Saturday, 31 March 2018

நேற்று மாலை குமாரபுரம் ஸ்டேஷனுக்கு கு.அழகிரிசாமி வந்திருந்தார்

நேற்று மாலை குமாரபுரம் ஸ்டேஷனுக்கு கு.அழகிரிசாமி வந்திருந்தார். அவருடன் கோவில்பட்டி பள்ளிக்கூடத்தில் மேல் வகுப்பு படிப்பதற்காக ரயில் ஏற வந்த சிறுவர்களைப்போல நானும் தீன் தோழரும் சிரிப்பையே உருவாகக் கொண்ட மாரியும் நின்றிருந்தோம்.
1960- ஆம் ஆண்டு அவர் எழுதிய குமாரபுரம் ஸ்டேஷனைப் பார்ப்பதற்காக வந்திருந்தார்.குமாரபுரம் ஸ்டேஷன் ஒரு காட்டு ஸ்டேஷன் என்று எழுதிய தன் முதல் வரியைத் திரும்பவும் வாசித்துப் பார்ப்பதற்காகவே அவர் வந்திருந்தார் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் அது இன்னமும் காட்டு ஸ்டேஷனாகவே இருக்கிறது. காலம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை அல்லது காலம் கு.அழகிரிசாமியின் காவியத்தில் சிறு கீறல் கூட விழாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.
கு.அழகிரிசாமியை நேரில் கண்டதில்லை. அவர் எழுதிய கதைகளின் சாராம்சமான அன்பின் ஆகிருதியை மாலை நேர நிழலின் சாயலில் நீண்டு என் மீது விழுவதை உணரமுடிந்தது.
கலைக்க முடியாத ஒப்பனைகளின் ஒளிக்கீற்றை தனுமையின் பேரன்பை, கனிவின் நெகிழ்வை, ஒரு சிறு இசையின் ஆழத்தை, கமழ்ச்சியின் அழகை, குமாரபுரம் ஸ்டேசனில் நான் தரிசித்தேன்.
கு.அழகிரிசாமியின் ஆழ்ந்த மோனத்தை ஒன்றிரண்டு ரயில்கள் ஊடறுத்து மௌனத்தின் வலிமையை கூவிச் சென்றது.
இருள் கவியத்தொடங்கி விட்டது.
இனி இந்தக்குமாரபுரம் ஸ்டேஷன் இன்னொரு உலகமாக மாயம் செய்யும். குள்ளநரிகளும் முயல்களும், பாம்புகளும், பூச்சிகளும், சேடான்களும், வெருகுகளும் அலைந்து திரியும். அதில் நானும் ஒரு பூச்சி. அழகிரிசாமி ஸ்டேஷன் முன்னால் கிடந்த மரப்பெஞ்சில் உட்கார்ந்து எதிரே விரிந்து கிடக்கும் புல்வெளியைப் பார்க்கிறார். சற்று தூரத்தில் அவருடைய சொந்த ஊரான இடைசெவல் மின்மினிப்பூச்சியைப் போல மின்னுகிறது. அங்கே அவருடைய உற்ற தோழனான கி.ரா. இருப்பதாகவும் போகும்போது அவரைப் பார்த்து விட்டுப் போகவேண்டும் என்றும் நினைக்கிறார்.
நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருக்கின்றன. நாங்கள் ஒரு நீண்ட பெருமூச்சுடனும் பரவசத்துடனும் அழகிரிசாமியைப் பார்த்துக்கொண்டிருந்தோம் . எங்கள் தோள்களின் வழியே குமாரபுரம் ஸ்டேஷனும், கருவை மரங்களும்,விளாமரங்களும், புதர்ச்செடிகளும், கூடடைய வந்த பறவைகளும், கூட அவரைப் பார்த்துக்கொண்டிருந்தன. பூச்சிகள் இரவுப்பேரிசையின் சிம்பொனியை இசைக்க ஆரம்பித்திருந்தன.
அந்த இசைத்துகள்கள் எங்கள் மீது படர்ந்தபோது கு.அழகிரிசாமி எங்கள் அன்பிற்குரிய வண்ணதாசனாக நின்றார்.
இருமருங்கும் புற்களின் அணிவகுப்பின் நடுவே வரைந்த அழகிய சாலையில் மஞ்சளொளியில் அபூர்வமான முகபாவத்தில் வண்ணதாசன் இருந்தார்.
அவருக்குள் கு.அழகிரிசாமியின் ஆவி இறங்கியிருந்தது.
நாங்களும் அதன் துடிப்பை உணர்ந்தோம். சிறிய நடுக்கத்துடன் எங்கள் மூதாதையான கு.அழகிரிசாமியை வணங்கினோம்.
அப்படியே எங்கள் வண்ணதாசனையும்.

No comments:

Post a Comment