Sunday, 1 April 2018

பஞ்சு மிட்டாய்


பஞ்சு மிட்டாய்

உதயசங்கர்

இடியூர் நாட்டு ராஜாவின் பெயர் இடிராஜா. இடிராஜாவின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று புலவர்கள் எழுதி வைத்தனர். அதை தினமும் பத்திரிகைகளும் தொலைக்காட்சிப்பெட்டிகளும் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தன. எந்த ராஜா ஆட்சியிலாவது மக்கள் மகிழ்ச்சியுடன் வாழமுடியுமா? உங்களுக்கு சந்தேகம் வருகிறதா? சரிதான். இடியூர் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பாருங்களேன்.
இடிராஜா திடீர் திடீரென்று தொலைக்காட்சிகளில் தோன்றிப் பேசுவார். அவர் தொலைக்காட்சியில் வருகிறார் என்றால் மக்கள் பயந்து நடுங்குவார்கள். அவர் தொலைக்காட்சியில் தோன்றி பேச ஆரம்பித்தால் அவ்வளவுதான். ஒரே இடிமின்னலைப்போல கர்ச்சனை செய்ய ஆரம்பித்து விடுவார். தன்னுடைய அகன்ற மார்பை விரித்து சுருக்கி கை கால்களை ஆட்டிப்பேசுவார்.
“நாடு நீங்கள் பிறப்பதற்கு இடம் கொடுத்திருக்கிறது. நீங்கள் இருப்பதற்கு இடம் கொடுத்திருக்கிறது. நீங்கள் வாழ்வதற்குத் தேவையான காற்று நீர் எல்லாம் கொடுத்திருக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் நாட்டுக்கு என்ன செய்தீர்கள்? எண்ணிப்பாருங்கள்! இன்று முதல் உங்களுடைய ஒரு வேளை உணவை நாட்டுக்காகத் தியாகம் செய்யுங்கள்! “
என்று ஒரு இடியை இறக்கி விடுவார். இன்னொரு தடவை உங்கள் ஒரு நாள் வருமானத்தைத் தியாகம் செய்யுங்கள் என்பார். உங்கள் ஒரு உடையைத் தியாகம் செய்யுங்கள். உங்கள் முடியைத் தியாகம் செய்யுங்கள். உங்கள் நகையைத் தியாகம் செய்யுங்கள். உங்கள் கனவைத்தியாகம் செய்யுங்கள். அதைத் தியாகம் செய்யுங்கள். இதைத் தியாகம் செய்யுங்கள். என்று இடிகளாகப் பொழிவார். பாவம். மக்கள் !
ஏற்கனவே விவசாயம் பொய்த்து விவசாயிகள் கடன் தொல்லையினால் எல்லாவற்றையும் தியாகம் செய்து கொண்டிருந்தார்கள்.
ஏற்கனவே தொழிலாளர்கள் கிடைக்கும் கூலி போதவில்லை. பலநாட்கள் ஒருவேளையோ இரண்டு வேளையோ உணவைத் தியாகம் செய்து கொண்டிருந்தார்கள்.
ஏற்கனவே இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அவர்கள் எல்லாவற்றையும் தியாகம் செய்து கொண்டிருந்தார்கள்.
நாட்டுநிலைமை இப்படி இருந்தது.
ஆனால் இடிராஜாவின் அரண்மனையில் தினம் ஆறுவேளையும் விருந்து நடக்கும். இடிராஜாவின் சட்டை மட்டும் பல லட்சம் பொன் விலைக்குப் போகும். இடிராஜா எப்போதும் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குப் பறந்து போய்க்கொண்டேயிருப்பார்.
ஒருநாள் இடிராஜா கிமெரிக்கா நாட்டுக்குப்பயணம் போய் விட்டுத் திரும்பினார். அவருடைய அரண்மனைக்குள் நுழைய முடியவில்லை. ஒரே கூட்டம். விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், எல்லோரும் சேர்ந்து உரத்த குரலில் முழங்கிக் கொண்டிருந்தார்கள்.
” வாழவழியில்லை ராஜாவே!
வழி சொல்லுங்க ராஜாவே! “
இடிராஜாவுக்குக் கோபம் வந்தது. கூடியிருந்த மக்களைப்பார்த்து,
“ என்ன வழியில்லை வழியில்லை என்று அழுது கொண்டிருக்கிறீர்கள். பஞ்சுமிட்டாய் விற்பனை செய்து பிழையுங்கள். போங்கள். எனக்கு வேறு வேலைகள் இருக்கிறது..”
என்று சொல்லி விட்டார். அப்படியும் மக்கள் கலையவில்லை. உடனே குதிரைப்படையை அனுப்பிக் கலைக்கச் சொல்லி உத்தரவு போட்டு விட்டார். குதிரைப்படை வந்து மக்களை விரட்டியடித்தது.
மறுநாள் நாடுநகரம் எங்கும் பஞ்சுமிட்டாய் விளம்பரம் செய்யப்பட்டது. அரண்மனை வங்கிகளில் இருந்து பஞ்சுமிட்டாய் வியாபாரம் செய்வதற்குக் கடன் கொடுத்தார்கள். மக்கள் வரிசை வரிசையாக நின்று கடன் வாங்கினார்கள். எல்லோர் வீட்டிலும் பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் இயந்திரம் இருந்தது. எல்லோரும் பஞ்சு மிட்டாய் தயாரித்தார்கள். குச்சிகளில் சொருகப்பட்டப் பஞ்சு மிட்டாய்களை எடுத்துக்கொண்டு விற்பதற்காகத் தெருக்களில் அலைந்தார்கள்.
ஆனால் வாங்குவதற்கு ஆளில்லை. மக்கள் எல்லோரும் பஞ்சு மிட்டாய்களைத் தயாரித்து விற்றால் யார் வாங்குவார்.? குப்புசாமி தான் தயாரித்த பஞ்சுமிட்டாயை பக்கத்து வீட்டில் இருந்த வடிவேலனிடம் கொடுத்தார். உடனே வடிவேலன் தான் தயாரித்த பஞ்சு மிட்டாயை குப்புசாமியிடம் கொடுத்தார். வேறு என்ன செய்ய? அவரவர் தயாரித்த பஞ்சு மிட்டாய்களை அவர்களே தின்று தீர்த்தனர்.
ஆனால் அரண்மனை வங்கிகள் சும்மா இருக்குமா? கொடுத்த கடனுக்கு வட்டி கேட்டனர். வியாபாரம் ஆனால் தானே வட்டி கட்டமுடியும்? மக்கள் மறுபடியும் இடிராஜாவின் அரண்மனைக்குப்போனார்கள். இடிராஜா மக்களிடம்
“ அதனால் என்ன? நாம் பஞ்சு மிட்டாய்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வோம். “
அதைக்கேட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்குப் போனார்கள். ஆனால் மறுநாள் பெரிய அதிர்ச்சி!
வெளிநாட்டு கம்பெனிகள் இடியூர் நாட்டில் விதவிதமான வெளிநாட்டு பஞ்சு மிட்டாய்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தனர்.
மக்கள் அழுதனர். அவர்களுடைய அழுகுரல் கேட்டு மூன்று தேவதைகள் வந்தார்கள். நீலநிறத்தேவதை நீலநிறப்பொடியைத் தூவினாள். இடிராஜாவின் அரண்மனை சிறியதாகி, சிறியதாகி, குடிசையாகி விட்டது. கருப்பு நிறத்தேவதை கருப்புநிறப்பொடியைத் தூவினாள். இடிராஜாவின் முட்டாள்தனங்கள் எல்லாம் மக்களுக்குப் புரிந்து விட்டது. சிவப்பு நிறத்தேவதை சிவப்பு நிறப்பொடியைத் தூவினாள். அரண்மனை வங்கிகளில் இருந்த பணம் எல்லாம் எல்லோரிடமும் சரிசமமாக பகிர்ந்து கொடுக்கப்பட்டது. மக்கள் மகிழ்ந்தனர். நாடும் செழித்தது.
நன்றி - வண்ணக்கதிர்

No comments:

Post a Comment