கத்தரிக்காய்
குள்ளனும் கழுகுமலை பூதமும்
உதயசங்கர்
ஒரு
ஊரில் ஒரு பாட்டியும் தாத்தாவும் தனியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு எட்டு மக்கமார்
இருந்தாலும் அவர்கள் எல்லாரும் கலியாணம் முடிந்ததும் கிராமத்தை விட்டு நகரத்துக்குப்
போய் விட்டார்கள். அதனால் பெருசுகள் ரெண்டும் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்த்துக்
கொண்டு கிடந்தார்கள். ஒரு காலத்தில் நல்ல கெதியாக நிலபுலன்களோடு இருந்தவர்கள் தான்.
தங்களுடைய பிள்ளைகளுக்காக அந்த நிலபுலன்களையெல்லாம் விற்று அவர்களைப் படிக்க வைத்து
வேலை வாங்கிக்கொடுத்து கலியாணம் முடித்து விட்டார்கள். இப்போது அந்த கிராமத்தில் அல்லுசில்லான
வேலைகளைப் பார்த்துக் கொண்டு அதில் கிடைக்கிற தானிய தெவசங்களை வாங்கி சமைத்துச் சாப்பிட்டுக்
கொண்டு கிடந்தார்கள்.
ஊரிலுள்ள
சொந்தக்காரர்கள் அவர்களைச் சாப்பிடக் கூப்பிட்டாலும் போகமாட்டார்கள். உழைத்துச் சாப்பிட
வேண்டும் என்று நினைத்தார்கள். கூலிக்கு வேலைபார்த்து கிடைப்பதைக் கொண்டு வாழவேண்டும்
என்பதில் உறுதியாக இருந்தார்கள். பாட்டி பயிர்களில் களையெடுப்பாள். அருகு வெட்டுவாள்.
தாத்தா ஏர் ஓட்டுவார். விதை விதைப்பார். இப்படியாக நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தார்கள்.
ஒரு
நாள் தாத்தாவுக்கு ஒரு ஆசை வந்தது. கத்தரிக்காய் குழம்பு வைத்து சாப்பிடவேண்டும். ஒரு
வாரமாகக் கம்பங்கூழே சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்குச் செத்துப் போச்சு. நெல்லுச்சோறு
பொங்கி கத்தரிக்காய் காரக்குழம்பு வைத்து ஒரு மொக்கு மொக்கவேண்டும் என்று நினைத்தார்.
பாட்டியிடம் சொன்னார். பாட்டிக்கும் ஆசை வந்து விட்டது. அடுக்குப்பானையில் கொஞ்சம்
நாட்டுச்சம்பா அரிசி கிடந்தது. இரண்டு பேருக்கும் அது போதும். கத்தரிக்காய் வேண்டுமே.
ஊருக்கு வடகடைசியில் அவர்களுடைய பங்காளி வீட்டுத் தோட்டத்தில் கத்தரிக்காய் போட்டிருந்தார்கள்.
மறுநாள்
பாட்டி அந்தத் தோட்டத்துக்குப் போய் பங்காளி வீட்டுக்காரர்களிடம் குசலம் விசாரித்து
விட்டு அப்படியே ஒரு பத்து பிஞ்சு கத்தரிக்காய்களைப் பறித்து மடியில் கட்டிக்கொண்டு
வந்தாள். கத்தரிக்காய்களை ஒரு ஏனத்தில் எடுத்து வைத்து விட்டு வீட்டுக்கு வந்து விறகு
அடுப்பில் தாத்தா பொறுக்கிக்கொண்டு வந்திருந்த காய்ந்த சுள்ளிகளை வைத்து சோறு பொங்கினாள்.
சோறு பொங்கிக்கொண்டே கத்தரிக்காய்களை நறுக்கி வைக்க எடுத்தாள். பத்து கத்தரிக்காய்களுக்கு
ஒன்பது கத்தரிக்காய்கள் தான் இருந்தது. பாட்டி மடிச்சேலையை உதறிப் பார்த்தாள். வீடு
முழுவதும் தேடிப்பார்த்தாள். அவளுக்கே சந்தேகம் வந்து விட்டது. தான் பறித்து வந்தது
பத்தா? ஒன்பதா?
அப்போது
அடுப்புக்குப் பின்னாலிருந்து அய்யய்யோ சுடுதே அப்பப்பா சுடுதே என்று சத்தம் வந்தது.
பாட்டி அடுப்புக்குப் பின்னல் பார்த்தாள். அங்கே ஒரு கத்தரிக்காய் சூடு தாங்காமல் குதித்துக்
கொண்டிருந்தது. பாட்டி அந்த கத்தரிக்காயை எடுத்து குளிர்ந்த தண்ணீரில் போட்டாள். கத்தரிக்காய்
அதில் நீச்சலடித்துக்கொண்டு மிதந்தது. பாட்டி எல்லாக்கத்தரிக்காய்களையும் நறுக்க எடுக்கும்போது
அந்தக் கத்தரிக்காய் மட்டும்,
“
பாட்டியம்மா பாட்டியம்மா
பாசமுள்ள
பாட்டியம்மா
அண்ணனுக்கு
அண்ணனாக
தம்பிக்குத்
தம்பியாக
மகனுக்கு
மகனாக
பேரனுக்குப்
பேரனாக
உங்க
கூட நானிருப்பேன்
என்னை
மட்டும் நறுக்காதீங்க
பாட்டியம்மா
பாட்டியம்மா
என்று
பாட்டுப்பாடியது. அதைக்கேட்ட பாட்டியும் பதிலுக்குப் பாடினாள்.
குட்டிக்குட்டிக்
கத்தரிக்கா
குள்ளக்குள்ளக்
கத்தரிக்கா
தண்ணீ
எடுக்கணும்
தவிடு
பொடைக்கணும்
களை
எடுக்கணும்
விதை
விதைக்கணும்
விறகு
பொறுக்கணும்
வீட்டு
வேலை எல்லாத்தையும்
வேளாவேளைக்குச்
செய்யணும்
என்று
பதில் பாட்டுப்பாடினாள். கத்தரிக்காய் குள்ளனுக்கு மகிழ்ச்சி.
இட்டவேலை
தட்டமாட்டேன் பாட்டியம்மா
இன்று
முதல் நான் உனக்குப் பேரனம்மா
என்று
சொல்லி வேலை பார்க்க ஆரம்பித்து விட்டது. பாட்டி நாள் முழுவதும் பூனாம்பூனாம் என்று
செய்கிற வேலைகளையெல்லாம் கத்தரிக்காய் குள்ளன் அஞ்சு நொடியில் செய்து முடித்தான். வேலை
முடிஞ்சதும் ஊர்சுற்றிப்பார்க்கக் கிளம்பி விடுவான்.
அப்போது பக்கத்து கிராமத்தில் உள்ள கழுகுமலையில் கழுகின்
தலையுடனும் பிரம்மாண்டமான இறக்கைகளுடனும் ஒரு பூதம் வாழ்ந்து வந்தது. அந்த பூதம் அங்கிருந்த
குழந்தைகளையெல்லாம் தூக்கிக் கொண்டு போய் விட்டது என்று மக்கள் புலம்பினார்கள். அந்த பூதத்தைப் பார்த்ததுமே குழந்தைகள் வசியமாகி
அப்படியே பின்னாலேயே போய் விடுகிறார்கள் என்றும் அதன்பிறகு அந்தக்குழந்தைகள் அந்த பூதத்துக்கு
அடிமைகளாகவே வாழவேண்டியது தான் என்று அந்த ஊர்க்காரர்கள் சொன்னார்கள். கத்தரிக்காய்
குள்ளனுக்குப் பாவமாக இருந்தது. அந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தான்.
மறுநாள்
தாத்தா பாட்டியிடம், ஒரு நெல், ஒரு புல், ஒரு கல், வேண்டும் என்று கேட்டான் கத்தரிக்காய்
குள்ளன். தாத்தாவும் பாட்டியும் அவன் கேட்டதைக் கொடுத்தார்கள். எல்லாவற்றையும் தன்
மடியில் கட்டிக்கொண்டு புறப்பட்டான்.
போகும்வழியில்
ஒரு தீ எறும்பு வந்தது. அது கத்தரிக்காய் குள்ளனைப் பார்த்து,
“
எனக்கு ரொம்பப்பசியா இருக்கு.. எனக்கு அந்த நெல்லைத் தருகிறாயா? “ என்று கேட்டது. உடனே
கத்தரிக்காய் குள்ளன் அவனிடமிருந்த நெல்லைக் கொடுத்தான். அதைச்சாப்பிட்டா தீ எறும்பு,
“
நண்பா! நான் தீ எறும்புகளின் ராஜா… நல்ல நேரத்தில் நீ எனக்கு உணவளித்தாய்.. நீ எங்கு
எப்போது நினைக்கிறாயோ அப்போது நான் அங்கு அப்போது வருவேன்..”
என்றது.
கத்திரிக்காய் குள்ளனும் சரி என்று சொல்லிவிட்டு கழுகுமலை பூதத்தைத் தேடி நடந்தான்.
அப்போது ஒரு வெட்டுக்கிளி குறுக்கே வந்தது.
“
நண்பா! நீ வைத்திருக்கும் புல்லைத் தரமுடியுமா? நான் சாப்பிட்டு ரெண்டு நாட்களாகிறது..
” என்றது. உடனே கொஞ்சமும் யோசிக்காமல் கத்தரிக்காய் குள்ளன் அந்தப்புல்லை எடுத்துக்
கொடுத்தான். அதைச்சாப்பிட்ட வெட்டுக்கிளி,
“
நன்றி நண்பா! நீ எப்போது என்னை நினைத்தாலும் நான் அங்கு வருவேன்..” என்று சொன்னது.
கத்தரிக்காய் குள்ளனும் சரி என்று சொல்லிவிடு கழுகுமலை பூதம் இருக்கும் மலையில் ஏறினான்.
கழுகுமலையின் உச்சியில் கழுகு வடிவத்தில் ஒரு கோட்டை இருந்தது. அந்தக் கோட்டையைச் சுற்றி
காவலுக்கு நூறு கழுகுகள் வட்டமிட்டு சுற்றிக் கொண்டிருந்தன. என்ன செய்வது? என்று யோசித்தான்
கத்தரிக்காய் குள்ளன். அப்போது ஒரு மலை எலி வந்தது.
“
நண்பா! உன்னிடமிருக்கும் கல்லைக் கொடுக்க முடியுமா? என்னுடைய வளையில் குட்டிகளுக்குப்
பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறேன்.. “ என்றது. உடனே கத்தரிக்காய் குள்ளன் சரி என்று கொடுத்து
விட்டான்.
“
நன்றி நண்பா.. உனக்கு என்ன உதவி வேண்டும் என்று சொல்.. நான் செய்கிறேன்..” என்று கேட்டது
மலை எலி.
“
நான் கழுகுகளின் கண்களில் படாமல் கழுகுமலைக்கோட்டைக்குள் போகவேண்டும்… அதற்கு உதவி
செய்வாயா? “ என்று கேட்டான் கத்தரிக்காய் குள்ளன்.
உடனே
அந்த மலை எலி ஒன்றும் சொல்லாமல் வளைக்குள் சென்றது. பின்னர் திரும்பி வந்து கத்தரிக்காய்
குள்ளனுக்கு முன்னால் செத்தமாதிரி விழுந்தது. பார்த்தால் அங்கங்கே எலிகள் செத்தமாதிரி
கிடந்தன. அதைப் பார்த்த கோட்டையைக் காவல் காத்துக்கொண்டிருந்த நூறு கழுகுகளும் அந்த எலிகளைச் சாப்பிடப் பறந்து வந்தன. அதுதான்
சமயம் என்று கத்தரிக்காய் குள்ளன் கோட்டைக்குள் நுழைந்து விட்டான். கத்தரிக்காய் குள்ளன்
கோட்டைக்குள் நுழைந்துதும் மலை எலி ஒரு சத்தம் கொடுத்தது. உடனே எல்லா எலிகளும் அருகிலிருந்த
வளைக்குள் ஓடி ஒளிந்து கொண்டன. பறந்து வந்த கழுகுகள் ஏமாந்து போய் விட்டன.
கோட்டைக்குள்
நுழைந்த கத்தரிக்காய் குள்ளன் கழுகுமலை பூதம் எங்கே இருக்கிறது என்று தேடினான். அப்போது
ஒரு இடத்தில் குழந்தைகள் கூட்டமாய் இருந்தார்கள். அவர்களுக்கு முன் கழுகுமலை பூதம்
உட்கார்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அவனுடைய பேச்சைக்கேட்டு குழந்தைகள் சிரித்தார்கள்.
அழுதார்கள். அப்படிப் பேசிக்கொண்டே அவன் அவர்கள் ஒவ்வொருவராக தூக்கிச் சாப்பிட்டான்.
குழந்தைகள் சிரித்துக் கொண்டே அவனுடைய வாய்க்குள் போனார்கள். கத்தரிக்காய் குள்ளனுக்குக்
கோபம் வந்தது. அவன் கழுகுமலை பூதத்துக்கு முன்னால் போய் நின்றான்.
“
ஏ பூதமே! குழந்தைகளை உடனே விடுதலை செய்! இல்லையென்றால் உன்னை அழித்து விடுவேன்..” என்றான்
கத்தரிக்காய் குள்ளன். அவனைப் பார்த்த பூதம் ஏளனமாகச் சிரித்துக்கொண்டே,
“ டேய் குள்ளப்பயலே! நீயாவது என்னை அழிப்பதாவது.. ஒவ்வொரு குழந்தையாகச் சாப்பிட்டு
இந்த உலகத்தில் குழந்தைகளே இல்லாமல் செய்து விடுவேன்.. ஏனென்றால் குழந்தைகள் தான் அன்பையும்
நட்பையும் பாசத்தையும் நேசத்தையும் விதைக்கிறார்கள்.. அவர்கள் இல்லையென்றால் பெரியவர்கள் போட்டி பொறாமை
வஞ்சகம் என்று சண்டை போட்டுக் கொண்டு வாழ்வார்கள்.. அதுதான் எனக்கு வேண்டும் நான் சுலபமாக
இந்த உலகத்தை ஆண்டுகொள்வேன்… ஏகச்சக்கரவர்த்தியாகஇருப்பேன்.. ஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹா..” என்று
கோட்டை அதிரச் சிரித்தான் கழுகுமலை பூதம்.
கத்தரிக்காய்
குள்ளன் உடனே தீ எறும்புகளை நினைத்தான். தீ எறும்புகள் அந்தக் கோட்டையின் சுவர் இடுக்குகளின்
வழியே படை படையாக வந்தன. அப்படியே கழுகுமலை பூதத்தின் கண்காது மூக்கு வாய் என்று எல்லாவழிகளிலும்
லட்சக்கணக்கில் நுழைந்தன. கழுகுமலைப்பூதம் அலறினான். அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
“
ஐய்யோ எரியுதே ஐய்யோ எரியுதே.. ” என்று கத்தினான். அவனுடைய உடல் ஓட்டை ஓட்டையாகி உடைந்தது.
உள்ளேயிருந்து அவன் சாப்பிட்ட குழந்தைகள் எல்லாரும் நலமுடன் வந்தார்கள். ஆனாலும் கழுகுமலை
பூதம் சாகவில்லை. அப்போது கத்தரிக்காய் குள்ளன் வெட்டுக்கிளிகளை நினைத்தான். உடனே வெட்டுகிளிகள்
கூட்டம் கூட்டமாக பறந்து வந்தன. அவை எல்லாம் சேர்ந்து கழுகுமலை பூதத்தின் உடலைத் தூக்கிக்
கொண்டு போய் கடலில் போட்டன. கடலில் இருந்த திமிங்கிலங்கள் பூதத்தைக்கிழித்து தின்றன.
கத்தரிக்காய்
குள்ளன் குழந்தைகள் படைசூழ கிராமத்துக்குத் திரும்பினான். பாட்டியும் தாத்தாவும் நாட்டு
மக்களும் குழந்தைகளும் கத்தரிக்காய் குள்ளனை உச்சி மோந்து பாராட்டினார்கள்.
உலகில்
அன்பும் பாசமும் நேசமும் நட்பும் தழைத்தோங்கியது.
நன்றி - வண்ணக்கதிர்