பூனையின் கனவு
உதயசங்கர்
” ரோசி “ என்று யாரோ கூப்பிடும்
சத்தம் கேட்டது. ரோசி தலையை அங்குமிங்கும் திருப்பிப்பார்த்தது. அடடா சத்தம் எங்கிருந்து
வந்ததென்று தெரியவில்லையே. ஆனால் தன்னையறியாமல்
“ மியாவ் மியாவ்.. நான் இங்கே இருக்கேன்.. யாரு கூப்பிட்டது?
” என்று பதில் சொன்னது. ஆனால் அந்தச் சத்தம் பலகீனமாகக் கேட்டது. அதற்கே அதன் குரல்
கேட்கவில்லை. ரோசிக்கு காலையிலிருந்து நல்லபசி. எதுவும் சாப்பிடவில்லை. ஏனெனில் சாப்பிட
எதுவும் கிடைக்கவில்லை. முன்பு மாதிரி இல்லை. எல்லோரும் எச்சரிக்கையாக, பால், தயிர்,
கருவாடு, மீதமிருக்கும் குழம்பு, காய்களைக் கூட ஃபிரிட்ஜில் வைத்து பூட்டி விடுகிறார்கள்.
அத்துடன் ஏழுகதவுகளைப்போட்டு இறுக்கிப்பூட்டி படுத்துக்கொள்கிறார்கள். எந்த வீட்டுக்குள்ளும்
நுழையமுடியவில்லை.
” மியாவ் “ வீடுகள் பூட்டப்படுவதற்கு
கண்டனம் தெரிவித்தது. உள்ளே நுழைந்தால் தானே எதாச்சும் கிடைக்குமா இல்லையா என்று தெரியும்.
இப்போது எலிகளையும் கூட பார்க்கமுடிவதில்லை. அவற்றுக்கும் இப்போது வீடுகளுக்குள் அநுமதியில்லை.
அவை இருந்தால் அவற்றை வேட்டையாடுவதற்காக பூனைகளை வளர்ப்பார்கள்.
அதெல்லாம் ஒரு காலம். ரோசி பூனைக்கு
என்றே பால்ச்சோறும் தயிர்ச்சோறும், மீன், கோழி, கருவாடு, என்று வேளாவேளைக்குக் கிடைத்துக்கொண்டிருந்த
காலம். ரோசிபூனை சுதந்திரமாக எந்த வீடுகளுக்குள் வேண்டுமானாலும் நுழையலாம். எலிகளுக்கு
எச்சரிக்கைக்குரல் கொடுக்கலாம்.
“ மியாவ்… ஏய் யாருடா அது.. வெளியே
சுத்தறது.. உள்ளே ஓடிப்போ.. மியாவ்.. யாராவது வெளியே வந்தீங்கன்னா.. ஒரே வாயில முழுங்கிருவேன்..அம்புட்டுதான்..
மியாவ்.. பாத்துக்குங்க..மியாவ் ”
என்று முழங்கும். முதல் மியாவ்விலேயே
எலிகள் தங்களுடைய வளைகளுக்குள் போய் ஒளிந்து கொண்டு ரோசியின் அறிவிப்பைக் கேட்டுக்கொண்டிருக்கும்.
ரோசிக்கும் எலிகளுக்கும் தெரியும் எலிகள் இருந்தால் தான் பூனைகளை மனிதர்கள் வளர்ப்பார்கள்.
மனிதர்கள் என்ன லேசுப்பட்டவர்களா? அதனால் தான் வீட்டுக்குள் நுழையும்போதே ரோசி எலிகளுக்கு அபாயச்சங்கை ஊதி தான் வருவதைப்பற்றித்
தெரிவித்து விடும். உஷாரான எலிகள் ஓடி ஒளிந்து கொள்ளும்.
அபாய எச்சரிக்கையை மறந்து வீட்டுக்குள்
சுற்றிக்கொண்டிருந்தால் மட்டுமே ரோசி எலியைப் பிடித்துத் தின்றுவிடும். தான் எலி பிடித்ததை
வீட்டுக்காரர்கள் பார்ப்பதற்காக வாயில் எலியுடன் அங்கும் இங்கும் அவர்களுடைய கண்களுக்குத்
தெரியும்படி அலையும். பின்னர் வீட்டை விட்டு வெளியே போய் சாப்பிடும். உடனே ரோசி எலி
பிடித்த செய்தியைப் பெண்கள் வீட்டு வீட்டுக்கு காணொலியாகப் பரப்புவார்கள். ரோசிக்கு
மவுசு கூடி அப்படியே அழகிப்போட்டி நடை நடந்து போகும்.
” மியாவ் நான் ரோசியாக்கும்..”
இப்போது எலிகளைக் கொல்ல விஷமருந்துகளை
பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். எலிகளுக்கு மட்டுமா, கரப்பான்பூச்சி, எறும்பு,
ஈ, பல்லி, கொசு, என்று எல்லாவற்றையும் கொல்ல விஷத்தைப் பயன்படுத்தத்தொடங்கிவிட்டார்கள்.
இந்த மனிதர்களின் மூளையில் என்னதான் இருக்கும்? இந்த உலகம் அவர்கள் மட்டும் வாழ்வதற்கா?
அவர்களைத் தவிர மற்ற எல்லாஉயினங்களையும் வெறுக்கிறார்களே? ஏன்? மியாவ்..
போனவாரம் கடுவனிடம் இதைச்சொல்லிக்
கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது அவன் ” ஹ்ஹ்ஹ்ஹா மியாவ் மனிதர்கள் சுயநலமிக்கவர்கள்
அவர்களே ஒருவரையொருவர் அடித்துக்கொள்வார்கள் பார்த்ததில்லையா.. மியாவ்.. தொலைக்காட்சியில்
பாரு.. எத்தனை சண்டை.. எத்தனை பேர் இறந்து போகிறார்கள்… மியாவ் எல்லாத்தையும் கொன்றுவிட்டு
தாங்கள் மட்டும் வாழலாம் என்று நினைத்தார்கள்.. பாரு.. இப்போ கொரோனா என்ற கண்ணுக்குத்
தெரியாத வைரஸ்ஸினால் கொத்து கொத்தாகச் செத்துப்போகிறார்கள்..மியாவ்..”
அதைக்கேட்ட ரோசிக்குக் கோபம் கோபமாக
வந்தது.
“ மனிதர்கள் முட்டாள்கள்..”
இப்போது எலிகள் வீடுகளுக்குள்
வருவதில்லை. அவர்கள் ஊரைவிட்டு வெளியேறிவிட்டன. எலிகள் இல்லாததினால் இப்போது தன்னை யாரும் சீந்துவதில்லை.
எல்லோரும் சூ சூ சூ சூ என்று விரட்டிக்கொண்டேயிருக்கிறார்கள்.
இந்த மனிதர்களுக்கு என்ன தான்
ஆச்சு? என்று தினேஷின் வீட்டு காம்பவுண்டு சுவரில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்து ரோசி பூனை யோசித்துக்கொண்டிருந்தது.
பசிமயக்கத்தில் கண் அடைத்தது.
சரி ஏதாவது விட்டிலோ, வண்டோ, சில்லானோ, கிடைக்கிறதா என்று பார்க்கலாம். என்று நினைத்தபடி
காம்பவுண்டு சுவரிலிருந்து கீழே குதித்தபோது கால் தவறி விட்டது. எல்லாம் பசிக்கிறக்கம்
தான். தலைகீழாக தரையை நோக்கிப் போய்க் கொண்டிருந்த ரோசிக்குத் தெரிந்து விட்டது. சரி
அவ்வளவுதான் நம்ம கதை முடியப்போகுது…இதோ பளபளக்கும் கிரானைட் தரையில் தலை மோதி உடைந்து
சிதறப்போகிறது. இதோ இதோ இதோ ….
கண்களை மூடிக்கொண்டது ரோசி.
என்ன ஒன்றும் நடக்கவேயில்லை? திடுக்கிட்ட ரோசி கண்களைத்
திறந்தபோது என்ன ஆச்சரியம்! சுற்றிலும் அடர்ந்த காடு. மியாவ்.. மியாவ்.. என்று குரல்கொடுத்தது.
ஆனால் அது க்ர்ர்ர்ர்ர்… என்ற புலியின் கர்ஜனையாக இருந்தது. ரோசி தன்னை ஒருதடவை நன்றாகப்
பார்த்தது. ஆமாம்.. உண்மையில் ரோசி புலியாக மாறிவிட்டது. நிமிர்ந்து பார்த்தால் எதிரே
இருந்த புல்வெளியில் புள்ளிமான் கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தது. பறவைகளின்
சத்தமும், பூச்சிகளின் ரீங்காரமும், பல மிருகங்களின் செல்லச்சத்தங்களும் கலவையாக கேட்டன.
மான்களைப் பார்த்ததும் ரோசிக்கு தான் இன்னும் சாப்பிடவில்லையே என்ற எண்ணம் தோன்றியது.
ஆனால் ரோசிக்குப் பசியில்லை. வயிறு நிறைந்திருந்தது. குனிந்து பார்த்தால் அதற்குமுன்னால்
ஒரு மானின் உடல் கிடந்தது.
ஓ சாப்பிட்டாச்சா!
அப்போது அதற்குத்தண்ணீர் தாகம்
எடுத்தது. அப்படியே நடந்து சென்றது. போகும்போது ஒரு மிளா அருகிலேயே கடந்தது. இரண்டு
முயல்கள் வேகமாக ஓடிவந்து புலியின் கால்களிலேயே மோதியது. ஒரு மான் குட்டி இரண்டடி தூரத்தில்
துள்ளிக்கொண்டிருந்தது. ரோசி அதையெல்லாம் கவனிக்கவேயில்லை. அவைகளும் புலியை ஒரு கணம்
நிமிர்ந்து பார்த்து விட்டு மறுபடியும் தங்களுடைய வேலையைப் பார்த்தார்கள்.
ரோசி தண்ணீர் கிடந்த குட்டைக்குப்
போய் நக்கி நக்கி தண்ணீர் குடித்தது. பக்கத்தில் யானைகளும் காட்டெருமைகளும் தண்ணீர்
குடித்தன. ரோசி மறுபடியும் நடந்து ஒரு மரத்தடியில் உண்ட களைப்பு தீர படுத்தது.
அப்போது ஒரு வித்தியாசமான சத்தம்
கேட்டது. அது துப்பாக்கிச்சத்தம்! காதுகளை விடைத்துக்கொண்ட ரோசி திடுக்கிட்டு எழுந்து
சுற்றிச் சுற்றி பார்த்தது. கொஞ்ச தூரத்தில் ஒரு மரத்தின் மீதிருந்து ஒரு ஆள் கையிலிருந்த
துப்பாக்கியால் ரோசியைக் குறிபார்த்துக் கொண்டிருந்தான். அவன் துப்பாக்கியின் விசையை
அழுத்த துப்பாக்கியின் தோட்டா ரோசியைப் பார்த்து விரைந்து கொண்டிருந்தது. எங்கே போனாலும்
மனிதர்கள் ஏன் எல்லோரையும் கொல்லுவதிலேயே குறியாக இருக்கிறார்களோ என்று நினைத்த ரோசி
கண்களை மூடியது.
“ ரோசி! ரோசி! இந்தா.. என்னடா
கண்ணைத் திறக்கமாட்டேங்கு.. “ என்ற மோனிகாவின் குரல் கேட்டது. அருகிலிருந்த ஆனந்த்,
“ இரு நான் அதுக்கு குக்கீஸ் எடுத்துட்டு
வாரேன்..” என்றான். பிஞ்சு விரல்கள் ரோசியின் உடலைத்தடவிக்கொடுத்தன. ரோசிக்கு மெல்ல
உணர்வு வந்தது. இனிப்பு வாசனை அதன் மூக்கைத் துளைத்தது. சிரமத்துடன் கண்களைத் திறந்தது.
முன்னால் ஒரு பிஸ்கெட் நீட்டிக்கொண்டு
ஆனந்த் உட்கார்ந்திருந்தான். ரோசி மெல்ல எழுந்து அந்த பிஸ்கெட்டை வாயில் வாங்கிக்கொண்டது.
குழந்தைகளின் முகம் மகிழ்ச்சியில் விரிந்தது. ரோசிக்கு அந்தப்பிஸ்கெட்டை சாப்பிட்டதும்
கொஞ்சம் தெம்பு வந்த மாதிரி இருந்தது. அது குழந்தைகளைப் பார்த்து,
“ மியாவ்.. மியாவ்.. மிக்க நன்றி!
உங்களுடைய கருணைக்கு மிக்க நன்றி! “ என்று சொல்லி வாலை ஆட்டியது.
” டேய் ஆனந்த்! ரோசி தேங்க்ஸ் சொல்லுதுடா..” என்றாள் மோனிகா.
இரண்டுபேரும் சிரித்தார்கள்.
நன்றி - தற்கால சிறார் கதைகள்
சிறார்களுக்கு தற்கால சூழலை விளக்கும் வண்ணம் இக்கதை உள்ளது.மனிதர்கள் இவ்வுலகம் அவர்களுக்கானது என்றே நினைக்கின்றனர் என்பதையும் எல்லா உயிர்களும் வாழ்வதற்கு இன்புற்று வாழ வழி செய்ய வேண்டும் என்பதையும் பதிவு செய்கிறது இக்கதை.
ReplyDeleteபசியிருந்தால் மட்டுமே விலங்குகள் உணவை தேடும் தேவை நிறைவேறிய பின் அவைகளுக்கு அருகில் உணவிருந்தாலும் உண்ணாது மனிதா நீயும் உன் பசி அறிந்து உண் என்ற கருவையும் இணைத்திருப்பது சிறப்பு.
பூனைகளையும் எலிகளையும் பூச்சியினங்களையும் நம் எதிர்கால சந்ததி படத்தில் மட்டுமே காணும் நிலையிலிருந்து மீட்டெடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
சிறுகதைக்குள் பல தகவல்களை தருவதே தங்களின் சிறப்பு தோழர்.