Tuesday 26 May 2020

ஒரு சமரின் பாடல் – மணல் நாவலை முன்வைத்து


ஒரு சமரின் பாடல் – மணல் நாவலை முன்வைத்து
உதயசங்கர்

கடந்துபோன வரலாற்றை இதிகாச புராணங்களை புனைவின் சிகரத்தில் நின்று மீண்டும் கட்டியெழுப்பும்போது எழுத்தாளர்களுக்கு அதை ஏன் எழுதவேண்டும் என்று எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் அதில் இருக்கும் உண்மைத்தன்மையைக் கூட எழுத்தாளர்கள் தங்கள் நோக்கிற்கேற்ப வளைத்துக் கொள்ள முடியும். மீண்டும் பழைய சநாதனக்கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் புனிதமென கட்டியெழுப்பவும் முடியும் அல்லது பழையனவெல்லாம் மதிப்புமிக்கவையென்றும் நிலைநாட்டமுடியும். அவற்றை வாசகர்கள் கொண்டாடவும் செய்வார்கள். ஏனெனில் அந்தப் படைப்புகள் வாசகர்களிடம் எந்தத் தொந்திரவையும் ஏற்படுத்தப்போவதில்லை. மனிதமனதின் பழமைபோற்றும் ( நோஸ்டால்ஜியா ) அறியாமைக்குத் தீனி போடவும் செய்யும். முன்னாடியெல்லாம் நன்றாகத்தான் இருந்தது என்ற மயிலிறகுபுளகிதத்தை உருவாக்கவும் முடியும். கெடுவாய்ப்பாக பழைய காலத்தின் பாடல்களெல்லாம் மன்னர்களைப்பற்றி உயர்குலவள்ளல்களைப் பற்றி மட்டும் தான் என்பதை மறந்து விடச்செய்யமுடியும். சாமானியர்களின் வாழ்வாதாரப்பேரோலத்தைக் கூட ஆரவாரக்கூச்சலில் அமிழ்ந்து போகச் செய்கிற காலத்தில் ஒரு படைப்பு சமகால அரசியலைப் பேசுகிறது.
சமகால அரசியல் என்றால் கட்சிகளின் அரசியலல்ல. மக்கள் வாழ்வின் அரசியல். இயற்கையின் அரசியல், சுயநலத்தின் அரசியல், தியாகத்தின் அரசியல், காதலின் அரசியல், சாதியின் அரசியல், பெண்ணரசியல், ஆவணங்களின் அரசியல், என்று உண்மையான அரசியலைப் பேசுகிற ஒரு நாவலாக மணல் வெளிவந்திருக்கிறது. தமிழிலக்கியத்தின் பல்வேறு வகைமைகளான கவிதை, சிறுகதை, நாவல், உரைநடையிலும் அரசியல்களம், பேச்சாளர், என்று எல்லாப்பரப்பிலும் காத்திரமான பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கும், இளையோர்களுக்கு இன்றும் வழிகாட்டியாகத் திகழும் பா.செயப்பிரகாசம் எழுதி வெளிவந்த நாவலான மணல் பல காரணங்களால் காலத்தின் முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
மணல் என்ற எளிமையான தலைப்பே அதன் கதையையும் அரசியலையும் சொல்லிவிடும். இயற்கையின் சமீபத்திய படைப்பான மனிதன் எப்படி தன்னுடைய சுயநல உறுபசிக்கு பெற்ற அன்னையைப் பிய்த்துத் தின்கிறான். உலகெங்கும் உள்ள இயற்கையின் அடிப்படை ஆதாரங்களை அழிப்பதில் மனிதன் எவ்வளவு வேகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறான். முதலாளிகளின் கொள்ளைலாபவேட்டைக் களமாக மக்களின் உழைப்பு மட்டுமல்ல, இயற்கையின் மார்பில் ரத்தம்வரும்வரை உறிஞ்சிக்குடிக்கிற வெறித்தனத்தைப் பேசுகிற படைப்புகள் தமிழில் மிகக்குறைவு. மணல் அந்தக் குறைவை நிறைவு செய்ய முயற்சிக்கிறது.
அம்மன் கோவில்பட்டி, வேடபட்டி, ஆத்தாங்கரை, விளாத்திகுளம், போன்ற கிராமங்களின் உயிர்நாடியாக ஓடிக்கொண்டிருக்கும் வைப்பாற்றின் கதையாக மணல் விரிகிறது. ஒரு ஆறு தோன்றி தன் பாதையை உருவாக்கிக்கொள்ள ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகிறது. மனிதநாகரீகத்தின் சாட்சியமாக விளங்குகிற அந்த ஆற்றின் மணல்துகள் ஒவ்வொன்றிலும் வரலாற்றின் பல பக்கங்கள் எழுதப்பட்டிருக்கும். ஆறு ஓடும் பாதையெங்கும் உள்ள கிராமங்களின் முத்துலாபுரம் ஆறு, ஆத்தாங்கரை ஆறு, விளாத்திகுளம் ஆறு, என்று பெயர்களைச் சூடிக்கொள்ளும் வைப்பாறு விவசாயம், குடிநீர் ஆதாரமாக விளங்கிக் கொண்டிருந்தது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் காட்டாறான வைப்பாறு வெள்ளைத்தங்கமான மணல் திருட்டால் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக இறந்து போவதைச் சொல்லும் கதை மணல். அரசியல்வாதிகளாலும் முதலாளிகளாலும், அதிகாரிகளாலும் சூழ்ச்சிக்குப் பலியாகி அதன் ஆயிரமாண்டு வாழ்க்கை பத்து ஆண்டுகளுக்குள் முடிந்து போவதைச் சொல்கிற கதை மணல்.  
செண்பகமும் பால்வண்ணனும் சேர்ந்து மேடும்பள்ளமுமாக சிதைந்த முகத்தோடு காணாமல்போன வைப்பாற்றைத் தேடிச்செல்கிறார்கள். வயதின் ரேகை படியாத துரைக்கண்ணுவின் மூலம் இந்தப்பயண வரலாற்றுக்கதை தொடங்குகிறது. இந்த வரலாற்றுக்குள் துரைக்கண்ணுவோடு வேறுபாடின்றி ஒன்றாய் பழகிய நல்லவரான ஆத்தங்கரை ஜமீன் தேவேந்திரன் வருகிறார். அம்மன் கோயில்பட்டி துரைக்கண்ணுவைச் சந்தித்தால் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம் என்கிறார். துரைக்கண்ணு மணல் சுரண்டல்வரலாற்றை மட்டும் சொல்லவில்லை. மனித உறவுகளையும், போராட்டங்களையும் சொல்கிறார். அவருக்கும் கனகவள்ளிக்குமான காதலின் கனிவு கவிதையாகத் தொடர்கிறது. அதிலிருந்து துவங்குகிறது மணல் அள்ளுவதற்கு எதிரான போராட்டவரலாறு. விவசாயிகள் ஒற்றுமை முன்னணி தோழர்களான செல்வராசு, காளி, கனகராசு, சேதுராகவன், மாறன், என்று முன்னணிப்படைவீரர்கள் முன்நின்று மக்களை ஒன்றிணைக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் முகங்கள் கிழிபடுகின்றன. அதிகாரிகளின் சுயநலம் வெளிப்படுகிறது. முதலில் அறிந்தும் அறியாமலும் நடந்த மணல்கொள்ளை பின்னர் அரசு உத்திரவோடு அதிகாரப்பூர்வமாக நடந்தது தான் வைப்பாற்றுக்கு நிகழ்ந்த சோகம்.
நாவலில் வரலாறு முந்தினநாளுக்கும் இன்றைய நாளுக்கும் முந்திய வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும், அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னாலும் பின்னாலும் ஊஞ்சலாடிக் கொண்டேயிருக்கிறது. அந்த ஊஞ்சலில் இசைச்சாகரமான விளாத்திகுளம் சாமிகள் என்ற நல்லப்பசுவாமிகள் வருகிறார். அவருடைய காலத்திலேயே துறைவழியே போவோரை நின்று கேட்டுப்போகச்செய்யும் இசையைப் பாடிய துணிவெளுக்கும் தொழிலாளியான குருசாமியைப் பற்றியும் குறிப்பு வருகிறது. அந்த ஊஞ்சலில் தான் மாறன் பாண்டியம்மாவின் காதல் வளர்கிறது. மாறனின் போராட்டகுணத்தை அவனைக் கொல்வதின் மூலம் வீழ்த்துகிறார்கள் மணல்வியாபாரிகள். சிங்கிலிபட்டி மக்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து ஆற்றைப் பங்குபோடுகிற மணல் வியாபாரிகளும் ஊஞ்சலில் ஆடுகிறார்கள். நல்லது செய்ய நினைத்தாலும் அரசியல்நெருக்கடிகளால் இக்கட்டில் மாட்டிக்கொள்கிற கலெக்டர்களும்கூட முன்பின்னாடும் காலஊஞ்சலில் ஏறிவருகிறார்கள்..
சாதிமீறிய காதலாக மாறனும் பாண்டியம்மாளும் தங்கள் காதலைப்பாடும் தருணங்களின் கவித்துவமும் வருகிறது ஊஞ்சலில். அதேபோல. சாதி ஆணவப்படுகொலைகளாக கொம்பன்பகடையும், வள்ளியும், கொடூரமான சாட்சிகளாக வருகிறார்கள். அதில் உயர்சாதி வள்ளி தெய்வமாக, கொம்பன்பகடை இன்னமும் ஓடைக்காட்டிலேயே காத்துக் கொண்டிருக்கிற கதையும் ஊஞ்சலாடுகிறது. செல்லத்தாயிக்கும் வேல்ராசுவுக்கும் மெல்ல முகிழ்க்கும் காதலின் இதழ்களை மணல்வியாபாரிகள் குவாரிப்பள்ளம் தன் கொடுங்கரங்களால் நசுக்குகிற சோகமும் ஆடுகிறது. வஞ்சகத்தின் வரலாறாக நீலமேகம் குவாரிக்காரர்களுக்கு ஏஜெண்டாக ஒன்றுபட்ட மக்களின் ஒற்றுமையைப் பிரித்தாள்கிற வரலாறும் ஊஞ்சலில் ஆடுகிறது.
நாவல்நெடுக அசலான கரிசல் கிராமத்து மனிதர்களின் கரிசல் வழக்காறு, சொலவடைகள், கதை, கேலி, கிண்டல், ஏகடியம் கோபம், தாவரங்கள்,என்று வாழ்க்கையின் துடிதுடிப்பு மழைக்கால வைப்பாறாக ஓடுகிறது.. மக்கள் போராட்டங்களின் வீச்சும் அதை அடக்க, திசைதிருப்ப,, மடைமாற்ற, அரசும், அதிகாரவர்க்கமும் செய்கிற மாய்மாலங்களும் கூட விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பா.செயப்பிரகாசத்தின் தனித்துவமான பாதையில் வாசிப்பதற்கு சுவாரசியமாகவும், நிறைய அர்த்தங்களை உட்பொதிந்ததாகவும் நாவலின் மொழிநடை அமைந்திருப்பது சிறப்பானது.
மணல் நாவல் பேசும் சுற்றுச்சூழல் அரசியல் மிக முக்கியமானது. அதைக் கலையாக மாற்றி தமிழின் முக்கியமான நாவலாக எழுதியிருப்பதில் பா.செயப்பிரகாசம் வெற்றி பெற்றிருக்கிறார். நாவலில் வரும் இன்னாசிக்கிழவரின் ரேகையின் குரலில் பா.செ. சொல்கிறார்.
பூமி மனிதர்களுக்குச் சொந்தமானதில்லை.. மனிதன் தான் பூமிக்குச் சொந்தமானவன்
இதுதான் மணல் நாவலை வாசித்து முடிக்கும்போது ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் செய்தி. அதுதான் நாவலின் வெற்றி.
நன்றி – தமிழ் இந்து

மணல் - நாவல்
பா.செயப்பிரகாசம்
வெளியீடு - நூல்வனம்
எம்.22, ஆறாவது அவினியூ
அழகாபுரி நகர்
ராமாபுரம்
சென்னை-89
தொடர்புக்கு- 9176549991


.


1 comment:

  1. சமகால மக்களின் அரசியலைப் பேசும் படைப்பை, அதன் ஒவ்வொரு கூறுகளையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது தங்கள் அறிமுகம். சாமானியர்களின் வாழ்வை ஒரு பொருட்டாகவே கருதாத புராணங்களை புனிதப்படுத்தும் புனைவுகளை கொண்டாடும் வகையில் மக்களின் ரசனை மாற்றியமைக்கப்படுவதையும் சாமானியர்களின் வாழ்வாதாரப்பேரோலத்தைக் கூட ஆரவாரக்கூச்சலில் அமிழ்ந்து போகச் செய்கிற தற்கால நிலையையும் போகிற போக்கில் சுட்டிக்காட்டியது அருமை.

    ReplyDelete