Saturday 19 June 2021

இப்போதும் இடைசெவலில் இருக்கிறார் கி.ரா.

 


இப்போதும் இடைசெவலில் இருக்கிறார் கி.ரா.

உதயசங்கர்

எப்போதையும் விட இந்த வருடம் கரிசல்க்காட்டில் வெயில் அதிகம். வானத்தில் மேகங்களில்லை. நீலவானம் தகதகத்தது. நின்று பொழிந்தது வெயில். இதில் ஆச்சரியப்படுதவற்கு ஏதுமில்லை. எப்போதும் அடிவானவிளிம்புவரை கானல் நதிகள் ஓடிக்கொண்டிருக்க விருவுகளோடிய தன் மானாவாரிப்பிஞ்சையில் தன்னந்தனியனாய் நின்று ஓரேர் போட்டு உழுதுகொண்டோ, களையெடுத்துக் கொண்டோ, விதை மூட்டையிலிருந்து விதைகளை எடுத்து கடவாப்பெட்டியில் போட்டுக்கொண்டோ, அடிக்கடி வானத்தைப் பார்த்து மந்திரம் பொல் சொற்களை வீசிக்கொண்டோ ஒரு விவசாயி வேலை செய்து கொண்டிருக்கிறார். மழை வருமா என்று அவருக்குத் தெரியாது. மண்நனையுமா என்று தெரியாது. விதை முளைக்குமா என்று தெரியாது. வெள்ளாமை கிடைக்குமா என்று தெரியாது. வெள்ளாமை வீடு வந்து சேருமா என்று தெரியாது. தான் பட்ட கடன்களையெல்லாம் அந்த வெள்ளாமை தீர்த்துவிடுமா என்று தெரியாது. எத்தனையோ ஆண்டுகள் மழை பொய்த்திருக்கிறது. ஒரு பொக்கு கூட விளையாமல் காடு ஏமாற்றியிருக்கிறது. ஆனால் அவர் ஒருபோதும் நம்பிக்கையிழக்கவில்லை. மீண்டும் மீண்டும் விருவுகளோடி கன்னங்கரேலென்று பெருமூச்சுகளை தீயென வெளியே விட்டுக்கொண்டிருக்கும் தன் நிலத்தை உழுது வைக்கிறார். விதை விதைக்கிறார். விளைச்சலுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். நம்பிக்கையுடன். கரிசல் சம்சாரியின் வாழ்க்கையின் ஒருதுளி சாராம்சமே ஒரு பெருங்கடலாக விரிகிறது. அந்தக்கடலிலே முக்குளித்து அள்ள அள்ள தீராமல் தொன்னூற்றியொன்பது வயது வரை எழுதிக்கொண்டேயிருந்த கி.ரா. என்னும் மாபெரும் கதைசொல்லியின் விரல்கள் ஓய்வெடுத்துக் கொண்டன. 

கரிசல் இலக்கியத்தின் கதாசூரியன் மறைந்து விட்டார்.

கி.ரா. என்ற எழுத்தாளரின் பிறப்பு

கி.ரா. என்ற கி.ராஜநாராயணன் என்ற ராயங்கலம் ஸ்ரீகிருஷ்ண ராஜ நாராயணப்பெருமாள் ராமானுஜன் இடைசெவலில் 1922 ஆம் ஆண்டு பிறந்தபோது அந்த ஊர் அறிந்திருக்கவாய்ப்பில்லை. இப்படியொரு பெருமையைக் கொண்டு வந்து சேர்க்கப்போகிறது இந்தக்குழந்தை என்று யாருக்கும் தெரியாது. ஏன் கி.ராஜாநாராயணனுக்கே தெரியாது. காசநோயினால் அவதிப்பட்ட பாலியகாலமும் பள்ளிக்கூடத்துக்கு மழைக்கு ஒதுங்கிய கால்களும் மழையை வேடிக்கை பார்த்த கண்களுமாய் வாழத்துடித்துக் கொண்டிருந்த கி.ரா. ஏழாம் வகுப்புக்கு மேல் போகவில்லை. பக்கத்து வீட்டுக்காரனான கு.அழகிரிசாமி உயிர்ச்சிநேகிதனாகி கி.ராவை ஆற்றுப்படுத்தினான். காசநோய் உச்சத்திலிருந்த சமயம் நாட்களையோ, மாதங்களையோ கெடு வைத்து விட்டுப்போன வைத்தியரையும் வாசலிலேயே தயாராக நின்று கொண்டிருந்த மரணத்தையும் எப்படியோ கண்ணாமூச்சி விளையாடி ஏமாற்றி வளர்ந்து வாலிபத்துக்கு வந்தார் கி.ரா.

நண்பர்கள் இருவருக்கும் சங்கீதப்பைத்தியம். சங்கீதவித்துவான் குருமலை பொன்னுச்சாமிப்பிள்ளையிடம் வாய்ப்பாட்டு படித்தார்கள். இசைஞானசாகரம் விளாத்திகுளம் சுவாமிகளைத் தேடிப்போனார்கள். காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரத்திலும் சாத்தூர் பிச்சைக்குட்டியின் இசையிலும் மயங்கிக்கிடந்தார்கள். சிறந்ததொரு சங்கீதக்காரனாகி விடவேண்டும் என்பதே கி.ரா.வின் லட்சியமாக இருந்தது. நண்பர்கள் இருவரும் இசையின் நுட்பங்களை இடைசெவலின் காடுகரையெங்கும் விதைத்துக் கொண்டே அலைந்து திரிந்தார்கள். இசைத்தாகமும், பழந்தமிழிலக்கிய மோகமும் திருநெல்வேலியில் வட்டத்தொட்டி என்ற இலக்கிய அமைப்பை நடத்திக்கொண்டிருந்த ரசிகமணி டி.கே.சிதம்பரநாதமுதலியாரிடம் கொண்டு சேர்த்தது. ரசிகமணி கி.ரா. கு.அழகிரிசாமி இருவர் மீதும் பெருமதிப்பு கொண்டிருந்தார்.

1940 –களில் எட்டக்காபட்டி முத்துச்சாமி என்ற ஆங்கிலம் தெரிந்த  எளிய விவசாயித்தோழர் தான் கி.ரா.வுக்கும் அழகிரிசாமிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாசிக்கக்கொடுத்திருக்கிறார். ஆண்டன் செகாவை வாசிக்கக் கொடுத்திருக்கிறார். டால்ஸ்டாயை அறிமுகப்படுத்தியிருக்க்றார். மாக்சிம்கார்க்கியை வாசிக்கச்சொல்லியிருக்கிறார். சோவியத் இலக்கியங்களையும் வாசிக்கக்கொடுத்தார்.  அவற்றை வாசித்து முடித்தபோது நண்பர்கள் இருவரும் கம்யூனிஸ்டுகளாக மாறியிருந்தார்கள். இடைசெவலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக கு.அழகிரிசாமி சிறிது காலம் பொறுப்பேற்றிருந்தார். விவசாயிகள் சங்கத்தின் செயலாளராக கி.ரா. பொறுப்பேற்றிருந்தார். 1943 –ல் குடும்பச்சூழல் காரணமாக கு.அழகிரிசாமி சென்னை சென்றுவிட தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும், விவசாயிகள் சங்கத்திலும் பணியாற்றினார். கட்சி தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் கி.ரா. இடைசெவலில் கம்யூனிஸ்ட் கொடியேற்றினார்.

இன்னொருகாட்சி கூட நடந்தது. தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் கோவில்பட்டியில் மே தின ஊர்வலத்தை நடத்திக்காட்டியிருக்கிறார்கள் இடைசெவல் மக்கள். கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் ஒரு ஐம்பது அறுபதுபேர் கடைகளில் சாமான்கள் வாங்குவது போல ஒதுங்கி நின்றிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சமிக்ஞையில் அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி மார்க்கெட் சாலையில் மே தினக்கோஷங்களை முழங்கிக்கொண்டு ஊர்வலமாகப் போய் சட்டெனக் கலைந்து போனார்கள். தகவலறிந்து வந்து போலீசாருக்கு எதுவும் புரியவில்லை.

விவசாயிகள் சங்கத்தின் பலபோராட்டங்களை கோவில்பட்டியில் முன்னின்று நடத்தியிருக்கிறார் கி.ரா. அதனால் தான் 1949 –ல் காங்கிரஸ் அரசு இரண்டாவது முறையாக நெல்லைச்சதி வழக்கை போட்டு அதில் நல்லகண்ணு, ஏ.நல்லசிவன், ஆர்.எஸ்.ஜேக்கப், போன்ற தலைவர்களுடன் கி.ரா.வையும் சேர்த்து வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். தகவலறிந்த டி.கே.சி. அப்போதைய காங்கிரஸ் முதலமைச்சரான ஓமந்தூராரிடம் அந்தப்பையன் எழுத்தாளரப்பா..என்று சொல்லி அவரை வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறார். 1964 – ஆம் ஆண்டுவரை இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த கி.ரா. கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவைத் தாங்கமுடியாமல் கட்சியிலிருந்து விலகினாரென்றாலும் இறுதிவரை அவர் இடதுசாரியாகவே வாழ்ந்தார்.

கி.ரா. எழுத்தாளரான கதை

போன நூற்றாண்டின் துவக்கத்தில் தான் நவீன இலக்கியவடிவங்கள் ஒவ்வொன்றாய் தமிழில் அறிமுகமாகத் தொடங்கின. 1916 –ல் தமிழின் முதல் நவீனச்சிறுகதை வ.வே.சு. ஐயரால் எழுதப்பட்டது. ந.பிச்சமூர்த்தியால் 1950 –களில் புதுக்கவிதை தொடங்கப்பட்டது. ஏற்கனவே நாவல் இலக்கியம் 1876-ல் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருந்தது. மார்க்சீயத்தின் தாக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் இந்திய, தமிழிலக்கியத்திலும் ஒரு புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியது. சாமானியர்கள் கதாநாயகர்களானார்கள். நவீன வாழ்க்கையின் சிக்கல்கள் புதிய பாடு பொருட்களாயின. அரசர்களை, வள்ளல்களை, கடவுளரைப் பாடும் நிலப்பிரபுத்துவ இலக்கியமதிப்பீடுகள் சரிந்தன. முதலாளித்துவம் புதிய நவீன மனிதனை உருவாக்கியது. உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி சாதனங்களுக்குமிடையே புதிய உறவு உண்டானது. உற்பத்தியும், உழைப்பும் கூலியும் சுரண்டலும் பிரதானமாயின. அதனால் உற்பத்தி உறவுகள் புதிதாக மாறின. ஆண்டான் அடிமை என்ற உறவு மாறியது. அரசு, முதலாளி, தொழிலாளி விவசாயி என்ற புதிய வர்க்கங்கள் உருப்பெற்றன. இந்த வர்க்கங்கள் உருப்பெற்றதும் அவற்றின் நலன்களே முன்னுக்கு வந்தன.

இந்தக் காலகட்டத்தில் வர்க்க முரண்களையும் அதற்கான தீர்வையும், முன் வைத்தது மார்க்சீயம் மட்டுமே. இழப்பதற்கு எதுவுமில்லை எதிரில் இருப்பதோ பொன்னுலகம் என்ற முழக்கத்துடன் மார்க்சீய அழகியல் கொள்கைகளின் அடிப்ப்படையில் பாட்டாளிகள் விவசாயிகளின் வாழ்க்கையும் அவர்களுடைய உணர்வுகளும் இலக்கியத்தில் பிரதிநிதித்துவமாயின. அதற்கு சோவியத் இலக்கியம் இங்கே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. படித்த உயர்தட்டு அறிவாளிகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த ராஜபாட்டையில் புதிது புதிதாக தாம்போதிகள் வந்து கலந்தன. அப்படி வந்து கலந்த தாம்போதியே கி.ரா. அவரே பின்னால் ஒரு பெருநதியாக மாறி தமிழிலக்கியத்துக்கு ஆகப்பெரும் பங்களிப்பு செய்தார் என்பது வரலாறு.

எழுத்து இலக்கியத்துக்கும், வாய்மொழி இலக்கியத்துக்கும் பாரதூரமான ஏற்றதாழ்வுகள் இருந்த காலம். அழகோ, நளினமோ, ஒழுங்கோ, இலக்கணமோ, இல்லாமல் கொச்சைத்தனமானது வாய்மொழி இலக்கியம் என்ற நம்பிக்கைகள் உலவிக் கொண்டிருந்த காலத்தில் மார்க்சீயம் மக்கள் பண்பாட்டையும் வாழ்க்கையையும் உயர்த்திப்பிடிக்க அறைகூவல் விட்டது. 1957 –ல் இந்திய கம்யூனிஸ்ட கட்சி முதலாம் சிதந்திரப்போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடி பொழுதில் கட்சியின் செயலாளராக பி.சி.ஜோஷி இருந்தார். அந்த அரசியல் மாநாட்டுக்கு நா.வானமாமலையும், கி.ரா. வும் சென்றிருக்கிறார்கள். அந்த மாநாட்டில் தான் வெகுமக்களின் பண்பாட்டை, பழக்கவழக்கங்களையும், கதைகளையும், பாடல்களையும், பதிவு செய்யவேண்டும். சாமானிய மக்களின் வாழ்க்கையை இலக்கியமாகப் படைக்கவேண்டும் என்ற திட்டங்கள் முன்வந்தன. அதன்பிறகு இடதுசாரி ஆயவறிஞரான நா.வானமாமலை  நாட்டுப்புற இலக்கியம் பற்றிய ஆய்வுகளைத் தொடங்கிச் சேகரிக்கத் தொடங்கினாரென்று சொல்லலாம்.

இந்த வெளிச்சம் கி.ரா.வுக்கு ஒரு புதிய பாதையை காட்டியது. மார்க்சீயத்தின் தத்துவக்கருத்தியலான மக்கள் வரலாற்றையும் பண்பாட்டையும் மீட்டெடுக்கும் ஒரு புதிய பாதை. கி.ராவின் இலக்கிய வருகைக்கும் தமிழில் நாட்டார் வழக்காற்றியலின் தோற்றத்துக்கும் காத்திரமான தொடர்பு இருக்கிறது.

தன்னுடைய பாதையைத் தெரிந்து கொண்டபிறகு கி.ரா. திரும்பிப்பார்க்கவில்லை. தயங்கி நிற்கவில்லை. யாராவது தன்னைப் பின்தொடர்கிறார்களா என்று கவலைப்படவில்லை. உடல்நிலை காரணமாக முறை சார்ந்த கல்வியைக் கற்கமுடியாமல் ஏழாம் வகுப்பைத் தாண்டமுடியவில்லை என்றாலும் சுய கற்றலை அவர் விடவில்லை. பழந்தமிழ் இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை அவரும் கு.அழகிரிசாமியும் வாசித்தார்கள். அதுவே அவருடைய காலடியிலேயே இருக்கும் மிகப்பெரிய பொக்கிஷத்தை அவருக்குக் காட்டிக்கொடுத்தது. கிராமப்புற வேளாண்மரபிலிருந்து வந்த கி.ரா.வுக்கு தன் மக்களின் தொன்மங்கள், வாழ்க்கை, பண்பாடு, மொழி,  சடங்குகள், என்று எல்லாவற்றையும் கலையாக மாற்றுகிற ஆவேசத்தைக் கொடுத்தது.

நாட்டார் இலக்கியப்பங்களிப்பு

நாட்டார் வழக்காறு என்று ஒரு துறையே தமிழில் துளிர் விடாத காலத்தில் நா.வானமாமலை, கி.ரா. ஆ.சிவசுப்பிரமணியன், நா.வானமாமலை நடத்திய ஆராய்ச்சி பத்திரிகையில் எழுதிய இளம் ஆய்வறிஞர்கள் நாட்டார் வழக்காற்றை, சேகரிக்கவும் ஆவணப்படுத்தவும் தொடங்கி விட்டார்கள். அதிலும் யாரும் செய்யத்துணியாத மாபெரும் வேலையை கி.ரா. செய்தார். வட்டாரவழக்குச்சொல்லகராதியைத் தொகுத்தார். தான் வாழ்ந்த, தான் அறிந்த மண்ணின் மக்கள் பேசும் மொழி மற்ற பகுதி மக்களின் மொழியிலிருந்து வேறுபட்டிருப்பதற்கான காரணங்களைத் தேடினார். அப்போதுதான் வாழ்க்கை தான் மக்கள் மொழியைக் கட்டமைக்கிறது என்பதை கண்டு கொண்டதும் அந்த மொழியில் அலகுகளான வார்த்தைகளைப் பதிவு செய்யத் தொடங்கினார். 1970-களில் தொடங்கிய அந்தப்பணியை தனியொரு மனிதராகத் தொகுத்து வகைப்படுத்தி 1980 –களில் பதிப்பித்தார். பல நண்பர்கள், எழுத்தாளர்கள் வார்த்தைச்சேகரத்துக்கு உதவினார்கள் என்றாலும் அவற்றை ஒரு அகராதியாக மாற்றியது கி.ரா. என்றால் அவருடைய அறிவுப்புலமையின் ஆழத்தை அறிந்து கொள்ளலாம்.

நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம், நாட்டுப்புற பெண்கதைகள், சிறுவர் நாடோடிக்கதைகள், பாலியல் கதைகள், என்று நாட்டார் வழக்காற்றின் எல்லாவகைமை முன்னத்தி ஏராக இருந்தார்.

1987-ல் புதுச்சேரி மத்தியப்பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக நாட்டுப்புற இலக்கியம் குறித்து தமிழ் இலக்கிய மாணவர்களுக்குச் சொல்லித்தர அப்போதைய துணைவேந்தர் கி.வேங்கடசுப்பிரமணியனால் நியமிக்கப்பட்டார். எப்போதும் புதுமையாய் செய்வதில் ஆர்வமுடன் இருக்கும் கி.ரா. பல்கலைக்கழகத்திலும் வகுப்புகளை மரத்தடியில் நடத்தியிருக்கிறார். மாணவர்களைப் பேசச்சொல்லி, கதைகளைச் சொல்லச்சொல்லி உற்சாகப்படுத்தியிருக்கிறார். அந்தக் காலத்திலிருந்து புதுவை மாநிலம் அவரைத் தத்தெடுத்துக் கொண்டது. அதன்பிறகு அதிகமாக அவர் கோவில்பட்டிக்கோ, இடைசெவலுக்கோ வந்து போகவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. 1990 – களில் எழுந்த அடையாள அரசியலின் விளைவாக சாதிச்சங்கங்கள் மீண்டும் உயிர்பெற்று எப்படியாவது ஏதாவது ஒரு பிரச்னையை உருவாக்கி தங்களுடைய வலிமையைக் காட்ட வேண்டும் என்ற வெறியுடன் இருந்த காலத்தில் கி.ரா. எழுதிய ஒரு கதையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்தி எழுதிவிட்டாரென்றும் அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் அந்த சாதித்தலைவர்கள் கண்டன ஊர்வலம் போய் போலீஸில் புகாரும் அளித்திருக்கிறார்கள்.

அவருடைய 90 – ஆவது வயதில் ஒரு நேர்காணலில் அவர் சொன்ன வார்த்தையைத் தவறாகப்புரிந்து கொண்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்து அந்த வழக்கு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குமேல் நடந்தது. சாமானிய மக்களின் வாழ்க்கையை தன் வாழ்நாள் முழுவதும் எழுதித்தீர்த்த ஒரு மாபெரும் படைப்பாளியை நம்முடைய சமூகம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இழிவு படுத்த முயற்சித்துக் கொண்டேயிருந்தது என்பதையும் பதிவு செய்யவேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் புறந்தள்ளியே அவர் கரிசல்க்காட்டு கதாசூரியனாக எழுந்தார்.

இதில் நகைமுரண் என்னவென்றால் பள்ளிக்கல்வியை பாதியில் விட்ட கி.ரா. தான் புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றினார் என்பதும் இன்றைக்கு நாட்டார் வரலாறு என்றதொரு கல்விப்புலமே உருவாகி அவரைப் படித்துக்கொண்டிருக்கிறது என்பதும் தான். முறை சார்ந்த கல்வியை விட விருப்பார்ந்த முறைசாராக்கற்றல் எத்தகைய ஆளுமையை உருவாக்கியிருக்கிறது என்பதற்கும் கி.ரா.வே உதாரணம்.

கி.ராவின் படைப்புகள்

1945 –ல் அவருடைய முதல் கதையான சொந்தச்சீப்பு கு.அழகிரிசாமி ஆசிரியராக இருந்த சக்தி பத்திரிகையில் வெளிவந்தாலும், கி.ரா. அதைத் தன்னுடைய முதல் கதையாகக் குறிப்பிடுவதில்லை. 1958 –ல் தான் அவருடைய முதல்கதை மாயமான் சரஸ்வதியில் வெளியானது. அன்று தொடங்கிய படைப்புப்பயணம் 2021 வரைத் தொடர்ந்தது. முதல்கதையான மாயமான் சரஸ்வதி பத்திரிகையில் வெளிவரும்போது கி.ராவுக்கு வயது முப்பத்தியைந்து. ஆரம்பத்தில் அவர் எழுதிய கதவு, வேட்டி, கரண்டு, ஜடாயு, தோழன் ரங்கசாமி, போன்ற கதைகளை கிராமப்புற மதிப்பீடுகள் யந்திரமயமான நவீன அரசின் மூர்க்கத்தனத்தை எதிர்கொண்டவை என்றே சொல்லலாம். புதிய விட்டேத்தியான முகமான நவீன அரசின் நகர்ப்புறம் எப்போதும் நெருக்கமாக நெய்யப்பட்ட உறவுகளைக் கொண்ட கிராமப்புரத்துக்கு எதிர்நிலையிலேயே இருந்தது எனலாம். கி.ரா.வின் காலத்தில் எழுதப்பட்டுக்கொண்டிருந்த நவீனத்துவ கதைகள் தனிமனித அகவுலகம் புறவுலகத்தோடு மோதும்போது ஏற்படும் முணுமுணுப்புகளையோ, கொந்தளிப்புகளையோ பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தன. தனிமனிதவாதமும், அந்நியமாதலும், உறவுகளின் வெறுமையும், பேசுபொருள்களாக இருந்தன.

கி.ரா. தன்னுடைய விரிந்த படைப்புவெளி முழுவதும் ஒரு படைப்பில் கூட நவீனத்துவத்தின் கூறுகளை எழுதிப்பார்க்கவில்லை. அவருக்கு கிராமப்பொருளாதாரக்கட்டமைப்பின் மக்களின் கூட்டு மனநிலையின் மீதும், வரலாற்றின் கூட்டு நனவிலியின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதைத் தான் அவர் தன்னுடைய கதைகளில் எழுதிப்பார்த்தார். வாய்மொழி மரபில் கதை சொல்லலை அவர் தேர்ந்தெடுத்ததின் வழியாக நவீனத்துவத்துக்கு எதிராக தனித்துவமான பாதையை ஏற்படுத்திக் கொண்டார். ஆனால் அந்தத் தனித்துவமான வாய்மொழிமரபுக்கு நவீன வடிவத்தைக் கொடுத்தது தான் கி.ரா.வின் மிகப்பெரிய பங்களிப்பு.

 கலகத்தை நவீனத்துவ வடிவத்தில் செய்தார். அதனால் தான் அவருடைய படைப்புகளை நவீன இலக்கியம் வாசிக்கும் வாசகர்களும் வாசிக்கிறார்கள். அத்துடன் கடந்த காலத்தின் கிராமப்புற வாழ்வின் அங்ககக்கூறுகளை உயிர்த்துடிப்பான மொழியில் கி.ரா. எழுதியதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவருடைய கடந்த கால கிராமப்புற வாழ்வின் நனவிலி மனதில் ஒளியேற்றி விடுகிறது என்பதை யோசிக்கும்போது கி.ரா.வின் படைப்புகளின் முக்கியத்துவம் தெரியும்.

கி.ரா. தமிழ் மொழியை புதுமையாக்கினார். உரைநடைத்தமிழில் மட்டுமே எழுதப்பட்டுக்கொண்டேயிருந்த இலக்கியத்தில் பேச்சு வழக்கிலேயே எழுத முடியும் என்பதையும் அதன் மூலம் வாசகர்களை ஈர்க்க முடியும் என்பதையும் நிலை நிறுத்தினார். அதற்கான ஒரு நியாயமான கருத்தையும் அவர் உருவாக்கிக்கொண்டார். தொல்காப்பியம் தொடங்கிய தமிழ் இலக்கண நூல்கள் எல்லாம் செய்யுள் எழுதுவதற்கான இலக்கணமுறையே தவிர உரைநடை எழுத்துக்கான இலக்கணமில்லை. உரைநடைக்கு இனிமேல் தான் இலக்கணம் எழுதப்படவேண்டும் என்று அவர் சொன்னார். மக்கள் மொழி என்பது அவர்களுடைய உயிர்த்துடிப்பான வாழ்க்கையிலிருந்து வருகிறது. அந்த மொழிதான் அந்த மக்களின் வாழ்க்கையைச் சொல்வதற்கு ஏற்றது என்ற கருத்தில் உறுதியாக இருந்தார்.

 அவர் தமிழ் இலக்கியத்துக்குள் புதிய நிலத்தை அறிமுகப்படுத்தினார். அதுவரை யாரும் கவனித்திராத கரிசல் மண்ணை தமிழுக்குக் கொண்டுவந்தார். கடவுள் விடும் வெப்பப்பெருமூச்சைப்போல கனன்று பிளவுண்டு கிடக்கும் மண்ணின் மக்களும் கூடவே வந்தார்கள். அவர்களுடன் அவர்களுடைய கதைகளும் வந்தன. அந்தக்கதைகளில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், வயதானவர்கள், கோட்டிகள், மாற்றுப்பாலினத்தவர், தலித்துகள் எல்லாரும் வந்தார்கள். அவர்களை படைக்கும் போது கி.ரா. கிராமிய மனம் கொண்டு கனிந்து எழுதினார். நவீனமனத்தின் குரூரங்களின் நிழல் கூட படாமல் பார்த்துக்கொண்டதில் தான் அவருடைய கலையின் தனித்துவம் இருக்கிறது.

முன்னுதாரணமில்லாத உள்ளடக்கம், வடிவத்தில் எழுதப்பட்ட அவருடைய கோபல்லகிராமமாக இருக்கட்டும் கோபல்ல புரத்து மக்களாக இருக்கட்டும் கிராமத்தின் கூட்டுமனதின் பிரதிநிதியாக  தன்னைப் பாவித்து எழுதியதால் தான் அந்தப் படைப்புகளில் கிராமப்புறமனதின் தொன்மங்களும், அதீத கற்பனைகளும், மாயாஜாலங்களூம் உயிர்த்துடிப்போடு வெளிப்பட்டது. மனிதர்களும் இயற்கையும் உயிர்த்துடிப்போடு இருந்தார்கள். கிடையாக இருந்தாலும் சரி, மற்ற அவருடைய கதைகளில் புற உலகம் அவருடைய கதையின் ராகத்துக்கு இசைந்து வரும். புற உலகச்சித்தரிப்பின்றி அவர் எழுதியதில்லை என்பதாலேயே அவருடைய படைப்புகள் மனிதமையமாக இல்லாமல் இயற்கைமையமாக திகழ்கின்றன. இயற்கை மையமாக இருப்பதனால் தான் அவருடைய கதைகளில் ஆடு, மாடு, காகம், குருவி, நாய், வல்லயத்தான், என்று விலங்குகளும், மரங்களும் செடிகளும் கொடிகளும், மண்ணும், காட்சிரூபமாக சித்தரிக்கப்பட்டு வாசகன் தன் புலன்களை உணர்வெழுச்சியில் இழக்க வைக்கும் வித்தகராக கி.ரா. விளங்குகிறார்.

அவருடைய கதவு தொடங்கி பல கதைகளில் சிறார்கள் கதபாத்திரங்களாக வந்திருந்தாலும் சிறார்களுக்காகத் தனியாக பிஞ்சுகளை எழுதினார். அதில் பதின்பருவத்துச் சிறார்களின் மனநிலையை அவ்வளவு அழகாகச் சித்தரித்திருந்தார். அவருக்கு ஒருபோதும் கதாபாத்திரங்களுக்குப் பஞ்சம் வந்ததேயில்லை. என்னை எழுது என்னை எழுது என்று முண்டியடித்துக்கொண்டு அவருக்கு முன்னால் கூட்டமாக நின்றார்கள். 

கி.ரா. ஒரு கதைசொல்லியாகக் கதையை நிகழ்த்துகிறார். அப்படி நிகழ்த்தும்போது வாசகன் கவனம் திசை திரும்பாமலிருக்க ரசனையின் அழகியலை ஆங்காங்கே நறுமணத்தைலம் போல தெளிக்கிறார். ஆனால் கதைகளுக்கான கருவைத் தேர்ந்தெடுக்கும்போதும் சரி, அதை நாட்டார்வழக்காற்றியல் வழியில் கட்டமைக்கும்போதும் சரி அவருடைய இடதுசாரிப்பார்வை அடிநாதமாக ஓடிக்கொண்டேயிருக்கிறது. கி.ரா.வின் கதைகளில் உள்ள கலை அமைதி அது திட்டமிடப்படாமலே இயல்பாக அமைந்தது போல தோன்றும். அதுதான் அவருடைய விஷேசம். கலைநேர்த்திக்காக பலமுறை எழுதிப்பார்க்கக்கூடிய கடுமையான உழைப்பாளியாக இருந்தார் கி.ரா. கூர்ந்து வாசிக்கும் வாகசர்களுக்கு அந்த நுட்பம் புரியும். அவருடைய கதைகளில் வரும் பெண்கதாபாத்திரங்கள் அத்தனைபேரும் சாதாரண உழைப்பாளிகள். வாழ்க்கையையே உழைப்பாகப் பார்க்கக்கூடிய மனம் கொண்டவர்கள். விசித்திரங்களின் துளிநேர மாயங்களில் தங்களை இழந்து மீள்பவர்கள். ஆண்கள் உண்மையிலேயே விசித்திரமான குணபாவங்களைக் கொண்டவர்களாக வருவார்கள். ஆனால் அவருடைய கதைகளில் வருகிற எல்லாமனிதர்களிடமும் வாழ்வைப் புரிந்து கொண்ட ஒரு முதிர்ச்சி இருக்கும். அவருடைய கதைகள் தமிழிலக்கியத்துக்கு பெருங்கொடையென்றால் அதீதமான கணிப்பாகக் கொள்ளமுடியாது.

 தமிழிலக்கியத்தில் வெகுமக்களை கதாபாத்திரங்களைக் கொண்டு வந்து சேர்த்த முன்னோடி கி.ரா. மக்கள் இலக்கியம் எழுதும், எழுதவேண்டும் என்று நினைக்கிற எல்லாரும் கி.ரா.விடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம்.

படைப்பாளிகளை உருவாக்கினார் கி.ரா.

கி.ரா. அதிர்ந்து பேசாதவரென்பதால் அவருடைய கடுமையான விமரிசனங்கள் கூட நீவி விடுவதைப்போலவே இருந்தன. யாரையும் புண்படுத்தும் வார்த்தைகளை அவர் பயன்படுத்தியதில்லை. நெருக்கமான சொற்களின் வழியே அவர் இளைஞர்களை ஈர்த்தார். அவர்களுடைய படைப்புகளைப் படித்து விட்டு ரெண்டு வரி கடுதாசி எழுதுகிற பழக்கம் இருந்தது. நேரில்பார்க்கும் போது அப்படிக் கொண்டாடுவார். இதெல்லாம் தான் கி.ரா. என்ற மாமனிதரை நோக்கி எழுத்தாளர்களும் வாசகர்களும் படையெடுத்துக் கொண்டேயிருப்பதற்கான காரணங்கள். மொழியின் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு கதையைச் சொல்லுவார் கி.ரா.

1980-களில் வட்டார இலக்கியம் குறித்த அவநம்பிக்கையான பேச்சுகள் தமிழிலக்கியவெளியில் உலவிக்கொண்டிருந்த சமயத்தில் கி.ரா.வே முன்னோடியாக யாரும் செய்யாத ஒரு காரியத்தைச் செய்தார். அது தான் கரிசல் வட்டாரத்தில் அப்போது எழுதிக்கொண்டிருந்த 21 எழுத்தாளர்களிடமிருந்து கதைகளைச் சேகரித்து கரிசல் கதைகள் என்று ஒரு தொகைநூலை வெளியிட்டார். அந்த நூல் ஒரு அதிர்வலையை தமிழில் ஏற்படுத்தியது. இத்தனை எழுத்தாளர்களா என்று எல்லாரையும் ஆச்சரியப்படவைத்தது. அந்த ஆச்சரியம் இன்னும் குறைந்தபாடில்லை. இப்போதும் முப்பதுக்கும் குறையாத எழுத்தாளர்கள் நவீன இலக்கியத்தில் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது சாதாரண விஷயமில்லை.

      கி.ரா.எனும் பிரம்மாண்டமான ஆலமரத்திலிருந்து ஏராளமான விழுதுகள்  பூமியிலிறங்கி வேர் பிடித்திருக்கின்றன. அந்த ஆலமரமே பல ஆலமரங்களை உருவாக்கியிருக்கிறது. அந்த ஆலமரத்தின் நிழலில் லட்சக்கணக்கான பறவைகளும், சின்னஞ்சிறு உயிரினங்களும் ஓய்வெடுத்து தங்களை ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இப்போதும் கூட அந்த ஆலமரம் இடைசெவலில் நின்று கொண்டிருக்கிறது.

அங்கே கி.ரா மீளாத்துயில் கொண்டிருக்கிறார். இன்னும் தான் சொல்லவேண்டிய அபூர்வமான விஷயங்களை அசைபோட்ட படி. தன்னுடைய வேர்களையும் விழுதுகளையும் இலைகளையும் பூக்களையும் காய்களையும் கனிகளையும் அவற்றைத் தின்னவரும் குருவிகளையும் வேடிக்கை பார்த்தபடி.

கி.ரா. எங்கள் சூரியனே!



 

   

 


8 comments:

  1. கி ரா வைப்பற்றிய தெளிவான முன்னுரை. பேச்சுவழக்கில் எழுதிய புகழ் பெற்ற ஒரு எழுத்தாளர் என்றவரையில் அறிந்த எனக்கு அவரின் படைப்புகளை படிக்கும் ஆவலை ஏற்படுத்தியது அவரைபற்றிய உங்களின் கருத்துகள்.

    ReplyDelete
  2. கி. ராவின் சிறப்பான முகம் காட்சி பெறுகிறது. இசை மனம் குறித்த அறியப்ப டாத முகமும், தொடக்க காலத்து கதைகளின் சித்திரமும் சிறப்பாக உருப்பெற்றுள்ளது. வாழ்த்துக்கள் தோழர்

    ReplyDelete
  3. கி ரா எனும் கரிசல் பூமி பற்றிய ஒரு தெளிவான வரைபடம் இக்கட்டுரை.

    ReplyDelete
  4. கி.ரா குறித்த அருமையான கட்டுரை. புதுவையில் கி.ரா வைச் சந்தித்துப் பழக எனக்கு வாய்ப்புக் கிடைத்தது என் அதிர்ஷ்டம்.

    ReplyDelete
  5. கி.ரா என்னும் இலக்கிய ஆளுமையை நினைவில் அசை போட வைத்து விட்டீர்கள் தோழர்.சிறப்பு.

    ReplyDelete
  6. கிரா. வாழ்க்கை வரலாறு தனி புத்தகமாக வர வேண்டும். கட்டுரை சிறப்பு தோழர்

    ReplyDelete