Sunday, 15 September 2019

வானவில் தேவதைகளின் பாடம்


வானவில் தேவதைகளின் பாடம்

உதயசங்கர்

பூவனூர் முழுவதும் பூந்தோட்டங்கள் இருந்தன. அந்தப் பூந்தோட்டங்களில் உலகில் உள்ள எல்லா மலர்களும் பூத்துக்குலுங்கின. முல்லை, மல்லிகை, பிச்சிப்பூ, அடுக்குமல்லி, குண்டுமல்லி, ரோஜா, மஞ்சள் ரோஜா, சிவப்பு ரோஜா, வெள்ளை ரோஜா, காந்தள், செங்காந்தள், அல்லி, தாமரை, ஆம்பல், லில்லி, டூலிப், கோழிக்கொண்டை, நந்தியாவட்டை, அரளி, செவ்வரளி, தங்க அரளி, அலமெண்டா, சாமந்தி, வெண்சாமந்தி, மரிக்கொழுந்து, சம்பங்கி, கனகாம்பரம், டிசம்பர் பூ, என்று உலகின் பூக்கள் எல்லாம் அங்கே இருந்தன.
அங்கே எப்போதும் வண்டுகளின் பாடல்களும், வண்ணத்துப்பூச்சிகளின் சிறகடிப்பும், தேனீக்களின் ரீங்காரமும், பூச்சிகளின் சலம்பலும், தேன்சிட்டுகளின் ட்வீட்டொலியும், தையல்சிட்டின் கீச்சொலியும் கேட்டுக் கொண்டேயிருந்தது. பகலில் எல்லாப்பூந்தோட்டத்துக்கும்  வானவில்லின் வண்ணங்களில் தேவதைகள்  வருவார்கள். ஊதா நிறத்தேவதை, கருநீல நிறத்தேவதை, நீலநிறத்தேவதை, பச்சை நிறத்தேவதை, மஞ்சள் நிறத்தேவதை, செம்மஞ்சள் நிறத்தேவதை, சிவப்பு நிறத்தேவதை, எல்லோரும் பகல் முழுவதும் பூக்களோடு, தேனீக்களோடு, தேன்சிட்டுகளோடு, வண்ணத்துப்பூச்சிகளோடு, வண்டுகளோடு, விளையாடுவார்கள். இரவானதும் தங்களுடைய வீடான அடர்ந்த வனத்துக்குப் போய் விடுவார்கள். அங்கே இயற்கையன்னை அவர்களுக்காகக் காத்திருப்பாள்.
ஒருநாள் மதியம் ஒரு பூந்தோட்டத்தில் எல்லாத்தேவதைகளும் மகிழ்ச்சியாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த போது தோட்டத்தின் ஒரு மூலையிலிருந்து லேசான அழுகைச் சத்தம் கேட்டது. உடனே தேவதைகள் அந்த இடத்தை நோக்கி தங்களுடைய வண்ணச்சிறகுகளை விரித்து பறந்து சென்றனர்.
மல்லிகைப்பந்தலுக்குக் கீழே ஒரு சிறுமி உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு அருகில் புத்தகப்பை இருந்தது. அவள் யூனிபார்ம் போட்டிருந்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. எல்லோரும் அவளைச் சுற்றிப் பறந்து கொண்டே ‘ என்ன? என்ன? யாரும்மா நீ ‘என்னாச்சும்மா?’  என்று கேட்டார்கள். அந்தச்சிறுமி,
’ ம்ம்ம் எம்பேரு மலர்விழி.. கணக்குப்பாடம் எழுதல.. டீச்சர் அடிப்பாங்க.பள்ளிக்கூடம் போகப்பயமாருக்கு .’ என்று தேம்பினாள். ஊதா நிறத்தேவதை அவளுடைய கண்ணீரைத் துடைத்தாள். கருநீலநிறத்தேவதை கலைந்திருந்த அவளுடைய தலைமுடியைக் கோதி விட்டாள். நீலநிறத்தேவதை கீழே கிடந்த அவளுடைய பையை எடுத்து தூசி தட்டினாள். பச்சை நிறத்தேவதை அவளுக்குக் குடிக்கத்தண்ணீர் கொடுத்தாள். மஞ்சள் நிறத்தேவதை அவளுடைய கணக்கு நோட்டை எடுத்து கணக்குகளைப் பார்த்தாள். செம்மஞ்சள் நிறத்தேவதை அவளுடைய தலையில் ஒரு ரோஜாவைச் சூடினாள். சிவப்பு நிறத்தேவதை காற்றில் கை வீசி மலர்விழி சாப்பிடுவதற்காகத் தின்பண்டங்களைக் கொண்டு வந்தாள்.
தின்பண்டங்களைப் பார்த்ததும் மலர்விழி தேம்புவதை நிறுத்தினாள். அவளுக்கு முன்னே அதிரசம், முறுக்கு, பொரி உருண்டை, பொரிவிளங்காய், முந்திரிக்கொத்து, சேவு, கருப்பட்டி மிட்டாய், தேன் மிட்டாய், எல்லாம் இருந்தன. மலர்விழி கருப்பட்டி மிட்டாயை எடுத்துச் சுவைத்தாள். முறுக்கை ஒரு கடி கடித்தாள். திடீரென பள்ளிக்கூட ஞாபகம் வந்து முகத்தைச் சுளித்துத் தேம்பினாள்.
மஞ்சள் நிறத்தேவதை மலர்விழியின் தலையைத் தடவிக் கொடுத்துக் கொண்டே,
’ மலர்விழி ஏம்மா கணக்கு போடலை..’ என்று கேட்டாள். அதைக் கேட்டதும் அழுகை அதிகமானது. அழுது கொண்டே,
‘ எனக்கு கணக்கு வரமாட்டேங்கு… “
‘ டீச்சர்ட்ட கேட்டியா..’
‘ கேட்டா அடிக்கிறாங்க..’
‘ நான் சொல்லித்தரட்டா..’
‘ ம்ம்ம் பள்ளிக்கூடம் போகாட்டி நாளைக்கு அம்மாவுக்கு மெசேஜ் போயிரும்…’ என்று மறுபடியும் அழ ஆரம்பித்தாள்.
‘ அவ்வளவுதானே நீ போகும்வரை பள்ளிக்கூடம் நடக்காது.. ‘ என்று சொல்லி ஒரு சொடக்கு போட்டாள். பள்ளிக்கூடத்தில் மத்தியானவகுப்புக்கு மணியடிக்கவில்லை. கணக்கு டீச்சர் மணியடிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார். ஆனால் காலம் நகரவே இல்லை. பிள்ளைகள் மணியடிக்காததால் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
மலர்விழி கணக்குப்பாடத்தை மஞ்சள் நிறத்தேவதையிடம் கேட்டுக் கேட்டுப் போட்டாள். மஞ்சள் நிறத்தேவதை அவளிடம்,
‘ வீட்டில சொல்லிக் கொடுக்க யாரும் இல்லையா “ என்று கேட்டாள். மலர்விழி,
‘ அப்பா கொத்தனார் வேலைக்குப் போயிருவாங்க.. அம்மா நூறு நாள் வேலைக்குப் போயிருவாங்க… வீட்டுக்கு வந்து சமைச்சு சாப்பிட்டு தூங்கிருவாங்க… யார் இருக்கா எனக்குச் சொல்லித்தர…”
என்று சிணுங்கினாள். மஞ்சள் நிறத்தேவதை அவளுடைய முகத்தைக் கையில் ஏந்தி ’ இனிமேல் உனக்கு நாங்க சொல்லித்தாரோம்…’ என்றாள். உடனே மற்ற தேவதைகளும் “ ஆமாம் மலர்விழி ஆமாம்..’ என்று சேர்ந்து சொன்னார்கள்.
‘ அப்ப பள்ளிக்கூடத்துக்கு? ‘ என்றாள் மலர்விழி. உடனே மஞ்சள் நிறத்தேவதை திரும்பிப்பார்த்தாள். பச்சை நிறத்தேவதை பறந்து போனாள்.
பள்ளிக்கூடத்தில் மணியடித்தது. பச்சை நிறத்தேவதை அங்கே பள்ளிக்கூடத்தில் மலர்விழியாக உட்கார்ந்திருந்தாள். கணக்கு டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பில் நுழையும்போது மலர்விழி இருக்கையில் இல்லை. இப்போது பார்த்தால் உட்கார்ந்திருக்கிறாள். ஒருவேளை நாம் தான் சரியாகக் கவனிக்கவில்லையோ. என்று நினைத்தாள்.
டீச்சர் கரும்பலகையில் எழுதும் கணக்குகளை நொடிக்குள் எழுதி விடை சொன்னாள் மலர்விழி. டீச்சருக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கே பூந்தோட்டத்தில் எல்லாத்தேவதைகளும் மலர்விழிக்குத் தெரியாததை எல்லாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
கணக்குப்பாடத்தை மஞ்சள் நிறத்தேவதை சொல்லிக் கொடுத்தாள்.
அறிவியல் பாடத்தை சிவப்பு நிறத்தேவதை சொல்லிக்கொடுத்தாள்.
தமிழ்ப்பாடத்தை கருநீலத் தேவதை சொல்லிக்கொடுத்தாள்.
ஆங்கிலத்தை ஊதா நிறத்தேவதை சொல்லிக்கொடுத்தாள்.
புவியியலை செம்மஞ்சள் நிறத்தேவதை சொல்லிக்கொடுத்தாள்
வரலாறுப்பாடத்தை நீல நிறத்தேவதை சொல்லிக் கொடுத்தாள்
எல்லோரும் பொறுமையாக மலர்விழி எத்தனை தடவை கேட்டாலும் அன்பாகச் சொல்லிக் கொடுத்தனர். கதைகள் மூலம் சொல்லிக்கொடுத்தனர். விளையாட்டுகள் மூலம் சொல்லிக்கொடுத்தனர். பாடல்கள் மூலம் சொல்லிக்கொடுத்தனர்.
மலர்விழிக்கு பளிச்சென்று எல்லாம் புரிந்தது.  எல்லாப்பாடங்களையும் சந்தேகம் இல்லாமல் கேட்டுத் தெரிந்து கொண்டாள். நேரம் இருட்டிக் கொண்டு வந்தது. மலர்விழிக்கு தேவதைகளைப் பிரிய மனமில்லை. வானவில் தேவதைகள் தங்களுடைய ஆடையிலிருந்து ஒரு நூலை எடுத்து மலர்விழியின் புத்தகப்பைக்குள் வைத்தனர்.
‘ எப்போ உனக்கு எந்தப்பாடத்தில சந்தேகம் வந்தாலும் நூலை எடுத்து கையில் வைத்துக் கொண்டு எங்களை நினைச்சா நாங்க வந்து சொல்லித்தாரோம்….’ என்று சொல்லி பறந்து போனார்கள். நேரம் இருட்டிக் கொண்டு வந்தது.
அம்மா தேடிக் கொண்டு எதிரே வந்தாள்.
‘ எங்கடி போயிருந்தே இவ்வள நேரம்? நான் எங்கேல்லாம் தேடிட்டுருக்கேன்..”
‘ நான் தேவதைங்ககிட்ட பாடம் படிச்சிட்டு வாரேன்..’ என்று சொன்னாள்.
‘ என்னது தேவதையா? ‘
‘ இல்லை இல்லை… ஏழு டீச்சர்கிட்ட..’ என்று சொல்லிச்சிரித்தாள் மலர்விழி. அவள் சிரிப்பில் வானவில் ஒளிர்ந்தது.
நன்றி - வண்ணக்கதிர்


Sunday, 1 September 2019

காட்டுப்பள்ளிக்கூடம்


காட்டுப்பள்ளிக்கூடம்

உதயசங்கர்
விந்திய மலையில் ஒரு பெரிய விந்தியவனம் இருந்தது. அந்த விந்தியவனத்தில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மிருகம் அல்லது பறவை ராஜாவாக இருக்கும். சிங்கம் ஒரு வருடம் இருந்தது. சோம்பேறியான அது தன் குகைக்குத் தினமும் ஒரு மிருகம் உணவாக வரவேண்டும் என்று ஆணையிட்டது. அதைப் புத்திசாலியான முயல்தம்பி அழைத்துப்போய் பாழுங்கிணற்றைக் காண்பித்தது. கிணற்றில் தெரிந்த அதனுடைய பிம்பத்தைப் பார்த்து எதிரி என்று ஏமாந்து விழுந்து இறந்தது சிங்கம். உங்கள் எல்லோருக்கும் இந்தக்கதை தெரிந்திருக்கும்
 ஒரு முறை வரிப்புலி ராஜாவாக இருந்தது. கண்ணில் பட்ட மிருகங்களையெல்லாம் அடித்துக் கொன்றது. பலம் பொருந்திய யானைமாமா அதைத் தும்பிக்கையால் தூக்கி வீசியதில் கால் ஒடிந்து நொண்டிக்கொண்டே நடக்கிறது. வல்லூறு கூட ஒரு தடவை ராஜாவாக இருந்தது. அது சாப்பிடுவதற்கு முன்னால் யாரும் சாப்பிடக்கூடாது என்று ஆணையிட்டது. எல்லாம் அழுகி யாரும் சாப்பிடமுடியாமல் போனபிறகு தானே அவ்வளவு உணவையும் சாப்பிட்டது. அது மரத்தின் மீது தூங்கிக் கொண்டிருக்கும்போது மலைப்பாம்பண்ணன் அப்படியே நொறுக்கி விழுங்கி விட்டது. ஆக யாரும் யாரையும் அங்கே அதிகாரம் செய்ய முடியாது. எல்லோரும் ராஜாவுக்கு எதிராகக் கலகம் செய்து விடுவார்கள்.
ஏன் தெரியுமா
அந்த விந்தியக்காட்டில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அந்தப் பள்ளிக்கூடத்தில் வரலாறு, புவியியல், அறிவியல், கணிதம், அவரவர் தாய்மொழி, என்று எல்லாம் சொல்லிக்கொடுத்தார்கள். ஆண்டுக்கொருமுறை பரீட்சை அவரவர் தாய்மொழியில் நடந்தது. மண்புழுவுக்கு மண்ணுக்குக்கீழே அதனுடைய தாய்மொழியில் பரீட்சை நடந்தது. முயலுக்கு அதனுடைய வளைக்குள்ளே பரீட்சை நடந்தது. பாம்புக்கு புற்றுக்குள்ளே பரீட்சை நடந்தது. சிலசமயம் யாருக்குப் புற்று சொந்தம். என்று கரையான்களுக்கும் பாம்புகளுக்கும் சண்டை நடந்தது. அதனால் ஒரு நாள் பாம்புகளுக்கும், ஒரு நாள் கரையான்களுக்கும் பரீட்சை நடந்தது. கரடிகளுக்கு ஆற்றிலும் தேன்கூடு இருக்கும் மரங்களிலும் பரீட்சை நடந்தது. மான்களுக்கு புல்வெளிகளில் பரீட்சை நடந்தது.  யானைகளுக்கு வலசை போகும் காடுகளில் பரீட்சை நடந்தது. காட்டுப்புறாக்களுக்கு வானத்தில் பரீட்சை நடந்தது. எறும்புகளுக்கு அவற்றின் புற்றில் பரீட்சை நடந்தது.  இப்படி எல்லோருக்கும் அவரவர் இடத்தில் அவரவர் மொழியில் பரீட்சை நடந்தது. இதனால் மிருகங்கள், பறவைகள், எல்லாம் அறிவாளிகளாக இருந்தன. காட்டில் இயற்கை விதிகளுக்கு மாறாக என்ன நடந்தாலும் அனைத்து மிருகங்களும் சேர்ந்து குரல் கொடுத்தன. இது ஒரு ஆளுக்குப் பிடிக்கவில்லை. யார் அது தெரியுமா.
நரியாருக்குப் பிடிக்கவில்லை.
ஏன் பிடிக்கவில்லை தெரியுமா?. கொஞ்சகாலத்துக்கு முன்பு வரை யார் ராஜாவாக இருந்தாலும் நரியார் தான் மந்திரி. அவர் சொல்கிறபடி தான் எல்லாம் நடக்கும். கிட்டத்தட்ட ராஜா தஞ்சாவூர் தலையாட்டிப்பொம்மை மாதிரி தான் இருப்பார். ஏனென்றால் அப்போது பள்ளிக்கூடம் கிடையாது. ராஜா உட்பட யாருமே படித்தவர்கள் கிடையாது. நரியாரின் முன்னோர்கள் மட்டுமே படித்தவர்கள். அவர்கள் அந்தக் கல்வியை அவர்களுடைய குடும்பத்தினருக்கு மட்டுமே சொல்லிக் கொடுத்தனர். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. பள்ளிக்கூடம் வந்து விட்டது. எல்லோரும் படிக்கத் தொடங்கிவிட்டனர். இப்போது யாரும் நரியைச் சீந்துவதில்லை. யாரும் அதனிடம் எந்த ஆலோசனையும் கேட்பதில்லை. இருந்த இடத்திலேயே உணவு, உடை, மரியாதை, கௌரவம், கிடைத்துக் கொண்டிருந்த காலம் மாறிவிட்டது. இப்போது காட்டில் அலைந்து திரிந்து தான் உணவு தேட வேண்டியதிருந்தது. நரியால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
நரி யோசித்தது. யோசித்தது. யோசித்தது.
பள்ளிக்கூடத்தில் படித்த மிருகங்கள், பறவைகள், எல்லோரிடமும் சென்று தனித்தனியாகப் பேசியது. எல்லோரிடமும்,
‘ நீ தான் திறமையானவன், நீ ஏன் உன்னை விடத் திறமை குறைந்தவனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். ’ என்று கேட்டது. முதலில் எல்லோரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் நாளாக நாளாக எல்லாமிருகங்களிடமும் தலைக்கனம் வந்தது. அப்போது நரி,
’ நீங்கள் என்னை ராஜாவாகத் தேர்ந்தெடுத்தால் நான் இந்தக் காட்டை சொர்க்கமாக மாற்றுவேன்.. எல்லோரையும் தகுதியானவர்களாகவும், திறமையானவர்களாகவும் மாற்றுவேன்… உலகத்திலேயே நமது காட்டை மிகச்சிறந்த காடாக மாற்றுவேன்…’  என்று வாக்குறுதிகளை வீசியது.
இதை புலியிடம் சொன்னது.
எலியிடம் சொன்னது.
யானையிடம் சொன்னது.
பூனையிடம் சொன்னது.
மண்புழுவிடம் சொன்னது
மரவட்டையிடம் சொன்னது
முயலிடம் சொன்னது
கயலிடம் சொன்னது
குயிலிடம் சொன்னது
மயிலிடம் சொன்னது
மானிடம் சொன்னது
மந்தியிடம் சொன்னது
யாரும் கேட்டாலும் சொன்னது. கேட்கவில்லை என்றாலும் சொன்னது. நாளாக நாளாக இதை வண்டுகள் கேட்டன. பூச்சிகள் கேட்டன. குருவிகள் கேட்டன. குரங்குகள் கேட்டன. பாம்புகள் கேட்டன. பறவைகள் கேட்டன. கேட்டுக்கேட்டு எல்லாம் மயங்கி விட்டன. அப்புறம் என்ன?
நரியார் ராஜாவானார். ராஜாவான உடனே தன்னை வித விதமாக புகைப்படம் எடுத்து காடு முழுவதும் இருந்த மரங்களில் ஒட்டச் சொன்னார். அவர் நின்றால் ஒரு சாதனை நடந்தால் ஒரு சாதனை. பேசினால் ஒரு சாதனை. வெளிகாடு போனால் ஒரு சாதனை. என்று விளம்பரம் செய்தார். விளம்பரத்திலும் சாதனை செய்தது.
காட்டில் இருந்த மிருகங்களில் சிலர் நரியின் தந்திரங்களைப் பற்றிப் பேசினார்கள். மற்ற மிருகங்கள் பறவைகளிடம் தங்களுடைய அதிருப்தியைச் சொன்னார்கள்.
“ நரி உங்களை எல்லாம் ஏமாற்றத்திட்டமிட்டிருக்கிறான்… எச்சரிக்கையாக இருங்கள்.. ‘ என்று சொன்னார்கள். ஆனால் யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் நரியின் புகைப்படங்களிலும், வீராவேசமான பேச்சுகளிலும் மயங்கியிருந்தனர்.
ஒரு நாள் நரிராஜா எல்லோரையும் அழைத்தது.
‘ இனிமேல் காட்டுப்பள்ளிக்கூடத்தின் பாடத்திட்டம் மாற்றப்படுகிறது.. நாம் அனைவரும் தகுதியானவர்களாகவும், திறமையானவர்களாகவும் மாறவேண்டுமானால் இந்தப் பாடத்திட்டத்தைத் தான் செயல்படுத்த வேண்டும்…”
என்று ஆணையிட்டது. வழக்கம்போல எல்லோரும் கைதட்டினார்கள். ஆனால் யாருக்கும் புரியவில்லை.
காட்டில் புதிய கல்விக்கொள்கை அமுலுக்கு வந்தது.
மண்புழுவை நல்ல வெயிலில் நூறுமீட்டர் ஓட்டப்பந்தயம் சிறுத்தையுடன் ஓடச் சொல்லி ஒரு பாடம்.
முயலுக்கு மானை விரட்டிச் சென்று வேட்டையாடும் ஒரு பாடம்
எறும்புகளுக்கு யானைகளின் பாதையைத் தடை செய்யும் ஒரு பாடம்
காட்டுப்பூனைகளுக்கு கரடிகளோடு சண்டை போட்டு தேன் எடுக்கும் பாடம்
வண்ணத்துப்பூச்சிகளுக்கு வல்லூறு தின்னும் அழுகிய உணவைத்தின்னும் பாடம்
யானைகள் புற்று கட்டவேண்டும்.
பாம்புகள் குயிலைப் போலக் கூவவேண்டும்
ஆண்டுக்கு ஒரு தடவை எலி, புலி, யானை, பூனை, சிட்டுக்குருவி, மைனா, கழுகு, பருந்து, நல்லபாம்பு, மலைப்பாம்பு, முயல், மான், நத்தை, புழு, பூச்சி, என்று எல்லோருக்கும் ஒன்றுபோல ஓட்டப்பந்தயம். அதில் வெற்றி பெற்றவர்களே அடுத்த வகுப்புக்குப் போகமுடியும். எல்லாவகுப்புகளிலும் தேர்ச்சி பெற்றவர்களே ராஜாவாக முடியும்.
என்று ஏராளமான குண்டக்கமண்டக்க சட்டங்களும் பாடங்களும் இருந்தன. எப்படி இருக்கும்?
யாராலும் படிக்க முடியவில்லை. பள்ளிக்கூடத்திலேயே நிறையப் பேர் இறந்து போனார்கள். எல்லோரும் பள்ளிக்கூடத்தைப் பார்த்துப் பயந்தார்கள். யாரும் பள்ளிக்கூடத்துக்குப் போகவில்லை.
பள்ளிக்கூடத்தில் நரியின் குடும்பத்தாரும், சிங்கம், புலி, சிறுத்தை, குடும்பத்தாரும் மட்டுமே படித்தார்கள். இப்போது அந்தக்காட்டில் கல்வி அறிவு இல்லை. ஏற்றதாழ்வு அதிகரித்தது. அறியாமை இருள் பரவியது.
நரியின் ஆட்டம் துவங்கியது.
ஆனால் நரியைப் பற்றித் தெரிந்தவர்கள் தொடர்ந்து மிருகங்களிடமும், பறவைகளிடமும் பூச்சிகளிடமும், பாம்புகளிடமும், பல்லிகளிடமும், யானைகளிடமும், மான்களிடமும் பேசினார்கள். காடு தொடங்கிய நாள் முதல் நரியின் தந்திரங்களைப் பற்றிச் சொன்னார்கள். எல்லோரையும் அடிமைப்படுத்தும் அதன் திட்டங்களைப் பற்றிச் சொன்னார்கள். காட்டில் இரவில் ஒரு ரகசியப்பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது.
அந்தப் பள்ளிக்கூடத்தில் நரியின் பள்ளிக்கூடத்திலிருந்து விரட்டப்பட்டவர்கள் எல்லோரும் படித்தார்கள். மின்மினிப்பூச்சிகள் விளக்குகள் ஏந்தி வெளிச்சம் காட்டின. ஆந்தை மரத்தில் காவலுக்கு இருந்தது. கரடி நிலத்தில் காவலாளியாகக் கையில் கம்புடன் நின்றது. எல்லாவற்றையும் காட்டின் தேவதைகளும் மலரும் பூக்களில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கே ஒரே ஒரு பாடம் தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுக்கப் பட்டது.
இயற்கையில் எல்லோரும் சமம். யாரும் யாருக்கும் அடிமையில்லை.
வருட முடிவில் நடக்கும் போட்டிநாள் வந்தது. நரியின் பள்ளிக்கூடத்தில் படித்த சிங்கம், புலி, சிறுத்தை, நரி, கழுகு, எல்லாம் வந்திருந்தன. அதே போல இரவுப்பள்ளிக்கூடத்தில் படித்த மண்புழு, எறும்பு, வண்ணத்துபூச்சி, முயல், மான், எல்லாம் கலந்து கொண்டன.
நூறுமீட்டர் போட்டியில் மண்புழு மண்ணைக் குடைந்து சென்றது. சிறுத்தை ஓடத் தொடங்கும்போதே  மண்புழு வெற்றிக்கோட்டில் நின்றது.
சிங்கம் வேட்டையாட வாயைத் திறக்கும்போதே எறும்பு மானை வீழ்த்தியிருந்தது.
கழுகு சிறகை விரித்து மேலே பறக்கும்போதே வண்ணத்துப்பூச்சி மலை உச்சியில் ஒரு பூவின் மீது இருந்தது.
நரியார் பாட்டுப்பாட ராக ஆலாபனையைத் தொடங்கினார். முயலின் இசையில் மரங்கள் தலையாட்டிக் கொண்டிருந்தன.
புலி எண்ணூறு மீட்டரில் ஓடியது. அது ஓடி முடிப்பதற்குள் மான் இரண்டுமுறை ஓடி முடித்து வெற்றி பெற்றது.
எல்லாப்போட்டிகளிகளிலும் இரவுப்பள்ளிக்கூட்த்தில் படித்தவர்களே வெற்றி பெற்றதினால் நரியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
விந்தியக்காட்டின் ராஜாவாக மண்புழு பதவி ஏற்றது. உடனே நரியின் பள்ளிக்கூடம் மூடப்பட்டு பழைய மாதிரி எல்லோரும் படிக்கிற மாதிரியான பள்ளிக்கூடமும் பாடங்களும்  உருவாக்கப்பட்டன. விந்தியக் காட்டில் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
எப்படி மண்புழுவும், வண்ணத்துப்பூச்சியும், முயலும் மானும், எறும்பும் வெற்றி பெற்றன என்ற சந்தேகம் வருகிறதா குழந்தைகளே.
அநீதியை வெல்ல நாமும் கொஞ்சம் தந்திரங்கள் செய்ய வேண்டும். அந்தத் தந்திரங்களை யார் சொல்லிக் கொடுத்தார்கள். தெரியுமா?
இரவுப்பள்ளிக்கூடத்தில் பூக்களின் மீது உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் யார் என்று யோசியுங்கள். உங்களுக்கே தெரியும்.
நன்றி - வண்ணக்கதிர்


Thursday, 29 August 2019

அந்தர அறை


அந்தர அறை
உதயசங்கர்
 தற்கொலை செய்து கொள்வதற்காக அந்த நகருக்கு வந்திருந்தான் சதீஷ். கிட்டத்தட்ட எழுநூறு கிலோமீட்டர் பயணம் செய்து வந்திருந்தான். முகமறியாத ஊரில் யாருக்கும் தெரியாமல் செத்துவிட வேண்டும் என்று தீர்மானித்திருந்தான். சிறுவயது முதலே அவனுக்கு பறவைகள் எப்படி இறக்கின்றன? எங்கே இறக்கின்றன? என்ற கேள்விகள் இருந்தன. நூற்றுக்கணக்கான வகை பறவைகள் இருக்கின்றன. அவை இறந்து போவது யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. காகங்களின் இறப்பு அதுவும் விபத்தினால் ஏற்படும் இறப்பைத் தவிர மற்றபடி பறவைகளின் இறப்பை யாரும் பார்த்ததில்லை. அப்படி பறவைகள் போல யாருக்கும் தெரியாமல் இறந்து போகவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஊரில் ஒரு நூறுபேருக்காவது அவனைத் தெரியும். அந்த நூறுபேரின் நினைவுகளில் சில நாட்களாவது அவன் தட்டுப்படுவான். மற்றவர்களின் நினைவுகளில் அவன் இருப்பதும் இல்லாமல் போவதும் வெறும் புவியியல் எல்லைகளுக்குள் இருக்கும் அவனுடைய பௌதீக நடமாட்டம் தானே தீர்மானிக்கிறது. அவனுடைய பாலியகால நண்பன் மௌலி இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்தான். யாருடனும் தொடர்பில்கூட இல்லை. திடீரென போனமாதம் அங்கே மாரடைப்பினால் இறந்து போய்விட்டதாக ராம் சொன்னபோது எந்த உணர்ச்சியும் ஏற்படவில்லை. அதோடு அவன் முகத்தை நினைவுக்குக் கொண்டுவர எவ்வளவோ முயற்சித்தும் மறந்து போய்விட்டது.
அதோடு ஊரில் தற்கொலை செய்யப்பிடிக்கவில்லை. அவன் மனைவி, குழந்தைகள், அவனுடைய அப்பா, விரல் எண்ணிக்கையில் அடங்கிவிடும் உறவினர்கள், என்று எல்லோருக்கும் மிகுந்த துயரம் தரக்கூடியதாக அமைந்து விடும். குறிப்பாக மனைவிக்கு கணவன் இறந்ததை விட வேதனை தரும் சடங்குகளை நடத்துவார்கள். அகிலா இதையெல்லாம் தாங்கமாட்டாள். இறப்பைத் தொடர்ந்து நடக்கும் சடங்குகள் அலுப்பூட்டுபவை. பழைய நிலவுடமைச்சமூகத்தில் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை இருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சடங்குகள். அதை இத்தனை நூற்றாண்டுகளாய் தூக்கிச்சுமப்பதே கொடுமையான விஷயம். அவனும் அந்தச் சுமையை தன்னுடைய குடும்பத்தாருக்குக் கொடுக்க விரும்பவில்லை. அவனுடைய அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்த வினோத் திடீரென காணாமல் போய்விட்டான். முதல் ஆறுமாதத்துக்கு அவனை எல்லோரும் சல்லடைபோட்டு தேடினார்கள். அவனுடைய மனைவி மூன்று மாதங்கள் கழித்து கிட்டத்தட்ட நார்மலுக்கு வந்து விட்டாள். இதுவரை அவன் இருக்கிறானா இல்லையா என்று யாருக்கும் தெரியாது. போலீசில் ஏழு வருடம் கழித்து கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழ் கொடுத்தால் அவனுடைய மனைவிக்கு வேலையும் வினோத்தின் பணிப்பயன்களும் கிடைக்கும். அதையும் மூன்று வருடங்களிலேயே வாங்கிவிட்டார்கள். அவன் மனைவியும், மற்ற உறவினர்களும் அவன் காசி, ஹரித்துவார் என்று சாமியாராகப் போய்விட்டான் என்று நினைத்தார்களே தவிர அவன் இறந்திருப்பான் என்று கற்பனை கூடச்செய்யவில்லை. அதனால் ஊரில் தற்கொலை வேண்டாம் என்று நினைத்தான். அதுமட்டுமில்லாமல் ஊரில் இரண்டு முறை முயற்சித்து தோற்றுப்போய்விட்டான்.
தற்கொலைப்பருவம் - 1
முதல்முறையாக பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பில் தோல்வியடைந்ததற்காக தற்கொலை செய்ய முடிவு செய்தான். அவன் தினமும் சினிமா பார்ப்பதனால் தான் தோல்வியடைந்தான் என்று அப்பா அடி வெளுத்து விட்டார். அவர் சொன்னது உண்மைதான். தினமும் சினிமாவுக்குப் போய்க் கொண்டிருந்தான். ஒவ்வொரு சினிமாவையும் குறைந்தது இரண்டு முறையாவது பார்த்தான். சகலகலாவல்லவன் படத்தை மட்டும் இருபது தடவையாவது பார்த்திருப்பான். அப்படி விழுந்து விழுந்து சினிமா பார்த்ததற்கு தனிப்பட்ட காரணம் என்று எதுவும் இல்லை. அந்த நேரத்தில் அவன் மனநிலை அப்படியிருந்தது. அவ்வளவு தான். சினிமா வேறு ஒரு உலகத்துக்கு அவனைக் கூட்டிக்கொண்டு போனது. பள்ளிக்கூட ரிசல்ட் வந்த மூன்றாவது நாள் அப்பா வைத்திருந்த ரத்தக்கொதிப்பு மாத்திரைகளில் மூன்று நான்கை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து பால் ஐஸ் வாங்கிச் சப்பிக்கொண்டே தொண்டையில் போட்டு முழுங்கிவிட்டான். வீட்டுக்கு வந்த கொஞ்சநேரத்தில் தலை சுற்றிக் கீழே விழுந்து விட்டான். பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போய் காப்பாற்றிவிட்டார்கள்.
தற்கொலைப்பருவம் - 2
இரண்டாவது முறையும் தற்கொலைக்கு தோல்வி தான் காரணம். ஆனால் காதல் தோல்வி. கல்லூரியில் படிக்கும்போது ஜெயாவை ஒரு தலையாகக் காதலித்தான். இவன் அவளைப் பார்க்கிறான் என்பது கூடத் தெரியாத அளவுக்கு அவளைக் காதலித்தான். தினமும் அவள் இருக்கும் திசைநோக்கி கும்பிட்டுவிட்டே தன்னுடைய அன்றாடக்காரியங்களை ஆரம்பிக்கிற அளவுக்கு காதல் ஊற்றெடுத்தது. ஜெயசதீஷ் என்ற பெயரில் கவிதைகள் கூட எழுதினான். ஒன்றிரண்டு தினமலர் வாரமலர் கடைசிப்பக்கத்தில் வந்தன. அவளைப்பார்ப்பதற்காக மணிக்கணக்காக தெருக்களில் காத்துக்கிடப்பது போன்ற வழக்கமான கிரித்திரியங்களை எல்லாம் செய்தான். வழக்கம்போல கல்லூரிப்படிப்பு முடிந்ததும், ஜெயா திருமணம் முடித்துக் கொண்டு போய்விட்டாள். அதுவரை பீர் மட்டும் குடித்துக் கொண்டிருந்த சதீஷ், இந்தத் தோல்விக்குப்பின் பிராந்தி, விஸ்கி, குடிக்க ஆரம்பித்தான். ஒரு நாள் குடிபோதையில் பாட்டிலை உடைத்து மணிக்கட்டு நரம்பை வெட்டிக்கொண்டான். மறுபடியும் அதே பெரியாஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு போனார்கள். முதல் தற்கொலைப்பருவத்திலிருந்த அதே மருத்துவர் அருணாச்சலம் தான் இருந்தார். காப்பாற்றிவிட்டார். மருத்துவமனைப் படுக்கையிலிருந்தபோது சொன்னார்.
“ சாகணும்னு முடிவு பண்ணிட்டயா.. யாராலும் காப்பாற்றமுடியாதபடி போயிரணும்.. சும்மா படம் காமிச்சுக்கிட்டிருக்கக்கூடாது… நீ எல்லாரையும் சாகடிச்சிட்டு தான் சாவே… டேமிட்..”
அவர் சிரித்துக்கொண்டே சொன்னதினால் மற்றவர்களும் சேர்ந்து சிரித்தார்கள். ஆனால் அதில் இருந்த வன்மம் சதீஷின் காயத்தில் போய் ஊசியைப்போல குத்தியது. அடுத்தமுறை யாருக்கும் தெரியாமல் செத்துப்போய்விடவேண்டும் என்று முடிவெடுத்தான்.
அதன் பிறகு இருபது வருடங்கள் ஓடிவிட்டது.
தற்கொலைப்பருவம் – 3
கடந்த ஒரு மாதமாக இந்த எண்ணம் தோன்றிக் கொண்டேயிருந்தது. அது ஒரு ரகசிய ஆசையாக வளர்ந்து கொண்டேயிருந்தது. கள்ளக்காதலியுடன் கலவி கொள்ளும் உணர்ச்சி வேகம் அதை நினைக்கும்போது வந்தது. அவனுடைய பிரச்னைகளும் கூட தீர்ந்து போய்விடும். உலகின் அத்தனை பொருட்களும் அவனுடைய வசம் இருக்க வேண்டும் என்று அவனும் அவனுடைய மனைவியும் குழந்தைகளும் நினைத்தார்கள். மெய்நிகர் உலகமே அவர்களுடைய வழிகாட்டியாக இருந்தது. கோடிக்கணக்கான இணைய முகவரிகளின் வழியே உலகின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் அவனுடைய தாகத்தைத் தீர்க்க பொருட்கள் வந்து அவனுடைய வீட்டுக்கதவைத் தட்டிக்கொண்டேயிருந்தன. அத்தனை பொருட்களுக்கும் அவன் வீட்டுக்கதவைத் திறந்து விட்டான். அந்தக் கதவின் வழியே அவனுடைய பேராசை மாறுவேடமிட்டு அவன் வேலைபார்த்த வங்கியின் கதவைத்தட்டியது. அவன் வங்கியில் கிட்டத்தட்ட இருபத்தியைந்து லட்சம் ரூபாயைக் கையாடல் செய்து விட்டான். பொய்யான பெயர்களில் லோன் போட்டு பணத்தை எடுத்து அவனுடைய பேராசையைத் திருப்தி செய்ய முயன்றான். கார், பெரிய வீடு, பொருட்கள் என்று வசதியாக வாழ்கிற ஒருவனைப்பார்த்து பொறாமை சும்மா இருக்குமா?. ஐந்து வருடங்களாக மறைந்திருந்த பூதம் இப்போது ஆடிட்டர் மூலம் வெளிவந்து விட்டது. இனி எதுவும் செய்யமுடியாது என்ற நிலைமை வந்தபோது இதுவரை மனதின் புதைசேற்றில் மறைந்திருந்த தற்கொலைச்சிந்தனை மளமளவென்று வளர்ந்து செழித்தது. அதிலிருந்து தற்கொலை பற்றிய செய்திகளை ஊன்றிப் படித்தான். முடிவில் கண்காணாத நகரத்துக்கு வந்து தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்தான்.
காலையில் நகரில் வந்து இறங்கியதும் ஒதுக்குப்புறமாக ஒரு தங்கும் விடுதியைத் தேடினான். ஊருக்கு வெளியே புறவழிச்சாலையில் இருளடைந்த கருப்புநிறப்பதாகையில் மஞ்சள் எழுத்துகளில் ஜீவன் லாட்ஜ் என்று ஒரு விடுதி இருப்பதைக் கண்டுபிடித்தான். அந்த விடுதியின் முன்னால் ஒரு சிவப்பு நிற ஜீரோ வாட்ஸ் பல்ப் எரிந்து கொண்டிருந்தது. உள்ளே நுழைந்தான். இருட்டாயிருந்தது.
பழைய தேக்கு மரத்தாலான காலத்தால் பளபளப்பேறிய ஒரு கவுண்டர் இடதுபக்கம் இருந்தது. அந்த கவுண்டரின் மீது பழைய கணக்குப்பேரேடு ஒன்று விரித்து வைக்கப்பட்டிருந்தது. பித்தளைக் காலிங்பெல் ஒன்றும் இருந்தது. அதன் அமுக்குவிசை குழந்தையின் மானிபோல விரைப்பாய் நின்றது. சதீஷ் காலிங் பெல்லை அமுக்கினான். யாரும் இருப்பதற்கான அரவமேயில்லை. விடுதியில் ஆள் இருப்பதற்கான எந்தத் தடயமும் இல்லை. திரும்பிவிடலாம் என்று நினைத்து கைப்பையை எடுத்தபோது திடிரென கவுண்டரில் ஒரு ஆள் தோன்றினான். எப்படி எங்கிருந்து வந்தான் என்று புரியாமல் குழம்பினான் சதீஷ். விடுதியின் மேலாளராக இருக்கவேண்டும். அழகாக இருந்தான். மிக நேர்த்தியாக உடையணிந்திருந்தான். நெற்றியில் மூன்று திருநீற்றுப்பட்டையும் நடுவில் ஒரு குங்குமத்தீற்றலும் இருந்தது. சதீஷின் குழப்பத்தை உணர்ந்தவன் போல ஒரு சிறிய புன்முறுவலுடன்,
“ கீழே ஒரு நிலவறை இருக்கிறது சார்! அங்கே எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு வாரேன் “
என்றான். சதீஷ் பெருமூச்சு விட்டான்.
“ என்ன சார் ரூம் வேணுமா? சிங்கிளா.. டபுளா.ஏ.சி.யா.. நான் ஏ.சி.யா .” என்று மூச்சு விடாமல் கேட்டான். ஒரு கணம் யோசித்த சதீஷ்,
“ சிங்கிள் போதும்…. ரெண்ட் எவ்வளவு ? “
“ ஜஸ்ட் ஐம்பது ரூபா தான்..”
“ என்னது ஐம்பது ரூபாயா? “ என்று ஆச்சரியப்பட்டான் சதீஷ்.
“ எங்க முதலாளி ஒரு சேவையா இதை நடத்திக்கிட்டிருக்காரு… “
“ ஆச்சரியமா இருக்கே.. சரி.. ரூம் போட்டுருங்க.. “
“ இந்த ரிஜிஸ்டரில எழுதுங்க.. சார்..”
சதீஷின் பக்கமாக அந்தப் பேரேட்டைத் தள்ளினான். சதீஷ் அந்தப் பேரேட்டை மேலோட்டமாகப் பார்த்தான். கடைசியாக போனவாரம் தான் இரண்டு பேர் அறை எடுத்திருக்கிறார்கள். பேரேட்டில் எதையும் உண்மையான தகவலை எழுதக்கூடாது என்று முன்பே யோசித்திருந்தான். பேனாவின் மூடியைத் திறந்து என்ன பெயரை எழுதலாம் என்று ஒரு நொடி தயங்கியபோது விடுதி மேலாளர்,
“ ஏதாச்சும் ஒரு பேரை எழுதுங்க…சார்.. அப்புறம் அட்ரஸ் முக்கியம்.. எந்த ஒரு கமா, புள்ளி கூட உண்மையா இருக்கக்கூடாது.. நீங்க வடக்கேயிருந்து வந்திருந்தா.. தெக்கே இருக்கிற ஒரு ஊர் அட்ரஸை எழுதுங்க.. தெக்கே இருந்து வந்திருந்தா வடக்கே உள்ள ஏதாச்சும் ஒரு ஊரை எழுதுங்க.. முக்கியமா நீங்க எழுதுற ஊரில் உங்க பிரண்ட்ஸ், சொந்தக்காரங்க.. யாரும் இருக்கக்கூடாது… அது ரொம்ப முக்கியம்..”
என்று முகத்தைச் சீரியசாக வைத்துக் கொண்டு சொல்லிக்கொண்டிருந்தான். சதீஷ் அவன் கேலி செய்கிறானோ என்று நினைத்தான். ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படாமல் எழுதினான். தங்குவதற்கான காரணம் என்ற பகுதிக்கு வந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அந்தப்பத்தியில் ஏற்கனவே தற்கொலை என்ற வார்த்தை அச்சிடப்பட்டிருந்தது. சதீஷ் நிமிர்ந்து பார்த்தான். மாறாத புன்னகையுடன் விடுதி மேலாளர்,
“ சார் சொல்ல மறந்துட்டேன்.. எப்படி சூசைட் பண்ணப்போறீங்க.. கயித்துல தொங்கப்போறீங்களா.. துப்பாக்கியால சுட்டுக்கப்போறீங்களா.. கத்தியால குத்திக்கிட்டு சாகப்போறீங்களா.. இல்லை விஷம் குடிச்சிச் சாகப்போறீங்களா.. மாடியிலிருந்து குதிக்கப்போறீங்களா.. ஏற்கனவே முடிவு எடுத்துட்டீங்களா? அப்படி எடுக்கலன்னா உங்களுக்கு ஆலோசனை சொல்ல இங்கே ஒரு சிறப்பு ஆலோசகர் இருக்கார்.. அவருக்குக் கட்டணம் ஐநூறு ரூபா… அவர் வேண்டாம் என்றால் உங்கள் விருப்பப்படி எல்லா தற்கொலை உபகரணங்களும் உங்கள் அறையில் வைக்கப்படும். பொதுவாக வி.ஐ.பி.களுக்குத் தவிர வேறு யாருக்கும் நாங்கள் இதைச் செய்வதில்லை. உங்களைப் பார்த்தால் கொல் அல்லது கொல்லப்படு சீரியலில் வருகிற கதாநாயகன் போலவே இருக்கிறீர்கள்.. அதனால் இந்தச் சலுகையைத் தரலாம் என்று நான் விடுதி விதிகளை மீறி தனிப்பட்ட முறையில் முடிவு செய்கிறேன்.. நீங்களே அவற்றில் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம்..அப்படி முடிவு எடுத்திருந்தா வெளியிலிருந்து எந்தப் பொருளையும் உள்ளே எடுத்துட்டு வரக்கூடாது.. இங்கே தான் வாங்கணும்.. நாங்க தான் தருவோம்.. அது எந்த மாதிரியான தற்கொலைக்கருவியோ அதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.. அப்புறம் இன்னொரு விஷயம் தற்கொலை செய்யத்தயக்கமா இருந்தா அதற்கும் உதவி செய்ய உதவியாளர்கள் தூக்கு மாட்டிவிட, விஷத்தைப்புகட்டிவிட, மாடியிலிருந்து தள்ளிவிட, துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள, கத்தியால் குத்திக்கொள்ள, என்று தனித்தனியான உதவியாளர்கள் அரசாங்கத்தின் சான்றிதழ் பெற்றவர்கள் இருக்கிறார்கள்… அவர்களுக்குக் கட்டணம் ஆயிரம் ரூபாய் 
உங்களுடைய தற்கொலையைப் பற்றி தொலைக்காட்சியில் விவாதமேடை நடத்தலாம். அதற்கென்றே இரண்டு சேனல்கள் தயாராக இருக்கிறார்கள். நீங்களும் அதில் பங்கு பெற்று ஒரே நாளில் ஓகோவென்று புகழ் பெறலாம். விவாதமேடையைப் பார்த்தால் கொலைகாரனாகிவிடலாம் என்று நீங்கள் அஞ்சினால் உங்களுடைய தற்கொலை நிகழ்வை பிரேக்கிங் நியூசாகப் போட்டு நேரடியாக உலகம் பூராவும் ஒளிபரப்ப முப்பது சேனல்கள் தயாராக இருக்கின்றன. நேரடி ஒளிபரப்பு எவ்வளவு நேரம் நீடிக்கிறதோ அவ்வளவு நேரம் டி.ஆர்.பி. ரேட்டிங் ஏறும். அதிக விளம்பரங்கள் கிடைக்கும்பட்சத்தில் உங்களுக்கு அதிலிருந்து ஒரு சிறு தொகையும் காப்புரிமைத்தொகையாகக் கிடைக்கும். நீங்கள் யோசித்துச் சொல்லலாம். என்ன கேரளாவில் ஒரு விவசாயியின் தற்கொலையை இப்படி ஒரு நேரடி ஒளிபரப்பாக எழுத்தாளர் சந்தோஷ் ஏச்சிக்கானம் நடத்திவிட்டார் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மற்றபடி நீங்கள் தங்கும் அறையில் உங்கள் தற்கொலை நிகழ்வின் சமயம் நடக்கும் எந்தச் சேதத்திற்கும் நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை. அத்துடன் இன்னொரு செய்தியையும் மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.. உங்களுடைய கடைசி இரவு உணவை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம்… எப்படியிருந்தாலும் ஒரு உத்திரவாதத்தை உங்களுக்குக் கொடுக்க முடியும்.. தற்கொலை உங்கள் லட்சியமாகவோ, நோக்கமாகவோ, அசட்டு உணர்ச்சியாகவோ, பயமுறுத்தலாகவோ, என்ன வகை மாதிரியாக இருந்தாலும் இங்கே உள்ளே வந்தவர்கள் யாரும் உயிருடன் வெளியே போனதில்லை..”
என்று நீண்டதொரு உரைவீச்சை வீசினான். மேலாளரின் பேச்சைக்கேட்டுக் கொண்டே பேரேட்டில் கையெழுத்துப் போட்டு பணமும் கொடுத்துவிட்டான். ஆனால் சதீஷுக்குக் குழப்பமாக இருந்தது. எல்லாம் பிரமையாக இருக்கலாமோ. நிமிர்ந்து பார்த்தான். விடுதியின் சுவர்களில் விதவிதமான தற்கொலைக்கருவிகளின் படங்கள் ஃப்ரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தது. அந்த படங்களின் அருகே அந்தந்தத் தற்கொலைக்கருவியைப் பயன்படுத்தி இறந்த பிரபலங்களின் பெயர்களும் இருந்தன.
மேலாளர் அறையின் சாவியை அவரைப்போலவே திடீரெனத் தோன்றிய உதவியாளரின் கையில் கொடுத்து அறையை ஒழுங்குபடுத்த அனுப்பிவிட்டு அவனைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தான்.
“ சார் நீங்க கொடுத்துவைத்தவர்… நீங்க தங்கப்போற அறை எண் அஞ்சில தான் இருபது வருடங்களுக்கு முன்னால் கவர்ச்சிக்கன்னியாக இருந்த பி.கே.பாக்கியலட்சுமி தூக்குமாட்டி இறந்து போனார். அவர் இறந்தபின்பு எடுத்த படங்கள் இருக்கிறது பார்க்கிறீர்களா?...”
என்று சொல்லியபடி கவுண்டருக்குக்கீழே குனிந்து ஒரு பெரிய ஆல்பம் ஒன்றைக் கையில் கொடுத்தார். சதீஷ் அங்கே இருந்த மரநாற்காலியில் உட்கார்ந்து ஆல்பத்தைப் புரட்டினான்.
கண்முழி பிதுங்கி, நாக்கு தள்ளி, தூக்கு மாட்டி இறந்தவர்களின் படங்கள், துப்பாக்கியால் தலையில், வாயில், மூக்கில், நெஞ்சில், வயிற்றில், ஏன் குஞ்சில், சுட்டுக்கொண்டு இறந்தவர்களின் படங்கள், வாயில் நுரை தள்ளி, கைகால்கள் விரைத்துக்கோணிக் கொண்டு இறந்தவர்களின் படங்கள், கத்தியால் கழுத்தை அறுத்தவர்கள், கத்தியால் நெஞ்சில் குத்தியவர்கள், வயிற்றில் குத்தியவர்கள், என்று ரத்தக்களறியாக இறந்தவர்களின் படங்கள், மாடியிலிருந்து கீழே விழுந்து தலை சிதறியவர்கள், முதுகில் முகம் திருப்பியவர்கள், கைகால்கள் எட்டு கோணத்தில் திரும்பிக்கிடக்க இறந்தவர்களின் படங்கள் என்று குவிந்து கிடந்தன. எல்லாப்புகைப்படங்களிலும் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. கடைசிப்பக்கத்தில் இருந்த புகைப்படத்தைப் பார்த்த சதீஷ் அதிர்ச்சியடைந்தான்.
கண்கள் பிதுங்க, நாக்குத்தள்ளி, கழுத்து தொங்க சதீஷ் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தான். துள்ளியெழுந்த சதீஷின் தோளில் மேலாளர் தட்டிக்கொடுத்தான்.
“ தேதி போடலையேன்னு கவலைப்படாதீங்க.. அது சின்ன வேலைதான்.. சரி.. நல்வாழ்த்துக்கள்!..” என்று சொல்லி அழகாகச் சிரித்தான் அந்த மேலாளர்.

நன்றி - சொல்வனம் இணைய இதழ் 205

Sunday, 11 August 2019

நஸ்ரியாவின் செடி


நஸ்ரியாவின் செடி
உதயசங்கர்

நஸ்ரியா ஒரு குட்டிப்பாப்பா. குட்டிப்பாப்பா என்றால் மூன்று வயது முடிந்த குட்டிப்பாப்பா. வீட்டுக்குள் ஒரு நிமிடம் கூட நிற்க மாட்டாள். ஒரே ஓட்டம் தான்.
உம்மா கூட, “ ஒரு இடத்துல நிக்குதா பாரு.. அங்கிட்டும் இங்கிட்டும் ஓட்டமும் சாட்டமும்.. “ என்று சொல்லிச் சிரிப்பாள். அப்படி ஓடும்போது நஸ்ரியா அப்படி இப்படித் தடுமாறுவாள். கால்கள் பின்னும். கீழே விழப்போவதைப் போல சாய்வாள். ஆனால் விழாமல் சமாளித்து விடுவாள். அப்போது யாராவது அவளுடைய வாப்பாவோ, உம்மாவோ இருந்தால் அவர்களைப் பார்த்துச் சிரிப்பாள். எப்படித் தெரியுமா? வாயிலிருந்து கெக்கேக் கீக்கி என்ற சத்தம் வரும். எளிறும் பால்பற்களும் தெரிய பளீரெனச் சிரிப்பாள்.. பெருமை. கீழே விழாமல் சமாளித்து விட்டாளாம்.
அப்படி யாரும் இல்லையென்றால் நஸ்ரியா சிரிக்கமாட்டாள்.. அடுக்களையில் இருக்கும் உம்மாவையோ தோட்டத்தில் இருக்கும் வாப்பாவையோ தேடிப்போவாள். அப்பவும் ஓட்டம் தான். போய் அவர்களுடைய முகத்தைத் திருப்பி நேராகப் பார்த்துக் கொண்டு சிரிப்பாள். அவர்களுக்கு நஸ்ரியா எதுக்குச் சிரிக்கிறாள் என்று தெரியாது. ஆனால் நஸ்ரியாவுக்குத் தெரியுமே.
நஸ்ரியாவுக்கு தோட்டம் தான் மிகவும் பிடித்த இடம். தென்னை மரங்கள், மாமரங்கள், ஒரு பெரிய வேப்பமரம், ஒரு புளிய மரம், சம்பங்கி, மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, என்று பூச்செடிகள், காட்டுச்செடிகள், நெருஞ்சி, தும்பை, கொளுஞ்சி, தாத்தாச்செடி, முசுமுசுக்கை, நுணாக்கொடிகளும் நிறைந்திருக்கும். அதிகாலையில் ஒரு கருங்குயிலின் கூக்கூக்க்கூகூ சத்தம் தான் நஸ்ரியாவை எழுப்பிவிடும். அவள் எழுந்தவுடன் தோட்டத்திற்குத் தான்போவாள். எப்படியாவது அந்தக்குயிலக்காவைப் பார்க்கவேண்டும் என்று அங்கும் இங்கும் ஓடுவாள். சத்தம் வரும். ஆனால் பார்க்க முடியாது. சில நேரம் கருகருவென குயிலக்காவின் வாலின் நுனி மட்டும் தெரியும்.
 “ கண்ணாமூச்சி ஆடுறியா.. இரு  இரு வாப்பாகிட்டச் சொல்லி உன்னைப் பிடிச்சித்தரச்சொல்றேன்..”
நஸ்ரியாவுக்குக் கோபமாக வந்தது. சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். வாப்பா தூரத்தில் பாத்திகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
அப்படியே உட்கார்ந்து மண்ணைக் கிளற ஆரம்பித்து விட்டாள். வேப்பமரத்தடியில் நிறைய வேப்பங்கொட்டைகள் கிடந்தன. அதில் ஒரு கொட்டையை எடுத்து வாய்க்கருகில் கொண்டு போனாள்.நஸ்ரியா. அந்தக் கொட்டை கசந்தது. முகத்தைச் சுளித்தாள். நஸ்ரியாவுக்குத் தான் கசப்பு பிடிக்காதே. அப்படியே அந்தக்கொட்டையை அவள் தோண்டியிருந்த சின்னப்பள்ளத்தில் போட்டாள். மண்ணைப் போட்டு மூடினாள். அவள் மூடிக்கொண்டிருக்கும்போது மாமரத்தில் இருந்து அணில் அண்ணன் வீச் வீச் என்று சத்தம் கொடுத்துக் கொண்டே ஓடினான். நஸ்ரியாவுக்கு அணில் அண்ணனின் வாலைத் தொடவேண்டும் போலிருந்தது. கைகளை நீட்டினாள். அணில் அண்ணன் அவளைக் கவனிக்கவில்லை.. நஸ்ரியா அணில் அண்ணனோடு டூ விட்டாள். அவளுக்கு அழுகை வரும்போல இருந்தது. அழலாமா வேண்டாமா என்று யோசித்தாள். அப்போது ஒரு செவலை நிறக்கும்பிடு பூச்சி அவளுக்கு முன்னால் வந்து
“ காலை வணக்கம் குட்டிப்பாப்பா..”  என்று இரண்டு கைகளையும் சேர்த்துத் தூக்கிக்கும்பிட்டது. நஸ்ரியாவும் அவளுடைய இரண்டு கைகளையும் சேர்த்துக் கும்பிட்டு
“ குட்மார்னிங்..” என்றாள். உம்மா இங்கிலீஷில் தான் சொல்லவேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். கை கொடுக்கலாம் என்று அவளுடைய கையை நீட்டினாள். ஆனால் கும்பிடுபூச்சி அதை விரும்பவில்லை. பறந்து விட்டது. அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அருகில் வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் இறங்கினாள். உடம்பு புல்லரித்தது. நஸ்ரியாவின் முழங்கால் அளவு ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் அப்படியே உட்கார்ந்து தப்பளம் போட்டாள். தண்ணீர் அவளுடைய முகத்தில் தலையில் உடம்பெங்கும் தெறித்தது. அப்படியே வெளியேயும் மழைத்துளிகளைப் போலத் தெறித்தது.
உம்மா வந்து கூட்டிக்கொண்டு போனாள். நஸ்ரியா இப்போது எல்.கே.ஜி. போகிறாள். பள்ளிக்கூடம் போவதுக்கு முன்னால் தான் இந்தத்தோட்ட வேலை எல்லாம் நடக்கிறது. நாலைந்து நாட்கள் கழித்து குயிலக்காவின் குரலைக் கேட்டு தோட்டத்துக்குப் போன நஸ்ரியா அன்றும் பார்க்கவில்லை. எப்படி பார்ப்பது ? என்று ஆழ்ந்த சிந்தனையில் மண்ணில் உட்கார்ந்த நஸ்ரியா அப்போதுதான் கவனித்தாள்.
அவளுக்கு அருகில் ஒரு சிறு வேப்பஞ்செடி இரண்டு இலைகள் விட்டு விதைப்பருப்போடு எழுந்து நின்று கொண்டிருந்தது. அவளுடைய குட்டி விரல்களால் அதைத் தடவிக் கொடுத்தாள். மகிழ்ச்சி. அவளுக்குச் சிரிப்பு வந்தது. கெக்கே கெக்க்கே என்று சிரித்தாள். கீழே உருண்டு புரண்டு சிரித்தாள். திரும்பத் திரும்ப அந்த குட்டிச்செடியைப் பார்த்துச் சிரித்தாள். நஸ்ரியாவின் சிரிப்பைப் பார்த்த அந்தக்குட்டி வேப்பமரமும் காற்றில் தலையாட்டிச் சிரித்தது..
நன்றி - வண்ணக்கதிர்

Thursday, 8 August 2019

அப்பாவின் கைத்தடி




அப்பாவின் கைத்தடி
உதயசங்கர்

வீடு ஏன் அவ்வளவு வெளிச்சமாக இருந்தது என்று ரேவதிக்குத் தெரியவில்லை. இராத்திரி பனிரெண்டு மணி மில் சங்கு ஊதி கொஞ்சநேரம் ஆகியிருக்கும். எப்போதும் மேலே உள்ள ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டில் உள்ள ஓட்டைகள் வழியேயும், மண் சுவருக்கும் கூரைக்கும் நடுவே உள்ள அரையடி இடைவெளி வழியாகவும் வெளிச்சம் பொழிந்து கொண்டேயிருக்கும் என்றாலும், இன்று இரவிலும் பகலைப்போல அப்படி இருந்தது அல்லது அப்படி இருப்பதாக ரேவதிக்குத் தோன்றியது. தோணல்கள் தானே வாழ்க்கையைக் கொண்டு செலுத்துகிறது. ரேவதியின் ஒட்டிய கன்னங்கள் இரண்டு பக்கமும் லேசாக விரிந்தன. அவள் இன்னும் சற்று நேரத்தில் மூன்று மணி மில் சங்கு ஊதியவுடன் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும். மில் வாசலுக்கு அடுத்த ஹூசைன்பாய் டீக்கடை முக்கில் கட்டையன் காத்துக்கொண்டிருப்பான். காத்துக்கொண்டிருக்க வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு முன்பு வரை அவர்களுடைய கால்மாட்டில் அப்பா படுத்திருந்தார். அவர் சட்டடியாகப் படுத்து ஆறு மாதங்களாகி விட்டது. அதற்கு முன்னால் அவர் கையில் ஒரு கைத்தடியை வைத்துக் கொண்டு நடமாடிக்கொண்டிருந்தார். ஆனால் படுத்தபிறகும் அவருடைய பக்கத்தில் அந்தக் கைத்தடி கிடந்தது. எப்போது வேண்டுமானாலும் எழுந்து நடந்து விடுவதைப்போல. பலமுறை அப்பாவின் கால்களைத் தட்டிவிட்டிருக்கிறது. ஆனாலும் அவர் அந்தக் கைத்தடியை விடுவதாயில்லை. பிறந்ததிலிருந்து கூடவே இருக்கிறமாதிரி ஒரு பாசம். கைத்தடியில்லை என்றால் அவருக்குப் பயம் வந்து விடும். வழிதவறிவிடுவோமோ என்று பயப்படுவார். பல நேரங்களில் அவர் கைத்தடியை வைத்திருக்கிறதா? அல்லது அவரைக் கைத்தடி வைத்திருக்கிறதா? என்ற சந்தேகம் வரும்.  அந்தக் கைத்தடியை வைத்துத்தான் ரேவதி இரண்டாவது முறையாக வீட்டைவிட்டு வெளியேறிய போது அடித்தார். அது நடந்து நாலைந்து வருடம் இருக்குமா? அவன் தீப்பெட்டிக்கம்பெனியில் கணக்கப்பிள்ளையாக வேலை பார்த்தான். அது நடந்திருந்தால் இந்நேரம் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாகியிருப்பாள். ஆனால் அன்று அப்பாவிடம் மாட்டிக்கொண்டாள். அவள் எழுந்து போகும்போது அப்பா குறுக்கே வைத்திருந்த கைத்தடி காலைத்தட்டி விட கீழே விழுந்துவிட்டாள். விழுந்தவள் அந்த அறையின் ஒரு பகுதியாக இருந்த அடுக்களையில் உள்ள பாத்திரங்களைக் கடமுடா என்று உருட்டிவிட்டாள். பார்த்தவுடன் புரிந்து கொண்டார் அப்பா.
“ யார் அவன்? என்ன ஆளுக..? “ என்று கத்தினார்.
அவள், “ தெரியாது “ என்றாள்.
தெரியாது என்ற வார்த்தையைக் கேட்டதுதான் தாமதம் அப்பாவின் கைத்தடி ஆவேசமாக அப்பாவின் கையைத்தூக்கியது. அடி என்றால் அந்த அடி இந்த அடி என்றில்லை. ரேவதி எழுந்து நடமாட ஒரு வாரம் ஆகிவிட்டது. நல்லவேளை இதையெல்லாம் பார்ப்பதற்கு அம்மா இல்லை. தீப்பெட்டிக்கம்பெனிக்குப் போய்விட்டு வந்து வாசலில் உட்கார்ந்தாள்.
“ ஈசுவரி.. நெஞ்சைக்கரிக்கிற மாதிரி இருக்கு. குடிக்கக் கொஞ்சம் வெந்நீர் போட்டுக் கொண்டா..”
என்றாள் அம்மா. ஈசுவரியக்கா வெந்நீர் போட்டுக் கொண்டுவருவதற்குள் கீழே சாய்ந்திருந்தாள்.
சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தாள் ரேவதி. பக்கத்தில் படுத்திருந்த ஈசுவரியக்கா ம்ம்ம் என்று முனகிக்கொண்டே உடம்பை முறுக்கினாள். பார்த்தால் வலிப்பு வந்த மாதிரி இருந்தது. அவ்வளவு அசதி அவளை அமுக்கிக்கொண்டிருந்தது. உடல் அசதியை மீறி அவள் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. இப்போது ஈசுவரி இரண்டு வாரமாய் மில் வேலைக்குப்போகிறாள். காண்டிராக்ட் கூலி. இன்னும் ஒரு பைசா வாங்கிக்கையில் பார்க்கவில்லை. உள்ளே ஆண்கள் செய்கிற அத்தனை வேலையையும் செய்யச்சொல்கிறார்கள். ஈசுவரியின் உதட்டுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த தெத்துப்பல் எல்லோரையும் தொந்திரவு செய்கிறது. தொத்தலான அந்த உடம்பில் எந்தச்சதைப்பிடிப்பும் இல்லை. தோலை எலும்புகளின் மீது ஒட்டி வைத்த மாதிரி இருந்தாள் ஈசுவரி. மில்லுக்குள் அவளை ஏறிட்டுப்பார்க்கக்கூட யாரும் கிடையாது. அவள் இருப்பதைப் பொருட்படுத்தாமல் கெட்டவார்த்தைகளைப் பேசுவதும், கெட்டவார்த்தைக்கதைகளைச் சொல்லிச் சிரிப்பதும் கூட நடக்கும். மிஷின்கள் ஓடும் சத்தத்தில் அவர்கள் பேசுவது ஈசுவரிக்குச் சரியாகக் கேட்காது. ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் தான் காதில் விழும். அவர்களுக்கு எல்லாவார்த்தைகளும் எப்படி தெளிவாகக் கேட்கிறதோ? காதில் விழும் அந்த ஒன்றிரண்டு வார்த்தைகளே அவளுடைய அடிவயிற்றில் ஒரு இளக்கத்தை ஏற்படுத்தும். அவளுக்கு அந்தக்கணத்தில் ஏற்படும் கிறக்கத்துக்காக அவள் ஏங்க ஆரம்பித்தாள். அந்தக் கதைகளைக் கேட்பதற்காக ஆண்கள் வேலை பார்க்கும் இடத்தையே சுற்றிச் சுற்றி வந்தாள். இப்போதும் அந்த முனகல் வந்தது. அந்த முனகலோடு ஒரு சிரிப்பு உதடுகள் பிரிந்து ஏக்கத்துடன் ஒரு சிரிப்பு வந்து மறைந்தது. அதென்ன? சிரிக்கும்போது எல்லாமனிதர்களும் அழகாகி விடுகிறார்கள்.
ரேவதி அக்காவைப் பார்த்தபடியே கிடந்தாள். பாவம் ஈசுவரி! இந்தத்தரித்திரம் பிடித்த வீட்டை விட்டு அவளும் விடுதலையடைய வேண்டும். அக்கா உனக்கும் ஒருத்தன் இருப்பான். அந்த மில்லிலேயே கூட இருக்கலாம். எப்படியாச்சும் தப்பித்துவிடு. அவளுடைய கண்கள் சுவற்று ஆணியில் தொங்கவிட்டிருந்த பிக்‌ஷாப்பர் பையைப் பார்த்தாள். பை சிரித்தமாதிரி இருந்தது. இந்த முறை எப்படியும் வெளியே போயிருவேன் என்று பையிடம் சொல்லி சடைத்துக்கொண்டாள். அருகில் தொங்கிக்கொண்டிருந்த அப்பாவின் கைத்தடி அதைக் கேட்டுக்கொண்டிருந்தது. மூணாவது முறையாக அவள் வீட்டைவிட்டு ஓடிப்போகத் திட்டம் போட்டிருக்கிறாள். அவளுக்கு எல்லாமே மூன்றாவது முறை தான் கிடைக்கிறது. முக்கா முக்கா மூணு ஆட்டை அவளுடைய பாலிய காலத்திலிருந்து பின்தொடர்கின்ற ஒரு விளையாட்டு மந்திரம். பள்ளிக்கூடம் படிக்கிற காலத்திலும் விளையாட்டாக இருந்தாலும் சரி, படிப்பாக இருந்தாலும் சரி, பரீட்சையாக இருந்தாலும் சரி, ஒப்பிக்கிறதாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிலும் மூணு தடவை செய்யணும். அப்போது தான் அவளுக்குத் திருப்தி வரும். முதல்தடவையே அவள் சரியாகச் செய்து விட்டாலும் அவள் விடுவதில்லை. திரும்பத்திரும்பச் செய்து கொண்டிருப்பாள்.
இந்த முறை கட்டையனே வரவில்லை என்றாலும் அவள் போய் விடுவாள். எங்கே போக முடியும்? அவளுக்குத் தெரிந்து திருநெல்வேலி தான் அவள் போயிருக்கிற தூரத்து ஊர். வடக்கே போனதேயில்லை. கட்டையன் என்ன திட்டம் வைத்திருக்கிறான் என்று தெரியவில்லை. கட்டையனின் பெயர் என்ன என்றே நினைவிலில்லை. அவன் அப்படியொண்ணும் கட்டையுமில்லை. யாரோ கூப்பிட்டிருக்கிறார்கள். அந்தப்பெயரே அவனுக்கு நிலைத்து விட்டது. அந்தப் பகுதியில் உள்ள கிளப்புக்கடைகளுக்குத் தண்ணீர் எடுத்து ஊற்றுவான். டேபிள் துடைப்பான். விறகு கொண்டு வந்து போடுவான். சொல்கிற எடுபிடி வேலைகளைச் செய்வான். வீட்டுக்கு விருந்தாட்கள் வந்தால் கடனுக்கு டீ வாங்க அவள் உசேன்பாய் கடைக்குப் போவாள். அங்கே ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பான். டீக்கிளாசுகளைக் கழுவிக்கொண்டோ, அருகில் உள்ள வணிகவளாகங்களில் ஆர்டர் செய்த டீ தூக்கை எடுத்துக்கொண்டோ போய்க்கொண்டிருப்பான். அவன் ஒருபோதும் அவளை ஏறிட்டுக்கூடப் பார்த்ததில்லை. ஆனால் அவள் அவனைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவன் பார்க்கும்வரை பார்த்துக்கொண்டிருந்தாள்.
எந்த பெரிய லட்சியங்களும் இல்லாத கட்டையன் அவளைப் பார்த்ததும் லட்சியவாதியானான். அவளுக்கு வளையல், ரிப்பன், பிளாஸ்டிக் கம்மல்கள் வாங்கிக்கொடுத்தான். கிளப்புக்கடையிலிருந்து பலகாரங்களை தெரிந்தும் தெரியாமலும் கொடுத்தான். எல்லாவற்றையும் விட அவளை ரகசியமாகச் சந்திக்கும் பீக்காட்டில் அவள் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டேயிருந்தான். அவளுடைய வார்த்தைகள் அவனுடைய உடம்பில் வண்ணத்துப்பூச்சிகள் ஊர்வதைப் போல புளகாங்கிதமடைய வைத்தது. மெலிந்து முற்றிய வெண்டைக்காய் போலிருந்த அவளுடைய விரல்களைத் தொட்டபோது அவனுடைய உயிரில் ஒரு கொதிநிலை கூடியது. அவனுடைய கண்களில் பொங்கிய தாபத்தை ரேவதி அவன் விரல்களின் வழியாக உணர்ந்தாள். அவன் அவளுடைய எந்தப்பேச்சுக்கும் மறுப்பு சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவன் வார்த்தைகளை அவளிடமே தொலைத்தவனாக இருந்தான். அவளே அவனுடைய வார்த்தையாக இருந்தாள். அவளுக்கு முன்னால் ஒரு பணிவான வேலைக்காரனைப் போலவே கட்டையன் நடந்து கொண்டான். அவளுக்குக் கர்வமாக இருந்தது. பெருமிதம் அவளுடைய உதடுகளில் ஒரு புன்னகையாகத் தங்கிவிட்டது. எப்படியாவது கட்டையனைப் பிடித்துக்கொண்டு கரையேறிவிட வேண்டும் என்று நினைத்தாள். இனி இந்த நரகத்தில் இருக்க முடியாது. அப்பா படுக்கையில் விழுந்தபிறகு பட்டபாடுகள். நினைக்கும்போதே பயத்தில் நடுங்குகிறது.
அப்பாவின் கண்களுக்கு எதிரே அந்தப் புகைப்படம் தொங்கிக் கொண்டிருந்தது. அந்தப்புகைப்படத்தில் அப்பா, அம்மா, கவுன் போட்ட ஈசுவரியக்கா, கைக்குழந்தையாய் ரேவதி, ஏரோப்பிளேனில் உட்கார்ந்திருப்பதைப்போல கம்பீரமாக உட்கார்ந்திருந்தார்கள். நேஷனல் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டிருந்த புகைப்படம். அப்போது ஊருக்குள் மூன்று இடங்களில் கிளப்புக்கடை நடந்து கொண்டிருந்தது. காந்திமதி கிளப்புக்கடை, முருகன் கிளப்புக்கடை, சுகுணவிலாஸ் கிளப்புக்கடை என்று மூன்று கடைகள் ஓகோவென்று ஓடிக்கொண்டிருந்தது. அப்பா காலையில் ஒரு கடையில், மத்தியானத்தில் ஒரு கடையில், இரவில் ஒரு கடையில் என்று ஓடிக்கொண்டிருந்தார். பணத்தை எண்ணமுடியாமல் அப்படியே துணிப்பைகளில் கட்டி பலநாட்கள் பர்மாத்தேக்கில் செய்யப்பட்ட மிகப்பெரிய பீரோவில் கிடக்கும். கட்டில், நாற்காலி முக்காலி, என்று எல்லாம் பர்மாத்தேக்கில் செய்தது. எல்லாம் புளியங்குளம் மாரியப்பன் ஆசாரியின் கலை.. அப்படி ஒரு வேலைப்பாட்டை அதுக்கப்புறம் எந்த ஆசாரியிடமும் பார்க்கவில்லை என்று அப்பா சொல்லிக்கொண்டிருப்பார். வீடு நிறைய ஆட்கள். சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள், வந்தவர்கள், போனவர்கள், எப்போதும் கூட்டமாய் இருக்கும். பலபேரின் முகம்கூட தெரியாது.
ஊர் மாறியது. புதிதாய் ஹோட்டல்கள் வந்தன. பவன்கள் வந்தன. பழைய கிளப்புக்கடைகள் இப்போது வயதான குமரியாகத் தெரிந்தன. சன்னம் சன்னமாக வியாபாரம் குறைந்தது. அப்பாவின் வைராக்கியம் மீதத்தை அழித்தது. கையில் எதுவும் இல்லாமல் போனபிறகும் கடன்வாங்கி கோவில்பட்டி ரயில்வேஸ்டேஷனில் மரக்கறி உணவகத்தைத் தொடங்கினார். தினசரி இரண்டே இரண்டு பயணிகள் அங்கே டிபன் காசு கொடுத்து வாங்கினார்கள். கடனைக் கட்டமுடியாமல் வீட்டை விற்று முடித்தார். நேருநகரில் ஒரு இடத்தைத் தரைவாடகை பேசி அங்கே ஆஸ்பெஸ்டால் ஷீட்டை வாங்கி ஒரு அறையைக் கட்டினார். அங்கேயும் கூட வாசலில் இட்லிக்குண்டானை வைத்து இட்லி வியாபரம் செய்ய முயற்சித்தார். எப்படியாவது மறுபடியும் காந்திமதி கிளப்புக்கடையைத் தொடங்கிவிடவேண்டும். அது அவருடைய அம்மாவின் பெயரில் தொடங்கப்பட்ட கடை. அதிலிருந்து தான் மற்ற கடைகளை ஆரம்பித்தார். அதனால் மீண்டும் எழுந்து பழைய மாதிரி ஆகி விடலாம் என்று அவர் படுக்கையில் விழும்வரை நினைத்துக்கொண்டிருந்தார். வெளியே சைனீஸ், தந்தூரி, அயிட்டங்கள் எல்லாம் நவநாகரீகப்பெயர்களில் வந்ததை அவர் அறியவில்லை. எல்லாம் போனாலும் அவருடைய கைத்தடி மட்டும் அவரைவிட்டுப் போகவில்லை. அது அவருடைய இன்னொரு கண்ணாக, கையாக, காலாக, இருந்தது.
படுக்கையில் விழுந்தபிறகு ஈசுவரியக்காவைப் பற்றியும், ரேவதியைப் பற்றியும் கவலைப்பட்டார். அவருடைய தங்கை ஒருத்தி திருப்பூரில் இருக்கிறாள். அவளுக்குக் கடிதம் போட்டு வரச்சொன்னாள். ஒண்ணுவிட்ட, இரண்டுவிட்ட என்று தெரிந்த எல்லோருக்கும் கடிதம் போட்டார். ஆனால் யாரும் வரவில்லை. இரவு முழுவதும் மூடிய கண்களிலிருந்து கண்ணீர் வழிய அசைய முடியாமல் கிடந்தார். அவருடைய கைத்தடியில் கண்ணீரின் தடங்கள் விருவோடிக்கிடந்தன. அசையாமல் படுத்துக்கிடந்ததால் படுக்கைப்புண் வந்து விட்டது. ஈசுவரியும் ரேவதியும் அப்பாவைப் பராமரிக்க வம்பாடு பட்டார்கள். ரேவதியின் தீப்பெட்டிக்கம்பெனித்தோழி கூட,
“ பேசாம எண்ணெய் தேய்ச்சுக்குளிப்பாட்டி கோழிக்குழம்பும் வைச்சுக்குடுடி… நிம்மதியா பெருசு போய்ச்சேந்துரும்.. இருந்துகிட்டு சீம்பாடுபடுதாருல்ல.. எங்க ஆச்சியை நாங்க அப்படித்தான் வழியனுப்பி வைச்சோம்..”
என்று சொன்னாள். ஆனால் ரேவதிக்கு அப்படிச் சிறுசலனம் கூட ஏற்படவில்லை. அப்பா அசையாமல் கிடக்கும்போது அவரையே பார்த்துக்கொண்டிருப்பாள். அப்பா நீங்கள் வாழ்க்கையில் தோற்றுவிட்டீர்கள். இந்த இருட்குகையில் எங்களையும் சிறைவைத்து தோல்வியை எங்கள் மீதும் திணிக்கப்பார்க்கிறீர்கள். இல்லை அப்பா. நான் தோற்க மாட்டேன். ஒருநாள் ஒரு பொழுது இந்தக்குகையிலிருந்து நான் தப்பித்து விடுவேன். அப்போதும் எப்போதும் உங்களையே நினைத்துக்கொண்டிருப்பேன். தோற்றவர்கள் மற்றவர்களுக்குப் பாடமாக இருக்கிறார்கள். எப்படித் தோற்றார்கள் என்று அவர்கள் அவர்களுடைய வாழ்வின் மூலம் விளக்குகிறார்கள். எப்படித் தோற்றுவிடக்கூடாதென்று எச்சரிக்கிறார்கள். அந்தவகையில் நான் எந்தநிலைமையிலும் உங்களை மறக்க மாட்டேன். ரேவதியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அதைப்பார்த்துக் கொண்டே வந்த ஈசுவரியக்கா அவளுடைய தலையைக் கோதி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
அவள் எல்லாவற்றுக்கும் தயாராகிவிட்டாள். எல்லாப்பழிபாவங்களுக்கும் மனதைத் தேற்றிக் கொண்டாள். பக்கத்தில் படுத்திருந்த ஈசுவரியக்காவிடமிருந்து மெல்லிய குறட்டைச்சத்தம் வந்தது. ரேவதி மெல்ல எழுந்தாள். அவளுடைய அசைவைப் பார்த்ததும் அப்பாவின் கைத்தடி உஷாரானது. அவள் அங்கணக்குழியில் மூத்திரம் பெய்து தண்ணீர் ஊற்றினாள். இருளோடு இருளாக சில நிமிடங்கள் நின்றாள். வெளியில் அமைதி. சுவர்க்கோழியின் கீச் கீச் கீச் என்ற சத்தத்தைத் தவிர வேறு சத்தம் இல்லை. தூரத்தில் இரண்டுபேர் பேசிக்கொண்டு போனார்கள். காற்றின் ஊதல் குளிர்ந்து வீட்டு ஓட்டைகளின் வழியே உள்ளே வந்தது. கட்டையன் வருவானா? அவன் எப்படிப்பட்டவன்? எதுவும் தெரியாது. இத்தனைக்கும் அவன் அவளைக் கூப்பிடவில்லை. அவள் தான் அவனைக் கூப்பிட்டாள். வேறு ஊரில் போய் கலியாணம் செய்து கொள்ளலாம் என்றாள். அவன் தயக்கத்துடன் தான் சம்மதித்தான். தோற்றுப்போன ஊரில் இருக்கமுடியாது. தோல்வியின் ஞாபகங்கள் கொலைவாளினை விடக் கொடியது. ரணமாய் அறுக்கும். அவள் ஒரு புதிய ஊரில் புதிய வீட்டில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தாள். அவளுக்கு இந்த வாழ்க்கையைத் திகட்டத்திகட்ட வாழவேண்டும். கட்டையன் என்றில்லை. யாருடன் வேண்டுமானாலும் அவள் வாழ்வதற்குத் தயாராக இருந்தாள். வாழ வேண்டும். இதுவரை வாழாத வாழ்க்கையை வாழவேண்டும். மீளமுடியாத புதைசேற்றில் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருப்பதை விட வரப்போவது என்னவென்று தெரியாத ஒரு நாளை எதிர்கொள்ளலாம் என்று நினைத்தாள். அப்பாவின் தோல்வியை அவள் சுமக்க விரும்பவில்லை. ஏன் சுமக்க வேண்டும்? அப்பாவே அந்தச் சுமையிலிருந்து எங்களை விடுவித்திருக்கவேண்டும். பாவம் அப்பா. அவருடைய கைத்தடியின் சமிக்ஞைகளை மீற முடியாதவர். இற்றுப்போயிருந்தாலும் அந்தக் கைத்தடி இல்லாமல் வாழமுடியாதவர்.
இன்னும் மூன்று மணிச்சங்கு ஊதவில்லை. அவள் இருளில் படுக்கையில் உட்கார்ந்தாள். ஓட்டைகளின் வழியே மங்கலாகத் தெரிந்த வெளிச்சப்புள்ளிகளை எண்ணத்தொடங்கினாள். இருபதுக்கும்மேல் எண்ணிக்கை குழம்பியது. கண்களை மூடி மூடி விழித்தாள். உறங்கிவிடக்கூடாது. அப்போது தான் அவள் வாழ்வின் விடியலே போல மில்லிருந்து சங்கு ஊதத்தொடங்கியது. சங்கொலி முடியும்வரை காத்திருந்தாள். ரேவதி ஆணியில் தொங்கிய பிக்‌ஷாப்பர் பையை எடுத்தாள். மெல்ல வாசல் பக்கம் நகரும்போது அப்பாவின் கைத்தடி தவறுதலாகத் தொட்டு விட்டாள். உடனே அது கீழே அவளுடைய கால்களுக்குக் குறுக்கே விழுந்தது. அவள் பொறுமையாக அந்தக்கைத்தடியைக் கையில் எடுத்துக் கொண்டு வாசலைத் தாண்டினாள்.
போகிறவழியில் சாக்கடை இல்லாமலா போகும்?

நன்றி - செம்மலர்


Sunday, 21 July 2019

ஒரு சொட்டு தண்ணீர்


ஒரு சொட்டு தண்ணீர்
உதயசங்கர்

” நிகி! நேரமாயிடுச்சிம்மா சீக்கிரம் பாத்ரூம்லர்ந்து வெளியே வா. கம் குயிக் .”
நிகிதாவின் அம்மா பத்து நிமிடமாகக் கூப்பிட்டுக்கொண்டேயிருந்தார். அதற்கு நிகிதா,
“ வாரேம்மா.. இன்னும் குளிச்சி முடியல.. “
என்று பதில் கொடுத்தாள் நிகிதா. இன்றைக்கு அம்மா அப்பா தம்பி பிரிஜேஷ் நிகிதா எல்லோரும் ரயிலில் திருநெல்வேலி வரை போகிறார்கள். நிகிதாவுக்கும் பிரிஜேஷுக்கும் ஸ்கூல் யூனிபார்ம், பேக், சூஸ், என்று எல்லாம் வாங்கப்போகிறார்கள். ரயிலில் அதிகம் போனதில்லை. எப்போதும் காரில் தான் பயணம். இந்த முறை அப்பா தான் ரயிலில் போகலாம். ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்றார். நிகிதாவுக்கு குளிப்பது என்றால் அப்படி பிடிக்கும். குறைந்தது அரை மணிநேரமாவது பாத்ரூமில் இருப்பாள். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை கூடக் குளிப்பாள். கோடையோ குளிர்காலமோ அவர்களுடைய வீட்டில் தண்ணீர் வற்றாமல் வரும். வீட்டிலுள்ள குழாய்களில் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருக்கும். யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்.
ஒருவழியாக நிகிதா வெளியே வரும்போது எல்லோரும் தயாராக இருந்தார்கள். அவளும் அவசர அவசரமாகப் புறப்பட்டாள்.
ரயில் பயணம் புதிய அநுபவமாக இருந்தது. முதலில் ரயிலின் சத்தம். கடகடா படபடா சடசடா என்று சத்தமே அவளை உற்சாகப்படுத்தியது. தம்பியும் ரயிலைப்போலவே சத்தம் கொடுத்தான். நிகிதா சன்னலுக்கு வெளியே பார்த்தாள். பின்னால் ஓடிக்கொண்டிருந்த தரை.  வீடுகள், செடிகள், கொடிகள், மரங்கள், மனிதர்கள். வெட்டவெளி. பொட்டல் காடு. கடுமையான வெயிலினைத் தாங்க முடியாமல் பாளம் பாளமாக வெடித்துக் கிடந்த கருப்புமண். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த ஒன்றிரண்டு மரங்கள். நிழல் மாதிரி நடமாடும் மனிதர்கள். நிகிதாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. வேறு ஒரு உலகமாக இருந்தது. அவள் உள்ளே திரும்பிப் பார்த்தாள்.
ஒரே பெட்டியில் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி பேசிக்கொண்டே வந்தார்கள். நிறைய வியாபாரிகள் கடலை, வெள்ளரிக்காய், முறுக்கு, சுண்டல், காபி, டீ, போண்டா, வடை, போளி, என்று விதவிதமான தின்பண்டங்களைக் கொண்டு வந்தார்கள். பிரிஜேஷ் அம்மாவிடம் வடை வேண்டும் என்றான். அம்மா வாங்கவில்லை. நிகிதாவுக்கும் போளி சாப்பிட ஆசை இருந்தது. அம்மாவின் முகத்தைப் பார்த்து பேசாமல் இருந்து விட்டாள். ரயில் பெட்டியிலேயே டாய்லெட் இருந்தது. வெளியே ஒரு வாஷ் பேசினும் இருந்தது. விசித்திரமாக இருந்தது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே வந்தாள் நிகிதா.
இப்படி ஒரு உலகம் இருப்பதே அவளுக்குத் தெரியாது. அவள் இருக்கும் நகரத்தில் எல்லாம் நாகரீகம். அவள் படிக்கும் பள்ளிக்கூடம் குளிர்சாதன வசதி கொண்டது. அவளுடைய வீட்டிலும் படுக்கையறைகள் குளிர்சாதன வசதி கொண்டது. .வீட்டில் பள்ளியில் எல்லாம் பாதுகாக்கப்பட்ட ஓசோனைஸ்டு குடிநீர்.  ஆர்கானிக் காய்கறிகள், பழங்கள், ஹைஜீனிக் உணவு. அம்மா எல்லாவற்றிலும் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வார்கள். வீடு விட்டால் பள்ளிக்கூடம். பள்ளிக்கூடம் விட்டால் வீடு என்று அவளுடைய உலகம் மிகவும் சின்னது. இப்போது பார்க்க பார்க்க அவளுக்கு எல்லாம் புதிதாக இருந்தது.
ரயில் ஒரு ஸ்டேஷனில் நின்றது. உடனே வெளியிலிருந்து சத்தம் கேட்டது.
“ நீ அந்தப் பெட்டிக்குப் போ.. பெரிய குடத்தை எடுத்துக்கோ.. வாளியில பிடி… சிந்தாமப்பிடி… “ என்று குரல்கள் கேட்டது. எல்லாப்பெட்டிகளிலும் குடங்கள், பானைகள், வாளிகளை எடுத்துக் கொண்டு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கூட்டம் கூட்டமாக ஏறினார்கள். வாஷ் பேசின், டாய்லெட், என்று நுழைந்து அவர்கள் கொண்டுவந்த குடங்களிலும் வாளிகளிலும் தண்ணீர் பிடித்தார்கள். நிகிதா அங்கும் இங்கும் தண்ணீருக்காக அலைபாய்ந்து கொண்டிருந்த ஆட்களைப் பார்த்தாள். தம்பி பிரிஜேஷ் பயந்து போய் அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டான். அப்போது நிகிதாவை விட சின்னப்பிள்ளையாக இருந்த ஒரு பெண்குழந்தை கையில் சிறிய வாளியில் தண்ணீரைப் பிடித்து குடங்களில் நிறைத்துக் கொண்டிருந்தது. அப்படி நிறைத்த குடத்தை கீழே பிளாட்பார்மில் இருந்தவர்களிடம் கொடுத்துக் கொண்டிருந்தது. அப்படி செய்யும்போதே அந்தக் குழந்தை நிகிதாவைக் கண்கொட்டாமல் பார்த்தது. அவளைப் பார்த்துச் சிரிக்கவும் செய்தது.
நிகிதாவும் சிரித்தாள். அந்தப்பிள்ளை அவளைத் தாண்டிப் போகும்போது,
“ எதுக்கு இந்தத் தண்ணியைப் பிடிக்கிறீங்க..” என்று நிகிதா கேட்டாள். அதற்கு அந்தக்குழந்தை வேகமாக,
“ எங்கூர்ல தண்ணியே கிடையாது.. இந்தத்தண்ணி தான் குடிக்கிறதுக்கு, குளிக்கிறதுக்கு, சமைக்க, எல்லாத்துக்கும்…  நாளைக்கு இந்த வண்டி வர்றவரைக்கும் இதான் எங்களுக்கு.. உன்னோட சட்டை அழகா இருக்கு “ என்று வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே சொல்லி விட்டுப் போனாள். போகும்போது வெளியே வாசல்பக்கம் இருந்த வாஷ்பேசின் குழாயில் நீர் சொட்டிக்கொண்டிருந்தது. உடனே அதை இறுக்கி அடைத்து விட்டுப் போனாள் அந்தக் குழந்தை. ரயில் கிளம்பிவிட்டது. சன்னல் வழியே வெளியே பார்த்தாள் நிகிதா. வரிசையாக குடங்கள், வாளிகள், பானைகள், சின்ன டப்பாக்கள், என்று எல்லாவற்றிலும் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டு நின்றிருந்தார்கள் மக்கள். அவள் அந்தப் பெண்குழந்தையைத் தேடினாள். ரயில் வேகம் எடுத்து விட்டது. அமைதியாக யோசித்துக் கொண்டே வந்தாள்.
மறுநாள் நிகிதா ஐந்து நிமிடத்தில் குளித்தாள். வீட்டிலுள்ள குழாய்களில் தண்ணீர் சொட்டாமல் இறுக மூடினாள். பள்ளியிலும் அவளுடைய நண்பர்களிடம் சொன்னாள். அந்த ரயில் அநுபவத்தை ஒரு கதையாக எழுதினால் எப்படி இருக்கும் என்று யோசித்தாள். இரவில் அவளுடைய நோட்டை எடுத்தாள். நோட்டை விரித்ததும் அந்தப் பெண்குழந்தையின் வெட்கம் கலந்த சிரிப்பு ஞாபகத்துக்கு வந்தது. நீர் சொட்டிக்கொண்டிருந்த குழாய் கண்முன்னே தெரிந்தது. கதைக்கு என்ன தலைப்பு வைக்கலாம்? என்று யோசித்தாள். சிறிது நேரத்துக்குப் பின்னர் நிகிதா எழுதினாள்.
 “ ஒரு சொட்டு தண்ணீர்..”

நன்றி - வண்ணக்கதிர்

Thursday, 18 July 2019

சிட்னி எங்கே?


சிட்னி எங்கே?
பாவ்லா பிக்காசோ
தமிழில் – உதயசங்கர்
சிட்னி ஒரு சிறிய ரெட்டைவால் குருவி. அதனுடைய இறகுகளில் அழகிய நீலநிறம் படர்ந்திருந்தது. அதன் மார்பு வெண்மை நிறத்தில் இருந்தது. எல்லா இரட்டைவால் குருவிகளையும் போல சிட்னியும் உயரே உயரே பறக்கவும் வட்டமடிக்கவும் விரும்பியது.
வசந்த காலத்தில் பிறந்த சிட்னி, கோடைகாலம் நெருங்க நெருங்க பறப்பதில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றது. கோடைகாலம் இலையுதிர்காலமாக மாறிய போது சிட்னி மிகுந்த தைரியமும் துணிச்சலும் கொண்ட பறவையாக மாறிவிட்டது. வானத்தில் மிக லாகவமாகப் பறந்து விளையாடியது. அதனுடைய பெற்றோர்கள் மிகுந்த கவலையுடன்,
“ இன்றுமாலை நாம் அனைவரும் நீண்ட பிரயாணம் போகிறோம். நீ எங்கும் போய்விடாதே..”
“ கவலைப்படாதீர்கள்.. நான் தூரமாய் எங்கும் போக மாட்டேன்..” என்று சிட்னி சொன்னது. தொலைபேசிக்கம்பிகளில் மற்ற இரட்டைவால் குருவிகள் எல்லாம் ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்து கொண்டிருந்தன.
அவர்கள் போகவேண்டிய வழியைப் பற்றிச் சளசளவென்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு இந்தப்பிரயாணம் மிகுந்த மகிழ்ச்சி தருவதாக இருந்தது. திடீரென்று சிட்னியின் கண்களில் ஏதோ தெரிந்தது. அருகிலிருந்த மாடி மீது பளீரென்ற நிறத்தில் ஒரு தும்பி.
ஒரு புகைபோக்கியிலிருந்து மற்றொரு புகைபோக்கிக்குப் பறந்து கொண்டிருந்தது. அப்படி அது பறக்கும்போது சூரியன் தும்பியின் சிறகுகளில் வானவில்லின் அத்தனை நிறங்களையும் அள்ளித்தெளித்து விளையாடினான். சிட்னி அதைக் கவனித்துக் கொண்டிருந்தது. பின்னர் மாடியிலிருந்து கிளம்பி தும்பியை விரட்டியது. தும்பி எப்படியெல்லாம் பறக்கிறதோ அப்படியெல்லாம் பறந்து அதைப் பழிப்புக் காட்ட முயற்சித்தது. ஆனால் ஒரு நொடி அதன் கண்கள் வேறுபக்கம் திரும்பியபொழுதில் தும்பி எங்கோ மறைந்து விட்டது.
“ ஓகோ கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறதா..? “
என்று நினைத்துக் கொண்ட சிட்னி கட்டிடத்தின் தாழ்வாரத்தில் இருக்கிறதா என்று பார்க்க தலைகீழாகப் பாய்ந்து சென்றது.
“ ஒருவேளை அந்தப் புகைபோக்கிக்குழாய்க்குள் ஓளிந்திருக்குமோ..” என்று நினைத்தது. உடனே நீண்ட மூச்சிழுத்து விட்டு தலைகீழாக புகைபோக்கிக்குள் பாய்ந்தது. திடீரென்று எல்லாம் கருப்பாகி விட்டது. சிட்னியின் கண்களில் கரிப்புகை சூழ்ந்து விட்டது. மேகம் போன்ற கனமான புகை வானத்தை நோக்கி புரண்டு எழுந்து வந்து சிட்னியின் வாய்க்குள் போய்விட்டது. ஒரு நொடி அந்த இரட்டைவால் குருவிக்கு மூச்சு விடவே முடியவில்லை. புகைபோக்கியின் பக்கச்சுவர்களில் மோதி அதனுடைய சிறகுகளில் காயம் ஏற்பட்டது. அதற்கு தான் எந்த வழியில் போய்க் கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. இதிலிருந்து வெளியே போகவேண்டுமானால் வெளிச்சம் வரும் திசையை நோக்கிப் பறக்கவேண்டும் என்று உணர்ந்தது. ஒன்றிரண்டு தடவை முயற்சித்தபிறகு ஒரு வழியாக சிட்னி அங்கிருந்து விடுதலையாகி வெளியே வந்தது.
நீண்ட பெருமூச்சு விட்டு சுற்றும் முற்றும் பார்த்தது. திடுக்கிட்டுப்போனது. நினைத்ததை விட பெரிய கஷ்டத்தில் அது மாட்டிக்கொண்டது.. நகரத்திலிருந்த ஏராளமான புகைபோக்கிகளில் வேறு ஏதோ ஒரு புகைபோக்கி வழியே வெளியேறிவிட்டது. அது நகரம் முடிகிற இடம். இதுவரை அந்த இடத்துக்கு சிட்னி வந்ததே இல்லை. அதனால் சிட்னியின் அப்பா, அம்மாவையும் நண்பர்களையும் பார்க்கமுடியவில்லை. வேறு ஏதேனும் இரட்டைவால் குருவிகளைப் பார்க்கலாம் என்றால் அதுவும் முடியவில்லை. சிட்னி காணாமல் போய்விட்டது. சிட்னிக்கு அழுகை அழுகையாக வந்தது.
கண்ணுக்கெட்டிய தூரம்வரை அடுக்குமாடிக்கட்டிடங்களும் தொலைக்காட்சி ஆண்டெனாக்களும் தான் தெரிந்தது. பின்னால் மேகத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி தோன்றியது. சிட்னி அதனிடம் பறந்து சென்றது.
“ நீ வேறு ஏதாச்சும் இரட்டைவால் குருவிகளைப் பார்த்தாயா? “
“ நீ எதற்காக அதைக் கேட்கிறாய்? “
“ நாங்கள் அனைவரும் இன்று இரவு தொலைபேசிக்கம்பிகளில் கூடி வேறு நாட்டுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தோம்…”
என்று விளக்கமாகக் கூறியது. உடனே சிட்டுக்குருவி,
“ நீ இரட்டைவால் குருவி இல்லையே நீ ஒரு காகம்..”
என்று ஏளனமாகச் சிரித்துக்கொண்டே சொல்லி விட்டுப் பறந்து போனது. சிட்னி திடுக்கிட்டது. பின்பு ஒரு கருப்புப்பறவையிடம் போய் எங்காவது இரட்டைவால் குருவிகளைப் பார்த்ததா என்று கேட்டது.
“ கருப்புப்பறவையான நீ ஏன் அதைக் கேட்கிறாய்? “ என்று அந்தக்கருப்புப்பறவை கேட்டது. ஆனால் சிட்னிக்கு அந்தக் கருப்புப்பறவை என்ன சொல்கிறது என்று புரியவில்லை. சிட்னி கவலைப்பட்டது. அதன் பெற்றோர்கள் அது வீடு சென்று சேரும்போது கோபப்படுவார்களே.
அதைவிட மோசம்! ஒருவேளை அவர்கள் அனைவரும் அதனை விட்டு விட்டு பறந்து போயிருந்தால்? சிட்னியால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. பயந்து விட்டது. பறந்து சென்று நிலாவைப் பார்த்து ஆடிக்கொண்டிருந்த ஒரு ஆந்தையின் அருகில் சென்று அமர்ந்தது. உடனே ஆந்தை,
“ யார் நீ..? “ என்று கேட்ட ஆந்தை.
“ உன்னை ஒரு தடவை நன்றாகப்பார்..” என்று கூச்சலிட்டது.
“ நான் நான் ஒரு இரட்டைவால் குருவி..” என்று சிட்னி பதில் அளித்தது.
“ உன்னைப்பார்த்தால்.. நீ காகத்தைப்போலவே இருக்கிறாய்…உன்னுடைய அழகிய நீலநிற வெள்ளைநிற இறகுகள் முழுவதும் கரிப்புகை மூடியிருக்கிறது…” என்று கூறியது ஆந்தை.
பெருங்குழப்பத்தில் மாட்டிக்கொண்டோம். தன்னுடைய குடும்பத்தாரால் கூடத் தன்னை அடையாளம் காணமுடியாது என்று நினைத்தது. துயரத்தோடு பறந்து போய்க்கொண்டிருந்தது அந்தச் சிறிய இரட்டைவால் குருவி. ஒரு குன்றின் உச்சிமீது பறந்தபோது அதற்கு தன்னுடைய பெற்றோரும் நண்பர்களும் இருக்கிற இடம் தெரிந்தது. எங்கே அது பிரிந்து வந்ததோ அதே இடத்திலேயே அவர்கள் பொறுமையாகக் காத்திருந்தார்கள்.
கரிப்புகை இறகுகளோடு இருந்த சிட்னியை அம்மா உடனே அடையாளம் கண்டுகொண்டது. மற்ற இரட்டைவால் குருவிகளும் மகிழ்ச்சியில் கீச்சிட்டன. தங்களுடைய இறகுகளைச் சிலுப்பிப் பிரயாணத்துக்கு தயாராகின.
கடைசியில் சிட்னிக்கு ஏன் இரட்டைவால் குருவிகள் தங்களுடைய நீண்ட பிரயாணத்தைச் சேர்ந்து மேற்கொள்கின்றன என்று புரிந்தது. அந்தக் கணத்திலிருந்து அது எப்போதும் ஒற்றுமையே பாதுகாப்பு என்ற விஷயத்தை மறப்பதே இல்லை.
நன்றி - மாயாபஜார்


Sunday, 14 July 2019

சூசாவின் சாகசம்


சூசாவின் சாகசம்

உதயசங்கர்

மேற்குத்தொடர்ச்சி மலையின் கடைசியில் இருந்த குற்றியாறு காட்டில் ஏராளமான காட்டுப்பன்றிகள் வாழ்ந்தன. பெரிய எதிரிகள் என்று யாரும் கிடையாது. புலி கிடையாது. சிறுத்தை கிடையாது. ஓநாய் கிடையாது. காட்டுநாய் கிடையாது. காட்டுப்பூனை கிடையாது. மலைப்பாம்பு கிடையாது. எனவே காட்டுபன்றிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன.
அந்த மலையில் காட்டுப்பன்றிக்கூட்டத்துக்கான உணவும் தாராளமாகக் கிடைத்தன. புற்களைச் சாப்பிட புல்வெளிகள், சாறும் சுவையும் உள்ள தண்டுகள், தளிர் இலைகள் நிறைந்த செடிகள், இனிப்பான கிழங்குகள் உள்ள வேர்கள், என்று ஏராளமான உணவு இயற்கையில் இருந்தது. எனவே கவலை இல்லாமல் வாழ்ந்தன காட்டுப்பன்றிகள்.
ஒரு காட்டுப்பன்றிக் கூட்டத்துக்கு சூசா என்ற பெண்பன்றி தலைவியாக இருந்தது. சூசா தன்னுடைய கூட்டத்துக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் பத்திரமாகப் பார்த்துக் கொண்டது. ஒவ்வொரு முறையும் ஐந்து அல்லது ஆறு குட்டிகளை சூசா ஈணும். அந்தக்குட்டிகளைக் கண்ணும் கருத்துமாய் வளர்க்கும். அப்படித்தான் போன நவம்பர் மாதம் சூசா குட்டிகளை அழைத்துக்கொண்டு இரை தேடப்போனது. புதரில் அது கட்டியிருந்த விட்டில் இருந்து புறப்படும்போது ஆறு குட்டிகள் இருந்தன. கொஞ்ச தூரம் போனபிறகு பார்த்தால் ஐந்து தான் இருந்தன. சூசா குரல் கொடுத்தது. ம்ஹெஹே என்ற சத்தத்தைக் கேட்டதும் ஐந்துகுட்டிகளும் தாயின் அருகில் ஓடி வந்து நின்றன. ஆனால் ஆறாவது குட்டியைக் காணவில்லை. மீண்டும் மீண்டும் குரல் கொடுத்தது. அன்று சூசா இரவு முழுவதும் தூங்கவில்லை.
மறு நாள் மற்ற குடும்பத்தில் உள்ள தாய்மார்களும் அவர்களுடைய குட்டிகளில் ஒன்றைக் காணோம் என்று சூசாவிடம் வந்து சொன்னார்கள். சூசாவுக்குப் புரியவில்லை. எப்படிக் காணாமல் போகும்? யாராவது புதிய எதிரிகள் வந்திருக்கிறார்களா? என்று மண்டையைப் போட்டு குழப்பிக்கொண்டிருந்தது.
இப்போது குட்டிகளை முன்னால் விட்டு சூசா பின்னால் போனது. கோரைக்கிழங்குச் செடியை வளைந்து நீண்ட தன்னுடைய கோரைப்பல்லால் குனிந்து நோண்டி மண்ணைக் கிளைத்தது. நிமிர்ந்து பார்த்தால் ஐந்தில் ஒரு குட்டியைக் காணவில்லை. சூசா கோபத்தில் கத்தியது. அது கத்தியவுடன் மற்ற காட்டுப்பன்றிகளும் ஓங்கிக் குரல் கொடுத்தன. காடு அதிர்ந்தது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே போகவில்லை. வீட்டுக்கு அருகில் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டு சுற்றிலும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது காற்று திசை மாறியது. மோப்பசக்தியில் கில்லாடியான சூசாவின் மூக்கில் ஒரு வாசனை வந்து மோதியது. அது..அது.. ஒரு புலியின் வாசனை…..
என்னது புலியா? இந்தக்காட்டில் புலியா? சூசாவால் நம்பமுடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. உடனே அருகில் இருந்த அயினி மரத்தில் நின்று கொண்டிருந்த காட்டு அணிலிடம்,
“ டேய் தம்பி உண்மையா இது? “
டபக்கென்று திரும்பி வாலை ஆட்டிய காட்டு அணில்,
“ எது உண்மையா? “
“ அதான் நம்ம காட்டில் புலி இருக்கா? “
“ ஓ அதுவா? எங்கிருந்தோ ஒரு கிழட்டுப்புலி வந்திருக்கு.. அதுக்கு ஓடவும் முடியல.. நிக்கவும் முடியல.. எங்கேயாச்சும் ஓடாமக்கொள்ளாம வேட்டையாடிக்கிட்டு இருக்கு.. ஏன் கேக்கிறே சூசாக்கா? “
சூசா தன்னுடைய குட்டிகள் இரண்டு காணாமல் போனாமல் போன கதையைச் சொன்னது. காட்டு அணிலுக்குப் பாவமாக இருந்தது.
“ பார்த்து பத்திரமா இருங்க சூசாக்கா? “ என்று சொல்லி படக்கென்று திரும்பி வாலை ஆட்டி விட்டு மரத்தில் ஏறியது. சூசா யோசித்தது. அப்படியென்றால் இங்கே தான் அருகில் எங்கேயோ இருக்க வேண்டும் அந்தக்கிழட்டுப்புலி.
இரவில் புதருக்கு அருகில் இருந்த ஆம்பல் குளத்தில் போய் சகதியில் குளித்தது. விடிய விடிய அதிலேயே ஊறிக்கிடந்தது. சூசாவின் உடம்பில் சகதி ஒட்டி ஒட்டி பயங்கரமாக ஆகிவிட்டது. காலையில் அது புதருக்கு வரும்போது நீண்ட அதன் பல்லைத்தவிர சூசாவின் உடல் எங்கும் கருப்பு நிறத்தில் சகதி படிந்து ஒரு புதிய வடிவத்தில் இருந்தது.
சூசாவின் வீட்டுக்கருகில் இருந்த ஒரு பெரிய புதரில் தான் அந்தக்கிழட்டுப்புலியும் இருந்தது. சூசா தைரியத்துடன் அந்தப்புலியின் வாசனையை மோப்பம் பிடித்து அந்தப் புதரில் போய் நின்று கடூரமாய் ஒரு குரல் கொடுத்தது.
“ யாரடா அது என்னோட ஏரியாவில் வந்து வேட்டையாடிக் கிட்டிருக்கறது..”
புதரில் இருந்து வெளியே வந்த புலி சூசாவின் உருவத்தைப் பார்த்து பயந்து போனது. அதோடு சகதியின் நாற்றம் தாங்க முடியவில்லை. மூக்கைப் பொத்திக்கொண்டது.
“ நான் நான் தெரியாம வந்துட்டேன்.. நாளைக்குப் போயிடறேன்.. “
“ என்னது நாளைக்கா? ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா.. உன்னை இப்பவே குத்திக்கிழிச்சி குடலை உருவி காலை டிபனாச்சாப்பிடலை… என் பேரு சாசூ..ஊஊஊ.. இல்லை..”
புலி பயந்து போனது. ஆனால் இடத்தை விட்டு அசைய வில்லை. சூசா இரண்டடி முன்னால் எடுத்து வைத்து கோரைப்பல்லை தரையோடு தேய்த்தது. தரையில் அரையடி ஆழத்துக்குக் கோடு விழுந்தது. அவ்வளவு தான் புலி எடுத்தது ஓட்டம். சூசா விடவில்லை. பின்னாலேயே விரட்டிக்கொண்டு ஓடியது. புலிக்கு பின்னால் துரத்திக்கொண்டு வந்த அந்த பயங்கர மிருகத்தை விட அதனுடைய நாற்றத்தைத் தாங்க முடியவில்லை. தலைகுப்புற விழுந்து ஓடி குற்றியலூர் காட்டை விட்டே மறைந்து போனது. நல்லவேளை. புலி திரும்பிப்பார்க்கவில்லை. சூரியவெளிச்சத்தில் சூசாவின் மீது ஒட்டியிருந்த சகதி எல்லாம் உதிர்ந்து போய் அதன் மாறுவேடம் கலைந்து போயிருந்ததைப் பார்த்திருக்கும்.
சூசாவின் தந்திரம் பலித்து விட்டது. அதன்பிறகு அந்தக்காட்டில் காட்டுப்பன்றிகள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தன.
நன்றி - வண்ணக்கதிர்