Wednesday, 1 April 2020

குட்டிப்பாப்பாவும் பச்சோந்தியும்


குட்டிப்பாப்பாவும் பச்சோந்தியும்


உதயசங்கர்

குட்டிப்பாப்பாவுக்குத் தலையே வெடித்து விடும் போல இருந்தது. அவள் மண்டைக்குள் ஏராளமான கேள்விகள் முளைத்துக் கொண்டேயிருந்தன. ஒரு கேள்விக்கு விடை தெரிவதற்குள் பத்து கேள்விகள் எட்டி எட்டிப் பார்த்தன. பாவம் குட்டிப்பாப்பா! என்ன செய்வாள்? ஒவ்வொன்றாகத் தானே தெரிந்து கொள்ள முடியும்?
அவளுடைய கேள்விகளுக்கு அம்மாவும் அப்பாவும் மட்டும் தான் பொறுமையாகப் பதில் சொன்னார்கள். பள்ளிக்கூடத்தில் டீச்சரிடம் எந்தக் கேள்வி கேட்டாலும்
“ ஷட் அப்! சைலன்ஸ்! “ தான். குட்டிப்பாப்பாவுக்கு டீச்சரைப் பிடித்திருந்தாலும் ஷட் அப்பையும், சைலன்ஸையும் பிடிக்கவில்லை. சாப்பிடாமல் கூட இருந்து விடுவாள். ஆனால் அவளால் பேசாமல் இருக்கமுடியாது. எப்படி முடியும்? அவள் வாயை மூட நினைத்தாலும் வார்த்தைகள் அவள் வாயை முட்டிக் கொண்டு அருவி மாதிரி கொட்டுகிறதே! அம்மா கூட சமயங்களில் “ வாய் வலிக்கலையா குட்டிப்பாப்பா? கொஞ்சநேரம் பேசாம இரியேன்..” என்பார். சரி என்று வாயை மூடுவாள் குட்டிப்பாப்பா. அதற்குள் நூறு கேள்விகள் குட்டிப்பாப்பாவின் வாயிலிருந்து குதித்து ஓடத் தயாராக இருக்கும். அவளுக்கு தோன்றுகிற கேள்விகளை எல்லாம் உடனே கேட்டு விடவேண்டும். இல்லையென்றால் அவ்வளவுதான்.
சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்ததும் அம்மா கொடுத்த பாலைக் குடித்தாள். வாயின் இரண்டு பக்கத்திலும் பால் கோடாய் வழிந்தது. அம்மா அவளுடைய வாய் ரொம்பப்பெரிசு, அவளுடைய ஆச்சி மாதிரி என்று செல்லமாய் சொல்லுவாள். குட்டிப்பாப்பாவுக்கு ஆச்சியை ரொம்பப்பிடிக்கும். யாருக்காவது ஆச்சியைப் பிடிக்காமல் இருக்குமா? அதனால் வாயின் ஓரமாக வழிந்த பால்கோடுகளை துடைக்காமல் பின்னால் தோட்டத்துக்கு ஓடினாள்.
அப்பாவும் அம்மாவும் தோட்டத்தில் ஏராளமான செடி, கொடி, மரங்களை, வளர்த்தார்கள். அங்கே போனதும் குட்டிப்பாப்பா துப்பறியும் நிபுணராகி விடுவாள். ஒவ்வொரு அங்குலமாக ஆராய்ச்சி செய்வாள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய விஷயங்களைக் கண்டு பிடிப்பாள். மெல்ல வெயில் குறைய ஆரம்பித்தது. மாமரத்தின் கீழே போய் நின்றாள் குட்டிப்பாப்பா. அப்போது எங்கிருந்தோ வேகமாக ஓடி வந்த பச்சோந்தி அவளைப் பார்த்து திகைத்து நின்று விட்டது. முதுகைத்தூக்கி ஆட்டியது. தலையிலிருந்து வால்வரை நீண்ட செதில்களை சிலிர்த்தது. இரண்டு முட்டைக்கண்களை உருட்டி முழித்தது. அது மட்டுமில்லாமல் சிவப்பு நிறத்துக்கு மாறிவிட்டது. குட்டிப்பாப்பாவா பயப்படுவாள்? அவள் தைரியசாலியில்லையா? அவளுடைய அப்பா அடிக்கடி அப்படித்தான் குட்டிப்பாப்பாவைப் பாராட்டுவார். குட்டிப்பாப்பா பச்சோந்தியைப் பார்த்து,
“ ஐய்.. சிவப்பாயிட்டே.. “ என்று கைதட்டியவள் பச்சோந்தி அசையாமலிருக்கவே, “ ஏய்.. பச்சோந்தித்தம்பி! என்ன விஷயம்? ஏன் முறைக்கிறே? “ என்று இடுப்பில் கைவைத்துக்கொண்டு கேட்டாள். முதுகைத்தூக்கி ஆடிக்கொண்டிருந்த பச்சோந்தி மெல்ல தரையோடு பதுங்கி,
“ ஒண்ணுமில்லை.. மாமரத்துல நாலைஞ்சு கட்டெறும்பு போறதைப் பார்த்தேன்.. நாக்கை நீட்டி சுழட்டி உள்ளே வீசுனா ராத்திரி பசியில்லாம தூங்கலாம்.. அதுக்குத் தான் வேகமா ஓடி வந்தேன்..” என்று சொல்லி முடித்ததும் அப்படியே மஞ்சள் நிறமாகி விட்டது. குட்டிப்பாப்பாவுக்கு ஆச்சரியம்!
“ ஐய் மஞ்சள்! நீ எப்படி கலர் கலரா மாறுறே? நீ ஏன் எறும்பு, பூச்சி,ன்னு சாப்பிடுறே.. இலை, தழைன்னு சாப்பிடாம?..” என்று பச்சோந்தியிடம் கேள்வி கேட்டாள் குட்டிப்பாப்பா. பச்சோந்தி சற்றே நிமிர்ந்து,
“ உனக்குத் தெரியாதது ஒண்ணுமில்ல..குட்டிப்பாப்பா.. நான் என் நிறத்தை மாத்திக்கிறதுக்குக் காரணம் என் தோலுக்கடியில் இருக்கிற நிறமிகளால தான்.. மத்தவுங்களுக்கு சில செய்திகளைச் சொல்றதுக்காக நான் நிறம் மாறிக்கிட்டேயிருப்பேன்..
அப்புறம்.. நான் ஏன் எறும்புகளைச் சாப்பிடுறேன்.. அதானே குட்டிப்பாப்பா.. எறும்பு, பூச்சிகளைக் கட்டுப்படுத்தலன்னா அவ்வளவு தான் உலகமே எறும்பு புத்தாயிரும்.. அதான்.. இயற்கையன்னை எங்களுக்கு இந்த வேலையைக் கொடுத்திருக்காங்க.. அடடா கட்டெறும்பு என்ன ருசி தெரியுமா? வேணுமின்னா நீ ரெண்டு சாப்பிட்டுப்பார்க்கிறியா? “
என்று சொன்னது. அப்படிச் சொல்லிக்கொண்டே பிங்க் நிறத்தில் மாறிவிட்டது. ஆச்சரியத்துடன் அதைப் பார்த்துக் கொண்டே குட்டிப்பாப்பா யோசித்தாள். அவளுக்கு அப்போதுதான் எறும்புகள் பெருகினால் என்னாகும்? என்ற எண்ணம் தோன்றியது. வீட்டில் தினசரி ஆயிரக்கணக்கான சித்தெறும்பு, கருப்பெறும்பு, கட்டெறும்பு, கடுத்தவாலி எறும்பு, என்று நிறைய அலைந்து கொண்டிருக்கும். சமயங்களில் குட்டிப்பாப்பாவையும் கடித்து விடும். அப்போது குட்டிப்பாப்பா அந்த எறும்புகளை நசுக்கி விடுவாள். ஆனால் ஓணான்கள் சாப்பிடுவதற்கு இதுதான் காரணம் என்று இன்று தான் தெரிந்து கொண்டாள். இப்போது பச்சை நிறத்தில் நின்ற பச்சோந்தியிடம்,
“ ஓ அப்படியா? சரி.. எனக்கு இன்னொரு சந்தேகம் இருக்கு.. அதுக்குப் பதில் சொல்லிட்டு நீ மாமரத்தில ஏறிக்கோ..” என்றாள் குட்டிப்பாப்பா.
குட்டிப்பாப்பா என்ன கேட்கப்போகிறாளோ என்று அவளையே இரண்டு கண்களாலும் பார்த்தது  அப்போது கருப்பு நிறத்தில் மாறிய பச்சோந்தி குட்டிப்பாப்பா,
“ ராமாயணத்துல நீ ராமருக்கு தண்ணித்தாகம் தவிச்சப்ப மூத்திரத்தைக் குடிக்கக்கொடுத்தியாமே அதான் ராமர் சாபம் விட்டுட்டாரு… அதான் பிள்ளைக எல்லாம் உன்னயப் பார்த்தவுடனே கல்லெடுத்து எறியிறாங்கன்னு விஜய் சொன்னானே.. அப்படியா? “
என்று கேட்டதும் பச்சோந்தி சோகமாக அப்படியே உட்கார்ந்தது. சாம்பல் நிறத்தில் அதன் உடல் மாறிவிட்டது. பின்னர், மெல்லிய குரலில்,
“ குட்டிப்பாப்பா.. ராமாயணமே பலபேர் எழுதின கதை.. ராமரே ஒரு கற்பனையான மனிதர்.... எங்களப்பிடிக்காத யாரோ கட்டிவிட்ட கதைதான் ராமருக்கு தாகம் எடுத்தபோது தண்ணிக்குப் பதில் மூத்திரம் கொடுத்தோம்னு சொல்றது…”
“ உண்மையாவா? “ என்று பாதி நம்பிக்கையுடனும் பாதி சந்தேகத்துடனும் கேட்டாள் குட்டிப்பாப்பா.
“ நாங்க யார் வம்புக்கும் போகமாட்டோம்..பயந்தகுணம் எங்களுக்கு டைனோசர் காலத்துலருந்தே நாங்க இந்த பூமியில வாழ்ந்துக்கிட்டுருக்கோம்.. பூச்சிகளைக் கட்டுப்படுத்த மரம் செடிகொடியில இருப்போம்.. தரையிலே பள்ளம் தோண்டி முட்டையிடுவோம்… அதோட எங்களுக்கு மூத்திரமே வராது..  என்ன தான் நாங்க நெறத்த மாத்துனாலும் பசங்க எங்களப் பிடிச்சு சித்திரவதை பண்றாங்க.. அதுக்கு இந்தக் கதையைச் சொல்றாங்க.. என்ன தான் கதைன்னாலும் கொஞ்சம் இயற்கையைத் தெரிஞ்சிருக்க வேண்டாமா? குட்டிப்பாப்பா..”
அழுகிற குரலில் ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஓணான் சொன்னதைக் கேட்ட குட்டிப்பாப்பாவுக்கு வருத்தமாகி விட்டது.
“ இன்னிக்கு உங்கிட்டருந்து முக்கியமான விஷயத்தைத் தெரிஞ்சிகிட்டேன்.. தம்பி. நான் என் ஃபிரண்ஸ்கிட்ட சொல்றேன்… சரி.. சரி.. உன்வேலையைப் பாரு.. நான் போய் படிக்கப்போறேன்..” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனாள் குட்டிப்பாப்பா.
“ என்ன இன்னும் படிக்க ஆரம்பிக்கலையா? “ என்று அம்மா கேட்டுக் கொண்டே அடுக்களையிலிருந்து வந்தாள். ஹாலில் குட்டிப்பாப்பா படித்துக் கொண்டிருந்தாள். அம்மாவைப் பார்த்ததும், “ அம்மா இன்னக்கி நான் இரண்டு விஷயங்களைத் தெரிஞ்சிகிட்டேன்..” என்றாள்.
“ என்னடா செல்லம்? “
“ பச்சோந்தி ஏழு வண்ணத்திலேயும் நிறம் மாறும்..”
” சரி.. அப்புறம்..” அம்மா நாடியில் கையில் கைவைத்து ஆச்சரியப்படுகிறமாதிரி கேட்டாள்.
“ ராமாயணம் ஒரு கதை….ராமர் ஒரு கற்பனை…”
“ யாரும்மா சொன்னா? “
“ பச்சோந்தித்தம்பி..”
“ ஓ.. அவனா “
நம்பியது மாதிரியும் நம்பாதது மாதிரியும் அம்மா குட்டிப்பாப்பாவைப் பெருமையுடன் பார்த்துச் சிரித்தாள். குட்டிப்பாப்பாவின் உதடுகளில் புன்னகை பூத்தது.

Tuesday, 31 March 2020

பறவைகள் பலவிதம்


பறவைகள் பலவிதம்

உதயசங்கர்

குட்டிப்பாப்பா காலையில் சீக்கிரம் எழுந்து விடுவாள். இல்லையில்லை. தோட்டத்திலிருந்து கூவும் புள்ளிக்குயில் தான் எழுப்பிவிடும். கூக்கூகூகூகூ குக்கூகூ என்ற சத்தத்தைக் கேட்டு துள்ளிக்குதித்து எழுந்து விடுவாள். இது ஒரு பழக்கம். எப்போது தூங்கி எழுந்தாலும் துள்ளிக்குதித்து எழுந்திரிப்பது குட்டிப்பாப்பாவுக்கு வழக்கம். அதே மாதிரி எழும்போதே சிரித்துக் கொண்டே எழுந்திரிப்பாள். இப்போதும் அப்படித்தான் குயிலின் குரலைக் கேட்டதும் சிரித்துக்கொண்டே எழுந்த குட்டிப்பாப்பா
“ அடடா அதுக்குள்ளே விடிஞ்சிருச்சா..இரு இதோ வாரேன்.. “ என்று சொல்லியபடியே எழுந்து வீட்டின் பின்னால் இருக்கும் தோட்டத்துக்குப் போனாள். மாமரத்திலிருந்து தான் குயிலின் சத்தம் கேட்கும். ஆனால் இது வரை குட்டிப்பாப்பா அதை முழுசா பார்த்ததில்லை. வாலைப் பார்த்திருக்கிறாள். சிறகுகளைப் பார்த்திருக்கிறாள். அது இலைகளுக்கு நடுவில் ஒளிந்துகொள்ளும். குட்டிப்பாப்பாவைப் பார்க்க வெட்கப்பட்டு ஒளிந்து கொள்கிறதோ. குட்டிப்பாப்பா க்ளுக் என்று சிரித்தாள்.
குயில் கூவும்போதே ஒரு காகத்தின் குரல் கேட்டது.
” கா காகா கா காக்க்கா….” உடனே இன்னொரு காகத்தின் குரல் கேட்டது. அதைத்தொடர்ந்து மற்றொரு காகத்தின் குரல்.. இப்போது நாலைந்து காகங்கள் சேர்ந்து கத்தின. குட்டிப்பாப்பாவின் அப்பா சொல்லியிருக்கிறார். காலையில் எழுந்தவுடன் காகங்கள் எல்லாம் வரிசையாக உட்கார்ந்து காக்காப்பள்ளிக்கூடம் நடத்தும். அவளுடய பள்ளிக்கூடத்திலும் வனிதா மிஸ் சொல்லுவதை பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து கோரசாகச் சொல்லுவார்கள். குட்டிப்பாப்பாவுக்கு வேடிக்கையாக இருந்தது. காக்காவைப் பார்த்து தான் பள்ளிக்கூடம் வந்திருக்குமோ? உடனே அதை அப்பாவிடம் சொல்லவேண்டும். குட்டிப்பாப்பா என்ன சொன்னாலும் அப்பா அவளைப் பாராட்டுவார். அப்பா நல்ல அப்பா.
” கீச் கீச் கீச் கீச் க்கீச் க்க்கீச்கீச்ச்ச்ச்“ ஒரே சத்தம். குட்டிப்பாப்பா திரும்பிப்பார்த்தாள். வேப்பமரத்திலிருந்து கூட்டமாய் தவிட்டுக்குருவிகள் கீழே இறங்கின. ஈரமாக இருந்த மண்ணைக் கிளறி புழுக்களைத் தேடின. ரொம்ப கோபக்காரக்குருவிகள். எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும். கிக்க்கீச் க்கீச்ச் ஐயோ மறுபடியும் சண்டை ஆரம்பித்து விட்டது.
“ எப்பயும் சண்டை போட்டுகிட்டிருக்கீங்களே உங்களுக்குப் போரடிக்கலையா? “ என்று அவற்றை கண்டித்தாள் குட்டிப்பாப்பா. திரும்பும்போது அவளுடைய கண்ணில் செம்பருத்திச்செடிக்குக் கீழே ஓடிக் கொண்டிருந்த வாய்க்காலில் செம்பழுப்பு நிறத்தில் ஏதோ தெரிந்தது. அவள் மெல்ல அடியெடுத்து வைத்துப் பின்னால் போனாள்.
அங்கே ஒரு செம்போத்து வாய்க்காலில் இரை தேடிக்கொண்டிருந்தது. என்ன அழகு! அது நிமிர்ந்து பார்த்தபோது கண்கள் ரத்தச்சிவப்பாக இருந்தன. குட்டிப்பாப்பாவுக்கு பயமாக இருந்தன. ஆனால் பாவம் செம்போத்து. குட்டிப்பாப்பாவின் காலடிச்சத்தம் கேட்டதுமே சடசடவென பறந்து போய் விட்டது. இன்னும் மெதுவாக வந்திருக்கவேண்டும் என்று குட்டிப்பாப்பா நினைத்துக் கொண்டாள்.
செம்பருத்திப்பூவில் விர்ர்ர்ர்ரென சிறகுகள் அடிக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். குட்டியாய் கருநீல நிறத்தில் இரண்டு தேன்சிட்டுகள் செம்பருத்திப்பூவுக்குள் தங்களுடைய நீண்ட அலகுகளை நுழைத்து தேன் குடித்துக் கொண்டிருந்தன. அவள் கண்கொட்டாமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதே மாதிரி இன்னொரு சத்தம் பக்கத்திலிருந்த தேக்கு மரத்திலும் கேட்டது. இது யார்றாது? குட்டிப்பாப்பா அண்ணாந்து பார்த்தாள். அட! தையல் சிட்டு. தேக்கிலையை ஒரு பொட்டலம் மாதிரி சுருட்டி தைத்துக் கொண்டிருந்தது. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
சிவப்புக்கொண்டைக் குருவி ட்ட்வீக் ட்ட்வீக் ட்வீக் என்று சத்தம் கொடுத்து தான் இருப்பதைச் சொன்னது. குட்டிப்பாப்பா தினம் அதைப் பார்த்து விடுவாள். அதுவும் அவளைப் பார்த்து “ இன்னிக்கும் வந்துட்டியா? “ என்று கேட்கும். குட்டிப்பாப்பா ஆமாம் என்று தலையாட்டுவாள்.
நாலைந்து சிட்டுக்குருவிகள் தரையில் அங்குமிங்கும் தாவித் தாவிக் குதித்துக் கொண்டிருந்தன. க்யா கிய்ய் க்யா கிய்ய் என்று கோழிக்குஞ்சுகளைப் போலவே சத்தமிட்டுக்கொண்டு திரிந்தன.
உடனே குட்டிப்பாப்பாவுக்கு கோழிக்குஞ்சுகளின் ஞாபகம் வந்து விட்டது. தோட்டத்துமூலையில் வைத்திருந்த கோழிக்கூண்டைத் திறந்து விட்டாள். அம்மாக்கோழியும் ஐந்து கோழிக்குஞ்சுகளும் வெளியே வந்தன. கருப்புவெள்ளைப் புள்ளிகளுடன் அம்மாக்கோழி கெக்க்கேக்க்கே என்று கேறிக் கொண்டு குஞ்சுகளைக் கவனமாகப் பார்த்தது. செவலைக்குஞ்சு, கருப்புக்குஞ்சு,வெள்ளைக்குஞ்சு, கரும்புள்ளிக்குஞ்சு, செம்புள்ளிக்குஞ்சு எல்லாம் அம்மாவின் ஒவ்வொரு சத்தத்தையும் கவனித்து அதற்கு ஏற்றபடி நடந்து கொண்டன. சமர்த்துக்குஞ்சுகள்! குட்டிப்பாப்பா மாதிரி! குட்டிப்பாப்பா அவளை அவளே பாராட்டிக் கொண்டாள். உடனே ஒரு கர்வம் முகத்தில் வந்து விட்டது. அருகில் இருந்த பஞ்சாரத்தைத் திறந்து சேவலைத் திறந்து விட்டாள். வண்ணவண்ணமாய் இற்குகளும் சிவப்பு நிறத்தில் பூக்கொண்டையும், தாடியும் வைத்திருந்த அந்தச் சேவல் வெளியே வந்ததும் கொக்கரக்கோ கோ என்று கொக்கரித்தது.
அட அசடு! விடிந்து ரொம்ப நேரமாயிருச்சு தெரியலையா உனக்கு? என்று செல்லமாய் கோபித்தாள் குட்டிப்பாப்பா. இன்னொரு முறை கூவலாமா என்று நினைத்த கொண்டைச்சேவல் குட்டிப்பாப்பாவின் முகத்தைப் பார்த்ததும் தலையைக் குனிந்து கொண்டு இரை தேட நடைபோட்டது.
நம் வீட்டில் எத்தனை பறவைகள்! என்று ஆச்சரியப்பட்டாள். இன்று அவள் பார்த்த பறவைகளைப் பற்றி அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்லவேண்டும் என்று நினைத்தாள். அவளுக்கு பறந்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. இறக்கைகளைப் போல கைகளை விரித்து வேகமாக வீட்டுக்குள் ஓடினாள்.
“ ஸ்கூலுக்கு நேரமாகலையா? “ என்று அம்மாவின் சத்தம் கேட்டது.
“ நான் பறந்து போயிருவேன்..” என்று குட்டிப்பாப்பா சிரித்துக் கொண்டே சொன்னாள்.



Monday, 30 March 2020

அஞ்சு வண்ணம்


அஞ்சு வண்ணம்

உதயசங்கர்

குட்டிப்பாப்பாவுக்கு வானத்தில் பறக்கவேண்டும். யோசித்தாள். என்ன செய்யலாம்? யாரிடமாவது கேட்டால் என்ன? வீட்டின் பின்புறம் போனாள். அங்கே இருந்த மாமரத்தில் உட்கார்ந்திருந்த கிளியிடம் கேட்டாள்.
‘ கிளியக்கா கிளியக்கா எனக்குப் பறக்கணும்.. அதுக்கு ஒரு வழி சொல்லேன்..’
‘ கீ கீ கீ கிக்கீ குட்டிப்பாப்பா நீ பறக்கணும்னா நீ தான் முயற்சிக்கணும்.. வேணுமின்னா நான் என்னோட ஒரு இறகைத் தாரேன்..’
என்று சொல்லி விட்டு தன்னுடைய சிறகிலிருந்து நீளமான ஒரு பச்சை நிற இறகை எடுத்து குட்டிப்பாப்பாவிடம் கொடுத்தது.
குட்டிப்பாப்பா கிளி கொடுத்த பச்சை இறகைப் பார்த்துக் கொண்டே அருகில் இருந்த வேப்பமரத்திற்குப் போனாள்.  வேப்பமரத்தில் உட்கார்ந்து தலையைச் சாய்த்து குட்டிப்பாப்பாவை குர்ரென்று பார்த்துக் கொண்டிருந்த காகத்திடம் கேட்டாள்,
‘ காக்கையண்ணே காக்கையண்ணே.. எனக்குப் பறக்கணும்.. அதுக்கு ஒரு வழி சொல்லேன்..’
‘ கா கா கா க்ர்ர் எனக்குத் தெரியாது பாப்பா வேணும்னா நான் என்னோட இறகு ஒண்ணு தாரேன்…’ என்று சொல்லி தன்னுடைய சிறகிலிருந்து ஒரு இறகை எடுத்து குட்டிப்பாப்பாவிடம் கொடுத்தது.
குட்டிப்பாப்பா தோட்டத்தில் வேலிக்கு அருகில் இருந்த இலந்தை மரப்புதரில் தன்னுடைய சிவந்த கண்களை உருட்டி உருட்டிப் பார்த்துக்கொண்டிருந்த செம்போத்து பறவையிடம் போனாள்.
‘ செம்போத்தே செம்போத்தே நான் பறப்பதற்கு ஒரு வழி சொல்லேன்..’
‘ கூ கூகூகூ எனக்குத் தெரியாது.. வேணும்னா நான் ஒரு இறகைத் தாரேன்..’ என்று சொல்லி தன் சிறகிலிருந்து ஒரு சிவப்பு இறகை எடுத்து கொடுத்தது.
குட்டிப்பாப்பா தோட்டத்தில் பறந்து கொண்டிருந்த மைனாவைப் பார்த்து கை தட்டினாள். மைனா உடனே குட்டிப்பாப்பாவின் முன்னால் இறங்கியது. உடனே குட்டிபாப்பா,
‘ மைனா.. மைனா.. எனக்கு பறக்கணும் ஒரு வழி சொல்லேன்..’
என்று கேட்டாள். மைனா குட்டிப்பாப்பாவைப் பார்த்தது.
‘ கீ க்வ் க்ளவ்.. கீச் கீச் அய்ய்ய்யோ அதெல்லாம் எனக்குத் தெரியாதுப்பா.. வேணும்னா என்னோட சிறகு ஒண்ணு தாரேன்..’
என்று சொல்லி அதன் சிறகிலிருந்து வெள்ளை இறகை எடுத்துக் கொடுத்தது… குட்டிபாப்பா குப்பையில் மேய்ந்து கொண்டிருந்த கொண்டைச்சேவலின் அருகில் போனாள். சேவல் அவளைக் கவனிக்காமல் குனிந்து இரை எடுத்துக் கொண்டிருந்தது. குட்டிப்பாப்பா கொக்கரக்கோ என்று கத்தினாள். கோபத்துடன் நிமிர்ந்து பார்த்த சேவல், அங்கே குட்டிப்பாப்பாவைப் பார்த்ததும் சாந்தமானது. ஏனென்றால் குட்டிப்பாப்பா தான் அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டிலிருந்து ஒரு குத்து அரிசியை எடுத்துக் கொண்டு வந்து சேவலின் குடும்பத்துக்குப் போடுவாள். அவளிடம் கோபப்பட முடியுமா?
‘ க்கொ க்கோ என்ன குட்டிப்பாப்பா ? ‘
‘ சேவல் மாமா சேவல் மாமா எனக்குப் பறக்கணும்.. ஒரு வழி சொல்லேன்..’
‘ எனக்கே கூரைக்கு மேலே பறக்க முடியாது… எங்கிட்டே கேக்கிறீயே.. வேணும்னா என்னோட வாலிலிருந்து ஒரு இறகைத் தாரேன்…’ என்று சொல்லி வாலில் இருந்து பலவண்ண இறகை எடுத்துக் கொடுத்தது.
குட்டிப்பாப்பா கையில் ஐந்து இறகுகள் இருந்தன. கிளியின் பச்சைச்சிறகு, காகத்தின் கருப்புச் சிறகு, மைனாவின் வெள்ளைச் சிறகு, செம்போத்தின் சிவப்பு இறகு, சேவலின் கருஞ்சிவப்பு இறகு. எல்லா இறகுகளையும் ஒரு நூலில் கட்டினாள் குட்டிப்பாப்பா. அதை முதுகில் கட்டிக் கொண்டு,
‘ நான் பறக்கிறேன்… நான் பறக்கிறேன்.. ‘ என்று மகிழ்ச்சியாகக் கூவிக் கொண்டு தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி ஓடினாள். கிளியும், காகமும், செம்போத்தும், மைனாவும், சேவலும் அதைப் பார்த்து சிறகுகளடித்து கூவின.