Sunday, 4 March 2018

ஆமையும் முயலும்


ஆமையும் முயலும்

உதயசங்கர்

ஒரு குளத்தில் ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக்குளத்தில் நீர் வற்றிக் கொண்டிருந்தது. புல், பூண்டுகள், பாசி, சிறிய மீன்கள், புழுக்கள், பூச்சிகள், எல்லாம் குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஆமைக்குத் தீனி கிடைக்கவில்லை. ஆமை வேறு நீர்நிலையை நோக்கிப் போகவேண்டும் என்று நினைத்தது.
அதிகாலை ஆமை அந்தக் குளத்தை விட்டு மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தது. ச்சர்ர்ரக்…… ச்சர்ர்ரக்…. என்ற சத்தத்துடன் மெல்ல நடந்தது. அப்போது ஒரு புதரில் இருந்து திடீர் என்று ஒரு முயல் பாய்ந்து ஆமையின் முன்னால் வந்து நின்றது.
“ வர்றியா ஓட்டப்பந்தயம் ஓடலாம்.. போன தடவை நான் கொஞ்சம் ஏமாந்துட்டேன்.. இந்த முறை விட மாட்டேன்..”
என்று முயல் தன் நீண்ட காதுகளை விடைத்தபடி பேசியது. அதைக் கேட்ட ஆமை சிரித்துக் கொண்டே,
“ இல்லை நண்பா… நான் வரவில்லை.. நான் வேறு குளத்தைத் தேடிப் போகிறேன்.. இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டுமோ தெரியவில்லை..” என்று பதில் சொல்லியது.
“ போடா பயந்தாங்குளி… நீ இப்படி நடந்து எப்படிக் கண்டுபிடிப்பே.. என்னை மாதிரி நாலு கால்ல ஓடணும்… சும்மா சளக்கு சளக்குன்னு அன்னநடை நடந்துக்கிட்டிருக்கே…. இதிலே முதுகிலே சுமை வேற சுமந்துக்கிட்டிருக்கே…. அதைக் கழட்டிப்போடு.. எல்லாம் சரியாயிரும்..”
என்று சொல்லிக்கொண்டே பாய்ந்து குதித்துச் சென்று விட்டது.
ஆமையும் ஒரு கணம் யோசித்தது. முதுகில் உள்ள ஓடு இல்லை என்றால் இன்னும் வேகமாகப் போகலாம். முயல் சொன்னது சரிதான். ச்சே… என்ன கனம்! ஆமை முதுகை உதறியது. ஓடு கீழே விழவில்லை. வருத்தத்துடன் மெல்ல ச்சர்ரக்…. ச்சர்ரக்.. என்று நடந்து போய்க் கொண்டிருந்தது.
ஆமை கொஞ்சதூரம் தான் போயிருக்கும். எதிரே முயல் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தது. அதன் உடல் நடுங்கியது.
“ ஆபத்து.. ஆபத்து.. நரி துரத்துது… ஓடு..ஓடு… “  என்று முயல் கத்திக் கொண்டே தலைதெறிக்க ஓடியது. ஆமை நிமிர்ந்து பார்த்தது. கொஞ்சதூரத்தில் செவலை நிற நரி ஒன்று பாய்ந்து வந்து கொண்டிருந்தது. ஆமை மெல்ல தன்னுடைய கால்களையும் தலையையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டது.
வேகமாக ஓடி வந்த நரி, ஆமையின் அருகில் வந்தது. அதை முகர்ந்து பார்த்தது. ஓட்டின் மீது வாயை வைத்து கடித்தது. கடிக்க முடியவில்லை. ஓடு கடினமாக இருந்தது. நரி தன்னுடைய மூக்கினால் ஆமையைத் தள்ளயது. ஓட்டுக்குள் பாதுகாப்பாக இருந்த ஆமையை அசைக்க முடியவில்லை. ஆமையை இரண்டு முறை சுற்றிச் சுற்றி வந்தது நரி.
நரி பின்பு வந்த வழியே திரும்பிச் சென்றது.
நரி போன பிறகு ஓட்டிலிருந்து கால்களையும் தலையையும் வெளியே நீட்டியது ஆமை. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் ஓட்டை உதறிவிட நினைத்தேனே என்று தன்னை நினைத்து வெட்கப்பட்டது.
இயற்கையன்னைக்கு நன்றி சொல்லியது.

நன்றி - வண்ணக்கதிர்


No comments:

Post a Comment