Sunday 18 March 2018

குள்ளநரியின் கனவு


குள்ளநரியின் கனவு

உதயசங்கர்

கடம்பூர் காட்டில் உள்ள ஒரு புதரில் ஒரு குள்ளநரிக்குட்டி வாழ்ந்து வந்தது. அந்தக்குள்ளநரிக்குட்டி எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கும். படுசோம்பேறி. நிறையக் கனவுகள் காணும். தூங்கிக்கொண்டே உறுமும். தூங்கிக்கொண்டே ஊளையிடும். தூங்கிக்கொண்டே பற்களை நறநறவென்று கடிக்கும். அம்மாவும் அப்பாவும் தினம் திட்டுவார்கள்.
“ இப்படித் தூங்காதேடா… சோம்பேறியின் கனவு பலிக்காதுடா..”
“ சரிம்மா..” என்று சொல்லிக்கொண்டே மறுபடியும் தூங்கிவிடும். அம்மாவும் அப்பாவும் குள்ளநரிக்குட்டிக்கு இரை தேடிக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அது புதரில் தூங்கியபடியே சாப்பிடும்.
அம்மாவும் அப்பாவும் இரை தேடுவது எப்படி? வேட்டையாடுவது எப்படி? என்று சொல்லிக்கொடுக்க அழைத்தார்கள். குள்ளநரிக்குட்டி வரவில்லை. கெஞ்சினார்கள். குள்ளநரிக்குட்டி வரவில்லை. மிரட்டினார்கள் குள்ளநரிக்குட்டி வரவில்லை.
சிறிது நாட்களில் குள்ளநரிக்குட்டி வளர்ந்து விட்டது. அம்மாவும் அப்பாவும் அதைத் தனியே விட்டு விட்டு போய் விட்டார்கள்.
குள்ளநரி புதரில் சோம்பேறியாகப் படுத்தபடியே கனவு கண்டது.
புதருக்கு அருகில் அதுவும் குள்ளநரியின் கால்களுக்கு அருகில் ஒரு முயல்குட்டி விளையாடிக் கொண்டிருந்தது. கண்களைத் திறந்த குள்ளநரி அதை அப்படியே லபக்கென்று பிடித்துத் தின்றது.
மறுபடியும் கண்களை மூடித்திறந்த போது ஒரு மான்குட்டி அதன் வாலுக்கருகில் நின்றது. உடனே அதை லபக் என்று பிடித்து விழுங்கியது.
குள்ளநரியின் வாயில் உமிழ்நீர் சுரந்தது. கண்களைத் திறந்த குள்ளநரி கண்டது கனவு என்று தெரிந்தது. வயிறு பசித்தது.
ஆனாலும் சோம்பேறித்தனம் விடவில்லை. மறுபடியும் கண்களை மூடியது. இப்போது கனவு வரவில்லை. பசியினால் வயிறு எரிந்தது. ச்சே அலையாமல் கொள்ளாமல் சாப்பிட முடியாதா? என்று நினைத்தது.
பசி பொறுக்காமல் புதரில் இருந்து எழுந்து வெளியே வந்தது. கனவில் கண்ட மாதிரி ஒரு முயலோ, மானோ, கௌதாரியோ, காட்டு எலியோ, எதுவும் கண்ணில் படவில்லை. கொஞ்சதூரம் நடந்து சென்று பார்த்தது. எதுவும் இல்லை. கொஞ்சதூரம் ஓடிச் சென்று பார்த்தது. எதுவும் இல்லை. பசியினால் கண்கள் மங்கியது.
ஒரு காட்டு எலி அதன் கண்முன்னால் ஓடியது. ஆனால் அதை எப்படிப்பிடிப்பது என்று தெரியவில்லை. ஒரு விட்டில் பூச்சி தாவிக்குதித்தது. அதை எப்படிப்பிடிப்பது என்று தெரியவில்லை. அது தான் வேட்டையாடப் பழகவில்லையே. அப்போது அதற்கு அம்மாவும் அப்பாவும் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
“ சோம்பேறியின் கனவு பலிக்காது..”
பசியினால் சோர்ந்து உட்கார்ந்தபோது அதன் கால்களுக்கு முன்னால் ஒரு விட்டில்பூச்சி வந்து விழுந்தது. அப்படியே அசையாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்த குள்ளநரி முழுவேகத்தில் திடீரென்று அந்தப்பூச்சியின் மீது பாய்ந்து கால்களால் அமுக்கியது.
வேட்டையின் முதல் பாடத்தை குள்ளநரி கற்றுக்கொண்டது.
நன்றி- வண்ணக்கதிர்

1 comment:

  1. அருமையான நீதி உணர்த்தும் கதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete