்.
அதன் பிறகு புராண மதக்கடவுள்களாக சிவனும் விஷ்ணுவும் பிரதானப்பாத்திரங்களை ஏற்றார்கள்.  சைவர்கள் வைணவர்களுக்கு எதிராகவும், வைணவர்கள் சைவர்களுக்கெதிராகவும், இருவரும் வேத மதத்தினருக்கெதிராகவும் சண்டையிட்டனர். இவர்கள் மூவரும் சேர்ந்து சிராவணப்பிரிவுகளைச் சேர்ந்து எதிர்த்தனர்.. இவையெல்லாவற்றையும் எதிர்த்தன சிராவணப்பிரிவுகளான பௌத்தம், சமணம், ஆசீவகம், சாக்தம். இந்தப் பிரிவுகளின்றி, தாந்தரீக வழிபாடு, தாய்த்தெய்வ வழிபாடு, நாட்டார் சமய மரபுகள் என்று நூற்றுக்கணக்கான பிரிவுகளும் வேறுபட்ட சடங்கியல் வழிபாட்டு முறைகளோடு முரண்பட்டு நின்றார்கள். வெகு மக்களைப் பொறுத்தவரை சாதி இருந்தது சாமி இருந்தது. சடங்கு இருந்தது. இதை மட்டுமே தங்களுடைய அடையாளங்களாகக் கொண்டிருந்தனர். இத்துடன் வேதகாலத்திலேயே தோன்றிய நாத்திக மரபான சாருவாகம்,இருந்தது.
இந்தியச் சமூக அமைப்பைப் புரிந்து கொள்ளவும், நிர்வாக நலனுக்காகவும், இந்திய மக்களை வகைப்படுத்தி, தொகுக்கும் வேலையைத் தொடங்கியது. 1871 – ஆம் ஆண்டு டபிள்யூ.ஹெச்.எல்லீஸ் என்ற ஆங்கிலேய அதிகாரியின் தலைமையில் சென்சஸ் எடுக்கப்பட்டது. அத்துடன் அவர் “ THE CODE OF HINDU LAW “ என்னும் கட்டுரையையும் எழுதினார். அதோடு இந்திய சமூகத்தை ஆங்கிலேயக்கிறித்துவக்கண்  (அதாவது ஒற்றைமதக்கோட்பாடு ) கொண்டு பார்த்ததின் விளைவாக அனைத்து சமயக்குழுக்களும் ஒற்றை மதத்தின் குடைக்குக் கீழ் கொண்டுவரப்பட்டனர். ஸ்மார்த்தம், சைவம், வைணவம், காளி வழிபாடு, முருகவழிபாடு, தாந்திரீக வழிபாட்டு, தாய்த்தெய்வ வழிபாடு, சாக்தம், சாங்கியம், என்று எண்ணற்ற மாறுபட்ட முரண்பட்ட சமயங்களைக் கொண்டவர்களை இந்து என்ற ஒற்றை வார்த்தையில் அடைத்து வைத்தனர். கெடுவாய்ப்பாக அந்த இந்து என்ற அந்த ஒற்றை வார்த்தையின் சிம்மாசனத்தில் வேத பிராமணர்களான ஸ்மார்த்த மரபினர் உட்கார வைக்கப்பட்டனர். அதே ஆங்கிலேயர்கள் இந்து மதத்தை உருவாக்கிய மாதிரி இந்து மதக்கோட்பாட்டையும் உருவாக்கினர். புனித நூலாக வேதங்களையும் பகவத்கீதையையும் இந்து மதச்சட்ட நூலாக மனு தர்மசாஸ்திரத்தையும் முன் வைத்தனர். சைவ ஆகமத்தையும் வைணவ ஆகமத்தையும் புறந்தள்ளினர். அதுமட்டுமல்லாமல் மனுதர்ம சாஸ்திரத்தை அங்கீகரித்ததின் மூலம் கொடிய சாதியப்படிநிலைகள் நிலைத்திருக்க வழி செய்து விட்டனர்.. இப்படித்தான் வரலாற்றில் நவீன இந்து மதம் கற்பிதமாக உருவாக்கப்பட்டது. மறைந்த சந்திரசேகர சங்கராச்சாரியார் அவருடைய தெய்வத்தின் குரல் என்ற நூலில் சென்சஸ் எடுத்து எல்லாசமயக்குழுக்களையும் இந்து என்ற ஒரே குடையின்கீழ் தன்னுடைய அதிகாரத்தின் வழியாக ஒன்று திரட்டியதைப் பாராட்டுகிறார் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
“ நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ‘ஹிந்து’ என்று பெயர் வைத்திருக்காவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், ஐயப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். இப்போது ‘ஹிந்து சமூகம்’ என்று பொதுப் பெயரில் சொல்லப்படும் சமுதாயத்தை இப்படி ஏழெட்டாகத் தனித்தனி மதம் என்று பிரித்துவிட்டால், அதற்கப்புறம் ஒவ்வொர் ஊரிலும் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் போன்ற மதஸ்தர்கள்தான் அதிகத் தொகை இருப்பார்கள். அதாவது, இப்போது தேசத்தின் இரண்டு பக்கங்களில் மட்டும் பாக்கிஸ்தான் முளைத்திருப்பதுபோல் இல்லாமல், நம் தேசம் முழுவதுமே பாக்கிஸ்தானாகியிருக்கும். எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாக்கிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர்-திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியா தேசம் என்று ஒன்று இருக்கும் படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்! “
ஆங்கிலேயர்கள் உருவாக்கிய இந்து மத அடையாளமே அவர்களுக்கு எதிரான அரசியல் அணி திரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்டது. வேதகாலப்பழமையைப் போற்றவும் வர்ணாசிரமத்தை உறுதிப்படுத்தவும், புராண இதிகாசங்களை விடுதலைப்போராட்டத்துக்கான பிரசாரக்கருவிகளாக மாற்றிய புதிய நடுத்தரவர்க்கம் தோன்றியது. இந்த நடுத்தர வர்க்கம் ஒரே நேரத்தில் பழமையான சாநானதனத்தைப் போற்றவும், நவீன மாற்றங்களை வரவேற்கவுமான இரட்டை முகத்தை காட்டியது. பழமையைப் போற்றிய பிராமணிய நடுத்தர வர்க்கம் மாறி வரும் புதிய அரசியல் சூழலில் தன்னை மேலாதிக்க சக்தியாக மாற்றிக் கொள்ள, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற இந்து கலாச்சார தேசிய வாதத்தை உருவாக்கியது. அதுவே இன்று ஆர்.எஸ்.எஸ்ஸாக, பாரதிய ஜனதாவாக உருமாறி பாசிச வழியில் செல்ல முயற்சிக்கிறது. இந்தியாவின் பன்முக சமய வழிபாட்டு முறைகளையும், நம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும் ஒற்றைக் கலாச்சாரக் கொடுங்கரத்தால் அடக்க நினைக்கிறது. அதற்காக வரலாற்றைத் திருத்தவும் மாற்றவும் புரட்டி எழுதவும் முனைகிறது. கற்பனையான இந்து மதத்தின் ஒற்றைக்கலாச்சாரத்திற்கெதிராக இந்தியாவின் பாரம்பரியமான பன்முகக்கலாச்சாரத்தை முன்னெடுக்க வேண்டியது இப்போதைய அவசர அவசியக்கடமை.
நன்றி- தீக்கதிர் 4-6-15


Tuesday, 2 June 2015

கேட்கப்படாத இரங்கற்பா

கேட்கப்படாத இரங்கற்பா

 உதயசங்கர்

இரவென்றும் பாராமல்
பகலென்றும் பாராமல்
பூமியின் விரல்களாய்
காற்றை வருடும் மரங்கள்
அரசியலோ தத்துவமோ
தந்திரங்களோ தெரியாது.
பறவைகளையும் பூச்சிகளையும்
மனிதர்களையும்
இலைக்கண்களால்
பார்க்கின்றன ஒன்றுபோலவே
குழந்தைகள் ஏறும்போதும்
முணுமுணுப்பதில்லை.
எறும்புகள் ஊரும்போதும்
கசந்ததில்லை
பறவைகளின் கூடுகளை
வெறுத்ததில்லை
காற்றோ மழையோ பனியோ புயலோ
கவலை கொள்வதில்லை
ஒருபோதும் சலிப்பதில்லை
வாழும்கணந்தோறும்
அருந்துகின்றன அமுதத்தை
தன்நிழலில் கண்ணயர்ந்து
தன்னை வெட்ட வந்த மனிதர்களின் மீதும்
நிழலையே பொழிகின்றன மரங்கள்
மரணத்தையும் மௌனமாகவே
எதிர்கொள்ளும் மரங்கள்
இறந்தும் வருந்துவதில்லை
வாழ்வைச் சபிப்பதில்லை




Monday, 1 June 2015

மழைத்துளிக்குள் ஆனி

 மழைத்துளிக்குள் ஆனி

உதயசங்கர்

வெளியே துளித்துளியாக மழை பெய்து கொண்டிருந்தது. ஆனி வாசல் அளிக்கதவு வழியாக மழை வானத்திலிருந்து சொய்ங்னு இறங்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனிக்கு மழை என்றால் ரெம்பப் பிடிக்கும். ஆனால் அம்மா மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும் என்று பயமுறுத்துவாள். ஆனி இரும்புக் கதவு வழியாக மழையைப் பிடிக்க கையை நீட்டினாள். மழையைத் தொட முடியவில்லை. மழைக்காத்து வீசியது. அவள் உடம்பு அந்தக் குளிர் காற்றில் லேசாக நடுங்கியது. வெளியே சரம் சரமாய் விழுந்து கொண்டிருந்த மழை அவளை வா..வா.. என்று அழைத்தது. ஆனி சத்தமில்லாமல் மெல்ல கதவின் தாழ்ப்பாளைத் திறந்தாள்.
வாசலில் நின்று கொண்டு மழையைக் கையில் பிடித்தாள் ஆனி. என்ன ஆச்சரியம்! அவள் பிடித்த மழைத்துளியின் வழியாக அவள் மேலே ஏறிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு மழைத்துளியாகப் பிடித்துக் கொண்டு அவள் மேலே ஏறிக் கொண்டிருந்தாள். அப்படியே ஏறி ஏறி மழை பொழிந்து கொண்டிருக்கும் மேகத்துக்கே போய் விட்டாள். பெரிய பஞ்சு மூட்டையை அவிழ்த்து பறக்க விட்ட மாதிரி மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு மேகத்திலிருந்தும், பூ வாளியிலிருந்து தண்ணீர் ஊற்றுவதைப் போல மழைத்துளிகள் அடுக்கடுக்காய் விழுந்து கொண்டிருந்தன.
அவளுக்கு அங்கே குளிர் எடுத்தது. அவள் அந்த பஞ்சுப்பொதி நடுவே உட்கார்ந்து கொண்டு மேகத்திடம் கேட்டாள். “ எப்படி மாமா உங்க கிட்ட இவ்வளோ தண்ணீ வந்துச்சு ” என்று கேட்டாள்.
 அதற்கு  “ எல்லாம் கடலம்மாவின் கருணை தான். கடலம்மா கடல் பரப்பில் வெப்பத்தினால் கடல் நீர் ஆவியாக காற்றில் ஏறி வந்து இங்கே குளிர்ந்து விடும். அப்படிக் குளிர்ந்த அந்த நீரைத் தான் நான் மழையாக அனுப்புகிறேன். அந்த மழைநீர் ஆறாக, ஓடும். ஓடையாக மாறும். அப்படியே எல்லாம் மறுபடியும் கடலில் போய்ச் சேரும். கடலிலிருந்து ஆவியாகி மேலே வரும். குளம், குட்டை நீரும் ஆவியாகி மேலே வரும். நாங்கள் அதை திரும்ப அனுப்புவோம். மழையால் மண்ணும் மக்களும் செழிப்பார்கள். எப்படி ஆனி! “   என்றது மேகம்.
“ ஆகா பிரமாதம்! “ என்றாள் ஆனி. மழை குறைய ஆரம்பித்தது. ஆனியைத் திரும்ப அனுப்ப வேண்டுமே. மேகம் உடனே ஆனியை ஒரு பெரிய மழைத்துளிக்குள் வைத்து பத்திரமாகக் கீழே இறக்கியது. ஆனியும் மேகத்திடம் அடுத்த  மழைக்கு மறுபடியும் வருவதாகச் சொன்னாள். மேகம் சரி என்றது. ஆனி டாட்டா சொல்லிக் கொண்டே கீழே இறங்கினாள். அவளுடைய வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு புல்லின் நுனியில் பொதுக்குன்னு விழுந்தாள். அப்படியே புல்லின் நுனியைப் பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடிக் கொண்டே தரையில் குதித்தாள். தரையில் கால் பட்டதும் ஆனி தன் சொந்த உருவத்தை அடைந்தாள். உடனே அம்மாவின் ஞாபகம் வந்து விட்டது. ஓடிப்போய் கதவைத்திறந்து வராந்தாவில் நின்றாள். தூங்கி எழுந்து வந்த அம்மாவும் வெளியே மழை பெய்திருப்பதைப் பார்த்து,  “ ஆனி மழையில நனைஞ்சியா..? “ என்று கேட்டாள். ஆனியும் முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு “ இல்லம்மா..” என்றாள். சொன்னால் திட்டு விழும். அதோடு ஆனி சொல்வதை நம்பவா போகிறார்கள்! ஆனால் ஆனியின் உதடுகளில் இருக்கும் நமுட்டுச் சிரிப்பைப் பார்த்த அம்மா ஆனி ஏதோ சேட்டை பண்ணியிருக்கிறாள் என்று தோன்றியது. ஒருவேளை குளிர்பதனப்பெட்டியிலிருந்து சாக்லேட்டை எடுத்துத் தின்றிருப்பாளோ? அம்மா ஆனியை மேலும் கீழும் பார்த்துக் கொண்டே அடுக்களைக்குச் சென்றாள்.
நல்லவேளை ஆனியின் கால்கள்  நனைந்திருப்பதை அம்மா பார்க்கவில்லை.



Sunday, 31 May 2015

காந்தீயத்தை விழுங்கிய இந்துத்வா


காந்தீயத்தை விழுங்கிய இந்துத்வா
உதயசங்கர்

இந்த உலகம் பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றால் ஆனது. பஞ்சபூதங்கள் இல்லையெனில் உலகம் இல்லை. இவை அனைத்தும் சமமானவை. தூய்மையானவை. பரிசுத்தமானவை. தூய்மை செய்பவை. தன்னைத்தானே தூய்மை செய்து கொள்பவை. இந்த பஞ்சபூதங்களில் ஒன்று இல்லையெனினும் உலகம் இல்லை. இந்த உலகம் நிலைத்திருக்க பஞ்சபூதங்கள் அவசியமானவை. இயற்கையின் அங்கமான மனித உடல்களிலும் இந்த பஞ்சபூதங்கள் இருப்பது இயற்கையே. வியர்வை, மலம், மூத்திரம், சளி, வாயுக்கள், என்ற ஐந்து தூய்மையின்மைகள் உடலின் இயங்கியலில் வெளிப்படுவது இயல்பு. ஆனால் இந்து மதம் மனித உடல் நிலையற்றது மனித உடல் தூய்மையற்றது. வியர்வை, மலம், மூத்திரம், சளி, வாயு,.என்ற தூய்மையின்மைகளால் அழுக்கானது. அழியக்கூடியது,  ஆன்மாவே பரிசுத்தமானது நிலையானது, அழியாதது என்று கூறுகிறது. அதனால் அழியும் உடலை உதாசீனப்படுத்துகிறது. ஆனால் காந்தி தன்னுடைய அரசியல் போராட்டங்களுக்கும், ஆன்மீகப்போராட்டங்களுக்கும் தன்னுடைய உடலையே ஆயுதமாக்கியதன் மூலம் இந்து மதக்கோட்பாட்டை மீறினார். அகிம்சை, உண்ணாவிரதம், பிரம்மச்சரியம், என்ற ஆயுதங்களைக் கொண்டே தன் வாழ்வைக் கட்டமைத்துக் கொண்டார். இந்த மூன்று ஆயுதங்களுக்கும் அடிப்படையான கச்சாப்பொருளாகத் தன்னுடைய உடலையே அவர் எடுத்துக் கொண்டார். இதில் அகிம்சையும் உண்ணாவிரதமும் அவர் சமூகவெளியிலும், அரசியல்வெளியிலும் பயன்படுத்திய ஆயுதங்கள் என்றால் அவருடைய அகவெளியின் ஆன்மபரிசோதனையாக பிரம்மச்சரியம் என்ற ஆயுதத்தை அவர் பயன்படுத்தினார்.
அவருடைய தத்துவப்பார்வையையும் தன் உடல் மூலமாகவே வெளிப்படுத்தினார்.  ஆன்மாவின் அழுக்கை ஆன்மரீதியிலான சமர்ப்பணம் மோட்சம் மூலமாகவே நீக்க முடியும். உடல் நிலையற்றது என்பதால் ஆன்மாவை சுமந்து கொண்டிருப்பதைத் தவிர வேறு எந்த வகையிலும் பயன்படாதது என்று சொல்கிற பிராமணிய இந்துத் தத்துவத்திலிருந்து காந்தி மாறுபட்டார். காந்தி உடலைப் போற்றினார். ஒவ்வொரு ஆன்மாவை வெளிப்படுத்துவது உடலே. எனவே உடலைச் சுத்தப்படுத்துவதன் மூலம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த முடியும் என்றார்.
அவருடைய அரசியல்வெளியில் காந்தி பயன்படுத்திய அகிம்சை என்ற ஆயுதத்திற்கும் இந்து மதத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஏனெனில் இந்து மதம் என்றுமே அகிம்சையை கடைப்பிடித்ததில்லை. வன்முறையை நியாயப்படுத்துகிற, ஆதரிக்கிற மதம் இந்து மதம். பகவத்கீதை முழுவதும் வன்முறையினை நியாயப்படுத்துகிற தன்னை நிலைநிறுத்திக் கொள்ள யாரை வேண்டுமானாலும் சகோதரர்களாயினும் கொலைபுரியத் தயங்கக்கூடாது என்று அறிவுரைகள் கொட்டிக் கிடக்கும் ஒரு இடைச்செருகல் தான் பகவத்கீதை. காந்தி பகவத்கீதைக்கு உரை எழுதியிருக்கிறார். அதை ஆன்மீகதளத்தில் நன்மை தீமைகளுக்கிடையிலான போராக உருவகித்திருக்கிறார். ஆனால் பிராமணீயஇந்துமதத்தின் பார்வையில் பின்பற்றியதில்லை. மாறாக ஜைன மதத்திலிருந்தே அவர் அகிம்சை எனும் ஆயுதத்தை எடுத்துக் கொண்டார். அதை மதம் சார்ந்த அறமாகப் பயன்படுத்தவில்லை. மதச்சார்பற்ற போராட்ட வடிவமாக மாற்றினார். அதனால் தான் அனைத்து மதங்களையும் சேர்ந்த கோடானுகோடி மக்கள் அகிம்சை கொள்கையைப் பின்பற்றினர். அடக்குமுறை ஆயுதங்களினால் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ள ஒரு அரசாங்கத்தை நிராயுதத்தின் மூலம் எதிர்கொண்டார். இந்த நிராயுதத்தன்மை ஆங்கிலேயரின் தார்மீக அறத்தை கேள்விக்குள்ளாக்கியது. இந்தத் தார்மீக அறநெருக்கடியைத் தருவதற்கு தன்னுடைய உடலையே களமாகக் கண்டார்.
அதே போல மிகச்சாதாரணமாக தன்னுடைய எதிர்ப்பைக் காட்டும் விதமாக வீடுகளில் எல்லோரும் செய்கிற உண்ணாவிரதப்போராட்டத்தை பொதுப்போராட்டமாக மாற்றியது காந்தியின் படைப்பூக்கமே. இதுவும் தன் நியாயத்திற்காக நடத்துகிற அறப்போராட்டமே. தன் உடலினை வதைப்பதன் மூலம் எதிரிகளிடம் மட்டுமல்ல சொந்த நாட்டு மக்களிடமும் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தினார். மனிதகுல வரலாற்றில் சகமனிதர்களிடம் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துவதில் இயேசுவுக்குப் பிறகு காந்தியே மிகச் சிறந்தவராக விளங்கினார்.
1857- ஆம் ஆண்டு நடந்த சிப்பாய்க்கலகம் என்று சொல்லப்பட்ட முதல் சுதந்திரப்போராட்டத்திற்குப் பிறகு இந்திய தேசிய எழுச்சி உருவானது. இந்த எழுச்சியின் உட்கூறுகளில் ஒன்றாக பிராமணிய எழுச்சியும் நிகழ்ந்தது. இந்தப்பிராமணிய எழுச்சி இந்து மத ஆன்மீகமரபை காலனிய அரசாங்கத்துக்கு எதிராகக் கட்டமைத்தது. வேதகால மரபை மீட்டெடுக்க அறைகூவல் விடுத்தது. சமஸ்கிருத மொழியினால் தான் இந்து மதம் அழியாமல் இருக்கிறது. ஒவ்வொரு இந்து மனதிலும் அத்வைதத்தத்துவமே இருக்கிறது. மேற்கத்திய அறிஞர்களால் சமஸ்கிருதக்கலாச்சாரமே ஆரியக்கலாச்சாரம் என்றும் மற்றவை எல்லாம் திராவிடக்கலாச்சாரம் என்றும் முன்வைக்கப்பட்டது. இதன் விளைவாக பிராமணியத்தின் அதிகாரமையம் மேலோங்கியது. பிராமணிய அதிகாரமையப்படுத்துதல் மிகச் சுலபமாக கலாச்சாரதேசியமாக செல்வாக்கு பெற்றது.
மேற்கத்திய சிந்தனையாளர்கள் இந்து மதத்தை ஒருமைவாதமதமாக, இந்தியத்துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்த மதமாகவும், சித்தரித்திருந்த வரலாற்றை இந்து மத அடிப்படைவாதம் அப்படியே எந்த விமரிசனமுமின்றி ஏற்றுக் கொண்டது. அதாவது வேதகாலத்தில் சொர்க்கமாக இருந்தது…என்கிற நேர்கோட்டு கற்பனாவாதச் சிந்தனை அதற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல இந்துத்வாவின் இந்து மதம் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதில்லை. அது கற்பனாவாதவரலாற்றையும் இறுகிய தன்மையையும் கொண்டிருந்தது. அதன்மீது புனிதத்தை ஏற்றி ஒளி மிக்கதாக புனைவுகளை உருவாக்கி கதைகளின் மூலம் மீண்டும் பிராமணிய அதிகாரத்தை நிலைநிறுத்துவதையே முக்கியக் குறிக்கோளாக கொண்டிருந்தது. இந்தியா முழுவதுமுள்ள இந்துக்கள் அத்வைதவாதிகள் என்று வெளிப்படுத்த நினைத்தது. இந்தியாவின் பன்மைத்தன்மையை மறுதலித்து இந்தியர்களையெல்லாம் இந்துக்களாக ஒன்று திரட்ட முயற்சித்தது. ஆரியப்பெருமையையும், பார்ப்பனப்பெருமையையும் மீட்டெடுப்பது தான் இந்துக்களின் குறிக்கோள் என்று இந்துமத அடிப்படைவாதம் முன்வைத்தது. இந்துக்கலாச்சாரத்தேசியத்தை மீட்டெடுக்க ஒவ்வொரு இந்துவும் தன்னுடைய உயிரையே கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று முழக்கமிட்டது. இதற்கு சாதகமாக புராண, இதிகாசக்கதைகளை மீண்டும் புனைந்தது. இந்துத்வவாதிகள் தங்களை இந்து மதத்தின் ஏகப்பிரதிநிதிகளாக காட்டிக் கொண்டனர். மனுவின் சநாதன இந்து தர்மத்தைக் கடைப்பிடித்ததினால் பெண்களை அவமதிக்கவும் உதாசீனப்படுத்தவும், செய்தனர். வர்ணாசிரமக்கோட்பாட்டை தீவிரமாகப் பின்பற்றவும் அதை நிலைநிறுத்த முயற்சித்ததன் மூலம் தங்களுடைய மேலாண்மையை உறுதிப்படுத்த நினைத்தனர். அதன் மூலம் தீண்டாமை நிலைத்திருக்கச் செய்தனர்.
இதற்கு மாறாக காந்தி வரலாற்றை மேற்கத்திய நேர்கோட்டுச் சித்தரிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அதாவது கடந்த காலத்தில் சொர்க்கமாக இருந்தது என்ற கற்பனாவாதத்தை நிராகரித்தார். அவரைப் பொறுத்தவரை வரலாறு என்பது புனைவு. ஒற்றைப்பரிமாணத்தில் வரலாறு எழுதப்படுவதை நிராகரித்தார். வரலாற்றை மீண்டும் மீண்டும் மறுவாசிப்புக்கு உட்படுத்தலாம் என்று கருதினார். காந்தி தன்னை ஒரு இந்துவாக மட்டும் அடையாளப்படுத்துதலை மறுத்தார். இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்ற கருத்தை எதிர்த்தார். இந்துக்களை பன்மைத்தன்மை கொண்ட இந்தியர்களாக அடையாளப்படுத்தினார். ஆண்மை தான் வீரம் என்பதையும் இந்திய ஆன்மீக மரபை மீட்டெடுப்பதற்காக உயிரையும் கொடுக்க வேண்டும் என்ற கலாச்சாரத்தேசியவாதிகளின் கருத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டார். பிராமணிய மரபான ஆன்மாவை முக்கியப்படுத்துவதை மறுத்தார். ராமராஜ்யத்தினை அறவழியிலான லட்சிய உலகாகவே காந்தி நினைத்தார். அதை இந்து மதம் சார்ந்த கலாச்சாரத்தேசியமாக மாற்ற நினைத்ததில்லை. அதனால் தான் பாகிஸ்தான் பிரிவினையைக் கடைசி வரை எதிர்த்தார். இந்துமதத்தின் பன்மைத்தன்மையினையும் இளகிய அதன் கட்டமைப்பையும் காந்தி காப்பாற்ற நினைத்தார். ஆண் / பெண் உடல்களைப் போற்றியதால் பெண்களையும் போற்றினார். இந்தியத்தாய் என்ற உருவகத்தை அவரே வளர்த்தவர். வர்ணாசிரமக்கோட்பாட்டை ஆதரித்தாலும் தீண்டாமையை மிகக் கடுமையாக எதிர்த்தார் காந்தி.
காந்திக்கும் இந்து மத அடிப்படை வாதத்திற்கும் இவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் பௌத்த சமணத்திலுள்ள சாதகமான கோட்பாடுகளை ஏற்கனவே ஸ்வாகா செய்திருந்தது இந்துமதம். அதன் இறுகிய இளக்கமற்ற, சநாதன, பழமையான, காலத்துக்கொவ்வாத, விஞ்ஞானக்கண்ணோட்டமில்லாத பார்வைகளை மாற்ற உருவான இந்து சமய சீர்திருத்தவாதிகளான வள்ளலார், பசவண்ணர், நாராயணகுரு, கபீர்தாஸ், ராஜாராம் மோகன்ராய், அன்னிபெசண்ட், போன்ற எல்லோரையும் திருதராஷ்டிர ஆலிங்கனம் செய்து அப்படியே தன்னுள் ஐக்கியமாக்கிக் கொண்டதைப் போல காந்தியையும் காந்தீயத்தையும் விழுங்கி செரித்து விட்டது. அதற்கான கூறுகள் காந்தீயத்திலும் காந்தியின் நடைமுறை வாழ்விலும் இருந்தன.
காந்தி இந்து மதத்தின் இறுகிய தன்மையை மறுத்தாலும் அவர் ஒரு இந்துவாக இருந்ததினால் பன்மைத்தன்மையை ஆதரித்த அவருடைய நிலைபாடு அழுத்தமாகத் தெரியவில்லை. காந்தியின் மதம் சார்ந்த வெளிப்பாடுகள் பிராமணியத்துக்குச் சாதகமாக இருந்தன. அவருடைய ராமராஜ்யம், குறித்த கருத்துக்களை இந்து மதக்கருத்துக்களாகவே புரிந்து கொண்டனர். அவருடைய பிரார்த்தனைக்கூட்டங்களில் சர்வமதங்களைச் சார்ந்த பைபிள், குரான், பகவத்கீதையிலிருந்து பிரார்த்தனை நடத்தினாலும் பைபிள், குரானுக்கு இணையாக பகவத்கீதையை இந்துக்களிடம் பிரபலப்படுத்தி அதை இந்துக்களின் வேதநூல் போல் உருவாக்கியதில் காந்திக்கு இருந்த பங்கினால் பிராமணியத்துக்கு துணைபோவதாக இருந்தது. தீண்டாமையை அவர் கடுமையாக எதிர்த்தாலும் வர்ணாசிரமக்கோட்பாட்டை ஆதரித்ததினால் அவருடைய தீண்டாமைஎதிர்ப்பை மிகச்சுலபமாக நீர்த்துப்போகச் செய்ய இந்துத்வசக்தியினால் இயன்றது. பொதுவாக இந்திய சுதந்திர எழுச்சிக்கான பிரச்சாரம் இந்து மதக்கொள்கைகள் வழியாகவே பரவியது. அதிலும் குறிப்பாக காந்தியின் மதநம்பிக்கை சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் இந்து மதக்கோட்பாடுகளை, பரவலாக்கி, வெகுமக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்தப் பரவலான பிரச்சாரம் இந்துத்வாவுக்கு மிகச் சாதகமான அடித்தளத்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் ஒரு பகுதியில் மட்டும் வழிபட்டுக் கொண்டும் சமஸ்கிருதப்பிரதிகளில் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்த ராமரை நாடு முழுவதும் ஜனநாயகப்படுத்தியதில் காந்தியின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்து மத அடிப்படைவாதம் இந்து மதச்சீர்திருத்தங்களை உள்வாங்கிக் கொண்டு செரித்து மீண்டும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.
ஆனாலும் இந்து மத அடிப்படைவாதம் காந்தியைக் கொன்றது. காந்தி உயிரோடு இருந்தால் பிராமணிய மேலாண்மையை நிலைநிறுத்த முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமே காந்தியின் கொலையாக மாறியது. இந்து மத அடிப்படைவாதம் நினைத்த மாதிரியே காந்தி மறைந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இந்து மதத்திற்குள் இருந்து கொண்டே அதற்கு எதிராகப் போராடிய அனைவரையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு தத்துவச்செறிவும், நடைமுறை சடங்கியல் முறைகளையும் கொண்டது.
இத்தாலியில் பாசிசம் தோற்றம் கொள்வதற்கு, அங்கே கத்தோலிக்கத்திருச்சபையின் மேலாண்மையைத் தகர்க்கத் தவறியதும், மதச்சார்பற்ற, ஜனநாயக, அறிவியல் கலாச்சாரத்தை வளர்க்கத் தவறியதும் கூட காரணங்கள் என்று கிராம்ஷி கூறுகிறார். இந்தியாவிலும் இப்போது அது தான் நிலைமை. மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி இயக்கங்கள் இதைக் கவனத்தில் கொண்டு தங்களுடைய வியூகங்களைத் திட்டமிட வேண்டும்.

( ஆதாரநூல் - காந்தியின் உடலரசியல் – ராமாநுஜம் )
நன்றி - செம்மலர்